வாழ்க்கைக்கு ஹைக்கூ 05
"நான் ஒன்றுமே இல்லை;
சிவந்து மறையும் இலையுதிர்காலக் கதிரவன்
என் பெயரைப் பறித்துச் செல்கிறது."
- ரிச்சர்ட் ரைட் (Richard Wright)
இந்தக் கவிதை இயற்கையோடு மனித மனம் இணையும் ஒரு உன்னத தருணத்தைப் பேசுகிறது.
பொதுவாக நம் வாழ்வு என்பது நமது பெயர், பதவி, அந்தஸ்து மற்றும் "நான்" என்கிற அகங்காரத்தைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கவிதை வாழ்வின் உண்மையான பொருள் 'நான்' அற்ற நிலையில் (Selflessness) உள்ளது என்று கூறுகிறது.
மாலை நேரத்தில் மறையும் அந்தச் சூரியனின் பிரம்மாண்ட அழகைக் காணும்போது, கவிஞர் தன்னை மறக்கிறார். "நான் ரிச்சர்ட் ரைட், நான் ஒரு கவிஞன், எனக்கு இவ்வளவு கவலைகள் உள்ளன" என்ற சுய அடையாளங்கள் அனைத்தும் அந்த அழகின் முன் கரைந்துவிடுகின்றன.
இந்தக் கவிதை மூலம், நமது மன அமைதியைக் குலைப்பது, பெரும்பாலும் நமது "பெயர்" மற்றும் அதனோடு ஒட்டியுள்ள அடையாளங்களும் தான். அந்தப் பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவே நாம் வாழ்நாள் முழுவதும் போராடுகிறோம்.
"அந்தச் சிவந்த சூரியன், பெயரை எடுத்துச் செல்கிறது" என்ற வரியில், இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் நமது உலக அடையாளங்கள் நீங்கிய ஒரு வெறுமை நிலை (Emptiness/Void) ஏற்படுவதைக் குறிக்கிறது.
எப்போது ஒருவன் "நான் யாரும் இல்லை" (I am nobody) என்ற நிலையை அடைகிறானோ, அப்போது அவனுக்குள் இருக்கும் பதற்றங்கள், பொறுப்புகள் மற்றும் கவலைகள் மறைந்து, ஆழமானதொரு அமைதி குடிகொள்கிறது. அந்த அந்திப் பொழுதில் வெறும் சாட்சியாக (Witness) மட்டுமே நாம் இருப்போம்.
ஒரு குடம் தண்ணீர் கடலில் கலக்கும்போது, அது தனது வடிவத்தை இழக்கலாம், ஆனால் அது கடலாகவே மாறிவிடுகிறது. அதுபோல, நமது சிறிய அடையாளத்தை (பெயரை) இழக்கும்போது, அந்தப் பிரபஞ்சத்தோடு ஒன்றாகக் கலக்கிறோம்.
"தன்னை இழத்தலே தன்னை அடைதல்" (Losing oneself is finding oneself) என்ற ஆழமான உண்மையின் உருவகமாக இந்த ஹைக்கூ அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment