சைக்கிள் டயர் பால்ய அனுபவம்
-ஜீவன்
சைக்கிள் டயரை வண்டியாக பாவித்து பயணித்து மகிழந்த நாட்கள் ரசனை மிகுந்தவை, டயர் வண்டிகளில் பல ரகம் உண்டு, சைக்கிளை தெய்வமாக மதித்த எங்கப்பா போன்றவர்கள் சைக்கிள் டயர் மோசமாகிவிட்டது என்று சொன்ன உடனேயே அதை மாற்றி புதிது போட்டுக்கொள்வர், மற்றொரு ரகமுண்டு சைக்கிளே கதறி அழுது ரிம் என்று சொல்லப்படும் ஸ்டெயின்லெஸ் (?) ஸ்டீல் வீல் ஃப்ரேம் தரையில் பட்டு சத்தம் கேட்கும் வரை டயரை மாத்தாமலிருந்து, சைக்கிள் கடைக்காரர் காறி துப்பி இனி பஞ்சர் ஒட்டவோ, கேன்வாஸ் வைக்கவோ இடமில்லையென்ற துர்பாக்கிய நிலையில் மாற்றப்பட்டு கழட்டி வீசப்பட்ட டயர்.
முதல் ரகம் பெரும்பாலும் கிடைக்காது,சைக்கிள் கடைக்காரருக்கு மனசு இறங்க வேண்டி, பஞ்சர் பார்க்க சட்டியில் தண்ணீரெல்லாம் பிடித்து கொடுத்து ரிசர்வேசன் செய்ய வேண்டும், இரண்டாம் ரகம் சல்லிசாக கிடைக்கும் ரெண்டொரு தரம் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்டாலே குடுத்துவிடுவார்.
டயர் வண்டி இயக்கும் ஸ்டியரிங் ஒரு, ஒர் அடிக் குச்சி.
டயர் வண்டியில் தாம் எல்லா பொட்டிக்கடை பயணங்களும், பொட்டுக்கடலையோ, பச்சை மிளகாயோ, தேங்காய் சில்லோ இடக்கையில் சுமந்து கொண்டு வலைக்கையில் குச்சி கொண்டு டயரியக்கி வீடு சேர்ப்போம்.
டயர் ரேஸில் நல்ல டயர்களை தோற்கடிக்க, நெழிந்து வளைந்து ஓடும் சற்று டொங்கலான டயரை பலம் கொண்டு அடித்து இயக்கி அதனோடே ஓடி எல்லை தொடுவோம். வேர்வை துடைத்தால், அழுக்கு கை முகம் முழுதும் பரவி கரித்தடம் பூசிச்செல்லும்.
ஸ்கூட்டர் மற்றும், லூனா டயர்கள் பணக்காரகளுக்கானது !
No comments:
Post a Comment