#கற்கை_நன்றே_183
மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உருவாகின்றன
-அரிஸ்டாடில்
சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு திறமையாகச் சிலர் செயல்படுகின்றார்கள். ஆனால் திறமையாகச் செயல்பட்டதன் பலன் சில ஆச்சர்யங்களையும் தருகின்றது. சில நேரங்களில் இந்த திறமையை குறுக்கு வழியில் பயன்படுத்தினால் சில எதிர்மறை விளைவுகளும் ஏற்படுகின்றன.எனவே, எப்போதும் குறுக்கு வழிகள் உதவும் என்று தப்புக் கணக்குப் போடக் கூடாது.
ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார்.
போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது. திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்தபோது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது.
வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது.
வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது.
ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன் மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.
நம்மை விட புத்திசாலிகள் அருகில் உண்டு என்பதை உணரலாம்
ஒஷோ கூறும் கீழ்காணும் கதை தான் பெரிய அறிவாளி என நினைத்துச் செய்யும் செயல்கள் எதிர்விளைவை தருகின்றன..
நெரிசல் மிகுந்த ஒரு நாளில் ஒரு விபத்து நடந்துவிட்டது. விபத்து நடந்த இடத்தில் மக்கள் அதிகமாகக் குவிந்து காணப்பட்டனர். அந்தப் பக்கமாக வந்த ஒரு பத்திரிக்கை நிருபர் 'என்ன?' என்று விசாரித்தபோது விபத்தில் யாரோ இறந்து விட்டதாகச் சொன்னார்கள். கூட்டத்தைக் கடந்து உள்ளே செல்ல முடியாத அந்த நிருபருக்கு ஒரு யோசனை வந்தது.
உடனடியாக "நான் தான் அந்த விபத்தில் இறந்தவரின் அப்பா" என்று கத்தினார். சத்தத்தைக் கேட்ட கூட்டம் உடனடியாக விலகி நின்று அவரைப் பார்த்து, வழிவிட்டது. அவரும் வேகமாக உள்ளே சென்று பார்த்தார். அங்கே ஒரு கழுதை அடிபட்டுச் செத்துக் கிடந்தது. "கழுதையின் அப்பா" அசடு வழிந்து நின்றார்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment