வாழ்க்கைக்கு ஹைக்கூ: 01
"எதுவும் செய்யாமல்
அமைதியாக அமர்ந்திருங்கள்...
வசந்த காலம் தானாக வருகிறது,
புல் தானாகவே வளர்கிறது."
ஜப்பானிய ஜென் ஹைக்கூ கவிஞர் மட்சுவோ பாஷோவின் இந்த ஹைக்கூக் கவிதை நமக்கு ஆழமான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது:
1. எல்லாம் அதற்கான நேரத்தில் நடக்கும்:
நாம் பல நேரங்களில் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்காக அவசரப்படுகிறோம் அல்லது கவலைப்படுகிறோம். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு வேகம் உள்ளது. எப்படி வசந்த காலத்தை நம்மால் நாம் நினைத்த போது இழுத்துக்கொண்டு வர முடியாதோ, அதே போல வாழ்க்கையின் மாற்றங்களையும் நம்மால் நினைத்த நேரத்தில் ஏற்படுத்த முடியாது. உரிய நேரம் வரும்போது நல்ல விஷயங்கள் தானாகவே நடக்கும்.
2. அமைதியே வலிமை:
"எதுவும் செய்யாமல் இருப்பது" என்பது சோம்பேறித்தனம் அல்ல. இது மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, பதற்றம் இல்லாமல் இருக்கும் நிலை. பல சமயங்களில் நமது பிரச்சனைக்கான தீர்வு, நாம் அதிகமாக முயற்சி செய்வதை விட, அமைதியாக இருந்து சூழலை கவனித்தாலே கிடைக்கக்கூடும்.
3. இயற்கையின் இயக்கத்தில் நம்பிக்கை வைத்தல்:
புல் வளர்வதற்கு நாம் அதைப் பிடித்து மேலே இழுக்க வேண்டியதில்லை அப்படி செய்தால் புல் தனியே பிடுங்கிக் கொண்டு வந்துவிடும். புல் தானாகவே வளர்கிறது. எல்லாவற்றையும் நாம் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. இயற்கையின் அல்லது இறைவனின் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தால் போதுமானது.
ஆக, மனஅமைதி எங்கிருக்கிறதோ அங்கு வளர்ச்சி இயல்பாக நிகழும்.
No comments:
Post a Comment