#கற்கை_நன்றே_161
இன்னாமை வேண்டின், இரவெழுக;
இந் நிலத்து
மன்னுதல் வேண்டின்,புகழ் நடுக;-தன்னொடு
செல்வது வேண்டின், அறஞ்செய்க; வெல்வது
வேண்டின், வெகுளி விடுக!
-துன்பம் வேண்டின் பிச்சை கேட்டுப்பாருங்கள்,பெயர் நிலைக்க உங்கள் புகழை விட்டுச் செல்லுங்கள் தழைத்துக் கொண்டே இருக்கும்.உங்களோடு எடுத்துச் செல்ல அறச்செயல்கள் உள்ளன.அனைத்து காரியங்களும் வெற்றி பெற வேண்டுமாயின் கோபத்தை விட்டு ஒழியுங்கள்
-நாண்மணிக்கடிகை
ஓர் இருள் சூழ்ந்த சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் ஏராளமான நல்ல மனிதர்கள்தான். நல்ல மனிதர்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் திருப்தியுடனும் மன நிறைவுடனும் இருப்பதுதான்.
தங்களிடம் இருப்பது போதும் என்று அவர்கள் ஒரேயடியாகத் திருப்திப்பட்டு விடுவதால், பணக்காரராவதற்கான தூண்டுதல் அவர்களிடம் இருப்பதில்லை . பொருளாதார அபரிமிதம் குறித்த உணர்ச்சிரீதியான கட்டாயம் எதையும் அவர்கள் உணர்வதில்லை.
சாலையில் ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த வழியாகச் செல்லும் ஒரு நல்ல மனிதர், அதைப் பார்த்துவிட்டு, "இது என் பணம் அல்ல. எனவே, அதை நான் தொட மாட்டேன்," என்று கூறிவிட்டுத் தன் வழியில் சென்றுவிடுவார். அவர் விட்டுச் சென்றதை ஒரு கயவன் கண்டெடுக்கிறான். தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும், அந்த நூறு ரூபாயை அந்த நல்ல மனிதர் எடுத்திருப்பாரேயானால், ஏழைகளின் பசியாற்ற அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதைக் கண்டுகொள்ளாமல் சென்றதால், அழிவுபூர்வமான வழியில் அதைப் பயன்படுத்தக்கூடிய ஒரு கயவனின் கையில் அது கிடைத்துவிட்டது.
எந்தவொரு நாட்டிலும் புழங்கும் அதிகாரபூர்வமான பணம் ஓர் அளவிற்குட்பட்டது. இப்போது, அந்தப் பணம் ஒரு நல்லவரிடமும் இருக்கலாம், அல்லது ஒரு கயவனிடமும் இருக்கலாம். திருப்தி காரணமாகப் பெருஞ்செல்வத்தைக் குவிக்க விரும்பாத நல்லவர்களால், ஏராளமான பணம் தீயவர்களின் கைகளில் கிடைக்கும்படி ஆகிறது.
ஒரு நிலைக்குப் பிறகு, செழிப்பு என்பது எவரொருவருக்கும் மிகையாகிவிடுகிறது. ஆனால் வித்தியாசம் என்னவென்றால், நல்லவர்களிடம் இருக்கும் மிகுதி ஒரு சிறந்த உலகை உருவாக்க உதவும்;
தீயவரிடம் இருந்தால் உலகை அழிக்கப் பயன்படுத்தப்படும். நல்ல மனிதர்கள் தங்களிடம் உள்ள மிகுதிப் பணத்தைக் கொண்டு பள்ளிகளைக் கட்டுவார்கள், கல்வி உதவி வழங்குவார்கள், ஏழைகளின் பசியைப் போக்குவார்கள், மருத்துவ உதவிகளைச் செய்வார்கள்.
தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல மனிதர்களை, செழிப்பான மனிதர்களைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க நீங்கள் முன்வாருங்கள். தீயவர்கள் கைகளுக்குப் போய்ச் சேரும்படி ஒரு நூறு ரூபாய் நோட்டை விட்டுச் செல்லாதீர்கள். நாம் அத்தீயவர்களைப் பலவீனப்படுத்துவோம். பொருளாதாரத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வோம். பொருளாதார உபரியை உருவாக்குவோம். உங்களுக்கு அவ்வளவு பணம் தேவையில்லாமல் இருக்கலாம். அதனால் என்ன? அதைக் கொண்டு ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம். - பணம் சேர்ப்பதற்கான தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் உண்டு.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment