Sunday, 23 November 2025

மகுடேசுவரன்


இரு சொற்களுக்கிடையே எல்லா இடங்களிலும் வலிமிகுதல் இல்லை. வலிமிகவேண்டிய இடங்களில் தவறுமாயின் பொருள் வேறுபாடு தோன்றிவிடும். சந்திப் பிழைக்கான தலையாய அறியாமை இந்நுணுக்கம் அறியாமல் இருப்பதுதான். 
  
ஒரே சொற்றொடர்தான். அவ்விரு சொற்களுக்கிடையே ஓரிடத்தில் வலிமிகும். ஓரிடத்தில் வலிமிகாது. என்ன காரணம் ? அவ்விரு சொற்களுக்குமிடையே தோன்றும் பொருள் வேறுபாடுதான். அவ்விரு சொற்களும் சொற்றொடராகி அடுத்தடுத்து வருகையில் தாம் உணர்த்த விரும்பும் பொருளுக்கேற்ப வலிமிகுத்தோ மிகாமலோ வரும். சொற்றொடர் அமைப்புகளின் பொருளுணர்ச்சிக்கேற்றவாறு/பொருள் நோக்கத்திற்கேற்றவாறு வலிமிகுவிக்கவேண்டும், அல்லது வலிமிகுவிக்காமல் விடவேண்டும். 

ஒரே சொற்றொடர் அமைப்புக்குள் பொருள் வேறுபாடுகள் தோன்றும் அமைப்புகளை எடுத்துக்காட்டுகளாக எழுதியுள்ளேன், காண்க :-  

இரவு முழுவதும் பெய்த மழையினால் சாலைகளில் நீர் தேக்கம். 
மேட்டூரில் இருப்பது நீர்த்தேக்கம். 
00

கற்ற கலை பொருள் செய்யப் பயன்படவில்லை. 
கலைப்பொருள் செய்து பெரிதாக ஈட்டியவர்கள் பலர். 
00

அவர்களுக்கிடையே இருந்த உறவு சிக்கலாகிவிட்டது. 
உறவுச்சிக்கல் ஏற்படாதபடி வாழப் பார். 
00

இந்தப் பேருந்து பயணத்திற்கு உதவாது. 
பேருந்துப் பயணம் அலுத்துவிட்டது. 
00

உழவர்க்கு உழவு தொழிலாகும்.  
உயிர்காப்பது உழவுத்தொழில். 
00

நீ எடுத்த காட்சி பிழையானது. 
என்னுடைய பார்வையில் காட்சிப்பிழை உண்டோ ?
00

அன்பு தளையாகக்கூடாது. 
அன்புத் தளைக்குள் அகப்பட்டதனால் விடுபட முடியவில்லை. 
00

கிளி பேசும். 
கிளிப்பேச்சு கேட்பதற்கு இனிமை. 
00

மழை காலந்தவறிப் பெய்கிறது. 
மழைக்காலம் வந்துவிட்டது. 
00

வளர்ச்சி தடைபடைக்கூடாது. 
வளர்ச்சித்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள். 
00

இரு சொற்களுக்கிடையே தோன்றும் இருவகையான பொருட்பயன்பாடுகள் இவை. இவற்றை நினைவிற்கொண்டால் வலிமிகல், மிகாமை குறித்துத் தெளிவடையலாம். 

- கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment