Sunday, 10 December 2017

படித்ததில் பிடித்தது

[09/11, 11:28 a.m.] மினிமீன்ச்: கூண்டுப்புலிகள்

0
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு

பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்

சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை

உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்

வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து

ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்
0

-விக்ரமாதித்யன்
[09/11, 11:30 a.m.] மினிமீன்ச்: விளைநிலம் ஒன்றில்
ஒற்றை ஆடும் அதன் குட்டியும்
மேய்ந்தபடி இருந்தன..

கழுகு ஒன்று
குட்டி ஆட்டினைப்
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி
வட்டமடித்து வந்தது..
கீழிறங்கி
இரையினைக் கவ்வும் நேரத்தில்
இன்னொரு கழுகும்
பசியோடு வந்து சேர்ந்தது..

எதிரிகளின்
ஆவேசப் போராட்டத்தின்
கூக்குரல்
வானமெங்கும் நிரம்பி வழிந்தது..

ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து
ஆச்சர்யப்பட்டுப் போனது..
குட்டியிடம் சொன்னது,
"பார்த்தாயா குழந்தாய்..
எத்தனை விநோதம் இது??
இவ்விரு பெரிய பறவைகளுக்கும்
விரிந்து பரந்த இந்த காயம்
போதவில்லையோ??
இப்படி ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொள்கிறார்களே..!!
சிறகு முளைத்த அந்த
உன்னிரு சகோதரர்களுக்கிடையில்
சமாதானம் ஏற்படட்டும் என்று
இதயபூர்வமாய் நீ
இறைவனை வேண்டிக் கொள்..!!"

குட்டியும் அவ்வாறே
வேண்டிக் கொண்டது..!!
0

- கலில் ஜிப்ரான்
[09/11, 11:36 a.m.] மினிமீன்ச்: அடையாளம்

0
பிறந்த வீட்டில்
கறுப்பி

அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கையர் மத்தியில்
‘தெமள’

வடக்கில்
கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில்
நானொரு மலைக்காரி

மலையில்
மூதூர் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாக இருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா
பழையபடி நானொரு கறுப்பியானேன்.
0

- ஆழியாள்
[09/11, 11:39 a.m.] மினிமீன்ச்: கஞ்சிஞ்ஜங்கா

0
எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது
டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்று
கஞ்சிஞ்ஜிங்கா மலை மேலே பனி மூடியிருப்பதைப்
பார்த்திருக்கிறேன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போது பார்க்கிறேன், வித்தியாசம் ஒன்றும்
தெரியவில்லை, என் கண் தான்
சற்று மங்கி விட்டது.
0

-காநாசு
[09/11, 1:19 p.m.] மினிமீன்ச்: இப்போதாவது

0
நீரில் மூழ்கின சிறுவனுடையதும்
தீயில் கருகிய இப்பெண்ணுடையதும்
சாவின் வேறுவேறுகள்.
ஒன்றே போல
இடுப்பிலிருந்து சற்றே
தூக்கி மடங்கிய கைகளும்
பாதாளக் கரண்டி போல விரல்களும்
எதையோ பற்றிக் கொள்ளத்
தேடியதாக.
ஒரு புண்ணியமும் இல்லை எனினும்
அந்த உள்ளங்கைகளை
இப்போதாவது என
இறுகக் கோர்த்துக் கொண்டேன்
சற்று.
இப்படித் தான் நடந்து கொள்ள
வேண்டியதிருக்கிறது சில பொழுதுகளில்
0

- கல்யாண்ஜி
[09/11, 1:24 p.m.] மினிமீன்ச்: அவன் பாடல்

0
ஆறுமுகக் கிழவன் பாடிக் கொண்டிருக்கிறான்
ராத்திரி முழுதும் விடிய விடிய

பிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள்
சொத்தும் அற்றான் இரத்தம் உலர்ந்து
தசைகள் கரைந்து எண்ண முடியாக்
கோடுகளாகத் தோலும் சுருங்க
மீதி உயிரையும் பாடலாக்கி
இரவை நிரப்புகிறான்

கைத்தடிச் சப்தம் தெருக்களில் எழுப்பி
தட்டு நிரப்பி நாட்களைத் தொடர்கின்றான்

கூடை பின்னலில் விறகு கீறலில்
ஒயில் கும்மியில் சிலம்பக் கழிகளில்
வாடிக் கள்ளில் கறுப்புப் பெண்களில்
கடந்து முடிந்த வாழ்வு முழுதும்
பாடலாகி வெளியை நிரப்ப
காலியான நெஞ்சினோடு
காற்றில் தூங்குகிறான்

ஆறுமுகக் கிழவன் அனாதைதான்
உலகு போல வானம் போல.
0

- சமயவேல்
[09/11, 2:14 p.m.] மினிமீன்ச்: பூத்தபடி

0
சமவெளியின்
பசுமைநடுவே
இலைகாய்ந்து
நிற்கும் மரமே

பூத்துநிற்கிறாயென்று
தூரத்தே நின்றஒருவன்
எண்ணி
நெஞ்சில் பிரதியெடுத்துக்
கொண்டுசென்றிருக்கிறான் உன்னை.

மரணம்வரை அவனிலிருப்பாய்
பூத்தபடியே நீ.

அவனிலிருந்து கேட்டு
பிறரும்
மேலும் பூக்களுடன்
உன்னைக் காண்பார்கள்.

பூக்காலமாக உன்னை
ஒருவன் வரையலாம்.
கவிஞனும் எழுதலாம்

சமவெளியின் பசுமைநடுவே
இலைகாய்ந்து நிற்கும் மரமே
ஒருநாளும் காயமாட்டாய் நீ!
0

-வீரான் குட்டி

#மினிமீன்ச்: எஜமானர்கள்

0
எஜமானர்கள்

எங்கவூர் கழுதைகளுக்கு
காதுகள்
அறுக்கப்பட்டிருக்கும்.

உடம்பெங்கும்
சூடு போட்ட
தழும்பு இருக்கும்.

எஜமான்
கழுதைகளுக்கு
இரை போட மாட்டான்
தண்ணீர் காட்ட மாட்டான்.

முதுகில்
ஏற்றி வைத்த பொதிகளை
கண்ணீரோடு சுமக்கும்
கழுதைகள்.

கழுதைகள்
தப்பிச் செல்லமுடியாது.
அவைகளுக்கு
முன்கால்கள்
தழையப்பட்டிருக்கின்றன.

கழுதைகள்
நொண்டி நொண்டி
தானாகவே மேய்ந்துகொள்ளும்.

கழுதைகள்
குடும்பம் நடத்துகின்றன

கழுதைக் குட்டிகள்
அழகாக இருக்கின்றன.
0

- மு.சுயம்புலிங்கம்

No comments:

Post a Comment