Tuesday, 28 October 2025

188


#கற்கை_நன்றே_188

நாம் அன்றாடம் பார்க்கும் நிகழ்வை தன் ரசனையின் மையினால் எழுதியவர் சுஜாதா தான்..ஒரு சுவாரஸ்ய பகுதி

உலகில் மிகவும் அகழ்வாராயப்பட்ட இடம் - சுஜாதா

உலகத்திலேயே மிகவும் அகழ்வாராயப்பட்ட இடத்திற்கு கின்னஸ் இருந்தால் அது ஆழ்வார்பேட்டையில் இருக்கும் எங்கள் தெருவுக்குதான் கிடைக்கும்.

1993- ல் நான் பெங்களூரை துறந்துவிட்டு இங்கு குடிபுகுந்ததிலிருந்து இந்தச் சாலையை இடைவிடாமல் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்தவறி தோண்டுவது நின்றுபோனால் கடப்பாரை பயிற்சி விட்டுப் போகாமல் இருக்கத் தோண்டுகிறார்கள்.

முதன்முதலாக குடிநீர் வடிகால் வாரியர்கள் வந்து வெட்டிப் போட்டுவிட்டு சிமெண்டில் அனார்கலி ரேஞ்சுக்கு சமாதி போல ஏதோ கட்டிமுடித்து மூடினார்கள். 

அது மூடின உடனே டெலிபோன் காரர்கள் நீண்ட ஃபைபர் கிளாஸ் குழாய்களை அடுக்கி எதிர்ப்பக்கம் தோண்டி கேபிள் போட்டார்கள். 

அதன்பின் சிறு மேம்பாலம் கட்டுபவர்கள் 

பாதாள சாக்கடை என்று எதையோ பிழைதிருத்தும் காரணத்துக்காக நடுவே வெட்டிப்போட்டார்கள். 

அவர்கள் முடிந்ததும் இப்போது மின்வாரியர்கள் ஹை டென்ஷன் கேபிள் போடுவதற்கு தோண்டி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தோண்டலும் குறைந்தபட்சம் ஆறுமாதம் நீடிக்கிறது. கூலியாட்கள் குடிசை போட்டு, சோறாக்கி, பிள்ளை பெற்றுக் கொண்டு, மறு தோண்டுதலுக்கு புறப்படும் வரை ஒரு வாழ்க்கையை நடத்தி விட்டுச் செல்கிறார்கள்.

இப்போதெல்லாம் கார்ப்பரேஷன், டெலிபோன், மின்வாரிய வட்டாரங்களில் தினம் கீழ்க்காணும் உரையாடல் நிகழும் என்று நினைக்கிறேன்.

இன்ஜினியர்: "ஏம்பா இன்னிக்கி என்ன வேலை?"

காண்ட்ராக்டர்: "எதுவும் வேலை இல்லை இல்லிங்க".

இன்ஜினியர்: "அப்போ ஒண்ணு பண்ணுங்க. ஆழ்வார்பேட்டையில் அம்புஜம்மாள் தெரு ஒண்ணு இருக்கு அங்கே போய் தோண்டுங்க"

காண்ட்ராக்டர்: "எதுக்குங்க?"

இன்ஜினியர்: "சும்மாய்யா…. இனிமே வேலை இல்லைன்னு மட்டும் சொல்லாதே"

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளில் கேபிள் போடுவதில்லையா, சாக்கடை வெட்டுவது இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் தோண்டுகிறார்கள். நானே பார்த்திருக்கிறேன். 

ராத்திரி 12 மணிக்கு ஆள் படையுடன் வருவார்கள் . அதி பிரகாசமாக கண்சிமிட்டும் மஞ்சள் விளக்குகளை வைப்பார்கள். அது என்ன மாயமோ….. அதிகாலைக்குள் தோண்டி வேலையை முடித்த இடம் தெரியாமல் அடைத்து சமன்படுத்தி விட்டுப் போவார்கள். ஒரே நாள் தான்.

இங்கு? பகவான் விட்ட வழி.

திருவள்ளுவர் இன்று இருந்தால்....

தோண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு நீண்டநாள் தோண்டல் இலை

என்று எழுதியிருப்பார்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment