Sunday, 26 October 2025

ஜீயோ டாமின்


ஒரே ஒரு வாளி - அதன் விளிம்பு வரையில் சுற்றியிருப்போருக்கு தாகம் தீர்க்கப் போதுமான தண்ணீரும் அதில் இருக்கிறது.

திடீரென விசித்திரமான ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. யார் அதிகத் தண்ணீரை உறிஞ்சுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். 

வாளியிலிருக்கும்  தண்ணீர் தீர்ந்தால் எல்லோரும் செத்துப்போவோம் என்று தெரிந்தும் எல்லோரும் போட்டியில் சேர்ந்து கொள்கின்றனர். 

காலம் காலமாக வர்க்கரீதியாகவும் சாதீய ரீதியாகவும் பிறரைச் சுரண்டிக் கொளுத்த ஒருசிலருக்கு மட்டும் தண்ணீரை வேகமாக உறிஞ்ச நீண்ட குழல் வாய்க்கிறது. மற்றவர்கள் அப்பாவியாக அதனை வேடிக்கப் பார்க்கின்றனர். 

தண்ணீர் தீர்ந்துகொண்டே இருக்கிறது. 

இன்னும் வேகமாக உறிஞ்சினால் எல்லாருடைய தாகமும் தீருமென்று ஆரூடம் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். பிளாஸ்டிக் உறிஞ்சு குழலுக்குப் பதிலாக மட்கும் உறிஞ்சு குழல் பயன்படுத்தினால் ஆபத்தில்லை என்கிறார்கள் சில 'ஆபத்தான' சூழலியலாளர்கள்.

போட்டி வேகமெடுக்க, பக்கெட்டின் தண்ணீர்தான் குறைகிறதே தவிர பெருவாரியான பார்வையாளர்களின் தாகம் தீரவில்லை. ஒட்டுமொத்தத் தண்ணீரும் வற்றும்போதும்கூட அது தீரப்போவதில்லை.

ஜிடிபி வளர்ச்சியை முதன்மை குறிக்கோளாகக் கொண்ட ஒவ்வொரு அரசும், பெருமுதலாளிகளின் நலனுக்காக – ‘உற்பத்தி அதிகரிப்பு’ என்ற பெயரில் இயற்கை வளங்களை வணிகப் பண்டமாக்கி தனியாருக்குத் தாரைவார்த்து விற்பனை செய்யும் பிரம்மாண்டச் சந்தையைக் கட்டியெழுப்பி பிற நாடுகளோடு போட்டி ஒன்றை நடத்துகின்றன. எவ்வளவு வேகமாக ஜிடிபி வளர்கிறதோ அவ்வளவு வேகமாக நாம் அழிவுக்கு நெருக்கமாகச் சென்று கொண்டிருக்கிறோம். 

ஏனென்றால், நமக்கு மேலும் மேலும் சுரண்டிக்கொண்டே இருப்பதற்கு மலைகளும், கடல்களும், காடுகளும் இங்கு இல்லை. புவியின் எல்லா வளங்களும் வரம்புக்கு உட்பட்டவை. இந்தச் சுரண்டல் பொருளாதார அமைப்பால் ஒருபோதும் எல்லோருடைய பசியையும் தீர்க்க முடியாது - சமத்துவத்தையும் சமூக நீதியையும் உறுதி செய்ய முடியாது. 

இதுவொரு சூதாட்டம்!

No comments:

Post a Comment