Saturday, 13 December 2025

ஜானகிராம்


ஒசோஜி (大掃除) 

ஒசோஜி என்பது ஜப்பானிய சமூகத்தில் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் முறை. “முழுமையான சுத்தம்” என்று அர்த்தம்.  நாம போகி, ஆயுத பூஜைக்கு முன்னாடி வீட்டை சுத்தம் செய்வது போல, புத்தாண்டுக்கு முன்பு ஒசோஜி என்ற பழக்கத்தை வீட்டையும் தாம் வாழும் சுற்றுச்சூழலையும் ஜப்பானியர்கள் சுத்தம் செய்கிறார்கள். இதன் சிறப்பம்சம், இது வெறும் வீட்டை அல்லது இடத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்ல. இந்த செயலை ஒரு தியானம் போல செய்யப்படுகிறது. ஒசோஜி, மனதில் தேங்கி நிற்கும் தேவையற்ற சுமைகள், கவலைகள், பயங்கள் மற்றும் பழைய பிடிப்புகளை சுத்தம் செய்யும் ஒரு நடைமுறையாகக் கருதப்படுகிறது.

வீட்டில் தூசி மெதுவாக சேர்வதைப் போல, மனதிலும் கவலை, கோபம், ஒப்பீடு, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்றவை நம்மையறியாமல் சேர்ந்து விடுகின்றன. ஒசோஜியின் போது, நாம் நம்மை உள்ளார்ந்து பார்க்கவும், நமது சுமைகளை உணரவும், அவற்றை சுத்தம் செய்து விடுவிக்கவும் கற்றுத் தருகிறது. உடலை சுத்தம் செய்வது போல், மனதை சுத்தம் செய்வதும் அவசியம்.

பயனில்லாத எண்ணங்களை விட்டுவிடுதல், கடந்த கால குற்றவுணர்வுகளை மன்னித்தல், கட்டுப்படுத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுதல், இன்றைய நிமிடத்தில் வாழ்தல் ஆகியவை சார்ந்த முயற்சிகளை எடுக்கவேண்டும். இந்த நடைமுறையில், மன சுத்தம் என்பது போராட்டமல்ல; அது விடுதலை. வெறுமை என்பது இழப்பு அல்ல; அது புதிய தெளிவுக்கான வாய்ப்பு என மாறுகிறது. அமைதி என்பது எதையாவது சேர்ப்பதில் இல்லை; தேவையற்றதை விட்டு விலகுவதில் உள்ளது என்ற செய்தியை ஒசோஜி நமக்குக் கற்றுத் தருகிறது.

அடுத்த மாத போகிப் பண்டிகையை ஒசோஜி ஆக்குவோம்.

No comments:

Post a Comment