Thursday, 3 May 2018

லட்சுமி

பிரணவ் ஸ்கேன் சென்டர்

ஸ்கேன் சென்டரில் மரணத்தின் முன்பாகக் காத்திருக்கும் முகங்கள்
அனைத்தையும் தெரிவித்து விடுகின்றன
போதும் போதும் எவ்வளவு பார்த்தாயிற்று ?
இவ்வளவு விரைவாகவா ?
முடிந்து விடுமோ ?
இதற்காகத்தானா ?
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ ?
பாதி கூட முடியவில்லையே ?
நிறைய வலி இருக்குமோ ?
சரியாகத்தான் போராடியிருக்கிறேன் ?
எவ்வளவு தவறுகள் ?
அகங்காரத்திற்கு ஒரு தலையணை தரக் கூடாதா ?
ஒவ்வொரு முகத்திலும்
தனித்தனி மொழி

ஸ்கேனிங் தொடங்குவதற்கு முன்னரே
முகங்கள்
அனைத்தையும் பேசி விடுகின்றன

எந்திரம் ஒவ்வொரு முகத்தையும் கூண்டுக்குள்
மெல்ல நகர்த்தி அழைத்துச் செல்கிறது
முகங்கள் பெற்றிருக்கும்
உடல்களுக்காக

-லட்சுமி மணிவண்ணன்

No comments:

Post a Comment