*நாங்கள் பெண்கள்! அதுவே பெருமை*
டென்னிஸ் விளையாட்டு உலகில் எவராலும் வெல்ல முடியாத ஒரு மாபெரும் புயல் செரினா வில்லியம்ஸ்.
சமீபத்தில் ஓர் அழகான பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். ஒலிம்பியா என்று பெயர் வைத்திருக்கிறார். குழந்தையுடன் இருக்கும் தருணத்தில் தனது தாயை எண்ணி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் செரீனா. உலகம் முழுவதும் உள்ள பெண்களையும், பெண் குழந்தைகளையும் அந்தக் கடிதத்தின் வாயிலாக பெருமைப்படுத்துகிறார் செரீனா.
அன்புள்ள அம்மா,
எனக்குத் தெரிந்த மிகவும் வலிமையான ஒரு பெண்மணி நீ.
இதோ என் மகள், ஆம் இப்போது எனக்கொரு மகள் இருக்கிறாள், அவளும் என்னைப் போன்றே வலிமையான கை மற்றும் கால்களை பெற்றிருக்கிறாள் என்று எனக்குத் தெரிகிறது.
தன் அம்மாவைப் போன்றே அவளும் மிகவும் கடினமான, சக்தியுள்ள, பலமான உடல் அமைப்புடன் இருக்கிறாள்.
15 வயது தொடங்கி இன்று வரை நான் சந்திக்கும் அதே சவால்களை என் மகளும் சந்திக்கப் போகிறாள், அதை நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.
நான் பார்ப்பதற்கு மிகவும் பலமாக இருந்ததால், என்னைப் பலரும் ஆண் என்று கூறினார்கள். எனது பலத்திற்காக நான் போதைப்பொருள் உட்கொள்வதாகக் குற்றம் சாட்டினார்கள்.
நான் பெண்கள் பிரிவில் விளையாடத் தகுதி அற்றவள் என்றும், மற்ற பெண்களைவிட நான் பார்ப்பதற்கு கடினமாகத் தெரிவதால் நான் ஆண்கள் பிரிவில் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் இப்படியொரு நேர்மாறான உடலைப் பெற்றிருப்பதை எண்ணி நான் பெருமைதான் படுகிறேன்.
ஒவ்வொரு நிருபர், அறிவிப்பாளர் மற்றும் என்னை நேரடியாக வெறுப்பவர்கள் யாரும் ஒரு கருப்பினப் பெண்ணின் மன உறுதியை அறிந்திருக்கவில்லை. மற்ற சில பெண்களைப் போல் நான் இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
உயரமோ, குள்ளமோ, வளைவுகளுடன் கூடிய உடலோ அல்லது வலிமையான தசைகளை கொண்ட உடலோ அனைத்தும் ஒன்றுதான், *நாங்கள் பெண்கள், அதை நாங்கள் பெருமையாகவும் கருதுகிறோம்.*
நீங்கள் மிகவும் கம்பீரமானவர், உங்களை முந்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால் கடவுள் இன்னும் அதை எனக்கு வழங்கவில்லை, நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. நான் அனுபவித்த சில சவால்களை எதிர்கொண்டு அனைத்துக் கஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் மனோபாவம் நான் பெறுவதற்கு நீங்கள்தான் ஒரு முன்மாதிரியாக இருந்தீர்கள். நான் என் மகள் ஒலிம்பியாவிற்கும் அதைக் கற்பிக்க விரும்புகிறேன்.
*உன்னுடைய ஐந்தாவது இளைய மகள்- செரீனா*
No comments:
Post a Comment