Thursday 28 July 2016

உடையார்

பிரமிடுகளின் உள்ளே-தி இந்து


மனித உழைப்பின் மகத்தான படைப்புகளில் 4,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பிரமிடுகள் குறிப்பிடத்தக்கவை. எகிப்து சாம்ராஜ்யம் உலகிலேயே பெரும் செல்வச்செழிப்பும் வலுவும் கொண்டிருந்த காலம் அது. மக்கள் மன்னர்களைத் தெய்வங்களாக வழிபட்ட காலம் அது. மன்னர் மரித்த பிறகும் அவரை வழிபட்டால்தான் தமக்குத் தீங்கு ஏதும் வராது என மக்கள் நம்பினார்கள். மன்னரின் ஆத்மா சிரமம் இல்லாமல் வானுலகுக்கு ஏற வசதியாகப் பிரமிடுகள் நாற்கூம்பு வடிவில் அமைக்கப்பட்டன. அவற்றின் சரிந்த பக்கங்கள் சூரியனின் கதிர்களைக் குறித்தன.

மன்னர் மரித்த பிறகும் அவரது ஆத்மாவின் ‘கா’ என்ற பகுதி அவருடைய உடலிலேயே தங்கிவிடுவதாகப் பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள். ஆத்மா வசதியாகக் குடியிருக்கும் வகையில், மன்னரின் உடலைப் பாடம்செய்து ஆகாரங்கள், உடைகள், படுக்கை

கள், இருக்கைகள், கழிப்பறைகள் எனப் பலவகைப் பொருட்களையும் மன்னருடைய உடல் இருந்த அறையில் வைத்தார்கள். அவருக்கு மரணத்துக்குப் பிறகும் ஊழியம் செய்வதற்காக மந்திரி பிரதானிகளையும் மனைவியரையும் ஊழியர்களையும் உள்ளே தள்ளி மூடினார்கள். அவர்களுடைய வழிச் செலவுக்காகத் தங்க நாணயங்களை உள்ளே குவித்து வைத்தார்கள். ஜோசர் என்ற மன்னரின் அடக்க ஸ்தலத்துக்கு மேல் சக்காரா என்னுமிடத்தில் கி.மு. 2360 வாக்கில் அமைக்கப்பட்டதுதான், இதுவரை அறியப்பட்ட பிரமிடுகளில் மிகவும் பழமையானது. அதை வடிவமைத்தவர் இம்ஹோடெப் என்ற பூசாரி. அவர் பகுதி நேர மருத்துவராகவும் பணியாற்றினார். 1400 ஆண்டுகள் கழித்து, மக்கள் அவரை எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்களின் காவல் தெய்வமாக மாற்றி வழிபடத் தொடங்கினார்கள்.

பிரமிடுகளின் அறிவியல் வடிவம்

கி.மு. 2600 வரை நிர்மாணிக்கப்பட்ட பிரமிடுகளின் பக்கச் சுவர்கள் படிக்கட்டுகளின் வடிவில் அமைந்தன. அதன் பிறகு அமைக்கப்பட்டவை சமதளமாக அமைக்கப்பட்டன. அந்த வகையில், முதன்முதலாக அமைக்கப்பட்டது தஹசூர் என்ற இடத்தில் சிவப்பு நிறச் சுண்ணாம்புப் பாறைகளால் அமைந்ததாகும். கி.மு. 2200 வாக்கில் பிரமிடு கட்டும் ஆர்வம் மறைந்துவிட்டது. எகிப்திய சாம்ராஜ்யத்தின் செல்வாக்கு மங்கியதும் ஒரு காரணம். பிரமிடுகளில் புதைந்து கிடந்த செல்வங்களைக் கொள்ளையர்கள் கொண்டுபோனார்கள். அவற்றின் வெளிப் பரப்புகளில் பதிக்கப்பட்டிருந்த வழவழப்பான சுண்ணாம்புக் கல் பாளங்களைக்கூடப் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள்.

பிரமிடுகளின் வடிவம் பூமியில் பரவியிருக்கிற ஆற்றல் புலங்களான மின்காந்த அலைகள், காஸ்மிக் கதிர்கள், மின்னிறக்க அலைகள், நிறையீர்ப்பு அலைகள் போன்றவற்றை உள்வாங்கிப் பெரிதுபடுத்தும் ஒத்ததிர்வி அமைப்பாகும். அந்த ஆற்றல்கள் பிரமிடுக்குள் ஒன்றோடொன்று ஊடாடுகின்றன. பிரமிடு தன்னைச் சுற்றிலும் ஒற்றைச் சுர (அதிர்வெண்) அலைக் கோளத்தை உண்டாக்கிக் கொள்கிறது. அந்தக் கோளத்துக்குள் இடம்பெறுகிற எல்லாப் பொருட்களும் அந்தச் சுரத்தில் அதிர்வடைகின்றன.

நடுவில் தீ

சாதாரணமான காந்தத்தில் விசைப்புலங்கள் வட முனையிலிருந்து வெளிநோக்கியும் தென் முனையில் உள்நோக்கியும் பரவும். ஒரு பிரமிடுக்குள் ஒரு காந்தத்தை வைத்தால், விசைப்புலங்கள் வட முனையில் உள்நோக்கியும் தென் முனையில் வெளிநோக்கியும் பரவுகின்றன. பிரமிடுக்குள் அதன் மேல்முனை காந்த வட முனை போலவும், அதன் அச்சின் நடுப் புள்ளி தென் முனை போலவும் செயல்படுகின்றன. அதன் உச்சியில் உள்நோக்கிச் செலுத்தப்படும் ஆற்றல் அச்சின் நடுப் புள்ளியிலிருந்து வெளிநோக்கிப் பாய்கிறது. அது பிரமிடின் சாய்ந்த சுவர்களில் பட்டுப் பிரதிபலித்து, ஒரு புள்ளியில் குவிகிறது. அந்தப் புள்ளியில் மன்னரின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பிரமிடு என்ற சொல்லுக்கு ‘நடுவில் தீ’ என்று பொருள்.

அந்த மையப் புள்ளியில் தொடர்ந்து ஆற்றல் குவிந்துகொண்டேயிருப்பதால், எலெக்ட்ரான்கள் மேலும் மேலும் விரிவடைந்துகொண்டே போகிற வட்டப் பாதைகளில் சுற்றிவரத் தொடங்குகின்றன. அவற்றின் ஆற்றல் அலைகளின் அலை நீளம் 10 நானோ மீட்டர் அளவை நெருங்கும்போது, ஆற்றல் பிரமிடின் மூலைகளிலிருந்து வெளியே கசியத் தொடங்குகிறது. அந்த ஆற்றல் உயிரூட்டம் செய்வதற்கான பிரபஞ்ச ஆற்றல் எனப்படும். அது விண்வெளி முழுவதும் விரவிப் பரவியிருக்கிறது. ரேடியோ அலைகளை உள்வாங்கி வீட்டுக்குள்ளிருக்கும் ரேடியோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டி இயங்க உதவும் ஆன்டெனாவைப் போல, உயிரியல் பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கும் அமைப்பாகச் செயல்படுகிறது பிரமிட். கிஸா பிரமிடின் உச்சியில் ஏறி நின்றபோது, தமது உடலில் பெரும் ஆற்றல் புலம் விரவியதாகப் பல ஆய்வர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

வலுவூட்டப்படும் ஆற்றல்கள்

படிக வகைப் பாறைகள், கருங்கல், சலவைக்கல் போன்றவற்றால் அமைக்கப்படும் பிரமிடுகள் தம்மைச் சுற்றிலும் ஒரு கோள வடிவிலான ஒற்றைச் சுர அதிர்வெண் மண்டலத்தை உருவாக்குகின்றன. ரோஸ் கருங்கல் என்ற வகைக்கல், கிஸா பிரமிடில் மன்னர் சவப் பெட்டி அறையை அமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கல் மிகுந்த காந்தத் தன்மையுள்ளது. அது தான் இருக்கு மிடத்தின் காந்தப்புலத்தை மாற்றியமைக்கக்கூடியது.

கிஸா பிரமிடின் வெளிப்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள சுண்ணாம்புக் கல், காந்த எதிர்ப்புத் தன்மை கொண்டது. ஒரு சட்டக் காந்தத்தை அதனருகில் கொண்டு சென்றால், காந்தத்தின் இரு முனைகளுமே விலகி ஓடும். எனவே, பிரமிடுக்குள் நுழையும் எந்தவித ஆற்றலும் உடனடியாக வெளியேறிவிடும். இவ்வாறான துகள்கள் பிரமிடைச் சுற்றிலும் ஒரு குமிழி வடிவ விசைப்புலத்தை உண்டாக்கும். அந்தக் குமிழி வேறு எந்த ஆற்றலும் பிரமிடுக்குள் புகாமல் தடுக்கிறது. இதன் மூலம் அழிவுண்டாக்கும் ஆற்றல்கள் தடுக்கப்பட்டு, பிரமிடுக்கு உள்ளிருக்கிற ஆக்க ஆற்றல்கள் வலுவூட்டப்படுகின்றன.

கிஸா பிரமிடை ஆய்வு செய்யும் அனைத்து நாட்டு அமைப்பைச் சேர்ந்த ஜோ பார் இவ்வாறான ஆற்றல் புலங்களை ஆய்வுசெய்தபோது பிரமிடின் அடிப்பரப்பிலிருந்து, அதன் மொத்த உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் உள்ள ஒரு மையப்புள்ளியில் இந்த ஆற்றல் புலம் வெளிப்படுவதாகக் கண்டுபிடித்தார். சூரியப் புள்ளிகளின் தாக்கமும் சந்திரனின் அலைகளின் தாக்கமும் பிரமிடின் ஆற்றல் புலத்தின் செறிவைக் கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன. ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் பிரமிடின் ஆற்றல் புலம் எல்லாவிதமான கதிர்களையும், பூமியின் ஈர்ப்பு விசையையும் பிரமிடுக்குள் புகாமல் தடுத்துவிடுகிறது. பூமியில் பரவியுள்ள காமா கதிர்களின் ஆற்றலையும் பிரமிட் தணித்துவிடுகிறது. பிரமிடைச் சுற்றியுள்ள மற்றும் அதனுள் இருக்கிற வளிமண்டலத்தின் ஆற்றல் மேற்கூறப்பட்ட மையப்புள்ளியைச் சுற்றியுள்ள ஒரு கோள வடிவப் புலத்துக்குள் அடங்கிவிடுகிறது. அவ்வப்போது பிரமிடுக்குள்ளும் வெளியேயும் நிறுவப்பட்டுள்ள ஆய்வுக் கருவிகளில் பதிவுகள் எதுவும் ஏற்படாமல் அந்த ஆற்றல் தடுக்கிறது. இது போன்ற தடங்கல் விளைவுகள் காரணமாக சூரியப் புள்ளிகள் போன்ற வானுலகச் சம்பவங்களுக்கும், பிரமிடின் ஆற்றல் குமிழின் செறிவுக்கும் இடையில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பிரமிடுகளுக்குள் கிருமிகளைக் கொன்றழிக்கக்கூடிய காரணி எதுவும் புலப்படவில்லை. ஆனால், உயிரினங்களின் திசுக்கள் சிதையும்போது உருவாகும் ஊட்டச்சத்துகளே கிருமிகளின் உணவு. பிரமிடுக்குள் திசுக்கள் சிதைவது மிக மிக அரிது. எனவே, கிருமிகளும் பாக்டீரியாக்களும் செழித்து வளர வாய்ப்பு கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே பிரமிடுக்குள் வைக்கப்படும் உணவுகள் கெட்டுப்போவதில்லை. அவை கெட்டுப்போக அவகாசமில்லாமல் உலர்ந்து விடுகின்றன. விதைகள் தாமதமாக முளை

விடுகின்றன. பிரமிடுகளுக்குள் வழிதவறிப் புகுந்துவிடும் எலிகள் அப்படியே காய்ந்துவிடுகின்றன. பல பிரமிடுகளுக்குள் இப்படிப் புகுந்து காய்ந்துபோன நாய், பூனை ஆகியவற்றின் உலர்ந்த சடலங்கள் காணப்பட்டிருக்கின்றன. அவை மன்னர்களின் வளர்ப்புப் பிராணிகள் எனவும் மன்னருடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன எனவும் தவறான கருத்துகள் பரவ அவை காரணமாகிவிட்டன.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்

கவிதை-ஞானக்கூத்தன்


கணக்குப் போட்டான்
கணக்குப் போட்டான் விடை பிறர்க்குத்
தெரியாதிருக்க அவன் மறைத்தான்

ஒருத்தன் பார்த்தால் அவனுக்குக்
கண்ணிரண்டும் முஷ்டிகளாகும்

பலகைகள் எல்லாம் கீழ்வைத்தார்

இடைவேளைக்கும் உணவுக்கும்
பள்ளிக்கூட மணி அசைய
பலகை அடுக்கப் படுகிறது
ஒன்றின் மேல் ஒன்றாக
சரியும் தப்பும் சரியாக

அவனைப் பார்த்தான் அவன் சரியாய்ச்
செய்தான் என்றே கருதியதால்
இவனைப் பார்த்தான் இவன் சரியாய்ச்
செய்தான் என்றே கருதியதால்
ஆமாம் என்று நினைத்தேன்
உனதென்றாலும் எனதென்
றாலும் என்ன நம்விடைகள்
இன்னொன்றுக்கு பொருந்தணுமே.


கவிஞர் : ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன் படைப்புக்கள்

விளிம்பு காக்கும் தண்ணீர்


விளிம்பு காக்கும் தண்ணீர்
.............................................
கொடிவிட்ட தண்ணீர்
தரையில் ஓடியது. ஓடி
சற்றுத் துாரத்தில் நின்றுவிட்டது
வழிதெரியாதது போல.
தொங்கும் மின் விசிறியின் காற்று
தண்ணீரை அசைக்கிறது.
மேலே தொடர்ந்து செல்ல
தண்ணீருக்கு விருப்பமில்லை
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
காற்றினால் கலையும்
தன் விளிம்புகளை
இறுகப் பிடித்துக்கொண்டு
அங்கேயே நிற்கிறது தண்ணீர்.
-ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன் கவிதைகள்

Wednesday 27 July 2016

நகுலன்


செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு
-நகுலன்

Tuesday 26 July 2016

சலாம் கலாம்

நாஞ்சில் நாடன் நாவல்கள்

வெயிலோடு போய்..-ச.தமிழ்ச்செல்வன்

அப்பா-கனிமொழி


அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?

-கனிமொழி

தொடர்சியின் சுவடுகள்-பாவண்ணன்


தொடர்ச்சியின் சுவடுகள்-பாவண்ணன்

‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பாக பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.



வசிக்குமிடத்து மொழியின் இலக்கிய பரப்பை இவ்வளவு விரிவாக தாய்மொழிக்கு கொண்டு வருவது மூலம் அவர் இரண்டு மொழிகளுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதற்கு மகுடம் வைத்தது போல பைரப்பாவின் ‘பருவம்’ நாவலின் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகதெமி விருது அமைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் தமிழிலும் தீவிரமாக புனைவுகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறார். எழுதுவது தவிர வேறெந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கிறார். தன்னுடைய ‘சுவரொட்டிகளின் நகரம்’ என்ற கவிதையில், பொருளற்ற வார்த்தைகளும் கூச்சந்தரும் குழைவுகளும் எப்படி ஒரு நகரத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றன என்று கூறியிருப்பார். தன்னைச் சுற்றிலும் இருக்கும் நகரம் முழுவதுமாக ஒரு சுவரொட்டியாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் துயரம் அக்கவிதையில் தெரியும்.

அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்

மெல்ல மெல்ல இந்கரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக் கொண்டிருக்கிறது

அதையே சற்று விரித்து, ‘சுவரொட்டி சொக்கலிங்கமாக’ விகடனில் சிறுகதையாக எழுதியிருந்தார். கண்ணைக்கு குத்தும் பொருளற்ற சுவரொட்டிகளிடையே, சமூகத்திற்கு சேதி சொல்லும் பெரியப்பா சொக்கலிங்கத்தையும் பாவண்ணனின் படைப்புக் கண்கள் தவறவிடவில்லை. ஒரே செயலின் இருப்பக்கத்தையும் அவரால் தன் எழுத்தில் கொண்டு வர முடிகிறது. ‘சுவரொட்டி’ சிறுகதையில் ஓரிடத்தில் சொக்கலிங்கம் தன்னையே ஒரு நடமாடும் சுவரொட்டியாக மாற்றிக் கொண்டு கடற்கரையில் பாலிதீன் பைகள் விற்பதை தடுக்க பாடுபடுவார். அந்த சாத்வீகமான போராட்டத்தை, கடற்கரை கடை முதலாளிகள்க் கூட்டம் முதலில் கேலியாலும், பிறகு புறக்கணிப்பாலும், அதன் பிறகு வன்முறையாலும் எதிர்கொண்டு, பிறகு தோற்றுப்போவார்கள். ஒரு எதிர்பாரா தருணத்தில் இறந்துவிட்ட சுவரொட்டி சொக்கலிங்கத்தை, மின்மயானத்திற்கு கொண்டு சென்று, தானே கொள்ளிவைத்துவிட்டு வீடு திரும்புவார் கதைசொல்லி. திரும்பும் வழியில், நகரெங்கிலும் காணும் போஸ்டர்களில் எல்லாம் கதைசொல்லிக்கு,, சொக்கலிங்கத்தின் முகம்தான் பிரகாசமாகத் தெரியும். இத்தேசத்தில் காந்திய சிந்தனை என்றும் மங்காது தொடர்ச்சியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதை பதிவு செய்யும் படைப்பு அது.

அம்மா வந்தாள்- தி.ஜா


தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள். அதனால் அவளுக்கு அப்புவின் மீது தீராக்காதல்.தான் மணமாகி இருந்தாலும் அனைத்து நாட்களிலும் அப்புவையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறாள். அப்பு அது பவானியம்மாவுக்கும், தன்னை நம்பி அனுப்பிய தன்னுடைய அம்மா அலங்காரத்திற்கும் செய்யும் துரோகம் எனக் கூறி மறுத்துவிடுகிறான். அதனால் கோபமடையும் இந்து, அப்புவிடம் அவனுடைய அம்மாவின் நடத்தை சரியில்லை எனவும், அவள் வேறொருவரோடு உறவு வைத்துள்ளதாகவும் கூறுகிறாள். அதனால் கோபமடையும் அப்பு பின்னர் சென்னைக்கு சென்றுவிடுகிறான். அங்கு அவனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். பதினாறு வருடம் கழித்து வரும் அப்பு சில நாட்களிலேயே உண்மை அறிந்து கொள்கிறான். ஆம் இந்து கூறியது உண்மைதான். வீட்டிற்கு வரும் சிவசு பற்றி அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அப்பா, அக்கா, அண்ணன், என எல்லோருக்கும் தெரிந்த உண்மை தனக்குத் தெரியாமல் போனதை உணர்கிறான். அதனால் மனமுடையும் அவன் மீண்டும் வேத சாலைக்கே திரும்புகிறான். இந்துவோடு சேர்கிறான். இதற்கிடையில் அப்புவின் மீது அளவிலா பாசம் வைத்திருக்கும் அவன் அம்மா அலங்காரம் அப்புவினைப் பிரியமுடியாமல் வேத சாலைக்கு வந்து அப்புவைப் பார்த்துவிட்டு காசிக்கு செல்கிறாள்.

மிகவும் தத்ரூபமான நாவல். நீதான் நான் பெற்ற கடைசியாய்ப் பெற்றபிள்ளை என அப்புவிடம் அவன் அம்மா கூறும் இடம் உச்சம். அந்த ஒற்றை வரியே நாவலின் மொத்த சித்திரத்துக்கும் போதுமானது.

அதோடு தன்னுடைய வேதசாலை பவானியம்மாளைப் பார்க்கச்செல்லும் போது, பதினாறு வருடம் கழித்து வந்த பிள்ளை தன்னை விட்டு நிரந்தரமாகப் போய்விடுவானோ என்ற எண்ணத்தில் ‘அம்மா மேல உள்ள கோவத்தில வராம இருந்துரமாட்டியே’ எனும் போது மனிதர்கள் உணர்வுகளாலேயே ஆட்டுவிக்கப்படுகிறார்களே ஒழிய வேறொன்றால் அல்ல என்ற எங்கோ வாசித்த வரிதான் நினைவுக்கு வந்தது.

தமிழின் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்று.

Monday 25 July 2016

வாசிப்பின் அரசியல்-மருதன் (தி இந்து)


புத்தக வாசிப்புக்கும் அகமண முறைக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. என்ன சாதி, அதில் என்ன உட்பிரிவு, என்ன குலம் என்றெல்லாம் பார்த்துத் தங்களுடன் பொருந்திவந்தால் மட்டுமே திருமண உறவை ஏற்படுத்திக்கொள்வார்கள். மாற்றுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பொருட்படுத்தக்கூட மாட்டார்கள். வாசிப்பிலும்கூடப் பலர் இதே முறையைத்தான் கையாண்டுவருகிறார்கள்.

ஒருவர் இடதுசாரி என்றால் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ என்று தொடங்கி ஒரு கறாரான வரிசையை ஏற்படுத்திக்கொள்வார். இந்த மூலஆசான் களின் கோட்பாடுகளை முன்வைத்து விவாதிக்கும் சிந்தனையாளர் களை மட்டுமே அவர் வாசிப்பார். மற்றவர்களை எட்டிக்கூடப் பார்க்க மாட்டார். வலதுசாரியும் இவ்வாறே ஒரு கோட்டைக் கிழித்துக்கொண்டு அதை மிகக் கவனமாகப் பின்பற்றுவார்.

பொன்விதி

சற்றே நெருங்கி வந்து விவாதிப்போம். ராஜாஜி, திலகர், லஜபதி ராய், ராஜேந்திரபிரசாத் போன்றவர்களை ஓர் இடதுசாரி மனம் திறந்து வாசிப்பார் என்றா நினைக்கிறீர்கள்? மூலதனம் வரை போக வேண்டாம்; இருப்பதிலேயே எளிமையான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஒரு வலதுசாரி பிரித்தாவது பார்ப்பாரா?

காந்தியைப் படித்துப் பார்த்திருக்கிறேன்.. அவருடைய இன்னின்ன கருத்துகளோடு என்னால் உடன்பட முடியவில்லை என்றோ மார்க்ஸியத்தை நிராகரிப்பதற்கு என்னிடம் வலுவான காரணங்கள் உள்ளன என்றோ ஒருவர் தரவுகளை அடுக்கிக்காட்டி வாதிடலாம். ஆனால், இங்கு பலர் இப்படித் தர்க்கரீதியாக ஒரு சித்தாந்தத்தை ஏற்பதோ நிராகரிப்பதோ இல்லை.

நான் ஏன் ராஜாஜியை அல்லது விவேகானந்தரைப் படிக்க வேண்டும் என்றும் நான் ஏன் பெரியாரை அல்லது ஸ்டாலினைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும்தான் வாதிடுகிறார்கள். அதாவது, ஒருவர் இடதுசாரியாக அல்லது வலதுசாரியாக இருப்பதாலேயே அவர் சில விஷயங்களைப் படிக்கலாம் அல்லது படிக்க வேண்டாம் என்பதாக ஆகிவிடுகிறது. ஒருவர் எதையெல்லாம் ஏற்க வேண்டும், எதையெல்லாம் மறுக்க வேண்டும் என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. இந்த முடிவைச் சம்பந்தப்பட்டவர் என்றென்றைக்குமான ஒரு பொன்விதியாக ஏற்றுக்கொள்ளும்போது, அவர் தன் கதவுகளைச் சிலருக்குத் திறந்துவிடுகிறார், சிலருக்கு மூடியே வைக்கிறார். அகமண முறையோடு வாசிப்பை முடிச்சுப்போட வேண்டிய அவசியம் ஏற்படுவது இந்த இறுக்கமான மனநிலையால்தான்.

இந்த மனநிலையுடன்கூடிய வாசிப்பு ஒருபோதும் முழுமையான பார்வையைத் தந்துவிடாது. நாம் கொண்டாடும் சிந்தனையாளர்கள் யாரும் இப்படி இருந்ததில்லை. அம்பேத்கர் இடது அரசியலை நிராகரித்தவர் என்றபோதும் இறுதிவரை அவர் கார்ல் மார்க்ஸுடன் உரையாடிக்கொண்டிருந்தார். வலதுசாரி பொருளாதார அறிஞர்களையும் கற்பனா வாதத் தத்துவவியலாளர்களையும் மார்க்ஸ் ஆழமாகக் கற்றிருந்ததோடு கிறிஸ்தவத் தையும் பண்டைய மதங்களையும் அவர் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத் தினார். நல்ல இலக்கியப் பரிச்சயமும் அவருக்கு இருந்தது. தன்னுடைய விரிவான, ஆழமான வாசிப்பின் முடிவில்தான் மார்க்ஸ் கம்யூனிஸத்தைக் கண்டடைந்தார். இந்த முடிவுக்கு வந்து சேர்ந்த பிறகும், அவர் முதலாளித்துவச் சிந்தனையாளர்களின் படைப்புகளை ஊன்றி வாசித்துக்கொண்டுதான் இருந்தார்.

ஏற்பும் நிராகரிப்பும்

நம்மில் பலர் இதனைத் தலைகீழாகச் செய்துவருகிறோம். ‘எதிர் முகாம்’ எழுத்துகளை வாசிக்காமலேயே, அவற்றை முதலில் நிராகரித்துவிடுகிறோம். ஓரளவுக்குக்கூட பரிச்சயமில்லாமல், ஒரு சிறு அறிமுகத்தைக்கூட ஏற்படுத்திக் கொள்ளாமல், ஒரு கோட்பாட்டை போகிறபோக்கில் புறக்கணிப்பதோடு, அதை எள்ளி நகையாடவும் செய்கிறோம்.

பங்குச்சந்தை மோசமானது என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டு நகர்ந்து சென்றுவிடுவது சரியல்ல. பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது, அதன் அடிப்படைகள் என்ன என்பதை வாசித்துக் கற்க வேண்டும். இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு, ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி, பாசிசம் ஆபத்தான சித்தாந்தம் என்றெல்லாம் வெறுமனே தீர்ப்பெழுதிவிட்டு ஒதுங்கிப்போவதற்குப் பதில், இஸ்ரேலின் வரலாற்றை ஆழமாகக் கற்க முன்வர வேண்டும். ஜெர்மனி ஏன் ஹிட்லர் போன்ற ஒருவரை உற்பத்தி செய்தது என்பதை ஆராய வேண்டும். பாசிசம் ஏன் ஆபத்தானது, வரலாற்றில் அது வகித்த பாத்திரம் என்ன என்பதைத் தேடிப்பிடித்துக் கற்க வேண்டும்.

வாசிக்காமலேயே நிராகரிப்பதைக் காட்டிலும் சிக்கலானது, வாசிக்காமலேயே ஏற்பது. எல்லா விதமான கருத்துகளையும் படித்து உள்வாங்கி, அலசி ஆராய்ந்து தனக்கான ஒரு சரியான கருத்தாக்கத்தை அல்லது கோட்பாட்டை வரித்துக்கொள்வதே சரியான அணுகுமுறை. இதுவே அறிவியல்பூர் வமானதும்கூட.

இன்னொன்றோடு மோதிக்கொள்ளும் போதுதான், அதை எதிர்த்துப் போராடும் போதுதான் ஒரு கருத்து வளர்கிறது, வலுவடைகிறது. அதற்காகவேனும் நாம் நமது கூடுகளை உடைத்துக்கொண்டு, திறந்த மனத்துடன் வாசிப்பை விரிவாக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்யும்போது இரண்டு விஷயங்கள் நிகழ்கின்றன. நம்முடைய கருத்து தவறானதாக நிகழ்கின்றன. நம்முடைய கருத்து தவறானதாக இருந்தால் உதறித்தள்ளிவிட்டு நம்மை மாற்றிக்கொள்ளலாம். சரியாக இருந்து விட்டால் மேலதிக உறுதியுடனும் நேர்மையுடனும் அதனைப் பற்றிக்கொள்ளலாம்.

– மருதன், எழுத்தாளர்,

ஆப்பிரிக்க கதைகள்

குட்டிக்கதை-நன்றி பிழைதிருத்தி


*ஒரு குட்டிக்கதை*


ஒரு ஊரில்  தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி  போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே  அவரது  அடையாளம் ....

     வீதியில் அவரைக்  கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...

 ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும்  ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால்  மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது  கூட உண்டு....

 ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார்....

 அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்....

          அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து  , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது....

 இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது.  இன்று  இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்....

       " என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்...

 அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார்...

 பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

          வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வேலையை ஆரம்பித்தார்...

       பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று  எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார்...

" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி   வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி  நாவிதன்னு  சொல்றாங்க ?  "

 இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
           
             "நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை  பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "

            இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு  சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
 இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.....

  இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

          " எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " .
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

 அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம் .
          இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

         இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்.  பண்டிதரின்  பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.....

         கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை  வழித்தெடுத்து அவர் கையில்  கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்....

                நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"

       இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
        நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ".  என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்....

             நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது....

          கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக்  கட்டினார்...

 நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல

புதிய தமிழ்ச்சிறுகதைகள்- அசோகமித்ரன்

அவளின் பார்வைகள்-கலா ப்ரியா


*அவளின் பார்வைகள்*


காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
காக்கைகள்

தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின


கைகள் காதலித்த
கண்ணாடி தம்ளர்
காதலை ஏற்காதென்
காலடியில்
நொறுங்கிச் சிதறியது
உடைந்த துகள்கள்
காலில் குத்தி
உறவாகி விட்டன
என் ரத்தத்தோடு


எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை தரப்பார்க்கிறது


கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம்
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்


கூட்டிலிருந்து
தவறிவிழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை

அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

என்ன செய்தும்
இவன் காலடியில்
தலைவைத்துப் பணிய
மறுக்கிறது நிழல்
இவனின் நிழல்


தூண்டில் மீனின்
துடிப்புகளைப் பாடுவதற்காய்
மட்டுமே நான்
ஆற்றோரம் காத்திருக்கிறேன்
அரை நிர்வாணிகளுக்காயில்லை


ஒப்பனைகளை
அழித்துவிட்டு
என்னுடைய
நாடகத்தை
நானே
என்று பார்க்க


ஒரு
தென்னம்பிள்ளையின்
கீழ்
சில கனகாம்பரம்
ஒரு செம்பருத்திச் செடி
எனத் தோட்டம் வளர்த்து
தண்ணீர் பாய்ச்சுகிற
தம்பியின்
மத்யான நிழல் மகிழ்ச்சிகளை
உன்னால்
அவனின் பரிமாணப் பிரக்ஞை
வெளித் தெரிய
கவிதையாக்க முடிகிறதா

எப்படியென்று
தெரியவில்லை
தாமரையிலையில்
நரகல்

அத்தனை
தூரம்
கடந்து
பார்க்க
வந்திறங்கினேன்
கூப்பிடும் தூரத்தில்
எதிர்த்திசையில்
பஸ் ஏறப்போகிறான்
கூப்பிடவில்லை


என் தலைக்குள் வலி

“தொடந்து மழை நாட்களில்
தொழுவம் விட்டகல
மறந்த பன்றிகளும்
காய்ந்து
மக்கிப்
போக முடியாத
மந்தை நரகல்களும்”
என்றொரு படிமம்
திணிந்து கொண்டு
       -கலாப்பிரியா

செத்த மீன்- கு.அழகிரிசாமி


செத்த மீன்

— கு.அழகர்சாமி

ஒரு மீன் வரைந்து ’கலர் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே.

‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.

கத்துவார் டீச்சர் இம்முறை
’கட்டத்துக்குள் அடி’  என்று.

பரிதாபமாய் டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள் கலரடிக்கும் குழந்தை
செத்த மீனின் மேல்.

நா.முத்துக்குமார்


முதல் மனிதன் உருவானபோது காடு அவனை பயமுறுத்தியது
இரண்டாம் மனிதன் உருவானபோது காடு அவனுக்கு பழக்கமானது
மூன்றாம் மனுதன் உருவானபோது காடு அவனுக்கு கற்றுக் கொடுத்தது
நான்காம் மனிதன் உருவானபோது காடு அவனிடம் கட்டுப்பட்டது
அடுத்தடுத்த மனிதர்கள் உருவானபோது காடு அவர்களிடம் காயப்பட்டது.!
-நா.முத்துக்குமார்

Saturday 23 July 2016

மு.வ-கவிஞர் இரா.ரவி


இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் வட ஆற்காடு, திருப்பத்தூர் வட்டம், ‘வேலம்’ என்ற சிறு கிராமத்தில் முனுசாமி, அம்மாக்கண்ணு பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ‘திருவேங்கடம்’. தாத்தா பெயர் வரதராசன். அப்பெயரே நிலைத்தது.

தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தராக பணி தொடங்கி படிப்படியாகவே வாழ்வின் உச்சம் தொட்டவர். 1939ல் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி, பேராசிரியர், இப்படியே உயர்ந்து 1945ல் தமிழ்த்துறைத் தலைவரானார். 1948ல் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முதன்முதலில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார். 1939 முதல் 1961 வரை வரலாற்று சிறப்புமிக்க பச்சையப்பன் கல்லூரியிலேயே பெரும்பணி செய்தார். தமிழ்த்துறைத் தலைவராக முத்திரை பதித்தார். 1971 முதல் 1974 வரை புகழ்மிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.

மு.வ. அவர்கள் திரு.வி.க. அவர்களின் மீது அளவற்ற அன்பும், மரியாதையும், பாசமும் மிக்க இனியவர். மு.வ. அவர்கள் தன்னுடைய ஒவ்வோரு பிறந்த நாளின் போதும் திரு.வி.க. அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். திரு.வி.க. மறைந்ததும் பாரி நிலையம் அருகிலிருந்த பம்மல் சம்பந்தன் அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று வந்தார். மு.வ. அவர்களின் மூன்று மகன்கள் மருத்துவராக இருந்த போதும் ஆங்கில மருத்துவம் ஏற்காமல் இறுதி வரும் வரை இயற்கை மருத்துவமே ஏற்றுக் கொண்டார். திரு.வி.க. வரலாறு நூல் எழுதினார். காந்தியடிகள், அறிஞர் பெர்னாட்ஷா, கவிஞர் தாகூர் மு.வ. மிகவும் மதித்த நால்வர் பற்றியும் வரலாறு நூல் எழுதினார். கீதாஞ்சலியை 100 முறை படித்து இன்புற்றவர்.

மு.வ. அவர்களின் வீட்டில் இடைஞ்சலாக உள்ளது என மாதுளம் மரத்தை வெட்ட முற்பட்ட போது, உடன் தடுத்து விட்டார். காரணம் அவர் மிகவும் மதிக்கும் திரு.வி.க. அவர்கள் மு.வ. இல்லம் வந்தபோது துப்பிய விதையால் முளைத்த மரம் அது. குருவின் எச்சில் பட்ட விதை பிரசாதம் என்று போற்றினார்.

தான் வாழ்ந்த சென்னை செனாய் நகர் பூங்காவிற்கு திரு.வி.க. பெயர் சூட்ட வேண்டுமென்று அப்போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அண்ணாவும் அதனை நிறைவேற்றினார். மு.வ. மறைந்ததும் மு.வ. படத்தை பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா திறந்து வைத்தார்.

மு.வ. தான் தொடங்கிய பள்ளிக்கு திரு.வி.க.வின் பெயர் சூட்டினார். தான் எழுதிய நூல்களுக்கு வந்த ஆசிரியர் உரிமைத் தொகையை பள்ளிக்கு வழங்கினார்.

மு.வ. அவர்கள் எழுதிய நூல் 1939ம் ஆண்டு குழந்தைப் பாடல்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சார்பாக வந்தது. திரு.வி.க. அவர்கள் மு.வ.-விடம் சொந்தமாக நூல் பதிப்பித்திட ஆலோசனை வழங்கினார். பயனுள்ள ஆலோசனை இது.

1944ம் ஆண்டு வெளிவந்த ‘செந்தாமரை’ நாவல் மு.வ. அவர்களின் மனைவி ராதா அம்மையாரின் நகையை அடகு வைத்து சொந்தமாகப் பதிப்பித்தார். விற்பனை உரிமையை மட்டும் பாரி நிலையத்திற்கு வழங்கினார். பாரி நிலையம் செல்லப்பன் அவர்களும், மு.வ. அவர்களும் இணைபிரியாத நட்பை இறுதி வரை தொடர்ந்து, நட்பிற்கு இலக்கணம் வகுத்தனர். மு.வ.-வால் பாரி நிலையம் வளர்ந்தது. பாரி நிலையத்தால் மு.வ. வளர்ந்தார்.
மு.வ. அவர்களின் இல்லத் திருமணங்களை பாரி நிலைய செல்லப்பன் அவர்கள் முன்நின்று நடத்தினார். அதே போல் செல்லப்பன் அவர்களின் மகன் இராதாகிருஷ்ணன் திருமணத்திற்காக சோவியத் ரசியாவில் இருந்த மு.வ. அவர்கள், தமிழகம் வந்து சென்றார். அந்த அளவிற்கு இருவரது நட்பும் சிறந்து விளங்கியது. மு.வ. மறைந்த பின்னும் அவருக்கு நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு சிறப்பித்தது பாரி நிலையம். இன்றும் மு.வ. நூல் கிடைத்திட காரணமாக இருப்பது பாரி நிலையம்.

மு.வ. அவர்கள் தான் குருவாக மதிக்கும் திரு.வி.க. மீது மட்டும் அன்பு செலுத்தவில்லை தனது சீடர்கள் மீதும் அன்பு செலுத்தினார். நூலிற்கு அணிந்துரை தன்னை விட தகுதி மிக்க பெரியவர்களிடம் தான் எல்லோரும் வாங்குவார்கள். ஆனால், மு.வ. அவர்கள் தன்னிடம் பயின்ற மாணவர்கள், ம.ரா.போ. குருசாமி, ரகு நாயகம், வேங்கடசாமி, சீனிவாசன் ஆகில் நால்வர்களிடம் அணிந்துரை வாங்கி அவர்களுக்கு புகழ் சேர்த்தார். பெரிய உள்ளம் பெற்றவர் மு.வ..

செல்லப்பிள்ளை தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்கள் மீதும் அன்பு செலுத்தினார். தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களைக் காதலித்து மணம் முடித்த போது வாழ்த்தி வரவேற்றார். “தமிழ் உன்னை வளர்த்தது, நீ தமிழை வளர்க்க வேண்டும்” என்று எழுதி வாழ்த்தி உள்ளார்.

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் தன் குரு

மு .வ . போலவே நூல்கள் எழுதிக் குவித்து வருகிறார் .130 நூல்கள் எழுதி விட்டார். முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்களை மற்றுமொரு மு .வ .என்றால் மிகையன்று .மு .வ .போலவே கதை ,கவிதை ,நாவல் ,கட்டுரை என தெளிந்த நீரோடைப் போன்று, நல்ல தமிழில் எழுதி வருகிறார் .இன்று மு.வ .பரம்பரை வளர்ந்து வருகின்றது .

மு.வ. அவர்கள் தன் குரு திரு.வி.க. மீது அன்பு செலுத்தியது போலவே, தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் தன் குரு மு.வ. மீது அன்பு செலுத்தி வருகிறார். சாகித்ய அகதெமி சார்பில் மு.வ. வாசகம் என்ற நூல் எழுதி பெருமை சேர்த்தார். மு.வ. பற்றி பல நூல்கள் எழுதி உள்ளார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்க்கு கவிதை பரம்பரை உருவானது போல மு.வ. அவர்களுக்கும் மு.வ. பரம்பரை என்று உருவாகி உலகம் முழுவதும் பரந்து விரிந்து தமிழ் பரப்பி வருகின்றனர்.

மு.வ. அவர்கள் தான் என்ற அகந்தை இல்லாத எளியவர், இனியவர், அவர் ஒரு சகலகலா வல்லவர். பேராசிரியர் பணி செய்து கொண்டே எழுத்துத் துறையில் உள்ள அத்தனை வகைகளிலும் எழுதியவர், நாவல், கவிதை ,சிறுகதை, கட்டுரை, சிறுவர் பாடல், கடித இலக்கியம், பயண இலக்கியம், வரலாற்று நூல், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்ற சகலமும் எழுதிக் குவித்த வல்லவர். அவருடைய முதல் நாவலுக்கு ‘முருங்கை மரம்’ என்றே பெயரிட்டார். மு.வ.வின் மாணவர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் ‘செந்தாமரை’ என்று பெயர் சூட்டலாமா? என்று கருத்து சொன்ன போது, தனது மாணவர் தன்னை விட சிறியவர் என்று எண்ணாமல் உடனே அக்கருத்தை ஏற்று ‘செந்தாமரை’ என்று பெயர் சூட்டினார்.

பேராசிரியர் க. அன்பழகன், செந்தாமரை நாவல் மிகவும் பிடித்த காரணத்தால் தன் மகளுக்கு தாமரை என்று பெயர் சூட்டினார். ஒரு விழாவில் அவரே சொன்ன செய்தி இது. பொதுவாக நாவல்கள் பிரபல இதழ்களில் தொடராக வந்து கடைசியில் நூலாக வரும். ஆனால் மு.வ. அவர்கள் எழுதிய 13 நாவல்களில் பாவை, அந்த நாள் மட்டும் லோகோபகாரி, தமிழ்முரசு இதழ்களில் தொடராக வந்து நூலானது. மற்ற 11 நாவல்களும் நேரடியாகவே நூலாக வந்து விற்பனையில் சாதனை படைத்தது.

திருக்குறளுக்கு உரை பலர் எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள், ஆனால் இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் எழுதிய திருக்குறள் உரைக்கு ஈடான உரை, இதுவரை வரவில்லை, இனி வரப்போவதும் இல்லை. மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரை விற்பனையில் சாதனை படைத்தது. 200-க்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளது என்றாலை அதன் தரம் நன்கு விளங்கும்.

சமஸ்கிருதம் கலந்து எழுதி வந்த காலத்தில் நல்ல தமிழில், தெளிந்த நீரோடை போல எழுதியவர் மு.வ. அவர்கள்.. இன்றைய சில எழுத்தாளர்கள் போல பேச்சுநடையில் எழுதி தமிங்கிலம் கலந்து தமிழ்க்கொலை புரிவதில் மு.வ. அவர்களுக்கு உடன்பாடு இல்லை. நல்ல தமிழிலேயே நாவல் படைத்தார். கடித இலக்கியமும், பயண இலக்கியமும் யாவும் மிக நல்ல நடை. படித்த பண்டிதர்களுக்கும் புரியும். புதிதாகப் படித்து பழகுவோருக்கும் பிடிக்கும். மு.வ. அவர்களின் நூல் இல்லாத இல்லம் இல்லை என்ற அளவிற்கு மு.வ. வின் வாசகர் வட்டம் மிகப்பெரியது. நாவலில் வரும் பாத்திரங்களின் பெயர்களை தனது குழந்தைகளுக்கு வைத்திட்ட வரலாறும் உண்டு.

கலை என்பதற்கு மு.வ. அவர்கள் தரும் விளக்கம் மிகவும் அருமை. கலையின் பயன் இரண்டு : “ஒன்று – கிடைக்கும் சிறு ஓய்வு காலத்தை இன்பமாக்க் கழிக்கச் செய்வது, மற்றொன்று – நம்மை அறியாமல் வாழ்க்கையைத் திருத்தி உயர்த்துவது” இன்றைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள். நாம் படைக்கும் படைப்பு என்பது வாசகரை திருத்துவதாகவும், உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும். அதுதான் சிறந்த படைப்பு. அப்படி படைத்ததால் தான் மு.வ. அவர்கள் நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாசகர் மனங்களில் நிலைத்து நிற்கிறார்.

மு.வ. எழுதிய ‘காந்தியடிகள் நூல்’ படித்தால், காந்தியடிகள் பற்றி பிம்பம் மேலும் மேலும் உயர்த்துவதாக இருக்கும். மதுரை வந்த போது காந்தியடிகள் அரையாடை அணிந்த வரலாற்று உண்மையை அப்படியே நூலில் பதிவு செய்துள்ளார்.

மு.வ. அவர்கள் எழுதிய ‘கவிஞர் தாகூர் நூல்’ படித்தால் கீதாஞ்சலி, நோபல் பரிசு கிடைத்தது தகும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

மு.வ. அவர்கள் மிகவும் மதித்த மிகச் சிறந்த ஆளுமை திரு.வி.க. அவர்கள் பற்றி நூல் படிக்கும் போது திரு.வி.க.வின் உயர்ந்த உள்ளம் சிறந்த பண்பு யாவும் விளங்கும்.

மு.வ. அவர்கள் எழுதிய அறிஞர் பெர்னாட்ஷா பற்றி நூல் படித்தால், மு.வ. அவர்களை தமிழகத்தின் பெர்னாட்ஷா என்று அழைத்த்து முற்றிலும் பொருத்தம் என்ற முடிவுக்கு வரமுடியும்.
கடித இலக்கியம் என்ற பகுதியை தமிழகத்தில் தொடங்கி வைத்தவர் மு.வ. என்றால் மிகையன்று. ‘தங்கைக்கு’ என்ற நூலில் படி படி என்கிறார். சிலப்பதிகாரம் படி, கஸ்தூரிபாய் காந்தியைப் படி. வரலாறு படி, பிறரிடம் அன்பு செலுத்தி என்கிறார்.

‘தம்பிக்கு’ என்ற நூலில் தமிழ்ப்பற்று விதைத்துள்ளார். “தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்த வல்லது.. தமிழ் ஆட்சிமொழியாகவும் ஆனால் தவிர தமிழுக்கு எதிர்காலம் இல்லை, ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரையில் தமிழ் வழங்க வேண்டும்

மு.வ. அவர்களுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேதகிரி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மை தான். நோபல் பரிசு பெறும் தகுதி மு.வ. அவர்களுக்கு முற்றிலும் உண்டு.

வரலாற்று சிறப்பு மிக்க மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரை நூலில் இருந்து பதச்சோறாக ஒன்று மட்டும்.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத்
தின்னும் அவர்ககாணல் உற்று
குறள் 1244

கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக ! அவரைக் காண வேண்டுமென்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

திருக்குறள் தெளிவுரை பல உரைகள் படித்துப் பார்த்தேன். மு.வ. அவர்கள் எழுதியது போன்று எவருமே எழுதவில்லை. ஒரு காதலி மனநிலையில் இருந்த மு.வ. அவர்கள் விளக்கவுரை எழுதி உள்ளார். காதல் கவிதைகள் எழுதிடும் பலருக்கும் முன்னோடி திருவள்ளுவர் என்றால் அதனை எளிமைப்படுத்தி வழங்கியவர் மு.வ. அவர்கள்.

மு.வ. அவர்கள் பொறுப்பில் இருந்த போது மிகச்சிறந்த தமிழ்அறிஞர்களை அழைத்து அவர்களது சிறந்த நூலை பாட நூலாக்கி அதில் இருந்து வரும் பெருந்தொகையை அவர்களது மகளுக்கு திருமணம் செய்து வையுங்கள், வீடு கட்டுங்கள் என்று சொல்லி வறுமையில் வாடிய பல தமிழறிஞர்களை வளமையாக்கியவர். அவர் எழுத்தில் அடிக்கடி எழுதிடும் வாசகம். நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் வாழ வேண்டும்’ என்பார். மு.வ. அவர்கள், அவர் எழுதியபடியே நல்லவனாகவும், வல்லவனாகவும் வாழ்ந்து காட்டியவர்.

பயண இலக்கியத்தில் இலங்கை சென்று சுற்றிப்பார்த்து வடித்த நூல் அற்புதம். அதில் இலங்கை பற்றி எழுதிய வரிகள், “அந்த நகரத்தில் அறிவுக்கும், திறமைக்கும் புகழ் பெற்றவர்கள் தமிழர்களாக இருக்கக் கண்டேன்” என்று எழுதி உள்ளார்.

மு.வ. அவர்கள் பேராசிரியராக இருந்த போது பேராசிரியர் பணி மட்டும் பார்க்கவில்லை. மனித நேயத்தோடு, வறுமையோடு போராடிய பல மாணவர்களுக்கு பணஉதவி செய்து கல்வி கற்க உதவி உள்ளார். அவரால் பயன் பெற்றோர் பலர். இன்று நல்ல நிலையில் உயர்ந்த பதவிகளீல் இருக்கின்றனர். மு.வ. என்ற இரண்டு எழுத்து இனியவர் பற்றி அவரது மாணவர்கள் பலர் பாராட்டி உள்ளனர். அவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் அனுபவம் மறக்க முடியாத அனுபவம் என்றும் பாராட்டி உள்ளார்.

மு.வ. அவர்கள் மறைந்தவுடன் அவரிடம் உதவி பெற்ற மாணவர்கள் மு.வ. இல்லம் சென்று அவரது மனைவி இராதா அம்மையாரிடம் மு.வ. அவர்கள் தந்த பணம் பிடியுங்கள் என்று கொடுத்த போது, இராதா அம்மையார் அந்தப் பணத்தை வாங்கவில்லை. என் கணவர் என்ன நினைத்து உங்களுக்கு கொடுத்தாரோ? நான் வாங்குவது முறையன்று. இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நன்றாக இருங்கள்’ என்று வாழ்த்தி உள்ளார். மு.வ. அவர்களின் மனைவி இராதா அம்மையார் மு.வ.வை விட ஒரு படி இந்த இடத்தில் உயர்ந்து ,ஓங்கி நிற்கிறார்.

மு.வ.-வின் செல்லப்பிள்ளை முனைவர் இரா. மோகன் அவர்களின் மொழியிலேயே முடிக்கின்றேன்.

“மலர் போன்ற இரக்க நெஞ்சமும்,
மலை போன்ற உறுதியும் கொண்ட ஒரு பண்பாளரை,
பலருக்கு அறிவுத் தந்தையாய்,
அன்புள்ள தாயாய் விளங்கிய ஒரு நல்ல மனிதரை
இறுதி வரையில் கொள்கைப் பிடிவாதம் கொண்டு
அளவோடு நெறி வகுத்து வாழ்ந்து காட்டிய ஒரு பெருந்தகையாளரை
இன்றும், இனியும் பார்க்க முடியுமா?

விக்ரமாதித்யன்


அவன் எப்போது தாத்தாவானான்

தெருவில்
விளையாடிக்கொண்டிருந்தான்

பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தான்

வேலை
பார்த்துக்கொண்டிருந்தான்

ஊர்
சுற்றிக்கொண்டிருந்தான்

கவிதை
எழுதிக்கொண்டிருந்தான்

குடித்துக்
கொண்டிருந்தான்

பிள்ளைகளை ஆளாக்க
பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தான்

ஜோதிஷம்
கற்றுக்கொண்டிருந்தான்

ஸ்தலயாத்திரை
செய்துகொண்டிருந்தான்

என்னவெல்லாமோ
பண்ணிக்கொண்டிருந்தான்

எப்படியெல்லாமோ
இருந்துகொண்டிருந்தான்

இப்போது பார்த்தால்
தாத்தா என்கிறார்கள்

இன்னும் அவன்
கல்லத்திமுடுக்குத் தெருவிலேயே நின்றுகொண்டிருக்கிறான்

முடிவிலி-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு)


பரபரப்பான மாநகரச்சாலையிலிருந்து உள்ளொடுங்கிய கட்டடத்தின் வாயிற் படியில் அமர்ந்திருந்தோம். பக்கவாட்டுப் பார்வைக்குச் சாலையும் அதில் விரையும் வாகனங்களும் தெரிந்தன. ஒலிகளைப் பிரித்தறிவது சாத்தியமில்லை என்றாலும், வாகனங்கள் தெளிவற்ற ஒலித் தொகுப்பாகக் கவனத்துள் வந்து, கணநேரக் காட்சியாக நிறைந்து காணாமல்போயின. இன்னமும் போய்க்கொண்டுதான் இருக்கின்றன என்பதை ஓசை தெரிவித்தபடி இருந்தது. இடைவெளியேயின்றி வாகன ஒலிகள் கேட்டதால் ஓடுவது வெவ்வேறு வண்டிகள் அல்ல, இடத்தை விட்டு நகராது - ஓய்வே இன்றி இயங்கும் - முடுக்கப்பட்ட ஒரே ராட்சத வண்டி என்கிற பிரமை தட்டியது.

‘இடம்’ என்பது தனித்துவமான இருப்பு கொண்டது அல்ல, காலத்திலல்லாது வேறெங்கும் அது இருக்க முடியாது என்ற அறிவியல் கூற்றைச் சுற்றி நகர்ந்திருந்தது எங்கள் உரையாடல். ஆமாம், எதுவுமே ‘இவ்வேளை’யில்தான் இருந்தாக வேண்டும். எனது இவ்வேளையும் பிறிதின் இவ்வேளையும் இடைக்கிடும் தருணத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் நிகழ்கணமாகிறோம்.

“நாம் இருவரும் அமர்ந்திருப்பது படிக் கட்டிலா, அனந்தத்திலா என்பது முக்கியமான கேள்வி சார். படிக்கட்டில் என்பது ஓர் அனுபவத்தின் விடை. மற்றது, அனந்தத்தில் என்பது. வேறொரு புதிர் அனுபவத்தின் அழுத்தம் கொண்டது இது. ஆனால், நடை முறைப் பொருத்தம் அதிகம் உள்ளது இரண்டாவது பதில்தான்” என்கிற மாதிரி ஏதோ சொன்னேன். உடனிருந்தவர் பதறி விட்டார்.

“அனந்தம் என்பதெல்லாம் மிகவும் கனமான வார்த்தை. இப்படிப் போகிறபோக்கில் வீசக்கூடாது.”

அமைதியாகக் கேட்டுக்கொண்டேன். அவர் மூத்த தலைமுறைக் கவிஞர். சுமார் இருபது வயது மூத்தவர். தமிழ்க்கவிதையில் தமக்கென்று ஒரு கூறுமுறை, தனித்துவமான பார்வை கொண்டவர். என் அபிமானத்துக்கு, மரியாதைக்கு உரிய முன்னோடி.

Infinity என்ற ஆங்கிலச் சொல்லைத்தான் பயன்படுத்தினேன். அநந்தம் என்ற முடிவிலி ஒரு சொல்லாக முன்வைக்கும் அனுபவம் எப்போதுமே வருங்காலத்தை யொட்டிப் பொருள் கொள்ளப்படுகிறது. பெரியவர் பதற்றப்பட்டதும் அதனால்தான்.

உரையாடல் ஒன்றில் போர்ஹே, eternityயும் infinityயும் வேறு வேறு என்கிறார்! முடிவின்மையே முடிவற்ற தொடர் தன்மை, இயங்கியல் தன்மை என்றும், முடிவிலி என்பதை முக்காலத்தையும் உள்ளடக்கிய பெருந்தளம், நிலையான அனுபவம் என்றும் பொருள் கொள்ளலாமா!

கடந்த காலத்தை அளவீடாகக் கொண்டால், இந்தக் கணம் என்பதே முந்தைய கணத்தின் முடிவிலியிலிருந்து பிதுங்கி இறங்கியதுதானே! முடிவிலியின் மடுவிலிருந்து தீராத் தாரையாகப் பீய்ச்சி இறங்குவதுதான் காலத்தின் நிகழ்முறை அல்லவா. ராஜராஜ சோழனின், பாரதி யாரின், நாற்பது வருடத்துக்கு முன்னால் காலமான என் தகப்பனாரின், அன்று காலை விடைகொடுத்து அனுப்பிய மனைவியின், படிக்கட்டில் அமர நாங்கள் சென்றபொழுதின், முடிவிலியில்தானே நாங்கள் அமர்ந்திருந்தோம்!

எதிர்காலத்தின் ஒவ்வொரு கணுவும் முடிவிலியின் அங்கம் எனும் பட்சத்தில் இறந்தகாலத்தின் கணுக்களும் அதன் அங்கம்தானே. காலம் என்ற பேரமைப்பை ஓர் அண்டரண்டப் பட்சி என உருவகிக்கலாம். கடந்த காலம், எதிர்காலம் என்ற இருபக்க இறக்கைகள் கொண்ட பறவை. முன்னோக்கியோ, பின்னோக்கித் திரும்பியோ பயணம் மேற்கொள்வதற்கு இறக்கைகள் பயன்படும். ஆனால், உடற்பகுதியாகிய, உயிர்மையமான, நிலைத்த நடுத்தண்டுதான் அனுபவத்தை நிகழ்வுணர்வாகத் துய்ப்பது. அதாவது நிகழ்காலம் எனத் திகழ்வது.

உரைநடைப் புனைவுக்கும் கவிதைக்குமான பெரும் வேறுபாடு என்று, காலம் பற்றிய மேற்சொன்ன கருத்தாக்கத்தைச் சொல்லலாம். எப்போதுமே, உரைநடை நிகழ்ந்து முடிந்த ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. அதை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர், நிகழ்வு முடிந்த மாத்திரத்தில் உங்களிடம் எடுத்துரைக்க ஆரம்பிக்கிறார். யாருக்கோ எப்போதோ நிகழ்ந்து முடிந்த ஒன்றைக் கேட்கிறோம் என்ற ஆழ்மன நம்பிக்கையுடனே புனை கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். நிகழ்கால, தன்மை ஒருமை விவரிப்புமேகூட, கதைசொல்லி அனுபவித்து முடித்த ஒரு சமாசாரம்; தற்போது உரைக்கப்படுகிறது என்ற போதும் வாசகரைவிட்டு அகலுவதேயில்லை.

ஆமாம், நிகழ்கால அலகுகளில் சொல்லப்பட்ட போதும், புனைகதை தனது கற்பித அம்சம் மாறாமலே வாசகரிடம் வந்து சேர்கிறது. அதில் இடம்பெறும் ‘நான்’ நீங்கள் அல்ல என்ற உணர்வு ஒருபோதும் உங்களுக்கு மறப்பதில்லை.

கவிதையில் நிகழ்வது அந்தக் கணத்தில் நிகழ்வது. நிகழ்கணத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருக்கிறது கவிதை என்ற வடிவம். அதனால்தான், கவிதையில் முன்னிலையாகவும் படர்க்கையாகவும் செயல்படும் ‘நான்’ கூட, நீங்களாகவே இருக்கிறீர்கள்.

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்’ என்ற வசனத்தைச் செய்தியாகக் கேட்டுக்கொள்பவர் கிறிஸ்தவராக இருக்கிறார். அந்த வாக்கியத்தைத் தன்னனுபவமாக உணர்பவர் கிறிஸ்துவாகவே ஆகிறார்” என்று என்னுடன் பணிபுரிந்த கிறிஸ்தவ நண்பரொருவர் பல தடவை சொல்லியிருக்கிறார். கவிதை மொழிதலின் இயல்பு நிலையும் இதுவேதான்.

முடிவிலியின் இரண்டு எதிரெதிர் சலனங்களை, நேரெதிர் மாதிரித் தென்பட் டாலும் ஒரேவிதமாக அது இயங்கும் விதத்தை உணரத் தரும் இரண்டு கவிதைத் தருணங்களைப் பார்க்கலாம். எண்ணற்ற தடவைகள் மேற்கோள் காட்டப்பட்ட,

“அதோ அந்த வண்ணத்துப்பூச்சி
தன் கால்களில் காட்டைச் சுமந்து செல்கிறது”

என்னும் தேவதச்சனின் கவிதை வரி.

வெற்றுப் பார்வைக்கு எளிதில் புலப்படாத ஓர் இணுக்கு மகரந்தப் பொடி, கவிஞர் கண்டெடுக்கும்/ அனுபவம் கொள்ளும் நுண் தருணத்தில் சட்டென்று விசிறிப் பெருத்து மாபெரும் மரக்கூட்டமாக விரிவடைவது ஒரு மாய தரிசனம். ஒரே சமயத்தில் தர்க்கத்துக்கு உட்பட்டும், தர்க்கத்துக்கு வெகு அப்பாலும் பொருள்கொள்வது. இப்படியான பார்வையின் இன்னொரு சிறப்பம்சம். மனித மனம் மட்டுமே, தன் வசப் பட்ட, மொழி என்ற சாதனத்தின் உதவியுடன் நிகழ்த்திப் பார்க்க இயலும் காட்சி இது.

இது ஒருபக்கச் சிறகின் சலனம் என்றால் மறு சிறகின் அலையாட்டத்தை, ராஜ சுந்தரராஜனின் பின்வரும் வரிகளில் பார்க்க முடிகிறது:

நானும் என் மந்தையும்
ஒரு விதையின் நிழலில்
இளைப்பாறுகிறோம்
அது மரமாகி வளர்ந்து
நிற்கிறபடியால்.

மந்தையும் மேய்ப்பனும் நிழலாடுமளவு விரிந்த விருட்சத்தை முன்னாள் விதையாகப் பார்க்கும் மாயம், மகரந்தத்தூள் வனமாகும் விந்தைக்கு நேர்விகிதத்திலானது.

இரண்டு பார்வையிலுமே, நிகழ்காலம் என்பது நிகழ்காலம் மட்டுமேயல்ல என்று காணும் கவிமனங்களின் தரிசனம் வெளிப்பட்டிருக்கிறது. முதலாவது, அனுமானத்தின் அடிப்படையில்; இரண்டாவது, நிகழ்ந்து முடிந்ததின் அடிப்படையில். இரு கவிதைகளும் நடைமுறை வாழ்வின் காட்சிகளை, நேரடி அனுபவத்தின் பௌதிகக் கூறுகளை முன்னிறுத்தும்போது, அபூத உலகத்தையும் இதே காலக்கணக்கினுள் கொண்டுவர முனையும் கொரியக் கவிதையொன்று:

போதிசத்துவருக்கு

ஒருபோதும் மட்காத கல் தாமரை மலரில்
கால் நாட்டி அமர்ந்திருக்கிறீர்:
அதனாலேயே இவ்வுலகின்
முடிவேயற்ற காலத்தைக் கடந்துநிற்கிறீர்.
ஆஹா, எத்தனை அருகில் அமர்ந்துள்ளீர்,
ஆயினும்
மூட்டமாய்த் தெரிகிற அளவு
தொலைவில் இருக்கிறீர்.

(ஹீ- ஜின் பார்க் - 1956 கொரியப் போர்க் காலகட்டத்தில் எழுதப்பட்டது.

கந்தர்வன்


கிழிசல்கள்

ஆரியப்பட்டா வானத்தை கிழித்தது
அணுகுண்டு பூமியைக் கிழித்தது

அரைக்கைச் சட்டைகள்
கிழிந்தது மட்டுமே
மனதில் நிற்கிறது

பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்
உணவும் எதற்கென்று இனி
இரைப்பையையும் கிழிப்பார்கள்

எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவது மட்டும்
வகை வகையாயிருக்கும்

-கந்தர்வன்

நிமிசக்கதை-ஜி.நாகராஜன் #பகிர்வு கேசவமணி


குத்தத்தை ஒத்துக்கிறாயா?” என்று மாஜஸ்டிரேட் கைதியைக் கேட்டார்.

“ஆமாங்க” என்றான் கைதி.

“இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கனும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளைச்சுப்போ, மூனு மாச தண்டனை கொடுக்கிறேன்” என்றார் மாஜிஸ்டிரேட்.

“அய்யய்யோ, எசமான்! நீங்க மூணு மாசந்தான் போடுவீங்கன்னா, நான் குத்தத்தை ஒத்துக்கலே, கேசெ நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறு மாசம், இல்லேன்னா ஒண்ணுமில்லேனு போகனும்” என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, “யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சுடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டைரியில் வரும்” என்றார்.

மாஜிஸ்டிரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார்? அந்த ஏழைக் கைதிதான்.

- 000–

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோயந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

“சாமியார் சமாதியாகிவிட்டார்.” “இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார்” என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாகச் சென்றுகொண்டிருந்தனர். என்னவென்று புரிந்துகொள்ளாமலேயே அவர்களும், “சாமியார் சமாதி யாகிவிட்டார்” என்ற வார்த்தைகைளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டு வந்தனர். சாமியார் வெளியே தூக்கி வரப்படுவதையே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, “டேய், சாமியார் செத்துப்போயிட்டாரு” என்று கத்திக்கொண்டு கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், “மடத்துச் சாமியார் செத்துப்போயிட்டாரு” என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தைவிட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

- 000–

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

“பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக் காரணம் என்ன?” என்று எழுத்தாளன் கேட்டான்.

“என்ன?... கெட்ட நிலையா? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாம இருந்தா அதுவே ஆணடவன் புண்ணியம்” என்றாள் விபச்சாரி.

“இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது!” என்றான் எழுத்தாளன்.

“கொடுமை என்ன கொடுமை! பசிக் கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு.... இந்தப் போலீசுக்காரங்க தொந்தரவு மட்டும் இல்லாட்டி ஒண்ணுமில்லே” என்றாள் விபச்சாரி.

“கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்குக் கஷ்டமாக இல்லை?”

“யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்கூன்னு ஒரு புருசன் இருக்காரு.”

“மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோட மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. தெரியுமா?”

“அப்படியா?”

“பின்பு?”

“சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா?”

“ஊம், இருக்கு.”

“நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே. ஒங்களுக்கு வெக்கமா இல்லே?... சரி, அது கிடக்கட்டும், நேரமாவுதுங்க.”

கொடுமையிலும் கொடுமை, கொடுமையைக் கொடுமை என்று புரிந்துகொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

 -000–

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. “வா, வா” என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் கால் எடுத்து வைத்தான்.

“யாரது? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திகிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து” என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையை விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செரிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அவன் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான், எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்துகொண்டு விட்டான்!

Friday 22 July 2016

க.நா.சு படைப்பிலக்கியம்- ஜெயமோகன்

வசந்த் தங்கசாமி


முதுகெலும்பு முறிவதைபோல்
கட்டி தழுவிவிட்டேன்.
குழந்தை என்பதால் கொஞ்சம் அக்கறையோடு.
நான் கொஞ்சம் கடித்தால்
அவள் வலுவாக கடிப்பாளென தெரிந்ததனால்
பல் பதியவிட்டு தழும்பையும் பெற்றுக்கொண்டேன்.
தழும்பும் மறையுமானால்
அவளுக்காகவே அனுபவித்து எழுதிய
கவிதைகள் கைவசம் இருப்பதினால்
அனுப்பிவைக்கிறேன்.
போய் வா மகளே.

துரை.சண்முகம் கவிதை


சொந்த  மக்களின்  பனிக்குடம் மறுத்து...

அந்நியக்  கம்பெனி  பாட்டிலில்  நிரம்பும்
அருவருப்பு  தாளாமல்....

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்...

கொட்டியும், ஆம்பலும்,  குளத்துறை மீனும்
துடித்து  இறக்க...
ஒட்டிய  வாழையும், ஓரிதழ் புல்லும்...
முகம்  வெடித்துக் கருக....

கட்டிட    உச்சியில் ஐய்ந்து நட்ச்சத்திர ஓட்டலில்
கேளிக்கைக்காக
 நீச்சல் குளத்தில் கொட்டிடும்
அவலம்  தாங்காமல்....

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்?

காவிரி, பெண்ணை, பாலாறு இப்படி
தாய்  நிலமெங்கும்
தன் முகம்
பார்க்க  முடியாமல்

கின்லே, அக்குவா, பாக்கெட்கென
அமரர்  ஆனதன்  அடையாளமாக
ஐய்ஸ்  பெட்டிக்குள்  இருப்பது கண்டு

தன்  பிணம் பார்த்து  தனியே உறைந்து...

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்?

நாற்றாங்காலில்  பாய்ந்திருந்தாலும்
உலகம்  பிழைத்தது...

ஊற்று  நீராய் ஒளிந்திருந்தாலும்
பூமி  தழைத்தது...

வெறும் பாட்டில்  தண்ணி ஆனதனால்
பணம், காசுக்கு, விலை போனதனால்...
கைகழுவிட்டனரோ...? கையறு  நிலைதானோ...?
வெகு  மக்கள்  நிலை விளங்காமல்....

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்?

ஆறுகள், ஏரிகள், ஓடைகள் அனைத்திலும்
அந்நிய  ஜாடைகள்  கண்டு...

அருவிகள்  விழுவது  தற்கொலையோ....?

தண்ணீர் தேடி  அலைபவர்கள்  விழிகளில்
தகிக்குது  நெருப்பு...

நீரும்  எரியும்
யாருக்கு தெரியும்?

                -  துரை. சண்முகம்
நீர்  நிழல்  கவிதை  தொகுப்பிலிருந்து...

Thursday 21 July 2016

கவிஞர் இரா.ரவி


உலக மருத்துவர் தினம்
மருத்துவர்கள் !    

 கவிஞர் இரா .இரவி !

உயிர் மேய்ப்பர்கள்
உயிர் மீட்பர்கள்
மருத்துவர்கள் !

இரவு பகல் பாராது
இன்முகமாய்  உழைப்பவர்கள்
மருத்துவர்கள் !

கத்தியால் அறுத்தும்
காப்பார்கள்
மருத்துவர்கள் !

ஊசியால் குத்தியும்
காப்பார்கள்
மருத்துவர்கள் !

பசி துக்கம் தூக்கம் மறந்து
பலரின் உயிர் காப்போர்
மருத்துவர்கள் !

செவிலியர் துணையுடன்
பல்லுயிர் காப்போர்
மருத்துவர்கள் !

வாழ்நாளை   நீட்டிக்கும்
வித்தைக் கற்றவர்கள்
மருத்துவர்கள் !

முடிந்தவரை முயன்று
மூச்சை நீட்டிப்பவர்கள்
மருத்துவர்கள் !

அன்பாய் பேசி
வலி நீக்குபவர்கள்
மருத்துவர்கள் !

கடின உழைப்பால்
உச்சம் தொட்டவர்கள்
மருத்துவர்கள் !

பயம் நீக்கி
துணிவைத் தருபவர்கள்
மருத்துவர்கள் !

போகும் உயிரைப்
போராடி மீட்பவர்கள்
மருத்துவர்கள் !

முயற்சி திருவினையாக்கும்
முற்றிலும் உணர்ந்தவர்கள்
மருத்துவர்கள் !

மதி நுட்பம் மிக்கவர்கள்
மற்றவர்களைக் காப்பவர்கள்
மருத்துவர்கள் !

நலமாக வாழ்
நல்லது உரைப்பவர்கள்
மருத்துவர்கள் !

ஆலோசனை வழங்கி
ஆயுளை வளர்ப்பவர்கள்
மருத்துவர்கள் !

உயிர் காக்கும் பணி
உன்னதப்பணி புரிவோர்
மருத்துவர்கள் !

முன்னாடி வந்திருந்தால்
காப்பாற்றி இருப்போம் என்பவர்கள்
மருத்துவர்கள் !

காப்பாற்றி விட்டு  என்னால் அல்ல
இறைவனால் என்பவர்கள்
மருத்துவர்கள் !

வைரமுத்து


*திரிபுகள்*


சங்கீதம்

இரைச்சலின் கூட்டணியாய்

கவிதை

இருண்மையின் திமிராய்

கலை

விலைமகளின் உதட்டுச்சாயமாய்

மதம்

கடவுள் விற்கும் கள்ளச்சந்தையாய்

அன்பு

பணத்தின் புன்னகையாய்

அழகு

பிணத்தின் நிர்வாணமாய்

காதல்

சந்தர்ப்பங்களின் ரகளையாய்

இல்லறம்

காதலின் சமாதியாய்

புணர்ச்சி

தூக்கம் அழைக்கும் உடற்பயிற்சியாய்

இருத்தல்

சாகப் பயந்தவர்களின் சம்மதமாய்

கல்வி

இருதயம் கொன்று வயிற்றில் புதைக்கும் ஏற்பாடாய்

இயற்கை

வருடம் ஒரு முறை வாழ்த்து மடல் ஓவியமாய்

சட்டம்

ரூபாய்க்குத் திறக்கும் ஜன்னலாய்

நீதி

டாலருக்குத் திறக்கும் கதவாய்

இளமை

உடல் கொல்லும் இன்பமாய்

முதுமை

இன்பம் கொன்ற உடலாய்



திரிந்தும் பிறழ்ந்தும்

தேய்ந்த பின்றை

புளித்த சாராயம் ஆகாதா என்ன

வாழ்வெனும்

அமிர்தம் !

   -*வைரமுத்து*

கடிகாரம்


கடிகார முள்கள் வலப்புறமாக
சுற்றுவது ஏன் தெரியுமா?



நாம் தினசரி கடிகாரத்தை பார்த்து
வருகிறோம். ஒவ்வொரு மணி
நேரமும், ஒவ்வொரு நிமிடமும்
இப்போது முக்கியத்துவம் வாய்ந்தாக
நமக்கு உள்ளது. ஒரு நாளைக்கு 24 மணி
நேரம் என்ற அளவு பலருக்கு போதாது
என்று கூறிவருகின்றனர்.


கடிகார சுழற்சி குறித்து தற்போது
பார்ப்போம். பொதுவாக நாம்
பார்க்கும் கடிகாரம் எப்போதும் ஒரே
மாதிரி அதாவது வலப்புறமாக
சுற்றிவரும் , இதனை கடிகார திசை
(Clockwise) என்று கூறுகிறார்கள்.
முட்கள் கொண்ட முதல்
கடிகாரத்தைச் சீனர்கள்தான்
தயாரித்தார்கள். சீனா
நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ளது. வட
துருவத்தில், தெற்கே பார்த்து
நின்றீர்கள் என்றால் உங்கள் இடப்
புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும்.
எனவே, அவர்கள் உருவாக்கிய
கடிகாரம் இடமிருந்து வலமாக
சுற்றுகிறது.
சூரியனை, பூமி 23.5 டிகிரி சாய்ந்த நிலையில்
வலப்புறமாக சுற்றுகிறது. அதனால்
கொஞ்சம்
கொஞ்சமாக இடதுபுறத்தில்
இருந்து(கிழக்கு) சூரியன் வலதுபுறமாக
(மேற்கு) (கடிகார திசையில்)நகருவது போன்று
தோன்றும். இதனால் தான் இடது
புறத்தில் இருந்து வலதுபுறமாக
சூரியனின் நிழல் நகர்வதை அடிப்படையாக
கொண்டு கடிகார முள்களும்
அந்த திசையிலேயே சுற்றுகின்றன.

கண்ணதாசன்


நம்ம கோயம்புத்தூர் பற்றி கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகளில் ஒன்று:
       
கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்!
என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்
செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்!
தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று!
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!
அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்!
தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!

ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்
கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன்.

வண்ணதாசன்


ஒரு பறவை இதைவிட
எடையுள்ளதாக இருக்கும்’
கை நினைத்தது.
‘ஒரு கை இதை விட
மென்மையாக இருக்கும்’
பறவை நினைத்தது.
எல்லாம்
அமர்ந்து பறந்த
சிறுகணத்துக்குள்.
- வண்ணதாசன்

ச.மாடசாமி


''நமக்குத் தேவை புள்ளிவிவர வகுப்பறை அல்ல!''

''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.

உலகின் எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது இத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது. மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையை அடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள். அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டு முழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தை அவமதிக்கும் அந்தக் கணம், அவன் பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு நமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க் வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல் விடப்படும்!''

- ச. மாடசாமி

லா.ச.ரா நூல்கள்

நா.முத்துக்குமார்


பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!

# பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!

# காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!

# காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!

# யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!

# இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!

# பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!

# கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!

# குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!


-நா.முத்துக்குமாரின் குழந்தைகள் நிறைந்த வீடு புத்தகத்திலிருந்து..

நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்-சமஸ்


சமஸ்
நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்குஅழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின்  பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.  ‘‘சூப்பர்மேனுக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது,  “அமெரிக்க செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக்கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.

ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்கு கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’  ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.

சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்டமாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப்போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’நாயகர்கள் மக்கள் தலைவர்களாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார். ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளை திரையில் அனாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியனாக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, எல்லாத் தவறுகளோடும் ஒருவன் நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்பக் காலப்  பாசங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தன.


ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்கு தினம் ஒரு பெண் தேவை என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார்.‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’

ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடிந்தவர், காலை 10 மணிக்கு எல்லாம்‘நெற்றிக்கண்’ படப்பிடிப்புக்குப்  போய்விட்டார். திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி. அருகில் இருந்த  இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா,பின்னாலே அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓபன் அப்ரோச் எனக்குப் பிடிச்சு இருக்கு. ஐயாம் வெரி சாரி. ஆனா, இப்போ சாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’’

நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன்தான் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில்,ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது  தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்து போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.  ‘‘ஆயிரக்கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பி பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்க வைக்கிறாங்க. நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’என்றார்.

ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்:

‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’ மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்;என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’

உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம்.ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தைநாம் ரஜினியிடம் கொடுத்திருக்கிறோம்; ஏனென்றால்,ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!

‘தி இந்து’ டிச. 2013

Wednesday 20 July 2016

வெள்ளியங்கிரி மலை பயண அனுபவம்-மணிகண்டபிரபு


வெள்ளியங்கிரி மலை பயணம்
வெள்ளியங்கிரி மலை ஏற நண்பர்களுடன் ஒரு வாரத்திற்கு முன்பு முடிவு செய்யப்பட்டு 15ம்தேதி மாலை திருப்பூரிலிருந்து கிளம்பினோம்.அஞ்சு பேரும் ஆட்டத்துக்கு புதுசு.ஏதோ பழநி மலை,ஊதியூர் மலை ஏறுவது என நினைச்சோம்.கோவையிலிருந்து டாக்சி மூலம் இரவு பத்தரை மணிக்கு சென்றோம்.இருபது ரூபாய் கட்டி ஆளுக்கொரு கம்பு வாங்குனோம்.போட்டோ எடுத்து எட்டுப்பட்டி ராசா நெப்போலியன் மாதிரி போஸ் கொடுத்தோம்.பிளாஸ்டிக் பொருள் கொண்டு செல்ல சோதனை செய்யப்பட்டு இரவு 11.30மணிக்கு ஏற ஆரம்பித்தோம்.

இப்ப விடுறா பாக்கலாம்னு வடிவேல் சொல்ற மாதிரி படி ஏற ஏற காலில் கொஞ்சம் வலி ஆரம்பித்தது.வெசம் அப்பிடித்தான்னே இருக்கும் சொல்லும்போது ஒரு எக்ஸ்பிரசன் வருவது போல் வந்தது.பின்னால் வருபவருக்கு வழி விட்டு உக்காந்து உக்காந்து போனோம்.முதல் மலை பாத்ததும் ராமசாமி பணத்த எடுத்து வைடானு ஏறிட்டோம். ஏற மட்டும் 3மணி நேரம்.கீழ இறங்குறவங்க யார கேட்டாலும் அஞ்சு மணி,ஏழு மணி நேரம் ஆகும்னு சொல்லும்போதெல்லாம் வயித்துக்குள்ள வடை சுடுற மாதிரி இருந்தது.

இருந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான் இந்த கோட்டைசாமி னு நினைச்சிட்டு இரண்டாவது மலை ஏறினோம்.டிபன் எப்ப சார் போடுவீங்க மாதிரி எப்ப முடியும்னு ஆயிருச்சு.கொண்டு தண்ணீர் ஏழு பாட்டில் காலி.வாழ்க்கையில் இவ்வளவு வேர்வை வந்தது முதல்முறை பாத்தேன்.

மூனாவது மலையில் படி இல்லை.வெறும் பாறை அதுவும் ஒழுங்கற்று கிடந்தது.உன்னை எவன்டா ஜாங்கிரி குடுக்க சொன்னது ப்ளான் போட்டவனை கண்டபடி திட்டுனோம்.உடன் வந்த ஒருவருக்கு அன்று பிறந்தநாள்.நாங்க எங்க எப்பிடி இருக்க வேண்டியவன்னு புலம்பினாரு.எனக்கும் இன்னொருத்தருக்கும் சாட்சின் அடியில் கிழிந்துவிட்டதால் பனியன் இழுத்து கவர் பன்னியிருந்தோம்.இப்பிடியே அஞ்சாவது மலை போகும்போது விடிஞ்சிருச்சி.கோவையின் அழகு செம்ம.5,6 மலைகள் ஏற்ற இறக்கத்துடன் நடந்துசெல்லும் ஒத்தையடி பாதை.

ஏழாவது மழையை பாத்து திகைச்சிட்டோம்.செங்குத்தா உயரமா அட சாமி இதுல எப்பிடி ஏறுவது மலைச்சிட்டோம்.சரியா 2மணி நேரம் ஆச்சு.மேல கோயில் பாறைக்கு இடையில் சுயம்பு லிங்கம் இருக்கும்.லிங்கத்தின் பின்னால் கண்ணாடி இருக்கிறது.சூரிய ஒளி லிங்கத்தின் மேல் படும்.வெறுமனே மலையின் பிரம்மிப்பை பார்த்திருப்பவருக்கு அம்மலையை காலால் கடந்து வெண்முகிலை முத்தமிடுவது சூப்பர் பாஸ்.அரை மணி நேர ஓய்வுக்கு பின் பார்கே பார்கேனு காலுக்குசொல்லிட்டு இறங்கினோம்.கொஞ்சம் வேகமா. போடுறா தம்பி பிரேக்கை கையிலிந்த தடியூன்றி நிற்போம்.உடலின் மொத்த எடையையும் காலின் இரு முட்டிகளும் தாங்கியது.செம பெயின்.ஆறாவது மலை சுனையில் ஒரு ஐஸ் பார் குளியல்.செம ஜில்.கொஞ்ச தெம்பு கிடைக்கும்.அப்பிடீயே படிப்படியா ஏழு மணி நேரத்தில் வந்துட்டோம்.கடைசியா கீழ உட்காரும்பொது ப்ரன்ட் கேட்பான் என்னாச்சுனு கேட்டான்.உனக்கு ஒன்னுமே தெரியாதானு கேட்டேன்

டிப்ஸ்:
பேக்கில் அதிக பொருள் வேண்டாம்.அதுவே எமன்
#இதயநோய்,பிரசர்,சுகர் உள்ளவர் ஏற வேண்டாம்
#தண்ணீரை சிப் சிப்பா குடிக்கனும்
#வெறும் காலில்தான் நடக்கனும்
#அதிகம் சாப்பிட்டு ஏறக்கூடாது
#குளுக்கோஸ் கொண்டு போகனும்
#படுத்து தூங்க கூடாது
#டார்ச் அவசியம்.இருபுறம் காடாய் இருப்பதால் அதினுள் டார்ச் அடித்தால் அந்த வெளிச்சத்தில் வந்துடனும்
#வருடத்தில் பங்குனி,சித்திரையில் மட்டும் அனுமதி
#24மணி நேர தரிசனம்
#சிறுவாணி அணையைப் பார்க்கலாம்
#இப்பதிவு செல்லாதவருக்கும்,முதல் முறை செல்வோருக்கும்
#கோவையிலிருந்து 36கி.மீ
(பூண்டி)

*இது ஆன்மிக பயணமோ,ஒரு மதக்கடவுளுக்கு உரியதோ அல்ல

ஒரு கஷ்டம் உணர்த்தும் பாடம் என்பது இன்பமான நேரங்களில் அந்த கஷ்டத்தை நினைத்து சந்தோசப்படுவது தான். இந்த உடல் வலி அனைத்தும் அந்த அனுபவம் எனும் வலிநிவாரணி நினைத்துக் கொள்வது

த்ரில்+அனுபவம்
ஒருவாட்டி போயிட்டுவாங்க பாஸ்

நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன் சிறுகதை

Tuesday 19 July 2016

கவிதை-விக்ரமாதியன்


மேலும் மேலும்
 குழப்புகிறார்கள்
 மேலும் மேலும்
 கொள்ளையடிக்கிறார்கள்
 மேலும் மேலும்
 நோகடிக்கிறார்கள்
 மேலும் மேலும்
 கவலையூட்டுகிறார்கள்
 மேலும்மேலும்
 யோசிக்கவைக்கிறார்கள்
 மேலும்மேலும்
 தொந்தரவுபடுத்துகிறார்கள்
 மேலும் மேலும்
 கலவரப்படுத்துகிறார்கள்
 மேலும்மேலும்
 பதறச்செய்கிறார்கள்
 மேலும் மேலும்
 கேள்வி கேட்கிறார்கள்
 மேலும் மேலும்
 விமர்சிக்கிறார்கள்
 மேலும் மேலும்
 பயப்படுத்துகிறார்கள்
 மேலும் மேலும்
 கோபம் கொள்கிறார்கள்
 மேலும்மேலும்
 பொய்சொல்கிறார்கள்
 மேலும்மேலும்
 கோழையாகிறார்கள்
 மேலும் மேலும்
 வாழவே விருப்பம் கொள்கிறார்கள்
 மேலும்மேலும்
 சாவைத் தள்ளிப் போடுகிறார்கள்
 மேலும் மேலும்
 என்ன இருக்கிறது
 மேலும் மேலும் எனும்
 மனசுதான்
 மேலும் மேலும்
 என்ன எழுத.
--விக்ரமாதித்யன்

படித்ததில் பிடித்தது


தோசைக்கல்லில் நிலவு வார்ப்பவர்கள்

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது

===================

இவ்வளவு
வயதாகியும்
புதுச்சட்டைக்கு
மஞ்சள்வைத்து
வருபவனைக்
கேலி செய்யும்
நண்பர்களே
அது,
அவன் வைத்த
மஞ்சள் அல்ல
அவன்,
அம்மா வைத்த
மஞ்சள்

===================

பிள்ளைகள்
ஊரிலிருந்து
கொண்டு வரும்
பயணப்பையில்
இந்த அம்மாக்கள்
எதிர்பார்ப்பது
இன்னுங்கொஞ்சம்
அழுக்குத்துணிகளை

===================

மகனுக்கான
அப்பாவின்
கோபத்திற்கெல்லாம்
அம்மாவின்
முதுகுதான்
கிழக்கு

===================

டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
சமைக்க முடியவில்லையே
என்கிற கவலை

===================

இங்கே பலரது
அகராதியில்
வீடு என்கிற
சொல்லுக்கு நேரே
அம்மா என்று
உள்ளது

===================

புகைவண்டியில்
பிதுங்கி வழியும்
பெருங்கூட்டத்தில்
ஊர் போய்ச்சேர
ஒற்றைக்காலில்
நின்றுகொண்டு
எட்டு மணிநேரம்
ஒருவன்
பயணிக்க முடிவதன்
மூன்றெழுத்துக் காரணம்,
அம்மா

===================

அம்மா தாயே
என்று
முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான்

===================

எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
சாப்பிட்டு விட்டேன்
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர

===================

அத்தி பூத்தாற்போல
அப்பனும்
மகனும்
பேசிச்சிரித்தால்
விழாத தூசிக்கு
கண்கள் தேய்த்துக்கொண்டே
அப்பால் நகர்கிறார்கள்
அம்மாக்கள்

===================

வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள்

===================

பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன
காரணம்,
எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள்
அல்லது
எடுத்துக் கொடுத்துவிட்டு
திட்டு வாங்கிக்கொள்வாள்

===================

வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம்

===================

அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
ஈரம் உலராமல்

===================

எங்கேனும்
பொது இடங்களிலோ
சுப நிகழ்ச்சிகளிலோ
நாம் சந்திக்கும்
அம்மாக்கள்
ஒன்றைச் சொல்லிக்கொண்டு
தத்தம் வீடுகள் நோக்கி
ஓடுகிறார்கள்
அவர்கள் சொல்வது
இதுதான்
" என் புள்ள
பசி தாங்காது "

      - குருச்சந்திரன் கிருஷ்

வைரமுத்து


வாசிப்பு இன்பத்திற்காகவே எத்தனை முறையும் வாசிக்கலாம்


*காலந்தோறும் காதல்*


1. சங்க காலம்

ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்

கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து

மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

* * * * *
2 காவிய காலம்

பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

* * * * *

3 சமய காலம்

வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!

* * * * *

4 சிற்றிலக்கியக் காலம்

தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்

* * * * *

5 தேசிய காலம்

சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?

* * * * *

6 திராவிட காலம் - 1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?

* * * * *

7 திராவிட காலம் - 2

விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது
உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது?
விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே

* * * * *

8 புதுக்கவிதைக் காலம் - 1

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

* * * * *

9 புதுக்கவிதைக் காலம் - 2

உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.
       *-வைரமுத்து*

சல்மா


*விலகிப் போகும் வாழ்க்கை*


இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேர்கிறது
நேற்றும்
அதற்கு முன்பும் கூட
நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தைக் கனக்க வைக்கிறது



இப்படியே
நம் நண்பர்களை
நினைவுகளை
சிந்தனைகளை
தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை

அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவூம்
பத்திரிகை படிக்கவும் முடிகிறது

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்


இந்த வாசலில்
மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்

ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகாளய்
அனுப்பப்படுகின்றன.

       *-சல்மா*

short cut


கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதினங்கள்:(with SHORTCUT Idea)

1) பிருந்தாவனம்
2) விளக்கு மட்டுமா சிவப்பு
3) நடந்த கதை
4)ரத்த புஷ்பங்கள்
5) சிவப்புக்கல் மூக்குத்தி
6) சிங்காரி பார்த்த சென்னை
7) சிவகங்கை சீமை (நாடகம்)
8) மிசா, மாங்கனி
9) முப்பது நாளும் பவுர்ணமி
10) ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
11) வனவாசம்

SHORTCUT: "பி.வி.நரசிம்ம ராவ்" (இந்தியாவின் முன்னால் பிரதமர்)

இவருடைய பெயரின் ஒவ்வொரு எழுத்தும் கண்ணதாசன் அவர்களின் புதினங்களை குறிப்பதாகும்.

பி - பிருந்தாவனம்
வி - விளக்கு மட்டுமா சிவப்பு
ந - நடந்த கதை
ர - ரத்த புஷ்பங்கள்
சி - சிவப்புக்கல் மூக்குத்தி,சிங்காரி பார்த்த சென்னை
ம் - மிசா, மாங்கனி
ம - முப்பது நாளும் பவுர்ணமி
ரா - ராகமாலிகா, ராஜதண்டனை(நாடகம்)
வ் - வனவாசம்

*******************************************

பாரதி தாசன் படைப்புகள்:(with SHORTCUT IDEA)
1.இருண்ட வீடு
2.அமைதி
3.குடும்ப விளக்கு
4.மணிமேகலை
5.தேனருவி
6. சாரல்
7.இசை அமுது
8. பாண்டியன் பரிசு
9.எதிர்பாராத முத்தம்
10. காதல் நினைவுகள்
11. பிசிராந்தையார்
12. சேரதாண்டவம்
13. பிள்கினி
14. இளைஞன்
15.காதலா? கடமையா?
16. கடமை
17. இணையற்ற வீரன்
18. நல்ல தீர்ப்பு

மேற்கண்ட அணைத்து பாரதிதாசன் படைப்புகளையும் எழுதில் நினைவில் வைத்து கொள்ள கீழ்காணும் சிறுகதையினை நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது:

SHORTSTORY:
"இருண்டவீடில் அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேனருவி சாரலில் இசை அமுதினை பாடும்பொழுது பாண்டியன் என்ற மன்னன் பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தம் கொடுத்தான்.
இருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிராந்தையார் கோர தாண்டவம் ஆடி நாட்டாமை பில்கணியிடம் இளைஞனை அழைத்து சென்றார்.
அவர் காதலா? கடமையா? என்று கேட்க கடமை என்று கூறினான் அந்த இளைஞன். உடனே நீதான் இணையற்ற வீரன் என்று நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.

*******************************************

"ஒரு பாடல் வரியினை" கொடுத்து யார் எழுதியது என்று கேட்கும் கேள்வி

இதனை எழுதில் நினைவில் வைத்துகொள்ள சிறந்த ஐடியா.

உதாரணமாக பாரதியார் எழுதிய முக்கிய பாடல்கள் மற்றும் அதனை எழுதில் நினைவில் வைத்து கொள்ள SHORTCUT ஐடியா.

பாரதியார் முக்கிய பாடல்கள்:

1) "மனதில் உறுதி வேண்டும் வாக்கினில் இனிமை வேண்டும்"

2) "உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்"

3) தனி ஒருவனுக்குனவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்"

4) "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்"

5) "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே"

6) "ஏழை என்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில்"

7) எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மக்கள்"

8) பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்

9) புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

10) நமக்கு தொழில் கவிதை நாட்டுக்கு உழைத்தல்

11) காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்

12) பக்தி செய்வீர் செகத்தீரே பயனுண்டு பக்தியாலே"

13) செப்புமொழி பதினெட்டுடயால் எனில் சிந்தனை ஒன்றுடையாள்

14) செந்தமிழ் நாடெனும் போதினிலே

15) தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

16) தேமறுத தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்

மேற்கண்ட அணைத்து பாடல்களையும் எழுதில் நினைவில் வைக்க கீழ்க்கண்ட வரிகளில் உள்ள வார்த்தைகளை மட்டும் படித்தல் போதுமானது.

ஒவ்வொரு வார்த்தையும் மேற்கண்ட பாடல்களை வரிசையாக குறிக்கிறது.

SHORTCUT :

"மனதில் உறுதியுடனும் வாக்கில் ஒளியுடனும் தனி ஒருவனாக பிறநாடுக்கு சென்று, ஆண் பெண், ஏழை பணக்காரன் வேறுபாடில்லாமல், எல்லோரும் ஓர் குலமாக பள்ளிக்கூடம் அமைத்து ஏழைக்கு எழுத்தறிவித்து தொழில் செய்து காதல் பக்தி போன்ற சிந்தனைகளோடு செந்தமிழ் நாட்டின் தருமத்தினை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்"

*******************************************

பாரதியார் இயற்றிய நூல்கள்(WITH SHORTCUT IDEA)
1) பாப்பா பாட்டு
2) பாஞ்சாலி சபதம்
3) புதிய ஆத்திசூடி
4) சந்திரிகையின் கதை
5) சொர்ண குமாரி
6) கண்ணன் பாட்டு
7) குயில் பாட்டு
8) விநாயகர் நான் மணிமாலை
9) வேதாந்த பாடல்கள்
10) ஞான ரதம்

SHORTCUT : "பாச கவிஞன்"

மேற்கண்ட ஐடியாவில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பாரதியார் இயற்றிய முக்கிய நூல்களை குறிப்பிடுகின்றன .
பா - பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி
ச - சந்திரிகையின் கதை, சொர்ண குமாரி
க - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
வி - விநாயகர் நான் மணிமாலை, வேதாந்த பாடல்கள்
ஞன் - ஞான ரதம்

*******************************************

பம்மல் கே.சம்பந்தனார் இயற்றிய நாடக நூல்கள் (shortcut idea)

1) அமலாதித்யன்
2) வாணிபுரத்து வணிகன்
3)விரும்

வண்ணதாசன் சிறுகதை

தமிழின் சிறப்பு


ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
" இதுவே தமிழின் சிறப்பு.."

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்

பழநிபாரதி


அப்பா ஒரு ஜீவநதி...
இயல்பாக இருப்பது...எளிமையாக வாழ்வது...
வாழ்வை அமைதியாக எதிர்கொள்வது...
இவைதாம் என் அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த வாழ்க்கை.
அப்பாவை நினைக்கும்பொழுது 'தாவோ தே ஜிங்' நூலில் நான் படித்தது நினைவில் வருகிறது:
"மிகச் சிறந்த நல்ல தன்மை நீர் மாதிரி. நீர் எல்லாப் பொருளுக்கும் நன்மை செய்கிறது
என்றாலும் அது எதனுடனும் போட்டி இடுவதில்லை".
அப்பா எனக்கு முன்னால் ஒரு ஜீவ நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறார்...
அனைவருக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
-பழநிபாரதி

பாரதியார் கவிதை

சுந்தர ராமசாமி


'கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதை பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன ? திறப்பதே திறக்காத கதவுகளை பார்க்கத்தானா ? பெரிய சவால்தான் இது'.

-சுந்தரராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள்

படித்ததில் பிடித்தது


#என்மனைவி_என்னை

பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்...

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்....

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வா
என்று அர்த்தம்....

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்....

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்....

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்....

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.....

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.....

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால்
சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ……..

சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்....

கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்....

நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.....

கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.....

என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் போனது
என்று அர்த்தம்....?

அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில் ....
இவள் இன்றி என்
இவ்வுலகமே இராது...
இவள் என் மனைவி .

கவிதை


சொந்த  மக்களின்  பனிக்குடம் மறுத்து...

அந்நியக்  கம்பெனி  பாட்டிலில்  நிரம்பும்
அருவருப்பு  தாளாமல்....

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்...

கொட்டியும், ஆம்பலும்,  குளத்துறை மீனும்
துடித்து  இறக்க...
ஒட்டிய  வாழையும், ஓரிதழ் புல்லும்...
முகம்  வெடித்துக் கருக....

கட்டிட    உச்சியில் ஐய்ந்து நட்ச்சத்திர ஓட்டலில்
கேளிக்கைக்காக
 நீச்சல் குளத்தில் கொட்டிடும்
அவலம்  தாங்காமல்....

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்?

காவிரி, பெண்ணை, பாலாறு இப்படி
தாய்  நிலமெங்கும்
தன் முகம்
பார்க்க  முடியாமல்

கின்லே, அக்குவா, பாக்கெட்கென
அமரர்  ஆனதன்  அடையாளமாக
ஐய்ஸ்  பெட்டிக்குள்  இருப்பது கண்டு

தன்  பிணம் பார்த்து  தனியே உறைந்து...

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்?

நாற்றாங்காலில்  பாய்ந்திருந்தாலும்
உலகம்  பிழைத்தது...

ஊற்று  நீராய் ஒளிந்திருந்தாலும்
பூமி  தழைத்தது...

வெறும் பாட்டில்  தண்ணி ஆனதனால்
பணம், காசுக்கு, விலை போனதனால்...
கைகழுவிட்டனரோ...? கையறு  நிலைதானோ...?
வெகு  மக்கள்  நிலை விளங்காமல்....

தண்ணீர்  அழுவது  யாருக்கு தெரியும்?

ஆறுகள், ஏரிகள், ஓடைகள் அனைத்திலும்
அந்நிய  ஜாடைகள்  கண்டு...

அருவிகள்  விழுவது  தற்கொலையோ....?

தண்ணீர் தேடி  அலைபவர்கள்  விழிகளில்
தகிக்குது  நெருப்பு...

நீரும்  எரியும்
யாருக்கு தெரியும்?

                -  துரை. சண்முகம்
நீர்  நிழல்  கவிதை  தொகுப்பிலிருந்து...

விக்ரமாதித்யன்


வேலை இல்லாதவருக்கு பொறுப்பும் சுதந்திரமும் அதிகம்.பொறுப்பை கடைபிடித்தால் உயர்ந்த இடத்துக்கும், சுதந்திரத்தை கடைபிடித்தால் டாஸ்மாக் போகலாம்-
-விக்ரமதித்யன்

மகிழ்ச்சி


மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!!

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.

எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.

ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது.  குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.

குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்” என்றது.

பாம்பு  “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.  சொல்கிறேன்.

பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.  உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.

இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.  அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.

அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே.  கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.  பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.

ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.  எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.  நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.  ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."

 பசுமை விகடன்.

கலீல் ஜிப்ரான்


பல கடவுள்கள்!  
 
          ஒரு சாமியார் கோவில் வாசலில் நின்று மக்கள் அறிந்திருந்த பல கடவுள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.மக்கள் இந்தக் கடவுள்கள் எல்லாம் தங்களோடு வாழ்வதாக நம்பினர்.

சில நாட்கள் கழித்து அதே கோவில் வாசலில்  ஒரு மனிதன் வந்து கடவுள் இல்லவே இல்லை என்று வாதிட்டான்.கேட்டவர் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில்  அவர்கள் எங்கே,தாங்கள் செய்த தவறுகளுக்குக் கடவுள் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டவர்கள்.கடவுள் இல்லை என்று சொன்னதும் அவர்களுக்கு நிம்மதி.

இன்னும் சில நாட்கள் கழிந்தன.புதிதாக ஒரு மனிதன் வந்து,ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, என்று தீவிரமாகப் பேசினான்.இதைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் அச்சமும் ஏற்பட்டது.பல கடவுள் இருந்தால் ஒருவர் இல்லாவிடினும் ஒருவர் தங்கள் தவறுகளை மன்னிக்க வாய்ப்புண்டு;ஒரே கடவுள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவாரா மன்னிப்பாரா என்று அறிய முடியாமல் கவலைப்பட்டார்கள்.

அடுத்து வந்த வேறு ஒருவன்,''கடவுள் மூன்று பேர் உண்டு.அவர் மூவருக்கும் கருணை வடிவான ஒரு அன்னை உண்டு,''என்று சொன்னான்.இப்போது ஊர் மக்கள் திருப்தி அடைந்தனர்.கடவுள் மூவர் என்பதால், நாம் செய்தது  பாவமா, இல்லையா என்று உறுதியான முடிவுக்கு அவர்களால் வர இயலாது என்றும்  அவர்கள் அப்படியே பாவம் என்று முடிவு செய்தாலும் கருணை வடிவான தாய் மன்னித்து விடுவாள் என்றும் எண்ணினர்

அந்த ஊர் மக்கள் இன்று வரை மொத்தம் எத்தனை கடவுள் என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.

   -கலீல் ஜிப்ரான்