Monday 29 May 2017

மேலாண்மை பொன்னுசாமி

மேலாண்மையின் கதைகளில் சில

*பிறந்த போதினிலே

கிராமத்தில் எருமை பொட்டக் கண்ணு போட்டால் சந்தோசப்படும் குடும்பம் மருமகளுக்கு பெண் பிள்ளை பிறந்ததை கசப்பை விழுங்கிய முகமாய் தெரிகிறது.தாய் எருமையை பார்த்து அந்த மருமகள் பொறாமைப் படுகிறாள்

*நிறம் மாறும் நிஜங்கள்

புதிய உரக்கடை திறந்த ஆள் அண்ணாச்சி உரம் வாங்க கடன் கொடுக்க மறுக்கிறான்.பால் சொசைட்டி,ஆடு வித்த காசு வருமென்று சொல்லிவிட்டு கடன் வாங்குகிறான்.ஒரு வாரமாய் இழுத்தடித்து பணம் தர்றான்.முடிவில்

"என்ன செய்யறது தம்பி,உண்மையை சொல்லி நேர்மையாய் வாழனும்கிற நெனப்பைக்கூட வாழவிடாத உலகம் தம்பி னு முடிக்கிறார்
#செம பஞ்ச்

*அரும்பு

சிவகாசியில் தந்தை இழந்த சிறுமி தீப்பெட்டிக்கடைக்கு வேலைக்கு போகிறாள்.குழந்தை தொழில் செய்ய கூடாதென்ற சட்டத்தால் விசிட் வருவதால் வேலைப்போகிறது.வயதுக்கே வராத சிறுமி வயிற்றுப்பிழைப்புக்கு தாவணி கட்டி செல்கிறாள்.
"ஒரு பிரேதத்தை போல்.. அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது..அந்த அரும்பி!

# தொகுப்பு முழுவதும் அருமையான கதைகள்

தோழமையுடன் மணி

மின்னல் கதை

மின்னல் கதை
-படித்ததில் பிடித்தது

பஸ் ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது அவன் விழித்துக் கொண்டான்.அருகிலிருந்த பேக்கை காணவில்லை.அதில்தான் அரிசி வசூல் பணம்மூன்று லட்சம் இருந்தது.அருகே அமர்ந்திருந்த இருவரையும் காணோம்."அய்யய்யோ! எம் பணத்தை காணோம்.!வண்டிய நிறுத்துங்க.!"பஸ் பிரேக் அடித்து நின்றது.நள்ளிரவு தூக்கம் கலைந்த எரிச்சலில் பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தனர்.கண்டக்டர் அருகே வந்து "எவ்வளவுங்க.?"

"மூணு லட்சம்.!அரிசி வசூல் பணம்.!"
"பத்ரமா வைச்சுக்கரதில்லையா.?"
"பத்ரமாத்தான் வைச்சிருந்தேன்.!பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பேரு மேலதான் சந்தேகம்.அவங்க எங்க இறங்குனாங்க.?"
"அவங்க கருமத்தம்பட்டில இறங்கி அரை மணி நேரம் இருக்கும்.!"
அதற்குள் டிரைவர் "எதிர்ல எந்த வண்டியும் வரல.!கோவை டூ ஈரோடுன்னு இருக்கிற போர்டை மாத்தி ஈரோடுடூகோவைங்கிற போர்டை வை.!ஒரு சின்ன ஐடியா.!

திருடனுங்க எதிர் திசையில் வருகிற பஸ்லதான் ஏறுவானுக.!"
போர்டை மாத்திக் கொண்டு பைபாஸில் வந்த வழியே விரைந்தது பஸ்.கருமத்தம்பட்டியில் நின்ற பஸ்ஸில் ஒடி வந்து ஏறியவர்கள் கையில் இருந்தது பணப்பை.!"வாங்க மாப்பிள்ளைகளா.!மாமியார் வீட்டுக்கு போகலாம்.!"என்ற குரல் கேட்டு டிரைவர்,பயணிகளின் பரிச்சையமான முகம் பார்த்து சுதாரிப்பதற்குள் மடக்கப்பட்டனர் பஸ் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது.!
- Karthik Karthik

அறிவுமதி

தொடுவதற்கல்ல வானம்
-அறிவுமதி

காதல்-கொடுப்பதன்று.ஈர்த்துக் கவிழ்ப்பதன்று.மடக்குதல் அன்று.மடங்குதல் அன்றுண் எதிர்பார்த்த வெறியில்..எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று.இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்-தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து..உள்திரும்பித் திருப்தியுறுவது.இரு ஞாபகங்கள் விரும்பி ஒன்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும்.காதலை வாங்கிக்கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்து கொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?...

வெற்றிலை-மணி

வெற்றிலை
*மணி

வெற்றிலை பற்றி பல்வேறு இடங்களில் வாசுத்துள்ளேன்.ஆனால் கழனியூரானின் வெற்றிலை பற்றி படித்தது இருநாட்களாக பதிவிட தூண்டிக்கொண்டே இருந்தது

*வெற்றிலை பயன்பாட்டை கூறுகிறார்
தாம்பூலம்,வரவேற்க,மங்கல வீட்டில்,பெண் பார்த்து வெற்றிலை மாற்ற,மொய் வைக்க, ஆரத்திக்கு, இன்னும் பல

*வெற்றிலை போடும் பெரியவர் பாக்கை தேர்வு செய்வர்.கெட்டுப்போன பாக்கை கழித்து,நல்ல பாக்கை தேர்ந்தெடுத்து உட்புறம் ஊதி வாயில் போடுவர்.புழு,பூச்சி நீக்க.வெற்றிலையில் தூசினை முன் பின் துடைத்து லாவகமாய் வாயில் போடுவர்.

*வெற்றிலை போட்டு துப்பும் பாத்திரம் பெயர் துப்பாணி.

*கன்னிபெண்ணை இரண்டாம் தாரமாய் வயதானவர்க்கு கட்டி வைத்ததால் அவர் பாடிய நாட்டுப்புறப்பாட்டு,

"வாட வெத்தலை;வசங்குன வெத்தலை
வாய்க்கு நல்லால்லே!
வாக்கப்பட்ட புருஷன் கெதி
வாழ்க்கைக்கு நல்லால்லே!

*சவத்தை சுடுகாட்டுக்கு அனுப்பும்போது இடது கையில் வெற்றிலை வைத்து அனுப்புவார்கள்.அந்த வெற்றிலையை செத்தவன் கை பிடிக்காது என்பதால் இடது கையின் கீழே வெற்றிலையை வைப்பார்கள்.இதை சொல்லும் மரபுத்தொடர்தான் "செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல""!

வெற்றிலையின் பிரமிப்பில் ஒருசிலவற்றை பதிவிட்டிருக்கேன்.நன்றி கழனியூரான்

-தோழமையுடன் மணிகண்டபிரபு

ஆத்மாநாம்

இந்த செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்த கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்த சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு
-ஆத்மாநாம்

MAY day wishes

ஆதவன்

*குறுக்குசால்*

*நீங்களாகவே* உங்கள் கோவணத்தை
உருவியெறிந்ததன் மூலம்
கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு
கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக
உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்

உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்
தன் பரிவாரத்தோடு
உப்பரிகை மாடத்திலிருந்து
மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு
துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை
உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்
மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள்

தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்
தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்துக்கு
விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை
வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்
விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து
தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்

பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்
மன்னரோடு
மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்
சூழும் இக்கொடுநெருப்பை அணைக்க
யாரும் வரப்போவதில்லை
பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே
சொந்தக்காலில் தப்பி வாருங்கள்

கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்
சொந்த ஊர் திரும்புங்கள்
பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்
பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்
நம் தேசியக்கொடியை
ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது
அது தேவைப்படும்.

-ஆதவன் தீட்சண்யா

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்-மணிகண்டபிரபு

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்
*மணி

பிடித்த பாடல் வரும்போது சத்தம் கூட்டி ரிமோட்டை கையில் வைத்து கத்தி கதிரேசன் மாதிரி போஸ் கொடுக்கும் குழந்தை பருவத்திலிருந்து தொடங்குகிறது எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் மனநிலை

*அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தெரிந்ததை ஐம்பது வருசத்துக்கு முன்னாடியே காட்டிக்கொள்ளும் மன இயல்பு

*இன்னும் கத்திப்பாரா பாலத்தில் டூரிஸ்ட் பஸ்ஸிலிருந்து ஒரு குரல் கேட்கும்
"எல்லாம் ஏரோப்ளைன் பார்க்காதவங்க பாத்துங்குங்க னு" அவரே அப்பதான் பார்ப்பாரு.ஆனாலும் நானெல்லாங்கிற தோற்றத்தை உருவாக்குவாரு

*ட்ராபிக் ஆனால் முதலில் பஸ்சிலிருந்து இறங்கி போய் முன்னாடி நின்னு வேடிக்கை பார்ப்பாரு.தன்னால் ட்ராபிக்கோ/ சண்டையோ க்ளியர் செய்ய முடியுமானு பார்ப்பாரு.முடிந்தால் செய்து முடித்து அலப்பறை செய்வாரு

*பேங்கிலோ,பொது இடத்திலோ கட்டுப்பணத்தை எண்ணும் போது,போகிற வருபவர்களை அநாயசமா பார்ப்பாரு.பணம் எண்றதுல P.hd முடிச்சமாதிரி

*புதிதாய் பணியில் சேர்ந்தவரை ஏளனமாய் என் சர்வீஸ் இருக்குமா உன் வயசு னு கேட்பாரு பாருங்க.அவரை வச்சு பாகுபலி பார்ட் த்ரீயே எடுக்கலாம்

*கன்னியாகுமரி போனவுடன் எல்லாரும் சூரியனை பாருகன்னு ஒருத்தர் சொல்லுவாரு பாருங்க.என்னமோ அவர் காட்டினதால் தான் சூரியனையே நாம பார்த்த மாதிரி

*ஒரு முறை எங்கிட்ட குலேபகாவலி படத்தை காட்டி இந்த படம் வந்தப்ப நீ பொறந்திருக்கவே மாட்டனு லுக் விட்டாரு.நான் உடனே இது ராமண்ணா படம்னு சொன்னதும் அமைதியானாரு

*அப்புறம் அரசியலை பத்தி பேசுவாங்க..தமிழக அரசியல் வரலாறு னு புக்  இருக்கு.அதை படிச்சாலே போதும் இவங்களை ஈஸியா சமாளிக்கலாம்.

*பஸ்ல க்ளீனரா இருப்பாரு பாருங்க..நல்ல பாட்டை ரசிக்க விடாம மாத்திட்டே இருப்பான்

*குழந்தைகளும் விதிவிலக்கல்ல..படம் பார்க்கும்போது அடுத்த சீனை சொல்லி அது திரையில் வந்தால் அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்கும் அதிசயத்தை குழந்தை ரசிக்கும்

*கி.ரா வின் கதை ஒன்னுதான் நினைவுக்கு வருது.கிராமத்துல எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் இருந்தார்.ஊரே அறிவாளியாய் பார்க்கும்.சந்தேகம் கேட்கும்.அப்போ யானை ஒன்னு போகும்.ஊரே இவரை பார்த்து இது என்னனு கேட்கும்.?

நேத்து நைட் இருட்டு வந்துதுல்ல,அதோட மிச்சம் போகுது னு சொல்லுவார்.ஊரே கைதட்டி பார்க்கும்.

*அந்த காலத்தில னு ஆரம்பிக்கிற சிலர் தன் அனுபவத்தை,ஏமாற்றத்தை அப்படியே சொல்லி அதிலிருந்த உண்மையை சொல்லும்போது தான் அது நமக்கு ஆர்வத்தை தூண்டும்

*அத விட்டுட்டு நான்யார் தெரியுமில்ல, அந்த காலத்திலயே நான் பெரிய இவன்னு சொல்லும் ஏகாம்பரங்கள் அதிகமாயிட்டாங்க

*அனுபவத்தை அனுபவிச்சி சொல்லனும். தன்னை ஊரே அதிசயமா ஆச்சர்யமா பார்க்கனும் னு நினைப்பவரை பார்த்து சிரிச்சு கடந்து செல்லுங்க

தோழமையுடன் மணிகண்டபிரபு

யூமாவாசுகி

*யூமா வாசுகி* அவர்களின் குங்குமம் இதழில் வந்த " கைகள்" என்ற கவிதை 👇🏻

💥அம்மாவுக்கு
என் கைகளின் மீது மிகவும் ப்ரியம்
அவள் காய்ச்சலாகக் கிடக்கையில்
" ஒங்கையால ஒரு வாய்
சுடுதண்ணி வச்சுக்கொடுய்யா" என்பாள்.

💥அச்சில் வந்த என் கவிதையை
" ஒங்கையால எழுதினதா இது?
என்று வியந்தாள்

" வாயக்கசக்குது
ஒங்கையால இரண்டு வெத்தில
வாங்கிவா தம்பி" என்பாள்.

💥தெருவில் போகிற ஜோதிடனை
வீட்டிற்குள் அழைத்து
" இவங்கையால தாலி கட்டிக்கிற பாக்யவதி
எப்போ வருவா,
இவங்  கை பார்த்துச் சொல்லுமய்யா' என்பாள்.

படிப்பு முடிந்த கையோடு
சொந்தமென்றிருந்தவர்களிடம் அம்மா சொன்னாள்
" தகப்பனில்லாப் புள்ள ஐயா
கை தூக்கி விடணும்'
அழுகைக்கான ஒத்திகையோடு
வேலை வேண்டிப்போய்
ஆறுதல் சொன்னவனாய் திரும்பியபோது
வெறுங்கையிலிருந்தது
பாதிப்பிராயம்.

💥" ஒங்கையால ரெண்டு காசு சம்பாதிச்சி
கால் வவுத்துக்கஞ்சி  எப்ப ஊத்தப்போறே'
என்று வரும் அம்மாவின் புலம்பல்..,
' இன்னமும்
கையூணிக் கரணம் போடத் தெரியலயே'
என்று வருந்துகிறதே தவிர,
நான் ஒத்துக்கொள்ளத் தயாராயிருந்தும்
கையாலாகாதவன் என்றென்னை
ஒரு போதும் இகழ்ந்த்தில்லை.

தேவதச்சன்

காற்றில் வினோத நடனம் புரியும்
இலைகளை கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது
-தேவதச்சன்

என் கையில் இருந்த பர்சை பிரிக்கவில்லை.பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
-தேவதச்சன்

கல்யாண்ஜி

*கல்யாண்ஜி*

 

💥காக்காய் கத்தி

இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.

காதில் விழவே காணோம்

உப்பு விற்கிறவரின் குரல்,

கோலப்பொடி விற்கிறவரின் குரல்.

என்னவோ ஆகத்தான் போகிறது

இந்த உலகத்துக்கு

இன்றைக்கு.

💥வீட்டு நடையில்

நின்றுகொண்டிருந்தேன்.

அருகில் வந்து

ஒரு கருப்புக் கன்றுக்குட்டி

அசையாமல் என்னைப் பார்த்தது.

போய்விட்டது.

இது போதும் எனக்கு

இன்றைக்கு.

-கல்யாண்ஜி.

படித்தது

பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வாஎன்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.

சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.

கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.

நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.

காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.

என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்று தானே அர்த்தம்....?

அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...

அவள் தான் மனைவி.

ஜே.கே

எல்லா விதமான வாழ்க்கையும் ஏதோ ஒரு தர்மத்தின், நியாயத்தின்,ஒழுங்கின்,பண்பின் வழிதான் இயங்கவும், இயங்க இயலாமலும் முரண்படுகின்றன. #ஜெயகாந்தன்

பாரதி

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடீ,கிளியே
ஊமைச் சனங்களடி
-பாரதியார்

செல்வராஜ்

சிற்சில
துரோகங்கள்
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்
நண்பனொருவனின்
நயவஞ்சகம்
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.

-செல்வராஜ்

இறையன்பு

குழந்தைகளை மதிப்பெண்களாகவே பார்க்கிறவர்களும்,
மனிதர்களைப் பதவிகளாகவே பார்க்கிறவர்களும்,
இணையைச் சம்பளமாகவே பார்க்கிறவர்களும்,
புடவையை விலையாகவே பார்க்கிறவர்களும்,
பரிசைப் பணமாகவே எடை போடுகிறவர்களும் புள்ளிவிவரப் புலிகளாக இருக்கலாம். ஆனால் துள்ளி வருகிற மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரர்கள் அல்லர்.

வாழ்க்கையை புள்ளிவிவரமாகப் பார்க்கிறவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
கடந்த காலத்தை ஆண்டுகளாகவும்,
தோல்விகளாகவும்,
நிகழ்காலத்தை மதிப்பெண்களாகவும்,
எதிர்காலத்தை ஊதிய உயர்வாகவும் பார்க்கிறவர்களால் தென்றலையும் ரசிக்க முடியாது,தேனையும் சுவைக்க முடியாது.
#இறையன்பு

ஓஷோ

கலீல் ஜிப்ரான் ஒரு அழகான கதை சொல்லுவார்.

கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பதற்காக ஒரு சோளக்கொல்லை பொம்மையை உருவாக்குவார்கள். இரண்டு குச்சிகளை ஒரு சிலுவைபோல் அமைத்து அதன் மீது ஒரு சட்டையைப் போடுவார்கள்.தலைக்கு மேல் ஒரு மண்பானையை வைப்பார்கள்.

விலங்குகளும் பறவைகளும் அதைப் பார்த்து மனிதன் அங்கே நிற்பதாக எண்ணி பயந்து போகும்.இரவில் வெள்ளைச் சட்டையும் இரண்டு கைகளும் யாரோ காவலிருப்பது போலத் தோன்றும்.விலங்குகளுக்கு அது போதுமானது. அவை பண்ணைக்கு அருகே வரமாட்டா.

ஜிப்ரான் கூறுகிறார் : "ஒரு நாள் நான் ஒரு சோளக் கொல்லை பொம்மையைப் பார்த்து, ' உன்னைச் செய்த விவசாயிக்கு நீ தேவை.உன்னைக் கண்டு, அதிக விலங்குகள் உண்மை என்று நம்பி விடுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மழையிலும், வெயிலிலும், கொளுத்தும் கோடையிலும், நடுக்கும் குளிரிலும், நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? ' என்று கேட்டேன்."

அதற்கு அந்தப் போலி மனித பொம்மை கூறியது : "உனக்கு என் மகிழ்ச்சி தெரியாது. மழை, வெயில், வெப்பம், குளிர் இவற்றில் கஷ்டப்பட்டாலும், அந்த விலங்குகளைப் பயமுறுத்துவதில் இன்பம் இருக்கிறது. என்னைக் கண்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் அஞ்சுகின்றன.ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இன்பம் பிறரை பயமுறுத்துவதில் இருக்கிறது."

நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன்.

நீங்கள் இந்தப் போலி மனிதனைப் போல இருக்க விரும்புகிறீர்களா?

உள்ளே ஒன்றுமில்லாமல், ஒருவரை பயமுறுத்திக் கொண்டு, மற்றொருவரை மகிழ்வித்துக் கொண்டு, மற்றும் ஒருவரை அவமதித்துக் கொண்டு, மற்றொருவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டு இருக்க விரும்புகிறீர்களா?

உங்ளது வாழ்க்கை பிறருக்காகத்தானா?

எப்போதாவது நீங்கள் உள்ளே பார்ப்பீர்களா?

வீட்டிற்குள் யாராவது இருக்கிறார்களா,இல்லையா?

--ஓஷோ--

சுஜாதா

தரிசனம் என்பதில் கொஞ்சம் நம் உடல் உழைப்பு வேண்டும்.அங்கே போக வேண்டும்.கூட்டத்தில் இடிபட வேண்டும்.நம் தினசரி வேஷங்களை ஒத்திப்போட்டுக் காத்திருக்க வேண்டும்.கிட்டத்தில் செல்ல தடைகள் வேண்டும்.அதன் இறுதியில் கிடைக்கும் தரிசனத்தில் அத்தனை சிரமங்களும் மேகத்தை விலக்கிவிட்டு ஜொலிக்கும் சூரியன் போல் சட்டென்று ஏற்படும் ஒரு நிமிட பரவசம் தான் தரிசனம்.

வரவேற்பரையில் உட்கார்ந்துகொண்டு டெலிபோன் பேசிக்கொண்டு சானல் மாற்றத் துடிக்கும் விரல்களுடன் பார்ப்பதல்ல.

#சுஜாதா

வசுமித்ர

பிணம்; மற்றும்
உடல்
இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது
பொருத்தமான
என்
பெயர்

#வசுமித்ர

வண்ணநிலவன்

கைக்குட்டையைத்
தொலைப்பது போல் காலத்தைத்
தொலைக்க முடியவில்லை
விழித்தாலும், உறங்கினாலும்
வீணே என்னுடனிருக்கும்
காலத்தை என்ன செய்ய?
#வண்ணநிலவன்

படித்ததில் பிடித்தது

நன்றி:பிழைதிருத்தி

பட்டாம்பூச்சி தூண்டில்கள்..

சிதிலமாவதற்கு முன் 
சிலாகித்துக் கொள்..
கலைந்து விடும்
 மேகமெனில்..!

சிறகுகள் படபடக்கும்
முன் பார்த்துக்கொள்..
பட்டென பறந்துவிடும்
பட்டுப்பூச்சியெனில்..!

உடைபடும் முன் முகத்தை 
பிரதி எடுத்துக்கொள்..
குறையின்றி முழுதான
பிம்பக்கண்ணாடி எனில்..!

உடைந்து நொறுங்கும் முன்  வாழ்ந்துக்கொள்..
எக்கணமும் சுழழ்வதை
நிறுத்திக்கொள்ளும் பூமியெனில்..!

-கணேஷ்.G

மேத்தா

*மு.மேத்தா*

*சிறப்புப் பதிவு*

*இந்தியா என் காதலி*

உண்மையை நான்
ஒப்புக் கொள்கிறேன்...
காதலித்து உன்னைக்
கட்டிக்
கொள்ளவில்லை...
கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!


உன்
தர்பார் மண்டபங்களில்
நியாயங்கள்
தற்கொலை
செய்துகொள்ளும்
முன்பே
கொலை
செய்யப்படுகின்றன.

சட்டங்கள் விசிலடிக்க
ஜனநாயகம்
கை தட்டுகிறது!

உன் மைய மண்டபத்தில்
குயில்களின் குரலை
அவைக் குறிப்பிலிருந்து
நீக்க வேண்டுமென்று
காக்கைகள்
கலகம் செய்கின்றன.

மக்கள் தொகையில்
நூறு கோடியைத்
தாண்டிவிட்டாய்
ஒரே ஒரு
வறுமைக் கோட்டைத்
தாண்ட முடியாமல்
வழுக்கி விழுகிறாய்...

இராம ஓவியம்
தீட்டுவதற்கு
இரத்தம் போதவில்லை
என்று
சத்தம் போடுகின்றன
தூரிகைகள்...

நீயோ
'தூரிகை வாழ்க' என்று
பேரிகை கொட்டுகிறாய்!

மதங்களுக்கும்
சாதிகளுக்கும்
மகுடம் சூட்டிவிட்டு
மனிதர்கள் கிடக்கிறார்கள்
மருத்துவ மனைகளின்
சவக் கிடங்குகளில்!

எந்த நேரத்தில்
இடிப்பார்களோ
எந்த நேரத்தில்
வெடிப்பார்களோ
என்று
ஊர் ஊராகக்
கடவுள்
ஔிந்து வாழ்கிறான்...

அன்னிய முதலாளிகளின்
கோப்பைகளை எமது
குருதியால் நிரப்பிவிட்டு
அவர்களது
குளிர்பானங்களால்
எம்மைக்
குளிரவைக்கப் பார்க்கிறாய்...

ராமராஜ்யக்
கனவுகள்
மெல்ல மெல்ல
ரோம ராஜ்யக்
கனவுகளாய்
மாறிவருகின்றன...

வாழ்க்கையை
முதுமக்கள் தாழிக்குள்
மூடி வைத்துவிட்டு
வடிவங்களைப் பற்றி
மோதிக்
கொள்கிறார்கள்
நவீன
இலக்கியவாதிகள்...

கவிஞர்களோ வெறும்
கட்டியங்காரர்களாய்...
சுட்டெரிக்க
வேண்டிய
அவர்களின் சொற்கள்
சுருட்டுப்
பற்ற
வைத்துக்கொண்டு...

உண்மையை நான்
ஒப்புக் கொள்கிறேன்...
காதலித்து உன்னைக்
கட்டிக்
கொள்ளவில்லை...

கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!

மனுஷ்யபுத்திரன்

தன் மகளின் கழற்றப்பட்ட
உள்ளாடையை கையில் வைத்துக்கொண்டு
தேர்வு மைய வாசலில் அமர்ந்திருந்தார்கள்
பொறுப்பு மிக்க தந்தையர்கள்
தேர்வு முடிந்தது வெளியே வந்த மகள்கள்
மறுபடி உள்ளாடைகளை
அணிந்துகொண்டதும்
ஒளிமயமான எதிர்காலம் நோக்கி
வீடு திரும்பினார்கள்

ஜல்லிக்கட்டு மாடுகளை
அவிழ்த்துவிடும்படி
முஷ்டிகளை உயர்திக்காட்டிய இளைஞர்கள்
தங்கள்  சட்டையின் கைகள் கத்தரிக்கப்படுவதை
சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்கள்

விமான நிலையங்களில்
கறுப்பு இந்தியர்களின் ஆடைகளுக்குள்
வெள்ளை அமெரிக்கர்கள்
கைவிட்டு சோதனை நடத்தியபோது
பொங்கி எழுந்த தேசபக்தர்கள்
மாணவர்களின் அந்தரங்க இடங்களைத்தொட்டு
தகுதியும் திறமையும் ஒளிரும்
புதிய இந்தியாவை தேடினார்கள்

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக
தொலைக்காட்சி காமிரா முன்
உரத்து முழங்கிய மாணவி ஒருத்தி
எந்த முணுமுணுப்பும் இல்லாமல்
தன் காதணிகளை கழற்றிக்கொடுக்கும் காட்சியை
அதே தொலைகாட்சியில் கண்டேன்

தங்கங்கக் காசுகளையும்
போதை மருந்துகளையும்
கடத்தி வருபவர்கள்
அவற்றை ஆசன வாயில்களில்
அடைத்துவைப்பதுண்டு
மாணவர்கள்
தேர்வுக்கான ரகசியக் குறிப்புகளை
அங்கே வைக்க மாட்டார்கள் என்பது
என்ன நிச்சயம்?

அடுத்த முறை
மாணவர்களை மாணவிகளை
குப்புறப்படுக்க வைத்து
அவர்கள் ஆசன வாயில்களில்
விரல்களை செலுத்தித் தேடுங்கள்
உங்களுக்கு
எந்த எதிர்ப்பும் இருக்காது
எல்லோருக்கும் Career முக்கியம்

மேலும்
திறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை
அந்த ஆசனவாய் தேடலில்
கண்டிப்பாக கண்டடைந்துவிடுவீர்கள்.

#மனுஷ்யபுத்திரன்