Tuesday 31 August 2021

அந்த்வன் து செந்த்-எக்சுபரி

நீயே உனக்கு நீதி வழங்கிக்கொள்.அதுதான் மிகக் கடினம். மற்றவர்களுக்கு நீதி வழங்குவதைக் காட்டிலும் தனக்குத்தானே நீதி வழங்கிக் கொள்வது மிகக் கடினம். அப்படி நீதி வழங்குவதில் வெற்றி கண்டால்,நீ ஒரு உண்மையான ஞானி

-அந்த்வன் து செந்த்-எக்சுபரி

Monday 30 August 2021

சுரபாலர்

பத்து கிணறுகள்..ஒரு குளத்துக்குச் சமம்

பத்து குளங்கள்..ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள்..ஒரு புத்திரனைத் தருவதற்கு சமம்

பத்து புத்திரர்கள்..ஒரு மரத்துக்குச் சமம்

-சுரபாலர்

யுகபாரதி

மண்பானை கவிதையில்

மாறுவதற்கேற்ப 
மாறிக்கொள்ளத்தான் வேண்டும்

ஒரேயொரு மகிழ்ச்சி
மாமியார் மருமகள்
யாருடைக்கவும்
மண்சட்டிகளில்லை
தற்போது

-யுகபாரதி

Sunday 29 August 2021

காலை யிளம்பரிதி வீசுங்கதிர்களிலேநீலக்கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறாவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடிவந்து தழுவும் வளஞ்சார் கரையுடையசெந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை-பாரதியார்

Home movie review

#HOME  விமர்சனம் (மலையாளம்)
*மணி

வீடு என்பது கட்டிடம் மட்டுமல்ல மனிதர்களின் சுக துக்கங்களையும் அறிந்து வைத்திருக்கும் ஆன்மா. 7ஜி ரெயின்போ காலனியில் ஒரு காட்சியில் மகனிடம் விஜயன் மருகும் ஒரு காட்சியை..சற்றே நீ..ளமாக மகனின் பார்வையில் சொல்லியிருக்கும் படம் தான் ஹோம்.கடந்த வாரத்தில் கொஞ்சம் பார்த்ததுடன் முழுதாய் பார்த்து முடிக்கவில்லை.இன்று நண்பர் ரவி சார் சொன்னவுடன் முழுதும் பார்த்துவிட்டேன்.

#கதை

பென்சன் வாங்கும் இந்திரனுக்கு இரு மகன்கள்.மூத்தவர் ஆண்டனி ஆலிவர் ட்விஸ்ட் பட இயக்குநர்.முதல் படம் வெற்றி கொடுத்துவிட்டு இரண்டாம் பட வேளையில் இருக்கிறார்.இளைய மகன் யூ ட்யூப் சேனல் நடத்துபவர்.இருவருமே தந்தையை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை.

மகன்களின் அவமதிப்பை கண்டு கலங்கும் தந்தை தானும் அவர்களுக்கு பிடித்தது போல் அப்டேட் ஆக முயல்கிறார்.நடிகரிடம் கதை சொல்லப்போகும் மகனுடன் செல்லும் தந்தை செய்யும் சிறுதவறால் படம் நின்றுபோய்.. சமூகத்திலும் கெட்ட பெயர் மகனுக்கு கிடைக்க மேலும் விரிசல் விழுகிறது.காதலித்த பெண்ணை கைப்பிடிக்க மேலும் ஒரு தடை வருகிறது.

ஒரு கட்டத்தில் மகனை இம்ப்ரெஸ் செய்ய  தன் சிறு வயதில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் மருத்துவ உதவி செய்ததை சிலாகிப்புடன் கூற, மகனுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது .மனம் ஒடிந்து போய் தன் நிலையை தானே சரிசெய்ய உளவியல் நிபுணரை சந்திக்கும் தந்தை கொஞ்சம் கொஞ்சமாய் மீள்கிறார்.

இறுதியில் தந்தையின் பெருமையை மகன் அறிந்து என்ன செய்கிறார் என்பதை நெகிழ்வுடன் கூறியிருக்கிறது ஹோம்

#ப்ளஸ்

*படத்தின் பெரும் பலம் தந்தையாய் நடித்திருக்கும் இந்திரன்.ஆரம்பம் முதல் இறுதிவரை தன் அறியாமையை மறைக்கும் போதும், பாசத்தில் உருகும்போதும் அசர வைக்கிறார்

*எந்த சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாய் நகர்கிறது.children of the heaven ல் அந்த ஷூ கிடைக்க வேண்டும் என்பது போல் தந்தையின் அருமையை உணர வேண்டும் என நினைக்கத் தூண்டுகிறது

*வீடும்,ஒளிப்பதிவும் நம்மையும் அங்கு வாழவைக்கிறது

*தந்தை போன் உபயோகிக்க கற்றுக்கொள்வது,தாய் எஸ்கலேட்டரில் பயத்துடன் பயணப்பது,போன் கேமராவில் பேண்டேஜ் போட்டிருப்பது போன்ற சின்ன சின்ன் விசயங்கள் சுவாரசியப்படுத்துகிறது

*தான் தனது முதிய தந்தையை கவனிப்பது, அன்பு செலுத்துவது போல் தன் மகன்கள் அன்பாக இருப்பதில்லையே என தலைமுறை இடைவெளியை சொல்லியிருக்கிறார்கள்

*மகனிடம் கூட அஞ்சு நிமிசம் பேசனும் என சொல்லும் இடம் யதாத்தத்தை பேசுகிறது

படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் நல்ல குடும்பத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்

-மணிகண்டபிரபு

கனலி

வண்ணதாசன் அவர்கள் ஒரு கடிதத்தில் இப்படி எழுதியிருப்பார்.

"இப்பொழுதெல்லாம் ஒரு காட்சி பதற வைக்கிறது. நீக்கமற வளர்ந்து கிடக்கிற முட்செடிகளில் சிக்கிப் பரிதவிக்கும் பாலீத்தீன் துணக்குள், வெயிலும் காற்றிலும் அது படுகிற பாடுகள், உண்டாக்கிற பிரமைகள் அளவற்றது."

இந்த வாழ்வும் அப்படி சிக்கி தவிக்கிற ஒரு பிரமையை தான் அடிக்கடி என்னுள் தருகிறது. 

இன்னொரு கடிதத்தில் இப்படியும் எழுதியிருப்பார்.

" மனிதர்களைச் சம்பாதிப்பதற்காக முதலில் ஓடுங்கள். சம்பாதிப்பதற்காக அப்பறம் ஓடுங்கள். ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுகிற புள்ளியின் சூட்சுமம் பிடிபடுகிறபோது நீங்கள் வெற்றி பெற ஆரம்பிக்கிறீர்கள். இலக்கிய - இசை இன்னபிற ரசனையெல்லாம் எப்போதும் அடைய முடியும். அந்த உள்ளம் சிதையாத வாழ்க்கையை நழுவவிடாமல் வைத்துக் கொள்ள கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளுங்கள். வெற்றி அடையுங்கள். இந்த உலகம் வெற்றியடைந்த மனிதனையும், அவனுடைய ரசனைகளையும் எளிதில் ஒப்புக்கொள்கிறது. ஒப்புக்கொள்ளும்படுயாக இருங்கள்."

ஒவ்வொரு முறையும் என்னுள் தேவையில்லாமல் பிரமை வரும் நேரங்களில் கூட அவரின் கடிதங்களை தேடி பிடித்துக் கொள்வேன். நிச்சயம் அது ஒரு மகிழ்ச்சி தான்.

-கனலி

The joy of failure

ஒவ்வொரு தோல்வியினுள்ளும் அதற்கு இணையான அல்லது அதைவிட மேலான வெற்றிக்கான விதை ஒளிந்திருக்கிறது

-The joy of failure

திருச்செந்தாழை

ஒரு ஆற்றைப் போல வெயில் உறைந்து கிடந்த யாருமற்ற பகலின் வீதியில் அவளின் சித்திரம் அற்புதத்தின் உச்சமாயிருந்தது.

-பா.ஒரு ஆற்றைப் போல வெயில் உறைந்து கிடந்த யாருமற்ற பகலின் வீதியில் அவளின் சித்திரம் அற்புதத்தின் உச்சமாயிருந்தது.

-பா.திருச்செந்தாழை

விடிவதற்குள் வா*சுஜாதா

விடிவதற்குள் வா
*சுஜாதா

RM314
பக்கம்:150

உயரமான சறுக்கலில் அமர்ந்து சறுக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது சுஜாதாவின் நடை. கல்கியில் தொடராக வந்த நாவல் கன்னியாகுமரி அருகே மண்டைக்காடு பகுதியில் நடந்த மதமாற்ற சச்சரைவை வைத்து புனையப்பட்டது .ஆனால் முற்றிலும் வேறு ஒரு கதையில் இலை மறை காயாய் இதை சொல்லியிருப்பார்.

துபாயிலிருந்து வேலை பார்த்து மண்டைக்காடு கிராமத்திற்கு திரும்புகிறான் கனகசபை.மனைவி கிரிஜாவை பார்க்க ஆவலுடன் அவள் விரும்பிய தங்க நகைகளை வாங்கி வருகிறான்.ஆசையாய் வந்து கதவு திறந்தால்..தான் வருவதாய் பத்து நாளுக்கு முன் அனுப்பிய கடிதம் பிரிக்கப்படாமல் இருந்தது.

பக்கத்து வீட்டில் இருந்த உண்ணி, அவன் அக்கா தேவகியிடம்  விசாரித்துவிட்டு வீட்டில் உண்ணியுடன் தேட 'விடிவதற்குள் வா'-ரசா" என எழுதியிருந்தது.இது அவனுக்கு சந்தேகத்தை கிளப்பியது. ஊரில் உள்ள சர்ச் பாதர், கோவில் பூசாரி என அனைவரிடமும் விசாரிக்கிறான் கனகசபை.ரத்தினசாமி தான் ரசா வா என பல யுகங்களில் ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் வருகிறது.நமக்கும் கூடவே

சர்ச்சின் பின்புறம் கிரிஜாவின் தங்க வளையலும்,நாயொன்று அவள் புடவையை உருவிக் கொண்டிருக்க ஊரிலுள்ள ஒரு சாராரின் சந்தேகம் ஃபாதரின் மீது வருகிறது.அது அப்படியே மதக்கலவராமகிறது. துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறக்க அதில் 16 வயது நிரம்பிய உண்ணியும் ஒருவன்.துபாய்செல்ல வேண்டும் எனும் தனியாத வேட்கையுடன் இறக்கிறான்

எப்படியும் மனைவி கிரிஜா வரப்போவதில்லை என உணர்ந்து
நிராதரவாய் நிற்கும் தேவகியை கைபிடிக்கலாமா என எண்ணுகிறான். அப்போது கிரிஜாவின் முகத்துடன் வேதாரண்யத்தில் இருந்து ஒரு செய்தி வருகிறது.மனைவியை கண்டுபிடித்தானா,தேவகியை கைப்பிடித்தானா, மதக்கலவரத்தின் முடிவு என்ன என விறுவிறுப்பாய் 150 பக்கத்தை ஒரே மூச்சில் படிக்க வைத்துவிடுகிறார் சுஜாதா

#ரசித்த வரிகள்

*ஈரவாசனையும் இல்லாமல் மண் வாசனையும் இல்லாமல் ஒருவிதமான நடுநாற்றம்

*கூந்தல் ஏராள ராத்திரி போல் இருந்தது

*இந்த கிராமம் எதையோ மறைத்து வைத்திருப்போல் தோன்றியது அவனுக்கு

*மண்ணெண்ணெய் விளக்குகள் வீடுகளுக்குள் துடித்துக் கொண்டிருந்தன

*ரசவல்லிபுரத்தில் இறங்கினான்.
பஸ் அவனை புறக்கணித்துவிட்டு சென்றது 

*அந்தப்பெண்ணுக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும்.அழாமல் இருந்தால் அழகாக இருப்பான் போலத் தோன்றியது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday 27 August 2021

போய் உட்கார்ந்ததும் எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க! - கல்யாண பிளாஷ்பேக்


உள்ளதிலேயே சிறந்த புகைப்படத்தைத்தான் பெண் வீட்டுக்கு அனுப்பினேன் வந்ததிலேயே சிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்திருப்பார்கள் போல பதில் இல்லை!
பா.ராஜாராம்

புராணக் காலத்திலிருந்து நவீன காலம் பெண் பார்த்தல் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு ஆகும். ஜாதகம் பார்த்து, புகைப்படங்கள் பரிமாறி இரு வீட்டாருக்கும் பூரண திருப்தி ஏற்பட்டு மணமகன் வருங்கால மனைவியை காண வருவார். `எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ எனப் பின்னணியில் பாடல் ஒலிக்கும். சில சமயம் இருவருக்கும் பிடிக்கவில்லையெனில், `ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ எனவும் ஒலிக்கும். இருவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் அந்த சந்திப்பு வாழ்வில் என்றும் இனியவை.


உயிர் துறக்கும் தருவாயில் ஒரு நிமிடம் இந்த உலகை காண எப்படி ஆவல் கொள்வோமோ அதுபோல் முதன்முதலாய் பெண் பார்க்கும் அந்த நொடி எதிர்பார்ப்புகளால் நிறைந்தது


#ஜாதகமே துணை


தங்கைகள் இருந்தால் திருமணம் முடிந்த பின்னும், தங்கை இல்லையென்றால் 25 வயதிலும் பேச்சு ஆரம்பமாகும். சொந்தக்காரங்ககிட்ட போனில் அப்பா பேசும்போது அப்பிடியே மகனுக்கு இனி பொன்னு தேடனும்னு சொல்லும்போது..இன்ப தேன் வந்து பாயும் ஆண்களுக்கு.

"ஒருவார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்னு" ஒரு அசரீரி ஹோம் தியேட்டரில் ஒலிக்கும். அப்ப இருந்தே ரொமாண்டிக் மூட், லுக், இன்ன பிற இதர எண்ணங்களும் தொடங்கி கற்பனையிலயே மிதப்போம். கார் வாங்க முடிவெடுத்த போது சாலையில் செல்லும் அனைத்தும் நாம் நினைத்த கார் செல்வது போல.. பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் நாம் நினைத்தது போலவே இருப்பார்கள்.


மார்க் ஷீட், ரெஸ்யூம்க்கு அப்புறம் அதிகம் ஜெராக்ஸ் போட்டது ஜாதகத்துக்கு தான்.பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் How are you னு கேட்கிற மாதிரி..மனசுக்குள்ள ஐ எம் கண்ணன் ராகு கேது இருக்குது, இரண்டுல செவ்வாய் இருக்கு, எட்டுல செவ்வாய் இருக்கு, நீட்சியில் செவ்வாய் இருக்கு, சுத்த ஜாதகம் என ஏதேனும் ஒன்றை சொல்லி பெண் இருந்தா சொல்லுங்கனு கேட்போம்.புதுசா யாராவது இளம்பெண் தெருவுக்கு வந்தாலோ, ஆபிசுல ஜூனியராய் பணியில் சேர்ந்தாலோ ராமன் தேடிய சீதை படத்தில் வரும் சேரன் மாதிரி ரியாக்சன் கொடுப்போம்.

யாரைப் பார்த்தாலும் ஐ வான் டூ மேரியூ னு வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி சொல்லத் தோணும்.


#ஆடுவோம் பாடுவோம் தேடுவோம்


நியூஸ் பேப்பரில் ஸ்போர்ட்ஸ் நியூஸையே படித்துக் கொண்டிருந்தவன் முதல்முறை மணப்பந்தலை தேடுவாங்க.அதுல மணமகன் தேவை விளம்பரத்தை ஜூம் பன்னி ஜூம் மீட்டிங்கில் பேசுவது போல பார்ப்பாங்க. உனக்குனு ஒருத்தி பொறக்கவா போறா ஏற்கனவே பொறந்திருப்பா என்பது அம்மாக்களின் தேசிய கீதம் தினசரி கேட்டுக்கொண்டே இருக்கும்.இதை கேட்டு கேட்டுத் தான் பார்கே பார்க்கே னு மனசை உற்சாகப்படுத்தனும்.

ஆபிஸ் மெயில் பார்க்கும் நேரம் தவிர மேட்ரிமோனியில் வரும் மணப்பெண் படங்களைப் பார்ப்பது T20யில் சூப்பர் ஓவர் பார்ப்பதுபோல் சுவாரஸ்யமானது.


#மணப்பெண் பார்த்தல்


வர்ற ஞாயித்துக்கிழமை பொண்ணுப் பார்க்க கோயிலுக்கு வரச்சொல்லிட்டாங்கனு சொன்னதும் அந்த விடியலுக்காய் காத்திருப்பது மழைக்காய் காத்திருக்கும் விவசாயியைப் போல குதூகலமானது. இருப்பதிலேயே நல்ல சட்டையைப் போட்டுக் கொண்டு ஓராயிரம் முறை கண்ணாடி பார்ப்போம். எல்லா ஆங்கிளிலும் பார்த்த பின்புதான் படையெடுத்து செல்வோம்.
தலைக்கு குளிச்சதும் தப்பித்தவறி கூட எண்ணெய் வச்சிட மாட்டாங்க.

சகுனமே பார்க்காதவன் கூட அன்னிக்கு சகுனம் பார்ப்பான். அப்பதான் கார் வச்சிருக்கிற நண்பனின் அருமை தெரியும். முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாய் இந்த அபலைக்கு லிப்ட் கொடுத்த நவீன பாரியாய் வருவான். ஒன்னுமே இருக்காது ஆனா பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற மாதிரி சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க ஆண்கள். எல்லாரிடமும் அன்பை கொட்டுவாங்க. அப்பிடியே மனசு முழுக்க வீதி பைப்பில் நிறைந்து வழியும் குடம் போல அன்பும் புன்னகையும் வழிந்து கொண்டே இருக்கும்.


#கண்டேன் பெண்ணை


பெண் வீட்டின் முன்னால் போய் இறங்கியதும் தேவசேனையை கூட்டி வந்த பாகுபலியைப் போல் பெருமிதத்துடன் பார்ப்போம். கவுன்சிலருக்கு நிற்க கூடிய தகுதியுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லிப்போகும் போது நமக்குள் இருக்கும் நாகராஜ சோழன் வெளிப்படுவார். போய் உட்கார்ந்ததும் எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க. கொஞ்சம் ஷையா தான் இருக்கும். அப்பதான் ஒரு பெருசு கடி ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும்.

கூட்டத்தினரும் பெருசின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது போல சிரிச்சு வைப்பாங்க


கொஞ்ச நேரத்தில் பெண் வருவாங்க. பயம், பதட்டம், கூச்சம், ஆவல் என நவரசாவும் பெண்ணின் முகத்திலும், மாப்பிள்ளையின் முகத்திலும் இருக்கும். சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை.. மைண்ட்வாய்ஸ் முணுமுணுக்கும். காபி கொடுக்கும் போது காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரி.. பயத்தில் அவங்க கையும் நம்ம கையும் சுகர் லெவல் நானூறை தாண்டியது மாதிரி நடு நடுங்கும்.

பெண்ணுக்கு நம்மை பிடிக்குமானு ஒரு கேள்வி வரும் பாருங்க. சரி எப்பிடியாச்சும் போன் நெம்பர் வாங்கி பேசியே நம்மை பிடிக்க வச்சிடனும் ஒரு வைராக்கியம் பிறக்கும். துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்னு மனசு உடுக்கை அடிக்கும். தனியா போய் பேசிட்டு வா என யாராவது சொல்லுவாங்களானு அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கும் அரசு ஊழியர் போல காத்திட்டு இருப்பாங்க மாப்பிள்ளைகள்.


பீக் அவர்ல க்ரீன் சிக்னல் விழுந்தது மாதிரி.. சொன்னதும் டீசண்ட்டா அதே நேரத்தில் வேகமா வெட்கப்பட்டது மாதிரி எழுந்து போனேன். போனதும் நலம் விசாரிப்பு, படிப்பெல்லாம் ஃபார்மாலிட்டிக்கு கேட்டேன். சம்பிரதாயத்துக்கு சமைக்கத் தெரியுமானு கேட்டேன். சுடு தண்ணி வைக்க எத்தனை விசில் விடனும்னு கேட்டாங்க.. நான் அப்பிடியே ஆடிப்போய்ட்டேன். அப்ப போன் நெம்பர் வாங்குவது கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வாங்குவது மாதிரி கஷ்டமானது.

அதனால் என்னோட போன் நெம்பர் மட்டும் கொடுத்திட்டு.. பிடிச்சிருந்தா போன் பன்னுங்கனு சொல்லிட்டு வந்திட்டேன். வெளியே வந்ததும் ரத்த தானம் குடுத்து வந்தவனைப் போல பெருமிதமா பார்த்தாங்க. மீண்டும் கும்பிட்டு வந்திட்டேன். அப்புடி ஒரு பூரிப்பு இருந்துக்கிட்டே இருக்கும். வந்து அடுத்த நாளே பெண்ணிடமிருந்து மெசேஜ்.. அப்புறமென்ன பூவரசம்பூ பூத்தாச்சு ஆணுக்கு சேதியும் வந்தாச்சுனு மாப்பிள்ளை ஹேப்பி அண்ணாச்சி.


ஜாதகம் போட்டோ எல்லாம் பிடித்திருந்தால் மட்டும் செல்லவும். அதுவும் கோயிலுக்கு. அங்கும் பார்த்து இருவருக்கும் ஓகேனு தோன்றினால் மட்டும் வீட்டுக்கு செல்லவும். கும்பலாய் செல்லாமல் ஓரிருவர் மட்டும் செல்லவும். ஆள்பாதி ஆடை பாதி என்பது அங்கேதான் வேலை செய்யும். ஆகவே நல்ல ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.


*நூறு நாளில் பணத்தை செலவு செய்யும் அருணாசலம் போல, ஆறு மாசம் தான் உனக்கு குருபலன் வருது.. அதை விட்டால் உனக்கு கல்யாணமே நடக்காது-னு சொன்னதும் பல ஆண்கள் மும்முரமாய் களத்தில் இறங்குவாங்க


*பெண் பார்க்க ஒத்தப்படையில் ஆளுக போனால் நல்லதென்று ஆம்னி வேனில் ஒன்பது பேர் போன கதைகள் உண்டு


*நாம பார்த்த பொன்னுக எல்லாருக்கும் ஈசியா கல்யாணம் நடந்திடும். நமக்கு மட்டும் ஆகவே ஆகாது. அதனாலேயே கல்யாணம் ஆகாத பெண்ணை பார்க்க guest lecturer மாதிரி கூப்பிடுவாங்க. அப்ப அந்த வேதனை இருக்கே வேதனை


*பல வீடுகளில் தையல் மெஷின், கணிப்பொறி இருக்கும். அதை வச்சு எந்த கால்குலேசனும் செய்ய வேண்டாம்.


*CCTV மாதிரி பெண்ணின் தம்பியோ அத்தையோ, சித்தியோ நம்மை கடைசி வரை கவனிச்சிக்கிட்டே இருப்பாங்க


*நண்பர் பெண் பார்க்கப்போன இடத்தில் பெண்ணின் போன் நெம்பர் வாங்கல. குடும்பத்தினரும் வாங்கல. உங்களையெல்லாம் வச்சிட்டு ஒரு கொல கூட செய்ய முடியாதுனு சொல்ல நினைக்கும் போது அவங்க பாட்டி வாங்கி வந்ததை சிலாகித்துச் சொன்னார்


*போன் நெம்பர் வாங்கியதும் முதல் ஒரு வாரம் மெசேஜ் அனுப்ப நல்ல quote-களை ட்ராப்டில் வைத்துக் கொள்ளவும்.


*என் நண்பர் காந்தி போன் நெம்பரை எழுதி சின்னக்கவுண்டர் விஜயகாந்த் மாதிரி இலைக்கு அடியில் வச்சிட்டு வந்துட்டார். அப்புறம் அந்த பெண் கண்டுபிடித்து எடுத்து போன் செய்து பேசியிருக்கார்.


*மாமியாரை அம்மா போல் பார்த்துக்குவாங்க, நகை புடவை மீதெல்லாம் சின்னவயசிலிருந்து ஆசை இல்ல-னு சொல்வதையெல்லாம் இந்த காதில வாங்கி அந்த காதில அங்கியே விட்டிடுங்க.

*உங்க EMI, மாத வருமானம், கடன் பத்தியெல்லாம் முன்பே உண்மையா சொல்லிடுங்க.


பெண் பார்க்க வருவதே ஒரு தவறான அணுகுமுறை தான். அதனை பெண்ணின் இடத்தில் இருந்து பார்க்கும் போது அந்த உளவியல் காரணம் புரியும். ஜவுளிக்கடை பொம்மை போல ஒரு பெண்ணை பார்ப்பது எவ்வளவு சங்கடமானது என்பது தெரியும்.


இருப்பினும் இவை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. இன்னும் மாற வேண்டும். பெண் பார்ப்பதையே பொழுது போக்காய் எண்ணிக் கொண்டிருப்போர் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் அவர்களை ஒரு கட்டத்துக்குப் பின் பெண்கள் ஒதுக்க ஆரம்பிக்கின்றனர்.


25 வயதில் சலித்து தேடி பின் 35 வயதில் தேடி சலித்துவிடுகின்றனர். எல்லோருக்கும் காதல் திருமணம் அமைவதில்லை. பெற்றோரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து அரேஞ்சு மேரேஜ் செய்கின்றனர் பலர். இதில் மெயின் வில்லனாய் ஜாதகம் தான் இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நட்சத்திரம், குறிப்பிட்ட ராசியில் தான் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை தருகிறது.


மாறாக குடும்பம், குணநலனுக்கு முக்கியத்துவம் தந்தால் இன்னும் நம்பகத்தன்மை ஏற்படும். அளவாய் ஓரிருவர் மட்டும் சென்று பொது இடத்தில் பார்த்துவிட்டு வந்து பிடித்தால் மட்டும் வீட்டிற்கு செல்லலாம். பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் முன் ஏற்படும் அவமானம் ஒரு பெண்ணுக்கு பெரிது. ஆகவே நன்கு யோசித்து இருவரும் பிடித்திருந்தால் மட்டும் உறுதி செய்ய பெண் பார்க்கச் செல்லலாம்.


Marriage is a Necessary Risk. திருமணம் என்பது தேவையான ஆபத்து என்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை சரியாக தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் நூறு சதவீத வெற்றி அமைந்துள்ளது.


-மணிகண்டபிரபு

Thursday 26 August 2021

பலாவின் சுளை

பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை

பலாவின் காம்பைச் சுத்தி முதல் வரிசையில் இருக்கிற சிறுசிறு முள்ளுங்களை எண்ணி, ஆறால பெருக்கி, அஞ்சால வகுத்தா சுளையோட எண்ணிக்கை தெரியுமாம்.

உதாரணமாக 60சிறுமுள் என்றால் 60*6=360/5=72 சுளைகள்

#அடுத்த முறை ட்ரை பன்னிப்பார்க்கனும்

படித்தது

மெளனம் என்பது செல்வம்.நம் மனம் சத்தத்தில் பழகிவிட்டதால் நமக்கு மெளனத்தின் இன்பம் தெரிவதில்லை.

செயல் ஆழமாகும்போது மெளனமாகிவிடுகிறது.
மெளனமே அறிவாகும்.அறிவும் செயலும் கலந்தால் எழும் மெளனம் படைப்பின் கருவூலம்.
சரியான சிந்தனை சட்டென்று உதுத்து, தீர்வு கிடைத்துவிடும்

-படித்தது

Tuesday 24 August 2021

முருகேஷ்

துடைப்பம்,
பால் பாக்கெட்,
கரண்டி,
காய்கறி,
அழுக்குத் துணி
சோப்பு என 
ஏதேனுமொன்று
அக்காவின் கைகளில்
எப்போதும் தென்படும்

வீட்டுக்கு ஒதுங்கும்
'அந்த'நாட்களில் மட்டும்
அபூர்வமாய் பார்க்க முடிகிறது
அக்காவின் கையில்
புத்தகமொன்றை

-மு.முருகேஷ்

அப்துல்ரகுமான்

எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பதன் மூலம் தான் ஒருவன் உண்மையை அறிய முடியும்.

உண்மையை நாமே கண்டறிந்தால் தான் அதில் உறுதியாய் நிற்க முடியும்

-அப்துல்ரகுமான்

Monday 23 August 2021

மஸ்தான்

சூஃபிகள் மதுவை ஞானத்தின் குறியீடாக பயன்படுத்தினர்.
அவர்கள் ஞானம் பெற்றதால் உண்டாகும் பரவச நிலையை 'மதுபோதை'(மஸ்த்) என்று அழைக்கின்றனர்

அதனால் ஞானம் பெற்றவர்களை மஸ்தான் (போதை ஏறியவர்)என அழைக்கின்றனர்

குணங்குடி மஸ்தான் என்ற பெயரில் உள்ள மஸ்தான் இந்தப் பொருளில் அமைந்ததுதான்

#info

அண்ணா

Now a days modern youth have become almost carbon copies of western culture;yes carbon copies of western culture with more mistakes

இன்றைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தின் நகல்களாகிவிட்டனர்.ஆனால் அதிக பிழைகளுடன் கூடிய நகல்கள்

1960களில் அண்ணாமலை பல்கலையில் அண்ணா பேசியது

Sunday 22 August 2021

படித்தது

எல்லாம் மிகமிக எளிமை
அத்தனை எளிமை
புரியாத அளவுக்கு
எல்லாம் அருகில்
மிகமிக அருகில்
அத்தனை அருகில்
கண் பார்க்க முடியாத
அத்தனை அருகில்..

-படித்தது

Saturday 21 August 2021

சென்னை தினம்*மணி



உன் வாழ்வின் சிறந்த நாள்களை நினைவுகூர்வாயானால் நிச்சயம் அது நீ பயணம் செய்த நாள்களாகத்தான் இருக்கும்."
-பராரிகள்

90களில் மெட்ராஸில் உறவினர்கள் இருப்பதை பெருமையாய் நினைத்துக் கொண்ட காலம்.
மெட்ராஸெல்லாம் நாங்க போனதேயில்ல செந்திலுனு ஆட்டோகிராப் மல்லிகா மாதிரி வெள்ளந்தியாய் பேசியது நினைவிருக்கிறது.அப்போது
டூர் பஸ்ஸில் சென்னை சுற்றுலா செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தனர்.4 நாள் டூர் சென்னைக்கு மட்டும் 350ரூபாய் கட்டணம்.மற்ற ஊர்களுக்கு டூர் செல்வதை காட்டிலும் சென்னை என்றால் விரைவில் சீட் ஃபுல்லாகிடும்.அங்க எல்லா நடிகர்களும் தெருவில் சாதாரணமாய் நடந்து கொண்ருப்பார்கள் என நம்பிக் கொண்டிருந்த காலம்.டூர் போவதற்கு ஒரு மாசம் முன்பிருந்தே நாங்க மெட்ராஸ் போறோம்,மெட்ராஸ் போறோம்னு சொல்லிக்கிட்டு இருப்பேன்

#டூரிஸ்ட் பஸ்களின் பொற்காலம்

வீடியோ கோச் பஸ்ஸில் படம் பார்த்த முதல் தலைமுறை உருவானது அப்போதுதான்.முதல் படமாய் சாமி படம் பார்ப்பது தான் ஐதீகம்.அப்படித்தான் சரஸ்வதி சபதம் படம்,திருவிளையாடல் என சாமி படமாய் போடுவாங்க.சின்னத்தம்பி, பாண்டி நாட்டு தங்கம், செந்தூரப்பூவே என மாஸ் ஹிட்டடித்த படங்கள் அன்றைய டூர் முழுவதும் பார்த்த படங்கள்

அதிகாலை மேல்மருத்துவத்தூரில் குளித்துவிட்டு சென்னைக்கு நுழைந்தோம்.இன்று வரை பயணிகள் பலரின் செட்யூல் இப்படித்தான் துவங்குகிறது. மீனம்பாக்கத்தில் நுழையும் போது அனைவரும் ஜன்னல் சீட்டுக்கு வந்துவிட்டோம்.ஆகாயத்தில் டாடா காட்டிய விமானம் அருகாமையில். இதான் ஏரோப்ளான் எல்லாரும் பார்த்துக்கோங்கனு ஒரு பெருசு அறிமுகப்படுத்தும்.

திரைப்படங்கள் மெட்ராஸ் குறித்து ஏற்படுத்திய பிம்பமும், அதிகம் பார்க்காமல் தனக்குத் தானே உருவகப்படுத்திக் கொண்ட எண்ணமும் சென்னையின் ஒவ்வொன்றையும் பிரம்மிப்பாகவே தெரிந்தன

#மெரினா முதல் மகாபலிபுரம் வரை

மெரினாவை முதன் முதலில் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு. உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை எத்தனை படங்களில் பார்த்தது.இன்று நனவானதில் அப்படி ஒரு சந்தோசம்.எம்.ஜி.ஆர் சமாதியில் எல்லாரும் காது வைத்து எம் ஜி ஆரின் கடிகார சத்தம் கேட்பதில் ஒரு அலாதி இன்பம். ஒருத்தர் கேட்டுச்சுனு சொன்னா எல்லாரும் ஆமா ஆமானு சொன்னாங்க.மழை வந்தால் அணையாதீபம் எப்படி அணையாம இருக்கும்னு பேசிக்கிட்டோம்.

அப்போது அண்ணா சமாதி பராமரிப்பின்றி இருந்தது.அப்படியே பீச்சில் விளையாடிவிட்டு வள்ளுவர் கோட்டத்துக்கு போனோம்.அப்பதான் பிஸ்லரி வாட்டர் அறிமுகமான சமயம். தண்ணி இல்லாத கேன் ஒரு ரூபாய்க்கு விற்பாங்க.எல்லாரும் ஐந்தாறு வாங்கிக் கொண்டோம்

கோல்டன் பீச்சுக்கு போன போது எதாவது படத்தின் சூட்டிங் நடக்குமென்று ஆசையாய் போனதில் ஏமாற்றம்.பல படங்களில பார்த்த ரயிலில் ஏறி போனது அலாதி இன்பம்.அப்பிடியே அடையாறு ஆலமரத்துக்கு சென்று ஆயிரமாண்டு பழைமையான மரத்தை பயபக்தியுடன் வணங்கியது நினைவில் இருக்கிறது.

அஷ்ட லட்சுமி கோவில், மகாபலிபுரம், வட பழனி,தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், அன்னை இல்லத்தை வெளியிலிருந்து பார்த்தது என அத்தனை நினைவுகளும் பசுமையாய் இருக்கின்றன.மே மாத பாடலை ஊர் முழுக்க பாடிக்காட்டினேன்.

இப்போது பல முறை சென்னை சென்றாலும் அன்று முதல் முறை சென்னையைப் பார்த்ததில் அப்படி ஒரு அலாதி இன்பம்.ஊரும் வளராமல் நாமும் வளராமல் மகிழ்ச்சி மட்டும் ஆலமரமாய் மனதில் நின்ற தருணம்.

உன் வாழ்வின் சிறந்த நாள்களை நினைவு கூர்வாயானால் 
நிச்சயம் 
அது நீ பயணம் செய்த நாள்களாகத்தான் இருக்கும்.

-மணிகண்டபிரபு

Friday 20 August 2021

பாலோ கொயலோ

மரத்தால் செய்யப்பட்டிருந்த அந்தக்கப்பலின்,எந்தப் பகுதி பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்த வில்லாளன் குறி பார்த்து அம்பு எய்தினான். கப்பலுடன், ஆக்கிரமிப்பாளர்களும்
கடலில் மூழ்கினர்.

எதிராளியின் பலவீனத்தை அறிந்து வைத்துக்கொள்வது ஆபத்தின்போது உதவும்

-பாலோ கொயலோ

உங்கள் மதிப்பை எப்போதும் உணர்ந்திருங்கள் ".

ஒரு தந்தை தனது மகளை நோக்கி “நீ சிறந்த மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பை முடித்திருக்கிறாய், இதோ நான் பல வருடங்களுக்கு முன் உனக்காக வாங்கிய கார்." இது இப்போது மிகவும் பழையது.அதை செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையகத்துக்கு எடுத்துச் சென்று, நான் அதை விற்க விரும்புகிறேன் என்று சொல், அதற்கு அவர்கள் உங்களுக்கு எவ்வளவு வழங்குகிறார்கள் என்று கேட்டு வா என்றார்.

மகள் பயன்படுத்திய கார் இடத்திற்குச் சென்று, தனது தந்தையிடம் திரும்பி வந்து "இது மிகவும் பழைய வாகனமாக இருப்பதால், அவர்கள் எனக்கு $ 1,000 வழங்குவதாக சொல்கிறார்கள் என்றார்."

தந்தை, இப்போது “அடகு கடைக்கு எடுத்துச் சென்று நான் அதை விற்க விரும்புகிறேன் என்று சொல், அதற்காக அவர்கள் உங்களுக்கு எவ்வளவு வழங்குகிறார்கள் என்று கேட்டு வா என்றார்." மகள் அடகு கடைக்குச் சென்று, தன் தந்தையிடம் திரும்பி வந்து, "இது மிகவும் பழைய வாகனமாக இருப்பதால், அவர்கள் எனக்கு $ 100 வழங்குவதாக சொல்கிறார்கள் என்றார்."

தந்தை தனது மகளை இப்போது ஒரு கார் கிளப்புக்குச் சென்று "நான் அதை விற்க விரும்புகிறேன் என்று சொல், அதற்காக அவர்கள் உங்களுக்கு எவ்வளவு வழங்குகிறார்கள் என்று கேட்டு வா என்றார்." மகள் கார் கிளப்புக்குச் சென்று, தன் தந்தையிடம் திரும்பி வந்து, "இது ஒரு நிசான் ஸ்கைலைன் ஆர் 34, இது ஒரு நினைவுச் சின்னமான கார் மற்றும் பலரால் கேட்கப்பட்டது, அதனால் அவர்கள் எனக்கு $100,000 வழங்குவதாக சொல்கிறார்கள் என்றார்."

இப்போது தந்தை தனது மகளிடம், “சரியான இடம் உங்களை சரியான வழியில் மதிக்கிறது” என்று சொன்னார். நீ ஒரு இடத்தில் மதிக்கப்படவில்லை என்றால், கோபப்பட வேண்டாம். நீ தவறான இடத்தில் இருக்கிறாய் என்று அர்த்தம். உங்கள் மதிப்பை அறிந்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்...... உங்கள் மதிப்பை யாரும் பார்க்காத இடத்தில் ஒருபோதும் இருக்க வேண்டாம்.

"உங்கள் மதிப்பை எப்போதும் உணர்ந்திருங்கள் ".

-படித்தது

Wednesday 18 August 2021

Deddy Bear

Deddy Bear

தியோடர் ரூஸ்வெல்ட் பெரிய வேட்டைக்காரர். நவம்பர் 14, 1902ல் மிசிசிப்பி அருகே ஒரு கரடி வேட்டைக்குப் பயணம் போனார்.
மிசிசிப்பி ஆளுநர் ஆண்ட்ரூ ஒரு உள்ளூர் வேட்டைக்குழுவை ஏற்பாடு செய்திருந்தார்.

காட்டில் அனைவரும் சிறு குழுக்களாக பிரிந்து சென்று வேட்டையாடினார்கள். மற்ற வேட்டைக்காரர்களுக்கு கரடிகள் சிக்கின. தியோடரை ஒரு கரடியும் கண்டுகொள்ள வில்லை.
இந்த துயரத்தை ரூஸ்வெல்ட்டின் உதவியாளர்களால் தாங்க முடியவில்லை. ஒரு யோசனை பண்ணி, உதவியாளர் ஹோல்ட் கோலியர் ஒரு இளம்கரடியைப் பிடித்து வந்தார்.

ஒரு வில்லோ மரத்தில் கரடிகுட்டி கட்டப்பட்டது. செட்டப்பாக சுற்றிலும் இலைதழைகள் பரப்பப்பட்டன. 'சரித்திரத்தை' பதிவு செய்ய புகைப்படக்காரர்கள் தயாரானார்கள்.
பக்கத்துக் காட்டில் கரடியை தேடி சுற்றி திரிந்துகொண்டிருந்த ரூஸ்வெல்ட்டை அழைத்து வந்தார்கள்.
மரத்தில் கட்டி வைத்திருந்த கரடியை சுடுமாறு அதிபருக்கு "பரிந்துரைக்கப்பட்டது".

ஆனால் "ரூஸ்வெல்ட்" குட்டியை சுட மறுத்துவிட்டார்.
இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் செய்தித்தாள்கள் மூலம் காட்டுதீயாக பரவியது. ஒரு கரடியை சுட மறுத்த ஜனாதிபதியின் கதையை கட்டுரைகள் விவரித்தன.
இரண்டு நாள் கழித்து நவம்பர் 16, 1902ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கீழேயுள்ள கார்ட்டூனைப் போட்டு அதிபரை "கவுரவித்தது".

ப்ரூக்ளின் நகரின் சாக்லேட் கடை உரிமையாளர் மோரிஸ் மிச்சோம் இந்த கார்ட்டூனைப் பார்த்தார். அவரது மனைவி ரோஸ் அடைக்கப்பட்ட பொம்மை (stuffed toys) விலங்குகளை உருவாக்கும் கலை பயின்றவர்.
தம்பதியினர் ஒரு அடைத்த பொம்மை கரடியை உருவாக்கி, கரடியை சுட மறுத்த தங்கள் அன்பு ஜனாதிபதிக்கு அர்ப்பணித்தனர்.
அன்றுமுதல் அது 'டெடி'ஸ் பியர்' என்று அதிரடி புகழ் பெற்றது.

பெவிகால் போன்ற ஒட்டும் திரவங்கள் அதனுடைய டப்பாக்களில் ஒட்டாமல் வருவது எப்படி?



பெவிகால் என்பது நீர் மற்றும் பாலிமர்(Polymer) கலந்த ஒரு வெண்மை நிற கலவையாகும். பொதுவாகவே இந்த பாலிமரானது பிசுபிசுப்பு மற்றும் விரியக்கூடியத் தன்மை உடையவையாகும். டப்பாவில் இருக்கும் பொது நீரானது கரைப்பானாக செயல்பட்டு இந்த பாலிமரை திரவ நிலையில் வைத்திருக்கும்.

நீங்கள் ஒரு மரத் துண்டுகளை இணைக்க இந்த பெபிகாலை இடுகிறீர்கள். அதில் உள்ள நீர் காற்றில் பட்டதும் ஆவியாகி பெவிகால் திடமாக மாறி இரு பொருளையும் இணைத்து விடுகிறது. ஆனால் டப்பாவில் இருக்கும் போது காற்று இல்லாத காரணத்தால் அது திடமாக மாற வாய்பில்லை ஆக டப்பாவில் ஒட்டுவதில்லை.

-படித்தது

Tuesday 17 August 2021

ஒஷோ

உண்மையான வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது.வெறும் வார்த்தைகளால் அல்ல

-ஒஷோ

Sunday 15 August 2021

உருது கவிதை

இதயம்
விலை மதிப்பற்றதாக இருந்தது
இப்போதோ அதற்கு
ஒரு விலையும் இல்லை
வாங்கிய ஒருத்தி
திருப்பிக் கொடுத்துவிட்டு
போய்விட்டாள்!

-உருது கவிதை

நெரூடா

பேசாமல் இருப்பது
மனிதர்களுக்கு மரணமாகும்
மொழி ரோமம் வரை விரிகிறது

உதடு அசையாமலே
வாய் பேசுகிறது
திடீரென்று கண்கள்
சொற்களாகிவிடுகின்றன

நான் பேசுகிறேன் அதனால் இருக்கின்றேன்
பேசாமல் இருப்பதன்மூலம்
சொற்களின் எல்லையை
எட்டிப்பிடிக்கிறேன்

-நெரூடா

தாவோ

நீரைவிட பலவீனமானது
வேறொன்றுமில்லை
ஆனால்
வன்மையை வெற்றி கொள்வதில்
அதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை

-தாவோ

Saturday 14 August 2021

வெ.சாமிநாதசர்மா

ஆயிரம் பேரில் ஒருவன் தான் நன்றாகப் பேச முடியும்.நன்றாக
பேச முடிந்த ஆயிரம்பேரில் ஒருவர்தான் நன்றாக சிந்திக்க முடியும்.அப்படி சிந்திக்கின்றவர்களில் ஒருவர் தான் இலட்சியத்தை நோக்கி செல்லமுடியும்.அவர்களிலும் முதல் அடி வைக்கும் துணிவு யாருக்கு இருக்கிறதோ அவரே மகானென்று உலகம் அழைக்கிறது

-வெ.சாமிநாதசர்மா

Friday 13 August 2021

Cobra Effect

Cobra effect

இந்தியாவில் பிரிட்டிஷார் ஆண்டபோது, தில்லியில், விஷத்தன்மை உள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது .

இதனால் கவலையுற்ற அரசு பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில், பொதுமக்களிடம் " கொல்லப்படும் நாகப்பாம்புகளுக்கு,எண்ணிக்கை அடிப்படையில் தக்க சன்மானம்,வெகுமதி வழங்குவதாக அறிவித்தது.

இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.மக்களும் இறந்த பாம்புகளை காட்டி,சன்மானத்தை பெற்றுக்கொண்டே இருந்தனர்.
காலப்போக்கில்,சிலர் சன்மானம் பெறுவதற்காகவே பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதனை அறிந்த ஆங்கிலேய அரசு,இந்த வெகுமதி திட்டத்தை நிறுத்தியது.வெகுமதி கிடைக்காத விரக்தியில் பாம்பை வளத்தவர்களே,அவைகளை தப்பிக்க விட்டனர்.

இதனால்,முன்பு இருந்த எண்ணிக்கையை விட பல மடங்கு பாம்புகளின் எண்ணிக்கை உயர்ந்தது.முன்பு இருந்த நிலைமையை விட , இந்த திட்டத்தால், நிலைமை இன்னும் மோசமாகியது.

இதை தான் ,நாகபாம்பு விளைவு (Cobra Effect ) என அழைக்க படுகிறது.
ஒரு பிரச்சனைக்கான தீர்வு, அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக, அதனை மேலும் தீவிரப்படுத்துவதே , Cobra Effect .

-படித்தது

90ஸ் கிட்ஸ் இந்த வண்டிகளை மறக்கவே மாட்டாங்க! - விண்டேஜ் மெமரீஸ்


என் முதல் பைக்கை வாங்கிய போதுதான் உலகின் எல்லாச் சாலைகளும் எனக்கும் சொந்தம் என்பதை உணர்ந்தேன்!
-மகுடேசுவரன்

90-களில் டயர் வண்டியும், சைக்கிளும் ஓட்டிக் கொண்டிருந்த வாண்டுகளுக்கு பைக் என்றாலே கொள்ளைப் பிரியம். உறவினர் வைத்திருக்கும் பைக்குகளில் ஹாரன் அடிப்பது, தொட்டுப் பார்ப்பது, துடைத்துப் பார்ப்பது என அலாதிப் பிரியம் வாகனங்களின் மீது. ஆதார் கார்ட் இல்லாத ஊழியனாய் குடும்பத்தில் ஒருவனாய் வாகனங்களைப் பார்த்த காலகட்டம்.

இன்று வாகனம் ஓட்டும் அனைவரிடமும் ஏதேனும் ஒரு நாள் தான் கண்ட கனவின் பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது.


90-களில் வளர்ந்தவர்கள் சைலன்சரில் வரும் பெட்ரோல், டீசல் புகையை முகர்ந்து பார்ப்பது, சென்டர் ஸ்டாண்ட் போட்டு முன் சக்கரத்தை முடிந்த மட்டும் சுற்றிச்சென்று ஓடி வேக முள்ளைப் பார்ப்பது, ஒவ்வொருவரும் வண்டியில் எப்படி உட்கார்ந்து ஓட்டுவார்கள் என இமிட்டேட் செய்வது.. என அன்றைய நாள் வாகனம் குறித்த கனவு அலாதிப் பிரியம். அசோகமித்திரனின் கதையில் சொன்னதைப் போல இரும்புக் குதிரையை அடக்கிய கர்வமும், பெருமையும் சூழ முறைத்தபடியே வாகனம் ஓட்டுவது வழக்கமாகிவிட்டது ஆண்களுக்கு.

அந்த ப்ளாஸ்பேக்கை அப்பிடியே திரும்பிப்பார்த்தால்..


Motor with pedal என்பதுதான் Moped என்று அன்று அறிந்த பொது அறிவை பெருமை பொங்க வகுப்பறையில் சொன்ன காலம். நாலாவது சாரின் டி.வி எஸ் வெளிர் சிவப்பு போல இருக்கும். ஆனால் அஞ்சாப்பு சாரின் வண்டியோ பச்சை கலரில் வித் பாக்ஸ் சைடில் இருக்கும். அதை துடைப்பதற்கு தான் அலாதிப்பிரியம்.

"ஒரு அம்பாசிடர் காரில் குழந்தையை கடத்திக் கொண்டு போவாங்க.. செய்வதறியாது திகைத்து நிற்கும் போது ஒருவர் TVS-50ல் வருவார். இருவரும் விரைந்து வண்டியில் சென்று மடக்கி.. குழந்தையை மீட்பர்.

நம்ம ஊரு வண்டி TVS-50என விளம்பரத்தை பார்த்து பார்த்து வண்டி வாங்காமலே டி வி.எஸ்ஸை லவ் பன்னினது காதல் கோட்டைக்கு முந்தைய வெர்சன்.


லூனாவின் அடுத்த வெர்சன் தான் TVS-50. எந்தப் பொருளையும் எடுத்துச்செல்ல இடைவெளி விட்டு இருந்தது தவமின்றி கிடைத்த வரமாய் அமைந்தது பலருக்கு.குறிப்பாய் சிலிண்டர், தண்ணீர் குடம் தூக்கிச்செல்வது நடுத்தரமக்களுக்கு உபயோகமாய் இருந்தது.இண்டிகேட்டர் எல்லாம் இருக்காது..கை நீட்டியே சிக்னல் செய்வார்.கருப்பு கலரில் மூன்று ஸ்விட்ச் இருக்கும்.இரண்டு லைட்டுக்கும்,ஒன்று ஹாரனுக்கும், வண்டி ஆஃப் செய்ய சதுரமாய் ஓரத்தில் ஒட்டி இருக்கும்.அந்த ஸ்விட்சை அழுத்தித்தான் விளையாடுவோம்.இதற்கு அடுத்த மாடலாய் TVS Champ வந்தது. சீட்டின் அடியே வளைந்து இருப்பது ஒரு மாடர்ன் லுக் தந்தது.


#சுசுகி சாமுராய் நோ ப்ராப்ளம்


1984ல் சுசுகி நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து மோட்டார் சைக்கிளை தயாரித்தது.பின் 1987ல் டி.வி எஸ் உடன் இணைந்து தயாரித்து புகழின் உச்சிக்குச் சென்றனர்.அடுத்து supra,supra ss,shogun, samurai,shaolin ஆகியவை. இதில் சாமுராய் பைக் விளம்பரத்தில் ஜப்பானியர் நோ ப்ராளம் னு சொன்னது அன்றைக்கு வைரலாய் பரவியது.

இளைஞர்களிடம் அதிகம் வரவேற்பு கிடைத்தது. மே மாதம் படத்தில் ஹீரோயின் ஒரு பாடலில் ஓட்டிவருவது பெரிதாய் பேசினாங்க.

Suzuki RX100- ஸ்டார்ட் செய்தாலே குதிரையின் கனைப்புடன் சீறிப்பாயும் சுசுகி பலரின் கனவு பைக்காக அப்போது விளங்கியது. நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் குடும்பத்தின் ஸ்டேட்டஸ் ஐகானாக இருந்தது.


#ஸ்கூட்டர்

முதன்முதலில் எங்கள் ட்யூசன் வாத்தியார் தான் நீலக்கலர் ஸ்கூட்டர் வச்சிருந்தார். எப்படி, கிராமத்தில் சாமியாடி வரும் கருப்பசாமி முன்னால போக பயப்படுவோமோ அப்படி அவர் வண்டியை நிறுத்த வரும் போது எதிரில் வந்தால் அவ்வளவுதான். ஒன் சைட் என்ஜின் இருப்பதால் ஸ்டார்ட் செய்யும் போது பாம்பு கடிச்சவனை படுக்க வைப்பது போல் மெல்ல படுக்க வைத்து தூக்கி உதைத்தால் ஸ்டார்ட் ஆகிடும். கல்லும் முள்ளும் டயருக்கு பஞ்சர் எனும் நிலையில் ஸ்டெப்னி வண்டியின் பின்னாலேயே மாட்டப்பட்டிருக்கும்.அன்றைய வரதட்சணையில் ஸ்கூட்டருக்குத்தான் முதல் உரிமை.


பஜாஜ் நிறுவனம் இதில் வெற்றிக்கொடி நாட்டியதால் யமஹா நிறுவனம் ஸ்கூட்டர் டைப் தயாரிக்காமல் பைக் மட்டும் அப்போது தயாரித்தது.

மலிவு விலையில் ஹாமாரா பஜாஜ் என்று அழைக்கப்பட்ட பஜாஜ் சேட்டக், பஜாஜ் சூப்பர் மற்றும் பஜாஜ் பிரியா போன்ற பல ஸ்கூட்டர்களை பஜாஜ் உருவாக்கியுள்ளது.இதில் சடாக் வண்டிபிரிமியம் கட்டி காத்திருந்தனர்.வீட்டிற்கு லெட்டர் வந்தால் பம்பர் பரிசு சீட்டு விழுந்த ஆனந்தம்.


#Yamaha RX100

Yamaha என்ற பேச்சினிலே உயிர் சக்தி பிறக்குது மூச்சினிலே. என்றுதான் சொல்லனும்.

இந்திய தெருக்களின் ராஜாவாக வலம் வந்தது. அந்த இஞ்சின் சத்தம் தான் இளைஞர்களின் ரீங்காரம். இன்னும் பலர் விற்காமல் பொக்கிசமாய் பாதுகாக்கின்றனர். மற்ற வாகனங்களை போல் அல்லாமல் யமஹாவின் கியர் முறை முன்னும் பின்னும் வித்தியாசமாய் அமைந்திருக்கும். எப்பிடியோ அழுத்தி அழுத்தி நியூட்ரல் கொண்டு வருவது பப்ளிக் எக்ஸாமில் பத்து மார்க் கணக்கு போடுவது மாதிரி. அதிலே மனைவியை உட்கார வைத்துக் கொண்டு செல்வது காதலியையும் மனைவியையும் ஒரு சேரக் கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்வது போல் அலாதியானது.


இன்றும் இளைஞர்களின் விரும்பத்தகுந்த வாகனம் என்றால் ஹீரோ ஹோண்டாதான். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது கடல் அலைபோல் முன்சக்கரம் ஏறி இறங்குவது தனி அழகு. CD 100 வெற்றி அடைந்ததை தொடர்ந்தது CD 100SS என விற்பனையில் உயர்ந்த போது அடுத்து வந்த Splender, பட்டி தொட்டி எங்கும் புகழ் பரவியது. அதிலும் கருப்பு கலர் ஸ்பெலெண்டர் எடுத்தால் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்பது பெப்ஸி உங்கள் சாய்ஸ்க்கு அப்புறம் அநேக மக்களின் சாய்ஸ் அதுதான். காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் ஓட்டி வரும் ரெட் கலர் வைசர் அனைவரையும் எடுக்க தூண்டியது. தொடர்ந்து splender+, CD Dawn, passion என சக்சஸ் பார்முலா தொடர்ந்தது.


#ராஜ்தூத்


RD என்றும் அழைக்கப்படும் ராஜ்தூத்.

ஒருகாலத்தில் கார்காரர் வீடு என தனிச்சிறப்புடன் அழைப்பது போலத்தான் ராஜ்தூத்காரர் வீடு என அழைப்பதும். அந்த வண்டியை துடைக்கிற துணியாக மாட்டோமானு ஏங்கிய காலமெல்லாம் உண்டு.

Yezdi Roadking 250 என்றால் ராஜ்தூத் 350சிசி. யமாஹாவின் மூத்த குடும்ப வாரிசாக இருந்தாலும் அதிக எரிபொருள் நுகர்வு காரணமாக வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை எனக்கூறினர்.

இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனம் 1960 இல் ஜாவா மற்றும் எஸ்டி என்ற பிராண்ட் பெயரில் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது. Java ஹெட்லைட்டின் மீதுதான் சாவிபோடும் துவாரம் இருக்கும். கிக்கரும் அதுதான், கியர்போடுவதும் அதுதான்.இரண்டு சைலென்சர் இருக்கும்.புடுபுடுபுடுனு வரும் போது வீதியே வெறிக்க வெறிக்க பார்க்கும்.

மிகவும் பிரபலமான மாடல் எஸ்டி ரோடிங் மற்றும் ஜாவா அதன் செயலில் பந்தயத்திற்கு பெயர் பெற்றது


#கைனடிக் ஹோண்டா

மென்மையான ஆண்களுக்கு ஏற்றது என சொல்லப்பட்டது கைனடிக் ஹோண்டா. கியர் இல்லாத வகையில் புதுமையான முறையில் தயாரான வாகனங்கள் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு அருமருந்தாய் கிடைத்தது. வெஸ்பா, சுவேகா, ஹீரோ puch அறிமுகமாகி வெற்றி பெற்றவுடன் லூனா வந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. உதைக்காமல் எலக்ட்ரிக் ஸ்டார்டருடன் வந்ததுதான் கைனடிக் ஹோண்டாவின் ஸ்பெசல்.

அதன் பின் கல்லூரி மாணவிகள் sunny bike பிரபலமானது.எடை குறைவு, 60சிசி ஓட்டுவதற்கு எளிதானதாய் இருந்தது. ஹீரோ puch (Now you’ve got the Power) பல சிறுவர்களின் முதல் தேர்வாய் இருந்தது.ஜாமின்ட்ரி பாக்ஸ் பரிசளிப்பது போல் 3 வேரியண்ட்டுகளில் வந்த பைக்கினை பெற்றோர்கள் பரிசளித்தனர்.


#M80

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை போல் பைக்,ஸ்கூட்டரின் கலவையாய் பஜாஜ் நிறுவனத்தாரால் உருவாகி வெற்றி நடை போட்டதுதான் M80.

இன்றும் இருசக்கர வாகன லைசென்ஸ் எடுக்க இந்த வண்டியில் அமர்ந்து முதல் கியர் போட்டால் போதும். அதுவே எட்டு போட்டுட்டு வந்திடும் அளவுக்கு பயிற்சி பெற்றது.கிராமம் என்றால் வயல் வெளியுடன் நினைவுக்கு வருவது எம்80 தான்.தொடர்ந்து M80 மேஜர் 4S,92 சிசி, 4-ஸ்ட்ரோக் எஞ்சின் அறிமுகமானது. பால்காரர்களின் பாரம்பரிய வாகனமாகவே மாறியது.


#ராயல் என்பீல்டு

இன்றுவரை அதன் தனித்துவத்தை இழக்காதது இதுதான். கம்பீரம், ஸ்டைல் என வாகன ஓட்டிகளின் எவர்கிரீன் ப்ரைம்.. ராயல் என்பீல்டுதான். 1994 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் 500 சிசி ஸ்டாண்டர்டின் பதிப்பை அறிமுகப்படுத்தியது அதிக சிசி உள்ள பைக்கை உருவாக்கியது போலவே குறைவான 25சிசி கொண்ட Mofa பைக்கினையும் என்பீல்ட் நிறுவனம் உருவாக்கியது.

30சிசிக்கு கீழே இருந்ததால் ரிஜிஸ்ட்ரேசன் இல்லை என சொன்னார்கள்.


*பஜாஜ் செடக்கில் செடக் என்பது அந்தக்கால மஹாராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்

1576ல் ஹட்லிகாட்டி போரில் சேடக் மகாராணாவின் உயிரைக் காப்பாற்றினார்.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்கள் சாதாரண மக்களாக இருந்தாலும், இந்த வண்டியின் அற்புதம் எப்போதும் அதன் உரிமையாளரை மகாராணாவை போல் உணர வைத்தது.


*நவீன யுகத்தில் ஹைட்ராலிக் பிரேக்குகளை அறிமுகப்படுத்திய முதல் மோட்டார் சைக்கிள்களில் Hero Honda CBZ ஆகும்.


*மற்ற பைக்குகள் டீசல் போட்டால் ஓடாது.ஆனால் புல்லட்களில் சிறிய மாற்றம் செய்தால் டீசலில் ஓடும் பழைய மாடல்களில் கேஸ்ட்டைன் வடிவமைப்பில் உடல் இருந்ததால் மைலெஜ் குறைவு.தற்போது இன்டாலியம் மாற்றியதால் நல்ல மைலேஜ் கிடைக்கிறது.


*புல்லட்டில் மட்டும் நான்காவது கியரில் இருந்து நேரடியாய் நியூட்ரல் கொண்டு வரும் முறை இருந்தது. வலது பக்க சின்ன லிவரை அமிழ்த்தினால் போதுமானது


*இடது பக்கம் பிரேக், வலது பக்கம் கியர் முறை இருந்தது புல்லட்டில். இந்திய முறைப்படி மாற்றி அமைத்தனர்.அந்த கிக்கரை உதைக்கவே தனி கட்ஸ் இருக்கனும்.


சென்னையை சேர்ந்த எனது நண்பர் சிவ தினகரன் பழைய வாகனங்களின் காதலர். 90களில் வந்த வெஸ்பா பைக்கை மணப்பாறையில் வாங்கிக் கொண்டு சென்னை வரை ஓட்டிக்கொண்டே சென்றுள்ளார் என்பது ஆச்சர்யமளித்தது.அவர் சொல்லுவார்

ராஜ்தூத்- பண்ணையார்கள்,

லூனா-ஆசிரியர்களுக்கு

புல்லட்-போலீஸ்,மிலிட்டரி ஆபிசர்ஸ்

TVS-50-விவசாயிகள்

M80-கிராமத்து ராஜா

ஸ்கூட்டர் -குடும்பஸ்தர்கள்

யமஹாRX100- கல்லூரி மாணவர்

சன்னி-கல்லூரி மாணவிகள்

என 90களின் வாழ்வை பிரிக்கலாம்


நினைவுகளை அசைபோடுவதில்

அந்த காலம்.. வாகன ஓட்டிகளுக்கு என்றும் வசந்த காலமே


-மணிகண்டபிரபு

Sunday 8 August 2021

மெளலானா ரூமி

இவ்வுலகம் ஒரு மலை போன்றுள்ளது;நமது செயல்கள் ஒரு கூச்சலைப் போன்றுள்ளன.அந்தக் கூச்சலின் எதிரொலி நம்மிடமே திரும்புகிறது

-மெளலானா ரூமி

பர்த்ருஹரி

செல்வத்திலே வறுமை பயம்,
அறிவிலே அறியாமை பயம்,
அழகிலே வயோதிகம் பயம்,
புகழிலே புறங்கூறுகிறவர்களைப் பற்றின பயம்,
வெற்றியிலே பொறாமை என்கிற பயம்.
எவனொருவன் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறானோ அவனே பயப்படாதவன்

-பர்த்ருஹரி

ஜியாங் ரோங்

ஒரு ஓநாய் பகல் வெளிச்சத்தில் தனித்திருக்கும் ஒரு மான்மீது தன் தன் கவனத்தைக் குவிக்கும்.ஆனால் இரவு கவிழும் வரை எதுவும் செய்யாது.உறங்கும் போதும் தாக்காது.ஏனெனில் தூங்கும் போதும் உஷாராய் இருக்கும்

ஓநாய் இரவு முழுதும் அருகிலேயே காத்திருக்கும்.சூரிய உதயத்தின் போது,சிறுநீர்ப்பை முழுவதும் நிறைந்திருக்க மான் விழித்தெழும். அப்போது ஓநாய் பாயத் தயாராயிருக்கும்.ஒரு மானால் ஓடிக் கொண்டிருக்கும் போது சிறுநீர் கழிக்க முடியாது.ஆக,அதிகதூரம் ஓட முடியாமல் சிறுநீர் முட்டத் தொடங்கியதும் நின்றுவிடும்.

ஒரு மான் காற்றைப் போல எல்லா நேரமும் ஓட முடியாது.தனித்திருக்கும் ஒன்றை எப்போது வீழ்த்துவது என்பதை ஓநாய்கள் நன்கு அறியும்.

-ஜியாங் ரோங்

info

ஓரெழுத்துச் சொற்கள் அனைத்தும் நெடில் எழுத்துக்களே பொருள் தரும்.
குறில் எழுத்து பொருள் தருவதில்லை.

எ.கா ஆ,பூ,கா,ஈ

#info

Saturday 7 August 2021

றியாஸ் குரானா

ஒரு வாக்கியத்தை விவசாயம் செய்து, ஒரு தோட்டத்தை உருவாக்குங்கள். ஒரு தோட்டத்தை அழித்து ஒரு வாக்கியத்தைத் தேட வேண்டியதில்லை.

-றியாஸ் குரானா

மிலன் குந்த்ரே

அதிகாரத்துக்கு எதிராக மனிதன் போராடுவது என்பது..
மறதிக்கு எதிராக நினைவுகள் நடத்தும் போராட்டம்
-மிலன் குந்த்ரே

ஜியாங் ரோங்

யுத்தம் பொறுமைக் கோருகிறது.மனிதனாக இருந்தாலும் சரி,மிருகமாக இருந்தாலும் சரி,சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்தும்போது பொறுமைசாலிகளே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்

-ஜியாங் ரோங்

Tuesday 3 August 2021

வெற்றி

வெற்றி என்பது யாதெனில்.

முக்கியத்துவமின்றி நிராகரிக்கப்பட்ட இடத்தில்.....

வரும் காலங்களில்  நாம் சிறப்பு விருந்தினராகச் சென்றால் அது தான் நமக்கான வெற்றி....

காஃப்காவின் கதை

ஃபிரான்ஸ் காஃப்காவின் கதை ஒன்று இருக்கிறது. அது உண்மையானதா அல்லது பொய்யானதா என்று  தெரியாது.
ஆனால் மனதை என்றும் குளிர வைக்கும் கதை. 

ஃபிரான்ஸ் காஃப்கா தினமும் நடைபயிற்சி செல்லும் பூங்காவில் ஒரு சிறுமியை சந்தித்தார். அப்போது அவள் அழுது கொண்டிருந்தாள். காரணம் அவள் தனது பொம்மையை தொலைத்து விட்டு கலங்கி போய் மகிழ்ச்சியை இழந்திருந்தாள். 

காஃப்கா அவளது பொம்மையைத் தேடி உதவி செய்ய முன்வந்தார். "மறுநாள் இதே இடத்திற்கு வா சந்திக்கலாம் உனது பொம்மை கிடைக்கும்" என்று அவளுக்கு உறுதிமொழி தந்து அனுப்பினார். ஆனால் அவரால் 
பொம்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரே அந்த பொம்மை எழுதியது போல ஒரு கடிதத்தை எழுதினார். அடுத்தநாள் அந்தச் சிறுமியை சந்தித்தபோது அதை அவளிடம் படித்துக் காட்டினார் 

'தயவுசெய்து எனக்காக வருத்தப்பட வேண்டாம், நான் உலகைப்  சுற்றிப் பார்க்க ஒரு நீண்ட பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். எனது சாகசங்களை நான் உனக்கு தொடர்ந்து எழுதுவேன். அது பல கடிதங்களின் தொடக்கமாக இருக்கலாம் . இப்படி அவர் கவனமாக எழுதிய கடிதத்திலிருந்து பொம்மையின் கற்பனை சாகசங்களைப் படித்தார். இதனால் சிறுமியும் சற்று ஆறுதல் அடைந்தாள்.

பின்பு கொஞ்ச நேரம் கழித்து காஃப்கா அவளுக்கு ஒரு பொம்மையை தந்தார். அது அவளுடைய அசல் பொம்மையிலிருந்து வித்தியாசமாகத் தெரிந்தது. அந்த பொம்மையின் உடன் இணைக்கப்பட்டிருந்த இன்னொரு கடிதத்தில் "எனது பயணங்கள் என்னை இப்படி மாற்றிவிட்டன"  என்று எழுதப்பட்டிருந்தது. 

பல வருடங்கள் கழித்து அந்த பெண் வளர்ந்து விட்டாள். அந்த பெண் இப்போதெல்லாம் அந்த பொம்மை கவனிப்பதில்லை. ஒருநாள் எதேச்சையாக மீண்டும் அந்த பொம்மையில் கவனிக்கப்படாத பிளவுக்குள் ஒரு கடிதம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள் 

சுருக்கமாக அதிலிருந்து வரிகள்

இந்த உலகில் நீ நேசிக்கும் அனைத்தையும் ஒருநாள் நீ இழப்பாய். ஆனால் நீ இழந்த அனைத்து விஷயங்கள் கண்டிப்பாக வேறு வடிவத்தில் மீண்டும் உனக்கு கிடைக்கும்.

விக்டர் ஹியூகோ

நாற்பது வயது என்பது இளைஞர்களின் முதுமை; ஐம்பது வயது என்பது முதியவர்களின் இளமை

-விக்டர் ஹியூகோ

ஜானி டெப்

Black Mass திரைப்பட புகழ் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் வருகையின் போது

எல்லோரது கையிலும் கைபேசி.ஒரே ஒரு பாட்டி மட்டும் என்ன நடக்கிறது என்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.2015ம் ஆண்டு இந்த புகைப்படம் வைரலாகி
'நிகழும் கணத்தில் முழுமையாய் வாழ்பவர்' என அட்டைப்படத்தில் வந்தது.

Monday 2 August 2021

வரலாறு

வரலாறு யாரால், யாருக்காக, எவ்வாறு எழுதப்படுகிறது என்ற கேள்வி முதன்மையானது. பெரும்பான்மையான இந்திய வரலாற்று நூல்கள், வெளிநாட்டவரால் எழுதப்பட்டவை. அதுவும் நம்மை ஆட்சிசெய்த ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டவை. அவற்றில் பெரும்பாலும் உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
வரலாறு என்பதை நாம், மன்னர்களின் வெற்றிச் சரித்திரமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறான எண்ணம்.

 மக்களின் வாழ்க்கையும், பண்பாட்டு மாற்றங்களும், பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்ததுதான் முழுமையான வரலாறு. நிலப்பரப்பளவில் ஒப்பிட, இந்தியா சிறிய தேசமாக இருக்கலாம். ஆனால் பண்பாட்டில் உலகுக்கே வழிகாட்டும் நாடு என்பேன்.
இந்திய வரலாற்றை நாம் பாடப்புத்தகங்களின் வழியேதான் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். அதுவும் பள்ளி வயதோடு முடிந்துபோகிறது. கலைக் கல்லூரியில் வரலாறு படிப்பவர்கள், கூடுதலாக அறிந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு, பொது நூல்களில் இருந்தும், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், ஊடகச் செய்திகளிலிருந்துமே வரலாறு அறிமுகமாகிறது. நாம் அறிந்துவைத்துள்ள வரலாற்றில் எழுபது சதவிகிதம் பொய்யே.
யாரோ ஒருவரின் கற்பனை உருவாக்கிய கதைகளே, இன்று `வரலாறு’ என நம்பவைக்கப்படுகிறது.

 அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப வரலாற்றை மாற்ற முனைகிறார்கள். பொய்களை உண்மையாக்க முனைகிறார்கள். ஆனால், வரலாற்று உண்மைகளை எவரும் புதைத்துவிட முடியாது என்பதே காலம் காட்டும் உண்மை.
அரசின் முக்கிய உத்தரவுகளை, கொடைகளை, செய்திகளைக் கல்வெட்டுகளாக அச்சிட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது, அசோகன் காலத்தில் தொடங்கி இன்று வரை தொடர்ந்துவருகிறது.

 மொகலாயர்கள் காலத்திலிருந்தே முறையான ஆவணப்படுத்துதல் தொடங்கியிருக்கிறது. சோழ மன்னர்கள் தங்கள் அரசாட்சியின்போது நடந்த முக்கிய விஷயங்களை, தானங்களை, நிர்வாக முறைகளைக் கல்வெட்டாக்கி வைத்திருக்கிறார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமான மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகியவை முறையாக ஆய்வுசெய்யப்பட்டுள்ளபோதும் அங்கு என்ன மொழி பேசப்பட்டது, எந்த இனத்தவர் வாழ்ந்தார்கள் என்பது இன்றும் தீர்மானிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

இந்திய வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா, இர்ஃபான் ஹபீப், மஜும்தார், ராய் சௌத்ரி, ஏ.எல்.பஷாம், ஆர்.எஸ்.சர்மா, ராபர்ட் சீவல், ரொமிலா தாப்பர், சதீஷ் சந்திரா, ராமச்சந்திர குஹா ஆகியோரின் நூல்களை வாசிக்கலாம். குறிப்பாக,

1) டி.டி.கோசாம்பி எழுதிய `இந்திய வரலாறு’,

2) ஏ.எல்.பஷாம் எழுதிய `வியத்தகு இந்தியா’,

3) ரொமிலா தாப்பர் எழுதிய `முற்கால இந்தியா’,

4) ராமச்சந்திர குஹா எழுதிய `காந்திக்குப் பிறகு’,

5) வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய `கடைசி மொகலாயன்’,

6) `பேரரசன் அசோகன்’ - சார்லஸ் ஆலென்,

7) `ஏழு நதிகளின் நாடு’ - சஞ்சீவ் சன்யால்,

8) `மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்’,

9) பிபன் சந்திரா எழுதிய `சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா’,

10) சுனிதி குமார் கோஷ் `இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்’ இரண்டு தொகுதிகளை
வாசிக்கலாம்.
அதுபோலவே தமிழக வரலாற்றை வாசிக்க விரும்புகிறவர்கள்,

1) டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய `தமிழக வரலாறு’,

2) ஆர். சத்தியநாதய்யர் எழுதிய `மதுரை நாயக்கர் வரலாறு’,

3)மா. இராசமாணிக்கனார் எழுதிய `பல்லவர் வரலாறு’,

4) மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய `களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’,

5) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய `சோழர்கள்’,

6) மீ.மனோகரன் எழுதிய `மருதுபாண்டிய மன்னர்கள்’,

7) ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய `ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’,

8) ர.விஜயலட்சுமி எழுதிய `தமிழகத்தில் ஆசீவகர்கள்’,

9) ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய `சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’
போன்றவற்றை வாசிக்கலாம்.

10) குழந்தைகளுக்கு வரலாற்றை அறிமுகப்படுத்த, த.வெ.பத்மா எழுதிய `கனவினைப் பின்தொடர்ந்து’ என்ற சிறிய நூல்

 சிந்துசமவெளிப் பண்பாடு குறித்துச் சிறப்பான அறிமுகத்தைத் தரக்கூடியது.

மார்க் ட்வைன்

இருபது வருடங்களுக்குப் பிறகு நாம் சாதித்ததை விட செய்யத் தவறியது தான் நமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும்.

-மார்க் ட்வைன்

மருதன்

ஜனநாயகம் என்பது அனுமதிக்கப்பட்ட எல்லை வரை தான் தழைக்கிறது. அவ்வளவு மட்டும் தான் தழைக்கவும் முடியும்

-மருதன்

Sunday 1 August 2021

மதன்

அட்வைஸ்?

சும்மா ஒவ்வொரு நிமிசமும் 'வாட்சை' பார்த்து நீங்களாகவே டைம் சொல்லிக் கொண்டிருக்க கூடாது.யாராவது நேரம் கேட்கும் போது மட்டும் சொன்னால் போதும். அட்வைஸும் அது மாதிரிதான்

-மதன்

ஜெயமோகன்

ஆர்மீனிய மொழியிலும் ஐரோப்பிய மொழிகளிலும் புழங்கிய ஸ்கார்பெட்டா [Scarpetta] என்ற சொல் பூட்ஸ்,காலடி, காலடிவைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் ஸ்டெப்ஸ். அதிலிருந்து சர்பட்டா என்ற சொல் வந்திருக்கிறது என்பதே என் ஊகம்

-ஜெயமோகன்