Monday 30 May 2022

இனியவை நாற்பது

சலவரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிரக் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது

வஞ்சகரைச் சேராமல் விலகியிருத்தல் இனியது. அறிவுடையாரின் வாய்ச் சொற்களைப் பின்பற்றி ஒழுகுதல் இனிது.நிலையான உலகில் வாழும் உயிர்களெல்லாம் உரிமைப்பட வாழ்தல் இனியது

பாதசாரி

வெளியிலிருந்து 
திறக்கும் கதவு என்றும் கூண்டுக்கானது

உள்ளிருந்து 
திறக்கும் கதவு
பறத்தலுக்கானது.

-பாதசாரி

சுந்தர ராமசாமி

நாம ஏன் ஒரு முடிவுக்கு அவசரமா வரணும்? முடிவுக்கு வந்து விட்டால் தெளிவை அடைந்து விட்டோம் என்று அர்த்தமா ..? ஒரு நாளும் இல்லை. எந்த முடிவும் நிரந்தரமானது அல்ல. முடிவுகளுக்கு முந்தைய பரிசீலனை தான் முக்கியம்..

மிகக் கடினமான யாத்திரை அது.. 

~ குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - 
சுந்தர ராமசாமி

வெண்ணிலா

உள்ளுக்குள் ஊறுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்;
தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன.
உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது;
வாழ்வின் அமுதமும், நஞ்சும்.

-அ.வெண்ணிலா

Sunday 29 May 2022

எட்மண்ட் ஹிலாரி

எட்மண்ட் ஹிலாரியிடம்.. நீங்க எவரெஸ்ட் மலை ஏறும்போது சவாலாக இருந்தது குளிரா,பனிப்பாறைகளா என பலவாறு கேட்டனர்.அதற்கு

'உன்னால் இந்த சிகரத்தை அடைய முடியாது.பலரும் முயன்று தோற்றுள்ளனர். எனவே உன் முயற்சியை விட்டுவிடு.என்ற எதிர்மறை எண்ணம்தான் சவாலாக அமைந்தது.இதை போராடி வென்றேன் என்றார்

ஞானக்கூத்தன்

வெள்ளை பேப்பருக்கு
முன்பக்கம் பின்பக்கம்
என்று கிடையாது.
எதை முதலில்
பார்க்கிறோமோ
அதுவே அதன்
முன்பக்கம். 

-ஞானக்கூத்தன்

Saturday 28 May 2022

யுவன் சந்திரசேகர்

பகலின் ஆவேசம் மெல்ல மெல்லக் குறைந்து,தயிராகும் பால்போல,வெளிப்படையாகத் தெரியாமலே இரவு இறங்க ஆரம்பித்தது

-யுவன் சந்திரசேகர்

Friday 27 May 2022

சே.சதாசிவம்

'நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி.

-சே.சதாசிவம்

தங்கம் மூர்த்தி

அம்மா 
ஒரு சிறகையும்
அப்பா
மறு சிறகையும்
இறுகப் பிடித்துக்கொண்டு
குழந்தைக்கு
அறிமுகப்படுத்துகிறார்கள்
வானத்தை

-தங்கம் மூர்த்தி

Wednesday 25 May 2022

குமரகுருபரர்

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல்,தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால்,தன்னை
வியவாமை அன்றோ வியப்பு ஆவது!இன்பம்
நயவாமை அன்றோ நலம்

-குமரகுருபரர்

ஒருவன் தன்னைத்தான் வியந்துகொள்ளல்,புகழ்ந்து கொள்ளல் என்பது நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றுவது போல முட்டாள்த்தனம்

Monday 23 May 2022

நீதிக்கதை

காட்டில் ஒரு காகம் மரத்தின் மேல் சும்மா அமர்ந்து கொண்டு இருந்ததாம் !!!!!!

அந்த வழியே சென்ற முயல் காகத்தை பார்த்து !

என்ன செய்து கொண்டு இருக்கிறாய் !!!!!!!!!! என்று கேட்க

காகமோ !!!!!! சும்மா உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கேன் என்று சொல்லியதாம் !!!!

முயல் ' அப்படியா நானும் அதையே செய்கிறேன் " என்று அதுவும் கீழே அமர்ந்து சும்மா இருந்ததாம் !!!!

அந்த வழியே சென்ற புலி !!!!!

சும்மா இருந்த முயலை பிடித்து சாப்பிட்டு !விட்டதாம் !!!!!!!!

நீதி - வாழ்க்கையில் சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும்

குட்டி இளவரசன் நாவலில்

All grown-ups were once children...but only few of them remember it

-குட்டி இளவரசன் நாவலில்

அருணன்

மூலதனம் என்பது மறைப்பு கட்டிய குதிரை.அதற்கு லாபம் எனும் இலக்கைத் தவிர வேறு எதுவும் தெரியாது. குறைந்த மூலதனத்தில் குறுகிய காலத்தில் கூடுதல் லாபம் எங்கு கிடைக்கிறதோ அதை நோக்கியே ஓடும். அது நுகரும் லாப வாசனை முன்பு எந்த வாசனையும் நிற்காது

-அருணன்

முபாரக்

எளிதாய் தூக்கி
எரிந்து விடுகிறோம்..
குப்பைத் தொட்டியில்
எவ்வித
சலனமுமில்லாமல்,
தேவை இல்லாத
பொருட்களையும்
தேவை முடிந்த
மனிதர்களையும்

-மு.முபாரக்

Sunday 22 May 2022

மக்னா யானை

மக்னா யானை

காடுவாழ் மக்கள் தந்தங்கள் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுவார்கள். இன்றும் பல கிராமப் பகுதிகளில் கொம்புகளற்ற ஆடுகளையும், மாடுகளையும் மோழையாடு என்றும் கூறுவதை காணலாம்.

மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண்யானைகள் தான் "மக்னா" எனப்படுகிறது.

உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும் ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகம்.

அதுவும் இந்தியாவில் குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.

அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

ஆசிய யானைகளில் குறிப்பாக இந்திய யானைகளில், தந்தமுடைய ஆண் யானைகளையே பெண் யானைகள் இணையாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள்.

தந்தமற்ற நிலையில் எந்த யானைக் கூட்டத்தினோடும் இவற்றால், தாக்குப்பிடித்து வாழ முடியாதநிலை ஏற்படுகிறது.

தந்தங்கள் ஆண்யானைகளின் வலிமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான ஆயுதம்.

தந்தமில்லாமல் இவற்றால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து ஒரு முழு ஆண் யானையின் தன்மையோடு குழுவில் இருக்க முடியாததால் இவை மூர்க்கத்தனத்தோடு இருந்து பல சமயங்களில் எதிர்ப்படும், மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாகும் இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள்.

இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.

ஒரு யானையின் தந்தங்கள் என்பது அதன் முன்வெட்டுப் பற்களே.

ஒரு ஆண் யானையின் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். மீதமுள்ள ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழிகளுக்குள்ளாக பொருந்தியிருக்கும்.

ஆசிய யானைகளைப் பொறுத்தவரை, இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் வெளியே நீண்டு வளரும். பெண் யானைக்குக் கூட, வாய்க்குள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும்.

ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு என்றாலும், மனிதர்களால் தந்தங்களுக்காக நடந்தப்படுகிற யானை வேட்டைகளின் காரணமாக தற்போது ஆப்பிரிக்க யானைகளிடையே, தந்தங்களற்று பிறக்கும் பண்பு மேலோங்கி வருவதாக சில ஆய்வுகள் கூறுகிறது.

தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்தையும் காணலாம். பெண் யானைக்கு அந்த இடம் உள் வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும்.

மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். இது, தந்தத்தின் வலிமையை ஈடு செய்யும் வகையில், உடல்வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.

ஆண் யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும்

ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே மக்னாவில் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது. பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணைசேரமுடியும். பல நேரங்களில் பலத்தைக்காட்ட போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் பலத்தைக் காட்டியாக வேண்டும்.

தகுதியானவையே தப்பிப்பிழைக்கும் என்கிற விதியின்படி, போட்டியில் வெல்ல தந்தமும் மிக முக்கிய ஆயுதம். தந்தமற்ற இவைகள், பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களிலும் விலக்கியே வைக்கப்படுகின்றன என்கிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள்.

-படித்தது

Saturday 21 May 2022

தொமினிக் விதால்யோ

எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன்

-தொமினிக் விதால்யோ

Friday 20 May 2022

ரா..கி ரங்கராஜன் கட்டுரையில்

இந்தியர்கள் ரொம்ப சுயநலக்காரர்கள்.உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தாலே தெரிகிறது.ஏதோ ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்துக் கொள்வது போல.. பிற்காலத்தில் நமக்கு ஆதரவு வேண்டும், காப்பாற்ற ஆள் வேண்டும் என்பதற்காகவே குழந்தையை பெற்று வளர்க்கிறீர்கள்

-ரா.கி ரங்கராஜன் கட்டுரையில்

பழமொழி

உன்னை யாரேனும் முட்டாள் என்று சொன்னால், அமைதியாக இரு.பேசி, அதை நிரூபித்துவிடாதே

-பழமொழி

Wednesday 18 May 2022

சுந்தரபுத்தன்

உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியுள்ளது. உங்களால் ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் அந்த ஒருவராக இருங்கள்.

-சுந்தரபுத்தன்

Tuesday 17 May 2022

ஒரு இலக்கினை நோக்கிப் புறப்படுகையில் உங்களைப் பார்த்து குரைக்கும் ஒவ்வொரு நாய் மீதும் கல்லெறிய நின்று கொண்டிருந்தால், இலக்கினை அடையவே முடியாது-துருக்கி பழமொழி

மனுஷ்

என்னை உபயோகித்துக்கொள்பவர்கள்
அனைவருக்கும்
ஒரு பொதுவான 
தொழில் நுட்பம் இருக்கிறது.

கடைசிவரை
அது எனக்குத் தெரியாமல்
பார்த்துக்கொள்கிறார்கள்.

-மனுஷ்ய புத்திரன்

Saturday 14 May 2022

தனக்காக பெய்யும் மேகம் என்று ஒரு தாவரத்திற்கு எந்த அடையாளமும் இல்லை உயர நிற்பது அகண்ட ஆகாயம் அதில் தனதான துளியை யாசித்து காத்திருக்கிறது யாருமற்றவர்கள் அப்படித்தான் குவிந்த அன்பு தெய்வமென்றால்பரந்து நிற்பது மனுஷர்கள்தான் இல்லையா-நேசமித்ரன்

அசோகமித்திரன்

நமது வாழ்க்கையை சிறிது பரிசோதித்துப் பார்த்தாலும், நாம் மற்றவர்களிடம் கொள்ளும் உறவு முறைகளை துளியேனும் கூர்ந்து பார்த்தாலும், எப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர் எதிரிடையாக இருந்து வருகிறோம் என்று தெரியும். உண்மையில் நமக்கு யாரைப் பற்றியும் அக்கறையே இல்லை. நாம் அதுபற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எவரைப் பற்றியும் ஒரு அக்கறையும் கிடையாது. நமக்கு அனுகூலமாக இருக்கும் வரை, நமக்கு ஓர் அடைக்கலமாக இருக்கும் வரை, நமக்கு திருப்தியளிக்கும் வரை தான் நாம் ஒருவரோடு உறவு கொள்கிறோம். ஆனால் அதில் சௌகர்யம் இல்லை, பயன் இல்லை என்றான மறுகணம் அந்த உறவை அப்படியே நழுவவிட்டு விடுகிறோம். அதாவது உறவு என்பது நமக்கு சுயதிருப்தியளிக்கும் வரை தான். இதைக் கேட்கும்போது கொடூரமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை கூர்ந்து பரிசோதித்தால் நான் சொல்லுவது உண்மை தான் என்று விளங்கும். இந்த உண்மையைப் புறக்கணிப்பது அறியாமையில் விழுந்திருப்பதாகும். அறியாமை சரியான உறவை உண்டு பண்ண முடியாது...."

- விடுதலை 
குறுநாவலில் இருந்து.

படித்தது

சிந்தனை என்பது வளர்ந்து கொண்டே செல்வது.எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரத் துடிப்பது.ஆனால் நாம் பெரும்பாலும் நம்பிக்கைகளைத் தான் சிந்தனை என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோம்

-படித்தது

மார்க் ட்வைன்

“உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் உங்களைப் பிரச்சனைக்கு உள்ளாக்குவதில்லை. உண்மை என்று நீங்கள் நம்புகின்ற விஷயங்கள் உண்மையாக இருப்பதில்லை என்பதுதான் பிரச்சனையே.” 

- மார்க் ட்வைன்

Friday 13 May 2022

பி. ஜே. தார்ன்டன்

“ஒவ்வொரு பெரிய மாற்றமும் கீழே சரிகின்ற டாமினோக்களைப்போலத் தொடங்குகிறது.” 

- பி. ஜே. தார்ன்டன்

புத்தர்

வாழ்க்கையும் மனிதர்களும் உன்னை சோதிப்பார்கள்.
சூழல் உன்னை புதிதாக வடிவமைக்க முயற்சிக்கும்.
உன்னை மாற்ற முயற்சிக்கும் எதையும் அனுமதிக்காதே.
நீ நீயாக இரு.

- புத்தர்

காலமெல்லாம் கண்ணதாசன்-ஆர்.சி.மதிராஜ்

காலமெல்லாம் கண்ணதாசன்
-ஆர்.சி.மதிராஜ்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்

* * *

உள்ளம் என்றால் என்னவென்று கவிஞர்களும் கதையாசிரியர்களும் விதம்விதமாகக் கூறியுள்ளனர்.
உள்ளம் என்பது மலரைப்போன்றது. அதில் ஆசைகள் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. உள்ளம் என்பது ஆழ்கடலைப்போன்றது - எப்போது அமைதியாய் இருக்கும், எப்போது பொங்கிப்பிரவகிக்கும் என்பது தெரியாது. மனம் ஒரு குரங்கு - அது கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

உள்ளம் என்பது ஆமை என்கிறார் கவியரசர் கண்ணதாசன். தனக்கு ஓர் ஆபத்து என்று தெரிந்தால், எவரையும் தாக்க முற்படாது. தன் ஓட்டுக்குள், தன்னைத்தானே பதுக்கிக்கொள்ளும். ஆபத்து மட்டும்தான் என்றில்லை, பல நேரங்களில் எதற்கு வீண்வம்பு என்றோ, சோர்விலோ, கோபத்திலோ, பயத்திலோ, பாதுகாப்பை வேறிடத்தில் தேடாது தனக்குள் தானே சுருங்கிக்கொள்ளும். இப்படி உள்ளத்தைச் சுருக்கிக்கொண்டால் என்னவாகும்? உண்மை ஊமையாகிவிடும்.

உண்மை என்றால் என்ன? பொய்மை என்றால் என்ன? எதனைக்கொண்டு இதனை வரையறுப்பது? மனசாட்சிப்படி நடந்துகொள்வது சரியா? சட்டப்படி நடந்துகொள்வது சரியா? மனசாட்சியும் சட்டமும் ஒன்றாகப் பயணிக்கவே பயணிக்காதா? தனி ஒரு மனிதனாக சிந்திக்கையில் ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்குக் கட்டுப்படவேண்டும்.

ஒரு சமூகமாகக் கூடி வாழ்கையில் சமூகத்திற்கு எது சரி என்பதை சட்டம் யோசிக்கும். அங்கு சட்டத்திற்குக் கட்டுப்படவேண்டும்.

எல்லா நேரங்களிலும் எல்லாரிடமும் நம் மனதிற்கு சரியெனப்பட்டதை பேசுகிறோமா? நம் எண்ணத்தில் நேர்மை இருந்தாலும் அப்படிப் பேசிட முடிவதில்லை. அந்தப் பேச்சால் அந்த உண்மையால் என்ன நடக்கும்? யாருக்கேனும் பாதிப்பா என்பதைப் பொறுத்தே அமைகிறது அது.

தன்னுடைய மேலதிகாரியிடம் தனக்கு சரியென்று பட்டதைச் சொல்ல முடிகிறதா? ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். எனில் அதிகாரத்தைப் பொறுத்துதான் குரல் உயர்த்தமுடிகிறது. தன்னை விட அதிகாரம் மிக்கவர்கள் என்றில்லை, தனக்கு வேண்டப்பட்டவர்கள், நெருங்கியவர்கள், நண்பர்களிடமும் கூட அப்படிப் பேசிவிட முடிவதில்லை.

காரணம், இதனால் அவர்கள் உள்ளம் வருந்துமோ என்ற யோசனையும் பயமும் அப்படிப் பேச விடுவதில்லை.
ஒரு கவிஞனோ படைப்பாளனோ, தன் நெஞ்சில் தோன்றுவதையெல்லாம் படைத்துவிடுவதில்லை. சிலவற்றைத்தான் எடுத்து வைக்கிறார். எழுதுவதைவிட எழுதாமல் விட்டது அதிகம் என்பான் கவிஞன். பேசியதைவிட பேசாமல் விட்டது அதிகம் என்பான் பேச்சாளன்.

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி

உள்ளம் - உண்மை, ஆமை - ஊமை, சொல்லில் - நெஞ்சில், பாதி - நீதி.... என்று வார்த்தைகள் சந்தத்துக்குள் எத்தனை அழகாகப் பொருந்தியிருக்கின்றன. அப்படிப் பொருத்திய வார்த்தைகளுக்குள் தன் சிந்தனையை, பொருளை எத்துணை கச்சிதமாகப் பொருத்துகிறார் கவியரசர். அதனால்தான் அவர் கவிகளுக்கெல்லாம் அரசர்.

கடவுள் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா? இதற்கான பதிலையும், கேட்பவரின் எண்ணத்தை நோக்கியே திருப்பிவிடுகிறார் கண்ணதாசன். மலைப்பிரதேசத்தில் உருண்டையான ஒரு கல் இருக்கிறது. ஆம் அது கல்தான். அதை ஒரு தேர்ந்த சிற்பி செதுக்கிச் செதுக்கி, ஒரு உருவமாக்குகிறான்.

இப்போது கல், சிற்பம் என்ற பேருக்கு உருமாற்றமடைகிறது. அதன் மூலம், கல். ஆனால் ஒரு சிற்பத்தை கல் என்று சொல்லமாட்டோம்தானே? அதே சிற்பம் கருவறைக்குள் வைத்து வணங்கப்படும்போது கடவுள் ஆகிறது.

கல் என்று பார்ப்பதும், சிற்பமாக ரசிப்பதும், கடவுளாக வணங்குவதும் அவரவர் கண்களையும், உள்ளத்தையும் பொருத்தது என்கிறார் கண்ணதாசன்.

சரி என்பதும் தவறு என்பதும் அவரவர் பார்வையைப் பொருத்தது. கல் என்பதும் கடவுள் என்பதும் அப்படியே. உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. இன்பமும் துன்பமும் கூட அப்படித்தான்.

பெரும்பாலும் நாம் குழம்பிய மனநிலையிலேயே இருக்கிறோம். இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் நம்மை எப்போதும் ஆட்கொள்கிறது. நண்பனா பகைவனா என்பதைக்கூட புரிந்துகொள்ள இயலா நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் இதெல்லாம் குறுகியகாலம்தான். நாட்பட நாட்படப் புரியும். வாழ்க்கை புரியவைக்கும்.

உண்மை எல்லா நேரமும் உறங்கிக் கிடப்பதில்லை. எல்லா நேரமும் ஊமையாகவும் இருக்கமுடியாது. அது ஒரு நாள் வெடித்துக் கிளம்பும். அன்று புரட்சி உருவாகும். உண்மைக்கு மட்டும்தான் அப்படி ஒரு சக்தி இருக்கிறது. உண்மையைக் கொண்டு உருவாகும் புரட்சி மாபெரும் வெற்றிபெறும் என்பது வரலாறு.

Thursday 12 May 2022

படித்தது

நல்ல மனிதன் யாரையும் குறை கூறுவதில்லை. ஏனென்றால் அவன் மற்றவர்களிடமிருக்கும் தவறுகளைப் பார்ப்பதில்லை

-படித்தது

தஸ்தயேவ்ஸ்கியின்

தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதை இருக்கிறது .ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான்.சுற்றியிருக்கும் மக்களுக்கு அவனை பிடிக்கவே பிடிக்காது .அவர்களை பொறுத்தவரையில் அவன் ஆபத்தானவன்,கெட்டவன்,மோசமானவன் ..

ஒரு நாள் காட்டுப்பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகத்தால் மயக்கம் அடையும் நிலையில் "தண்ணி தண்ணி " என்று கத்திக் கொண்டு கீழே விழுந்து கிடக்கிறாள்.அப்போது அந்த வழியாக இளைஞன் வருகிறான் .அவனைப் பார்க்கும் அந்தப் பெண் இந்த நேரத்தில் இவனா வரணும் என்று நொந்து கொள்கிறாள் .அவன் அந்தப் பெண்ணைக் கடந்து செல்கிறான் .சிறிது நேரத்தில் தண்ணீருடன் வருகிறான் ,அந்தப் பெண்ணுக்கு அருகில் தண்ணீரை வைத்து விட்டு அவன் போக்கில் சென்று விடுகிறான்.

ஒருவன் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் நல்லவனாக மாறலாம் ,அது மட்டுமில்லாமல் ஒருவனை மதிப்பிடுவது ,ஒருவனை பற்றி முடிவு செய்வது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும் கதை .

இந்தக் குறும்படமும் மற்றவர்களைப் பற்றிய நம் தவறான எண்ணங்களை ,மதிப்பிடுதலை நாம் உணர்கின்ற வகையில்  அழகாக சித்தரிக்கிறது .

கறுப்பு நிற பூனை இரை தேடி ஆளில்லாத ஒரு வீட்டுக்குள் செல்கிறது.அந்த வீட்டில் இருக்கும் கூண்டுக்குள் ஒரு பறவை இருக்கிறது  ,கூண்டுக்கு அருகிலிருக்கும்  கண்ணாடி குடுவைக்குள் அகப்பட்டு கிடந்த தங்க மீன் வெளியே தாவிக் குதித்து தரையில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது .இரை தேடி வந்த பூனையின் பார்வையில் மீனும் ,பறவையும் அகப்பட்டுவிடுகிறது .

அந்த வீட்டிலிருக்கும் சிறுவன் ஒரு அதிர்ஷ்ட விளையாட்டில் வெற்றி பெற்று  ஆசையோடு  தங்கமீனை வாங்கிவந்து ஒரு நாள் கூட ஆகவில்லை .பள்ளியில் அவன்  நிச்சயமாக அந்த மீனைப் பற்றிய எண்ணத்தில் பாடத்தைக் கூட கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது .

பள்ளி முடிந்த பிறகு ஒரு அழகான மலர்கொத்தை மீன் குடியிருக்கும் கண்ணாடி குடுவைக்குள் வைப்பதற்காக  வாங்குகிறான் .

மீன் தரையில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் ,அங்கே பூனை இருப்பதும் சிறுவனுக்குத் தெரியாது 

மகிழ்ச்சியுடன் தன் அன்புக்குரிய மீனையும்,பறவையும் பார்க்க வீட்டை நோக்கி வேகமாக ஓடி வருகிறான் 

வீட்டுக்குள் நுழைந்ததும் மீனும் பறவையும் இருக்கும் இடத்துக்குச் செல்கிறான் ,தன் புத்தகப் பையிலிருக்கும் மலர் கொத்தை எடுத்து கண்ணாடி குடுவைக்குள் வைக்கிறான் 
இப்போது அந்த தங்க மீனுடன் சேர்ந்து அந்த மலர் இன்னும் அழகாக காட்சி தருகிறது.

அந்த சிறுவனைப் போல,அந்த தங்க மீனைப் போல ,அந்தப் பறவையைப் போல ,இரை தேடி வந்த அந்த கறுப்பு நிற பூனையும் பரிசுத்தமான இதயத்துக்கு சொந்தக்காரன்  தான் .

Wednesday 11 May 2022

நெகிழ்ச்சி

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் குடியரசு தலைவர் ஆக இருந்தபோது, ​​அவர் குன்னூருக்கு அரசுமுறை பயணம் செய்தார். அங்கே சென்றதும், அவருக்கு பீல்ட் மார்ஷல் திரு.சாம் மனெக்ஷா அவர்கள் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் இருப்பது தெரிய வந்தது. குடியரசு தலைவரின் பயணத்திட்டத்தில் இல்லை என்றாலும் டாக்டர்.கலாம் திரு மனெக்ஷாவை பார்க்க விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவமனை படுக்கையில் இருந்த அவரிடம் திரு. கலாம் 15 நிமிடங்கள் பேசினார்; அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.



திரு கலாம் கிளம்பும் முன் திரு. மனெக்ஷாவை கேட்டார்:

"நீங்கள் வசதியாக இருக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா ? உங்களுக்கு இங்கே ஏதாவது குறைகள் இருக்கிறதா? உங்களுக்கு இன்னும் ஏதேனும் வசதிகள் தேவையா?"

திரு.மானெக்ஷா "ஆமாம் மேன்மை தங்கிய குடியரசு தலைவர் அவர்களே, எனக்கு ஒரு மனக்குறை உள்ளது" என்றார். கவலை மற்றும் வேதனையுடன் அதிர்ச்சியடைந்த கலாம்,
"அது என்ன சொல்லுங்கள்" என்று அவரிடம் கேட்டார்.

திரு மனெக்ஷா பதிலளித்தார்: "ஐயா, என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்பதே எனது குறையாக இருக்கிறது, எனது அன்புக்குரிய நாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்க முடியவில்லை. ஆகவே படுக்கையில் இருந்து தங்களை வணங்குகிறேன்". என்றார்.
இருவரும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பான கதையின் மீதமுள்ள பகுதி என்னவென்றால், திரு சாம் மானெக்ஸா திரு அப்துல்கலாம் அவர்களிடம் பீல்ட் மார்ஷல் ரேங்க் ஓய்வூதியம் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனக்கு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

மனம் நொந்து ஆக்ரோஷமான திரு கலாம் டெல்லி சென்றதும் ஒரு வாரத்திற்குள் ஓய்வூதிய நிலுவைத் தொகை கிட்டத்தட்ட
ரூ .1.25 கோடி க்கான காசோலையை பாதுகாப்பு செயலாளரிடம் கொடுத்து சிறப்பு விமானம் மூலம் ஊட்டி வெலிங்டனில் இருந்த திரு மானெக்ஷாவுக்கு அனுப்பினார்.
அதுதான் திரு.அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்.

திரு சாம் மானெக்ஷா காசோலையைப் பெற்றதும் உடனடியாக அந்த பணத்தை இராணுவ வீரர்கள் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

ஜெயமோகன்

"ஓர் இலட்சியவாதச் செயல்பாடு அடிப்படையில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அந்த மகிழ்ச்சி இருவகையானது. நாம் ஒன்றை அளிக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியே வாழ்நாள் முழுக்க செயல்படச் செய்யும். எவ்வகையிலும் அவநம்பிக்கையும் சோர்வும் அடையாமலிருக்கச் செய்யும். எஞ்சுவது நம் ஆளுமை நிறைவே ஒழிய நாம் இதை செய்தோம், இதை மாற்றியமைத்தோம், இதை சாதித்தோம் என்னும் ஆணவமல்ல என்னும் உணர்வை அளிக்கும்.

ஒற்றை வரியில் சொன்னால் மேலும் மேலும் பெருகும் ஆழ்ந்த மகிழ்ச்சியை அளிக்காத எதுவும் சேவையோ கல்வியோ இலட்சியவாதச் செயல்பாடோ அல்ல."

- ஜெயமோகன்.

Monday 9 May 2022

கிளே ஷிர்க்கி

இன்று தினசரி வாழ்வில் தகவல்கள் அளவுக்கு அதிகமாகி வருவது பிரச்சனையல்ல,
நம்மிடம் சரியான தகவல் வடிகட்டிகள் இல்லை என்பதுதான் பிரச்சனை

-கிளே ஷிர்க்கி

எஸ்.ரா

காலம் மனிதர்களின் உடலின் வழியே தனது அடையாளத்தைப் பதிவு செய்கிறது.

முதல் நரையைக் கண்டபோது திடுக்கிடாத மனிதர் யார் இருக்கிறார்கள்?

நரை என்பது காலத்தின் சிரிப்பு .அது நம்மிடம் ரகசியமாக எதையோ சொல்கிறது

-எஸ்.ரா

வியாபார மேலாண்மை

16ம் நூற்றாண்டு வாக்கில் - பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலிருந்து ஒரு பாடல் அன்றைய வணிகர்களின் வியாபார மேலாண்மை குறித்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

'புல்லிஓர் பண்டம் கொள்வார் வினவின் அப்பொருள் தம் பக்கல்,
இல் எனின் இனமாய் உள்ள பொருள் உரைத்து எதிர் மறுத்தும்;
அல்லது அப் பொருள் உண்டு என்னின், விலை சுட்டி அறுத்து நேர்ந்தும் சொல்லினும் இலாபம் கொள்வார் - தொன்மரபு இருக்கை சொல்வாம்'



மளிகை கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வருகிறார், ‘பச்சரிசி இருக்கிறதா?’ என கடைக்காரரிடம் வினவுகிறார்.
வாடிக்கையாளர் கேட்ட அரிசி கடையில் இல்லாத நிலையிலும் கூட கடைக்காரர் ‘இல்லை’ என்று சொல்லமாட்டாராம்.

மாறாக, ‘புழுங்கல் தான் உள்ளது’ என்று சொல்லி விற்பனையைத் தொடர்வாராம்.

மேலும் ‘பச்சரிசி இல்லை’ என்று எதிர்மறையாகச் சொல்வதால் நேரவிரயம் தவிர இலாபம் என்று எதுவுமில்லையென்பதால் ‘புழுங்கல் உள்ளது’ என நேர்மறையாகச் சொல்லி அவரிடம் அதனை விற்க முயல்வாராம்.

அதே போல அவர் கேட்ட அரிசியே இருந்தால் கூட - ‘இருக்கிறது’ எனச் சொல்லமாட்டாராம், மாறாக ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று உரைப்பாராம் .
‘பச்சரிசி இருக்கிறது’ என நேரடியாகப் பதிலுரைத்தால், வாடிக்கையாளர் அடுத்து, ‘என்ன விலை?’ என்று கேட்பார்.

 கடைக்காரர் ‘கிலோ இத்தனை ரூபாய்’ என்று பதில் சொல்லவேண்டும். அதனால் நேரம் விரயமாகும். எனவே, கேள்விக்கு விடையாக விலையையே நேரடியாகச் சொல்லிவிட்டால் நேரம் மிச்சமாகும், அந்த நேரத்தில் இன்னொரு வியாபாரத்தைக் கவனிக்கலாமல்லவா?.
இதுதான் அப்பாடல் உள்ளடக்கிய மேலாண்மைச் சூத்திரம்!

நம் முன்னோர்கள் எத்தனை அறிவாளிகள் என விளங்குகிறதா? காலங்காலமாக சிறிய பெட்டிக் கடைகளிலும் சந்தைகளிலும் பின்பற்றிய நுணுக்கங்களை வியாபார மேலாண்மை படித்தவர்கள் கூட அறிந்திற மாட்டார்கள்.
சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிப் பதில் பெற வேண்டுமே தவிர - வளவளவென்று தேவையற்றதைப் பேசி காலவிரயம் செய்யாமல் வியாபாரம் செய்யப்பட வேண்டும் - என்பது நம் முன்னோர்கள் பின்பற்றிய நுட்பங்களில் முதன்மையானது

Sunday 8 May 2022

ஜெயமோகன்

எவருமே தளராத ஊக்கம் கொண்டவர்கள் அல்ல. தன்னைத்தானே தூண்டி ஆற்றல்கொண்டு மேலெழுபவர்களே வெல்கிறார்கள்.

ஜெயமோகன்

பாவ்லோ கொய்லோ

There is only one thing that makes a dream impossible to achieve: the fear of failure."

"ஒரு கனவை நனவாக்க முடியாமல் தடுப்பது ஒன்று மட்டுமே : அது தோற்று விடுவோம் என்ற பயம் தான்".

-பாவ்லோ கொய்லோ

காபிஃப் ஷிராஸி

..வாழ்க்கை குறுகியது. உன்னுடைய மீதிக்காலத்தை, உன்னை ஆழமாக்கிக் கொள்வதில் பயன்படுத்து. மக்களை வணங்குவதில் உன் நேரத்தை விரயமாக்காதே!

-காபிஃப் ஷிராஸி

Friday 6 May 2022

எல்லா வீலர் வில்காக்ஸ்

செயல்பாடு இல்லாத பிரார்த்தனை
ஒரு நாண் இல்லாத அம்பைப் போன்றது.

பிரார்த்தனை இல்லாத செயல்பாடு ஒரு அம்பு இல்லாத நாணைப் போன்றது

-எல்லா வீலர் வில்காக்ஸ்

Thursday 5 May 2022

சீனக் கவிதை

இருபது 
வயதுவரை உலகத்தை 
நாம் 
கவனிக்காமல் இருக்கிறோம்...

இருபது முதல் நாற்பதுவரை 
உலகம் 
நம்மைக் கவனிக்கிறதென்று 
எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

அறுபதில்தான் 
உலகம் நம்மைக்கவனிக்கவே 
இல்லையென 
உணர்ந்து கொள்கிறோம்...

~ சீனக் கவிதை ~

Wednesday 4 May 2022

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நகைக்கடைக்காரர் தான்
நினைவுபடுத்துகிறார்
அட்சய திருதியையை...
ஜவுளிக்கடைக்காரர் தான்
நினைவுபடுத்துகிறார்
தீபாவளி வரப்போவதை...
அக்னி நட்சத்திரம்
நாளை தொடங்குவதைக்கூட
ஏசி கடைக்காரரே
நினைவுபடுத்துகிறார்...
பெட்ரோல் விலை ஏறியதை
மின்சார வாகன விற்பனையாளர்
நினைவுபடுத்துகிறார்...
என் வீட்டுக் கழிவறையில்
கிருமிகள் சூழ்ந்திருப்பதைக்கூட
டாய்லெட் கிளீனர் தயாரிப்பாளர்
நினைவுபடுத்துகிறார்...
நீண்ட நேரமாக தேடிக்கொண்டிருக்கும்
டூ வீலர் சாவியை
எங்கு வைத்தேனென 
நினைவுபடுத்தத்தான்
ஒருவரும் வரவேயில்லை...

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

Monday 2 May 2022

ஜெயமோகன்

நான் சொல்வது ‘உபதேசங்கள்’ அல்ல. சிந்தனைகள். அவை கேட்பவரின் சிந்தனைகளுடன் உரையாடுகின்றன. அவரை மேலும் சிந்திக்கச் செய்கின்றன. அச்சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளவும் தெளிவாக முன்னெடுக்கவும் உதவுகின்றன. உண்மையில் அவருக்கான விடை என்பது அவரே கண்டடைவதுதான்

-ஜெயமோகன்