Thursday 26 January 2017

படித்ததில் பிடித்தது

விரித்த தோகை
பெரியது எனவே
வான்கோழியல்ல
மயில் என்றறிவார்
கடவுள்
ஆதலினால் கறிக்காகாது
-எம்.டி.முத்துக்குமாரசாமி

நன்றி:சூர்யா

வள்ளல் பாரி
முல்லைக் கொடிக்கு
தேர் கொடுத்தான்
தேர் சுமந்த பாகனுக்கு
என்ன கொடுத்தான் ?
ஏழை உழவனுக்கு பாரி
என்ன வாரிக் கொடுத்தான் ?
  -மு. சுயம்புலிங்கம்

படித்தது

மாலையில் தலை முடியை அவிழ்த்துச் சிக்கெடுக்கிறாள் வீடு திரும்பிய மாணவி
முடிகளிலிருந்து உதிர்கின்றன உதிர்கின்றன
அவ்வளவு ஆண்களின் கண்கள்
- எஸ்.செந்தில்குமார் (முன் சென்ற காலத்தின் சுவை தொகுப்பு )

சூர்யா வே.நி

அவன் அங்கு கதவு இருப்பது தெரிந்தும் மோதி விழுந்தான்
ஏனென்று கேட்டால் சொல்கிறான்
கதவின் நிறம் இருட்டாகயிருந்தது

அறிவுமதி

கவிஞர் அறிவுமதி:

நான் மருத்துவமனையில் சேர்கிறேன் என்று இணையத்தில் செய்தி வெளியிட்டுவிட்டு
ராகவா லாரன்ஸ் வெளியேறுகிறார்..

முதல்வருக்கு நன்றி என்று கடிதம் கொடுத்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி வெளியேறுகிறார்..

கொடிய மிதிக்கறாங்க, கோக்கைத் திட்டறாங்க என்று திகிலடைந்து  ஆதி வெளியேறுகிறார்

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.. மூணு மாசம் தள்ளி வைப்போம் என்று
அந்தப் பெரிய மனிதர்களும் வெளியேறுகிறார்கள்..

எல்லாம் நேற்று மாலை  ஓரிரு மணி நேரத்தில் நடக்கிறது..
உள்ளே இருந்த தன் பிள்ளைகளை வெளியேற்றிய அரசு இன்று நம் பிள்ளைகளை அடிக்கிறது..

இவர்கள் சொல்கிறார்கள்
'மாணவர்களுக்குள் அந்நியர்கள் ஊடுருவிவிட்டார்கள்..அதனால் வெளியேறினோம்...

ஆறு நாட்கள் மாணவர்களின் போராட்டக்களத்தில்
உள்ளே இருந்த இந்த சமரச சன்மார்க்கவாதிகள் எந்தக்கல்லூரிகளில் படிக்கிறார்கள்...?!

மாணவர்களைத் தீவீரவாதிகளாக்க உங்கள் எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த கதைகளைச் சொல்லும் நல்லவர்களே..
'அடிக்கப்போறாங்க ஓடிருங்க.. 'என்று உங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை
ஆறு நாட்கள் உங்களோடு உண்டு உறங்கிய
எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லியிருக்கலாமே..?

பல போராட்ட வலிகளை உணர்ந்தவர்களுக்கு தான்  தெரியும் சக போராளியின் வலி...!

கண்டராதித்தன்

அரசியல் பிடிக்காதென்றேன்
அரசியல் பிடிக்காதென்பதே
அரசியல்தானென்றார்.
ஆனாலும் அரசியல்
பிடிக்காதென்றேன்.
மரவட்டையைத் தள்ளவதுபோலத்
தள்ளிவிட்டார்
பண்பட்டவர்தான்
பண்பட்டவரென்றால்
எந்நேரமும்
பண்பட்டேயிருக்கமுடியுமா.
-கண்டராதித்தன்

பெரியார்

சிந்திப்பவன் 
-மனிதன்.
சிந்திக்க மறுப்பவன்
-மதவாதி.
சிந்திக்காதவான் 
-மிருகம்.
சிந்திக்க பயப்படுகிறவன்
-கோழை.

தந்தை பெரியார்

கண்டராதித்தன்

[ஊஞ்சலாடி: காலமாற்றத்தின் கவிதைகள் – கண்டராதித்தனின் திருச்சாழல்

http://oonjalaadi.blogspot.in/2016/07/blog-post_63.html?m=1

கி.ரா

படிக்க ஆலாப் பறந்த காலம் ஒன்று உண்டு; எப்ப பார்த்தாலும் வெள்ளாடு மேய்கிறது போல
சாப்பாடு சுருங்கினதுபோல படிப்பும் சுருங்கிவிட்டது
-கி.ரா

மொழிபோர்

1965ல், இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தி ஆட்சிமொழியாக மாறவிருந்த 26 ஜனவரி 1965 நெருங்க நெருங்க போராட்டத்தின் வேகம் கூடியது. எங்கு பார்த்தாலும் போராட்டம், கோஷம், கறுப்புக்கொடி, கண்டனக்குரல்.
இன்றைய அத்தியாவசியப் பிரச்னை சோற்றுப் பிரச்னைதானே தவிர மொழிப்பிரச்னை அல்ல என்றார் காமராஜர். உடனடியாக எதிர்வினை ஆற்றினார் அண்ணா. சோற்றுப்பிரச்னைதான் பிரதானம் என்றால் எதற்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தித் திணிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்; பேசாமல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவித்துவிட்டு, சோற்றுப் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தலாமே என்றார் அண்ணா.

மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் துப்பாக்கிச்சுடுகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. மொழிப்பிரச்னையைப் பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள்; கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார் அண்ணா. பத்திரிகைகள், பெற்றோர் ஆகியோரின் ஆதரவு குறைவதை உணர்ந்துகொண்ட மாணவர்கள் 14 மார்ச் 1965 அன்று இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அளவுக்கு மீறிய அடக்குமுறை காரணமாகப் போராட்டங்கள் நசுக்கப்பட்டன என்றாலும் மனத்துக்குள் எரிந்துகொண்டிருந்த போராட்ட நெருப்பை அரசாங்கத்தால் அணைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த பொதுத்தேர்தலில் அந்த நெருப்பு தனது பலத்தை நிரூபித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியின் அருகில்கூட வராமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளை நன்றியுடன் நினைவு கூர வேண்டிய தினம் இன்று!

வைரமுத்து

*தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது!*

🖊வைரமுத்து

வாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
    ஆராய வேண்டும்

ஜூனியர் விகடன்
25.01.2017

ஆத்மாநாம்

வாழ்க்கைக் கிணற்றில்

வாழ்க்கைக் கிணற்றின்
மோக நீரில்
மோதுகின்ற
பக்கெட்டு நான்
பாசக்கயிற்றால்
சுருக்கிட்டு
இழுக்கின்ற
தூதன் யார்

– ஆத்மாநாம்

படித்ததில் பிடித்தது

சுதர்சன் பதிவு

காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி தவிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்

"காற்று வெளியிடை" என்பதற்கு வள்ளுவன் இப்படிச் சொல்கிறார்.
காற்றும் புகாதபடி அணைத்துக்கொள்ளல் காதலர்க்கு அழகு. அப்படி அணைத்துக்கொள்ளும்போது அவள் துன்புறுவாளோ என்று எண்ணிக் கைகளை மெதுவாகத் தளர்த்துகிறான். இப்போது இடையே குளிர்ந்த காற்று நுழைகிறது. இந்த இடைவெளிகூட பொறுக்காத அவள் கண்கள் துன்பப்படுகிறது. அப்படிப்பட்டதுதான் என் கண்ணம்மாவின் காதல். இடைவெளி இல்லாது அணைத்துக்கொள்ளும் அவள் காதலை எண்ணிப் பார்க்கிறேன். அல்லது எங்கும் வியாபித்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு சொற்களுக்குள்ளே எத்தனை ஆழம்!

Wednesday 25 January 2017

படித்ததில் பகர்ந்தது

நன்றி: ரவிக்குமார்

நீங்க எப்படி இவ்வளவு எழுதுறீங்க?.. என்னாலயும் இப்படி எழுத முடியுமான்னு ஒரு நண்பர் கேட்டார்!! அவருக்கு சொன்ன பதில்....
1. முதலில் எழுத வேண்டும் என்று மனதார ஆசைப்படுங்கள்! ஆசைப்பட்டால் தான் எதையும் செய்யத் தோன்றும்!
2. எழுதுவதற்கு திறமை வேண்டும் தான்! ஆனால் எழுதி எழுதியே அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்... முடியும்!
3. எதை எழுதுவது? உங்கள் தின வாழ்வில் நடக்கும் அன்றாட சம்பவங்களையே எழுதலாம்! ஆனால் டைரி போல எழுதாதீர்கள் ஏனெனில் இதை நீங்கள் மட்டுமல்ல பலர் படிக்கப் போகிறார்கள்!
4. கொஞ்சம் கற்பனை கலந்து, வர்ணனை சேர்த்து எழுதினால் நலம்! எகா : நான் ரோட்டைக் கடக்க முற்படும் போது அந்தக் கார் வந்தது! இப்படி எழுதாமல், நான் ரோட்டைக் கடக்கும் போது அந்தக் கார் கமல் கவுதமியை முத்தமிட நெருங்கும் வேகத்தில் என்னை நெருங்கிக் கடந்தது!... இப்படி எழுதலாம்!
நீ என்ன பெரிய ஆளா எங்களுக்கு அட்வைஸ் பண்ற என்று நீங்கள் கேட்கலாம்! இது ஜஸ்ட் என்னுடைய எண்ணங்களே அறிவுரைகள் அல்ல! போலவே மேற்சொன்னவற்றில் பல சுஜாதா போன்ற பல ஜாம்பவான்கள் சொன்னது தான்! என்னைப் போல பலரும் எழுத வேண்டும் என்ற சின்ன ஆசையில் புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்காக சொல்கிறேன்! நன்றி!

Monday 23 January 2017

சிவப்புக்கல் மூக்குத்தி-பாவண்ணன்


http://www.vikatan.com/article.php?mid=1&sid=3938&aid=127817

நகுலன்- பதிவு திரு சதீஷ்

ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்

என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகின்றேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வது கூடப் பிசகு. சுமார் 15 (கதை, குறுநாவல், கவிதை) பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13க்கு ஒரு விதச் சன்மானமும் கிடைக்கவில்லை. 14வது கதைக்கு வந்த செக்கைக் கமிஷன் குறைத்துக் கையில் கிடைத்தது 4 ரூ. 25 பைசா.

நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் ஒரு தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரணமான நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை.

நான் வேலை செய்து வரும் பாங்கில் எல்லோருக்கும் உத்தியோக உயர்வு, எனக்கு முன்னரே ஏற்பட்டது. எனக்கு ஒரு வருஷத்திற்கு முன்தான் உயர்வு கிடைத்தது. அப்பொழுது விலைவாசியும் உயர்ந்தது. என் உடன்பிறந்தவர்கள் அயலூரில் இருக்கிறார்கள். மூன்று வருஷங்களுக்கு முன் என் பெற்றோர்களும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

ஆனால் இதனால் ஒன்றும் நான் அசைந்துவிடவில்லை. எனக்கு ஒருவிதக் கசப்பும் ஏற்படவில்லை.

நான் கடந்த 5 வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன்.
அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை, உயரமும் இலை, நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜூ என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டிவிட்டது. இருந்தாலும் அது என்னுடன் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்.
”ராஜூ மகாலக்ஷ்மி தியேட்டரில் கைதி வந்திருக்கிறது. பார்க்கலாமா? என்ன சொல்கிறாய்?”

அது படுத்துக்கொண்டே வாலையாட்டும்.


“ராஜூ உனக்குக் கதை பிடிக்குமா? குறுநாவல் பிடிக்குமா?”


அது என்னைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டிருக்கும்

.
ஜூரத்தில் நான் படுத்துக் கொண்டிருந்தால் என்னை விட்டு ஒரு அடி நகராது.

அப்படி ஒரு தடவை நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் என் காலில் என்னவோ வழவழவென்று ஊர்வது மாதிரி ஒரு உணர்ச்சி. நான் பயந்து சத்தம் வெளிவராத நிலையில் கண்ணைத் திறந்த பொழுது ராஜூ என் காலை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

ஒரு நிமிஷம் நான் அசடாகிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் இவ்வளவு அன்புள்ள ராஜூ எனக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெருஞ்சோதனையாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

வெள்ளிக்கிழமை தோறும் வேலைக்காரன் அதற்கு இறைச்சி வாங்கி வருவான்.

அதை அவன் பாகமாக்கிக் கொடுக்க 12.30 மணி ஆகும். எனக்குக் காப்பிக் கொடுத்துவிட்டு அவன் இறைச்சி வாங்கப் புறப்படுவான்.

ஆனால் ராஜூ 11.30 மணிக்கே என் அறைக்கு வந்துவிடும்.

என்னைப் பார்த்துவிட்டு சமையல் அறைப்பக்கம் வேலைக்காரன் இருக்கும் இடத்திற்கு ஓடும். பிறகு என்னிடம் வரும், பிறகு அவனிடம் போகும். நான் அதட்டுவேன்.

ஒரு அரை நாழிகை அடங்கிக் கிடக்கும். பிறகு என்னைப் பார்த்துவிட்டு என் முகபாவம் சரியாக இருந்தால், சமையல் அறைப்பக்கம் பார்க்கும், பிறகு மெல்ல எழுந்திருக்கும். நான் ஒன்றும் சொல்லாவிட்டால் பழைய பல்லவி அதற்கு இறைச்சி வருவதற்கு முன் எனக்குக் காபி வரும்.

அது என்னையே பார்த்துக் கொண்டிருக்கும்.

உங்க மனித ஜாதியே இப்படித்தான். எதிரில் ஒரு நாலுகால் மிருகம் பட்டினி கிடப்பது மறந்துவிடும். உங்களுக்கு இரண்டு கால்தான். இருந்தாலும் நீங்கள்தான் பிரதானம் என்ற திமிர் என்று சொல்வது போல் இருக்கும். நான் கவனிக்க மாட்டேன்.

ஆனால் வேலைக்காரன் வந்து இறைச்சி வாங்க என்னிடம் காசு கேட்க வருவான்.

அப்பொழுது நீங்கள் ராஜூவைப் பார்க்க வேண்டும். திடீரென்று அறை முழுவதும் தலைதெறிக்க ஓடும். என் இரண்டு கால்களின் நடுவில் நுழைந்து என் கால்களை உரசிக் கொண்டு, என் காலை நக்கிக் கொடுக்கும்.

நான் எவ்வளவோ தடவை கண்டித்தும் அடித்தும் அதன் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.

நீ ஏன் என்னை அடிக்கிறாய்? நீ இறைச்சி வாங்கித் தருவதற்கென்றா நான் இதைச் செய்கிறேன்? நானோ நாய் ஜென்மம். மனிதன் காலை நக்குவதில் அதுவும் உன்னைப் போல் தயை காட்டுபவர்களின் காலை நக்குவதில் எங்களுக்கு ஒரு தனி ருசி. நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது போல் இருக்கும்.

அதன் சுபாவத்தை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் நான் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டிலிருக்கும் போது கூடக் கான்வாஸ்ஷூஸ் அணிந்து கொள்வது வழக்கமாகி விட்டது. ராஜூ அதைப் பொருட்படுத்தவில்லை. செருப்பை நக்குவதில் அதற்குப் பன்மடங்கு உற்சாகம். என் நண்பர்கள் கூட ஏதாவது ”சருமவியாதி பிடித்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடன் என்ன சொல்வது. “வெள்ளிக்கிழமை தோறும் 12 மணிக்கு இறைச்சி கிடைக்கும் என்பதால் என் ராஜூ என் காலை நக்கித் தின்கிறது” என்று சொல்ல முடியுமா? நான் சிரிப்பேன்.

ஆனால் 10 நாட்கள் முன்பு நடந்த சம்பவம்தான் என்னை அசத்தி விட்டது.

அன்றும் ஒரு வெள்ளிக்கிழமை.

பாம்பேயிலிருந்து என்னைக் காண்பதற்குப் பிரசித்த எழுத்தாளர் என். எஸ். கானேகர் வருவதாக எழுதியிருந்தார்.
இத்தனைக்கும் அவர் என்னை ஸ்டேஷனுக்கு வரக்கூட எழுதவில்லை, நான் போகவுமில்லை.
அவராகத்தான் வீடு தேடி வந்தார்.
நான் அவருக்கு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுக்கவில்லை.
அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை.
ஏன், முதல் நாள் அவர் நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டார் என்பதால் அடுத்தநாள் என் வீட்டில் வலுக்கட்டாயமாகச் சாப்பிடவும் செய்யவில்லை.

ஆனாலும் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். வெகு காலமாக எங்கள் இருவருக்கும் இலக்கியம் மூலமாக ஒரு பிணைப்பு. ஒவ்வொரு சமயம் என்னிடம் “என்னை விட நீ நன்றாக எழுதுகிறாய்” என்று சொல்லியிருக்கிறார்.

எனக்கு அவர் என்னை உற்சாகப்படுத்த அப்படிச் சொல்கிறார் என்பது தெரியும். இல்லாவிட்டாலும் எங்களிருவரிடையும் நீ பெரியவன் நான் சின்னவன் என்ற சின்னத்தனமான பாவம் என்றுமே இருந்ததில்லை.

அப்படிப்பட்டவரிடம் நான் வெள்ளிக்கிழமை என்பதையும் மறந்து பேசிக் கொண்டிருந்தேன். ராஜூ சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு சமையல் அறைப்பக்கம் சென்றது. மீண்டும் என்னருகில் வந்தது. மீண்டும் வாசல் திண்ணைக்குச் சென்றது. மீண்டும் என்னிடம் வந்தது.

“இவருடன் ஏன் சமயத்தை வியர்த்தமாக்குகின்றாய்? ஏதாவது இறைச்சி கிடைக்குமோ?” என்று கேட்பது போல் இருந்தது.

திடீரென்று அது வாசல் திண்ணையில் இருந்த காக்கையை துரத்திச் சென்றது.

கானேகர் என்னிடம் “உன் நாய் ஏன் ஒரு மாதிரி இருக்கிறது?” என்று கேட்டார்.

நான் ஒன்றுமில்லை என்றேன். அப்படி இல்லாமல் நான் அவரிடம் என் செருப்பை நக்கச் சமயம் கிடைக்காததால் அதற்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?

மணி 12 அடித்த பொழுது கானேகர், “வா வெளியில் போய் சாப்பிடலாம்” என்றார்.

அப்பொழுதுதான் ராஜூ ஓடிவந்து என் காலின் ஆடு சதையை கடித்தது. கானேகர் ஆடிவிட்டார். அவர் முதலில் நாயைப் பிடித்துக் கட்டு என்றார். ஆனால் ராஜூ நான் அதட்டியவுடன் அடங்கிவிட்டது. வேலைக்காரன் அதைக் கட்டினான்.

கானேகர் ஊருக்குத் திரும்பும் முன் என்னுடன் டாக்டரிடம் வந்தார். டாக்டர் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். கானேகர் ரயிலில் ஏறினதும் (நான் ராஜு என்னைக் கடித்ததும், அதன் பரபரப்பின் காரணத்தைச் சொல்லியிருந்தேன்) சிரித்துக் கொண்டே நாய்க்கு ஒரு ராத்தல் இறைச்சி என்றால் இவ்வளவு சபலமா என்று கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு என் வேலைக்காரன் ராஜூவை கார்ப்பரேஷன் நாய் பிடிக்கிறவனிடம் சேர்த்த பொழுது எனக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அது செய்தது அவ்வளவு பெரிய குற்றமாக எனக்குப் படவில்லை. ஆனால் நான் வேலைக்காரனைத் தடுக்கவில்லை. ஏனென்றால் அது கடித்ததைவிட அது வாரந் தவறாமல் என் காலை நக்கினதுதான் எனக்குச் சகிக்க முடியவில்லை.
கணையாழி, 1968

Sunday 22 January 2017

ஆத்மாநாம் படைப்புகள்


http://www.tamilvu.org/library/l9301/html/l9301cnt.htm

கொல்லிப்பாவை-நன்றி சதீஷ்

*கொல்லிப்பாவை 1 - நகுலன்*

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண் வளைத்துக் குறிவீழ்த்திச்
சௌரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்.
ஆனால்
வந்து போகும் அருச்சுனன் நான்
நாக்கடித்து
வாய்ப்பறை கொட்டி
வேதாந்தக் கயிறு திரித்து
அவள் உருகக் கண்டு
உள்ளம் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அருச்சுனன் நான்.

திரௌபதி அவள்;
நெற்றித் திலகமும்
நெறிமிக்க வாழ்வும்
கைத்திறனும் கலைப்பொலிவும்
மிக விளங்க,
நேர் நோக்கும் நிமிர்நடையும்
பொலிவூட்டக்
கல்வி கற்றுத் தொழில் புரிந்து
காரியத் திறனும் கருத்துறுதியும்
பூண்ட
இந்நங்கை நல்லாள் அருச்சுனன் தன்
அவ நம்பிக்கை உருவறிவாளா ?
அன்று
சுற்றத்தார் முகம் நோக்கி
களம் தனில் கை சோர்ந்தான்.
அதன் முன்னர்
விதிமுன் தலை வணங்கி
உருமாறி பேடியானான் அவன்.
என்றாலும்
கண்ணன் கை கொடுக்க
உள்நின்ற சௌகரியம் எடுத்துதவ
முன்னோக்கித் தருக்குடன் திரிந்தான் அவன்.

திரௌபதி அவள் ;
தூய்மையின் ஊற்று.
பலர் கண்டும் உருவ அமைதி பெற்று
பேடியெனச் செயலிழந்து
தன்னைக் கண்டு மயங்கித் திரிவோனை
“வாழ்க்கைப் பாடி வீடு சென்று
வாகை சூடி வா
காத்திருப்பேன்” என
மௌனத்தில் ஞானம் பேசி
முறுவல் பூத்துக் கற்பின் வைரப்படை
தாங்கி நிற்கும் கொல்லிப் பாவை அவள்.

.

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்.

-நகுலன்

கொல்லிப்பாவை-நகுலன்

*கொல்லிப்பாவை 3 - நகுலன்*

கடல் முனையில் கல்லுருப்பெற்று
கானகத்தில் சிலையாகி
ஆசை தூக்கத் துறக்கத் துறந்து
தெரு நடுவில் தேவன் இணையடி
தன்னறல் கூந்தலால் வருடி
ஏக பத்தினி மிதிலை தேவியாகித் தீக்குளித்து
ஐவர் வரித்த அருங்கனியாகிச்
சபை நடுவில் துயரெய்தி
வீடுவிட்டு வெளிவந்து
கூடுவிட்டுக் கூடு புகுந்து
கட்டுண்டு கூட்டுண்டு
மகப்பெற்றுச் சகத்தில் வாழ்ந்து
அம்முறையும் தவிர்த்து
வறிது வாடி தனி நொந்து
பலபெற்று நீ என்னருகமர
மறுத்ததும் என்கொல் என்னுள்ளங்
கவர் பிராட்டியே நீ ? *-நகுலன்*

-சூர்யா

கலீல்ஜிப்ரான்

💥ஒரு முறை
நான் ஓடையிடம்
கடலைப் பற்றிச் சொன்னேன்.
அது என்னை
ஒரு கற்பனாவாதியாக
நினைத்துக் கொண்டது.

💥ஒருமுறை
நான் கடலிடம்
ஓடையைப் பற்றிச் சொன்னேன்
அது என்னை
ஒரு குறுகிய புத்திக்காரனாக
நினைத்துக் கொண்டது.

- கலீல் கிப்ரான்

Friday 20 January 2017

தாராபாரதி

வேலைகளல்ல வேள்விகளே!

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் - உன்
கைகளில் பூமி சுழன்று விடும்
தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை
விழிவிழி உன்விழி நெருப்புவிழி உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி
எழுஎழு தோழா! உன் எழுச்சி இனி
இயற்கை மடியில் பெரும்புரட்சி

கீழடி

*கிடப்பில் போடப்படுகிறதா கீழடி?*

Updated: January 5, 2017 10:01 IST | சு.வெங்கடேசன்

குஜராத்தில் உள்ள வட் நகரில் (நரேந்திர மோடியின் சொந்த ஊர்) மத்திய தொல்லியல் துறையின் கீழ், 2017 ஆண்டுக்கான அகழாய்வுப் பணியின் தொடக்க விழா நவம்பர் 10-ம் தேதி நடந்தது. இவ்விழாவில் குஜராத் மாநில முதல்வரும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரும் பங்கெடுத்துள்ளனர்.

இதே போன்று கடந்த ஆண்டு அகழாய்வுப் பணி நடைபெற்ற 'ஜூர்' என்னுமிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. அங்கும் 2017-ம் ஆண்டுக்கான அகழாய்வுப் பணியின் தொடக்க விழா ஜனவரி 1-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. பிஹாரில் உள்ள 'உரைன்' என்ற இடத்தில் அகழாய்வுப் பணி டிசம்பரில் தொடங்கப்பட்டுவிட்டது.

புறக்கணிக்கப்பட்ட கீழடி

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்த கீழடி அகழாய்வுப் பணியின் 2017-ம் ஆண்டுக்கான தொடக்கம் இப்போதுவரை நடைபெறவில்லை. விசாரித்தால் அகழாய்வைத் தொடர்வதற்கான அனுமதியை மத்திய தொல்லியல் துறை மறுத்துள்ளது எனத் தெரிய வருகிறது.

கீழடியோடு அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட வடஇந்தியப் பகுதியைச் சேர்ந்த பிற இடங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழகத்தில் அகழாய்வு நடந்த ஒரே இடத்துக்கும் அனுமதி மறுக்கப்படுவது எதனால்? புதியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் தொல்லியல் பொருட்கள் கிடைத்திருப்பது கீழடியில்தான். அதன் தொடர்ச்சியாக அகழாய்வை விரிவுபடுத்தும் முன்னுரிமை கீழடிக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் காரணம் என்ன? எந்தக் காரணத்தையும் வெளிப்படையாகச் சொல்லாமல், அதே நேரத்தில் அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போடுகிற வேலையைச் செய்கிறது மத்திய தொல்லியல் துறை.

குஜராத்தின் தோலாவீராவில் 13 ஆண்டுகள் அகழாய்வு செய்தவர்கள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் 10 ஆண்டுகளும் குஜராத்தின் லோத்தல், உ.பியின் அகிசித்ராவில் ஆறு ஆண்டுகளும் அகழாய்வைச் செய்தவர்கள், கீழடியில் மட்டும் இரண்டே ஆண்டுகளில் அகழாய்வை முடிவுக்குக் கொண்டுவருவதன் நோக்கம் என்ன? மகாபாரதம், ராமாயணம் தொடர்பான பகுதிகளான உத்தரப் பிரதேசத்தின் சிருங்கவீர்பூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அகழாய்வுகள் நடந்துள்ளன என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

கார்பன் பகுப்பாய்வு

அகழாய்வில் கிடைக்கும் கரி மூலப் பொருட்களின் மாதிரியை வேதிப்பொருள் ஆய்வகங்களுக்கு அனுப்பி 'கார்பன்-14' பகுப்பாய்வு முறையில் ஆய்வுசெய்து அப்பொருளின் காலத்தை நிர்ணயிக்கின்றனர். அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் பீட்டா அனாலிசிஸ் ஆய்வு நிறுவனத்துக்கு இவை அனுப்பப்படுகின்றன.

அகழாய்வில் கண்டறியப்படும் பொருட்களில், எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை 'கார்பன்-14' பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறையே முடிவுசெய்கிறது. ராஜாஸ்தானின் காளிபங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்தவற்றுள் 28 பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். தோலாவீராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியும், கிரிசராவில் இருந்து 15 பொருட்களின் மாதிரியும் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், கீழடியில் எடுக்கப்பட்ட மூலப்பொருள் மாதிரியில் இரண்டே இரண்டை மட்டும்தான் 'கார்பன்-14' பகுப்பாய்வுக்கு அனுப்ப தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் பத்து மாதிரிகளையாவது அனுப்ப வேண்டும் என்பதே கீழடியை அறிந்த தொல்லியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

பின்னணி என்ன?

இரும்புக் காலத்தில் தொடங்கி வரலாற்று ரீதியான ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ள இடம் கீழடி. இவ்வாதாரங்களின் மாதிரிகள் 'கார்பன்-14' பகுப்பாய்வு செய்யப்படும் போதுதான், கால வளர்ச்சியைத் துல்லியமாக நிறுவ முடியும். அப்படி நிறுவப்படுவதை ஏற்கும் மனநிலையில் இருப்பவர்கள், கிடைத்தவற்றுள் அதிகமான மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப முன்வருவார்கள். அவ்வாறு முன்வர மறுப்பதி லிருந்து அவர்களின் நோக்கம் வெளிப்படுகிறது.

அதுமட்டுமல்ல, இரண்டே ஆண்டுகளில் அகழாய்வை முடிப்பதென்பது அவ்வாய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் அறிஞர்களை எவ்விதமான, தெளிவான முடிவுக்கும் வரவிடாத நிலையைத் திட்டமிட்டே உருவாக்குவதாகும். 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல் மேட்டில், வெறும் 15%க்கும் குறைவான இடத்தில் மட்டும் ஆய்வை நடத்தினால், எந்த ஒரு முடிவையும் நிறுவுதல் இயலாத காரியம். இந்நெருக்கடிக்குள் ஆய்வாளர்களைத் தள்ளும் நோக்கம்தான் இச்செயலின் பின்னணியா?

2005-ம் ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூரின் ஆய்வு முடிவுகள் இப்போது வரை வெளிவரவில்லை. ஆனால், அதே காலத்திலும் அதற்குப் பின்னாலும் அகழாய்வு நடந்த ஆதம் (மத்தியப்பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) செக்-86 (ராஜஸ்தான்) ஆகிய இடங்களின் அகழாய்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. கீழடியின் அகழாய்வுப் பணியை அரைகுறையாக முடிவுக்குக் கொண்டுவருதல் என்பது இந்த ஆய்வறிக்கையையும் முடிக்க முடியாமல் கிடப்பில் போடவைக்கும் முயற்சியின் வெளிப்பாடா என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.

அருங்காட்சியகத்துக்கு 151 கோடி

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாடு கடந்த வாரம் (டிச 29, 30) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கீழடியின் கண்டுபிடிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர், "தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை. இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அவ்வாய்வு மேலும் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார். ஆனால், இங்கு எல்லாம் தலைகீழாக நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த மாதம் அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம்தான், கீழடியில் கிடைத்துள்ள இரண்டு மாதிரிகளை மட்டும் கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பினால் போதும் என்று வெறும் ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

ஆனால், செய்ய வேண்டியவை எல்லாம் இனிதான் இருக்கின்றன. தமிழகத்தின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் உடனடியாக இதுகுறித்து வினையாற்ற வேண்டும். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கீழடிக்கான குரல் வலியுறுத்தப்பட வேண்டும்.

பெரும் மதங்களும் கடவுளர்களும் உருவாகாத ஒருகாலத்தில் மலர்ந்திருந்த நாகரிகத்தின் சான்றுதான் கீழடி. அங்கு கிடைத்துள்ள 5,300 தொல்பொருட்களில் மத அடையாளம் சார்ந்த பொருள் எதுவுமில்லை. பெருமதங்களின் ஆதிக்கம் உருவாகாத ஒருகாலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த நாகரிகத்தின் எச்சங்கள் இவை. இங்கு அகழாய்வைத் தொடரவைப்பதும் அவ்வடை யாளங்களைப் பாதுகாப்பதென்பதும் தமிழ்ச் சமூகத்தின் அர்த்தம்மிக்க பண்பாட்டுச் சாரத்தைப் பாதுகாக்க எத்தனிப்பதாகும். என்ன செய்யப் போகின்றன தமிழகத்தின் அரசியல் கட்சிகள்?

-சு.வெங்கடேசன், 'காவல் கோட்டம்' நாவலாசிரியர் | தொடர்புக்கு: suvetpk@gmail.com