Friday 29 April 2022

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

ஏதோ தேடலுக்காக
தொலைவு தொலைவு போகிறோம்
தேடலின் சுழலில் சிக்கி
தொலைந்தும் போகிறோம்
என்றாவது முற்றுப்பெறலாம்
நம் தேடலோ
நமக்கான தேடலோ...

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

மருத்துவ சின்னம்

நவீன மருத்துவ சின்னம் கடுசியஸ் (Caduceus) என்று அழைக்கப்படுகிறது. இரண்டு பாம்புகள் ஒரு கோளில் பின்னப்பட்ட ஒரு கிரேக்க கடவுளின் கைதடி தான் இந்த சின்னம்.

நம் உடலில் பல நாடிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது மூன்று நாடிகள். அவை இடகலை , பிங்கலை , சுழுமுனை என்பன.வலைவானதை பாம்புகள் என்று சொல்வது வழக்கம். இடகலை , பிங்கலை நாடிகள் வலைவானதாக இருப்பதால் அவை பாம்புகளாக சித்தரிக்க படுகின்றன.இந்த மூன்று நாடிகளும் சேரும் இடத்தை ஆற்றல் மையம் அல்லது சக்கரம் என்று அழைக்க படுகிறது. நவீன அறிவியலில் சொல்ல படும் நாளமில்லா சுரப்பிகள் உள்ள இடங்கள் தான் இந்த சக்கரங்கள்.நம் உடலில் உள்ள உயிர் சக்தியின் மையம் மூலாதாரம் என்ற கீழ் சக்கரத்தில் இருக்கும். இதை மேல் சக்கரங்கள் ஆன ஆக்கினை மற்றும் சகஸ்ரகாரத்திற்கு மாற்றுவதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்தார்கள்.

Thursday 28 April 2022

நட்சத்திர ஓட்டல்கள் என்று அழைக்கப்படக் காரணம் என்ன?



நட்சத்திர ஹோட்டல்கள் என்பதில் 'நட்சத்திரம்' என்பது ஹோட்டல்களுக்காக வழங்கப்படும் பிரத்யேக குறியீடு.

அந்த குறியீடுகளைப் பயன்படுத்தி மக்கள் அந்த உணவகங்களைப் பார்க்காமலேயே அதன் தரநிலையை அறிந்து கொள்ள முடியும்.
இதில் 1 முதல் 5 வரையிலான தகுதிகள் வழங்கப்படுகின்றன.

*ஒரு நட்சத்திர தகுதி

இந்த உணவகத்தில் தங்க முடியும்.
ஒருசில நாட்கள் ஓய்வெடுத்து சில பணிகளை முடிக்க விரும்புபவர்களுக்கு இவை ஏற்றவை.

*இரண்டு நட்சத்திர தகுதி

இந்த வகை உணவகத்தில் தங்கும் வசதி மட்டுமன்றி அடிப்படை வசதிகள் ஒருசில கூடுதலாக இருக்கும்.
சுருக்கமாக கூறினால், "சரி, இதுவாச்சும் இருக்கே" என்ற நினைக்கத் தோன்றுபவை.

*மூன்று நட்சத்திர தகுதி

பொதுவாக கூறினால் தனித்துவமான வசதிகளுடனும் தரமான உணவு வசதியும் வழங்கப்படுபவை.

*நான்கு நட்சத்திர தகுதி

இங்கு அனைத்தும் உயர்தரத்தில் வழங்கப்படும்.

#ஐந்து நட்சத்திர தகுதி

இந்த வகையானது சிறப்பு வாய்ந்தது.
இங்கு மேற்கூறிய அனைத்து வசதிகளுடன் முக்கியமான கூட்டங்கள் (மீட்டிங்) மற்றும் மிக முக்கியமான நபர்களுக்காக அமைக்கப்பட்டு நடத்தப்படுவது.

கபீர்

கடவுளானவர் மணலில் சிதறிக் கிடக்கும் சர்க்கரை
அதை யானையால் பொறுக்க முடியாது
குரு ஓர் அற்புதமான ஆலோசனை கூறினார்
ஓர் எறும்பாகி விடு,சாப்பிட்டு விடு

-கபீர்

அபிலாஷ்

காதலர்களை திருமணம் சராசரி மனிதர்களாக்கி விடுகிறது

-அபிலாஷ்

Tuesday 26 April 2022

ரூமி

எப்பொழுது கவலையும், ஏக்கமும் உன்னைப் பற்றிக்கொள்கிறதோ அப்பொழுது பொறுமையாக இரு. பொறுமை இலையைப்போல் மென்மையானது. அந்த மென்மையான பொறுமையால்தான் மகிழ்ச்சிக்கான நுழைவாயிலைத் திறக்க முடியும். 

- ரூமி

Monday 25 April 2022

அப்துல்ரகுமான்

கல்வி என்பது உள்ளே இருப்பதை
வெளியே கொண்டுவருவது தான்
வெளியில் இருப்பதை உள்ளே திணிப்பதல்ல

-அப்துல்ரகுமான்

Sunday 24 April 2022

மாவோ

போராடாமல் இருக்க
கோழைகளுக்கு காரணம்
இருந்துகொண்டே இருக்கும்.

-மாவோ

Saturday 23 April 2022

கார்ல் மார்க்ஸ்

ஒரு பொருள் எவ்வாறு மதிப்பைப் பெறுகிறது என்றால் அதில் உருப்பெற்றிருக்கும் மனித உழைப்பே அப்பொருளுக்கு மதிப்பை தருகிறது

-கார்ல் மார்க்ஸ்

Wednesday 20 April 2022

எப்படி கதை எழுதுவது?-ரா கி.ரங்கராஜன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:27
Pages:256

எப்படி கதை எழுதுவது?
-ரா கி.ரங்கராஜன்

புதுக்கவிதை வந்த புதிதில்  வால்ட் விட்மன் ஒரு மேடையில் பேசும்போது சொன்னார்.. புதுக்கவிதையின் தோற்றம் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும். இனி கவிதை படிப்பவர்களை விட கவிதை எழுதுபவர்கள் அதிகரிப்பார்கள் என்றார். அதுபோலவே கதைகளும். தற்காலத்தில் நூற்றுக்கு 80 பேர் கதை எழுத ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் கதைக் காண வடிவம் இலக்கணம் என்று ஒரு வகை இருக்கிறது. அதனை அறிந்து கொள்ளும்போது தன் எழுத்துகளில் மெருகேற்றுவதுடன் சுவாரஸ்யத்தையும் கூட்டலாம். அவ்வாறு குமுதம் இதழில் ரா.கி ரங்கராஜன் அவர்கள் எப்படி கதை எழுதுவது? என்பது குறித்து விளக்கமாக ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.

கதைக்கான கரு என்பது ஒவ்வொரு மனிதர்களும் மனதின் உள்ளே நடைபெற்ற போராட்டத்தால் உந்தப்பட்டு, விவரித்து எழுதுகிறார்கள். அது எந்த நாட்டுக்கும் எந்த காலத்துக்கும் எந்த வாசகனுக்கும் ஏற்கக் கூடியதாக இருந்தது. சேக்ஸ்பியரும் அதுபோலத்தான் பல காவியங்களை படைத்துள்ளார். கதைக்கான கரு என்பது ஒவ்வொருவரின் கற்பனையில் முளைத்தாலும் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் கருவுக்கான கதையை விவரிக்கும்போது அந்த கதை இன்னும் மாறாத இலக்கியமாகிறது. கதைக்கான தீம் கிடைத்தவுடன் அதற்கு கதை வடிவம் தாருங்கள். அந்த கதையில் ஏதேனும் ஒரு தத்துவம் உங்களை அறியாமல் வந்திருக்கும் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அந்த தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கதை அமையுங்கள் என்று சொல்கிறார்

ஒரு கதையை எது நடத்திச் செல்லுகிறதோ அதைத்தான் கதையின் ஆரம்பம் என்று சொல்லவேண்டும் .அந்த ஆரம்பத்தை பிடிப்பதற்கு தெரிந்து கொள்வதுதான் சிறுகதை மாணவனின் முதல் வேலை. அதன்பின் கன்றின் பின்னால் மாடு வருகிற மாதிரி கதை தன்னாலே வரும் என்று சிறுகதை ஆரம்பம் வழியை குறித்து சொல்கிறார்.
சுஜாதா எழுதிய ஒரு கதை

" சைக்கிளில் வந்த ஒரு நபரை ஒரு வேன் மோதி தள்ளி விடுகிறது . பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுக்கலாம் என்று பக்கத்தில் உள்ள ஓட்டலில் டெலிபோன் செய்ய முயலுகிறார். இந்த மாதிரி விபத்துகளில் போலீஸ் சாட்சியாக மாற்றிக் கொண்டால் பிற்பாடு என்னவெல்லாம் கஷ்டம் ஏற்படும் என்பதை ஓட்டல்காரர் சொல்கிறார். போலீசுக்கு தெரிவிக்க வேண்டுமென்று இதயமும் தெரிவிக்க போய் தேவையற்ற தொல்லையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று அறிவும் சொல்ல அந்த கட்டம்தான் அரிசி என்ற கதைக்கு ஆரம்பம்.

மேலும் உதாரணமாக சில வரிகளை ஆரம்பமாக சொல்லியிருப்பார். விமலாவுக்கு பட்டுப்புடவை என்றால் மோகம். ஏற்கனவே 17 புடவை வாங்கி வைத்திருக்கிறாள். இன்று 18-ஆவது புடவை வாங்குகிறாள். சரி அப்புறம் அப்புறம் ஒன்றுமில்லை. கதையை நடத்திச் செல்லக்கூடிய ஆரம்பம் இங்கே எதுவுமே இல்லை.

அதனையே சற்று மாற்றி "விமலா பட்டுப்புடவைகள் வாங்குவது அவள் கணவனுக்குப் பிடிக்காது. 'இன்னொரு தரம் நீ வாங்குனது தெரிந்ததோ அத்தோடு தொலைந்தாய் என்று எச்சரித்திருக்கிறார் ஆகவே இப்போது வாங்கின புடவையை விமலா ஒரு பெட்டிக்குள் மறைத்து வைத்திருக்கிறாள். ஆனால் அவள் கணவன் ராமு ஏதோ ஒரு பழைய கடிதத்தை தேடி பெட்டி பெட்டியாக திறந்து பார்க்கிறான்.
விமலாவுக்கு பதைப்பு!  கதைக்கு தேவையான ஒரு பிரச்சனை இங்கே அமைகிறது.

கதை ஆரம்பித்த உடன் கதை சரியான திசையில் சரியான சம்பவங்களுடன் வளரும்போது அதற்கு ஒரு கட்டுக்கோப்பை ஏற்படுகிறது. ஒரு கதை எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதில் மேற்கொள் சொல்கையில் கதையின் முன் பகுதி பின் பகுதிகளில் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் விளக்கமாகச் சொல்லி இருப்பார். கதைகளுக்கான ஐடியா வானத்திலிருந்து வந்து குதிப்ப தில்லை. இந்த மண்ணை அதனுள் உடன் கலந்துபோன கற்களையும் சேர்ற்றையும் அவற்றை மிதித்துக் கொண்டு நடக்கிற- அப்படி நடக்க நேர்ந்த காரணத்தையும், தகுந்த வார்த்தைகளால் நையப்புடைக்க் படாத சொற்களால் மிகைப்படுத்தாத வர்ணனைகளால் விவரிப்பதே கதை.

கதையின் ஒரு காட்சியில் இரண்டு பாத்திரம் இருந்தாலே போதும் எழுதுகிற படி எழுதினால் விறுவிறுப்பு வந்துவிடும். பரபரப்பான கட்டமாக இருந்தால் 3 அல்லது4 பேர் இருக்கலாம்.
முக்கிய காட்சிகளை பிரிக்க தெரிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியாக பிரித்து எழுதினால் நன்றாக இருக்கும் .மொத்தையாக எழுதாதீர்கள். கதையின் எந்த கட்டம் முக்கியமானது என்பதை அறிந்து அந்த கட்டத்தை மட்டுமே காட்சியாக அமைக்க வேண்டும் .கதையின் எல்லா பகுதிகளையும் காட்சிகளாகவே அமைத்துக் கொண்டு செல்லக்கூடாது போன்ற முக்கிய அம்சங்களை சொல்லி இருப்பார்.

நாவல்களிலும் சிறுகதைகளிலும் வருவதுபோல் சிறுகதைகளும் பிளாஷ்பேக் வருவதுண்டு. கதையின் வலிமை கருதி வைக்கலாம் .ஆனால் பெரிதாக இருக்க கூடாது .கடந்தகால கதையை காட்டிலும் இன்றைய நிகழ்வுகளே மிகவும் முக்கியம். சிக்கலான இடத்தில் கதையை கொண்டு போய் நிறுத்தி விட்டு அங்கே தான் பிளாஷ்பேக் தொடங்கப்பட வேண்டும். சுருக்கமான சில வாக்கியங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கதையின் முக்கிய அம்சங்களான பிளாட் ஆரம்பம் நடு முடிவு இவைகளை நீங்கள் மனதில் தெளிவாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு எழுத உட்காருங்கள் .எழுதி முடித்த பிறகு எல்லா முக்கியமான அம்சங்களும் இடம் பெற்றிருக்கிறதா என்பதை கவனியுங்கள். சமீபத்தில் வெளிவந்த 3 வார இதழ்களில் உள்ள சிறுகதைகளை வாசியுங்கள் 

*அந்த கதைகள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததா? இருந்ததென்றால் ஏன்? இல்லை என்றால் ஏன் இல்லை ?

*கதைக்கு முக்கியமான பாத்திரங்கள் எவ்வளவு பேர் இருந்தார்கள?

* இவர்களில் எந்தப் பாத்திரம் ஏதும் இல்லை என்றால் கதை கெட்டுப்போயிருக்குமா?

* உங்களுக்கு புரியக்கூடிய ஒரு சிக்கல் அல்லது மோதல் அந்த கதையில் இருந்ததா?

* கதையின் முடிவில் அந்த சிக்கல் அல்லது மோதல் தீர்ந்ததா?

* முக்கியமான கதாபாத்திரம் ஏதேனும் சாதித்தாரா?

* போதுமான அளவுக்கு உரையாடல் இருந்ததா? உரையாடலினால் கதை நகர்ந்ததா?

 இவ்வளவு கேள்விகளுக்கு உங்களால் பதில் கொடுக்க முடிந்தால் கதையின் முக்கியமான அம்சங்களை நீங்கள் சரியானபடி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்படும் என்று ஆரம்ப நிலையில் எழுத உள்ளோருக்கு மிகச்சிறந்த கலங்கரை விளக்கமாய் ரா கி ரங்கராஜன் அவர்கள் அந்த புத்தகத்தை கொடுத்துள்ளார். புதிதாய் எழுதுவோர் இதனை நிச்சயம் வாசித்துவிட்டு எழுதினால் நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பார்கள் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday 19 April 2022

வாசித்ததும் யோசிப்பதும் -பட்டுக்கோட்டை பவளவண்ணன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:26
Pages:282

வாசித்ததும் யோசிப்பதும் 
-பட்டுக்கோட்டை பவளவண்ணன்

கதை சிறு கதைகளை படிக்கும் போது ஏற்படும் சோர்வு க்கு மாற்று மருந்தாக அவ்வப்போது சில துணுக்கு புத்தகங்களை படிப்பது வழக்கம். ஏனெனில் நம் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும், அறியப்படாத செய்திகள் இருக்கும், நாம் பல இடங்களில் பேசும்போது இதனை பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருக்கும், எனவே எப்போதும் ஒரு துணுக்கு புத்தகம் பார்த்தவுடன் ஓரிரு பக்கங்களில நன்றாக இருந்தால் வாங்கி விடுவேன்.

எம்ஜிஆர் படங்கள் என்றாலே பலருக்கும் உயிராக இருக்கும். படத்துடன் ஒன்றி விடுவார்கள் அதேபோல் ஒரு படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள் கூட்டம் படத்தை ஆவலுடன் துவக்கம் முதல் இறுதிவரை பார்த்துக்கொண்டிருந்தது. இறுதிக்காட்சியில் எம்ஜிஆரின் பின்னாலிருந்து நம்பியார் கத்தியை எறிய குறி பார்த்துக் கொண்டிருந்த போது உணர்ச்சி மிகுதியில் ஒருவர் தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து திரையை சுட்டுவிட்டார். எம்ஜிஆர் தனியாகவும் நம்பியார் தனியாகவும் போய்விட்டது இந்த செய்தியை கேட்டு எம்ஜிஆரே வியந்து போனாராம்.

ஒரு தவறான காரியத்தை செய்வதற்கு எந்த ஒரு சரியான வழியும் கிடையாது. தவறு என்று தெரிந்தால் செய்யக்கூடாது. அதற்கு நியாயம் கற்பிக்க கூடிய வழிகள் இருந்தாலும் தவறு தவறுதான். சட்டத்தின் ஓட்டைகள் இருக்கலாம். எதிராளி சாமர்த்தியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால நமக்கு அது தவறு என்று தெரிந்தால் அதை செய்யாமல் இருப்பதுதான் integrity

*உன்னிகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு கல்வியை அடிப்படை உரிமையாக கொள்ள வேண்டும் என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதிகள் மோகன் ,ஜீவன்ரெட்டி கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இரு நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்பு எழுதினார்.. என்னும் இரண்டு தீர்ப்புகளும் ஒத்த கருத்தை வெளியிட்டது. நீதிபதி மோகன் எழுதிய தீர்ப்பில் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்ற திருக்குறளை தமிழில் எழுதினார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் வள்ளுவர் குறள் அதுவும் வள்ளுவர் மொழியான தமிழிலேயே பதிவு செய்யப்பட்டது அதுதான் முதல் முறை.

*காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம் சி சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்தார். திமுகவின் இப்போதைய பொதுச் செயலாளர் அன்பழகன் இந்தித் திணிப்புக்கு எதிராக சட்டசபையில் காரசாரமாக பேசிவிட்டு அமர்ந்தார். சி சுப்பிரமணியம் எழுந்து சூடு ஆறிப்போன விஷயம் பற்றி பேராசிரியர் மிகவும் சூடாக பேசியுள்ளார் என்றார். சட்டென்று எழுந்த அன்பழகன் சொரணை உள்ளவனுக்குத்தான் சூடு தெரியும் என்றார்.

*ஜின்னாவும் காந்தியின் எப்போதும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு இருந்தனர். ஆனால் காந்தி கொலை செய்யப்பட்ட போது ஜின்னா நான் மிகவும் வருந்துகிறேன் என்று எனக்குள் ஏதோ ஒன்று செத்து விட்டது என்று சொன்னார். இனி ஜின்னா  யாருடன் மோதுவது? யாருக்கு எதிராக போராட முடியும்? பகைவன் இல்லை என்றால் ஆணவம் விழுந்துவிடுகிறது. நீங்கள் உங்கள் நண்பர்களாலும் பகைவர்களாலும் உருவாக்குகிறீர்கள். நண்பரும் பகைவரும் இல்லாதவர் தேர்ந்தெடுப்பு இல்லாதவர்.. அற்புதத்தில் அற்புதம் எனும் நூலில் ஓஷோ

*தமிழகத்தின் அப்போதைய முதல்வரான ஓ.பி ராமசாமி ரெட்டியார் ஒரு முறை உடல்நலமின்றி சிகிச்சைக்காக பொதுமருத்துவ மருத்துவமனையில் இருந்தார் .அப்போது மருத்துவருடன் கேட்டுக்கொண்டது.. எனக்கு சிகிச்சை அளித்த பின்னர் நீங்களோ உங்கள் உறவினர்களோ யாரும் என்னிடம் சிபாரிசுக்கு வரக்கூடாது, பதவிஉயர்வு சலுகையை எதிர்பார்க்கக்கூடாது, என்னிடம் அரசியல் குறித்து எதுவும் பேசக்கூடாது என்ற மூன்று நிபந்தனைகளை டாக்டர் சம்மதித்த பின்னரே சிகிச்சை பெற ஒப்புக்கொண்டார் ஓமந்தூரார். பிச்சையா எழுதிய சிந்தனை உள்ள நூலில் இருந்து

*குடிப்பழக்கம் என்பது வளர்ந்து வரும் ஒரு சமூக தீமை. அதை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதே என்னுடைய கருத்தாகும். ஆசைகட்டி அழைப்பதற்கு வீட்டுக்கு அருகிலேயே மதுக்கடை இருக்கும் வரையில் குடிகாரர் அதை நாம் அணுக முடியாது. ஒரு திறந்த பெட்டியில் நிறைய இனிப்பு பலகாரங்களை எதிரில் வைத்து விட்டு ஒரு குழந்தையையும் வயதானவரையோ கூட அதைத் தொடக்கூடாது என்று தடுக்க முடியுமா? அந்த பெட்டியை அகற்றினால் ஒழிய அது சாத்தியமில்லை. மதுவினால் வறுமை ஏற்படுகிறது, வறுமையினால் குற்றங்கள் ஏற்படுகின்றன, குற்றங்களின் குடும்பங்கள் சீரழிகின்றன என்று மதுவின் தீமைகள் பற்றி ஹரிஜன் பத்திரிகையில் காந்திஜி எழுதிய கட்டுரைகளில் சில பகுதிகள்

*கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஒரு பத்திரிக்கை கட்டுரையில் மணிரத்னத்துக்கு கிடைத்த ஒரு ஐடியா. அமெரிக்காவில் வளரும் சிறுமி தன் சொந்தத் தாயை சந்திக்க வியட்னாம் செல்லும்போது அவளை கேட்பதற்காக 10 கேள்விகள் எழுதி வைத்துக் கொள்கிறாள். இந்த ஒரு ஸ்பார்க் மணிரத்தினத்திற்கு போதுமானதாக இருந்தது .இதை ஈழப்போராட்ட சூழ்நிலைக்கு மாற்றலாம் என்றார் .இந்த படம் உலக அளவில் பல வெற்றிகளை கண்டாலும் தமிழ்நாட்டில் வியாபார ரீதியாக பெரிதாக போனதாக சொல்ல முடியாது. நட்சத்திரங்களை நடிக்க வைப்பதில் அவர்கள் நட்சத்திர அந்தஸ்தால் நிறைய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் ஏற்படுகின்றன. அவை நிறைவேறவில்லை என்றால் என்ன நல்ல படமாக இருந்தாலும் நிராகரித்து விடும் அபாயம் உள்ளது என்று ஆஸ்கார் விருது பெறுவது எப்படி எனும் கட்டுரையில் சுஜாதா எழுதியுள்ளார்.

பல சுவையான தகவல்கள் பல புத்தகங்களிலிருந்து காட்டப்பட்டுள்ள மேற்கோள்கள் படித்ததில் சிந்தித்தது படித்ததில் பிடித்தது எனும் தலைப்புகளில் பல சுவையான நிகழ்வுகளை படிக்கும்போது பல புத்தகங்களை படித்த இன்பம் கிடைக்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

நானும் நீதிபதி ஆனேன்-கே. சந்துரு

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:25
Pages:481

நானும் நீதிபதி ஆனேன்
-கே. சந்துரு

அதிகாரம் ஒருவரின் துடிப்பையெல்லாம் அடக்கி விடாமல் இருக்க ஒரு லட்சியமும் பிடிமானமும் நிச்சயம் தேவைப்படுகின்றன எனும் கருத்துக்கு உடன்பட்ட வாழ்க்கைதான் நீதியரசர் சந்துருன் வாழ்க்கையும். நீதிபதியானவர் ஒரு வழக்கின் வாதி பிரதிவாதங்களை கேட்டு சட்டங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்த்து தனது முடிவை அறிவிக்கிறார். ஒரு வழக்கின் இறுதியில் வழங்கப்படுவது தீர்ப்பா?அல்லது நீதியா என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். சட்டங்களின் வரம்புகளுக்கு உட்பட்டு சொல்லப்படுகின்ற தீர்ப்புகளை நாம் அறிவோம். சட்டங்களை மட்டுமே பார்க்காமல் நியாயங்களையும் நினைவில் கொண்டு வழங்கப்படுகின்ற ஒரு தீர்ப்பு நீதி என்ற மதிப்பைப் பெறுகிறது என்ற எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள்  எழுதி இருப்பது அப்படியே பொருந்துகிறது இந்த புத்தகத்திறகும்.

தன் சுய வரலாற்று புத்தகம் என்றாலும் இதில் உள்ள கருத்துக்கள் சொல்லப்பட்ட விஷயங்கள் அத்தனையும் மனித உரிமை குறித்த வழக்குகளில் பதிவு செய்தவையே. கல்லூரி மாணவராக இடதுசாரி சங்க மாணவர் தலைவராக வழக்கறிஞராக பணியாற்றிய அவரின் காலங்களில் நடந்த வழக்குகளும் சமூகப் பிரச்சினைகளையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் நீதிபதி கபாடியா அவர்கள் சொன்னதைப் போல "துறவியாக வாழ் குதிரைபோல் உழை"என்ற வரிகளை மனதில் ஏந்தி தன் இறுதி பணிக்காலம் வரையிலும் முற்போக்காகவும் சமூக நீதியுடனும் இருந்திருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக 1971 ஆம் ஆண்டு நடந்த மாணவர் படுகொலை விவகாரம் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற நிகழ்வுகளையும் அதில் தான் பங்கேற்ற போராட்ட வரலாறுகளையும் இங்கே நினைவு படுத்தி சொல்லியிரப்பார். இன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஜி ராமகிருஷ்ணன் அன்று கல்லூரியில் இவருக்கு சீனியர் மாணவர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட  சம்பவம் ஒன்றினையும் விவரித்திருப்பார்.
"இல்லாதவர்களிடம் பொருளில் வறுமை என்றால் இருப்பவர்களிடம் அதை உணர்வதிலும் புரிந்து கொள்வதிலும் வறுமை இருக்கிறது" எனும் வாக்கியம் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தது.

மறக்க முடியாத பொங்கல் எது என்ற கேள்விக்கு 1976 ஆம் ஆண்டு அவசர நிலைப் பிரகடனத்தின் போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் அப்போது வந்த பொங்கல் நிகழ்வும் தான் என்று நினைவு கூறுகிறார்.
மிசா சட்டம் குறித்து விரிவான கட்டுரையில் பேசியிருக்கிறார். சிறைத்துறை சீர்திருத்தங்கள் குறித்த இவரின் பார்வையில் ஒரு இடத்தில் சொல்லும்போது கைவிலங்கு உருவான கதையை  சொல்லி இருப்பார்.."மனிதனை மிருகமாக வைத்திருப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான் இரும்புச் சங்கிலியால் உருவாக்கப்பட்ட விலங்கு ஹேண்ட் கப். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20 அன்று கை விலங்குகள் நாள் அனுசரிக்கப்படும். 1912ஆம் ஆண்டு அந்த நாளில்தான் இதனை தயாரித்து அதற்கான காப்புரிமையும் பெறப்பட்டு.. பிரிட்டிஷ் பெருமளவு தயாரித்து விற்றது. இந்த கை விலங்குகள் தான் பல நாடுகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன என்னும் தகவல்களும் அறிய முடிந்தது.

எப்படி வந்தது  என்கவுண்டர்/லாக்கப் மரணங்களுக்கு இழப்பீடு எனும் கட்டுரையில் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை நடத்தியதோடு பாண்டியம்மாள் வழக்கு ஜெய்பீம் படத்தில் வந்த ராஜாக்கண்ணு வழக்கு, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் வழக்கு உட்பட பல வழக்கு விபரங்களையும் கூறி கட்டுரையை நிறைவு செய்து இருப்பார்.

2021 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரியான  ராஜேஷ் தாஸ் என்பவர் மற்றொரு பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த சந்துரு அவர்கள் ஏற்கனவே அவர் ஒரு வழக்கில் மனித உரிமை ஆணையத்திடம் ஆஜரான விபரங்களையும் தெரிவித்ததோடு மனித உரிமை குறித்தும் அது சார்பான வழக்குகளில் பங்கேற்றது மற்றும் பணியாற்றியது குறித்து எழுதி இருப்பார். மனிதருக்கான சுதந்திர உரிமைகளை நடத்திய சில வழக்குகளை புத்தகமாகிய அபிஷேக் சிங்வி அதற்கு "பதுங்கு குழியிலிருந்து" என்று தலைப்பிட்டு இருப்பார். அதாவது வழக்குகளை நடத்தி வெற்றி பெறுவதற்கு வழக்குரைஞர்கள் பதுங்குகுழியில் இருந்து போராட நேர்ந்திருக்கிறது என குறிப்பிட்டு இருப்பார்.

2007ஆம் ஆண்டு நீதிபதி ஷா அவர்கள் வருடாந்திர மலர் வெளியிடும் முடிவினை எடுத்து.. பணம் பார்க்காத வழக்கறிஞர்கள் அல்லது மூதாதையர்கள் திறமையான வழக்கறிஞர்கள் என்ற இரண்டு அளவுகோல்களை வைத்து எழுதச் சொல்லி  இருந்தார். அதில் கட்டுரை எழுதி இருந்த சந்துரு அவர்கள்.. எந்த கட்டுரையிலும் இடம் பெறாத வி.ஜி ராம், மோகன் குமாரமங்கலம், இராமச்சந்திரன், ஜீ.வசந்த், கே.டி பால்பாண்டியன் ,எஸ் டி வானமாமலை, கே.வி சங்கரன் போன்ற போன்றவர்களைப் பற்றி எழுதி இருந்தார்.' என்ன ஜட்ஜ் ஒரே கம்யூனிஸ்ட் வழக்கறிஞரின் பெயராக இருக்கிறதே என்று ஒருவர் கேட்க.. நான் வைத்திருக்கும் அளவுகோலின்படி தேறியவர் பெயர்கள் இவ்வளவுதான் என்று சொல்லியிருப்பார். 

இவர்கள் ஒவ்வொருவரின் சாதனைகளையும் நிகழ்த்திய வழக்கின் தன்மையை யும் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.சமீபத்தில கோகுல்ராஜ் கொலை வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞரும் ஓர் இடதுசாரி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீதிபதி சந்துரு அவர்கள் எழுதியது முற்றிலும் உண்மையே.

கற்சிலைகளும் கலை கலாச்சாரம் கட்டுரையிலும் கனிமவளங்கள் மதுரையில் சகாயம் தலைமையில் சீர்படுத்திய நடவடிக்கைகளைப் பற்றி சொல்லும்போது ஊடாக சிலைகளைப் பற்றி ஒரு வரி தகவலை சொல்லி இருப்பார். 2010ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் என்பவர் தொடுத்த வழக்கில் பொது இடங்களில் சிலை வைப்பதற்கு அரசின் முன் அனுமதி பெறவண்டும் என கூறியதுடன், வைக்கப்படும் சிலைகள் வெண்கலத்தில் இருக்க வேண்டும் என்று கூறியதும் புதிய செய்தியாக இருந்தது. மேலும் விழாக்கள் நடைபெறுவதற்கான நோக்கம் அரசு விழாக்கள் எவ்வாறு
 நடத்தப்படவேண்டும் என்பது குறித்தெல்லாம் விரிவாக அலசி சொல்லியிருப்பார்.

"கெட்ட அரசியலுக்கு மாற்று நல்ல அரசியலேயொழிய அரசியலை விட்டோடுவதல்ல" என்று கூறியதோடு மாணவராக இருந்தபோது நாவலர் நெடுஞ்செழியன் "மாணவர்கள் அமைதியின்மை" குறித்த கருத்தரங்கில் பேசிய போது நிகழ்ந்த சம்பவமும் தொழிற்சங்க வழக்கறிஞராக பணியாற்றிய போது ஆஜரான பல்வேறு வழக்குகளில் சுவையான சம்பவங்களும் இதில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

இறுதியாக தான் நீதிபதியான நினைவுகளை சுட்டிக் காட்டியதோடு அப்போது தனக்கு பாராட்டுரை யாக வந்திருந்த சக நீதிபதிகளில் கடிதத்தை பதிவுசெய்துள்ளார். அதில் இவரின் நிதர்சனமான உண்மை முகம் தெரியும். மூத்த வழக்கறிஞரான கே ஜி கண்ணபிரான் அவர்கள்
 வாழ்த்துரை கடிதம் அனுப்பியது "உன்னுடைய நியமனம் தாமதிக்கப்பட்ட நீதிக்கான சரியான உதாரணம். நீதி கிடைக்காததைவிட தாமதிக்கப்பட்ட நீதி மேல் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்றிருப்பார்.

இவர் ஓய்வு பெறும் நாளில் நிகழ்ந்த சம்பவம் தமிழ் நாடே அறியும் . நீதிபதியாக பணியாற்றிய 7 ஆண்டுகளில் ஒரு அறுவை சிகிச்சைக்காக விடுப்பு எடுத்தது மூன்று வாரங்கள் மட்டுமே அதைத் தவிர்த்து நீதிபதியாக விடுப்பு எடுத்ததே இல்லை .ஆனால் பணி நிறைவு விழா அன்று சேம்பரில் வந்து வாழ்த்து தெரிவித்தவர்கள் 10பேர் மட்டுமே. தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ள  நீதிபதிகள் எண்ணிக்கை 47 என்பதை மனதில் கொள்ளவும் என்று சொல்லும்போது நமக்கே கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. இருப்பினும் இவர் வரவுக்காகக் காத்திருந்த வாழ்த்து சொன்ன சாமானிய மனிதர்கள் தான் இவரின் இத்தனை வருட நேர்மையான பணிக்கு கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும் .நேர்மையுடன் பயணிக்கும் சந்துருவின் பயணத்தில் நாமும் அவரை பின் தொடர்வோமாக நேர்மையுடன் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday 18 April 2022

.இறையன்பு

தப்பிப்பதையே விடுதலையாகக் கருதி கொள்வவர்களுக்கு உலகமே சிறைச்சாலையாகத் தென்படும்

-வெ.இறையன்பு

Sunday 17 April 2022

அப்துற் றஹீம்

வருமானம் காலணி போன்றது.அது சிறிதாக இருப்பின் அதை அணிந்திருப்பவனின் காலை கடிக்கிறது. பெரிதாக இருப்பின் அவனை சற்று தடுமாற செய்கிறது.

-அப்துற் றஹீம்

காந்தியின் நிழலில்- எஸ் ராமகிருஷ்ணன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:23
Pages:220



இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய இப்புத்தகம். மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது.. காரணம் காந்தி பற்றி தெரியாத பல சுவையான தகவல்களை இந்த புத்தகத்தின் மூலம் அறிந்தது தான். பாடப்புத்தகங்களில் காந்தியை பற்றி நாம் படிப்பது ஒரு சிறு புள்ளிதான். இது போன்ற பல புத்தகங்களை வாசிக்கும் போதுதான் இன்னும் காந்தியின் மீதான மதிப்பும் மரியாதையும் கூடுகிறது.

டால்ஸ்டாய் தாரக் நாத் தாஸிற்கு என் லெட்டர் டு ஏ ஹிந்து என்று எழுதப்பட்ட கடிதத்தில் இந்திய விடுதலை அஹிம்சையான வழிவில்தான் சாத்தியம் என்று குறிப்பிடுகிறார். இதனை படித்த போது தான் காந்திக்கு டால்ஸ்டாய் மீது ஈர்ப்பு கூடியது. உடனே டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதுகிறார். அப்போது தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடும் ஒரு வழக்கறிஞராகவே டால்ஸ்டாய் அறிந்திருந்தார். இவ்வாறு கடிதப் போக்குவரத்துக்களின் சுவாரசியத்தை முதல் பகுதியில் விளக்கியுள்ளார்.

காந்தி பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால் அவரின் சத்தியாகிரகத்தை படிப்பதைவிட லூயி பிஷரின் காந்தியைப்பற்றி படிப்பதைத்தான் பரிந்துரைப்பேன் என்கிறார் எஸ்ரா. காரணம் ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் காந்தியை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அதில் எழுதி இருப்பார். அதற்கான உதாரணத்தையும் ஆங்காங்கே நமக்கு சொல்லும் போது அந்த புத்தகத்தை படித்திருந்தாலும் மீண்டும் மறுவாசிப்பு செய்ய தூண்டுகிறது.

எஸ் அம்புஜம்மாள் எழுதிய மகாத்மா காந்தி நினைவு மாலை புத்தகத்தை பற்றி சொல்லும் போது ஏன் காந்தி எளிய உணவை பெரும் விருந்தாக நினைக்கிறார் எனும் கேள்விக்கு உணவின் தேவை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்று அவருக்குத் தெரியும். ஆடம்பரமான விருந்தை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதே இல்லை என்று கூறுகிறார். நேர்மையின் அடையாளம் காந்தி என்கிறோம் அன்று காந்தி மட்டுமல்ல பலரும் நேர்மையின் அடையாளமாக இருந்தார்கள் காந்தி நேர்மையோடு சத்தியத்தையும் வாழக் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடித்தார் எனவே அவர் காந்தியாக இருந்தார் என்று கூறுகிறார்

ஒருமுறை மனச்சோர்வு கொண்டு இருந்த மிலியிடம் காந்தி சொன்னார் "உன்னுடைய கற்பனை உன்னை கோழை ஆக்குவதை நீ அனுமதிக்கிறாயா? எங்கே உனது நம்பிக்கை? உனக்கே நீ உண்மையாக இல்லை என்றால் எப்படி வாழ்வாய் ?

உனக்கே உண்மையாக இருக்கிறாயா? என்பதும் மிலிக்கு மட்டுமில்லை இந்தியர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியே என்று ஒரு கட்டுரையை முடிக்கும் போது நமக்கும் அந்த வரியை படித்தபோது சிலிர்ப்பாகத்தான் இருந்தது.

காந்தி 1925,1936,1944 மூன்று முறை மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு முறை அப்பென்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் .1913 முதல் 1948 வரை மட்டும் சுமார் 79 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்துள்ளார் .தன் வாழ்நாளின் கடைசி 40 வருடங்களில் தினசரி 18 கிலோ மீட்டர் நடந்து இருக்கிறார் எனும் மருத்துவ அறிக்கையை படிக்கும் போது நமக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

காந்தியின் உதவியாளராக ஓரிரு வரிகள் மட்டுமே அறிந்த வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படாத மகாதேவ் தேசாய் பற்றி இப்புத்தகத்தில் மிக அருமையாக விரிவாக விளக்கியுள்ளார். எல்எல்பி படித்து தேறிய தேசாய் 1906ல் காந்தியோடு சந்திப்பு ஏற்பட்டது. அவரோடு சிறை சென்றார். நேருவோடு உடனிருந்தார். புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார் .கட்டுரை எழுதியுள்ளார். 

தேசாய் ஆசிரமத்தில் வசிக்கவில்லை அருகிலுள்ள மகன்வாடியில்தான் வசித்திருக்கிறார்.ஒரு நாளைக்கு 16 மைல் தூரம் தேசாய் நடந்திருக்கிறார். சில நாட்கள் இரண்டு முறை இந்த தூரத்தை நடப்பதும் உண்டு. தண்டி யாத்திரையின் போது உடனிருந்து இருக்கிறார் .எதற்கும் கலங்காத காந்தி தேசாய் இறந்ததை அறிந்ததும் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். தன் கையாலேயே அவருக்கு சிதை மூட்டியிருக்கிறார் .இப்படி தேசாய் பற்றி அறியாத செய்திகள் இரண்டாவது நிழல் கட்டுரையில் மிக விரிவாக ஆழமாக பதிவு செய்திருப்பார்.

இந்தியாவில் காந்தி எழுதிய கடிதங்களை 100 தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த தகவல் ஆச்சரியத்தை தருகிறது. ஒரு தலைவர் இவ்வளவு பணிகள் உள்ள சூழலில் கூட இவ்வளவு விஷயங்களை எழுதி உள்ளார் என்று ஆச்சரியப்பட வைத்தது. காந்தி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பத்திரிக்கையாளராக தனது கருத்துக்களை வெளியிட்ட அனுபவங்களையும் ஹரிஜன் பத்திரிக்கை மற்றும் நவஜீவன் இதழில் தனது கடிதங்களை எண்ணங்களை வெளியிட்டதில் கூறியிருக்கிறார். கடிதங்கள் எழுதுவது பற்றி சொல்லும்போது..

பறவைகளால் சிறகில்லாமல் பறக்க முடியாது. ஆனால் மனிதர்களால் முடியும் .ஆமாம் நான் சிறகில்லாமல் பறந்து உங்களிடம் வந்து சேர்கிறேன். எப்படி எனது எண்ணங்களின் மூலம் நீங்களும் பறந்து வந்து என்னை அடைய முடியும். சிந்தனைகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உரையாடல் வழியே மக்களை சந்தித்துள்ளார்.

காந்தி பயன்படுத்திய கடிகாரத்தின் வரலாற்றினை அதை தயாரித்தவர்கள் விபரம் குறித்து இதில் பதிவு செய்துள்ளனர். காந்தி இறந்தபோது மணி 5 17 அதன் பிறகு அந்த கடிகாரம் போடவே இல்லை.எப்போதும் அவர் உடன் இருக்கும் கடிகாரம் என்று காட்சிப்பொருளாக இருக்கிறது. ஆனால் அதில் இந்தியாவின் சரித்திரம் புதையுண்டு இருக்கிறது.

வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும்போது சார்லி சாப்ளினை சந்திக்கிறார் காந்தி அப்போது ஒரு உரையாடலில் ஏன் இயந்திரங்களை ஏன் எதிர்க்கிறீர்கள் ? இயந்திரமயமாக்கல் காலத்தின் தேவையை தானே? என்று கேட்டதற்கு மௌனமாய் காந்தி பதிலளித்தார் இயந்திரங்கள் மேல் எனக்கு கோபம் இல்லை. எந்திரங்கள் மனித உழைப்பை முடக்கப்பட்டு விடும். மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி விடுவதை மட்டுமே நான் எதிர்க்கிறேன் என்று விரிவான பதில் கூறுகிறார். காந்தியின் எண்ணங்களை உள்வாங்கிக் கொண்ட சாப்ளின் பின்னாளில் தனது மாடர்ன் டைம்ஸ் படத்தில் இயந்திரம் ஒன்றினுள் மாட்டுவது போன்ற காட்சியை வைத்தார் என்று கூறுகிறார் எரிக் க்ளாம் 

இது போன்ற பல்வேறு தகவல்கள் சுவையான நிகழ்வுகளை சொல்லும் போது நமக்கும் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது முடிந்துவிட்டதே எனும் எண்ணம் வருகிறது. காந்தியை நினைவு கூர்வதும், காந்திய சிந்தனைகளை செயல்படுத்தவும் தேவையும் அவசியமும் இன்று அதிகரித்திருக்கிறது எனும் நோக்கில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் மனநிறைவைத் தந்தது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

கதை சொல்லி-கி.ராஜநாராயணன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:22
Pages:334

கதை சொல்லி
-கி.ராஜநாராயணன்

கதை சொல்லும் மரபு தமிழகத்தில் பன்னெடுங் காலமாகவே நடந்து வந்துள்ளது. தற்போது இரவினில் குழந்தைகளை தூங்க வைக்க மட்டுமே பயன்படும் கதை.. ஒரு காலத்தில் வாய்மொழி இலக்கியமாக ஒவ்வொருவரும் அறிந்த கதைகளை பரிமாறி செவிவழிக் கதைகளாக நிறைய கதைகள் நாட்டுப்புற இலக்கியங்களில் காணப்படுகிறது. அவ்வாறு கதைசொல்லி இதழை ஆசிரியராக கொண்டு கி.ரா வெளியிடுகிறார். இந்த புத்தகம் கதைசொல்லி புத்தகத்தின் மூன்றாவது பாகம் ஆகும். பல்வேறு ஆளுமைகள் இந்த புத்தகத்தில் தங்களுடைய கதைகளை பதிவு செய்துள்ளனர்.

பக்கத்து கட்டில் எனும் பிரெஞ்சு கதை மருத்துவமனையில் நிகழும் கதையாகும். வயதான ஒருவர் தன் படுக்கையில் படுத்தவாறு இருக்கும் போது நள்ளிரவில் விழிப்பு வரும். அதற்கு பிறகு உறக்கம் வராது. ஒருநாள் அவர் பக்கத்து கட்டிலை பார்த்தேன் அங்கே ஒருவர் திரும்பி படுத்து இருப்பது போன்ற ஒரு உருவம். உடனே செவிலியரை கூப்பிட்டு யார் இவர் என்று கேட்கிறார் .அங்கு யாருமே இல்லை என்று பதில் சொல்கிறார். இவருக்கு ஒரே குழப்பம் பிறகு தூங்கி விடுகிறாள் இரண்டாம்நாள் அதேபோல் பக்கத்துக் கட்டிலில் யாரோ ஒருவர் படுத்து இருப்பது போல் இருக்கிறது.

 இப்போது பணியாளரை கூப்பிட்டு யார் இவர் என்று கேட்கிறார் அப்போது அங்கு யாரும் இல்லை என பதில் கூறுகிறார் இவருக்கு மேலும் குழப்பம் அதிகமாயிற்று மூன்றாவது நாள் இரவு விழித்து பார்க்கும் போது அவரை பார்த்த ஒரு உருவம் இருக்கிறது இவர் இனி யாரையும் அழைக்காமல் தானே சென்று பார்த்துவிட வேண்டும் என்று மெல்ல படுக்கையைவிட்டு எழுந்து போய் அவரை தொட முயற்சிக்கிறார் அப்போது கீழே விழுந்து விடுகிறார். நொறுங்கிப் போன உடலை எடுத்து படுக்கையில் போட்டு விட்டு மருத்துவரும் செவிலியர்களும் அவரை உற்றுப் பார்க்கிறார்கள். ஏன் இவர்கள் மௌனமாய் கவலைப் படுகிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை .

தெளிந்த கண்களுடன் இருக்கும் கிழவரிடம் அவன் போய் சேர்ந்துவிட்டான். இதை விட மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது. மூன்று முகங்கள் மேலும் மேலும் மங்கலாகத் தெரிந்தன. தூர விலகிப் போயினர். எந்த அளவுக்கு என்றால் எவருக்கும் அவருடைய உரத்த குரல் கேட்கவில்லை என்று கதை முடிந்திருக்கும்.
 மரணத்தின் தருவாயில் இருக்கும் ஒருவரின் மனநிலையை மிக அழகாக மொழிபெயர்ப்பு என்ற உணர்வே இல்லாமல் சுவைபட விளக்கி இருப்பார்கள்.

தோளின் மீது ஒரு கை கதை. இதுவும் மொழிபெயர்ப்புதான். அதிகாலை அவசர அவசரமாக அலுவலகத்துக்கு செல்லும் போது ரயிலில் உறங்கி விடுகிறார் ஒருவர். திடீரென பயணிகளில் சத்தம் கேட்டு எழுந்து செல்லும்போது ஒரு கை பின்னாலிருந்து அவன் தோளை பற்றிய பிறகு உரிமம் இருக்கிறதா என்று கேட்கிறார். அவரின் இரும்பு கண்களில் அத்தனை ஆவேசம் என்ன உரிமம் என்று கேட்க.. நடப்பதற்கான உரிமம் என்று சொல்கிறார். உடனே தூக்கம் தெளிந்து காலையில் விழிக்கிறார் அந்த அதிகாரி. நடந்ததெல்லாம் கனவா என்று யோசித்து விட்டு மீண்டும் ரயிலில் ஏறி செல்கிறான் .அதே நிறுத்தம் வருகிறது .இப்போது ஏதோ ஒரு கையை அவர் எதிர்பார்த்துக் கொண்டு செல்கிறார். இதுபோல் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து செல்கிறார் என்பதோடு கதை முடிகிறது. ஒருவனின் பய உணர்வு எவ்வாறு அவனை துரத்திக் கொண்டே இருப்பதை இந்த கதையில் சொல்லியிருப்பார்.

கழனியூரன் எழுதிய கதைகளில் குலதெய்வ வழிபாடு குறித்த வரலாற்றினை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் திருநெல்வேலி மாவட்டத்தில் வனப்பேச்சி அம்மன் அமைந்துள்ள கோவிலின் வரலாறு அங்கு மக்கள் எவ்வாறு முதன் முதலில் அங்கு சென்று வழிபட்டனர் என்றும் கூறியுள்ளார் இதே போன்று கிராமத்துச் சூழல் சார்ந்த குலதெய்வ வழிபாடு இருப்பதையும் அவர் கூறியுள்ளார்.

மகாகவியும் மனைவியிம் என்ற பதிவில் முனைவர் இரா ஆலாலசுந்தரம் பாரதியாரின் எட்டையபுர வீட்டிலிருந்து துவங்கி புதுச்சேரி வரை கணவனுக்கும் மனைவிக்கும் உண்டான வாழ்க்கையையும் அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதங்கள் சம்பவங்களையும் கூறியுள்ளார். மேலும் பாரதி பாரதியாராக மாறிய நிகழ்வையும் தீண்டத்தகாதவரோடு அவர் காட்டிய அன்பினையும் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து வாசிப்போம்

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 16 April 2022

ஆளப்பிறந்தவர் நீங்கள் -சோம வள்ளியப்பன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:21
Pages:316

ஆளப்பிறந்தவர் நீங்கள் 
-சோம வள்ளியப்பன்

சங்க இலக்கியங்களில் தலைவன் என்றால் காப்பியத்தின் நாயகன் அல்லது காதலன் என்று பொருள் இருக்கும். காலப்போக்கில் தலைவன் என்ற சொல் குடும்பம் அரசியல் அனைத்தையும் தாண்டி தற்போது மேலாண்மை நிறுவனங்களில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தலைமைத்துவம் என்பதை பற்றி ஒவ்வொருவரும் விரிவாக கூறியிருக்கிறார்கள். தலைமைத்துவத்தின் பண்புகள் மற்றும் நல்ல தலைவர் ஆவதற்கான குணநலன்கள் குறித்தும் முன்னணி எழுத்தாளராக அறியப்படும் சோம வள்ளியப்பன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சீன தத்துவஞானி லாவோட்சு அவர்கள் தலைமைத்துவம் பற்றிய கருத்துக்களை மேற்கோள் சொல்லியுள்ளார் 
"தலைவன் என்று இருப்பதே தெரியாத அளவுக்கு இருப்பது தான் சிறந்த தலைமை. அவனை கொண்டாடியோ, அவனுக்குக் கீழ்ப்படிந்தோ மக்கள் நடந்தால், அவன் அவ்வளவு சிறந்த தலைவனாக இருக்க முடியாது. நல்ல தலைமைக்கு அடையாளம் அதிகம் பேசாமல் இருப்பது. மேலும் தலைவன் நினைத்த செயல் முடிக்கப்பட்டுவிட்டதும், தலைவனின் குறிக்கோள் நிறைவேற்றப்பட்டதும், மக்கள் அவனைப் பின்பற்றி செயலில் ஈடுபட்டவர்களை  தாங்களே அதை செய்து முடித்தோம் என்று நினைக்கவேண்டும் என்று விளக்கி இருப்பார்.

ஆசிரியர் பெப்ஸி நிறுவனத்தில் பணியாற்றிய போது பிரஞ்சு மொழியில் உள்ள வாக்கியத்தை உயரதிகாரிகள் சொல்வார்களாம் அது சந்தர்ப்பத்தை கவர்ந்து கொள் (seize the day) என்பது தான்.learn to fight,do it right போன்ற பத்து கட்டளைகளையும் அவர்களுக்கு கொடுத்து இருப்பார்கள். மேலும் வள்ளுவரின் குறளில் அமைந்துள்ள ஆளுமைப் பண்புகளையும் விளக்கி இருப்பார்.

முடிவு எடுப்பதில் உறுதி, விடாமல் செய்யும் பாங்கு போன்ற பண்புகளில் இந்தியாவில் முக்கிய தலைமை ஆளுமையாக இருந்தவர்களின் விவரங்களையும் கொடுத்துள்ளார். லீடர்ஷிப் பாலோயர்ஷிப் என இரு வகையான கூறுகளை விளக்கமளித்துள்ளார். மிகச் சிறந்த தலைவனாக எது காரணம் கேட்டார்களாம் what it took to be a great leadership அவர் சிரித்துக்கொண்டே great followers என்றாராம். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு தான் சிறந்த தலைவனையும் அடையாளம் காட்டுகிறது.

தலைமைப் பண்பில் முதலாவது அனைத்து முடிவுகளையும் தானே எடுத்துவிட்டு பின் பற்ற வைப்பது. இரண்டாவது பார்ட்டிசிப்பேட்டிவ்  ஸ்டைல் சில இடங்களில் சில நேரங்களில் தலைமைக்கு தெரியாத விஷயங்களும் இருக்கலாம். வாங்க பார்த்துக்கலாம் என்று சொல்லி அவர்களும் உறுதுணையாக இருந்து கலந்து ஆலோசித்து செய்வது. மூன்றாவதாக முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுப்பினர்களிடம் கொடுத்துவிட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை தலைமைக்கு தெரிவிப்பது உதாரணத்துக்கு கல்தூண் படத்தை மேஜர் சுந்தர்ரஜன் இயக்கினார் ஆனால் சிவாஜிதான் அனைத்துவித காட்சிகளையும் எடுத்தார். இதுபோல் தலைமை பண்புகளின் சில வகைகளை இதில் சுட்டிக் காட்டியிருப்பார்.

சரியான தலைமை செய்த மாயம் எனும் பகுதியில் 1916ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் இறந்தபிறகு காந்தியார் பேசுகிறார் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராஜ்குமார் சுக்லா என்ற விவசாயி எங்கள் ஊருக்கு வருமாறு காந்தியிடம் வேண்டுகோள் விடுக்கிறார் .அதனை ஏற்று சம்பரான் பகுதிக்குச் சென்று அங்கு விவசாயிகளுக்கு நடந்த கொடுமைகளை கேட்டு அறிந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கிறார். 

ஆனால் அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துகின்றனர். அதற்கு அவர் என்னை சாம்ரான் விட்டு வெளியேறிச் செல்லும் சட்டப்படியான ஆணையை நான் மதிக்க கூடாது என்பதற்காக மீறவில்லை. அதைவிட மேலான என் மனசாட்சி சொல்வதை கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறேன் என்றார். ஒருகட்டத்தில் நிலப்பிரபுக்கள் விவசாயிகளிடம் வசூலித்த தொகையை திருப்பிக் கொடுத்தனர். கூடவே வறட்டு கௌரவத்தையும் விட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நிகழ்வு சாதாரணமான செயலை போல் தோன்றினாலும் எடுத்த முடிவில் விடாப்பிடியாய் இருந்து தன் ஊழியர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்த செயலாக தெரிவிக்கிறார்.

Practice what you preach என்பார்கள் எல்லாத் தியாகஙகளுக்கும் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும் உதாரணத்துக்கு மதுவிலக்கு போராட்டத்தில் பெரியார் ஈடுபட்ட போது வெறுமனே சொல்லாமல் 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்து அதை உதாரணமாய் சொல்கிறார். நம்முடைய கொள்கையில் விடாப்பிடியாக உறுதியாக இருக்க வேண்டும் தோல்வியைக் கண்டு மனம் தளரக்கூடாது. மனம் தளரும் உறுப்பினர்களை நல்வாக்கு சொல்லி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். மார்ட்டின் லூதர் கிங்கின் எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்ற தலைப்பிலான பேச்சு நல்ல உதாரணம்.

மேலே போகப் போக தனிமை வந்துவிடும். முன் போல் எல்லாவற்றையும் எல்லோருடனும் பேசிவிட முடியாது. தலைமைக்கு பொறுப்பு இருக்கிறது. எதிர்பார்ப்புகள் இருக்கிறது. தலைமைக்கு எதிரிகள், தலைமையிடம் பொறாமை கொண்டவர்கள் இருப்பார்கள். தலைமையை கைப்பற்ற நினைப்பார்கள். இவர்கள் எல்லாம் கலந்ததாக தான் சுற்றியுள்ள கூட்டம் இருக்கும்.

#ரசித்த வரிகள்

தகவல் என்பது சொத்துக்களை விட மதிப்புள்ளது ஒவ்வொருவரின் யோசனைகளும் பங்களிப்புகளும் மிக முக்கியம்

என்னுடைய வெற்றிக்கான காரணம் வியாபாரத்தை சரியாக நிர்வகித்து அல்ல மக்களை சரியாக நிர்வகித்து.

தலைவராவது சிரமம் .அதைவிட சிரமம் தலைவராக தொடர்ந்து நீடிப்பது. அப்படி பலரால் நீடிக்க முடியாது கோளாறு காரணமாக கீழே விழும் சில ராக்கெட்டுகளை போல விழுந்து விடுகிறார்கள்.

நேற்றைய தலைவனுக்கு எப்படி சொல்ல வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் .இன்றைய தலைவனுக்கு எப்படி கேட்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

சிரமமான காலங்களில்தான் அதிகமாக கற்றுக் கொள்கிறோம்

இறுதியாக ராபர்ட் பிராஸ்டின் பாடலை மேற்கோள் கூறி முடிக்கிறார்." அந்தச் சந்திப்பில் இரண்டு பாதைகள் பிரிந்தன. அந்த இரண்டில் அதிகம் பேர் பிரயாணம் செய்த பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அந்த தேர்வு பெரிய மாயம். புரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் இதைத்தான் தலைவன் என்பவன் புதிய பாதைகள் உருவாக்கித் தருபவராக இருக்கவேண்டும். அப்படிப் பட்டவர்கள் யாராக இருந்தாலும் தலைவராகலாம். அதற்கான மனப்பக்குவம் உறுதி இருந்தால் போதும். தலைமை என்பது ஒரு பதவி அல்ல, அது ஒரு பாத்திரம். அது ஒரு பொறுப்பு என்று முடித்திருப்பார்.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

முரண்சுவை-நடிகர் ராஜேஷ்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:20
Pages:332

#முரண்சுவை
-நடிகர் ராஜேஷ்

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை புத்தகத் திருவிழாவில் நடிகர் ராஜேஷ் அவர்களின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. தான் படித்த புத்தகங்களின் மூலம் அவர் பேசிய பேச்சு அவரின் மேல் மதிப்பு கொள்ள வைத்தது. எப்போது அவரின் உரையை கேட்டாலும் அவர் புத்தகம் எப்போது வந்தாலும் வாங்கிவிடுவேன். அப்போதுதான் தினமணி கதிரில் அவர் எழுதிய கட்டுரையை ஓரிரண்டு படித்தாலும் புத்தகமாய் வாங்கி படிக்கும் போது முழுமையாய் கருத்துக்களை பெற முடிகிறது. 

ஒரு மனிதனுக்கு நான்கு விதங்களில் அறிவு வருகிறது..
படித்த அறிவு, நேரில் பார்த்த அறிவு, பிறர் கூறி கேட்ட அறிவு, தான் அனுபவித்து அறியும் அறிவு. இந்த நான்கு விதங்களில் பெரும் அறிவு தான் அவனது வாழ்க்கையை சீராக்க முடியும். இப்படி புத்தகங்களில் தான் படித்த தனி மனித ஆளுமைகளின் முரண்களை இந்த புத்தகத்தில் மிக அழகாக சொல்லியிருப்பார்.

சட்டைப் பையில் எப்போதும் ராஜினாமா கடிதத்தை வைத்திருப்பார் ராஜாஜி. ஜின்னாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸில் அப்போதே குரல் கொடுத்தவர், குலக்கல்வித் திட்டம் சுதந்திரா கட்சி என அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே வரும் போது 1962 ஆம் ஆண்டு தனது எண்பத்தி மூன்றாம் வயதில் அமெரிக்கா சென்று இறங்கிய உடன் அதிபர்  கென்னடி இவரை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றது ஆச்சரிய தகவல்களாய் இருந்தது.

எந்தத் துப்பாக்கியால் யூதர்களின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கொண்றாரோ அதேபோல் ப்ரீட்டா எனும் பிஸ்டலின் மூலம் தன்னை மாய்த்துக் கொண்டார்.
பெர்லினிலிருந்து 10 கி.மீ தொலைவில் ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருப்பதை அறிந்த ஹிட்லர் தன்னை 200 லிட்டர் பெட்ரோல் ஊற்றி எரிக்கும் படி ஆணையிட்டார். ஆனால் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக 195 லிட்டர் பெட்ரோல் தான் கிடைத்தது என்பது போன்ற அறியாத தகவல்கள் இதில் இருக்கிறது.

காமராஜரை பற்றி அறியாத பல விஷயங்கள் சொன்னதோடு தன்னை தோற்கடித்த சீனிவாசனின் திருமணத்திறகு நேரில் சென்று வாழ்த்தியவர்தான் காமராஜர்.
 நடிகர் ராஜேஷ் ஒரு முறை நாஞ்சில் மனோகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அப்போது முகம் தெரியாத ஒருவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டு சென்றார். பிறகு தான் தெரிந்தது அவர் தான் சீனிவாசன் என்று. வரலாறு சிலரை மறக்கச் செய்துவிடும். சிலரை மட்டுமே வரலாறு குறித்துக் கொள்ளும் அப்படிப்பட்டவர் தான் காமராஜர் என்றதோடு மேலும் பல தகவல்களையும் சொல்லி இருக்கிறார்.

லண்டனில் ராணி எலிசபெத் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் ஊர்வலம் செல்வாராம் அதை பார்த்துக்கொண்டிருந்த செல்வந்தருக்கு தானும் அதுபோல் ஊர்வலம் செல்ல ஆசைப்பட்டு ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சென்றாராம். உடனே அவரை கைது செய்து வழக்கு தொடுத்தார்கள். யாருமே அவரை விடுவிக்க வராத போது ஒருவர் மிகவும் துணிச்சலோடு வந்து வாதாடினார்.

 ராணியாரின் குதிரைகளைப் போல் அல்லாமல் எனது கட்சிக்காரரின் 7 குதிரைகளில் இரண்டு ஆண் குதிரை எனவே இந்த வேறுபாட்டின் காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உடனே அவரும் விடுதலை செய்தார் மகிழ்ச்சி அடைந்த அவர் 100 செக் தாள்களை கொண்ட செக் புக்கில கையெழுத்திட்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளும் என்றாராம். அவர் பணிவுடன் வேண்டாம் என்று மறுத்தாராம் அவர்தான் முகமது அலி ஜின்னா. அவ்வளவு துணிச்சல் மிக்கவர் தான் இறுதிக்காலத்தில் தன்மேல் வந்தமர்ந்த ஈயை கூட விரட்ட முடியாத சூழலை காட்சிப்படுத்தி இருப்பார் இப்புத்தகத்தில்.

1921 ஆம் ஆண்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காக பரிட்சையை புறக்கணித்தார். இருப்பினும் கண்டிப்புடன் அவரை மன்னித்த அரசு பின்பு நான்கு வருடம் கடினமாக உழைத்து பட்டம்பெற்றதால் அவருக்கு சாஸ்திரி பட்டம் கிடைத்தது. 

கிராமம் கிராமமாக உழவர்களை சந்தித்த லால்பகதூர் சாஸ்திரிக்கு தண்டனையாக முப்பது மாதம் சிறை தண்டனை கிடைத்தது. அப்போது அவரின் மகன் மற்றும் மகள் கொடும் நோயினால் இறந்தனர். ஆனாலும் இறப்பில் கலந்து கொண்டு மீண்டும் சிறை சென்றார். அவருடைய காலத்தில் தான் ஊர்க்காவல் படை அமைக்கப்பட்டது .பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டனர். ரயில்வே துறை மந்திரியாக இருந்தபோது முதல் முறை ரயில் விபத்து ஏற்பட்டபோது ராஜினாமா செய்ததை நேரு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்பதும் திருச்சி அருகே ரயில் தடம் புரண்ட போது அவர் விமானத்தில் சென்று கொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் அங்கிருந்து டெலக்சில் நேருவுக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த தவறுக்கு அவர் பொறுப்பில்லை ஆயினும் அந்தத் துறைக்கு அவர் பொறுப்பேற்று ராஜினாமா செய்தது அவரின் நேர்மையை குணத்தை அறியலாம்.

மேடைக்கு மேடை காங்கிரசை தாக்கி பேசிய ஜீவா தான் கடைசி காலத்தில் காமராஜருக்கு போன் பண்ணுங்க என்றாராம். ஜீவாவின் சிலைக்கு எம்ஜிஆர்தான் முழு செலவையும் ஏற்றிருந்தார். பிடித்த வாதம் பிடிவாதம் எனும் தலைப்பில் இந்திரா காந்தி குறித்து சுவைபட எழுதியுள்ளார் கணவர் பெரோஸ் காந்தியை கடைப்பிடித்த நாள் அன்று அவருக்கு ஒரு வீரவாள் பரிசளிக்கப்பட்டது ஒரு உறுதிமொழியை ஏற்க வைத்தனர்

"எங்கள் சுதந்திரத்தை பறிக்க நினைப்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த வாள் தான் பதில் சொல்லும் என்று கூறினார்களாம்"
இறப்பதற்கு சில மணி துளிகளுக்கு முன்புதான் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி செய்யும் கையெழுத்துதான் அவரின் கடைசி கையெழுத்தாக அமைந்துவிட்டது.

தனலட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் பெண தலைவராக விளங்கியவர் பாப்பா உமாநாத். ஒன்றரை வயதில் தந்தையை இழந்து வாழும் அவர் சிறு வயதில் அனைவரும் பாப்பா என்று அழைத்ததால் அதுவே அவருக்கு நிரந்தரமாகி விட்டது. வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்திய போதும் பொன்மலையில் பாலர் சங்கம் மாதர் சங்கம் போன்றவற்றில் ஈடுபட்டார்.வாழ்நாளெல்லாம் போராட்டங்கள், சிறைச்சாலை என இருந்தாலும் 1989 ஆம் ஆண்டு திருவெரும்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களின் குரலாக தொடர்ந்து குரல் கொடுத்தவர் இறுதிவரை இயக்கத்திற்காக தம் பணியைச் செய்தார். இறுதி காலத்தில் கூட கட்சி கொடுத்த ஓய்வூதியத்தை மீண்டும் கட்சிக்கே திருப்பி செலுத்தினார்.

இதுபோல் பல்வேறு ஆளுமைகளின சொல்லப்படாத தகவல்களை மிக சுவைபட சொல்லியுள்ளார் நடிகர் ராஜேஷ்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

இங்கர்சால்

உணர்வு பூர்வமாக சிந்திப்பதை அறிவு பூர்வமாக மாற்றி, அதில் பகுத்தறிவை புகுத்தி சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும்

-இங்கர்சால்

Friday 15 April 2022

ஜூ.வி

கன்னட தலித் எழுத்தாளர் சித்தலிங்கையாவின் சுயசரிதையான ஊரும் சேரியில் ஒரு பகுதி



ஒருகாட்டுக்குள் இருக்கும் கடவுளைப்பார்க்க ஒருவன் தன்னை அழைத்துச்செல்கிறான். அங்கு சின்னக்கல் மட்டும் கடவுளாய் உள்ளது.கோயில் இல்லையா என்றதும்,கோயில் கட்ட தங்களுக்கும் ஆசைதான்.ஆனால் யார் மேலயாவது சாமி

வந்து கோவில் கட்டக்கூடாதுனு தடுத்துடும்.ஏன்? னு கேட்டதற்கு உங்களுக்கெல்லாம் வீடு இருக்கிறாதா?,ணு சாமி கேட்குமாம். இல்லை என்றதும் உங்களுக்கு இல்லாதபோது எனக்கு எதற்கு என சொன்னதாம்.

மனிதாபிமானமே உந்துகோல். கீழ்வர்க்கத்தினரின் தெய்வங்கள் அவர்களல்லாமல் வேறில்லை.

பைக்கை நிறுத்தும் போது டிக் டிக் என்று சத்தம் வருவது ஏன்?



அதிக தூரம் வாகனத்தை இயக்கும்போது எஞ்சினில் இருக்கும் பிஸ்டனை சுற்றியுள்ள ஹவுசிங் அல்லது பேரல் எனப்படும் பகுதி அதிக சூடாகி அதில் வெப்பத்தை தணிப்பதற்காக இருக்கும் கூலிங் பின்ஸ் எனப்படும் தகடுகளும் சூடாகி சற்று நீட்சியடையும் .(EXPAND )

அதாவது வெப்பவிரிவாக்கல் .அது வெப்பத்தை தணிக்க வாகனத்தில் எஞ்சின் பகுதியில் அடுக்கடுக்கான தகடுகளாக இருப்பதை காணலாம் .

அது வாகனம் இயங்கும்போதும் சூடாகி விரியும் .அப்போதும் சத்தமெழுப்பும் .ஆனால் வாகனத்தில் சத்தத்திலும் ,காற்றின் சத்தத்திலும் நம் காதுகளுக்கு கேட்பதில்லை .

வாகனத்தை ஒட்டி வந்து வீட்டிலோ அல்லது சத்தமில்லாத அலுவலக சூழ்நிலையிலோ நிறுத்தும்போது அந்த தகடுகளானது குளிர ஆரம்பிக்கும் அதேபோல மீட்சியடையும் போதும் (SHRINK )சத்தமெழுப்பும் .சுற்றுப்புறம் அமைதியாக இருப்பதனால் அப்போது மட்டும் டிக் டிக் என்று சத்தம் தனியாக நாம் உணருமளவுக்கு காதுகளில் கேட்கின்றது .

இது பெரும்பாலும் புதிய வாகனங்களில் மட்டுமே கேட்கும் .இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு மேலான வாகனங்களில் இந்த சத்தம் கேட்காது .ஏனெனில் அதிகமுறை இதுபோன்று நீட்சியும் ,மீட்சியும் அடைந்த காரணத்தால் அந்த தகடுகள் சற்றே வலுவிழந்திருக்கும் .

-படித்தது

Thursday 14 April 2022

விகடன் மேடை

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:18
Pages:575

விகடன் மேடை

ஆனந்த விகடனில் வாரந்தோறும் வாசகர் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்துள்ள பதில்கள் தான் விகடன் மேடை புத்தகம். நெறியாளர்கள் பேட்டி எடுக்கும் போது கேள்வி கேட்கும் போது சில கேள்விகளை தவிர்த்து விடுவார்கள். ஆனால் வாசகர்கள் அப்படி அல்ல. உண்மையை பட்டவர்த்தனமாய் கேட்கும்போது பதிலும் பட்டவர்த்தனமாக சொல்ல வேண்டிய நிலை வரும். அவ்வாறு தன் மனதில் பட்டதை பிரபலங்கள் சுவாரசியமாகவும் துணிவுடனும் கூறியிருப்பார்கள். சில ஆளுமைகளைப் பற்றி நம் பிம்பத்தை மாற்றும் அளவுக்கு சில பதில்கள் இருக்கும். அவ்வாறு பிரபலங்கள் அளித்த பதில்களில் நான் ரசித்த பதில்கள் சில.

#கமல்ஹாசன்

நிறைய படித்தவர். விஷய ஞானம் உள்ளவர். நாம் கேட்கும் கேள்விகளுக்கு எதார்த்தமாகவும் உண்மையாகவும் பதில்கள் இருக்கும் அவ்வாறு கேட்ட கேள்விகள்..

*எந்திரன் படத்தில் நாம் நடிக்கவில்லை என்று நினைத்தீர்களா?

நினைத்திருந்தால், நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்

*அடுத்த பிறவி பற்றி?

இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைக் கதையாக நிரூபிக்கும் நல்லறிவாளராக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளராக.

*நமது தேசிய குணம்? 
"சமரசம்"

*வறுமையின் நிறம் என்ன? பஞ்ச'வர்ணம்

*தொண்டன் பக்தன் ரசிகன் யார் ஏமாளி?

ரசிகன் ஏமாறத் தேவையில்லை ரசனையை மேம்படுத்திக் கொள்ளும் வரை.

#இயக்குநர் பாலா

*அறியாமையை அறிந்து விடுவார்கள் என்பதால் தான் அதிகம் பேசுவதில்லை?

 கண்டுபிடிச்சிட்டியே ராசா

*பாலா ஒரு சுயமதிப்பீடு?
 நான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி

*உங்கள் பார்வையில் அழகு? முதுமை தான். அந்த முகச் சுருக்கங்கள்

*நீங்கள் ஈழத்தமிழனாக பிறந்தால்?
அங்கு பிறந்திருந்தால் செத்து மண்ணோடு மண்ணாக போயிருப்பேன். இங்கே பிறந்திருப்பதால் குற்ற உணர்வில் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன்

#சூர்யா

*நீங்க தம் அடிப்பீங்களா?

சினிமாவில் அடிச்சுகிட்டு இருந்தேன். பேரழகன் படத்தில் ஏவிஎம் சரவணன் சார் உங்களை பார்த்து 10 பேர் தம்மடிக்க பழகுவார்கள் என்று சொன்னார். உடனே நிறுத்தி விட்டேன். அவரிடம் பிராமிஸ் செய்தது இன்றுவரை அதை காப்பாற்றி கொண்டு வருகிறேன்.

(நிறைய கேள்வி பதில்கள் சூர்யா ஜோதிகாவை பற்றிய இருந்ததால் சொல்ல நினைத்தவை இது ஒன்றுதான்)

#தமிழருவி மணியன்

*தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் அநாதை யார்? 
தமிழருவி மணியன்

*பேச்சுக்கலையில் உங்கள் முன்னோடி யார்?
 அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக பேசினார் என்று மென்மையான வார்த்தைகளால்  மேடை நாகரீகம் காத்த ஈ.வே.கி.சம்பத்

#அப்துல் கலாம்

*உங்களின ரோல் மாடல் யார்?

 சிறுவயதில் பறவை பறக்கும் விதம் குறித்து கற்பித்து, வாழ்க்கையில் பறக்கும் எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர்.

*இவர் இல்லையேல் நான் இல்லை என எண்ணும் மனிதர் யார்? திருவள்ளுவர்.

*தெரிந்தே செய்யப்படும் ஊழல் தெரியாமல் செய்யப்படும் ஊழல் எது?
ஊழல் என்றால் ஊழல் தான். வேறுபாடு கிடையாது.

#விஜய்

*பல எஸ்எம்எஸ்கள் உங்கள் மொபைலில் வரும் போது உங்களின் ரியாக்ஷன்?
 S- சிந்திப்பேன் Mமௌனமாய் இருப்பேன் Sசிரிப்பேன்

*உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் ?

வள்ளலாரின் சொன்ன தனித்திரு விழித்திரு பசித்திரு

*பலம் பலவீனம் என்ன?
 பலவீனத்தை புரிந்துகொண்டால் பலம். பலத்தை புரிந்து கொள்ளாவிட்டால் பலவீனம்

#எஸ்.ரா

*எத்தனையோ இசங்கள் இருக்கின்றன உங்களுக்கு பிடித்த இசம் எது?
 கம்யூனிசம் எல்லா இசங்களும் அறிவாளிகளுக்காணது. கம்யூனிசம் மட்டுமே சாமானிய மக்களுக்கானது

*தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி? தோழர் நல்லகண்ணு

*எஸ்ரா ஜெயமோகன் சாரு இருவரில் யாருக்கு ரசிகர்கள் வாசகர்கள் அதிகம்?
ஒரே ரசிகர் தான் வேறு வேறு காரணங்களுக்காக மூவருக்கும் வாசகர்களாக இருக்கிறார்கள்.

*இதுவரை படித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
 ஒரு நூற்றாண்டு காலத் தனிமை எனும் புத்தகம்

*தமிழில் டாப் 10 புதினங்கள்?
மோகமுள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், புயலிலே ஒரு தோணி, கோபல்ல கிராமம், நாளை மற்றொரு நாளே, ஒரு புளிய மரத்தின் கதை, ஒற்றன், பசித்த மானுடம், இடைவெளி கடல்புரத்தில்.

#ட்ராபிக் ராமசாமி

*போலீஸ்க்கும் உங்களுக்குமான உறவு எப்போது ஆரம்பித்தது?

1963 ஆம் ஆண்டு பின்னி மில்லில் பணிபுரிந்தபோது ஊர்க்காவல் படையில் முதன் முதலில் நான்தான் அமைத்தேன். அப்போது மில்லில் பணிபுரிந்த நூறு பேருக்கும் நான்தான் கமாண்டராக இருந்தேன்

*ரா பார்த்திபன்

*ரஜினிக்கு ஒரு ஒன்லைன்?
 ரஜினி ஒரு லயன்

*எதையும் வித்தியாசமாக செய்யும் நீங்கள் வித்தியாசம் பார்க்காமல் செய்வது ?
மனிதம் வளர்ப்பது வித்தியாசம் பார்க்காமல்

*உதவி இயக்குனர்கள் பற்றி ?விரல்களின் உதவியின்றி கரம் வெறும் கட்டையே

இதுபோல் 20 பிரபலங்களில் ஒன் லைனர்கள் விரிவான பதிவுகள் இலக்கியங்கள் சினிமாக்கள் அரசியல் பதிவுகள் நட்புகள் தன்னம்பிக்கைகள் வாழ்வியல் குறித்து அவர்கள் விளக்கியுள்ள பதில்கள் மிகவும் அற்புதமானவை. ஒவ்வொரு பதில்களும் அடுத்தடுத்து சுவாரஸ்யத்தை தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன. சில பதில்கள் சுமாராய் இருந்தாலும் பல பதில்கள் படு சூப்பராய் இருப்பதே இந்த புத்தகத்தில் வெற்றியாக கருதுகிறேன் 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday 13 April 2022

பெரியோர்களே.. தாய்மார்களே!-ப.திருமாவேலன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:17
Pages:511

#பெரியோர்களே.. தாய்மார்களே!
-ப.திருமாவேலன்

உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில்,நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்
-லெனின்

பல ஆண்டுகாலம் ஆனந்த விகடன் வாசகராய் இருந்த பலரை 2016ம் ஆண்டு ஜூனியர் விகடனில் வந்த இந்த தொடர் பலரையும்.. ஜூனியர் விகடன் வாசகராக்கியது. இதில் இடம் பெற்ற அரசியல் தலைவர்கள் ஆகட்டும், வரலாற்று உண்மைகள் ஆகட்டும், படிப்பவர்களை சிந்திக்க வைத்தது. மேலும் மேலும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது. ஒவ்வொரு வாரமும் இந்த இதழில் எந்தத் தலைவர் இடம் பெற்றிருப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பல வாரங்கள் படித்தாலும் புத்தகமாய் படிக்கும்போது முழு மன நிறைவைத் தருகிறது.

இன்று பலரும் மேடையில் பேசும் பெரியோர்களே தாய்மார்களே என்ற சொல்லை முதலில் துவக்கி வைத்த பெருமை ஓமந்தூரார் ராமசாமி அவர்களை தான் சாரும் ஏன பிள்ளையார் சுழி போட்ட எழுத்துக்களே நன்றாக இருந்தது. அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கை பொத்திக்கொண்டு செல்வோரை கூப்பிட்டு இந்த சாக்கடைகளில் தான் பல உன்னத தலைவர்கள் உதயமாகி இருக்கின்றனர் என்றும், ஒவ்வொரு தலைவர்களின் அறிமுகமும் வியக்க வைக்கும் சம்பவங்களையும் இதில் பதிவு செய்துள்ளார்.

மானிடராய் பிறப்பது அரிது என்றாள் அவ்வை. மானுடனின் விலை 500 ரூபாயா? ஒருபக்கம் அரசியலை அலட்சியமாய் பார்த்துக்கொண்டு, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளின் அனைத்துக்கும் இலவச பொருளுக்கும் அலைகிறது மனம் என்று பட்டவர்த்தனமாய் இன்றைய வாக்காளரின்
 மனநிலையை சொல்லியிருப்பார் ஒரு இடத்தில்.

கொள்கைகளை முன்னெடுக்க லட்சியங்களை அடைய வருபவர்கள் அடுத்தவர்களை அழிக்க நினைக்க மாட்டார்கள்.மாறாக அழிக்க நினைக்க காரணம் லாபத்தில் பங்கு போட இன்னொருவன் வந்து விட்டானே என்ற ஆத்திரம்தான். குப்பைத் தொட்டிகளில் பார்க்கும் காட்சிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அங்கு விரட்ட ஒரு கல் போதும் இங்கு ஒரு கோடி பேரின் ஒரு சொல் வேண்டும். சொல்ல தயாரா தமிழன் என்று முடிந்திருக்கும்.

இரண்டு சொற்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் இல்லை ஒன்று தமிழன் இன்னொன்று திராவிடம் என்று நீதி கட்சி துவங்கி பல திராவிட கட்சிகளின் ஆளுமைகளையும், முன்னோடி அரசியல் இயக்க தலைவர்களையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் தமிழகத்தில் நடந்த விடுதலை வேள்விகளை பற்றியும் சுவைபட சொல்லியிருப்பார்.

1925 ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமை ஏற்றவர் சிங்காரவேலர் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடியவரும் அவர்தான் இன்று தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை பதிவு செய்திருப்பார். "அந்தப் பெண்ணுக்கு 15 வயது இருக்கும்போது படுக்கையில் அசைய முடியாமல் இருந்தாள். காந்தியை பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தார் .சிறை தானே உன் உடம்பை இப்படி ஆகிவிட்டது நீ வருத்தப்படுகிறாயா என்றதும் நிச்சயமாக இல்லை.. இன்னொரு முறை சிறை செல்லத் தயாரா என்று கேட்டாலும் தயார் என்றுதான் சொல்வேன் என்றாள் அந்தப் பெண். எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் கோகலேவோ,திலகரோ அல்ல 15 வயதான தமிழ் பெண் வள்ளியம்மை தான் என்று காந்தி சொன்னதை படிக்கும்போது உண்மையில் சிலிர்த்து விட்டது.

தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து எழுதி வரும் திரு திருமாவேலன் அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு செய்தியை சொல்லியிருப்பார். தந்தை பெரியார் ராமசாமியாக பரிணாமம் பெற்ற காலகட்டத்தில் அவருக்கு துணையாக இருந்த மூன்று சாமியார்கள்..ஒருவர் கைவல்யம் சாமியார், இன்னொருவர் மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், மற்றொருவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. ஜாதி மதத்தின் நீள அகலங்களை உணர்த்தி, அவரை அரசியல் துறையில் இருந்து சமூக சீர்திருத்தத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் இந்த மூவரும் தான். இவர்கள் அப்படி என்ன செய்தனர் என்பதையும் சுவைபட விளக்கியுள்ளார்.

நாசிக்கில் மாவட்ட நீதிபதி ஏ எம் டி ஜான்சன் ஒரு திரையங்கில் திரையரங்கத்தில் வைத்து கொல்லப்பட்டார் .இந்த வழக்கில் கைதான சாவர்க்கரை அந்தமானுக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். பிரிட்டிஷ் அரசுக்கு 1911,1918, கருணை மனு போட்டார்.
1924 இல் 5 ஆண்டுகளுக்கு எந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.

 அந்த தடை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டு 1937இல் தான் முழுமையாக நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட பின் நடந்த மாநாட்டில் தான் இந்தியாவில் இந்துக்களுக்கு என்றும் முஸ்லிம்களுக்கு என்றும் இரண்டு நாடுகள் உள்ளன என்று முதன்முதலில் பேசினார். இப்படியாக நீளும் கட்டுரையின் இறுதியில் முத்தாய்ப்பாக ஆசிரியர் எழுதியிருப்பார். தேசியக்கொடியில் மூன்று நிறங்கள், தேசிய விலங்குகளில் எத்தனையோ நிறங்கள், தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள். இவை அனைத்தும் என்ன சொல்கின்றன. இந்தியா ஒற்றை சமூகம் அல்ல, நாம் ஒற்றை சமூகமாக எப்போதும் ஆக முடியாது. ஆனால் ஒற்றுமை சமூகமாக எப்போதும் தொடரலாம் என்று அருமையாக விளக்கி இருப்பார்.

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பலரும் சொன்ன காரணத்தை சரியான உதாரணங்களுடன் காமராஜருக்கு சூட்டும் புகழஞ்சலி போல் இக்கட்டுரை இருக்கும். தெரிந்த தகவல்களோடு தெரியாத தகவல்களும் காமராஜரைப் பற்றி எழுதியிருப்பார். காமராஜரின் மரணம் மூளையில் சாத்தி வைக்கப்பட்ட ஈட்டியாக என்னை மாற்றிவிட்டது என்று கண்ணதாசன் எழுதி இருப்பார். இப்போது அரசியல் பண்பாடு நாகரிகம் தர்மம் எல்லாமே மூளையில் சாத்தி வைக்கப்பட்ட ஈட்டியாக மாறிவிட்டன என்று ஆசிரியர் முடித்திருப்பார்.

ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும் சரி முடிவிலும் சரி தீப்பிடிப்பது போன்ற வாசகங்கள் படிப்போரை நிச்சயம் கட்டிப் போட்டு விடும். அப்படித்தான் மொழிப் போர் குறித்தும் சங்கரலிங்கனார் குறித்தும் எழுதிய வரிகள்.
 "தீ என்னைத் தீண்டாது. தீயோரின் பிடியிலிருந்து நான் விடுதலை பெற்று விட்டேன். தீரமற்றோரே.. தெளிவற்றோரே! இனி தீ உங்களைத்தான் தாக்கும்! வெந்து வேதனைப்படுங்கள். உணர்ச்சியற்ற உருவங்களே எனத் தொடங்கி அண்ணாவின் வரிகளை சங்கரலிங்கனார் கட்டுரைக்கு துவக்க வரியாக தந்திருப்பார். பொருத்தமான சொல்லை தேர்ந்தெடுத்து விட்டாலே பொருத்தமாக கட்டுரை அமைந்துவிடும் 

#ரசித்த வரிகள்

*இங்கே நாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் அடமானம் வைத்துக் கொண்டு இருப்பது மானத்தை தான்

*அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது –ஜெயகாந்தன்

*அவரவர் மூச்சுக்காற்றை அவரவரே விட வேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ அழுதாலும் அவளவள் தான் பிள்ளை பெற வேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ அதைப் போல உங்களுக்கான உரிமைகளுக்காக கோரிக்கைகளுக்காக நீங்களே போராட வேண்டும்.

*உனக்குப் பிடித்த கருத்துக்களைப் படிப்பதில் காலத்தை வீணாக்காதே. உனக்குப் பிடிக்காத கருத்துக்களைப் படி, அதிலிருந்து தான் இதுவரை உன்னால் புரிந்துகொள்ள முடியாத உண்மையின் கூறுகளை உணர முடியும் – பிராட்லா

கடந்த காலம் குறித்த அறிதலும் புரிதலும் இருந்தால் தான் நிகழ்காலம் நமக்கு வெகு சுலபமாக இருக்கும். அந்த கடந்தகாலத்தை ரத்தினச் சுருக்கமாக, சுவாரசியமாக, நிகழ்வுகளை.. உள்ளது உள்ளவாறு தற்கால அரசியல் சூழலுடன் பொருத்தி சொல்லும்போது அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் பிறக்கிறது.தெளிவானவர்களை தேர்ந்தெடுக்கும் கடமையும் இருக்கிறது என்ற உண்மையும் விளங்குகிறது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday 12 April 2022

நீங்களும் முதல்வராகலாம்-ரா.கி.ரங்கராஜன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:16
Pages:440

நீங்களும் முதல்வராகலாம்
-ரா.கி.ரங்கராஜன்

இன்றைக்கும் புத்தக கண்காட்சிகளில் சமையல் புத்தகங்களுக்கு பிறகு அதிகம் விற்பவை தன்னம்பிக்கை புத்தகங்கள் தான். ஏனெனில் இதற்கு புனைவோ மேற்கோள்களோ தேவையில்லை என நினைக்கின்றனர். வெற்றிபெற்ற கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளைப் பற்றி சொல்லிவிட்டு இவர்களைப் போல் நீங்களும் ஆக வேண்டும். மாதம் 10 லட்சம் ஊதியம் வாங்கி ஆடி காரில் செல்லவேண்டும் என மேடையில் முழங்கும் போது நமக்கும் சிலிர்ப்பு ஏற்பட்டு.. ஆஹா நமக்கு தன்னம்பிக்கை பிறந்து விட்டதே என்று எண்ணுவோம். ஆனால் குறைபிரசவத்தில் கொஞ்ச நேரத்தில் அப்படியே அத்தனை எண்ணங்களும் காணாமல் போயிருக்கும். ஆனால் ஒரு சில புத்தகங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாக எதார்த்தமாக தேவையான மேற்கோள்களைக் காட்டி ஒரு வழிகாட்டும் விதமாக அமையும். இதனால் இவர்கள் ஜெயிக்கவில்லை இந்த திறமை இருந்ததால் ஜெயித்தார்கள் என அந்த திறமையை நமக்கு வளர்க்க சொல்லித் தருவார்கள்.

ரா.கி ரங்கராஜனின் பட்டாம்பூச்சி மொழிபெயர்ப்பு  அதிக தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்களில் ஒன்று. அதேபோலத்தான் நீங்களும் முதல்வராகலாம் புத்தகமும். ஏதோ தெலுங்கு பட டைட்டில் போல இருந்தாலும் படிக்க படிக்க சுவாரசியமாய் கீழே வைக்க மனமின்றி படிக்கத் தூண்டுகின்றன .82 கட்டுரைகளும் மேலைநாட்டு சிந்தனையுடன் எழுதப்பட்டாலும் ஆங்காங்கே நம்முடைய வாழ்வையும் தொடர்புபடுத்தி காட்டியிருப்பார்.

சிறுகதைகள் நம் எண்ணச் சிறகை அப்படியே மாற்றி விடும் .அந்த வகையில் நண்பர்களை நம்பாதே என்ற கதையில் ஒரு பாம்பை ஜனங்கள் அடித்துத் துரத்தினார்கள். விவசாயி அதற்கு அடைக்கலம் கொடுக்க எண்ணி என் வயிற்றுக்குள் ஒளிந்து கொள் என்று கூறுகிறான். பாம்பு அவன் வயிற்றுக்குள் போனவுடன் வெளியே வர மறுக்கிறது. வேறு வழி இலலாமல் வயிற்றில் பாம்புடன் நாரையை சந்தித்த விவசாயி அதனிடம் பாம்பைப் பற்றி சொன்னான்.

 தரையில் உட்கார்ந்து பலமாக முக்கு பாம்பு வெளியே வரும் நான் பிடித்துக் கொள்கிறேன் என்றான். பாம்பு வெளியே வந்தவுடன் அவனுக்கு இன்னும் பயம் தீரவில்லை .அதற்கு உரிய மருந்து கேட்டவுடன் நாரையை சாப்பிட்டால் விஷம் போய்விடும் என்கிறது முதுநாரை. உடனே அவன் நாரையை பிடித்துக் கொண்டு சமைக்க சென்றுவிட்டார். ஆனால் அவன் மனைவியோ நாரையை விடுதலை செய்கிறாள் .
போகும்போது நாரை அவளின் கண்களை கொத்தி சென்றுவிடுகிறது.

இன்னொரு கதையில் ஒரு ஊரில் வண்டு இருந்தது.
 அரண்மனைத் தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஒரு யோசனை ஏற்பட்டது. நம்மை யாருமே கவனிக்க மாட்டேன் என்கிறார்களே என்று எண்ணி ராஜாவை கடித்தது. உடன்வந்த ராணியையும் கடித்தது. பின்னர் வந்த சேவகர்ளையும் கடித்தது. அரண்மனை மொத்தமும் அல்லோல கல்லோல ப்பட்டது. ஊரெங்கும் செய்தி பரவி கடைசியில் ஒரு வழியாய் வண்டைப் பிடித்து அடித்து கொன்றார்கள் .சாகும் முன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டது .பிறவி என்றால் இப்படி எதையும் செய்து விட்டு சாகவேண்டும். எல்லாரும் என்னைப் பற்றி பேசும்படி பண்ணிவிட்டேன். உயிர் போனால் போகட்டும் என்றது. சிறிய கதை தான் ஆனால் எவ்வளவு உண்மை இருக்கிறது பாருங்கள்.

குதிரையை விடுங்கள் லகான் கையில் இருக்கட்டும் என்பது அரசியல் தத்துவங்களில் ஒன்று. சுதந்திரமாக செயல்பட வேண்டும் அதே நேரத்தில் உங்கள் விருப்பப்படி அனைத்தும் நடைபெற வேண்டும் எனும் ஆளுமை தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை தெரிந்தவர்களை விட வேலையின் நுட்பத்தை தெரிந்தவர்கள் மிகவும் குறைவுதான். ஆகவே உங்கள் பணியில் நீங்கள் வல்லுநராக இருந்தால எல்லோரையும் ஆட்டு வைக்கலாம்.

சீனாவில் ஒரு நீதி வாக்கியம் உண்டு எடுப்பதற்கு முன் கொடு அதாவது எதிரிக்கு முதலில் பரிசு அனுப்பி அவனை மயக்கி பிறகு தனக்கு வேண்டுவதை எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்வார்கள்‌. அவர்களும் தங்களுக்கு ஏதோ நன்மை கிடைக்கிறது எனும்போது யாருமே உங்களுக்கு ஆதரவா இருப்பார்கள் அல்லவா! முதலில் நம் மனதில் என்ன அபிப்பிராயம் ஏற்படுகிறதோ அது தான் கடைசி வரை நீடிக்கிறது என்பது உளவியல் உண்மையும்கூட.

முதன்மை இடத்துக்கு வரம் விரும்புவார்கள் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டு இருக்கக்கூடாது .ஒரு பொருள் தாராளமாக கிடைக்கிறது எனில் அதன் மவுசு குறைந்து விடும். மனிதனும் அப்படித்தான். அடிக்கடி நீங்கள் எல்லோர் கண்ணிலும் பட்டால் உங்களுடன் பேசும் வாய்ப்பு அடிக்கடி எல்லோருக்கும் கிடைத்து விடும். ஆகவே சாதாரண மனிதனைப் போல் தான் உங்களை நடத்துவார்கள். எந்த கூட்டத்தில் மறைந்து கொள்வது என்பதை ஒரு கலையாக பயிலுங்கள். லாபான்ட்டேன் என்பவர் இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார் 

ஒரு ஒட்டகம் முதல்முறை கிராமத்துக்கு வந்தபோது அனைவரும் பயங்கர மிருகம் என்று அலறி அடித்து ஓடினர். பின் இரண்டாம் முறை நெருங்கி வந்தார்கள். மூன்றாம் முறை ஒருவன் சென்று பார்த்ததோடு இல்லாமல் கழுத்தில் கயிறு கட்டி விட்டதால் ..ஒட்டகத்தின் மகிமையே போய்விட்டது. எது ஒதுங்கி நிற்கிறதோ அது கிடைப்பதற்கு அரிதாக இருக்கிறது .அதன் மீது நம் மதிப்பும் பிரியமும் அதிகரிக்கும் என்ற உண்மையை அந்த கட்டுரையின் வாயிலாக விளக்கி இருப்பார்.

ஒரே இலக்கு ஒரே குறி கட்டுரையில் ஒரு புல்வெளியில் ஆடுகள் குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. வாத்துக்கு அகங்காரம் அதிகம். குதிரையைப் பார்த்து நான் உன்னை காட்டிலும் உயர்வான பிராணி. தரையில் நடப்பேன் இறக்கை இருப்பதால் பறப்பேன் .விருப்பமான போது நீந்துவேன். பல பிராணிகளின் திறமைகளும் என்னிடம் இருக்கிறது என் குதிரையை  பார்த்து ஏளனமாக சிரித்து .உனக்கு பலவகை திறமைகள் இருப்பது உண்மையே எனினும் நீ ஒன்றிலாவது பரிபூரண தகுதி பெற்று இருக்கிறாயா. நீ பறக்க முடியும் ஆனால் கொஞ்சம் உயரத்திற்கு தான். உன்னால் மீனைப்போல ஆழத்திற்கு போகமுடியாது. அன்னம்போல் ஒயிலாக தண்ணீரில் நீந்துகிறாயா என்றால் அதுவுமில்லை. தரையில் நடக்கும் திறமை ஒன்றுதான் இருக்கிறது.என் தோற்றத்தில் எத்தனை கம்பீரம் இருக்கிறது பார்.எத்தனை பலம் வாய்ந்ததாய் இருக்கிறேன்.நான் எத்தனை பலசாலி நான் இப்படியே இருக்க விரும்புகிறேன் . வாத்தாக இருக்க விரும்பவில்லை என்று கூறிச் செல்கிறது. ஆகவே பல திறமைகள் இருப்பதை விட ஒரே திறமைகள் ஆழமாக வளர்த்துக்கொள்வது அவசியம்.  

#ரசித்தது

*உங்கள் மேலிடம் என்றாவது ஒரு நாள் விழுந்தே தீரும் .அது இயற்கை நியதி. ஆகையால் காத்திருங்கள், காலம் வரும்.

*காலியாய் உள்ள ஒரு பதவிக்கு என் நண்பன் ஒருவனை நான் நியமிக்க ஒவ்வொரும் முறையும் நூறு பேரை பகைத்துக்கொள்கிறேன். அந்த நண்பனும் கடைசியில் நன்றி கெட்டவனாக மாறி எனக்கு துரோகம் இழக்கிறான்-பதினாங்காம் லூயி

*பந்தயக் குதிரைகள் பக்கத்தில் சென்று பார்த்தால்தான் மூச்சு இறைப்பதும விழிபிதுங்குவதும் தெரியும் .தூரத்தில் இருந்து பார்த்தால் வெகு ஒய்யாரமாக காற்றில் நீந்துவது போலத்தான் தோன்றும்

*யாரும் கேட்காத போது எந்த ஒரு வேலையையும் செய்யாதீர்கள்

*எல்லாரும் எதிர்பார்த்ததை செய்யாதீர்கள். யாரும் எதிர்பாராத அதையே செய்யுங்கள்

இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நீங்கள் ஒரு போதும் ஒதுக்கி விட்டு செல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு கட்டுரையும் உங்களுக்கான தேடலுக்கான விருந்தாகவும்,முன்னேற்றத்துக்கான வழி வகைகளை கூறியும் ஒரு சிறு கதைகளை உதாரணத்துக்கு சொல்லியும் இந்த கட்டுரைத் தொகுப்பு நகர்கிறது

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

படித்தது

"உன்னை மீறி உன்னுடைய வாழ்க்கையில் பத்து சதவீத நிகழ்வுகளே நடக்கின்றன;மீதி தொண்ணூறு சதவிகித நிகழ்வுகளையும் தீர்மானிப்பது உன்னுடைய எதிர்வினைகளே"

-படித்தது

Sunday 10 April 2022

நாட்டுப்புற கதை

அதிகாரம்

ஒரு நாள் உயரமான கோட்டை சுவர் ஒன்றின் மீது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது.அவ்வழியெ போன ஓநாயை நிற்கச் சொன்னது.

"ஏய் இங்கே வா"..எனக்கு பசிக்கிறது அந்தச் செடியில் நாலு இலை பறித்துவா என்றது..இதை செய்யாததால் ஆடு கோபத்துடன் மீண்டும் சொன்னது.

ஓநாய் சொன்னது"நீ ஏறி நிற்கிற உயரம்தான் இப்படி பேச வைக்குது.இறங்கி வா அப்போது நீயார் எனும் உண்மை புரியும் என்றது

-நாட்டுப்புற கதை

கலிலியோ

“ஒருவனுக்கு உங்களால் எதையும் கற்றுக் கொடுக்க முடியாது; அவன் தானாகவே தனக்குள் அதைக் கண்டுபிடிக்க அவனுக்கு உங்களால் உதவ மட்டுமே முடியும்,”

-கலிலியோ

நடராஜன்

ஊரெல்லாம்
என்னை
சாதியைச் சொல்லியும்
தொழிலைச் சொல்லியும்
திட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்
ஓர் அரசனைப்போல

நான்
கையில் ஆயுதங்களுடன்
மன்னித்துக்கொண்டேயிருக்கிறேன்
ஒரு கடவுளைப்போல. 

-ப. நடராஜன் பாரதிதாஸ்

சுந்தர ராமசாமி

எல்லா இடங்களிலும் மேலே இருப்பவர்களைவிட தகுதியானவர்கள் கீழே இருக்கிறார்கள்

-சுந்தர ராமசாமி

Saturday 9 April 2022

லா.ச.ரா

புரியாமையின் தவிப்பை விட புரிந்து கொள்வதன் வலிதான்
பயங்கரமானது

-லா.ச.ரா

மால்கம் எக்ஸ்

நமது எதிர்காலத்துக்கான பாஸ்போர்ட்.. கல்வியே

-மால்கம் எக்ஸ்

Thursday 7 April 2022

அருணா ராஜ்

பேசுவதற்கு ஏதுமின்றி கழியும் தருணங்களை தனக்கு பிடித்த வார்த்தைகளை கோர்த்து நிரப்பிக்கொள்கிறது பார்வை.

- அருணா ராஜ்

ராஜீவ் காந்தி படுகொலை -புலனாய்வு-டி ஆர் கார்த்திகேயன்ராதா வினோத் ராஜூ

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:12
Pages:340

ராஜீவ் காந்தி படுகொலை -புலனாய்வு-
டி ஆர் கார்த்திகேயன்
ராதா வினோத் ராஜூ

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது..சமூக வலைத்தளங்களும் மீடியாக்களும் அதிகம் இல்லாத காலகட்டம்.காலை 6:45 மணிக்கு ரேடியோவில் இந்த துயரச் செய்தி கேட்டபோது தான் தமிழகமே வருத்தத்தில் அழுதது. "விருந்துக்கு வந்தவனே மேசையில் பரிமாறப்பட்ட தினம் என வைரமுத்து பாடிய கவிதை நினைவுக்கு வருகிறது. இந்தியா டுடே புத்தகம் அப்போது அதிக அளவில் விற்பனை ஆனது. அதில் கொலை செய்யப்பட்ட தற்கொலைப்படை பெண்ணின்  உருவப்படம் அதில் இருந்தது. ராஜீவ் காந்தியை அவர் எப்படி மனித வெடிகுண்டாக வெடிக்க வைத்தார் என்பது போன்றவற்றை ஓவியமாக வரைந்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த டிஆர் கார்த்திகேயன் அவர்களும் ராதா வினோத் ராஜ் அவர்களும் திறம்பட புத்தகத்தை எழுதி இருந்தாலும் தமிழில் எஸ் சந்திரமௌலி அவர்கள் நல்ல முறையில் மொழிபெயர்த்துள்ளார் .15 கட்டுரைகள் அமைந்துள்ள இப்புத்தகத்தில் ஒவ்வொன்றும் விறுவிறுப்பான நடையில் நாவல் போன்ற வடிவில் அமைந்துள்ளது.
ராஜீவ் காந்தியை தான் சந்தித்த தருணத்தையும், அவரின் ஆளுமை பற்றியும் முதல் அத்தியாயத்தில் விவரித்துள்ளார்.

1991 மே 21 ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அவரை வரவேற்பதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்  ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மரகதம் மற்றும் காங்கிரஸ் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தியும் மூப்பனாரும் காத்துக் கொண்டிருந்தனர். அவரோடு தனிப்பட்ட பாதுகாவல் அதிகாரியான பீகே குப்தாவும் காத்திருந்தார்.

பின்னர் மேடைக்கு வரும் போது ராஜீவின் வருகைக்காக தனி மேடையில் வாழப்பாடி யாரும் இந்திரா காந்தியின் சிலை அருகே மூப்பனாரும் இருந்தனர். ஜெயந்தி நடராஜன் ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார் "அப்போது வரை நான் தலைவருடன் தான் நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பைலை எடுத்து வரும்படி எனக்கு கட்டளையிட்டார். நான் நின்று கொண்டிருப்பதை பார்த்து அவர் மிகவும் சத்தமாக விரைந்து எடுத்து வாருங்கள் என்று கூறியவுடன் நான் அந்த இடத்தை விட்டு பைலை எடுக்கச் சென்று விட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் சொன்னார்.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பும் போது விமான ஓட்டுநரான கேப்டன் சாந்த்டோக் விமானத்தின் தொடர்பு கொள்ளும் சாதனம் பழுதடைந்து இருந்ததை கண்டுபிடித்தார். ஆகவே இரவு விசாகப்பட்டினத்தில் தங்க முடிவு செய்திருந்து விருந்தினர் மாளிகையை நோக்கி காரில் சென்றார் ராஜிவ். ஆனால் விதியின் சதியோ வேறாக இருந்தது. வேறு விமான் இஞ்சினியர் வந்து பழுதடைந்ததை சரி செய்தபின் உடனே ராஜீவ் விமான நிலையத்துக்கு திரும்பி வந்துவிட்டார். மாலை ஆறரை மணிக்கு சென்னை நோக்கி விமானம் புறப்பட்டது.

மொத்தம் 23 பேர் ராஜீவ் காந்தியை மேடையில் சந்திக்க சிபாரிசு செய்து முடிவு செய்து இருந்தனர். அதில் ஒரு சிறுமியை தவிர அனைவரும் ஆண்களே. இதற்கிடையில் பச்சையும் ஆரஞ்சு நிறமும் கலந்த சல்வார் கமீஸ் உடை அணிந்த பெண் ஒருவரை அங்கே காணமுடிந்தது. அவர் கண்ணாடி அணிந்து இருந்தார். அவர் எப்படி அங்கு வந்தார், அவர் எதற்காக வந்தார் இன்னும் சற்று நேரத்தில் நிகழும் இதற்கான மூல காரணமாக அவர் நின்றிருந்தது ஏன் என அப்போது யாருக்கும் தெரியவில்லை. இதற்குப் பின் நடந்த நிகழ்வையும் குண்டு வெடிப்பையும் ஒவ்வொரு வரியாக திரைப்படம் பார்ப்பது போல் அச்சுப்பிசகாமல் விவரித்திருப்பார். தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் ,ராஜீவ் காந்தி படுகொலை குறித்த புலனாய்வை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உடனடியாக கேட்டுக்கொண்டார் என்ற அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் பணியும் தொடங்கியது.

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி படுகொலையை கண்டுபிடித்தது போல் இல்லாமல் இது ஒரு மர்மமான வழக்காக கருதப்பட்டது. பலர் முன்வராத போது இந்த வழக்கை விசாரிப்பதற்காக டி.ஆர் கார்த்திகேயன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இறந்த பகுதியிலிருந்து முக்கிய ஆதார பொருட்களாக நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு இரும்பு குண்டுகள், 9 வோல்ட் கோல்டன் பவர் பேட்டரி, எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், தலைமுடி 2 ஸ்விட்ச்சுகள் தவிர அங்கு எதுவும் கிடைக்கவில்லை. வேறு எந்த விதமான முக்கிய தடயங்களோ ஆதாரங்களோ கிடைக்கவில்லை.

பல்வேறு தரப்பினர் எழுப்பிய யூகங்கள், செய்தியாளர்கள் தரும் நெருக்கடிகள், நாட்டின் தலைவனை பலி கொடுத்தபின் உண்மையான குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்புணர்வும் கடமை உணர்வும் என முழு முயற்சி மேற்கொண்டு ஒவ்வொன்றாக தேடி தேடி இறுதியில் குற்றவாளியை கண்டு பிடித்த கதையையும் அதிலுள்ள இடர்பாடுகளையும் மிக விரிவாக கூறியிருக்கிறார்.

தேடிப்போகும் சாட்சியங்கள் இல்லாதது, தடயங்கள் இல்லாதது உண்மையான குற்றவாளிகளையும் தேடி கண்டுபிடிக்க வேண்டியது என ஒவ்வொரு பக்கங்களிலும் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது தெரிகிறது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தான் தமிழ்நாட்டில் முதல் தடவையாக தடா சட்டம் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர். கன்னடத்தில் ஆர் எம்.ஆர் ரமேஷ் இயக்கிய குப்பி படத்தில் குற்றவாளிகள் எவ்வாறு பிடிபட்டனர் என்பதை காட்டியிருப்பார். அதுபோல இப்புத்தகத்தில் விறுவிறுப்பான முறையில் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக விரிவாக இப்புத்தகத்தில் படிக்கலாம் 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday 6 April 2022

செல்வேந்திரன்

"நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள், வாசித்ததை சொல்லுங்கள், போதும்."

- செல்வேந்திரன்

Tuesday 5 April 2022

கமல்ஹாசன்

ஜன்னல் திறந்து எப்போது வெளியுலகம் தெரிகிறதோ, அப்போது கேள்விகள் எழுந்தே தீரும்.இருட்டறையில் இருக்கும்போது அங்கிருப்பவை உங்களுடைய கனவுகள் மட்டும்தான்

-கமல்ஹாசன்

Monday 4 April 2022

info

ஓ (O) என்னும் எழுத்து முழு வட்டமாக இருக்கும். ஜீரோ/ பூஜ்யம் என்பது ஓவல் வடிவத்தில் இருக்கும் (0). இவை இரண்டையும் பக்கத்தில் வைத்து பார்த்தல் வேறுபாடு தெரியும். O ஓ, 0 ஜீரோ.

#info

Sunday 3 April 2022

ஜானகிராமன்

“பெரும்துயரத்தில் உழலும் எந்த ஜீவனும் அந்த சமயத்தில் ஒரு கம்பீரத்தைப் பெறுகிறது!
                                                              -தி.ஜானகிராமன்

எல்.ஐ.சி

உங்கள் வாழக்கை என்ற விளக்கை, புயல், மழை போன்ற எதிர்பாரா துக்க நிகழ்வுகளிலிருந்து நாங்கள் இருகரமாய் இருந்து காப்போம் - வாழும் போதும், வாழ்க்கைக்கு பின்பும் - இது தான் எல்.ஐ.சி லோகோவின் அர்த்தம்.

#info

சாதி வர்க்கம் விடுதலை-பி.சம்பத்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:8
Pages:342

சாதி வர்க்கம் விடுதலை
-பி.சம்பத்

நம்முடைய துரதிருஷ்டமான மக்கள் தற்போதைய சுரண்டல்களிலிருந்தும் எதிர்காலத்தில் நம்மவர் சுரண்டல்களிலிருந்தும் விடுபடாதவரை அவர்களுக்கு சுதந்திரம் என்பதோ மகிழ்வு என்பதோ கிடையாது

-சிங்கார வேலர் காந்திக்கு எழுதிய கடிதத்தில்(1921ம் ஆண்டு)

தோழர் பி. சம்பத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்குபவர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சமூக நீதிக்கான பார்வையில் இருக்கும் நடுநிலையாளர்களின் சிந்தனைக்கு விருந்தாக முப்பத்தி இரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

தீண்டாமை என்பது பெரும் குற்றம் மட்டுமல்ல, பெரும் சுரண்டல் என ஆரம்பித்து ஜாதியின் வேர் எங்கிருந்து வந்தது? அது பொருளாதாரச் சுரண்டல் உடன் எவ்வாறு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்து இந்நூல் அலசுகிறது. சாதியால் பலனடைகிறார்கள், சாதியால் பாதிக்கப்படாதவர்கள், சாதியால் தொடர் பாதிப்புகளை சந்திப்பவர்கள், என ஜாதியின் தாக்கத்தை ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு விதமாக உணருகிறார்கள். எனவேதான் சாதி எந்த அளவுக்கு எதிர்க்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஆராதிக்கப்படுகிறது என்பதை பொட்டில் அடித்தால் போல் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சாதிய கலவரங்கள் சாதிய மோதல்கள் அதனுடன் நிகழ்ந்த அரசியல் பார்வைகள், இந்திய வரலாற்றில் சாதியத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு போக்குகள் நடைபெற்றதை அடிப்படை ஆதாரங்களுடன் நமக்கு விளக்குகிறார். சாதி எவ்வாறு இவ்வளவு எதிர்ப்புகளையும் சமாளித்து, எல்லா வகையான தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டு தப்பித்து நீடித்து வந்திருக்கன்றன என்பதையும் கூறியிருக்கிறார்.

உலகின் பிற நாடுகளில் பொருளாதார பிரிவினைகள் மட்டுமே உள்ளன என்றும் இந்தியாவில் மட்டும் தான் சாதி மத பொருளாதார பிரிவினைகள் என மூன்றும் நம்மிடையே இருக்கின்றன என்றும் கூறுகிறார்.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் உறவுகள், தீண்டாமை கொடுமைகள், புதிய புதிய சாதி அமைப்புகள் போட்டி போட்டு உருவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தற்போது சாதிக்குள் ஒற்றுமை என்ற கோஷம் மேலோங்கி இருக்கிறது. தேர்தல் அரசியலில் சாதி அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர். வர்க்க வெகுஜன அமைப்புகளின் பலவீனம் குறித்தும் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் துவக்ககால வர்க்க சமுதாயத்தில் வர்க்கமே சாதியாக இருந்தது என்று ஆய்வாளர் டி டி கோசாம்பி குறிப்பிடுகிறார். மார்க்சிய பார்வையில் சாதியும் வர்க்கமும் என்ற தொடர் கட்டுரைகளில் இதற்கான வர்க்கப் போராட்டங்களையும், சமூக சீர்திருத்த இயக்கங்களின் தாக்கமும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளார். மனு சாஸ்திரம் எவ்வாறு ஜாதியை கட்டமைத்து உள்ளது என்பதை ஆரம்ப காலம் தொட்டு ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

மதுரை மாவட்டம் உத்தபுரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு விவகாரம் இடதுசாரிகளின் போராட்ட வெற்றியை உலகறியச் செய்தது. 2,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டதில் ஆயிரம் பேர் தலித்துகள், ஆயிரம் பேர் தலித் அல்லாதவர்கள் என இடதுசாரிகளின் போராட்டத்தையும், அவர்கள் முன்னெடுத்த கருத்தியல் ரீதியான விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். இது தவிர தேச முழுக்கவும் இடதுசாரிகள் முன்னெடுத்த பல்வேறு தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் ஒவ்வொன்றையும் விரிவாக சொல்லியுள்ளார்.

கீழ் தஞ்சையின் கிழக்கு வானம் கட்டுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டி ஆதிக்க சாதி மக்கள் குடியிருக்கும் தெருக்களுக்கு தோழர் சீனிவாசராவ் தலைமையில் அழைத்துச் சென்றார். அங்கு வசித்த பிராமண மக்கள் தலித்துகள் ஊர்வலமாக வருவார்கள் என அறிந்து தங்கள் வாசல் கதவுகளை அடைத்து ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து அந்த ஊர்வலத்தை பார்த்தார்கள். பிராமண சமூகத்தில் பிறந்த சீனிவாசராவ்  தலித்துகள் உடன் ஒட்டிக்கொண்டு, கைகோர்த்து நடந்து சென்ற காட்சியை விவரிக்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.

கொடியங்குளம் பிரச்சனை, வாச்சாந்தி கொடுமைகளுக்கு எதிராக, பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக,
விழுப்புரம் மாவட்டம் முடியனூர் கிராமத்தில் தலித்துகளுக்கு எதிரான கொடியேற்ற பிரச்சனை, திண்ணியம் கிராமத்தில் மலம் தின்ன வைத்ததை கண்டித்து முன்னெடுத்த போராட்டம், தூத்துக்குடியில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என கூறியதை எதிர்த்து போராட்டம்.. இப்படி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்களை ஒவ்வொன்றாய் கூறியிருக்கிறார் கட்டுரையாளர்.

தென் மாவட்ட மற்றும் வட மாவட்டங்களில் நிகழ்ந்த ஜாதியை கொடுமைகளுக்கு எதிராக எடுத்த முடிவுகளும், போராடிய போராட்டங்களும்,நீதிமன்ற வழக்குகளும், களத்தில் எதிர்த்து போராடிய போராளிகளின் வாழ்வியலையும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். சாதியின் வேர்களை தேடுவதில் துவங்கி சமகால விவாதங்களில் பங்கேற்பது வரை நம்மோடு நெருங்கி இப்புத்தகம் உரையாடுகிறது.

*தொழில் மற்றும் வேலைப்பிரிவினை அடிப்படையில்தான் பண்டைய இந்து சமூகத்தின் வர்ணாசிரம முறை உருவானது

*வர்க்கப் பிரச்சனைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சாதி ஒழிப்புக்கு தராத ஒரு பலவீனம் ஏற்பட்டது.

*துவக்க கால நிலையிலிருந்து பல மாற்றங்கள் இருப்பினும் மக்களிடையே சாதிய உணர்வுகள் இன்றளவும் வலுவாக உள்ளன

*வேதம் ஓதுதல், யுத்தம் செய்தல் வாணிபம் செய்தல், உடல் உழைப்பு செய்தல் என இந்த அடிப்படையில் வருணாசிரமம் அமைப்பு உருவானது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் சாதிய கட்டமைப்பு, சாதிய வேறுபாடும், தீண்டாமைக் கொடுமைகளும் அறற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கடமையும், விருப்பமும். மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை இந்த புத்தகத்தின் வழியில் வாசித்த கட்டுரைகளின் வாயிலாக அறிகிறோம். ஜாதிகளை ஒழிக்க முடியாவிட்டாலும் புறக்கணிக்க கற்றுக் கொள்ள  எண்ணி நினைத்தால் சாதிக்கொடுமைகள் ஓரளவு தீர வழிவகை காணலாம்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

மனுஷ்ய புத்திரன்

எப்போது அழைத்தாலும்
ஒரு 'ரிங்க்' போவதற்குள்
அழைப்பை எடுத்துவிடுபவர்கள் பற்றி
எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஒரு கூண்டுக்கிளி
தானியத்திற்காக திறக்கப்படும் கூட்டை
சிறகடிப்புடன் திரும்பிப் பார்ப்பதுபோல...

-மனுஷ்ய புத்திரன்

Saturday 2 April 2022

End-to-end Encryption என்றால் என்ன?

End-to-end Encryption என்றால் என்ன?

நீங்கள் அனுப்பும் தகவல் நீங்கள் அனுப்பும் இடத்தில் பூட்டப்பட்டு, பெறுநர் பகுதியில் திறக்கப்படும்! இதுவே End-to-end Encryption என அழைக்கப்படும்! 

இப்போது உங்கள் நண்பருக்கு "காலை வணக்கம்" அனுப்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்! அதை நீங்கள் அனுப்பும் போது அந்த செய்தி "FDHGSYJWNSBJKKWJ" என்ற புரியாத தகவலாக மாற்றப்படும்! இந்த தகவல் உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்பில் மீண்டும் "காலை வணக்கம்" என மாற்றப்பட்டு காட்டும்! இந்த இடைப்பட்ட இடத்தில் யாராலும் அந்த தகவலை படிக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது! இதையே Encryption (குறியாக்கம்) என அழைக்கின்றனர்!

#info

இதயத்தை திருடுகிறாய்-ஜி.ஆர் சுரேந்தர்நாத்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:7
Pages:128

இதயத்தை திருடுகிறாய்
-ஜி.ஆர் சுரேந்தர்நாத்

வெளிப்படுத்துவதற்கு முன்கணம் வரை ஓர் சௌந்தர்ய உணர்வில் இருந்தீர்கள் இல்லையா? அதுதான் காதல்! அதற்கு பின்னானவை அனைத்தும் காதலை தக்கவைக்கும் முயற்சிகள்

-யாத்திரி

இதயத்தை திருடும் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆண்கள் இதயம் முரளி போல் ஆகிவிடுகிறார்கள். இத்தொகுப்பில் உள்ள பல்வேறு கதைகளும் அப்படித்தான். சில கதைகள் நிகழ்வாகவும், சில கதைகள் இன்பமாகவும், சில கதைகள் ஏற்றுக் கொள்ளும் படியாகவும் இருப்பதுதான் இத்தொகுப்பின் சிறப்பு. கதை சொல்லும் விதத்தில் எப்போதும் எளிமையாகவும் அதே நேரத்தில் நகைச்சுவை உணர்வுடனும் கூறுவதில் ஜி ஆர் சுரேந்தர்நாத் தனித்துவம் பெற்றவர். இத்தொகுப்பிலுள்ள கதைகளும அதில் விதிவிலக்கல்ல.

திருமணமான மனோஜ் மற்றும் திலீப் செல்லத்துரை உடன் பாண்டிச்சேரிக்கு அலுவல் வேலையாக செல்கின்றனர். திருமணம் ஆகாத செல்ல துரையை மிகவும் பிடித்துப்போய் உரிமையாக செல்லம்  என்று தான் அழைப்பார்கள்.தண்ணி அடித்தவுடன் செல்லம் முத்தம் கொடுப்பான். அவனின் அன்பில் நெகழ்ந்த மனோஜ் ஊருக்கு வண்டி ஏறும் முன் செல்லத்துக்கு ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புகிறான். அது தவறுதலாக அவன் மனைவிக்கு சென்று விடுகிறது.வீட்டுக்கு வந்தவுடன் மனோஜுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் இதுதான் கதை.

இந்த தொகுப்பில் நான் வாசித்த மிகவும் நெகிழ்ச்சியான கதை" நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" ஹேராம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் ஒருவர் பாடி முடித்தவுடன் திடீரென்று மேடைக்கு வரும் மனோஜ் அவனை கட்டியணைத்து முத்தமிட்டு பணம் தருகிறார் .இந்த பாட்டுக்கு பின்புள்ள காதல் கதையை சொல்லும்போது அமோதிதாவின் மீதும் மனோஜின் மீதும் நமக்கு அப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இப்போது இந்தப் பாடலை கேட்டால் கூட இருவரும் தான் நினைவுக்கு வருகிறார்கள்.

பெண் 2014 என்ற கதை இன்றைய நிலையில் உள்ள பெண்களின் மனதைப் பிரதிபலிக்கும் எதார்த்த நிலையை சொல்லியிருப்பார். கணவன் மனைவி சண்டையில் கணவன் மனைவியை அடித்து உதைக்க கோபத்தில் விவாகரத்து வரை செல்லும்.அந்த பெண் ஒரு கட்டத்தில் தன் முடிவை மாற்ற வேண்டிய கட்டாயம் இந்த கதையில் வரும். ஏன் அவ்வாறு மாற்றினார் என்பது கதை. இறுதி பேரா தான் கதையின் உயிர் முடிச்சு அல்லது நவீன கால பெண்களின் வாழ்வியலை சொல்லும் கருத்து எனலாம்.
"நாம நினைச்ச படியெல்லாம் வாழனும்னா பொண்ணா பொறந்து இருக்கக்கூடாது. என்னால எல்லாம் இவ்வளவு அநியாயத்தை பொறுத்துக்க முடியாது. நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகி என் புருஷன் அடிச்சான்னா அடுத்த நிமிஷமே பெட்டிய தூக்கிட்டு கிளம்பி விடுவேன் என்று ராதிகா கூற, நான் பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தேன். சட்டென்று அன்று சிரித்த அம்மாவின் சிரிப்புக்கு இப்போது அர்த்தம் தெரிந்தது. 

"இதயத்தை திருடுகிறாய்" கதையில்
கல்யாணமே செட்டாகாது இருக்கும்
பேச்சிலர் வீட்டின் எதிரில் மலையாள பெண் ஒருத்தி குடும்பத்துடன் கூடி வந்தால் எப்படி இருக்கும். மகன் காதல் திருமணம் செய்து கொண்டால் தந்தை உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஏழரை பிரச்சினை ஜாதகத்தில் இருக்கிறது.  இரண்டையும் சமாளித்து எப்படி கரை சேர்ந்தார்கள் என்பது கதை.
"வெல்ல வேட்டை" கதையில் அண்ணன் தம்பி பாசத்துடன் வெல்லத்தை சாப்பிடும் போது எதிர்பாராத நிகழ்வில் தன் தம்பி உயிர் இழக்கிறான
 அப்போது தம்பியின் நினைவுகளை எண்ணி பார்க்கும் அண்ணனைப் போல் நாமும் இந்த கதையில் பொருத்தி பார்க்கும்படி நிகழ்வாக இருந்தது கதை.

""பிழை திருத்தம் கதையில் வெட்டி ஆபீசராக இருக்கும் ஒருவன் அண்ணன் அண்ணிக்கு பாரமாக இருக்கப் பிடிக்காமல் தாலுகா ஆபிஸ் எதிரில் உள்ள டைப்ரைட்டிங் சென்டர் ஆரம்பித்து.. நன்றாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அப்போது இரவில் சந்திக்கும் ஒரு பெரியவர் இவனின் தொழிலால் தன் தொழில் நலிவடைந்ததை கூறி வேதனைப்பட்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டுகிறார். அதனைப் பார்த்த பிறகு இவன் எடுத்த முடிவு என்ன என்பது கதை. ஒரு தொழிலால் எப்படி மற்றொரு தொழில் நசிகிறது என்பதை கண் முன்னால் காட்டுகிறது கதை இது போன்ற கதைகளை படிக்கும் போதெல்லாம் சற்று மனம் கனத்தது. சிறுகதையின் உண்மையான அர்த்தத்தையும் உணரமுடிகிறது.

என் இனிய பொன் நிலாவே பாடலை கிட்டாரில் வாசித்துக் காட்டி ஒருவளின் காதலைப் பெற முனைகிறான்.ஒருநாள் வாசித்துக் காட்டி முடித்தவுடன் தன் திருமண பத்திரிக்கை நீட்டுகிறாள்.
 நரம்பு அறுந்ததைப் போல் அவன் மனதும் அறுந்துவிடுகிறது. அந்தக் கதையின் இறுதியில் வரும் வாசகம் தான் கடவுள் சிலரை காதலர்களோடு வாழ்வதற்காக படைக்கிறார். மற்றவர்களை காதல் நினைவுகளோடு வாழ்வதற்காக படைக்கிறார் என்று.
 
தந்தையின் பாரத்தைச் சுமக்க கல்லூரி பெண்ணான பொன்னி எடுக்கும் முடிவு, நவீன காலத்தில் சுயநலமிக்க மனிதன் எப்படி ஒரு பெண்ணுக்கு உதவ முடியாமல் போகிறது என்பதை குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் ஒரு ஆணின் கதையும், காதலர்களே தங்கள் காதலைத் தியாகம் செய்யும் முதல் முத்தம் கதையும், இரு கோஷ்டிகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட நினைத்து இறுதியில் விநாயகர் எப்படி இவர்களை கொண்டாடினார் என நகைச்சுவை ததும்பும் கதையும் இத்தொகுப்பில் உள்ளன.

#ரசித்தது

*முதல் சந்திப்பிலேயே தண்ணி அடிக்கிற பிரண்ட்ஸ் முன்ஜென்மத்தில் அண்ணன் தம்பியா பிறந்து இருப்பாங்கன்னு சொல்லுவாங்க

*வாயிலிருந்து வந்த சொல்லையும் செல்லிலிருந்து வந்த மெசேஜ் திருப்பி வாபஸ் வாங்கவே முடியாது

*ஸ்கூல் ல ஒரு பொண்ணு உன் பேச்சில் கொஞ்சம் தர்றியா? ன்னு கேட்டா," நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் வர்றியான்னு கேட்ட மாதிரி புல்லரித்துப் போய் விடும்

*உன்ன பார்த்தா ஆக்சிடெண்ட்ல செத்து போன என் அண்ணன் மாதிரியே இருக்குது. உனக்கு எல்லாமே என் தங்கச்சி பாட்டு தெரியுமா என்று கேட்டான்

*உலகின் மிக அழகிய சிரிப்பை உதிர்த்தாள் .அது சிரிப்பு இல்லை சிம்போனி

*எங்கள் கனவு மிகவும் சீக்கிரமே கலைந்தது. காதல் திருமணங்களில் எதிர்பார்ப்புகள் அதிகம் எனவே ஏமாற்றங்களும் அதிகம்

*அவளின் முகத்தில் பெரும் துக்கத்தை என்னால் உணர முடிந்தது. மகத்தான கனவுகள் உடையும் போது வெளிப்படும் துக்கம் அது.

இதுபோன்ற வித்தியாசமான பன்னிரண்டு கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் உங்கள் சிந்தனையின் ரசனையின் எல்லையை விரிவுபடுத்தும்.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஜி.ஆர்.சுரேந்திரநாத்

கடவுள் சிலரைக் காதலர்களோடு வாழ்வதற்காகப் படைக்கிறார்.
மற்றவர்களை காதல் நினைவுகளோடு வாழ்வதற்காக படைக்கிறார்

-ஜி.ஆர்.சுரேந்திரநாத்

ஜெயகாந்தன்

உயிரின் மதிப்பு அவனவன் உயிருக்கு ஆபத்து வரும்போதுதான் தெரியும்

-ஜெயகாந்தன்

ராஜா சந்திரசேகர்

இறந்தகாலத்தை நினைவுகளால் திற

நிகழ்காலத்தை 
செயல்களா திற

எதிர்காலத்தை நம்பிக்கைகளால் திற

-ராஜா சந்திரசேகர்