Thursday 23 November 2017

@மணி

உனக்கு பிடித்த கருத்துகளை படிப்பதில் காலத்தை வீணாக்காதே.
உனக்கு பிடிக்காத கருத்துக்களை படி. அதிலிருந்துதான், இதுவரை உன்னால் புரிந்துகொள்ள முடியாத உண்மையின் கூறுகளை பெற முடியும்
-பிராட்லா

(திருமாவேலனின் பெரியோர்களே..
தாய்மார்களே..)

#நேற்று என்ன செய்தேன்?
ஒன்றும் இல்லை
இன்று என்ன செய்கிறேன்?
ஒன்றும் இல்லை
நாளை என்ன செய்யப்போகிறேன்?
அதுதான் தெரியவில்லை
எதிர்காலம் பெரிய புதிர்.

-பேயோன்

#மேலாண்மை பொன்னுச்சாமி பற்றிய நினைவுகளில் அவர் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
பாடத்திட்டக் கல்வியைத்தான் கல்வி, படிப்பு என்று கருதிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதைவிட அறியாமை வேறில்லை.
அவர் கற்றது களக்கல்வி. வாழ்க்கைப்பாடம். அது எங்கும் கற்றுத்தரப்பட மாட்டாது. நாமே முனைந்து முயன்று முட்டி தேய நடந்து நடந்து கற்றால்தான் உண்டு.
நானும் பள்ளியிறுதி வகுப்போடு பாடத்திட்டக் கல்வியை நிறுத்திக்கொண்டவன்தான். ஆனால், கற்காமலோ படிக்காமலோ ஒருநாளும் இருந்ததில்லை. திருப்பூர் என்னும் பணிவாய்ப்பு நகரம் எனக்கிருந்ததால் நான் உடனே தொழிலுலகத்திற்குள் நுழைந்துவிட்டேன். அங்கேயே எனக்கு நேரம் போதவில்லை.
இடையில் ஒரு பட்டத்தை வாங்கி வைப்போம், திருமண அழைப்பிதழில் போட்டுக்கொள்ள உதவுமே என்று அஞ்சல் வழியில் இளங்கலைத் தமிழில் சேர்ந்தேன்.
எனக்கு அனுப்பப்பட்டிருந்த தமிழ்ப்பாட நூலில் தற்காலத் தமிழ் இலக்கியம் என்னும் கடைசிப் பாடம். அதில் தற்காலத்தில் புதுக்கவிதைகளை நன்றாக எழுதுபவர்கள் என்று ஒரு பட்டியல். அந்தப் பட்டியலில் என் பெயரும் இருந்தது.
“உன் பெயரே இடம்பெற்றிருக்கும் ஒரு பாட நூலைப் படித்துத் தேர்வெழுதி பட்டம் பெறுவதில்தானா உன் சிறப்பும் கல்வியும் அடங்கியிருக்கின்றன ? அந்தப் பொறுப்பை உணர்ந்து நீ உயர்வினும் உயர்வானவற்றில்தானே ஈடுபடவேண்டும் ?” என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். அஞ்சல் படிப்பைக் கைவிட்டேன்.
தொடர்ந்து படிப்பிலும் எழுத்திலும் கவிதையிலும் ஈடுபட்டபடியே இருந்தமையால்தான் நுண்ணுணர்வு பெருகியிருக்கிறது. தொடர்ச்சியான புரள்வினால் கூழாங்கல் அடையும் அழகு.
இதை எல்லாரும் முயல இயலாது. இதற்கென்றே தம்மை பலிபீடத்தில் இருத்திக்கொண்டவர்களால்தாம் இயலும்.
மேலாண்மையார் பார்த்த மக்களை எவ்வொரு கல்விக்கூடத்தவரும் பார்த்திருக்க மாட்டார். மேலாண்மையார் உணர்ந்த வாழ்வியல் கூறுகளை வேறாண்மையார் யாரும் அறிய மாட்டார்கள். அது ஓர் ஈக வேள்வி. அதில் ஈடுபடுவதற்கு ஈடில்லாத மனவலிமை வேண்டும். தன்னைத் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.
கவிஞர் தேவதேவனுடன் ஒருமுறை இக்குறையைப் பற்றிய பேச்சு வந்தது. “நான் படித்திருக்கலாமோ... கல்விக்கூடப் படிப்பைப் பயிலவில்லை என்று பிற்காலத்தில் குறைப்படுவேனோ...?” என்று அவரிடம் கேட்டேன். அவ்வாறு கேட்டபோது என் கண்கள் கலங்கின என்றே நினைவு.
“அப்படி யார் சொன்னது ? நீ இவ்வுலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமான வாழ்க்கைப் பல்கலைக் கழகத்தில் படித்தவன். அப்பன் சொத்து சேர்த்து வைத்திருக்கும் பிள்ளைகளுக்கு உள்ளூர்ப் பல்கலைக் கழகத்தில்தான் இடம் கிடைக்கும். அவர்களுக்கு வாழ்க்கைப் பல்கலைக் கழகத்தின் பாடங்கள் வாழ்வின் இறுதியில் ஒருவேளை விளங்கலாம். ஆனால் நீ நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டவன். ஒரு பாடத்தையும் தவறவிடாமல் அங்கே கற்றவன். யார்க்கும் கற்க வாய்க்காத அந்தக் கல்வியைக் கற்றமைக்காகப் பெருமைப்படு... உன் பெயரோடு ஒட்டிவரும் பட்டங்களால் என்ன பயன் ? ” என்று கூறினார். அன்று முதல் எனக்குத் தெளிவு கிடைத்தது.
முகநூலில் கணக்கு திறந்தபோதுகூட Studied at வாழ்க்கைப் பல்கலைக் கழகம் என்றே கொடுத்தேன். இன்றுவரை என் முகநூல் திரையில் வாழ்க்கைப் பல்கலைக் கழகம் எங்கே இருக்கிறது என்னும் ஒரு கேள்வி தோன்றிக்கொண்டே இருக்கிறது. அந்தப் பல்கலைக் கழகத்திற்கு வழி தெரிந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும். மற்றவர்கள் காலத்தைத் தின்றுவிட்டு அமர்ந்திருப்பார்கள்.

-மகுடேசுவரன்

#ஜெயமோகன்:

மேலாண்மை பொன்னுசாமிக்கு ஜெயமோகன் அஞ்சலிப்பதிவு

நன்றி. கீரனூர்.ஜாகீர்ராஜா

மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல்  திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக  மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார்.

மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே பார்க்கும் பார்வை.

எப்போதுமே புறவயமாகத் தெரியும் உலகியல்தோற்றத்தின் உள்ளே எழுத்தாளன் ஒளிருந்திருக்கிறான். அனைத்தையும் வேவுபார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் எழுதும்போது மட்டுமே வெளிப்படுபவன். சில அரிய தருணங்களில் அவன் நுட்பமாக வெளிப்பாடுகொள்வது ஒருவகை திறப்புக்கணம்.

அன்று மேலாண்மையை கோணங்கி கேலிசெய்துகொண்டே இருந்தார். அவர்களுக்குள் கடைசிவரை அப்படிப்பட்ட உறவே இருந்தது. மேலாண்மை பொன்னுச்சாமி கோணங்கியிடம் அவருடைய எழுத்தின் சிடுக்கான இயல்பைப்பற்றி மறுவிமர்சனம் செய்தார். அன்று கோணங்கி அவருடைய மதினிமார்களின் கதை தொகுதியின் மொழியை மாற்றிக்கொண்டு கணிதசூத்திர மொழியை தெரிவுசெய்ய தொடங்கியிருந்தார்

“மொழியிலத்தாண்டா இலக்கியம் இருக்கு. அதை மாத்தினா அப்டியே புத்தியும் மாறிப்போயிரும். கொல்லைக்குப் போறதுக்குக்கூட வழிதவறி எவனாவது கையப்புடிச்சு கூட்டிட்டுப் போறது மாதிரி ஆயிடுவே” என்றார். “அதெப்டி?” என்று நான் கேட்டேன். “ஹேண்டில்பாரை வளைச்சா சைக்கிள் வளையும். அப்ப சைக்கிளை வளைச்சா ஹேண்டில்பாரும் வளையும்ல?” என்றார். அந்த எளிய உவமையை நான் பலமுறை நினைத்து புன்னகைத்தது உண்டு. அவருடைய தரப்பை அவரால் தெளிவாகச் சொல்லிவிடமுடியும். “பூசாரி மந்திரம் புரிஞ்சிடிச்சின்னா தட்டில காசு விழாதில்ல?” என்று அன்று நான் எழுதி “ஸ்பானியச்சிறகும் வீரவாளும்’ தொகுதியில் இருந்த சிறுகதையைப்பற்றி சொன்னார்.

இருவகை மார்க்ஸியர்கள் உண்டு. வாசிப்பினூடாக அங்கே சென்றவர்கள், அன்றாட அனுபவம் வழியாக அங்கே கொண்டுசெல்லப்பட்டவர்கள். மேலாண்மை பொன்னுச்சாமி இரண்டாம்வகையானவர். ஆகவே அவருடைய மார்க்ஸிய நம்பிக்கையும் கட்சிச் சார்பும் அழுத்தமானவை. கிட்டத்தட்ட மதநம்பிக்கைபோல. அவரிடம் பல விவாதங்கள் எழுந்துள்ளன. மார்க்ஸியம் சார்ந்து, கட்சியரசியல் சார்ந்து, இலக்கியம் சார்ந்து. அவர் ஒவ்வொன்றுக்கும் அவர் நேரடியாகக் கண்ட அனுபவங்களையே மேற்கோளாக்கி வாதிடுவார்.

அன்று மேலாண்மை பொன்னுச்சாமி புகழ்பெற்றிருக்கவில்லை. தீக்கதிர், செம்மலர் போன்ற இதழ்களில் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். பின்னர்தான் ஆனந்தவிகடன் அவரை எடுத்துக்கொண்டது. ஜெயகாந்தன் சு சமுத்திரம் வரிசையில் விகடனால் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் அவர். விகடனின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியனுக்கு அவருடைய கதைகள் தனிப்பட்ட முறையில் பிடித்திருந்ததாகச் சொல்வார்கள்.

விகடனில் எழுதத்தொடங்கியபின்னரே மேலாண்மை பொன்னுச்சாமி தன் குரலையும் வடிவையும் கண்டுகொண்டார் என்று சொல்லலாம். நேரடியான, ஆக்ரோஷமான முற்போக்குப் பிரச்சாரக் கதைகள் அவை. கிராமியப்பின்னணியில் அடித்தள மக்களின் அன்றாட அவலங்களைச் சொல்பவை. வலுவான கட்டமைப்பு கொண்டவை, நம்பகமான களமும் திடமான இறுதிமுடிச்சும் கூடியவை.  அழகியல்ரீதியாக அவை சு.சமுத்திரம் எழுதிய கதைகளின் நேரடித் தொடர்ச்சி எனலாம்.

அவை உருவாக்கிய தாக்கம் என்னவென்றால் இன்றுவரைக் கூட அத்தகைய கதைகள் விகடனில் வந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான். விகடனின் வாசகர்களுக்கு அவர்கள் விட்டுவந்த ஓர் உலகின் கடும்வண்ண சித்திரங்களை அளிப்பவையாக இருந்தன அப்படைப்புக்காள்

அவர் தன் படைப்புகளுக்காக சாகித்ய அக்காதமி விருது உட்பட குறிப்பிடத்தக்க அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப்பொறுப்பு உட்பட பல பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

அவருடைய நாவல்களுக்கு இலக்கிய முக்கியத்துவம் இல்லை என நினைக்கிறேன். அவை கதைகள் மட்டுமே. சில வலுவான கதாபாத்திரங்கள் அவற்றில் உண்டு. ஆனால் குறிப்பிடத்தக்கச் சிறுகதைகளை அவர் எழுதியிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தின் வரண்ட நிலத்தின் மக்களின் முகங்கள் தெரியும் படைப்புகள் அவை [மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகள் ]

ஆறாண்டுக்காலம் அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தேன். அனேகமாக எல்லா படைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பின்னர் தொடர்பு குறைந்தது. ஆனாலும் இருமுறை மேலாண்மறைநாடு சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

பின்னாளில் என்னை கடுமையாக விமர்சித்து அவர் நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் நேரில் சந்திக்கையில் அன்புடன் கைகளைப் பற்றிக்கொண்டு பேசுபவராகவே நீடித்தார். இயல்பில் அவர் எவரிடமும் பகைமையும் கசப்பும் கொள்பவரோ எதிர்மனநிலைகளில் நீடிப்பவரோ அல்ல. அவருடைய எழுத்தின்மேல் அழகியல்ரீதியான விமர்சனம் இருந்தாலும் அவருடைய அரசியல்சார்பின் மேலும் நேர்மையான செயல்பாட்டின்மேலும் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன்

சில வேடிக்கைக் கதைகளை மேலாண்மை பொன்னுச்சாமி பற்றி நண்பர் வட்டத்தில் சொல்வார்கள். மேலாண்மை பொன்னுச்சாமி அவருடைய ஊரில் மளிகைக்கடைக்காரராகவே அறியப்பட விரும்புவார். இலக்கிய அந்தஸ்து தொழிலைக்கெடுத்துவிடும் என்பது நம்பிக்கை. கோணங்கி அவருக்கு ‘மேலாண்மை பொன்னுச்சாமி ,சிறுகதைக் கிழார், மேலாண்மறை நாடு’ என்னும் விலாசத்தில் கார்டு எழுதிப்போடுவார். தபால்காரர் ஊரெல்லாம் விசாரித்து அவரிடம் கொண்டுசென்று கொடுப்பார்

ஒருமுறை கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அவரைப்பார்க்கச் செல்லும்போது ஒரு பாப்பா மளிகைப்பட்டியலுடன் சென்றது. அதை வாங்கி பட்டியலின் கடைசியில் சிறுகதை அரைக்கிலோ என எழுதி கொடுத்தனுப்பிவிட்டு மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். பட்டியலை பார்த்த மேலாண்மை பொன்னுச்சாமி நாற்புறமும் நோக்கி “பாவிப்பயக்களே, வாழவிடமாட்டீங்களாடா?” என்று கூச்சலிட்டாராம். கதைகள்தான். கோணங்கிக்கும் அவருக்குமான உறவே வேடிக்கையானது. சீண்டிக்கொண்டே இருப்பார்கள். தழுவிக்கொண்டும் இருப்பார்கள்.

விருதுநகர் மேலாண்மறைநாட்டில் [ 1951ல்] பிறந்தமையால் அப்பெயரைச் சூடிக்கொண்டார். ஐந்தாம் வகுப்பில் படிக்கையில் தந்தை மறைந்தமையால் படிப்பைத் தொடரவில்லை. மளிகைக்கடைத் தொழிலுக்குச் சென்றார். 2007ல் மின்சாரப்பூ என்னும் சிறுகதைத் தொகுதிக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றார்.

@மணி

உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை
தனக்குத் தானே துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை"
-வாலி

ஞாயிறு தோறும் தலைமறைவாகும்
வேலை என்னும் பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது
-ஞானக்கூத்தன்

ஹைக்கூ கவிதைகள்:

எத்தனை
காதல் தோல்வியோ...
ஆட்டுக்கிடாவுக்கு தாடி!

தன்மேல்
துளையிட்டதால்
அழுகின்றதோ மூங்கில்...
புல்லாங்குழல்!

இடைநிறுத்தம் இல்லா பேருந்து
நின்று நின்று சென்றது...
சாலையில் குழிகள்!

கடைசிப்பேருந்து...
இருக்கும் பத்துரூபாயும் கிழிசல்..
பயனில்லாச் சொந்தம்!

அப்பா கோபப்பட
பழைய சைக்கிளை
தள்ளுகிறேன் பழுதுபார்க்க...
தாத்தாவுக்கு வைத்தியம்!

நன்றி -வாரமலர்

#காரணமற்று சில கணங்கள் வெறித்துப் பார்ப்பது காட்சிகளையா?,நினைவுகளையா?"

-மணி

#எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்
எட்டு மனி நேரம் தூங்க வேண்டும்
எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?
-விக்கிரமாதித்யன்

வாழ்க்கை,லாப நோக்கம் உள்ளவனாக மனிதனை மாற்றுகிறது.
அதை மீறி மனிதனாக வாழ போராட்டம் தேவைப்படுகிறது
-மேலாண்மை பொன்னுசாமி

#கடனின்றி அமையாது...
நினைவு புதைகுழிக்குள்
பத்திரமாய் எல்லாம்

கனரா வங்கியில்
கடன் வந்த மறுநாள்
மூத்தவன் பிறந்தது

சொசைட்டி கடன்பெற்ற
மூன்றாம் நாள்
அவனுக்கு
முடியெடுத்து காது குத்தியது

அபிராமி பைனான்சில்
கையெழுத்து போட்டுவிட்டு
அப்படியே போய்
அவனை
பள்ளியில் சேர்த்தது

காரவீட்டு ராமசாமியிடம்
வீட்டை
அடகு வைத்த நாளில்
அவனை
கல்லூரியில் சேர்த்தது

ரோடுபோடுவதற்கோ
எதற்கோ
எல்லா நிபந்தனைகளுக்கும்
கட்டுபட்டு
உலக வங்கியில்
நிதியமைச்சர்
கையெழுத்து போட்ட தினத்தில்
அவன்
தேர்ச்சி பெற்றது

வயலை
அடகு வைத்து
அவனை
வெளிநாடு அனுப்பியது

நினைவுப் புதைகுழிக்குள்
எல்லாம்
பத்திரமாய்

இரா எட்வின்

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே !
                                                                   தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே !
                        வாழ்த்துதுமே !
                        வாழ்த்துதுமே !
                                    - மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

பத உரை:
ஆரும்- ஒலிக்கும்
மடந்தை- பெண்
எழில்- அழகு
பிறைனுதல்- பிறை போன்ற நெற்றி
தரித்த- அணிந்த
நறும்- வாசனை
அணங்கு- பெண்.

பாடலைப் பிரித்துப் பொருள்கொள்ளும் முறை:

நீர் ஆரும் கடல் உடுத்த நிலம் மடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனம் என திகழ்பரதக் கண்டம் அதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்தமிழ் அணங்கே! தமிழ் அணங்கே!
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

விளக்கம்:

ஒலி எழுப்பும் கடலை ஆடையாக உடுத்துகின்ற நிலமாகிய பெண்ணின் அழகு ஒளிருகின்ற சிறப்பு பொருந்திய முகமாக திகழ்வது பரதக்கண்டம். அதில் தெற்கு நாடுகள் பிறை போன்ற நெற்றியாகும். அவற்றில் சிறந்த திராவிட நாடு அந்த பிறை போலும் நெற்றியில் நல்ல மணம் பொருந்திய திலகமாக திகழ்கிறது. அந்த திலகத்தின் வாசனை போல அனைத்து உலகமும் இன்புற்றிருக்க எல்லாத்திசைகளிலும் புகழ் மணக்க இருக்கின்ற (புகழ் பெற்ற) தமிழ் ஆகிய பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் திறத்தைக் கண்டு எங்கள் செயலை மறந்து வாழ்த்துகிறோம்

மினிமீன்ஸ்

முதல் முத்தம்

அது அத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை
முன்னறிவிப்பின்றி நிகழ்ந்து முடிந்த முயற்சி

மீனை கவ்விக்கொண்டு பறக்கும்
பறவையின் துரிதக்கணம் அது

கன்னத்தின்
இதழ் சித்திரம் மட்டுமே
அது முத்தம் நிகழ்ந்த இடமென்று
அறிவித்துக்கொண்டிருந்தது

நினைவைக் கலைத்துக் கலைத்து அடுக்கிப்பார்க்கிறேன்
ஒரு முழு முத்தக்காட்சியை
கண்டுணரவே முடியவில்லை

ஆனால்
அதிர்வு அடங்கா நரம்புகளும்
கொதித்து ஓடும் குருதியும்
சொல்லும்
இது போன்றதொரு முத்தம்
இனி சாத்தியமே இல்லை என்று

- சுஜாதா செல்வராஜ்

கந்தர்வன்

*மண் பொய் சொல்வதில்லை*
*மிதிக்கிறோம்*
*மரம் பொய் சொல்வதில்லை*
*வெட்டுகிறோம்*
*மந்திரி பொய் சொல்கிறார்*
*மாலை போடுகிறோம்*

----------------------------
*எம்.எல்.ஏ. சட்டையில்*
*சில பைகள் தைத்தார்*
*எம்.பி.சட்டையில்*
*ஏராளம் பை தைத்தார்*
*மந்திரி பையையே*
*சட்டையாய்*
*மாட்டிக் கொண்டார்*

-கந்தர்வன்.

சதீஷ்

*
கூந்தல் இலக்கணம் - வைரமுத்து ❤

ஒரு பெண்ணின் கூந்தலை எப்படி ரசித்துவிட முடியும்? அலையலையாய் இருப்பதால் கடலலை, பரந்து விரிவதால் மேகம், மோதி சரிவதால் காற்று என எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம்.

வைரமுத்து கொண்ட கூந்தல் பார்வை கூந்தலைப்போலவே மலர்சூட வேண்டியது.

கூந்தல் சரிந்தால் ஒவ்வொரு முடியால் கோடுகள் கொண்ட அழகிய கோலம் என்பது அவரின் முதல் கூற்று.

"கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி
என் கர்வம் அழிந்ததடி"
(சிநேகிதனே - அலைபாயுதே)

அடுத்தது, அதே கூந்தல் சிக்கலாக விழாமல் அலையாய் விழுந்தால் அது பெருக்கெடுக்கும் பேராறு. சாய்த்துக்கொண்டு மீன் கூட பிடிப்பார்கள் வைரமுத்துவின் காதலர்கள்.

"கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்"
(என்னவளே - காதலன்)

அதே பெண்ணின் கூந்தல் திடமாக, அடர்த்தியாக, காத்திரமாக நீண்டிருந்தால் அதுவே பலம் வாய்ந்த கயிறு. வைரமுத்துவின் கதாநாயகிகள் சூரியனையும் கூந்தல் கொண்டு கட்டுவார்கள் அது இயக்கும் உலகையும் கட்டிவிட ஆசைப்படுவார்கள்.

"கார்குழலில் உலகை...
கட்டிவிட ஆசை..."
(சின்ன சின்ன ஆசை - ரோஜா)

"ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்"
(ஆகாய சூரியனை - சாமுராய்)

இப்படியெல்லாம் சரிந்துவிழும் கூந்தலை ஒரு பாதுகாப்புக்கு சரணாலயமாக கூட எழுதலாமென்று சொல்கிறார் வைரமுத்து. காதலனை மடிகிடத்தி அலைபாயும் கூந்தலில் சுவரெழுப்பி கருவறையின் வாசமும் இருளும் தருகிறாள் வைரமுத்துவின் காதலி.

"மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா"
(மலர்களே - லவ் பேர்ட்ஸ் )

கூந்தல் என்றால் கருமை. அதனால் தான் "கார்கூந்தல் பெண்ணழகு" என்றும் எழுதினர்.
அவர் ரசிக்கும் அவளின் கூந்தலுக்கு வேறு என்னவெல்லாம் நிறங்கள் இருக்கின்றன.

"இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே"
(பச்சைநிறமே - அலைபாயுதே)

இரவின் நிறம், மழைக்கால இருட்டின் நிறம், காக்கைச்சிறகின் நிறம், பெண்ணிடம் கண்மையின் நிறம், குயிலின் நிறம் என அனைத்தின் நிறமும் கூந்தலின் நிறமென ரசித்து எழுத்துவிடுகிறார்.

இவ்வளவு நிறத்தையும் சொல்லிவிட்டு அதில் வரும் இரவை மட்டும் தனித்து எழுதுகிறார். மேலோட்டமாக கூந்தலை இரவு என்று சொல்வதைக்காட்டிலும் விடியாத இரவு என்று சொல்வதில் இருக்கிறது கவியாளுமை. என்றால் விடியாத இரவுகளென்று எதுவுமில்லை.

"விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது ?
பூ வாசம் வீசும்
உந்தன் கூந்தலடி…"
(சந்தனத்தென்றலை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் )

இப்படி கூந்தலை இரவெனச் சொல்லிவிட்டு பகலை விட்டுவிட முடியாது. அப்படியென்றால் பகல் பெண்ணின் நிலையில் எப்படியாக இருக்கிறதென்று கேட்டால் கண்களைச் சொல்கிறார்.

"இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது ?
கதிர் வந்து பாயும்
உந்தன் கண்களடி…"
(சந்தனத்தென்றலை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)

-இளம்பரிதி.

@மணி

படி.நிறைய படி.எது வேணா படி.ஆனா படிச்சிண்டே இரு.தன்னாலயே தேவையில்லாத்தெல்லாம் உதிர்ந்து போய் என்ன வேணுமோ அதை மட்டும் படிப்பாய்
-லா.ச.ரா

சமூகம் முட்டாள்களை விரும்புகிறது, முட்டாள்களை எளிதாய் நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களை கையாள்வதும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதும் எளிது. முட்டாள்கள் கீழ்படிகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

கீழ்படிவது குற்றம் என்றால்கூட அவர்களால் கீழ்படியாமல் இருக்க முடியாது. அவர்களை கட்டாயப்படுத்தி எந்திரமாக்கிவிட முடியும்.

சமூகத்துக்கு தேவை எந்திரங்களேயன்றி மனிதர்களல்லர். மனிதனை மேலும் மேலும் முட்டாளாக்கினால் அவன் எந்திரமாகிவிடுவான். பணியாளாக,அதிகாரியாக,நிர்வாகியாக இருப்பான்- ஆனால் அறிவற்றவனாக.

-ஓஷோ

$நனைந்து
நடக்கும்போது
மழையும்
உடன் வருகிறது
-ராஜா சந்திரசேகர்