Monday 28 June 2021

ழான் போத்ரியா

உண்மை என்று ஒன்று கிடையாது. எல்லோரும் சேர்ந்து கட்டமைப்பதுதான் உண்மை.

-ழான் போத்ரியா

கிளாப் போர்டு

கிளாப் போர்டு

*சினிமாவில் கிளாப் போர்டு அடிப்பதைப் பார்த்திருப்போம். ஷாட்ஸ்,சீன் நெம்பர்,டேக் நெம்பர்,இன்டோர்,அவுட்டோர் எழுதியிருக்கும்

*எடிட்டிங்கின் போது டொக்கென்ற கிளாப் சத்தத்தையும்,டேப்பில் பதிந்திருக்கும் டொக் சத்தமும் பொருத்தினால் காட்சியும் வசனமும் சரியாய் இருக்கும்

**வசனம் இல்லாத காட்சிக்கு கிளாப் அடிக்க மாட்டார்கள். அப்போது போட்டோ எடுப்பது போல் கிளாப்பை மட்டும் காட்டுவது சைலண்ட் கிளாப்

*லாங் ஷாட் எடுக்கும் போது காட்சி முடிந்த பிறகு பிரேமுக்குள் ஓடிச்சென்று தலைகீழாக கிளாப் போர்டை பிடித்து அடிப்பது எண்ட் கிளாப்

#info

ஒளிமயமான E காலம்... ! - மின்வாகனங்களின் நிறை குறை #MyVikatan


ஒளிமயமான 'E காலம்' நம் கண்களில் தெரிகிறது என்று வாகன ஓட்டிகள் சொல்லும் நிலை வந்துவிட்டது. கவுண்டமணி சொன்னது போல் பெட்ரோல் விலை ஏறிப்போச்சேனு டீசல் ஊத்துனேன்.. டீசல் விலை ஏறிப்போச்சேனு சொல்லு அடுத்த எண்ணெயை சொல்லி அடுக்குவார். அதுபோல நடுத்தர வர்க்கத்தினரும் பெட்ரோல் விலைக்கு பயந்து டீசல் வாகனம் எடுத்து இப்போது டீசல் விலையும் ஏறிவிட்டதால் அடுத்து மின்சார வாகனத்தின் மீது கவனம் குவிந்துள்ளது. 2020ம் ஆண்டில் ஓக்கினாவா, ஹீரோ மற்றும் ஏத்தர் போன்ற எலெக்ட்ரிக் பைக்குகள் அதிகம் விற்று சாதனை படைத்துள்ளது.

ஆசைக்கு ஆண்ட்ராய்ட் போன்; சார்ஜ்க்கு சாதா போன் என்பது போல் நான்கு சக்கர வாகனங்கள் குடும்பத்துடன் தொலைதூர பயணத்திற்கும், அன்றாட தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களையும் இன்றைய காலகட்டதில் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எரிபொருளுக்கான செலவு என்பது தனி நபரை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கவலை கொள்ளச் செய்தது. இதனடிப்படையில் 2015ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 197நாடுகள் எதிர்காலத்தில் எரிபொருளுக்கு மாற்றான மின் வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்தன. அதன்படி 2030க்குள் நூறு சதவீத மின்சார வாகனங்களுக்கு மாறுதல் எனும் இலக்கு அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீக்கு ஒரு மின்னூட்டு நிலையம் அமைக்கவும் திட்டம் உள்ளது.


#மின் வாகனங்கள்

ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரை மின் வாகனங்கள் விற்பனைக்கு உள்ளன. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 70 முதல் 95 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. இலகுவான வாகனம் வண்டி ஓட்டவும் எளிதாய் இருக்கிறது. சர்வீஸ் இல்லை, இன்சூரன்ஸ் இல்லை. பயன்பாட்டினைப் பொறுத்து பேட்டரி மாற்ற வேண்டி இருக்கும். இரு ஆண்டு அல்லது மூன்றாண்டுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றும் சூழல் வரும். ரிசார்ஜபிள் பேட்டரி லித்தியத்தால் ஆனது என்பதால் நான்கு முதல் ஐந்து மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். 4 யூனிட் இருந்தால் போதும் 100% சார்ஜ் ஏறிவிடும்.வீட்டில் உள்ள ப்ளக் பாய்ண்டில் சார்ஜ் ஏற்றலாம். Fast charging பாயிண்டில் செய்தால் சார்ஜ் செய்யும் நேரம் இன்னும் குறையலாம். 40கி.மீ முதல் 45கி.மீ,50-65கி.மீ வேகத்தில் செல்லும். இழுவைத் திறன் அதிகம் உள்ள வண்டிகளும் இருக்கிறது. ரிவர்ஸ் எடுக்கும் வசதியும் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.


Ather-450X, Bajaj chetak, Hero electric optima, Hero Flash, TVS iQube போன்ற கம்பெனி வாகனங்களும் விற்பனையில் முன்னணியில் இருகின்றன. இதேபோல் விலைகுறைவான வாகனங்களும் சந்தையில் கிடைக்கின்றன. 50,000 கிலோமீட்டர்களுக்கு பேட்டரி மாற்ற வேண்டியதில்லை. 3 ஆண்டுகள் வாரண்டியும் கொடுக்கின்றனர். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பேட்டரி தயாரிப்பில் ஈடுபட உள்ளதால் விலை குறைய இன்னும் வாய்ப்புண்டு.

#என்னென்ன வகைகள் உள்ளன

மின்சார வாகனங்களை பொறுத்த வரையில் முதலில் தனிநபர் செல்வதற்கு மட்டுமா, குடும்ப பயன்பாட்டிற்கா, கமர்சியல் உபயோகத்திற்கா என முதலில் முடிவெடுக்க வேண்டும். பேட்டரியை பொறுத்தவரை லித்தியம் வகை பேட்டரி 3 வருடமும், லீட் பேட்டரி ஒரு வருடமும் மாற்ற வேண்டி இருக்கும். மற்றொன்று போர்டபிள் பேட்டரி. இது கழட்டி மாட்டி சார்ஜ் ஏற்றலாம். இன்னொன்று வண்டியிலேயே இருக்கும், கழற்ற முடியாது.. அப்படியே சார்ஜ் செய்ய வேண்டும்.


ரிமோட் லாக், LED விளக்குகள், டிஸ்க் ப்ரேக், USB charger, digital dashboard, சில வாகனங்களில் இரட்டை பேட்டரிகள்,சைட் ஸ்டேண்ட் அலாரம், ரிவர்ஸ் எடுக்கும் போது பீப் சவுண்ட், போன்றவை இருப்பதை கவனத்தில் கொள்ளலாம்

*சில வாகனங்களில் Eco speed, Sport speed என இரு ஆப்சன்கள் இருக்கும். முதலாவது மிதவேகமும் மைலேஜும் கொடுக்கும். இரண்டாவது அதிக வேகம் ஆனால் மைலெஜ் குறையும்


*மொபைல் மூலம் வாகனத்தின் dashboard ல் இணைத்துக் கொள்ளலாம்.


*Auto cut off ஆப்சன் என்பது விடிய விடிய சார்ஜ் ஏறினாலும் சார்ஜ் முழுமையாய் ஏறியவுடன் தானியங்கியாய் நின்றுவிடும்.


*TVS iqube வாகனம் மட்டும் தற்போது சென்னையில் மட்டும் அறிமுகமாகியுள்ளது.ஜூபிடர் பைக் போல் தோற்றம்.75கிமீ வேகத்துடன் 78கி.மீ மைலேஜ் கிடைக்கிறது.


*Bajaj chetak ஆரம்பம் முதல் ரிச் லுக்கில் 95கி மீ மைலேஜ் உடன் 70 கி.மீ வேகம் கிடைக்கும்.பேட்டரியை கழட்டி சார்ஜ் செய்துகொள்ளலாம்


*Tunwal குறைந்த வேகத்தில் செல்ல கூடியது.


*Hero ப்ராண்டை(photon,optima,Nyx,e Pluto) பொறுத்தவரை எகானமிக்கலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.45கி.மீ வேகம் 100ப்ளஸ் மைலேஜ் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது

*Ather-450X மின் ஓட்டிகளிடையே நம்பகமான வாகனம் என சொல்லப்படுகிறது.அவசர தேவைக்கு பத்து நிமிடம் சார்ஜ் ஏற்றினாலும் 15கி மீ செல்லும்.80 கி மீ வேகமும் 100ப்ளஸ் மைலேஜ்ஜும் கொடுக்கிறது. 7இன்ச் பேட்டரி,guide lamb போன்ற வசதிகளும் உள்ளன.


இன்னும் பல நிறுவனங்களின் பைக்குகள் இணையத்தில் காணப்படுகின்றன.அதில் பட்ஜெட்டை பொறுத்து தேர்வு செய்யலாம். ஏனெனில் எல்லாமே சற்று விலை அதிகம் என்பதால் எல்லாவற்றையும் மனதில் வைத்து எடுக்கவும்


*ப்ளஸ்

100 கிமீ பயணத்திற்கு பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் மின்சார வாகனங்கள் விலை குறைவு. பராமரிப்பு மற்றும் எரிபொருளுடன் ஒப்பிட்டால் செலவு குறைவு.


*உதாரணத்திற்கு 50கி.மீ பயணத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 99ரூ செலவாகும். மின் வாகனத்தில் 20 முதல் 30 மட்டுமே செலவாகிறது.


*சர்வீஸ் செலவோ, இன்ஜின் பராமரிப்பு செலவோ இல்லை. பேட்டரி மாற்றுவதும் எளிது.


*chassis-mounted motor, hub motors பொருத்தப்பட்டிருப்பதால் சத்தமில்லாத சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


*அதிகமாக ஆக்சிலேட்டரை முறுக்கினாலும், பேட்டரியிருந்து மோட்டருக்கு வரும் மின்சாரத்தை கட்டுப்படுத்தி அளவான மின்சாரம் கிடைக்கும்படி கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


*சில வாகனங்களில் Eco mode, ride mode, sport modes என்று மூன்று இருக்கிறது. முறையே 75 kms அடுத்து 65kms, 55kms போகலாம். சில வாகனங்களில் low மற்றும் high ஆப்சன்களுடன் வேக மாறுபாட்டை செய்து கொள்ளலாம்.


*தொடுதிரை வசதி இருப்பதால் ப்ளூ டூத் மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். மொபைல் போன் சார்ஜ்செய்து கொள்ளும் வசதியும் உண்டு.


*போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் நெடுநேரம் காத்திருப்பதால் எரிபொருள் வீணாகும். மின் வாகனத்தில் அக்கவலை இல்லை.


*பார்க்கிங் அசிஸ்ட்டன்ஸ் இருக்கிறது. பார்க்கிங்கில் வண்டியை reverse , பார்வர்டு… ஸ்லோ மோடில் எடுக்க, நிறுத்த சுலபமாக இருக்கிறது.


#குறைகள்
*பேட்டரி சார்ச் எல்லா இடத்திலும் செய்ய இன்னும் வசதி செய்யவில்லை.


*பேட்டரி போனால் வேறு பேட்டரி மாற்ற 14000 முதல் 30,000 வரை செலவு ஆகும்.


*வாகனத்தின் விலை அதிகம்

*சில வாகனங்களின் பேட்டரிகள் கழட்ட முடியாததால் வீதியில் வைத்தோ அல்லது வீட்டிற்குள் கொண்டு வந்தோதான் சார்ஜ் செய்ய வேண்டும்.


*வாகன எண் இல்லாததால் ஒரு வேளை களவு போனால் எவ்வாறு அடையாளம் கண்டு கண்டுபிடிப்பது எனத் தெரியவில்லை


*charge செய்ய அதிக நேரம் ஆவது மைனஸ். அமெரிக்காவில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றனர்.


*ஒன்றரை அடி தண்ணீரில் நிற்காமல் பேட்டரி இயங்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்துவிட்டால் தான் கஷ்டம்.


*Boot space எனும் இடவசதி சில வாகனங்களில் இல்லை


*சார்ஜிங் பாய்ண்ட் இன்னும் நிறுவப்படாததால்.. நெடுந்தூர பயணத்திற்கு ஏற்றது அல்ல.


பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருப்பதால் மின் வாகனங்களின் உற்பத்தி வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.குஜராத் மாநில அரசு சார்பில் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2021ல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்போவதாக கூறியுள்ளது.மத்திய அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளது.


நாளை மின் தேவை அதிகரிப்பின்மின்சார வாகனங்களின் தொடர்ச்சியாக இன்னும் சூரிய மின் சக்தியில் இயங்குபவை, ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்கள் ஆகியவை வர உள்ளன. மின்சார தொடர்வண்டிக்கு அமைத்துள்ளதைப்போன்று மின்சார கம்பிகளை சாலையின் மேல் அமைத்து வாகனங்கள்.. பயணித்துக்கொண்டிருக்கும் போதே மின்னேற்றம் செய்துகொள்ள வகை செய்யும் முறையும் வெளிநாடுகளில் பரிசீலனையில் உள்ளது.

“எதிர்காலம் இறந்த காலத்தால் பக்குவமடைகிறது என்பார்கள்.மின்சார காலம் எப்படி இருக்கிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.

-மணிகண்டபிரபு

Sunday 27 June 2021

சேயோன் யாழ்வேந்தன்

காவல்காரியாய் சில நேரம்
எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும்
புலனாய்வு அதிகாரியாய் சில நேரம்

எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும்
வழக்கறிஞராய் சில நேரம்

எங்கள் பிணக்குகளை விசாரித்து
தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம்

பல வேடம் போடும் அம்மா
எப்போதும் வீட்டுச் சிறையில்
கைதியாய்!

-சேயோன் யாழ்வேந்தன்

Saturday 26 June 2021

இந்திராவின் மனசாட்சி.. டெக்னிக்கல் மூளை..! - சஞ்சய் காந்தியின் எழுச்சியும் வீழ்ச்சியும் #MyVikatan


எத்தனை தேர்தல்கள் நாம் நடத்தியிருக்கிறோம் என்பதைக் கொண்டு எதிர்காலச் சந்ததியினர் நம்மை எடைபோடப் போவதில்லை. எத்தனை முன்னேற்றத்தை நாம் அடைந்திருக்கிறோம் என்பதைக் கொண்டுதான்
சஞ்சய் காந்தி

இந்திராவின் மனசாட்சியாகவும், இந்தியாவின் அடுத்த அரசியல் தலைவராகவும் மிளிர இருந்தவர் சஞ்சய் காந்தி. குறைவாக படித்திருந்தாலும் தாயிடம் அரசியல் கற்றதுடன் இறுதிவரை இந்திராவின் ஊன்றுகோலாக இருந்தவர். எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் அப்போதைய கவனிக்கத்தகுந்த ஆளுமையாக இருந்தார். குடும்பத்தில் அண்ணன் ராஜிவ் காந்திக்கு நேர் எதிரான தம்பி இவர். படிப்பில் சோபிக்கத் தவறினாலும் இப்போதிருக்கும் பிள்ளைகள் போல கார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மீதுதான் கொள்ளைப் பிரியம் இருந்தது. எந்தப் பொருளையும் பிரித்து மாட்டும் டெக்னிக்கல் மூளை.


குடும்பத்தில் மற்றவர்களைப் போல் டூன் பள்ளியில் படித்தாலும், அங்கு படிக்க பிடிக்காததால் டெல்லி கொலம்பஸ் பள்ளிக்கு மாறினார், பள்ளி வாழ்க்கை இவருக்கு சீக்கிரம் வெறுத்தது. தன் 14ம் வயதில் தந்தையை இழந்த போது பொறுப்பு கூடியது.

கார்களின் மீதிருந்த காதலால் இங்கிலாந்தில் க்ரூ என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு இரு ஆண்டுகள் பணியின் போது அங்கும் வேகமாய் கார் ஓட்டி கண்டிக்கப்பட்டார். அதன் பின் பாதிப்படிப்பிலேயே இடைநின்று நாடு திரும்பி தாய்க்கு உதவியாக அரசியலில் நிழலாய் வந்தார். எந்த பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படாத போதும் எல்லா முடிவுகளுக்கு பின்னாலும் இருந்தார். நெருக்கடி நிலை கால கட்டத்தில் இந்திராவை அறிந்தவர்கள், நிச்சயம் சஞ்சய் காந்தியையும் அறிவார்கள். தாயின் ஆணைக்கு கட்டுப்பட்டு தீரத்துடன் அதனை செயல்படுத்துபவராக இருந்தார். எடுத்துக்காட்டாக இவரின் அரசியல் தலையீடுகளை பொறுக்க முடியாமல் அப்போதைய அமைச்சர் ஐ.கே.குஜ்ரால் பதவி விலகியதை கூறுவார்கள்.


#மாருதி கார்

ஏழைகளின் ஆடி கார் என இன்றளவும் எளிய மக்கள் புழங்கும் மாருதி கார் சஞ்சய் காந்தியின் கனவுத்திட்டம் ஆகும். குறைந்த விலையில் கார் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் சரியானதாக இருந்தது. அதற்கான பயிற்சிக்காகவே அப்போது இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டார். பாதியிலேயே தாயகம் திரும்பி அரசியலில் ஈடுபட்டாலும் குறைந்த விலையில் கார் தயாரிக்கும் கனவு மாருதி மூலம் இந்தியாவில் நனவானது. மத்திய அரசு சிறியரக கார்கள் தயாரிக்க சஞ்சயின் மாருதி நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததில் அரசியல் சர்ச்சையானது.


ஹரியானா முதல்வர் பன்சிலால் சலுகை விலையில் ராணுவ தளத்துக்கு அருகாமையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் கார் தயாரிக்க இடம் கொடுத்ததும், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் பெருந்தொகை கடன்வாங்கி 1971 உற்பத்தியை துவக்கினார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

கார்கள் உற்பத்தியாகவில்லை, இஞ்சின் குளறுபடி, திட்டமிட்ட முறையில் கார் வெளிவராதது என நாடு முழுவதும் டீலர்கள் ஏமாற்றமடைந்தனர். மொத்தத்தில் இத்திட்டம் தோல்வியை தழுவியது


இத்திட்டம் வெளிப்படையான உறவுச்சலுகை எனவும், இந்திராவின் வாட்டர் கேட் எனவும் பத்திரிக்கையாளர்கள் கூறினர். நெருக்கடி நிலை வந்தபிறகு கார் பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு அரசியலில் அம்மாவுக்கு உதவியாய் வந்தார்.

#நெருக்கடி நிலையும் சஞ்சய் காந்தியும்

1975ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி சண்டிகர் நடைபெற்ற கோமகட்டாறு கூட்டத்தில் சஞ்சய் காந்தி இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். இந்திராவின் அரசியல் கேடயம் என வர்ணிக்கப்பட்டார்.கிராமங்கள் தோறும் இளைஞர் அமைப்பினர் நியமிக்கப்பட்டனர்.1976ல் நெருக்கடி நிலையில் ஐந்து அம்சத்திட்டத்தை அறிமுகம் செய்தார்.குடும்பக் கட்டுப்பாடு,மரம் நடுதலும் குடிசை ஒழிப்பும்,வரதட்சணை ஒழிப்பு, ஒருவர் மற்றவருக்கு கற்பித்தல், சாதிமுறை ஒழித்தல் என்று நல்ல திட்டமாக இருந்தாலும் செயல்படுத்தியதில் மோசமான எதிர்விளைவு ஏற்பட்டது.


மக்கள் தொகை இந்தியாவின் வளர்ச்சிக்கு பின்னடைவாக இருப்பது கருதி குடும்பக்கட்டுப்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக கிராமங்களில் திணிக்கப்பட்டது. கட்டாய அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.பல மாநிலங்களில் இதன் மூலம் அதிருப்தியும் கிளர்ச்சியும் ஏற்பட்டது.

இரவில் சுற்றி திரிவோர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அனுப்பி வைத்தனர் போலீசார். அடுத்து டெல்லியில் அழகு படுத்தும் நோக்கில் 'டர்க்மன் கேட்' பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்களின் குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டது. கிளர்ச்சி செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினர்.


இதற்குப் பின் நடைபெற்ற தேர்தலில் ஜனதா அரசு வெற்றி பெற்றது. ஷா கமிஷன் விசாரணை இந்திரா குடும்பத்துக்கும், காங்கிரசுக்கும் பெரும் தலைவலியாக இருந்தது. நெருக்கடி காலத்தில் இந்திராவுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படத்தை சஞ்சய் காந்தி அழித்துவிட்டதாக குற்றம் சாட்டி வழக்கு போட்டனர். சஞ்சய் காந்தியும், சுக்லாவும் கைதாகி பின் ஜாமினில் வந்தனர். கிஸார்குர்ஸிகா எனும் இந்த வழக்கு ஜனதா அரசாங்கத்துக்கு அவப்பெயரை தேடித்தந்தது. அதன்பின்னர் 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்திராவும் சஞ்சையும் மீண்டும் புத்துணர்வு பெற்றனர்.


#எதிர்பாராத இறப்பு

கார்களின் விருப்பம் மெருகேறி விமானத்தின் மீது சஞ்சய்க்கு நாட்டம் ஏற்பட்டது. சிறிய ரக விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத் தேறினார். அண்ணன் ராஜிவ் பைலட்டாக இருப்பதால் ஏற்பட்ட விருப்பமாய் கூட இருக்கலாம்.

விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் (“பிளையிங் கிளப்”) உறுப்பினராக இருந்தார். 'பிட்ஸ்'எனும் அமெரிக்க ரக சிறிய விமானத்தில் தினமும் காலை டெல்லியை ஒரு வட்டமிட்டு திரும்புவது சஞ்சயின் வழக்கம்.


அப்படித்தான் எப்போதும் போல 1980 ஜுன் 23ந்தேதி காலை 8 மணிக்கு 'புஷ்பக்' என்ற சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது சஞ்சய் பறந்தார். அவருடன் சக்சேனாவும் பயணம் செய்தார். இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது.

அப்போது எதிர்பாராத விதமாக வெலிங்டன் கிராஸ் எனும்
இடத்தில் செங்குத்தாக தரையில் விழுந்து மோதியது. இது
பாராளுமன்றத்திலிருந்து மூன்று கிலோமிட்டர் தொலைவில் இருந்தது. இந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. சஞ்சையின் வீட்டுக்கு பின்புறம் தான் இந்த இடம் உள்ளது. விமானம் மூன்று முறை வட்டமடித்து, நான்காம் முறை வட்டமடிக்கும் போது விழுந்ததாக கூறப்பட்டது. விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சயும், உடன் பயணித்த சக்சேனாவும் இறந்தனர்.


இரத்த வெள்ளத்தில் இருந்தவரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இறந்ததை உறுதிப்படுத்தினர். உடல் பல பாகங்களாக சிதறி இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து பிறகு பிற்பகலில் வீட்டிற்கு கொண்டு வந்தனர். இந்த மரணம் இந்திராவையும் மேனகாவையும் உலுக்கிவிட்டது. 35 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரின் மரணம் இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தது.

சஞ்சய் காந்தி இறந்த போது மகன் வருணுக்கு மூன்று வயதே ஆகியிருந்ததால் இத்தாலியிலிருந்து வந்த ராஜீவ் காந்தியே சஞ்சய்க்கு இறுதிச்சடங்கு செய்தார். சஞ்சையின் மரணம் ராஜீவின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


-மணிகண்டபிரபு

ஷான்

கைப்பேசியை பத்திரப்படுத்தவா
கவிதையொன்றை யோசிக்கவா
கைக்குட்டையைத் தலையிருத்தவா
குனிந்து ஒளியவா நிமிர்ந்து நனையவா
கடையடைக்கவா குடை விரிக்கவா
ஒரு கையறு நிலையிலேயே
எப்போதும் எதிர்கொள்கிறோம்
திடீரென்று ஒரு பெருமழையை

-ஷான்

Friday 25 June 2021

மெளனி

காலத்தின் கையை பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதான் இருக்கும்

-

வதந்திகள் பரவுமிடம்..! - 2021 டிஜிட்டல் செய்திகள் ரிப்போர்ட் #MyVikatan


பஞ்சாயத்து டி.வி வந்தபோது மக்களை ஊர் ஊராக பிரித்தது வீட்டிற்குள் டிவி வந்த போது மக்களை குடும்பம் குடும்பமாக பிரித்தது மொபைல் போன் வந்த பிறகு மக்களை தனிமனிதர்களாக பிரித்தது.

உன் கையில் மொபைலா? இல்லை மொபைலின் கையில் நீயா? எனக் கேட்கும் அளவிற்கு மொபைல் போனிற்கு அடிமையாகிவிட்டோம். பதினைந்து நிமிடத்திற்கு மேல் மொபைல் பார்க்காமல் இருந்தால் நீங்கள் மொபைல் போனிற்கு இன்னும் அடிமையாகவில்லை என அர்த்தம் என்று நவீன ஆய்வு சொல்கிறது. மற்ற நாட்களில் வேலைக்கு நடுவில் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். தற்போது கொரொனா காலகட்டத்தில் தனிமையில் இருப்பதால் பயன்படுத்துவதே வேலை என்றாகிவிட்டது. பிரபல ராய்ட்டர்ஸ் நிறுனத்தின் 2021ம் ஆண்டிற்கான டிஜிட்டல் செய்தி அறிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் உலகளாவிய அளவில் மொபைல் பயன்பாடும், சமூக ஊடகங்களின் தாக்கமும் குறித்த அறிக்கைவெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் சுருக்கத்தைப் பார்க்கலாம்


#டிஜிட்டல் செய்தி அறிக்கை 2021


ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது போல இந்த ஆண்டு டிஜிட்டல் செய்தி அறிக்கை ஜூன் 23 புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பு 46 நாடுகளில் 92,000- க்கும் மேற்பட்டு பதிலளித்தவர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பாகும். இந்த ஆண்டு இதில் இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா மற்றும் பெரு ஆகிய ஆறு புதிய நாடுகள் இணைக்கப்பட்டன.

2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தாக்கிய காலக்கட்டத்திலிருந்து செய்தி ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாய் இருந்தது. முதலில் செய்தித்தாள்கள் மீது தொற்று அச்சம் இருந்ததால் செய்தித்தாள்களின் விற்பனை சரிந்தது. இந்த சவாலை எதிர்கொண்ட செய்தித்தாள்கள் விழிப்புணர்வூட்டி மக்களிடம் கொண்டு சேர்த்தன.

வாசிப்பாளர்கள் துல்லியமான நம்பகத்தனமான செய்திகளை நாட அச்சு ஊடகங்களையே அதிகம் நம்பினர். இதில் அதிகபட்சமாக பின்லாந்தில் 65% பேரும் அமெரிக்காவில் 29% பேரும் நாடினர். செய்தித்தாள்களை பின்னுக்கு தள்ளி பல நாடுகளில் தொலைக்காட்சிகள் முன்னணி வகித்தன. செய்திகளை பகிர்வதில் வாட்ஸ் அப், டெலிகிராமில் அதிகம் செய்திகள் பரவின. குறிப்பாக தவறான செய்திகளை பரப்பியதிலும் சமூக ஊடகங்கள் முன்னணி வகித்தன.இதில் அதிகபட்சமாக பிரேசிலில் 82%ம், குறைவாக ஜெர்மனியில் 37%ம் பரப்பினர். கொரொனாவுக்கு விழிப்புணர்வு தருகிறேன் என நினைத்து பலர் தவறான தகவல்களை பரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


#உலகளாவிய அளவில் ஆய்வு

உலகளாவிய அளவில் இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவல்கள்.

*கொரோனா காலகட்டம் எல்லாத் துறைகளையும் போல அச்சுத்துறையையும் அச்சுறுத்தியது.

விளம்பரதாரர் மற்றும் வாசகர்கள் சந்தா குறைந்தது. இதனையும் எதிர்கொண்டு செய்திகளை மக்களிடம் சேர்த்தனர்.

*தொற்றுக் காலத்தில் வீட்டிலேயே இருந்ததால் அச்சு ஊடகங்களை விட தொலைகாட்சிகள் வலுவாக செயல்பட்டன. இதனால் டிஜிட்டல் யுகத்தை நோக்கி மக்களைக் கொண்டு சென்றது.

*மக்கள் ஒரு சார்பு செய்திகளை விரும்பாமல்.. நடுத்தர நிலையை பிரதிபலிக்கும் செய்திகளை இக்காலகட்டத்தில் அதிகம் விரும்பினர்.


*பெரும்பாலான நாடுகளில் தவறான தகவல்களை பேஸ்புக்கில் மக்கள் அதிகம் பகிர்ந்தனர். பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளில் வாட்ஸ்அப்பில் அதிகம் பகிர்ந்துள்ளனர்.


*பிரதான செய்தி நிறுவனங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் செய்திகளை பதிவிட்டு அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.


*18முதல் 24 வயதுடையோர் சமூக ஊடகங்களில் செய்திகளை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமின்றி இருந்தனர்.


*இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் டிவி சேனல்களின் செல்வாக்கு இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்திருந்தது.


*ஸ்மார்ட் போன்களின் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வது 2020ம் ஆண்டு 69% ஆகவும் தற்போது 2021ம் ஆண்டு 73% ஆக உயர்ந்துள்ளது.

*இணையத்தை பொழுதுபோக்கு மற்றும் கவனச்சிதறலுக்காக தழுவி, பின்னர் தங்கள் அரசியல் கோபத்தை வெளிப்படுத்த அதிகம் பயன்படுத்தினர்.

*ஒவ்வொரு செய்தி நிறுவனமும் குறிப்பிட்ட சதவீத மக்களின் நம்பிக்கையை பெறவும் தக்க வைக்கவும் செய்திகளை நல்ல முறையில் தந்தன

இந்த அறிக்கையில் ஒவ்வொரு நாட்டினையும் வகைப்படுத்தி தெளிவான படங்களின் மூலம் குறிப்பிட்டிருந்தனர்.


#இந்தியாவில்


இந்தியாவில் செய்திகளை தெரிந்து கொள்ளவும்,பகிரவும் மக்கள் ஆர்வமுடன் இருந்தனர். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தொலைக்காட்சிகளை பின்னுக்கு தள்ளி வாட்ஸ் அப்,யூ ட்யூப், பேஸ்புக் செய்திகளே அதிகம் பகிரப்பட்டு பார்க்கப்பட்டன். உலகளாவிய கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மொபைல் போனுக்கான சந்தை கடந்த ஆண்டு வலுவாக இருந்தது.

இங்கு 73% பேர் ஸ்மார்ட் போன்களின் செய்திகளை வாட்ஸ் அப், யூ ட்யூப் மூலம் பார்க்கின்றனர்.


37% பேர் கணினியை பயன்படுத்தினாலும் ஒப்பீட்டளவில் கைக்கு அடக்கமான எங்கேயும் எடுத்துச்செல்லும் வகையில் இருப்பதால் ஸ்மார்ட் போன்களே முன்னணியில் இருக்கின்றன. தவறான தகவல்களை இந்தியாவிலும் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலமே அதிகம் பரவின.

செய்திச்சேனல்கள் தந்த தகவல்களை விட செய்தித்தாள்கள் மீது இந்தியர்கள் அதிக நம்பகத்தன்மை வைத்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. செய்திகளை தொலைகாட்சியின் மூலம் 50% பேரும், செய்தித்தாள் மூலம் 59% பேரும், ஆன்லைனில் 82% பேரும், சமூக வலைதளங்களில் 63% பேரும் பார்ப்பதாய் கருத்து தெரிவித்துள்ளனர். செய்திச் சேனல்கள் செய்திகளுக்கான கவரேஜ் மற்றும் செய்தியாக்கத்தில் மக்களிடன் குறைந்த நம்பிக்கையையே பெற்றிருப்பதாய் கூறுகிறது


ஊரடங்கு, பொருளாதார நிலை பாதிப்பால் செய்தித்தாள்களின் விளம்பர பிரிவில் அரசு மற்றும் வணிக விளபரங்கள் இல்லாததால் நிதிச்சுமை கூடியது. பல வார இதழ்கள் நிறுத்தப்பட்டது. நாளிதழ்களும் நிலைமையை சமாளிக்க விலை ஏற்றம், பக்கங்கள் குறைப்பு நடவடிக்கைளை எடுத்தன.

இந்தியவில் 24*7 செய்திச் சேனல்கள் முக்கியச்செய்தி மற்றும் விவாத மேடையில் செய்திகளை சிதைத்து பரபரப்பை ஏற்படுத்துவதாக இந்த அறிக்கை சொல்கிறது தொலைக்காட்சிக்கான டி ஆர்.பி ரேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளாகின.மொபைல் வந்த பிறகு கேட்பாறற்று போய்விட்டன டி.வி ரிமோட்டுகள் எனும் நிலை ஆகின.


OTT தளங்கள் போன்றவை மொபைல் போனின் பக்கம் கூடுதல் வாடிக்கையாளர்களை குறிப்பாக இளைஞர்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.சமூக ஊடகங்களில் வாட்ஸ் அப்பில் செய்திகளை பகிர 53%ம், மற்ற உபயோகங்களுக்கு 80% பயன்படுத்தி பெரும்பான்மை வகிக்கிறது. வாட்ஸ் அப்பை தொடர்ந்து யூ ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் அடுத்தடுத்து உள்ளது. குறைவான உபயோகத்தில் டெலிகிராம் பயன்படுத்துவோர் உள்ளனர்.


முன்பெல்லாம் சமூக ஊடகங்களை பயன்படுத்தினால் கெட்டு விடுவாய் என பயமுறுத்தினர்.ஆனால் இன்று எல்லாரும் தங்கள் விருப்பப்படி பயன்படுத்தி சமூக ஊடகங்களையே கெடுத்துவிட்டனர். செய்திகளின் உண்மைத்தன்மை ஆராயமல் திட்டமிட்ட தூற்றுதலுடன் முதலில் பகிர்கிறார்கள்.பின்னர் வருவோரெல்லாம் செய்தியை சீர்தூக்கிப் பாராமல் பகிர்கின்றனர். பிறகு அதுவே உண்மையென மக்கள் மனதில் பதிகிறது. ஒரு பரப்பரப்பு செய்தியின் வாழ்நாள் ஐந்து நிமிடம் மட்டுமே. அடுத்த செய்தி வந்தவுடன் இதனை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.

செய்திகளை அடுத்து அடுத்து மெருகேற்றும் போது சில இடங்களில் நம்பகமற்ற தகவலும் உடன் பயணித்துவிடுகிறது. ஆகவே உண்மைச் செய்திகளை பகிர்வதிலேயே முழு முயற்சி கொள்வோம். செய்தி நிறுவனங்களை போல் தனிநபரும் செய்தியின் உண்மையையும் உறுதித்தன்மையையும் பெற்ற பின்னரே பகிர வேண்டும். தனி நபர் தாக்குதல் அதிகரிக்கும் சமூக வலைதளத்தில் கண்ணியத்துடன் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். இது தனிநபரின் கடமையும் கூட.


புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் இறக்கும் தருவாயில்.. அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் அவருடைய மரணச் செய்தியை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டா போட்டி நிலவியது. ஒரு பத்திரிக்கையாளர் அவர் இறக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்தது. இதை அறிந்த மார்க் ட்வைன் ஓர் அறிக்கை விட்டார். 'நான் இறந்து போன செய்தி மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது' என்று.

"செய்திகளை யாரும் முந்தித் தர வேண்டாம். செய்தியாகும் போது தருக.அ துவே போதும்" எனும் மகுடேசுவரனின் வரி நினைவுக்கு வருகிறது.


-மணிகண்டபிரபு

ஷான்

தேடவேண்டாம்
கழுத்தில்தான் தொங்கவிட்டிருக்கிறேன்
உங்களுக்கான கத்தியை
ஒற்றை வேண்டுகோள்
அடுத்த முறையாவது
நம்பும் முன்பே அறுத்து விடுங்கள்

-ஷான்

காளிதாசரின் சாகுந்தலத்தில்

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான்
உன் இதயத்தைக் கொடுத்திருக்கிறாய்.
அதிர்ஷ்டசாலிதான்!!
உண்மைதான்!!
பெருக்கெடுத்து ஓடும் ஆறு கடலைத்தவிர
வேறு எங்கு போக முடியும்

-காளிதாசரின் சாகுந்தலத்தில்

Thursday 24 June 2021

ஷான்

காற்றில் ஆடி உழல்கிறது
யாரோ விட்டெறிந்த நெகிழிப்பை
தோன்றிய திசையில் திரும்பி
விரும்பிய வகையில் சுழன்று
வீசி வேகம் எடுப்பதும்
ஏதோ யோசித்து நிற்பதும்

குலைந்து இறங்கியும்
பின் அலைந்து ஏறியும்
எடையற்ற மிதப்புடன்
முடிவற்று அலைகிறது

தொலைவான ஒரு அருகாமையில்
காத்திதிருக்கும் அதன்
தரை சேரும் காலம் நோக்கி

-ஷான்

Wednesday 23 June 2021

சன் சூ

அமைதி காலத்தில் போருக்குத் தயாராகு

போர்க்காலத்தில் அமைதிக்கு தயாராகு

-சன் சூ

தப்ப முடியாது” -அசோகமித்திரன்

 குழந்தைக்கு வைத்தியம் பார்க்க ஒரு குடிசைவாழ் பெண்மனி சேர்த்து வைத்திருந்த பணத்தை அவளது குடிகார  கணவன் எடுத்துக்கொண்டு குடிக்கக் கிளம்புகிறான். அதைத் திரும்பப் பெறக் கத்திக் கூப்பாடு போட்டுக்கொடு வரும் அவனது மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கிளம்புகிறான் அவன். 

அதை அங்கு ஓரமாக திருட்டு தம் அடிக்க வந்த அந்தக் கதையின் நாயகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இரவு படுக்கையில் அவன் அந்த சம்பவத்தைப்பற்றி சிந்தித்தித்துக் கொண்டே இருப்பான். ”பாவி இப்படி பண்ணிடானே அந்தக் குழந்தை என்னவாகும்” என்று அவன் யோசிப்பான்.. 

அப்படியே அந்த எண்ணம் வளர்ந்து ’அருகில் இருந்த நான் அவனை அதட்டியிருந்தால் அவன் போயிருப்பான்’ என்று தன் மீது அவன் கோபம் திரும்பும். அப்போது அவன் இன்னொரு மனம் அவனிடம் ’நீ இன்றும் தப்பு செய்யவில்லை.. விருப்பு வெறுப்பு இன்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தாய்..அதை தத்வமஸி என்று உபநிடதம் சொல்கிறது’ என்று ஆசுவாசப்படுத்தும். 

அப்போது அந்த முந்தைய மனம் மீண்டும், ‘நீ என்ன கிழித்தாய்! இப்படில்லாம் சொல்லி உன் கோழைத்தனத்தை மூடிக் கொள்ளாதே’ என்று குத்திக் காட்டும்.. அவன் அப்படியே உறங்கிப் போவான். அந்தக் கதை இப்படி முடியும்..” அப்படியே யோசித்தபடி நான் தூங்கி விட்டேன்.. மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தேன்.. எல்லாம் சரியாக இருந்தது..” என்று.

நன்றி காளி ப்ரஸாத்

ஜென்

The teacher will appear, when the student is ready

-நீ கற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கும் போது, உன் குரு உன் முன்னால் தோன்றுவார்.

-ஜென்.

Tuesday 22 June 2021

-மு.வ

கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது.அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது

-மு.வ

ஓஷோ, நா.மு

ஒரு நிகழ் கலையில் VERB மட்டுமே இருக்க அங்கே NOUN என்று எதுவும் இருக்காது.அந்த அளவிற்கு “செயல்” நிகழ்த்துபவரை அது ஆட்கொண்டுவிடும்’ 

-ஓஷோ

அப்பாவின் கைபேசி எண்ணை 
அவர் இறந்து
பத்து வருடங்கள் கடந்தும்
என் கைபேசியில்
சேமித்து வைத்திருக்கிறேன் 

அப்பாவின் குரலை
அது அநேக முறை
தொலைதூரத்தில் இருந்து
அழைத்து வந்திருக்கிறது

அந்தக் குரல்
என்னைக் கண்டித்திருக்கிறது
தண்டித்திருக்கிறது
அவ்வப்போது
மன்னித்தும் இருக்கிறது

கண்ணாடி பிம்பம்போல் 
கைதொடும் தூரத்தில் 
இப்போதும் இருக்கிறது 
அப்பாவின் கைபேசி 

நம்பர் நாட் இன் யூஸ் 
என்று திரும்பத் திரும்பச் சொல்லும் 
பெண் குரலைத்தாண்டி 
அப்பாவிடம் 
பேசிவிடும் ஆவலில் 
அவ்வப்போது 
அழைத்துக்கொண்டே இருக்கிறேன் 

உறவினர் புடை சூழ 
உடன்வந்தோர் விடை வாங்க 
அரிச்சந்திர காண்டம் பாடி 
அப்பாவை அன்றொரு நாள் 
சிதையில் வைத்தோம் 

அப்பாவை எரிக்கலாம் 
அவர் குரலை 
எப்படி எரிப்பது ?

.

நா. முத்துக்குமார்

படித்தது

ஒருவரை அவரின் தகுதிக்கு மேல் தூக்கி வைத்தால்…
அவர் உன்னை உன் தகுதிக்குக் கீழ் தாழ்த்தி வைப்பதை எதிர்பார்க்கலாம்.

-படித்தது

Monday 21 June 2021

paulo coelho

If you are tired, learn how to rest
not how to quit

-paulo coelho

கு.விநாயகமூர்த்தி

இயலாதவன்

குழந்தைகளிருக்கிற வீடுகளில்
இந்த
வெறுங்கைகளை வைத்துக்கொண்டு
நுழையாமலே இருந்திருக்கலாம்

-கு.விநாயகமூர்த்தி

Sunday 20 June 2021

படித்தது

கடல் பயணத்தில் வலிமையை ஒப்பிட வேண்டிய பிற கடலோடுகளோடு அல்ல, எழும் அலைகளுடனும் வீசும் காற்றுடனும் இழுத்துச் செல்லும் நீரோட்டங்களுடனும் தான்

-படித்தது

நகுலன்

"நீங்கள் விரும்புகிற காரியங்களை தொடர்ந்து செய்ய வேண்டுமானால், இடையிடையே நீங்கள் விரும்பாத சில காரியங்களையும் செய்துதான் தீரவேண்டும்.

  -நகுலன்"

Friday 18 June 2021

அசோகமித்திரன்

தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச்சுருக்கத்தை எழுதினாலே போதுமானதாக இருக்கும்

-அசோகமித்திரன்

ஓட்டை விழுந்த கப்பலில் தண்ணீரை அள்ளி கொண்டிருக்கிறோம்! - விழிப்புணர்வு பதிவு #MyVikatan


எதிர்காலம் இனி வழக்கமான எதிர்காலமாக இருக்காது'

-ஆர்தர்.சி.க்ளார்க்

அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்டது ப்ளாஸ்டிக்.இரும்பை விட உறுதியாக, ரப்பரைவிட அதிக வளையும் தன்மையுடனும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் விரட்டி அடித்துவிட்டு ப்ளாஸ்டிக்களே அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுகின்றன.இதில் பெரிய அரக்கனாய் உலகெங்கும் வியாபித்திருப்பது ஒற்றை பயன்பாடு ப்ளாஸ்டிக் தான்.சூழலியலுக்கு அதிகம் குந்தகம் விளைவிப்பதும் இவைகள் தான். இதில் உள்ள மூலக்கூறுகள் மறுசுழற்சிக்கும் ஒத்துழைப்பதில்லை என்பதும் வேதனையான விஷயம்.பல நாட்கள் இதன் பயன்பாடு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் புழக்கத்தில் அதிகம் வந்து கொண்டிருக்கிறது.1862ம் ஆண்டு அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் லண்டனில் நடைபெற்ற கண்காட்சியில் ப்ளாஸ்டிக் அறிமுகப்படுத்தப்பட்டது.


#உலகளவில்

உலகில் உள்ள ப்ளாஸ்டிக் பொருட்களில் பாதி ஒரு முறை பயன்படுத்தும் பொருட்கள்தான்.

ஆண்டு தோறும் 300 மில்லியன் டன் ப்ளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

எனவே 2025ம் ஆண்டுக்குள் உலகில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை அகற்றுவதற்கான தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றியது. சுற்றுச்சூழல் சட்டமன்றத்தில், 170 நாடுகள் 2030க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை "கணிசமாகக் குறைப்பதாக" உறுதியளித்தது.

2019 ல் 450 பில்லியன் டாலர்களாக இருந்த உலகளாவிய பிளாஸ்டிக் சந்தை அளவு 2027 க்குள் 579.19 பில்லியன் டாலராக இருக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இது 73 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) கருத்துப்படி, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளிலும் 9% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 79 சதவீதம் குப்பை கிடங்குகளிலும், பொது வெளிகளிலும் குவிந்துள்ளதாக கவலை தெரிவித்தது. ஆண்டுதோறும் அதிகம் உற்பத்தியாவதும், அதிகம் வீணாவதும் ப்ளாஸ்டிக்குகளே.


#இந்தியாவில்


ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் (single use plastic) இந்தியாவில் ஜூன் 5, 2018 அன்று, ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் ஜூலை 1, 2022 க்குள் நாடு தழுவிய தடை விதிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டது.120 மைக்ரான் தடிமன் கொண்ட ப்ளாஸ்டிக் கேரி பேக்குகள் படிப்படியாக அகற்றவும், ப்ளாஸ்டிக்கிலான சிறு பொருட்கள் மற்றும் தெர்மாகோல் பொருள் உற்பத்தி குறைக்கவும் அறிவித்தது.


இதனை தொடர்ந்து மாநிலங்களும் ஒரு முறை பயன்படுத்தும் பொருட்களுக்கு தடை விதித்தது.

சிக்கிம் அரசாங்கம் நாட்டின் முதல் பிளாஸ்டிக்-பை தடையை 1998 இல் நிறைவேற்றியது.இதனை தொடர்ந்து இந்தியாவில் 1999ல் ஒரு முறை பயன்படுத்தும் பாலிதின் பைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


2011ல் குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா, சாக்லெட்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்தது ஆனாலும் அது முடியவில்லை.2016ல் ப்ளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் பலபொருட்களின் பேக்கேஜிங் முறையில் இரண்டாண்டு திட்டத்தை விதித்து பின் 2018ல் நீர்த்துப் போனது.


*இந்தியாவின் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு 11 கிலோவாக உள்ளது.


*ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு மலிவு விலையில் மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை.அதனால் இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை


*எளிமையானது,விலை குறைவு என்பதால் இன்று வரை மக்கள் இதனை தொடர்ந்து உபயோகிக்கின்றனர்.


*தடைகள் விதிக்கப்படும் போது சிறிது காலம் கட்டுப்பாடு இருக்கிறது. பின் மீண்டும் வந்துவிடுகிறது.


* ப்ளாஸிடிக் கழிவுகளை பிரித்தலில் சில மாநிலங்கள் மட்டும் சிறப்புற செய்வதால் மற்ற மாநிலங்கள் இத்திட்டத்தில் தோல்வியடைந்தன


*,ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் உற்பத்தியை குறைக்காமல் நுகர்வை குறைக்க முடியாதது இதில் உள்ள குறை

*மத்திய அரசு தடை விதித்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் போன்றவை பலவீனமாக இருப்பதால் இச்சவாலில் தோல்வியுறுகின்றன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.


*நுகர்வோரும் கடைக்குப் போகும் போது துணிப் பை எடுத்துச்செல்லும் விழிப்புணர்வு குறைவாய் உள்ளனர்


*சுற்றுலா தளங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ப்ளாஸ்டிக் இல்லாத நிலை உள்ளது.



#தமிழகத்தில்

தமிழகத்தில் 2018 ஜூன் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு ஜனவரி 1, 2019 முதல் ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் தடை செய்தது. பெரிய துணிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் துணி பைகளுக்கு மாறியது நல்ல முன்னேற்றம். அரசும் அபராதம், சட்ட விரோதமாய் இயங்கும் நிறுவனங்களுக்கு சீல் வைத்த நிகழ்வுகளும் நடந்தன. சில மாவட்டங்களில் அங்கு உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதால் குப்பைகள் சற்று குறைகிறது.


ப்ளாஸ்டிக் வெகுவாக குறைந்தாலும் முற்றிலும் அகற்றப்படவில்லை. ரகசியமாய் தொடர்ந்து உற்பத்திகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு மாற்றான வாழை இலை, தரமான ப்ளாஸ்டிக் பைகள் விலை அதிகம் என்பதால் சிறு வியாபாரிகள் மலிவு விலை ப்ளாஸ்டிக் பைகளை நாடுகின்றனர்.


ஹோட்டலில் சாம்பார் பொட்டலங்கள், டீக்கடையில், மீன் கடையில் இங்கெல்லாம் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன. உள்ளூர்களில் தடை விதித்தாலும் வெளி மாநிலங்களிலிருந்து இப்பைகள் நுழைந்துவிடுகின்றன. இதனை முதலில் தடுக்கும் செயலில் ஈடுபட வேண்டுமாய் வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மக்கும் ப்ளாஸ்டிக்களிலும் போலிகள் உலாவுகின்றன. உதாரணத்திற்கு 400ரூ பைகள் 250ரூபாய்க்கு கடைகளுக்கு கொடுக்கப்படுகிறது.இதனால் இதில் இன்னும் வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கிறது


#சவால்கள்


ப்ளாஸ்டிக்குகளில் இரு வகைகள் உள்ளன.வெப்பத்தால் இளகுபவை இது வெப்பப்படுத்தும் போது இளகும், குளிர்விக்கும் போது இறுகும். மதிப்புமிக்கது. உதாரணத்திற்கு PVC, வினைல், செல்லுலாய்டு போன்றவை. இத்தன்மையுடைய பொருள்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.


மறுசுழற்சி செய்யப்படும் ஒவ்வொரு முறையும், பிளாஸ்டிக்கின் தரம் மற்றும் ஆயுள் குறைவதாலும், பிளாஸ்டிக் மறுசுழற்சியை 2 அல்லது 3 முறை தான் செய்ய முடியும்.


மற்றது வெப்பத்தால் இறுகுபவை.இது குளிர்விக்கும் போது இளகாது. மதிப்பு குறைந்தவை. உதாரணத்திற்கு ஆஸ்கைடு ரெசின்,மெலனின் ரெக்சின் போன்றவை.இந்த இறுகும் பொருட்கள். மின் உற்பத்தி, சிமெண்ட் தொழிற்சாலையில் இணை எரிபொருளாய் பயன்படுகிறது.


நாடு தழுவிய ஒரு முறை பயன்பாடு ப்ளாஸ்டிக் பைகளுக்கு உற்பத்தி தடை மிகவும் அவசியம் என்கின்றனர் ஆர்வலர்கள். கொரொனா காலம் என்பதால் இதில் உள்ள இடர்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இதுவும் தேவை என்கின்றனர். நுகர்வோர்களை விட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். ப்ளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருளின் விலை குறைவாக இருக்க வேண்டும். நுகர்வு தேவையின் அதிகரிப்பிற்கேற்ப மாற்று வழி காண வேண்டும். ஓட்டை விழுந்த கப்பலில் தண்ணீரை அள்ளி கொண்டிருக்கிறோம். ஓட்டைகளை அடைக்க வேண்டும். அதுவரை விழிப்புணர்வை மட்டுமே செய்ய முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியாது.

-மணிகண்டபிரபு


Thursday 17 June 2021

படித்தது

எதுவொன்று அதனுடைய இயல்பில் இருக்கிறதோ அது அழகானது

-இன்குலாப்


எந்தப் பொய்யைச் சொன்னால் உண்மைபோல் தோன்றுகிறதோ அந்தப் பொய்யை முதலில் சொல்லுங்கள்.
   - ராஜா சந்திரசேகர்

தென்கச்சியார்

கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார்.

 மாணவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் வகுப்பறைக்குள் நுழைந்தாலே போதும்... மாணவர்களிடம் பயம் தொற்றிக்கொள்ளும். `இன்று என்ன கேள்வி கேட்பாரோ... யாரைக் கேட்கப் போகிறாரோ...’ என்று பதைபதைப்போடு காத்திருப்பார்கள். இதை அந்த ஆசிரியரும் உணர்ந்துதான் இருந்தார். இந்தப் போக்கை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.

அன்றைக்கு வகுப்பறைக்குள் நுழைந்தவர், நேராகக் கரும்பலகையின் அருகே சென்றார். ஒரு சாக்பீஸால், ‘9-18-36’ என எண்களை எழுதினார். பிறகு மாணவர்களைப் பார்த்தார்.
“இதற்கு விடை என்ன?” என்று கேட்டார். 

அதோடு, "இதை நன்றாகப் புரிந்துகொண்டு பிறகு பதிலைச் சொல்லுங்கள். சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னிடம் விளக்கம் கேட்டுவிட்டுக்கூட பதில் சொல்லலாம்’’ என்றார்.

அவசரக் குடுக்கையாக ஒரு மாணவன் எழுந்தான். "இந்த எண்களை எல்லாம் கூட்டினால் 63 வருகிறது சார்...’’ என்றான்.
“தவறு.’’
“அப்படியென்றால், விடை 45 சார். 36 + 18 - 9 = 45” என்றான் மற்றொரு மாணவன்.
“இரண்டுமே தவறு. வேறு யாராவது பதில் சொல்கிறீர்களா?’’
மாணவர்கள் மத்தியில் சலசலப்பில்லை.

“இது என்னுடைய தொலைப்பேசி எண்ணின் முதல் பாதி, என்னுடைய தொலைபேசி எண்ணை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா என்று சோதிப்பதற்காகவே நான் அப்படிக் கேட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“நான் கணக்கு வாத்தியார் என்றாலே, கணக்குதான் சொல்லித்தர வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் பதில் கணிதத்தைச் சுற்றியே இருந்தது. எதற்காகக் கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்குக்கூட நீங்கள் தயாராக இல்லை. 

இதற்கு அடிப்படைக் காரணம் பதற்றம். ஆக, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உடனே முடிவெடுக்காதீர்கள். அது என்ன, எப்படி, ஏன் என்பதையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, சந்தேகம் இருந்தால் தெளிவாகக் கேட்டுத் தெரிந்த பிறகு முடிவெடுங்கள்’’ என்றார்.
இந்தச் சிறிய நிகழ்விலிருந்து இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
டென்ஷன் பயம்
ஒன்று, அவசரப்படுவதால் நமக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரம்கூட சில நேரங்களில் நம் கையைவிட்டு நழுவிப்போகலாம்.

மற்றொன்று, ஒருவரைப் பற்றி, முழுமையான புரிதல் இன்றி, முந்திக்கொண்டு அவர் குறித்து முடிவெடுக்காதீர்கள்.

-தென்கச்சியார்

ஃபெமி

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்... 

அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர்  பேட்டி எடுத்தார்...

 "உங்களை 
வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..

ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."

1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.

2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.

3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை.

4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற  குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், சுமார் 200 குழந்தைகள்.

என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.

ஆனால் நண்பனோ  நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன்.

அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்த குழந்தைகளின் முகங்களில்  விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

அவர்களின் ஆனந்தத்தை என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது
எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாக பிடித்து கொண்டது,  நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது

நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?

இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.
 அந்த குழந்தை கூறியது  இது தான்: 
‌"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை  சொர்க்கத்தில் சந்திக்கும் போது, உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்....

Tuesday 15 June 2021

வாகனங்கள் இடம் -வலம்

வாகனங்கள் அமெரிக்காவில் வலது புறமாக செல்ல வேண்டும், இங்கிலாந்தில் இடது
 புறமாக செல்ல வேண்டும் என்று எப்படி, எதை வைத்து தீர்மானித்தார்கள்?

ஆரம்ப காலங்களில் குதிரை வீரர்கள் குதிரைப்ப்பிடியை இடது கையாலும் வலது கையால் போர்வாளையும் பிடித்து செல்வார்கள். ( வலது கை பாவனையாளர்களே உலகில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது)
அப்போது, எதிரில் வருவபருடன் போரிட இடது பக்கமாக பயனிப்பதே இலகுவாக இருக்கும். இலகுவாக உடலை வெளியே வளைத்து போரிடலாம். (இதே வலது என்றால் உடலை உள் வளைத்து போரிட வேண்டும்.)

பின்னர் மகிழுந்துகள் வந்ததும் இதே வகையை கைப்பிடிக்கையில் மகிழுந்தின் வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இடக்கையை பயன்படுத்த வேண்டி வந்தது, அதில் சிரமம் என்பதாலும் பொறிமுறை ரீதியில் சிக்கல் இருந்ததாலும் மாற்றாக வலது கை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இடையில் குதிரை வண்டி வந்த போது பின்னால் வரும் வண்டிகளை கையாளவும் (வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு வலது கையால் கட்டுப்படுத்துவது இலகு.) இலகுவாக இருப்பதால் இம் முறை நெப்போலியன் காலத்தில் அவரால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் பழக்கப்படுத்தப்பட்டது.

 1792–4 இல் பல நாடுகளில் சட்டமும் ஆக்கப்பட்டதாம்.
இங்கிலாந்து மட்டும் தன் முறையை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாடுகளிலும் பரப்பியது.

அமெரிக்கா இங்கிலாந்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்ட பின்னர் இங்கிலாந்தின் அடையாளத்தை நீக்கும் ஒரு படியாகவும் வலப்பக்கம் மாறியது.
ஜப்பான் இங்கிலாந்தின் பிடியில் இருந்திராவிடினும் இடப்பக்கத்தையே பாவிக்கிறது.

மெரினா

மெரினா பெயர் வந்த விதம்
(ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தின் ஆளுனராக
இருந்த Sir Mountstuart Elphinstone Grant Duff)
-
தாம் எதற்காக மெரினா என்று பெயர் வைத்தேன் என்பதற்கு
Grant Duff ஒரு தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.
"மெட்ராஸ் நகரத்தால் நாம் பெரும் அளவில் பயன் அ
டைந்திருக்கிறோம். அலங்கோலமாக இருந்த கடற்கரையை
சீரமைத்து, அழகிய கடற்கரை பகுதியாக மாற்றி அமைத்து
இருக்கிறேன்.
-
இப்போது இந்தப் பகுதியைப் பார்க்கும் போது அழகான பழைய
சிசிலியன் நகர் எனக்கு நினைவுக்கு வருகிறது. எனவே, இந்த க
டற்கரைக்கு 1884-ல் மெரினா என்று பெயர் வைத்தேன்" என்று
சொல்லி இருக்கிறார். இதன் பின்னர்தான் மெரினா கடற்கரை
என்ற பெயர் வரலாற்றில் இடம்பெற்றது

,-விகடன்

அது ஒரு பால்பாய்ண்ட் பேனா காலம்..! - 90s கிட்ஸ் பக்கங்கள் #MyVikatan


பேனா நிப்புகளின் இறுதி வரலாற்றை

பால் பாய்ண்ட் பேனாதான் எழுதியது

-பாரதி கிருஷ்ணகுமார்


சிறு வயதில் பால் பாய்ண்ட் பேனாவில் பால் ஊற்றி எழுதுவதாக நினைத்திருந்தோம். ஒன்றாம் வகுப்பில் பென்சில் பிடிச்சு எழுத ஆரம்பித்து.. அப்படியே பென்சிலுக்கு முன்னேறி.. கடைசியாக ஐந்தாம் வகுப்பில் தான் பால் பாய்ண்ட் பேனா அறிமுகமானது. வேகத்தையும், நிதானத்தையும் கற்றுக்கொடுத்தது இந்த பேனாக்கள்தான். கையெழுத்தை வைத்தே நன்மதிப்பை பெற்றுக் கொடுத்தது.


இன்று பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ பால்பாய்ண்ட் பேனா நிச்சயம் இருக்கும். ஆண்டவன் படைப்பில் அடுத்தவங்ககிட்ட இருந்து வாங்கி எழுதும் பேனா அத்தனையுமே அருமையா எழுதுவது இன்றளவும் ஒரு அதிசயமே.


#பால் பாய்ண்ட் பேனா


TNPSC போட்டித் தேர்வு எழுதும் போதுதான் பந்து முனைப் பேனா என்பது பால்பாய்ண்ட் பேனாவின் இன்னொரு பெயர் என தெரிந்தது. பித்தளை,எஃகு, டங்ஸ்டன் கார்பைடால் அந்து பந்து செய்யப்பட்டதாக இருந்தது. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்பதுபோல ஆரம்பத்தில் மரத்தின் மீது எழுத, தோலின் மீது எழுத இறகில் எண்ணெயை தொட்டு எழுத இயலாததால் தோல்மீது எழுத 1888ல் ஒரு பேனாவை உருவாக்கினார் ஜான் ஜே.லவுட். ஆனால் அதற்குப் பின் அடுத்தகட்டத்தை எட்டவில்லை


நுனியில் சிறிய சுழலும் எஃகு பந்து.. கடிதம் எழுதுவதற்கு கரடு முரடாய் இருந்தது. மை நிரப்புதல், மை மற்றும் பந்து முனை அமைப்பதில் வணிக ரீதியில் தோல்வி கண்டன. காகிதத்திற்கு பொருத்தமாகவும் எழுத முடியவில்லை


அதன் பின் லாஸ்லோ பைரோ எனும் ஹங்கேரியின் செய்தித்தாள் ஆசிரியர் மை இட்டு நிரப்பி எழுதுவதிலும், வேதியியலாளர் ஜியோர்க்கியுடன் இணைந்து மை உலருதல் போன்ற விஷயங்களிலும் வெற்றி கண்டார்.

நிப் க்கு பதிலாக பந்து முனையை உருவாக்கினார். ஆறு மாதங்களுக்கு மை நிரப்ப வேண்டியதில்லை என்பது அப்போது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. பிரிட்டனில் ராயல் விமானக் குழுவினர் 3000 அடி உயரத்தில் பால்பாய்ண்ட் பேனாக்களை பயன்படுத்தும்போது பவுண்டைன் பேனா போல் மை கசியாது இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் விற்பனைக்கு வந்தது. அர்ஜெண்டினாவில் காப்புரிமைபெற்றார். ஓரளவு வெற்றி கிடைத்த பின் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.


பிரிட்டனில் மைல்ஸ் -மார்ட்டின் பென் நிறுவனம் 1945 கிறிஸ்துமஸ் முதல் பால் பாயிண்ட் பேனாக்களை பொதுமக்களுக்கு விற்றது. பிரான்சில் பேனாக்களின் காப்புரிமையை வாங்கியவர் மார்செல் பிச். இவர் பால் பாயிண்ட் பேனாவில் லாபம் பெறாமல் அதை மலிவாய் விற்க தீர்மானித்து வெற்றி கண்டார்.


அர்ஜெண்டினா வணிக பயணத்தில் இப்பேனாவை பார்த்த மில்டன் ரெனால்ட்ஸின் மூளையில் ஒரு பொறி தட்ட.. இப்பேனாவை மறுவடிவமைப்பு செய்து தன் ரெனால்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரித்து விற்றார்.

நியூயார்க் நகரில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சில ஆயிரம் பேனாக்கள் விற்றுத்தீர்ந்தது. ஒவ்வொரு சிந்தனையும் விற்பனைக்கு உள்ளது என விளம்பரப்படுத்தினர். இரண்டு வருடத்திற்கு மை நிரப்ப வேண்டாம், தண்ணீருக்கு அடியில் எழுதலாம் எனக்கூறினர். எவர்ஷார்ப் மற்றும் ரெனால்ட்ஸ் இடையே போட்டி அதிகரித்தது. காப்புரிமை பிரச்னையில் ரெனால்ட்ஸ் விலக பார்கர் பென்ஸ் நிறுவனம் புதிய பால்பாய்ண்ட் பேனாவை 1954ல் அறிமுகப்படுத்தியது.


#அன்று


*நுகர்வோருக்கு பந்து முனை பேனா பெரும் நிம்மதியை அளித்தது.

*பவுண்டைன் பேனாக்கள் போல் மை தொட்டு எழுத வேண்டியது இல்லை. மை கசியாமல் இருந்ததால் கைகள் சுத்தமாக இருந்தன.

*பல மை ரீபிள்கள் இருந்ததால் பல வண்ணங்களில் எழுதினர்.

*உலோலங்கள் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டதால் எங்கும் எடுத்துச் செல்வது எளிதாய் இருந்தது.

*பொதுவாக பந்துமுனை பேனா மையில் 3 வகைகள் உள்ளன.
High viscosity, Low viscosity, Ultra low viscosity இதில் மூன்றாம் வகை மைக்கு மட்டும் gel follower அவசியம்


*Refill தயாரிக்கும் போது centrifugal process மூலம் மையில் உள்ள காற்று குமிழிகள் வெளியேற்ற படும் உக்தி சரிசெய்யப்பட்டது


#பால்யமும் பால்பாய்ண்ட் பேனாவும்


பென்சிலில் எழுதிப் பழகிய பின் தான் பால்பாய்ண்ட் பேனா வாங்கித் தருவார்கள். முதன் முதலில் விலை குறைந்த பேனாதான் வீட்டில் கிடைக்கும். எழுதும்போதே பஞ்சு பஞ்சாய் வரும். பருத்தி ஆபிசில் தயாரிச்சிருப்பாங்க போலனு நினைச்சு எழுதுவோம். சில பேனாக்கள் முனையில் கல் இருப்பது போல அழுத்தி உளி போல எழுத்தை செதுக்குவோம். அந்த அச்சு அடுத்த பக்கம் மட்டும் தெரியாம கடைசிப் பக்கம் வரை தெரியும். அப்ப ரெனால்ட்ஸ் பேனா வைத்திருப்பவன் ஊருக்குள்ள ஜமின் தார் மாதிரி. கடன் கேட்டாலும் கொடுக்க மாட்டான். அவனா இங்க் எவ்வளவு இருக்குதுனு கழட்டி பார்க்கும் போது ஆளுக்கொரு பாகம் கையில் வச்சிருக்க கொடுத்தால் தான் உண்டு.


Reynolds பேனாவை மூடி சூடிய மன்னன் எனலாம். ஐந்து ரூபாய்க்கு வெள்ளை மற்றும் நீலவண்ணத்தில் இருக்கும். புளூ கலர் கண்ணாடியின் கீழ் பாகத்தில் சிறிய பேப்பரில் நம் பெயர் எழுதி ரீபிளில் சுற்றிக்கொள்வது அடையாளம். புகையிலை விரிஞ்சா போச்சு, ரெனால்ட் பேனா உடைஞ்சா போச்சு என்பது போல் மேல் பாகம் உடைந்தால் டைவர்ஸ் அப்ளை பண்ணின கணவன் மனைவி போலத்தான். அப்புறம் வெள்ளைப்பாகத்தின் டேப் சுத்தி சீலை கட்டியிருப்போம்.


யாராவது கிட்ட காசு கொடுத்து செகண்ட் ஹேண்ட் வாங்கி மாட்டுவோம். பேனா எழுதலைனா அதற்கென நிபுணர்கள் இருந்தனர். பல்லால் நிப்பை கடித்து இழுத்து.. அந்த நிப்பை இட்லிக்கு சட்டினியை தொடுவது போல் இங்க்கை தொட்டு மாட்டினால் மீண்டும் பேனா எழுத துவங்கும். அதெல்லாம் அவசர சிகிச்சைக்கான நிமிடங்கள்.


ரெனால்ட்ஸ் பேனா வைத்திருப்பவனுக்கு நம்பி பொண்ணு கொடுக்கலாங்கிற ரேஞ்சுக்கு இருந்த காலம். கையெழுத்து போட்டிக்கு இதில் எழுதினால் பாதி பரிசு நிச்சயம்.

கல்லிலே கலை வண்ணம் கண்டது மாதிரி அந்த ரெனால்ட்ஸ் உறையின் எழுத்துக்களை ப்ளேடால் சுரண்டி இந்தியா எழுத்து வருவது போல் செய்வோம்.


*040 மற்றும் 045 என இருவகை இருக்கும். அதை யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் FLAMES போடாமலேயே எளிதில் ப்ரண்டாவார்கள்.


*டேப் ரெக்கார்ட்ல டேப் சுத்த பால்பாய்ண்ட் பேனாவே பயன்படும்.


*கோபத்தில நகத்தை கடிப்பதன் முன்னோடி இதன் மூடிதான். கோபம், துக்கம், சந்தோசம் என அத்தனையும் பதம் பார்த்தது.


*பேனாவை பரிசு கொடுத்தால் பிரிஞ்சிருவோம் என்பதால் மூச்சிருக்கும் வரை பெண்களுக்கு மட்டும் பேனா பரிசு கிடையாது.


*உன் பெயர் எழுதிய சந்தோசத்தில் இருக்கிறது பேனா என கவிதை எழுதி முதல் பேனாவில் முதல் கையெழுத்து மனசுக்கு பிடிச்சவங்க பெயர் எழுதுவோம்


*இன்றைய டாட்டூ நவநாகரிகத்தின் முன்னோடியாய் அன்றே பால்பாய்ண்ட் பேனாவில் உடலில் ஓவியம் வரைந்து கொண்டனர் பள்ளி மாணவர்கள்.


*செகணட் ஹேண்ட் கார் போல செட்டாகாமல் போகும் இரண்டாம் முறை பயன்படுத்தும் ரீபிள்.


*பேனா காணாமல் போகும் போது கண்ணகி சிலம்பை உடைத்தது போல் என் பேனாவில் இந்த எழுத்து சுரண்டியிருக்கும். பேனாவின் பின் துளை இருக்கும், மூடி கடித்திருக்கும்னு உண்மையை நிரூபிக்க முடியும்.


*பேனா மூடி சிறிதாய் இருப்பதால் பாக்கெட்டில் வைக்க சரிவராது. கீழே விழுந்து அடிக்கடி தொலைந்து விடும்.


*உலகம் விரும்பும் உன்னத பேனாவை வாங்க முடியாத பலருக்கு டூப்ளிகேட் பேனாதான் கிடைத்தது.

மேல்நிலை வகுப்புக்குச் சென்றவுடன் மை பேனாவுக்கு மாறினாலும் கையெழுத்து அழகாய் இருக்க பால்பாய்ண்ட் பேனாக்களையே தேர்வு செய்கின்றனர். இன்று பேனாவுக்கு பேங்கில் இருக்கும் மதிப்பு அபரிமிதமானது. ஒன் யூஸ் பென் வந்த பிறகு பால்பாய்ண்ட் அதிகம் குப்பைகளில் காணமுடிகிறது. மீண்டும் இங்க் பேனாக்களுக்கு மக்கள் செல்வது சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கிறது.


"கிறுக்கலில் ஆரம்பித்து கிறுக்கலில் முடிகிறது ஒரு பால்பாய்ண்ட் பேனாவின் வாழ்க்கை’’ என இணையத்தில் படித்த வரி நினைவுக்கு வருகிறது.


-மணிகண்டபிரபு