Tuesday 31 January 2023

படித்தது


M" வார்த்தை மில்லியனுக்கும் "B" வார்த்தை பில்லியனுக்கும் பயன்படுத்தப்படுகிறது
ஆயிரங்கள் என்று வரும்போது, ​​Tக்குப் பதிலாக k ஐப் பயன்படுத்துகிறோம்.

 கிரேக்க மொழியில், சிலியோய் என்ற வார்த்தை ஆயிரத்திற்கு பயன்படுத்தப்பட்டது, இது காலப்போக்கில் கிலோ என்று அழைக்கப்பட்டது.

 1000 என்ற எண்ணைக் குறிக்கும் 1000 கிராம் அல்லது 1000 மீட்டர் போன்றவற்றுக்கு கிலோவைப் பயன்படுத்தத் தொடங்கினோம்.

 அதனால்தான், ஆயிரத்திற்கு Tக்கு பதிலாக k ஐப் பயன்படுத்துவது எளிதாகவும் பொருத்தமானதாகவும் தோன்றியது. தொழில்நுட்ப மொழியிலும் கிலோ என்பது கிலோபைட் போன்ற ஆயிரம் என்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

Chilioi-kilo

-படித்தது

கற்கை நன்றே-13*மணி




தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
-பாரதிதாசன்

தமிழ்நாடுதான் டாப்

1885,1886ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகள் பம்பாய் கல்கத்தாவை தொடர்ந்து சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்தது. அது இந்து பத்திரிக்கையை நிர்வாகியான மூடாம்பி வீரராகவச்சாரியார் தமிழில் எழுதிய காங்கிரஸ் வினா விடை எனும் பிரசுர நூல் வெளியிடப்பட்டது தான். இதன் விலை ஒரு அணா. தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் அது வெளியிடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றிய தலைவர்கள் சென்னையில் தலைவர்கள் தமிழில் பேசினார். தமிழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் தான் கிராமப்புறத்தில் இருந்து பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தமிழில் பேசினார். முதன்முறையாக பொதுமக்களிடம் இருந்து இங்கு தான் நிதி திரட்டப்பட்டது. 8000 பேரிடம் 5500ரூ திரட்டப்பட்டது.
காங்கிரஸ் வினாவிடை புத்தகம் 30 ஆயிரம் பிரதிகள் விற்றும் நிதி திரட்டப்பட்டது. இம்மாநாடு மற்ற மாநாடுகள் போல் மண்டபத்தில் நடைபெறாமல் மைதானத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் வினா விடை புத்தகம் மூலம் பொதுமக்கள் காங்கிரசில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தது கண்டு  ஆங்கிலேயர் சற்று கதிகலங்கி தான் போனார்கள். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அச்சுறுத்தியது.சிறுபான்மையினரான படித்தவர்களின் ஆரவாரங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் புறநகரில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவை நாடியது.

அன்றைய வைஸ்ராய் லார்ட் டப்ரின் என்பவர் இந்த தமிழ் வெளியீடு முட்டாள்தனமானது என்று கண்டித்தார்.1920 இல் நாக்பூரில் நடந்த காங்கிரஸின் 35 வது மாநாட்டில் தான் காங்கிரஸ் மாகாண கமிட்டிகளை மொழி வழி திருத்தி அமைத்தது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே உருவானது. அவரவர் தாய் மொழியில் தான் விடுதலை உணர்வை தட்டி எழுப்ப முடியும். அதுதான் மக்கள் பங்கேற்க வகை செய்யும் என்பதற்கான விதை 1887ல் சென்னையில் தூவப்பட்டது. 1920 இல் நாக்பூரில் அதற்கான விடை கிடைத்தது.  தமிழ்நாடு தான் மொழி வழி உணர்வில் முன்னிலை வகித்தது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. 
-விடுதலை தழும்புகள்

நற்காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday 30 January 2023

info


இந்த மலைச் சிகரம் காஞ்சன்ஜங்கா மவுண்ட்.இது உலகின் மூன்றாவது உயரமான மலை சிகரமாகும், மேலும் இது ஒரு பகுதி நேபாளத்திலும், ஒரு பகுதி இந்தியாவின் சிக்கிமிலும் உள்ளது.உண்மையான படம் சிக்கிம் பெல்லிங்கில் இருந்து எடுக்கப்பட்டது.

#info

கற்கை நன்றே-12*மணி




ஒரு சிலர் அடிக்கடி வீட்டை சுத்தம் செய்வாங்க, பொருளை துடைச்சிக்கிட்டே இருப்பாங்க.
 அது ஒரு மனநோய். பெரும்பாலும், எதாவது ஒரு பெரிய தவறு செய்தவங்க அந்த guilty conscious ல இருந்து தப்பிக்க கையை கழுவிகிட்டே இருக்கிறது... வீட்டை துடைச்சுக்கிட்டே இருக்கிறது...

இப்படி over ஆ சுத்தம் செய்யறது மூலமா தான் செய்த தவறு போய்டுச்சு நாம இப்போ சுத்தமா தான் இருக்கோம் அந்த தப்பு என்கிற அழுக்கை நாம துடைச்சுட்டோம் என்பது போன்ற உளவியல் சிக்கல்ல மாட்டிப்பாங்க. இதே தான் "அதீதமா" தன்னை பக்திமானா காட்டிக்கிறவங்க கிட்டயும் இருக்கு அப்படின்னு நினைக்கறேன்.

Shakespeare எழுதிய Macbeth கதையில் வரும் Lady Macbeth தன்னுடைய கணவனை Scotland ராஜாவை கொல்லும்படி தூண்டிவிடுவாங்க அதன் பின்னர் அந்த குற்ற உணர்வை போக்க திரும்ப திரும்ப கையை கழுவி கொண்டு இருப்பாங்க.

அதனால் இது போல ஒரு தவறு செய்து, அதன் குற்ற உணர்வு காரணமாக சுத்தமாக இருக்க விழைவதை (compulsive washer)Lady Macbeth Effect என்று சொல்கிறார்கள்.

தான் செய்தது பெரிய தவறு என்று அவர்களுக்குள் உருவாகும் ஒரு guilty conscience தான் நான் சொல்ல வருவது. அவர்கள் செய்தது சின்ன விஷயமாக கூட இருக்கலாம் அல்லது அவர்கள் தவறே இல்லாமல் கூட இருக்கலாம்.

இதுவே பலரை கொலை செய்த ஒருவனுக்கு அதை பற்றிய குற்ற உணர்வு இல்லை என்றால் அது அவனை பாதிப்பது இல்லை. இங்க keyword குற்றவுணர்வு. இந்த lucifer series நீங்க பார்த்து இருப்பீங்க அதுல நாம நரகத்திற்கு போகும்போது நாம் எதை நினைத்து குற்ற உணர்வு அடைகிறோமோ அது தான் நம்மை அங்கு வதைக்கும்.

எதோ ஒரு விஷயம் உங்களை பாதித்து இருக்கிறது அதை மடைமாற்ற ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களை அறியாமலே. அது தான். Lady Macbeth Effect  

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday 29 January 2023

மோகனரங்கன்


முழுவதுமாய் திருகி 
மூடாத குழாய் விட்டு விட்டுச் சொட்டுகிறது 
உறக்கத்தின் 
இருளாழத்துக் குகையுள் வெடித்துக் கிளம்பும் 
தோட்டா ஒவ்வொன்றிற்கும் துடித்து வீழ்கிறது 
படுக்கை வரிசையினின்றும் ஒரு நொய்ந்த உடல்

-மோகனரங்கன்

கற்கை நன்றே-11*மணி



உட்காட்சி தோன்றல்

உளவியலில் இந்த சொல் மிக முக்கியமானது.திடீரென மின்னல் வெட்டு போல் மனதில் வெட்டும்.அதுவே நம் அறிவின் ஊற்றுக் கண்ணாக இருக்கும். மனிதனின் அறியாமைதான் கேள்விகளை உருவாக்குகிறது. அந்த அறியாமைதான் பதில்களையும் உருவாக்குகிறது.ஒரு மனது கேள்வி எழுப்பும்..இன்னொன்று அதற்கான பதிலை ஆராய முற்படும். ஆழ்மனதிலிருந்து மேலெழுவது போல் வந்து அகக்கண்ணை திறக்கும் கணம் தான் உட்காட்சித் தோன்றல்.

எழுத்தாளர் மருதனின் ஒரு கட்டுரையில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. "எடிசன் மின் விளக்கினை தயாரிக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். மின் விளக்கின் மையத்தில் மெல்லிய மூங்கில் இலை வைக்க வேண்டிய தேவை இருந்தது.ஆகவே அது போல் மெல்லிய மூங்கில் சேகரிக்க ஜேம்ஸ் ரிகால்டன் எனும் புவியியல் ஆசிரியரை அனுப்ப முடிவு செய்தார்.1500டாலர் ஊதியமும் அளிப்பதாக கூறினார்.அன்று முதல் ஜேம்ஸ் கடல் வழியே இங்கிலாந்து, சூயஸ்,இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சேகரிப்பட்ட 14 வகை மூங்கில்களை கப்பலில் அனுப்பினார்.

ஒருவருடம் கழித்து பெருமிதத்துடன் எடிசனை பார்க்கச் சென்ற போது அவர் சாதாரணமாய் இருந்தார். இவர் அந்த மூங்கில் தேடிய சாகசங்களை சொன்னார். எடிசன்  அதற்கு நிதானமாக இனி அது தேவைப்படாது என நினைக்கிறேன். 
நீங்கள் வரும்வரை எப்படி சும்மா இருப்பது என்பதை யோசித்துப் பார்த்தேன். அப்போது செயற்கை கார்பன் ஒன்றை கண்டுபிடித்தேன். ஆச்சர்யமாய் அது மூங்கிலை விட சிறப்பாய் இருந்தது எனக்கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார். அவரின் உட்காட்சி தோன்றல் சமயோசிதமாய் அமைந்தது தெரிகிறது.

சரி உட்கார்ந்து யோசித்தால் வருமா.. வராது.திடீரென சிந்தனை ஒளிரும். அதனை நழுவவிடாமல் பிடித்துக் கொண்டு உடனே செய்ய வேண்டிய காரியத்தை செய்து விட வேண்டும்.
மனம் அமைதியாய் இருக்கும் போது தெளிந்த நீரோடையில் சிந்தனை முத்துக்கள் நம் மேல்மனதுக்கு தெரியும்.

மனம் கேள்வி கேட்பதை நிறுத்தும் போதுதான் பதில்கள் கிடைப்பதாய் புத்தர் கூறுகிறார்.உண்மையில் நமக்கு  கேள்வி கேட்பதில் இருக்கும் ஆர்வம் பதில் கண்டுபிடிப்பதில் இல்லை.கேள்வி மட்டும் கேட்பதில் தேடல் இருக்காது.ஆனால் பதிலையும் தேடும் போது அனுபவமும் நம்பிக்கையும் கிடைக்கிறது.புதியனவற்றை கண்டறிகிறோம்.மனம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

எடிசன் செய்தது அதைத்தான். மூங்கில் வரத்தாமதமானதால் மனம் விடை தேட ஆரம்பித்தது. தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது புறத்திற்கு மட்டுமல்ல..அகத்திற்கும் தான்.பல்பு கண்டுபிடித்தது எடிசனாய் இருந்தாலும் பல்பு கிடைத்தது ஜேம்ஸ்க்குத் தான்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday 28 January 2023

வெளிச்சம் போதித்த பிறகும்பகலுக்கு இருக்கும்சந்தேகங்களாய்இந்த நிழல்கள்..!-அப்துல்ரகுமான்

பேசுவதற்கான பலகோடி வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் அதைப்பேசுவதற்கான சரியான முகங்களுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.-லதாமகன்

வாழ்க்கை


வாழ்க்கை பல சமயங்களில் பெருந்துரோகங்களை மறக்கச் செய்து விடுகிற அளவிற்கு சின்னச் சின்ன ஏமாற்றங்களை மறக்கச் செய்வதில்லை

-லஷ்மி சரவணகுமார்

pp


எந்த வித மனச்சிக்கலும் இல்லாத நபரை சந்தித்தால் என்ன செய்வீர்கள்?

மனநல மருத்துவர்:அப்படி யாரேனும் ஒரு நபர் இருந்தால், நிச்சயம் நாங்கள் அவரை குணப்படுத்திவிடுவோம்..

??!!

நினைவில் கேள்விகளைச் சுமக்கிற மனிதர்களுக்கு நித்திரை இருப்பதில்லை-பவா செல்லதுரை

Friday 27 January 2023

அத்தனை அலைகளை எழுப்பி விட்டு அதிர்வின்றிக் கிடக்கிறது ஒன்று மறியாதது போல ஒற்றைச் சிறுகல்-பிருந்தா

நாம் எல்லோருமே விடைகளை தேடுகிறோம்; நாமே புதிர்கள் என்பதை மறந்து-டி.எஸ் எலியட்

கற்கை நன்றே-10*மணி



நம்மை அறிவோம்

மனித மனம் எப்போதும் அடுத்தவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கும்.ருத்ரன் எழுதுவார் வாழ்க்கை ஒரு தேடல் என்பது முழுதாய் பதிவதில்லை.எதைத் தேடுகிறோம் என்பதை புரிந்து கொண்டால் பிரச்சனைகளும் இல்லை..கேள்விகளும் இல்லை.

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறான் என்ற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.ஏன் அவனுக்கு மட்டும் அப்படி ஒரு வாழ்க்கை..அவன் அப்படி இருக்கிறான் நான் மட்டும் இன்னும் இப்படி இருக்கிறேனே..என்று.
வீண் மன உளைச்சலை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.

ஒரு ஊரில் அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளின் முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் போர்வீரர்கள். 

இதுகண்ட கழுதைகள், இவையும் நம்மைப் போல் தான் இருக்கின்றன. இவைகளுக்கு மட்டும் என்ன கொள்ளு, புல்லு, தேய்ப்பு, சிறப்பு! நமக்கும் இம்மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என நம் எஜமானரிடம் நாம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தன. சற்று நேரத்திலேயே வேறொரு குதிரைப்படை அங்கே வந்தது; போர் மூண்டது. பல குதிரைகளுக்கு குத்தும் வெட்டும் விழுந்தன. தலை, கால்கள் முறிந்தன.

இதையும் பார்த்த கழுதைகள் - நமக்குக் கொள்ளும் வேண்டாம், இந்தக் குத்து வெட்டும் வேண்டாம் என்று, உடனே தமக்குள் முடிவு செய்து கொண்டன. நாம் எவ்வளவுக்கெவ்வளவு இன்பங்களை எதிர்பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும் ஏற்படும் என்பதை கழுதைகளால் அறிய முடிந்தது.

பெரும்பாலானோர் தாங்கள் முன்னேற முடியாமல் போவதற்குத் தங்களைச் சுற்றி இருக்கும் மக்கள்மீதும் சூழல்கள்மீதும் எப்போதும் குறைகூறுகின்றனர். ஆனால் மேன்மக்கள் எப்போதும் தங்களுக்குள் உள்ள திறமை கண்டுபிடித்து மெருகேற்றுகின்றனர்.

வெற்றி பெற்றவர் அல்லது மதிப்பு வாய்ந்தவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அவர்களின் தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் தெரியும். வெறும் ஆசைகளை மட்டும் வைத்துக் கொண்டு முயற்சி செய்யாவிட்டால் பலனிலை."சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு..அதிர்ஷ்டம் இல்லையென்று அலுத்துக் கொண்டார்" என்பார் பட்டுக்கோட்டை.

தெளிவான இலக்கின்றியும், உழைப்பின்றியும் அடுத்தவர் மதிப்பை எண்ணி பொறாமை கொள்ளாமல்..நம் நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.நாம் ஈடுபட்ட துறையில் புதுமைகளை செய்வோம்.உழைப்பை செலுத்துவோம்.மதிப்பும் மரியாதையும் தானாய் வரும். மற்றவர்க்கு கிடைக்கும் மதிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் முதலில் நம் இலக்கை அறிவோம். உழைப்பை முதலீடு செய்வோம்.
இலாபமாய் நற்பெயரை ஈட்டுவோம்

நற்காலை 

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday 26 January 2023

மீரா


இலக்கியக் கூட்டம்
பரவசமூட்டும் பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கண் சகிதம்
முன்னால் இருப்பாள்
அந்த மாது
காது மட்டும் கேட்காது

-மீரா

Wednesday 25 January 2023

கற்கை நன்றே-8*மணி




புதிய கோணம்

There is no value for if and but என்று நண்பர் ராஜ்குமார் அவர்கள் ஒரு முறை என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார். கடந்த காலம் இப்படி இருந்திருந்தால்
நாம் எப்படி இருந்திருப்போம், எப்படி எல்லாம் நாம் முன்னேறி இருக்கலாம் என்று நினைப்பதுண்டு. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமற்றது, மதிப்பும் அற்றது, நேரவிரயம் தான். கற்பனையில் வேண்டுமானால் நாம் கோட்டை கட்டிக் கொள்ளலாம்.. ஆனால் நிதர்சனம் எப்போதும் நமக்கு கசப்பைத் தான் தருகிறது

ஆனால் வரலாற்றில் சில கதைகள் மாறி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை மாலன் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்..

துரோணர் தன் சீடர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் போது மரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த கிளி பொம்மையின் கண்ணை பார்த்து அம்பெய்த வேண்டும் என்பது பயிற்சி ஆனால் அர்ஜுனனின் அம்பை முந்திக்கொண்டு வேறொரு அம்பு கிளியின் கண்ணை தைத்தது.. அனைவரும் திரும்பிப் பார்க்கும் போது பின்னால் ஏகலைவன் நின்று கொண்டிருந்தான்.

 யாரிடம் இந்த வித்தையை கற்றாய் என்று துரோணர் கேட்டபோது.. உங்களிடம் தான் குருவே என்றான் ஏகலைவன். அப்படியா? அப்படியானால் குருதட்சனை எங்கே?

 என்ன கொடுக்கட்டும் குருவே?  உனது வலது கை கட்டை விரலைக் கொடு என்றார். உடனே வாள் எடுத்தான், வெட்டினான், புன்னகையோடு நீட்டினான். அனைவரும் அதனை பார்த்து வியந்துதான் போனார்கள்.

 இந்த காட்சி முடிந்ததும் அனைவரும் திருப்தியோடு திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். சில அடிகள் கடந்ததும் திடுக்கிட்டு நின்றார்கள். எதிரே பாம்பு ஒன்று படம் எடுத்து சீறிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது.. அம்பொன்று வந்து அந்தப் பாம்பின் படத்தை கிழித்தது. யார் என்று மீண்டும் திரும்பிப் பார்த்தார்கள் ஏகலைவன் தான். துரோணர் திடுக்கிட்டு கேட்டார், "உனக்கு தான் வலது கை கட்டை விரல் இல்லையே எப்படி?

ஏகலைவன் சிரித்துக்கொண்டே சொன்னான் குருவே நான் இடக்கை ஆட்டக்காரன் என்று..

எளியோர்கள் வரலாற்றில் ஜெயித்திருந்தால் வரலாறு நிச்சயம் மாறி இருக்கும் அல்லவா.. இந்த கதையைப் படிக்கும் போது அதுதான் யோசிக்க தோன்றுகிறது

நற்காலை 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday 24 January 2023

கற்கை நன்றே-7*மணி



புரிதல் என்பது ஞானத்தின் திறவுகோல்

புரிதல் என்பது தற்காலத்தில் மிக முக்கியமானது.புரிதலையும் புரிந்து கொள்ளும் உணர்வும் உடனே வருவதில்லை.அதற்கு துணிவும் மாறும் மனமும் தேவை. அதனாலேயே பலர் புரிதலை விட்டு ஓடிவிடுகின்றனர்.

ஓஷோவின் கதை ஒன்று.. ஒரு பணக்காரர் சந்தையில் ஒரு கிளி வாங்கி வந்தார்.அது அழகாய் பேசும். அவருக்கு மூன்று அறிவுரைகளை சொன்னது.ஒன்று "அபத்தம் எதையும் நம்பாதே", இரண்டு " என்ன வேண்டுமானாலும் செய் ஆனால் முடியாததை செய்யாதே", மூன்று நல்ல செயலுக்கு வருந்தாதே, கெட்டதுசெய்தால் மனம் வருந்து". இதை கேட்டவுடன் அதனை மகிழ்ச்சியுடன் பறக்கவிட்டார்.

பின்னர் அந்த கிளி மரத்தில் அமர்ந்து முட்டாளே என் வயிற்றில் வைரக்கல் இருக்கிறது என்னை பறக்கவிட்டாயே..என்று கூறியவுடன் இவருக்கு ஆசை வந்து பிடிக்க முயன்று கீழே விழுந்து கிடந்தார். அப்போது கிளி மீண்டும் வந்தது. வயிற்றில் வைரம் இருந்தால் அறுத்துவிடுமே ஆகவே "அபத்தங்களை நம்பாதே", இரண்டு..செய்ய முடியாததைசெய்து கீழே விழுந்தாய்,மூன்று என்னை பறக்கவிட்டு வருந்தினாய்..எனக் கூறி பறந்தது.

மற்றொன்று

பாரசீகத்தின் மன்னர் இளவரசனுக்கு கல்வி கற்பதற்கு ஒரு குருவை
நியமித்தார் .ஒரு நாள் அந்த குரு எந்த தவறும் செய்யாத இளவரசனை கடுமையாகத் திட்டி அவமானப்படுத்திவிட்டார் .முதுகில் ஓர் கடுமையான அடியும் விழுந்தது .

அன்றிலிருந்து இளவரசனுக்கு ஆசானின் மீது வெறுப்பு ஏற்பட்டது .அந்த அவமானம் அவர் நெஞ்சில் உறைந்து விட்டது.
இளவரசர் வளர்ந்தார் .தந்தைக்குப் பிறகு சிம்மாசனம் ஏறினார்.

குருவை வர செய்தார் .
அன்று எந்த தவறும் செய்யாமல் ஏன் என்னை அநியாயமாக அடித்தீர்கள் என்று கேட்டார்.

பாதுஷா அவர்களே ஒரு நாள் சிம்மாசனத்தில் அமர போகிறீர்கள் என்பதும் எனக்குதெரியும் .அப்போது நீங்கள் நீதி பரிபாலனமும் செய்வீர்கள் பல வழக்குகள் உங்கள் முன் வரும். ஒன்றும் தவறு செய்யாத அப்பாவிகளும் உங்கள் முன் குற்றம் சுமத்தி நிறுத்தப்படுவார்கள். தவறு செய்யாமல் ஒருவர் தண்டிக்கப்பட்டால் அது எவ்வளவு வலியைத் தரும் என்பதை உணர்ந்தால்தான் அதுபோல தவறான நீதியை வழங்க மாட்டார்கள். எனவே அநீதியின் சுவையை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு செயலை நான் செய்தேன்.

புரிந்துணர்வு லேசானது .அதை சுமக்க வேண்டியதில்லை.அது உங்கள் இரத்தமும் சதையுமாக மாறும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday 23 January 2023

தருணங்களைக் கடந்துவிட்டால் உணர்ச்சிகளென்பது காலாவதியாகிவிட்ட உண்மை அல்லது உயிர்ப்புள்ள பொய்.-சேரவஞ்சி

கற்கை நன்றே-6*மணி



மனக்குவியமும் கவனமும்

அது ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான நேர்காணல் கடைசி சுற்றுக்கு மூன்று பேர் மட்டும் தேர்வாகியிருந்தனர். ஒவ்வொருக்கும் மூன்று கணினி கொடுக்கப்பட்டது. திரையில் முதலாமவருக்கு காபி கொட்டையின் விலை நொடிக்கு நொடி மாறி வரும்
அதனை கண்காணித்து குறிக்க வேண்டும். இரண்டாமவருக்கு சர்க்கரையின் விலை உலகச் சந்தையில் மாறி வருவதை காட்டுவார்கள். மூன்றாமவருக்கு கச்சா எண்ணையின் விலை ஓடிக்கொண்டிருக்கும். 

அதன் கீழேயே ஒவ்வொருவருக்கும் சிரியா மீது ரஷ்யா போர் தொடுக்கிறது. தொழிலாளர்களின் போராட்டம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை சரி கட்ட நாடுகளின் கூட்டமைப்பு அறிக்கை நாளை வெளியாகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செய்தி அதன் கீழ் வந்து கொண்டிருக்கும். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு காத்திருந்தனர். தங்களுக்குள் பேசிக் கொண்டனர் இதனை அதிகாரிகள் அங்கிருந்து  சிசிடிவியில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காபி விலையை கவனித்தவர் தேர்ச்சி பெறவில்லை. சர்க்கரையை கவனித்தவர் அடுத்த கட்ட நிலைக்குத் தேறுகிறார். கச்சா எண்ணை விலையை கவனித்தவருக்கு வேறு வேலை தருவதாக கூறுகிறார்கள்.
ஒவ்வொருவரின் திரையில் ஒளிரும் செய்திக்கான காரணம் பிறரின் திரையில் வரும்.இதனை கலந்து ஆலோசித்திருந்தாலே விடை கிடைத்திருக்கும்.

ஒரு வேலையை செய் என்று ஆணை வரும் போது மூளை இரு வேலைகளை செய்கிறது. தனக்கு பிடிக்காத தேவையில்லாதது என கருதுவதை கவனத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. உணர்ச்சியுடன் கூடிய நிலையில் இதனை கவனி என்று அட்ரினலின், நார் 
எபினெஃப்ரின் போன்ற ஹார்மோன்களை தூண்டிக்கொண்டு, பதற்றத்துடன் தனக்கு இட்ட வேலையை கவனிக்க எத்தனிக்கிறது. காபி விலையை பார்ப்பவர், கீழே ஓடிய கச்சா எண்ணெய் பற்றிய செய்தியை கவனிப்பதில்லை. அவர் கண்ணில் படுகிறது ஆனால் கவனத்தில் செல்வதில்லை. அதிகப்படியான தகவல்களை மூளை சேமிப்பதில்லை

பிஜி தொழிலாளர்களின் போராட்டம் என்பதை பார்த்த இளைஞன் அதனை தெரிவித்து இருந்தால் சர்க்கரை விலையை கவனித்தவன் உள்வாங்கி இருக்க முடியும். கச்சா எண்ணெய் கதையும் அப்படித்தான். ஒருவருக்கொருவர் தொடர்பான செய்திகள் இன்னொருவருக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட செய்திகளை மட்டுமே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மனக்குவியத்திலிருந்து கவனம் வேறுபட்டது.குவியம் என்பது,கவனம் போன்ற பல கட்டங்களை கொண்டது.
தேவைகளை அறிந்து நிற்பவர்களால் மட்டுமே தகவல்களை அலசித் தேக்கி, பிறருக்கு அளித்து முன்னேற முடியும்.

அனைவராலும் சிதறியோடும் சிந்தனைகளை செய்ய முடியும் ஆனால் குவியத்தின் மூலம் வரும் செறிவான தெளிவான சிந்தனைகளைக் கொண்டுவர உணர்வும் பயிற்சியும் தேவை. இந்த சிந்தனை மட்டுமே நாம் விரும்பும் திசையில் வெற்றிகரமாக பயணிக்க வைக்கும்.

எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரியின் நூலிலிருந்து

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

WIN WIN METHOD


ஜப்பானில் ஒரு பிரபல சொற்றொடர் உண்டு. "WIN WIN METHOD."

அதாவது தினம்தினம் ஒரு செயலை முன்புஇருந்ததைவிட சிறப்பாக செய்வது.

இன்று ஒரு படம் வரைகிறீர்கள் என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இதைவிட இன்னும் சிறப்பாக நாளை வரையவேண்டும் என்று முடிவெடுப்பதான் WIN WIN METHOD.

இதே போல் எந்த ஒரு செயலையும். நீங்கள் தூங்கினால்கூட நாளை இதைவிட அமைதியாக தூங்கவேண்டும் என்று நினைப்பது.

இதையே" ஓஷோ" வேறுமாதிரி சொல்வார்.

எதிலும் ஒரு பூர்ணத்துவம் ஒரு முழுமைவேண்டும்.

நீ பணக்காரன் என்றால் அம்பானியைவிட பணக்காரனாக இரு.

பிச்சைக்காரன் என்றால் உன்னைவிட ஒன்றுமேஇல்லாத பரதேசி யாருமில்லை என்ற அளவுக்கு பிச்சைக்காரனாக இரு என்பார்.

எப்படி இருப்பது என்று நீங்களே முடிவுசெய்யுங்கள்.

-படித்தது

Sunday 22 January 2023

கற்கை நன்றே-5*மணி



கற்றல் ஒரு கலை

யானுஷ் கர்ச்சாக் "நான் மீண்டும் சிறுவனாகும்போது" எனும் புத்தகத்தில்  கூறியிருப்பது 

"ஜன்னல் வழியாக வெளியே பார்க்குமாறு ஒரு மாணவனை நிர்ப்பந்திக்கிறபோது அவன் அறிகிற விஷயங்களை விட கரும்பலகையை பார்க்கும்போது அவன் அதிகம் அறிந்து கொள்கிறான் என்பது ஒருவருக்கும் தெரியாது என்று எழுதினார். அதிகம் பயனுள்ளதும் அதிக முக்கியத்துவமானதும் எது? கரும்பலையில் அடைக்கப்பட்டிருக்கிற உலகமா? அல்லது ஜன்னல் கண்ணாடிக்கு வெளியே இருந்து செல்லும் உலகமா?..டோட்டோசானின் புத்தகத் தலைப்பு நினைவுக்கு வருகிறதல்லவா? மனித ஆன்மாவை பலவந்தப்படுத்தாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் பெறுகிற இயற்கையான வளர்ச்சியை, அவனது சிறப்பியல்புகளை, ஆர்வங்களை தேவைகளை கூர்ந்து நோக்குங்கள் என்கிறார்.

யானுஸ் கர்ச்சாக் வார்சா நகரின் யூதர் பகுதியில் உள்ள அனாதை விடுதியில் ஆசிரியராக பணியாற்றினார். ஹிட்லர்வாதிகள் குழந்தைகளை நெருப்பிலிட்டு பொசுக்க உத்தரவிட்டனர். குழந்தைகளை விட்டுவிட்டு தப்பித்து செல்லலாம் அல்லது குழந்தைகளுடன் சேர்ந்து மடிந்து போகலாம்..இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டபோது அவர் நான் மனசாட்சியை விற்று பிழைக்க மாட்டேன். குழந்தைகளுடன் சேர்ந்து சாவை நோக்கி போவேன் என்றார். மரண பயம் சிறுவர்களின் இதயத்தை தொலைக்காமல் பார்த்துக் கொண்டார். குழந்தைகளுக்கு உண்மையாக போதகராக விளங்க வேண்டுமானால் அவர்களுக்கு நமது இதயத்தை கொடுத்து விட வேண்டும் என்று கூறினார்.

நடைமுறை உலகம் மிகவும் வித்தியாசமானது. குழந்தையின் தலையில் எவ்வளவு அறிவை திணிக்க முடியுமோ அவ்வளவுவையும் திணித்து விடுவது இன்றைய போதனை எனப்படுகிறது. போட்டித் தேர்வுக்கான சிறந்த மாணவனை உருவாக்குவதும், தேர்விக்குரிய மதிப்பெண்ணை அவனை எடுக்க வைப்பதும் இன்றைய கல்விக்கூடங்களின் முக்கியபணி என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

ஒருமுறை ஐரோப்பிய வேட்டைக்காரர் ஆப்பிரிக்க காட்டில் வழியை தொலைத்து விட்டு அலைந்து கொண்டிருந்தார். அந்த காட்டில் ஒரு சிறு குடிசையை பார்த்து ஆச்சரியமடைந்து..இந்த கிராமம் எந்த வரைபடத்திலும் இல்லையே என்று கூறிவிட்டு,அங்கிருந்த மக்களைப் பார்த்து நாகரீகம் இல்லாமல் இருக்கிறீர்களே? என்று அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அதற்கு அவர்கள் நீங்கள் எங்களை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று பயந்து கொண்டிருக்கிறோம். உங்கள் நாகரீகம் உள்ளே நுழையும் போது எங்கள் நிலைமை பரிதாபமாக இருக்கும். இயற்கையை மேம்படுத்துகிறேன் பேர் வழி என்று நீங்கள் முயற்சி செய்யும்போது இயற்கை தொலைந்து விடுகிறது. இயற்கையை மேம்படுத்த செய்யும் முயற்சியில் அதனை ஊனமாக்கிவிடுகிறோம். அப்படித்தான் ஒவ்வொரு குழந்தையையும் ஊனமாக்கிவிடுகிறோம்.

அந்த காலத்து படிப்பு படித்தவர் என்று ஆச்சரியத்தோடு அன்றைய தலைமுறையினரை பார்த்தவர்களை நாளைய வருங்காலமும் இப்போதுள்ள தலைமுறையை பார்க்கும். உலகமயத்தினால் நாளை இன்னும் கல்வி வணிகம் ஆகலாம். 
குழந்தை உயிருடன் இருக்கிறது.. உயிர்ப்பு இல்லை.கல்லறையின் மேலே எவ்வளவு அழகுபடுத்தினாலும் உள்ளே இருக்கும் மனிதன் செத்துத்தான் கிடக்கிறான் என்கிறார் ஓஷோ.

ஷூவாங் ட்சுவின் செய்தி என்னவெனில் இயற்கையை அனுமதியுங்கள் .இயற்கையை அதன் போக்கில் விட்டால் போதும் என்கிறார்.குழந்தைகளையும் கூட.!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

கதவு எண் 13/78


கதவின் முன் நின்று கொண்டு தன் ஆள்காட்டி விரலைக் கொக்கிபோல மடித்துத் தட்டினான்.அது தகரக்கூரை மீது விழும் மழைச்சத்தத்தை ஒத்திருந்தது.விசையோடு தள்ளித் திறந்தபோது..அடி பட்ட மிருகம் வலியால் கத்துவது போல் அது ஓசை எழுப்பிற்று. பின் அதுவாக சுருதி பிசகிய சப்தத்தின் சாயலோடு தன்னை சாத்திக் கொண்டது.

-கே.என்.செந்தில்
(கதவு எண் 13/78)

Saturday 21 January 2023

சேரவஞ்சி


தருணங்களின் நினைவாகத்தான் மனிதர்களை வாழ்நாளெல்லாம் நேசிக்கிறோம். எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிற அளவுக்கு உண்மையில் எந்த மனிதனும் தகுதியானவன் இல்லை. 
நேசிப்பது என்பது அன்றன்றைக்கு இருக்கிற குறைகளுக்குத் 
தகுந்தார்போல் அன்பை இட்டுச் சமன் செய்யும் மனதின் கனிவு.

—சேரவஞ்சி

சேரவஞ்சி


தருணங்களின் நினைவாகத்தான் மனிதர்களை வாழ்நாளெல்லாம் நேசிக்கிறோம். எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிற அளவுக்கு உண்மையில் எந்த மனிதனும் தகுதியானவன் இல்லை. 
நேசிப்பது என்பது அன்றன்றைக்கு இருக்கிற குறைகளுக்குத் 
தகுந்தார்போல் அன்பை இட்டுச் சமன் செய்யும் மனதின் கனிவு.

—சேரவஞ்சி

Friday 20 January 2023

விளையாட்டாய் விட்டெறிந்த 'தவளைக்கல்'லென தத்தித் தாவிப் பின் மூழ்கு முனதொரு சிறு சொல் சென்று தொடுகிறது ஒலி கலையாத ஆழத்தை.-மோகனரங்கன்

கற்கை நன்றே-4*மணி


கற்கை நன்றே-4
*மணி

தனித்துவம் வளர்ப்போம்

வாழ்க்கை ஒவ்வொரு மனிதராய் தேர்ந்தெடுத்து நமக்கு பாடம் கற்பிக்க அனுப்புகிறது. பாடங்களை நன்கு கவனித்தால் இன்னும் வாழ்க்கையை  நிறைவுடன் வாழலாம். 

வெற்றி பெற்ற மனிதர்களை பின்பற்றலாம் என எண்ணி அவர்களை காப்பியடிப்பதை பலர் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் யாரையும் பின்பற்ற முடியாது. அடுத்தவர் வாழ்வில் இருந்து நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. நல்ல செய்தியை எடுத்துக் கொள்ளுதல் என்பது நகல் எடுப்பதாக மாறிவிடக்கூடாது என்கிறார் ஓஷோ.தனித்துவத்தை இழந்துவிடாத பின்பற்றுதல் அவசியம்.

சீடன் வேறு பின்பற்றுபவன் வேறு. ஒழுக்கம் என்பது கற்றல்.. ஆங்கிலத்தில் discipline அதன் வேர்ச்சொல். அது கட்டுப்பாட்டை குறிக்கும் சொல்லல்ல.கற்றுக் கொள்ள தயாராய் இருப்பது. கற்க தயாராக இருக்கும் போது குரு உங்கள் முன் தோன்றுவார் என்கிறது சூஃபி.  அறிவு இரண்டே இரண்டு விஷயங்களை செய்யும். ஒன்று மூர்க்கத்தனமாக எதிர்க்கும், இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்றும். அறிவு உங்களை பகைவனாக்கும் இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்ற வைக்கும்.இதில் நாம் கண்மூடித்தனமாக பின்பற்றி நம் தனித்துவத்தை பல நேரங்களில் இழந்துவிடுகிறோம்.நாம் எவ்வளவு பின்பற்றினாலும் தனித்துவத்தையும் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இயேசுநாதர் தன் சீடர்களுக்கு கடைசியாக சொன்னது என்ன தெரியுமா.. "என்னை உண்ணுங்கள், என்னை அருந்துங்கள்" என்னை உங்கள் ரத்தத்தில் ஓட விடுங்கள்" என்னை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்" அதன் பொருள் என்னை உள்வாங்கிக் கொள்ளுங்கள் நான் சொல்வதை ஜீரணித்து பின் உங்கள் வழியில் செல்லுங்கள். நான் செய்வது போல் செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் உள் ஒளியை இழந்து விடுவீர்கள் என்கிறார். ஒரு உண்மையான குரு உங்களுக்கு விதிமுறைகளை தர மாட்டார். கண்களை தருவார். நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்ட மாட்டார் மாறாக உங்களிடம் ஒரு விளக்கை தருவார். இந்த விளக்கை எடுத்துக்கொண்டு உன் பாதையில் போ.. இது உன் பாதையை உனக்கு காட்டும் என்று சொல்லுவார்.

உங்கள் கையில் வழிகாட்டும் விளக்கு இருந்தால் போதும். வரைபடமோ வழிகாட்டியோ தேவையில்லை. ஒரு மனிதன் விதிகளுக்காக ஏங்க மாட்டான், அவன் புரிந்துணர்வை நாடுவான். அப்போதுதான் இந்த பரந்த உலகத்தில் அவன் வழியை கண்டுபிடித்து அதில் அவன் பயணிக்க முடியும். அவனுடைய உள்ளொளியே அவனுக்கு வழியை காட்டிவிடும். புரிந்துணர்வு இருப்பதால் சுதந்திரமும்  இருக்கிறது

 செல்லும் பாதை சரியாக இருக்கும் போது,மெதுவாக ஓடினாலும் வெற்றிதானே..!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday 19 January 2023

கற்கை நன்றே-3*மணி



வாலண்டைன் ஹூவே (Valantine Hauy)

ஒரு பெரும் அற்புதம் நிகழப்போகும்
நேரமெல்லாம் அந்தஒரு சிறு கணத்தில் தான்.

பார்வையற்றோருக்கான எழுத்துக்கள் பிரெய்லியால் உருவாக்கப்பட்டது ஆனால் அதற்கும் முன்னோடியாக பார்வையற்றவர்களுக்கான எழுத்துக்களை உருவாக்குவதிலும்  பார்வையற்றோருக்கான பள்ளிகளையும் முதன் முதலில்  நடத்தியவர் வாலண்டைன் ஹுவே என்பது குறிப்பிடத்தக்கது

வேலன்டைன் ஹுவே பார்வையற்றவர்களுக்கான வாழ்க்கையைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு நாள் வெளியே நடந்து சென்று கொண்டிருக்கும்போது பார்வையற்ற ஒருவருக்கு உதவி செய்யும் விதத்தில் தம் சட்டை பையில் கையை விட்டு ஒரு காசு எடுத்து அவருக்கு கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் இரண்டடி நடப்பதற்குள் அந்த பார்வையற்றவர் இவரை கூப்பிட்டு ஐயா நீர் தவறு செய்து உள்ளீர்கள் ஒரு 'செள' நாணயம் கொடுப்பதற்கு பதிலாக ஒரு 'பிராங்க்' நாணயம் கொடுத்து விட்டீர் என்றார். ப்ராங்க் என்பது அதிக மதிப்புள்ள நாணயம்.

 இதைக் கேட்டதும் இவருக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று.. எப்படி இதன் வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதில் என்ன கஷ்டம் இருக்கிறது என் விரலினால் அதை தடவி பார்த்தால் போதும். இது இந்த நாணயம் என்று சொல்லிவிடுவேன் என்றார். உடனே இவர் தலையில் ஒரு பொறி தட்டியது. இதைப்போலவே மேடுள்ளதாக அமைக்கப்பட்ட எழுத்துக்களை உருவங்களை அல்லது ஏதேனும் அடையாளங்களை விரல்களால் தடவிப் பார்த்து இவர்கள் தெரிந்து கொள்ள கூடும் அல்லவா என்று யோசித்தார். பிறகு ஒரு பார்வையற்ற நபரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கு தான் புதிதாக கண்டுபிடித்த தடித்த பக்கங்களில் மேடுள்ள பக்கங்கள் கொண்ட எழுத்துக்களை கொடுத்து கற்பித்ததால் அவரும் வெகு விரைவாக மேடாக அமைக்கப்பட்ட எழுத்துக்களை கூட்டிப் படிக்க கற்றுக் கொண்டார்.இது கடினமானதாக இருந்தாலும் ப்ரெய்லி முறையின் முன்னோடியாகும்.

 பின்னர் வாலண்டைன் பொதுமக்களின் முன்னிலையில் அவரை படிக்கச் செய்தார். இவர் உடனே படிப்பதைக் கண்டு அங்கு உள்ள அனைவரும் வியந்தனர். தான் கண்டுபிடித்த பார்வையற்றவர்களுக்கான கல்வி புகட்டும் முறையை மென்மேலும் சீர்திருத்தம் செய்து பலரிடம் உதவி பெற்று பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்தை முதன் முதலில் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணத்தின் விதைதான் செயலெனும் விருட்சமாகிறது.
ஒரு சிந்தனை செய்து கொண்டிருக்கும் போது தான் இக்கண்டுபிடிப்பு சாத்தியமானது. எல்லோரும் நினைப்பது போல ஆப்பிள் விழுந்தவுடன் நியூட்டன் ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்கவில்லை.அதற்கு முன் எடை அதிகமுள்ள பொருள் எடை குறைவான பொருளை ஈர்க்குமல்லவா என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதுதான் ஆப்பிள் மேலிருந்து கீழே விழுந்ததும் சிந்தனை மெருகேறி ஈர்ப்பு விசையை கண்டறிந்தார்.

ஆகவே சிந்தனையே கற்றலுக்கான, மறுமலர்ச்சிக்கான முதல்படி. ஆகவே நம் முன்னேற்றித்திற்கான, வாழ்க்கைக்கான சிந்தனையையும் நம் மனம் சிந்திக்கட்டும்.
சிந்திப்பவன்  மனிதன்,
சிந்திக்காதவான்  மிருகம்
சிந்திக்க பயப்படுகிறவன் 
கோழை என்பார் பெரியார். நாள்தோறும் நல்ல சிந்தனைகளை சிந்திப்போம்.அதனை செயல்படுத்தியும் காட்டுவோம்.

 நற்காலை 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday 18 January 2023

வெளிப்படும் பிரயத்தனங்களுக்கு நசுக்கக் காத்திருக்கும் கைகளை பற்றிக் குலுக்கிப் புன்னகைத்து நலம் விசாரிக்கும் நாகரிகத்தை நானும் விடமுடியாமல்தான் கை குலுக்கினேன் தவிர நாண நன்னயம் செய்துவிடல் அல்ல அது-பிருந்தா

கற்கை நன்றே-2


கற்கை நன்றே-2
*மணி

ஸ்வபாவதஹ ப்ரவிஷந்தி

எல்லாம் உண்டாகின்றன. அழிகின்றன, தொலைந்து மறைகின்றன, நீ சாட்சியாக தூரத்தில் இரு. அங்கு நின்று கொண்டு பார்த்தபடி இரு.

புத்தர் மலைப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். கடும் வெயிலில் தாகம் எடுத்தது. சீடர் ஆனந்தரை கூப்பிட்டு நாம் வந்த வழியில் திரும்பிச் செல். இரண்டு காத தூரத்துக்கு பின் ஒரு அருவியை பார்த்தோம் அல்லவா. அங்கே நீர் நிரப்பி வா என்றார். ஆனந்தர் பாத்திரத்துடன் அருவியை அடைந்தார். அதே சமயம் அங்கு தேங்கி இருந்த நீரின் வழியாக மாட்டு வண்டிகள் சில சென்றன. தண்ணீர் முழுவதும் குப்பை பரவி விட்டது. அடிமட்டத்திலிருந்து சகதிகள் மேலே எழும்பி வந்து விட்டது. அந்த தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது. 

அப்போது ஆனந்தர் திரும்பி புத்தரிடம் வந்து சொன்னார். அந்த அருவி நீர் பருகுவதற்கு லாயக்காக இல்லை. மேற்கொண்டு நாலு ஐந்து மைகளில் நதி உள்ளது. அங்கிருந்து புது தண்ணீர் எடுத்து வருகிறேன் நீங்கள் ஓய்வெடுங்கள் என்றார். ஆனால் புத்தர் பிடிவாதமாக திரும்பிப் போய் அதே அருவி நீரை கொண்டு வா என்றார்.

 இதனை மறுக்க முடியாத ஆனந்தர் அருவி நீரை அடைந்தபோது தண்ணீர் சுத்தமாகி விட்டிருந்தது. ஆனந்தர் அருவியை நோக்கிச் செல்லும் போது  ஆன தூரத்தில் தூசி எல்லாம் அடிமட்டத்துக்கு இறங்கிவிட்டது. ஆனந்தர் திகைத்துப் போனார். அப்பொழுதுதான் அவருக்கு புத்தரின் பிடிவாதத்தின் அர்த்தம் புரிந்தது

நான் செல்லும்போது யோசித்துக் கொண்டு சென்றேன். குப்பையை அகற்றிவிட்டு நீர் எடுத்து வரலாம் என்று. ஆனால் நான் அவ்வாறு செய்யாமல் கரையிலேயே இருந்தேன். கலங்கிய நீர் அமைதிபட்டதும்.. தெளிவடைந்தும்.. இருந்தது. யாரும் அதை வழிந்து சென்று அமைதி படுத்தவில்லை. தானாகவே அது சாந்தப்பட்டு விட்டது என்றார்.

இதனைக் கேட்டவுடன் புத்தர் சொன்னார்..
வாழ்க்கையில் பிரச்சனைகளும் அப்படித்தான்.. அதுவே வரும் அதுவே அழியும். நாம் அமைதியாக நின்று பார்த்தபடி இருந்தால் போதும்.
இக்கட்டான நிலையில் பொறுமை முக்கியம். பதட்டமே அந்த நிலையை இன்னும் சுமையாக்கிவிடுகிறது. ஆகவே பொறுமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.ஆனால்
பொறுமை பொறுமையாகத்தான் வரும்.

நற்காலை வணக்கம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

நினைவுகளில் கிராமமும்மனதில் கிராமத்தானும் இருப்பதால்சொந்த வீடில்லாத எனக்கும்சொந்த கிராமம் ஒன்றுஇன்னும் இருக்கிறது-ஆண்டன் பெனி

Tuesday 17 January 2023

கற்கை நன்றே-1*மணி



இமயமலை ஏறும் பயணத்தில் இருவர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு மனிதன் உறைந்து  கிடப்பதை பார்த்து ஒருவர் நின்றார். மற்றவர்  நாம் முன்னேற வேண்டிய இலக்கு மிக தூரம். உறைபனி அதிகம் என்பதால் இந்த மனிதனுக்கு உதவி செய்வது மிகவும் கடினமாதலால்  நாம் முன்னேறி செல்வோம் என்றார்.
ஆனால் ஒருவர் மட்டும் வேண்டுமென்றே பிடிவாதமாக இருந்து கொண்டார். மற்றவர்  மேலே ஏறிச் செல்கிறார்..

 இவரும் பத்து நிமிடங்கள் வரை அவரின் உடலை வெப்ப படுத்தி பார்த்தார்.. முடியவில்லை. இறந்து கொண்டிருக்கும் அந்த மனிதனை அப்படியே விட்டு விட்டுச் செல்ல மனமில்லாமல் அந்த மனிதனை வெப்பம் ஏற்றுவதற்காக தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார். அந்த மனிதனின் உடற்பயிற்சியால் அவருடைய உடலின் வெப்பம் அதிகரித்து வெதுவெதுப்பு கூடியது.இதனால் சிறிது நேரத்தில்  அந்த புதிய மனிதன் உயிர்த்தெழுந்தார்.

 அந்த மனிதரை சுமந்து கொண்டு சென்றதால் சுமக்கும் பயணிக்கும் ஒரு வெதுவெதுப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் இரண்டு கி.மீ தொலைவு சென்ற பின்பு வழியில் ஓரமாக இன்னொரு உடல் கிடப்பதை கண்டார்கள். அது அப்போது உதவி செய்ய வேண்டாம் என்று மறுத்த சக பயணியினுடையது. உண்மையில் அவர் இறக்கும் அளவுக்கு உறைந்து போய் கிடந்தார். அந்தப் புயலுக்கு எதிராக தனியாக நின்று போரிட்டு வெப்பப் படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை.

இவ்வாறாக இக்கதை முடியும். இதில் உதவி செய்வது ஒரு கருணையின் ஊற்றாக மனிதனிடத்தில் சுரப்பதை கூறியிருக்கும். அது சுரக்கும் போது செய்தால் மட்டும் உதவி செய்யும் மனம் இருக்கும். இல்லையேல் மனது தடுத்துவிடும். அதனால்தான் கர்ணன் இடது கையில் கொடுப்பதை வலது கைக்கு மாற்றுவதற்குள் மனம் மாறிவிடும் என்றார்.ஒரு மழலையர் வகுப்பில் பென்சில் கேட்டால் விரைந்து உதவும் தெய்வக்கரங்களை பார்க்கலாம் என்று படித்த வரி நினைவுக்கு வருகிறது.இளமையில் இருக்கும் உதவி செய்யும் குணம் கால ஓட்டத்தில் சுண்டிவிடுகிறது.

செல்வந்தரின் குழந்தை ஒன்று குளத்தில் விழுந்துவிடுகிறது. ஓடிச்சென்று ஒருவர் காப்பாற்றுகிறார். தன் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றிய அவருக்கு பெரும் தொகை கொடுக்க நினைத்து அந்த இளைஞனை மாலை வீட்டுக்கு வரச் சொல்கிறார்.அதன் பின் வீட்டுக்கு வந்தவுடன் ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து..ஏன் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டுமென மனசாட்சியின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் இறுதியில் நூறு ரூபாய் தருகிறார்.

உதவி செய்ய நினைத்தால் உடனே உதவிடவும்

நற்காலை வணக்கம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday 16 January 2023

பான் இந்தியா படங்கள் என்பது இந்தியா முழுவதும் மொழி தடையைத்தாண்டி வெளியாவது..PAN என்பதற்கு Presence Across Nation. -ஜி.எஸ்.எஸ்

விஜய்


மாட்டு பொங்கலுக்கு
டிராக்டருக்கு பூமாலை!
அவமானமாக பார்த்தது
அடி மாடு ! 

- பா.விஜய்.

பெருமாள் முருகன்


வெயிலை விட நிழல் தகித்தது. வெயிலின் தகிப்பு சகித்துக் கொள்ளக் கூடியது. நிழலின் தகிப்பு பொறுக்க முடியாதது. தன்னிலிருந்து துரத்தவே நிழல் துடித்துக் கொண்டிருக்கும்

-பெருமாள் முருகன்

Saturday 14 January 2023

மோகனரங்கன்


ஒரு ஜென் விளக்கம் கவிதையைப் பாதி திறந்த கதவு என்கிறது. உண்மைதான். மூடியிருந்தாலோ, முழுக்கத் திறந்திருந்தாலோ பார்த்துவிட்டோ அல்லது பார்க்காமலோ நாம் கடந்துவிடலாம். ஆனால் பாதி திறந்த கதவு மீதியைப் பற்றிய தீராத யூகத்தில் நம்மை நிறுத்திவிடுகிறது. 

கவிதையில் இயங்கும் சொற்கள் தமக்கென்று
தனித்த ஒளியும் நிழலும் கொண்டிருப்பவை.ஒரு தேர்ந்த புகைப்பட நிபுணன் வெளிச்சத்தை கையாளுவதைப் போலவே கவிஞனும் சொற்களைப் பயன்படுத்துகிறான்.ஒரு நல்ல கவிதையில் பிரகாசமாகத் தெரியம் அர்த்தத்திற்கு அடியில் அறுதியிட்டுக் கூறமுடியாத உணர்வுகளின் நிழல்கள் தேங்கியிருப்பதைக் காணலாம்

-மோகனரங்கன்

Friday 13 January 2023

முத்துக்குமார்


ஒவ்வொரு பொங்கலுக்கும்
வெள்ளையடித்தாலும்
மீண்டும் தன் முகத்தில்
கரி பூசிக் கொள்கிறது
சமையலறைச் சுவர்

-நா.முத்துக்குமார்

ஜெயாபுதீன்


பெரிய உலகத்துக்குள் 
அத்தனைச் சிறிய 
திருகாணி
தொலைகிறது.

இத்தனைப் பெரிய 
உலகத்துக்குள் 
அத்தனைச் சிறிய 
திருகாணி
திரும்பக் கிடைக்கிறது.
.
.
தொலைந்த திருகாணியை
கண்டடைந்த கணத்தில்
அத்தனைப் பெரிதாய்
தன்னியல்பின் உருவுக்கு
சட்டென விரிந்துவிடுகிறது.
பூமி.

-ஜெயாபுதீன்.

Wednesday 11 January 2023

janakiraman


நியாபகத்தின் அடுக்குகளின் புதிய மனிதர்களை நுழைப்பது போலில்லை, பழகிய மனிதர்களை மறப்பது. நினைவில் பதிதலென்பது முழுக்க தேர்வின் அடிப்படையில் நிகழ்கிறது. வாழ்வின் முக்கிய மனிதரென நமக்குள் விழுந்த ஒரு முகம் பிறகெப்போதும் மறப்பதில்லை. 

அவரது ஒவ்வொரு சொல்லும் பிறகு தன்னைப் பிரதிசெய்தவாறே வாழ்வெல்லாம் நிறைகிறது. வழியில் பார்க்கும் அவர்பெயர்கள், யாரோ பேசும்போது இடையில் தற்செயலாய் வந்துவிழும் அவரது சொற்கள், யாரோ ஒரு மனிதர்செய்மனிதர்செய்யும் எளியபாவனைகள் மறக்க நினைத்தாலும் நமக்குள் உறைந்தவரின் நினைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கிக்
கொண்டேயிருக்கின்றன. 

நியாபகங்களிலிருந்து வெளியேறுவது பெரும் வாதையாக இருக்கிறது. எந்த போதையும் எதையும் மறக்கடிப்பதில்லை. லாகிரிவஸ்துக்களில் அழியும் மூளையின் சிறுதுகள்கள் மறக்க நினைத்த முகங்களை இன்னும் கூர்மைப்படுத்துகின்றன. சொற்களை அடியாழத்திலிருந்து மேலேற்றுகின்றன. இழப்பின் வலியை அப்பழைய நாட்களின் விசையுடன் எடுத்து மீண்டும் கட்டமைக்கின்றன. கண்ணீர் காயங்களை ஆற்றுவதில்லை. காலம் வடுக்களை ஒருபோதும் அழிப்பதில்லை. போதைகள் எந்த தீர்வையும் உருவாக்குவதில்லை. ஆனாலும், மறப்பதற்கான முயற்சிகளும் இல்லாவிடில் வாழ்வின் சுவாரஸ்யமும் அர்த்தமிழந்துவிடும் இல்லையா?

-லதாமகன்

படித்தது


நியாபகத்தின் அடுக்குகளின் புதிய மனிதர்களை நுழைப்பது போலில்லை, பழகிய மனிதர்களை மறப்பது. நினைவில் பதிதலென்பது முழுக்க தேர்வின் அடிப்படையில் நிகழ்கிறது. வாழ்வின் முக்கிய மனிதரென நமக்குள் விழுந்த ஒரு முகம் பிறகெப்போதும் மறப்பதில்லை. 

அவரது ஒவ்வொரு சொல்லும் பிறகு தன்னைப் பிரதிசெய்தவாறே வாழ்வெல்லாம் நிறைகிறது. வழியில் பார்க்கும் அவர்பெயர்கள், யாரோ பேசும்போது இடையில் தற்செயலாய் வந்துவிழும் அவரது சொற்கள், யாரோ ஒரு மனிதர்செய்மனிதர்செய்யும் எளியபாவனைகள் மறக்க நினைத்தாலும் நமக்குள் உறைந்தவரின் நினைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கிக்
கொண்டேயிருக்கின்றன. 

நியாபகங்களிலிருந்து வெளியேறுவது பெரும் வாதையாக இருக்கிறது. எந்த போதையும் எதையும் மறக்கடிப்பதில்லை. லாகிரிவஸ்துக்களில் அழியும் மூளையின் சிறுதுகள்கள் மறக்க நினைத்த முகங்களை இன்னும் கூர்மைப்படுத்துகின்றன. சொற்களை அடியாழத்திலிருந்து மேலேற்றுகின்றன. இழப்பின் வலியை அப்பழைய நாட்களின் விசையுடன் எடுத்து மீண்டும் கட்டமைக்கின்றன. கண்ணீர் காயங்களை ஆற்றுவதில்லை. காலம் வடுக்களை ஒருபோதும் அழிப்பதில்லை. போதைகள் எந்த தீர்வையும் உருவாக்குவதில்லை. ஆனாலும், மறப்பதற்கான முயற்சிகளும் இல்லாவிடில் வாழ்வின் சுவாரஸ்யமும் அர்த்தமிழந்துவிடும் இல்லையா?

-லதாமகன்

Monday 9 January 2023

முத்துலிங்கம்


மனதை தயாராக வைத்திருந்தால் சம்பவங்கள் நடக்கும் போதே மனதில் வசனமாகப் போய் உட்கார்ந்துவிடும்

-அ.முத்துலிங்கம்

Saturday 7 January 2023

ஜெயமோகன்

முகமூடிக்கு எப்போதும் ஒரே உணர்ச்சிதான், முகம் அப்படிபட்டதல்ல

-ஜெயமோகன்

ஜெமோ


தெளிவான இலக்குள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், ஆனால் அவர்கள் வாழ்வதில்லை. இலக்குகளில் இருந்து இலக்குகளை நோக்கித் தாவிச் செல்வதையே அவர்கள் வளர்ச்சி என்று எண்ணுகிறார்கள். எத்தனை அபத்தமான ஒரு கோட்பாடு

-ஜெமோ

விவேகானந்தர்


உன் கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியை பெற முயற்சித்து காலத்தை வீணாக்கியதையும், அப்படி உதவி எதுவும் வராமல் போனதையும் பெருமளவில் காண்பாய்.

 சிறப்பாக உனக்கு வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்து வந்தவையாகவே இருக்கும். எனவே
நம்பிக்கை நம்மிடத்தில் இருப்பது மட்டுமே வெற்றி பெறும் ரகசியம்.

- விவேகானந்தர்

Friday 6 January 2023

யாத்திரி


அடிக்கடி தனிமையில் புகுந்துகொள்கிறேன். மிகுந்த பிரியமாயிருக்கிறது இத்தனிமை, 
பின்னே!! 
நீ தந்து போனதல்லவா!

-யாத்திரி

பிச்சைக்காரன்

தலைவன் சொல்லுக்கு மறு பேச்சின்றி கீழ்ப்படிதல் , குறைந்த அளவு ஆள் பலத்துடன் பெரிய பாதுகாப்பு அரண்களை உடைத்தல் , வேகமான இடம்பெயரும் தன்மை என கெரில்லா படைகளின் அனைத்து அம்சங்களும் கொள்ளைக்கூட்டத்துக்கும் உண்டு. ஆனால் கொள்ளைக்கூட்டத்துக்கும் கெரில்லா படைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு..அதுதான் கொரில்லா யுக்தியை வெற்றிகரமான யுக்தியாக்குகிறது..

அந்த அம்சம் - மக்கள் ஆதரவு 

- சே குவேரா

Thursday 5 January 2023

கபிலன்


அவளை பூமிக்குள்
வைத்த பிறகும்
என்னையே
பார்த்துக் கொண்டிருந்தாள்
நான் தான்
கண்களை மூடிக்கொண்டேன்

-கபிலன்

ராஜாசந்திரசேகர்


துயரம்போல் பெய்கிறது மழை என்றவரும்,
சந்தோஷம்போல் பெய்கிறது மழை என்றவரும் ,
எதிரெதிர் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்
எப்போதும் போல் பெய்து கொண்டிருந்தது மழை

- ராஜாசந்திரசேகர்

காந்தி


சிக்கலைத் தவிர்ப்பதற்காக வெறுமனே சொல்லப்படும் 'ஆம்' என்பதை விட ஆழ்ந்த நம்பிக்கையிலிருந்து சொல்லப்படும் 'இல்லை' என்பது சிறந்தது.

-காந்தி

நேசமித்ரன்


மிகவும் துயரமான பாடல் 
என்று
இசைக்கப்பட்டவை 
எந்த துக்கமும் அளித்ததில்லை
சுகமானவைதான் பின்னர் துக்கமாய் மாறின.

-நேசமித்ரன்

Wednesday 4 January 2023

Good Friday


Good Friday

உண்மையில் God’s Friday என்பதுதான் போகப் போக Good Friday ஆக மாறிவிட்டது! சிலுவை புனிதம் அடைந்த நாள் அது. மரணத்தை வென்று ஏசு மீண்டும் உயிருடன் தோன்றிய ஈஸ்டர் திருநாளுக்கு (Resurrection) முந்தைய வெள்ளிக் கிழமைதான் Good Friday எப்பேர்ப்பட்ட தியாகம் அது!

-ஹாய் மதன்

உழவன்

ஒரு மருத்துவமனை வரவேற்பறையில் இருக்கும் டிவி 
மியூட் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. 
அதுவும் காமெடி நிகழ்ச்சி. அதுவும் நேசமணி, நாய்சேகர் போன்ற வடிவேலுகள்.

சிரிக்க வழியற்று
உடல் நலம் குன்றியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
"வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்பதால் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறதோ?!

-உழவன்

யாத்திரி


துவக்கத்திலேயே நிராகரிக்கப்படுகிறவர்கள்தான் எத்தனை பாக்கியம் செய்தவர்கள்! பழகியபின்னான நிராகரிப்பின் வலியுணரா சௌந்தர்ய வாழ்வு மிக்கவர்கள்.

-யாத்திரி

சொல் காத்திருக்கிறது யுகம் யுகமாக, க‌டலாழத்தின் விதையாக, மலைமுகட்டின் பருந்தாக. சொல் உதிர்கையில் அதைத்தாங்கும் கரங்களாக இருந்தால் போதும்-படித்தது

தஸ்தயேவ்ஸ்கி


இந்த வாழ்வே சொர்க்கம் . நாம் எல்லோரும் சொர்க்கத்தில் தான் இருக்கிறோம் . ஆனால் அதை காண மறுக்கிறோம்

- தஸ்தயேவ்ஸ்கி

சீனப் பழமொழி


தன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமென்பதால் ஒரு பறவை பாடுவதில்லை.

தன்னிடம் ஒரு பாடல் இருப்பதால் அது பாடுகிறது.

-சீனப் பழமொழி

Tuesday 3 January 2023

கல்யாண்ஜி


முக்கால் வாசிப் பேர் ஞாபகமாக 
மூடியை கழற்றிய 
பேனாவைக் கொடுத்து தான் கையெழுத்து கேட்கிறார்கள் கவிதை புத்தகத்தில்.
இதற்கு கூட 
நம்பாது போன 
இவர்களை நம்பியே 
இத்தனை வரிகளும்

-கல்யாண்ஜி

"இதுவும் கடந்து போகும்என்று இராதே!முதலில் வீழ்த்தும்பின் மிதிக்கும்உன் சுவடழிய தேய்க்கும்பிறகு தான் கடந்து போகும்..."-மகுடேஸ்வரன்

மணி


பனி உறைந்த குளிர்காலத்தில் சாலையில் ஒரு முதியவர் நடந்து கொண்டிருந்தார். "உங்களுக்கு இவ்வளவு மோசமான குளிரில் எப்படி நீங்கள் அந்த இடத்தை அடைவீர்கள் என்று ஒருவர் கேட்டார்.

"என் இதயம் முன்பே அங்கு சென்று விட்டது அதனால் மீதமுள்ள நான் அதை தொடர்ந்து செல்வது சுலபமாக இருக்கிறது என்றார் அந்த முதியவர்.

 நம் ஒவ்வொருவருக்குள்ளும் தடைகளை தகர்த்துக் கொண்டு முன்னேறி வெற்றியடைவதற்குரிய வியக்கத் தகுந்த ஆற்றல் நிறைந்திருக்கிறது. அது, சிரமங்களை எதிர்கொண்டு அவற்றை தகர்க்க கூடிய ஆற்றல். அந்த அளவற்ற ஆற்றலை ஒருங்கிணைக்கும் செயலை மட்டும் நாம் செய்தால் போதுமானது

-நற்காலை

ஜெயந்தன்


மக்கள் யாருக்கு வழி விடுகிறார்கள் என்றால், யார் அவர்களை இடித்து இழுத்து, பின்னே தள்ளி முன்னேறிச் செல்கிறார்களோ அவர்களுக்கு தான். உலகம் தன்னை அதட்டத் தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடிபணிகிறது. நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்ட தெரிந்தவர்களுக்கு தான் சிம்மாசனம் தருகிறது

-ஜெயந்தன்

Monday 2 January 2023

நாதாரி என்றால் மதுரைப்பக்கம் பன்றி மேய்க்கும் இனத்தவரை குறிக்கும் சொல்எடுபட்ட பயல் என்றால் பேதி நோய் வந்து பொட்டலமாகக் கட்டி எடுக்கப்பட்ட சடலம் என்று பொருள்.-ஜெயமோகனின் கட்டுரையில்

ஊகங்கள் வலை போல அதை வீசுபவர்கள் தாங்கள் விரும்புவதைப் பிடித்துக் கொள்கிறார்கள் -நோவாலிஸ்

நம்மிடமிருந்து பிரிந்து போனவர்களைப் போன்றே ஒருவரை எங்கேனும் பார்த்துவிட்டால்அவரை நாம்அள்ளியெடுத்துஅணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. நம் விழிகளில் தென்படும்மிகையன்பினை வியப்போடு காணும் அவர்க்கும் நம்மை என்ன செய்வதென்றுதெரிவதில்லை.-மகுடேசுவரன்

படித்தது


நிதானம் என்பது யாதெனில், 

ஒரு காலத்தில்  பொங்கி எழுந்ததையெல்லாம் இப்பொழுது 
புன்னகையுடன் கடப்பதே....!!!

-கார்த்திகேயன் சின்னசாமி

பெண்களின் முதுகு அவ்வளவு ரகசியமானது தான். அந்தப் பக்கம் அவர்கள் என்ன உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாத பிரபஞ்ச ரகசியமாய் இருந்தது

-தஸ்தாவேஸ்கி

தொல்காப்பியர்


நூல் மூன்று வகைப்படும்.
*தான் கேட்டதை,கண்டதை, அறிந்ததை எடுத்துச் சொல்வது முதல் நூல்

*வேறொரு அறிஞர் எடுத்துச் சொல்லிய கருத்துகளை ஒட்டி தனது கருத்துகளை இணைத்துப் படைப்பது வழிநூல்

*முதல் நூலையும் வழிநூலையும் தெளிவாக புரிந்துகொள்ள எளிதாய் ஆக்கி தருவது உரைநூல்

-தொல்காப்பியர்

Sunday 1 January 2023

janakiraman


Shu-Ha-Ri – மேதமையை நோக்கிய பயணம்.

ஷூ-ஹா-ரீ என்பதும் ஒரு ஜப்பானியத் தத்துவம். இதனை, ஒரு துறையில் திறன்கள் மற்றும் நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதற்கான படிநிலைகளாக ஜப்பானியர்கள் பின்பற்றுகின்றனர். இந்தத் தத்துவத்தை தேநீர் சடங்கு, தற்காப்புக் கலை, கைவினைத்திறன், கலை, வணிகம், வாழ்க்கை முறை, ஆன்மீக வளர்ச்சி என பலவித கற்றல்களிலும் டிஎன்ஏவாக ஜப்பானியர்கள் உட்புகுத்தியுள்ளனர்.

Shu-Ha-Ri, என்பது கற்றலின் மூன்று நிலைகளை கூறுகிறது, 1.கற்றுப்பழகுதல் (ஷூ - Shu), 2.சுயமாக மேம்படுதல் (ஹா - ha) மற்றும் 3.தனித்துவ அடையாளத்துடன் மேதையாதல் (ரீ - ri) என்ற மூன்று நிலைகள் அனைத்து விதமான கற்றலிலும் நாம் காணமுடியும். இதனை,  ஒரு பட்டாம்பூச்சியின் உருமாற்றத்துடன் ஒப்பிடலாம். முதலில் புழுவாக இருக்கும் பட்டாம்பூச்சி, பிறகு கூட்டுப்புழுவாக மாறி, அதற்கடுத்து பட்டாம்பூச்சியாக வண்ணமயமாக வளர்ந்து சுதந்திரம் பெற்று, பறந்து மகிழ்கிறது. 

முதல் நிலை Shu: செயலின் அடிப்படையை திரும்பத்திரும்ப செய்து பார்த்தல்:
-----------
ஒரு திறனையோ, பணியையோ குருவிடம் இருந்து கற்க ஆரம்பிப்போம். இந்த முதல் நிலையில், குருவிடம் மாணவர் தன்னை அர்பணிக்கவேண்டும். விசுவாசமாக இருக்க வேண்டும். பணியின் அடிப்படைகள், அதன் விதிகள், ஆகியவற்றை எந்தக் கேள்வியும் கேட்காமல், கீழ்படிந்து கற்றுக்கொண்டு, அதையே திரும்பத் திரும்ப செய்து பார்ப்பது அவசியம். 

ஒரே வேலையை திரும்பத்திரும்ப செய்வது, கடினமானதாக இருக்கலாம், சோர்வு தரலாம். ஆனால் நாம் பணிவுடன் நமக்கு செய்யக் கொடுக்கப்பட்டதைச் செய்ய அர்ப்பணித்தால் பயிற்சியின் போது, நமது மனம் அமைதியாகி ஒரு செயலின் அடிப்படை விதிகள், மந்திரம் போல மனதில் பதிந்துவிடும். 

இதனை, வண்ணத்துப்பூச்சியின் ஆரம்ப புழுவாக இருக்கும் கால கட்டம் எனலாம். அந்த பூச்சி நிலையில் ஒரு பட்டாம்பூச்சியைப் போல பறக்க முயன்றால், அது தோல்வியடைந்து தன்னைத்தானே அழித்துகொள்ளும். அந்த நேரத்தில் கூடுமானவரை இலைகளைத் திரும்பத் திரும்பத் தின்று, தன்னை பலப்படுத்திக்கொள்வது மட்டுமே அந்தப் புழுவின் வேலை.

இரண்டாம் நிலை: Ha - செயலில் பல்வேறு மாற்றங்களை அறியும் நிலை
------------
இந்த நிலையில், நாம் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படைகளை சிறப்பாகச் செய்ய முடிகிறது. ஆனால், நாம் அப்படியே தேங்கிவிடாமல், நாம் அறிந்த  அடிப்படை வடிவங்களை உடைத்து, புதுமைகளை செய்து பார்க்கவும், அதே பணியை மற்றவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை ஒப்புமைப்படுத்தி, அந்த பணியில் நமக்கான பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை அறிந்து, நமது பாணிக்கு ஏற்றவாறு நமது திறனை செதுக்கிக் கொள்ளவேண்டும். இந்த நிலையில் கெய்சனை பயன்படுத்தி, நாம் மேற்கொண்ட திறனில் தொடந்து மேம்பட முயற்சிக்கவேண்டும். 

இது வண்ணத்துப்பூச்சின் புழு வடிவத்திலிருந்து கூட்டுப்புழுவாக மாறும் நிலை. கூட்டுப்புழு காலத்தில் தான் வண்ணத்துப்பூச்சி தனக்கான அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்திக் கொள்கிறது. 

மூன்றாம் நிலை : Ri - சுதந்திரமாதல் மற்றும் மேதையாதல்
------------
இந்த கட்டத்தில், நமது திறன்கள் மற்றும் நுட்பங்களில் மட்டுமல்ல, நாம் மனதளவிலும் தெளிவுடன் இருப்போம். நம்மால் கற்றலையும், நம் ஆன்மாவையும் ஒன்றிணைத்திருக்க முடியும். நாமும் அந்த பணியும் வேறு வேறு அல்ல என்ற நிலையை எட்டியிருப்போம். குறிப்பிட்டத் துறையில் நாம் மாஸ்டர் ஆகியிருப்போம்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசை மேதைகளை எடுத்துக்கொண்டால், முதலில் அவர்கள் இசை கற்கும் போது, தமது குரு சொல்லித்தந்த அடிப்படைகளையே திரும்பத்திரும்ப செய்து பார்த்து பழகியிருப்பார்கள் இது முதல் நிலை (ஷூ). பிறகு வேறு பல இசை வடிவங்களை கற்று, அவற்றில் தமக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் தாமே சொந்தமாக இசையை படைப்பார்கள். தமக்கென சொந்தமாக ஒரு பாணியை உருவாக்கியிருப்பார்கள். இது இரண்டாம் நிலை (ஹா). இனி தம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றான பின், தமது மகிழ்ச்சிக்காக, ஆன்ம மேம்பாட்டுக்காக, இசையையும் தம்மையும் பிரிந்தறிய முடியாத நிலையை இப்போது அடைந்திருக்கிறார்கள். இது மூன்றாம் நிலையான (ரீ) யைக் குறிக்கும். இந்த நிலையில் இவர்கள் லெஜண்ட்களாக மாறியிருப்பார்கள். மற்றவர்களுக்கு குருவாக மாறியிருப்பார்கள். இந்த பரிணாம மாற்றத்தை விவசாயம் செய்வதிலிருந்து ராக்கெட் தயாரிப்பது வரை அனைத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

ஒருவர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கு இந்த மூன்று நிலைகளையும் கடந்தாக வேண்டும். இதில் குறுக்குவழி என்பதே இல்லை. விதிகளை மதித்து, அதனை செய்து பழகியவரே, விதிகளை மீறி, புதிய விதிகளை உருவாக்கும் உரிமை கொண்டவராகிறார். 

-janakiraman

ஜெயமோகன்


கதைகள் வாசிப்பவனுக்கு எதையும் சொல்வதில்லை, அவனது அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைத் தீண்டுகின்றன

-ஜெயமோகன்

ராஜா சந்திரசேகர்


பிழை திருத்தமுடியாத
என்னை
என்ன செய்யலாம்
மேலும் குறைகள் வராமல்
பார்த்துக்கொள்ளலாம்

-ராஜா சந்திரசேகர்