Sunday 29 October 2017

நூலேணி-2,நாகா

11.10.2017
*நூலேணி*   படி- 2
*நான் மலாலா*-2

மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுஃப்ஸை, ஒரு ஆசிரியராகவும், குருவாகவும் மலாலாவுக்கு கூடவே இருந்து உதவி செய்துள்ளார். ஜியாவுதீன் சிறுவனாக இருந்தபொழுது நடந்த நிகழ்ச்சிகளை குறிப்பிடும் போது, *"காலையில் அப்பாவுக்கு பால் தருவார்கள். அவர் உடன் பிறந்த சகோதரிகளுக்கு பால் சேர்க்காத தேநீர் மட்டுமே! முட்டை சமைத்தால் அது ஆண்களுக்கு மட்டும்தான். கோழி சமைத்தால் பெண்களுக்கு கழுத்துப்பகுதியும், இறக்கையும் மட்டுமே! ஆண்களுக்கு நல்ல சதைப்பற்றுள்ள மார்பு பகுதி. இப்படியான பாகுபாடுகளோடு வாழ்ந்து வருவதுதான் எங்கள் சமூகம். தன் சிறு வயதில் அப்பா பேசும்போது திக்குவார். தன் முயற்சியால் விடுபட்டு பின்னாளில் ஆசிரியர் ஆனார்.
பள்ளிக்கூடம் அமைத்து பாடம் சொல்லித்தர வேண்டும் என்பது அவரின் லட்சியம்"* மலாலா இப்படி நினைவு கூறுகிறார்.

அரசியல் நிகழ்வுகள்;

1947ல் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ஸ்வாட் சேர்ந்த போது இந்தப்பகுதி மக்களுக்கு  இதில் இஷ்டமே இல்லை. ஆனால் தொடர்ந்து பல ராணுவ புரட்சிகள் நடந்து ராணுவத்தளபதி 'ஜியா வுல் ஹக்' அதிபர் பதவியை கைப்பற்றினார். அவர், தேர்தல் மூலம் பிரதமரான ஜூல்ஃபிகர் அலி புட்டோவை கைது செய்து தூக்கிலிட்டார். பொதுமக்களுக்கு குரல் கொடுத்த முதல் பாகிஸ்தானிய தலைவர் புட்டோ என்பது மக்களின் கருத்து. அவருடைய மரணதண்டனை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு மோசமான நாடாக பாகிஸ்தான் காட்சியளித்ததால் அமெரிக்கா தனது உதவியை நிறுத்தி விட்டது. ஜியா,  நாட்டு மக்களின் ஆதரவை பெற பாகிஸ்தானை முழு முஸ்லிம் நாடாக மாற்ற, இஸ்லாமாக்கும் திட்டமொன்றை அறிவித்தார். எவ்வாறு தொழ வேண்டும் என அதிகாரம் செய்யும் சலாத் என்னும் தொழுகை குழுக்களை அமைத்தார். ஜியாவின் ஆட்சியில் பெண்களின் வாழ்வு மேலும் ஒடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் சிற்பி ஜின்னா, "உலகில் இரண்டு சக்திகள் உள்ளன. ஒன்று வாள். மற்றொன்று பேனா. இவை இரண்டையும் விட சக்தி வாய்ந்தது பெண்களின் சக்தி" என்பார்.

ஆனால், ஜியா ஆண்களை விட பெண்களின் சாட்சி பாதியளவே நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்ற இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வந்தார். பெண் வன்புணர்வு செய்யப்பட்டால், அவள் 4 ஆண்களை சாட்சிகளாய் கொண்டுவந்து நிரூபிக்கவேண்டும். இல்லையெனில் சோரம் போனதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைத்தனர். ஒரு ஆணின் அனுமதியில்லாமல் ஒரு பெண் வங்கிக்கணக்கைக் கூட தொடங்க முடியாது. சில விளையாட்டுகளை பெண்கள் விளையாட தடை விதித்தனர். பெரும்பாலான மத பள்ளிக்கூடங்கள் இந்த சமயத்தில்தான் துவங்கப்பட்டது. அனைத்து மதராஸா எனப்படும் பள்ளிக்கூடங்களிலும் தீனியாத் எனப்படும் மதத்தைப் பற்றிய கல்வி நிறுத்தப்பட்டு இஸ்லாமியத் எனப்படும் இஸ்லாமியக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
இன்றுவரை பாகிஸ்தானின் குழந்தைகள் இதைத்தான் படித்து வருகின்றனர். வரலாற்று புத்தகங்கள் பாகிஸ்தானை, "இஸ்லாமின் கோட்டை" என்று வர்ணித்து 1947க்கு முன்பே இந்த நாடு இருந்ததாக கூறி வரலாற்றை மாற்றி எழுதினார்கள்.

அரசியல் மாற்றம்;

மலாலாவின் அப்பாவிற்கு 10 வயதாக இருந்தபோது அதாவது 1979ல் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் வந்தனர். அதிபர் ஜியா அனைவருக்கும் அடைக்கலம் தந்தார். பாகிஸ்தானின் பிரதான உளவுத்துறை இராணுவத்தைச் சார்ந்தது. அதன் பெயர் ISI.  அது ஆப்கன் அகதிகளை எதிர்ப்பு வீரர்கள் அல்லது "முஜாகிதீனாக" பயிற்சியளிக்க தொடங்கியது. இந்த ரஷ்ய படையெடுப்பு சர்வதேச அளவில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜியாவை, சுதந்திரத்தை பேணுபவராக உலக அரங்கில் மாற்றியது. அமெரிக்கா மீண்டும் எங்கள் நண்பனாகியது. ஏனெனில், ரஷ்யாதான் அவர்களது முக்கிய எதிரி. பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் வந்து குவிந்தது. இவற்றோடு கம்யூனிஸ்ட் சிவப்பு படையை எதிர்க்க, ஆப்கனியர்களை பயிற்சியளிக்க ஆயுதங்களும் வந்திறங்கின.
மேற்கத்திய நாடுகள்,சோவியத் யூனியனிலிருந்து கம்யூனிஸம் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைவதை விரும்பவில்லை. நிறுத்த விரும்பின. அதேசமயம் சூடானிலிருந்து தாஜிக்ஸ்தான் வரை உள்ள முஸ்லீம் நாடுகள், தங்கள் சக முஸ்லீம் நாடு எதிரிகளால் தாக்கப்படுவதாக பார்த்தன. அரேபிய நாடுகள் முக்கியமாக சவூதி அரேபியா அமெரிக்கா அளித்தது போலவே பணத்தை கொட்டின. அங்கிருந்து தன்னார்வ வீரர்களும் வந்து குவிந்தனர். அதில் ஒருவர்தான் சவூதியின் கோடீஸ்வர்ர்களில் ஒருவரான "ஒசாமா பின் லேடன்".

பாஷ்டூன்களாகிய நாங்கள், ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ளவர்கள். சோவியத் படையெடுப்பின் போது மத உணர்வாலும், தேசிய உணர்வாலும் எங்கள் மக்களுக்கு ரத்தம் கொதித்தது. மசூதியில் எங்கள் மதத்தலைவர் ரஷ்யர்களை நாத்திகர்கள் என வெறுத்து ஒதுக்குவார். 'ஜிஹாத்' ஒரு நல்ல முஸ்லீமின் கடமை என்று கூறி, அதில் சேர மக்களை வற்புறுத்துவார். ஜிஹாத் எங்களது மதத்தின் ஆறாவது தூண் போல் ஆனது. இதுவரை நாங்கள் 5 கடமைகளைப் பற்றி அறிந்திருந்தோம்.
ஒரே கடவுள் மீதான நம்பிக்கை, நமாஸ் அல்லது ஐந்து முறை தொழுதல், ஜகத் அல்லது தானம் செய்தல், ரோஸா- காலையிலிருந்து சூரியன் மறையும் வரை ரமலான் மாதத்தில் நோன்பு இருத்தல் மற்றும் ஹஜ் - முஸ்லீம் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது யாத்திரை மேற்கொள்ளுதல்.
இங்கு ஜிஹாதை CIA தான் அதிகம் ஊக்குவித்தது என அப்பா கூறுவதாக மலாலா பதிவு செய்கிறார்.

வளர்த்த கடா மார்பில் பாய்வது போல், அமெரிக்கா, ரஷ்யாவை வீழ்த்த ஆப்கனியர்களையும், முக்கியமாக பாகிஸ்தானுடனும் விளையாடிய விளையாட்டு இன்று உலகிற்கே பெரிய தலைவலி, திருகுவலியாக பெரிதாகி நிற்கிறது எனலாம். "சுஃபி மொஹமது என்ற மெளலானா ஒருநாள் எங்கள் அப்பாவின் கிராமத்துக்கு வந்து, இஸ்லாமின் பெயரால் ரஷ்யர்களை எதிர்த்து போராட தன்னுடன் சேருமாறு இளைஞர்களை அழைத்தார். பலர் அவருடன் சேர்ந்தனர். இதே மெளலானாவின் குழுதான் பின்னாளில் ஸ்வாட்டின் தலிபானாக மாறும் என அப்பொழுது நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை." என்று ஆச்சரியத்துடன் பகிர்வது நமக்கு வியப்பை வரவழைக்கிறது!!

கனவு;

என்னுடைய அப்பா தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். பாகிஸ்தானில் உள்ள அத்தனை பிரச்னைகளுக்கும் கல்வியறிவு இல்லாததே மூல காரணம் என்று அவர் நம்பினார். அப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில்தான் ஜியா வுல் ஹக் ஒரு மர்மமான விபத்தில் இறந்தார். அதற்குப்பின் நடந்த பொதுத்தேர்தலில் பெனாசீர் புட்டோ நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். அனைவருக்கும் வருங்காலத்தைப் பற்றிய வெளிச்சமும்,நம்பிக்கையும் ஏற்பட்டது.

சிறந்த சிந்தனையாளர்

மலாலாவின் தந்தை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது 'சல்மான் ருஷ்டி' என்ற எழுத்தாளர் எழுதிய "சாட்டானிக் வெர்சஸ்" என்ற புதினம் வெளிவந்தது, உலக அளவில் பெரிய புயலைக் கிளப்பியது. மும்பையில் வாழ்வதாக கூறப்பட்ட ஒரு தீர்க்கதரிசியைப் பற்றிய ஒரு நையாண்டிக் கதை. ஏறக்குறைய அனைத்து முஸ்லிம்களும் அது இறையை பழிப்பதாக கருதியதால், எங்கும் அதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தானில் அந்தப்புத்தகம் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், ஒரு முல்லாவால் அதைப்பற்றி உருது நாளேடுகளில் எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரை அனைவரையும் தூண்டியது. புத்தகம் இறைத்தூதரைப் பற்றி அவதூறாக பேசுவதாகவும், அதை எதிர்ப்பது ஒரு நல்ல முஸ்லீமின் கடமை எனவும், தடை செய்யவும் கண்டனக் குரல் கிளம்பியது. இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு வன்முறையில் 5 பேர் இறந்தனர். ஈரானின் உச்சத்தலைவர் அயோத்துல்லா கோமெய்னி, ருஷ்டியை கொல்ல ஒரு ஃபத்வாவை (உத்தரவு) வெளியிட்டார். அப்பாவின் கல்லூரியில் இதைப்பற்றிய விவாதம் நடந்தபோது, அப்பா, நூல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று கருதினாலும், பேச்சுரிமையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர் என்பதால், "நாம் முதலில் நூலைப் படித்துவிட்டு, பின் அதற்கெதிராக நூலை கொண்டுவரலாம்" என்று வாதாடி இருக்கிறார். மேலும், "தனக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு நூலை பொறுத்துக்கொள்ள இயலாத அளவிற்கு பலவீனமானதா இஸ்லாம்? இல்லை என் இஸ்லாம் அவ்வாறு இல்லை" என்று முழங்கியதாக மலாலா தன் தந்தையைப்பற்றி பதிவு செய்திருக்கிறார்.
இதைப் படித்துக்கொண்டிருந்த போது நீண்ட யோசனைக்குப் போனேன், நண்பர்களே!
ஒரு ஆசிரியராக பின்னாளில் மாறி பள்ளிக்கூடம் நடத்துவதை லட்சியமாக கொண்டு பெண்களுக்கு அவசியம் கல்வியறிவு வேண்டும் என்ற நல்ல ஒரு சிந்தனையாளருக்கு பிறந்த இந்த மலாலா என்னும் குழந்தை, பிறக்கும் போதே கல்வி தாகத்தோடும், பொதுச்சேவை மனப்பக்குவத்தோடும் தானே பிறந்திருக்க இயலும், என்று!
கருத்தை எதிர் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பது புத்திசாலிகளின் தேர்வு. ஆனால், இன்றைய உலகில் இப்படியான புத்திசாலிகளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
எப்போதும் பெரிதாக சிந்தனை செய்ய வேண்டும் என்று கூறும் மலாலாவின் தந்தை ஜியாவுதீன் பின்னாளில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பள்ளியை ஆரம்பித்து,லஞ்சம் தலைவிரித்தாடிய அந்த சமயத்தில் அதை தர மறுத்து, உண்மைகளை மட்டும் பேசி, பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுத்த சமயத்தில் பிறந்த மலாலா, பள்ளியே வீடாகவும், விளையாட்டு கூடமாகவும் இருந்ததால் இயல்பிலேயே கல்வியில் நாட்டம் கொண்டவரானார்.

பெண்களின் நிலை:

மலாலா இப்படி பதிவு செய்திருப்பது நமது மனதை பிசைகிறது. "மிகவும் நெருங்கிய உறவுமுறை ஆண்களை தவிர்த்து, பெண்கள் அந்நிய ஆண்களிடம் பேசுவது எங்கள் சமூகத்தில் கூடாது. பெண்கள் ஆண்களை விரும்பி பார்வைகள் பரிமாறிக்கொள்வது ஓர் அவமானகரமான செயல் என கருதப்பட்டது. ஆனால், ஆண்களுக்கு இந்தக்கட்டுப்பாடு இல்லை. இரண்டு இனங்களுக்கிடையே உள்ள பகையை தீர்க்க ஒரு பெண்ணை தானம் தரும் பழக்கம் ஒன்று உண்டு! ஒரு சண்டையை தீர்க்க அதில் சம்பந்தமே இல்லாத ஒரு பெண் பலியாக்கப்படுவாள். நான் இதை எதிர்த்த போது, இதற்கும் மேலே ஆப்கானிஸ்தானில் பெண்கள் மிகுந்த துயரத்தை அனுபவிக்கின்றனர் என்று அப்பா எனக்கு விபரம் கூறினார். அந்த நாட்டை ஒற்றை கண்ணுள்ள ஒரு முல்லாவால் வழிநடத்தப்பட்ட "தாலிபான்" என்ற குழு கைப்பற்றியதாகவும், ஆப்கனில் உள்ள அனைத்து பெண்கள் பள்ளிகளையும் தீயிட்டு கொளுத்தியதாகவும் கூறினார். ஆண்களை நீண்ட தாடி வளர்க்கவும், பெண்கள் அனைவரும் 'புர்கா' அணியவும் வற்புறுத்துவதாகவும் கூறினார். "புர்கா அணிந்தால் ஓர் அடுப்பினுள் அமர்ந்தது போலிருக்கும். தாலிபன்கள், பெண்கள் சிரிப்பதைக் கூட தடை செய்திருக்கிறார்கள். பெண்கள் வெள்ளைநிற செருப்பு அணியக்கூடாது, ஏனெனில் அது ஆண்களுக்கானது. நகங்களில் சாயம் பூசியதற்காக பெண்களை அடித்து சிறையில் பூட்டுவர்" இப்படி எல்லாம் அப்பா சொல்ல கேட்கும் போது எனக்கு மெய் நடுங்கும். நான் நிறைய புத்தகங்கள் வாசிப்பதால் "பறவை போல் நான் சுதந்திரமானவள்" என்ற எண்ணம் எனக்கு உண்டு.
ஆனால், மலைகளின் பின் திரளும் மேகங்கள் எனக்குத் தெரியவில்லை. எங்களுக்கு மிக அருகில் தாலிபன்கள் நெருங்கி விட்டிருந்தனர்" என்று சற்றே இறுக்கத்தை கொண்டு வருகிறார் மலாலா!

தாலிபன்களின் கொடூரங்கள் மிகவும் கோரமானவை! எப்படி எதிர் கொண்டாள் "மலாலா".
அடுத்த "வெள்ளிப்பதிவில்" வாசிப்போம்!
அன்புடன்,
நாகா.
11.10.2017

மனுஷ்

எனக்குத் தெரியவில்லை
எனது சுதந்திரத்தை வைத்துக்கொண்டு
என்ன செய்வதென்று.
அது இருக்கிறதென்று ஒரு
நிம்மதியைத் தவிர
-மனுஷ்யபுத்திரன்

நூல்

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:* 3⃣7⃣

*நூலின் பெயர்:* கறுப்பு மலர்கள்
*நூல் ஆசிரியர் :* நா காமராசன்

*வெகுமக்களின் ரசனைக்கும் துய்ப்பிற்கும் புதுக்கவிதைகள் வந்து சேராதிருந்த காலத்தில் தனி கவனத்தை ஈர்த்த நூல் ‘கறுப்பு மலர்கள்’...*

*அதிர்ந்து பேசக்கூடிய வானம்பாடிகளின் கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிந்தன கறுப்பு மலர்கள்...*

*இந்த நூல் கவிதைகளையும், சில வசன கவிதைகளையும உள்ளடக்கியது..*

*இருபதாம் நூற்றாண்டு தமிழ்கவிதைக்கு புது ரத்தம் பாய்ச்சிய  நா.காமராசனின் உன்னத படைப்பு கறுப்பு மலர்கள்..*

*திருநங்கைகளை , நீக்ரோக்களை கருப்பொருளாக்கி பரவலாக கவனத்தை ஈர்த்த கவிதை நூல் கறுப்பு மலர்கள்..*

*" வானவில் ' என்ற தலைப்பிலான ஒரு கவிதை போதும் கறுப்பு மலர்களின் வாசம் பரப்ப..*

*" இந்தப் பொல்லாத* *வானம்*
*மழையையும் தூறிக் கொண்டு*
*துணியையும்* *உலர்த்துகிறது ’’*

*" இயற்கை*
*ஒரு தூரிகையை* *சிருஷ்டிக்க எண்ணி*
*ஒரு ஓவியத்தை* *சிருஷ்டித்தது*
*அது தான் வானவில் "*

*" சொர்க்கத்திலிருந்து* *வீசியெறியப்படுகிற*
*துரும்பு கூட*
*அழகாகத்தான் இருக்கிறது "*

*இப்படி அனைத்து கவிதைகளையும் படிம குறியீடுகளால் அலங்காரம் செய்திருப்பார் நா காமராசன்..*

*சிறந்த நூலுக்கான யுனெஸ்கோ விருது பெற்ற பெருமையும் உடையது கறுப்பு மலர்கள்..*

*கண்ணதாசனின் விமர்சனம் இந்த நூலின் கனத்தை, தரத்தை அதிகப்படுத்துகிறது..*

*வாசியுங்கள்..*

*தமிழின் உன்னத படைப்பை வாசித்த பெருமை அடையுங்கள்..*

*பக்கம்:*96
*விலை:* ரூ 70
*வெளியீடு:* கவிதா பதிப்பகம்

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

சதிஷ்

*புரிந்துகொள்பவராக இருப்பது தொடர்பாக*

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவருக்கு
ஒவ்வொரு நாடகத்திலும் கடைசி இருக்கைதான் ஒதுக்கப்படுகிறது

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒவ்வொரு விவாதத்திலும் கடைசியாக தன் தோல்வியை
மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறார்

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒருவர் தாமதமாக வருவதைப்புரிந்து கொள்கிறார்
ஒருவர் சீக்கிரமாக வருவதைப்புரிந்து கொள்கிறார்
ஒருவர் வராமலேயே இருப்பதையும் புரிந்துகொள்கிறார்
அவர் ஒவ்வொருவருக்கும் எல்லையற்ற தேர்வுகளை அளிக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவர்கள்
தன் கைகளை
உங்கள் மேசை மேல் வைக்கிறார்
நீங்கள் அதன் அன்பின் மிகுதியால் ஒரு சுத்தியால் அடிக்கிறீர்கள்
அது அவரால் புரிந்து கொள்ளப்படுகிறது
வலியைப்புரிந்துகொள்தல் பற்றி அவருக்கு சில தீர்க்கமான புரிதல்கள் இருக்கின்றன.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவருக்கு
ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது
அது நிர்த்தாட்சணமாக் மறுக்கப்படுகிறது
ஒரு மறுப்பு என்பது எப்போதும் புரிந்துகொள்வதற்கானது
என்பதில் அவர் நிச்சயத்தோடு இருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரால்
தனக்கு ஏன் ஒரு விலையுயர்ந்த பரிசு தரப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதில்லை என்றபோதும் அதற்குத்தான் தரவேண்டிய  விலையை அவர் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
ஒரு அந்தரங்கமான தருணத்தில்
ஒரு அந்தரங்கமான உணர்ச்சியால் அவமதிக்கப்படுகிறார்
அதைப் புரிந்து கொள்வது அவ்வளவு புதிரானது
அவ்வளவு கடினமானது
ஆயினும் அவர் அதனைப் புரிந்து கொண்டவராகவே புன்னகை செய்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரிடமிருந்து
எதையும் மறைக்க வேண்டியிருப்பதில்லை
எதற்காகப்பயப்பட வேண்டியதுமில்லை
ஒரு மெழுகு பொம்மையிடம் ஒரு சுரோவியத்திடம்  பாதுகாப்பாக இருப்பது போல் நாம் அவரிடம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

எல்லாவற்றையும் புரிந்து கொள்பவரை
எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு பட்டியலில் இருந்து நீக்கலாம்
ஒரு பட்டியலில் சேர்க்கலாம்
அவருக்கு ஒரு பட்டியலைப் புரிந்துகொள்வதைப்போல சுலபமானது வேறு எதுவுமில்லை.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவர்
உங்களுக்கு எவ்வளவோ சுதந்திரம் தருகிறார்
அவர் நீங்கள் எப்படி வளர்ந்தீர்களோ அப்படியே இருக்கவிடுகிறார்
நீங்கள் எதையுமே புரிந்துகொள்ளாதவராக இருப்பதன் மீது அவர் எந்தப்புகாருமற்று இருக்கிறார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்பவரைத்தான்
இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ளும்படி வற்புறுத்துகின்றோம்
அவர் எப்போதும் புரிந்துகொள்பவராக இருப்பது குறித்து சில நேரம் களைத்துப்போகிறார்
அப்போது புரிந்து கொள்பவராக இருப்பதன் உன்னதம் பற்றி
அவருக்கு மேலும் கற்றுத்தருகிறோம்.

-மனுஷ்யபுத்திரன்

தங்கம்

*பிலிப் குசோய்சோன்*

🔥பிரேஞ்சுக்காரர் இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்தவர்.

🔥பலரும் நீந்திக் கடந்திருக்கிறார்கள். இதில் என்ன வியப்பிருக்கிறது.

🔥வியப்பு இருக்கிறது. ஏனேன்றால் பிலிப்பிற்கு கால்களும் கிடையாது, கைகளும் கிடையாது.

🔥2010 ஆம் ஆண்டு செபடம்பர்-18ஆம் நாள் இங்கிலீஷ் கால்வாயை 14 மணிநேரத்திற்குள் கடந்து சாதனை புரிந்தார்.

🔥கால்வாயை கடந்ததும் பிலிப் சொன்னார்.
*நீந்தும் போது வலி இருந்தது. இருந்தாலும் நீந்திக் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.*

*கைகளும் கால்களும் இல்லாமல் கடந்த கால்வாய். உண்மையில் நீந்தியது எது? நம்பிக்கை தானே. யார் சொன்னது, கால்கள் மட்டும் தான் நடக்கும், சிறகுகள் மட்டும் தான் பறக்கும் என்று?*

*சிறகுக்குள் வானம்*

வானம் மிகப் பெரிது
சிறகு மிகச் சிறிது
அதனால் என்ன?
அவரவர் வானம், அவரவர் சிறகு.

எழத் துணியும் எதையும்
இழுத்துப்பிடிக்கிறது பூமி...
மீறி எழுவதே
மேலே பறக்கிறது...

பறக்கும் போது
சிறகும் வானும் வேறுவேறல்ல.
வானிலிருக்கும் சிறகுக்குள்ளும்
வானம் இருக்கிறது.

நிலவி்ல் மனிதனின் சுவடுகள்
செவ்வாயில் அவனது சிறகுகள்.
மனிதன் பறப்பதை
அண்ணாந்து பார்த்தன
ஆகாயப்பறவைகள்...

பறவைகளாயினும்,
மனிதர்களாயினும்,
சிறகுகள் வெறும்
இறகுகள் அல்ல.

   -ஆர்.பாலகிருஷ்ணன்

ச.தமிழ்ச்செல்வன்-தங்கத்தின் பதிவு

*புதுமைப்பித்தனோடு சகவாசம் ஏற்பட்டபிறகு, தரையோடு பதித்த அடுப்பும் பாட்டியும் நினைவுக்கு வரும்போதெல்லாம்  சங்கிலித்தொடர் போல செல்லம்மாள் கதை வந்து நின்று விடும். செல்லம்மாளுக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் அல்லவா? அடுப்போடு தொடர்புடைய கதை அது. காலையில் பிரம்மநாயகம் பிள்ளை கடைக்குகிளம்பும்போது செல்லம்மாள் உடம்புக்கு முடியாமல் கிடப்பாள். உட்காரக்கூட முடியாமல் நடுங்கும் அவளுக்கு வைத்தியங்கள் செய்து அவளை படுக்க வைத்துவிட்டு வேலைக்கு போவார். மாலையில் திரும்பி வந்து பார்த்தால்... "அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது... கண்கள் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு. சுவாசம் மெல்லிய இழை ஓடிக்கொண்டிருந்தது.*

*நிமிந்து பின்புறமாக புழக்கடைக்குச் சென்றார். போகும்போது அவர் பார்வை சமையற்கட்டில் விழுந்தது உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது. "வாசிக்கும் போதெல்லாம் கண்ணீர் வெடித்து வரும் இடம் இது. கதையின் அடுத்த காட்சியில் செல்ம்மாள் இறந்து போவாள். சாகும் நிமிடம் வரை உயிருக்குப் போராடும் சமயத்திலும்கூட எனக்குக் கண்கள் கசியவில்லை. 'வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது' என்கிற வரிதான்... அந்த வரியில் என் அம்மாவும் வாழ்கிறார். எங்கள் அம்மா படுக்கையில் வீழும் வரை சமைத்து முடித்த உணவு வகைகளை வரிசையாக அடுக்கி வைப்பார். என் அம்மா என்றில்லை எல்லா அம்மாக்களுமே இப்படித்தான். பல வீடுகளில் பார்த்திருக்கிறோமே. எங்க அம்மா சாதம் வடித்த பெரிய பாத்திரத்துக்கு மட்டும் துடைத்து மூணுபக்கமும் திருநீறு பூசிவிடுவார்கள். அடுப்படிக்கே ஒரு தெய்வீகக்கலை சட்டென வந்துவிடும். ஒவ்வொரு மதிய உணவு தயாரிப்பின்போதும் இதைப் பார்க்கலாம்.  பாத்திரங்களின் சைசும் பெரிதிலிருந்து சிறிது நோக்கி இந்த வரிசை சரியாக இருக்கும். எல்லா அம்மாக்களுமே புதுமைப்பித்தனின் செல்லம்மாக்கள்தான் என்று ஒரு வரி மனசில் ஓடும். நம்மையறியாமலே கன்னங்களில் நீர் வழியும்.*

-ச.தமிழ்ச்செல்வன்.

தனிக்குடித்தனம்

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

தளும்பத் தளும்ப பால் டம்ளரை நீட்டிய
மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து
கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன்.
“பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?’

“என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம்
போயிடலாம்!’

“என்ன சொல்றே நீ?’

“ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட
வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும்
வர்றதில்லை.’

“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம்கூட ஆகலை.
அதுக்குள்ளாற நாம தனிக்குடித்தனம் போனா,
பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க?’

“என்ன வேணும்னாலும் நினைச்சுட்டுப் போகட்டும்’

“கொஞ்ம் பொறுத்துக்க பாக்கியம்’

“என் கஷ்டத்தை புரியாமப் பேசாதீங்க!’

“சரி, இதுதான் உன் முடிவுன்னா இன்னிக்கே
ஆபீஸ்ல டிரான்ஸ்ஃபர் அப்ளிகேஷன்
கொடுத்திடறேன், போதுமா?’

“முதல்ல அதைச் செய்யுங்க. ஒவ்வொரு மகனுக்கும்
கல்யாணம் செய்யும் போதெல்லாம் வர்ற மருமகள்
எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு நினைக்கிறேன்.
ஊஹூம்…! ஏன், போன மாசம் நம்ம கடைசி
மகனுக்கு கல்யாணம் பண்ணினோம். அந்தப்
பொண்ணாவது எனக்கு கூடமாட உதவியா
இருப்பான்னு பார்த்தா, அவளும் மத்த இரண்டு
மருமகளாட்டம், ஜம்முன்னு வேலைக்குக் கிளம்பிப்
போயிடறா. வயசான காலத்திலே நான் ஒருத்தியே
வீட்ல வேலைன்னு அல்லாட வேண்டிக் கிடக்குது.
அதனால்தான் நாம தனிக்குடித்தனம் போகலாம்னு
சொன்னேன். என்னை தப்பா நினைக்காதீங்க.’
-
மனைவியின் பேச்சில் நியாயம் இருப்பதைப்
புரிந்து கொண்டார் பாண்டியன்.
-
————————————-
> ஜெயா மணாளன்
நன்றி: குமுதம்