Tuesday 28 November 2023

மனிதனுடைய கௌரவம் அவன் நிழல் மாதிரி. தினசரி வாழ்க்கையின் வெளிச்சம், நடைமுறை அவன்மீது பட்டு ஒரு கௌரவ நிழலை அவனுக்குத் தரும். அவனோடு பிரியாது வரும். அந்த நிழல் மனிதனில்லை. அதற்கு வலியில்லை. அது உயிரில்லை. ஆனால் அது கூடவே வரும். தனியே இருட்டில் கௌரவம் ஏதுமில்லை. நாலு பேர் கண் வெளிச்சம்பட, பின்னால் அடைகாத்து நிற்கும். நிழல்கள் மட்டும் யுத்தம் செய்யும்-பாலகுமாரன்

ஒருவர் அடுத்தவரை ஏதேனும் ஒரு வேலையைச் செய்ய வைப்பதற்கு எத்தனை வழிகள் உள்ளன என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கு ஒரே ஒருவழிதான் உண்டு. அச்செயலைச் செய்வதற்கு அவர்களை விருப்பம் கொள்ளச் செய்வதுதான் அது.-டேல் கார்னகி

Sunday 26 November 2023

தெரியும் என்கிற பிரமையை முதலில் ஒழி. தெரியாது என்கிற தெளிவோடு இரு. இதுவே தெரிந்து கொள்ளலைச் சுலபமாக்கும்-பாலகுமாரன்

யுவன்

தன்னிடம் ரகசியங்கள் எதுவுமில்லை என்று திறந்து கிடக்கும் வெளியைப் பார்க்கும் போது மனம் வெகுவாகக் கனிந்து விடுகிறது. கட்டங்கரையில் அங்கங்கே முளைத்திருக்கும் சிறுபுற்கள், மேலே ஒன்றுமில்லாவிட்டாலும் தரை தனக்குள் ஏதேனும் ரகசியங்களை புதைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிக்க வேர்களைஅனுப்பி இருப்பதாக பாவனையில் இறுமாப்பாக அசைகின்றன.

என்னுடையது புல்மனமல்ல. மனித மனம். பரந்தவெளியைப் பார்க்கும் போது நானும் அதே அளவு விஸ்தாரம் அடைகிறேன்

-யுவன் சந்திரசேகர்

Saturday 25 November 2023

எனக்கு வீம்பு அதிகம்என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.இல்லவே இல்லைஎன்ன செய்வதென்று தெரியாதஎன் இயலாமைக்குநான் அணியும் முகமூடி அது..!!-மனுஷ்ய புத்திரன்

அழுகை


அழுகை

அழுகை என்பது மகிழ்ச்சியை விட ஆழமானது போல.
மிகப்பிடித்தவர்கள் அழவைத்து செல்கிறார்கள்.அவர்கள்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாட்டில் அழுகையைப்போல நம்மை திருப்தியடையச் செய்வதும் வேறில்லை.

அழும்போது நாம் சராசரி ஆகிவிடுகிறோம்.பாரம் இழந்த இலை காற்றில் மிதந்திறங்குவது போல நமது தன்னிரக்கத்தின் மீது லேசான உடலாய் வீழ்கிறோம்.
தன்னிரக்கம் என்பது நமது பால்யத்திலிருந்து நாமே சேகரித்துக்கொண்ட நமது சிறுவயது புகைப்படங்கள்போல.
அங்கே நம்மைத் தேற்றுகின்ற தூதனுக்கு நம் முகமே இருக்கிறது.

தீவிர வைராக்கியங்கள் பிறக்கின்ற அழுகைகள் இருக்கின்றன.அவை கதவுகளை அறைந்து சாத்துபவை.பிறகு,இருளில் வியர்வையில் தனிமையில் நம்மை விட்டுச்செல்பவை.

இன்னும் சில அழுகைகள் விடுதலை தருபவை.அவை உறவில் ஒருமுறை மட்டுமே நிகழ்பவை.அவற்றிற்கு அழுகை என்றுகூட பெயரிட முடியாது.
சாவிற்கு முன் தரப்படும் ஆழ்ந்த முத்தத்தைப்போல.அங்கே எந்த சூளுரைக்கும் வேலையில்லை.
ஆனால் இனியொருபோதும் இருவருக்கும் பொதுவான ஒரு மழைக்காலம் அங்கே நிகழ்வதேயில்லை.

கண்ணீரைத் துடைத்தபடி செல்கின்ற மனிதர்களைப் போல
ஆழமானஉணர்வு ததும்பிய, அழகியமுகங்கள் வேறெங்குமில்லை.
இப்போதுதான் எழுதிமுடித்த சிறுகதையின் மை உலராத கடைசிவார்த்தை அவர்கள்.

-படித்தது

Wednesday 22 November 2023

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அனைத்திந்திய பணிகள் சட்டம் 1951ல் திருத்தம் கொண்டு வந்து இந்திய வனப்பணி (I.F.S) எனும் பிரிவு வந்தது.சூழலியல் குறுத்து பல்வேறு அரும்பணிகளை செய்துள்ளார்.

janakiraman


"என்னைப் போலவே அனைவரும்..."

சுற்றி இருப்பவர்கள் யாரும் சரியில்லை, என்னை யாருமே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள், என்னை விட மற்றவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நமக்கு வாழ்வில்,  சில தொய்வான நாட்களில் தோன்றக்கூடும். அப்போது "என்னைப் போலவே" எனும் சோதனையை செய்து நாம் செய்து பார்க்கலாம்.

அது போன்ற தருணங்களில், மக்கள் கூட்டம் அதிகம் புழங்கும் வீதிக்கு வரனும். ட்ராஃபிக் சிக்னல் அருகே வருவது நல்லது. அந்த வீதியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு, அங்கு இருக்கும் யாரையாவது ஒருவரை கவனிக்க ஃபிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அவரைப் பார்த்து, உங்க மனதுக்குள் அவரைப் பற்றி அனுமானிக்க ஆரம்பியுங்கள். "என்னைப் போலவே இவரும் தோல்வியை விரும்புவதில்லை", "என்னைப் போலவே இவரும் மற்றவரின் அன்பையும் ஆருதலையும் விரும்புகிறவர்", "என்னைப் போலவே இவருக்கும் இழப்புகள் நடந்திருக்கும்" என சொல்லிக்கொள்ளுங்கள். நிச்சயம் அந்தத் தருணத்தில் அந்த அநாமதேய மனிதரின் மனதில் ஓடும் எண்ணத்தை நம்மால் மிகச சரியாக அறிந்து கொள்ளமுடியாது என்றாலும் மேலே கூறியவை அவருக்கும் பொருந்தும். யாரென்றே தெரியாத மனிதருக்கும் நமக்கும் பொதுவான விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன. மற்றவர் குறித்து நிறைய விஷயங்கள் நமக்கும் தெரிகிறது. மனிதர்கள் அனைவரும் தம்மை யாரும் வெறுத்து ஒதுக்கக்கூடாது என்றும், மகிழ்ச்சியுடன் இருக்கவும் விரும்புகின்றனர்.

இதனை புரிந்துகொள்ளும் போது, நமது தற்காலிக விரக்தியும் வேதனையும் இழப்பும் இயல்பானவை என புரிந்து மனம் அமைதியுறும்.

- From the book, "Welcoming the unwelcome" by, Pema Chödron.

வீடு என்பது விடுதலையான இடம். எந்த இடத்தில் கால் நீட்டி மல்லாந்து கவலையின்றி சாய முடியுமோ, அசந்து தூங்க முடியுமோ, பயமின்றி உலவ முடியுமோ அதுவே வீடு. வீடு என்பது விடுதலையான இடம்.-பாலகுமாரன்

Sunday 19 November 2023

பவர் பிளே


Power Play

பவா் பிளே என்று அழைக்கப்படும் களத்தடுப்பு விதிமுறைகள் முதன்முறையாக 1981ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அறிமுகப்படுத்த காரணம் 1980ம் ஆண்டு இறுதிப்போட்டியில் நடந்த ஒரு சம்பவமே.

மெல்போ்னில் நடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு கடைசிப்பந்தில் நான்கு ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. மேற்கிந்திய அணியின் தலைவா் கிளைவ் லொயிட் ஒருநாள் போட்டியில் யாரும் உபயோகிக்காத ஒரு யுத்தியை பயன்படுத்தினாா். இறுதிப்பந்துக்கு சகல களத்தடுப்பாளா்களையும் எல்லைக்கோட்டுக்கு அருகே அனுப்பினாா். மெல்போ்ன் மைதானம் மிகப்பொியது. சிக்ஸா் அடிப்பது சிரமம். அதையும்விட சிரமமானது எல்லைக்கோட்டு வீரா்களை தாண்டி பௌண்டாி அடிப்பது. மைக்கல் ஹோல்டிங் வீசிய பந்தில் இங்கிலாந்து அணித்தலைவா் மைக் பிரேயாா்லியினால் ஒரு ஓட்டமே பெற முடிந்தது. மேற்கிந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால் இறுதிப்பந்தில் நடந்த நிகழ்வால் போட்டியின் சுவாரசியமே குறைந்தது.

போட்டி ஏற்பாட்டாளா்கள் இச்சிக்கலை தீா்க்க புதிய வழிமுறை ஒன்றைத்தேடினா். அவா்களது கண்டுபிடிப்புதான் field restrictions எனப்படும் களத்தடுப்பு விதிமுறைகள். இதன்படி ஆடுகளத்தை(pitch) சுற்றி 30 யாா் ஆரை(radius) கொண்ட வட்டம் ஒன்று வரையப்படும். போட்டியின் முதல் 15 ஓவா்களுக்கு இந்த வட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளா்களே அனுமதிக்கப்படுவா். 15இலிருந்து 50 ஓவா் வரைக்கும் இந்த வட்டத்திற்குள்ளே கண்டிப்பாக நால்வா் இருக்கவேண்டும்.

போட்டியின் முதற் 15 ஓவா்களுக்கு இருவா் மட்டுமே வட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடலாம் என்ற விதி ஒருநாள்போட்டியின் சுவாரசியத்தை அதிகாிக்க செய்தது. முன்னா் நடந்த போட்டிகளில் ஆரம்ப ஆட்டக்காரா்கள் முதல் 15–20 ஓவா்களில் மெதுவாக ஆடி விக்கெட்களை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தனா். புதிய விதி கிாிக்கெட்டை விறுவிறுப்பாக்கியது. வட்டத்திற்குள் இருக்கும் வீரா்களை தாண்டி அடித்தால் 2 அல்லது 4 ஓட்டங்களை நிச்சயம் பெறலாம் என்ற நிலை வந்தது.

1981இலிருந்து 1992 வரை ஆஸ்திரேலிய உலகத்தொடா் கோப்பையில் இருந்த இந்த விதி 1992 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து சகல ஒருநாள் போட்டிகளுக்குமான விதியாக மாறியது.

1992 உலகக்கோப்பை போட்டியில்தான் முதன்முறையாக அதிரடி ஆட்ட வீரா்கள் ஆரம்ப வீரா்களாக களமிறங்கினா். நியூசிலாந்தின் சாா்பாக மாா்க் கிரேட்பட்ச் இங்கிலாந்தின் சாா்பாக இயன் போத்தம் போன்றோா் முதல் 15 ஓவா்களில் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிக்கவென்றே ஆரம்ப வீரா்களாக களமிறக்கப்பட்டனா்.

2005இல் field restrictions எனப்படுவது பவா்பிளே என பெயா்மாற்றப்பட்டது. ஐஸ் ஹாக்கியில் பயன்படுத்தும் பவா்பிளே என்ற சொல் இங்கு பயன்படுத்தப்பட்டது.

2005இலிருந்து பவா்பிளே விதிகள் Trial&Error முறை மூலம் பல மாற்றங்களை பெற்றள்ளது

-படித்தது

உலகில் முதல் ஒரு வழிச்சாலை லண்டனில் உள்ள அல்பமாரேல் சாலை.1833ல் தொடங்கி ராயல் நூலகத்தில் மைக்கேல் ஃபாரடே தனது அறிவியல் எழுச்சி உரைகளை நிகழ்த்தினார்.மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஞாயிறுகளின் மதியம் அச்சாலை ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டது-ஆயிஷா நடராசன்

புரட்சிக்காரன் என்பவன் பழி தீர்த்துக் கொள்ளும் பயங்கரவாதி அல்லன்; அவன் பிறக்கப்போகும் சமுதாயத்தின் மருத்துவச்சி-பகவதிசரண் ஓரா(பகத்சிங்கின் தோழர்)

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அது குறைய குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. ஹென்றி மில்லர்

Friday 10 November 2023

ஒரு மழைக்கும்இன்னொரு மழைக்குமிடையில்தன்னைஉலர்த்திச் செல்கிறதுவெயில்-கூடல்தாரிக்

நக்கீரன்


தென் அமெரிக்காவின் ஏண்டிஸ் மலைத் தொடரில் வசிக்கும் சாமன் என்கிற தொல்குடி மூதாட்டியை சிலர் தேடி செல்கின்றனர். அவரை சந்தித்ததும் உலகம் அழியப் போகிறதா தாயே? என்றனர்..

 அதற்கு அவர் சிரித்துக் கொண்டு உலகம் எப்படி அழியும்? அதற்கு ஒரு ஆபத்தும் இல்லை. மனிதர்களாகிய நாம் தான் ஆபத்தில் இருக்கிறோம். நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் பூமி நம்மை ஒட்டுண்ணிகளை உதறுவது போல் உதறிவிட்டு போய்விடுவாள் என்றார்.

- சூழலியலாளர் நக்கீரனின் கட்டுரையிலிருந்து

Thursday 9 November 2023

மிக  மிக அழகென்றாலும் தரையில் தத்திக் கொண்டிருக்கும் பறவைகள், ஒரே சமயம் வெறுப்பையும், பரிதவிப்பையும் கோரி நிற்கிறது-படித்தது

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்கிறது பழமொழி. விருந்தாளிகள் மேல் தலைநாள் உள்ள ஆர்வம் மறுநாள் இருப்பதில்லை. அது தேய்ந்து கொண்டே போகிறது. முதல் நாள் பரிமாறி விட்டு அழைப்பார்கள். மறுநாள் அமர வைத்துப் பரிமாறுவார்கள். மூன்றாம் நாளிலோ தட்டில் முகம் தெரிந்து விடுகிறது. நாம் அதிலேயே சீவிச் சிங்காரித்துக் கொள்ளலாம்-இசை

இரவின் ஆழ்ந்த அமைதியோடு வீடு ஒரு மாபெரும் கொள்கலனாகியிருந்தது’. -உமா மகேஸ்வரி

தேவன்


தேவன் எழுத்துகளில் சில துளிகள்
------
வண்டில பிரச்சனை.. ஏதாச்சும் ஆயில் இருக்கா ?

என்ன ஆயில் ?

விளக்கெண்ணெய் இருந்தாகூட போதும்

விளக்கெண்ணெய் இல்ல.. ஆஸ்பத்திரியில பேதி மாத்திரை கொடுத்தாங்க. விளக்கெண்ணெய்க்கு பதிலா இதை பயன்படுத்தலாமா ?

-------

சிஐடி சந்துரு தனி ரகமானவன் மட்டுமல்ல தன்னந்தனி ரகமானவனும்கூட

--------

கார்ல நாய் இருக்கா பாருங்க

நம்ம ரெண்டு பேரைத் தவிர வேறு நாய் இல்லையே

------

Tuesday 7 November 2023

குளிரும்போது முற்றிலுமாக குளிரில் இரு;வெப்பமாக இருக்கும் சமயம் முழுமையாக வெப்பத்தில் ஊடாகிச் செல்.மாற்றமுடியாதவைகள் எல்லாம்,என்னென்னவாக இருக்கின்றனவோ அவற்றுடன் நாம் முழுமையாக ஒன்றிவிட்டால் நாம் அவற்றின் அடிமையாகாமல் எஜமானன் ஆகிவிடுவோம்-டோஜான்

சுதர்சன்


லியோவில் ஒலிக்கும், "தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்" பாடலில் வருகிற, " IR8 நெல்லைப் போல அவசரமா சமைஞ்ச அய்த்தை மக" வரிகளின் Subtitle பார்த்தபோது தான் IR8 நெல் வகை என்று தெளிவாக அறிந்ததாகச் சிலர் சொன்னார்கள். அந்த நெல்வகை ஏன் உவமைக்கு அதிகமா பயன்பட்டது?

முன்னர் அம்மா விவசாயம் செய்த காலத்தில் மொட்டைக் கறுப்பன் நெல் போடுவார்கள். நல்ல பெரிய சிவப்பு அரிசி. ஆனால் ஆறு மாதம் ஆகும். ஒவ்வொருவரும் தேவையான நெல்வகையை போட்டுக்கொள்வார்கள். அதேநேரம் இந்த IR8 வகை நெல் அதைவிட குறைவான காலத்தில் விளைச்சல் தரும். வெள்ளை. 

IR8 நெல்வகை பற்றி நிறைய பாடல்களில் வந்திருக்கும். அண்டங்காக்க கொண்டக்காரி பாட்டில் கூட வைரமுத்து IR8 பல்லுக்காரி என்று எழுதியிருப்பார். IR8 நாத்துக்கட்டை என்று மஜாவில் ஒரு பாடல் இருக்கிறது. அதற்கு முதலும் நிறைய பாடல்களில் இந்த நெல்வகை வரும். 

காரணம் எழுபதுகள், எண்பதுகள் என்று இந்த நெல்வகை நிறைய விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டெயருக்கே நல்ல விளைச்சல் தந்த நெல்வகை. பஞ்சத்திலிருந்து மீட்ட நெல்வகை என்று சொல்வார்கள். நல்ல ஹைபிரிட் இனம். அந்தக் காலத்தில் இந்த நெல்வகை பிரபலம் என்பதால் நிறைய கிராமிய பின்புலம் உள்ள பாடல்களில் வரும். 

வைரமுத்து இந்தப் பாடலில் இதை அழகா கிராமியச் சூழலுக்கு கையாண்டிருப்பார்.

-சுதர்சன்

Friday 3 November 2023

வண்ணதாசன்


வாசலில் அடித்துக் கொண்டிருந்த வெயில் போராவும் ஒரு உருவம் போலத் திரண்டு வந்து அவன் தோளில் கை வைத்து, 'கோமு அக்கா'.
 என்று கூப்பிடச் செல்வது போல் இருந்தது.

'கோமு அக்கா'. முதல் தடவையை விட இரண்டாம் தடவை உரக்க கூப்பிடும்போது,உள்ளே தூங்கிக் கொண்டிருந்த தொட்டில் அசைந்து, கைப்பிள்ளை அழுகை கேட்க ஆரம்பித்தது. அழுகிற குரல் கனத்துக்கொண்டு வீறிட்டு வெளியே வந்து, வெயிலுடன் உடனடியாக கலந்து பளீர் என்று நிரம்பியது.

 மேற்கொண்டு கூப்பிட முடியாமல், இரண்டடி முன்னால் நகர்ந்து,ராமையா, வாசலில் ஒட்டப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி என்ற பெரிய நோட்டீஸ்ம் வெளிறினது போன்று கண்ணில் பட்டது.

கோமு அக்காவின் புகைப்படத்துடன் பெரிய கருப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்த அதில், கோமு அக்கா வேலை பார்த்த பள்ளி மாணவ மாணவிகள் இரங்கல் தெரிவிக்கிற வரிகள் இருந்தன.

 கீழே வலது ஓரத்தில் அச்சகத்தின் பெயர் இருக்கிற இடத்தில் பழனி என்று மட்டும் இருந்தது.

 தன்னுடைய பெயரையும் அச்சடிக்கப் போதுமான இடம் அதில் இருப்பதாக ராமையாவுக்கு தோன்றிற்று

 -வண்ணதாசன்
(அச்சுட்டு வெளியிடுபவர்கள் கதையில்)

உங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் உங்கள் கவலைகளைப் பற்றி மனம் விட்டு பேசுவது, கவலையைப் போக்குவதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று-ரோஸ் ஹில்ஃபெர்டிங்