Friday 28 February 2020

Anandha vikatan 6/3/20

பார்னம் விளைவு


பார்னம் விளைவு

ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உள்ளது.

சிறுவயதில் கிளி ஜோசியம் பார்த்திருப்போம்.கிளி எடுத்துக் கொடுத்த சீட்டிற்கு அப்புறம் தன் மஞ்சள் பையிலிருந்து ஒரு பாக்கெட் சைஸ் நோட்டினை எடுத்துப் படிப்பார் ஒரு தாத்தா. அதில் உள்ளவற்றை கேட்க கேட்க அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருப்போம்." எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் திறமையாய் முடிவெடுப்பதில் வல்லவர் நீங்க னு வார்த்தையை கேட்கும் போது வடிவேல் ஸ்டைலில் ஆமுங்க ஆமுங்க னு சொல்லுவோம். இவருக்கு எப்படி நம்மைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கிறது என நினைத்து எழுந்துபோவோம். 

கொஞ்சம் வளர்ந்த பிறகு நம் ராசி என்ன என தெரிந்தபிறகு.. அம்பது மீட்டர் தூரத்தில் இருந்தாலும் நம் ராசியை மட்டும் ஃபோகஸ் செய்து படிப்போம். அதிலும் அந்த முதல் வரி தான் க்ளாசிக்..
"பொறுமையும்  புத்திசாலித்தனமும் நிறைந்த ரிஷப ராசி நேயர்களே என்றால்.. நம்ம மனசு உடனே ஆஹா அச்சரா..நான் தான்னு மனசு உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிடும்.சரி மற்ற ராசிகளையும் பார்க்கும்போது அதே போல் வேறு வரிகளில் ஆரம்பித்திருப்பார்கள்.இருந்தாலும் நம்மைப் பற்றி சொன்ன வரிகள் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான்.

இதையெல்லாம் வேறு ஒருவர் முகத்துக்கு நேராக சொன்னால் அடப் போங்கனு போயிருவோம்.ஆனால் ஒரு புத்தகத்திலோ அல்லது செய்தியாக வந்த நிகழ்வை படிக்கும்போது நம்மை ஒப்பிட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைவதை கவனிச்சிருக்கீங்களா.
"உங்களிடம் உள்ள திறமைக்கு நீங்க இந்த ஆபிசில் இருக்க வேண்டியவ ஆளே இல்லை எனச்சொல்லும் போது ஷோல்டரை தூக்கி மார்பை விரிந்த நிலையில் வைத்திருப்போம் இல்லையா....

அடுத்தவர் உங்களை பார்த்து எப்படி எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கீங்கனு எதெச்சையா கேட்கும்போது மனசுக்குள்ள அப்பிடியே ஏ.சி போட்டது போல் இருக்கும்.

#பார்னம் விளைவு.

உளவியல் ரீதியில் இதற்கு 
பார்னம் விளைவு (Barnum effect) என்று பெயர். பலருக்கும் பொதுவாக ஒத்துப்போகக்கூடிய விஷயங்களை, பொதுவான சில ஆளுமை பண்புகளைத் தனிநபர்களிடம் கொடுத்துச் சோதிக்கும்போது அவை தம்மையே மிகத்துல்லியமாகக் குறிப்பனவாக அவர்கள் கருதுவதாக இருக்குமாம்.
இது ஜோதிடம், வருடாந்திர பலன், மற்றும் கிரக பெயர்ச்சி பலன்களில் பார்த்திருக்கலாம்.

1948 ஆம் ஆண்டில், ஒரு "கிளாசிக் பரிசோதனை" என்று விவரிக்கப்பட்டுள்ள நிலையில்,  உளவியலாளர் பெர்ட்ராம் ஆர். ஃபோரர் ஒரு உளவியல் பரிசோதனையை வழங்கினார் - அதில் 
ஒரு ஓவியம் கொடுத்து பரிசோதித்ததில் அனைவரும் ஒன்றே போல் பதிலளித்தனராம்.இது ஃபோரெர் விளைவு (Forer effect) என்றும் அழைக்கப்படுகிறது

அதன் முடிவில் ஆழ் மட்டத்தில், மனம் நம்பிக்கையில் கவனம் செலுத்துகிறது. நனவான மட்டத்தில் இருக்கும்போது, ​​அது எதிர்மறையில் கவனம் செலுத்துகிறது. நம்மிடமுள்ள நேர்மறை எண்ணங்களை எப்போதும் நினைவில் வைத்திருத்தல் அல்லது நம்மிடம் ஒருவர் பாசிட்டிவ் விஷயத்தை சொல்லும் போது உடனே ஒப்புக்கொள்ளுதல் போன்றவைகளால் இது சாத்தியமாகிறது.




பொதுவான போக்கினை கூறினாலும்
மனிதன் தம் அகநிலையை சரிபார்த்து தன் குணாதிசியத்தை பொருத்திப் பார்க்க முயன்று அதில் வெற்றியடைகிறான்.
உதாரணத்திற்கு நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.சில நேரங்களில் சோம்பலாய் இருப்பீர்கள்.இதில் "சிலநேரங்களில்"என்பது அனைவருக்குமே பொருந்தும். இந்த மாதிரி இடத்தில் தான் அனைவரும் ஒத்துப் போகிறோம்.இது ஒரு வகையில் நன்மையே. இதன் மூலம் நேர்மறை எண்ணத்தை நினைவு படுத்தி அதனை தொடர் வைக்கிறது.

#பலரும் தம்மையே குறிப்பதாகக் கருதிக்கொள்ளக்கூடிய விஷயங்கள் என உள்ளன.


*நீங்க வாழ்க்கையில் படாத கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருப்பீங்க

*நீங்க பார்த்தா சட்டுனு பேசமாட்டீங்க
ஆனா பேச ஆரம்பித்தால் கலகல டைப்

*நீங்க எல்லோரையும் நம்புவதால் உங்களை எளிதில் ஏமாற்றுவிடுவார்கள்

*எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்வதில் அலாதி ஆர்வம்

*புதுமையான விஷயத்தை கற்றுக்கொள்ள ரொம்ப மெனக்கெடுவீங்க

*நீங்க முன்னேறுவது உங்களை சுற்றியுள்ளவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது.இருந்தாலும் உங்க திறமையால் அடுத்தடுத்த இடம் கிடைத்துக்கொண்டே இருக்கும்

*சவாலையெல்லாம் சர்பத் குடிப்பது
போல் உங்களுக்கு


*நீங்க பொதுவா யாரையும் எளிதில் நம்பமாட்டீங்க.நம்பி விட்டால் அப்புறம் கடைசி வரை கன்டினியூ பன்னுவீங்க

இப்படியெல்லாம் படிக்கும்போது இந்த அறிகுறி எல்லாம் நமக்கு இருக்குனு நினைப்போமே அதுதான் பார்னம் விளைவு.


பாபநாசம் படத்தில் பெண் போலிஸ் அதிகாரி சொல்வது போல் ஒரு வசனம் வரும்."ஒரு சினிமாவில் ஒரு நல்ல சீன் வந்தால் அது மட்டும் நினைவில் இருக்கும் மத்த எல்லா சீனையும் மற்ந்திருவோம் னு.அது போல் நம்மை பற்றி ஒருவிசயம் சொல்லப்பட்டாலும் அந்த ஒரு விஷயம் பிடித்திருப்பதால் மற்ற எல்லாவற்றையும் நம்புகிறோம். 
எதிர்மறையாய் சொன்னால் நம்பமாட்டோம்.அதனால்தான் 
ஜோசியரின் மீதுதான் நம்பிக்கை குறைகிறதே தவிர..
ஜோசியத்தின்  மீது நம்பிக்கை குறைவதே இல்லை.



#உஷார்

பொதுவாக நம்பிக்கை சார்ந்த எதையும் புரிய வைப்பது கடினம்.ஆனால் அந்த நம்பிக்கையை மூலதனமாய் வைத்து ஒருவர் ஏமாற்றும்போது நாம் உஷாராய் இருக்க வேண்டும்.பத்து விஷயம் சொன்னதில் மூன்று ஒத்துப்போய்விட்டால் பதினொன்றாவது விஷயத்தை அவர் எப்படி கூறினாலும் நம்பகூடாது. சுயபரிசோதனை செய்துபார்க்கனும்.ஓஷோ கூறுவார் 
நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய்
இல்லையெனில் மற்றவைகளோடு ஒப்பிட்டு வேதனை அடைவாய் னு சொல்வார். உண்மையில் மற்றவர்களை விட நாம் ஒரு படி மேல் என்ற எண்ணம் உள்ளூர அனைவருக்கும் உள்ளது. இதை பயன்படுத்தி சொல்லும்போது எளிதில் வீழ்ந்துவிடுகிறோம்.ஆகவே நேர்மறை எண்ணதுக்காக இதனையெல்லாம் நம்புவோம். ஏமாற்றும்போது விழிப்புணர்வோடு இருப்போம்

-மணிகண்ட பிரபு




Friday 21 February 2020

இந்த வார வலைபாயுதேவில் என் இரு கீச்சுகள்..நன்றி ஆனந்தவிகடன்

நமக்குள்ளே


நமக்குள்ளே...

கேரளா இன்று பெருமையுடன் உச்சரிக்கும் ஒரு பெயர் - அனுஜத் சிந்து வினயல். திருச்சூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அனுஜத் வரைந்த `என் அம்மாவும் அக்கம்பக்கத்து அம்மாக்களும்’ என்கிற ஓவியம் கேரள மாநிலத்தின் பாலின பட்ஜெட்டின் முகப்பு அட்டையை அலங்கரித்திருக்கிறது. அரசே கொண்டாடும் அளவுக்கு அந்த ஓவியத்தில் அப்படி என்ன இருக்கிறது?

பெண்கள் தங்கள் வீடுகளில் செய்யக்கூடிய ‘வீட்டு வேலை’களையே அனுஜத் சித்திரித்திருக்கிறான். பால் கறப்பது, கோழிகளுக்குத் தீனி போடுவது, துவைப்பது, துணிகளை உலரவைப்பது, தேங்காய் பறிப்பது, மீன் கழுவுவது, காய்கறி வாங்குவது, மிளகாய் காயவைப்பது, கிணற்றில் நீர் இறைப்பது, மசாலா அரைப்பது, சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீடு கூட்டுவது, தோட்ட வேலை செய்வது, குழந்தைகளைப் பேணுவது என்று தன்னைச் சுற்றியுள்ள பெண்கள் செய்யும் `நன்றியோ, ஊதியமோ அற்ற' பணிகளை ஓவியமாக வரைந்திருக்கிறான்.

சமூகம் பெண்ணுக்கானது என்று சுட்டும் ‘வீட்டு வேலைகள்’ இந்தச் சிறுவனின் மனத்தைத் தொட்டிருக்கின்றன. இந்த ஓவியத்தை வரையும்போது அனுஜத்துக்கு வயது 10. துரதிர்ஷ்டவசமாக, எந்தத் தாயை அங்கீகரிக்க வேண்டி அனுஜத் இந்த ஓவியத்தை வரைந்தானோ அந்தத் தாய், கடந்த நவம்பர் 14 அன்று இறந்துவிட்டார்.

பத்து வயதுச் சிறுவனின் கண்ணுக்குத் தெரியும் பெண் உழைப்புச் சுரண்டலை சமூகம் எவ்வளவு எளிதாகக் கடந்து செல்கிறது? குடும்பம் என்கிற அமைப்பு, வீடு, வீட்டுக்குள் செய்யும் வேலைகள்... இவை எல்லாமே பெண்ணின் கடமைகள் என்கிற கோட்பாட்டை விதித்துவைத்திருக்கும் நாம், அந்த உழைப்புக்கான அங்கீகாரத்தை எப்போதேனும் அவளுக்குத் தருகிறோமா?

தென்னாப்பிரிக்கா மற்றும் சீனப் பெண்களைவிட 40 சதவிகிதம் அதிக பணிச்சுமையை இந்தியப் பெண்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு பெண் வீட்டுவேலைக்கு மட்டுமே நாளொன்றுக்கு 352 நிமிடங்கள் செலவிடுகிறாள். அதாவது, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எந்த பலனையும் எதிர்பாராத உழைப்பு. வீட்டிலுள்ள ஆண் இதற்காகச் செலவிடுவது அதிகபட்சம் 52 நிமிடங்கள் மட்டுமே.

2020-ம் ஆண்டிலும் ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும் வேலை என்று பணிகளைத் தரம் பிரிப்பது ஏன்? குடும்பம், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்றவற்றைப் பெண்ணின் தலையிலேயே தொடர்ச்சியாகச் சுமத்துவது ஏன்? இவையெல்லாம் வீட்டிலும் வேலை செய்து, வெளியிலும் பணிக்குச் செல்லும் பெண்களுக்குக் கடும் அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகின்றன.

இந்தியாவின் பெருமையான குடும்பம் என்கிற கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் பெண்களே. இவர்களுக்குச் சரியான அங்கீகாரம் அளிப்பதோடு, பெண்களின் பணியில் தோள் கொடுக்கவும் ஆண்கள் துணைவர வேண்டும். இல்லையெனில், காலப்போக்கில் இந்த அமைப்பே சீர்குலைந்து போகும். பெண்ணின் பணியையும் உழைப்பையும் மதிக்கத் தொடங்குவோம்... வீட்டுப் பணிகளில் ஆண்களும் குழந்தைகளும் கைகொடுப்போம். ஆணின்றிப் பெண்ணில்லை; பெண்ணின்றி எதுவும் இல்லை!

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (3.3.2020) இதழில்...