Sunday 31 January 2021

யுகபாரதி

பால் வீச்சம்
அடிக்கிற
பருவத்திலேயே
சாராய நெடியை
சரியாகக்
கண்டுகொண்டவன்
நான்

அன்பு போதையில்
அழுத்திக் கொடுத்த
அப்பாவின் முத்தம்
சுர்ரென்று
மூக்கிலேற

எப்போது
நினைத்திடினும்
சுணங்கிடுவேன்

அம்மாயெப்படி
ஆயுள் முழுசும்?


-யுகபாரதி

அறிவுமதி

சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே
வா

அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே

-அறிவுமதி

மனுஷ்ய புத்திரன்

ஒரு நாற்றுக்கும்
இன்னொரு நாற்றுக்கும்
ஒரு தென்னங்கன்னுக்கும்
இன்னொரு தென்னங்கன்னுக்கும்
விடவேண்டிய இடைவெளிக்குத்
துல்லியமாய் கணக்குண்டு

என்ன யோசித்தும்
புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர வேண்டிய
இடைவெளி எதுவென்று

–மனுஷ்ய புத்திரன்

சூப்பர் ஓவர் (தெலுங்கு) விமர்சனம்*மணி



ஒரே இரவில் நடக்கும் ஒரு கதை. அதிக ட்விஸ்ட்கள் வைத்து சுவாரஸ்யம் எனும் பெயரில் முடிச்சு போட்டு ரசிகர்களை குழப்பாமல் நேர்த்தியாக செல்லும் ஒரு திரைக்கதை. வழக்கமான சினிமாத்தனம் இல்லாமல் ஜாலியான ஒரு திரில்லர் படம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் கடைசி காட்சி வரை பார்த்தால் தான் நமக்கு முடிவு தெரியும். ஒரு ஒன்லைனுக்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்து கொடுத்த இயக்குனர் பிரவீன் வர்மாவுக்கு சபாஷ். ஆனால் கடைசி காட்சியில் we miss praveen varma forever னு காண்பிப்பது நமக்கும் ஒரு வருத்தமான செய்தியாக இருந்தது. 

#கதை

காசி வாசு மற்றும் மதி(பெண்) மூவரும் நண்பர்கள்.காசிக்கு கடன் பிரச்சனை,அமெரிக்கா செல்ல விசா கிடைக்கவில்லை. குடும்பத்தை.. கடன்காரர்களை சமாளிக்க
பணம் தேவைப்படுகிறது. ஒரு நாள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட தோன்றுகிறது. ஐபிஎல் போல் NPL மேட்ச் நடக்கும் மொத்த நாட்களும் சூதாடி ஒரு கோடியே 70 லட்சம் சம்பாதிக்கிறான்.

ஞாயிறு இரவு அந்த பணத்தை வாங்க 3 பேரும் இரவு செல்கின்றனர்.முதல் தவணையாய் 50இலட்சம் பணத்தை வாங்கித் திரும்பும் போது பணத்தாசை பிடித்த காவலதிகாரியிடம் மாட்டி பணத்தை பறிகொடுக்கின்றனர். ஐநூறு ரூபா கதவு போச்சேனு அழ ஆரம்பிக்க மீதி தவணை பணத்தை வாங்கிக் கொண்டு வாடகை காரில் செல்லும் போது ஒரு ஆக்சிடன்ட். அதிலிருந்த பணத்தை சூதாட்ட ஆர்கனைசர் அடிச்சிடுறான். ஒரு மனுசனுக்கு எத்தனை சோதனடானு நினைக்க வைக்குது அவர்களை போல் ரசிகர்களையும்.போலிசு அடிச்ச பணமும் களவாட,சூதாடி பணமும் பறிபோக கடைசியில் என்ன ஆச்சுனு சூப்பர் ஓவரில் சூப்பர் சிக்ஸர் அடிச்சு சொல்லுது க்ளைமேக்ஸ்.

#டின்ச்

*படத்தின் பெரியபலம் திரைக்கதை. பிறகு திவாகர் மணியின் கழுகுப்பார்வை ஒளிப்பதிவும்,சன்னியின் இசையும்

*முதல் காட்சி சேசிங் ஏன் வந்ததென அடுத்த சில காட்சிகளில் சொல்வதும், ஒவ்வொரு காட்சியின் பின்னணியில் வரும் கேரக்டர்களும் மீண்டும் ஏன் வந்ததென தெரிவதும் குழப்பமில்லாமல் செல்கிறது படம்.

*நெம்பர் ப்ளேட் மாற்றம், பத்து ரூபாய் நோட்டு என சின்ன விஷயங்களிலும் ரசிக்க வைக்கிறார்கள்

*அநாவசிய காட்சிகள் ஒன்றுமில்லாமல் 1-30 மணி நேரத்துக்கு உள்ளாக க்ரிப்பான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்த இயக்குநருக்கு பாராட்டுகள்

*பொழுதுபோக்க ஒரு நல்ல என்டர்டெயினர் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday 30 January 2021

கற்க கசடற-3*மணி



நாம் இங்கே பேசுவதை உலகம் மறந்துவிடும்.ஆனால் நாம் இங்கே என்ன செய்தோம் என்பதை ஒருபோதும் மறக்காது

-ஆபிரஹாம் லிங்கன்

#காந்தியின் இறுதிநாட்கள்

குளக்கரை ஓரம் ஒரு பணக்காரர் நடந்து சென்றார்..திடீரென ஒரு குளத்தில் தவறி விழுந்தார்.நீச்சல் தெரியாததால் தத்தளித்தார். உயிருக்குப் போராடினார்.திடீரென ஒருவன் குதித்து உயிரைக் காப்பாற்றினான்.உடனே அவர் அவனுக்கு தன் சொத்தில் பாதி எழுதிதருவதாக கூறி மாலை வீட்டுக்கு வரச்சொன்னார். நேரம் ஆக ஆக மனது கணக்கு போட்டது.வேறு யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள் என மனம் சாந்தப்படுத்திக் கொண்டது. இறுதியில் வீட்டுக்கு வந்த அவனுக்கு பத்துரூபாய் கொடுத்து அனுப்பினார்.

காந்தியின் கதையும் ஏறக்குறைய இதுபோலத்தான்.நாட்கள் செல்ல அவரைப்பற்றி படிக்காதவர்களும், செவிவழியே கேட்டவர்களும், ஒருசாரார் விமர்சனங்கள் இருந்தாலும் அவரை அறவே ஒதுக்கும் மனப்பாங்கும் அதிகரிக்கின்றன.பிறர் சொல்வதை கேட்டறியாது அவர் குறித்த புத்தகங்களை படித்து அவர் பற்றி அறியலாம்.லூயி பிஷரின் காந்தி குறித்த புத்தகம்,குஹாவின் காந்தி, என்றென்றும் காந்தி, காந்தியை சுட்ட பின் என பல்வேறு புத்தகங்கள் படித்து அவர் குறித்து முடிவுக்கு வரலாம்.

#காந்தியின் இறுதிநாட்கள்

2020ம் ஆண்டு நமக்கு எப்படி தீராத தலைவலியோ அவ்வாறாக அமைந்தது 1948ம் ஆண்டு. பிரிவினையினால் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து ஜனவரி 13ம் நாள் அமைதியை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.அத்தோடு இல்லாமல் பாகிஸ்தான் தனியே நிர்வாகம் செய்ய இந்தியா சார்பில் 55கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்.ஆனால் அனைத்து தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.நேருவும் படேலும் கூட ஆட்சேபித்தனர். ஆனால் நேரு இதற்கு பின்னர் ஒப்புக் கொண்டார்.ஜனவரி 18ம் தேதி இந்த ஏழு அம்சத்தை ஏற்றுக் கொண்டு ராஜேந்திர பிரசாத் தலைமையில் கையெழுத்திட்டு உண்ணாவிரதத்தை பகல் 12-45 மணிக்கு முடித்துக்கொண்டார் காந்தி.

பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் இந்து மகா சபைக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. கோட்சேவின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம். ஜனவரி 20ம் தேதி குண்டு வெடிப்புக்கு ஆயத்தமாகினர்.50 அடி தூரத்தில் குண்டுவெடிக்கும்.. அப்போது துப்பாக்கிச்சூடு நடத்த திட்டம்.ஆனால் குண்டுவெடிக்க சமிக்கை வராததால் மதன்லால் எனும் இளைஞன் 50 அடியில் குண்டு ஒன்றை வெடித்தான்.ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்த சந்தர்ப்பம் அமையாததால் திட்டம் தோல்வியடைந்தது.
(இது குறித்து மேலும் அறிய குமுதம் பதிப்பகம் வெளியிட்ட "காந்தியை சுட்ட பின்" புத்தகம் படிக்கவும்)

21ம் தேதி பிரார்த்தனை கூட்டத்தில் காந்தி  இது குறித்து பேசி.. அந்த இளைஞனை தண்டிக்க வேண்டாமென கூறியதாக பேசினார்.உண்ணாவிரதத்தினால் உடல் நலிவுற்று..பின் 22ம் தேதி தானே நடந்து பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தார்.23ம் தேதி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளையொட்டி வாழ்த்திப் பேசினார்.
27ம் தேதி கிங்ஸ்லி மார்ட்டின் காஷ்மீர் பிரச்சனையில் பிரிவினைதான்  தீர்வு குறித்து பேசியதை காந்தி நிராகரித்தார்.29ம் தேதி பன்னுவிலிருந்து வந்த 40 அகதிகள் காந்தியை திட்டினர். தங்களால் தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறினர்.சிலர் பாராட்டியும் பேசினர்.அதற்கு காந்தி "யாரும் சொல்லி நான் சேவை செய்ய வரவில்லை.யார் சொல்லியும் நான் கைவிடப் போவதும் இல்லை என்றார்.பல்வேறு பணிச்சுமையினால் இரவு 9-15 மணிகுதான் படுக்கைக்குச் சென்றார்.

#இறுதிநாள்- ஜனவரி 30

வெள்ளிக்கிழமை வழக்கம் போல் 
3-30 மணிக்கு எழுந்தார்.பிரார்த்தனை முடித்திவிட்டு சிறிது உறக்கத்திற்குப் பின் 6 மணிக்கு மீண்டும் எழுந்தார். காங்கிரஸ் புணரமைப்பு விதிகளை பியாரிலாலிடம் கேட்டு மாற்ற விரும்பும் குறிப்புகளைத் தந்தார்.9-30  மணிக்கு வங்காளி மொழி கற்றார். பிப்ரவரி 2ம் தேதி சேவா கிராமத்தில் ஒரு மாநாடு நடத்தும் திட்டத்தை கூறினார்.2-15 மணிக்கு இலங்கையைச் சேர்ந்த டாக்டர் டி-செல்வா பேட்டிக்கண்டார்.அவரின் மகள் காந்தியிடம் கையெழுத்து வாங்கினார்.அதுதான் அவர் இட்ட கடைசி கையெழுத்து.மாலை 4 மணிக்கு படேலும் அவரின் மகள் மணிபென் படேலும் வந்து உரையாடினர்.நேரம் போவதே தெரியாமல் 5-10 மணிவரை உரையாடினர்.பத்து நிமிடம் பிரார்த்தனை கூட்டத்திற்கு தாமதமானதால் பேத்திகள் இருவரும் அழைத்து சென்றனர்.

கூட்டத்தின் இடது புறமிருந்து வந்த கோட்சே 3முறை சுட்டான். அப்போது மணி 5-17. சுடப்பட்டதைப் பார்த்த ரகுநாத் நாயக் எனும் தோட்டக்காரர் கோட்சேவை புல்வெட்டியால் மூன்று முறை தாக்கினார்.சார்ஜென்ட் தேவராஜ் சிங் ஓடிவந்து கோட்சேவை பிடித்தார்.இல்லையெனில் கூட்டம் அப்போதே அவரை கொன்றிருக்கும்.
சங்கர் கிருஷ்டய்யா,சாவர்க்கர், நாராயண் ஆப்தே ஆகியோர் கைது செய்தனர்.

டாக்டர் டி.பி பார்கவா, டாக்டர் ஜீவராக மேத்தாவும் பரிசோதித்து இறந்ததை உறிதிப்படுத்தினர்.மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இரவு 2 மணிக்கு நீராட்டப்பட்டது. எண்ணெயில் நிரந்தரமாய் வைக்கலாம் எனும் யோசனையை தேவதாஸ் காந்தியும் பியாரிலாலும் மறுத்துவிட்டனர்.3-30 மணிக்கு பிராத்தனையில் கீதையும், ஆதிகிரந்தமும் வாசிக்கப்பட்டது. மறுநாள் காலை 11மணிக்கு மூன்றாவது மகனான ராமதாஸ் காந்தி வந்தார்.11-45க்கு ஆரம்பமாகி 4-20 மணிக்கு யமுனை நதிக்கரையில் ராஜ்காட்டை அடைந்தது.4-45 மணிக்கு ராமதாஸ் காந்தி தீ மூட்டினார்.14மணி நேரம் எரிந்தது.

பர்மா,திபெத்,இலங்கை,மலேசிய நாடுகளுக்கு அஸ்தி சிறிது அனுப்பப்பட்டது.திருவேணி சங்கமத்தில் அஸ்தி கரைத்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அஸ்தி தூவப்பட்டது. உலக நாடுகளிலிருந்து 3441 இரங்கல் செய்திகள் வந்தன.

#தண்டனை

ஜூன் 24ம் தேதி துவங்கிய விசாரணை நவம்பர் 6வரை நடந்தது.149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 1949 பிப்ரவரி 10ம் நாள் 204 பக்க தீர்ப்பு தீர்ப்பு வெளியானது.கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. போதுமான சாட்சிகள் இல்லாததால் சாவர்கர் விடுவிக்கப்பட்டார். மேல் முறையீடு பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் பண்டாரி,அச்சுருராம், கோஷ்லா ஆகியோர் மறுமுறையீட்டினை நிராகரித்து மரணதண்டனை வழங்கினர். கோட்சே தூக்கிலிடப்பட்டு சிறைக்குள்ளேயே தகனம் செய்து அவரின் சாம்பல் காகர் எனும் சிறிய ஆற்றில் கரைத்தனர்.சிறு பகுதி அஸ்தி கோட்சேவின் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

"ஒரு மென்மையான வழியில் உங்களால் உலகத்தை அசைக்க முடியும்" என உணர்த்திய
காந்தியை..அவரின் நினைவு நாளில் நினைவு கூர்வோம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday 29 January 2021

ராஜாராம்

எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.

-ராஜாராம்

Thursday 28 January 2021

கற்க கசடற-2*மணி



எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்.....
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
(நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு)
    - புலமைப்பித்தன்.

#புலமைப்பித்தன்

புதுமைப்பித்தன் கதைகளை படித்த பின்பு அதே பெயரில் இன்னொரு கவிஞர் பெயர்.இளம் வயதில் பாடல் என்றால் கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்றே நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தில் இப்படியொரு பெயர்.ஒரு துளி கடலாவதைப் போல் அவர் வரிகளை தேட தேட அமுத வரிகள் அத்தனையும்.சமீபத்தில் நக்கீரனில் எழுதிய தொடர் கவிஞரின் மற்றொரு முகத்தைக் காட்டியது. எம்.ஜி.ஆரினால் பாடல் எழுத வந்து அக்காலத்திலிருந்து இக்காலம் வரை இளமைத்தமிழை அவர் பாடலில் காணலாம்.

குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற நான் யார் பாடல் மூலம் தன் 30ம் வயதில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அப்பாடலை ஸ்டூடிவில் எழுதாமல் ஒரு டீக்கடையில் அமர்ந்து எழுயியதாக தெரிவித்திருந்தார்.

*உன்னால் முடியும் தம்பி பாடலில் இன்றும் ஒலிக்கும் கொள்கை வரிகள் "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு"பாடல் வரிகள் ஒவ்வொரு போராட்ட மேடையிலும் வாழ்த்துப் பாடலாக ஒலிக்கும்.அதே படத்தில் வரும் உன்னால் முடியும் தம்பி பாடலில் "கள்ளுக்கடை காசிலே தாண்டா,
கட்சிக் கொடி ஏறுது போடா"எனும் வரி 1988 முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருப்பதை தீர்க்கதரிசனத்துடன் எழுதியிருப்பார்.அதேபடத்தில் "இதழில் கதை எழுதும் நேரமிது" எனும் அகப்பாடலையும் தந்திருப்பார்.

*நாயகனில் நீ ஒரு காதல் சங்கீதம் பாடலில்..இருவரும் நடக்கும் காட்சியை வார்த்தைகளில் காட்சிப்படுத்தியிருப்பார்

 "மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே".

 வித்தியாசனமான பீரியட் படம் போல ஒரு பாடலில் ராஜாவும், புலவரும் சிக்ஸர் அடித்திருப்பார்கள்.நான் சிரித்தால் பாடலில் முன்பின் அறிமுகமில்லாத  நாயகனைப் பார்த்து ஒரு வரி 

"கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்.. 

என வரும்.அதில் இடம் பெற்ற மாஸ்டர் பீஸ் பாடல் "தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே" எவர்கிரீன் பாடல்.

*எல்லோரும் அறிந்த மெளனம் சம்மதம் படத்தில் வரும் கல்யாண தேன் நிலா முழுக்க முழுக்க லா வில் முடிந்திருக்கும்.யுகபாரதி தன் கட்டுரையில் எழுதியிருப்பார் லகரத்திற்கு ளகரமும் எழுதியிருக்கலாம் ஆனாலும் புலவரின் வரிகள் முழுக்க லா விலேயே அமைந்திருக்கும்.

"தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா" எப்போது கேட்டாலும் இனிமை.

*நீங்கள் கேட்டவை படத்தில் ஓவசந்த ராஜா பாடலில் ஒரு வரி 

"மென் பஞ்சு மேகங்கள். 
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று 
செவ்வானம் போல் ஆச்சு" 

கேட்கும் போதும் படிக்கும்போது ரசிக்க வைப்பார்.
"கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்" என்று பெண்ணின் கூந்தலை ஒரு பாடலில் வர்ணித்திருப்பார்.

*மண்ணில் வந்த நிலவே பாடலில் மழலையைக் கொஞ்சும் வரிகளில் அழகு தமிழில் வாழ்த்தியிருப்பார்

 "எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்"

*அழகன் படத்தில் வரும் சாதிமல்லி பூச்சரமே மற்றும் சங்கீத ஸ்வரங்கள் இன்னும் இரவுக்கு மாமருந்தாக அமைந்தவை.

*சோககீதம் என்பது பாடுவோர் கேட்போரையும் சோகத்தில் பங்கெடுக்கும் படி அமைய வேண்டும்.அவ்வகையில் கன்னிப்பருவத்திலே படத்தில் 
"பட்டு வண்ணம் ரோசாவாம்" பாடல் எளிமையான வரிகளில் ஆற்றுப்படுத்தும். அதில் ஒரு வரி

 "காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம் கரையுது
எம் மனசு உன்னால"

என மலேசியா வாசுதேவன் உருகியிருப்பார். இதே போல் ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலும் நாட்டுப்புற வரிபோல் உச்சி வகுந்தெடுத்து பாடலில் தன் கவித்துவ வரியை பதிந்திருப்பார்.

*"உலகெங்கும் நம் வீடு.இதில் என்ன எல்லைக்கோடு" என பத்தினிதெய்வதில் ஒரு வரி எல்லைதாண்டிய அவர் சிந்தனையை பறை சாற்றும்."மழை வருது மழைவருது குடை கொண்டு வா" எனும் வரியில் இசையோடு இயைந்து  வரிகளை நெய்திருப்பார்.

#க்ளாசிக் பாடல்கள்

*ஓடி ஓடி உழைக்கணும்

*சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே

*தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று

*நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற

*நாளை உலகை ஆள வேண்டும்

*ஆயிரம் நிலவே வா

*பாடும்போது நான் தென்றல் காற்று

*இந்த பச்சைக்கிளிக்கொரு

*பூ மழைதூவி வ..சந்தங்கள் வாழ்த்த

*பிடித்த புத்தகமாக மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறார். கமலாதாஸ் குறித்த The love queen malabar புத்தகத்தை சொல்லியிருக்கிறார்.சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு(அதில் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் நம் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவில்லை.அதுவே மகிழ்ச்சி.அதைபோல் தானும் இருப்பதாக தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருந்த போது அவர் மீது அன்பு பாராட்டி நட்போடு இருந்துள்ளார். புலவரின் மகள் கண்ணகி இறந்தபோது இடுகாடு வரை வந்து இறுதிச்சடங்கு செலுத்தியதை படித்த போது இன்னும் இவர்மீது மதிப்பு கூடியது.இன்னும் இவர் பல பாடல்களை எழுத வேண்டும்.. நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்

கற்றதை பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday 23 January 2021

கற்க கசடற.. கற்றபின் பகிர்க-1*மணி



நேதாஜி எனும் மாமனிதர்

வரையறுக்கப்பட்ட ஏமாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் ஒருபோதும் எல்லையற்ற நம்பிக்கையை இழக்கக்கூடாது.

-மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர்

இன்று சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த தினம்.வழக்கமா அவரைப் பற்றி புத்தகத்தில் நிறைய படித்திருப்போம் பரிச்சையில் எழுதி இருப்போம்.NCC யில் அந்த உடை அணியும்போதே நேதாஜி ஆகிவிட்ட ஒரு பெருமிதம்.விடுதலை போராட்டத்தைப் படிக்கும் போது அவரின் வேகம் இன்றைய இளைஞர்களின் எண்ணமாய் இருந்தது.

 1897 ஜனவரி 28ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் பிறந்தார்.தந்தையார் ஜானகிநாத் போஸ் வழக்கறிஞர். விவேகானந்தரின் ஆன்மீக முன்னுதாரணமாகவும் சித்தரஞ்சன் தாசை அரசியல் முன்மாதிரியாகவும் கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் விளங்கினார்.படிப்பில் என்றும் முதல்வன்.இந்திய அரசு பணிக்கான ஐசிஎஸ் தேர்வில் (4ம் இடம்)வெற்றி பெற்று அரசாங்க வேலையில் 1920ல் சேர்ந்தார். அரசாங்க வேலையில் இருந்து கொண்டு அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்க நினைத்து அரசாங்க வேலையை துறந்தார்.

 1921 ஒத்துழையாமை இயக்கத்தை வங்காளத்தில் சி ஆர் தாஸ் உடன் இணைந்து பங்கேற்றார். அவரின் சுயராஜ்ய கட்சி நாளேடான பார்வர்டு பத்திரிக்கையின் பதிப்பாசிரியராய் இருந்தார்.பகத்சிங் நண்பர் யதீந்திரநாத் சிறையில் உயிர்நீத்ததற்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி விலக்கிக் கொண்ட போது அதனை கடுமையாக கண்டித்தார் அப்போது அவருக்கு வயது 25

தீவிர அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போஸ் 1924 அக்டோபர் 24 அரசாங்கம் பிறப்பித்த அவசர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பர்மாவின் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான உடன் வங்காள காங்கிரஸ் தலைவரானார். சைமன் கமிஷனை புறக்கணிப்பு போராட்டம்.. டொமினியன் அந்தஸ்து வேண்டும் என்ற நேருவின் அறிக்கையை கண்டித்து சுதந்திரம் பெறுவதே இலக்கு என்று கூறினார்

1938 ஆம் ஆண்டு அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார்.1939 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் போட்டியில் சித்தராமையாவுக்கு எதிராக போட்டியிட்டு 203 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பட்டாபியின் தோல்வி தனது தோல்வி என்று அறிவித்தார் காந்தி. அடுத்த 6 மாதங்களுக்குள் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேற வேண்டும் இல்லையேல் காங்கிரஸ் வெகுஜன இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். இடதுசாரிகள் மற்றும் போஸின் சித்தாந்த வழிமுறைகளை நடைமுறைப்படுத்த கோரினார்.

காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியது. போஸ் காங்கிரஸ் தலைமையில் இருந்து விலகி 1939 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியை துவக்கினார்.1940 ஆம் ஆண்டு தடையை மீறி கல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்தினார். டாக்காவில் கட்சியின் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தினார்.பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் போஸ் மாறுவேடத்தில் வீட்டுக்காவலில் இருந்து வெளியேறி     பெஷாவர், காபூல், மாஸ்கோ வழியாக ஜெர்மனியை அடைந்தார். ஜெர்மனியில் சுதந்திர இந்தியா மையம் அமைத்து செயல்பட அனுமதிக்கப்பட்டு ஆசாத் ஹிந் வானொலி மூலம் நாள்தோறும் திட்டங்களை இந்தியாவுக்கு தெரியப்படுத்தினார்.

 1949ல் ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்துப் பேசி அங்கிருந்த வீரர்களை கொண்டு இந்திய ராணுவம் அமைத்து மத்திய ஆசியா சென்று வடமேற்கு எல்லையில் இருந்த பிரிட்டிஷ் படையுடன் போரிட வேண்டும்..அச்சு நாடுகள் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை வேண்டும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஹிட்லர் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் மேற்கு ஆப்பிரிக்காவில் ஜெர்மனி ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய போர்க் கைதிகளை கொண்டு ராணுவ பிரிவுகளை 1942ல் அமைத்தார்.

அதேஆண்டு சிங்கப்பூர அரசு ஜப்பானியர் வசம் வீழ்ந்தது. ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஜப்பான் செல்ல தீர்மானித்தார். ஜப்பானின் துணை கொண்டு எளிதில் இந்தியாவை பிடித்து விடலாம் என நம்பினார். இந்திய புரட்சி தீவிரவாதி ராஷ்பிகாரி போஸ் அழைப்பின்பேரில் டோக்கியோ சென்றார். 1943இல அங்கு இந்திய சுதந்திர கழகத்தை துவக்கினார்.

#நேதாஜி ஆன வரலாறு

சிங்கப்பூர் சென்ற போஸ்க்கு  உற்சாக வரவேற்பளித்தனர்.அங்குதான் ராஷ்பகாரி போஸ் சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திர கழகத்தின் தலைமைப் பொறுப்பை கொடுத்து ஆலோசகராக இருந்தார். "நேதாஜி அல்லது தன்னிகரற்ற தளபதி" என்று அழைக்கப்பட்டார் சிங்கப்பூரில் இருந்தபடியே டெல்லி செல்வோம் என்று முழக்கமிட்டார்

1944-பிப்-4ல் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய படையெடுப்பு ரங்கூனில் இருந்து துவக்கினார். இந்நிலையில் பிரிட்டிஷ் படை முறியடித்து இந்தியாவுக்குள் நுழைந்தது. கடுமையான போருக்குப் பின் ஜப்பான்- இந்திய தேசிய ராணுவம் கொஹிமாவைக் கைப்பற்றியது. பருவமழையால் ராணுவ தளவாடங்கள் வந்து சேர்வது தடைபட்டது. 1945 ஜப்பான் சரணடைந்தது. நேதாஜிக்கு பின்னடைவாக அமைந்தது. ரஷ்யாவின் துணையோடு போராட விரும்பிய நேதாஜி ரஷ்யா செல்லும் வழியில் தேசிய சீனாவின் தலைநகர் தைபையில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் தைவான் அரசாங்கம் அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என சொன்னது.

இந்தியாவின் மீதும் இந்தியர்கள் விடுதலையடைய வேண்டும் எனும் தீராத வேட்கை அவரிடம் இருந்தது மறுக்கவியலாது.இன்றளவும் ஒரு வீரனுக்குரிய தனித்துவத்துடன் உள்ளார் என்பதே நிதர்சனம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday 22 January 2021

பேயோன்

நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது
அது அரசாங்கம் தான்,
கவலை வேண்டாம்.

-பேயோன்

Thursday 21 January 2021

ஜெயமோகன்

ஓர் இலட்சியவாதச் செயல்பாடு அடிப்படையில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அந்த மகிழ்ச்சி இருவகையானது. நாம் ஒன்றை அளிக்கிறோம் என்னும் மகிழ்ச்சி. நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்னும் மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சியே வாழ்நாள் முழுக்க செயல்படச் செய்யும். எவ்வகையிலும் அவநம்பிக்கையும் சோர்வும் அடையாமலிருக்கச் செய்யும். எஞ்சுவது நம் ஆளுமைநிறைவே ஒழிய நாம் இதை செய்தோம், இதை மாற்றியமைத்தோம்,இதை சாதித்தோம் என்னும் ஆணவமல்ல என்னும் உணர்வை அளிக்கும்

ஒற்றைவரியில் சொன்னால் மேலும் மேலும் பெருகும் ஆழ்ந்த மகிழ்ச்சியை அளிக்காத எதுவும் சேவையோ கல்வியோ இலட்சியவாதச் செயல்பாடோ அல்ல.
        
                                            - ஜெயமோகன்

அசோகமித்திரன்

மொழியும் சொற்களும் பயன்படாத போது அழுகைதான் மொழியாக இருக்கிறது.அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது

-அசோகமித்திரன்

ராஜாராம்

முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்

ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும்படி கேட்டவளிடம்
சொன்ன காரணத்தை

இதெல்லாம் ஒரு காரணமா?
என்றவளையும் சேர்த்து

இப்ப இவனிடம்
ஆயிரத்தொரு காரணங்கள் இருந்தது.

-ராஜாராம்

சுஜாதா

எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பு உண்டு. 'டொங்க்' என்று டம்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசிபலனை தெரிந்து கொண்டு விடலாம்!

-சுஜாதா

Wednesday 20 January 2021

.ஜானகிராமன்

மனுசனுக்கு துக்கம் வராமலிருக்க என்ன செய்யனும்?’

சண்பகவனம் சிரித்தார், பிறகு சிரிப்பு மறைந்தது. அவனை உற்றுப் பார்த்தார். “துக்கம், சுகம் எல்லாம் வரது போறதுமாகத்தான் இருக்கும். அதைத் தடுக்கிறக்கில்லே. அதுகளைத் தாங்கிக்கிறதுக்குத் தயார் பண்ணிக்கிட்டா அதுகள் வரதையும் போறதையும்
உடம்பு கலையாம பார்த்துக்கிட்டு நிற்கலாம்” என்றார் அவர்

-தி.ஜானகிராமன்
செம்பருத்தி நாவலில்

Monday 18 January 2021

தொ.ப

சமூகத்தின் 90 விழுக்காடு மக்கள் தெய்வ நம்பிக்கையில் இருக்கும்போது..பெரியார் எந்த கடவுளை எதிர்த்தார் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை அவர் எதிர்த்ததில்லை.

ராமரை செருப்பால் அடித்தார், விநாகர் சிலை உடைத்தாரே தவிர சிறு தெய்வங்களான அய்யனார் சிலையோ, அம்மன் வழிபாட்டையோ பெரியார் எப்போதும் எதிர்க்கவில்லை

-தொ.ப

info

ஜா என்றால் பிறப்பு என்று பொருள்.அதனால்தான் பத்மஜா தாமரையில் பிறந்தவள்,வனஜா வனத்தில் பிறந்தவள் எனும் அர்த்தத்தில் பெயர்கள் வைக்கப்படுகின்றன

#info

Saturday 16 January 2021

ராஜா சந்திரசேகர்

மண்புழுவைப் பற்றி எழுதி வரச்சொன்னார் டீச்சர்
குழந்தையிடம்

மண்ணில் தொலைந்த மண்புழுவை ‘நெட்’டில் தேடிக்கொண்டிருந்தார் அப்பா

-ராஜா சந்திரசேகர்

Friday 15 January 2021

நடிகர் ராஜேஷ்

மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வராமல் இருந்தால்,உடம்பு ஹெல்தியா இருக்குனு அர்த்தம். அசந்துட்டா உடம்பு சரியில்லை/வயசாகிடுச்சுனு அர்த்தம்.மதியம் ஒருத்தர் ஒருநாழிகை(24நிமிஷன்) தான் படுக்கணும்.

-நடிகர் ராஜேஷ்

கபிலன்

கூவிப் பூவிற்க முடியாமல்
முந்தானைத் தொட்டிலில்
தூங்கும் குழந்தை

-கபிலன்

Thursday 14 January 2021

ராஜாராம்

குழந்தைகளை கூட்டிக்கொண்டு
அம்மா வீட்டிற்கு போகிற மகள்கள்
மறக்காமல் எடுத்து வைக்கிறார்கள்
ஒரு முகத்தை.

-ராஜாராம்

மாஸ்டர் விமர்சனம்*மணி




ஐ.சி.யூ வார்டில் இருப்பவரை பார்த்து எப்படி இருக்கு எப்படி இருக்குனு கேட்பது போல் நேற்றிலிருந்து எப்படி இருக்கு மாஸ்டர் னு கேட்கும் குரல்கள் அதிகம்.விஜய் ரசிகர்களுக்கு ஃபுல் மாஸ் எண்டர்டெயினர்.பெரிய ஹீரோ படத்தில் வில்லன் கேரக்டர் ஓவர் பில்டப் கொடுத்து மொக்க பீஸ்னு காமிச்சிருப்பாங்க.ஆனால் விஜய்க்கு ஈக்குவலா மாஸ் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

#கதை

ஓபனிங் சீனில் குடும்பத்தையே கொலை செய்து..எஞ்சிய வாரிசான விஜய் சேதுபதியை கருணை அடிப்படையில் கொல்லாமல் விடுகின்றனர்.அவர் கொலை,கொள்ளை, செய்து சீர்திருத்தப் பள்ளி மாணவர்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்.

சென்னையில்  கல்லூரி பேராசிரியராக(உளவியல்) பணிபுரிகிறார் விஜய்.மாணவரின் மனம் கவர்ந்தவர் ஒரு கட்டத்தில் கல்லூரியில் ஏற்பட்ட சில சிக்கல் காரணமாக சிக்கல் மிகுந்த சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார்.3 மாதத்தில் சென்றுவிடலாம் என விளையாட்டுத்தனமாய் வந்தவருக்கு அங்கு நிகழும் மரணங்கள் விஜய் சேதுபதியை பழிவாங்க முடிவு செய்கிறார்.முடிவு என்ன என்பது கதை


#ப்ளஸ்

*எழுத்துப் போடுவதில் கூட மாஸ் படத்திற்கான டெம்ளேட் தொடங்குகிறது.

*படத்தின் இருபெரும் தூண்களில் ஒருவர் விஜய்.ஸ்லிம்,மேனரிசம், என As usual rocking.இன்னொருவர் விஜய் சேதுபதி. யதார்த்த நடிப்பு , உடல் மொழி, நக்கல் என ஹேப்பி அண்ணாச்சி.

*ஹீரோ வில்லன் பார்க்காமல் கடைசி இருபது நிமிடங்கள் பார்ப்பது எதிர்பார்ப்பில் ஏலக்காய் தூவிய இனிய மணம்.இண்டர்வெல்லில் ஐ எம் வெயிட்டிங்னு வி.சே சொல்வது, க்ளைமேக்சில் டி ஆர் பாட்டை விஜய் பாடுவது க்ளாஸ்

*இருட்டில் வி.சே னே தெரியாமல் அவரையே கத்தி வைத்து மிரட்டுவது.

*கபடிக்காட்சி..கில்லி மியூசிக் எனர்ஜிடிக்.குடிக்கான காரணத்திற்கு ஒவ்வொரு பட கதை சொல்வது க்யூட்.
அடிக்கடி பாட்டு வராதது ஆறுதல்.

*"அடுத்தவனை திட்டாம நீ என்னப் பன்னபோறனு சொல்லி ஓட்டுக்கேளு"

"யாரைப் பார்த்துவேனா பயப்படலாம்.ஆனா சாவு நம்ம பக்கத்தில் நெருங்கும்போது எதிர்ல இருக்கிறவன பார்த்து பயப்படகூடாது"

"அடிதர்ற வலிய விட பயம் தர்ற வலி பெருசு"

"எமோசனல் இருக்கிறவன் எதுக்கு கோபப்படுறானு தெர்ல" வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன

*ஒளிப்பதிவு,இசை ஈர்க்கிறது


#மைனஸ்

*படத்தின் நீளம் 2-53 நிமிசம். ஒருமணி நேரம் கதையே துவங்காதது.

*இடைவேளைக்குப் பின் புத்திசாலித்தனம் இல்லாத திரைக்கதை வழக்கமான மண் ரோட்டில் பயணிக்கிறது.

*அடிக்கடி குடிப்பது உறுத்தல். இரு மரணத்தை பார்த்து திருந்துவது, பேசியே திருத்துவது,கதாநாயகி திருவல்லிக்கேணியில் ஓடிவிட்டு,
நாகர் கோயிலில் அடுத்த காட்சியில் தோன்றுவது.

*லாரி உரிமையாளர் சங்க தலைவர்களெல்லாம் ஈசியா சாகிறார்கள்.அவர்களுக்கு பின்புலமோ,ஆள்பலமோ இல்லையா பாஸ்.

*துணை நடிகர்கள் பட்டாளத்தை குறைத்திருக்கலாம்.இடைவேளைக்குப் பின் எல்லாக் காட்சிகளையும் எளிதில் யூகிக்க முடிகிறது.

விஜய் ரசிகர்களுக்கு இது மாஸ்டர் பொங்கல்.இன்னும் கொஞ்சம் ட்ரிம் பன்னி, புத்திசாலித்தனமான காட்சிகளை இரண்டாம் பாதியில் கூட்டியிருந்தால் எல்லாருக்குமான மாஸ்டர் பொங்கலா இருந்திருக்கும். ஆனாலும் நம்பி பார்க்கலாம். என்டர்டெயினர் மூவி.

-மணிகண்டபிரபு

ஏனோ தெய்வம் சதி செய்ததுபேதை போல விதி செய்தது

ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

-பெண்ணுக்கு ஏழு பருவம். முதல் பருவம் பேதை.. குழந்தைப் பருவம்.(5-7 வயது)
அப்படத்தில்  நாயகியை குழந்தை பருவமாய் மாற்றிவிட்டாரே கடவுள் என வருந்தி எழுதியிருப்பார் கண்ணதாசன்.

-ஞானசம்பந்தன் பேட்டியில்

சுஜாதா

வரலாற்றுநாவல் என்பது ‘கச்சணிந்த பெண்களும், திமிறும் குதிரைகளும், உறைவாள்களும், உறையூர் ஒற்றர்களும் அல்ல’. வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான்.

-சுஜாதா

மனுஷ்யபுத்திரன்

அத்தனை இலைகளும் உதிர்ந்த
மொட்டை மரங்களனால் என்ன
அதிலும் ஒரு கிளி வந்தமரும்
அது இன்னும் மரமென்பதை நினைவூட்ட

-மனுஷ்யபுத்திரன்

Wednesday 13 January 2021

பராரிகள்

சரியான பாதையில் செல்வதில் என்ன இருக்கிறது. தொலைந்து போவதும், திசைமாறிப்போவதும் தான்
அழகான பயணம்

-பராரிகள்

Monday 11 January 2021

-சே.பிருந்தா

நேரே கண்பார்க்க தயங்கி
தரை பார்ப்பினும் கண்கூசும்
உன் வீட்டு பளிங்கு தரை

சற்றே கோணம் திரும்ப
சுவரின் உயர்தர டிஸ்டம்பர்
கண்ணில் உறுத்தும்

பலபக்கம் வியூகம்
வைத்து எனை மூலையில் தள்ளிடும் உன் வீடு

என் கம்பீரம் குன்றி...
சிற்றெறும்பாய் சிறுத்து

எனை நானாய்
என் வீட்டிலேயே இருக்கவிடு

-சே.பிருந்தா

Sunday 10 January 2021

சித்திரவீதிக்காரன்

சொல்லாததைச் சொல்லச் சொல்கிறாய் சொன்னதை
எல்லாம் கேட்ட மாதிரி

–சித்திரவீதிக்காரன்

மகுடேசுவரன்

செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை

பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது

பனியன் கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக் கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது

சமயத்தில்
கொண்டுவந்த பழஞ்சோறு
ஊசிப்போய் ஏமாற்றுகிறது

விடிய விடிய பணியிருக்கிறது
கண்ணுக்குள் மண்ணறுக்கிறது

துணி உதறி உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது

அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது

தங்கமணியக்கா
தன் குடும்பக் கதை சொன்னால்
எனக்கும் அழுகை வருகிறது

மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின் பார்வையில்
இன்பத்திற்கான யாசிப்பு
எப்பொழுதும் தென்படுகிறது

இடையிடையே நினைவும் வருகிறது
குடிகாரப் புருஷ முகம்
ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்

– மகுடேசுவரன்

கபிலன்

அவர் ஸ்ட்ராங்கா போடச் சொன்னார்
இன்னொருவர் டபுள்ஸ்ட்ராங் என்றார்
ஒருவர் லைட் என்றார்
மற்றவர் சர்க்கரை வேண்டாமென்றார்
கடைசியாய் வந்தவர் டிக்காசன் மட்டும் என்றார்

குழம்பிய மனிதர்களுக்காக
குழம்ப வேண்டியிருக்கிறது டீ

-கபிலன்

Saturday 9 January 2021

பிக்பாஸில் கமல் பரிந்துரைத்த புத்தகங்கள் -மாஸ்டர்

பிக்பாஸில் கமல் பரிந்துரைத்த புத்தகங்கள் -மாஸ்டர்

#The_plague
Albert Camus இன் 'The Plague' நாவலை 'கொள்ளை நோய்' என்று தமிழில் 'ச. மதனகல்யாணி' மொழிபெயர்த்துள்ளார்.
அல்ஜீரியக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட ஒரு சாதாரண நகரத்தின் மக்கள்தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த நுண்கிருமியைப் பற்றிய கதைதான் இந்த நாவல்.

#அவமானம் 
என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை.என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது.
-சாதத் ஹசன் 

#வெண்முரசு 
இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும். இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. 

#புயலிலே_ஒரு_தோணி
ப.சிங்காரம் புனைந்துள்ள மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள், நாவல் ஆக்கத்திற்கு புதிய பரிமாணங்களைத் தந்துள்ளன. நீட்டி முழக்கிப் பகடிசெய்யும் போக்கு, நாவலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. 2ஆம் உலகப்போரில் தூரதேசத்தில்  இருந்து சொந்த ஊர் செல்ல நினைப்பவர்களின் குமுறல். 

#அழகர்_கோயில்
"ஒரு பகுத்தறிவாளர் எழுதிய புத்தகத்தில் பக்தர்களின் உணர்வுக்கு எவ்வளவு இடம் கொடுத்திருக்கிறார் என்பதற்கான சான்று" என்று பெருந்தமிழஞறிஞர் தொ.ப குறித்து கமல் கூறியுள்ளார். அழகர் கோயில் குறித்து தொ. பரமசிவம் செய்த ஆய்வு நூல். 

#அடிமையின்_காதல்
எஸ்-ஏ. பி. 'The Man From Rio' என்ற படத்தைப் பார்த்துவிட்டு, அதில் வரும் உற்சாகமான, ஆபத்துக்களைச் சிரித்துக் கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல 'அடிமையின் காதல் ' கதாநாயகனைப் படைக்கும்படி ரா. கியிடம் யோசனை சொன்னார். அதைவைத்து ''அடிமையின் காதல்'' நாவல் வெளிவந்தது. 

#மிர்தாதின்_புத்தகம் 
இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் இது உயர்ந்து நிற்பது. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. மிகைல் நைமி, இவரே எல்லா நூற்றாண்டுகளிலும் மாபெரும் எழுத்தாளர். நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன், எதுவுமே இதற்கு ஈடாகாது   என்கிறார் ஓஷோ. 

கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகம்தான் 'கோபல்லபுரத்து மக்கள்'. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா 

தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லிகளில் ஒருவரான வண்ணநிலவன், ஆரம்பக் காலங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே ‘எஸ்தர்’. அந்த நூலில் இடம்பெற்றுள்ள ‘எஸ்தர்’ என்ற சிறுகதை இன்றளவும் தமிழின் மிக முக்கியமான படைப்பாக விமர்சகர்களாலும் வாசகர்களாலும் கொண்டாடப்படுகிறது. 

இது ஒரு மனிதன் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், இவையே அவன் வாழ்க்கை. 

#தொடுவானம்_தேடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு மற்றும் நுண் தொழில் முனைவோருக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. அவர்கள் தினசரி சவால்களை எதிர்கொண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல இந்த நூல் பல உத்திகளை அளித்திருக்கிறது. 

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே:சில குறிப்புக்கள் நாவலில், ஜேஜே வை மைய அச்சாக வைத்து அவனை சுற்றியுள்ள சமூகத்தை ஜேஜே மூலமாகவே விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். இந்நாவல் முழுக்க நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அங்கதமும் பகடியும் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது. 

அசோகமித்திரனின் #கரைந்தநிழல்கள்
சினிமாவில் பணியாற்றும் மனிதர்களினூடே சினிமா உலகத்தின் அசலான அவலத்தைப் பேசும் நாவலாக இருக்கிறது. ஹீரோ/யின், இயக்குனர்களின் வாழ்க்கை முறையை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் எமக்கு அடிமட்டத்தில் பணியாற்றுபவர்கள் மீது கரிசனத்தை ஏற்படுத்துகிறது. 

பெருமாள்முருகனின் #கூளமாதிரி பண்ணையத்தில் வேலை செய்யும் ஒருவனின் வாழ்க்கையை அவனின் பார்வையினூடாக விவரித்து செல்கிறது கதை.
அவனுக்கு ஏற்படும் அவமானங்கள், துரோகங்கள், அவன் மீது செலுத்தப்படும் அதிகாரம், அவனுடைய இயலாமை போன்றவையே கூளமாதாரி.

பெருமாள் முருகன்

பிளாஸ்டிக் குழாயைப் பற்றி
மேலேறிச் செல்கிறது

சுவர்களின் மேல் ஓடுகிறது
சருகுகள் சரசரக்க

மொட்டை மாடியில் உலாத்துகிறது

தண்ணீர்த் தொட்டி மூடிமேல் நின்று
கீழுலகைக் காண்கிறது

 

ஆளரவம் கேட்டதும்
சட்டெனத் தாவிவிடும்
அணிலுக்குத் தெரியும்
தனக்குரியது
மரம் தானென.

-பெருமாள் முருகன்

Saturday 2 January 2021

கன்பூசியஸ்

கேட்பனவற்றை மறந்துவிடுகிறேன். பார்ப்பனவற்றை நினைவில் கொள்கிறேன்.
செய்வனவற்றைத்தான் புரிந்து கொள்கிறேன்

-கன்பூசியஸ்

அசோகமித்திரன்

கல்யாணத்துக்குப் பிறகு பெண் ஒழுங்காய் தலைவாருவதில்லை.உருவம் பற்றி சொல்லவே வேண்டாம். கணவன் வருமானம் கூடுகிறதோ உருவம் கூடுகிறது.இனிமேல் என்னையார் என்ன கேட்க முடியும் எனும் அலட்சிய போக்கில்..

-அசோகமித்திரன் பளு சிறுகதையில்
(இது ஆண்களுக்கும் பொருந்தும்)

info

நோய்க்கிருமிகளை அழித்தால், நோயை அழிக்கலாம்
-அலோபதி

*உடலில் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி நோய்க்கிருமிகளின் செயல்திறனை தடுப்பது-சித்தா

*நோய்க்கிருமிகளே நோயைக் குணப்படுத்தும்-ஓமியோபதி

#info