Wednesday 31 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-19*மணி




நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான்.. இறைவன்

-வாலி

#வாலிப வாலி
-நெல்லை ஜெயந்தா

வாலிப வாலி நிகழ்ச்சி பொதிகை டிவியில் ஒளிபரப்பும் போது வாரம் தவறாமல் பார்த்துவிடுவேன்.நல்ல அனுபவமுள்ள மனிதரின் பேச்சுகள் சுவாரஸ்யமாய் இருக்கும்.வாலியின் பேச்சுக்களும் அத்தன்மையதே. ரிப்பீட்டட் வராது, நான் ஒரு பெரிய மேதை எனும் மமதை கிடையாது. உள்ளதை உள்ளவாறு சுவாரஸ்யத்தோடு சொன்னாலே போதும் எல்லோருக்கும் பிடித்துப் போய்விடும்.

ஒரு கவிஞர் ஒரு படத்தில் ஐந்து பாடல் எழுதியிருப்பார்.ஆனால் வாலி ஒரு பாட்டு தான் எழுதியிருப்பார். ஆனால்  அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருக்கும்.உதாரணத்துக்கு சர்வர் சுந்தரத்துக்கு கண்ணதாசன் எழுதியதை விட அதில் வந்த அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் சூப்பர் ஹிட்.வாலிக்கு அந்த ராசி உண்டு.காதலனில் வரும் முக்காபுலா, ஜென்டில்மேனில் வரும் சிக்குபுக்கு பாட்டுகள் ஒர்பதம். "சுஜாதா குமுதம் அரசு பதிலில் 'எத்தனை பாட்டு கஷ்டப்பட்டு மற்றவர் எழுதினாலும் வாலி ஒரு பாடல் எழுதி மூக்கறுக்கிறாரே.அதுக்கு உதாரணம் முக்காப்புலா' என எழுதியிருப்பார்.

82 வாரங்கள் கேள்வி பதில் பாணியில் இப்புத்தகம் சுவாரஸ்யமான தனது அனுபவத்தை பகிர்ந்திருப்பார் வாலி.
ஸ்ரீரங்கத்தில் ஓவியராய் பயணத்தை துவங்கி,ஓவியர் மாலியின் உந்துதலில் ரங்கராஜன் எனும் பெயரை வாலி என மாற்றியுள்ளார்.
அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் தன் நாடகம் மூலம் கலைஞர், பெரியார் சந்திப்பு,ரேடியோ அனுபவம் மூலம் சென்னைக்கு வந்து எம்.பி.சீனிவாசன் வாய்ப்பு கேட்டதும் திருப்பி அனுப்பியுள்ளார்.அழகர் மலைக்கள்ளனில் முதல் பாட்டு எழுதிய பிறகுதான் நல்லவன் வாழ்வான் படத்தில் இரண்டாவது பாடல் எழுதியுள்ளார். அதிலிருந்து வாலியின் கிராஃப் ஏறுமுகம் தான்.

கற்பகம்,படகோட்டி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களென அவரின் வேகம் அதிகரித்தது. வீரம்,காதல் என எழுத வரும்.. தத்துவம் எழுத வருமா என நினைப்போர்க்கு கண் போன போக்கிலே ஒரு உதாரணம்..
*நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்

 நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் 

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

 உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்..என உருக வைத்திருப்பார். இப்பாடல் மற்றும் கற்பகத்தில் வரும் பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே வடம் புடிச்சான் வரியை மிகவுன் சிலாகித்தார் கண்ணதாசன்

பிறர் மயங்கும் "பாடலை" நான் எழுதினால்,என்னை மயக்கும் "பாட்டிலை" எனக்குப் பரிசாய் தருவார் கண்ணதாசன் என சொல்வார் வாலி.

#ட்ரேட் மார்க்

பூ பூக்கும் மாசம் தைமாசம், மகாநதியில் வரும் தை பொங்கலும்,
நியூ இயருக்கு வரும் ஹாப்பி நியூ இயர் பாடல்,இளையராஜா இன்றும் கச்சேரி துவங்கும் முன் பாடும் ஜனனி ஜனனி (இப்பாடல் கேட்டபின் தான் பாரதிராஜா தன் மகளுக்கு ஜனனி என பெயர் வைத்தது)
வாங்கய்யா வாத்தியாராய்யா நம்நாடு படத்தில் எழுதியது எம்ஜிஆரை வாத்தியார் என மேலும் பிரபலப்படுத்தியது, ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு மற்றும்
ஆசியாவில் பிரபலமான பாடலான ராக்கம்மா கையத்தட்டு, முஸ்தபா முஸ்தபா, என அனைத்தும் வாலியின் ட்ரேட் மார்க் பாடல்கள்.

ராஜாவும் வாலியும்

பத்ரகாளி படத்தில் வரும் வாங்கோன்னா பாடல் தான் இளையராஜாவுக்கு எழுதிய முதல் பாடல். அதன் பிறகு பல பாடல்களை ராஜாவுடன் இணைந்து எழுதியுள்ளார் வாலி.இருட்டி போயிருச்சு என்பது கிராமத்துல தண்ணி கருத்திருச்சு என வினயமாக சொல்லுவாங்க என இளையராஜா சொன்னதைக் கேட்டு தான் தண்ணி கருத்திருச்சு பாடல் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் தான் எழுதியதாக வாலி குறிப்பிடுவது ஆச்சரியமாயிருந்தது.

மலைய மருத ராகத்தில் கண்மணி நீ வர பாடலும்,தர்பாரி கனடா ராகத்தில் ஆகாய வெண்ணிலாவே,
சக்கரவாக ராகத்தில் நீ பாதி நான் பாதி பாடலும் என வித்யாசமான ராகத்தில் ராஜா முயற்சித்ததாக குறிப்பிடுவார்.ரீதி கெளளை ராகத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடலை அமைத்த ராஜாவின் திறமையை வெகுவாய் பாராட்டுவார்.

#ரஹ்மானும் வாலியும்

எப்போதும் ரஹ்மானுக்கு தனக்கும் உள்ள நட்பை சிலாகித்துள்ளார். ஜென்டில் மேனில் ஆரம்பித்து மரியான் வரை அவரின் பயணம் இனிமையானது.இந்தியனில் இவர் எழுதிய கப்பலேறி போயாச்சும், அக்கடானு நாங்க பாடலும் ஒன்றுக் கொன்று மாறுபட்டவை.பாய்ஸ் பட க்ளைமேக்ஸ்ல் வரும் மாரோ மாரோ பாடலில் லக்கை பற்றியும், எல்லா புகழும் பாடலில் தன்னம்பிக்கை டானிக்கையும் கலந்து எழுதியிருப்பார்.காதலர் தினம் பாடல் ஒவ்வொன்றும் வாலியின் பெயர் சொல்லும்

இதேபோல் இசையமைப்பாளர் தேவா, சந்திரபோஸ், சி.வி.குமார், ஆர்.டி பர்மன், லட்சுமிகாந்த் பியாரிலால்,வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார்என ஒவ்வொரு இசையமைப்பாளர் உடன் பணிபுரிந்த அனுபவத்தை மிகவும் சிலாகித்துக் கூறியுள்ளார்.
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தாலும் எழுதுவார் லாலாக்கு டோல் டப்பிமாவும் எழுதுவார்
அவர்தான் வாலி.

#ரசித்தது.

*உன்னை நீயே உயர்வாக நினைக்காவிடில் உலகம் எப்படி உயர்வாக நினைக்கும்.

*வீணை எஸ் பாலச்சந்தர் ஒரு கதை வைத்திருந்தார்.அதை பஞ்சு அருணாசலத்துக்கு கொடுத்தாராம். அண்ணன் இறந்து விடுவான், அவன் ஆவி தம்பி உடம்பில் புகுந்து கொள்கிறது. அண்ணன் பேர் மாது இவன் மாது னு சொன்னாலே அவன் இவனுக்குள் வந்து விடுவான். இதுதான் பின்னாடி கல்யாணராமன் படமாக வந்தது.

*அவசரமாய் எழுதியதில் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு பாடலும், சிவப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் நினைவோ ஒரு பறவை என்ற பாடலும் அவசரஅவசரமாக எழுதிக் கொடுத்தாராம்.

*வாலி எழுதி எம் எஸ் விஸ்வநாதன் பாடிய அல்லா அல்லா பாடல் இசையமைப்பாளரை பாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

*மேடையை போலே வாழ்கை அல்ல 
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல 
ஒடையை போலே உறவும் அல்ல 
பாதைகள் மாறியே பயணம் செல்ல

*கண்ணதாசனும் நானும் எலியும் பூனையும் அல்ல
எதுகையும் மோனையும்

*கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ
விட்டுப் போகும்போது சொல்வதுண்டோ

*நில்லடி என்றது நாணம்!
விட்டுச் செல்லடி என்றது ஆசை

*உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா 
வந்தால் வரட்டும் முதுமை 
தனக்குத் தானே துணையென நினைத்தால் 
உலகத்தில் ஏது தனிமை"

அவரின் வார்த்தைக்கென்று ஒரு மதிப்பு உண்டு.

உழை,உழை,உழை!
உழைப்பைக் கொண்டு
பிழை,பிழை,பிழை!
உழைக்காமல் பிழைப்பது
பிழை,பிழை,பிழை!

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday 30 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-16*மணி



படைத்தல் என்பது சிந்தனையில் சிந்திப்பதை தோற்றுவிப்பதே
-டெல்யுஸ்

#வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
-வே.மு பொதியவெற்பன்


வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்.. மயில் குயில் ஆச்சுதடி!’ என்பது வள்ளலார் வரி. தன் அழகின் கர்வத்தால் ஆடும் மயில்போன்ற மனத்தின் ஆணவத்தை இறைவன் அடக்கியதால், இப்போது மயில் வானத்திலே களிநடம் புரிகிறது. வள்ளலாரின் இந்த அபூர்வமான மாயக் கற்பனையை தன் நூலுக்கான தலைப்பாய் தேர்ந்தெடுத்துள்ளார்.

தான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தன் படைப்புகள் கல்லூரியில் நூலாக இருந்த பெருமை இருவருக்குத்தான்.. ஒருவர் வைரமுத்து மற்றவர் வே.மு பொதியவெற்வன் என படித்திருக்கிறேன்.2019ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இக்கட்டுரை தொகுப்பை வாங்கினேன்.விமர்சன கட்டுரையை ஆய்வு நூலாக எழுதுவதில் வே.மு அவர்கள் தனி பாணியை பின்பற்றியுள்ளார்.புனைவு வெளியில் அழகியலும் அரசியலும் மற்றும் கதையாடலாய்விலும் திறம்பட எழுதியுள்ளார்.

புதுமைப்பித்தன் படைப்புகளை முன்வைத்து யதார்த்தவாத படைப்பினை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.புறவய யதார்த்த நிலையும்,படைப்பில் இயல்பாய் வெளிப்படும் யதார்த்தத்தையும் பல்வேறு உதாரணங்கள் வழி வெளிப்படுத்துகிறார்.


இவரின் மேற்கோள்கள் ஒவ்வொன்றும் அந்தக் கட்டுரைக்கு வலு சேர்ப்பது போல் இருக்கும்.திராவிட சிசு புராணம் கட்டுரையில் "சாதியும் சரி,சமயமும் சரி இரண்டும் மிக சாதுரியமானவை. இறுக்கமானது போல் நிமிர்ந்து, நெகிழ்ந்து, சராசரி இந்தியனின் முதுகின் மேல் சவாரி செய்து கொண்டிருக்கின்றனன. இரண்டும் இரட்டைப்பிள்ளைகள். சாதிக்குச் சளிபிடித்தால், சமயத்துக்குத் தொண்டை கமறும்.சமயத்துக்கு ஒரு சிறு ஆபத்து என்றால், சமயம் பார்த்து சாதி துணைக்கு நிற்கும் என  தி.சு.நடராசனின் மேற்கோள் பொருத்தமானது.

சைவம் குறித்த அடத்தியான ஆய்வும், சித்த மரபும், மதம் குறித்த மார்க்சிய நோக்கு போன்றவை குறித்தும் விரிவான கட்டுரையாய் எழுதியுள்ளார்.அறியாமையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம் என்பதற்கு உதாரணமாக
தங்களுடைய கருத்துகளை நிலைநாட்டுகிற வெறியும் எதிராளியை வென்றெடுக்கும் நோக்கமும் சாத்தியமாக்காது எனும் கூற்றினை அடிக்கோடிட்டுள்ளார்.


சிறுதெய்வ வழுபாட்டின் அவசியத்தையும்,ஆ சிவசுப்பிரமணியன்,கா.சிவத்தம்பி ஆகியோரின் ஆய்வுகளையும் எடுத்துக்கூறுகிறார்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலமொன்று எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றதால் அவ்வெற்றியின் அடையாளமாய் தன் குலக்கடவுளின் வாகனமாய் எலியை மாற்றியுள்ளதாக கூறும் ஆ.சிவசுப்பிரமணியனின் தகவல் புதியதாய் இருந்தது.

இறுதியில் கதையாடல் குறித்த ஆய்வில் உரைநடை,புனைக்கதை, அல்புனைவு குறித்து வகைப்படுத்தி விவரித்துள்ளார்.ஆய்வுநூல் என்பதால் மற்ற புத்தகம் போல் இல்லாமல் பொறுமையாய் படிக்கவும்

#ரசித்தது.


*பொருளுக்கு இரையாகுபவன் உண்மைப்பொருளைக் காணமாட்டான்.அதுவே எல்லாவகை மயக்கத்திற்கும் அடிப்படைக் காரணம்.இதுதான் முதலாளியம் வளர்த்த பெரும் மயக்கம்

*மியாவ் என்பது உனக்கு ஓசை எனக்கு சொல்

*அறிவு ஓரிடத்தில் தேங்கும்போது அது அதிகாரமாகிறது.

*அதிகாரம்.. எது தன்னை எதிர்க்கிறதோ அதையே தேடுகிறது-நீட்ஷே

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கற்பதுவே..பகிர்வதுவே-17*மணி




நீங்கள் முழு நிறைவான, தவறே செய்யாத ஒரு நண்பனை தேடிக் கொண்டிருந்தால், நண்பன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு யாருமே இருக்க மாட்டார்கள் 

ரூமி

#நட்பெனும் நந்தவனம்
-இறையன்பு

ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியில் இறையன்புவின் கட்டுரை புத்தகங்கள் கண்ணில் பட்டால் உடனே வாங்கிவிடுவேன். காரணம்..அறியாத, படித்த,அபூர்வ தகவல்கள் அதில் நிச்சயம் இருக்கும்.இப்புத்தகத்திலும் நட்பு குறித்து பல்வேறு தகவல்கள், உலக இலக்கியங்கள், கவிதைகள், சம்பவங்கள், ஜென் எனப் பல்வேறு உதாரணங்களுடன்  முழுத் தொகுப்பாய் வெளிவந்துள்ளது.70 கட்டுரைகளில் நட்பு குறித்து அலசி ஆராய்ந்துள்ளார்.

ஐம்பது எதிரிகளுக்கு மாற்று மருந்து ஒரு நண்பன் எனும் அரிஸ்டாடில் வரியைக் கூறி மனித வாழ்வில் உறவின் உச்சமாய் வளர்ந்திருக்கும் நட்பை பாராட்டுகிறார்.உளவியலில் 4கருத்தாங்கள் ஒருவரை ஈர்ப்பதாக சொல்கிறார்.அவை வலுவூட்டல், பரிமாற்றம்,அறுவாற்றல்,வளர்ச்சி என நான்கு அம்சங்கள் உள்ளதாக சமூகவியலாளர்கள் மனிதர்க்கு மனிதர் ஈர்க்கும் தன்மைக்கு உதாரணமாய் சொல்கிறார்.

விழிகளை விட்டு அகன்றால் மனத்தை விட்டு அகன்றுவிடுவோம் எனும் யதார்த்த வரிகளையும் பதிவிட்டு..உன்னை சாகிற வரை மறக்க மாட்டேன் என்பார்கள்.ஆனால் நம்மைவிட்டு அகன்றதும் மறந்துவிடுவார்கள்.இது நிதர்சனமானது.பள்ளி நண்பர்களை இப்போது பார்த்தால் பழைய அன்னியோன்யம் இருப்பதில்லை. நட்பை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையேல் காலாவதி ஆகிவிடும். நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒற்றுமை எப்போது நினைத்தாலும் தித்தித்துக் கொண்டே இருக்கும்.

முதல் பார்வையில் பூத்த காதல் போல் சிலர் நபர்களை முதலில் பார்க்கும் போதே பிடித்துவிடும் குணம் இருப்பதாக மார்லோ குறிப்பிடுகிறார்.நண்பர்களை கிரிஃப் நான்கு விதமாய் பிரிக்கிறார். அவசிய,ஆத்மார்த்த,நெடுங்கால மற்றும் பேருக்கு நண்பர்கள். முறையே உள்வட்டத்தில் இருப்போர், நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், நெடும்காலமாய் நட்பு பாராட்டுவோர், பேருக்கு நட்பாய் இருப்பது என்கிறார்

ஒருவனோடு நண்பனாகும் போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிறோம்
என்பார் லஷ்மி சரவணகுமார்.இது நட்புக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம். ஆரோக்யமான நட்பு குறித்தும். நட்பில்லாத தனிமை குறித்தும், நமக்கான நண்பர்களை தேர்ந்தெடுப்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

காவியத்தில்,இலக்கியத்தில், சங்கப்பாடல்களில், திருக்குறளில் ராமயணத்தில் அமைந்த நட்புகள் குறித்தும் கூறிகிறார். மகாபாரதத்தில் கண்ணன் ஒரு முறை அர்ஜுனா! அதோ பார் பறவை என்கிறர்.ஆமாம் என்கிறான் அர்ஜுனன். கொக்காக இருக்குமோ என்றதும் ஆமாம் கொக்கு என்கிறான். நான் என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்வாயா என்றதும் ஆமாம் உன்னை ஒருபோதும் மறுத்துப் பேச மாட்டேன் என்கிறார்.இது போல சுவைமிகு சம்பவங்களும் படிக்கும் போது இன்பமாய் இருக்கிறது.

மற்றொரு இடத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கும் சிறந்த பொதுவுடமை வாதியாக விளங்கிய சத்பூரி சக்லத் வாலாவிற்கும் ஏற்பட்ட நட்பு முக்கியமானதாக இருக்கிறது. இருவருமே செல்வந்தர்கள். இவர் ஜே.ஆர்.டாட்டாவின் சகோதரியின் மகன். நிறைய படித்தவர். செல்வச் செழிப்பில் இருந்தாலும் இதயத்தில் பொதுவுடமை கருத்தை வளர்த்தவர் சிங்காரவேலர்.இவரைக் காட்டிலும் 14 வயது குறைவாக இருந்தாலும் நெடுங்காலம் கடித தொடர்பு மூலமாக அவரை தன் தலைவராக மதித்துப் போற்றினார். 

அதேபோல ஐன்ஸ்டீனும் சாப்ளினும் ஒன்றாக சென்றபோது சாப்ளினுக்கு கைதட்டல் அதிகம் இருந்தது . எல்லாருக்கும் என் படங்கள் புரிந்து இருப்பதால் கைதட்டுகிறார்கள். உங்கள் கண்டுபிடிப்பை யாருக்கும் புரியாததால் உங்களைப் பார்த்து கைதட்டுகிறார்கள் என்று சாப்ளின் குறிப்பிட்டாராம்

நிலவில் கால் பதித்த ஆம்ஸ்டிராங் மற்றும் அல்ட்ரினுடைய நட்பு குறித்தும், எட்மண்ட் ஹிலாரி டென்சிங் குறித்தும் சுவையான தகவல்களை நமக்கு பகிர்ந்துள்ளார்

#ரசித்தவை

*இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மெளனங்களே".
-மார்ட்டின் லூதர்கிங்

*ஒருவர் எந்த அளவிற்கு சொந்த செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பது அவர் நம்மீது வைத்திருக்கும் நட்பின் அடையாளமாக இருக்கிறது லாரன்ஸ் தாமஸ்

*புதிய நண்பர்களை சம்பாதியுங்கள் ஆனால் பழைய நண்பர்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் 

*நட்பு தூய்மையாகவும் தூய்மை நட்பை
உள்ளடக்கியதாகவும் இருக்கும்

*தண்டலை கிராமத்திற்கு காமராஜரை அண்ணா அழைத்திருந்தார்.அப்போது மழை பொழிந்த போது காமராஜர் நனையாமல் இருக்க தொண்டரிடமிருந்து குடை வாங்கி காமராஜருக்கு பிடித்தார் அண்ணா

நேர்த்தியான சுவையான தகவல்கள் மூலம் நம்மையும் நட்புடன் ஈர்க்க வைக்கிறது இப்புத்தகம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday 28 March 2021

கூடல் தாரிக்

தொட்டி மீனுக்கு
ஆறுதல் சொன்னது 
குழம்பு மீன்
பயப்படாதே
மனிதர்களுக்கு
பிணங்களைத் தான் பிடிக்கும் !

-கூடல் தாரிக்

தங்கம் மூர்த்தி

நடைப்பயிற்சி செய்வோரில்
பலரும்
நடைப்பயிற்சி செய்வதில்லை

அலைபேசியில் பேசியே
அத்தனை சுற்றும்
முடிப்போருண்டு

மருத்துவருக்கு பயந்தும்
மனைவிக்கு பயந்தும்
வருவோருண்டு

பாதியில் நிறுத்தி
பழங்கதை உரைத்து
கெடுப்போருண்டு

என்போல்;
எப்போதாவது
நடப்போருண்டு

-தங்கம் மூர்த்தி

கற்பதுவே பகிர்வதுவே-15*மணி



சிறுகதை என்பது சிறுசம்பவம், சித்திரம்,நிகழ்ச்சிக் குறிப்பு என எதுவும் இருக்கலாம்.இவைகள் அமரத்துவம் அடைய வேண்டுமானால் சாதாரண நிகழ்வுகளின் இடையில் ஒரு அழியா சம்பவத்தையும், பரந்த காலத்திற்கிடையில் நிரந்தரமான ஒரு சிறுகணத்தை ஒரு யுகம் போல் தோன்றும் படியும் செய்ய வேண்டும்

-படித்தது

#நன்மாறன் கோட்டைக் கதை
-இமையம்

ஒரு சிறுகதை என்பதை படிக்கத் துவங்கிய சிறிது நேரத்தில் புதைகுழியில் மாட்டிய நம் கால் போல் கதை இழுக்க வேண்டும். சம்பவங்களும்,உரையாடல்களும் அதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.சிறுகதை துவங்கிய சிறிது நேரத்தில்
வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும்,ஓர் அவசரத்தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பார் தி.ஜானகிராமன். அப்படி முழுமையாய் நம்மை ஆட்கொண்டுவிடுவனதான் இமையத்தின் சிறுகதைகள்.

இத்தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவங்கள். குறிப்பாக முதல்கதையான நன்மாறன் கோட்டைக்கதை.விகடனில் வந்த இக்கதை படித்த போதே அதிகம் கனத்தது.அரசுப்பள்ளியில் தன் இரு மகனுக்கும் டி.சி கேட்டு வந்து நிற்கும் பெண்ணின் பின்னால் இருந்த சாதிக்கொடுமையை தோலுருத்துக் காட்டுவார்.

மாடுகளுக்காக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தையத்தில் யதெச்சையாக அப்பெண்ணின் கணவரின் மாடு வெற்றி பெறுகிறது.யாருடைய வெற்றியை கூட ஏற்றுக் கொள்வோம்.ஆனால் ஒரு ஒடுக்கப்பட்டவனின் வெற்றியை ஒரு போதும் ஆதிக்க சாதி ஒத்துக்கொள்ளாது என்பதையும் அதற்கு பின் என்ன நடந்தது, ஏன் டி.சி கேட்கிறார் என்பதையும் அழுத்தமாய் சொல்கிறது இக்கதை.25 பக்கமும் வெறும் உரையாடல் மூலம் மட்டும் கதையை கட்டமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறுகதை என்பது முடிவதற்குச் சற்று முன்பு தொடங்குகிறது என்பார்
சுஜாதா."கீழ்சாதி பொணத்தை போய் தூக்கிட்டேனனே.இந்த வேலையை ராஜினாமா செய்யனும்னு புதிதாய் காவலராய் சேர்ந்த ஏட்டு இன்ஸ்பெக்டரிடம் உரையாடும் கதைதான் இது.இன்ஸ்பெக்டர்
அடுக்கும் காரணமும் சீனிவாசன் இறுதியில் என்ன செய்தான் என்பதும் கதை.இதெல்லாம் இப்பிடியெல்லாம் நடக்குமானு நீங்க கேட்டால் காலையில் அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்பி செய்தித்தாளில் கொலை, கொள்ளை,நடுப்பக்க கட்டுரையெல்லாம படிக்காம வெறும் சினிமா,ஸ்போர்ட்ஸ் நியூஸ் மட்டும் படிக்கிற ஆள் என்று நீங்களே உங்களை சொல்லிக்கொள்ளலாம்.

பணியாரக்காரம்மா- கண்ணன் செட்டியார் மீதான அன்பை பணியாரக்காரம்மா கதையிலும்,
ஒரே கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் தன் கட்சியின் வெற்றியை விட தன்னுடைய சாதியின் வெற்றிதான் முக்கியம் என்று கருதி தன் சொந்தக் கட்சிக்காரனின் வெற்றியை தடுக்கும் கட்சி மாவட்ட செயலாளரின் கதைதான் 'நம்பாளு" சிறுகதை

வீட்டிலிருந்த நகை திருடுபோனதற்காகக் கணவனிடம் மாட்டடி வாங்கியதோடு கோயிலில் பிராது மனு கட்டிப்போட்டால் நகை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் தங்கமணியை அலைக்கழிக்கும் கோயில் நிர்வாகம், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் ஒரு பெண்ணின் மனதை நெகிழ்ச்சியோடு நம்மையும் தங்கமணிக்காக பரிதாபப்பட வைக்கிறார்.

இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பை தட்டிக்கேட்டதற்காக, ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் பிம்பத்தை குலைத்துப் போடும் தலைக்கடன் கதையில் வரும் மனைவி கதாபாத்திரம் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சித்தாளான தன்னிடம் தவறான எண்ணம் கொண்டு வரும் முதலாளியிடம் சொல்லும் ஒற்றைச் சொல்லில் ஆண் சமூகத்தையே துவம்சம் செய்யும் சாந்தா கதை பெண்ணின் நேர்மையான குணத்தை பிரதிபலிக்கிறது.

அடிபடாமலும் சாகாமலும் சாலையின் அடுத்த பக்கம் போவது தினமும் ஒரு அதிசயம் என இரண்டாவது ஷிப்ட் கதையில் பணிக்கு செல்லும் பெண்ணின் மனநிலையை சொல்லியிருப்பார் கந்தர்வன்.
அதே போல் டவுன்பஸ்ஸில் பிடித்த இடத்தை காப்பாற்றிக் கொள்ளவும்,பாலியல் சீண்டல்,
மாதவிலக்கு பிரச்சனையோடு எதிர்கொள்ளும் பிரியங்காவின் உணர்வை ஆலடி பஸ் கதையில் நம்மையும் பயணிக்க வைத்திருப்பார்.

கட்சியில் சீட்டுக்கிடைக்காத கடைநிலை கட்சிக்காரன் மனநிலையை கடைசி கதையில் விவரித்திருப்பார்.எழுத்தாளர் இமையம் எந்த இடத்திலும் பெண்ணியம் பேசியோ நீதியை நிலைநாட்டியோ, உலகை மாற்றவோ முயலாமல் உள்ளதை உள்ளபடியே படம் பிடித்துக் காட்டுகிறார்.அந்த படத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர வைத்துவிடுகிறார்.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கலைஞர்

அப்போது கலைஞர் முதல்வராக இருந்த சமயம்.. முக்கிய கோப்புகள் அனைத்தும் அதிகாரிகளால் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்கள்.கோப்பு ஒருவழியாக அவரின் மேசைக்கு வந்தது.. அந்தக் கோப்பில் இப்படி எழுதினாராம்..

"மெத்தை அளவுக்கு கோப்பு
நத்தை அளவுக்கு ஊர்கிறது"

Saturday 27 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-14*மணி



"இருத்தல் என்பதே சிந்தனையை
நிறுவுவதுதான்"

#ஆச்சர்யமூட்டும் அறிவியல்
-ஹாலாஸ்யன்

தினமணிக் கதிரில் தொடராய் வந்த அறிவியல் கட்டுரைகள்.. அன்றாடம் பார்க்கும் காட்சிகள், பொருட்களின் பின்னாலிருக்கும் அறிவியலை சுவாரஸ்யமாய் சொல்கிறது. அறிவியலை பொறுத்த வரை பாமரனுக்கு சொன்னால் தான் பண்டிதனும் புரிந்து கொள்வான்.

#பறவையும் புல்லட் ரயிலும்

பறவையைக் கண்டான்.விமானம் படைத்தான் என்பது போல் புல்லட் ரயிலும் படைத்தது பறவையின் தயவே.1964ல் ஷின்கான்சனின் புல்லட் ரயில் பயன்பாட்டு வந்தது. ஒசாகா-ஃபுகுவோகா இடையில்

515கி.மீ நீளமுள்ள ரயில்திட்டம். துவக்கத்தில் பெரும்சத்தம் உண்டாக்கியது. மின் கம்பியை தொடும் கம்பிக்கு pantograph என பெயர்.காற்றை கிழிக்கும்போது உஷ் என்ற சத்தம் எழுப்பியது. ஆற்றலும் வீணானது.

சரிக்கட்ட வேண்டிய பொறுப்பு எய்ஜி நகாட்ஷூ வுக்கு ஏற்பட்டது. அவர் ஒரு பறவை ஆர்வலர்.3 பறவை அமைப்பை பொருத்துகிறார்.முதலில் ஆந்தை.

ஆந்தையின் சிறப்பே சத்தமின்றி பறக்கும் இறக்கை அமைப்பு இருப்பது.இரவில் பறப்பதால் சத்தமின்றி இரை தேட பறக்கும்போது சத்தம் வராமல் இருக்கும் அமைப்பு கொண்டது..இதன் வடிவமைப்பை மின்சாரகம்பி தொடும் பகுதிக்கு அளித்தார்.

அடுத்து அடில் பென் குயின் பனிக்கட்டியில் உராய்வு இல்லாமல் சறுக்கும்.இதனை ரயில் மின் கம்பிக்கு பொறுத்தினார்.

அடுத்து மீன் கொத்தி.இதன் சிறப்பு கூர்மையான அலகு. ரயில் முகப்பிற்கு பொருத்தினார். சுரங்கத்தில் நுழையும் போது ஏற்படும் சத்தத்தை போக்க மீன் கொத்தியின் அலகு போன்ற அமைப்பை உருவாக்கினார்.நாம் வடிவமைக்கு பொருட்களுக்கு முன்னோடியாய் இயற்கையே கச்சிதமாய் வடிவமைத்துள்ளது வியப்பைத் தருகிறது.

ஒரு சுத்துமிட்டாய் மாதிரி போல் வைத்துக் கொண்டு கருவியை வடிவமைத்து மலேரியா நோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிப்பது என அறியாத தகவல்கள் இதில் இருக்கின்றன.

#ரேகை

ரேகை குறித்து சுவாரஸ்யமான தகவல் தருகிறது.loop,arch,whorl விரல் ரேகையில் இருக்கும் மடிப்பு, சுழிவு,வளைவுகள்.இன்றைய ரேகை பரிசோதனை கருவி மேற்சொன்னவற்றை தேடுகின்றன.உ.ம் நம்.ரேகையை தேடி "சுழிக்கு கீழ் செங்குத்தா 2மிமீ தள்ளி ஒரு வளைவு,அங்கிருந்து லெப்ட்ல நாலு மி.மீ தள்ளி மடிப்பு இருப்பதை குறித்து கொண்டு நம்மை அடையாளம் கொள்ளும்.

*முதலில் கேமரா மூலம் படமெடுத்து ஒப்பிட்டு பார்த்தனர்

*அடுத்து capacitive fingerprint sensor கருவி வந்தது.நம் விரல் ரேகைகளை விட,சிறிய மின்தேக்கி மூலம் மெல்லிய பரப்புக்கு மின்சாரம் பாயச்செய்து மின்னேற்றம் கொடுத்து விரலை ஒற்றும்போது மேடுபள்ளம் மின்னேற்ற மாறுதல் அடைந்து கைரேகை உள்வாங்கும்.உ.ம் தற்போதைய கைபேசி.

*பின் மீயொலி மூலம் இதே போன்று ஆனால் விரல் ஒற்றும்போது ஏற்படும் எதிரொலிப்பு மூலம்

*விரல் வெட்டியெடுத்து வைத்தால் அது உயிருள்ளதா,உயிரற்றதா என கண்டுபிடித்துவிடும்.ஆனால் தூங்கும்போது ரேகை பயன்படுத்த முடியும்.எலக்ட்ரானிக் தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு என்பது பொருட்களுக்கில்லை மனதுக்குத்தான்.

#கொரோனா வந்ததிலிருந்து வெப்பநிலை அளந்து அடிக்கடி பார்க்கிறோம்.இதில் ஒரு சந்தேகம் வரும் வெப்பம் மற்றும் வெப்பநிலை. வெப்பம் என்பது பொருளின் மொத்த ஆற்றலின் அளவீடு.வெப்பநிலை என்பது சராசரி ஆற்றலின் வெளிப்பாடு.

எல்லா நீரின் கொதிலையும் நூறு டிகிரி வந்திடுமா என்றால் இல்லை.நான் வகுப்பறையில் பயன்படுத்தும் போது 94 டிகிரியிலயே கொதித்து விட்டது. அதாவது சாதாரண காற்றழுத்த நிலையில் சுத்தமான நீர் உறையும் போது பூஜ்யம், கொதிக்கும்போது நூறு டிகிரி என அளவீடு வைத்திருக்கிறார்கள்.காற்றழுத்தம், நீர் மாறும் போது அளவீடுகள் மாறும்.

உடல் வெப்பநிலையை அளவிட தெர்மாமீட்டர் இருக்கின்றன. தற்போது கேப்ஸ்யூல் மாத்திரை வடிவில் தெர்மாமீட்டர் வந்துவிட்டன.தண்ணீருடன் விழுங்கினால் உள்ளே போய் வெப்பநிலை உணர்ந்து அலையை பரப்பிவிட்டு வெளியேறிவிடும். இது இன்னும் பிரபலமாகவில்லை

#பட்டனைத் தட்டினால்

ரிமோட் பட்டன் பற்றி சொல்லும் போது பல்வேறு கட்டத்துக்கு பின் அகச்சிவப்பு கதிர் பயன்படுத்தப்படுகிறது.

கார் போன் வாகனங்களில் ரேடியோ அலைவீச்சில் இயங்குபவை.இது பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது gesture recognition என்னும் கையசைவு புரிந்து செயல்படும் கருவி வடிவமைத்துள்ளனர்.

#drink and drive

Drink and drive ல ட்ராபிக் போலிஸ்கிட்ட மாட்டாம போறது ஆயக்கலையில் 65வது.breath analyzer எனும் கருவி மூச்சுக்காற்றில் உற்சாகப் பானத்தை கண்டறிகிறது. இதில் 3 வகை உள்ளன

1)ஊதும் கருவியில் பொட்டாசியம் நைட்ரேட் உடன் கந்தக அமிலம் இருக்கும்.ஊதும் காற்றுடன் வினை புரிந்து நிறம் மாறும்.ஆனால் நேரமாகும்

2)அகச்சிவப்பு கதிர் மூலம் காற்று ஊத ஒரு இடம்,ஒருபக்கம் அகச்சிவப்பு கதிர் உமிழும் விளக்கு மற்றொரு முனையில் அகச்சிவப்பு கதிர் விழுங்கப்பட்டிருப்பதை கணித்து கச்சிதமாய் ஃபைன் வாங்கிடலாம்.வேலை ஈசி.

3)நவீனவகை.காற்றிலிருக்கும் ஆக்சிஜனோடு சாராயம் வினைபுரிந்து எலக்ட்ரான் பரிமாற்றத்தில் நுண்ணிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இப்படியும் கண்டுபிடிக்கலாம்.  இந்தியாவில் இன்னும் வரல.

#கான்க்ரீட்

இம்முறை ரோமானியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.கான்கிரீட் என்பது aggregate என அழைக்கும் ஜல்லி, சரளைக்கல்,சிமென்ட் மண் கலவை.இதுதான் கடினமும் வலிமையும் கொடுப்பது.

இதற்கான எமன் -விரிசல். விரிசல் விட்டால் காற்றும் ஈரப்பதமும் புகுந்தால் இரும்புக்கம்பி துருப்பிடிக்கும்.
குளிர்வித்தால் விரியும் ஒரே பொருள் நீர்தான். தானே விரிசலை சரிசெய்ய கண்டுபிடித்துள்ளனர். சிமெண்டோடு பாக்டீரியாவை கலந்து அதாவது bacillus psuedofirmus,sporosarcina pastuerii. இரண்டும் காரத்தன்மை.இது சுண்ணாம்பை சுரக்கும் திறனுடையவை.

கால்சியம் லாக்டேட் எனும் பொருளை பாக்டீரியாவுக்கு தின்னக்கொடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.இது சுண்ணாம்பு சுரந்து விரிசலை சரிசெய்யும்.இதுபோல் அடைக்க குறிப்பிட்ட அளவுதான் விரிசல் இருக்க வேண்டும்.

இதுபோல் பயனுள்ள 32 புதுமையான தகவல்கள் அடங்கியுள்ளது.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday 26 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-13*மணி




நாட்டு தெய்வங்களை மக்களின் தெய்வங்களாகப் பார்க்கிறேன். இந்த ஆன்மிகம் மக்களுடைய ஆன்மிகம். அதாவது, இது நிறுவனமயமாக்கப்பட்டது கிடையாது. அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம்.
-தொ.ப

#தெய்வம் என்பதோர்
-தொ.பரமசிவன் 

2008ம் ஆண்டு இப்புத்தகத்தை வாசிக்கும் போது கிடைத்த வியப்பு இன்றளவும் இருக்கிறது எனில் தொ.ப வின் எழுத்துக்கள் தான்.ஒரு பெரியாரியவாதியான தொ.ப நாட்டார் தெய்வங்கள் குறித்து பேசுவதும் நியாயமான காரணங்களை அடுக்குவதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் வலுசேர்க்கிறது.

நமது குலதெய்வங்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களாகத்தான் இருக்கும்.அவை ஏன் எனும் காரணத்தை
தாய் தெய்வங்கள் கட்டுரையில் மிகவும் விரிவாக விளக்கியுள்ளார். உதாரணத்திற்கு முப்புறமும் கடல் இருந்ததால் வடதிசையிலிருந்து பகைவர் வருவதை அழிக்க போர்தெய்வமாக 'கொற்றவை'எனும் பெயரில் பெண் தெய்வங்கள் அழைக்கபட்டன.இதன் வேர்ச்சொல் கொல் என்பதாகும். ஆயுதம் ஏந்தியபடி சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பர்.இன்றும் நாங்கள் வழிபடும் அங்காளம்மன் சிலை வடக்கு நோக்கியே இருக்கிறது.

தாய் தெய்வங்களில் விழாக்களை விட சடங்குகளே அதிகம் செய்யப்படுகின்றன.இவை தவிர வைதீக சார்பின்றி வெயிலுகந்தாள், வாள்மேல் நடந்தாள், மாரியம்மன் மற்றும் வடபகுதியில் ஆயி என முடியும் தெய்வங்கள் குழுமாயி,சிலம்பாயி போன்றவையும், முன்பு அரச குடும்பத்தில் சமாதி செய்யப்பட்ட அரச குடும்ப பெண்களை உலகம்மை, உலகநாயகி என வழிபடுகின்றனர் தென்மாவட்டங்களில்.

கத்தோலிக்கர்களும் தாய் வழிபாட்டில் தூய மரியாளை வழிபட்டனர்.வீரமா முனிவர் தான் கட்டிய கோவிலில் பெரிய நாயகி என பெயரிட்டதுடன் காவலில் உள்ள ஊர்க்கு திருக்காவலூர் எனவும் பெயரிட்டார் என்பதை சுட்டுகிறார்.ஆண்கடவுள்களில் வீரனாகவும்,தெய்வமாகவும் வழிபட்ட சுடலைமாடன்,கருப்பசாமி, காத்தவராயன் உள்ளனர்.ஆண் தெய்வங்கள் பெண் தெய்வங்களை விட குறைவாய் உள்ளதை அறியலாம்.

சித்திர குப்த நாயனார் நாட்டர் கதைப்பாடலில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை சொல்கிறார். எமனுக்கு உதவியாக இருப்பதாக நம்பப்படும் குப்தன் எனும் பெயர் இன்று குப்தா என்று வடமாநிலங்களில் பெயராக இருப்பதை அறியலாம்( புபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தா).

அடித்தள மக்கள் வாழ்விலிருந்தும் வாக்கிலிருந்தும் பெறப்படும் செய்திகளால் ஆக்கப்படும் வரலாறு மட்டுமே ஜனநாயகத்தன்மை உடையது என்பார் கோசாம்பி.
கடவுளுக்கும் மக்களுக்கும் குறுக்கே யாரும் இல்லாமல் சிறுதெய்வத்தை வழிபட முடியும். கிராம எல்லையில் நிற்கிற வீரனை நீங்கள் தொட்டுக் கும்பிடலாம். படையல் போடும்போது குடும்பப் பெரியவர்தான் பல இடங்களில் பூஜைசெய்கிறார். இந்த ஜனநாயகம் நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டில் கிடையாது.

பெரு தெய்வ வழிபாட்டில் நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஆளை நிறுத்துகிறது; சம்பிரதாயங்களை நிறுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன் வழியாகக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டே பிராமணியம் வாழ்கிறது.
முன்பெல்லாம் ஜோசியர்கள் பரிகாரம் கூட குலதெய்வத்தை தான் வழிபட சொல்வார்கள்.காரணம் இவர்கள் அந்த குலத்தின் முன்னோர்கள்.ஆனால் இன்று பெருந்தெய்வ வழிபாட்டை வற்புறுத்துகின்றனர்.

மேலும் வள்ளலார் குறித்தும், தில்லை தேவார பாடல்கள் குறித்தும், வைணவர்களிலும் சாதி அமைப்புக்கு எதிரான மனநிலை கொண்ட தொண்டரடி பொடியாவார்,பெரியாழ்வாரை குறிப்பிடுகிறார்.சாதிய ரீதியான ஒடுக்கு முறையும் அப்போது இருந்தது. உதாரணத்திற்கு தாழ்த்தப்பட்டோர் முளைப்பாரி எடுக்கும் உரிமை இல்லை.

*நாட்டார் தெய்வங்கள் சாதிக்கயிற்றால் கட்டப்பட்டவை எனும் கேள்விக்கும்
பார்ப்பினியத்தின் பங்கு குறித்தும், பக்தி இலக்கிய ஆய்வு குறித்தும், பெரியாரின் பார்வையில் சமய நல்லிணக்கம் குறித்திம் விரிவாக விளக்கியுள்ளார்.
பிள்ளையார் சிலையைத்தான் பெரியார் உடைத்தார், சுடலைமாடன் சிலையை அல்ல..ஏன் உடைக்கவில்லை எனும்  பதிலையும் உள்ளடக்கியது இப்புத்தகம்.

#படித்ததில் பிடித்தது

*குழந்தை பெற்ற தாயினை செல்வி என்ற சொல் வழங்கப்படுவதை காணப்படுகிறது. காடுகெழு செல்வி,கடல் கெழு செல்வி எனும் தொடர் மூலமும் பிற்காலத்தில் அம்மன் எனும் சொல்போல முன்பு செல்வி என பயன்படுத்தியுள்ளனர்.

*சங்கராச்சாரியர்கள் கைப்பற்றும் முன் காமாட்சி அம்மன் கோவில்
கம்மாளர் சாதியார்க்குச் சொந்தமாய் இருந்தது.

*சங்க இலக்கியத்தில் கோட்டம் என்பது கோயிலைக் குறிப்பது.காஞ்சி கோவில் காமக்கோட்டம் என்பது பின்னர் காமகோடி என மாறியது.

*நெல்லை,குமரியில் சமண தெய்வமான இசக்கியம்மன் அதே பெயரில் பகவதி அம்மன் என இன்றும் பல இடங்களில் வழிபடுகின்றனர்.

ஒன்றை திட்டமிட்டு பழசாக்குவது தான் உலகமயம் என்பார்கள்.இப்போது சிறுதெய்வத்தையும் மறக்கடிக்கும் மனநிலைக்கு தள்ளியுள்ளனர். பளிங்கு தரையில்,சாமியை ஒரு நிமிடம் பார்த்து தள்ளி விடும் சாமிதான் பவர் புல்லானது என நம்ப வைத்துவிட்டனர்.
குலதெய்வ பெயர் வைப்பது இழிவாக பார்க்கப்படுகிறது.நாகரிகமாய் இல்லை என நக்கலடிக்கப்படுகிறது.ஆனாலும் வழிவிட்ட அய்யனார், வேம்படி முத்து, பொன்மாடத்தி, பதினெட்டாம் படியான், பொன்.இருளாண்டி எனும் பெயர்கள் கண்ணில் படும்போது கிராமத்தின் வேர்கள் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது.எங்கிருந்தோ வந்த சாமியை வழிபடும் நாம் முன்னோரான குல தெய்வத்தையும் வழிபடலாம். ஏனெனில் சாமி தூணிலும், துரும்பிலும், பெரு தெய்வத்திலும் சிறுதெய்வத்திலும் கூட இருக்கும்.
கடவுள் நம்பிக்கையில் நம்பிக்கையை கைவிட்டு விட்டு கடவுளை மட்டும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

 .

Thursday 25 March 2021

பாரதியார்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்

-பாரதியார்

நர்சிம்

உன்
பயணத்தில் இடர்ப்பட்ட
முதல் கல் நான்

என்
நெடும்பயணத்தில்
நான் இளைப்பாறிய
நிழல் மரம்
நீ

-நர்சிம்

கற்பதுவே..பகிர்வதுவே-12-மணி




இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல்
 -மார்ஷல் மக்லூகன்

#60 நாட்களில் அரசியல்
-கோமல் அன்பரசன்

நகைச்சுவைங்கிறது எல்லா இடத்திலும் இருக்கிறது னு சொல்லும் ஸ்டேண்ட் அப் காமெடியன்போல அரசியலும் எல்லா இடத்திலும் இருக்கு.இதை எல்லாத்தையும் கூட்டி வரும் கூட்டுத்தொகை தான் அரசியல்.சுதந்திரம் கிடைத்த போது டாக்குமென்ட்ரி அரசியலாய் இருந்தது இப்போது கமர்சியல் அரசியலாகிவிட்டது பணத்தினால்.
அப்படிப்பட்ட அரசியலை கார் சைடு மிரர்ல பார்த்த மாதிரி இப்புத்தகம் கடந்த கால அரசியலை, மக்கள் மனநிலையை அப்பிடியே ட்ரைவிங் சீட்ல உட்கார்ந்து ஜஸ்ட் லைக் தட் பார்க்க வைக்கிறது.

அரசியல் ஒரு சாக்கடைங்க எனச் சொல்லும் கூட்டத்தில் துவங்கி ஓட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர் வரை உள்ள குறைகளை சுட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். நன் கொடைதான் கட்சிக்கு குளுக்கோஸ் மாதிரி.மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ரூ20,000க்கும் மேல் பெறுவதை மட்டும் வெளிப்படையாய் சொன்னால் போதும் என்பதால் எல்லாகட்சிகளும் 20000க்கு கீழே காட்டிவிடுவதால் பிரச்சனையில்லை.
பல கோடிகள் புரள்வது இப்படித்தான்.

மக்கள் இப்போதெல்லாம் நல்ல படங்களை எதிர்பார்ப்பதில்லை. ஓரளவுக்கு உட்கார்ந்து பார்ப்பது போல் இருந்தால் போதுமென நினைக்கிறார்கள்.அந்த வகையில் அரசியல்வாதிகளும் அடிக்கிறதை அடிச்சிட்டு ஓரளவுக்கு தொகுதிக்கு செய்தால் போதும்னு முடிவுக்கு வந்திட்டாங்க.இன்னொரு குரூப் ஓட்டுப் போட்டு முடிஞ்சதும் அப்புறம் எந்த கவலையும் இல்லாமல் அவருண்டு அவர் வேலையுண்டுனு காணாமல் போய்டுறாங்க.மீறிப் போனால் நிழல்குடை, தண்ணீர் தொட்டி,பள்ளி கட்டுவாங்க.ஏன்னா அதில் அவர்கள் பெயர்கள் தெரிவதால்.

தேசிய கட்சிகள் மாநில அளவில் வலுவான தலைமையை வைத்திருந்தனர் என்பதற்கு நேருவே உதாரணம்.கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா,தமிழ்நாட்டில் காமராஜர் போல் தம் கட்சியின் முகங்களாக மாநில அளவில் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது.
இன்றைக்கு இது மிஸ்ஸிங். விளைவு தேசிய கட்சிகளுக்கு தேய்பிறை ஆரம்பித்தது தான்.

சத்திய மூர்த்தியிடம் காமராஜர், பெரியாரிடம் அண்ணா, கலைஞர், என தலைமைப்பண்பை குருகுலத்தில் கற்பது போல் கற்றனர். இன்று 60 நாட்களில் அரசியல் கற்று கத்துக்குட்டிகள் பெருகிவிட்டதாய் கூறுகிறார்.ஒரு சாதிக்கட்சியை எடுத்துக்கொண்டால் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராய் பிரிந்து சாதியை விட சாதிக்கட்சிகள் அதிகம் உள்ளதை இன்று கண்கூட பார்க்கிறோம்.

அரசியலில் இதுதான் நடக்குமென்று அறுதியிட்டு கூற முடியுமா? அதுக்கு ஒரு சான்று..எம்.ஜி.ஆர் தனித்து கட்சி ஆரம்பித்து திண்டுக்கல்லில் மாயத்தேவர் வெற்றி பெற்ற போது முரசொலி மாறனிடம் செய்தியாளர்கள் கேட்கின்றனர்..
'அப்போ..அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் ஜெயிக்குமா? ரொம்பவும் நக்கலாக பதில் சொன்னார் மாறன்..'அட நீங்க வேற..விட்டா ஜெயலலிதா தான் தமிழ்நாட்டோட முதலமைச்சராயிடுவார்னு சொல்வீங்க்ச் போல! என்றார். அதன் பின் நடந்தது வரலாறு.

அதேபோல் சிவாஜி,பாக்யராஜ், டி.ஆர். எஸ்.எஸ்.ஆர்,கார்த்திக் என சறுக்கிய முகங்களும் உண்டு.
சாதி அரசியல் அடையாளமா? அதிகாரமா? கட்டுரையில் உயர் பதவியில் அதிகாரமில்லா பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர்.
பேராசிரியர் அப்துல் காதர் பகிர்ந்த செய்தி..தலைவர்களின் பெயர்கள் மாவட்டத்திற்கு வைத்து பின் எடுத்த போது எல்லா பேருந்து மீதும் கல்லடி பட்டது.ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஒன்றும் ஆகவில்லையாம்.ஏனெனில் அது திருவள்ளுவர் பெயரில் இருந்ததால் அவர் என்ன சாதியென தெரியவில்லையென சொன்னார்களாம்.

மேயராக இருந்த சர்.பிட்டி தியாகராயர் வேல்ஸ் இளவரசர் வந்த போது இன்னென்ன உடைகளை அணிய வேண்டும் என விதித்த கட்டளை மீறி நான் வேட்டியுடன் தான் வருவேன் என தீரம் காட்டிய கொள்கை புலியை அறிந்து கொள்ள முடிந்தது.மாநில சுயாட்சியுடன் இருந்த தலைவரை முன்னோடியாக எடுத்துக்கொள்ளலாம்

அரசியல்வாதிகளின் பேச்சு குறித்து..
"நாளைக்கு,அடுத்த வாரம், அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். பின் அதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை விளக்கத் தெரிய வேண்டும்

-அரசியல் செய்வதற்கான அடிப்படை இலக்கணமாய் வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொன்னது.

புகழுக்காக நீங்கள் போடும் தூண்டிலில்
புழுவாக எளிமை மட்டும் இருக்கட்டும் என்றார் அண்ணா.காலப்போக்கில் இது முற்றிலும் மாறிவிட்டது.டை அடித்த, பேசியல் செய்த முகம்,விலை உயர்ந்த ஆடை என அரசியல்வாதிகளின் முகமும் அரசியலும் மாறிவிட்டது. பொதுக்கூட்டங்கள் மாலை நேர பல்கலை கழகம் என வர்ணிப்பர்.காரணம் இலக்கியம் உலக வரலாறு என மிளிறும். இன்று வசைபாடுதல் மட்டுமே பிரதானமாய் இருப்பது வருத்தத்திற்குரியது.

*சட்டசபை நடக்காத காலத்தில் தினசரி அலுவலகம் வர வேண்டும்.

*நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொகுதிக்குப் போக வேண்டும்.

*வெளியூர்க்காரர்கள் வேறு தொகுதியில் ஜெயித்தால் அந்ர தொகுதிக்கே குடி பெயர்ந்திட வேண்டும்.என சட்டம் வந்தால் மட்டுமே சாமானியர்களின் எண்ணம் நிறைவேறும்.

*குதிரை பேரம்- முற்காலத்தில் குதிரைகள் வாங்க பண்டமாற்று முறையில் மிளகு,தங்கம் கொண்டுபோய் கடல் கடந்து போய் வாங்கி வந்திருக்கிறார்கள்.horse trading என்பது குதிரை பேரம் என்று எம்.எல்.ஏக்களை வாங்க பயன்படுத்திக் கொண்டனர்.

*நாடாளுமன்றத்தில் ஊழல் புகாருக்கு ஆளான டால்மியா குறித்து ஆதாரங்களுடன் ஃபெரோஸ் காந்தி நேருவுக்கு எதிராக பேசியுள்ளார்.இவர் நேருவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது

*பந்தல்கால் மரங்களை நடும் பணியில் இருந்த யானை, குழியில் பூனை படுத்திருந்ததால் கம்பத்தை நடவில்லை.ஆளும் கட்சி என்ற மரத்தை பூனை மீதுநடாத யானையைப் போல் சபாநாயகர் இருந்து எதிர்க்கட்சியை காக்க வேண்டும்-அண்ணா

*சாதாரண பேச்சு கவர்ச்சிக்கரமான தேர்தல் முழக்கமாக மாறும்போது மக்களை யோசிக்க வைக்கிறது.

மக்களும் அரசியலை கவனிக்காமல் இருப்பது அரசியல்வாதிகளுக்கு ப்ளஸ்ஸாக போய்விட்டது. ஓட்டுப் போட்டதும் அவரவர் வேலைகளை அவரவர் பார்க்கச் சென்றுவிடுகின்றனர்.ஐந்து ஆண்டு கழித்து மக்கள் ஆட்சியாளர்களை வெறுப்பதும்,மற்ற தலைவரை நம்புவதும் தொடர்கதையாகி விட்டது. இணையத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு பதிவிட்டால் ஓடிவந்து திருத்தும்நாம் தான் அரசியலில் என்ன நடந்தாலும் தேமே என்று இருக்கிறோம்.

*தேர்தல் களம் என்பது நாம் வேறு வழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும்
நேரம்
-ஜெயமோகன்

அரசியலை கற்பதை விட புரிந்து கொள்வோம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

ஜி.சிவக்குமார்

சிறப்பு தரிசனத்தில் நான்
வெகுநேரம் காத்திருக்க
தர்ம தரிசனத்தில் நிற்பவரிடம்
பேசிக் கொண்டிருந்தார்
கடவுள்

-ஜி.சிவக்குமார்

Wednesday 24 March 2021

வின்ஸ்டன்ட் சர்ச்சில்

நாளைக்கு,அடுத்த வாரம், அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். பின் அதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை விளக்கத் தெரிய வேண்டும்

-அரசியல் செய்வதற்கான அடிப்படை இலக்கணமாய் வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொன்னது

குகை மா.புகழேந்தி

முன்பு பறவை வந்தமர்ந்த சன்னலில்
ஓர் இறகு மட்டும்
வந்தமர்ந்திருக்கிறது இன்று

-குகை மா.புகழேந்தி

Monday 22 March 2021

சுஜாதா

விமலா எழுந்ததும்
அந்த இரண்டு இளைஞர்களும் எழுந்தார்கள்.அவள் நடந்ததும் நடந்தார்கள்.நின்றதும் நின்றார்கள்.ரொம்ப விசுவாசமான இளைஞர்கள்.வீட்டுக்கு சென்றதும் பிஸ்கட் போடவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்..

-சுஜாதா

மனுஷ்யபுத்திரன்

தானும் ஒரு உதிரும் இலைதான் என
அறிந்துகொள்ளும் நாள்வரை
இலை நினைத்துக்கொண்டிருந்தது
தான்தான் மரமென..

அப்படியெனில்
மரம் என்பது என்ன?
அது ஆயிரம் ஆயிரம்
உதிரும் இலைகளின்
துயரக் கூட்டம்...

-மனுஷ்யபுத்திரன்

Sunday 21 March 2021

info

பி.டி.ஒளஸ்பென்ஸ்கி, 'இமேஜினாஸியான்' 
(Imaginazione)என்ற புதிய சொல்லை உருவாக்கினார். யாராவது அவரிடம் வந்து குண்டலினி எழுந்துவிட்டது. என் தலையில் ஒளியைக் கண்டேன், சக்கரங்கள் சுற்றுகின்றன என்றால் இச்சொல்லைச் சொல்லி இதன் பொருள் 'கற்பனை நோய்' என்பாராம்.

#info

செல்வராஜ்

இன்னும் கொஞ்சம் 
அன்போடு இருந்திருக்கலாம்
இவள்.
இன்னும் கொஞ்சம் 
இயல்போடு இருந்திருக்கலாம்
இந்த உறவுகள்

இன்னும் கொஞ்சம்
இசைவாய் இருந்திருக்கலாம்
இந்த நண்பர்கள்

இன்னும் கொஞ்சம்
இலவம்பஞ்சாக இருந்திருக்கலாம் இந்த மனசு

இதுபோல் இன்னும்
கொஞ்சங்களில் இந்த வாழ்வு

-செல்வராஜ்

Saturday 20 March 2021

செல்வராஜ் ஜெகதீசன்

எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்

இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்

-செல்வராஜ் ஜெகதீசன்

ஜீவிதன்

தனித்துப் பறக்கும்
பறவையை கண்டால்
தவிப்பாய் இருக்கிறது

கொடியில் உலரும்
புடைவைகளிலிருந்து உயிரை
நுகர்ந்து கொள்ளலாம்
போலிருக்கிறது

நட்சத்திரங்களுக்கிடையில் கோடு கிழித்து விளையாடும்
மனம் இன்னும் மாறாதிருக்கிறது

மொத்தத்தில் சிறிதளவேனும்
மனிதனாயிருப்பதில்
மிகுந்த சந்தோஷமிருக்கிறது

-ஜீவிதன்

Friday 19 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-11*மணி



மனிதன் இல்லாத உலகில் விலங்குகளும், தாவரங்களும் வாழ முடியும்,ஆனால்
விலங்குகளும் தாவரங்களும் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

  -சலீம் அலி

#விண்ணளந்த சிறகு
-தியோடர் பாஸ்கரன்

மைக்கேல் மதன காமராஜனில் காமேஸ்வரனில் கமல் சொல்லுவார் எனக்குத் தெரிந்ததெல்லாம் வரதுக்குட்டி சமையல்கட்டு, மளிகைக்கடைனு சொல்வது போல எனக்கு தெரிந்த பறவையெல்லாம் குருவி,மைனா,காகம்,வெள்ளைக் கலரில் எது பார்த்தாலும் கொக்கு என்றுதான்.2003ல் கோடியக்கரை சென்றபோதும் 2010ல் வேடந்தாங்கல் சென்றபோதும் புதிய பறவைகளின் பெயர்களையாவது அறிய முடிந்தது.அந்த வகையில் இந்த புத்தக கண்காட்சியில் தியோடர் பாஸ்கரனின் விண்ணளந்த சிறகுகள் படித்தது பல்வேறு பறவைகளின் வாழ்வியலையும், அழிந்து வரும் பறவையினங்களையும் அறிய முடிந்தது.

புள்ளினங்கள்,பாலூட்டிகள், தாவரங்கள்,ஆளுமைகள், கருத்தாங்கள் என சுற்றுச்சூழல் குற்த்து பலதரப்பட்ட கட்டுரைகள் எளிமையாக புரியும்படி சொன்னது பாராட்டுக்குறியது.பருந்து தெரியும் ஆனால் மான்,குரங்கு போன்ற உயிரினங்களை அழிக்கும் உலகிலேயே பெரிய இரைகொல்லி பறவை தேன்பருந்துதான் என்பது ஆச்சர்யமளித்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பறவையும் இதுதான் என்பது கூடுதல் தகவல்.

காகத்தை வம்புக்கு இழுத்து ஆண் குயில் தன்னைத் துரத்திக் கொண்டு காகத்தை வர வைக்கும்போது காவல் இல்லாத பெட்டைக்குயில் தன் முட்டைகளை காகத்தின் கூட்டில் இட்டுச்செல்வது புதிய தகவலாய் இருந்தது.

பறக்கும் திறனும் வேட்டையாடும் உக்திகளுமே வல்லூறுகளின் முக்கியக்கூறு.வல்லூறுகள் புல்லட்போல 400கி.மீ பறந்து சென்று வானில் தாக்குமாம்.
இதை படித்த போது கடன் வாங்க ஆமை வேகத்தில் போ.. கடனை அடைக்க வல்லூறு வேகத்தில் போ எனப் படித்த வரி நினைவுக்கு வந்தது.

போதை மருந்துச்சந்தைக்குப் பின் பணம் புரள்வது காட்டுயிர் கள்ளச்சந்தையில் தான். மருத்துவ குணமிக்கது என யாரோ கொழுத்திப்போட பல காட்டுயிர்கள் அழிக்கப்படுகிறது பணத்திற்காகத் தான்.இதில் எறும்புதின்னி எனும் அலங்கும் ஒன்று.பிரிட்டிஷ் ஆட்சியில் செந்நாய் ஒன்றைக் கொன்று அதன் வாலை எடுத்துக் கொண்டுபோய் கொடுத்தால் 5ரூ சன்மானம் தருவார்களாம் என படித்த போது ஜெயமோகனின் ஊமை செந்நாய் கதை நினைவுக்கு வந்தது.

குரங்கினங்கள் குறித்து நண்பர் சிவ தினகரன் பகிர்ந்த செய்தி..தாய் குரங்கு குட்டியுடன் மரத்திற்கு மரம் தாவும்போது குட்டிக்குரங்கு அம்மாவை விட்டுவிட்டால் Un fit என நினைத்து ஒதுக்கிவிடுமாம்.அது போல இப்புத்தகத்தில் குரங்கினம் குறித்து பல செய்திகள் இருக்கிறது.பரிணாம வளர்ச்சியில் மனிதர்க்கு அருகில் இருப்பதால் குரங்குகளை முதனி என வகைப்படுத்தியுள்ளனராம்.

நள்ளிரவில் வருடத்தில் ஒரு மணி நேரம் மட்டும் பூக்கும் பூ அதுவும் ஜூலை மாதத்தில் மட்டும்தானாம்.அப்பூவை தேடி வரும் அதிசயப் பறவை,ஆளுமைகள் குறித்து சொல்லும்போது தொதுவர்களின் மீட்பர்,புகைப் படக்காரர்கள்,வரையாடுகளின் காவலர் டேவிடார்,காட்டுயிர் சார்ந்த புகைப்படக்கலைஞர்கள், யானைகள் குறித்த கட்டுரை, பழங்குடியினரின் கானக வாழ்க்கை என இயற்கை சார்ந்த பல கட்டுரைகள் ஆச்சர்யபட வைக்கின்றன .ஒவ்வொரு கட்டுரையிலும் பொருத்தமான புகைப்படங்கள் இருப்பது இன்னும் ஆச்சர்யமளிக்கிறது.இப்புத்தகத்தின் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.

#சுவாரஸ்யமானவை

*இரைக்கொல்லிகளின் கண்களில் படாமலிருக்க பளிச்சென்று தெரியும் நிறங்கள் இளம்பறவைகளுக்கு இருக்காது.

*ஆபத்து என்றால் காடை,கவுதாரி குஞ்சுகள் தரையிலேயே படுத்துவிடுமாம்.கண்டுபிடிக்கவே முடியாது

*கூடுகட்டும் எல்லாப் பறவைகளும் நம் ஊரை சேர்ந்தவைதாம். அயல்நாட்டுப் பறவைகள் அல்ல.

*உலகின் 332 வகை கிளிகளில் 55 ஆஸ்திரேலியாவில் உள்ளது. அதனால் கிளிகளின் தேசம் என்கிறார்களாம்

*ஆபத்து எனில் எறும்பு தின்னி கால்பந்து போல இறுக்கமாக சுருண்டுவிடும்.சிங்கமே கடிக்க முயன்று தோற்றுவிட்டதாம்.

*யானைகளை பழக்க கஜசாஸ்திரம் எனும் புத்தகம் தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ளது.

உலகில் நான்கில் மூன்று பங்கு மரங்கள் இருப்பதாக படிக்கிறோம். மரங்களுக்கு ஆதாரமான காடுகளை அழிக்கிறோம்.1263 பறவையினங்களில் 61 பறவையினங்கள் இந்தியாவில் ஓரிட வாழ்விகள் மட்டும் வாழ்கின்றனவாம்.காடுகள் அழிப்பு,காட்டுத்தீ போன்றவற்றால் அழியும் பறவைகளைவிட தட்பவெப்ப சூழ்நிலை மாறுவதாலும் பறவைகள் அழிகின்றனவாம்.மனிதனே அழிகின்றான் இதில் பறவைக்கெல்லாம் கவலைப்பட முடியுமா எனக் கேட்கலாம்.இன்று பறவை நாளை நாமாகக் கூட இருக்கலாம் என்பதே பறவைகள் உலகிற்கு விட்டுச் செல்லும் செய்தி

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

படித்தது

வார்த்தைகள் தேடி அலைகின்றாய்
வாழ்த்து அட்டைக்கென 
நகரெங்கும் அலைகின்றாய்
கவனத்தைக் கவர முயல்கிறாய்

உடைமை கொள்ள நினைக்கும்
பதற்றத்தில் உயிர்க்காது காதல்
எதிர்பார்ப்பில்லா நேசப் புன்னகை
ஒன்றுமட்டும் போதும்
எனக்குள் உன்னை
என்றென்றும் உயிர்த்துக் கொள்ள

-படித்தது

Thursday 18 March 2021

அடிக்கடி வெயிலுக்குள் நகர்ந்துவிடும்எங்கள் வீட்டை என்ன செய்வதென்று தெரியவில்லை.-வைத்தீஸ்வரன்

சுகுமாரன்

மல்லீப்பூ மொளம் பத்து ருவா’

சிறுகையால் சரமளந்து
கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த
பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:
‘இந்த முழத்துக்கா பத்து ரூபாய்?’

சரத்தை வாங்கி
நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி
முறித்து வாங்கினார்,

நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்
இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்
மல்லிகைகள்
வாடியிருந்தன சோகம் தாளாமல்.

-சுகுமாரன்

Wednesday 17 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-10*மணி




"ஒரு நூலைப் படித்தால்,அது இன்னொரு நூலைப் படிக்க, நூல் பிடித்தாற் போல நம்மை இழுத்துச் செல்ல வேண்டும்! அதுவே சிறந்த நூல்

-கரு.பழனியப்பன்.

#தமிழா?சமஸ்கிருதமா?
-முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர்

முனைவரும் ட்விட்டர் நண்பருமான க.ர ச அவர்கள் எழுதிய அறியப்படாத தமிழ்மொழியை கடந்த 2018ம் ஆண்டே வாங்கிவிட்டேன். அதிலிருந்து அறியாத தகவல்கள் ஆச்சர்யபடுத்தின. இந்நூல் வந்தவுடன் வாங்க வேண்டுமென ஆர்வம் ஏற்பட்டு இப்புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.கேள்வி பதில் போல் சுமார் 34கேள்விகளுக்கும் ஆய்வு நோக்கில் தன் பதிலை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார் க.ர.ச.

தமிழ் மொழி வடமொழியை விட பழமையானதா எனும் கேள்விக்கு சுமார் 23 பக்கங்கள் தரவுகள், தொல்லியல், வரிவடிவ எழுத்துக்கள் என மினி m.phil தீசிஸ் போல இனி நீ கேட்ப என்பதுபோல் நம்பகத்தன்மையுடன் இக்கட்டுரை அமைந்துள்ளது.தமிழில் பிறமொழி கலப்பு திணிக்கப்பட்டதை பல சுவாரஸ்ய சொற்களை எடுத்தாள்கிறார்.உதாரணமாக விவசாயம்(சமஸ்கிருதம்) என்றால் தொழில்.. வேளாண்மை(தமிழ்) என்று பொருள் அல்ல.
விவசாயம் என எழுதி எழுதியே நிலைத்துவிட்டது என்கிறார்

ஆங்கில கலப்பு கட்டுரையில் இறுதியாக தக்காளித் தொக்கை மிக்சியில் அரைத்தேன் என எழுதாது தக்காளித் தொக்கை Mixie ல் அரைத்தேன் என எழுதினால் தமிழோடு ஆங்கிலம் கலக்காது..தமிழும் சிதையாது என தீர்வையும் எழுதியது சிறப்பு.

வடமொழிச் சொற்களை எவ்வாறு அறிவது,மொழி குறித்த இலக்கணம் குறித்த ஐயங்கள்,தமிழ்க்கடவுளான முருகன் மீது புனையப்பட்ட சமஸ்கிருத கதைகளில் நிலத்தின் கருப்பொருளிலிருந்து உதாரணங்களை தொகுத்து வழங்கியுள்ளார்.கந்து என்றால் நடுகல்.அதுவே கந்தன். சமஸ்கிருதத்தில் ஸ்கந்தன் என மாற்றிக்கொண்டனர்.முருகன் தான் சரியான பெயர்.சுப்ரமணியன் என்பது சமஸ்கிருதம்.

தமிழ் இலக்கண சிறப்பும், தமிழ் மொழியின் நெகிழ்வும் காலம் கடந்து வளர்வதற்கான காரணம் ஏன் எனத் தெரிகிறது.ஃ என்ற எழுத்தை ஏன் ஆயுத எழுத்து என்கிறோம் என்பதற்கு ஒலியை ஆய்ந்து நுணுக்கல்.அது என்று ஒலிக்கும்போது து என்ற எழுத்துக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை விட அஃது எனும் போது மென்மையாகும் நுணுக்கமே ஆய்த எழுத்து.ஆய்த எழுத்துனா கத்தியோ, துப்பாக்கியோ அல்ல.

தமிழில் எழுதும்போது செய்யும் பிழைகள் என்னென்ன,தற்போது புழக்கத்தில் உள்ள சமஸ்கிருத சொற்களுக்கு ஆதாரமான தமிழ்ச் சொல் என புத்தகம் முழுவதும் நேர்த்தியாக வரையறுத்துள்ளார்.

#ரசித்தது

*திருவள்ளுவர் 9 வடமொழி சொற்களை பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் ஒரு கண்டனக் குரலில்தான் பயன்படுத்தியுள்ளார்

*வேள் என்பதற்கு விழைவும்.விருப்பம் என்பது பொருள்.விரும்பிச் செய்வது வேள்வி

*முருகனுக்கு 4 ஆற்றுப்படை வீடுகள் தானாம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்,பழனி,குமார கோவில்(நாஞ்சில்).ஆனால் சுவாமிமலையாக மாறிவிட்டது.

*முருகனை ஆராய்ந்தால் கையில் வேல் இருக்கிறது.அது வேட்டுவ ஆயுதம்.மயில் குறிஞ்சி நிலப்பறவை. மலைமேல் பாரம் சுமக்கும் காவடி என அனைத்து மலைவாழ்வியல் கூறு.

*இலவசம் என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் விலையில்லா

*உயிரெழுத்துக்கு முன் ஓர் கட்டாயம். ஆனால் உயிர்மெய் எழுத்துக்கு முன் ஒரு/ஓர் வரலாம்.

மறைந்த க்ரியா ராமகிருஷ்ணனிடம் தமிழ் அகராதி பதிப்பில் உள்ளபோது கேட்டார்களாம்.அனைவரிடமும் அலைபேசி வந்த பிறகு எல்லாரும் தமிழ் சொல்லுக்கான விளக்கத்தை அலை பேசியிலேயே நொடியில் பார்த்துவிடுவார்கள். பிறகு எதற்கு என கேட்டதற்கு சொன்னாராம்.. உண்மைதான் ஆனால் அலைபேசி தேடிய சொல் ஒன்றை மட்டும் தான் தரும்.ஆனால் அகராதி புரட்டும் போது அச்சொல் தவிர்த்து ஏனைய சொற்கள் நம் கண்ணில் படும் என்றாராம்.புத்தகங்கள் இன்னும் உயிர்வாழ்வதற்கு இது கூட காரணமாய் இருக்கலாம்.

இன்றைய வாசகர்கள் புனைவிலேயே தங்கிவிடுகிறார்கள். முகநூலில் பரிந்துரைக்கும் பழைய புத்தகங்களை கண் மூடிக்கொண்டு வாங்குகிறார்கள்.சுயமான தேடலில் புத்தகம் தேர்ந்தெடுக்கும் போதுதான் தன் அறியாமையே நினைவுக்கு வரும்.பின் அந்த அறியாமையை நீக்க நல் புத்தகங்கள் படிக்க ஆர்வம் வரும்.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

மார்க் ட்வைன்

ஒரு விஷயத்தில் சந்தேகம் இருந்தால் உண்மையைச் சொல்லிவிடு

-மார்க் ட்வைன்

Tuesday 16 March 2021

வண்ணதாசன்

"சந்தேகத்தின் பதற்றத்துடன் வாழ்ந்து சாவதை விட, சந்தேகப்படாமையின் அசட்டு நிம்மதியில் ஒவ்வொரு கட்டமாகக் கடந்துபோய்விடுவது நல்லது"

-வண்ணதாசன்

Monday 15 March 2021

லி போ

பறவைகள் அனைத்தும் பறந்து மறைந்தன;
ஓர் ஒற்றை மேகம் மிதக்கிறது.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதில்
நாங்கள் சலிப்பதே இல்லை-
அந்த மலையும் நானும்

-லி போ

நர்சிம்

அருந்தப்படாத தேநீரின்
சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்
உறைந்து போயிருக்கலாம்
ஏதேனுமொரு
சோகமோ
கோபமோ

-நர்சிம்

Saturday 13 March 2021

லி போ

பறவைகள் அனைத்தும் பறந்து மறைந்தன;
ஓர் ஒற்றை மேகம் மிதக்கிறது.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதில்
நாங்கள் சலிப்பதே இல்லை-
அந்த மலையும் நானும்

-லி போ

Monday 8 March 2021

லா.ச.ரா

சிந்திக்க சிந்திக்க அந்த அனுமான மண்டலம் அச்சத்தைத் தான் தருகிறது. அங்கே ஒரு 'வெறிச்' இருக்குமென்று நினைக்கிறேன்.ஆனால் அர்த்தமுள்ள 'வெறிச்'. எல்லாம் உள் அடங்கிய பூஜ்யம்.

-லா.ச.ரா

ஐம்பொறி

ஐம்பொறி

*மூக்கின் வடிவம் நுரையீரலை ஒத்திருக்கிறது. நுரையீரல் மாறுபாட்டை மூக்கு பிரதிபலிக்கும்

*கண்களின் வடிவம் கல்லீரல் போல் இருக்கும்.மஞ்சள் காமாலை,மதுபழக்க அறிகுறிகளை கண்களே வெளிப்படுத்தும்

*கூம்பு வடிவ நாக்கு இதயம் போல.இதயத்தின் சக்தி மாறுபாட்டை வெளிப்படுத்தும்.

*மண்ணீரலோடு ஒத்திருப்பது உதடு.உதடு வறண்டிருந்தால் மண்ணீரலில் குளிர்ச்சி குறைந்திருப்பது எனப் பொருள்.உதட்டில் புண் இருந்தால் வயிற்றில் புண் இருக்கும்

*காதுகள் சிறுநீரகம் போல. காதுகேட்கும் திறன் குறைந்தால் சிறுநீரகம் பாதித்ததாக அறிகுறி

-பாறப்புற இராதாகிருஷ்ணன்

சுஜாதா

இந்த ஆங்கில மாடுகளை மெல்ல மெல்ல தமிழுக்கு புல் கட்டி ஓட்டி வர வேண்டும். முதலில் இரு சொற்களை பயன்படுத்த வேண்டும். அதாவது முதலில் software (மென்பொருள்) பிறகு மென்பொருள்(Software),
பிறகு மென்பொருள் மட்டும்.
ஓரளவு புழக்கத்தில் கொண்டு வந்துவிடலாம்

-சுஜாதா

Sunday 7 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-7*மணி




வாழ்வு என்பதும், மனிதர்கள் என்பதும்,மனிதரைப் புரிதலே வாழ்வினைப் புரிவது என்பதும்தானே அடிப்படையான உண்மை

-வண்ணதாசன்

#அவர்கள் அவர்களே
-திருமாவேலன்

புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போதே சில புத்தகங்களை வாங்க வேண்டும் என எண்ணுவோம். அப்படி வாங்கிய புத்தகமே நான் நேசிக்கும் எழுத்தாளர் திருமாவேலன் எழுதிய இப்புத்தகம்.தான் சந்தித்து வியந்த மனிதர்களை அறியாத ருசிகரத் தகவல்களை திரட்டி ஒவ்வொரு கட்டுரையிலும் தந்துள்ளார்.

ஐயா சின்னக்குத்தூசியின் கட்டுரைகளை நூலகத்தில் படித்திருந்தாலும் அவரை அருகிலிருந்து பார்த்தது போல் வியத்தகு மற்றொரு முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
கலைஞருடனான நினைவுகளை எழுதச் சொன்னபோது  "கதவுக்குப் பக்கத்தில் வேலைக்காரன் உட்கார்ந்து இருக்கிறான் என்பதற்காக அவன் முதலாளிக்கு சொந்தக்காரன் ஆகிவிட மாட்டான். நான் என்றும் முரசொலி ஊழியன்.. அவ்வளவுதான் என கூறினாராம். கடைசிவரை வாசிப்பு குறையாமல் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் தன் அறிவை வளர்த்துக் கொண்டே இருந்த மாபெரும் மனிதர் சின்னக்குத்தூசி.
 
அனுபவம் அனுபவிப்பவரை சார்ந்துள்ளது.அந்த அனுபவத்தை சுவைபடவும் எழுதியுள்ளார்.
சொல்லைப் போலவே செயலிலும் வாழ்ந்து காட்டியவர் கவிஞர் இன்குலாப். மார்க்சிஸ்ட் ஆக வாழ்ந்த மார்க்சிஸ்ட் இன்குலாப் என புகழாரம் சூட்டுகிறார். வாசிப்பு,படைப்பு போராட்டம் என பல்வேறு தளங்களில் அவரின் பயணத்தை நமக்கு காட்டுகிறார். நம்மூர் கம்யூனிஸ்டுகளுக்கு தூரப்பார்வை மட்டும்தான் உண்டு.. கிட்ட பார்வை கிடையாது என இன்குலாப்பின் விமர்சனத்தையும் இங்கு பதிவு செய்திருக்கிறார்.

ஓவியர் வீரசந்தானம் பற்றி சொல்லுகையில் "அவர் ஒரே விஷயத்தை ஒரே மாதிரி அரைக்கும் வெட் கிரைன்டர் அல்ல.முன்னே அமர்ந்து இருப்பவர்க்கு எது தேவைப்பட்டதோ அதை நோக்கி அவரின் நா எழுமாம். சிந்தனை வீரியமுள்ள அவரின் வாழ்வை எளிமையாய் நம் இதயத்தினுள் கடத்துகிறார். 

புத்தகத்தை கரையான் அரிக்கும் பிரபஞ்சனை புற்றுநோய் அரித்தது என்ற அவரின் வார்த்தை பிரபஞ்சன் மீதான இன்னொரு படிமத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. பிரபஞ்சன் உடனான அனுபவத்தையும் அவரின் எழுத்தையும் அவருடைய சந்திப்பையும் பேட்டியையும் இவ்வளவு அறிவார்ந்த மனிதர் என்ற பிம்பத்தை  நமக்குள் இன்னும் மேலும் கட்டமைக்கிறது

சீடனுக்கு புத்தர் சொல்லும் புரிதலோடு இருக்கும் மொழியை கொண்டவரான ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களைப்பற்றி அருமையான கட்டுரை ஒன்றை தந்துள்ளார் ஆசிரியராக இருந்தபோது அவரின் அவரின் அனுபவமும் பத்திரிக்கையாளனாக இருக்க வேண்டியர்க்கு இருக்க வேண்டிய அப்பளுக்கற்ற தன்மையையும் அடையாளமாய் காட்டியுள்ளார்.

ஆனந்த விகடனில் புத்தகன் என்ற பெயரில் புத்தக அறிமுகம் வந்து கொண்டே இருக்கும்.அந்தப் புத்தகன் திருமாவேலன் சார் தான் என்பது புதியதகவல்."வாலியின் பேட்டியில் ஆகாயம்கூட சின்னது என்னுடைய கோபாலகிருஷ்ணன் மனது அவ்வளவு பெரியது எனச் சொன்னது அவரின் நன்றி உணர்வை காட்டியது.மணிவண்ணனை மிகவும்சிலாகித்தது அருமை. அவர் வாசிப்பினால் உச்சம் தொட்டவர். அவரின் எழுத்து "ரொம்ப படிச்சவன் திட்டணும் சார்,பாமரன் பாராட்டனும் சார்"னு சொன்னது யதார்த்தம்.

திருப்பூரில் நான் பள்ளியின் படித்துக் கொண்டிருந்தபோது சபாநாயகர் காளிமுத்து அடித்த கமெண்ட் இன்னும் நினைவில் உள்ளது.. மூப்பனாரும்,கிருஷ்ணசாமியும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்தனர்.அவர்களின் சின்னங்கள் முறையே சைக்கிளும், வண்டுமாடும்.காளிமுத்து சொன்னார் சைக்கிளும் வண்டிமாடும் ஒருநாளும் டெல்லிப் போய் சேராது என்று.சொன்னது போலவே எல்லா இடத்திலும் தோல்வி.அவர் குறித்து அறியாத தகவல்களை பகிர்ந்தது அருமை.

நன்னன் குறித்தும்,சென்னையின் காதலர் சம்பந்தம் ஐயா குறித்தும்,
இளைஞர் அறிவியல் களஞ்சியம் வாசிப்பில் உள்ளபோது அந்நூலாசிரியர் மணவை முஸ்தபா குறித்து படித்து அறிந்தது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.மதிமுகவின் தாயகம் பிறந்த கதை அறிந்தது,இன்னும் அறியாத முகங்கள், தெரியாத நிகழ்வுகள் அறிந்து கொண்டது உண்மையில் பெருமகிழ்ச்சி.

#படித்ததில் ரசித்தது

*புத்தகங்கள் படிப்பதை விடவும் பத்திரிக்கை படித்தால்தான் 
முழு வரலாறு அறிய முடியும்

*இரவல் வாங்கிய புத்தக்த்தில் அன்புடன் திருப்பித் தருக என எழுதிக் கொடுத்தாராம் வீர சந்தானம்

*பட்டத்து யானை பவனி வருவது போல் இருக்கும் நாஞ்சில் மனோகரனின் பேச்சு

*திருஞானசம்பந்தன் நன்னன் ஆன கதை

*மூளை மூலமாக படிக்க கூடாது
இதயம் மூலமாக படிக்க வேண்டும்

இன்னும் இன்னும் மனதை தொட்ட வரிகள் ஏராளம்.ஒரு பெரிய பிரபலம் சில ஆண்டுக்கு முன் இது போல் ஆளுமைகள் குறித்து புத்தகம் எழுதினார். ஆவலுடன் வாங்கிப் படித்த பிறகு ஏமாற்றம்.காரணம் எல்லாமே தெரிந்த சங்கதிகள்.ஆனால் இந்த புத்தகம் படித்ததில் அக்காயத்திற்கு மருந்தாய் அமைந்தது.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday 6 March 2021

நர்சிம்

ஒரு நிறப்பிரிகை போலத்தான்
விலகிப்போனாய் நீ
என் எல்லா வண்ணங்களையும்
எடுத்துக் கொண்டு

-நர்சிம்

Friday 5 March 2021

.பார்த்தசாரதி

எங்கே நம்மை அடக்கியாள விரும்புகிறார்களோ அங்கே நாம் சுதந்திரமாக இருக்க முயல வேண்டும்.

எங்கே நம்மைச் சுதந்திரமாக விட்டு விடுகிறார்களோ அங்கே நாம் மிகவும் அடக்கமாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டும்

-நா.பார்த்தசாரதி

Thursday 4 March 2021

வாலி

நொந்தாரையும் நொந்து வெந்தாரையும் பார்த்து..

'வாழ்க்கை'யின் முதல் எழுத்து அழைக்கிறது 'வா' என்று.
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்தால் 'வாழ்'

எதை நம்பி வாழ்கிறது நான்காம் எழுத்து 'கை'
கைகொண்டு உழைத்தாலும் காக்க வேண்டியது 1,2,4=வாக்கை

இதை உள்வாங்கினால் 'வாகை'

-வாலி

ஓஷோ

நான் ஒன்றைச் சொல்லும் போது அதை வரவேற்று நீங்கள் கைதட்டுகிறீர்கள் என்றால், நான் புதிதாகச் சொல்கிறேன் என்று அர்த்தம் அல்ல,
உங்களுக்குத் தெரிந்ததையே நானும் சொல்கிறேன் என்று அர்த்தம்

-ஓஷோ

Wednesday 3 March 2021

கற்பதுவே.. பகிர்வதுவே-6*மணி



கற்பதுவே.. பகிர்வதுவே-6
*மணி

ஒரு சத்தியாகிரகி தனது எதிர்தரப்பை நம்புவதற்கு அச்சப்படவே கூடாது.ஒரு சத்தியாகிரகியை அவரது எதிர்த்தரப்பு இருபது முறை ஏமாற்றினாலும் இருபத்தியோராவது தடவையும் தனது எதிர்த் தரப்பை நம்புவதற்கு தயாராக இருக்க வேண்டும்

-காந்தி

#காந்தியை சுட்ட பின்..
-பா.முருகானந்தம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் வைஃபை யாக இருந்தவர் காந்தி.
அவர் சுடப்பட்டார்..சுடப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் திட்டமிட்ட கொலைக்கு காரணம்..
கொல்லப்பட்டவுடன் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை எளிமையாய் விளக்குகிறது இந்த நூல்.குமுதம் பப்ளிகேஷன்ஸ்  வெளியிட்டுள்ள இந்த நூலை கடந்த 2011ம் ஆண்டு ஈரோடு புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.151 பக்கமுள்ள நாவல் போல விறுவிறுப்பாக எழுதியிருப்பார்.

துவக்கத்தில் சாவர்க்கர்,நாதுராம் விநாயக்ராம் கோட்ஸே,நாராயண் தத்தாத்ரேய ஆப்தே,கோபால் கோட்ஸே(கோட்ஸேவின் தம்பி), மதன்லால்,விஷ்ணு கர்கரே,பர்சுரே,திகம்பர் பட்கே,சங்கர் கிஸ்தய்யா என இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணியிலிருந்து புத்தகம் துவங்குகிறது.

ஜனவரி 9-1948லிருந்து கொலைக்கான துப்பாக்கிகள் வாங்கி சேகரிக்கப்பட்டன.இந்தியா பாகிஸ்தான் பிரிவினை கலவரம் ஒருபுறம் இருக்க காந்தி ஜனவரி 12ம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா 55கோடி ரூபாயை எந்த வித நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கவும், கலவரத்தை ஒடுக்கவும் உண்ணாவிரதம் இருந்தார்.இதுதான் உடனடியாக கொலை செய்வதற்கான காரணமாகவும் சொல்லப்படுகிறது.

அங்கு அவ்வாறு நடந்து கொண்டிருக்க பூனாவில்
கோட்ஸே 2000 ரூபாய்க்கான பாலிசிக்கு பயனாளியாக ஆப்தேவின்(கோட்ஸே நடத்திய பத்திரிக்கையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவன்) மனைவி சம்புதாயை நியமித்தான்.

3000ரூபாய்க்கான மற்றொரு பாலிசியின் பயனாளியாக தன் தம்பி மனைவியை நியமித்தான். ஜனவரி 17முதல் 20 வரை டெல்லி சென்று அங்குள்ள மெரினா ஹோட்டலில் தங்கினர்.19ம் தேதி துப்பாக்கியுடன் தன் தம்பி வந்தவுடன் 20ம் தேதி திட்டமிடப்பட்ட கொலை முயற்சி தோல்வியில் முடிகிறது.அப்போது மதன்லால் கைதானவுடன் மீதமுள்ள அனைவரும் மும்பை திரும்புகின்றனர்.27ம் தேதி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.500 ரூபாய்க்கு புதிய பிஸ்டலை வாங்குகின்றனர். ஜனவரி 30ம் தேதி அதிகாலை லைவ் டெலிகாஸ்ட் போல புத்தகம் ஒவ்வொரு நிகழ்வையும் விவரிக்கிறது.

முதல் ஐம்பது பக்கமும் விறுவிறுவென சென்றதும்.. அடுத்து காந்தியின் பிர்லா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வும்,நீதிமன்ற விசாரணை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வாக்குமூலமும் தெளிவாக புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.மொரார்ஜி தேசாய் உட்பட பத்துக்கு மேற்பட்டோரின் சாட்சியமும்,கீழ் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்,கைதிகளின் கடைசி நாட்களையும் தத்ரூபமாய் படம் பிடிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் விடுதலையானோரின் பேட்டிகளும் இடம் பெற்றுள்ளது.

கொலைக்கான சர்ச்சைகளும், கோட்ஸெ குடும்பத்தினரின் மனநிலையும் கூறப்பட்டுள்ளது.
காந்தியின் அஸ்தி சிந்து நதி தவிர அனைத்திலும் கரைக்கப்பட்டதால் தனது அஸ்தி சிந்து வில் கரைக்க வேண்டுமென நாதுராம் கூறியிருந்தான்.பிறகு எங்கு கரைக்கப்பட்டதென புத்தகத்தில் உள்ளது.

#வியந்தது

*1934ல் முதல் முறை,1944ல் இரு முறை,1946ல் ஒரு முறை என சுதந்திரத்துக்கு முன் 4முறை கொலை முயற்சி நடந்துள்ளன.

*காந்தியின் மூத்த மகன் மதுவுக்கு அடிமையானதால் மூன்றாவது மகன் ராம்தாஸ் காந்திதான் இறுதி சடங்கு செய்துள்ளார்.

*ராமதாஸ்தான் கோட்ஸே, ஆப்தேவுக்கு கருணை அடிப்படையில் தண்டனை விளக்கு அளிக்கவும் போராடினார்.

*காந்தி அஸ்தியின் ஒருபகுதி கட்டாக் நகரில் ஸேஃப்டி டெபாசிட் லாக்கரில் இருந்ததை பேரன் துஷார் காந்தி வழக்கு போட்டுமீட்டு 1997ல் திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்.

இதுபோல் எண்ணற்ற தெரியாத தகவல்கள் நிறைந்துள்ளன. பத்து ஆண்டுக்கு பின் மறுவாசிப்பிலும் சுவாரஸ்யமாய் இருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

சுஜாதா

இரவுதோறும் எனைத் தேடி விரைந்து வந்து கூத்தாடுகின்ற கொசுவைப் போன்ற நண்பரே சற்று நில்லும்
கடித்து இரத்தம் குடிக்க விரும்பின் கடித்துக் கொள்க!
குடித்து மகிழ்க ஆனால்
கடிக்கும் முன் நடிப்புக்காக என்னை வாழ்த்திப் பாடுகின்ற நீண்ட பாடலை நிறுத்தி விடுக.

-சுஜாதா மேற்கோள் காட்டிய கவிதை

Tuesday 2 March 2021

லா.ச.ரா

ஆண் எப்பவுமே சுபாவத்தில் பெருந்தன்மையான பிராணி. A noble animal.அதனாலயே அசடு. ஆயிரம் கிறங்கினாலும் அவன் பாதங்கள் பூமியில் ஊன்றியே இருக்கும்.அந்தந்த நிலைக்கு உடனே தன்னைச் சரிப்படுத்திக் கொள்வான்.

-லா.ச.ரா

மேத்தா

விளம்பரங்களுக்குத் தான்
வெளிச்சம் தேவை
வெளிச்சத்திற்கு
விளம்பரம் தேவை இல்லை

-மு.மேத்தா

வெண்ணிலா

அன்புகொண்ட உன்முன்
நிற்கும்போது
பேரழிகின் தோரணை
வந்துவிடுகிறது எனக்கு

-அ.வெண்ணிலா

Monday 1 March 2021

கட்டளை ஜெயா

பெண்களின் கூந்தலுக்கு 
இயற்கையிலே 
 வாசம் உண்டு
 உன் தலைமுடி ஒன்று விழுந்த 
 சாம்பார்
 எத்தனை வாசமாய் இருக்கிறது 
 பார்.

-கட்டளை ஜெயா