Wednesday 30 October 2019

katrathum petrathum-86


கற்றதும் பெற்றதும்-86
*மணி

ஒளகாரத்தைப் பிரித்து இரண்டெழுத்தாக்கி 'ஒ' என்றும்,'ள' என்றும் கூற முடியும்.ஆனால் ஊகாரத்தை அப்படிக்கூற முடியாது. கொள்கைப் பிடிப்புள்ளவர்களையும் அப்படித்தான் அவர்கள் சார்ந்த கட்சியிலிருந்து பிரித்துப் பார்க்க முடிகிறது.

-க.பொ.இளம்வழுதி.

#இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு

கம்யூனிஸ்ட் பற்றி பேசினால் பலருக்கு வேப்பங்காய் போல் பேசினால் கசக்கும்.ஆனால் அவர்களின் எளிமையினையும் செயல்பாட்டினையும் பேசினால் அப்போதைக்கு வாதத்தில் உயர்த்தி பேசுவார்கள்.பின் மீண்டும் அவர்களுக்கு வேலை இல்லை, கொடிபிடிப்பார்கள் சண்டையிடுவார்கள் என்பர். வாதத்திலோ இணையத்திலோ அவர்களை பேச்சில் மடக்கியும் மட்டம்தட்டியும் பேசினால் ஒரு அறிவுஜீவிகளை வென்றதாக ஒரு புளகாங்கிதம் உள்ளூர ஏற்படுவதாக எண்ணுவர்.இன்றும் ஒரு அடிப்படை தேவைக்காக முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இடதுசாரி தோழர்களே.இன்றும் மகத்தான தலைவர்களாக நல்லகண்ணு,
சங்கரய்யா போன்றோர் தமிழகத்தில் உள்ளனர்.

#இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1920 அக் 17ம் நாளில்தான் முந்தைய சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ஏழு தோழர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார்.

பின் இந்தியாவில் 1920லிருந்து ஆரம்பமாகிறது.1923ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் இரு இடங்களில் மேதினத்தை கொண்டாடினர்.
26-12 -1925ம் ஆண்டு கான்பூரில் ம.சிங்காரவேலர் தலைமையில் கூடியது.1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது

தமிழகத்தில் 1936ல் கிளை துவங்கியது.பி.சுந்தரய்யா மற்றும் எஸ்.வி காட்டே முயற்சியில் துவங்கப்பட்டது.

#முதல் பிரகடனம் செய்தது இடதுசாரிகளே

*1921ல் ஆமதபாத் மாநாட்டில் கம்யூனிஸ்ட்களான ஸ்ரீசரத் மொகானி முழுவிடுதலை தீர்மானம் முன்மொழிய சுவாமி குமரானந்தா வழிமொழிந்தார்
*1922ல் கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், டாங்கே ஆகியோர் முழுவிடுதலை முன்மொழிந்தனர்
*1925ல் கெளகாத்தி மாநாட்டிலும் வீரேந்திர சட்டோபாத்தியாயா தீர்மானம் கொண்டுவந்ததை நிராகரித்து 1929 லாகூரில் காங் கொண்டு வந்தது ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதுவரை காங் தான் முதலில் கொண்டு வந்ததாக வரலாறு எழுதிக்கொண்டது.

#தடை

பிரிட்டனுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே ஆகாது.ஆதலால்  1934,,&1937ல் தடைவிதித்தது. பின் 1942ல் இரண்டாம் உலகப்போரின் காரணமாக தடையை நீக்கியது. அதற்கு பிறகு விடுதலை அடைந்தபின் காங்கிரஸ் கட்சி 1948ல் தடை விதித்தது.குறிப்பாக இவர்களை ஒடுக்க
1920-22 பெஷாவர் சதி வழக்கு
1923-லாகூர் சதி வழக்கு
1924-கான்பூர் சதி வழக்கு
1925-மீரட் சதி வழக்கு
இவ்வழக்குகளில் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைத்தது குறிப்பிடத்தக்கது.

#தத்துவார்த்த ரீதியில் பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்

1964ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வலது,இடது என பிரிந்தது.காரணம் சீன ஆக்கிரமிப்பு.சீனாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு என்றார் ஈ.எம்.எஸ்.நம்பூதரிபாட்.ஆனால் சீனாவுக்கு எதிரான நேருவின் ராணுவ நடவடிக்கை நிலைப்பாட்டை டாங்கே போன்றோர் ஆதரித்தனர்.ஈ.எம் எஸ் இவர்களை காங்கிரசின் வால் என விமர்சிக்க, பதிலுக்கு அவர்கள் சீன ஏஜெண்ட் என்றதால் கட்சி உடைந்து ஈ.எம் எஸ் அணி மார்க்சிஸ்ட் ஆகவும்,டாங்கே அணி இந்திய கம்யூனிஸ்டாகவும் இன்றுவரை தொடர்கிறது. இந்திராவின் எமர்ஜென்சியை இந்தியாவில் ஆதரித்த இரண்டே கட்சிகள் எம்.ஜி.ஆரின் அதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுமே என்பது குறிப்பிடத்தக்கது.அப்போரில் இந்தியா தோற்றதும் ஒரு வரலாறு.

#மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்த மார்க்சிஸ்ட்கள்

முதல் பொதுத்தேர்தலில் கேரளாவில் ஈ.எம்.எஸ் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சியை பிடித்தனர்.பின் மேற்குவங்கம், திரிபுராவில் ஆட்சியை பிடித்தனர்

#மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (எம்.எல்)

1967-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த நக்சல்பாரி பகுதியில் எழுந்த உழவர் எழுச்சியினால் உந்தப்பட்டு ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் புரட்சியில் ஈடுபாடு கொண்டு 1969-ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி மா-லெ  உருவாக்கப்பட்டது.சாரு மஜூம்தார் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழகத்திலிருந்து, எல் அப்புவும், ஏ எம் கோதண்டராமனும் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
கட்சி சிறிது காலத்துக்குள்ளாகவே கடும் அடக்குமுறைகளையும், மிகப்பலத்த இழப்புகளையும் எதிர் கொண்டு நாடு முழுவதும் பின்னடைவைச் சந்தித்தது.

#கற்றதும் பெற்றதும்

தேர்தல் அரசியல் கடந்து இடதுசாரிகளிடம் பிடித்த விஷயம் எளிதில் அணுகலாம். விவாதம் செய்யலாம்.மக்களோடு மக்களாகத் தான் இருப்பார்கள்.நிரம்ப படிப்பார்கள்.படிக்காமல் அக்கட்சியில் நீண்டநாள் நீடிக்க இயலாது.அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை குரல் எழுப்புவோர் அவர்களேயாவர்.இன்றும் ஜனசக்தியிலும்,தீக்கதிரிலும் வரும் கட்டுரைகள் சிந்திக்க வைக்கும். தன் கட்சியினருக்கு அனைத்து அறிவார்ந்த விஷயங்களையும் கற்பிக்க மெனக்கெடும்.

வலது,அதி தீவிர வலது என்று சென்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில் இடதுசாரிகளை வளர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு.ஆனால் அவர்கள் சுத்தமாக இல்லை எனக்கூறி நாம் அழுக்கான கையை கொண்டிருக்கிறோம்.
கம்யூனிஸ்ட்காரர்களை புறக்கணிப்பதாய் கூறி கம்யூனிசத்தை புறந்தள்ளுகிறோம். கம்யூனிசத்துக்கு அழிவில்லை அது இன்னும் பல்லாண்டு வாழும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

kavithai

பேசிக் கொண்டே
சிரித்துக் கொண்டே
விற்றுக் கொண்டே
வேடிக்கை பார்த்துக்கொண்டே
அநேகமாக...
உறக்கத்திலும் 
தொடுத்துக் 
கொண்டேதானிருக்கக் கூடும்-
பூக்காரியின் விரல்கள்.

-கண்மணி குணசேகரன்

Tuesday 29 October 2019

29/10/19

எவ்வளவு முயன்றாலும்
காமிரா முன்
புன்னகை செயற்கையாகிறது
எப்படித் தவிர்த்தாலும்
கண்ணாடி முன்
புன்னகைக்கத் தோன்றுகிறது

-சுகுமாரன்


#பெண்களின் அழுகை பலவீனமாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் அது கோபத்தின் வெளிப்பாடு. 'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்' என்பது வள்ளுவர் வாக்கு. ஆண்களை போல் கோபப்பட்டு வன்முறையில் இறங்காமல் ஆற்றாமையில் அழுகிறாள் பெண்

-ஞாநி


#முளைச்சு மூணு இலை விடல" அதுக்குள்ள என்ன என அடிக்கடி கேட்டிருக்கிறோம்.

மூணு இலை கணக்கு என்பது விதை முளைத்ததும் செடி நிச்சயம் பிழைத்துவிடும் என்ற நிலை. மூணாவது இலைவிட்ட பிறகு பராமரிப்பு இருந்தால் போதும். பேரிடர் வந்தாலொழிய அழியும். இல்லையேல் நன்கு வளரும் என்பதற்கான குறியீடு


#எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து 
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின் 
ஒவ்வோர் தாயின் 
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.

-யாத்திரி

Info


வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

இதில் வந்தே மாதரம் என்பது இந்திச்சொல் அல்ல வங்கச்சொல்.இதன் அர்த்தம் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்பது.மூலத்திற்கு அடுத்து அதை உரையாக பாரதி எழுதியுள்ளார்.

Tuesday 22 October 2019

கற்றதும் பெற்றதும்-85*மணி

கற்றதும் பெற்றதும்-85
*மணி

வயது வளர வளர கோழைத்தனமும் வளர்ந்து வருகிறது..உண்மைதானே.!
 -கிருஷ்ணன் நம்பி

#கிருஷ்ணன் நம்பி கதைகள்

ஒவ்வொரு எழுத்தாளரின் கதைகளிலும் ஒரு மாஸ்டர் பீஸ் இருக்கும்.சொல்லிலோ கருத்திலோ தன் எண்ணத்தை சிறப்பாய் தெரிவித்து விடுவார்கள்.அவ்வாறு பாவண்ணனின் ஆழத்தை அறியும் பயணம் கட்டுரை தொகுப்பில் "மருமகள் வாக்கு" கதை குறித்து எழுதியிருந்தார்.
அக்கதையின் எளிமையும் நடையுமே மற்ற அவரின் எல்லா கதைகளை படிக்கத் தூண்டியது.சம்பவங்களை கோர்த்து சொல்லும் தற்காலத்திய கதை சொல்லிகளில் இருந்து நம்பியின் கதைகள் முற்றிலும் மாறுபட்டவை. கதையை படித்தவுடன் மனதில் ஏற்படும் வெறுமையை நிரப்ப கண்களும் மனதும் புற உலகை தீராத ஏக்கத்துடன் பார்க்குமே அவ்வாறுதான் இக்கதைகளை படித்தேன்.

சுந்தர ராமசாமியின் ஒத்திசைந்த இயல்பான எழுத்து நடைபோலே.. வார்த்தை சிக்கனத்துடன் படிக்கும்போதே அகஉலகில் அதை புரிய வைக்கும் மொழி இயல்பாய் கைவருகிறது நம்பிக்கு.

#நீலக்கடல்

எல்லார் வீட்டிலும் ஒரு இறப்பு ஏற்பட்டிருக்கும்.அப்போது அவ்வீட்டின் இயல்பு நமக்கு தெரிந்திருக்கும்.
அப்படித்தான் இக்கதையும்."பேரன் சங்கரனுடன் பாட்டி கூட்டாக வசித்து வருகிறாள். நீ எப்ப சாவாய் பாட்டி னு கேட்கிறான். கேட்டவுடன் பல வசைகள் வந்து விழுகின்றன.பின் ஒரு முறை விளையாடும்போது குருவி ஒன்று இறந்துவிடும்.தங்கையை சமாதானப்படுத்த அதன் கணக்கு முடிந்துவிட்டதாய் கூறுவான்.ஒரு
முறை அவனின் கடைசி தம்பி குழந்தையாய் இருக்கும்போது இறந்து விடுவான்.அப்போது இழவு வீட்டின் இயல்பை அழகாய் எழுதியிருப்பார்.மறுநாள் தன் அப்பாவிடம்.. வயதான் பாட்டி சாகாமல் குழந்தை ஏன் இறந்தது என சங்கரன் கேட்பான். இதை கேட்டுபாட்டி அழும்போது நம் மனமும் சிறிது கனக்கிறது.

குழந்தையின் மனதை மாற்ற அப்பா சினிமாவுக்கு அழைத்துச்செல்கிறார்
அதில் நீலக்கடலை பார்க்கிறான். அது அவனுக்கு கனவில் வருகிறது.
எல்லோரையும் கடலில் செம்படவன் தள்ளும்போது பாட்டியையும் தள்ளுவதாய் தெரியும். இதை காலையில் எழுந்தவுடன் குதூகலமாய் எல்லாரிடமும் சொல்ல, பாட்டி இதனை கேட்டு மூர்ச்சையாகி இறக்கிறாள்.ஓயாமல் சங்கரனும் தந்தையும் அழுகிறார்கள்.

அடுத்தநாள் இரவு சாப்பிடும்போது பாட்டி ஒவ்வொரு முறையும் கோபத்தில் 'கடலில் கொண்டு போய் போடு'என்பாள் அதை நினைவில் வைத்து அப்பாவிடம் கடலில் போடவில்லையா என்பான்.
பாட்டியின் கடைசி ஆசையை ஏன் நிறைவேற்றவில்லை என புரியாமல் அழுவான்.அப்போது கடவுளிடம் வேண்டுவான் நான் பெரியவனாகி மாலுமியாகி கப்பல் ஓட்டி பாறையில் முட்டி கடலில் மறைவேன் என. இறப்புகுறித்து என்னவென்றே அறியாத ஒரு சிறுவனின் பார்வையில்.கதை சொல்லப்பட்டிருக்கும்.

#சுதந்திரதினம்

தாய்-தகப்பன் இல்லாத பாண்டியனும் கருப்பையாவும் அண்ணன்-தம்பிகள். தாயும் தந்தையுமாகக் கருப்பையாவுக்குப் பாண்டியனே இருக்கிறான். சமைக்க மட்டும் உறவுக்கார ஆத்தாள் ஒருத்தி வந்துகூட இருக்கிறாள். ராத்திரி தம்பி தூங்கிய பிறகு கண் விழித்திருந்து தம்பிக்காக மூவர்ணக்கொடி செய்கிறான் பாண்டியன் சுதந்திரதினத்துக்காக

மறுநாள் பள்ளியில் கொடியேற்ற கலெக்டர் வருகிறார் என ஏக கெடுபிடி.தாமதமானதால் அனைவருக்கும் பசி.. உணவருந்துகின்றனர்.பாதிச் சாப்பாட்டின் போது ஹாரன் சத்தம்கேட்கும்.கலெக்டர் வருவதால்
பாதியிலேயே எழுப்பிவிடுவார்கள்.அப்போது மழை வர அனைவரும் ஓடுகிறார்கள்.சுதந்திர தினத்தின் பொருளே இதுதான் என்பது போல மெல்லிய நகைச்சுவையாய் காட்டுயிருப்பார் நம்பி.

#மாமியார் வாக்கு

ஒவ்வொரு மருமகள்களும் மாமியாருக்கு ஒரு ரேட்டிங் கொடுத்து மனதில் வைத்திருப்பார்கள். அது வெளியில் என்னதான் சாம்பிராணி போட்டாலும் உள்ளே அந்த ரேட்டிங்கிலிருந்து அம்மஞ்சல்லி கூட அங்கிட்டு நகராது. அப்படி ஒரு கதை.பத்தாண்டுக்கு முன் படித்தது இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் இருக்கிறது.

மீனாட்சி அம்மாள் கணவனை இழந்தவள்.ஒரே மகனுக்கு ருக்மணியை திருமணம் செய்திருப்பார்கள். வீட்டு வேலை முதல் தோட்ட வேலை, பால் கறப்பது வரை சார்ஜ் குறையாத பேட்டரியாய் உழைப்பாள். அப்போது அந்த ஊரில் தேர்தல் வரும். பூனை சின்னத்தில் பெருமாளும்,கிளிச்சின்னத்தில் வீரபாகுவும் நிற்பார்கள்.

மாமியார் பூனைக்குதான் தன் வீட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென சொல்லியிருப்பார். ருக்மணிக்கு கிளிச் சின்னத்தில் தான் வாக்களிக்க விருப்பம்.மாமியார் சொல்லை மீற முடிவெடுப்பாள்.
கிளி சின்னத்துக்கு ஓட்டளிக்க ஓராயிரம் முறை சொல்லிக்கொள்வாள்.
மதியத்துக்கு பின் சாவதானமாக ஓட்டளிக்க கிளம்பிச் செல்வாள்.
மாமியாரின் பேச்சை எதிர்த்து ஓட்டளிக்க அவளுக்கு விருப்பம்.அதை கற்பனை செய்து ரசிப்பாள்.ஓட்டுப்பெட்டி அருகே செல்லும்போது அவளையறியாமல் ஒரு போராட்டம் வரும்.கை தானாக பூனை சின்னத்திலேயே ஓட்டளித்துவிடும்.
வெளியில் இருந்த பெண்கள் யாருக்கு ஓட்டுப்போட்ட எனக்கேட்க அவளையறிமால் மாமியாருக்கு என்பாள்.அனைவரும் சிரிக்க.. மீண்டும் வீட்டு வேலை செய்ய ஓடுவாள். இயலாமையின் கோபம் அவளை துரத்துவதாக அவளை துரத்துவதாக வாசகனுக்கு புரிய வைத்துவிடுவார்.

#கற்றதும் பெற்றதும்

நீலக்கடல் கதையில் இறப்பை விரும்பும் பாட்டி அதைப்பற்றி சொன்னவுடன் கோபம்படும் போது ஒவ்வொரு மனிதர்களும் இவ்வுலகில் வாழ கடைசி மூச்சுவரை பேராசைப்படுவதாக எழுதியிருப்பார். சுதந்திர தினம் கதையில் அதிகாரமும் புறச்சூழலும் எவ்வாறு கீழ் தட்டு மக்களின் மேல் அதிகாரம் செலுத்துவதை உணர்த்துகிறது.

மருமகள் வாக்கு ஒவ்வொரு பெண்ணும் மாமியார் மீதான அச்சம் கலந்த பயம் அன்றிலிருந்து இன்று (ஒரு சிலருக்கு)வரை இருப்பதை காணமுடிகிறது.அவர்களிடம் காட்ட வேண்டிய அத்தனை கோபத்தையும் கணவர்கள் மீது காட்டும் மனைவியின் மனநிலைகள் இன்றுவரை மாறவில்லை.

கதை என்னை இழுக்க வேண்டும் நான் அதன் பின்னால் ஓட மாட்டேன்
எனும் அவரின் வார்த்தையில் அமைந்தவை நம்பியின் கதைகள்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday 21 October 2019

யூமா

இனி ஒண்டுவதற்கு
எதுவுமில்லாத வெற்று வீதி.
அணையாது காத்து வந்த
சிகரெட்டின் கடைசிப் புகையுடன்
மடியின் கனம் அகல
வழிப்பயமற்ற மழைப் பயணம்

-யூமா வாசுகி

அல்லாடுவது

அல்லாடுவது

அல் என்றால் இருள்.இருளில் ஒருவர் நடக்க நேர்ந்தால் தடுமாற்றமும்,
பதற்றமும் ஏற்படும். எனவே அல்லாடுபவர்கள் இந்நிலையில் இருப்பவர்கள்