Monday 27 February 2023

லத்தீன் அமெரிக்க நாடுகள்


லத்தீன் அமெரிக்க நாடுகள்

இலத்தீன் - அமெரிக்கா என்பது அமெரிக்க பிரதேச நாடுகள் தான்.
இந்த நாடுகளில் அமெரிக்க ஆங்கிலத்தைத் தவிர்த்து ஸ்பானிஷ், போர்த்துகீசியம், பிரெஞ்சு, இலத்தீன் மொழிகள் பேசப்படும்.
இவற்றிலுள்ள நாடுகள்

வட& தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள்
மெக்சிகோ
கரீபியன் தீவுகள்
கியூபா
டொமினிக் குடியரசு
ஹைதி
பியூட்டாரிக்கோ

நன்றி:அருண்

கற்கை நன்றே-19


கற்கை நன்றே-19
*மணி

கொலம்பஸ் எனும் பெயரை படிக்காதவர்களே இருக்க முடியாது. வரலாற்றின் நினைவில் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் பெயர். சமீபத்தில் தோழர் அ.பாக்கியம் எழுதிய கட்டுரை வாசித்த போது அவரின் மற்றொரு முகத்தை அறிய முடிந்தது.

1451 இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் நெசவுத் தொழிலாளியின் மகனாக பிறந்தவர் கொலம்பஸ்.
திறமையான கப்பல் மாலுமியாக செயல்பட்டார். ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் கடல் வழி மட்டுமே இருந்தது என்பதை கொலம்பஸ் நினைத்ததால் ஆசியா என்றாலே இந்தியா என்றுதான் கருதினார். விவரங்களை தெரிந்து கொண்டு புவியல் ஞானி பாப்புலொடஸ் கெனாலியிடம் தன் பயணத்தை துவக்கும் முயற்சிகளை கேட்டறிந்து,பயணத்தை துவக்க முதலாம் போர்ச்சுக்கல் மன்னரை அணுகினார்.கிடைக்கவில்லை.

 எவரிடமும் உதவி கிட்டாததால் ஸ்பெயின் மன்னர் பெர்டினண்ட் ராணி இசபெல்லாவிடம் உதவி கேட்டு மனுசெய்தார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர்கள் உதவிட முன் வந்தார்கள். 1492 இல் சாண்டா, பிண்டா, நினா எனும் மூன்று கப்பல்களில் 39 கைதிகளை அடைத்துக் கொண்டு கொலம்பஸ் புதிய உலகை கண்டறிய புறப்பட்டார்.

வல்லரசு நாடுகளுடன் போட்டியிட நினைத்து ஸ்பெயின் நாடு தங்கம் மற்றும் இதர பொருள்கள் தேவைப்பட்ட காரணத்தினால் அது ஆசியாவில் இருப்பதாக அறிந்தனர். மேலும் மார்கோபோலோ போன்றோரின் பயண குறிப்பு அவர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கொலம்பஸ் மன்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதில் தான் கொண்டுவரும் பொருட்களில் 10 சதவீத பங்கு, புதிய பிரதேசத்தின் ஆளுநர் பொறுப்பு மற்றும் கடற்படை தளபதி பட்டம் வழங்க வேண்டும் என்றார்.  33 நாட்கள் பயணம் செய்து ஆப்பிரிக்க தீவில் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் புறப்பட்டார். புதிய பூமியை புதிய நிலப்பரப்பை கண்டுபிடித்து வருபவர்களுக்கு பெரும் தொகையும் ஓய்வூதியும் என ஸ்பெயின் அரசு அறிவித்திருந்தது இதையும் கொலம்பஸ் அடைய நினைத்தார்.

கொலம்பஸ் கியூபா தீவை அடைந்தபோது அதனைத் தான் ஜப்பான் என்று நினைத்தார். அங்குள்ள தீவில் சிறிது தங்கத்தை எடுத்துக் கொண்டு 39 கைதிகளையும் அங்கே விட்டு சென்றார். நாடு திரும்பிய கொலம்பஸ் அரசவையில் கூறி மற்றொரு பயணத்துக்கு அனுமதி வாங்கிச் சென்றார். 1493 செப்டம்பர் 25ல் 17 கப்பல்களில் 1200 பேர்களுடன் தங்கத்தை கைப்பற்றும் வேட்டையுடன் கிளம்பியது. தான் விட்டு வந்த 39 பேரும் தங்கத்தை குவித்து வைத்திருப்பார்கள் என்று எண்ணத்துடன் சேர்ந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த 39 கைதிகளையும் அங்கிருந்த செவ்விந்தியர்கள் கொன்றிருந்தனர். செல்லும் இடமெல்லாம் அங்கிருந்த பழங்குடியினர் சண்டையிட்டனர்.

பயணம் செய்ய அனுப்பிய ஸ்பெய்னுக்கு என்ன பதில் செய்வது என்று தெரியாததால் 500 அடிமைகளை பிடித்து ஸ்பெயினுக்கு அனுப்பினார். ஆனால் அவர்களில் 200 பேர் வழியிலேயே இறந்து விட்டிருந்தனர். தங்கம் வேண்டும் என்று ஆவலுடன் ஒவ்வொரு இடத்தையும் அணுகினார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் கொலம்பஸ் ஏமாற்றுவதாக நினைத்து அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது.

 கொலம்பஸ்க்கு பிறகு அதிகம் பேர் கடல் பயணம் மேற்கொண்டனர். அதில் அவரின் உற்ற நண்பரான பிளாரன்ஸ் நாட்டைச் சார்ந்த ஹயடோ என்பவர் அமெரிக்க வெஸ்புகி என்பவரை தன்னுடன் அழைத்துச் சென்றார். திரும்பி வந்த பிறகு அமெரிக்காவைப் பற்றி இவர் அழகாக வர்ணிக்க அதன் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து கண்டதை வரைந்த மாட்டின் வல்டாஹ் முல்லர் என்ற ஜெர்மனியர் இக் கண்டத்திற்கு அமெரிக்கா என பெயர் எழுதினார்.

இதற்கிடையில் கொலம்பஸ் விடுதலை பெற்று, நான்காம் முறையாக பயணித்தார்.பல்வேறு நாடுகள் அவரை ஏற்கமறுத்ததால் ஜமைக்கா சென்றார்.எங்கும் வரவேற்பு இல்லாததால் 1504ல் ஸ்பெயினுக்கே திரும்பினார்.
இறுதிக்காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர் 1506ல் இறந்தார்.

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday 26 February 2023

நம்பிக்கையைத் தன்னுள்தேட முயலாமல்,வெளியில் தேடுவதுதான்பலர் செய்யும்மிகப்பெரிய தவறு-ஆர்தர் மில்லர்

தாவோ


சூழல் பாதுகாப்பாக இருக்கும் போது பராமரிப்பது எளிது அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பே நிலைமையை சமாளிப்பது எளிது

பொருள் காய்ந்திருக்கும் போது ஒடிப்பது எளிது 
நுண்ணியதாக இருக்கும் போதே ஒரு பொருளை கரைப்பது சுலபம்

ஒரு செயல் ஒன்றுமில்லாமல் இருக்கும் போதே அதை கவனிக்க கற்றுக்கொள்
ஒழுங்கீனம் வருவதற்கு முன்பே சூழலைக் கட்டுப்பாட்டில் வைத்திரு 

-தாவோ

Saturday 25 February 2023

ஜானகிராமன்


யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்

எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்

அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை

-ஜானகிராமன்

எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி இருக்கிறது. நாம் அதை அங்கீகரிக்க வேண்டும் அவ்வளவுதான்-ஒகாகுரா

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைத் தாண்டி ஒரு மனிதன் ஓட வேண்டும். அப்போதுதான் அவன் தன் தொழிலில் நிலைக்க முடியும்-வின்சென்ட்

நிர்மல்


நண்பகல் நேரத்து மயக்கம்:

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு “ 

    இறப்பு என்பது மீண்டும் விழிக்கு முடியாத தூக்கம். பிறப்பு என்பது நீண்ட தூக்கத்திற்கு பிறகு விழித்தல். இது நிலையாமை அதிகாரத்தில் வரும் ஒரு  குறளின் பொருள். 
    இந்தக் குறள் இறப்பு மற்றும் பிறப்பை define செய்வது போல தோன்றினாலும் இதற்குள் நிலையாமை கொள்கை குறித்த  ஆழமான பொருளும் உண்டு. பிறப்பு என்றால் விழிப்பு , மரணம் என்றால் தூக்கம் அப்படியென்றால் “ வாழ்க்கை” என்பது என்ன? 
      
சமீபத்தில் Wabi Sabi - the wisdom of imperfection எனும் புத்தகம் வாசித்தேன். வாபி சாபி என்பது ஜப்பானிய சிந்தனை அல்லது தத்துவம் அல்லது ஒரு கலை வடிவம் எனச் சொல்லாம். 
Nothing is perfect 
Nothing is finished 
Nothing last forever எனும் 
 முக்கிய மூன்று கொள்கைகளை அடிப்படையாக கொண்டது இந்த வாபி - சாபி. புத்த மத “நிலையாமை” கோட்பாட்டின் ஜென் புத்த மத வடிவம் இந்த வாபி- சாபி. 
    நாளைக்கு எல்லாமே மாறக்கூடும் என்கிற போது  எதிர்காலம் குறித்தும் நிகழ் காலம் குறித்தும் ஏன் கவலையும் பதட்டமும் கொள்ள வேண்டும் என்கிற கேள்வியை ஏழுப்புகிற தத்துவம் இந்த வாபி சாபி.
  முழுமையற்றதை நிலையற்றதை குறையுள்ளவற்றை அழகியலாக பார்க்கும் முறை இந்த வாபி சாபி மூலம் உருவானது . 

வாழ்க்கை நிலையற்றது நிச்சையமற்றது அதனால் நாம் ஏதுவும் செய்ய வேண்டாம் , என்ன செய்தாலும் என்ன பயன், இந்த உலகமே மாயை,  நம்மால் ஆவது எதுவும் இல்லை, எல்லாம் அவன் செயல் - போன்ற கொள்கைகளை வாபி சாபி ஏற்றுக் கொள்வதில்லை. 
   மனித ஆற்றலில் பெரும் நம்பிக்கை கொண்டது வாபி சாபி. 
   We embrace the utter uncertainty along with the mystery of our own ability அதாவது நாம் நமது ஆச்சரியப்படுத்தும்  திறமையையும் நமது செயல்திறனையும்  அங்கீகரித்து இந்த உலகின்  நிச்சயமற்ற தன்மையையும் ஏற்றுக்கொள்வது வாபி-சாபி நிலையாமை கொள்கை. 
  நம்மூரில்  நிலையாமை என்றால் உலகம் ஒரு மாயை, இன்னிக்கி செத்தா நாளைக்கு பால், இங்கு நாமாக செய்ய ஒன்னுமில்லை, எல்லாம் அவன் செயல், உலகமே நாடக மேடை, இங்கு நம்மால் செய்ய ஒன்னும் இல்லை … இப்படியான நெகடிவ் உணர்வு தரும் வாக்கியங்களே நாம் கேள்விப்படுவோம், ஆனால் வாபி - சாபி நிலையாமை கொள்கைக்குள் இருக்கும் அழகியல், அதற்குள் இருக்கும் அமைதி, பிரச்சனைளை தீர்வு காணும் முறை, முன்னேற்றம், இப்பொழுது இருப்பதை விட அடுத்த முறையை சிறப்பாக்கும் செயல்பாடுகளையும் கொண்டது. 

உலகம் போற்றும் ஜப்பானிய செயல் திறனுக்கு பின் இருக்கும் காரணங்களில் ஒன்று இந்த வாபி சாபி எனும் நிலையாமை கொள்கை. 

எதுவும் நிலைக்க போவதில்லை, எதுவும் முடிவுபெறப் போவதில்லை, எதுவும் முழுமையானதும் அல்ல ஆனால் மனித திறன் கொண்டு தொடர்ந்து சிறப்பாக்கிக் கொண்டே இருக்க முடியும் என ஜப்பானியர்கள் நம்மூர் நிலையாமை கொள்கையை மனித திறன் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துக் கொள்கிறார்கள் நம்மூரிலோ எதுவும் நம் கையில் இல்லை எல்லாம் இறைவனே என பக்தி ஆன்மீகம் வளர்க்க மட்டுமே பயன்படுத்துகிறோமோ என சந்தேகம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. 
   
    எல்லாமே அழியும் அதுக்கு “சும்மா இருக்கலாம்” என்பது நிலையாமை கொள்கை அல்ல என எனக்கு புரிய வைத்தது இந்த வாபி - சாபி.  

  அப்போ அடுத்து வள்ளுவர் என்ன சொல்லிருக்கிறார்ன்னு தேடி பார்த்தால் அட … 
நிலையாமை உண்மை அதனால் அறத்தை விரைவாக சிறப்பா செய் என செயலுக்கே முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது “ நிலையாமை” எனும் அதிகாரம்.   
   இதைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நேற்று பார்க்க நேர்ந்த படம் “நண்பகல் நேரத்து மயக்கம்” எனும் தமிழ் - மலையாள படம். அந்தப் படத்  துவக்கத்தில் இந்த பதிவின் துவக்கத்தில் சொல்லப்பட்ட திருக்குறள் இடம்பெறுகிறது. அதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது.

Thursday 23 February 2023

சுப.வீ


அறிவுரை குறித்து 
ஆண்டன் செக்காவ் 
To advice is not to compel என்பார்.
அதாவது என் கருத்து,
என் பார்வை இது என்று நிறுத்திக்கொள்வதே 
நாகரிகம் என்று

-சுப.வீ

Sunday 19 February 2023

janakiraman


டிஸ்கவரி சானலில் brain games என்ற ஒரு நிகழ்ச்சி யதேச்சையாக பார்க்க நேர்ந்தது. 

ஒரு பிசியான மார்க்கெட்டில் நேர்த்தியான கோர்ட்டும், பாதணிகள், நல்ல தெளிவான முகத்துடன் வருவோர் போவோரிடம் சிரித்துக்கொண்டே ஒருவரை பிச்சை எடுக்கச் சொல்லியிருந்தார்கள். அவரை கடந்து செல்லும் யாரும் அவருக்கு பிச்சையிடவே இல்லை. சற்று அதிசயமாக, லேசான சிரிப்புடன் கடந்தார்கள். 

அடுத்த நாள் ஏறக்குறைய அதே நேரத்தில் அதே நபரை, அழுக்கான உடைகள், முகம் கருப்படைத்து, தலையை கலைத்துப் போட்டு, சோகத்துடன் பிச்சை எடுக்கச்சொன்னார்கள். நேற்று பிச்சையிடாமல் சென்ற பலர் அன்றைய தினம் அவருக்கு பிச்சையிட்டனர். இப்போது கேள்வி. பண உதவி வேண்டும் என்று கேட்பவருக்கு  உதவவேண்டும் என்ற மனநிலை நமக்கு இயல்பானதா அல்லது யார் உதவி கேட்கிறார்கள் என்பதைப் பொருத்ததா? எது அறம். 

இந்த சோதனை இத்துடன் நிற்கவில்லை. அதற்கடுத்த நாள் அதே நபரை நன்றாக அலங்கரித்து கோட் உடை அணிந்து, அதே இடத்தில் மயக்கமுற்று கீழே சுருண்டு கிடப்பது போல நடிக்கச் செய்தனர். இப்போது அவரைக்கண்ட பல பேர், உடனடியாக ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்தனர். பலர் கூடி, உதவி செய்தனர். மக்களில் பெரும்பாலானோர் இவருக்காக கரிசனப்பட்டனர். 

அதற்கடுத்த நாள், அதே நபர் பழைய அழுக்கடைந்த உடையுடன், அசுத்தத்துடன், அதே இடத்தில் மயக்கமுற்று கீழே சுருண்டு கிடப்பது போல நடிக்கச் செய்தனர். இப்போது அவரைக் கண்ட பலபேர், எதையுமே காணாதது போல கடந்து சென்று கொண்டிருந்தனர். சிலர் பரிதாபப்பட்டனர். சிலர் விலகிச் சென்றனர். அவரைக்குறித்து ஆம்புலன்சுக்கும் போலிசுக்கும் தகவல் தெரிவிக்க நிறைய நேரம் ஆனது. 

இங்கு மனிதனின் இயல்பான குணம் நோயுற்றவருக்கு உதவுதல் என்றால் ரெண்டு பேருக்குமே உதவியிருக்கவேண்டுமே. ஆனால், தம்மைப் போல தோற்றத்தில் நடை உடை பாவனையில் இருப்பவருக்கு எதிர்பாரா ஆபத்து என்றால் உதவுகிறோம். மிக எளிய நபர் என்றால் நாம் சுலபமாக கடந்து செல்கிறோம். பிச்சையிடுவதற்கு நம்மைவிட கீழான மனிதரை தேர்ந்தெடுக்கிறோம். உதவுவதற்கு நமக்கிணையான நிலையுள்ள மனிதரை தேர்ந்தெடுக்கிறோம். 

அறம் குறித்த அடுத்த சோதனையை பிக் பசார் போன்ற மாலில் நடத்தினார்கள். இங்கு பில்லிங் இடத்தில் இருக்கும் கேஷியரை பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் அன்பொழுக பேசச் செய்தனர். அவர்களை வாழ்த்தச் சொன்னார்கள். கனிவுடன் நடந்து கொண்டனர். பிறகு அவர் தந்த பில்லுக்கான பணத்தில் மீதம் சில்லரை தரும் போது, வேண்டுமென்றே சற்று கூடுதலான டாலர்களை தரச் செய்தனர். அதில் 10க்கு 8 பேர் கூடுதல் சில்லரையை கேஷியரிடம் திருப்பிக்கொடுத்தனர். 

அடுத்தநாள், அதே கேஷியரை பணம் செலுத்தும் வாடிக்கையாளரிடம் வேண்டுமென்றே காக்கவைக்கச் செய்தனர். சற்று கடுகடுப்பு காட்டச்செய்தார்கள். அடுத்து அந்த வாடிக்கையாளருக்கு சில்லரை தரும் போது வேண்டுமென்றே தரவேண்டிய சில்லரையைவிட சில டாலர்கள் அதிகம் தந்தனர். இப்போது 10க்கு 6 பேர் கூடுதல் பணத்தை திருப்பித் தரவில்லை. திருப்பித்தந்த 4 பேரும் கூட கேஷியரிடம் குறை கண்டுபிடித்து சண்டை போட ஆரம்பித்தனர். 

இதில் அறம் என்பது என்ன? தன்னளவில் தனக்கு உரிமையில்லாத ஒரு பொருளை திருப்பித்தரவேண்டும் என்பது தானே.. ஆனால் ஒருவர் நம்மிடம் எப்படி பழகுகிறார் என்பதைப் பொருத்து பணத்தை திரும்ப அளிப்பதும், தராமலிருப்பதும் எந்தவகை அறம்? 

இப்படி, நாம் நமது அறத்துக்கான விழுமியங்களை நம்மளவில் சில மனவியல் நிலை சார்ந்த தன்மையுடன் தொடர்புபடுத்தி பின்பற்றுவதே அறம் குறித்த குழப்பத்தை, அதன் சிக்கலை பெரிதாக்குகிறது. 🌸

-janikiraman

அழுவதற்கான காரணத்தை சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும்..தெரிந்த வயதில்மனதிற்குள் மௌனமாகவும்அழுது கொள்கிறோம்..!!-யாசகன்

Saturday 18 February 2023

நம்மெல்லாருக்கும் உள்ளே வடுக்களால் ஆன உடலொன்று உண்டு.அதைக் காட்டும் கண்ணாடி மிக நேசித்த ஆன்மாவின் கண்களாய் இருக்கின்றன -நேசமித்ரன்

தெய்வீகன்

இழப்பினால் உண்டாகும் காயத்தைவிட, பிரிவினால் உருவாகும் வலிதான் மிகக்கொடியது என்பதை தரையில் விழுந்த அவனது கண்ணீர் துளிகள் சத்தியம் செய்தன.

உலகின் மிகப் பரிதாபமான மெளனம், அந்த நான்கு கண்களுக்கும் இடையில் சற்று நசிந்தது.

     - தெய்வீகன் – 'நாடற்றவர்களின் கடவுச்சீட்டு' நூலில்

Monday 13 February 2023

பிருந்தா


பேச்சற்ற 
வெற்றுப்பார்வை 
எதையும் சொல்லிவிடவில்லை
புதிதாய் 

அப்புறமும் 
தன்பாட்டுக்கு 
நகர்ந்த நேரத்தில் மௌனத்தையே 
பேசிக் கொண்டோம் சுவாரஸ்யமாக 
அல்லது 
அப்படி நான் நம்பிய
காதலையும்

-பிருந்தா

Sunday 12 February 2023

கற்கை நன்றே 18 *மணி



Dunning-Kruger Effect

ஐசக் நியூட்டன் அவர்களிடம், " உங்களுக்கு எல்லாம் தெரியும் இருக்கிறதே!" என்று ஒருவர் கேட்டதற்கு,
 விஞ்ஞான அறிவு என்பது கடல் மாதிரி" நான் அந்தக் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன்!! என் முன்னே, அறிவு என்பது கடல் போல் உள்ளது!! நான்
 சில கூழாங்கற்களை எடுத்து விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் என்னை மேதை என்று சொல்கிறீர்களே என்றாராம்.

Dunning மற்றும் Kruger என்ற இரு விஞ்ஞானிகளும் பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று நிறைய மனிதர்களிடம் ஆராய்ச்சி செய்தனர்.
ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட துறை சார்ந்து கேள்வி கேட்டதில் அதிகமானோர் தெரியும் என்றனர்.
புதிதாக வரும் இயந்திரத்தை இயக்கத் தெரியுமா என்றால் 80% பேர் கைகள் உயர்த்தினர்.1999ல் ஆராய்ச்சி முடிவினை வெளியிட்டனர்.ஒரு குறிப்பிட்டத் துறையில் குறைவாகத் தெரிந்து வைத்திருந்தாலும் நிபுணத்துவம் பெற்றதாய் தங்களை தாங்களே நினைத்துக் கொள்கின்றனர்.

சராசரிக்கும் மிகக் குறைவான திறமை உள்ளவர்கள் தங்கள் திறமையினை மிகை மதிப்பீடு (over estimated) செய்கின்றனர். இதற்கு காரணம் அவர்களின் அறியாமையே. அறியாமையினால் அவர்களுக்கு தங்கள் குறை தெரிவதில்லை அதனை திருத்தி கொள்ள வேண்டும் என்ற புரிதலும் இல்லை
நமது பணிக்கு அல்லது வாழ்க்கைக்கு ஒரு திறமை தேவைப்பட்டால் அந்த திறமையில் உண்மையாகவே நிபுணத்துவம் அடைந்திருக்கிறோமா என்பதை சரி பார்த்துக் கொள்வது அவசியம். சிறிதளவு திறமை இருக்கும்போது, அதீத நம்பிக்கையால் நம்மை நாமே திறமை கொண்டவராக எடுத்துக் கொள்கிறோம்

  ஷூவாங் ட்சு சொல்லும்போது ஒரு முறை பெரும் வெள்ளம் வந்தது. ஆற்றில் அதிக நீர் வந்ததால் ஆற்றின் அரசன் மகிழ்ந்தான். நான் தான் பெரியவன் என்று.தாவி வந்து கடலை அடைந்த போது அவன் முகம் வாடியது.கடலிடம் சொன்னான் "நூறு சிந்தனைகள் உள்ள ஒருவன் மற்றவர்களைவிடத் தனக்குத்தான் அதிகம் தெரியும் என நினைத்துக் கொள்கிறான்" என்றது.கடல் சொன்னது "பரந்து விரிந்த" எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்ததே அது போதும் என்றது.நம்மில் மேம்பட்டவரை காணும் வரை நமக்கும் இது பொருந்தும்.

உண்மையை மனம் கொண்டு மட்டும் பார்க்கத் துவங்கினால் இது போல் தோன்றும்.அகந்தை எல்லா அர்த்தத்தையும் கற்பிக்கும்.அந்த சிந்தனைக்கு வலு சேர்த்துக் கொண்டே இருக்கும்.ஒரு கட்டத்தில் நீங்கள் அதை கண்மூடித்தனமாக நம்பவும் துவங்குவீர்கள்.அதிகம் படிக்கும்போது உங்கள் மனம் நாம் இன்னும் ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லையே எனும் அகந்தையையே முதலில் அழிக்கிறது.ஆகவே ஒவ்வொரு துறையிலும் இன்னும் கற்றுக் கொண்டே இருப்போம்.நிபுணத்துவம் பெறுவோம்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில் தான் இருக்கிறது-எஸ்.ரா

Saturday 11 February 2023

கலீல் ஜிப்ரான்.


பயணம் செய்யுங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். உண்மையான காதல் கதையுடன் வாழுங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள்.
காரணம் மனிதர்கள் அழகான விஷயங்களைச் சீக்கிரம் அழித்துவிடுகிறார்கள்.

கலீல் ஜிப்ரான்.

Thursday 9 February 2023

வாலி


நமது திரைப்பாடல் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகள் என்றபோதும், அவர்களும் அவ்வப்போது சங்க இலக்கியங்களிலிருந்தோ, நமது பழம் செய்யுளிலிருந்தோ, சமயத்தில் சக பாடலாசிரியர்களிடமிருந்தோ கூட பாடல் வரிகளை எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள். 

இதை திருட்டு என்றெல்லாம் சொல்ல முடியாது. கடன் வாங்குதல் என்று சொல்லிக் கொள்ளலாம். ஏனென்றால் ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகாது. ஒருவர் எழுதியதை முழுவதுமாக நம்முடையதாக எடுத்துக் கொள்வது என்பதை வேண்டுமானால் திருட்டு என்று சொல்லிக் கொள்ளலாம். 

'எம்டன் மகன்' படத்தில் 500 ரூபா கடை கணக்குல குறையுதுனு நாசர் பரத்தை புடிச்சி வெளுத்துருவாரு. ஆனா உண்மையாவே அந்த காச வடிவேலு தான் எடுத்துருப்பாரு. நாசர் ஏன்டா எடுத்தேனு கேக்கும்போது நம்மக் கடை நம்ம கல்லானு உரிமைல கை வச்சேனு சொல்லுவாரு. 

அதே மாதிரி நம்ம பாடலாசிரியருங்க நம்ம கடை நம்ம கல்லாங்குற உரிமைல எங்கெங்க கை வச்சாங்கனு என் புத்திக்கு எட்டுன வரை எழுதலாம்னு இருக்கேன். இதையாவது தொடர்ச்சி எழுதிறனும்னு அவா. பாப்போம்.

கங்கை அமரன்  இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர்னு பன்முகத்தன்மை கொண்டவரு. அதுல அவரு பாடலாசிரியரா ரொம்பவே சிறப்பானவரு. அற்புதமான பாடல்களை எழுதிருக்காரு. அவர் எழுதுனதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

 "உன் பார்வையில் ஓர் ஆயிரம் கவிதை நான் எழுதுவேன்.."

அதுல ஒரு வரி வரும் "நிதமும் உன்னை நினைக்கிறேன். நினைவினாலே அணைக்கிறேனு". 

மத்த வரிகளை கூட இன்னொருத்தர் எழுதிறலாம். ஆனா யாரலயும் எழுத முடியாத வரியை நீங்க தரும்போதுதான் நல்ல கவிஞராவோ நல்ல பாடலாசிரியராவோ ஆக முடியும். நினைவினால் அணைப்பது என்பது புதுக்கற்பனை அதுலயும் சிறந்த கற்பனை.

இந்த வரி கவிஞர் வாலிய ரொம்பவே கவர்ந்துட்டு. எல்லாருக்குமே தெரியும் வாலி மட்டும்தான் மூத்த பாடலாசிரியர்கள்ல இளைய பாடலாசிரியர்களை பயங்கரமா பாராட்டக்கூடியவர். 

'வெயிலோடு விளையாடி' பாடலைக் கேட்டுட்டு முத்துக்குமாருக்கு போன் பண்ணி, யோவ் எப்படியா இப்படி பாட்டு எழுதுன 'புழுதிதான் நம்ம சட்டை'னு எழுதி வச்சிருக்க, இதெல்லாம் பாட்டுல வைக்க ரொம்ப கஷ்டம்யா செமனு சொன்னாராம். 

அதே மாதிரி 'கல்யாணம்தான் கட்டிக் கிட்டு ஓடி போலாமா' பாட்ட கேட்டுட்டு சினேகனுக்கு போன் பண்ணி "நல்லா எழுதிருக்கய்யா", இந்தப் பாட்டுக்கு நிறைய எதிர் விமர்சனம் வரும், அத கண்டுக்காத" கமர்சியலா ஒரு பாட்ட இப்படி எழுதிதான் ஹிட்டாக்கணும்னு சொன்னாராம்.

இதெல்லாம் எதுக்குடா சொல்றேனு நீங்க கேக்கலாம். ஏன் சொல்றேனா, தமிழ் சினிமாவுல 60 ஆண்டுகளா உச்சத்துல இருந்த ஒரே கவிஞர். அவ்வளவு உச்சத்துல இருந்தபோதும் சக கவிஞர பாராட்டுற நல்ல குணம் கொண்டவர் வாலிங்குறது மட்டுமில்ல. நல்ல பண்பாளர் அவரு.

நான் மேல குறிப்பிட்ட 'உன் பார்வையில் ஓர் ஆயிரம்' பாடல் வரிகள்ல உள்ள 'நினைவினாலே அணைக்கிறேன்" வரியைக் கேட்டு திகைச்சுப்போன வாலி, கங்கை அமரனுக்கு போன் பண்ணி பாராட்டிட்டு, வித் யுவர் பெர்மிஷன் இந்த வரியை நானும் பயன்படுத்திக்கிறேனு கேட்டாராம். கங்கை அமரனும் அண்ணே உங்களுக்கு இல்லாமலா தாராளமா எடுத்துக் கோங்கணு சொல்ல...

'மௌன ராகம்' படத்துல ஒரு அற்புதமான பாட்டு ஒன்ன வாலி எழுதிருப்பாரு. 'நிலாவே வா... செல்லாதே வா...'  

இந்த பாட்ல கங்கை அமரன்ட்ட கடன் வாங்குன வரியை வாலி பயன்படுத்திருப்பாரு. 'எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்.."னு.

வாலி கங்கை அமரன்ட கேக்காம கூட எடுத்துருக்கலாம். அதுக்கு கங்கை அமரனும் ஒண்ணும் சொல்ல போறதும் இல்ல. இருந்தாலும் கேட்டு பயன்படுத்துன வாலி கிரேட்தான்.

-படித்தது

செகாவ்


தமது எழுத்தாற்றலில் அபார நம்பிக்கை கொண்டிருந்த செகாவ், இலக்கிய விமர்சகர்களைப் பொருட்படுத்தியதில்லை. கோர்க்கியிடம் ஒருமுறை கூறினார்: 

"நிலத்தை உழும் குதிரைகளைத் தொல்லை செய்யும் பெரிய ஈக்களைப் போன்றவர்கள்தாம் விமர்சகர்கள். குதிரை வேலை செய்கிறது, அதன் தசைநார்கள் வயலின் தந்திகளைப் போல விறைப்பாய் உள்ளன. திடீரென்று ஈ குதிரையின் பிட்டத்தில் வந்தமர்கிறது. குதிரையின் தோல் சிலிர்க்கிறது. அது வாலைச் சுழற்றுகிறது...

ஈ எதற்காக இப்படி ரீங்காரத்துடன் சுற்றி வருகிறது? எதற்காக என்று அதற்கே தெரியாமலும் இருக்கக் கூடும். ஓயாமல் துறுதுறுத்துக் கொண்டிருப்பதைத் தனது இயல்பாகக் கொண்டுள்ள அது , தனது இருப்பைத் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. நானும்கூட உயிரோடு இருக்கிறேன் தெரியுமா? என்று அது கூறுவது போல் தோன்றுகிறது . ' பார், எனக்கு ரீங்காரமிடத் தெரியும்; என்னால் ரீங்காரமிடப்படாதது ஏதுமில்லை...'

இருபத்தைந்து ஆண்டுகளாக எனது கதைகளைப் பற்றிய விமர்சனங்களைப் படித்து வருகிறேன் . அவற்றில் ஒன்றிலாவது பயனுள்ள எந்த விஷயத்தையோ, மிகச்சிறிய அளவிலேனுமான நல்ல ஆலோசனையையோ படித்ததாக நினைவு இல்லை"

இவற்றில் மிகச் சிறந்த விமர்சனமாக இருந்த ஒன்றைப் பற்றி செகோவ் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கூறுகிறார்: 

“ஸ்காபிச்செவ்ஸ்கி என்பவர் மட்டும்தான் என் மனதில் பதிந்திருப்பவர். குடிபோதையில் நான் ஒரு சாக்கடைக் குழியின் ஆழத்தில் செத்துக்கிடப்பேன் என்று ஆரூடம் கூறியவர் அவர்"

-செகாவ்

கற்கை நன்றே 17 *மணி




எந்த ஒரு கருத்தும் எதிர் கருத்தால் தான் வளர்ச்சி பெறும். எதிர் கருத்தும் முதல் கருத்தும் மோதி புதிய கருத்து ஒன்று உருவாகும். 

-ஹெகல்

சமீபத்தில் கோகுல் பிரசாத் எழுதிய சுருக்கம் எனும் ஒரு கட்டுரையை வாசித்தேன். எந்த ஒரு கருத்தையும் தற்போது கண்டிப்பது எளிதாகிறது மறுப்பதும் சுலபமாகிறது. சொல்ல வந்த கருத்தின் உட்பொருளை உணராமல் ஏதேனும் ஒன்று சொல்வது அல்லது எதிர்ப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த கட்டுரையில் அதைத்தான் முன் வைக்கிறார்.

நீங்கள் ஒரு கருத்தை சொன்னீர்கள் எனில் எதிர் தரப்பினரால் அக்கருத்து திரிக்கப்பட்டும், சுருக்கப்பட்டும், தவறான நிலைப்பாடும் எடுக்கப்படும். பின்னர் தாங்கள் பிழையாக கற்பனை செய்த கருத்தாக்கத்துக்கு எதிர்வினை ஆற்றி உங்களை குற்றவாளியாக்குவார்கள். அதுவே உங்களது நிலைப்பாடு என்று நிறுவி அதற்கு விளக்கமும் கேட்கிறார்கள். இதற்குப் பெயர்தான் straw man fallacy.
இப்போது நீங்கள் முதலில் சொன்ன கருத்து விவாத காலத்திற்கே வந்திருக்காது. நீங்கள் உத்தேசிக்காத திசையில் செல்லும் விவாத போக்குகளுக்கு மறுப்பு சொல்லியே ஓய்ந்து விடுவீர்கள். மன உளைச்சலுக்கும் நேர விரையத்துக்கும் பலியாவீர்கள்.

இதனோடு தொடர்புடையது association fallacy. ஒருவருடைய கருத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஏற்பும் மறுப்பும் சொல்லாமல் அவரது பின்னணி என்ன, குலம் கோத்திரம் என்ன, உள்நோக்கம் இருக்கிறதா, இதை சொல்வதால் அவருக்கு ஆதாயம் உள்ளதா என்பது போன்ற தேவையற்ற விஷயங்களை ஆராய்ந்து இவற்றில் ஏதேனும் ஒரு கோளாறோ பிசகோ தென்பட்டால் கருத்தை அம்போவென விட்டுவிட்டு கருத்துக்கு சம்பந்தமில்லாதவற்றை தூக்கிக் கொண்டு வந்து களமாடுவது. ஒருவர் மீது முத்திரை குத்தி வெற்றிகளிப்பில் வசை பாடுவது உள்ளிட்டவையாகும்

ஒரு கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் போது (straw man fallacy,association fallacy) இந்த இரண்டு விஷயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மையும் அறியாமல் இவை நமக்குள் ஊடுருவி இருந்தால் அவற்றைக் களைந்த பிறகே நம்முடைய பார்வையை பொதுவெளியில் கூற வேண்டும். அதுவே ஆரோக்கியமான விவாதத்திற்கான பாதை.

இதனை பொதுவெளியிலும் டிவி விவாதத்திலும் பார்க்கலாம். அன்றாட வாழ்க்கையில் மனிதர்களிடமும் காணலாம்.அலுவலகத்தில் மேலாளர் ஒருவரை பார்த்து ஏன் தாமதம்? என்று கேட்டால் அதற்கான காரணத்தை சொல்லாமல் நேற்று நடந்தது, சம்பந்தமில்லாத பதில்களை சொல்லும்போது இதனை கண்கூடாய் பார்க்கலாம். தான் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்கும் மெனக்கெடல்களே முதன்மை காரணம்.ஆகவே இந்த இரு அம்சங்கள் இல்லாதவரிடம் விவாதியுங்கள்.விவாதம் புதிய சிந்தனையை, புதிய பார்வையை உருவாக்கும்.

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday 8 February 2023

நரன்


குரல்வளை தவிர அவர்களுக்கு வேறு இசைக் கருவிகளில்லை..

-நரன்

படித்தது


சீனா ஜப்பான் போன்ற நாடுகளை எந்த outsiders அதாவது வேறு மத, இன, நாடு அரசர்கள் கைப்பற்றியதே இல்லை. ஆரம்பம் முதல் அவை பிற மத, இன, கலாச்சார தலையீடு இல்லாமல் ஒரே மாதிரி இருந்ததால் அங்கு பெரிய மாற்றம் வளர்ச்சி மாறுபாடு என்று வித்தியாசம் காட்டி சொல்வதற்கு ஏதுமில்லை.

அதே போல அவர்களும் பிற நாடுகளை கைப்பற்றி அவர்களது மதம், கலாச்சாரம் போன்றவற்றை திணித்ததில்லை. அதனால் அவர்களால் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று சொல்வதற்கு ஏதுமில்லை.

கிரேக்கத்தை எடுத்துக்கொண்டால் பல நாடுகளில் அவர்களது கலாச்சாரத்தை பரப்பி இருக்கிறார்கள்.

அவர்களது கலாச்சாரத்தின் தாக்கம் பிற இன மக்களிடம் இருக்கிறது. அவர்கள் கலாச்சாரம் வேறு இன மக்களால் அழிந்து இருக்கிறது. இப்படி வரலாறு நெடுக்கிலும் அதனுடைய தாக்கம் பல்வேறு வகையில் இருக்கிறது.

ஆனால் சீனாவுக்கு என்று 3000 வருட எழுதப்பட்ட வரலாறு இருக்கிறது. ஆனால் அதில் உலகத்தின் பங்கு ஏதுமில்லை. உலகிற்கும் அவர்களுக்கும் இருந்த தொடர்பு வணிகம் மட்டுமே.பேப்பர், gunpowder, பட்டு, தேயிலை இப்படி பல முக்கியமான விஷயங்களை சீனாவிடம் இருந்து பெற்று இருக்கிறோம்.

அவைதான் உலகிற்கு சீனர்களின் பங்களிப்பு. Opium War தான் வெளி உலகிற்கும் அவர்களுக்கும் நடந்த பெரிய சண்டை அதுவும் வணிகம் தொடர்பான சண்டை.

இந்த பக்கம் இயேசு பிறந்து, ரோம் கிறிஸ்தவத்திற்கு மாறி, பின்னர் ரோம் சாம்ராஜ்யம் வீழ்ந்து, இஸ்லாம் உதயமாகி இவ்வளவு அக்கப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் அங்கு 3 அரச குடும்பங்கள் தான் மாறி இருந்தது. Chou dynasty, Chin dynasty, Han dynasty.

இன்றும் கூட அவர்கள் அவர்கள் மொழியில் தான் எழுதுகிறார்கள், படிக்கிறார்கள், வேலை வாய்ப்புக்கென்று வெளியில் யாரும் வருவதில்லை. சீன மக்கள் வெளியில் இருந்து சென்று சீனாவில் சென்று settle ஆகவில்லை.

அங்கிருந்த குகை மக்கள் படிப்படியாக அங்கே நாகரிகத்தை வளர்த்து இன்றும் அங்கேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று மிக நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது ஆனால் அதில் உலகத்தின் பங்கு எதுவுமில்லை.

-படித்தது

Tuesday 7 February 2023

உனக்குத் தெரியாத எனக்கும்எனக்குத் தெரிந்த உனக்கும்என்ன இருக்கிறதுஇடையில் இந்த இடைவெளியைத்தவிர-யாழன் ஆதி

கற்கை நன்றே-16*மணி



நேற்று இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.அண்ணன் ஒருவர் தன் தம்பியை சைக்கிளின் பின்னாள் அமர வைத்து ஓட்டிச்செல்வது.. அத்துடன் பாதுகாப்பிற்காக கால்கள் சக்கரத்தில் சிக்காமல் இருக்க கயிறு போட்டு கட்டியிருந்தார்.அதை பார்க்கும் போது அண்ணன் தம்பி பாசத்தை அறியமுடிகிறது. அனுபவத்தில் மூத்தவரான அண்ணன் தன் அனுபவத்தின் மூலம் கிடைத்த படிப்பினையை தம்பிக்கு போதிக்கிறார்.சகோதர பாசத்தை முதலில் பார்த்து வியப்பூட்டிய படம் கண்கண்ட தெய்வத்தில் வரும் ரங்காராவும்,எஸ் வி சுப்பையாவும் தான்.சகோதர பாசத்தை மேன்மையாய் சொன்ன இன்னொரு படைப்பு..

ஹிந்தியில் பிரேம்சந்த்  எழுதிய "மூத்த சகோதரன்" எனும் கதை. அண்ணன் தம்பி இருவர் மட்டும் கதாபாத்திரங்கள். அண்ணன் எப்போதும் படித்துக் கொண்டிருப்பார். தம்பி விளையாட்டு பிள்ளை.. அவர் பட்டம் விடுவதில் அலாதி இன்பம். தம்பி பட்டம் விடுவதை பார்த்து நீ தேர்வுக்கு படிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறாயா ஒழுங்காக படி என்று அண்ணன் அதற்றுவார். அப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும். அண்ணன் தேர்ச்சி பெறவில்லை, தம்பி தேர்ச்சி பெற்று விடுவார். மீண்டும் இதே போல் தேர்வு நாளில் பட்டம் விடும்போது அண்ணன் உடனே எழுந்து சென்று தம்பியை அதற்றி போன முறை நீ தேர்ச்சி பெற்றாய் என்பதற்காக சாதாரணமா இருக்கக் கூடாது. சின்ன வகுப்பில் தேர்வு எளிதாக இருக்கும் மேலே செல்ல கடினமாக இருக்கும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

 அந்த தேர்விலும் தம்பி தேர்ச்சி பெற்று விடுவார். அண்ணன் தோற்றுவிடுவார். இருவரும் ஒரே வகுப்பில் படிக்க நேரிடுகிறது. மீண்டும் இதே போல் தேர்வு வருகிறது. மீண்டும் இதே போல் பட்டம் விடுகிறார். மீண்டும் அண்ணன் அதே வசனத்தை கூறுகிறார். தம்பியும் தயங்காமல் கேட்டுக் கொள்கிறான். இந்த முறையும் அண்ணன் தேர்வில் தோற்க தம்பி ஜெயிக்கிறான். இப்போது நான் பட்டம் விடுவதை யார் தடுக்க முடியும் என்று நினைக்கிறான் தம்பி. மைதானத்தில் பட்டம் விட்டுக் கொண்டிருக்கும் போது அண்ணன் அங்கு வருகிறார்..

 அப்போது ஒரு உணர்வு போராட்டம் நடக்கிறது. உன் மனதில் உள்ளதை நான் அறிவேன். நான் தோற்றுப் போனதால் உன் மீது அதிகாரம் செலுத்த முடியாது என்று கருதுகிறாய். ஆனால் அது தவறு. எனக்கு உன் மீது உள்ளது அதிகாரம் அல்ல, அன்பு தான். நான் தோற்றாலும் பரவாயில்லை நீ வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அவர் கூறியவுடன் தம்பி உடனே அவர் பின்னால் வந்து விடுவார். இத்துடன் கதை முடிகிறது.

 அன்பு என்பது அதிகாரம் என்பது தவறாய் பல நேரங்களில் புரிந்து விடுகிறது. ஆனால் அன்பின் அனுசரனை தெரியவரும் போது அதிகாரம் நம் கண்ணுக்குத் தெரியாது என்று இந்த கதையின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். உடன் பிறந்தவர்கள் மட்டும்தான் அண்ணனா என்றால் நிச்சயம் அது தான் இல்லை. நம் நலனில் அக்கறை உள்ளவர்கள் அதிகாரமாய் கூறும் போது அதனுள் அன்பு நிச்சயம் இருக்கும். அந்த அதிகாரத்தை புறந்தள்ளிவிட்டு அந்த அன்பினை நம் அக கண் கொண்டு பார்த்தால் நம்மை விட பல மடங்கு அவர்கள் உயர்வாய் தெரிவார்கள். இதைத்தான் கண்ணதாசன் பழனி படத்தில் எழுதி இருப்பார்

பணத்தின் மீதுதான்

பக்தி என்றபின்

பந்த பாசங்கள் ஏனடா!

 

பதைக்கும் நெஞ்சினை

அணைக்கும் யாவரும்

அண்ணன் தம்பிகள் தானடா!

அண்ணன் தம்பிகள் தானடா!

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday 6 February 2023

மூடிய கண்களுக்குள் நினைவுகள் தெறித்துத் திறந்தன-உமா

ஒரு கவிதை கசப்பைக் குறைப்பதோ கூட்டுவதோ இல்லை. மாறாக அதை வேறொன்றாக்குகிறது. -இசை

டால்டா" என்றால் வனஸ்பதி தயாரிக்கும் ஒரு நிறுவனம். ஆனால் அந்த நிறுவனத்தின் பெயரே இன்றளவும் வனஸ்பதி என்ற பொருளுக்கு பெயராக வழங்கப்பட்டு விட்டது#info

குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி ஏன்?




இந்தியாவில் முதன் முதலில் மகாத்மா காந்தி மறைவுக்கு தான் அரசு முழு மரியாதை வழங்கப்பட்டது.

தலைவர்கள், கலைஞர்கள் இறப்பின் போது அரசு மரியாதையின் ஒரு சடங்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவர் இந்த பிரிட்டிஷார் கடைப்பிடித்த பாரம்பரியம். அது இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. நாடு நாடாக சுற்றி வந்த பிரிட்டிஷார், அந்த காலக்கட்டத்தில், வேறுநாட்டிற்கு கடல் மார்க்கமாக நுழையும் போது, தங்களிடம் உயிரைப் பறிக்கும் ஆயுதங்கள் ஏதுமில்லை என எதிரிகளிடம் காட்டுவதற்காக, தங்கள் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை
வானத்தை நோக்கி சுட்டு தோட்டாக்களை காலி செய்துள்ளனர். 17ஆம் நூற்றாண்டில் இருந்த இந்த முறை அப்படியே கடற்படையின் மரபாகிப் போனது. பின்னர் ராணுவம் மற்றும் தலைவர்களின் இறப்புக்கும் குண்டுகள் முழுங்க மரியாதை செய்ய துவங்கியது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலும் இந்த குண்டுகள் முழங்க மரியாதை என்பது கடைபிடி கடைபிடிக்கப்பட்டது. அப்போது மறைந்தவர் அரசர் எனில் 101 குண்டுகள் சுடப்பட்டன. பின்னர் இன்று உலகளவில் 21குண்டுகள் என்பது பொதுவாகிவிட்டது.

52 விநாடிகளில் இந்த 21 குண்டுகள் முழங்கும். சுடப்பட்ட குண்டுகளை அங்கேயே விட்டுச் செல்லமாட்டார்கள்.அதனை சேகரித்து அதிகாரிகளிடம் வழங்குவர். முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் மறைவுக்கு 17 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடக்கும். சமீபத்தில் மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு 17 குண்டுகள் முழங்க மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது

-நன்றி தினமலர்

தொலைதல் என்பதுதொலைத்தவருக்கேதிரும்ப கிடைக்காமல்போவது.-யாதுமானவன்

Sunday 5 February 2023

GOLF


GOLF -கோல்ஃப் - ஜென்டில்மேன் மட்டும், பெண்கள் மறுப்பு (Gentlemen Only , Ladies Forbidden)

 ஸ்காட்லாந்தில்,ஒரு புதிய விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது 'ஜென்டில்மேன்கள் மட்டும் விளையாட ஆனால் பெண்கள் விளையாட தடைசெய்யப்பட்டனர். இதனால் GOLF என்ற சொல் ஆங்கில மொழியில் நுழைந்தது.

கற்கை நன்றே-15*மணி



யானையால் யானையாத் தற்று

யானை என்றாலே சிறு வயது முதல் நமக்குத் தெரிந்தது பிரம்மாண்டம் மட்டுமே.சமீபத்தில் பார்த்த elephant whispers யானை மீது இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. வனத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியதாய் சுப.வீ அவர்கள் பகிர்ந்து கொள்ளும் செய்தி.

 யானையை மூன்று வழிகளில் பிடிக்கின்றனர். முதல் முறை குழி தோண்டி யானைகளை பிடிப்பது. யானை அளவுக்கு குழி தோண்டி அதன் மேற்பகுதியில் இலை தழைகளை மூடி யானைகளை பிடிப்பது.(pit fall method) ஆனால் இதில் பல விலங்குகள் மற்றும் குட்டி யானைகளும் விழுந்து விடுகின்றன. அடுத்ததாக இன்னொரு முறை ஆண் யானைகளும் பெண் யானைகளும் கூடுகிற அந்த பருவ காலத்தில் பெண் யானைகளின் பிறப்புறுப்பு சுரப்பிலிருந்து ஒரு திரவம் சுரக்கிறது. அந்த நேரத்தில் பெண் யானைகளை காட்டில் ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினால் ஆண் யானைகள் எங்கிருந்தாலும் மோப்ப சக்தி காரணமாக அங்கு வந்து சேரும்போது அந்த யானையை பிடிப்பது. இதில் ஒரு துன்பியல் போக்கும் இருக்கிறது.. சில வேலைகளில் யானைகள் அப்போது மதம் கொண்டு விடவும் வாய்ப்புகள் இருப்பதால் இரண்டாவது முறையும் பயன்படுத்தவில்லை.

 மூன்றாவதாக ஒரு முறை கையாளப்படுகிறது. மதயானையைக் கொண்டு மற்ற யானைகளை கைப்பற்றுவது. அந்த மூன்றாவது முறை மதநீர் என்பது ஆங்கிலத்தில் must என்று சொல்லப்படுகிறது. அதை அவர்கள்
Pre must,middle must,after must என்ற மூன்று சொற்களை சொல்கிறார்கள்.
யானையின் கண்ணுக்கும் காதுக்கும் இடையில் இருக்கிற ஒரு துளையில் இருந்து மத நீர் சுரக்கிறது. அதனை சுரக்க தொடங்குகிற போது அது முதல் நிலை. அப்போது அது யானை பாகனின் கட்டுக்குள் இருக்கும்.. ஆனால் உடனடியாக கட்டுப்படாது. இரண்டு மூன்று முறை சொன்ன பிறகுதான் கட்டுப்படும்.
 இரண்டாவது கட்டத்தில் எத்தனை முறை சொன்னாலும் பாகனுக்கு யானை கட்டுப்படாது தூக்கி எறிந்து விடும்.. அது முற்றிய நிலை. இறுதியாக மத நீர் வடிந்து வற்றி போன நிலை. அந்த நிலையில் யானை சோர்வாக ஆகிவிடும் எதற்கும் பயன்படாது.

மதநீர் வடியத் தொடங்குகிற அந்த நேரத்தில் யானை கட்டுப்பாட்டில் இருக்கும் போது.. யானையை ஓட்டிக்கொண்டு காட்டுக்குள் போவார்கள். அந்த வாசத்தின் காரணமாக, அச்சத்தின் காரணமாக, மற்ற யானைகள் இதன் கூடவே வந்து சேரும். அப்போது எளிதாக கைப்பற்றி விடலாம். 19ஆம் நூற்றாண்டில் யானை பிடிப்பதில் இது வளர்ந்த முறை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறதோ,அதை 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பெரிய அதிசயமாய் உள்ளது. ஒரு யானையைக் கொண்டு இன்னொரு யானை அச்சுறுத்தி பிடிப்பது போல் ஒரு பெரிய தொழிலை செய்கிறவன் அதை வைத்து சின்ன சின்ன தொழில்களை எல்லாம் கைப்பற்றி விட முடியும். அதுதான் வினைச்செயல் வகை.

" வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 
யானையால் யானையாத் தற்று"

 என்பது குறள். வள்ளுவர் உண்மையில் இந்த விஷயத்தில் தீர்க்கதரிசி தான்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 4 February 2023

I'm not arguing. I'm explaining why i am rightவிவாதம் செய்கிற எல்லோரின் எண்ணமும் விவாதத்துக்குரிய விஷயத்துக்கு தீர்வு கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, அதில் வெற்றி பெறுபவர் யார் என்பதே நோக்கமாக இருக்கிறது-படித்தது

எமர்சன்


“வாழ்வின் பேருண்மைகளை மிக உயர்ந்த கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்துப் பார்ப்பதுதான் பிரார்த்தனை,”

-எமர்சன்

யாரோ


தவறுகளே ஒருவனுக்கு மிகச்சிறந்த ஆசிரியர். பல தவறுகள் கற்றுத் தருவதை வேறு யாரும் போதிக்க முடியாது

-யாரோ

கூடல்தாரிக்


இசை மரம்
விசித்திரமானது
அது என்றென்றும்
பசுமையாகவே இருக்கிறது
வந்தமரும் குயில்கள் தான்
பறந்து சென்றுவிடுகின்றன.

-கூடல்தாரிக்

Friday 3 February 2023

அட்வைஸ்?சும்மா ஒவ்வொரு நிமிசமும் 'வாட்சை' பார்த்து நீங்களாகவே டைம் சொல்லிக் கொண்டிருக்க கூடாது.யாராவது நேரம் கேட்கும் போது மட்டும் சொன்னால் போதும். அட்வைஸும் அது மாதிரிதான்-மதன்

பா.ரா


இன்று காலை வந்த கனவில் ஒரு சிற்பி வந்தார்.

அந்த நாட்டின் அரசர் ஒரு புதிய அரண்மனை கட்டுகிறார். அந்த அரண்மனையில் வைப்பதற்கென்று ஒரு புத்தர் சிலையைச் செய்யும் பொறுப்பு இந்தச் சிற்பியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்கிறார்.

அதன்பிறகு, அந்தச் சிலையை அரண்மனைக்குக் கொண்டுசெல்கிறார்கள், உரிய இடத்தில் பொருத்துகிறார்கள். நாளை திறப்புவிழா.

அப்போது, அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் அந்தப் பக்கம் வருகிறார், இந்தச் சிலையைப் பார்க்கிறார், அதிர்ந்துபோகிறார், உடனடியாகச் சிற்பியை அழைக்கிறார், 'இந்தச் சிலையில் புத்தர் அணிந்திருக்கிற ஆடையைச் செதுக்கியது யார்?' என்று கேட்கிறார்.

'முழுச் சிலையையும் நான்தான் செதுக்கினேன் ஐயா. ஏன் கேட்கிறீர்கள்?' ஏதாவது பிரச்சனையா?'

'நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். புத்தருடைய ஆடையில் உள்ள அந்த எழுத்துகளையும் நீங்களா எழுதினீர்கள்?'

'எழுத்துகளா?' சிற்பி யோசிக்கிறார். 'அவை வெறும் அலங்காரங்கள்தானே? என்னுடைய உதவியாளன் ஒருவன் அந்த அலங்காரங்களைச் செய்தான்.'

'அவை அலங்காரங்கள் இல்லை, வங்க மொழி எழுத்துகள்' என்கிறார் அமைச்சர், 'இந்த நாட்டின் அரசன் ஒரு முட்டாள் என்று அந்த எழுத்துகள் சொல்கின்றன.'

சிற்பி அதிர்ந்துபோகிறார். 'புதிய உதவியாளன், திறமையாக வேலை செய்கிறான் என்று வாய்ப்பு கொடுத்தேன். அவன் புத்தியைக் காட்டிவிட்டான்போல. இப்போது என்ன செய்வது? இதைச் சரிசெய்ய நான்கைந்து நாட்கள் ஆகுமே.'

'நம் ஊரில் பெரும்பாலானோருக்கு வங்க மொழி தெரியாது. அதனால் பிரச்சனையில்லை' என்கிறார் அமைச்சர். 'ஆனால், நம் அரசி வங்காளத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அந்த மொழி நன்றாகத் தெரியும்.'

அதன்பிறகு என்ன ஆனது ..

finish:

சிற்பி யோசித்தார். பிறகு சொன்னார்: ‘சரி, அரசி கேட்டால் இப்படிச் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் அறிந்த உண்மை எப்படியோ புத்தருக்கும் தெரிந்திருக்கிறது.’  என்றுசொன்னாராம்

தகர்த்தெறிந்த நம்பிக்கைகளைபொறுக்கி எடுத்துச் செல்லுங்கள்.முடிவுக்கான ஞாபச்சின்னமாய் ஏதாவது வேண்டுமே..!-இந்திரா

"எல்லாம் சரியாகிவிடும்"அது நமக்கும் தெரியும். ஆனால் அது சரியாவதற்குள் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். கவலையெல்லாம் அதுபற்றித்தான்.-இந்திரா

இந்தப் பயணத்தில் எங்கும் இறங்குவதாக உத்தேசமில்லை நான் வழிகளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்-ராஜா சந்திரசேகர்

World greatest things are all simple -ஐன்ஸ்டீன்

படித்தது


ஒரு நாளைக்கு நம் மனதில் 60000 thoughts தோன்றுகின்றன. இவற்றை சரியாக கையாள்பவர்கள் வெற்றிக்கும், வேறு எதற்கோ கையாள்பவர்கள் தோல்விக்கும் பயணிக்கின்றனர். எல்லோருக்கும் இது கொடுக்கப்படுகிறது. சரியாக எடுத்து கொண்டவர்கள் உலகை வெல்கின்றனர். " 

-படித்தது

ராஜா

சில சொற்கள் தருணங்களை அழகாக்குகின்றன. அதில் மனிதர்கள் அழகாகத் தெரிகிறார்கள்.

-ராஜா சந்திரசேகர்
(அகம் முகம்-அந்திமழைத் தொடரில்)

Wednesday 1 February 2023

இரவு விழும் முன்புபூமியின் மீதுதயங்கும் ஒளி போல்உன் விடை பெறல்-போகன் சங்கர்

கற்கை நன்றே-14*மணி



இடது-வலது

பிரெஞ்சு புரட்சியில் தான் மிக பிரபலமான ‘Liberté! Egalité! Fraternité!’ சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! என்னும் கோஷம் முன்வைக்கப்பட்டது. அரச ஆட்சி, நிலப்பிரபுத்துவம், அரசர்களின் ஆட்சியில் கத்தோலிக்க குருமார்களின் பங்கு இதற்கெல்லாம் எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.

காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்க வழக்கம் கலாச்சாரம் என்னும் பெயரில் சிலர் மட்டுமே ஆதாயம் அடைந்து வருவதையும் பெரும்பாலான சாதாரண மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் உழல்வதை எதிர்த்து அந்த பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும் என்று போராட்டம் செய்தனர்.

எல்லாருக்கும் சமமான அடிப்படை மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதை தீர்த்து வைக்க national constituent assembly நிறுவப்பட்டது. புதிய ஆட்சி அதற்கு புதிய constitution எல்லாம் அமைப்பது இதன் நோக்கம்.

இதில் அரசருக்கு எவ்வளவு அதிகாரம் தருவது? அதில் மதகுருமார்களின் பங்கு என்ன? இதைப்பற்றி எல்லாம் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. அப்போது assembly யில் president க்கு வலது பக்கம் அமர்ந்து இருந்தவர்கள், அரசருக்கு நிறைய அதிகாரம் வழங்க வேண்டும். காலம் காலமாக பின்பற்றிய வழக்கங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதம் வைத்தார்கள்.

president க்கு இடது புறம் அமர்ந்து இருந்தவர்கள், சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! அனைவரும் சமம், democratic republic வேண்டும் என்னும் வாதத்தை முன் வைத்தார்கள்.

அன்றைய பிரெஞ்சு நாளிதழ்களில் வலது சாரிகள் அரச ஆட்சிக்கு ஆதரவாக வாதம் செய்கிறார்கள் இடது சாரிகள் சமத்துவத்திற்கு ஆதரவாக வாதம் செய்கிறார்கள் என செய்தி வந்தது.

அதில் இருந்து, உலகம் முழுவதும் வலது சாரிகள் right-wing (conservative or reactionary political party) என்பது கலாச்சாரம், பண்பாடு, தேசியம் போன்றவற்றிக்கு ஆதரவு அளிக்கும் நபர்கள் என்றும்,

இடது சாரிகள் left-wing (liberal or radical political party) என்பது மாற்றம், மறுமலர்ச்சி போன்றவற்றிக்கு ஆதரவு அளிக்கும் நபர்கள் என்றும் ஆனது.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு