Monday 26 October 2020

மீரா

இலக்கிய கூட்டம்
பரவசமூட்டும்
பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
"காது மட்டும் கேட்காது"

-மீரா

Sunday 25 October 2020

காட்டுப்பன்றி

காட்டுப்பன்றி ஒன்று தன் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்த நரி நீ ஏன் கொம்புகளைத் தீட்டுகிறாய்?

அதற்கு பன்றி எதிரி நம் முன் திடீரென வந்துவிட்டால் எப்படித் தீட்ட முடியும் என்றது

"யுத்த காலத்தில் செய்ய வேண்டியதை சமாதான காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்"!

Saturday 24 October 2020

ஆபிரகாம் லிங்கன்

தவறுகள் செய்யபடி சூழல் தூண்டும்போது, வடக்கேயும் தெற்கேயும் பார்க்காதீர்கள். மேலேயும் கீழேயும் பார்க்காதீர்கள்.உங்கள் உள்ளுக்குள் பாருங்கள்.அங்கே ஒரு தராசு இருக்கிறது.அதன் பெயர் மனசாட்சி

-ஆபிரகாம் லிங்கன்

முட்டாள்

தாடி வைத்த சாமியார் சுவடியில் ஒரு வரி கண்டு திடுக்கிட்டார்..அதில் "நீண்டதாடி வளர்த்திருப்பவர் முட்டாள் என்றதும்..

எண்ணெய் விளக்கில் நீண்டதாடியை கருக்கினார். தீ நீண்டு மீசை,புருவம், தலைமுடி எரிந்தது.கருகிய முகத்துடன் மீண்டும் படித்தார் "நீண்டதாடி வளர்த்திருப்பவர் முட்டாள் என்று"

Thursday 22 October 2020

இரா.சிவசித்து எழுதிய English is funny language

இரா.சிவசித்து எழுதிய English is funny language கதை சுருக்கம்

90களில் கிராமத்து பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் குறித்து தான் கதை முழுவதும்.ஓவிய ஆசிரியரின் ஸ்போக்கன் இங்கிலீசை குருட்டு மனப்பாடம் செய்வதில் கதை துவங்குகிறது.come வா,dont come- வராதே என சினிமா வசனம் போல் ஒப்புவிக்க வேண்டும்.

பூச்சு – பொட்டுக்களை புடிக்க விருட்டென்று நீளும் பள்ளி நாக்கைப் போல அசுர வேகத்தில் நீளும் ஓவிய ஆசிரியர் கை அகப்பட்டவன் காதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும். அகப்பட்ட பயல் அந்த வசனத்தை மறுபடி அழ வேண்டும். சொல்லத் தெரியவில்லையென்றால் அன்றைக்கு கூத்து அவனை வைத்துத்தான்.ஏ க்ளாசுக்கு ஒண்டிக் குடித்தனம் போகும் இன்னும் பயம் அதிகமாகும்.ஏன்னா அது இங்கிலீஸ் மீடியம்.

வேப்பமரத்தடியில் எமகா பைக் இல்லையெனில் சந்தோசம் குழந்தைகளுக்கு.இங்கிலீஸ், ஓவிய பீரியடில் இருந்து காப்பாத்துனு வேண்டாத குழந்தைகளே இல்லை.
சில நாளில் பரிட்சை வந்தது. மொழிபெயர்ப்பு படித்தால் ஆச்சர்யம்.
பேப்பரை அனைவர் முன்னிலையில் திருத்தினார் ஆசிரியர்.

"Blood Is thicker then Water” ஐ “தண்ணியை விட ரெத்தம் கட்டியானது”

East or West home is best” என்பதற்கு “கிழக்கு, மேற்கில் வீடு இருந்தால் சிறந்தது என எழுதியிருந்தனர்.

அடியில் இருந்த மொசக்கித்தரை குளிர்ச்சி டவுசரைத் தாண்டி குளிரூட்டியது அனைவருக்கும். ரோல்நெம்பர் 
305’ எவன்டா?”

வேலு வாத்தியார் சத்தம் கேட்டதுமே முருகனுக்கு கால்கள் சூடேறி முதுகு காந்தியது. ஒவ்வொரு அடியும் நெஞ்சுக் கூட்டுக்குள் புடிக்கும்.முப்பது பேர அடிச்சும் வாத்தியார் அயர மாட்டீங்கிறாரே என  அங்கலாய்ப்பு வேற.

இப்படியாக யதார்த்த நடையில் வசவுகளும் வார்த்தைகளுமாய் ராஜபாளையம் வட்டார நடையில் இருந்தது.90 களில் ஆங்கிலம் படித்தவர்க்கு மட்டும் தெரியும் ஆங்கிலம் எவ்வளவு கடினம் என்று.
படிக்கும் போது நாம் எழுதிய நோட் மேக்கிங்கில் rough copy  அடித்துவிட்டது fair copy எழுதியது.
டெவலபிங் ஹின்ட்ஸில் எல்லா கோட்டையும் எடுத்துவிட்டு அப்பிடியே எழுதியது அனைத்தும் மனக்கண் முன் ஓடியது.அது ஒரு கனாக்காலம்தான்

-மணிகண்டபிரபு

மாட்டு வாகடம்-போகன் சங்கர்

மாட்டு வாகடம்
-போகன் சங்கர் Bogan Sankar

நண்பருக்கு சகிக்க முடியாத உடல்வலி.எத்தனை மருத்துவரிடம் சென்றும் நோய் மட்டும் செளக்கியமாய் இருந்தது.டாக்டருக்கெல்லாம் டாக்டர் ஒருவர் இருக்கிறாரென நண்பர் பரிந்துரைத்தார்.ஊர் எல்லையில் அடர் இருளில் விசாலாமான கேட்டினை கதறக்கதற திறந்து கொண்டு உள்ளே போனோம். டாக்டர் எங்கே என ஒரு பெண்ணிடம் கேட்க பின்னால் கேட்க டாக்டர் மாட்டுத் தொழுவத்தில் இருந்ததாய் பதில் வந்தது.

அப்போதுதான் தெரிந்தது அவர் மாட்டு டாக்டரென.ஆரு என்ற குரல் கேட்ட வழியே சென்றபோது சாணி மிதித்து நகர முடியாத செஸ் காய்களைப் போல் நின்றோம்.டாக்டர் வந்தவுடன் வைத்திய வரலாறை கூறினோம்."ஒரு வெயில்ல அலை" வைட்டமின் டி குறைப்பாடு வேற ஒன்னுமில்ல.மருந்து சீட்டு ஒன்று கொடுத்து கால்நடைத் தீவனம் வாங்கிவா என பணித்தார். வாங்கி சென்றபோது நண்பனை காணவில்லை.டாக்டர் அவரை கொஞ்சம் தழை பறிக்கக் கூட்டிட்டுப் போயிருக்காராம்.

*ஒரு சாதாரண நிகழ்வை தனக்கேயுரிய நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்.

Wednesday 21 October 2020

சார்லி மலையாளம்*மணி



2015ல் துல்கர் சல்மான்,பார்வதி நடிப்பில் வந்த படம் சார்லி.இது தற்போது மாறா எனும் பெயரில் தமிழுக்கு மாதவன் நடிப்பில் வரவுள்ளது.அப்போதே மிகப் பெரும் வெற்றியை பெற்ற படம்.லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம்.நாயகி நாயகனை தேடும் கதைதான் என்றாலும் அத்தனை சுவாரஸ்யமாய் கதை சொன்னபடம்.

#கதை

பெங்களூரில் பணிபுரியும் பார்வதி சொந்த ஊருக்கு திரும்புகிறார்.கண்டிப்பான தாய் சீதா.. பார்வதிக்கு அழகற்ற ஒரு மாப்பிள்ளை பார்க்க யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு சென்று ஒரு பழைய வீட்டில் குடியேறுகிறார். அங்கு முன்பு குடியிருந்த துல்கர் சல்மான் விட்டுச்சென்ற பொருள் இருக்கிறது.அதனை அப்புறப்படுத்தும் போது துல்கர் வரைந்த படக்கதை புத்தகம் கண்ணில் படுகிறது.அதில் புத்தாண்டு இரவில் துல்கர் வீட்டில் திருட வரும் திருடனுடன் நட்பாகி அன்று இரவு ஒரு த்ரில்லுக்காக அவனுடன் திருட செல்கிறார் துல்கர்.அங்கு வீட்டின் ஓட்டை பிரிந்தவுடன் இருவரும் ஷாக்காகி நிற்க..படக்கதை புத்தகமும் பாதியில் நிற்க, படித்த பார்வதியும் ஆடியன்சும் என்னவெனத் தெரியாமல் ஷாக்காகி பாதியில் நிற்க.. அப்பிடி என்னதான் வீட்டிற்கும் பார்த்திருப்பார்கள் என யோசிக்கின்றனர்.

அதிலிருந்து மீதிக்கதை தேட கிளம்பும் பார்வதி.. சார்லியையும் ஆர்வத்துடன் தேடும் கதை ஆரம்பிக்கிறது. அப்பிடி என்னதான் ஓட்டுக்குள் இருந்தது திருடனில் ஆரம்பித்து,அவன் சொல்லும் நபர், அவர் சொல்லும் இன்னொரு நபர் என சங்கிலித் தொடர் போல் சார்லி குறித்த சுவாரஸ்ய சம்பவங்கள் பார்வதி கேட்கிறாள். கதையோடு சேர்த்து சார்லியை காண வேண்டும் என ஆவல் பிறக்கிறது. தேடிச் செல்கிறாள்.முடிவில் என்ன ஆனது என்பது தான் கதை.

ஜே.ஜே சில குறிப்புகள் போல் ஒரு பிம்பத்தின் மீது வரும் மரியாதையைப் போல் படம் நெடுகிலும் சார்லி குறித்த பாசிட்டிவ் எனர்ஜி பார்வதிக்கு. வழிப்போக்கனாய்,ஜிப்சியாய் திரியும் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் துல்கர் கச்சிதம்.தான் பார்த்த அழகியலை ஒவ்வொருவருக்கும் விளக்கும் போது வாழ்க்கை மீது பிடிப்பை ஏற்படுத்துகிறார் துல்கர்.

தேடல், ஏமாற்றம் என படம் முழுக்க தாங்கிச் செல்கிறார் பார்வதி.ஒவ்வொரு இடத்திலும் நாயகன் மீதான அபிப்ராயம் வளர வளர ஆர்வத்துடன் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்கிறார்.இறுதிக் காட்சியில் அத்தனை ஆச்சர்யத்தையும் செல்லுலாய்டில் துல்கரை பார்த்து பதிவிடுகிறார்.

முதல் காட்சியில் லிப்ட் கொடுப்பதை இறுதியில் கனெக்ட் செய்தது, இன்டர்வெல் ப்ளாக்கில் முன்பின் சொல்லும் ஒரு சிறுகதை,இறுதியில் தான் ஸ்ருதி என அறிமுகமாகி துல்கரின் அன்பை பார்க்கும் இடம்,
என திரைக்கதையில் சுவாரஸ்யம் தந்திருக்கிறார் இயக்குநர் மார்டின் பிரக்கட்.கழுகுப் பார்வை ஒளிப்பதிவில் அத்தனை ரம்மியம். உறுத்தல் இல்லாத
ஒரு நல்ல ஃபீல் குட் மூவி.

-மணிகண்டபிரபு

ஓஷோ

இரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்.முதலாவது
"நீ எப்பொழுது பிறருக்கு எப்போது வாக்குறுதி கொடுத்தாலும் அதை நேர்மையாக இருந்து நிறைவேற்று.இரண்டாவது யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்காதே

-ஓஷோ

Monday 19 October 2020

சுந்தர ராமசாமி

மெளனம்  உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக் கொள்கிறது.பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகிறது.

-சுந்தர ராமசாமி

பாரதியார்

ஒரு தகராறு,முரண்பாடு மேற்குறிப்பிட்ட எந்த ஒரு புள்ளியிலிருந்தும் என்பதை பாரதியார் சொல்கிறார்..

ஐந்து தலைப் பாம்பென்பான்-அப்பன்
ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால்,
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

சுப்ரமணிய ராஜூ

கிழம்

நேற்றைய கவலையில்
இன்றைய காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்

எண்ணிப்பார்த்தால்
எழுவத்தி நாலு.

-சுப்ரமணிய ராஜூ

Sunday 18 October 2020

Coppola

நீங்கள் அதிக வெற்றிப்படங்களை தருகிறீர். வெற்றியின் ரகசியம் என்ன?

நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் மணமுடித்திருப்பது அவசியம். (சிரிப்பு) மணமுடித்தவர் மனது வெகு சீக்கிரம் சமநிலை அடைகிறது. ஆழமான சிந்தனைகளையும் தூண்டும்.

The Godfather பட இயக்குநர் Francis Ford Coppola

கார்பன்

உலகில் இந்த ஆண்டு கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் அளவு,8.8% குறைந்துள்ளது. விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில்,கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு கார்பன் அளவு 155 கோடி டன் அளவுக்கு குறைவு. இவ்வளவு பெரிய சரிவு, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கூட ஏற்பட்டதில்லை என தெரிவித்தனர்

-சுப.வீ

ஒருவன் செய்த பிழையை அவன் முகத்துக்கு நேரே பரிவாய் இதமாய் எடுத்துச் சொல்லுதல் அறங்கூறுதல்.

ஒருவன் செய்த அல்லது செய்யாத பிழையை அவன் இல்லாத இடத்தில் கூறுவது புறங்கூறுதல்

-சுப.வீ

Saturday 17 October 2020

புத்தம் புதுகாலை விமர்சனம்-மணி



சில்லுக்கருப்பட்டி,awe,ஐந்து சுந்தரிகள் படங்கள் போல ஐந்து கதைகள் உள்ள ஆந்தாலஜி படம். லாக்டெளன் காலத்தில் எடுக்கப்பட்டதால் அதிக கதாபாத்திரமின்றி ஓரிரு கேரக்டருடன் ஒவ்வொரு இருபது நிமிடங்களில் நீளும் ஐந்து கதை. ரம்மியில் செவன்ஸ் ஆடி முடித்தவுடன்.. சரி தூங்குவதற்கு முன் ஃபைவ்ஸ் ஆடி பாய்ன்டில் டிக் அடித்தது யாரு,ஃபுல்லு வாங்கினது யாருனு பார்ப்போம்.

#இளமை இதோ இதோ

சுதா கோங்கரா இயக்கத்தில் முதல் கதை.மனைவியை இழந்த கணவனான ஜெயராமை சந்திக்க கணவனை இழந்த தோழியான ஊர்வசி வரும்போது லாக்டெளன் ஆரம்பிக்கிறாங்க.அங்கேயே தங்கும் நிலையில் அவர்களின் இளமை பருவத்தில் காளிதாஸ் ஜெயராமும் கல்யாணி பிரியதர்சனும் பேசுவது போல் காட்சியமைப்புகள்.அதன் இறுதியில் என்ன என்பது மீதி. சில்லுகருப்பட்டி டார்டாய்ஸ் கதையை தாண்டல.கொஞ்சம் பனம்கருப்பட்டி மாதிரிதான் இருந்துச்சு

டிக் அடிக்க முடியல.so பாய்ன்ட்டை குறைத்தது போல் இருந்தது.

#அவளும் நானும்-கெளதம் மேனன்

அம்மா காதல் திருமணம் செய்ததால் தாத்தாவுக்கு கோபம்.பேத்தி லாக்டெளனில் சயின்டிஸ்ட் தாத்தா எம்.எஸ்.பாஸ்கரை சந்திக்க போறாங்க.எதனால் அம்மா வெறுத்தார்,அவரின் நாலெஜை பார்த்து மெய்சிலிர்க்கிறாங்க பேத்தி. ஏன் அம்மா மேல அப்பா மேல கோபம்னு அழகிய நடிப்பால் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் எம்.எஸ்.

இந்த ஆட்டத்தில் டிக் அடித்தது போல் இருந்தது.

#காபி எனிஒன்-சுஹாசினி

கோமாவில் இருக்கும் அம்மாவை சந்திக்க வெளிநாட்டில் இருந்து சுஹாசினி,அனுஹாசனும் வர்றாங்க. வீட்டிற்கு வந்து அம்மாவின் அன்பை நினைத்து உருகுறாங்க.ஒரு கட்டத்தில் சுருதி ஹாசனின் வீடியோ கால் பார்த்து நினைவு வந்திருது..
 (முதல்லயே வீடியோ கால் பேசியிருக்கலாமே).இறுதியில் என்னாச்சு என்பது கதை.
ஹை க்ளாஸ் ஃபேமிலி குடும்பக்கதை என்பதால் இங்கிலீஸ் செகன்ட் பேப்பர் பரிட்சை மாதிரி தான் இருந்துச்சு.

இதில் ஃபுல்லு 90 பாய்ன்ட் வாங்க வச்சிட்டாங்க மச்சி.பாய்ன்ட் ஏறுனதுதான் மிச்சம்

#ரீ யூனியன்-ராஜீவ் மேனன்

இதுவும் ஹை க்ளாஸ் கதை. பஞ்சரான பைக் உருட்டிவரும் ஆன்ட்ரியா..தன் பள்ளி நண்பரான மருத்துவர் விக்கி வீட்டுக்கு வர்றாங்க.ப்ரன்ட் வீட்டுக்கு வந்ததும் அவர் அட்டென்ட் செய்த பேஷன்ட்டுக்கு கொரோனா வர இவர் வீட்டு மாடியில் தனிமையில் இருக்க ஆன்ட்ரியா அங்கியே இருந்து அவர் அம்மாவை கவனித்துக்கொள்ளும் சூழல்.இதற்கு இடையில் அவர் ட்ரக் அடிக்ட் னு தெரியவர இறுதியில் என்ன என்பது கதை.ஸ்டைலிஸ் ஸ்பீச், மியூசியம் வீடு போல் செயற்கையாய் நாடகத்தனமாய் இருந்தது.

இதில் டபுல் ஃபுல் 180 பாய்ன்ட் வாங்கினால் எப்பிடி இருக்குமோ அப்பிடி.

#மிராக்கிள்-கார்த்திக் சுப்புராஜ்

ஓபனிங் ஆட்டத்தில் டிக் அடித்தால் எப்படி ஒரு கதையோ அதுபோல் வொர்த்தான கதை.20 நிமிசத்தில் ஒர்த்தான காமிடி ட்விஸ்ட் என இதுதான் நெம்பர் ஒன் கதை.அதான் க்ளைமேக்ஸில் வச்சிருக்காங்க.

பாபி சிம்ஹாவும் இன்னொரு திருடனும் ஒரு காரில் ஏதோ இருக்குனு திருட போறாங்க ஒன்னுமில்லாமல் போகுது.சரி வந்ததுக்கு ஒரு டயரை திருடிட்டு ஒரு வீட்டில் கொள்ளையடிக்க போறாங்க. அங்கே மூட்டை மூட்டையாய் பணம். அப்புறம் என்ன நடந்ததுனு சஸ்பென்ஸ்.

இதுபோன்ற கலவைப் படங்கள் ஒவ்வொருவரையும் ஒரு கதை திருப்திப்படுத்தும்.ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிக்ஸ் அடிச்சாங்களா,சிங்கிள் அடிச்சாங்களா என்பதுதான் முக்கியம்.இதற்கு முன் வந்த நானியின் ரகசியம்,மலையாள ஐந்து சுந்தரிகள் போல படங்கள்தான் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐந்துமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு நல்லாயிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்

-மணிகண்டபிரபு

Thursday 15 October 2020

நண்பர்கள் நான்கு விதம்

நண்பர்கள் நான்கு விதம் 
அவசிய நண்பர்கள், ஆத்மார்த்த நண்பர்கள், நெடுங்கால நண்பர்கள், பேருக்கு நண்பர்கள்.

அவசிய நண்பர்கள் நம் உள் வட்டத்தில் இருக்கும் உன்னத மானவர்கள். கொடி மரம் போல எல்லா தருணங்களிலும் இருப்பார்கள். நமக்கு எது ஏற்பட்டாலும் முதலில் அவர்களுக்கு தான் சொல்லத் தோன்றும். இவர்களின் பெருந்தன்மையே முக்கிய காரணம்.

ஆத்மார்த்த நண்பர்கள் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் நெஞ்சுக்கு உகந்தவர்கள். எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதையும் அவர்களிடம் மனம் விட்டு பேச முடியும்.இவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்போம். நெருங்கிய நண்பரிடம் சொல்ல முடியாததை கூட இவர்களிடம் சொல்லுவோம்.அவர்களுக்கு நம்மைத் தெரியும் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது.அவரிடம் இறக்கி வைத்தால் அத்தனை பாரமும் குறையும்

நெடுங்கால நண்பர்கள் எல்லாருக்கும் உண்டு. சின்ன வயதிலிருந்து பழகுவார்கள். உடன் இருப்பார்கள். ஒரே தெருவில் இருப்பார்கள். சிலர் அவசிய நண்பர்கள் ஆவதும் உண்டு, இது அணுகு முறையை பொறுத்து அமையும்.

பேருக்கு நண்பர்கள் நம்மை பாதித்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம். ரகசியமாய் வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் நமக்குள் இருக்கும். ஒரே மைதானத்தில் விளையாடுவது அவ்வப்போது பார்ப்பது என்று இருக்கும் அந்த உறவு முறையில் எந்தவித பொறுப்பும் இருப்பதில்லை

-ஜெஃப்ரி கிரீஃப்
தமிழில் இறையன்பு

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மானிட இனத்திற்குப் பெரிய அச்சுறுத்தல்
தீயவர்கள் இழைக்கும் தீங்கு அல்ல.மாறாக, நல்லவர்கள் செயலற்றியிருப்பது தான்

-மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

Saturday 3 October 2020

சின்னச் சின்னதுதான்

சின்ன புறக்கணிப்புதான்
மனதை எவ்வளவு வருத்துகிறது

சின்ன நெளிவுதான்
எவ்வளவு மரியாதை தருகிறது

சின்ன புன்னகைதான்
எவ்வளவு பகையை உடைக்கிறது

சின்னச் சின்னதுதான்
எவ்வளவு பெரிதாக இருக்கிறது?

-ப.உமா மகேஸ்வரி