Wednesday 31 January 2024

கிலோ Thousand-K


M" வார்த்தை மில்லியனுக்கும் "B" வார்த்தை பில்லியனுக்கும் பயன்படுத்தப்படுகிறது
ஆயிரங்கள் என்று வரும்போது, ​​Tக்குப் பதிலாக k ஐப் பயன்படுத்துகிறோம்.

 கிரேக்க மொழியில், சிலியோய் என்ற வார்த்தை ஆயிரத்திற்கு பயன்படுத்தப்பட்டது, இது காலப்போக்கில் கிலோ என்று அழைக்கப்பட்டது.

 1000 என்ற எண்ணைக் குறிக்கும் 1000 கிராம் அல்லது 1000 மீட்டர் போன்றவற்றுக்கு கிலோவைப் பயன்படுத்தத் தொடங்கினோம்.

 அதனால்தான், ஆயிரத்திற்கு Tக்கு பதிலாக k ஐப் பயன்படுத்துவது எளிதாகவும் பொருத்தமானதாகவும் தோன்றியது. தொழில்நுட்ப மொழியிலும் கிலோ என்பது கிலோபைட் போன்ற ஆயிரம் என்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

Chilioi-kilo

-படித்தது

Tuesday 30 January 2024

அற்புதங்களின் ரகசியமே அது நடக்கும்போது நம்மால் உணர முடியாமலிருப்பதுதான்.-சவிதா

இனியகாலை


இளஞ்செடியை சுற்றி வேலிக்கூண்டு ஒன்றை அமைத்தான் தோட்டக்காரன். இது நம் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று செடி நினைத்தது. மனம் நொந்தது. வெளியே சுதந்திரமாக தெரியும் பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து பெருமூச்சு விட்டது. ஒரு கட்டத்தில் அதற்கு கோபம் வந்து. தன் ஒரு கிளையை வளைத்து வெளிக்கூண்டுக்கு வெளியே நீட்டியது.. ஆகா இதுவல்லவோ சுதந்திரம் என எண்ணியது.

 ஆனால் அங்கு வந்த மேய்ச்சல் மாடு ஒன்று தன் நாவினால் வெளியே இருந்த இலைகளை தாவி இழுத்து சுவைத்தது. பின்பு இளஞ்செடியை வேரோடு கீழே சாய்த்தது. மரமாக நிமிர்ந்து நிற்கும் வரை பொறுமையோடு இருந்திருந்தால் வேலிக் கூண்டு இல்லாமல் போயிருக்கும், சுதந்திரமும் கிடைத்திருக்கும்.

' ஏன் போடப்பட்டுள்ளது என்பதை அறியாத வரை எந்த வேலியையும் தகர்க்காதே" என்கிறார் 
ராபர்ட் ஃப்ராஸ்ட் 

இனிய காலை

Monday 29 January 2024

புத்தகம்-5


#Reading_Marathon2024
#24RM050

Book no:5/100+

களிற்றடி
-செளம்யா

ட்விட்டர் நண்பர் சௌமியாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது‌. இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் வாங்கியவை. சொற்களின் மூலம் ஓவியம் வரைவது என்பது மிகச் சிலருக்கு அது கைவந்த கலை. எழுத்துக்கள் இயல்பாகவும் கதை களத்தில் நின்று மீறாமலும் தனக்கே உரிய பாணியில்  நம்மை அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றை வைப்பது அல்லது அருகில் இருந்து பார்க்க வைப்பது போன்ற உணர்வைத் தருகிறது இக்கதைகள். சுந்தரராமசாமியின் கதைகளை போல எந்தவித வார்த்தை ஜாலமும் அலங்காரமும் இல்லாமல் கதைகள் இருக்கின்றன. வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள இருண்ட பக்கங்களில் ஒரு டார்ச் லைட் அடித்து அதன் மூலம் இந்த கதையின் உள்ள கதாபாத்திரங்களின் பக்கம் நின்று நம்மையும் அறியாமல் கதைகளோடு ஒன்ற வைத்து சரி தவறு என மனதில் ஒரு உரையாடல் நிகழ்த்தி அல்லது ஏதேனும் ஒரு கதை மாந்தரின் கைகளை நேசக் கரம் கொண்டு நீட்டுவது அக்கதை சொல்லிக்கு கிடைத்த வெற்றியாகும்.

களிற்றடி கதையில் அப்பாவின் கால்களை அமுக்கி கதை கேட்கும்போது அதற்கு காரணமான வலியினை உரையாடல் மூலம் கேட்டு அவரின் பால்யத்தை மீட்டெடுக்கும் போது அவரின் குற்ற உணர்வும் தூர் வாரப்படுகிறது. மகளிடம் சொல்லிவிட்டு முகத்தை திருப்பும்போது கண் கலங்கி இருப்பார். அந்த கணத்தில் நம்முடைய விழிகளிலும் கொஞ்சம் ஈரம் இருக்கும்.

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பார் வள்ளுவர். ஆனால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் தம்மின் தம் மக்கள் மேன்மை உடையவராக விளங்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். சாக்கடை அள்ளும்போது விசை வாய் தாக்கி இறந்த கணவன், மலம் அள்ளும் தொழிலை செய்யும் அம்மா.. மகன் மீண்டும் அதே தொழிலுக்கு வரக்கூடாது அவமானப்படக் கூடாது என எண்ணுகிறாள் தாய். அப்படி நினைக்கும் போது அவர்களின் சுயமரியாதை என்ன ஆனது .பசி எந்த அவமானத்தையும் வெல்லக் கூடியதாய் இருக்கும்போது இவர்களின் வீராப்பு வயிற்றுடன் போரிடுவதா அல்லது தம்மை இழிவு படுத்தும் மக்களுடன் போரிடுவதா என்ற போரில் யார் வென்றார்கள் என்பது இக்கதையின் முடிவு.

காருண்யம் மற்றும் ஊழ் கதைகள் இரண்டும் ஏறக்குறைய ஊனமுற்ற அல்லது சந்தர்ப்பத்தினால் குறைபாடு அடைந்த குழந்தையின் மீது காட்டும் தாயின் பாசப் போராட்டத்தையும் ஊழ் என்ற கதையில் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்ன நினைக்கிறார்கள்..உதாசீனம் செய்யும் சகோதரனுக்கு ஏற்பட்ட நிகழ்வை கனத்த இதயத்துடன் நம்மை படிக்க வைக்கிறது.

கொடுத்த கடனை வசூலிக்கச் செல்லும் ஒருவனின் மனநிலை பின்பு அவர்களின் நிலை அறிந்து இரக்கப்படும் போது தன்னால் இரக்கம் மட்டுமே பட முடியும் என நினைத்து திரும்பும் போது அந்த ஐந்தாயிரம் பணத்துடன் நம்முடைய மனமும் கொஞ்சம் கனக்கிறது.

அரிது அரிது கதையில் செக்கு மாடு போல் உழைக்கும் ஒரு கடைநிலை ஊழியன் ஜேக்கப் எவ்வாறெல்லாம் பிறரிடம் அவமரியாதை பெறுகிறான் என்பதை ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லிவிட்டு இறுதியில் ஜேக்கப் இன்னொருவனுக்கு கரிசனம் ஏளனம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடையும் பெண் போல நமக்கும் உலக இயல்பை ஒரு நிமிடம் சொல்லி இருப்பார்.

ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் ராஜேஷ் பணத் தேவையையும், மனைவியின் கௌரவத்தையும் காப்பாற்ற எவ்வாரெல்லாம் அதிகாரத்துடன் முட்டி மோதுகிறானா?அல்லது ஒத்துப் போகிறானா என்பதனையும் இறுதியில் அதிகாரம் ஜெயித்ததா அல்லது சுய கவுரவம் ஜெயித்ததா என்பதையும் படிக்கும் போது நம்மை கண்கலங்க வைத்திருப்பார்.
இறுதியிலும் தொடக்கத்திலும் வரும் chellam calling எனும் அழைப்பு இருவித உணர்வுகளை நமக்கு தருகிறது‌

மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் கல்லூரி மாணவியான கீர்த்தனா பகுதிநேர ஊழியர். தினசரி அங்கு நடக்கும் அனுபவங்கள் மூலம் ஒரு பாடத்தினை கற்றுக் கொள்கிறார். தான் அதிகமாக வாங்கிய பணம் எவ்வாறு அவரை குற்ற உணர்ச்சிக்கு தோன்றியதோ அதேபோன்று தான் இழந்த பணமும் அதே குற்ற உணர்ச்சியை தூண்டுகிறது .தராசு முள் போல் அவரின் மனம் எங்கு சாய்ந்தது எங்கு எழுந்தது என்பதனை கதையில் சொல்லி இருக்கிறார்.

நாயின் மீதான பயத்திற்கு சைனோபோபியா என்று பெயர். சைனோ என்றால் கிரேக்க மொழியில் நாய் எவ்வளவு மென்மையான பெயர் என்ற சைனோ கதையின் மூலம் இந்த ஒரு புது தகவலை தெரிந்து கொண்டேன். நாயின் மீது வெறுப்பை உமிழும் தேவகி பின்னாளில் நாயுடன் தவறாக நடந்து கொண்ட மனிதன் யார் என்பதை இறுதியில் தெரிய வரும்போது ஒரு சஸ்பென்ஸ் படத்துக்கான திரில்லருடன் கதை முடிகிறது.

 மன்னிப்பு பெற்றவர்களே மன்னிப்பு கொடுக்க தகுதி உள்ளவர்கள் எனும் ஜெயகாந்தனின் வரிகளை போல துயில் துணை கதையில் கணவன் சறுக்கிய அதே இடத்தில் மனைவியும் சறுக்குகிறாள். இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனரா அல்லது எதனை கற்றுக் கொண்டார் என்பதனை நமக்கும் கற்றுக் கொடுக்கிறார் இக்கதை மூலம்.

#ரசித்தது

*கேட்பவர்களின் ஆர்வத்திற்கேற்ப நிகழ்வுகளை கூட்டியோ குறைத்தோ நீட்டியோ வெட்டியோ சொல்கிறார்கள் அல்லது நிறுத்தி விடுகிறார்கள்

*டேய் சாப்பிட்டு போடா என அவள் கத்தி முடிக்கும் போது அதை கேட்கும் தூரம் கடந்து இருந்தான்

*ரோசம் பார்க்க சுயமரியாதை விட வசதி அவசியம்

*பசியில் இருக்கும்போது கணக்கு பாடம் நடத்துவதை நரகத்தில் கூட தண்டனையாக வைத்திருக்க மாட்டார்கள்

*அதுவரை பள்ளி விடுப்பு எடுக்க மட்டுமே பயன்பட்ட
காய்ச்சலின் மேல் முதல் முறையாக பயம் வந்தது

*அனுபவங்களின் வலியேறிய பின் தானே மனதில் முதிர்ச்சி கனிகிறது

*காலையிலிருந்து எதுவும் காணாத வயிறு கொள்ளி வைத்த பிணம் போல் பற்றி எரிந்தது

*அவர் சொன்னது எல்லாம் மலையாளத்தில்.மனம் தமிழில் குத்துமதிப்பாக மொழிபெயர்த்துக் கொண்டது

*கெட்ட வார்த்தை பேசியதை கேட்டவுடன் பேச்சு எழவில்லை. ஒரு பெண் மீதான இறுதி ஆயுதத்தை ஒரு ஆண் பிரயோகித்து விட்டான்.

*போதும் என்ற மனம் வந்துவிட்டால் தேங்கி நின்று விட வேண்டியதுதான்

*எடுத்துப் பேசுடா. கூப்பிடுறது பொண்டாட்டினா எடுக்குற வரை விட மாட்டார்கள்

*வெட்கத்தின் இன்பம் உடலெங்கும் பரவியது

*குழந்தைகளுக்குத்தான் எத்தனை பெரிய கொடுப்பினை.உலுக்கி எழுப்பினால் கூட சுலபமாய் எழுந்திருக்காத நல்லுறக்கம் வாய்க்கிறது.

*பதிலற்ற கேள்விகள் குழப்பங்களாக வடிவெடுத்தன

அதிகாலை அன் ரிசர்வ் பெட்டியில் பயணித்த போது தான் இந்த புத்தகத்தின் கதைகளை படித்தேன். அத்தனை கதைகளும் வெளியில் ஓடும் சித்திரங்களும் மனதில் ஒரு நேர பதிந்தன. கலைத்துப் போட்ட கண்ணாடி துண்டுகள் கலைடாஸ்கோப்பில் கலையாவது போல வெவ்வேறு உணர்வுகளும் விசித்திர நிகழ்வுகளும் இதில் விரிந்துள்ளது என குறிப்பிடப்பட்டது முற்றிலும் உண்மை. நல்ல சிறுகதை காலத்தை அசைபட வேண்டும், நம் வாழ்வை ஆசைப்பட வேண்டும். கதையில் உள்ள கதாபாத்திரம் ஒன்றின் மேல் நம் கவனம் குவிந்து அதனையே அனுபவமாக மாற்றும் அற்புதத்தை இந்த கதைகளின் வழியே கதை ஆசிரியர் நமக்கு எளிதில் கடத்தி விடுகிறார்.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

எவரோ ஏறும் படிபோலஎவரோ ஏற்றும் அகல்போலஎவரோ பூப்பறிக்கும் செடி போலஎவரோ ஊன்றி நடக்கும் தடிபோலஎவ்வகையிலாவது பயனுறுக இவ்வாழ்வு-கார்த்தி

வாழ்க்கையில் நிறைய நேரம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில் தான் நேரத்தை வீணாக செலவு செய்கிறோம்.-குரு மித்ரேஷிவா

வேர்களின் மிக முக்கியமான குணம் நீரை தேடி நகர்வது (hydrotropism). இந்தத் தேடலில் அவை என்றுமே சளைத்ததில்லை. பின்வாங்கியது இல்லை. மரம் நிற்கும் இடத்திலிருந்து மண்ணுக்குள்ளே பல அடி தூரம் நகர்ந்து, நீரை உறிஞ்சி மரத்துக்கு அளிக்கின்றன.. தடைகள் இருந்தாலும் வேர்கள் தயங்கி நிற்பதில்லை.விடாமுயற்சியுடன் தங்கள் இலக்குகளை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவை. வேர்கள் நீரை தேடுவது போல நாம் அறிவை தேட வேண்டும்.அலுக்காமல் தேட வேண்டும்.இனிய காலை

Monday 22 January 2024

காதல் எப்போது உதயமாகிறது என்று யாராலும் கூற முடியாது.இரவிலிருந்து பகல் பிறப்பது போல் ஏதோ ஒரு கணத்தில் அதுவும் பிறந்து விடுகிறது-அ.முத்துலிங்கம்(அனுலா சிறுகதையில்)

நாம் மனத்தின் வயதைக் குறைத்துக் கொண்டும், அறிவின் வயதைக் கூட்டிக் கொண்டும் இருப்போமானால் உடலின் வயது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எதிர்மறையாக நடந்துவிடுவது தான் ஆபத்து-சுப வீ

கால்பந்து-இனிய காலை


மாணவர்கள் கால்பந்து பயிற்சியாளருக்காக ஆவலுடன் காத்திருந்த போது அந்த கோச் மைதானத்திற்கு வந்தார்.

 விளையாடலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம். அவரிடம் கால்பந்து இல்லை.

 ஏன் பந்து கொண்டு வரவில்லை? என்று கேட்டனர். அவர் கால்பந்து மைதானத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றார்.

 22 பேர்.

எத்தனை கால்பந்துகள் மைதானத்தில் இருக்கும். 'ஒன்று'. எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருத்தரிடம் மட்டுமே பங்து இருக்கும். நாம் மீதம் இருக்கும் 21 பேரும் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இன்று கற்றுக் கொள்ளப் போகிறோம் என்றார்.

 பந்து வைத்திருப்பவனைப் பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. பந்து இல்லாத மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதே வெற்றியை தீர்மானிக்கிறது 

இனிய காலை

Saturday 20 January 2024

ஜப்பானியர்


ஜப்பானியர்களின் வாழ்வியல் முறை
நன்றி:குங்குமம்

வாழ்க்கையின் லட்சியத்தை கண்டுபிடியுங்கள்.

1. ikigai

தினமும் காலையில் எழும் போது அந்த நாளை அர்த்தமாக்குவது எப்படி என்று யோசியுங் கள். அன்றைய நாளுக்கான ஒரு லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள். அதை செயல்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்குங்கள்.

2. kaizen

ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் ஒரு சிறிய முன்னேற்றத் தையாவது காண வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அந்த முன்னேற்றத்துக்காக
நாம் ஒரே நாளில் பல விஷயங் களை செய்யவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு நாளும் சில விஷயங்களை துல்லியமாக செய்து முடித்தால் போதும்.

3. pomodoro technique

ஒவ்வொரு முறையும் 25 நிமி டங்கள் தொடர்ந்து உழைத்தால், 5 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். நாள்முழுவதும் உற்சாகமாக வேலை பார்க்கக்கூடிய ஆற்றலை இந்த 5 நிமிட ஓய்வு உங்களுக்கு கொடுக்கும்.

4. hara hachi bu

எப்போதும் வயிறு முட்ட சாப்பிடாதீர்கள். உங்கள் வயிறு 80 சதவீதம் நிரம்பும் அளவுக்கு மட்டும் சாப்பிடுங்கள். இதனால் உங்கள் உடல் லேசாக இருப்பதுடன் நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

5. shoshin

ஒரே மாதிரியான வேலையை தினமும் செய்தாலும், அதை முதல் முறையாக செய்பவரைப் போன்ற உற்சாகத்துடன் செய் யுங்கள். நாம் செய்யும் வேலை யில் தவறு ஏற்படுமோ என்று பயப்படாதீர்கள். எதையும் துணிச்சலுடன் முயற்சித்துப் பாருங்கள்.
எந்த வேலையையும் கற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடன் அணுகுங்கள்
6. wabi-sabi

வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. அதனால் வேலையில் ஏதாவது தவறுகளைச் செய் தால் அதற்காக கவலைப்படாதீர்கள். எப்போதும் முழு மன அமைதியுடன் இருங்கள்.

7. forest bathing

மன அமைதிக்காக அடிக் கடி இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள். பூங்காக்களில் நல்ல காற்றுள்ள சூழலில் நடப்பது. வாரம் அல்லது மாதத்துக்கு ஒரு முறையாவது இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்க மாக வைத்துக்கொள்ளுங்கள். 

8. kakeibo

சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் 
சோர்வடைவதற்கு உங்கள் பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அதற்கு நீங்கள் சிக்கனமாக இருந்து, தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்தி, பணத்தை சேமிப்பது
முக்கியம்.

பொருளாதார நிலையில் வலுவாக இருக்கிறோம் என்பதே ஒருவரை வாழ்க்கையில் உற்சாகமாக வைத்திருக்கும்.

துணிவு என்பது அச்சமற்ற நிலையல்ல;அச்சத்தை எப்படி எதிர்நோக்க வேண்டும், இல்லை கையாள வேண்டும் என்று அறிந்த நிலை.வாழ்க்கையில் எதைக் கண்டும் அஞ்சக்கூடாது;அதைப் புரிந்து கொள்ள வேண்டும்-மேடம் கியூரி

Thursday 18 January 2024

என்னைப் புரிந்து கொள்ளாமல்இருந்திருந்தால் கூடபோயிருக்கும்உறுத்தலெல்லாம்உன் தவறான புரிதலைவிளக்க விரும்பாதஎன் நம்பிக்கையின் மீதுதான்.-லதாமகன்

Ok எனும் சொல்லை முதலில் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள்.விதவிதமாக தலையை ஆட்டி 'ஓகே' என்பதை சம்மதத்திற்கும் சமாதானத்திற்கும் சந்தேக நிவர்த்திக்கும் பயன்படுத்திச் சமாளிக்கிறார்கள்-சுஜாதா

இயற்கை உருவாக்காத புதுபுதுப் பொருட்களை வேதியியலாளர்கள் கண்டுபிடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே நீர்மாசு தொடங்கியது-ரேச்சல் கார்சன்

அமிர்தமாய் கடைந்தெடுக்கப்பட்ட ஓர் அன்பை நெகிழிப்பையைபோல வீசிவிட்டு போனாலும் கூட அது அவ்வளவு எளிதாக மட்குவதே இல்லை.... -க.ராஜகுமாரன்

Wednesday 17 January 2024

இனிய காலை


கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதை வசனத்தை பலர் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். அனைவரும் பலனை எதிர்பார்த்து தான் செய்கின்றனர். ஒரு செயலை செய்ய துவங்கும் போது பலன் அமைவது நம் வசத்தில் இல்லை என்பது தெரிந்தாலும் பலனை எதிர்பார்த்துதான் நாம் செயல்படுகிறோம்.

இந்த எதிர்பார்ப்பு நம்
நம் விருப்பு வெறுப்புகளை பூர்த்தி செய்து கொள்ள எண்ணுகிறோம். இந்த எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருப்பது தான். நாம் அதை எதிர்கொள்ளும் விதம்தான் பிரச்சனை. பலனை மனதில் கொண்டு செயல்படு. அந்த பலனை அடைவதற்கு தகுந்த மாதிரி திட்டமிட்டு நன்கு செயல்படு. ஆனால் பலன் எதிர்பார்த்த மாதிரி
அமையவில்லை எனில் உணர்ச்சி வசப்படாதே. ஏற்றுக் கொள்வதில் கோபம், சலிப்பு, தளர்வு, எதிர்ப்பு உணர்வுகள் கொள்ளாதே .பலனை வைத்து உன் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்காதே 

-இனிய காலை

முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லைஇடிந்து கிடக்கும்போதுஇம்சைப்படுத்துகிறதுயாருடையதாகவோ இருந்த வீடு-கல்யாண்ஜி

Tuesday 16 January 2024

நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள் மிகவும் வலிமையானவை. அது அளவற்ற மகிழ்ச்சியையோ அல்லது ஆழமான மனக்கசப்பையோ கொண்டு வருபவை.-ஃப்ராய்டு

”ஒரே நேரத்தில் நிறைய எழுதக் கூடாது என்பதுதான் எழுத்தைப் பற்றி நான் கற்றுக் கொண்ட மிக முக்கியமான ஒன்று. வரண்டுபோகும் அளவுக்கு உன்னிடம் இருப்பதை நீர் இரைப்பது போல் இரைத்து விடாதே.மறுநாளுக்காகக் கொஞ்சம் வைத்துக்கொள். எப்போது நிறுத்த வேண்டும் என்பதை அறிவதுதான் மிக முக்கியமானது. உன்னை நீயே எழுதி தீர்ந்துவிடும் அளவுக்கு எழுதாதே. நல்ல முறையில் எழுதி வருகிறாய். சுவாரஸ்யமான ஒரு இடத்துக்கு வந்து விட்டாய். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது உனக்குத் தெரியும்.இதுதான் நிறுத்த வேண்டிய நேரம் . இப்போது அதைத் தனிமையாக விட்டு விடு. அதைப் பற்றி யோசிக்காதே. உனது நனவிலி மனம் (subconscious mind ) தன்னுடைய வேலையைச் செய்ய அனுமதித்து விடு.” ---எர்னஸ்ட் ஹெமிங்வே

கவிஞனும் கவிதையும்-எஸ்.ரா


#Reading_Marathon2024
#24RM050

Book no:3/100+

கவிஞனும் கவிதையும் 
-எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. எஸ்ராவின் கட்டுரை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வாசித்தவற்றை, அவரின் அனுபவங்களையும் சேர்த்து தரும்போது அந்த கட்டுரை நேர்த்தியாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் அமைந்துவிடும். அதேபோலதான் இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும்.. கவிதை குறித்த அவர் பார்வையும் உலக கவிதைகள் குறித்த மேற்கோள்களையும் இதில் சுட்டிக்காட்டி இருப்பார். 

பொதுவாக கவிதை என்றால் மிகவும் எளிதாக எழுதி விடுவார்கள். ஆனால் அதுதான் இருப்பதிலேயே எழுதுவதற்கு கடினமானது. நாலு பேர் பாராட்டி விட்டாலே சிலர் 400 கவிதைகளையும் ஒரே முறையில் எழுதிவிட்டு அடுத்த முறை புத்தகங்களையும் போட்டு விடுவார்கள். ஆனால் கவிதையின் உள்ளார்ந்த நோக்கம் சொற்களின் ஆழம், இது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. முதல் இரண்டு கவிதைகள் நன்றாக வந்த உடனே அடுத்தடுத்த கவிதைகளும் அவ்வாறு வந்துவிடும் என எண்ணிக்கொள்கிறனர் ஆனால் கவிதையை எழுதுபவர்கள் இதற்கு முன் எழுதிய கவிதைகளில் 10%  வாசித்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு நல்ல கவிதை என்பது கைகூடும். அந்த வகையில் இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் கவிதை குறித்த பார்வையும் தெளிவும் வாசகனுக்கு ஏற்படுத்திவிடும்.

கவிதையின் ஒரு வரி அல்லது ஒரு சொல் நம்மைக் காலத்தின் கைபிடித்து அழைத்து செல்கிறது. சொற்கள் வலிமையானது ஒரு ஆயுதம் அதை பயன்படுத்துகின்றவனே அதற்குரிய வலிமையை ஏற்படுகிறான் சொல்லை அடையாளம் காண்பதும் பிரயோகம் செய்வதும் எளிதானது இல்லை என சொற்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் கவிஞர்கள் என்பன குறித்த கட்டுரையை எழுதி இருப்பார். இதனையே வழிமொழிவது போல இன்றைய பெரும்பாலான கவிதைகள் நிஜமீன்கள் போலவே செல்போன் திரையில் நீந்தி கொண்டிருக்கும் பிம்பமீன்கள் என்பதனை போட்டு உடைக்கிறார்.

வெகுஜனத்தளத்தில் கவிதை என்பது சாக்லேட் போன்ற ஒரு நுகர்வு பொருள். அது உடனடித் தன்மை கொண்டதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். கவிதை எழுதுபவர்கள் உடனடியாக கவனிக்கப்படுகிறார்கள். கவிஞர்கள் சீக்கிரம் வெளிச்சத்திற்கு வந்து விடுவது இதனால் தான்.
கவிதையின் முதல்வரி என்பது கவிதைக்குள் செல்வதற்கான கதவில்லை. மாறாக கவிதையின் எல்லா வரிகளும் எப்போதும் திறந்து இருக்கின்றன என்பதனை இது இடங்களில் வலியுறுத்துகிறார். இதே போல இன்னொரு இடத்தில் கேப்ரியல் டிமே லோவின் வரிகளான "கைகழுவதைப் போல கவிதைகளிலிருந்து வெளியேறுவது சுலபமில்லை" என்கிறார் .உள்ளே வருவதும் போல் வெளியேறுவது சுலபமில்லை என்பதனை நமக்கு உணர்த்துகிறார்.

தேவதச்சனின் பாலங்கள் கவிதையில் சொற்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உளவியல் பார்வையை கவிதை எவ்வாறு இணைக்கிறது என்பதனை சொல்லி இருப்பார்.
ஒரு கவிதையில் "ஈரம் பட்டவுடன் நாம் ஏன் கோபம் கொள்கிறோம். நாம் விரும்பும் நேரத்தில் மட்டுமே தண்ணீருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறோம். என்ற மனிதனின் மன உணர்வை எளிதாக சொல்லி இருப்பார் .அதிலே ஒரு வரி வரும் "அறிந்த நீருக்குள் அறியாத நீர் இருக்கிறது போலும்" என்று சொல்லுவார் இந்த வரி மிகவும் வசிக்க வைத்தது.

பத்து பேர் நினைவு கூறும் முன் பத்து பேர் சிந்திக்கும் முன் யார் முதலில் சொல்கிறார்களோ அவனே கவிஞன் என்பார்கள். இந்த கட்டுரையிலும் கவிஞனை பற்றி சொல்லும் போது மீட்க முடியாத விஷயங்களில் முன்னால் தான் ஒரு சிறு துளி என்று உணரும் நினைவுகளே கவிஞரை வழிநடத்துகின்றன என்கிறார்.

எதையும் கேள்வியின் மூலம் அறிந்து விட முடியும் என எண்ணுகிறோம். ஆனால் காலமாற்றத்தில் அதே கேள்விகள் தான் வேறு வேறு வடிவில் தோன்றிய படியே இருக்கின்றன. ஒரே பொருள் தான் ஆனால் ஒவ்வொரு கவிஞர்களும் அணுகும் முறை வேறு வேறு ஆக மாறுகிறது. உலக கவிஞர்களின் வரிசையில் ஒவ்வொருவராக நமக்கு அறிமுகம் செய்து தான் ரசித்த ஒரு கவிதையை தன் அனுபவத்தின் வாயிலாக அதனை விவரிக்கிறார் எஸ்ரா.

மெலோவின் கவிதையில் "எங்கே ஆற்றின் வாழ்க்கை முடிகிறதோ, அது அதன் சமாதி தானே என்ற வரி மூலம் நம்முடைய சிந்தனையை கலைத்துப் போடுகிறார். சரியான கவிதை நம்முடைய வெற்றிடத்தை நிரப்புகிறது என்பதனை சில வரிகள் மூலம் நமக்கு காண்பிக்கிறார். மகிழ்ஆதன் ,மதார் ,மோகனரங்கன் ஆகியோரின் கவிதைகளையும் கட்டுரையில் மொழிபெயர்ப்பு கவிதைகளோடு தமிழ் கவிஞர்களின் கவிதைகளையும் கட்டுரையாக எழுதியுள்ளார்.

ஒரு வனத்திற்கு செல்லும் போது நமக்கு ஏற்படும் புதிய அனுபவம் வேறு வேறு குரல்களை கேட்பதாகவும், அறிந்தும் அறியாத காட்சிகளின் வழியே நம்மை இழக்கத் தொடங்குகிறோம். அன்றாட உலகில் இருந்து விடுபட்டு வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறோம். இப்படி தொடர்பில்லாத படி துண்டிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை போல கவிதைகளும் மொழியாக்க கவிதைகளை வாசிக்கும் போது நமக்கு கிடைக்கிறது. நம்மில் அதை பொருத்திப் பார்க்கிறோம் .அப்போது அந்த அனுபவம் நம்முடைய அனுபவமாக பொருத்திப் பார்க்கும் போது அந்த கவிதை வெற்றியடைகிறது. அந்த கவிஞனின் நோக்கம் நிறைவேறுகிறது. இப்படி கவிதைகள் மொழிபெயர்ப்பு என்ற உணர்வுகள் இல்லாதவாறு நமக்கு மிகவும் எளிமைப்படுத்தி இந்த தொகுப்பு முழுவதும் தந்திருக்கிறார். இதில் உள்ள 22 கட்டுரைகளும் வெவ்வேறு அனுபவங்களை தருகின்றனவாக அமைகின்றன.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

குறைகளுக்கும் கறைகளுக்கும்ஒற்றுமை உண்டு.இரண்டும் அளவில் சிறிதாக இருந்தாலும், பிறரின் கவனத்தை உடனே ஈர்க்கும்.அடுத்தவர் சொல்லித்தான் நாம் அறிந்து கொள்வோம்.உடனே இதனை அகற்ற முயற்சி செய்ய வேண்டும்.நாளாகிவிட்டால் நீக்குவது மிகக்கடினம்-இனிய காலை

Stay with the statement "நகராதீர்கள். நான் சொன்ன வாக்கியத்தோடு இருங்கள்" இல்லையெனில் மனம் தத்துவத்தின் சாரத்தை உதிர்த்து விட்டு அதையும் Entertainment வகையறாக்களில் சேர்த்துக் கொள்ளும். இதயத்தில் எடுத்துக்கொள்ளாது மூளையில் வைத்து சமாதி கட்டிவிடிவோம்-ஜே.கிருஷ்ணமூர்த்தி

வாகனக் கண்ணாடிபின்னோக்கு ஆடியில் திடுமெனபோவாயிஸ் தேவாலயத்தின்பெரும்பகுதியைக் கண்டேன்பெரிய விஷயங்கள்ஒரு கணம் தங்குகின்றனசிறியவற்றுக்குள்-ஜகாஜெவ்ஸ்கிதமிழில் மோகனரங்கன்

"Risk comes from not knowing what we do" நாம் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாமல் ஒரு காரியத்தில் (முதலீட்டில்) ஈடுபடுவது ரிஸ்க்-வாரன் பஃபெட்

Sunday 14 January 2024

வாழ்க்கையில் நிறைய நேரம் இருக்கிறது என்கிற நம்பிக்கையில் தான் நேரத்தை வீணாக செலவு செய்கிறோம்.-குரு மித்ரேஷிவா

எல்லாத் துறைகளிலும் முன்னேற ஒரு காலகட்டம் தேவை. ஒன்றுமே தெரியாமல் திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவதிலிருந்து ( Novice) ஓரளவு திறமையாளனாக ( Competent) ஆகி திறமையை வெளிப்படுத்தத் தொடங்குவது ( Output) வரையிலான காலகட்டம். இதை Latency period எனலாம். -ராமானுஜம்

அரிசியில் உடைந்ததை நொய் என்றும் குருணை என்றும் சொல்கிறோம். நொய்து என்றால் லேசானது.அரிசியை விட லேசானதாய் இருப்பதால் நொய்.அதைவிடச் சிறியது குறுணை.குறு நொய் என்பதே குருணை ஆயிற்று#info

பூமராங் என்பது ஆஸ்திரேலிய பழங்குடியினர் உபயோகித்த சிறிய வளைந்த தட்டையான ஆயுதம்.அதைவீசி எறிந்தால், இலக்கை தொட்டுவிட்டு எறிந்தவரிடமே திரும்ப வரும் வகையில் வீசுவார்கள்.Airfoil shapesல் இருக்கும் ஒன்றோடொன்று குறிப்பிட்ட கோணத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பே ஆகும்.பூமராங்கை எறியும் கோணமும், வேகமும், சுழற்சியும் முக்கியம். காற்றுவீசாத போதும், பூமராங்குகள் மீண்டு வர செய்ய முடியும். காற்றுள்ளபோது, அதன் வேகம், திசைக்கேற்ப எறியவேண்டும். சரியாக எறிந்தால், நீங்கள் எறிந்த இடத்திற்கே மீண்டும் திரும்பி வரும்

மயிர் நீப்பின் வாழா மானின மனம். சாப்பாட்டுக் கடையில் உணவுக்கு சொல்லிவிட்டு மீண்டும் பைக்குள் விரல் நுழைத்து உறுதிபடுத்திக் கொள்கிறது.- கண்மணி குணசேகரன்

Saturday 13 January 2024

" ஒருவரின் தவறுகள் அந்த சூழ்நிலையின் நியாயங்கள் "-ஜெயகாந்தன்வாழ்கையில் நடக்கும் அனைத்தையும் நீங்கள் எதார்த்தம் என்று கருதாமல் துாக்கிகொண்டு திரிந்தால் வாழ்கை நரகமாகிவிடும்.

எந்த நம்பிக்கையிலும் நான்கு நிலைகள்Fact, Fancy, Fiction, Fraudஉண்மை ஒன்று இருக்கிறது-factநாலு பேரிடம் பரவும்போது கற்பனை ஆகிறது-fancy நாற்பதுபேரிடம் பரவும் போது பேன்ஸியிலிருந்து fiction கட்டுக்கதையாகிறது.அது நாற்பதாயிரம் பேருக்கு பரவி ஏமாற்றுத்தனமாக மாறுகிறது-டி கே சி

இனிய காலை


விதைகள் காத்திருப்பதை, தாவரவியலில் "விதை உறக்கம்" (seed dormancy) என குறிப்பிடுகின்றனர்.ஆனால் உண்மையிலேயே அவை உறங்குவதில்லை. மறுபடி முளைத்தெழத் தம்மைத் தாண்டி செல்ல (tiding over unfavourable condition) அவை கடைபிடிக்கும் நிலைப்பாடு. எத்தனை சோதனைகளையும் மீறி முளைக்கும் சக்தி உண்டு.

காத்திருக்கும் நேரத்தை நாமும் விதைகளைப் போல பயனுள்ள பொழுதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இனிய காலை

ஒரு விவாதத்திலிருந்து சிறந்த பலனைப் பெறுவதற்கு ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது - விவாதத்தைத் தவிர்ப்பதுதான் அது. பாம்புகளையும் பூகம்பங்களையும் எவ்வாறு தவிர்ப்பீர்களோ, அதேபோல் விவாதங்களையும் தவிர்த்துவிடுங்கள்.-டேல் கார்னகி

உருளைக்கிழங்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் வாயிலாக நமக்கு 15ஆம் நூற்றாண்டில் வந்தது. உருண்டையாக இருந்ததால் உருளைக்கிழங்கு'மூட்டையை அவிழ்த்துக் கொட்டியவுடன் உருண்டு ஓடுகிறது, பார்க்கக் கிழங்கு போலவும் இருக்கிறது. அப்ப அதை உருளைக் கிழங்குன்னு சொல்லு' பெயர் வைத்ததாய் சொல்றாங்க

Thursday 11 January 2024

சூரிய ஒளி


சூரிய ஒளி பூமியை வந்தடவது

சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர்கள்.

அதாவது எண்களில் 150,000,000 கிலோமீட்டர்கள்.

ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3,00,000 கிலோமீட்டர்கள்.

அப்படியென்றால் 150,000,000/300000=500 நொடிகள்.

500/60 =8 நிமிடங்கள் , 20 நொடிகள் நேரத்தில் சூரிய ஒளி பூமியை வந்தடையும்

முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுபவர்கள், கற்றுக் கொள்ளும் வழிமுறைகளை எவ்வளவு எளிதாக்கிக் கொள்கிறார்கள் அந்த அளவு விரைவில் இலட்சியத்தை அடையலாம்.தமக்கு ஏற்ற வகைகளை, மனப்பாங்கிற்கு துணை நிற்பவைகளை தேர்ந்தெடுப்பது போல வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும் (compatiable and comfortable method)

பிரச்சினைகளே இல்லாமல் அல்லது பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி வாழ்வதல்ல மன ஆரோக்கியம். பிரச்சினைகளுடன் வாழப் பழகுவது, அதன் தீர்வைத் தேடுவது, அதை நோக்கிப் பயணிப்பது, அந்தத் தீர்வில் இருந்து கற்றுக்கொள்வது, கற்றுக் கொண்டதை வைத்து எதிர்வரும் பிரச்சினைகளைக் கலைவது, அதைத் தடுப்பது என்பவைதான் உண்மையான மன ஆரோக்கியம்.-சிவபாலன் இளங்கோவன்

Wednesday 10 January 2024

கருதிக் கருதிக் கவலைப் படுவார்"-பாரதியார் கவலைப் படுகிறவர்கள் விஷயத்தை ஒரு விஷயத்தை ஒரே ஒருமுறை நினைத்துக் கவலைப்பட மாட்டார்கள்.பல முறைகள் அதே விஷயத்தையோ, நிகழ்வையோ திரும்பத் திரும்ப நினைவில் கொண்டுவந்து கவலை கொள்வார்கள். எனவேதான் பாரதியார் இரண்டுமுறை "கருதிக் கருதி"என்று எழுதியுள்ளார். என விளக்கம் சொல்வார்கள். "இப்படி ஆகிவிட்டதே" என்று இறந்த காலத்தைப் பற்றியும், இனி இதன் காரணமாக "என்ன நடக்குமோ" என்று எதிகாலத்தைப் பற்றியும் சேர்த்துக் கவலைப் படுவதால் இரண்டு முறைகள் எழுதியிருக்கலாம்.-படித்தது

நம் துயரங்களிலிருந்து வெளிவரும் ஒரே வழி, நம்மைவிடவும் மிக மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பதுதான்.-பென்யாமின்

Sunday 7 January 2024

மனிதர்கள்வெறுக்கத்தக்கவர்கள்.நீங்கள்ஒரு கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு"ஓ, எனக்குத் தெரியுமே"என்பவர்கள்.நீங்கள் சொன்னதற்குமுற்றிலும் வேறுபட்டஒரு கதையைச் சொல்பவர்கள். - மகூரா ஜோஷி

கடவுள் ஏன் கல்லானார்?பூவாயிருந்தால் வாடிப் போய்விடும்.பிராணியாக இருந்தால் ஓடிப்போய்விடும்.பொன்னாக இருந்தால் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். நாளைக்கும் இருப்பார் என்று நம்பும் வகையில் அவர் கல்லாக இருக்கிறார்-அரசு பதில்கள்

இந்த புதிய ஐடியாவை செயல்படுத்த இன்னும் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்?"நேற்று வரை எடுத்துக் கொள்ளுங்கள்.இன்றிலிருந்து செயல்படுத்துங்கள்"-பிரஹலாத் கக்கர்

Saturday 6 January 2024

ஒப்புக்குத் தான் கண்ணாடி பார்க்கிறாள். ஒத்திக் கொண்ட நெற்றிப் பொட்டு - ஒருபோதும்... துல்லியம் பிசகியதே இல்லை.- கண்மணி குணசேகரன்

குப்பை வண்டிக்கு ஒரே ஒரு சோகம் தான்.குப்பை ஏதும் இல்லாதபோதும்அதைக் குப்பைவண்டி என்றேஅழைப்பதுதான்-இசை

கடிகாரம் எதிர்திசை


“கடிகாரங்கள் ஏன் எதிர்த்திசையில் சுற்றுகின்றன?”


இதை என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா….

உங்கள் பார்வைக் கோணத்தின் சார்பாகப் பூமி, இடமிருந்து வலமாகச் சுழன்று கொண்டிருப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது, கடிகாரச் சுற்றுத் திசைக்கு எதிர்த் திசையில் (anticlockwise) தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது பூமி. ஆனால் கடிகாரம், பூமியின் இயக்கத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அதாவது, நேரத்தையும், காலத்தையும் அளப்பதற்குப் பூமியின் சுழற்சியே   முக்கிய காரணம். அப்படியெனும் பட்சத்தில் கடிகாரங்கள், பூமி சுற்றும் திசையில் சுற்றுவதாகத்தானே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏன் எதிர்த்திசை? 

பூமி, இடமிருந்து வலமாகச் சுற்ற, கடிகாரங்கள் ஏன் வலமிருந்து இடமாகச் சுற்றும்வண்ணம் அமைக்கப்பட்டன? 
ஏன்…….?????

காரணமில்லாமல் கடிகாரங்களின் சுற்றுத்திசை அமைப்பட்டதா? 
இல்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. 

இன்றைய நவீன டிஜிட்டல் கடிகாரங்களைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, அனலாக் கடிகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றின் சுற்றுத் திசைபற்றியே இப்போது பேசுகிறோம். இந்தக் கடிகாரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னர், சூரியனின் அசைவு நிலையை வைத்தே, மனிதன் நேரத்தைக் கணித்துக் கொண்டான். பின்னர், அறிவு வளரத் தன் அடுத்த நகர்வாகச் சூரியக் கடிகாரத்தை (Sundial) உருவாக்கினான்.

சூரியக் கடிகாரம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். வட்டவடிவமான ஒரு தளத்தின் மத்தியில்,  ஒரு நீண்ட கோல் அல்லது மேல்நோக்கி உயர்ந்த நீண்ட முக்கோண வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். இதை ‘நோமன்’ (Gnomon) என்பார்கள் (க்னோமன் அல்ல). சூரியஒளி, இந்த நோமனில் பட, அதன் நிழல் வட்டத் தளத்தில் விழும். அத்தளத்தில் நிழல் விழும் நிலையைப் பொறுத்து நேரத்தைக் கணிப்பார்கள்.

பூமிக் கோளத்தின் அமைப்பில், அதன் நாடுகள் இருக்கும் பகுதிகளை மூன்றாகப் பிரிக்கலாம். ‘பூமத்தியக்கோட்டு நாடுகள்’ ( Equator), ‘வடகோள நாடுகள்’ (Northern Hemisphere), ‘தென்கோள நாடுகள்’ (Southern Hemisphere). பூமத்திய கோட்டில் அமைந்துள்ள நாடுகளில், சூரியன் தலைக்கு மேலாக, மிகச்சரியாகக் கிழக்கிலிருந்து மேற்குநோக்கி நகரும். அதனால் சூரியக் கடிகாரத்திலிருக்கும் நோமனின் நிழல், வட்டத்தளத்தின் நடுக்கோட்டில் (விட்டத்தினூடாக), நீண்டு பின்னர் படிப்படியாகக் குறுகி, மதியம் இல்லாமலாகிப் பின்னர் எதிர்த் திசையில் மீண்டும் நீளமாக ஆரம்பிக்கும். அதனால், பூமத்தியக் கோட்டிலிருக்கும் நாடுகளில் நோமன்கள் மெல்லிய கோல்களாகவே காணப்படும். ஆனால், பூமியின் வடகோளத்தில் இருக்கும் (Northern Hemisphere) நாடுகளில், பக்கவாட்டுச் சாய்ந்த கோணத்தில் சூரியன் நகர்வதாகக் காணப்படும். அதாவது, அந்நாடுகளிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சாய்ந்த நிலையில் நகரும். அப்படி நகரும்போது, சூரியக் கடிகாரங்களிலிருக்கும் நோமனின் நிழல், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதாக இருக்கும். அதாவது, பூமி சுழலும் திசைக்கு எதிர்த் திசையில் நோமனின் நிழல் நகரும். அதுவே, பழக்கமாகி, வடகோள நாடுகளால் கண்டுபிடிக்கப்பட்ட பொறிமுறைக் கடிகாரங்கள், பூமிக்கு எதிர்த் திசையில் நகர்வதாக அமைக்கப்பட்டன. 

ஒருவேளை, பூமியின் தென்கோள நாடுகளில் (Southern Hemisphere)கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அவை பூமியின் சுழற்சித் திசையில் இருப்பதாகவே அமைந்திருக்கும். 

என்ன புரிகிறதா?

‘எல்லாமே மாயா’
-ராஜ்சிவா

Thursday 4 January 2024

எத தொலச்சோம்னு யோசிக்காத வரைக்கும் தொலச்சதே நமக்கு தெரியாது-Three of us

"அமைதிதான் ஆரம்பம். அமைதிதான் முடிவு. நடுவில் மட்டும் ஆரவாரிப்பானேன்? ஆரவாரித்தவர்கள் யாருமே சந்தோஷமாக இருந்ததில்லை. சந்தோஷம் இல்லாது போய்விடுமோ என்கிற பயம் தான் ஆரவாரத்திற்கு காரணம்"- பாலகுமாரன்

கோபத்தைத் தாளிடப்பட்ட அறைக்குள்ளும், அன்பைப் பொது இடங்களிலும் வெளிப்படுத்தத் தெரிந்துகொள்.-தேவிபாரதி

சிந்தனை வயப்பட்ட ஒரு உயிரி எப்போதும் மெதுவாகவே இயங்கும் - ரமேஷ் பிரேதன்