Sunday 31 March 2024

ஏப்ரல் முதல் தேதி பற்றி என்ன நினைக்கிறீர்?வருடத்தின் 364நாட்களிலும் நாம் யார் என்பதை நமக்கு நினைவூட்டும் நாள்- மார்க் ட்வைன்

திட்டமிடுதல் என்பது முக்கியமானதுதான் என்றாலும், ஒவ்வொரு திட்டத்திலும் முக்கியமானது, அந்தத்திட்டம், திட்டமிட்டபடி நடக்காத போது, செய்யவேண்டியது என்ன என்பதைத் திட்டமிடுதலே ஆகும்-மார்கன்

ஆடுஜீவிதம்


ஆடு ஜீவிதம் திரைப்படம் சொல்வது என்ன? ❤️ 

பென்யாமின் எழுதிய நாவலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆடு ஜீவிதம். ஆடு ஜீவிதத்தின் பிரதான கதாப்பாத்திரமான நஜீப், தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையைச் சீர்செய்வதற்காக சவுதிக்கு வேலை தேடிச் செல்கிறான். நல்ல தங்குமிடமும் வசதியும் கிடைக்குமென்று வேலை தேடிச் செல்கிறான். ஆனால் அங்கு அவனுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக எல்லாம் நடக்கிறது. அவனுக்கு யாருமே இல்லாத பாலைவனத்தில் ஆடுகளைப் பராமரிக்கும் வேலை கிடைக்கிறது. அடிமைப்படுத்தப்படுகிறான். இந்த அடிமைத்தனத்தில் இருந்து அவன் மீள்கிறானா இல்லையா என்பது மிகுதிக் கதை.

முதலில், ஆடுகளைப் பராமரிக்கக் கொண்டுசெல்லப்பட்ட நஜீப், சில காலங்களின் பின் தான் தப்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே கைவிட்டு ஆடுகளோடு ஆடாகத் தன்னையும் எண்ணிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறான். ஆடுகளைப் போலவே நீர் அருந்தவும் உணவு உண்ணவும் செய்கிறான். 

இதில் ஒரு மனிதன் அடிமைப்படுத்தப் படுகிறான் என்பதைத் தாண்டி, அவனால் எவ்வளவு தூரம் ஒரு சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து, அதற்கு இசைவாக்கம் அடைந்து, தனது தப்பிப்பிழைத்தலுக்காகத் துன்பங்களை எல்லாம் கடக்கமுடிகிறது என்கிற வாழ்வியல் ஊக்கமும் சொல்லப்படுகிறது. இந்தப் பொதுவான அம்சம், உணர்வு எல்லாமே பாலைவனத்தில் வேலை தேடிப் போகிற  நஜீபுக்கு மட்டுமல்ல. நமது வாழ்விற்கும் பொருந்தும். ஒரு மனிதன் வாழ்வதற்கு இவ்வளவு துன்பப்படுகிறானா என்கிற கேள்வியும் ஒப்பீடுமே நமது துன்பங்களைக் குறைத்துவிடும். 

இதுபோல் திரைப்படங்கள், Survival  Adventurous  வகையைச் சார்ந்தது. பாலைவனத்தில், வெப்பக் காலநிலை, மணற்புயல், உயிரினங்களின் அச்சுறுத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி நஜீப் எப்படித் தப்பிக்கிறான் என்பதைத் திரைப்படத்தில் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சவுதியில் இருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள். அந்தத் துன்பத்திலும் அவனுடைய உறவுகளின் நினைப்பு அவனை எப்படிக் கொண்டுநடத்துகிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். 

இதில் தப்பிக்கவேண்டும் என்கிற உந்துதல் அந்த மனிதர்களை, நீண்ட பாலைவனத்தின் அத்தனை துன்பத்தையும் கடக்க வைக்கிறது. 

Endurance running hypothesis என்று இருக்கிறது. இது உடல் ரீதியாகவே மனிதர்கள் நெடும்தூரம் ஓட உருவாக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறது. முன்னமெல்லாம் வேட்டையாடும்போது விலங்குகள் களைப்படையும் வரை மனிதனால் நெடுந்தூரம் விரட்டிச் சென்று வேட்டையாட முடிந்தது என்று சொல்கிறது. அதுபோல இவர்கள் தப்பிப்பிழைத்தலுக்காக நெடுந்தூரம் செல்கிறார்கள். We will keep walking until we die என்பான் நஜீபுடன் வரும் இப்ராஹிம். அது அப்படிப்பட்ட பயணம் தான். ஒரு உந்துதல் தேவைப்படுகிற பயணம். உயிருக்கான பயணம். வாழ்வுக்கான பயணம். ஒரு தனி மனிதனின் பயணம். அதை இந்தப் படம் மிக அழகாகக் காட்டியிருக்கிறது.

-சுதர்சன்

மனிதர்களின்பாதிப்பேச்சு மனதை சொல்வதற்காக அல்ல.ஒளிப்பதற்காக...!!-ஜெயமோகன்

அலை எவ்வளவு உயரத்துக்கு எழுந்தாலும், கடலைக் கண்டு பயம்கொள்ளாதே.அலையற்ற, அமைதியான கடலைக் கண்டால் நிச்சயம் பயம்கொள். அது கடலின் வழக்கமல்ல.-நரன்

Tuesday 26 March 2024

தோல்வியும் வெற்றியும்


தோல்வியும் வெற்றியும்…
--------------------------------------------

வெற்றி பெற்ற அனைவரும்,  அனைத்து முறையும் வெற்றியடைந்தவர்களாக இருப்பதில்லை. இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக கருதப்படும் ராகுல் த்ராவிட் ஒரு முறை, "நான் இந்தியாவுக்காக 600க்கும் மேற்பட்ட போட்டிகளில் களமிறங்கியிருக்கிறேன். ஆனால் அதில் 400 முறைகள் நான் 50 ரன்களுக்கும் குறைவாக அடித்து ஆட்டமிழந்திருக்கிறேன். எனது பெரும்பான்மை விளையாட்டுகள் தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன" என்கிறார். 

இயற்கையும் இதையேத் தான் சொல்கிறது. "தோல்வி முயற்சிகளின் விதி" (Law of Failed Attempts) என்ற ஒன்றை கூறுவார்கள். இயற்கையின் இயல்பில் வெற்றிகளை விட தோல்வியில் முடிந்த முயற்சிகளும் செயல்களுமே மிக அதிகம். 

காட்டின் ராஜாவான சிங்கம், தனது வேட்டைகளில் நான்கில் ஒரு முறை தான் அதற்கான இரையை பெறுகிறது. அதாவது அதன் முயற்சிகள் 75% தோல்வியில் முடிகின்றன. மீன்கள் இடும் முட்டைகளில் பாதிக்கு பாதி உண்ணப்பட்டு விடுகின்றன. பாதிக்கு பாதி கரடி குட்டிகள் இரண்டு வருடங்களுக்குள் இறந்துவிடுகின்றன. இந்த பூமியில் பொழியும் மழையில் 70 சதவீதம் கடலில் பெய்கின்றது. தாவரங்களின் விதைகளில் பெரும்பாலானவை பறவைகளால் உண்ணப்பட்டு விடுகின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பறவைகள், விலங்குகள், தாவரங்கள், இந்த பூமியின் இயற்கை சக்திகள் அனைத்தும் தோல்வியடையும் முயற்சிகளை எளிதாக, இயல்பாக எடுத்துக்கொள்கின்றன என புரிகிறது. 

ஆனால் மனிதன் மட்டுமே சில முயற்சிகள் எதிர்பார்த்த விளைவைத் தராத போதே தோல்வியுற்றதாக கருதிக்கொள்கிறான். எல்லா முயற்சியுமே வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்க்கிறான்.

முயல் வேட்டைக்கு சென்ற ஒருவன் நான்கு முயல்களை வேட்டையாடி கொண்டுவருவதை விட, யானை வேட்டைக்குச் சென்ற ஒருவன், யானையால் தூக்கி எறியப்பட்டு, உடலெல்லாம் காயத்துடன் தோல்வியுடன் திரும்புவது தான் மிகப்பெரிய வெற்றி என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

குருவிடம் ஒரு பக்தர், “குருவே, உங்களிடம் பல கோரிக்கைகள் வைத்து, நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்குமே நல்லது நடந்துவிடுவதில்லையே.. ஏன் இந்த பாரபட்சம்?” என கேட்கிறார். 

குரு சொல்கிறார், “ஐயா, மாமரத்தில் பூக்கும் எல்லா பூக்களுமே கனிகள் ஆகிவிடுவதில்லை” என பதிலளிக்கிறார். ஆக, பிரபஞ்ச இயக்கத்தில், தோல்வி என்பது இயல்பானது.

எந்த ஒரு செயலிலும் முழு தோல்வி அல்லது முழு வெற்றி என்ற ஒன்று அமையாது. "ஒன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி"யாக  இருப்பதால், நமது வெற்றி - தோல்வி ஆகியவை நம் மனம் உருவாக்கிக்கொள்ளும் "வெற்று மாயை" என்றாகிறது. இதனை புரிந்து கொண்டால், நமது மனம் வெற்றியைக் கொண்டாடாது, தோல்வியில் துவளாது... ! 

🌸

-janakiram

நீ எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் ஆன்மாவாக இரு. -ரூமி

Monday 25 March 2024

முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையேமெல்லிய மலரைக் கண்டுதேனைத் தேடுகிறது தேனீ.அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி.-மு.வ

எப்போதெல்லாம் எதிர்பார்ப்பில்லாமல், கணக்குப் பார்க்காமல், பேரம் நிகழ்த்தாமல் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம்.-ரூமி

நாளைக்கு,அடுத்த வாரம், அடுத்த மாதம்,அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்ல வேண்டும். பின் அதெல்லாம் ஏன் நடக்கவில்லை என்பதை விளக்கத் தெரிய வேண்டும்-அரசியல் செய்வதற்கான அடிப்படை இலக்கணமாய் வின்ஸ்டன்ட் சர்ச்சில் சொன்னது

Sunday 24 March 2024

கற்கை நன்றே-33


கற்கை நன்றே-33
*மணி

அதியமான் போர்க்களத்தில் பகைவரோடு போரிட்டுக் கொண்டிருக்கும்போது.. தனக்கு புதல்வன் ஒருவன் பிறந்திருக்கிறான் எனும் செய்தி தெரிவிக்கப்பட்டது. புதல்வன் பிறந்தவுடன் தந்தை வந்து பார்த்து மகிழ வேண்டும் என்பதே அறநூல் விதி. ஆகவே அதியமான தன் புதல்வனை பார்க்க வருகிறார். அதனை அவ்வையார் இவ்வாறு வர்ணிக்கிறார்.

 அதியமான் போர்க்களத்தில் இருந்து நேரே அந்தப்புரம் வந்தான். போர்க்கோலத்தை கூட களையவில்லை. அவன் கையில் வேல், காலில் கழுத்தில் ஈரம் காயாத காயம், பகைவர்களோடு போரிடும்போது அவன் கொண்டிருந்த கோபமும் முகத்தில் இருந்து மாறவே இல்லை. 

செறுவர் நோக்கிய கண்தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே 

இந்த வர்ணனை அதியமானை ஒரு சிறந்த போர் வீரனாக காட்டுகிறது. ஆனால் ஒரு சிறந்த தந்தையாக காட்டவில்லை. குழந்தையை பார்த்தால் யாருடைய மனமும் மென்மை அடையும். ஆனால் தன் சொந்தக் குழந்தையை பார்த்த அதியமான் போரின் போது ஏற்பட்ட கோபம் தனியாமல், கண்ணில் சிவப்பு மறையாமல், அதே கோபத்தோடு இருந்தான். அதியமான் தன் புதல்வனை பார்த்து தந்தையாக மாறவில்லை போர்வீரராகவே இருந்தார்‌.

எரிமலையில் பூக்கள் எப்படி மலரும்? நம்மில் பலர் இப்படி இருக்கிறோம். அலுவல் செய்யும் இடத்தில் இருப்பது போலவே வீட்டிலும் அதிகார தோரணையோடு கெடுபிடிகளுடன் நடந்து கொள்கிறோம். என்று கவிக்கு அப்துல் ரகுமான் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

காலையில் படித்த இந்த வாசகங்கள் மனதில் ஏனோ தொட்டது. உலகமே ஒரு நாடக மேடை. ஒவ்வொருவருக்கும் மனிதன் நடித்து தான் ஆக வேண்டும். ஆனால் நெருங்கியவரிடத்தில் நடிக்க கூடாது. உண்மையாக மனதின் படி நடக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற வரி நமக்குச் சொல்லப்படுகிறது 

இனிய காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

“சுத்தியலைத் திறமையாகப் பயன்படுத்தும் ஒருவனுக்கு, தான் பார்ப்பவையெல்லாம் ஆணியாகவே தெரிகிறது-ஆபிரகாம் மாஸ்லோ

அவரவர் குற்றங்களுக்கு மனிதர்கள் பொறுப்பேற்றால் கடவுள் பேசத் தேவையில்லை.- பர்க்மன்

Saturday 23 March 2024

“இறுதியில், தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று ஒருவர் கேட்கக்கூடாது, மாறாக, கேள்வி தன்னிடம்தான் கேட்கப்படுகிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரே வரியில் கூறினால், வாழ்க்கையானது ஒவ்வொரு மனிதனிடமும் கேள்வி கேட்கிறது; தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு விடையளிப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் பதிலளிக்க முடியும்; பொறுப்பாக இருப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் விடையளிக்க முடியும்.”-ஃப்ராங்க்கெல்

ஊன்றி நிற்கும் மரங்களைப் போலில்லாமல், உதிர்ந்த இலைகளைப் போன்று இப்பூமியில் நகர்ந்துகொண்டேயிருப்பேன். -நரன்

Thursday 21 March 2024

ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதும் வரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதல்ல. இனி என்ன செய்வதென்று தெரியாமல், இருண்மைக்குள் மூழ்கி மூச்சுத் திணறும்போது, வெளிச்சம் நனைந்த கை ஒன்று நம்மை நோக்கி நீட்டப்படுவது..!-ஈரோடு கதிர்

வென்றதை விட, தோற்றதைச் சொல்ல அதிக மனத் துணிவு வேண்டும்;அடித்ததை விட அரை வாங்கியதைச் சொல்ல மன உறுதி வேண்டும்.சில தவறுகள் ஈடுகட்டப்படுவதில்லை; அவற்றை அப்படியே கடந்துவர வேண்டி இருக்கிறது;, ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது-பிருந்தா

நமரி


அரசியலில் மட்டுமல்ல, வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் மனிதரிடத்து தேர்தல் மனம் என ஒன்று செயல்பட்டுக்கொண்டேயிருக்கும் போலிருக்கிறது. தேர்தல் மனம் தனது வெற்றியையும், பிறர் ஒருவரின் தோல்வியையும் விழையும் . அதற்கான காரணங்களை அது விநியோகித்துக்கொண்டேயிருக்கும்.

மனித மனமே இப்படித்தான் விழைவுகளை கொண்டிருக்கும் போலிருக்கிறது. தன்னை கொண்டாடவேண்டும், தன் சொல்லிற்கு மந்திர சக்தி இருக்கிறது என்று நம்பச் சொல்லும் அதே மனம்,  தான் ஒப்பிடும் அந்த மற்றவர் சொல்லை  எவரும் கேட்பதில்லை, அவர் செல்லா காசாகிவிட்டார் என்பதை உணர்தலிலும்  உணர்த்தலிலும் உறுதிப்படுத்திக்கொள்வதிலும்  சந்தோஷம் கொள்கிறது. இங்கு ஒருவரின் வெற்றி பிற ஒருவரின் தோல்வியாக இருந்தே ஆகவேண்டும் போல..

மனம் ஏன் எப்போதும் தேர்தல் மனமாகவே செயல்படுகிறது …

 ⁃ நமரி

கம்மஞ்சங்கு


"கம்பஞ்சங்கு விழுந்து மாதிரியே, கண்ணுக்குள்ள நொழைஞ்சு உறுத்துறியே"

'குறுக்குச் சிறுத்தவளே' பாடலில் வருகிற குறிப்பிட்ட வரிகளைச் சிலர் இப்படி எழுதியிருப்பதைப் பார்த்தேன்...

உண்மையில் அது 'கம்பஞ்சங்கு' இல்லை.

கம்மங் கருதை விரல்களில் நெருடி, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதன் சொங்கு போனபிறகு அதை ஊதித் தின்பார்கள்.  அப்படி ஊதுகையில்  அதன் உமி கண்ணுக்குள் நுழைந்தால் உறுத்தும். அதுபோல, உன் பிம்பம் என் கண்ணுக்குள் விழுந்து என் நெஞ்சை உறுத்துகிறது. 

"கம்பஞ்சொங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழைஞ்சு உறுத்துறியே"

சீனிக்கிழங்கைச் சுட்டுச் சாப்பிடுவார்கள் 
சோளக்கருதை உப்புப்போட்டு அவித்து உண்பார்கள் 
உளுந்தங்களியைக் கிண்டிச் சாப்பிடுவார்கள். 

கேட்கையிலேயே தமிழ் மணக்கும் கிராமத்து உணவுகள்.

அடுத்த தடவை, பொருள் புரிந்து உச்சரிக்கும்போது வரிகளும் இனிக்கும்.

-சுதர்சன்

நேரு


1937ம் ஆண்டு காந்தி கொல்கத்தாவுக்கு வருகிறார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அண்ணன் சரத் சந்திர போஸ் வீட்டில் தங்குகிறார்.

காந்தி வங்காளத்துக்கு வரும்போதெல்லாம் 'குருதேவ்' ரவீந்திரநாத் தாகூரைச் சந்திப்பது வழக்கம். ஆனால், இந்தமுறை அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விடுகிறது. அதனால் அவர் தாகூரைச் சந்திக்கச் செல்லவில்லை.

இந்தத் தகவல் தாகூர் காதுக்குச் செல்கிறது, நான் காந்தியைப் பார்த்து நலம் விசாரிக்கவேண்டும் என்கிறார், அவர் தங்கியிருக்கும் இடத்துக்குப் புறப்பட்டு வருகிறார்.

அங்கு வந்தபிறகு ஒரு பிரச்சனை. காந்தி ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது மாடி அறையில். எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட தாகூரால் படியேற இயலாது.

அதனால் என்ன? சட்டென்று ஒரு நாற்காலியைக் கொண்டுவருகிறார்கள், அதில் தாகூரை உட்காரவைக்கிறார்கள், நான்கு பேர் சேர்ந்து அந்த நாற்காலியைத் தூக்கிக்கொண்டு மாடி ஏறுகிறார்கள். அந்த நால்வர்: சுபாஷ் சந்திர போஸ், ஜவகர்லால் நேரு, சரத் சந்திர போஸ், காந்தியின் உதவியாளர் மகாதேவ் தேசாய்.

Tuesday 19 March 2024

நற்செள்ளை


"நற்செள்ளை" எனும் சங்ககாலப் புலவர். சாதாரணமாக நாம் கண்டு, கவனிக்காமல் எளிதில் கடந்து செல்லும் பறவையான காக்கையைப் பற்றி தனது பாடலில் பாடியதால், அவருக்கு "காக்கைப் பாடினியார்" என்ற சிறப்புப் பட்டப்பெயர் வாய்த்தது. 

சுற்றிலும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மைச் சுற்றி அதிசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவற்றை "சாதாரண செயல்" என நாம் கடந்து செல்கிறோம். 

எதிரில் ஒரு மரத்தைக் காண்கிறேன். 
அந்த மரத்தில் தினமும் வேரிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, 20 அடி உயரமுள்ள அந்த மரத்தின் உச்சிக்கிளைக்கும் தண்ணீர் கடத்தப்படுகிறது. இது மிகப் பெரிய அதிசயம் அல்லவா? பூ காயாவதும், காய் கனியாவதும் மகத்தான அதிசயம் தானே?

இயல்பான நிகழ்வுகளின் அதிசயத்தை வியக்க ஆரம்பித்தால் நமது மனம் நேர்மறை எண்ணங்களால் நிறையும், உற்சாகமாகும், நன்றி செலுத்தும் மனமும், அன்பு பரப்பும் குணமும் அதிகமாகும். வாழ்வு இனிதாகும். 

Every moment is a miracle... வாழ்வு இனிதாகட்டும். 🌸

புத்தகம்-11 குழந்தைகளுக்கான பொருளாதாரம்


Reading_Marathon2024
#24RM050

Book no:11/100+

குழந்தைகளுக்கான பொருளாதாரம்
-ரங்கநாயகம்மா

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. 464 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வெறும் 180 ரூபாய்க்கு டிஸ்கவரி புக் பேலஸில் வெளியானது.

பாமரனுக்குச் சொன்னால் பண்டிதனும் புரிந்து கொள்வார்கள் என்ற பழமொழி உண்டு. அதே போல் தான் இந்த புத்தகத்தில் குழந்தைகளுக்கு எடுக்கப்படும் பாடங்கள் பெரியவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் பொருளாதாரக் குறித்த மார்க்சிய நோக்கில் அனைத்து பாடங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
 ஆந்திராவில் நானி என்ற குழந்தை மாதாந்திர இதழில் முதல் 8 பாகம் வந்து நின்று விட்டது. பிறகு அதன் தொடர்ச்சியாக அதே நடைமுறை பயன்படுத்தி பொருளாதார பாடத்தை குழந்தைகளுக்கு மிகவும் எளிய வகையில் விளக்கி ஒவ்வொரு பகுதி முடியும்போது அத்தியாயம் முடியும் பொழுதும் வினா விடையும் இருப்பதால் அந்த பகுதியை மிகவும் எளிமையாக உணர்ந்து கொள்ள முடிவதாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.

 மார்ச்சின் மூலதனம் படிக்காதவர்களுக்கு அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு அடிப்படை பாடமாக அமையும். இந்த நூலில் 95 கட்டுரைகள் இடம்பெற்றன ஒவ்வொன்றும் மிக எளிய வடிவில் புரிந்து கொள்ளும் மொழியில் உள்ளது.

பணம் குறித்து துவங்கும் போது பொருள் வாங்கும் போது கொடுக்கிறோமே அதுதான் பணம். மனிதர்கள் உருவாக்கியதை மட்டுமே நாம் பொருள் என்று சொல்ல வேண்டும் நாம் படிக்கும் புத்தகங்கள் நாற்காலி இப்படி அனைத்தும் பொருட்களே. மனிதர்கள் பொருட்களை உருவாக்கிய வரலாறும் அந்தப் பொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கச்சா பொருட்களும் அதற்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளும் என்னென்ன என்பதை உதாரணத்துடன் விளக்கி இருப்பார்கள்.

பொருட்களை உற்பத்தி செய்த பின் அதற்கான உழைப்பை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. உழைப்பு என்பதை மனிதர்கள் மட்டும் செலுத்தும் ஒன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதாய் சொல்கிறார்கள். உழைப்பு என்பது சில வகையான வேலைகளைக் குறிக்கும் நாம் சொந்த தேவைக்காக செய்து கொள்ளும் வேலை உழைப்பாகாது குறிப்பாக மூச்சு விடுவது உணவு உண்பது போன்றவை.

முற்காலத்தில் செய்த பரிவர்த்தனை பண்டமாற்று, பின்பு ஒரு பொருளின் பயன் மதிப்பு, ஒவ்வொரு பொருளுக்கும் பயன் மதிப்பு வேறுபடும் விஷயம் அதேபோல் ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பு,
உதாரணத்திற்கு ஒரு பானை செய்ய ஒரு மணி நேரம் ஆகிறது. காலணி மதிப்பு 2 மணி நேரம் என்றால் 2 பானைகள் கொடுத்து ஒரு ஜோடி காலனிகளை பெற வேண்டும். இதுதான் மதிப்பு விதி.

இவைகள் அனைத்தையும் விளக்கிய பின்பு உழைப்பில் சுரண்டல், ஏற்றத்தாழ்வுக்கான காரணங்கள், அடிமை முறை, கூலி முறை, வர்க்கங்களாக பிரிந்து கிடத்தல், அடிமை சமூகத்தில் வணிகம் லாபம் கடன் மற்றும் வட்டி ஆகியவை, அடிமைகளுக்கு மத நூல்கள் அளிக்கும் போதனைகள் பாவம் புண்ணியம் சொர்க்கம் நரகம், முதலாளி தொழிலாளிக்கான உறவுகள், நிலப்பரப்புத்துவ சமூகத்தில் உள்ள உழைப்பு சுரண்டல், முதலாளித்துவ அமைப்பின் தொடக்கம், லாபம் மூலதனத்தின் ஒரே குறிக்கோளாய் பார்க்கப்படுகிறது.. இவ்வாறு அதன் வரலாற்றை மிகத் துல்லியமாக எளிமையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறார்கள்.

ஒரு தொழிலாளி 10 மணி நேர வேலையில் அவரின்
 மதிப்பு பத்து ரூபாய். ஆனால் கூலி தரப்படுவது ஐந்து ரூபாய். தொழிலாளர் 18 பொருட்களை உற்பத்தி செய்கிறார் .உற்பத்தி சாதனங்களின் மதிப்பு எட்டு.இந்த தரவுகளின் அடிப்படையில் உபரி உழைப்பு உபரி மதிப்பு உபரி உற்பத்தி ஆகிய மூன்றும் மிக விரிவாக அலசப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த உழைப்பு சுரண்டலை 1867 இன் இறுதியில் இதை கண்டறிந்து வெற்றி அடைந்தவர் ஜெர்மனிய பொருளாதார வல்லுனரான காரல் மார்க்ஸ் ஆவார். இதனை நிரூபிக்க உபரி மதிப்பு பற்றிய கோட்பாடுகள் நாலு தொகுதிகள் அடங்கிய மூலதனம் என்ற நூலை எழுதினார். இதில் கடந்த கால அறிவு ஜீவிகளின் வரலாற்றினை விவரித்தும் அலசியும் புகழ வேண்டி இடத்தில் புகழ்ந்தும் விமர்சிக்க வேண்டிய விமர்சித்தும் அவர்தன் வாதங்களை முன் வைத்தார் . உழைப்பு சுரண்டலை அவதானிப்பது என்பதை அதை ஒழிப்பதற்கான முதல் படி

இதுபோல் புத்தகம்முழுக்க பொருளாதார பார்வை மனித உழைப்பு, பொருட்களின் தோற்றம், ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் படிப்படியாக தெரிந்து கொள்ள உதவுகிறது.

*ஒரு பிரச்சனையை அனைவரும் ஒரு மாதிரி புரிந்து கொள்ள, சரியான தீர்வு என்பது அனைவருக்கும் ஒன்றுபோல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் நான் முரண்பட்ட கருத்துக்களை காண்கிறோம் .ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த தத்துவம் இருக்கிறது .எது சரி எது தவறு என்று ஆய்ந்தறிந்து நாம் அதனை பின்பற்ற 
வேண்டும்.

*பொதுவாக ஒரு பொருள் செய்ய தேவைப்படும் நேரமே அதன் மதிப்பாகும். மண்மீது எவ்வளவு உழைத்து செலுத்தப்பட்டதோ அதுவே என் மண்ணுக்கான மதிப்பு.

*அனைத்து மதிப்புகளும் உழைப்புக்கு சொந்தமானது அவை பொருட்களுக்கு உரியது அல்ல.

*விற்பனைக்கு தயாராக இருக்கும் ஒரு பொருள்தான் சரக்கு.

*புழக்கத்தில் இருக்கும் காகித பணத்தின் மதிப்பானது அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் தங்க நாணயத்தின் மதிப்பை சார்ந்து இருக்கும். இன்றைக்கும் கூட அவை ரிசர்வ் வங்கியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

*எவ்வளவுக்கு எவ்வளவு கூலியை உயர்த்திக் கொடுக்கிறாரோ அதற்கு மேல் லாபத்தை கூட்டி வைப்பார். ஆகவே கூலி என்பது உழைப்பின் மதிப்பு ஆகாது.

*காவலர்கள் மற்றும் ராணுவ பணியாளர்களும் உற்பத்திக்கு பங்களிக்காத உழைப்பாளர்களே. ஆனால் இவர்கள் முதலாளி வர்க்கத்தின் உழைப்பு சுரண்டலை காப்பதற்காக செயல்படும் உழைப்பாளர்கள்

*போட்டி என்னும் ஒரு புதிய தோற்றப்பாடு முதலாளித்துவ கட்டத்தில் தொடங்கிய ஒன்றாகும். மூலதனத்துக்கு இடையில் போட்டி அதுதான் முதலாளிகளுக்கு இடையிலான போட்டி

புத்தகத்தை முழுவதும் படித்தவுடன் ஏதோ புதிதாய் தெரிந்து கொண்ட ஒரு சந்தோஷமும் தெரிந்ததை நினைவூட்டிக் கொள்ளவும் மிகவும் உதவிகரமாக இருந்தது. நவீன காலத்தில் ஜெயமோகன் ஒரு இடத்தில் குறிப்பிட்டார்.. ஒரு தொழில் செய்யும் ஆசாரி, பிளம்பர் ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் மாத ஊதியத்துக்கு செல்லும் படித்த ஒரு பட்டதாரி மாதம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே  வாங்குகிறார். அந்த மாத ஊதியம் பெறுவோர் கண்ணுக்குத் தெரியாமல் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகிறார். ஆனாலும் மனித வளம் அதிகம் உள்ளதால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆட்கள் அதிகம் கிடைப்பதாலும் குடும்ப வறுமையாளும் இது பன்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

தற்போதைய காலத்தில் வரி மின் கட்டணம் போன்றவை முதலாளிகளை தொழிலாளிகளாக மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். எத்தனையோ சுய தொழில் செய்வோர்கள்..தற்போது திருப்பூரில் வேலைக்கு செல்லும் அவல நிலையும் உள்ளது. இது முதலாளிகளின் கண்ணோட்டத்தில் இருந்தும் நாம் நடுநிலமையோடு நோக்க வேண்டிய அத்தியாவசிய பணியாகும். ஆகவே இரு தரப்பினரையும் கற்றுணர்ந்து அடிப்படை தேவைக்கான கூறுகளை இந்த நூல் மிகவும் விரிவாக அலசி இருக்கிறது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

“இறுதியில், தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று ஒருவர் கேட்கக்கூடாது, மாறாக, கேள்வி தன்னிடம்தான் கேட்கப்படுகிறது என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரே வரியில் கூறினால், வாழ்க்கையானது ஒவ்வொரு மனிதனிடமும் கேள்வி கேட்கிறது; தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு விடையளிப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் பதிலளிக்க முடியும்; பொறுப்பாக இருப்பதன் மூலமாக மட்டுமே வாழ்க்கைக்கு அவனால் விடையளிக்க முடியும்.”-ப்ராங்க்கெல்

எந்த ஒரு எதிர்பாரா தடைகளையும் சாலையின் முடிவாக எண்ணாமல் ஒரு திருப்பமாக,வளைவாக எண்ணிப்பாருங்கள்.A bend in the road is not the end of the road..unless you fail to make the turn-ஹெலன் கெல்லர்

பிரிவு என்பது, காற்றுஅது சிறு சுடரைஅணைத்து விடுகிறது.பெரு நெருப்பைமேலும் கொழுந்துவிட்டுஎரியச் செய்கிறது-ஆங்கிலக் கவிதையில்

தலாய்லாமா


கேள்வி: 
உயிரினங்களில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்ன ?

தலாய்லாமா: 
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவன், மனிதன். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான், 
பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப்பபெருவதற்க்காக சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான். 

நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான், அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான். 

தனக்கு இறப்பே இல்லை என்று இறுமாப்போடு வாழ்கிறான்; கடைசியில் வாழாமலே சாகிறான்.

Monday 18 March 2024

நடப்பதை இயல்பாக நடக்க விடுங்கள்.எதையும் பலவந்தப் படுத்தாதீர்கள்.-எதிர்மறை பயன்விதி (The law of Reverse effect)

காதல் ஒரு வினோத நெருப்புஅது பற்ற வைத்தால் பற்றாதுஅணைத்தால் அணையாது-மிர்ஸா காலிப்

யாதூம்


Yadhoom (யாதூம்)

“யாதூம்” என்பது ஸ்கான்டிநேவியன் மக்கள் நம்பும் வாழ்வியல் நம்பிக்கை. இந்த வாழ்க்கையின் பொருள் குறித்த அவர்களின் விளக்கம் என்று சொல்லலாம். மேர்ரி கிருஸ்த்மஸ் படத்தில், நடிகர் ராஜேஷ் கேரக்டர், நீண்ட நாள் கழித்து தனது வீட்டுக்கு வரும் விஜய் சேதுபதிக்கு, தானே தயாரித்த ஒரு வைன் பாட்டிலைப் பரிசாகத் தருவார். அந்த வைனுக்கு “யாதூம்” என்று பெயர் வைத்திருப்பார். அதனைப்பற்றிக் கேட்கும் போது, ஒரு நாள் திடீரென்று இந்த வைன் செய்வது தான் எனது வாழ்க்கையின் காரணம் என்று உணர்ந்தேன், இது தான் என்னோட “யாதூம் மொமண்ட்” என்று சொல்லுவார்.

நமது வாழ்வு, வேலை செய்வதிலும், குடும்பத்தைப் பாதுகாப்பதிலும், குழந்தைகளை வளர்ப்பதிலும், நண்பர்கள் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதிலும் கழிகிறது. ஆனால் நாம் அனைவரும் ஒரு சிறப்பு தருணத்திற்காக காத்திருக்கிறோம். அந்தத் தருணம் நமது ஒட்டுமொத்த வாழ்வின் மேஜிக். அந்தத் தருணத்தின் பெயர், “யாதூம்”. அந்தத் தருணம் வரும்போது, மிகச் சரியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று திடீரென்று நமக்குள் தோன்றும். அதனை செய்வதன் மூலம் நமது வாழ்க்கை மாறும். ஒருவகையில் நமது ஒட்டுமொத்த வாழ்வே அந்தத் தருணத்துக்காகத் தான் அமைந்திருக்கிறது.

ஜப்பானியர்கள் இதே வாழ்வியல் தத்துவத்தை, “இக்கிகாய் (ikigai)” என்கிறார்கள். பூமியில் பிறந்த ஒவ்வொறுவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதுவே நம்மை காலையில் தூக்கத்தில் இருந்து எழ வைக்கிறது. உற்சாகமாக செயல்பட வைக்கிறது. 

ஒருவர் தனது "யாதூம்" அல்லது “இக்கிகாய்” எது என அறிந்துவிட்டால், அவரது வாழ்வு இசையாக மாறிவிடும். 

-janakiram

Sunday 17 March 2024

புத்தகம்-10


Reading_Marathon2024
#24RM050

Book no:10/100+

உனது பையில் ஒரு கூழாங்கல்
-திக் நாட் ஹஞ்ச்
தமிழில்:அமலன் ஸ்டான்லி

வேகமும் பரபரப்புமான நமது வாழ்க்கையில் இயற்கையான எளிமையும் மகிழ்ச்சியும் இன்பமும் இங்கேயே உண்டு, இந்த தருணத்தில் உண்டு. அமைதியின் பகிர்தல் என்பதை தாண்டி நாம் அதுவாகவே ஆகிவிடும் அர்த்தத்தில் இந்த நூலில் அமைதி குறித்த குறிப்புகள் ஏராளம் .ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ் என்பது போல தியானம், அமைதி, இன்பம் ஆகியவற்றை நாம் தொலைத்தவற்றை தேடிக் கொடுக்கும் ஒரு இயந்திரம் போல இந்த புத்தகம் அமைந்துள்ளது.

சமீபத்தில் ஒரு குழந்தைகளின் கூட்டத்தில் டிம் எனும் சிறுவன் மிக அழகாக முறுவலித்தான். நீ அழகாக புன்னகைக்கிறாய் என்றேன். அதுக்கு அவன் நன்றி என்றான். நீயல்ல நானே உனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் உன் புன்னகையால் வாழ்வை மிக அழகு படுத்துகிறாய். மேலும் இன்னொரு இடத்தில்.. நாம் அன்றாட வாழ்வில் புன்னகைக்க முடிகிறது என்றால் நம்மால் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க முடிகிறது என்றால் நாம் ஒருவர் மட்டுமல்ல நம்மில் ஒவ்வொருவரும் அதனால் பயனடைவோம் என்கிறார்.

புறச் சூழல்கள் அனைத்தும் ஒன்று கூடி உண்மையான நம்மிடம் இருந்து நம்மை அப்புறப்படுத்த நினைக்கும் போது, துரத்த முனையும் போது, தியானம் மிக முக்கியமாக பயன் அளிக்கிறது. அது நம்மையே நாம் அறியும் வகையில் இருக்கிறது. நம்மை நாம் தனித்து வைத்த வைத்திருக்காமல் இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டும் அது குறித்துச் செல்லும்போதுஉண்மையின் சாரம் இருந்தால்தான் வாழ்க்கையிலும் அது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும். செடிகளை ஊன்றும் போது அது சொல்லுமாம்.. நான் பூமியிடம் என்னை ஒப்புவிக்கிறேன், பூமி தன்னை என்னிடம் ஒப்பு வைக்கிறாள் என்று.

ஒரு குழந்தை எப்படி அனைவராலும் போற்றப்படும் ஒரு ஞானியை தனக்குள் கிரகித்து பரவசத்துடன் புரிந்துணர்வு கொள்கிறது. தன் விருப்பத்துக்குள் அது எப்படி தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை பற்பல கதைகள் மூலம் பெரியவர்களுக்கு என்னுள் பயிற்சியாக எடுத்துக்காட்டுகிறது
இந்தக் கணம் தான் நமக்கு வாழ கிடைக்கிறது. இது புத்தரின் போதனை. வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் உங்களுக்கு வந்துவிட்டதா என யாரேனும் கேட்டால் இன்னும் இல்லை என்றே உங்களில் பெரும்பாலோர் பதில் சொல்லுகிறீர்கள். அச்சிறந்த கணம் இன்னும் நிகழவில்லை, வெகு விரைவில் நிகழும் என நம்புகிறோம் .ஆனால் அந்த சிறந்த கணம் ஒரு நாள் நம்மை வந்து சேரும் என முன் எப்போதும் போல் தொடர்ந்து காத்திருந்தால் அது நிகழாது. உங்களுக்கான மகிழ்ச்சி எதிர்காலத்தில் ஒளிந்து இருக்கிறது என நம்ப வேண்டாம். உண்மையில் இக்கணமே உங்களுக்கான மகிழ்ச்சியை தொட முடியும். உயிர்ப்புடன் இருப்பீர்கள்.

விழிப்புணர்வை பற்றி சொல்லும் போது அது சூரிய ஒளி போல செயல்படுகிறது .எந்த முயற்சியும் இல்லாமல் சூரியன் எல்லாவற்றிலும் ஒளிர்கிறான் துலங்க செய்கிறான். யாவையும் அவ் ஒலியால் மாற்றுகின்றான். அதுபோல் நாம் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்கிறார்

ரசித்தவை

*உங்களின் இருதயத்தில் நீங்கள் சுமந்து செல்லும் துயரம் என்பது இச்சமூகத்தின் துயரமே. அத்துயரத்தை நீங்கள் உங்களோடு எடுத்து வந்தால் இச்சமூகத்தை நீங்கள் சுமந்து வருவதாகாகவே அர்த்தம்

*நமது மனம் நதியைப் போன்றது ஏராளமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் அதனுடைய ஓடிக்கொண்டிருக்கின்றன இதில் அமைதியும் அன்பையும் ஊடேற்ற வேண்டும்

*உலகின் வளம் குன்றா நீரை நான் சுவைத்தேன்

*நீங்கள் ஒரு மரத்தை தொடும் போது ஒருவித அழகையும் புத்துணர்வையும் அதனிடமிருந்து திரும்ப பெறுவீர்கள். மரங்கள் அருமையானவை. புயலிலும் திடகாத்திரமாக நிற்பவை. மரங்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்

தியானம் குறித்தும் நம்மையே நாம் அறிந்து கொள்ளும் விதத்திலும் எளிமையான சொற்களில் புத்த மத கருத்துகளில் நாம் அன்றாடம் காணும் விஷயங்களில் எல்லாம் மேற்கோள்கள் அமைந்திருக்கின்றன புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விட முடியாது ஆங்காங்கே நின்று இளைப்பாரி தன் படித்துக் கொள்ளச் செல்ல வேண்டும் ஏனெனில் புரிந்து கொள்ள புரிந்து கொண்ட கருத்துக்களை அசைபோட நமக்கு சில நேரம் தாமதம் ஆகலாம் தியானம் குறித்து அமைதி குறித்து வாசிக்க விரும்புபவர்கள் இந்த புத்தகத்தினை படிக்கலாம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 16 March 2024

ஓரான் பாமுக்


"ஏதாவது பிரார்த்தனையையோ செய்யுளையோ மனப்பாடம் செய்ய வேண்டியிருப்பவர்களுக்கு வார்த்தைகளை ஞாபகத்தில் பதிக்க வேண்டியிருந்தால் கண்ணெதிரே தெரிகின்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தக் கூடாது என்பது தெரியவரும். வார்த்தைகள் தம்மைப் படியச் செய்து கொண்டதும் மனம் விடுதலையுற்று ஞாபகத்தூண்டல்களுக்கு உதவக்கூடிய பிம்பங்களைத் தேடிக்கொள்கிறது. எண்ணங்களிலிருந்து கண்கள் முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டு உலகை அதற்கே உரித்தான வியப்போடு கவனிக்கத் தொடங்குகின்றன. சில்லிட்ட குளிர்கால இரவுகளில் போர்வைக்குள் நடுங்கியபடி செய்யுளை மனனம் செய்துகொண்டே ஒரு கனவைப் போல இருட்டில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பாஸ்ஃபரஸ்ஸை சன்னல் வழியே வெறித்துக்கொண்டிருப்பேன். 

இருட்டில் செய்யுளை மனப்பாடப்படுத்திக்கொண்டே, வினோதமான ஞாபக விளையாட்டுகள், உத்திகளைக் கொண்டு அதை ஒப்பிப்பதற்கு திட்டமிட்டுக்கொண்டே, என் கண்கள் பாஸ்ஃபரஸ் நீரோட்டத்தில் மிக மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ஏதோவொன்றின் மீது - அது அசாதாரணமாகத் தோற்றமளிக்கும் கப்பலாகவோ விடியலுக்கு முன் புறப்பட்டு விட்ட மீன்பிடிப் படகாகவோ இருக்கும்- நிலைத்திருக்கும். இவற்றின் மீது என் கவனம் குவியாவிட்டாலும் என் கண்கள் அவற்றின் வழக்கமான பணிகளிலிருந்து விலகாது. எதிரில் கடந்து செல்பவற்றை ஒரு கணம் கவனிக்கும்; பின் சற்று நேரம் கழித்துப் பிரக்ஞையில் உறைத்து, ஆம், அது ஒரு சரக்குக் கப்பல் என்று ஒப்புதல் அளிக்கும். 

குழந்தைப் பருவத்திலிருந்தே, இன்றுவரை பாஸ்ஃபரஸ்ஸை நோக்கி மேட்டுப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளில்தான் வசித்துவந்திருக்கிறேன். சன்னலுக்கு வெளியே தூரத்திலோ அடுக்ககங்களுக்கும் மசூதிகளின் கவிகைகளுக்கும் இடையிலோ பாஸ்ஃபரஸ் தெரிந்தே வந்திருக்கிறது. இஸ்தான்புல் வாசிகளுக்கு பாஸ்ஃபரஸ் தொலைதூரத்திலிருந்தாவது தமது சாளரங்கள் வழியே தெரிந்தாக வேண்டும். அது அவர்களுக்கு ஓர் ஆன்மீகக் கௌரவம் சார்ந்த விஷயம். இந்த இஸ்தான்புல் கட்டடங்களின் சன்னல்கள் மசூதிகளின் 'மிஹ்ராபு'கள் போல, கிறித்துவ தேவாலயங்களின் பலிபீடங்கள் போல, ஸினகாக்குகளின் tevans போல கடலையே நோக்கியிருப்பதற்கும் பாஸ்ஃபரஸ்ஸை நோக்கியிருக்கும் அமர்வறைகளின் எல்லா நாற்காலிகளும் சோபாக்களும் உணவு மேசைகளும் கடலை நோக்கியே அமைக்கப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். பாஸ்ஃபரஸ் காட்சிக்காக இவர்கள் எப்படியெல்லாம் சாளரங்களை அமைத்திருக்கிறார்கள் என்பதை மார்மராவிலிருந்து கப்பலில் வரும்போதே பேராசை பிடித்த சன்னல்கள் ஒன்றின் பார்வையை மற்றது மறைத்தபடியும் துருத்திக்கொண்டும், கட்டடமெங்கும் சன்னல் கண்களாகவும் மண்டியிருப்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்."

- இஸ்தான்புல்_ஒரு நகரத்தின் நினைவுகள்

- ஓரான் பாமுக் (தமிழில் - ஜி.குப்புசாமி)

Friday 15 March 2024

கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டும் என்று யாராலும் இன்னொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது. மாற்றம் என்னும் ஒரு கதவை நாம் ஒவ்வொருவரும் காவல் காத்து வருகிறோம். உள்ளிருந்து மட்டுமே அக்கதவைத் திறக்க முடியும். விவாதத்தின் மூலமாகவோ அல்லது உணர்ச்சிமயமான கோரிக்கையின் மூலமாகவோ இன்னொருவரின் கதவை நம்மால் திறக்க முடியாது-மர்லின் ஃபெர்கூஸன்

அருந்தப்படாத தேநீரின்சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்உறைந்து போயிருக்கலாம்ஏதேனுமொருசோகமோகோபமோ-நர்சிம்

இரண்டு கைகளாலும் தண்ணீரை வாரி விலக்குங்கள். புதிய தண்ணீர் வந்து சேரும்.பிறருக்கு பிரித்துக் கொடுங்கள், தேடி வந்து சேரும். சேமிப்பது போய்விடும். எடுத்துக் கொடுப்பது சேமிப்பாக இருக்கும்.எதைப் பிரித்துக் கொடுக்கிறாயோ அதுதான் உன் சொத்தாக உள்ளுலகில் தங்கும்.-கபீர்

விரும்பாத பணக்காரர்களை தவிர்க்க எண்ணினால் கடன் கேட்க வேண்டும்.வேண்டாத ஏழைகளை தவிர்க்க வேண்டுமெனில் கடன் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் அவர்களே நம்மை தவிர்த்துவிடுவார்கள்-ராமகிருஷ்ணர்

நிலவைப் பார்த்து அடிக்கும் பேட்டரி லைட்டின் ஒளி சந்திரனை சென்றடையுமா?





உங்கள் டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளி சந்திரனை அடைய 238,000 மைல்கள் அல்லது 384,400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதற்கும் சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில், வளிமண்டலம் என நமக்குத் தெரிந்த ஒன்று உள்ளது, இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கிய காற்றின் ஒரு அடுக்கு ஆகும்.

பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனின் கோண விட்டம் 0.5 டிகிரி மட்டுமே தெரியும். பெரும்பாலான சாதாரண டார்ச் கிரண்கள் இதை விட அதிகமாக வேறுபடும். எனவே அதன் ஃபோட்டான்களின் ஒரு சிறிய பகுதியே 0.5 டிகிரி கோண விட்டம் கொண்ட வட்டத்தின் வழியாக செல்லும். எனவே டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஃபோட்டான்களில் ஒரு சிறிய பகுதியே சந்திரனை சென்றடைந்து தாக்கும். அது மனிதனின் கண்களால் காணமுடியாதது.

-படித்தது

ஒரு யோசனை தன்னுடையது என்று அடுத்தவரை உணரச் செய்யுங்கள்.-டேல் கார்னகி

Thursday 14 March 2024

கோகுல்


தனக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது என நண்பர் கவலைப்பட்டார். என்னென்ன மறக்கிறது எனக் கேட்டேன். சில தகவல்கள், நிகழ்வுகள், இடங்கள், உரையாடல்கள். அன்றாடத்தைப் பாதிக்கும் அளவுக்குச் சிக்கலானதாக மாறவில்லை என்பதால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றேன். நண்பருக்குச் சமாதானமாகவில்லை.

துல்லியமான நினைவாற்றல் குறித்து நம் சூழலில் ஒருவிதமான பெருமிதம் நிலவுகிறது. அதிலும் ஓர் எழுத்தாளனுக்கு அல்லது எழுத்தாளனாக விரும்புகிறவனுக்கு அதிக நினைவாற்றல் அவசியம். கல்வி என்பதே இங்கே மனப்பாடச் சக்தியை ஒட்டி அமைவதால் ஏற்பட்ட அழுத்தம் இது. நான் ஏகப்பட்ட விஷயங்களை நினைவில் வைத்திருந்தேன். பார்த்தவை, படித்தவை, கேட்டவை, மேற்கோள்கள், மெய்யியல் கூற்றுகள், எழுத்தாளர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், அவர்களது அனுபவங்கள், எந்தப் படம் எந்த ஆண்டு வெளியானது, அதன் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் நடிகையர் குறித்த தகவல்கள், அவர்களது பின்புலம், எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்தெந்தக் கலப்பினம் ஊடாடியிருக்கிறது என எண்ணற்ற தகவல்கள் மூளையில் கொட்டிக் கிடந்தன. ஒரு நடிகையின் பெற்றோர் யார், எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையெல்லாம்கூடச் சேகரித்து வைத்திருந்தேன். கூகுளையோ விக்கிபீடியாவையோ தேட வேண்டிய தேவையே இருந்ததில்லை. 

ஆனால், காலப்போக்கில் சில விஷயங்கள் மறக்கத் தொடங்கின. வயதாவதாலோ, எல்லாமே எளிதாகக் கிடைக்கிற மிதப்பிலோ மூளையின் குப்பைக் கிடங்கு காலியாக ஆரம்பித்தது. திடீரென ஒரு படம் பற்றிய சிந்தனை ஓடும். ஒரு காட்சி மனத்தில் விரியும். அதன் ஒளிப்பதிவாளர் யார் என நினைவைத் துழாவுவேன். முதல் கட்டத்தில் எரிச்சலாகவும் விரக்தியாகவும் இருந்தது. நினைவாற்றல் பிசகுவது குறித்து வருந்தினேன். ஐயோ, இத்தனை நாள் பாடுபட்டதெல்லாம் வீணா என்கிற அங்கலாய்ப்பு வதைத்தது. 

தற்சமயம் அந்தத் துயர மனநிலை ஏதுமில்லை. தகவல் ஏதேனும் மறந்துவிட்டால் மூளையைக் குடைவதுமில்லை. எது மறக்கிறது, எது நினைவில் தங்கியிருக்கிறது என்பதற்கான வேறுபாட்டைக் கண்டறிந்தேன். எந்த விஷயத்தைக் குறித்துச் சிந்தித்திருக்கிறேனோ அல்லது எந்த விஷயம் என்னைப் பாதித்துச் சிந்தனையாக மாறியிருக்கிறதோ அது மட்டுமே மூளையில் படிகிறது. மற்றவற்றைத் தானாகவே மனம் அகற்றிவிடுகிறது. 

ஒரு தகவல் சிந்தனையாக உருமாறியிருந்து அதை நினைவில் வைத்திருந்தாலே போதுமானது. சிந்தனை மட்டுமே முக்கியம், கவைக்குதவாத சாதாரண தகவல்கள் அல்ல.

-கோகுல்

நேரம் இலவசமானது, ஆனால் அது விலைமதிப்பற்றது. உங்களால் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியாது, ஆனால் உங்களால் அதைப் பயன்படுத்த முடியும். உங்களால் அதை வைத்திருக்க முடியாது, ஆனால் உங்களால் அதை செலவிட முடியும். ~ ஹார்வி மேக்கே ~

மாமியார்


ஒரு பணக்கார மனைவியின் மாமியார் காளை மாடு முட்டி இறந்து போனாள்.. துக்கம் கேட்க வந்த அனைவரும் சோகத்துடன் வந்து அவளை பார்த்து விசாரித்து வட்டு சென்றனர்.

ஆண்கள் வந்து கேட்கும் பொழுது ஆமாம் என்று தலையாட்டினார் .பெண்கள் வந்து விசாரித்த போது இல்லை என்று தலையாட்டினார்.

இதை நெடு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த' அவருடைய நண்பர் ஒருவர் உங்களிடம் துக்கம் கேட்க வந்தவர்களுக்கு ஆண்களிடம் ஆமாம் என்பது போலவும் பெண்களிடம் இல்லை! என்பது போலவும் ஏன் தலையாட்டினீர்கள் ?என்று கேட்டார்

ஆண்கள் வந்து உங்கள் மாமியார் மிகவும் நல்லவர் .உங்களை தன்னுடைய குழந்தை போல கவனித்துக் கொண்டார் என்று சொல்லும் போது, ஆமாம் என்று தலையாட்டினேன். பெண்களில் பலரும் வந்து கேட்டார்கள், அந்த காளை மாட்டை கொஞ்ச நாட்கள் எனக்கு தர முடியுமா ?என்று !
நான் முடியாது என்று தலையாட்டினேன் ! என்றார்.

நீதி:- சொல்வதற்கு எதுவும் இல்லை.

பாதையற்ற நிலங்களில் பாதைகளை நினைவிலிருந்து உருவாக்கும் பறவைகள் வேண்டுவது கூடுகளை அழித்தவர்களிடம் எளிய மன்னிப்பை. தயங்கித்தயங்கி தன் நிலத்தில் நுழைபவர்கள் தயங்கித்தயங்கி தன் நினைவுகளிலும் நுழைகிறார்கள்.-லதாமகன்

Wednesday 13 March 2024

கற்கை நன்றே-33



கற்கை நன்றே-33
*மணி

கவிக்கோ கூறுவார்..
அறிய அறிய அறிவு வளரும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் திருவள்ளுவரோ அறிய அறிய நம் அறியாமை தெரியவரும் என்று (அறிதோறும் அறியாமை கண்டற்று) என்ற குறளில் கூறுகிறார்.

 வள்ளுவரின் கருத்துக்கு இது மட்டும் பொருளல்ல. இதற்கு மேலே ஒரு பொருள் இருக்கிறது 
அறிய அறியத்தான் அறிய வேண்டியவை எவ்வளவு இருக்கின்றன என்ற மலைப்பு உண்டாகும்.

 எல்லாவற்றையும் அறிந்து விடலாம் என்று ஒரு காலத்தில் நினைத்தோம். ஆனால் நம் அறிவு பெருக பெருக இருளும் பெருகுகிறது. நாம் பல விஷயங்களை அறியவே முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று விஞ்ஞானிகள் இப்போது கூறுகின்றனர்

 அறியேன் என்பதை அறிவது உண்மையான அறிவு .அதாவது அறியாமையை அறிவது அறிவு.

 ஒவ்வொரு பறவையும் தன் சக்திக்கேற்ற உயரத்தை அடைகிறது. எவ்வளவு சக்தி வாய்ந்த பறவையாக இருந்தாலும் அது எட்டும் உயரத்தோடு ஆகாயம் முடிந்து விடுவதில்லை .அது எல்லையற்ற விரிந்து கொண்டே போய்க் கொண்டே இருக்கிறது.

 அறியாமையும் அது போலத்தான்..

 இனிய காலை

நீங்கள் வாங்கும் பொருட்கள் உங்களைப் பணக்காரர் ஆக்குவதில்லை.நீங்கள் வாங்காத பொருட்கள்தான் உங்களைப் பணக்காரர் ஆக்குகிறது-Morgan Housel,

"நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள். நீங்கள் அவமானம் அடைய மாட்டீர்கள்" -டால்ஸ்டாய்

Tuesday 12 March 2024

உன் கவலைகளை நேசிக்க முயற்சி செய்; நாம் நேசிக்கும் எல்லாம் நம்மை விட்டுப் போவதைப்போல கவலைகளும் போய்விடக்கூடும்-அனீஸ் மன்ஸுர்

"உங்கள் கனவுகளைப் பின்தொடருங்கள்" Follow your Passion - அடிக்கடி சொல்லப்படும் அறிவுரை இது.இந்த அறிவுரை எத்தனை முட்டாள்தனமான அறிவுரை என விரிவான உதாரணங்கள் ஆய்வுகளோடு விளக்கியிருக்கிறார்.ஆசிரியர் நியூபோர்ட் Deep work நூலின் ஆசிரியர்.சுருக்கமாகச் சொன்னால் Passion என்பது மாறிக் கொண்டே இருக்கும். அதன் பின்னால் செல்வதைவிட திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவோம். நாம் செய்யும் விஷயத்தின் மேல் ஆர்வம் தானே வரும். உங்கள் Passion திறமையாளராக வர வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர வெறுமே மனதுக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது.

பாபிலோனின் தொங்கும் தோட்டம்



பண்டைய உலக அதிசயங்களில் ஒன்று பாபிலோனிய தொங்குதோட்டம் (Hanging Gardens of Babylon). இன்றைய இராக்கில் அமைந்திருந்தது. அது பாபிலோனிய மன்னர் நெபுகட்நெசரின் சொந்த தோட்டம்.

பாராடைஸ் என சொர்க்கத்தை குறிப்பிடுவதுண்டு. பாரசிக மொழியில் தோட்டத்துக்கு pairi-daêza   என பெயர். அந்த சொல் கிரேக்க மொழியில் புகுந்து ஆங்கிலத்துக்கு வந்து பாரடைஸ் என்றால் சொர்க்கம் என ஆனது

பாரசிகர்கள் தோட்டங்கள் மேல் பைத்தியமாக இருப்பவர்கள். பெர்சியன் கார்டன் என்பது அத்தனை புகழ் பெற்ற கலைவடிவம். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதன் மன்னர் சைரஸ் காலத்தில் இருந்து அரண்மனையில் தோட்டம் வளர்ப்பது வழக்கம் என்றால் பார்த்துக்கலாம்

இவர்களின் பாதிப்பில் தான் முகலாயர்களும் பின்னாளில் முகல் கார்டன் என்ற பெயரில் தோட்டன்களை அமைத்தார்கள்

படத்தில் இரானின் கெர்மான் நகரில் இருந்து ஆறு கிமி தொலைவில் இருக்கும் பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஷாஸ்தே தோட்டம் (Shahdez Garden). இது 19ம் நூற்றாண்டில் அமைக்கபட்டது. இதற்கான நீர் ஆறு கிமி தொலைவுக்கு எந்தவித மோடட்ரும், பம்பும் இல்லாமல் அருகில் உள்ள கெர்மான் நகரில் இருந்து பண்டைய தொழில்நுட்பம் மூலம் புவியீர்ப்பு விசையை பயன்படுத்தியெ கொண்டுவரப்படுகிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பும் மன்னர் நெபுகட்ன்நேசரும் தன் பாலிலோனிய தொங்குதோட்டத்துக்கு இம்முறையை பயன்படுத்தி தான் நீரை கொண்டுவந்தார்

பாரசிகர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விசயங்களில் ஒன்று

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

Monday 11 March 2024

கற்கை_நன்றே-32*மணி


புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் செஸ்டர்டன் லண்டன் வாசி. நெடுங்காலமாக அந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தவர்.

ஒருநாள் பயணம் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதை பார்த்து அவரது நண்பர் எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? என்று கேட்டார்.செஸ்டர்டன் லண்டனுக்கு என்றார். நண்பர் திடுக்கிட்டார். 'என்ன சொல்கிறீர்கள்'? நாம் லண்டனில் தானே இருக்கிறோம் என்றார். 

இல்லை உண்மையில் நான் ல்ண்டனுக்கு தான் போகிறேன். பாரிஸ் டோக்கியோ நியூயார்க் வழியாக லண்டன் போகிறேன். நெடுங்காலமாக லண்டனிலேயே இருக்கிறேன். அதனால் லண்டன் என்றால் என்ன என்று தெரியாமல் போய்விட்டது. லண்டனை நான் அறிய வேண்டும் என்றால் நான் கொஞ்ச நாள் அதை பிரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் பயணம் புறப்படுகிறேன். உண்மையில் நான் லண்டனுக்கு தான் போகிறேன் என்றார். 

"எது நம்மிடம் இருக்கிறதோ அதனுடைய அருமை நமக்குத் தெரியாது"

இனிய காலை

Sunday 10 March 2024

நந்திவர்மன்


நந்திவர்மன் பல்லவ மன்னன் இறந்து போனார் தன்னை ஆதரித்து வந்த வள்ளல் இறந்து போனதால் சோகம் கொண்ட கவிஞர் ஒருவர் இவ்வாறு கவிதை வடித்தார்

வானூரும் மதியை அடைந்ததும் தட்பம் 
வரி கடல் புகுந்ததன் பெருமை கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்த உன் கரங்கள் தேனுறு மலரால் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததும் தேகம் யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தைய பரனே

 நந்திக்கலம்பகத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.நந்தியே! அருளாளனே உன்னிடமிருந்த குளிர்ந்த குணம் நிலவிடம் போய்விட்டது. உன் பெருமையை கடலிடம் போய்விட்டது. உன் வீரம் புலியிடம் போய்விட்டது. உன் கைகள் கற்பக மரத்திடம் போய்விட்டன. இதுவரை உன்னிடம் இருந்த திருமகள் திருமால் இடம் போய்விட்டாள். உன் உடல் தீயிடம் போய்விட்டது. உன்னை நம்பி வாழ்ந்திருந்த நானும் என் வறுமையும் இனி எங்கே போவோம் என்கிறார் கவிஞர்

சாதி என்பது செங்கல் சுவர், முள்வேலி போன்ற பெளதீகத் தடையாக இருந்தால் அதைத் தகர்த்துவிட முடியும்.அது மனத்தடையாக இருப்பதால் அதைக் கடந்து வருவது சொர்க்கத்திற்குப் போகும் பாதையைவிடக் கரடுமுரடானது, கடினமானது-அம்பேத்கர்

புத்தகம்-8


Reading_Marathon2024
#24RM050

Book no:8/100+

உன்னால் கடக்க முடியும்
-ஓஷோ

பெரும்பாலான தன்னம்பிக்கை நூல்கள் எல்லாமே வார்த்தை ஜாலங்களால் அடுக்கிக் கொண்டு போவார்கள். ஆனால் ஓசோ எப்போதும் தத்துவத்துடன் உண்மை தன்மையை பற்றி மட்டுமே புத்தகத்தில் குறிப்பிடுவார் பேசுவார். என் விரலை கடித்து விடாதே நான் சுட்டிக்காட்டும் இடத்தை பார் என்பது போல அறியாததை நோக்கி மட்டுமே அவர் விரல்கள் காட்டுவார். அப்பாதையை கண்டுபிடித்து நாம் சென்றால் மட்டுமே அறியாமையை நாம் உணர்ந்து அதிலிருந்து கடக்க முடியும். நம்பிக்கை கொள்ளும் மனதை யாராலும் உருவாக்க முடியாது. ஏனெனில் மனதால் சந்தேகப்பட மட்டுமே முடியும். சந்தேகத்தை மறைக்க முடியும். ஆகவே நம்பிக்கையை இதயத்திலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த நம்பிக்கை சந்தேகங்கள் மன உறுதி என்பதையெல்லாம் மதங்களும் மனிதர்களும் எவ்வாறு புரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.. அதிலிருந்து நாம் கற்றுக் கள்ள வேண்டியது என்ன என்பதை, வெளிச்சத்தை இருளில் தேடி கண்டுபிடிப்பது போல இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயம் உண்மையை நோக்கியும் எதார்த்தத்தை வலியுறுத்தியும் பற்பல கதைகள் சம்பவங்களை உதாரணமாக கூறுகின்றன.

எப்போதும் முட்டாள் மனிதர்கள் கேட்பதுண்டு யாரிடம் கற்றுக்கொண்டாய்? என்று. எல்லாருக்கும் இந்த வழி தான் தெரியும். யார் உனக்கு தகவல் தந்தது என்று. நேர் எதிர்வழியில் தெரிந்து கொள்வது பற்றி அவர்கள் அறிய மாட்டார்கள். அதுதான் உண்மையான வழியில் அறிந்து கொள்வது. யாரும் உங்களுக்கு அறிவை புக ட்டுவதில்லை. மேலும் மேலும் உங்களுக்குள்ளேயே நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்.

உபதேசங்கள் மட்டும் இல்லாமல் அதற்கு தகுந்த ஒரு கதைகளையும் சொல்லும் போது அந்த உபதேசங்களும் மனதில் பதிகின்றன. இதோ ஒரு கதையின் ரயில் வரும் பாதையில் நாய் குறுக்கே ஓடி ரயில் நாயின் வாலைத் துண்டித்து விட்டது. நாய் தன் காயங்களை ஆற்றிக் கண்டு வாலை தேடி அங்கே சென்றது.இன்னொரு ரயில் வந்து நாயின் தலையை துண்டித்தது. ஒரு வால் துண்டை தேடி போக தலையை இழந்து விடாதே என வாழ்வியல் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

அதே போல ஒரு பெரிய ஜோதிடர் மேலே உள்ள நட்சத்திரங்களை பார்த்தவாறு நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் உள்ள கிணற்றில் விழுந்து விட்டார். அந்த வழியே வந்த ஒரு பெண் அவரை காப்பாற்றி விடுகிறார். அதற்கு நன்றிக் கடனாக உன் ஜாதகத்தை என்னிடம் தா உன் வருங்காலத்தை பற்றி உனக்கு தெரிவிக்கிறேன் என்கிறார். அதற்கு அந்த பெண் நீ ஒரு முட்டாள். உன் முன்னாள் ஓரடியில் உள்ளதை கூட உன்னால் பார்க்க முடியவில்லை. வருங்காலத்தை பற்றி உன் கணிப்பை எப்படி நம்ப முடியும். நீ என்னை ஏமாற்ற முடியாது என்று பதில் சொல்கிறாள். ஒரு கற்பனை உலகில் வாழும் நபர்களை பற்றியும் இந்த கதையில் சொல்லி இருப்பார் .பின்னர் இதனை பற்றி விரிவாக உதாரணங்களுடன் விளக்கி இருப்பார்.

கனவின் செயல் உங்களை தூக்கத்தில் வைத்திருக்கும்.எல்லா கனவுகளின் செயல் நோக்கமும் அதுவே தான் .என்றோ ஒருநாள் சமுதாயம் சமமாக வர்க்க பேதம் இன்றி இருக்கும். இதுதான் கற்பனை உலகமான உடோப்பியா. ஒரு நாள் உருவாகும் அதில் துன்பங்கள் இராது. அந்த நாள் பூமி சொர்க்கம் ஆகும். இவை வெறும் கனவுகள். ஆறுதல் அளிப்பவை. சுகம் அளிப்பவை. காயத்துக்கு களிம்பு போன்றவை. ஆனால் களிம்பே இங்கே போலியானது என்பதை நாம் உணர வேண்டும். இரவு போய் விடியல் வரும் ஆனால் இரவு தான் நீடிக்கின்றது. தூக்கம் தொடர்கிறது துன்பங்கள் தொடர்ந்து நிலவுகிறது. வழிபடுதலும் ஒரு வகையான தப்பித்தல் தான் இது அதீத நாகரீகம் உடையது.

ஒரு மனிதன் ஒருவனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருப்பார். அவன் தடுமாறி கீழே விழுந்து பின் எழுந்து பின் இருப்பவனை பார்த்துச் சொன்னான். எவருமில்லை என்று. இரண்டு பக்கங்களில் இருந்தும் யாரும் இல்லை. அகங்காரம் சுயத்தை நோக்கினால் எவரும் இல்லை. சுயம் அகங்காரத்தை நோக்கினால் எவரும் இல்லை பார்வை ஏற்படும் போது வெறுமனே எவரும். இருப்பதில்லை இருவரும் காணாமல் போய்விடுகின்றனர் .இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது அகங்காரமும் சுயமும் நாம் எப்போதெல்லாம் கீழே விழுகிறோமோ அப்போது இரண்டும் நம்மை பெரிய பூதங்கள் போல் தோன்றி நம்மை உண்மையை அறிய விடாமல் செய்கிறது. ஆகவே இந்த இரண்டையும் மறைபொருளாக இதில் குறிப்பிட்டிருப்பார்

*மனம் உங்களை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தெரு நாய்களைப் போல துரத்தும் குரைக்கும் .ஆனால் நீங்கள் அதை கவனிக்கவிட்டால் மெல்ல மெல்ல இந்த நாய்களை பின்னே விட்டுச் செல்ல முடியும். அந்த குரைப்பு மேலும் தூரமாகி போகும்.

*ஏன் என்ற கேள்வி ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மேலும் மேலும் தத்துவத்துக்கு இட்டுச் செல்லும் .அது இல்லாமல் தத்துவம் ஒரு தரிசு நிலம்

*மரம் ஒன்றுக்கு சொர்க்கத்தை தொட வேண்டுமானால் அது தன் வேர்களை நரகத்திற்கு அனுப்ப வேண்டும். உங்கள் வேர்களை நரகத்திற்கு அனுப்பாமல் நீங்கள் சொர்க்கத்தில் மலர முடியாது

*என்னைத் தவிர எல்லாரும் புத்திசாலிகளாக இருப்பார்கள் போல நான் குழம்பிப் போய் இருக்கிறேன் நானே முட்டாள் முட்டாளாக இருப்பதை அவர் தெரிந்து கொண்டதால் அவர் அறிவாளியாய் இருக்க முடிகிறது.

*அறியாமையின் அளவு மென்படலமாக இருக்கும் போதே கவனி

*(யின்-யாங்-)ஆண் தொடர்ந்து பெண்ணாகி கொண்டிருக்கிறான். பெண் தொடர்ந்து ஆணாகிக் கொண்டிருக்கிறாள் 
(கல்யாணத்துக்கு அப்புறம் இது உணர முடியுதுங்க)

*தேடல் ஒரு பெரிய வருங்காலத்தை முன் அறிவிக்கிறது. ஒரு மிகப்பெரிய தகவலுக்கு மனிதன் தயாராகிக் கொண்டிருக்கிறான்

*அனைவரையும் நேசி என்பதற்கு எதிரானவர் பிராய்டு. அவருடைய வாதம் எளிமையான பொருளாதார உடையது. நேசம் மெல்லியதாக பரவுவதை பற்றி எழுதும்போது அதீதமான நேச விரிதல் அதன் மதிப்பை குறைத்து விடும் என்கிறார். மனதின் பற்றாக்குறையாலேயே பொருளாதாரம் நிலவியிருக்கிறது.

*ஒருவர் பூ ஒன்றை எடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சுற்றி இருப்பவரிடம் காட்டினால் ஒவ்வொருவரும் பூவைப் பற்றி சொன்னார்கள் ஒருவர் மட்டும் புன்னகைத்தார் பூ விளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல பூ தன்னிலையிலேயே ஒரு விளக்கம் தான். அங்கேயே இருக்கிறது நாம் அதை ரசிக்க மட்டுமே வேண்டும் எதையும் கூறத் தேவையில்லை.

*நினைவிருக்கட்டும் எல்லா பெரிய உண்மைகளும் எளிதானவை .பொய்கள் எளியவை அல்ல. அவற்றால் அப்படி இருக்க முடியாது

இதுதான் சொல்ல வருகிறார் என்பதனை இப்படித்தான் என்று ஓரிரு வரிகளில் சொல்ல முடியாது. கடலில் பயணம் செய்வது போல ஒரு முழு கடலையும் பார்க்க முடியாது இவரின் புத்தகமும் அப்படித்தான் .எல்லாவற்றையும் ஒரே வரியில் சொல்ல முடியாது. அந்த பெருமழையில் கொஞ்சம் நனைந்த உணர்வு தான் மேலிடுகிறது. ஓஷோவின் புத்தகங்கள் எல்லாமே அப்படித்தான். நமக்கு வேண்டியது இருக்கும் ,முரணும் இருக்கும் .ஆனால் தத்துவார்த்த ரீதியாக ஒரு கருத்தை முன்வைக்கின்ற போது நாமும் அதில் ஒன்றி போய் படித்து விடுகிறோம் தியானம் போல

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 9 March 2024

Slow work


Slow work--மெதுவாக வேலை செய்தல்

மெதுவாக வேலை என்றவுடன் "சோம்பேறித்தனமாக இருப்பது" என நினைக்கவேண்டாம் 🙂
1986ல் இத்தாலியில் மெக்டானலட்ஸ் அறிமுகம் ஆனபோது "துரித உணவு, துரித வேலை" எனும் கோட்பாட்டுக்கு எதிராக இத்தாலியில் "ஸ்லோ உணவு, ஸ்லோ வேலை" எனும் எதிர்ப்புரட்சி இயக்கம் துவக்கபட்டது. இதை "unbusy movement " எனவும் அழைக்கிறார்கள்

காலையில் சமைக்ககூட நேரம் இல்லாமல் மெக்டானல்ட்ஸில் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடி, நாள் முழுக்க வேலை செய்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பி டிவி முன் விழுந்து, சமைக்க நேரம், விருப்பம் இன்றி சைனீஸ், பீட்சா என எதையாவது வாங்கி உண்டு தூங்கி....
இதையே மறுநாள், மறுவாரம், அடுத்தவருடம் என 40 ஆண்டுகள் தொடர்ந்து செய்வது வாழ்க்கையை சலிக்க வைக்கும் செயல்.

அன்பிஸி, ஸ்லோ ஒர்க் இயக்கங்களில் இப்படி வேலைசெய்யகூடாது.

தினம் காலையில் இன்று முடிக்கவேண்டிய முக்கிய வேலைகள் என்ன என எழுதிவைத்துக்கொள்ளவேண்டும்

அதன்பின் அலுவலகம் போய் கதவை பூட்டிக்கொண்டு செல்போன், மின்னஞ்சல், போன், அரட்டை என எதுவுமில்லாமல் அதில் மட்டுமே மூழ்கவேண்டும்.

அலுவலக மின்னஞ்சல் ஆனாலும் ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே திறந்து பார்க்கவேண்டும். அதிலும் "10- 10:30 AM" அதன்பின் "3-:30 PM" என்பது போல இரண்டு ஸ்லாட்கள் வைத்துக்கொண்டு அதில் மட்டுமே மின்னஞ்சல் பார்க்கவேண்டும்.

வேலைக்கு நடுவே பிரேக் எடுக்கலாம். எடுத்து மற்றவர்களை போய் பார்த்து, பேசி விட்டு வந்து மறுபடி கதவை பூட்டிக்கொண்டு வேலை செய்யணும்.

மல்டிடாஸ்கிங் எனும் பேச்சே கூடாது..ஒரு சமயத்தில் ஒரே முக்கிய வேலையை மட்டுமே செய்யணும். அதை செய்கையில் மற்றவேலைகளை நினைக்ககூடாது.

செய்ய நினைத்த வேலைகளை செய்துமுடித்தபின் ஆபிஸை விட்டு வீட்டுக்கு கிளம்பவேண்டியதுதான்.

--
"படிக்க நல்லா இருக்கு...இது எல்லாம் என் பணியிடத்தில் சாத்தியமில்லை..
எனக்கு ஓபன் ஆபிஸ் முறை...நான் எந்த கதவை பூட்டிக்கொண்டு வேலை செய்ய?
மின்னஞ்சல் பார்க்கலை என்றால் உடனே சுமோவில் வந்து அள்ளிக்கொன்டு போய்விடுவார்கள். அந்த அளவு என் வேலையில் பரபரப்பு இருக்கும்.."

-> இப்படி பலகாரணம் இருக்கலாம்...ஆனால் தனிநபராக இதை செய்வது எல்லா வேலையிலும் நடக்காது. அந்த நிறுவனங்களே முன்வந்து இத்தகைய பணியிட கலசாரத்தை உருவாக்காமல் ஸ்லோ ஒர்க் கான்செப்டை பின்பற்ற முடியாது.

பல நிறுவனங்கள் இத்தகைய பணியிட கலாசாரத்தை அறிமுகபப்டுத்தி வருகின்றன. கம்பனி முழுக்க silent work rule, யாரும், யார் கதவையும் போய் தட்டி தொல்லை செய்யகூடாது,.ஓபன் ஆபிஸ் முறைக்கு தடை, மீட்டிங்குகளை மிக குறைப்பது...இப்படி பல சீர்திருத்தங்கள் அறிமுகம் ஆகிவருகின்றன.

ஸ்லோ ஒர்க் என்பதை தாண்டி

Slow food--துரித உணவை தவிர்த்த்விட்டு சமைத்து, மெதுவாக ரசித்து உண்பது

Slow entertainment-> மெதுவாக நடப்பது, படிப்பது, பூங்காவில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது 

Slow ageing-> அரக்க பரக்க வேலை செய்து மன அழுத்தத்தை கூட்டிக்கொள்லாமல் மெதுவான வாழ்க்கைமுறை மூலம் மெதுவாக வயதாவது

Slow tourism- ஒரே நாளில் 10 ஊர்களை பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒரே ஊர், ஒரே இடம் என்பது போல மெதுவாக ஜாலியாக சுற்றிபார்த்து பயணிப்பது...

Slow dating-> வேக வேகமாக டேட்டிங், செக்ஸ், கல்யானம், விவாகரத்து என போகாமல் மெதுவாக பழகி, பேசி, புரிந்துகொண்டு நிதானமாக வாழ்க்கையை துவக்குவது

இப்படி இந்த அன்பிஸி, இயக்கம் பல்வேறு பரிணாமங்களில் பின்பற்றபட்டு வருகிறது.

வாழ்க்கையை மெதுவாக வாழ்வோம்

_நியாண்டர் செல்வம்

ஏன் பிறர்ஏற்றுக்கொள்ளவேண்டுமெனஇத்தனைப் பாடுபடுகிறீர்கள், தெரிந்துகொள்ளுங்கள்..!உங்களைச் சுதந்திரமாய்வாழச்செய்வது,நிராகரிப்புகள் மட்டும்தான்..!-படித்தது

Friday 8 March 2024

Just because you are anger doesn't have to be an excuse for you being cruelநீங்க கோபமாய் இருக்கிறதால் ஒருத்தர கேவலமா நடத்தும் உரிமை யாரும் உங்களுக்கு கொடுக்கல.நான் கோபத்தில் பேசிட்டேன் என்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.-படித்தது

இளைப்பாறுதல் சுகம் பற்றி வள்ளலார்கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே! மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே! மென் காற்றில் விளை சுகமே!சுகத்தில் உறுபயனே!கொளுத்தும் கோடையில் தான் குளிர்தருவின் நிழலின் அருமையும் பெருமையும் புரியும்.

நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன் இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் – அதுதான் வாழ்க்கை. அது தான் மகத்தான சவால்”சைபீரியாவில் சிறைத்தண்டனை அனுபவிக்கப் போவதற்குச் சற்று முன்னர் தஸ்தாயெவ்ஸ்கி தன் சதோதரர் மிகையீலுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.– தாஸ்தாயெவ்ஸ்கி 

“பழக்கங்கள் உறுதியான கயிற்றைப் போன்றவை. ஒவ்வொரு நாளும் நாம் அதன் ஒவ்வோர் இழையை முடைகிறோம். விரைவில் அது அறுக்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது.-ஹொரேஸ் மான்

யாருமில்லாத பாதைகளிலிருந்து திரும்பிப்பார்க்கும்போது பெரிதாகத் தோன்றும் உலகம் உடன் இருப்பவர்களின் கரம்பற்றி யோசிக்கும்போது மிகச்சிறியதாக மாறிவிடுகிறது. அத்தனை பெரும்பாதைகளையும் சிறு துகளென மாற்றித்தர யாராவது எப்பொழுதும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்.-லதாமகன்

தன்னிரக்கத்தின் வழி நாம் அடைவது ஆசுவாசம். நம் தயங்கங்களை நம் பிழைகளை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக நினைத்துக்கொள்வது ஒரு தப்பித்தல். சிறுவலிக்கு அஞ்சும் எளிய மனங்களின் வானம் கனவாகவே இருப்பது நியாயம்தானே?-லதாமகன்

பழம் தின்று கொட்டை போட்டவர்

பழம் தின்று கொட்டை போட்டவர் என்றால் என்ன அர்த்தம்?

யானைகளை காடுகளின் தந்தை என்பார்கள்.

ஆதிகாலம் முதல் யானைகள் தாம் பழங்களைத்தின்று தான் செல்லுமிடமெல்லாம் விதைகளைப்போட்டு காடுகளை விருத்தி செய்கின்றன.

இன்றளவும் காடுகளில் புதிய தாவரங்கள் மற்றும் மரங்கள் வேறுவேறான இடங்களில் வளர்வதற்கு யானைகள் தாம் காரணம்.

அவ்வாறாக பழம் தின்று கொட்டைகள் போட்டு காடுகளைபல்கிப்பெருகச்செய்த யானைகளை காட்டும் உதாரணம் தான் பழம் தின்று கொட்டை போடும் உதாரணம்.

அப்படியான யானைகள் அளவுக்கு பலம் பொருந்தியவர் என்று பொருள்கொடுக்கும் வகையில் தான் பழம் தின்று கொட்டை போட்டவர் என்று உதாரணமாக சொல்லப்படுகிறது.

-படித்தது

Thursday 7 March 2024

சோம்பல் என்பது ஓர் இயல்பான உளநிலை. சும்மா இருக்கத் தான் உள்ளம் விரும்பும். அதை உந்திச் செலுத்தித் தான் செயலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதை எப்போதும் செய்துக்கொண்டிருக்க வேண்டும். இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டால் அது அசையவே அசையாது-ஜெயமோகன்

புத்தகம்-7


Reading_Marathon2024
#24RM050

Book no:7/100+

உரையாடல்களின் காலம்
-சுகுணா திவாகர்

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. நான் மதிக்கும் எழுத்தாளுமைகளில் ஒருவரான சுகுணா திவாகரின் கட்டுரை நூல்கள் தான் இவை. எந்த ஒரு கட்டுரை தொகுப்பும் கட்டுரையின் ஆழங்களை தரவுகளோடு அலசி, பின் முடிவுகளை அனைவரின் கண்ணோட்டத்தில் இருந்தும் பார்த்து இறுதியில் கட்டுரை முடியும் போது நாமே சொல்ல வந்த கருத்தினை போல் உணர வைப்பதாக இவர எழுத்துக்கள் இருக்கும். அவ்வாறு இதில் உள்ள 11 கட்டுரைகளும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த முக்கிய கட்டுரைகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

சமகால பிரச்சனைகளை சொல்ல வேண்டிய சரியான நேரத்தில் எதிர்வினை ஆற்றி அந்த எதிர்வினைகளுக்கு தக்க ஆதாரங்களோடு வெளிப்படும் கட்டுரைகளாக ஆனந்த பவனை எதிர்க்கும் ஆரியம் கட்டுரை இருந்தது. மக்களின் உடை நாகரீகம் போன்றவற்றை வரலாற்றின் அடியொற்றி இதில் விளக்கியிருப்பார். ஆரிய பவன் ஐயங்கார் பேக்கரி என இருக்கும் தமிழகத்தில் தான் மற்ற கீழ் சாதியினர் பெயர்களில் உணவகங்கள் இல்லை என்பதும் முத்தாய்ப்பாக சொல்லி இருப்பார்

மதம் குறித்த கட்டுரைகளில் சமகால ஆளுமைகளின் கருத்துக்களை சொல்லியதோடு மதம் குறித்த பெரியாரின் நிலைப்பாடு என்ன மதத்தையும் கடவுளை மறுத்தால் அந்த இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி பெரியாரின் காலத்திலேயே கேட்கப்பட்டபோது "நடுவீட்டில் மலம் நாறுகிறது அதை எடுத்து வீசு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று ஏன் கேட்கிறாய்? என்றார் பெரியார் என்று இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும் விதமாக இக்கூற்று இருந்தது. மதத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் விடுபட்டு நமக்கான சுயேச்சை அறங்களை நாமே உருவாக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் மிகப்பெரும் மகிழ்ச்சி இருக்கிறது .அது மதவாதிகளின் கற்பனை சொர்க்கத்தை விட அற்புதமானது என்று இறுதியில் இந்த வரிகளுடன் முடித்து இருப்பார்.

மாமன்னன் படம் வந்தபோது தேவர் மகனுக்கு எதிரானதா என்பதை உரையாடல் வழியே காண்பித்து இதில் கூறியிருப்பார். அதேபோல் படைப்பு சுதந்திரத்தின் அடையாள அரசியல் வரம்புகளில் பர்கானா திரைப்படத்தை முன்வைத்தும் அவர் தனது சினிமா கட்டுரைகளில் உள்ள மதம் அரசியல் ஆகியவற்றைப்பற்றி பேசி இருப்பார்

கவிஞர்களின் காலம் முடிகிறதா எனும் கட்டுரையில் எந்திரங்கள் தங்கள் வாழ்க்கைக்குள் வரும்போது மனிதர்கள் பதற்றம் அடைவார்கள், எந்திரங்களினால் தொழிலாளர்கள் வேலை இழந்தார்களா? அதில் மார்க்ஸ்ன் சிந்தனை என்ன? உற்பத்தியும் நுகர்வும் சரி விகிதத்தில் இருந்தால் நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் தான்
 இதில் நுகர்வு குறையும்போது உற்பத்தி அதிகரிப்பதால் என்னென்ன முரண்பாடுகள் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி இதில் கூறியிருப்பார்

இமையத்தின் படைப்புகளை பற்றி கூறும் போது எது நம்மை பாதிக்கிறதோ தொந்தரவு செய்கிறதோ விமர்சனம் செய்ய தூண்டுகிறதோ அதை நாம் எழுத்தின் மூலம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கருதுகிறோமே அதுவே எழுத்தாகிறது படைப்பாகிறது என்று கூறுகிறார். அடுத்ததாக ஜெயமோகனின் எழுத்துக்களை குறித்த விமர்சனங்களை தரும்போது துணைவன் கதையில்
வரும் வாக்கியம் "அதிகாரம் துப்பாக்கிக் குழாய் வழியான்னு தான் மார்க்ஸ் சொல்லி இருப்பார் என்கிறார் அது உண்மையில் மார்க்ஸ் சொல்லவில்லை மாவோ சொன்னதாய்  என்று திருத்தி சொல்கிறார். மேலும் துணைவன் கதை குறித்தும் மா.லெ இயக்கத்தை பற்றிய கருத்தியல் குறித்தும் ,வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கு பெற்ற நிகழ்வை குறித்தும் விமர்சனப் பார்வையோடு இக்கட்டுரை அமைகிறது.

*பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அதை மறுத்து கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று அழுத்தமாக வாதிட்டவர் அம்பேத்கர்

*வார்த்தைகளை விமர்சனங்களை மௌனப்படுத்துவதற்காக முன்வைக்கும் போது அந்த வார்த்தைகள் ஆற்றல் இழந்து நீர்த்துப் போகின்றன

*கருத்து சுதந்திரம் என்பது ஒருவர் என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கான சுதந்திரம் தானே தவிர, அவர் என்ன சொன்னாலும் யாரும் விமர்சித்து எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்கான சுதந்திரம் இல்லை

சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளை விமர்சனப் பார்வையுடன் அணுக வேண்டிய கட்டுரைகளை இதில் பேசியிருப்பார் 11 கட்டுரைகளும் வெவ்வேறு அனுபவங்களை தரும் வகையில் அமைந்திருந்தது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday 6 March 2024

'முன்பெல்லாம் எல்லாவற்றையும் சொல்வாய்இப்போது ஏன்எதுவுமே சொல்வதில்லை?''சொல்லக்கூடாதென்று ஏதுமில்லைசொல்லத் தெரியாமலும் இல்லைசொல்லத் தோன்றவில்லை'ஒருவரை இழப்பதைக்காட்டிலும் அவலமானதுஒருவரிடம் நம் இடத்தை இழப்பது-மனுஷ்யபுத்திரன்

ஜெப் ப்ரவுன்


நாம் அனைவரும் சோர்வடைந்துவிட்டோம். உண்மையிலேயே அலுப்பாக இருக்கிறது. வாழ்க்கை மிகவும் கடினமான பாதைதான், ஆனால் அழகானதும்கூட. நம்மிடமும் பிறரிடமும் நாம் அதிகம் எதிர்பார்ப்பதால் இந்தச் சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம். ஒருவேளை, மனித குலத்தால் மண்புழுவைப் போல மிக நிதானமாகவே முன்னேற முடியுமோ என்னவோ! முதலில், நாம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதை அடிக்கடி நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும். நிறைய ஓய்வெடுக்க வேண்டும். எளிய இன்பங்களில் மனநிறைவுடன் திளைக்க வேண்டும். எங்கும் அன்பையே காண வேண்டும். நான் வசிக்கும் பகுதி அருகில் ஒரு நதி ஓடுகிறது. அமைதியுடனும் நிதானத்துடனும் வளைந்து செல்கிறது. தான் ஏன் கடலாகவில்லை என்றோ ஆர்ப்பரிக்கும் வெள்ளமாகவில்லை என்றோ தன்னை அது கேட்டுக்கொள்வதில்லை. தான் எதுவோ அதில் மட்டும் ஆழ்ந்து லயித்திருக்கிறது. அடிபணிந்திருக்கிறது. நாமும் அந்த ஆற்றைப் போல நாம் யாரோ அதற்குச் சரணடைவோம். தூய நல்நிலையில் நிறைவடைவோம். நான் அந்த ஆற்றின் அருகே நாளை துயில்கொள்வேன். ஓய்வெடுப்பேன். மகிழ்ச்சியுடன் என்னை அர்ப்பணிப்பேன்.

- ஜெஃப் பிரவுன்.

அளிக்கும்போது அன்பைப் போல்இலகுவானதாகவும்பெறும்போது அன்பைப்போல்கனமானதாகவும் எதுவும் இல்லை-ஈரோடு கதிர்

Tuesday 5 March 2024

மெண்டரிங்சில சமயங்களில் நல்ல ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது. மென்டரிங் எனும் வார்த்தையை தமிழ்ப்படுத்த முடியாமல் வழிகாட்டுநர், குரு-சீடர் முறை போன்ற தோராயமாய் அதே பொருளைத்தரும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. மிகப்பொருத்தமான மாற்று வார்த்தை கிடைக்காதவரை அதே ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு தத்தெடுத்துக்கொள்வது தவறில்லை. மென்டரிங் மிகச்சிறந்த வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்; தொடர்செயல். சமீபகாலமாக, நமது நிறுவனத்தில் மென்டரிங் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. நமது செயல்முறைகளிலும் அது பிரதிபளிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தைக்கு சாப்பிட, நடக்க, பேச, எழுத சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இயல்பாய் எதிர்கொள்ளத் தேவையான திறனை விதைக்கும் செயல்முறையை, நமது பணிச்சூழலில் மூத்தப்பணியாளர் இளம் பணியாளருக்கு ஏற்படுத்தித் தருவதே மென்டரிங் எனலாம். ஒரு குருவின் கடமை சீடருக்கு சொல்லித்தருவது இல்லை, சீடர் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்ற தத்துவம் மென்டரிங்குக்கும் மிகப்பொருத்தம். அன்பே சிவம் படத்தில் கமல், மாதவன் மீது தனது கருத்தை திணிக்காமல், அவர் போக்கில் தன்வயப்படுத்தி, சகமனிதர்கள் மீதான பெருங்கருணையை மாதவனிடம் உண்டாக்குவது மென்டரிங் பற்றிய நல்ல பதிவு“நான் ஒரு எறும்பைக் கொன்றேன், எனது மூன்று குழந்தைகள் அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஜென் கவிதையை படித்தபோது, எனக்குள் சிலிர்த்தது. சூழலின் எல்லாப் பக்கத்திலும் நம்மால் காணமுடியாத கண்கள் இருக்கின்றன. அறியாமல் நான் செய்யும் வன்முறையை, தவறை சுற்றிலும் பல கண்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றன. நான் என்னை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாமல் மென்டரிங் முறையில் நேர்மையாக பங்கெடுக்கமுடியாது என்றே தோன்றியது.நாம் புழங்கும் சமூகம், நமக்கு மிகமுக்கிய மென்டராக இருந்து வருகிறது. ஒருமுறை வறட்சியின் பிரச்னைகள் குறித்து சிவகங்கை பகுதியில் ஒரு விவசாயியிடம் பேசிக்கொண்டிருந்த போது, “மழை பெஞ்சா நெல்லை விப்போம்; பெய்யலனா நெலத்த விப்போம்” என்று பேச்சுவாக்கில் அவர் கூறியது கேட்டு அசந்துபோனேன். வறட்சி; அதன் விளைவு; அதனை அவர்களின் வாழ்க்கை முறையோடு இயல்பாய் பொருத்திக் கொண்ட பக்குவம் இதையெல்லாம் யோசித்தபோது, அவர்களுக்குச் சொல்ல எந்த செய்தியுமில்லாமல் நான் நின்றிருந்தேன். சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “தெருக்களில் இறங்கித் தேடும்போது, எல்லாம் கிடைக்கும். நமது கேள்விகள் அனைத்துக்கும் தெருக்களில் பதிலுள்ளது” என்ற வசனம் வரும். அது சத்தியமான உண்மை. கிராமத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொறு முறையும் கிராமம் எனக்கு ஏதாவதொரு செய்தியை சொல்லித்தந்து அனுப்பும் மென்டாரிங் முறை எப்போதும் உற்சாகமான அனுபவம்.-படித்தது

கடல் ஆழம்


கடலின் ஆழம்

நிஜத்தில் சொல்வதானால் பூமியில் ஒரேயொரு சமுத்திரந்தான் இருக்கி்ன்றது. ஐந்து சமுத்திரங்கள் என்பது இந்தப் பாரிய சமுத்திரப் பரப்பில், பசுபிக், அட்லாண்டிக், இந்திய, ஆர்க்டிக், தெற்கத்தைய என்று அழைக்கப்படுகின்றன.

ஆழம் எவ்வளவு பார்த்தால், இடத்திற்கு இடம் வேறுபடுவதுதான் இந்தச் சமுததிர ஆழம். கடலுக்கடியில் உள்ள மாலைத் தொடர்கள் , செங்குத்தான பள்ளத்தாக்குகள் போன்றவைதான் ஆழத்தை தீர்மானிக்கின்றன.

sonar போன்ற கருவிகளைப் பயன்படுத்தி , நவீன தொழில் நுட்ப வசதிகளின் உதவியுடன் இந்தச் சமுததிரப் பரப்பின் பரவலான ஆழத்தை கண்டறிகிறார்கள். அண்ணளவாக 12,785 அடி (3,897 மீ) என்பது கண்டுபிடிப்பு. இதைச் சுருக்கமாக 3.8கி.மீ அல்லது 2.4 மைல் என்று சொல்லி விடலாம்.

மிக ஆழமான சமுத்திரப் பகுதிகள் என்று கண்டறிந்ததை பிரித்துச் சொல்கிறார்கள்.

👍Molloy Hole என்பது ஆர்க்டிக் சமுததிரத்தின் மிக ஆழமான பகுதி. இது மேல் மட்டத்திலிருந்து 5,669 மீற்றர் ஆழமானது.

👍Java Trench எனப்படும் பிரதேசம் இந்து மகா சமுத்திரத்தில்7,290 மீற்றர் ஆழத்தில் உள்ள பகுதி.

👍Puerto Rico Trench எனப்படுவது அட்லாண்டிக் சமுத்திரத்தின் 8,408 மீற்றர் ஆழத்தில் உள்ள பகுதி.

👍Mariana Trench எனப்படுவதுதான் பசிபிக் சமுத்திரப் பிராந்தியத்திற்குரியது. இதுதான் உலகிலேயே மிக ஆழமான சமுத்திரப் பகுதி. இதைப் பூகோள வரைபடத்தில் "Challenger Deep." என்று குறிப்பிடுகிறார்கள். இது சமுத்திரத்தின் மேற்கத்தைய பிராந்தியத்தில் காணப்படுவது.

இது எவ்வளவு ஆழமானது என்ற கேள்வி எழுகிறதல்லவா? எவரெஸ்ட் மலை உயரத்தை விட கூடிய அளவு ஆழமானது என்கிறார்கள்.

-படித்தது

Sunday 3 March 2024

சமுத்திரத்தின் பயணத்திற்குதயாரான பின் ஓடைகளின் ஆழம் பற்றிஅச்சம் கொள்ள என்ன இருக்கிறது.-நரன்

மெய் வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்-இதில் கண் துஞ்சார் என்றால் தூங்கவே மாட்டார்கள் என்கிற பொருள் இல்லை. தூக்கத்தைக் குறைத்துக் கொள்வார்கள். தூக்கத்தில் கூட விழிப்புணர்வுடன் செயலைப் பற்றிய அரை நிலை சிந்தனையோடு இருப்பார்கள் என்று பொருள்இனிய காலை

டிசம்பர் 1947 இந்திய சூழல் குறித்து லண்டனில் பேசிய ஜெனரல் கரியப்பா அவர்கள், அகிம்சையால் எந்த பயனும் விளையாது. வலிமையான இராணுவம் மட்டுமே இந்தியாவை பலப்படுத்தி முன்னேற உதவும் எனக் குறிப்பிட்டிருந்தார்.கரியப்பா அவர்கள் காந்தியை நேரில் சந்தித்ததில்லை. கரியப்பா பேசியதை அறிந்த காந்தி , ஹரிஜன் இதழில் பதிலை எழுதினார். கரியப்பா போன்ற எந்த ஜெனரலாகஇருந்தாலும் அவர்கள் அகிம்சை குறித்து பேசாமல் இருப்பதே உகந்த அறிவாகும். உலகில் இராணுவ அறிவியலும் அதன் நடைமுறைகளும் திவாலாகி நிற்பதை பார்க்கிறோம். பங்கு சந்தை சூதாட்டத்தில் திவாலான ஒருவர், குறிப்பிட்ட வகை சூதாட்டம் சிறந்தது எனப் பேச இயலுமா என காந்தி தன் பார்வையை வைத்தார்.டில்லி திரும்பியவுடனேயே கரியப்பா அவர்கள் காந்தியை சந்திக்க நேரில் சென்றார். காந்திக்கோ அன்று மெளன தினம். கால்ஷூவை வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்ற கரியப்பாவிற்கு இருக்கை ஒன்றைக் காட்டி காந்தி அமரச் சொன்னார். காந்தி தன் சர்க்கா வேலையில் இருந்தார். கரியப்பா காந்தி எதிரில் தரையில் அமர்ந்தார்.நான் உங்கள் அகிம்சை குறித்த பேச்சிற்கு பதில் எழுதியிருந்தேனே என பேப்பர் ஒன்றில் காந்தி எழுதி காட்டுகிறார். கரியப்பா முன்முறுவலுடன், என் போன்ற மிகச் சாதாரண ஒருவர் பேசியதையும் பொருட்படுத்தி அதற்கு தன் பதிலைத் தர மகாத்மா நேரம் எடுத்துக்கொண்டதற்கு நன்றி சொல்லவும், குழந்தைகளாகிய நாங்கள் எப்படி அறிந்துகொள்ளவேண்டும் என்பதைப் பெறவும் வந்ததாக கரியப்பா சொல்கிறார்.கரியப்பா இராணுவ வீரர்கள் குறித்த அற்புதமான புரிதலை காந்தி முன் வைக்கிறார். நாங்கள் சபிக்கப்பட்ட இனம். நீங்கள் கூட எங்களை வன்முறையாளர் எனக் கருதக்கூடும்.. உலகிலேயே போரை விரும்பாத கம்யூனிட்டி என்றால் இராணுவ வீரர்கள்தான். வீரர்களாக நாங்கள் யார் மீதும் போர் தொடுப்பதில்லை. மக்களுக்காக எனச் சொல்லப்படும் அரசாங்கங்கள்தான் , தங்களுக்கு இடையேயான தகராறுகளை பேசி தீர்த்துக்கொள்ளமுடியாமல், போர் என பிரகடனப்படுத்துகிறார்கள். அரசாங்கம் சொல்வதை உயிரை கொடுத்தாவது செய்யவேண்டிய கடமைக்காக நாங்கள் வீரர்களை பயிற்சிவிக்க வேண்டியுள்ளது. போரே கூடாது என்கிற அகிம்சையை விரும்பும் அரசாங்கங்களை மக்கள்தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்து விட்டால் வீரர்கள் ஏன் போர் வன்முறையில் இறங்கப்போகிறார்கள் என கரியப்பா விரிவாக தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.In democratic country soldiers do not initiate war..Governments என்கிற பதிலை தந்துவிட்டு , கரியப்பா காந்தியிடம் அறிவுரை ஒன்றை தனக்குத் தருமாறு வேண்டினார்.இரண்டுநாட்கள் கழிந்த பின்னர் முழு யூனிபார்ம் உடன் சென்று கரியப்பா காந்திக்கு சல்யூட் செய்தார். அப்போதும் தான் கேட்ட அறிவுரையை நினைவு படுத்தினார்.I ask you , please, to give me the ‘ child’s guide to knowledge’..tell me please, how can I put this over, that is the spirit of non violence to the troops..without endangering their sense of duty to train themselves well professionally as soldiers. I am a child in this. I want your guidance.கரியப்பா காந்தி முன் மிக நேர்மையாக துல்லியமாக தனக்கு வேண்டிய அறிவுரை ஒன்றை கேட்பதை காந்தி நன்றாக உணர்ந்தார். காந்தி எந்தவித தயக்கமும் இல்லாமல் தன் இயல்பான நேர்மை உண்மைத்தன்மையுடன் பதில் அளித்தார்.Yes you are all my children..I am a child too, but happen to be a bigger child. I have given more thought to this question..You asked me to tell you in a tangible concrete form..I am still groping in the dark for the answer. I will find and I will give it to you some day..எந்த இருட்டான சூழலிலும் இருட்டான கேள்விக்கும் வெளிச்சம் தரும் பதிலைக் காணவேண்டும், காணமுடியும் என்கிற நம்பிக்கையை காந்தி தன் உண்மையை நெருங்குதல் என்கிற பயிற்சியில் பெற்றிருந்தார். இதற்கான தேடலை செய்திட அவர் மனம் அலை பாய்ந்திருக்கும். ஆனால் அவரால் ஜன 30 1948க்கு பின்னர் உடல்ரீதியாக இருக்கவியலாமல் போனது. எந்த அகிம்சைக்கு அரசாங்கத்தின் இராணுவ வீரர்களுக்காக பதிலைத் தேடினாரோ , அந்த அகிம்சை வழியில் இறக்கவே அவர் விரும்பினார்.. துப்பாக்கி முனையால் அவர் தம் வாழ்வு வீழ்த்தப்பட்ட நாடகம் அரங்கேறியது.கரியப்பா போன்ற ஜெனரல்கள் காந்தி பேசிய இராணுவ நடைமுறைகளின் திவாலை உணர்ந்ததால் தான் வீரர்கள் போரை விரும்புவதில்லை..அரசாங்கம் விரும்புவதால் கடமை மட்டுமே ஆற்றுகிறார்கள் என காந்தியிடம் வாக்குமூலத்தை தந்தார். காந்தியை சாய்த்த அந்த குண்டு இன்று இராணுவ வலிமையான மஸ்குலர் பாரதம் என சிரித்துக்கொண்டு இருக்கிறது. கரியப்பாவின் கேள்விக்கான பதில் இன்னும் இருட்டில்தானா எவரிடமாவது அதற்கான சிறு காந்தி அகல் தெரிகிறதா.. கண்டால் சொல்லுங்களேன்-பட்டாபிராம்

ராமானுஜம்


நோக்கம் உயர்ந்ததாகவும் தெளிவானதாகவும் இருந்தால் வழிமுறைகள் என்னவாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.

வாராக்கடனை வசூலிப்பது ஒரு பெரிய தொழில். நம் ஊரைப் போலே அமெரிக்காவிலும் கடனை வசூலிக்கும் ஏஜெண்ட்கள் ( Collectors)  ஏஜென்சிகள் ஏராளம். நம் ஊரைப் போன்றே அந்த ஏஜண்ட்களும் கடன் தவணை செலுத்த முடியாதவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவதும் மிரட்டுவதும்தான் பெரும்பாலும் நடக்கும். ஏனெனில் அவர்கள் எவ்வளவு வசூலிக்கிறார்களோ அவ்வளவு கமிஷன் உண்டு. 

அப்படி ஒரு ஏஜெண்டாகச் சேர்ந்தவர்தான் Christina Ann Harbridge.  க்றிஸ்டினாவுக்கு அந்த வழிமுறைகள் ரொம்பவே உறுத்தலாக இருந்தன. ஏன் நாம் வாடிக்கையாளர்களிடம் இரக்கமாகப் பேசி அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு வசூலிக்கக் கூடாது என எண்ணினார் . சில வருடங்களுக்குப் பிறகு தானே ஒரு கடன் வசூலிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

அப்படி தொடங்கிய ஒரு நிறுவனம் தான் Bridgeport Financial Limited. அந்த நிறுவனத்தின் முதல் குறிக்கோளே கடன் பாக்கி வைத்தவர்களிடம் கனிவாகப் பேசி அவர்கள் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  வசூலிக்கும் ஏஜெண்டுகள் எத்தனை அன்பாக நடந்து கொள்கிறார்கள் என பொதுமக்கள் பின்னூட்டம் தருகிறார்களோ அவ்வளவு கமிஷன்.

ஆரம்பத்தில் க்றிஸ்டினாவைப்பார்த்து எல்லாரும் சிரித்தார்கள். இதெல்லாம் பிரயோசனமில்லாத வழிகள் என்றனர்.

ஆனால் ஆச்சரியமான வகையில் அவரது நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்து சாதனை செய்தது. அது மட்டுமல்ல கடன் வாங்கிய நிறுவனங்களே கடன் பாக்கியைச் செலுத்தியவர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்தன. இது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாக இருந்தது.

நோக்கம் தெளிவாக இருந்தால் வழிமுறைகள் தானே பிறக்கும்.

- Simon Sinek எழுதிய Start with Why என்ற நூலில் படித்தது

- டாக்டர் ஜி ராமானுஜம்

உப்பைப் போல,ஒளியைப் போல,தவிர்க்க முடியாதது உன் இருப்பென்றுஅவர்கள் உணரும்போது, நீ அவ்விடம் விட்டு நகர்ந்துவெளியில் கலந்திருப்பாய்!~பிரிம்யா

மனதில் முளைத்த சிறகுகளின் வன்மைக்கு கனவுகளின் திசைகள் போதவில்லை ~ பிரான்சிஸ் கிருபா