Friday 31 March 2023

நம் அனைத்துச் சிக்கல்களையும் இறுதியில் அறிவியல் தொழில்நுட்பத்தால் தீர்த்துவிடலாம் என்று நம்புவது, பில்லி சூனியத்தை நம்புவதைவிடக் கேடு கெட்டது-மெசாரோஸ்

Book-14



#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-7
Book-14
Pages-640

அம்பேத்கரின் வாழ்வும் தத்துவங்களும்
-ஏ.எஸ்.கே

வேறு ஏதேனும் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்திருந்தால் தனக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுக் கொண்டு நிம்மதியாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்திருப்பார். அல்லது நல்லதொரு பதவி கிடைத்தவுடன் நடப்பது நடந்தே தீரும்
எல்லாம் விதி என நினைத்துக் கொண்டு நிம்மதியாய் எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்திருப்பார். 

ஆனால் வரலாற்றில் சில மேதைகள் மட்டுமே தனக்கு பின்னால் வரும் சந்ததியினை நினைத்து பார்ப்பார்கள்.. தனக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணிப் பார்ப்பார்கள் .கீழ் நிலையில் உள்ள மக்களை எப்பாடுபட்டேனும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நினைப்பார்கள். அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களில் ஒருவர் தான் அண்ணல் அம்பேத்கர் இந்த புத்தகத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றையும் அவர் சமூக நலனுக்காக தீண்டாமைக்கெதிராக எவ்வாறெல்லாம் போராடினார் என்பதை விரிவாக அலசும் நூல் தான் இது.

ஜாதி ஏற்பட்டது எப்படி எனும் கட்டுரையில் பொருள் உற்பத்தி சக்திகளுக்கு இடையே வளர்ச்சியின் காரணமாக சமுதாயத்தில் வேலை பிரிவினை ஏற்படுகிறது. வர்ணப் பிரிவினையை பயன்படுத்தி ஜாதிகள் உருவாகிவிட்டன. ஜாதிகளில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமைகள் மனிதனால் ஏற்பட்டவை ஆகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அப்போதைய காங்கிரஸ் கட்சி என்னென்ன செய்வது என்பதை பட்டியலிட்டு உள்ளார்.

அவரின் அரசியல் பிரவேசத்தில் முக்கியமானது சவுதார் குளம் தீண்டப்படாதவர்களால் அசுத்தப்பட்டது என்று கூறி ஜாதி இந்துக்கள் அதை புனிதப்படுத்த பசிச்சாணியையும்,கோமயத்தையும் கலந்து அதில் கரைத்தனர். இதனால் வெகுண்டு எழுந்த அம்பேத்கர் எதிர்த்தார். 1924 தீண்டப்படாதோர் குளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தீர்மானத்தை மகா முனசிபாலிட்டி 1927 ஆகஸ்ட் நாலாம் தேதி ரத்து செய்தது.அம்பேத்கருக்கு விடப்பட்ட சவாலாக இருந்தது. சத்தியாகிரகம் செய்து தீண்டாமை கொள்கையை அறவே ஒலித்திட போராட்டங்களை செய்தார்.

1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை மிகவும் பெருமையாக நினைப்பார். ஏனெனில் இதுவரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை, எதிர்கால சரித்திரத்தை யாரும் வழங்கியது இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் கொடுமைகளை பதிவு செய்யும் வாய்ப்பாக சைமன் கமிஷனர் கலந்து கொண்டார்.
பூனா ஒப்பந்தத்தில் என்னென்ன கோரிக்கைகள் இருந்தன என்பதை விரிவாகவும் தெளிவாகவும் புத்தக அளசி உள்ளது.

அரசியல் அதிகாரத்துக்கு பங்கு இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட சமுதாய முன்னேறுவது கடினம் என்று உணர்ந்த டாக்டர் அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு சுயேட்சை தொழிலாளர் கட்சியை துவக்கினார். அதனை தொடர்ந்து பல போராட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல்வேறு நிலைபாடுகளை எடுத்து போராடியும் உள்ளார்.

அன்றும் சரி இன்றும் சரி ஒரு உண்மையான சமூகம் என்பது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல .மாறாக உடனடியாக குறிப்பான பல்வேறு லட்சியங்களை கொண்ட சில குழுக்களின் தொகுப்பே சமூகமாகும் .ஆனால் இந்து சாதிய முறைக்கும் இந்து அமைப்பு இல்லாத வர்க்க முறைக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த ஒப்பிட்டு மூலம் மறைத்துக்கொண்டு இவ் விசயத்தில் பேசுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை என கூறி விட முடியாது. ஆகவே சிக்கல் மிகப்பெரியது என்பது உண்மை

#ரசித்தது

*கடவுள் தீண்டாமையை ஏற்பாரே ஆனால் அக்கடவுளை கடவுள் என்று நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏதோ பண்டைய காலத்தில் உயர் ஜாதியினர் எதெச்சாதிகார செயலினால் தீண்டாமை ஏற்பட்டது ஒரு வியாதி.இவ் வியாதியை அறவே ஒழிக்க வேண்டும்.

*ஆயிரம் ஆண்டு அடிமையாய் தன்மானம் இழந்து இருப்பதைவிட, அரை நிமிசம் வாழ்வாங்கு வாழ்ந்து அமரர் ஆகலாம்

*தனித்தொகுதி என்பதை தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கவில்லை. இந்திய கிறிஸ்தவர் ஆங்கில இந்திய ஐரோப்பியர் முஸ்லிம்கள் சீக்கியர் ஆகிய அனைவருக்கும் அளித்தார் இருக்க ஏன் காந்தி மட்டும் பிரித்து இந்த நிலைமை எடுத்துள்ளார் எனக் கூறியிருக்கிறார்.

*புத்தர் தலைவிதியையோ பிறவியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதையும் எள்ளளவும் நம்பவில்லை. மாறாக இவைகளை எதிர்த்து வந்தார்.

*எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று முறைப்படுத்தப்பட்ட கூற்றுகளே மதமும் நீதிநெறியும் ஆகும். வாழ்க்கை போராட்டத்தில் தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் ஆன பற்கள் நகங்கள் கொம்புகள் கூச்சல்கள் போன்ற கருவிகளை போலவே நாம் நீதிநெறி விளக்கத்தை கருத வேண்டும்

தீண்டாமை வெளிச்சம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசியல் கட்சிகள் எவ்வாறெல்லாம் உதவி செய்தது எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பது பற்றி எல்லாம் விரிவாக கூறியுள்ளார் மனசு உறுதியில் எவ்வாறெல்லாம் ஜாதிகளை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தாழ்த்தப்பட்டவர்களை எவ்வாறு இழிவாக நடத்துனர் என்பது குறித்து ஒவ்வொரு புதிய தகவல்களையும் அவர் முன்மொழிகிறார். நூலின் பிக்சர் கையில் அவர் ஆற்றிய உரைகளையும் தொகுத்து கூறியுள்ளனர்.

இறுதி காலங்களில் தன்னை துன்புறுத்துவதும் மருத்துவ செய்வதும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்னும் முன்னேற்ற முடியவில்லை என்று தன் இயலாமையை வெளிப்படுத்தி உள்ளார் அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போய்விட்டது.. எனக்கு பின்னல் இந்த இயக்கத்தினை பெறுபவற்று தொடர்ந்து நடத்திய தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Book-13

30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-7
Book-13
Pages-482

பெரியாரியம்-சமுதாயம்
-கி.வீரமணி

எனக்கு தெரிய நீண்ட நாள் நான் பார்த்த வரையிலே இந்தியாவிலேயே மேற்கோள் காட்டாமல் தன்னுடைய கருத்து என்ன என்று சொல்லக்கூடிய துணிச்சல் உள்ள ஒரே ஒரு தலைவர் உண்டு என்றால் அது பெரியார் மட்டுமே 

-ஏ எஸ் பி ஐயர்

கி. வீரமணியின் புத்தகங்கள் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது அவரின் வாழ்வியல் சிந்தனைகள் தான்.. எண்ணற்ற புத்தகங்களை படித்து கருத்தாலும், விவாதத்தாலும் நல்ல பல அறிய கருத்துக்களை கொடுத்திருப்பார். அந்த வகையில் தற்போது வாசித்து முடித்த புத்தகம்தான் பெரியாரியம் சமுதாயம் என்ற நூல். பெரியார் குறித்த அவர் சிந்தனை குறித்து அவர் புரிந்து கொண்ட விஷயங்களை உரை கோர்வை மூலம் நமக்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் கொடுத்திருக்கிறார் .

இப்பொழுது எல்லாம் கட்சியை ஆரம்பிப்பது என்றால் கட்சியை ஒருவர் நீக்கிவிட்டால் கட்சி ஆரம்பிப்பது என்று காண்கிறோம். ஆனால் அடிப்படைக் கொள்கைகள்
(Principles)பாலிசி (policy)
என்றால் அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த கையாளப்படுகின்ற முறைகள் செயல் திட்டங்கள். எனவே ஒரு இயக்கமாக இருந்தாலும் அல்லது கொள்கை வழி நடத்தக்கூடிய அமைப்பாக இருந்தாலும் அந்த அடிப்படை கொள்கையில் இருந்து விட்டுக் கொடுப்பதோ சமாதானப்படுத்திக் கொள்வது கிடையாது என்று பெரியார் வழியே இந்த புத்தகத்தின் முன்னுரையிலேயே நமக்கு சுட்டிக்காட்டி இருப்பார்.

42 கட்டுரைகளில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய பெரியாரின் கொள்கைகளை சுட்டிக்காட்டி ஒவ்வொரு உரையிலும் நமக்கு சொல்லி இருப்பார். பெரியாரியல் என்பது தன்னுடைய அறிவை உலகத்தார் மதிக்க வேண்டும் என்று சொல்வதற்கோ, அறிவாளிகள் பலர் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கோ அல்ல. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்கிற மனிதப்பற்று மானுட பற்று தான் அவரின் சிந்தனையின் அடித்தளமாக அமைந்துள்ளது என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய தத்துவம் உலகம் ஒப்புக்கொண்டதே ஆகும். மனித வாழ்வின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் காரண காரியத்தை மனித ஜீவன் தேடுகிறது. இயற்கையையே ஆராய தடைப்பட்டாகிவிட்டது. எந்த காரியம் ஆனாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தப்பா என்பதை அந்த காரண காரியம் அறிவுக்கு ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு. தவறு என்றால் கைவிட்டு விட வேண்டும். சரிதான் என்று சொன்னால் உலகமே எதிர்த்து நின்றாலும் முன்னாள் ஒரு அடி எடுத்து வைத்து போக வேண்டுமே தவிர பின்னால் வரவேண்டிய அவசியமே கிடையாது என்று சுயமரியாதை இயக்க தத்துவத்தை சென்னையில் உரையாற்றிய சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

பெண்ணுரிமை குறித்த உரையின் போது மேல் ஜாதிக்காரன் எப்படி கீழ் ஜாதி காரனை அடிமையாக்கினானோ அதுபோல பெண்ணை அடிமையாக்கி விட்டு ஆண் என்பவன் எஜமானன் ஆகி விடுகிறான். தனது குடியரசு இதழில் 1928 -29 ஆம் ஆண்டுகளில் பல்வேறு கட்டுரைகள் பெண்ணியம் சார்ந்து எழுதியுள்ளார். சுயமரியாதை திருமணங்களை வலியுறுத்தியுள்ளார். கற்புக்கரசி என்று சொல்லுகிற மாதிரி எங்காவது கற்புக்கரசன் என்ற வார்த்தையை சொல்லி இருக்கிறானா என்று கேட்பார். விதவைகள் மறுமணம் குறித்து பல்வேறு செய்திகளையும் கலந்து கொண்ட நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

பெண்கள் கிராப்பு வைத்துக் கொள்ள வேண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே இல்லாமல் ஒரே சீருடையாக இருக்க வேண்டும். பெண்களும் பேண்ட்  வேண்டும். பொது சமையல் கூடங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண் உரிமைக்காக குரல் எழுப்பியவர் பெரியாரே.

ஜிடி நாயுடுவுக்கு உரிய மரியாதை தனது கண்டுபிடிப்புகளுக்கு தரவில்லை என்று ஒரு பொதுக்கூட்டம் கூட்டி அறிஞர் பெருமக்களை அழைத்து அந்தக் கூட்டத்திலேயே தான் கண்டுபிடித்த பொருட்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் .ஆனால் பெரியார் இந்த கோபம் எல்லாம் கருவிகளிடம் காட்டாமல் அதிகாரத்தின் பக்கம் திரும்பி இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆணித்தரமான கருத்தை வலியுறுத்தி சொல்லுகிறார்.

அண்ணா அவர்கள் மே தின உரைகளில் தெளிவாக ஒன்றை சொல்லுவார் கஷ்டப்பட்டு போராடி தொழிலாளி பட்டினி கிடந்து கடைசியில் கூலி உயர்வு பெற்று போனஸ் கிடைத்தால் சாமி தான் கொடுத்தது என்கிறார்கள். சாமி வரமாட்டார் என்றால் மற்றவர் வழியாக புகுந்து வருவார் என்று சொல்லுகிறார்கள் .அந்த அளவுக்கு அவர்களுடைய மூளையிலே விளங்கு போட்டுவிட்டு சாயம் ஏற்றப்பட்டு விட்டது என்பது உண்மைதான்.

#ரசித்தது

*ஒரு கட்சியில் இருந்து விலகி விட்டார் என்றால
 கவலைப்படாதீர்கள். குடியிருந்த வீட்டுக்கு கொள்ளி வைக்க நினைப்பவர்கள் வெளியேறுகிறார்கள் என்று மகிழ்ச்சியடைய வேண்டும்.

*பட்டினி கிடந்தால் உனக்கு மோட்சத்தில் இடம் கிடைக்கும் என்று சொல்லி வைத்து விட்டான். உலகம் பொய்யானது மோட்சம் தான் உண்மையான வாழ்க்கை என்று சொல்லி நம் ஆட்களை ஏமாற்றினார்கள். உலக வாழ்க்கை சிற்றின்பம் இதைப் பற்றி கவலைப்படாதே பேரின்பம் என்ற மோட்சத்திற்கு போ என்கிறான் இதையெல்லாம் நம்ப வேண்டாம்.

*மனிதனுக்கு சரீர உழைப்பு தேவை தான். ஆனால் அது உடல் நலத்துக்கு தான் .ஆனால் கஷ்டப்பட்டு எலும்பு முறிய வாழ்நாள் பூராவும் உழைத்தாலும் பலனை உழைத்தவன் அனுபவிக்க முடியாது
 
*மனுதர்மத்தில் சூத்திரனுக்கு கூலி கொடுத்தாலும் அல்லது கொடுக்காமலும் வேலை வாங்கலாம். ஏனென்றால் அவன் பிறவிலேயே அடிமை. அப்படி கூலி கொடுக்கும்போது எவ்வளவு சாதாரண உணவு கொடுக்க வேண்டுமோ அதுதான் கொடுக்க வேண்டும். கூலியை தாராளமாக கொடுக்கக் கூடாது.

*பிச்சை போடாவிட்டாலும் நாயை பிடித்து கட்டு (பிச்சை எடுக்க ஒருவன் போனான் வீட்டுக்காரர் நாயே அவிழ்த்து விட்டு விட்டான் .அதற்கு பிச்சைக்காரன் சொன்னான்.. ஐயா பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயே பிடித்துக் கட்டினாலே  பிச்சை போடுவதை விட மேலாகும் என்று சொன்னானாம்.

*எப்பொழுது நமக்கு அரசியல் பயன்படும் என்று சொன்னால் எப்பொழுது இந்த மக்கள் தெளிவடைகிறார்களோ, எப்பொழுது நமது இனத்தின் பலம் கட்டுப்பாடு ஒற்றுமை இவைகளை பற்றி என்றைக்கு உணர்கிறார்களோ அன்றைக்கு தான் அரசியல் பயன் அளிக்கும்.

இது போல் எண்ணற்ற கருத்து குவியல்களை பெரியார் எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார் என்பதை வீரமணி அவர்கள் ஒவ்வொரு கட்டுரைகளிலும் முறைகளிலும் முறை கோர்வையாகவும் பயன்படுத்தி நமக்கு மிக அழகாக கொடுத்திருப்பார் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

பெரிய துயரங்களுக்குப் பின்பெரிய மீட்பினை அடைகிறோம்'-மனுஷ்ய புத்திரன்

Thursday 30 March 2023

Book 12


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-6
Book-12
Pages-312

கருப்பு வெள்ளை இந்தியா
-முகில்

நவீன வரலாற்றை வாசிப்பவர்களுக்கு மிக எளிமையாகவும் சுவையாகவும் புதிதாகவும் தரக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம். மதன், மருதன், ஆர்.முத்துக்குமார் போன்றவர்களின் வரிசையில் வைத்து பாராட்டப்பட வேண்டியவர் முகில் அவர்கள். இந்த புத்தகத்தில் வந்த 'ரயில் விட்ட கதை' கடந்த ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வந்த போது படித்தேன். அந்த கட்டுரை தலைப்பில் அமைந்த புத்தகம் இன்னும் கூடுதல் தகவல்களுடன் ரயில் குறித்த பல சுவையான சம்பவங்களையும், இப்புத்தகம் கூறுவதால் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி விட்டேன். இப்போதுதான் படித்து முடித்தேன்.

ரயில் விடுவதற்கான மூல காரணம் என்பது தொழில் புரட்சியின் பலனாக பிரிட்டனின் பருத்தி தேவையை பூர்த்தி செய்ய சந்தைகளை உருவாக்குவதற்காக என்பது புதிய தகவலா இருந்தது. 1825 ஆம் ஆண்டில் தான் பிரிட்டனின் முதல் ரயில் ஓட தொடங்கியது இது உலகின் முதல் பயணிகள் ரயிலும் கூட. இந்தியாவில் முதன் முதலில் ஹவுரா-ஹுக்ளி மற்றும் தானே பம்பாய் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் முதலில் ரயில் விட்ட பெருமை மும்பை தானே இடையே 1853 ஏப்ரல் 16 அன்று துவங்கப்பட்டது. அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 14 ரயில் பெட்டிகளுடன் 400 விருந்தினர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வாத்தியங்கள் ஒலிக்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி கிளம்பியது என்ற செய்தியை படிக்கும் போதே அந்த முழு கட்டுரையும் படிக்க வேண்டிய ஆவலை அதை தூண்டியது.

இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன அல்ல அவை பல்வேறு தனியாரால் கட்டமைக்கப்பட்டது என்ற செய்தியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதன் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ரயிலில் வேல்ஸ் இளவரசர் பயணம் என்னும் கட்டுரையில் 1875 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் இந்திய சுற்றுப்பயணத்தின் போது நிகழ்ந்த சம்பவங்களை மிகவும் சுவையாக இதில் சொல்லி இருக்கிறார். ரயில் நிலையத்தில் தென்னிந்திய ரயில்வேயின் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவையை தன் கரங்களால் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயணித்து அவருக்கு வழி எங்கும் உற்சாக வரவேற்புகள். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் எட்டயபுரம் ஜமீன்தாரின் மதிய விருந்து.. மாலை 5 மணிக்கு மதுரையில் தங்கியிருந்தது. அங்கு கட்டி முடிக்கப்பட்ட திருமலை நாயக்கர் மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்த்துவிட்டு அங்கிருந்து திருச்சி கோவிலுக்கு சென்று..பின் மெட்ராஸில் ஆறு நாட்கள் தங்கி இருந்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னை ராயபுரம் வரை சென்ற சொகுசு ரயில் தான் தமிழகத்தில் நீண்ட தூரத்துக்கு ஓடிய முதல் ரயிலாக சொல்கிறார் ஆசிரியர்.

சிம்லா எவ்வாறு இந்தியாவின் கோடைகால தலைநகராக இருந்தது என்பதையும், சிம்லாவின் வரலாற்றையும் மிகவும் சுவாரசியமாக வரலாற்று பின்னணியுடன் நமக்கு தந்திருக்கிறார். இறுதியில் குரங்குகளின் பெருக்கம் அதிகரித்ததால்.. என்ன செய்வது என்று தெரியாமல் குரங்குகளையும் கொல்ல முடியாமல், குரங்குகளை ஏற்றுமதி செய்யவும் முடியாமல், பிரிட்டிஷார் தவித்ததை இந்த கட்டுரையில் நாம் காண முடிகிறது .சிம்லாவில் நீடித்து வாழ்வதற்கான உரிமை என்றுமே மனிதர்களை விட குரங்குகளுக்கு அதிகம். ஏனென்றால் அவையே நம்மை விட பழங்குடிகள் என்று ஆசிரியரின் டச் இதில் உணர முடிகிறது.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா என்ற பாடலுக்கு உண்மையானவர்கள் யார் எனில் பங்காவாலாக்கள் தான் .பங்கா என்ற இந்துஸ்தானி சொல்லுக்கு சிறகு என்று பொருள். பறவை சிறகடிக்கும் போது காற்று எழும் ..அதுபோல விசிறி விடும் வேலைக்காரர்களை பிரிட்டிஷார்கள் தம் ஆவணக்களில் பங்காவாலா என்று குறிப்பிடத் தொடங்கினார்கள். வெயில் காலத்தில் விசிறி விடுவதுக்கு என்று ஆட்கள் பலரை நியமித்திருந்தார்கள். அவர்களின் பணியே காலையும் மாலையும் விசிறி விட வேண்டும் .விசிறி என்றால் கைவிசிறியல்ல. ஒரு அறை அகலத்திற்கு இருக்கும். பட்டுத்துணியால் இருக்கும். கயிற்றை இழுத்து இழுத்து காற்றை வழங்க வேண்டும் .ஒரு கட்டத்தில் அந்தரங்கமாய் பேசுவதை ஒட்டு கேட்டு விடுவார்களோ என்ற நினைத்து ஒரு ஓட்டை போட்டு சுவருக்கு அந்தபக்கம் இருந்து கயிற்றை இழுத்து காற்று வர வைக்க வேண்டும். இவர்களின் உண்மையான வரலாற்றை படிக்கும் போது நிச்சயம் துயர் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த புத்தகத்தில் நான் அறிந்து கொண்ட புதிய செய்தியாக இது உள்ளது.

மகாராஜாக்கள் தன்னை எவ்வாறெல்லாம் ஒப்பனை செய்து கொண்டனர். எவ்வளவு அழகாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். விதவிதமான ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டனர் என்பதை புகைப்படம் வாயிலாக பற்றி சொல்லும் போதே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது

#ரசித்தது

*பிரிட்டிஷ் ரயில்வேயில் நான்கு வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பு ஆடம்பரமாகவும் இரண்டாம் வகுப்பில் சில சொகுசுவசதிகள் மட்டும் மெத்தை போல் வசதியான இருக்கை உட்பட இருந்தன. மூன்றாம் வகுப்பு சாதாரண இந்தியர்களுக்கானவை அந்த பெட்டிகள் மரத்தால் செய்யப்பட்டவை. ஜன்னல் கம்பிகள் கூட இருக்காது. நான்காம் வகுப்பில் மரபெஞ்சுகள் கிடையாது. வெறும் பெட்டி மட்டுமே உடலை திணித்துக் கொண்டு நிற்க வேண்டும். இந்த நான்காம் வகுப்பு பெட்டிகளுக்கு ஆங்கிலேயர் வைத்திருந்த பெயர் cattle classes.

*1950 ஆம் ஆண்டில் இந்தியாவில் 8120 நீராவி என்ஜின்கள், 72 எலக்ட்ரிக் என்ஜின்கள், 17 டீசல் இன்ஜின்கள் மட்டும் நம் வசம் இருந்தன .அதிலும் பெரும்பாலான எஞ்சின்கள் சுமார் 10 ரயில் பெட்டிகள் வரைய இழுக்கும் திறன் கொண்டவை. பிரிவினைக்கு முன்பு 65 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு ரயில் பாதைகள் இருந்தன

*கல்கத்தாவில் ஒரு கடையில் புதிதாக குலோப் ஜாமுன் இனிப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதனை சுவைத்துப் பார்த்த கானிங்கின் மனைவி அகம் மகிழ்ந்து இதன் பெயர் என்ன என்று கேட்டார். பெயர் வைக்கவில்லை என்று சொன்னதும் உங்கள் பெயரை வைத்துவிடலாம் என்று சந்திர நாக் சொல்ல லேடி கானிங் என்று அந்த இனிப்புக்கு பெயர் வைக்கப்பட்டது. இன்றளவும் லெடிகேனி என்று நிலைபெற்றும் இருக்கிறது.

*1761 ஆண்டில் ஜாட் இனத்தவர்கள் தாஜ்மஹாலில் பொருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட வெள்ளிக் கதவுகளை கழட்டி எடுத்துக்கொண்டு போனார்கள். அதன் அன்றைய மதிப்பு ஒன்றேகால் லட்சத்திற்கும் மேல்.

இந்த நூலில் இடம் பெற்ற பத்து கட்டுரைகளில் நான் படித்து ரசித்த சிலவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்து உள்ளேன். ஆனால் ஒவ்வொரு கட்டுரைகளுக்கு பின்னாலும் இடம்பெற்றிருக்கும் சுவாரசியமான தகவல்களும் புகைப்படங்களும் கொட்டிக் கிடக்கும் வரலாறுகளும் ஏராளம். வரலாற்றை படிக்க நினைப்பவர்களும் ,புதிதாக தெரிந்து கொள்ள வாசிப்பவர்களும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் தான் இந்த ஆண்டு வெளிவந்துள்ள கருப்பு வெள்ளை இந்தியா 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

செந்தில் ஜகந்நாதன்


வெறுமையை நிரப்ப வல்ல சொற்களை எப்போதும் கைவசம்  வைத்திருக்கும் ஒரு மனிதனையாவது சம்பாதித்து வைத்துக்கொள்ளுங்கள். 
இந்த ஆயுளில்  
நீங்கள் ஈட்டிய மிகப்பெரும் சொத்து அதுவாகத்தான் இருக்கும்...!!!

-

Wednesday 29 March 2023

என்.சொக்கன்


எங்கள் நிறுவனத்தின் CEO சசான் (Sasan K. Goodarzi) இந்தியா வந்துள்ளார். இந்திய ஊழியர்கள் அனைவரையும் அவர் சந்தித்துப் பேசுகிற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பிரமாண்டமான இந்த நிகழ்ச்சியில், சசானுடைய தனித்துவமான அடையாளங்களாகிய மகிழ்ச்சிப் புன்னகையையும் சுறுசுறுப்பான மேடை ஆளுமையையும் முதன்முறையாக நேரில் பார்த்து ரசித்தேன். ஊழியர்களுடைய கேள்விகளுக்கு அக்கறை கலந்த பொறுப்புடனும், ஆங்காங்கு சரியான அளவில் தூவிய நகைச்சுவை உணர்ச்சியுடனும் சிறப்பாகப் பதில் சொன்னார்.

இன்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று: உங்களுக்கு மோசமான நாட்கள் வருவதுண்டா? ஆம் எனில், அந்த நாட்களின் மனநிலையை எப்படிச் சரிசெய்துகொள்வீர்கள்? நாங்களெல்லாம் ஏதாவது சாப்பிடுவோம், படம் பார்ப்போம்... நீங்களும் அதுபோல் ஏதாவது செய்வீர்களா?

இதற்கு அவர் சொன்ன பதில் அட்டகாசமானது. அதைச் சுருக்கமாக என் நினைவிலிருந்து சொல்கிறேன்:

* எல்லா மனிதர்களுக்கும் மோசமான நாட்கள் வரும், எனக்கும்தான். அலுவலகத்தில், வீட்டில் என்று எங்காவது ஏதாவது சொதப்பிவிடும்.

* அதுபோன்ற நேரங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதைவிட, அந்த நேரங்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் பெரும்பாலும் மோசமான நாட்கள் வரவே கூடாது என்று நினைக்கிறோம். அந்த எண்ணம், எதிர்பார்ப்பால் வருகிற மன அழுத்தத்தால்தான் கண்டதைச் சாப்பிடுவது, குடிப்பது என்று சமாளிக்கும் வழிகள் (Coping Mechanisms) தேவைப்படுகின்றன. மாறாக, எல்லா நாட்களும் சிறப்பாகதான் இருக்கவேண்டும், எதுவும் சொதப்பக்கூடாது என்கிற மிகையான எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளாதீர்கள், மோசமான நாட்கள் வருவதும் இயல்புதான் என்ற மனநிலையுடன் இருங்கள். அப்போது, அதுவும் ஒரு நாள், அதுவும் ஓர் அனுபவம் என்ற அளவில் கடந்து செல்வீர்கள். அது திருத்தவேண்டிய, சரிசெய்யவேண்டிய ஒன்று என்று நினைக்கமாட்டீர்கள். 'சரியில்லையா? பரவாயில்லை, நாளைக்குப் பார்த்துக்கலாம்' என்று நிம்மதியாக வேறு வேலையைப் பார்ப்பீர்கள்.

* நான் என்னுடைய ஆற்றலை எப்படிச் செலவுசெய்யவேண்டும் என்பதில் மிகுந்த ஒழுக்கம் கொண்டவன். அதனால், கவலைப்படுவது, புலம்புவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றுக்கு என்னுடைய ஆற்றலைத் தரக்கூட மாட்டேன். என் ஆற்றலுக்கு வேறு மேம்பட்ட பயன்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். அதனால், கெட்டவற்றை Just கடந்து செல்ல அனுமதித்துவிடுவேன், உணர்ச்சிவயப்படமாட்டேன்.

* முக்கியமாக, ஓர் இடத்தில் உள்ள உணர்வுகளை இன்னோர் இடத்தில் கொட்டமாட்டேன். அதாவது, ஒவ்வொரு சந்திப்பையும், பணியையும் தனித்தனியாகப் பிரித்து Compartmentalize செய்துவிடுவேன். எடுத்துக்காட்டாக, இவருடன் உள்ள கூட்டத்தில் எனக்கு ஓர் எரிச்சல் வருகிறது என்றால் அடுத்தவரைச் சந்திக்கும்போது அந்த எரிச்சலைக் காண்பிக்கமாட்டேன். ஏனெனில், அந்த அடுத்தவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவருக்கு என்னுடைய மிகச் சிறந்த முகத்தை, கவனத்தை, சிந்தனையைக் கொடுக்கவேண்டிய கடமை எனக்கு உண்டு.

-என்.சொக்கன்

Tuesday 28 March 2023

ஏனோ உண்மையை அளவிடும் போது, 'எவ்வளவு தூரம் உண்மை' எனக் கேட்கிறோம்-பாதசாரி

Book 10


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-4
Book-10
Pages-287

போராட்டங்களின் கதை 
-அ முத்துகிருஷ்ணன்

நிச்சயமாக ஜனநாயகம் நமக்கு அறவழியில் போராடும் உரிமைகளை வழங்குகிறது.கடந்த பத்து ஆண்டுகளாக அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களை எதிரிகளாகப் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது

போராட்டங்கள் என்பது வீண் வேலை.. போராட்டங்கள் என்பது ஒரு வன்முறை.. என்பது போன்ற பல கருத்துக்கள் பேசுபவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை ஒரு முறையேனும் படித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் உலகெங்கும் எளிய மக்களின் உரிமை குரலை பெற்று தந்தது இந்த வகையான போராட்ட வடிவங்களும் போராளிகளும் தான். இவர்களை புறந்தள்ளிவிட்டு நாம் போராட்டம் வீண் வேலை என்பதை வெறுமனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஜூனியர் விகடனில் தொடராய் வந்ததும்.. வாசித்த போது ஒவ்வொரு வாரமும் புதுப்புது மனிதர்களையும் புதுப்புது செய்திகளையும் நமக்கு அறிமுகப்படுத்தியது. புத்தகமாய் படிக்கும் போது இன்னும் ஒவ்வொரு போராளிகளையும் உள்வாங்கிக் கொள்வது எளிதாக இருக்கிறது.

1730 களில் ராஜஸ்தான் மன்னர் புதிய அரண்மனை கட்டுவதற்காக காட்டிலுள்ள மரங்களை வெட்ட வரும்போது அங்கிருந்து அமிர்தா எனும் பெண்மணியின் தலைமையில் தலைமையில் பெண்கள் மரங்களை கட்டித் தழுவிய படி நிற்கிறார்கள். அப்போது அமிர்தா தேவி உட்பட 260 பெண்களை வெட்டி சாய்கிறார் மன்னர். பின் திட்டத்தை கைவிடுகிறார். மீண்டும் மரங்களை வெட்ட முனையும்போது 1973 ஆம் ஆண்டு சாந்தி பிரசாத் பட் காந்திய இயக்க  எதிர்ப்பின் காரணமாக சிப்கோ ஒரு இயக்கமாக வளர்ந்தது. அது குறித்த வரலாறு இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் உள்ளது.

நெல்சன் மண்டேலா ,காந்தியின் உப்பு சத்தியாகிரகம் குறித்த வரலாறு, வால் ஸ்ட்ரீட் பொருளாதாரம் கொள்கை யாருக்கு எதிரானவை நெவாடா பாலைவன அனுபவம் என்னும்  இயக்கம்
மெர்லின் சுவர் இடிப்பு அமேசானின் கருப்பு வெள்ளை நாங்கள் ரோபோக்கள் அல்ல ஈராக் எதிர்ப்பு பங்காளி மாதா வைக்கம் எதிர்ப்பு மற்றும் பாலினத்தவரின் வரலாற்று போர் என்பது போன்ற கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன மேலும் பெட்டி செய்திகளில் ஒவ்வொரு தளத்தின் வீரர்களும் அவர்களின் வரலாற்றினை அறிய முடிகிறது

அதனோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புத்தகத்தை ஒரு ஆளுமைகளையும் அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த வகையில் தமிழ்நாடு  சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டுகள் வரலாறு என்ற புத்தகத்தை எழுதியவர் அருணனின் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.

நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விஷயங்களும் முந்தைய தலைமுறையின் இடையறாத குரலும் கோரிக்கைகளும் ஆகும். அது நிறைவேற்ற அவர்கள் எடுத்துக் கொண்ட கால அவகாசமும் இடையராத முயற்சிகளே இந்த நிலையில் நாம் தற்போது சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர்களின் உரிமைக் குரலால் ஜனநாயகத்தின் தன்மை நிலை நாட்டப்படுகிறது. இயற்கை சுரண்டல் சூழலுக்கு எதிரான மனப்போக்கினை தட்டி கேட்பது,
தன்னலம் கருதாது உழைத்த மனிதர்களை எண்ணிப்பார்ப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. 44 அத்தியாயங்களில்  நாம் வரலாறு தரும் பாடத்தை கற்காமல் மறப்போமேயானால் அதை மீண்டும் நினைவூட்டும்  என்பதே வரலாற்று உண்மை

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Book _9


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-4
Book-9
Pages-800

வேள்பாரி பாகம் 2 
-சுவெங்கடேசன்

மூவேந்தர்களும் பாரி மீது படையெடுக்க முடிவு செய்கின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது பாரி மீதான தாக்குதல் உணர்த்தியது. முன்னேறிச் செல்லும் படைகள் அனைத்தையும் மலையிலிருந்து வெளிப்படும் வீரர்களின் அம்பும் ஈட்டியும் அது நிச்சயம் முடியாது என்பதை உணர்த்தியது. ஆதலால் மூவேந்தர்களும் இணைந்து பாரியின் மீது போர் தொடுப்பது என முடிவு எடுத்தனர். போருக்கான  பாரியின் தூதுவராக கபிலர் செயல்பட்டார் .

போருக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. போருக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அடுத்து வரும் 500 பக்கங்களும் போர்க்களத்தில் நின்று படிக்கிறோமா அல்லது வீட்டில் இருந்து படிக்கிறோமா என்ற உணர்வை தரும் அளவுக்கு சுவாரசியம். வேகம் வேகம் போர்க்களங்களின் அத்தனை நுணுக்கங்களையும் பறம்பு வீரர்கள் அறிந்திருந்து ஆட்கள் குறைவாக இருந்தாலும் ஆட்கள் அதிகம் இருக்கும் மூவேந்தர்களின் படைகளையும் சிதற செய்வதை ஒவ்வொரு காட்சிகளிலும் வெளிப்பட்டது. 

காற்றின் திசையில் அம்பெய்வது பூச்சிகளை ஏவி விடுவது, காட்டெருமைகளை இறக்கி விடுவது, சிற்றியோர்களுக்கு துன்பம் வரும் என்பதால் போர்க்களத்தில் யானைகளை பயன்படுத்தாது இருப்பது, அட்டைப் பூச்சிகளை பரப்புவது, கடும் வெயிலில் எதிரிகளை நிலை தடுமாற வைப்பது என ஒவ்வொரு அத்தியாயத்திலும் போரின் உத்திகள் இருந்தன. அனுபவமே சிறந்த ஆசான் என்பார்கள் இவர்கள் போர் அனுபவம் இல்லை என்றாலும் காட்டின் அனுபவத்தின் மூலம் நன்கு வெளிப்படுத்தியிருப்பார்கள்

சமவெளி மனிதர்கள் பயன்படுத்தும் வில்லின் ஆற்றலை விட மலை மக்கள் பயன்படுத்தும் ஆற்றல் மிக வலிமையானது. போர் தொடங்குவதற்கான முந்தைய நாளில் நீலன் என்பவரை கவர்ந்து சென்று விடுகிறார்கள் படையினர். அந்த நீலனை மீட்கும் போராட்டமே இந்த போர்க்களமாய் மாறி விடுகிறது. சிறப்பு செடிகளை துடைத்து அம்பை எய்தவுடன் குதிரைகள் கீழே விழுவதும் வீரர்களின் உடம்பில் பட்டும் தெறிக்கவில்லை சதையோடு பிய்ந்து வருவதும் எதிரிகளை நிலைகுலைய செய்கிறது. இறுதியில் நீலன் மீட்கப்பட்டானா? மூவேந்தர்களின் படை என்ன ஆனது? பாரியன் மதியூகமும், குறைவான ஆட்கள் உள்ள பறம்பு படையும் என்ன ஆனது? என்பதை புத்தகம் சுவாரசியமாய் விவரிக்கிறது

தேக்கனின் வீரமும் மற்றுமுள்ள வீரர்களின் வீரமும் இறுதியில் பாரியன் போர்க்களையும் புத்தகத்தின் பெருமைகளை பேசும். ஒவ்வொரு பத்தியிலும் வாழ்வினை பற்றியும் தத்துவத்தை பற்றியும் போர்க்களைகளை பற்றியும் எதிரிகளின் அசைவினை பற்றியும் மதியுகத்தால் வெல்ல வேண்டும் நிலையும் ..காட்டினை எக்காரணம் கொண்டும் அந்நியர்களை பிரவேசிக்க கூடாது, அது நம் சொத்து என எண்ண வைக்கும் பழங்குடி மக்களின் இனப் போராட்டமும் நம்மை வியக்க வைக்கிறது .இறுதியில் சுகமாக முடிந்த கொற்றவை திருவிழாவோடு நாமும் பெருமிதத்துடன் புத்தகத்தினை மூடி வைத்தேன்

#ரசித்தவை

*போர் என்பது உத்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அன்று. கடைசி கணம் வரை அந்த உத்தியை செயல்படுத்தும் புறச்சூழல் நம்முடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும்

*ஒரு யானையின் மீது ஏற்றப்படும் ஆயுதங்களை கொண்டு 100 வீரர்களை கொண்ட படைப்பிரிவு நாள் முழுவதும் சண்டையிடலாம். அவ்வாறு ஆயுதங்களை ஏற்றி செல்ல மட்டும் 100 யானைகள் நிற்கின்றன

*நஞ்சை சேகரித்தல் எளிதன்று .மருத்துவ அறிவு எங்கு செழிப்பற்று இருக்கிறதோ அங்கு தான் நஞ்சை கையாளும் முறையும் சேகரிக்கும் முறையும் சிறப்புற்று இருக்கும்

*எதிரி படையினர் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்பது மாறி.. பேராற்றல் கொண்டவர்கள் என ஆள்மனம் நம்பிவிடும். நீரை நிலம் விழுங்குவது போல தனது வீரத்தை தானே விழுங்கிவற்றச் செய்யும்.

*மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை

*ஒரு வேளை காற்றை எதிர்த்து கூட மேகம் பயணிக்கலாம் .ஆனால் வானத்தை விட்டு விலகிச் செல்ல கதிரவனுக்கு வழி ஏதுமில்லை

*ஒருவனின் செல்வத்தை கவர்ந்திட போரிட்டால் அந்த போரில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால் ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரை பாறை கொண்டு நசுக்க முடியாது

*நம்பிக்கை இருக்கும் வரை விதிகளைப் பின்பற்ற அனைவரும் பழகியுள்ளனர். ஆனால் அந்த நம்பிக்கை தகரும்போது விதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை

*வாளுக்கு உறைபோலத்தான் போருக்கு விதிகளும்.

*அதிகாரத்தின் சொல்லை மறுக்கும் ஆற்றலை இழப்பதுதான் கேடுற்ற காலத்தின் அடையாளம்

*எந்தத் தற்செயலும் தன்னியல்பில் நடப்பதில்லை. காரணஙகள் வழியே தான் காரியங்கள நிகழ்கின்றன

*போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது

*தீர்மானம் என்பது, முன் திட்டமிடல் மட்டும்தான். எந்த ஒரு முன் திட்டமுடலும் வாய்ப்புகளை மையப்படுத்தியே வடிவமைக்கப்படுகிறது

*விதிகளை கைவிடுவது பற்றியே சிந்திக்கிறாய்.. விதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை பற்றி நீ சிந்தி

*வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும் தான் போரை விரும்புகிறார்கள். 
வாழ நினைப்பவர்கள் 
வேறு வழியின்றி 
அந்தப் போரை எதிர்கொள்கின்றனர் 

*மனம் முடிவெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் தலை மட்டும் சம்மதிக்க ஆரம்பித்தது

*தூண்டில் முள்ளை வீசுவதற்கும் கொலை வாளை வீசுவதற்கும் வேறுபாடு தெரியாதவன் முட்டாள்

*போர்க்களத்தில் இரண்டே செயல்கள் தான். ஒன்று தாக்கி அழிப்பது இன்னொன்று தப்பிப் பிழைப்பது

*செயல்களின் வேகத்தைச்சொல் நிறுத்தும். பின்னர்தான் தெரியும், அதுநிறுத்துவதற்காகச் சொல்லப்பட்ட தல்ல; செயல்களின் போதாமையை நீக்க சொல்லப்பட்டதென்று

*இழப்பையும் வலியையும் கண்ணீரையும் கடந்தால் மட்டுமே மேடேறி வந்து நன்றி சொல்ல முடியும். இக்காடு காக்கப்பட்டது

நல்லதொரு வாசிப்பு அனுபவமாய் இருந்தது தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை-சு.வெ(வேள்பாரி)

Monday 27 March 2023

Book-7


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-3
Book-7
Pages:879

நான் கண்ட காந்தி
-லூயி ஃபிசர்

காந்தி குறித்து பல்வேறு புத்தகங்கள் தமிழில் வெளிவந்திருந்தாலும் லூயி ஃபிஷர் எழுதிய நான் கண்ட காந்தி முக்கியமான புத்தகமாகும். பத்திரிக்கையாளரான லூயிஃபிஷர் தான் கண்டு கேட்ட காந்தியின் வரலாற்றை மிக நுணுக்கமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் பதிவு செய்துள்ளார். இதனை மொழிபெயர்ப்பு என்று உணராத வகையில் தி.ஜ.ர அழகிய வடிவில் மொழிபெயர்த்துள்ளார்.

 முதல் அத்தியாயமே காந்தியின் மரணத்தின் இருந்து துவங்குகிறது. பல்வேறு புத்தகங்கள் அவரின் மரணச் செய்தியை உணர்ச்சிகரமாகவும் செய்தியாகவும் வெளியிட்டு இருப்பார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் முதல் அத்தியாயத்தில் உள்ளது உள்ளபடியே என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ளார். உதாரணத்திற்கு ஆபா கொண்டு வந்த காரட் கீரை சாறு பற்றி கிண்டல் செய்து எனக்கு நீ மாட்டுத் தீணியை கொடுத்துவிட்டாய் என்று கிண்டல் செய்து சிரிக்கிறார். அதற்கு குதிரைத்தீனி அல்லவா கொடுத்தேன் என  விடை சொல்கிறார். அப்படியே செல்லும்போது மூன்று குண்டுகள் பாய்ந்தது .முதல் கொண்டு பாய்ந்த உடன் காந்தியின் கால் தரையில் பதிந்திருந்தது. ஆயினும் நின்று கொண்டிருந்தார். இரண்டாம் குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு கரை படுத்தியது அவருடைய முகம் சாம்பல் நிறத்தில் வெளிறிவிட்டது ஹேராம் என்று முணுமுணுத்தார். மூன்றாவது குண்டு வெடித்ததும் தரையில் விழுந்தார் என்று குறிப்பிட்டதோடு அவரின் அஸ்தி தாமிர செம்பில் வைத்து அடைக்கப்பட்ட தாக சொல்வது என ஒவ்வொன்றும் நேரில் நின்று பார்ப்பது போல நமக்குத் தெரிகிறது.

மருத்துவம் படிக்க ஆர்வமாய் இருந்தவர் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக சட்டம் படிக்க வெளிநாட்டுக்கு செல்கிறார். முடித்தவுடன் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் பணிக்கு செல்கையில் அவருடைய வாழ்வில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகிறது.1897&1900 ஆண்டில் மூன்றாவது மகன் ராமதாஸ் பிறந்த போதும் நான்காவது மகன் தேவதாஸ் பிறந்த போதும் அவரே மனைவிக்கே பிரசவம் பார்த்திருக்கிறார். காந்தியின் வீட்டில் ஓடும் குழாய் நீர் கிடையாது ஒவ்வொரு அறையிலும் சிறுநீர் கழிக்கும் கலயம் உண்டு. தீண்டத்தகாதவர்களான தோட்டிகளே அசுத்தமான வேலைகளை செய்வார்கள். ஆனால் காந்தியோ ஒருவரையும் பணிக்கு அமர்த்திக் கொள்ளாது அவரே தனது சிறுநீர் களையங்களை தூக்கி அப்புறப்படுத்துகிறார்.

உணவிலேயே தமது ஆசையை அடக்கவில்லையானால் அதைவிட வலுவான உணர்ச்சிகளான கோபம், டம்பம், காமம் இவற்றை எல்லாம் எப்படி அடக்க முடியும் என்று காந்தி தமக்குள்ளே வாதித்தார். சாதாரண இன்பங்களை எல்லாம் தனக்கு மறுத்துக் கொள்வதை மாஸக்கிஸிம் (பிறர் தரும் துன்பத்திலேயே இன்பம் காண்பது)என்று மேல் நாட்டவர் சொல்கிறார்கள்.

சிறைச்சாலையில் இருக்கும் போது அமெரிக்க ஆசிரியர் தோராவின் புத்தகத்தை இரவல் வாங்கி படித்தார் .அதில் உள்ள வாசகம் இவரை சிந்திக்க வைத்தது. அதில் "எனக்கும் என் நகரத்து மக்களுக்கும் இடையே ஒரு சுவர் இருக்கத்தான் இருந்தது .ஆயினும் நான் சுதந்திரமாகவே இருந்தேன். ஆனால் என்னை போல் தாங்களும் சுதந்திரமாய் இருக்க அவர்களுக்கு தடையாய் இருந்த மற்றொரு சுவரை நான் கண்டேன். ஏறியோ இடித்தோ கடக்க, இந்த சிறைச்சுவரை விட இன்னும் கஷ்டமானது அந்த சுவர் .சிறைக்குள் இருப்பதாக எனக்கு துளியும் தோன்றவில்லை. தோராவின் இந்த கட்டுரைகளை காந்தி மனம் கொண்டு போற்றினார். முழுக்கட்டுரையையும் படித்தார் .சத்தியாகிரகம் பற்றிய கருத்தை தோராவிடமிருந்து காந்தி பெற்றார் என்று சிலர் சொல்லுவார்கள்.

மற்றொரு முறை இந்தியாவில் கிறிஸ்தவ கூட்டம் ஒன்றில் ஷெல்லியின் கவிதை ஒன்றை படித்தார். "அதில் நில்லுங்கள்; அமைதியாய், உறுதியாய், செறிந்த காடு போல, வாய் பேசாது ,கட்டிய கைகளுடன், தோலாத போரின் ஆயுதமான தோற்றத்தோடு நில்லுங்கள் "என்று குறிப்பிடும் அந்த நீள் கவிதையை படிக்கிறார்.

நேருவைப் போலவே காந்தியும் சிறையிலிருந்து தன் மகன்களுக்கு கட்டுரை எழுதி உள்ளார். அதில் குடும்பத்தினை பற்றியும் வாழ்வினை பற்றியும் கூறியதோடு படிப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எமர்சனின் கட்டுரைகளை படிக்கும்படி சொல்கிறார் .அது டர்பன் நகரில் எங்கு கிடைக்கும் எனவும் சொல்லிவிட்டு, டால்ஸ்டாய் எழுதியுள்ள 'உனக்குள்ளே கடவுளின் ராஜ்ஜியம்' என்ற நூலையே படிக்க வேண்டும். கடைசியில் அல்ஜிப்ரா ஒன்று வேண்டும் எந்த பதிப்பாய் இருந்தாலும் பரவாயில்லை என்று காந்தி கேட்கிறார் இவ்வாறு கடிதம் எழுதியது இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது.

எரவாடா மத்திய சிறையில் இருந்த போது அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடத்த வேண்டிய கட்டாயம். அதற்கு சம்மதித்த காந்தி உறுதி மொழியில் கையெழுத்திட்டு மருத்துவரிடம் கூறிக்கிட்டு அறுவை சிகிச்சை துவங்கியது மயக்க மருந்து கொடுத்து விட்டு போட்டோ எடுத்தார்கள். ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தபோது புயல் அடித்து மின்னல் வீசி மின்சார சப்ளை துண்டித்தது. லில்லி அருகே இருந்த மூன்று நரசுகள் ஒருத்தி பிடித்திருந்த டார்ச் லைட்டும் அணைந்தது பிறகு மண்ணெண்ணெய் விளக்கு ஒன்றின் ஒளியிலேயே ஆபரேஷனை செய்து முடிக்க வேண்டியதாயிற்று

#ரசித்தவை

*அனுபவம் என்பது தனிமனிதனின் ஆத்மாவும் வெளி உலகமும் ஒன்றோடொன்று மோதுவதன் விளைவு

*ஒவ்வொருவரும் தம் தாய்மொழியைக் கற்பது முக்கியம்;இல்லாவிட்டால், மொழிக்கும் கருத்துக்கும் இடையே விழும் பள்ளத்துக்குப் பாலம் கட்டுவதிலேயே மனத்தைப் பெரிதும் சிரமப்படுத்த வேண்டியிருக்கும்

*வேண்டுகோள் என்பதுதான் காந்தியின் திறவுகோல்

*பொதுமக்களுக்கு பணிபுரியம் ஒருவன், விலை உயர்ந்த பரிசுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

*மனிதர்கள் மேலும் மேலும் செல்வப்பெருக்கை தேடக்கூடாது;எளிய சுகஙகளையே தேட வேண்டும்

*செயலற்ற சகிப்பே(பாஸிவ்) இருக்கக் கூடாது

*நாம் மட்டும் நமக்கு உண்மையாக நடந்து கொண்டோமானால், எந்தக் கோணல்தனமான கொள்கையும்காலக்கிரமத்தில் நேராகிவிடும்

*பாக் என்றால் தோட்டம். ஆனால் ஜாலியன் வாலாபாக்கில் தோட்டமே இல்லை.

*யாருக்காவது பிரிட்டிஷார் தீங்கிழைத்தால் அவர்களிடம் பிரெஞ்சுக்காரர் போய் காதல் புரிவார்கள். யாருக்காவது பிரெஞ்சுக்காரர் தீங்கிழைத்தால் அவர்களிடம் பிரிட்டிஷ்காரர் போய் காதல் புரிவார்கள்.

*சத்தியாகிரகம் சாந்தமானது. சொற்கள் எதிரியை வழிக்கு கொண்டு வராவிட்டால் தூய்மையான பணிவும் நாணயமும் ஒருவேளை அவனை வழிக்கு கொண்டு வரக்கூடும். எதிரியை பொறுமையாளும் அனுதாபத்தாலும் அவனுடைய பிழையில் இருந்து விடுபட செய்ய வேண்டும். நசுக்கக் கூடாது.

*தவறுகள் செய்யவும் சுதந்திரம் வேண்டும்

ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுவாரசியமான பல சுவையான தகவல்கள் வரலாற்றுச் சம்பவங்கள் என்று ஏராளமான தகவல்கள் அறியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காந்தியை பற்றி தெரிந்து கொள்பவர்கள் முதலில் படிக்க வேண்டியது இப் புத்தகத்தை தான். காலை 6 மணிக்கு படிக்க துவங்கிய புத்தகத்தை இப்போதுதான் படித்து முடிக்க நேர்ந்தது. இடைவேளையில் வேறு வேறு புத்தகங்கள் வாசிக்க நேர்ந்தாலும் இப் புத்தகத்தை இன்றே முடிக்க வேண்டும் என்று ஆவலாய் படித்து முடித்து இருக்கிறேன்.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Sunday 26 March 2023

இதுதான் உன் எல்லையென்று நிறுவியதில் ஒன்றும் குற்றமில்லை.கொஞ்சம் முன்னமே சொல்லியிருக்கலாம்.என் தூரத்தை நானே வகுத்திருப்பேன்!,-யாத்திரி

டக் அவுட்


ஒரு விஷேச வீட்டில், எவருக்கும் சொல்லிக் கொள்ளாமல், ஒரு விருந்தினர் சட்டென அநாகரீகமாக வெளியேறினாலும் ஆங்கிலத்தில் இந்த டக் அவுட்தான்

பேச நினைத்தவைமனதிலேயே நீந்துகிறதுவேறொரு தருணத்தில்கரை வந்துஉரையாடும் - ராஜா சந்திரசேகர்

book-6


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-2
Book-6
Pages:168

குளம் போல் நடிக்கும் கடல் 
-போகன் சங்கர்

இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் தன்னறம் நூல்வெளி வெளியிட்டுள்ளது. மனித துக்கத்தின் மொத்த சரித்திரங்களிலிருந்து ஒரு நல்ல கவிதை ஒருபோதும் கசப்பை மட்டும் ஏந்திக் கொள்வதில்லை. அது எடுத்துக் கொள்வது கருணையை ;நம்பிக்கையின் உணர்ச்சியற்ற உறுதிப்பாட்டை ..எனும் வில்லியம் ராடிஸே வின் வரிகளை பொருத்திக் கொண்டு பார்த்தபோது நிதர்சனம் உணர முடிந்தது. ஏற்கனவே இருக்கக்கூடிய அர்த்தங்கள் வழியாக பேசுவதில்லை கவிதை. புதிய அர்த்தங்களை உருவாக்கி கொண்டே இருக்கக்கூடியது. மொழி ஒரு கட்டுமானமாக உறைந்து கொண்டே இருக்கிறது. மறுபக்கம் அதன் ஒரு பக்கம் உயிர்த்துடிப்புடன் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்ற ஜெயமோகன் வரி இன்னும் எதிர்பார்ப்பை தந்தது.

/ஒரு நீள் கவிதைக்கு 
இலவச இணைப்பாய் 
வந்த 
குட்டிக் கவிதை தான் 
கடைசியில் 
புவியை ஆண்டது/

உண்மையில் நீள் கவிதைகளை விட குட்டிக் கவிதைகள் உண்மையை மிகவும் உரக்கச் சொல்லிவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பது போல

காதலிப்பவன் நெருப்பாற்றில் நீந்துவது போல மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாம்பூச்சி இருக்க பிடித்தால் செத்துவிடும் வெறுமனே பிடித்தால் பறந்து விடும் என்பதைப் போல அதனை சொல்வது போல் கவிதை

/அதிகம் கட்டுப்படுத்திக் கொள்கிறேனா 
அதிகம் வெளிக்காட்டி விடுகிறேனா 
தெரியவில்லை 
காதலில் 
இரண்டும் ஒன்று போலவே உள்ளது/

காற்றின் வடிவம் குறித்து ஒரு கவிதை

/காற்றும் தெரு நாய் ஒன்று.
 ஒன்று ஒரே உறக்கம்.
 இல்லையேல்
 ஒரே ஊளை/

அமைதி ஒரு புல் போல் வளர்கிறது என ஜென் கவிதைகளில் வாசித்திருப்போம். ஆனால் இதில் அமைதி ஒன்றும் அவ்வளவு அமைதியாய் இல்லை.புல் வளரும்போது பக்கத்தில் உள்ள பூக்களுடன் பேசுகிறது. பிரித்தெடுத்து அறுக்க வரும் போது அழுகிறது. ஏதோ ஒரு மாட்டின் வாய்க்குள் போகும்போது கூட அரற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அமைதி பிரபஞ்சத்தில் எங்கும் இல்லை என ஒரு புல்லின் பார்வையில் இருந்து கவிதையை விமர்சிக்கிறார்.

ஒரு நல்ல எதார்த்த கவிதை பின்வரும் வரிகளை உள்ளடக்கியது போல் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய்

/மனிதர்கள் விசித்திரமானவர்கள். 
மலிவாக கிடைத்த பொருளைத் 
தொலைத்து விடுவதன் மூலம் 
விலை உயர்ந்ததாய் மாற்றி விடுகிறவர்கள்/

நிலையாமை வாழ்வின் அர்த்தத்தையும் எதிர்காலத்தில் இது கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வியையும் தாங்கி நிற்கும் நேரத்தில் இது போன்ற ஒரு வரிகள் கடமை செய் என்பது போல் நெற்றிப்பொட்டில் அடிக்கிறது

/வாடித்தான் போகிறோம் 
உதிரத்தான் போகிறோம் 
ஆயினும் 
மலராமல் இருக்க வேண்டியதில்லை/

கவிதை வரிகள் மட்டும் நாம் ஒன்று நினைப்போம் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதை போல..நம் சிந்தனை ஒன்று நினைக்கும் வந்துவிடும் கற்பனை வேறு ஒன்றை உருவாக்கும். அதுபோல் நகைச்சுவையாய் கவிதை

/ஒரு கவிதைக்குள்,
 எப்படியும் 
லிப்டில் 
முண்டியடித்துக் கொண்டு 
கடைசியில் ஏறிவிடும்
குண்டான நபர் போல 
நுழைந்து விடும் 
ஒரு உத்தேசிக்காத வரி/

இணையத்திலே போராடிக் கொண்டிருக்கும் புரட்சியாளர்களுக்கும் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் புரட்சியாளர்களையும் ஒப்பிட்டு ஒரு எள்ளல் கவிதை

/எனக்கான புரட்சிகளை 
நீ செய் 
உனக்கான கவிதைகளை 
நான் எழுதுகிறேன் 
இது ஒரு நியாயமான ஒப்பந்தம் 
என்றே நான் எண்ணுகிறேன்/

 இயல்பாக நடக்கும் செயல்களில் தன் கற்பனை ஏற்றிக் கூறும் போது அந்த செயல்களும் சொற்களும் அலகுணர்வில் கிடைக்கும் .அது போல

/ விலகிப் போகும்போது 
வெறுப்பாகவும் 
அருகில் வரும் போது 
அன்பாகவும் 
மாறிக் கொள்கிறது 
இந்த ஊஞ்சல்/

என்று அன்பு வைத்த இதயத்தையும் ஊஞ்சலையும் ஒப்பிட்டு காட்டுகிறார்.

எழுது அதுவே எழுத்தின் ரகசியம் என்பதைப் போல

/ மிக கரகரப்பான குரலாக 
இருந்தாலும் 
உன் பாடலை நீ பாடு/ என்கிறார்

இறுதியில் போகன் ஷங்கரின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Book-5


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-2
Book-5
Pages:143

தோழர்கள்
-கி.ரமேஷ்

கம்யூனிசம் பேசுவது எளிது, கடைபிடிப்பது கடினம்.!

கிழக்கு டுடே இணையதளித்தில் தொடராக வந்த புத்தகம் இது.
இந்த மண்ணில் ஓரளவாவது லட்சிய வாதங்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இடது சாரிகளே. அவர்களின் அப்பழுக்கற்ற தியாகமும், போராட்ட குணமும், எளியவர்களின் பக்கம் நின்று போராடும் விதமும் அவர்களை மதிப்பு மிக்கவர்களாக பார்க்க வைக்கிறது. போராட்டத்துடன் அதிகம் வாசிப்பவர்களாகவும்,
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வரலாறும் இந்த புத்தகத்தில் தெளிவாகவும் வரையறுக்கிறது. அகில இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கிய 10 இடதுசாரி ஆளுமைகளை நமக்குத் தெரியாத விஷயங்களுடன் இப்புத்தகம் நம்மை பார்க்க வைக்கிறது. கம்யூனிச அச்சம் நீங்குவதற்கு ஒரே வழி கம்யூனிசம் என்றால் உண்மையில் என்னவென்றும் யாருக்கானது என்றும் நிதானமாக எடுத்துச் சொல்வதுதான். அப்பணியின் ஒரு பகுதியாக இந்த தொடர் இருக்கிறது என்று கூறுகிறார் ஆசிரியர்.

ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை அறிந்து முதலில் நமக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் பெரியார் மாபெரும் காங்கிரசில் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று தன்னை பிரகடனம் செய்து கொண்டவர் சிங்காரவேலர்.இதுபோன்று கனவை நனவாக்க வேண்டுமானால் ஒரு முழு வாழ்நாளுமே கூட போதாது என்பதையும் உணர்ந்தவர்கள் தான் இடதுசாரிகள்

தமிழகத்தில் இடதுசாரி இயக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் சிங்காரவேலர். தொழிலாளர் சங்கத்தை தோற்றுவித்த வரும் அவரே. 1923 மே ஒன்றாம் தேதி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் மெரினா கடற்கரையில் மே தினத்தை கொண்டாடியவர் சிங்காரவேலர் தான். தொழிலாளி வர்க்க போராட்டம் என்றால் பொருளாதாரம் முன்னேற்றத்துக்காக மட்டும் போராடுவது அல்ல சுயராஜ்ய போராட்டத்திலும் தொழிலாளர்களின் பங்கு இருக்க வேண்டும் என்பது சிங்காரவேலரின் மகத்தான கருத்துக்களில் ஒன்று. மகாகவி பாரதியின் உற்ற தோழராக விளங்கியவர் சிங்காரவேலர். அவர் இறக்கும் தருவாயிலும் அவருடன் இருந்தார் என்பது புதிய செய்தியாக புத்தகத்தில் மூலம் தெரிந்தது.

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகவும் இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் பங்காற்றியவர்களில் அமீர் ஹதர்கான் முக்கியமானவர். பாகிஸ்தான் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து தொடர்ச்சியான பயணம் மேற்கொண்டு கம்யூனிச இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டு, நியூயார்க் அமெரிக்கா லண்டன் போன்ற பகுதிகளில் எல்லாம் கம்யூனிச இயக்கத்தை கற்றுக்கொண்டு, இந்தியாவில் கல்கத்தாவிலும் பம்பாயிலும் பல்வேறு போராட்டங்களில் முன்னெடுத்தவர் ஹைதர் அவர்கள். இறுதிக்காலத்தில் பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க முயன்ற ஹைதரை அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்து விடுதலை செய்தது. இறுதியில் தனது ஆசைப்படி கிராமத்தில் ஒரு பள்ளியை உருவாக்கி மக்களுக்கு சேவை செய்து கொண்டு அங்கேயே தங்கினார் இது போன்ற அறியாத செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

ஹேஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி எடுத்த முடிவின்படி அனைத்து நீதிமன்றங்களிலும் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ண கொடியை பறக்க விடுவோம் என்று அறிவித்தது. ஆனால் சில காரணங்களுக்காக அதில் பின்வாங்கவே இதை அறியாத சிறுவன் ஒருவன் என்று காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைந்து கொடியை வாங்கிக் கொண்டு சென்று.. நீதிமன்றத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றும் போது காவலர்களால் பிடிபட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். நீதிபதி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்க ஓராண்டா என்று அலட்சியமாக கேள்வி கேட்டதனால் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். அந்த சிறுவன் தான் பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித். அடக்குமுறைகள் போராட்டங்கள்  என 1939இல் ஒருமுறை கைதாகி தனிமை சிறையில் அடைக்கப்பட்டு பல நாட்கள் இருளிலேயே இருந்ததால் அவரின் கண் பார்வை பாதிக்கப்பட்டு இறுதிவரை அவ்வாறே வாழ்ந்து வந்தார்.

தகை சால் தமிழராய் திகழும் சங்கரய்யா குறித்து பல்வேறு செய்திகள் படித்திருந்தாலும், நகரங்களில் மட்டும் இருந்த நியாய விலை கடைகளை கிராமங்களை நோக்கி திருப்பிய பெருமை சங்கரய்யாவையே சாரும். 1977 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது சங்கரய்யாவின் இந்த கோரிக்கை ஏற்று நிறைவேற்றினார் என்பது புதிய தகவலாய் இருந்தது. கோதாவரி பருலேகர் மற்றும் ஷாம்ராவ் பருலேகர் இருவரின் கம்யூனிச வாழ்க்கை என்பது மிகவும் பிரமிப்பாய் இருந்தது. குழந்தை பேறு கூட இல்லாமல் கட்சிக்காக உழைத்தவர்கள். பம்பாய் மகாராஷ்டிரா பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்து பல்வேறு களப்பணிகளை செய்தவர்கள் .கணவன் இறந்த பிறகும் கட்சிக்காக பல்வேறு போராட்டங்களை செய்தவர்.

அன்றைய முதல்வர் சி சுப்பிரமணியன் சட்டமன்றத்துக்கு வந்த பி ராமமூர்த்தியை பார்த்து திருமண வாழ்த்துக்களை கூறினார். சட்டமன்றமே எழுந்து கரகோஷம் எழுப்பியது. ஏனெனில் முந்தைய நாள் கேரளத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு மறுநாள் மக்கள் பணியாற்ற சட்டமன்றம் வந்தவர் தான் பி ராமமூர்த்தி. இளமையிலேயே தமிழ் ஆங்கிலம் வடமொழி ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்து காங்கிரஸிலிருந்து விலகி கம்யூனிசத்தின் பால்  வந்தவர் .சைமன் கமிஷன் வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராமமூர்த்தியின் தலைமையில் 30 படகுகள் மாணவர்களை ஏற்றுக்கொண்டு போய் சைமனே திரும்பி போ என்று முழக்கமிட்டு ராம் நகர் கோட்டை வரை விரட்டி சென்றவர் தான் பி.ஆர் என்பது புல்லரிக்க வைத்தது. சிறைச்சாலையில் இருந்தபோது பேபியன் சோசலிசம் பற்றிய நூலும் ராஜாஜி கம்யூனிசம் பற்றி எளிமையாக எழுதிய அபேதவாதம் எனும் இரு நூல்களும் படித்த பின்பு அவருக்கு கொள்கை பிடிப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்.

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இ எம் எஸ். மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்படாததால் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை அமைந்தது. 1940 இல் சோசியலிஸ்ட்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறும் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அங்கு அமைத்தனர். இந்தியாவிலேயே முதல்முறையாக வாக்கெடுப்பின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது கேரளாவில் தான்.

இவர்களைத் தொடர்ந்து பா ஜீவானந்தம் சீனிவாசராவ் கே டி கே தங்கமணி போன்றோரின் வாழ்வியலையும் மிக முக்கிய அங்கமாக புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த புத்தகங்களை எல்லாம் படிக்கும்போது இவர்கள் பொது வாழ்வில் எந்தவித சுயநலமும் இன்றி மக்களுக்காக சிறை சென்றும், மக்களை முன்னேற்றுவதற்கான சட்ட போராட்டங்களிலும், களப்போராட்டங்களிலும், ஈடுபட்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே பணி செய்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது நிச்சயம் வியப்பாகவும் மதிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. இன்றும் ஏதேனும் ஊரில் தினசரி ஆர்ப்பாட்டங்களில் ஏதேனும் ஒரு தோழர் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் பணியும் கடமையும் விருப்பமும் மக்கள் பணி தான்

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Book 2


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

புத்தகம்-2

பெயரற்ற யாத்ரீகன்
-யுவன் சந்திரசேகர்

பக்கங்கள்-232

ஜென் கவிதைகள் இறகின் மிருதுமும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும்போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்தி காட்ட இயல்கிறது என்பது ஜென்மார்க்கம் செய்யும் மாயம். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சமமானது என்பதை ஜென் கவிதைகள் அறிய தருகின்றன என்பதை படிக்கும் போது இதனை படிக்கும் ஆர்வம் வருகிறது.

அறிவார்த்தத்தின் அதீத ஆவலை திருப்தி செய்வது மட்டுமல்ல. நடைமுறை வாழ்வின் சிக்கல்களைத் தீர்ப்பதும்தான் ஜென்னின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. மென் உணர்வில் எழும் வார்த்தைகளை அழகிய வடிவமாக, ஒரு தருணத்தை உணர்த்துவது போல, வாசக மனதிற்கு விரும்பத்தக்க வகையில் எளிய முறையில் சொல்வது போல கற்பனையின் எல்லையை இன்னும் விரித்துக் காட்டுவது போல, எழுதுகிறவர்க்கும் வாசிக்கிறவர்க்கும் சமமான கற்பனை எண்ணத்தை தருகிறது ஜென்.

ஜென் கவிதையில் உருவாவது, மலைப்பாதைகளும் பனிப்பாறைகளும் மரங்களும் நதிகளும் காற்றும் பதிவுகொள்கிற, இவற்றை எதிர்கொள்ளும் ஒற்றைத் தனிமனிதனைத் தவிர பிற மனிதர்கள் யாருமற்ற, பிரபஞ்சம். கவிதை வாசித்த மறுகணம் அந்த கற்பனை பரிச்சயமானதாகவும் உறுதி பெற்றதாகவும் உடனடியாக நம் எண்ணத்தில் ஒரு உலகம் உருவாகிறது.. அவ்வாறு இத்தொகுப்பில் நான் ரசித்தவை..

"இறுதியில், 
இந்தச் சாலையில் தான் 
வந்தாக வேண்டும் நான் என 
நன்றாக தெரியும். 
ஆனால் ,
இன்று தான் அந்த நாள் என்று 
எனக்குத் தெரியாது நேற்று."

*சந்தேகமில்லை, 
எங்கோ 
எவரோ 
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,
இந்த் தீவை 
இந்த நிலவை.

*புத்தாண்டு தினத்தில் 
என் பெற்றோரை பார்க்க ஏங்குகிறேன் 
நான் பிறக்கும் முன் அவர்கள் 
இருந்த விதமாக

*நினைக்க வேண்டாம் அதை 
என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும் 
நினைத்து விடுகிறேன். 
அதை நினைக்கும் 
போது 
கண்ணீர் சிந்துகிறேன்.

*அன்பு கருதியும் 
வெறுப்பு கருதியும் ஒரு 
ஈயை அடித்துக்கொன்று 
எறும்புக்கு வழங்குகிறேன்.

*புத்தானாது சுலபம் 
பிரமைகளை களைவது தான் கடினம் 
பனி உறைந்த 
நிலவொளிரும் இரவுகள் பலவற்றில் 
அமர்ந்த உணர்ந்திருக்கிறேன்
வைகறைக்கு முந்தைய குளிரை

*திருடன் 
விட்டுச் சென்றிருக்கிறான் 
ஜன்னலில் உள்ள நிலவை

*நெல் வயலில் தேங்கிய நீர் 
வெளியேறுகிறது ஒரு 
மீனும் திரும்புகிறது
 தன் வீட்டுக்கு

மிகக் குறைந்தபட்ச வார்த்தைகளில் வெளியாகிறது ஜென் கவிதை. இறுக்கமான உருவ அமைப்போ வார்த்தைகளை விரயம் செய்வதாக இல்லை. முதல் வாசிப்புக்கு மர்மமாக தெரியும் சில கவிதைகள் உணர்ந்து பார்க்கும் போது மாபெரும் உண்மைகளையும் உவமைகளையும் உருவகங்களையும் நமக்கு காட்டுகிறது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமைமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 25 March 2023

book-3


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

புத்தகம்-3
பக்கங்கள்-608

வேள்பாரி முதல் பாகம்
-சு.வெங்கடேசன்

வார வாரம் அவ்வப்போது ஆனந்தவிகடனில் படித்தாலும் தொடராக புத்தகத்தில் படிக்கும் போது பிரம்மாண்ட காட்டினை நேரில் பார்த்தது போன்ற உணர்வு.பாரியை தேடிச் செல்லும் கபிலர் பறம்பு நாட்டில் பயணிக்கிறார். வழிகாட்டி செல்லும் ஒருவன் கூறும் பாரியை பற்றிய உருவகம் காட்டினைப் போல் அளவிட முடியாதது பாரியின் புகழ் என நினைக்கிறார் கபிலர். கேப்டன் பிரபாகரன் கொஞ்ச நேரத்துக்குப் பின் எண்ட் ரி ஆகும் விஜயகாந்தைப் போல் தாமதமான மாஸான எண்ட் ரி கொடுக்கும் பாரி செம க்ளாஸ்.பாரியின் திறமை வீரம் போன்றவற்றை கேட்டு சிலாகிக்கும் கபிலர் பாரியின் மீது மரியாதை கலந்த அன்பு செலுத்துகிறார்..நாமும் தான்.

காட்டிலிருக்கும் செடி, கொடி, பறவை, விலங்கு, வானியல் அறிவு போன்றவை ஒவ்வொரு அத்தியாத்திலும் வரும் போது பறம்பு குறித்த பார்வையை நம் அகக்கண்ணுக்குள் செல்கிறது.

ஒரு இடத்தில் நாகங்கள் புணர்கையில் அவற்றின் மீது போர்த்தப்பட்ட துணியால் மனிதனுக்கு நீடித்த ஆயுளும் நன்மையும் கைவிடும் என்று கூறுகிறார் ஒருவர். ஆனால் நாகர்குல தலைவன் அதனை மறுத்து நாகங்கள் புணர்வதை கண்டவர் யாருமில்லை. நாகங்கள் பின்னி கிடப்பதை மக்கள் பார்த்திருப்பார்கள் அது காதல் விளையாட்டு. அதை எல்லாம் பார்க்கலாம். ஆனால் நாங்கள் புணர்வது யாரும் பார்க்க முடியாது. ஏனெனில் நாகத்துக்கு காமம் பெருகும் காலங்களில் மெல்லிய நீர் ஒன்று உடலெங்கும் ஊறி, அதன் கண்களை மறைக்கும்.
அதற்குரிய மூலிகையை தின்ற பிறகு நாகம் தனது மூக்கு நுனியின் வழியே அந்த நீர் தோலைக் கழற்ற தொடங்கும். கண்களின் மேல் படர்ந்த காமத்திரையை அகற்றும். அதன் பிறகு அது எட்டு நாட்களுக்கு வெளியே வராது யாரும் அதனை அறியவும் முடியாது.

புத்துடல் கொண்ட கணத்தில் தொடங்கும் இணையின் ஒவ்வொரு செதிலுடன் கலந்து மேலும் திருகி பிரண்டு இறுகி தோல்  கனிந்து முதிர்ந்த பிறகு தான் இணையை பிரிந்து வெளியே வரும் .தன் பழைய உடலின் வழியே இணை கூடாத ஒரே உயிரினம் அது மட்டும் தான் என சொல்லும் போது நமக்கு வாசிப்பின் ஆச்சரியம் நம் புருவத்தை உயர்த்துகிறது.

இரண்டாம் பகுதியான தேவ வாக்கு பகுதியில் பாண்டியர் குறித்த கதைகள் ..பாண்டிய மன்னன் பறம்பின் பாரியினால் பாதிக்கப்பட்ட கதையை சொல்கிறது. பறம்பிலிருக்கும் கொற்றவை வரலாறு திருவிழா கிராம வினாக்கள் குறித்து செவி வழி செய்தியாக வந்த கதைகளும் அவ்வப்போது நமக்கு வியப்பை தருகிறது.

பாரியின் வீரத்தைப் போலவே அவரின் நிதானமும் நம்மை மெய்மறக்க செய்கிறது. பாரி மீது படையெடுக்கும் பொருட்டு பரம்பு நாட்டை நோக்கி முன்னேறி வருகின்றனர்.படைத் திறத்தை மட்டும் நம்பியிராது தன் மதியூகத்தின் மூலம், காட்டின் இருக்கும் கானுயிர் முதல் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக உணர்ந்து ஒவ்வொரு சிறு படைகளையும் முன்னேறி விடாமல் எவ்வாறு தடுக்கிறார் என்பதோடு பல்வேறு கிளைக்கதைகளோடும், பல்வேறு அரிய செய்திகளோடும்
 முன்னேறி வருவோரை எவ்வாறு முறியடிக்கிறார் என்பதுதான் முதல் பாகம்

#ரசித்தவை

*ஆணின் பார்வை பெண்ணின் பார்வையைப் போல் நயமிக்கது இல்லை.ஆணின் கண்கள் காதல் கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல. அவன் பார்வையால் பற்றி இழுத்தாலும், அவள் கண்களால் கைம்மாறு செய்து கொண்டிருந்தாள்

*மனமும் கண்களும் சலிப்படையும் வரை பார்த்தான்

*பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக் கொள்ள மாட்டாள். அவள் சிக்கிகொள்வது அவளிடம் மட்டும்தான்.. விடுவிக்கும் ஆற்றலும் அவளிடமே உள்ளது.

நீலம் என்பது வானத்தின் விதியல்ல இயல்பு.விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும்.இயல்பாக இருந்தால்?"

*கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப் போல படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத் தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன

*விடையை யாரும் சொல்லிவிடலாம். வினாக்கள் உருத்திரள்வது தான் முக்கியம். பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன

*மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்து கொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு

*பகிர்ந்து உண்பதும், பரிமாறி வாழ்வதும், இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்தவை

*யானைக்கூட்டத்தைக்கூட எளிதில் விரட்டிவிடலாம். ஆனால்,பன்றிக்கூட்டத்தை
விரட்டிச்செல்வது எளிதல்ல. புதருக்குள் ஒளிந்துகொள்ளும்; திசைமாற்றி நம்மை ஏமாற்றும்; எளிதில் ஓடாது.தனது உயிருக்கு ஆபத்து என அது உணர்ந்தால் மட்டுமே தப்பியோட ஆரம்பிக்கும்.இல்லையென்றால், அதை நகர்த்தமுடியாது!

*நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்.

*மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கடலைப் பார்க்க வேண்டும்.ஏன்?அது அவ்வளவு விரிந்தது பரந்தது எல்லையற்றது.
நீலன் சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்.
எங்கள் பாரியின் கருணையை விடவா?

*மண்ணில் கால் படாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும் தான்...

*காதல், தேடலில் தொடங்கி தொலைவதில் முடிவடையும்!

*குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும் போதும், தோற்கும் போதும் தான் ஒரு ஆண் தாய்மையை அடைகிறான்

*இவ்வளவு ஆற்றலும் அழகும் கொண்ட காதலனை பார்த்துக்கொண்டே விலகி நடப்பதை விட பார்க்காமல் திரும்பி நடப்பதே உயிர் வாழ்வதற்கான சிறந்த வழி!

*சூரிய காந்திப் பூ மட்டும்தான் சூரியனைச் சுற்றுகிறது என்று தெரியும். ஆனால் குட்டியாய் தரையில் படர்ந்திருக்கும் நெருஞ்சிப் பூவும் சூரியனைச் சுற்றும்.நெருஞ்சிப்பூவின் இன்னொரு பெயர் ஞாயிறு திரும்பி.சூரியனை பார்த்த படியே காலை முதல் மாலை வரை இருக்கும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

இந்திரன்


தந்தி ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?தந்தியைக் கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் ஒரு ஓவியர். தன் குடும்பத்தை விட்டு தூரத்தில் இருந்த போது இவர் மனைவி திடீரென இறந்துவிட்டார். அவர் இறந்த செய்தி இவருக்குக் கிடைத்த போது அவரது மனைவியை புதைத்துவிட்டு இருந்தார்கள். இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான சாமுவேல் மோர்ஸ்  ஓவியத்தில் தான் செலுத்திய கவனத்தை துரிதமான தகவல் பரிவர்த்தனை குறித்து செலுத்தி உழைக்கத்தொடங்கினார். இதன் விளைவாகத்தான் அவர் தந்தியைக் கண்டுபிடித்தார். தனக்கு வந்த துன்பம் பிறருக்கு வரக்கூடாது என்று நினைக்கும் உன்னதமான மனிதர்களால் தான் உலகம் வாழ்ந்து வருகிறது.

-இந்திரன்

‘தும்பை விட்டு வாலைப் பிடி’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதன் அர்த்தம், மாட்டைப் பிடிக்க விரும்புகிறவர்கள் அதன் கழுத்தில் உள்ள கயிறை(தும்பு)தான் பிடிக்கவேண்டும், அதை விட்டுவிட்டு வாலைப் பிடித்தால் பலன் இருக்காது.

நாளை வரும் எனச் சொல்கிறார் வெறும் இன்றுகள்தான் வருகின்றன இடையறாது எங்கிருந்து வருகுதிந்த இன்றுகள்? காணாதது கண்டு கண்டதாகிறது -ஆனந்த்

புத்தகம்-1


#30நாள்வாசிப்புப்போட்டி 

#TD038

புத்தகம்-1

தெய்வங்கள் முளைக்கும் நிலம்
-அ கா பெருமாள்
பக்கங்கள்-239

நாட்டார் என்ற சொல் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பு சொல்.Folklore என்ற சொல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் தெ.லூர்து நாட்டார் வழக்காற்றியல் என எண்பதுகளில் மொழிபெயர்த்தார். அது மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லாயிற்று.. என நாட்டார் இலக்கியம் பற்றி அறியாத தகவலுடன் இப்புத்தகம் துவங்குகிறது. எட்டு கட்டுரைகளில் சிறு தெய்வ வழிபாடு எவ்வாறெல்லாம் மேற்கொள்ளப்படுகிறது என்பதை ஆய்வு நோக்கில் அ.கா பெருமாள் அவர்கள் எழுதியுள்ளார்.

பண்டைய வழிபாட்டு நிலைகள் உள்ளுணர்வின்  வெளிப்பாட்டால் செயல்பட்டவை. இன்றைய நிலையில் நாட்டார் வழிபாடு மரபு வழி அல்லது கட்டாயம் என்பதற்காக இணைந்து கொள்ளும் பாங்கு பெரும்பாலும் நிகழ்கிறது என கூறுவதோடு முக்காலத்தில் பண்பாடு மற்றும் கடவுளின் வரலாறுகள் அதன் உருவானதுக்கான காரணங்களை ஆய்வு நோக்கில் விளக்குகிறார்.

நாட்டார் தெய்வம் எது என்பதற்கான காரணங்களை வகைப்படுத்தும் போது நாட்டார் வழிபாடு வேதத்துடன் தொடர்பற்றது ,மறுமை சாராதது, நாட்டா தெய்வங்களுக்கு பூஜை செய்பவர்கள் தெய்வம் சார்ந்த சாதியினராகவோ அல்லது பிராமணர் அல்லாதவராகவோ இருப்பார்கள்.இத் தெய்வத்தின் பிரதிநிதியாக கருதப்படும் சாமியாடி அத்தெய்வத்தின் அருள் பெற்றவராக தெய்வமாக கருதப்படுவார். தெய்வத்தை பிரித்துக் காட்டுவது நாட்டார் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் பலி வகைகள். இது போன்ற பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. 

நாட்டார் தெய்வ கோயில்களில் அமைவிடம் நிலைநாட்டப்பட்ட கோவில்களின் அமைவிடத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஊருணி குளம் ஏறி கணவாய் கரை ஊர் எல்லை, மரத்தை கோயிலாகவும் தெய்வமாகவும் வழிபடுவது முதலியவை. தெய்வங்களுடன் வேளாண்மை தொழில் பெருக்கம் வெப்புநோய் இணைந்து பேசப்படுகின்றன. ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரை விட்டு குடிபெயரும் போது அந்த ஊர் தெய்வம் அவர்களுடன் சேர்ந்து குடிபெயர்கிறது. பழிவாங்கும் குணம் உடையது நாட்டார் தெய்வங்கள். பெரும்பாலும் பெண் தெய்வங்களே செல்வாக்கு பெற்று இருக்கின்றன. என்று 16 வகையான நிகழ்வாக இதில் கூறப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் வில்லிசை பாடல்களின் மூலம் நாட்டார் தெய்வங்களின் தோற்றமும் நிலைப்பாடும் மக்களிடையே வாய்மொழியாக பரவி வருகின்றன. மனிதர்களின் அகால மரணம், தற்கொலை, பிறரால் நிகழ்த்தப்படும் கொலை கோர விபத்து என்பது போன்ற நியாயப்படுத்தும் செய்திகள், அவர்கள் மரணத்தின் மூலம் காரணமானவர்களை பழிவாங்குதல், மந்திரவாதிகளை அடக்குதல் போன்ற கதைகள் சொல்லப்படுகின்றன.

தமிழகத்தில் பிற்கால சோழர் காலத்தில் தான் தாய் தெய்வ வழிபாட்டின் போக்கு பரவலாய் இருப்பதை காண முடிகிறது. படை வீரர்களின் வீர உணர்ச்சியை தொய்வில்லாமல் வைத்திருக்க தாய் தெய்வ வழிபாட்டின் தொன்மம் தேவைப்படுகிறது. அதோடு வெற்றி பெற்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்த பொருட்கள் தாய் தெய்வ வடிவங்களும் கதைகளும் அடங்கும். கிபி 11ஆம் நூற்றாண்டில் உள்ள முதலாம் ராஜேந்திரனின் எண்ணாயிரம் கல்வெட்டில் அம்மன் வழிபாட்டுக்காக முதன் முதலில் தனி கோயில் ஏற்பட்டதை கூறுகிறது.

முத்தாரம்மன் வரலாற்றைப் பற்றி கூறும் பொழுது அக்கோவில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இது முக்கிய தெய்வமாக நாட்டாரியலில் சொல்லப்படுகிறது. நிற்கும் வடிவம் அல்லது அமர்ந்த வடிவம் இருநிலையில் சிலை இருக்கும் 
மண் வடிவங்களில் நிறம் பூசப்பட்டவை ஆகும் அதிக வேலைப்பாடு இல்லாதவையாக உள்ளது சிற்பங்கள் மிக குறைந்த அளவில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 1950 க்கு பிற்பாடு செய்யப்பட்டது.

இதேபோல் ஆண் தெய்வமான சுடலைமாடன் சிவனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தென்பகுதியில் சுடலை மாடனுக்கு என தனி வடிவம் உண்டு. கோவில் வெட்ட வெளியிலேயே அமைந்திருக்கும். நான்கு பிறக்கும் திறந்தவெளி உடைய கோயில்களாக இருக்கும். மூன்று முதல் ஆறு அடி உயரம் செவ்வக நிலையில் அமைந்திருக்கும். அதேபோல் முனியாண்டி என்ற தெய்வம் முற்றிலும் திராவிட தெய்வமாக நாக வணக்கத்தை விட பழமையான தெய்வமாக ஆகிவிட்டனர்.

புத்தகத்தின் பின்னிணைப்பில் முத்தாரம்மன் கதை, சுடலை கடன் கதை, இடைகலை மாடசாமி கதை சந்தியடி மாடன் உள்ளிட்ட பல மாடல்களின் கதைகள் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டுள்ளன.இந்நூலின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாட்டார் பாடல்களும் ,சங்க இலக்கியப் பாடல்களும் ,ஆய்வு நடத்திய போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. நாட்டார் வழக்கில் ஆர்வம் உள்ளவர்களும், சிறு தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களும் புத்தகத்தை படிக்கும் போது இதன் வரலாற்றையும் வாசிப்பு அனுபவத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள உதவும்

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday 23 March 2023

'இருதயத்தை நிரப்பக்கூடிய அற்புதத்தைகண்களால் கண்டுவிட முடியுமென்றால்,கண்பார்க்கும் அழகு மட்டுமேமனிதனை திருப்தியாக்க முடியுமென்றால்அவளின் பேரழகைக் கண்டவன் நான்"!-inspired tweet

கடவுச்சீட்டு வாங்கிகடந்து போன பின்கவனித்தது மனம்விட்டுச் செல்வதுவிடுதலை இல்லையென்று-ராசி.அழகப்பன்

திருப்புகழ்


தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் சகோதரர் திருப்புகழ் ஐஏஎஸ்.......

    "எங்கள் ஊர் சேலம். 
 எங்கள் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அப்பாவும் அம்மாவும் எனக்கும் தம்பிக்கும் ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, உள்ளதைக் கொண்டு நல்லது செய் போன்ற பண்புகளை சொத்தாகக் கொடுத்தனர். நாங்கள் அதன் வழி நின்றோம். கர்நாடக கச்சேரி மேடைகளில் தம்புரா ஒலிப்பதுபோல் அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்த நற்பண்புகள் எங்களின் வாழ்க்கையில் இன்றளவும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

அப்பா ஒரு சிறந்த மனிதர். மனிதர்களை மதிக்கத் தெரிந்த மனிதர். 
அவரிடமிருந்து நாங்கள் அதைக் கற்றுக்கொண்டோம். 

   சிறு வயதில் எனக்கு ஐஏஎஸ் கனவெல்லாம் கிடையாது. 
 17 வயதிலேயே ஓஷோ ரஜ்னீஸ் படித்தேன். ஜெ.கிருஷ்ணமூர்த்தி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பெங்களூருவில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அப்போது என் தம்பி இறையன்பு கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். படிப்பை முடித்துவிட்டு அவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆனார். வீட்டில் எல்லோருக்கும் பெரும்மகிழ்ச்சி.

எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் அவர் படிப்பார். 
எந்த பயிற்சி மையத்துக்கும் அவர் செல்லவில்லை. 

  அவரைப் பார்த்து சிவில் சர்வீஸ் மீது எனக்கும் ஈர்ப்பு வந்தது. ஏற்கெனவே அவர் எழுதியிருந்ததால் நானும் எழுதலாம் என்று எழுத முயற்சித்தேன் ஆனால் எனக்கு வயதில்லை. அந்த ஆசையை விட்டுவிட்டேன். வங்கியில் அதிகாரியாக வேலை இருந்ததால் அதில் நாட்டம் செலுத்திவந்தேன். 

  அப்போது வி.பி.சிங் அரசு மத்தியில் அமைந்தது. அந்த அரசு ஐஏஎஸ் தேர்வு எழுத இரண்டாண்டுகள் வயது வரம்பை தளர்த்தியது. 
 30 வயது வரை எழுதலாம் என்றது. இதனால் நான் மீண்டும் விண்ணப்பித்தேன். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவுடன் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சியில் ஒரு அறை எடுத்து தயாரானேன். தமிழகத்தில் முதல் இடத்திலும், ஆல் இந்தியா அளவில் 24ஆம் இடத்திலும் வெற்றி பெற்றேன். ஆகையால் பயிற்சி மையத்தில் சேர்ந்து தான் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

என் வாழ்க்கையில் நான் இரண்டு கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஒன்று, தனிப்பட்ட வெற்றி என்ற எதுவும் இல்லை. சமுதாய பங்களிப்பு இல்லாமல் யாரும் எதையும் சாதிக்க முடியாது. நான் என்ற அகந்தையை விட்டுவிட வேண்டும். நாம் என்ன சாதித்தாலும் அதற்கு இந்த சமுதாயத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.

இன்னொரு தத்துவம் ஒரு ஜென் துறவி உணர்த்தியது. அந்தத் துறவி தன் தத்துவங்களை எல்லாம் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அதை புத்தகமாக பிரசுரம் செய்ய பணம் சேர்த்துவைத்துள்ளார். அதை அச்சிடலாம் என நினைக்கும்போது அவரது கிராமத்தில் பஞ்சம் வருகிறது. கிராமத்தின் நிவாரணத்துக்காக பணத்தை கொடுத்துவிடுகிறார். 

இரண்டாவதாக மீண்டும் பணம் சேர்க்கிறார். மீண்டும் புத்தகத்தை அச்சிடச் செல்லும்போது ஊரில் வெள்ளம் வந்துவிடுகிறது. பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்து விடுகிறார். 

மூன்றாவது முறையாக அவர் புத்தகத்தை அச்சிட்டுவிடுகிறார். அப்போது அவர் புத்தக வெளியீட்டு விழாவில்" நான் இந்தப் புத்தகத்தை ஏற்கெனவே இரண்டு எடிசன் பதிப்பித்துவிட்டேன். அந்த இரண்டும் இதைவிட சிறப்பானவை" என்றார். தத்துவம் என்பது புத்தகத்தில் அச்சிடுவது இல்லை. அது வாழ்க்கையில் பிறருக்கு உதவுவதை கொள்கையாகக் கொள்வது. அதுதான் ஆன்மீகம். அதுதான் சமையம், அதுதான் மனிதம்.........

படித்தது-பிச்சைக்காரன்


ஒரு இதமான அணைப்பு
சோகமான தினத்தை  
தடுத்திருக்கும்

ஒரு மனமார்ந்த பாராட்டு
என் கழிவிரக்கத்தை
காணாமல் செய்திருக்கும்

செவிமடுக்கும்  ஒரு  செவி
என் தனிமையை  தணித்திருக்கும்

உதவிக்கரம் நீட்டும்  ஒரு உள்ளம்
நான் உடைந்து போவதை
தவிர்த்திருக்கும்

ஒரு சிறு புன்னகை
என் தற்கொலையை  
மாற்றி இருக்கும்

−படித்தது

Wednesday 22 March 2023

ஜெமோ


நம் எண்ணங்களின் ஒழுங்கு என்பது புறவுலகின் ஒழுங்கேதான். பழகிய புறவுலகம் பழகிய தடத்தை சிந்தனைக்கும் அளிக்கிறது. நதிநீருக்கு கரைகள் அளிக்கும் பாதை போல. எப்போதெல்லாம் நாம் சற்றுச் சலித்தவர்களாக, எதையும் குறிப்பிட்டு சிந்திக்காதவர்களாக, அசமஞ்சத்தனமாக இருக்கிறோமோ அப்போதுதான் நம் அகம்.”
விடுதலை கொண்டிருக்கிறது

-ஜெமோ

வாசிப்பு ஒரு மனிதனைதேவையான இடத்தில்பேச வைக்கும்.தேவையான இடத்தில்மௌனமாக்கும்.~ எஸ். ரா ~

சு.வெ


பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக் கொள்ள மாட்டாள். அவள் சிக்கிகொள்வது அவளிடம் மட்டும்தான்.. விடுவிக்கும் ஆற்றலும் அவளிடமே உள்ளது.

நீலம் என்பது வானத்தின் விதியல்ல இயல்பு.விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும்.இயல்பாக இருந்தால்?"

-சு.வெ
(வேள்பாரி)

ஈரோடு கதிர்


ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதும் வரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதல்ல. 
இனி என்ன செய்வதென்று தெரியாமல், 
இருண்மைக்குள் மூழ்கி மூச்சுத் திணறும்போது,  வெளிச்சம் நனைந்த கை ஒன்று நம்மை நோக்கி நீட்டப்படுவது..!

-ஈரோடு கதிர்

Tuesday 21 March 2023

ஏ-1


ஏ-1

மிகசிறந்தது என்பதை குறிக்க ஏ-1 என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.1837ல் இங்கிலாந்து லாயிட்ஸ் கப்பல் நிறுவனம்,கப்பலின் அடித்தளம் (hull) எவ்வாறு உள்ளது என்பதை குறிக்க கொண்டுவந்த க்ரேடுகள்.A,B,C என பிரித்து 1,2,3 என்று ரேட்டிங் கொடுத்துள்ளனர். A1 என்றால் மிகச்சிறந்த கட்டுமானமுள்ள கப்பல். பின்னர் ஆங்கிலபிரபுக்கள் வழி இந்தியாவுக்குள் நுழைந்தது.

-படித்தது

Monday 20 March 2023

போகன்

உண்மையில் யோசித்துப் பார்த்தால்
தாமதமாக தெரிந்துகொண்ட செய்திகளால், காதல்களால்,
வெறுப்புகளால் தான்
என் வாழ்க்கையில்
நான் பலமுறை
காப்பாற்றப் பட்டிருக்கிறேன்

-போகன் சங்கர்

Sunday 19 March 2023

உண்மையின் அகல்விளக்கு எரியும் மனங்களிலிருந்து பிறரை ஈர்க்கச்செய்யும் வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கும்.- சுந்தர ராமசாமி.

ஓஷோ


தெரிந்ததை தேட ஆரம்பித்தால் நாம் சிறிய வட்டத்திலேயே தேடுவோம் செக்கு மாட்டைப்போல. அறியாதவற்றை தேடுங்கள்; அப்போதுதான் உங்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து வெளியேற முடியும்.

தெரிந்ததை கைகழுவுங்கள். அறியாதவற்றுக்காக காத்திருங்கள்

-ஓஷோ

நிரந்திர இன்மை நிறையும்போதுஉரையாடல்களும் அந்த உரையாடல்களுக்கென்றுசேமித்த சொற்களும்சேர்ந்தே இல்லாமல் போகிறது.-வழிப்போக்கன்

Thursday 16 March 2023

எதையும் உற்று ஆராயாதே!அதனால் அதன் ஜீவனை நீ இழந்துவிடக்கூடும்!-ரூமி

போகன்


விலகிப் போகும்போது
வெறுப்பாகவும்
அருகில் வரும்போது
அன்பாகவும்
மாறிக் கொள்கிறது
ஊஞ்சல்

-போகன்

info


'சீப்'பானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பது கர்ச்சீப்.அரச குடும்பத்தினர் மட்டுமே முதலில் பயன்படுத்தி வந்தனர்.1600ல் வட்டம், சதுரமென வெவ்வேறு அளவுகளில் இருந்தது.

பிரான்ஸ் அரசி மேரி தன் கணவர் 16ம் லூயிடம் சதுரமாக இருக்க ஆலோசனை கூறினார். அப்போதிருந்து சதுரமாக தயாரித்தனர்

#info

சுயசமாதானம் என்பது ஒருவிதக் கலை.. அதில் தேறியவர்களால் இவ்வாழ்வை கொஞ்சம் எளிதாகக் கடக்க முடிகிறது . ஆணோ பெண்ணோ கிடைத்தவைகளில் திருப்திப்படுதல் என்பது இந்த வாழ்வை சுமையாகக் கடக்காமல் இருப்பதற்கான வழிகளில் ஒன்று....-சத்யா

Wednesday 15 March 2023

அருந்தப்படாத தேநீரின்சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்உறைந்து போயிருக்கலாம்ஏதேனுமொருசோகமோகோபமோ-நர்சிம்

கபீர்


இரண்டு கைகளாலும் தண்ணீரை வாரி விலக்குங்கள். புதிய தண்ணீர் வந்து சேரும்.பிறருக்கு பிரித்துக் கொடுங்கள், தேடி வந்து சேரும். சேமிப்பது போய்விடும். எடுத்துக் கொடுப்பது சேமிப்பாக இருக்கும்.எதைப் பிரித்துக் கொடுக்கிறாயோ அதுதான் உன் சொத்தாக உள்ளுலகில் தங்கும்.

-கபீர்

விடையை யாரும் சொல்லிவிடலாம். வினாக்கள் உருத்திரள்வது தான் முக்கியம். பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன-சு.வெங்கடேசன்(வேள்பாரி)

Tuesday 14 March 2023

எல்லா உறவுகளும்கண்ணாடி போலத்தான்..உடையாத வரைஒரு முகம்உடைந்துவிட்டால்பல முகம்-லீலா

போகன்


இலவம் காய்கள் வெடித்ததும்
பஞ்சு பிரிந்து
ஒவ்வொரு திரியாய்ப் பறந்து
போகிறது
பூமியின் திசைகள் எங்கும்.

இலவம் மரம்
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்
வழியனுப்பி வைக்கிறது
ஒவ்வொரு திரியையும்

-போகன் சங்கர்

Sunday 12 March 2023

ஷங்கர் ராமசுப்ரமணியன்


பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பில்லாதது நம்மில் பெரும்பாலானோரின் அன்றாட யதார்த்தம். அற்புதங்களோ அரிது. காலங்காலமாக இப்படித்தான் வாழ்க்கை இருந்திருக்க வேண்டும். இந்த அலுப்பான யதார்த்தத்திலிருந்து தப்பிப்பதற்குத்தான் நமக்குக் கனவு தேவைப்படுகிறது. 

இன்னும் மேலான வாழ்வுக்கான லட்சியம் மற்றும் கருத்தியல்கள் தேவைப்படுகின்றன. கலையும் கவிதையும் தேவையாக இருக்கின்றன. கடவுள் தேவைப்படுகிறார். இந்த மண்ணிலேயே அவ்வப்போது தரிசிப்பதற்கும், நினைவில் வைத்துப் போற்றுவதற்கும் கனவைப் போன்ற நிலப்பரப்புகளும் அனுபவங்களும் தேவையாக உள்ளன.

 -ஷங்கர்ராமசுப்ரமணியன்

Saturday 11 March 2023

"தெரியாதவர்களிடம் பத்தில் மூன்று மட்டுமே சொல்!-சீனப்பழமொழி

கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப் போல படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத் தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன-சு.வெங்கடேசன்(வேள்பாரி)

புடவை


புடவை

‘புடவை’ என்பது ‘புடைவை’ என்று இருக்கவேண்டும். ‘புடை’ என்றால் பக்கம், ‘மந்திரிகள் புடை சூழ முதலமைச்சர் வருகை தந்தார்’ என்று செய்திகளில் வருகிறதே, அதுதான். ஆக, ஒரு பெண்ணின் உடலை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி அணியப்படுகிற ஆடை என்பதால், அதற்குப் ‘புடைவை’ என்று பெயர் வந்தது. 

பின்னர் அது எப்படியோ ‘புடவை’ என்று திரிந்துவிட்டது. அதேபோல், ‘துணி’ப்பதால் (துண்டித்து / கத்தரித்து) விற்பனை செய்வதால், அது ‘துணி’. இதே காரணத்தால் ஆடைக்கு ‘அறுவை’ என்றும் பெயர் உண்டு (அறுத்துப் பயன்படுத்துவதால்).

-என்.சொக்கன்

Thursday 9 March 2023

மனித உடலில் வேறொரு எலும்புடன் இணைக்கப்படாத ஒரே எலும்பு எது?பிரபலமாக, ஹையாய்டு எலும்பு என்பது மனிதர்களில் உள்ள ஒரே எலும்பு ஆகும்.இது வேறு எந்த எலும்புடன் தொடர்பு கொள்ளாது, ஆனால் தசை, தசைநார் மற்றும் குருத்தெலும்பு இணைப்புகளை மட்டுமே கொண்டுள்ளது.இந்த தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு இதை மிதக்கும் எலும்பு (Free Floating) என்று கூறுவார்கள்.-படித்தது

சு.வெ


கதை,சொல்லும் போது பெருகக் கூடியது;
நினைக்கும் போது திரளக் கூடியது;
மறக்க எண்ணும் போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம் தான் மனிதன் உணர்கிறான்

-சு.வெங்கடேசன்

Wednesday 8 March 2023

மனம் நேர்மையில்லாதது. பிறரை ஏமாற்றும் சாமர்த்தியம் நிறைந்தது. மற்றவர்களை மட்டுமல்ல, தன்னையே கூட அது ஏமாற்றிக் கொள்கிறது. நீ ஒருநாள் விழித்தாக வேண்டும். இல்லாவிடில் மிகையான சுயமதிப்பீடு காரணமாக நீ ஆபத்தில் சிக்கிக் கொள்வாய்-ஓஷோ


வேள்பாரி


ஆணின் பார்வை பெண்ணின் பார்வையைப் போல் நயமிக்கது இல்லை.ஆணின் கண்கள் காதல் கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல. அவன் பார்வையால் பற்றி இழுத்தாலும், அவள் கண்களால் கைம்மாறு செய்து கொண்டிருந்தாள்

-சு.வெ
(வேள்பாரி)

சின்னத்தம்பி-என். சொக்கன்


மான்விழி, ஒரு தேன்மொழி, நல்ல மகிழம்பூவு அதரம், பூ நிறம், அவ பொன்னிறம், அவ சிரிக்க நெனப்பு சிதறும், ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான், பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்! 

ஒரு பெண்ணின் மூக்கைப்பற்றிப் பலவிதமான வர்ணனைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாட்டுமட்டும்தான் நாசிக்கு ஏலப்பூவை உவமை காட்டுகிறது.

 நான் ஏலக்காய் பார்த்திருக்கிறேன், ஏலப்பூ பார்த்ததில்லை. இதைக் கேட்டவுடன், Cardamom Flower என்று கூகுள் செய்து பார்த்தேன், அழகான மூக்கு :) கிராமத்தில் வளர்ந்த கங்கை அமரன் கண்ணில் இப்படி ஒரு உவமை சிக்கியதில் ஆச்சர்யமே இல்லைதான்! 

இன்னும் கொஞ்சம் தேடியதில், ஒரு நாடோடிப் பாடல் கிடைத்தது. அதில் குழந்தையின் அழகுக் கண்ணுக்கு ஏலப்பூ உவமையாகிறது: கண்மணியே ஏலப்பூ, காதிரண்டும் பிச்சிப்பூ,
மேனி மகிழம்பூ, மேற்புருவம் சண்பகப்பூ!

நன்றி :என்.சொக்கன்

Tuesday 7 March 2023

ரூமி


துயரம் உங்களை பெரு மகிழ்ச்சிக்காக தயார் படுத்துகிறது  .துயரம் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் வன்முறையோடு துடைத்தெடுத்து காலியாக விட்ட இடத்தில் ,புதிய மகிழ்ச்சிகள் தனக்கான இடத்தை கண்டடைந்து நுழைந்துவிடும்.

துயரம் இதயத்தின்  கிளையிலுள்ள  காய்ந்துபோன மஞ்சள் இலைகளை உதிர்த்துவிட்டு, அந்த இடத்தில் பசுமையான புதிதாக இலைகள் துளிர்விட வழிவகுக்கும் . 

- ரூமி

Saturday 4 March 2023

மனிதர்கள் கூட்டுசேரும்போது ஆபத்தானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதிலொரு வேடிக்கை என்னவென்றால் தன்மீது அவனுக்கு நம்பிக்கை கிடையாது. கூட நிற்பவன் பெரிய தைரியசாலி என்று பரஸ்பரம் நம்புகிறார்கள். யாருக்கேனும் ஒன்று கிடைத்ததும் மற்றவர்கள் ஓடி விடுவதற்கான காரணமே இதுதான்.— திருடன் மணியன்பிள்ளை

வாலி


நொந்தாரையும் நொந்து வெந்தாரையும் பார்த்து..

'வாழ்க்கை'யின் முதல் எழுத்து அழைக்கிறது 'வா' என்று.
முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்தால் 'வாழ்'

எதை நம்பி வாழ்கிறது நான்காம் எழுத்து 'கை'
கைகொண்டு உழைத்தாலும் காக்க வேண்டியது 1,2,4=வாக்கை

இதை உள்வாங்கினால் 'வாகை'

-வாலி

இறையன்பு


ஓய்வு என்பது உழைக்காமல் இருப்பது இல்லை.மாறாக, நம் விருப்பத்திற்கேற்ப உழைப்பது. நாம் உழைக்கின்ற களத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது. நமக்கு நாமே எஜமானர்களாக மாறிக் கொள்ள அனுமதிக்கும் சுதந்திரமே ஓய்வு

-இறையன்பு

Friday 3 March 2023

யாசகன்


அசிங்கப்பட்ட பின்பு காட்டப்படும் அன்பானது பகலில் ஏற்றப்படும் விளக்கிற்கு சமம்.

இருந்தும் பயனில்லை
எரிந்தும் பயனில்லை...!!

~ யாசகன் ~

துரை


அப்பாவின் மாத்திரைகள்

அருவருப்பான
என் தொண்டைக்குக் கீழிறங்கும்
மாத்திரைகளை கவனி மகனே
அவை கூறுகின்றன
உன்னை யாரும் கவனிப்பதில்லை
உன்னை எல்லோரும் கைவிட்டார்களென்று

என் இனிய அருவருப்பான
தொண்டை கொண்ட தகப்பனே
நீ வேளைக்கு வேளை
விழுங்குவது மாத்திரைகளை அல்ல
உன் கசப்பான மகனை

-ச.துரை

யோசனையில்நின்றுவிட்டேன்யோசனைகள்நிற்கவில்லை-ராஜா சந்திரசேகர்

தனி அறையில், தனிமைப் படுக்கையில், சுவர்கள் 'என்னைப் போர்த்திக் கொள்' என பயமுறுத்துகின்றன-பாதசாரி

Wednesday 1 March 2023

பெரியார்


இவனுக்கு முன் பிறந்த மற்ற 
எல்லோரும் செய்வதைப் பார்த்து இவனும் செய்கிறான். அவர் பணக்காரர் அதனால் மதிக்கப்படுகிறார். அப்படியானால் நாமும் பணம் சேர்த்தால் நம்மையும் ரொம்ப பேர் மதிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். டி.கே சண்முகம் அவர்கள் ஏழைக்கு ஏது இன்பம் என்ற ஒரு பாட்டில் ''கையில் காசிருந்தால் ஒரு கருங்குரங்கையும் காமன்' என்று சொல்லுவார்கள். முன்னோர்கள் எதை செய்தார்களோ அதை பின்பற்றி மற்றவர்களும் செய்கின்றார்கள்...

-பெரியாரின் உரை ஒன்றில்

மனம் மென்று மென்று சக்கையைப் பெருக்கும். கரைவதில்லை-பாதசாரி

ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்கிறான்.அந்த ஒருவன் நான்தான்-ஆசிரியர் முகமூடி அகற்றி நூலில்..தமிழில் ச.மாடசாமி