Tuesday 27 June 2017

யுகபாரதி

பள்ளி வாசல்

#யுகபாரதி

எல்லாப் பள்ளிக் கூடத்து
வாசல்களிலும்
தட்டுக் கூடையில்
நெல்லி விற்குமொரு கிழவி
குந்தியிருக்கிறாள்.
உருக்கும் வெயிலில்
நாவறளக் கத்திக் கொண்டிருக்கிறான்
ஐஸ் வண்டிக்காரன்.
பிரேயருக்கு முன்னதாக
வராதப் பிள்ளைகளை
வெளியே விட்டுக்
கதவைப் பூட்டுகிறான்
காவலாளி.
பிரம்பைக் கையிலெடுத்து
காந்தியின் அஹிம்சையைப்
போதிக்கிறார் வாத்தியார்.
அடுத்த மாதக் கட்டணத்துக்கு
யாரேனும் ஒரு மாணவனின் தாய்
மூக்குத்தி கழற்றுகிறாள்.

ஈரோடு கதிர்

ஒரு தட்டானின் மரணம்

வெடுக்கெனக் நகர்கிறது ரயில்
உயிரற்ற தட்டானொன்று
சன்னல் விளிம்பில்
ஒட்டியிருக்கிறது

காற்றைக் கிழித்து
ரயில் சீறுகிறது
மினுமினு றெக்கையும்
கண்ணாடி வாலும்
ரயிலின் தடதடப்புக்கேற்ப
நடுங்குகின்றன

வால் பிடித்து
றெக்கை படபடக்க
காற்றில் விடுகிறேன்
பறக்கவிடுதலைத் தவிர
வேறெந்த வகையில்
தட்டானுக்கு
அஞ்சலி செலுத்த!

-ஈரோடு கதிர்

கண்ணதாசன்

ஜூன்24-கவியரசர் கண்ணதாசன்
பிறந்ததினம் இன்று...
*******************************************
காட்டுக்கு ராஜா சிங்கம்,
கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்
பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது.
நான் நிரந்தரமானவன், அழிவதில்லை.
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கண்ணதாசனே அறிவித்தார்.
கவிசரத்தின் சில துளிகள்.
*கண்ணதாசன் என்றால்
கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல.
அழகான கண்களைப் பற்றி வர்ணிப்பதிலும்,
வர்ணிக்கப்பட்டதை படிப்பதிலும்ஆசை அதிகம். அதனால் இந்த பெயரை
வைத்துக்கொண்டேன் என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர்
முத்தையா.
*
சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்கு
தத்துக்கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர்கள் பெயர் நாராயணன்.
*கலங்காதிரு மனமே,
உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே
என்று கன்னியின் காதலியில் எழுதிய முதல்பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த கண்ணே கலை மானே கவிஞரின் கடைசிப்பாட்டு.
*
எப்போதும் மஞ்சள் பட்டுச்சட்டை,வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று
கழுத்து, கைகளில் நகைகள் மின்னும்,
திடீரென்று காணாமல் போய்விடும்.
பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கு என்று
அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை நகைச்சுவையாக
சொல்வார்.
*
மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டல்,
அபிராமபுரம் கவிதா ஹோட்டல்
இரண்டும்தான் கவிஞருக்கு பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்கு
தான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
*வேட்டியின் ஓரத்தை
பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார்.
நடந்து கொண்டே இருந்தால் தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது
செருப்பு அணிய மாட்டார்.
*கொஞ்சம் மது அருந்தி விட்டால் என் சிந்தனைகள்
சுறுசுறுப்படைவது வழக்கம்.
அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை
உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.
*கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல்,
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,தனக்கு பிடித்த பாடல்களாக
என்னடா பொல்லாத வாழ்க்கை, சம்சாரம் என்பது வீணை ஆகிய இரண்டையும்
சொல்லியிருக்கிறார்.
*காமரசர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க
விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால்முற்றுப்பெறவில்லை.
*கண்ணதாசனுக்கு
பிடித்த இலக்கியம் கம்பராமயணம்.நான் பாடல் இயற்றும் சக்தியை பெற்றதே அதில்
இருந்து தான் என்பார்.
*ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால்
சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் பராசக்தி, ரத்தத்திலகம், கறுப்புபணம்,
சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
*முதல் மனைவி பெயர் பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு தலா ஏழு குழந்தைகள்.
50 வயதில் வள்ளியம்மையை திருமணம் செய்தார். இவர்களுக்குபிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15
பிள்ளைகள்.
*படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால்,
சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய் அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கி விட்டுத் தான் செல்வார்.
*கண்ணதாசன் இறந்து விட்டார் என்று இவரே
பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடி பலரும் அழுது கூடிவிட,பிறகு இவரே முன்னால் தோன்றி சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
*உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று
கேட்டபோது, அவர் சொன்ன பதில்...
புத்தகங்களைப் பின்பற்றுங்கள்.
அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்.
*தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படிவாழக்கூடாது
என்பதற்கான உதாரணங்கள் என்றார்.
*திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள். தென்றலா, தென்றல் திரை, முல்லை, கடிதம்,
கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
*திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன்பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. இது எனக்கு சரிவராது என்றார்.
*குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொண்டுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒருதனி மனிதன் தன் உடல்நிலைக்கும், வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர,
அதனால் சமுதாயத்தில் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை என்று தனது
தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
*இறப்புக்கு 11ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன்
கடைசி வரி இப்படி முடியும்....
ஏற்றிய
செந்தீயே நீ எரிவதிலும்
அவன் பாட்டை எழுந்து பாடு..!
நன்றி; ஆனந்த விகடன்..

சரஸ்வதி காயத்ரி

💥ஒரு கிராமத்துப்பள்ளி
ஆசிரியையாக இருப்பதென்பது.

💥மூன்றாம் வகுப்பு
பச்சையப்பனின் அரைஞாண்
கயிற்றிலாடும்
வீட்டுச்சாவியை
அவனின் அம்மா தவிர
யாரும் தொடாமல்
கவனிக்க வேண்டியிருக்கிறது.

💥அடிக்கடி வலிப்பு வருகிற
முனியப்பனின் வாயைத்துடைத்து
அவன் பெற்றோர் வரும் வரை
தவிக்க வேண்டியிருக்கிறது.

💥தத்தித்தத்தி நடந்து வந்த
ஸ்வேதாவை லீடராக்கி
அவளையும் வகுப்பிலொருத்தியாய்
மாற்றிக்காட்ட வேண்டியிருக்கிறது.

💥பேசுவதறியா வார்த்தைகளையெல்லாம்
மறக்க வைத்து
நல்லதை சொல்லப் பழக்கவேண்டியிருக்கிறது.

💥இரவுச்சண்டையில்
வாங்கின அடியில்
ஊருக்குப்போக டி.ஸி கேட்கிற
சர்மிளா அம்மாவை
தடுக்க வேண்டியிருக்கிறது.

💥அரசின் சலுகையைப்பெறுவதற்காக
கார்த்திகாவிற்கு வங்கிக்கணக்கு
தொடங்க வேண்டியிருக்கிறது.

💥படிக்க ,எழுத
கற்பிக்கும் போதில்
கடிந்ததை மறந்து,
குல்மொஹர் மரத்தடி
வகுப்பறையருகே
காத்திருக்கும்
இவர்களுக்காக
தவிர்க்க இயலா காரணம்
தவிர வேறெப்போதும்
விடுப்பெடுக்க யோசிக்க
வேண்டியிருக்கிறது.

- சரஸ்வதி காயத்ரி.

வண்ணதாசன்

ஒரு பறவை இதைவிட
எடையுள்ளதாக இருக்கும்’
கை நினைத்தது.
‘ஒரு கை இதை விட
மென்மையாக இருக்கும்’
பறவை நினைத்தது.
எல்லாம்
அமர்ந்து பறந்த
சிறுகணத்துக்குள்.
- வண்ணதாசன்

கற்பனை

கற்பனை என்பது நிரூபிக்கப்படாத உண்மை
-பாரதி கிருஷ்ணகுமார்

கால்பந்து *மணிகண்டபிரபு

கால்பந்து
*மணி

சுந்தர ராமசாமியின் நாடார் சார் கதையை படித்துக்கொண்டிருக்கும் போதே கால்பந்து விளையாடிய அனுபவத்தை எழுத ஆசை பிறந்தது.1995ல் திருப்பூர் பிஷப் பள்ளியில் (ஆடவர் பள்ளிதான்) ஆறாம் வகுப்பு  பயிலும் போதுதான் முதல் முதலில் கால்பந்தை கையில் தொட்டுப்பார்த்தது அப்போதுதான்.ஆறாம் வகுப்பு E பிரிவில் 110பேர் இருந்தனர்.செவ்வாய்,வியாழனில் பி.டி வகுப்பு.அப்போது பந்து பற்றாக்குறையாய் இருந்ததால் யாராவது ஒரு மாணவன் பந்து கொண்டுவந்தால் அவர்களை விளையாட சொல்லிடுவாங்க..

*நான்கு அணிகளாக பிரித்து இரண்டு அணிகள் சேர்த்து விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டது.

*பந்திற்கு காற்றடிப்பது என்பது கலை.அதை திறம்பட செய்து,அதிக காற்றடித்ததால் ஆரஞ்சு நிற ப்ளாடர் வெளியே தெரிந்தது.

*விளையாட்டு தொடங்கியது..சங்கிலியை பறிச்சிட்டு ஓடுற திருடனை விரட்டுற மாதிரி,ஒரு பந்தின் பின்னால் 110பேர் ஓடினோம்

*பந்தை அடித்தால் வெளியே வராது.கால்களின் இடிபாட்டில் சிக்கி அய்யோ என்னை விட்டிறுங்கடா என பந்து கதறியது.

*சுதந்திரமாய் பந்து ஓடியதே குறைவுதான்..ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அண்ணன் கள் உதைக்க,பாத்ரூம் போகும் சிலர் உதைப்பதும்,வேடிக்கை பார்ப்பவன் எத்துவதும் தொடர்ந்தது

*இதற்கிடையில் சீரியல் விளம்பரம் மாதிரி அடிக்கடி கைபட்டு ஹேண்ட்ஸ் ஆயிடும்."அவே" போயிடும்.அதை தூக்கி வீச வியூகம் பார்ப்பாங்க.என்னவோ ரொனால்டோ மாதிரி

*இதுக்கிடையில் பந்துக்கு சொந்தக்காரன் பந்தை கையிலெடுத்து பரிவோடு தடவிக்கொடுத்து பிஞ்சிருக்கானு பார்ப்பான்.மெதுவாய் உதைங்கடா,இல்லனா எடுத்திட்டு போயிடுவேனு மிரட்டுவான்.அவனுக்கு கோலி சாட் குடுத்து உற்சாகப்படுத்துவோம்

*கோல் கீப்பர் னு ஒருத்தன் இருப்பான். பாலே வராது.சும்மாவே தேமேனு இருப்பான்.நூறுபேர் காலில் சுத்திய கருநாகம் போல் பால் கிரவுண்டிலேயே இருக்கும்.அவன் உட்கார்ந்து மண்ணில் விளையாடிட்டு இருப்பான்

*பிரேமா ஸ்கூலில் இருந்து வந்த நரேஷ் தான் முதலில் ஸ்போர்ட்ஸ் ஷீ அணிந்து வந்திருந்தான்.அதிசயமா இருக்கும்.போய் தொட்டுப்பார்ப்போம்.
அவன் ஓடுவதையே பார்த்து ஷீ அழகை ரசிப்போம்

*சிலர் கடைசிவரை கால்பந்தை ஒருதடவையாவது உதச்சிடனும்கிற வைராக்கியத்தில் முக்கால்மணி நேரம் பந்து பின்னாடியே ஓடுவாங்க

*பந்து கிடைக்காத விரக்தியில் சாமியாராய் போற மாதிரி,மைதானத்தில் உலாத்திட்டு இருப்பானுக,தென்னமட்டை எடுத்திட்டு  கிரிக்கெட் விளையாடுவாங்க, கோல் கீப்பரை மாற்றிவிட்டு சமயத்து கோலி னு புது டெக்னிக் அறிமுகமாகும்.யாரு வேணா பந்து பிடிக்கலாம்

*கடைசியில் விளையாட்டு முடியும்போது,கொஞ்சம் பிய்ந்திருந்த ப்ளாடர் முழுதாய் வாய்திறந்து பந்து வெடித்து கிழிந்தது.அந்த பந்தின் சொந்தக்காரன் எல்லாரையும் திட்டி மண்ணை வாரி தூற்றி அழுதிட்டே வகுப்புக்கு போனான்

*பல்லுக்கு மெதுவாய் பணியாரமாய் கொடுப்பது போல,காலுக்கு இதமான கால்பந்து சிறுவயதில் கிடைக்கல அந்தக்கால பள்ளிகளில்

*எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடிய நிலாக்காலம்

*விளையாட்டாகவே கழிந்த விளையாட்டு பாடவேளை அது

தோழமையுடன் மணிகண்டபிரபு

கவிதை

மனிதரென்றால் ஜூனைத்தின் ரத்தம்
உங்களிடமும் பெருகும்

மனிதரென்றால் ஜூனைத்தின் உயிர் வலி உங்களிடமும் துடிக்கும்

மனிதரென்றால் ஜூனைத்தின் அம்மாவின்
கண்ணீரைப் பெருக்கி நீங்களும் கதறுவீர்கள்

மனிதரென்றால் ஜூனைத்தின் சகோதரனாய்
உங்கள் மடியிலும் ரத்தத்தின் உயிர் வலி சிதறும்

மனிதரென்றால் மாட்டுத்தோல் போர்த்திய காவிக்
கொடூரர்களின் கொடுங்கரங்களை முறிக்க மனிதக் கைகள் ஒன்றிணைந்து உயரும்

மனிதரென்றால் காவிகளின் பீடக்கட்டைகளை
உங்கள் கோபக் கனல் மூண்டெழுந்து எரிக்கும்

மனிதரென்றால் உங்கள் கைகள் மதங்களைக் கழற்றி எறிந்து மனிதர்களாக ஒன்றிணையும்

மனிதர்களாய் நீங்கள் எழுந்து நடக்கிற செம்மண் பாதைகளின் ஓரங்களில் விமானங்களில் பறந்து பறந்து அணிவகுப்பைப் பார்வையிட்ட ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டிருப்பான், முசோலினி முச்சந்தியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பான்

தாடிக்குள்ளிலிருந்து மென் புன்னகை ஒளி வீச மார்க்சும் உங்களோடு நடப்பார்.

-ஸ்ரீரசா

கருப்பு கருணா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும நடத்தும தமிழர் உரிமை மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன்   முன்மொழிந்த மாநாட்டு அறைகூவல்

1. மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இந்தி அல்லாத பிறமொழிகளை இரண்டாம் நிலை மொழிகளாக மாற்றும் நடவடிக்கையில் வெளிப்படையாக இறங்கியுள்ளது. நாடாளுமன்றத்தையும், கல்வியையும், அரசு அலுவலகங்களையும் இந்திமயமாக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது.இந்திய அரசை இந்தி அரசாக மாற்ற முயலும் இக்கொடுஞ்செயலுக்கு எதிராகவும், மொழிசமத்துவத்தை நிலைநாட்டவும், தமிழ்ச் சமூகம்  வீறுகொண்டு எழவேண்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

2.   1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிகளுக்கான விதி ( 1976 Official Language Rules)  பிரிவு 1ன் முதல் இரு பகுதிகள்  பின்வருமாறு கூறுகிறது. அ. இந்த விதிகள் அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல் பயன் பாட்டுக்கானது) விதிகள், 1976 என்று அழைக்கப்படலாம்.
ஆ. இவை இந்தியா முழுமைக்கும் நீட்டிக்கப்படவேண்டும். தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக என்று கூறுகிறது.   ( i. These rules may be called official Languages (Use for Official Purposes of the Union) Rule, 1976. ii They shall extend to the Whole of india, except the state of Tamilnadu)1937 முதல் பல கட்டங்களாக தமிழகத்தில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக 1976ல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் அலுவல் மொழிக்கான விதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் பிரிவுகள் உருவானது.  இந்த சட்டப்பூர்வமான ஆவணம்  ஏட்டளவில் தான் இன்றும் இருக்கிறது. இச்சட்ட விதிகளை அப்பட்டமாக மீறித் தமிழகத்தில் இந்தியை திணிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது. சட்டத்துக்கு உட்பட்டும், சட்டவிரோதமாகவும் நடைபெறும் இந்தித் திணிப்பை உடனடியாகக் கைவிடவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

3.   மாண்புமிகு குடியரசுத் தலைவர்  கடந்த மார்ச் 31 ஆம் தேதி கையொப்பமிட்டுள்ள இந்தித் திணிப்பை மையமாகக் கொண்ட ஆணையையும் அந்த ஆணை ஏற்றுக் கொண்டுள்ள 117 பரிந்துரைகளையும் முறியடிக்க இந்தி   பேசாத  மாநிலங்களின்  முதல்வர்களை உள்ளடக்கிய ஓர்  மொழியுரிமை அரசியல் மாநாட்டினை இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பாரம்பரியம் மிக்க தமிழகம் முன்னெடுக்க வேண்டும். அதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று  முன்கை எடுக்க வேண்டும்.

   இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், மொழி அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், மாணவர் இயக்கத் தலைவர்கள் பங்கேற்கும் மொழியுரிமைக் கருத்தரங்கை சென்னையில் நடத்த இம்மாநாடு தீர்மானிக்கிறது.

4.  இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆளும் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
   அரசியல் சாசனத்தில் 8-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழி ஆக்கவேண்டும் என்றும், அந்த நிலை எட்டப்படும் வரை ஆங்கிலம் ஒரு துணை அலுவல் மொழியாக தொடர வேண்டும் என்றும் இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதையும், சம வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற சட்டப்பேரவையின் தீர்மானம் நடைமுறை படுத்தப்படவேண்டும் என இந்த மாநாடு கோருகிறது. நீதி, நிர்வாகம், கல்வி என அனைத்து துறைகளிலும் தமிழ் நாட்டில் தமிழே தலைமை தாங்க வேண்டும்.
தோழர்.கருப்புகருணா பதிவு

இறையன்பு

மனிதனுக்கு எளிய முறையில் திருப்தியை தருவதற்கு சடங்குகளால் இயலும்
-இறையன்பு

ஜெமோ

எழுத்தாளர் ஜெயமோகன்

ஒவ்வொருமுறை பள்ளிகள் திறக்கும்போதும் இத்தகைய கேள்விகள் பெற்றோரை அலைக்கழிக்கின்றன. எந்தப்பள்ளியில் சேர்ப்பது, எந்தவகையில் படிக்கவைப்பது?

உண்மையில் இந்தக்கேள்வி கல்விமுறை பற்றியது அல்ல. குழந்தைகள் பற்றியது அல்ல. நம்மைப்பற்றியது. நாம் கொண்டுள்ள உலக உருவகம் என்ன என்பதைப்பற்றியது.

வாழ்க்கையை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதே கேள்வி. வாழ்க்கையை ‘கடுமையான போட்டியின் வழியாக உலகியல் வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியுடன் வாழவேண்டிய ஒரு களம்’ என நீங்கள் வகுத்துக்கொண்டிருந்தால் எந்த பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கச்செய்கிறார்களோ அதுவே உங்கள் தேர்வு.

மாறாக வாழ்க்கை என்பது பலவகையான மகிழ்ச்சிகளின் களம் என நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள் என்றால், கண்டடைதலும் வளர்ச்சி பெறுதலும் இன்பங்களில் தலையாயவை என நினைத்தீர்கள் என்றால் உங்கள் தெரிவு பிறிதொன்றாகவே இருக்கும்.

ஒரு குழந்தைக்கு ஒரேயொரு இளமைப்பருவம்தான். அதன் உற்சாகத்தையும் விளையாட்டையும் தானாக கற்றுக்கொள்வதன் பேரின்பத்தையும் அது தன் எதிர்காலத்தின் பொருட்டு முழுமையாகவே தியாகம் செய்யவேண்டும் என்றால் அது எத்தனை முட்டாள்தனம்? அந்த எதிர்காலமோ என்னவென்றே தெரியாத ஒன்று. அப்படிக்கற்றால் எதிர்காலம் வெற்றியாகும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அப்படி கல்லாதவர்கள் அதே வெற்றியை அடையமாட்டார்கள் என்றும் சொல்லமுடியாது.

நம் பதற்றத்துக்காக , நாம் வாழ்ந்த கடந்தகால வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள்  அளித்த பயத்திற்காக, நாம் நம் குழந்தைகளை பலிகொடுக்கிறோம் என்பதே என் எண்ணம். ஆனால் நான் இதைச் சொல்லமுடியாது. ‘பாருங்க, பக்கத்துவீட்டுப்பையன் இருபத்தஞ்சு வயசிலே அமெரிக்காவிலே அஞ்சுலட்சம் சம்பாரிக்கிறான். நம்ம புள்ளையும் அங்க போகணும்’ என நம் மனம் ஓடுமென்றால் அதற்கான கல்வியே உகந்தது. ஒருவரின் தனித்தேர்வு அது.

ஏனென்றால் நம் குழந்தைகள் நாளைக்கு நாம் விழைந்து உருவாக்கி அளிக்கும் பாதையில் போகாமல் சொந்த பாதைகளை தேர்வுசெய்யும்போது நாம் பதறக்கூடும். நாம் தோல்வியடைந்தோம் என எண்ணவும் கூடும். அவ்வாறு ஆசையும் திட்டமும் இருந்தால் அதற்கான கல்வியை அவர்களுக்கு அளிப்பதே முறை. ஆம், கொட்டடிக்கல்வி. அவ்வாறு தன் மக்களுக்கு அத்தகைய போட்டிக்கல்வியை அளித்து அவர்களை ஆளாக்கி நிறைவடைந்த பல நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். அந்த பாதையை தவறு என நான் சொல்லமாட்டேன். அது அவர்களின் வழி. எனக்கு அது சரியெனப்படவில்லை, அவ்வளவுதான்.

இன்னொரு வழி குழந்தைகளின் மகிழ்ச்சி, படைப்பூக்கம் ஆகியவை குறையாமல் அளிக்கப்படும் கல்வி. அதில் அக்குழந்தை தன் வாழ்க்கைவழியை தானே தேர்ந்துகொள்ளும் என்னும் ‘அபாயம்’ உள்ளது அதில் நிச்சயவெற்றிகள் இல்லை. உலகியல் வெற்றிகள் அடையப்படாது போகலாம். பக்கத்துவீட்டுக்காரர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கலாம்.. அதற்கு தயாராக இருந்தால் அவ்வழியை தேர்வுசெய்யலாம்.

அவ்வழியில் குழந்தையை அதிகப்பயணம்செய்யத்தேவையில்லாத பள்ளியில், விளையாட்டும் சுயமான கல்வியும் அதிகமாக உள்ள பயிற்றுமுறையில், நிறைய ஓய்வுநேரம் கிடைக்கும் அமைப்பில் சேர்க்கலாம். ஒன்பதாம் வகுப்புக்குப்பின் போட்டியைப்பற்றி யோசித்தால் போதும். கல்வியில் ஆர்வமுள்ள குழந்தை என்றால் ஒன்பது பத்து மேலிரு வகுப்புகளிலேயே மற்ற பிள்ளைகளுக்கு நிகராக போட்டியில் நின்றிருக்கவும் முடியும். அது இளமையையும் இழந்திருக்காது

ஜெ

பகிர்வு *-ஸ்ரீதர்

*பகிர்வு கவிதை*

#நான்
#பேருந்தில்_செல்லும்போதோ
#ரயிலில்_செல்லும்போதோ
#கொலை_செய்யப்படலாம்,
"நான் இஸ்லாமியன்" என்ற
ஒரு காரணம்
என்னை கொல்வதற்கு
போதுமானதே

அப்போதும்
என்னை காக்க கைகள் வராது, கண்கள் வேடிக்கை பார்க்கும்,
சில உதடுகள்
அவனை கொல்லுங்கள் என முனுமுனுக்கும்,
நமக்கேன் வம்பு என
பலர் ஒதுங்கி கொள்வர்,
இரத்தம் முழுக்க வெளியேறி
சரிந்து கிடக்கும்
என் சிவந்த மேனியுடன் வீடியோக்களும்,
செல்பிகளும் எடுத்து கொள்ளுங்கள்.

இவை
அனைத்தும் நடந்தேற
ஒரே காரணம் மட்டும் போதும்
"நான் இஸ்லாமியன்".
"சக மனிதனாய்
உங்களை போலவே
இரண்டு கை,
இரண்டு கால்,
சிவந்த குருதி,
தடித்த தோலுடன்
எந்த முரண்பட்ட
வித்தியாசமுமின்றி
கோடிகளில் ஒருவனாய்
வாழ்ந்து தானே வந்தேன்
இன்று ஏன் கொல்லபடுகிறேன்"
என சிந்தித்து
விடை கிட்டும் முன்பே
என் உயிர்
என் உடலை விட்டு
விலகியிருக்கும்.

என் மரணத்தை கண்டு பெரும்பாண்மையின் கண்கள் அழுகாது,
உள்ளங்கள் வருந்தாது,
கண்டும் காணதது போல்
கடந்து சென்று விடும்,
அதற்கு அவர்கள்
பழக்கபடுத்தபட்டு விட்டார்கள்.

இவை
அனைத்தும் நடந்தேற
ஒரே காரணம் மட்டுமே போதும்
"நான் இஸ்லாமியன்"
என் வரவை எதிர்பார்த்து
காத்திருக்கும் பெற்றோர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
"நான் இஸ்லாமியன்" என்பதால் கொல்லபட்டு விட்டேன் என்று
அவர்கள் கதறல்கள்
என் காதுகளில் விழாது,
என் அன்னையின்
அணைப்பின் சூட்டை
உணராது சவமாய் கிடப்பேன்..

இவைகள் நடக்காது என
உறுதியிட்டு சொல்பவர்
"இஸ்லாமியன் என்பதற்காக மட்டுமே கொலை செய்யப்பட்ட
அப்பாவி சிறுவன்
ஜூனைதின் கல்லறையை
பார்த்து விட்டு வரவும்"
அங்கே உதாரணமாய்
உறங்கி கொண்டிருக்கிறான்".