Monday 30 October 2023

கனவுகள் தான் வாழ்க்கையை அழகாக்கும். கனவுகள் நிறைவேறுகிற நிமிஷங்கள் நம்மையே அழகாக்கும்-மாரி செல்வராஜ்

முன்னிரவில் தேரடித்தெரு பின்னிரவில் கோடங்கி தோப்புத் தெரு அதிகாலையில்படப் படித்தெரு தெருத்தெருவாய் தேடி அலைகிறான்குடுகுடுப்பைக்காரன் தனக்கொரு நல்ல காலத்தை -ஸ்ரீதர் பாரதி

சு.வேணுகோபால்


விதவிதமான தனிமைகள் வாழ்வில் நிகழ்ந்து கொண்டு தான் வந்திருக்கின்றன. சில தனிமைகள் சமநிலையை தேடிக் கொண்டும், சில தனிமைகள் சொல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டும் செய்கின்றன. 

நிகழ முடியாத விஷயங்கள் மனதை புரட்டி அலைக்கழித்து தனக்குள்ளே வெறிகொண்டு நீள, முடிவில் சிதறிப் போய் விடுகின்றன.

 சிதறியதில் மிச்சம் மீதியை நினைவில் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது. அப்படியும் நிகழ்ந்துவிடுகிற போது, ஓர் அமைதி மட்டும் சொல்ல முடியாத அமைதியாய் தொடர்ந்து வருகிறது

-சு.வேணுகோபால்

Sunday 29 October 2023

பறவைகளின் இடம் கூடோ , மரக்கிளையோ அல்ல. அளவற்று விரிந்திருக்கும் ஆகாயத்தில் திரிவதே பறவையாயிருப்பதன் தன்மை-ஹான்ஸ்

ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொன்றுக்கும் உள்ள அதே அளவு இடைவெளி, ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலும் இருக்கிறது-யுவன் சந்திரசேகர்

உலகில் ஏதாவது ஒரு காரியத்தை சிறிது கூட அலுப்பே இல்லாமல் செய்து கொண்டிருக்கலாம் என்றால்,அது படிப்பது ஒன்றுதான்.வாசகனாக இருப்பதைவிடப் பரம சிலாக்கியமான விஷயம் எதுவுமே இல்லை.-வண்ணநிலவன்

Saturday 28 October 2023

குற்றமும் தண்டனையும்

எந்த ஒரு குற்றவாளிக்கும் குற்றம் செய்யும் சரியான தருணத்தில், மன உறுதியும் ஆராயும் திறனும் எப்படியோ கலந்து போய்விடுகின்றன. எந்த சமயத்தில் அதிகமான எச்சரிக்கை உணவும் கூர்மையாக விரைந்து முடிவெடுக்கும் திறனும் மிக அவசியமாக தேவையோ அப்போது அதற்கு நேர் மாறாக- கிட்டத்தட்ட எல்லா குற்றவாளிகளுக்குமே குழந்தைத்தனமான அவசரம் தொற்றிக் கொண்டு விடுகிறது.

 அந்த நேரத்தில் கிரகணம் பிடித்தது போல பகுத்தறியும் சக்தி மங்கிப்போய் மன உறுதியும் குறைந்து விடுகிறது. இதையெல்லாம் படிப்படியாக ஒரு நோயைப் போல வளர்ந்து கொண்டே வந்து குற்றம் செய்யும் நேரத்துக்கு சற்று முன்பாக உச்சத்தை எட்டி விடுகின்றன.

 சிலருக்கு குற்றம் செய்கின்ற நேரத்திலும் வேறு சிலருக்கு அதன் பிறகும் கூட இந்த நிலை மாறாமல் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களை பொருத்து இது மாறுபடுகிறது. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளும் கூட நோய் பிடித்தது போலவே அமைந்து விடுகின்றன. குற்றத்தை விதைப்பதே எப்படி ஒரு நோய்தானா அல்லது குற்றத்தின் தன்மை இப்படிப்பட்ட நோயின் தாக்கத்தோடு சேருகையில் வேறு வகையாக முடிந்து விடுகிறதா என்ற கேள்விக்கு அவனிடம் தெளிவான முடிவை எதுவுமில்லை.

-குற்றமும் தண்டனையும்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

நிம்மதியடைய வழி ஏதும் இல்லை. ஆனால் குழப்பம் அடைய வழிகள் உண்டு. குழப்பம் தரக்கூடியதை செய்யாமல் இருந்தால் ஒருவன் நிம்மதியாக இருப்பான்-ஓஷோ

Thursday 26 October 2023

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது முட்டாளாக இருக்கிறான். அந்த எல்லையைத் தாண்டாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்-எல்பர்ட் ஹப்பார்ட்

புல்லுருவி


புல்லுருவி - என்பது ஒரு குறிப்பிட்ட மரத்தில் தனது வேரை ஊன்றிக் கொண்டு - அதிலேயே தொற்றிப் படர்ந்து வளரும் ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த செடி /கொடியாகும்.

தன்னை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, தான் படர்ந்த மரத்தின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி அம்மரத்திற்கே இடையூறு செய்துவிடும் ஒட்டுண்ணி (Parasites) இனம் இவை.

இவை எந்த மரத்தின் மீது வளர்கிறதோ - அதன் சத்துக்களின் மூலமாக அம்மரத்தின் இயல்புகளை தகவமைத்துக் கொள்ளுபவை.

தான் வளர இடம் கொடுத்த மரத்திற்கு கேடு செய்வதால்தான் - பிறரோடு ஒட்டி உறவாடி, அவரைச் சார்ந்து வாழ்ந்து - அவருக்கே துரோகம் இழைப்பவரை புல்லுருவி என இகழ்ந்து சொல்வர்.

-படித்தது

Wednesday 25 October 2023

மின்மினி பூச்சி


மின்மினிப் பூச்சிகள் இப்போது கண்களில் தட்டுப்படுவதில்லையே....என்ன காரணம்?
 
 ஃபயர் ஃபிளைஸ்( Fire flies) எனப்படும் மின்மினிப்பூச்சிகளை நாம் மழை, மற்றும்  குளிர்காலங்களில் பார்க்க முடியாது.அப்போது அவை மண்ணுக்கு அடியில் போய் ஒட்டிக்கொண்டு மண்புழுக்களை  உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் . 

வெயில் காலத்தில் மட்டுமே வெளியே வரும். அதுதான் அதன் இனப்பெருக்க காலம் கூட.
இந்த சமயத்தில்தான் மின்மினிப்பூச்சிகள்  வெளிப்பட்டு நம் பார்வைக்கு கிடைக்கிறது.

இந்த பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் சிறப்பு ஒளிர் செல்கள் இரவு நேரங்களில் செயல்பட ஆரம்பிக்கின்றன .
இவற்றில் உள்ள லூசிபெரின் ( Luciferin)  என்கிற  ஒரு ரசாயனப் பொருள் தான் அந்த பூச்சிகளின் ஒளி ஜாலத்துக்கு காரணமாக அமைகிறது .

பூச்சிகள் சுவாசிக்கும் போது அதன் உடலுக்குள் போகும் ஆக்ஸிஜன் உள்ளே இருக்கும் ரசாயனப் பொருளான லூசிபெரினோடு இணைகிறது.
பின் லூசிபெரேஸ் (Luciferase )என்கின்ற என்சைமோடு கலந்து ஆக்ஸிலூரி பெரிலின் என்கிற  ஒளிரும் தன்மையாக மாறுகிறது.   

இப்படி ஒரு பூச்சியினம் வெளிப்படுத்தும் ஒளியின் நிகழ்வுக்கு பயோலூமைன்  சீன்ஸ் ( Bioluminescence) என்று பெயர் .

இதில் உள்ள இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பெண்  பூச்சி வெளியிடும் ஒளியின் அளவை காட்டிலும் ஆண் பூச்சி வெளியிடும் ஒளியின் அளவு அதிகம் என்பதுதான். 

ஒவ்வொரு பூச்சியும்  5 வினாடிகள் இடைவெளி விட்டு ஒளிர்வதால் வெளிச்சம் நமக்கு கண் சிமிட்டுவது போல் தெரியும். 

பத்தாயிரம் மின்மினிப்பூச்சிகள் ஒரே இடத்தில் இருந்தால் 40 வாட்ஸ் பல்பு எரியும் போது எவ்வளவு வெளிச்சம் கிடைக்குமோ அந்த அளவுக்கு வெளிச்சம் இருக்கும் என்பது ஹைலைட்.

உங்கள் குழுவுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமல்ல, எடுத்துகாட்டும்கூட. ஒவ்வொருவரும் இந்தச் சூழ்நிலையில் தன் தலைவன் / தலைவி எப்படி யோசிப்பார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்கிற தெளிவாகத் தெரியும்போது அவர்களும் அந்த அடி ஒற்றிதான் நடப்பார்கள். Think like a leader என்று சொல்வது உண்டு. நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு தலைவர் என்கிற எண்ணம் மேலோங்கும் போது உங்களைப் போலவே நடக்க, வளர அவர்களும் முயற்சிப்பார்கள்-படித்தது

மகுடேஸ்வரன்


எழுத்தாளர் தோழர்கள் கவனத்துக்கு:
ஒற்றுப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி ? 
OO

எழுதும்போது ஒற்றுப் பிழை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நமக்குத் தெரிந்ததுபோல் தோன்றினாலும் எழுதும்போது நம்மையறியாமல் ஒரு பிழை தோன்றிவிடும். ஒற்று இட வேண்டிய இடாமல் விட்டுவிடுவோம். வேண்டாத இடத்தில் ஒற்றெழுத்து வந்துவிடும். ஒற்றுப் பிழை, வலிமிகுதல் பிழை, சந்திப்பிழை, சொற்களின் ஈற்றில் க்ச்த்ப் போடுவதில் பிழை என்று பலவாறும் அழைக்கப்படுவது இதுதான். இதற்குச் சிலவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் போதும். ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதலாம். அவற்றைப் பார்ப்போம் !

1). அந்த இந்த எந்த ஆகிய சுட்டுச் சொற்களை அடுத்து ஒற்று இடவேண்டும். அந்தக் காடு, இந்தச் செய்தி, எந்தப் பாட்டு.

2). அங்கு, இங்கு, எங்கு ஆகிய இடச்சுட்டுகளை அடுத்தும் கட்டாயம் வல்லொற்று வரும். அங்குச் சென்றான், இங்குக் கிடைக்கும், எங்குப் போனாய் ?

3). ஐ என்கின்ற இரண்டாம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் உறுதியாக ஒற்று மிகும். அன்பைத் தேடி, உண்மையைச் சொல், படித்ததைக் கூறு.

4). கு என்கின்ற நான்காம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்தால் கட்டாயமாக ஒற்று மிகும். காட்டுக்குச் சென்றான், வந்தவர்க்குக் கிடைத்தது. பாட்டுக்குப் பாட்டு.

6). அஃறிணைப் பெயரை அடுத்து அதற்கு உடைமையான இன்னொரு பெயர்ச்சொல் வந்தால் கட்டாயம் வலிமிகும். குருவிக் கூடு, மாட்டுக்கொம்பு.

7). இரண்டு பெயர்ச்சொற்கள் சேர்ந்து ஒரே பொருளைக் குறிக்குமானால் அங்கே வலிமிகும். அதனை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பார்கள். வாழைப்பழம், சிட்டுக்குருவி, வாடைக்காற்று.

8). ஊர்ப்பெயரை அடுத்து எந்தச் சொல் வந்தாலும் கட்டாயம் வல்லினமெய்யைப் போட்டுவிட வேண்டும். சென்னைக் கல்லூரி, மதுரைத் தமிழ்ச்சங்கம், நெல்லைத் திருவிழா, கோவூர்க்கிழார்.  

9). இரண்டு பெயர்ச்சொற்களில் முதலாவது உவமை நோக்கில் வந்தால் கட்டாயம் ஒற்று வரும். இதனை உவமைத்தொகை என்பார்கள். தாமரைக்கண், மலைத்தோள்.

10). ஒரு பெயர்ச்சொல் ஓரெழுத்தால் மட்டுமே ஆகியிருந்தால் வல்லொற்று தோன்றும். பூக்காடு, தீப்பிழம்பு.

11). டு, று என்று முடியும் பெயர்ச்சொற்கள் இன்னொரு பெயர்ச்சொல்லோடு இரட்டித்து வரும் இடங்களில் கட்டாயம் வலிமிகும். வயிற்றுப்பசி, காட்டுத்தடம், ஆற்றுத்தண்ணீர்.

12). ம் என்று முடியும் பெயர்ச்சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் ம் மறைந்து ஒற்று தோன்றும். மாவட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர், மாநிலக் குழு.

13). இரண்டு வினைச்சொற்கள் தொடராக வரும்போது பெரும்பாலும் வலிமிகும். ஆடிச் சென்றான், அள்ளிக் கொடுத்தான், எடுத்துச் சென்றாள், முடித்துக் காட்டு  (மென்தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் விதிவிலக்கு – எழுந்து சென்றான், செய்து கொடுத்தான்)

14). ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்திற்குக் கட்டாயம் வலிமிகும். ஓடாக் குதிரை, செல்லாக் காசு, வாராக்கடன்.

15). ஒரு பொருளின் அளவு, நிறம், வடிவம் சார்ந்த பண்புப் பெயர்களோடு சேர்த்து அப்பொருளைச் சொன்னால் கட்டாயம் வலிமிகும் – நெட்டைத்தென்னை, வெள்ளைச் சட்டை, வட்டத்தொட்டி.

இவை தொடக்கநிலை உதவிக் குறிப்புகள். இவற்றை நினைவில் வைத்துக்கொண்டால் பெரும்பான்மையான ஒற்றுப் பிழைகளைத் தவிர்த்துவிடலாம்.

- கவிஞர் மகுடேசுவரன்  
(தினமலர் பட்டத்தில் வெளிவந்தது.)

Monday 23 October 2023

ஊக்கம்



ஒரு திராட்சை தோட்டக்காரர் பழங்கள் எல்லாம் பழுத்ததால் யார் தன் தோட்டத்தில் அந்தி சாயும் வரை பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பொற்காசு அளிக்கப்படும் என அறிவிக்கிறார்.

 சிலர் காலையில் வருகிறார்கள், சிலர் மதியம் வருகிறார்கள், சிலர் கடைசி நேரத்தில் வருகிறார்கள். அவர்களுக்கும் பணி தரப்பட்டு ஒரு நாணயம் வழங்கப்படுகிறது. அவர்களில் ஒருவன் நான் காலையிலிருந்து பணிபுரிகிறேன் எனக்கும் ஒரு நாணயம் அந்தி சாய்வதற்கு முன் வந்த மற்றவர்களுக்கும் ஒரு நாணயம். இது எந்த வகையில் நியாயம்? என்கிறார். 

அதை கேட்ட தோட்டக்காரர் நான் உனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. உனக்கு ஏதாவது கொடுத்த வாக்கை மீறினேனா, அடுத்தவர்களை பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? என்றார்.

 நாம் ஒருபோதும் அடுத்தவர்களோடு ஒப்பிடக்கூடாது. அது ஊக்கத்தை குறைக்கும் ஆயுதம் என்று அந்த உருவக அதை தெளிவுபடுத்துகிறது 

இனிய காலை

உலகிலே இருக்கிற எந்த விலங்கும், மற்ற விலங்குகளை வெறும் பசிக்காகவும் இறைக்காகவும் மட்டும்தான் கொன்று தின்னுமே தவிர மனிதர்களைப் போல பொழுதுபோக்குக்காக, விருதுகள் பெறுவதற்காக, பொருள் ஈட்டுவதற்காக ஒரு நாளும் மற்ற விலங்குகளை கொலை செய்வதில்லை -தியோடர் பாஸ்கரன்

ரயில் பிரேக்


ரயிலில் பிரேக்

இரயில் வண்டிகளில் உள்ள ப்ரேக் இருவகைப்படும். ஒன்று காற்றழுத்தத்தால் வேலை செய்யும். மற்றொரு முறை வெற்றிடம் (vacuum) மூலம் வேலை செய்யும்.
இரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலி இரயிலின் முதல் முக்கிய ப்ரேக் என்பதுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அபாய சங்கிலியை இழுத்தவுடன் அது ப்ரேக்கில் உள்ள வெற்றிடத்தை வெளிக்காற்றால் நிரப்பி விடும், அல்லது அதில் உள்ள அழுத்தத்தை உடனடியாக குறைத்து விடும். அதனால் இரயில் உடனே ஒரு பலத்த அதிர்ச்சியுடன் நிறுத்திவிடும்.
இதைத்தவிர, ஓட்டுநர் அருகே ஆபத்து காலத்தில் அவரே இயக்கவும் ஒரு அமைப்பு இருக்கும்.

நவீன இரயில் வண்டிகளில் அபாய சங்கிலியை இழுத்தால் அது வண்டியை உடனடியாக நிறுத்தாது. ஆனால் ஓட்டுனர் அறையில் இருக்கும் அபாய விளக்கு எரிந்து, அலாரம் ஒலிக்கும். அவர் உடனடியாக எந்த பெட்டியில் இழுக்கப்பட்டது என அறியலாம். அவர் அந்த இடத்தில் உள்ள பயணிகளை காணொலியில் கண்டு பேச முடியும். காரணத்தை அறிந்து அவர் இரயிலை அதிர்ச்சி இன்றி சௌகரியப்பட்ட இடத்தில் மெதுவாக நிறுத்த முடியும்.
(படம் : கூகுள்)

நேர்மையற்ற திறமை அயோக்கியத்தனம், திறமையற்ற நேர்மை கையாலாகாததனம் -சூஃபி

ஐஸ் பாய் விளையாட்டில் ஐஸ்பாய் என்பது "ஐ ஸ்பை" என்பதாம்.தேடி வருபவரின் முதுகை அவருக்கு தெரியாமல் தொட வேண்டும் ஒற்றன் போல#info

Saturday 21 October 2023

ஒரு மனிதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவசரப்படாமல், நிதானமாகவும் கவனமாகவும் செயல்படவேண்டும். அவசரப்பட்டு தவறான முடிவுகளையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டுவிட்டால், பிறகு காலத்திற்கும் அவற்றை அழிக்கவோ,திருத்திக் கொள்ள முடியாமல் போய்விடும்-தஸ்தயெவ்ஸ்கி

விடிந்ததும் தாமரையிடம் கேட்டேன், 'வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?'மெதுவாக தன் கையை அது விரித்தது, அதில் எதுவும் இல்லை.-டெப்ரா வூலர்ட் பெண்டர்

ரூமி


தண்ணீரைத் தேடியலைந்த  தாகம் கொண்ட மீனின் கதையை ரூமி ஒருமுறை சொன்னார். அதன் தணியாத தாகத்திலிருந்து நிவாரணம் தேடி அம் மீன் ஒவ்வொரு திசையிலும் அயராது நீந்தியது. அது நீரிலிருந்து வெளியே எட்டிக் குதித்து, மேற்பரப்பிற்கு மேலே தண்ணீரைத் தேடியது, ஆனால் பயனில்லை. இறுதியாக, மீன் மிகவும் களைத்துப் போய் பலவீனமாக உணர்ந்தது. அதனுடைய அந்த சோர்வில், அது ஒரு கணம் திகைத்து நின்றது. அமைதியான அந்தத் தருணத்தில், அதுவரையிலும் தான் தேடிக்கொண்டிருந்த அந்த  நீரில் , இப்போது தான் நீந்திக் கொண்டிருந்ததை  அது உணர்ந்தது. 
   
"உண்மை, அர்த்தத்திற்கான தேடலில், மீனுக்குத் தண்ணீர் போல  நாம் தேடிடும் பதில்கள் நமக்குள்ளாகவே இருப்பதை நாம்  மறந்துவிடுகிறோம். நாம் வேட்கையோடு மற்ற எல்லா இடங்களிலும் தேடுகிறோம், ஆனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் இருப்பின் சாரத்தை நினைவில் கொள்வதுதான். உள்நோக்கி உங்களுக்குள்ளாகவே பாருங்கள். , நீங்கள் தேடிடும் ஞானம், அன்பு, அர்த்தம் ஆகியவற்றைக் காண்பீர்கள்." என்று கூறி ரூமி அந்தக் கதையை  முடிக்கிறார்.

பெண்களின் கேள்விகளும், குழந்தைகளின் கேள்விகளும், பதிலுக்காக கேட்கப்படுபவை அல்ல. எப்போதுமே அது நீண்ட வாதத்திற்கான நோக்கமாகவே இருக்கும்.-சத்யா

Friday 20 October 2023

மாரத்தான்


மாரத்தான் ஓட்டப்பந்தய வரலாறு;

கிரேக்கத்தில் நிலவும் ஒரு மரபு வழிக் கதையின் படி, கி.மு. 490 ம் ஆண்டு, பெர்சியர்கள் கிரேக்க நாட்டை ஆக்கிரமித்த போது, மாரத்தான் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அப்போது, கிரேக்கர்கள் வென்ற செய்தியினை ஒரு கிரேக்க வீரர் மாரத்தனிலிருந்து, ஏதென்ஸ்க்கு ஓடியே வந்து தெரிவித்து, மயங்கி விழுந்து, உயிர் நீத்தார். மாரத்தான் முதல் ஏதென்ஸ் வரை தூரமானது 25 மைல்கள் அல்லது கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள்.

எனவே, ஒலிம்பிக்ஸ் போட்டி மறுபடி 1896ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது, இது 40 கிலோமீட்டர் என நிறுவப்பட்டது. ஆனால், பின்னர், 1908ம் ஆண்டு, லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற போது, மாரத்தான் போட்டியின் தூரமானது பிரிட்டிஷ் ராஜ வம்சத்தினருக்காக நீட்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, வின்ஸ்டர் கோட்டையிலிருந்து, ஒலிம்பிக் விளையாட்டரங்கின் ராஜ வம்சத்தினர் அமரும் இடம் வரை. அது 26.2 மைல்கள் என இருந்தது. அதுவே தொடர்ந்து விட்டது. 1921ம் ஆண்டு, அதுவே அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது.

எனவே, 26.2 மைல்கள் அல்லது 42.195 கிலோமீட்டர்கள் மாரத்தான் போட்டி தூரம்.

-படித்தது

Thursday 19 October 2023

ஒரு தருணத்தின் முழுமையான அழகு என்பது அத்தருணம் மறையும்போது தொடங்குகிறது.-சோரன் கீர்கேகார்ட்

சிறந்த சண்டைகளானது,நாம் தவிர்த்த சண்டைகள் தான்.-ஜாக்கி சான்

பிரார்த்தனைஎன்னால் எதை மாற்ற முடியுமோ அதை மாற்றுவதற்கான சக்தியை எனக்கு கொடு.என்னால் எதை மாற்ற முடியாதோ அதை ஏற்றுக் கொள்வதற்கான மனோபலத்தை எனக்கு கொடு. எதை என்னால் மாற்ற முடியும் எதை என்னால் மாற்ற முடியாது என்று பகுத்தறிவதற்கான அறிவை எனக்கு கொடு-சுகபோதானந்தா

சிந்தையை அடக்கி சும்மா இருத்தல் சுகம்-வள்ளலார்

Wednesday 18 October 2023

டென்ஷன் என்பது சத்தத்தைப் போல! சத்தத்தை உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் கட்ட வேண்டும். 'டென்ஷன் இல்லாமல் இருப்பது' என்பது அமைதியைப் போல! நிசப்தத்தை உங்களால் உண்டு பண்ண முடியாது! ஏனென்றால், அது ஏற்கனவே இருக்கிறது!-படித்தது

"பள்ளிக்கூடந்தான் எங்க பிள்ளைகளுக்கு நிழல்.நிழலுக்கு வரத்தான் இந்தப் பாடு".அடித்தட்டுக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கெல்லாம் பள்ளிதான் நிழல்.-கேரளாவில் புலையர் சமூகத்தினர் முதன்முதலாய் பள்ளி செல்லும்போது சொன்ன வாக்கியம்

வாழ்வை புரிந்து கொள்வதற்காக மனிதன் படைக்கப்படவில்லை. வாழ்க்கையை வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளான்-சாந்தயானா

Tuesday 17 October 2023

யார் இந்த சிந்தனையை உருவாக்கினார்கள் என்று சிந்தித்தால் அதுவும் நம் மனம் தான்! மனதின் கதவு அகலமாக திறந்திருக்கும் போது நாம் ஏன் சிறையில் இருக்க வேண்டும்?"-ரூமி

வெட்சித்திணையில், எதிரிநாட்டிலிருந்து அநிரைகளைக் கவர்ந்து வரச் செல்லும் வீரன் யுத்தத்தில் மாண்டுபோனாலோ, எதிரிகளை அழிக்கும் போரில் உயிர் நீத்தாலோ நடுகல் நட்டு வணங்குவது மரபு. பிற்காலத்தில் அது மாடன் வழிபாடாக வளர்ந்தது. தங்களுக்காக உயிர்விடுவோரை மக்கள் மாடனாக கருதினர்-வெ.நீலகண்டன்

வெயிலில் சோர்வுற்று என் தோள்பிடித்து நடந்துவந்தாய் நினைவிருக்கிறதா?அந்தத் தோளைத்தான் இன்றும்சுமந்து திரிகிறேன் நீ இல்லாத பாலையில்.-லதாமகன்

"அறிந்து கொள்ளல் என்பது இரண்டு வகை. ஒன்று, புரிந்துகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளுதல், மற்றொன்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிந்து கொள்ளுதல்-படித்தது

Wednesday 11 October 2023

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் குறையாதவரை வாழ்க்கை அயர்ச்சியூட்டுவதில்லை. புதிதாக ஒன்றை அறியும் ஆர்வத்தை இழக்கும்போது நாம் ஏதோ ஒரு படிக்கட்டிலிருந்து இறங்குகிறோம்-மகுடேசுவரன்

கம்பலை



'கண்ணீரும் கம்பலையுமாக நின்றான்' என்பதில் வரும் கம்பலை என்பதன் பொருள் என்ன?

கம்பலை என்பதற்கு நடுக்கம் என்பது ஒரு பொருள். ஓசை என்னும் ஒரு பொருள் உண்டு. அழுகையும் கூச்சலுமாக நிற்றலைக் குறிப்பதனால் கம்பலை என்பதற்கு ஓசை என்று பொருள் கொள்வது சிறப்பு; 'வம்ப மாக்கள் கம்பலை மூதூர்' என்று மணிமேகலை அடியில் அப் பொருளில் வருவது காண்க.
---கி.வா.ஜ பதில்கள்

Monday 9 October 2023

இறந்த காலத்தைநினைவுகளால் திற.நிகழ்காலத்தைச்செயல்களால் திற.எதிர்காலத்தைநம்பிக்கையால் திற.-ராஜா சந்திரசேகர்

எடை மேடை


எடை மேடை

இதற்கு ஆங்கிலத்தில் "weighing Bridge" என்று பெயர்.

மிகவும் பளுவான வாகனங்கள் காலி எடையையும் மற்றும் பொருள்கள் ஏற்றிய பிறகும் அதன் எடைகளை நிறுக்க இது உபயோகமாகிறது. அதில் ஏற்றியுள்ள எடையையும் அறிய முடியும்.

அந்த வாகனங்களில் ஏற்றப்படும் பொருள்களுக்கான பில்லில் குறிப்பிட்ட எடையை சரிபார்க்கவும் உதவும். இது சில சமயங்களில் காவல் துறைக்கு தேவைப்படலாம். அதில் வேறு ஏதாவது சாமான்கள் ஏற்றப்பட்டனவா என்பதையும், அல்லது கடத்தல் சாமான்களின் எடையை கண்டறிய உதவும்.

இரு மாநிலங்களின் எல்லைப்பகுதி சுங்கச்சாவடி அருகிலும் இவற்றை காணமுடியும்.

-படித்தது

Sunday 8 October 2023

நேர்மையாக இருப்பதால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்காமல் போகலாம்.ஆனால்,அது எப்போதும் உங்களுக்கு சரியானவர்களைப் பெற்றுத்தரும்.-ஜான் லெனான்

தில்லானா மோகனாம்பாள்


''தில்லானா மோகனாம்பாள்'' படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள்.

அவர்களில் இளையவரான பொன்னுசாமியை  சந்தித்தபோது எடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

''தில்லானா மோகனாம்பாள் ' படத்திற்கு நாங்கள் தான் நாதஸ்வரம் வாசிக்கப் போகிறோம் என்று முடிவானதும் ஒன்றைத் தீர்மானமாகச் சொன்னார். ''நாதஸ்வர இசை ரிக்கார்டிங் நான் இல்லாம நடக்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டு கே.வி.மகாதேவன் குழுவோடு ரிக்கார்டிங் நடக்கும்போது கூடவே இருப்பார் சிவாஜி. நாதஸ்வரத்தை
நாங்கள் வாசிக்கிறபோது எங்களுடைய முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை நாங்கள் தாங்கிப் பிடிக்கிற போக்கு இவற்றையெல்லாம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். படத்தைப் பிறகு பார்த்தபோது தான் அவருடைய கவனிப்பின் அர்த்தம் புரிந்தது.

சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங். நகுமோ, தில்லானா, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பலவற்றை எடுத்திருந்தோம்.

ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம் நாங்கள். இன்னொரு புறம் சிவாஜி, ஏ.விஎம்.ராஜன்,பாலையா, சாரங்கபாணி குழுவினர்.
நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள் வாசிக்கிற மாதிரி அபிநயிக்க வேண்டும்.

''எப்படி இருக்கு?'' என்று எங்களிடம் கேட்டார் சிவாஜி.

'' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த நாங்கள் நகல்ன்னு சொல்ற அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க'' என்று நாங்கள் சொன்னதும் சிவாஜிக்கு மகிழ்ச்சி.

பிளாட்டிங் பேப்பர் மாதிரி எங்களுடைய முகபாவங்களைப் பார்வையிலேயே உறிஞ்சிவிடுவார். நாதஸ்வரத்தை அழுத்தி வாசிக்கும்போது கழுத்து நரம்பு புடைப்பதைக் கூட அழகாகப் பண்ணியிருப்பார்.

பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவில்காரரிடம் வாசிக்கவே கற்றுக் கொண்டு தவிலை எங்களுக்கு வாசித்தே காண்பித்தார். படத்திலும் அமர்க்களப்படுத்திவிட்டார்.

அவ்வளவு அற்புதமான கலைஞர்கள்!''

நன்றி மணா, என்.சொக்கன் .

Saturday 7 October 2023

பேச்சுஇருவரில் ஒருவரையாவது காயப்படுத்தக்கூடியவல்லமை பெற்றது.மௌனம்இருவரில் ஒருவரையாவதுஆற்றுப்படுத்தக்கூடியவல்லமை பெற்றது.-சேரவஞ்சி

தங்கம்


தவறவிட்ட தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில்… 
3000 மீ தொடர் Roller- skater போட்டியில் (மூன்று பேர்) பைனலில் ஓடிய அணிகளில் தென் கொரியாவும் சீன தாய்பே அணிகளும் முடிவு லைனை தொடும் வினாடி… பின்னால் மின்னலாய் ஸ்கேட்டிங் செய்து வரும் சீன தாய்பே வீரரைக் கணிக்காமல் வெற்றிக் கோட்டினைத் தொட்டு விட்ட உணர்வில் நெஞ்சை நிமிர்த்தி கையை உயர்த்தி மகிழ்ச்சியைத் தெரிவித்த தென் கொரிய வீரரை .01 வினாடி முந்தி காலை நீட்டி போட்டோ பினிஸில் வெற்றிக் கோட்டை தொட்டார் சீன தாய்பே வீரர்.. 

இவர் கோட்டைத் தொட்டு தங்கம் பெற்றார்… தங்கம் பெற வேண்டியவர் கோட்டை விட்டு வெள்ளியைப் பெற்றார்… ஆன்லைனில் தென் கொரியர்களின் எக்கச்சக்க வசவுகளையும் சேர்த்தே பெற்றார்… மூன்று வீரர்களின் ஓட்டமும் அவசர வெற்றிக் களிப்பால் புளிப்பாகிப் போனது.. வெள்ளி பெற்றும் வேதனை தான் மிஞ்சியது.. எதிலும் கண் மண் தெரியாத ஆர்ப்பாட்டம் கூடாது தம்பி…

கொஞ்சம் அதிகமா சத்தம் போட்டு சிரிச்சாவே போதும் அவனுடைய வாழ்க்கையே அவனிடம் கேட்குமாம்.. டேய் யார்ராது சத்தம் போட்டு சிரிக்கிறதுன்னு.. அது போல் தான் ஏகமாய் சிரித்தவனிடமிருந்து தங்கத்தை தட்டிக் கொண்டு போய் பணிந்து குனிந்தவனிடம் கொடுத்து விட்டது போல…

ஒட்டகம்


ஒட்டகம் ஒன்று காட்டில் கடுமையாக தவம் செய்து தன்னுடைய கழுத்தை நீண்டதாக இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றது. ஆனால் சோம்பல் மிகுந்த அது நீண்ட கழுத்தின் உதவியால் இருந்த இடத்தில் நின்றபடியே உணவு உண்டது.

ஒரு சமயம் பெரு மழை பெய்தபோது..குகையொன்றில் தலை நீட்டியபடி இருந்தது. பசியில் இருந்த
நரி ஒட்டகத்தின் கழுத்தினை தின்ன ஆரம்பித்தது.ஒட்டகம் கழுத்தை சுருக்கமுடியாமல் இறந்தது.

தெய்வமே வரம் தந்தாலும் சோம்பேறியானவன் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தாமல் அழித்து விடுவான் என்பது பாண்டவர்களுக்கு அம்பு படுக்கையில் பீஷ்மர் சொன்ன உபதேசக் கதை இது

கடல்மட்டம்


கடல் மட்டம் 

நாசா செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் கடல் மட்டத்தை அளவிடுகிறது.

ஜேசன்-3 செயற்கைக்கோள் கடலின் மேற்பரப்பின் உயரத்தை அளவிட ரேடியோ அலைகள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்துகிறது - இது கடல் மட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

மற்றபடி பூமியின் பல்வேறு இடங்களின் உயரம் 'ஆல்டிமீட்டர்' என்ற கருவியின் உதவியுடன் அளவிடப்படுகிறது.

ஒரு இடத்தில் உயரத்தை அளக்க பயன்படும் கருவி அடிப்படையில் ஒரு காற்றழுத்தமானி ஆகும். கடல் மட்டத்தில், பாரோமெட்ரிக் திரவத்தின் (மெர்குரி) உயரம் 76 செ.மீ. ஒரு இடத்தில் பாதரசம் காட்டும் அளவை வைத்து அந்த இடத்தின் உயரத்தை கணக்கிடுவார்கள்.

-படித்தது

Thursday 5 October 2023

படித்தது



ஒளிமயமான  எதிர்காலம் , பட்டொளி வீசியது , ஒளிர்ந்தது என்றெல்லாம் சொல்கிறார்கள்.. ஒளி என்றால் என்ன என தெரிந்து கொள்ள ஆசை என்றது ஒரு ஆழமான குகை.. அது ஒரு போதும் ஒளியை பார்த்ததில்லை...

இருளின் ஆழம் , இருண்ட முகம் என்றெல்லாம் சொல்கிறார்களே..இருளை காண ஆசை என்றது அகல் விளக்கு,,,

கட்வுள் இருவர் ஆசையையும் நிறைவெற்ற நினைத்து இருவரையும் மற்றவர் இடத்துக்கு ஒரு முறை போய்ப்பார்க்க ஏற்பாடு செய்தார்..

குகை தன் பண்புகளோடு கூடிய ஓர் உருவம் எடுத்து அகல் விளக்கின் இடத்துக்கு சென்றது.. 
அடடா...ஒளியின் அழகு என்னே,,, ஒளி மட்டும் அன்று...அதன் கதிர்கள் தொடும் இடங்களும் ஒளிர்கின்றவே..... என வியந்து மகிழ்ந்தது..

விளக்கு குகைக்கு சென்றது..

வித்தியாசமாக எதுவும் தென்படவில்லையே... எப்போதும் நான் காணும் மெல்லொளிதானே இங்கும் இருக்கிறது ! என அலுத்துக்கொண்டது

-படித்தது

Wednesday 4 October 2023

மனமுறிவு


மனமுறிவுக்கு அடிப்படை காரணம் "ஒன்றையே பற்றி இருத்தல்".இது இன்னொரு எண்ணத்திற்கு இடம் தராததால், அடுத்த கட்டத்துக்கு போகாமல் தடுக்கிறது. அதேவேளையில் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல விடாமல் மனம் என்ன செய்யும். மூன்று காலங்களில் ஏதாவது ஒன்றில் மனம் இருக்க வேண்டும்.

இம்மூன்றுக்கும் வலியில்லாத போது மனம் முறிகிறது. எனவே நாம் அடைய விரும்பும் ஒன்றை 'ஒற்றை நிலையாக' வைத்துக் கொள்ளாமல், நடக்காமல் போனால் அதற்கு மாற்றாக வேறொன்றை வைத்திருப்பது நல்லது. ஒரே இடத்திலேயே மனம் முடங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

மனிதர்கள் நேசிக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டவர்கள். பொருட்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை.ஆனால், உலகத்தின் குழப்பத்துக்குக் காரணம், பொருட்கள் விரும்பப்படுவதும், மக்கள் பயன்படுத்தப்படுவதும் தான்.- தலாய்லாமா

Tuesday 3 October 2023

சின்ன புறக்கணிப்புதான்மனதை எவ்வளவு வருத்துகிறதுசின்ன நெளிவுதான்எவ்வளவு மரியாதை தருகிறதுசின்ன புன்னகைதான்எவ்வளவு பகையை உடைக்கிறதுசின்னச் சின்னதுதான்எவ்வளவு பெரிதாக இருக்கிறது?-ப.உமா மகேஸ்வரி

மரணத்தின் வலியைவிட, பிரிவின் வலி அடர்த்தியானது. அது அடர்ந்த ரோஜாக்காட்டில் பூக்கள் உதிர்ந்த பின் முட்களுக்குள் நடப்பதைப் போன்றது-நரன்

“அத்தனையும் தொடங்க ஒரு தாயம் தேவை. அது ஆடுபவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் விழும். முதலில் தாயம் விழுந்து ஆட்டத்தைத் தொடங்குபவர்கள்தான் வெல்வார்கள் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. தாயத்தின் மதிப்பு வெறும் ஒன்றுதான். ஆனால் தாயம் விழாதவர்கள் ஆட்டத்தையே தொடங்க முடியாது. தாயம் இல்லாமல் எத்தனை விழுந்தாலும் பயனில்லை.”-ஷான்

காந்தி


காந்தி ஒன்றே ஒன்றைத்தான் கோரினார், நாம் நம் பிரச்சினைகளைத் தீர்க்கத் தேர்ந்தெடுக்கும் முறைகளுக்கு அளிக்கும் மதிப்பீடுகளை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

இந்த இருபதாம் நூற்றாண்டில், நாம் சக மனிதர்களை கவுரவமாக நடத்த முயன்று கொண்டிருக்கும் சூழலில், மற்றவனின் தலையை கொய்வதை காட்டிலும் வேறுவழிகளில் நம் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழியை கண்டடைய முடியும் என்றார். நமது மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கெஞ்சினார்....

சர் ரிச்சர்ட் அட்டன்பரோ  'காந்தி'  திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதினைப் பெற்றுக்கொண்டபோது பேசியது

இறந்தார் என்ற சொல்லுக்கு "கடந்தார்" என்பதுதான் பொருள்.அதையேதான் ஆங்கிலமும் passed away என்கிறது. எங்கிருந்தோ வந்தார், இப்போது இந்த பூவுலகத்தைக் கடந்தார் என்று இவ்வுலக வாழ்வை நீத்தாரை அச்சொல் சுட்டுகிறது.-பழ.அதியமான்

Monday 2 October 2023

சு.ரா


"உனக்கான சந்தோசத்தை நீதான் உனக்கு கொடுத்துக் கொள்ள வேண்டும்" யாரும் உனக்காக மெனக்கெட்டு இவனுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும் என நினைக்கமாட்டார்கள். அவர்களுக்கும் ஒரு
வாழ்க்கை இருக்கும். அதைப் பார்க்க வேண்டும். சில தருணங்கள் அவர்கள் தரலாம், தர முடியும். உனக்காகவே வாழ முடியுமா? உனக்கான மகிழ்ச்சியை நீ தேடு.

-சுந்தர ராமசாமி
(குழந்தைகள் பெண்கள் ஆண்கள்)