Wednesday 31 August 2022

ஜீயோ டாமின்

“எனக்கு இப்போ ஐஸ்கிரீம்தான் வேணும்; அதும் சாக்லேட் பிளேவர் இருந்தாதான் சாப்பிடுவேன்; இப்போவே இங்கயே இந்த நிமிஷமே எனக்கு வேணும்” என்று குழந்தைகள் அழுது அடம்பிடிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் வளர வளர இந்தக் குழந்தை இயல்புகள் மறைந்து நாம் முதிர்ச்சியடையத் தொடங்கிவிடுகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதலாளித்துவ நுகர்வுப் பொருளாதாரமானது நம்மை மீண்டும் குழந்தைகளாக்கிக்கொண்டிருக்கிறது என்று பல்வேறு தரவுகளோடு விவரிக்கிறார் ‘Consumed’ புத்தகத்தின் ஆசிரியர் பார்பர்.

எப்படி சந்தையானது பெரியவர்களைக் குழந்தைகளாக்கியிருக்கிறது (Infantilizing adults) என்பதைச் சொல்லும்போது குழந்தையிலிருந்து பெரியவராகும்போது ஏற்படும் முதிர்ச்சியை பிரித்துக் காட்டும் தனித்தன்மைகள் மங்கி மறைந்து வருவதைக் குறிப்பிடுகிறார். ‘கடினமானதைவிட எளிதானதையும்’ (Easy over Hard), ‘சிக்கலானதைவிட எளிமையானதையும்’ (Simple over Complicated), ‘மெதுவானதைவிட வேகமானதையும்’ (Fast over Slow) தேர்ந்தெடுக்கும் குழந்தைத்தனமான பண்புகளிலிருந்து வெளியேறாதவர்களாகவும் உடலளவில் மட்டும் வளரும் முதிர்ச்சியற்றக் குழந்தைகளாகவும் நாம் சந்தைப் பொருளாதாரத்தால் மாற்றப்பட்டிருக்கிறோம் என்கிறார்.

நேற்றைய இந்து பத்திரிகையில் வெளியான “The age of hyper – lapse Consumerism’ என்ற கட்டுரையில் வெளியான ஒரு தகவல் இதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதாவது 18-36 வயதுவரையிலான 50 விழுக்காடு ஆன்லைன் நுக்ர்வோர், தாம் ஆர்டர் செய்த பொருட்கள் அன்றே டெலிவரி கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களாகவும், 61 விழுக்காட்டினர் ஒன்றிரெண்டு மணிநேரங்களுக்கு உள்ளேயே அவை டெலிவரி செய்யப்படவேண்டுமென்று எதிர்பார்ப்பதாகவும் குறிபிடும் கட்டுரை பத்து நிமிடத்தில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதாக விளம்பரப்படுத்தும் வணிக நிறுவனங்களின் வாக்குறுதியைப்பற்றிப் பேசுகிறது. கொஞ்சம் சிந்தித்தால் நம்மில் பெரும்பாலானோர் ஹோட்டல் டேபிளில் அமர்ந்து ‘ஆனியன் ஊத்தாப்பம்’ ஆர்டர் செய்துவிட்டு அது வேகுவதற்கான பொறுமைகூட இன்றி பதட்டமும் பரபரப்பும் அடைவதையும், ஊழியர்களிடம் எரிந்து விழுவதையும் ‘Fast over Slow’ என்ற குழந்தைத்தனமான மனநிலையோடு பொருத்திப் பார்க்க முடியும்.

உடனடி நுகர்வுக்கான ஆன்லைன் அப்ளிகேஷன்கள் முதல் ‘கடன் அட்டையிலாவது’ வாங்கிக்குவிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைவரை நம் விரல் நுனியில் இன்று திணிக்கப்பட்டிருக்கும் நிலையில் ‘நீடித்த மகிழ்ச்சி’யை அன்றி ‘உடனடி இன்பத்துக்காக’ எதையும் செய்யும் குழந்தைத்தனமான மனநிலைக்கு சமூகம் சென்றிருக்கிறது என்கிறார் ஆசிரியர். நுகர் பொருட்கள் மட்டுமின்றி பாலியல் தேவைக்குக்கூட (இதுவும் இப்போது ஒரு நுகர்வுதான்) ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து - பழகி – புரிந்துகொண்டு - பரஸ்பர அன்போடு உறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கமிட்மெண்ட் இல்லாத உடலுறவுகள் அல்லது அவை வாய்க்காதபட்சத்தில் கொட்டிக்கிடக்கும் இணைய போர்னோகிராபியை நுகர்வதும் கொஞ்சமும் காத்திருக்க முடியாதபடி உடனடிக் கிளர்ச்சிதரும் சுய இன்பத்தில் ஈடுபடுவதையும்கூட குழந்தைத்தனத்தின் வெளிப்பாடுகளாகப் பட்டியியலிடுகிறார் பார்பர்.

சந்தைப் பொருளாதாரம் சமூகத்தின் கலாச்சாரத்திலும் உளவியலிலும் ஏற்படுத்தியிருக்கும் தீவிர வீழ்ச்சியைப் பார்க்கும்போது, வெறும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் மட்டுமே இந்தச் சமூகத்தை முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் தளைளிலிருந்து விடுவித்துவிடுமா என்பது எளிதில் விடைசொல்ல முடியாத கடினமான கேள்வியாகவே தெரிகிறது.

-ஜீயோ டாமின்

லா.ச.ரா

எல்லாமே தெரிந்த வரைக்கும் தானே!
மிச்சமெல்லாம் துணிச்சல் தான்.வாழ்க்கையின் நியதியே துணிச்சல்தான்

-லா.ச.ரா

அ.முத்துலிங்கம்

அந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக்கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன்பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். அவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். அவன் பணிபுரிந்த நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப்பணம் உண்டு. மாதாமாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.

ஒருநாள் அவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!

என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. அந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. அவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத்தில் உழலும் அவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத அந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். அவனுடைய நடத்தைக்கான காரணத்தை தான் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேர்மையின் தரம் நேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரைமணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது, அதுதான் உண்மையான நேர்மை!

நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மனசாந்திக்காக, நம் சந்ததியினரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு சாத்தியமாக இருந்தது நமக்கும் சாத்தியமாகும்!

~ அ.முத்துலிங்கம்

Monday 29 August 2022

நீதிக்கதை

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..கடைக்காரர் விரட்டி விட்டார்..
திரும்ப திரும்ப அந்த நாய்கடைக்கு வந்துச்சு...

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு
வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு,
மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..
கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது..
அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது... பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..
கண்டக்டரும் நாய் வாயில் இருந்தபணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க??
அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க..
நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

 நீதி :பெரும்பாலும் நிர்வாகம் அலுவலகம் என்பது அப்படித்தான்
நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.

மனுஷ்யபுத்திரன்

கேட்பாய் என சொல்லாதிருந்தவை
சொல்வாய் என 
கேட்காமல் இருந்தவை 
தவிர ஒன்றுமில்லை
இடைவெளியென்றும்
ரகசியமென்றும். 

-மனுஷ்யபுத்திரன்

வண்ணநிலவன்

வாழ்வில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து விடக்கூடும் என்று காத்திருக்கிறார்கள். மனிதர்களிடமிருந்து சந்தோஷம் கிடைக்காத போது மழையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்

-வண்ணநிலவன்

Sunday 28 August 2022

அன்னை தெரசா

மனிதர்களை மதிப்பிட்டுக் கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமிருக்காது

-அன்னை தெரசா

முகமது அலி

எனது மனதால் ஒரு கருத்தை உருவாக்கி கொள்ள முடியும் போது,எனது இதயத்தால் அதை நம்பமுடியும் போது ஏன் அதை என்னால் செய்ய முடியாது

-முகமது அலி

Saturday 27 August 2022

சேரவஞ்சி

மதிப்பீடுகளுக்கு அலையாத மனதிற்கு ஒரு சிங்கத்தின் சுதந்திரமும்,
மதிப்பீடுகளுக்கு அலைகிற மனதுக்கு ஒரு மானின் அச்சமும் எப்போதும் உண்டு

-சேரவஞ்சி

Thursday 25 August 2022

படித்தது

உலகில் தீமை செழித்து வளர என்ன செய்ய வேண்டும்?

நல்லவர்கள் எல்லோரும் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தாலே போதும். பூனை வளர்க்காதது எலிகளை வளர்ப்பதற்குச் சமமாகும்.

-படித்தது

Wednesday 24 August 2022

நாண்மணிக்கடிகை

இன்னாமை வேண்டின், இரவெழுக;
இந் நிலத்து
மன்னுதல் வேண்டின்,புகழ் நடுக;-தன்னொடு
செல்வது வேண்டின், அறஞ்செய்க;  வெல்வது
வேண்டின், வெகுளி விடுக!

-துன்பம் வேண்டின் பிச்சை கேட்டுப்பாருங்கள்,பெயர் நிலைக்க உங்கள் புகழை விட்டுச் செல்லுங்கள் தழைத்துக் கொண்டே இருக்கும்.உங்களோடு எடுத்துச் செல்ல அறச்செயல்கள் உள்ளன.அனைத்து காரியங்களும் வெற்றி பெற வேண்டுமாயின் கோபத்தை விட்டு ஒழியுங்கள்

-நாண்மணிக்கடிகை

சேரவஞ்சி

உங்கள் தவறுகளை மட்டும்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
ஓர் உலகம்.ஒரு வேட்டை நாய் இரைக்குக் காத்திருப்பதைப் போல..
உங்கள் வெற்றியின் போதே அந்த நாயை காண முடிவதே இல்லை அருகில்

-சேரவஞ்சி

Tuesday 23 August 2022

மதன்

Number என்ற ஆங்கிலச் சொல்லை சுருக்கி எழுதுகையில், ‘No’ என்று எழுதுகிறோம். இதில் N-க்குப் பக்கத்தில் O எப்படி வந்தது?

 நியூமராலஜி, நியூமரிக்கல் என்று சொல்கிறோம் அல்லவா? நியூமரோ (Numero) என்றால் நம்பர். அதன் முதலும் கடைசியுமான சுருக்கம்தான் அது!

-மதன்

Sunday 21 August 2022

யுவன் சந்திரசேகர்(வெளியேற்றம்)

வாசல் தெளிப்பதற்காக எழுந்து வந்தாள் சித்ரா. முந்தைய இரவில் தூறல் விழுந்திருக்க வேண்டும். தரை ஏற்கெனவே ஈரமாக இருந்தது. கொட்டாங்கச்சியில் வைத்திருந்த கோலப்பொடியால் நாலாதிசையிலும் இரட்டைக்கோடுகளைக் கடனேயென்று இழுத்தபிறகு உருவான சிறு கட்டத்தில் கோலத்தின் சாயல் இருந்தது. 

எதையுமே மனமொன்றிச் செய்யப் பிடிக்காத நாட்கள் இவை. வருடக்கணக்காக ஒரே விதமாய்க் கழியும் வாழ்க்கையின்மீது ஒருவிதமான சலிப்பு ஊறியிருக்கிறது... நாற்பது வயதைக் கடக்கும்போது பெண்கள் சந்திக்க நேரும் உடல் உளைச்சலின் பகுதிதான் இந்த மன உளைச்சலும்..

-யுவன் சந்திரசேகர்
(வெளியேற்றம்)

படித்தது

ஆசையே துன்பத்திற்கான காரணம் புத்தர் சொன்னதாக படித்திருப்போம்.ஆனால் பாலி மொழியில் உபயோகித்த வார்த்தையாகிய 'தன்ஹா' என்ற பதத்துக்கு அர்த்தம் ஆசை அல்ல, பேராசை என்று பொருள்

-படித்தது

Saturday 20 August 2022

கவியரசர்

கார்த்திகை தீபக்காட்சியைக் கண்டு களித்தவர்களின் கண்களே கண்கள்; மற்றவர்களின் கண்கள் புண்கள் என்கிறார் பொய்கையாழ்வார்.

அப்பிடியே இந்த வரி எங்கியோ கேட்டது போல் ஒரு பாட்டு.'உன்னைக் காணாத கன்ணும் கண்ணல்ல;உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல எனும் கவியரசரின் பாடல் கேட்கிறது

ஓஷோ

ஒவ்வொரு மனிதனும் சந்தித்தேயாக வேண்டிய பிரச்சனை இந்த உலகம். அவனுடைய இருப்பும் இந்த உலகத்தின் நோக்கமும் ஒத்துப்போவதில்லை. இவ்வுலகம் ஒருவன் அடிமையாகவும்,மற்றவர்க்கு சேவை செய்யவும் விரும்புகிறது.மனிதன் இதை எதிர்க்கிறான்.சுதந்திரமாக இருக்க விரும்புகிறான்

-ஓஷோ

ஆண்டாள்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி..
-ஆண்டாள்

கொடுப்பதில் இரு வகை உண்டு.பிச்சை என்பது ஒருவர் கேட்டபின் கொடுப்பது.ஐயம் ஒருவன் கேட்க நினைத்து ஆனால் நாணி கேட்காமல் இருப்பவனுக்கு கொடுப்பது. 'ஆந்தனையும்'அதாவது முடியும் வரை கொடுங்கள்.கைகாட்டி- அகத்தே கொடுத்தேன் எனும் மமதை இல்லாமல்

Friday 19 August 2022

சூஃபி

நீ ஒருவனுக்கு முன்னம் கொடுத்திருந்தால் அன்றி உனக்கு ஒன்றும் கிடைக்க வாய்ப்பு இல்லை!இயற்கைக்கு நீ ஒன்று கொடுத்தால் அது பத்தாகத் திருப்பித்தரும்

-சூஃபி

.Law of diminishing marginal utility

ஒரு பொருள் உங்களை முதலில் மகிழ்வித்தது போன்று மீண்டும் மகிழ்விக்க முடியாது. காரணம் மனது சலித்து விடுகின்றது.முதன் முறை பூஜ்யத்தில் துவங்கும் திருப்தி..இரண்டாம் முறை பூஜ்யத்தில் துவங்காமல் ஏற்கனவே வளர்ந்த நிலையில் துவங்குவதால் அதிருப்தி தருகிறது.Law of diminishing marginal utility

நேர்மை

ஒரு ஜப்பானிய மீன் வியாபாரிக்கு ஓர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை. அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

வெகுநேரம் தூண்டிலில் எந்த மீனும் அகப்படவில்லை. அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் முடிகிறது. அதேநேரம் அவரது மகன் போட்டிருந்த தூண்டிலில் ஏதோ அகப்படுகிறது. 

இழுத்துப் பார்க்கும் போது ஓரு பெரிய மீன், மிகப்பெரிய மீன், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவு பெரியதாக இருந்தது.

'வாவ்' என்று மகன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான். ஆனால் அவனது தந்தை சொல்கிறார்...

"மகனே அந்த மீன் நமக்கு வேண்டாம், அதை மீண்டும் ஏரியிலே விட்டு விடு"

"ஏன் ? "

"நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. அதனால் அது நமக்குச்

சொந்தமில்லை."

"ஜஸ்ட் இப்போது தானே முடிந்தது.

அதுவும் இதை யாரும் பார்க்கவே
இல்லையே அப்பா !"

"யாரும் பார்க்காவிட்டால் என்ன..
அப்படி ஒரு குற்ற உணர்வுடன்
அதைச் சொந்தமாக்கிக் கொள்ள
வேண்டுமா.. யோசித்துப் பார் மகனே"

கலங்கிய கண்களுடன் அந்த மகனும் அந்த மீனை ஏரியிலே விட்டு விடுகிறான்.

ஆண்டுகள் பல ஓடுகின்றன. அதே ஏரிக்கரை.அந்தப் பெரியவர் இல்லை. அந்த மகனும் அவனுடைய மகனும் வந்திருக்கிறார்கள். அன்று நடந்த சம்பவத்தை தன் மகனுக்கு விவரிக்கிறார். சொல்லிவிட்டு...

"அன்று என் தந்தை சொல்லியதைக் கேட்டதால் அந்த மீனை மட்டும் தான் இழந்தேன்.

ஆனால் அவர் என் மனதில் பதித்த அந்த நேர்மையால் வாழ்க்கையில், வியாபாரத்தில் எனக்குக் கிடைத்த நற்பெயர் சாதாரணமானதல்ல.. 

அன்று நான் அந்த அரிய மீனை எடுத்துப் போயிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை.

என்ன கொஞ்சம் அதிகம் பணம் கிடைத்திருக்கும். ஆனால் அப்படிச் செய்திருந்தால், அதுவே ஒரு "ருசி காண வைத்த" செயலாக மாறியிருக்கும். 

ஒரு தவறு செய்வதும், அதை செய்யாமல் இருப்பதும் ஒருவித மனோபாவம் தான். ஆனால் அதை ஒருமுறை செய்யத் தொடங்கிவிட்டால், செய்யப் பழகிவிட்டால் அதை விட முடியாது.

பிறகு என்றாவது ஒருநாள் அசிங்கப் பட்டுத்தான் போயிருப்பேன். நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாயா மகனே..."

அந்த மகனுடைய மகனின் களங்கமற்ற அந்த புன்சிரிப்பில் நேர்மை இல்லாமலா இருக்கும் !

அன்புசூழ் உலகு 

-படித்தது

லஷ்மி சரவணகுமாரின் கட்டுரையில் மேற்கோள் சொன்ன கதை

இறையன்பு

அன்று
முன்று பேனாக்களில் ஆண்டு முடியும்
ஒரு பேனாவில் வகுப்பைத் தாண்டுவோம்
படிப்பு என்பது பெற்றோருக்கு
தேநீர் செலவாய் இருந்தது

-சறுக்கு மரம் கவிதைத் தொகுப்பில் இறையன்பு

Tuesday 16 August 2022

ஆப்பிள் லோகோ

இன்றைக்கு நாம் காணும் பிரபலமான ஆப்பிள் நிறுவன சின்னத்தை வடிவமைத்தவர் Rob Janoff என்பவர்.

ஒரு நேர்காணலில் சொன்னது 'அது கடிக்கப்படாமல் இருந்தால், இது ஆப்பிள்-ஆ, செர்ரி பழமா அல்லது தக்காளியா என்றெல்லாம் குழப்பம் வந்தது. சிறிதளவு கடிக்கப்பட்ட பிறகு குழப்பங்கள் நீங்கியது.. 

மேலும் Bite என்பது Byte என்னும் கணினித் தொடர்புடைய சொல்லை போலவும் இருப்பதால் அனைவரும் இதை விரும்பினர்' என்றாராம்

Monday 15 August 2022

விமானம் எவ்வாறு அதன் பாதையில் செல்கிறது?


தரை வழியில் பாதைகள்/நெடுஞ்சாலைகள் திடப்பொருளில் (solid) உருவாக்க படவேண்டும். பின் அதற்கு தனிப்பட்ட எண் தரவேண்டும் உதாரணத்திற்கு NH45 , SH67. முதலியவை.

வான் வழியிலும் பாதைகள் உலகம் முழுவதும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வான்வழி பாதைக்கும் எண் உள்ளது.எல்லாவற்றையும் ஜெப்ஸன் சார்ட்டில் (Jeppson Chart) காணலாம்.

மேலுள்ள படத்தில் ஏர்வேஸ் A465 காண்பிக்கப்பட்டுள்ளது.

இது கொல்கத்தாவிற்கும் இலங்கை கொழும்புவிற்கும் வரையறுக்கப்பட்ட வான்வழி பாதை.

அனுமதி பெற்றபின் விமானிகள் கண்டிப்பாக அதைப் பின்பற்ற வேண்டும். மீறினால் குற்றமாகும்.

இந்த பாதை மூன்று வான் மண்டலஙகளில் (Flight Information Region)கல்கத்தா FIR, சென்னை FIR, கொழும்பு FIR. செல்கிறது.எல்லைகள் பச்சை நிறத்தில் உள்ளது.

ஒவ்வொரு மண்டலமும் தங்களின் எல்லையில் பறந்து கொண்டிருக்கும் விமானங்களை கட்டுப்படுத்துவார்கள். அதாவது வழியில் வானிலை மோசமாக இருந்தால் விமானி அதை தவிர்க்க சிறிது வான்வழி பாதையில் இருந்து விலகி செல்ல தேவையிருக்கும். அதற்கு முறையான அனுமதி பெற்றுத் தான் விலகவேண்டும்.

ஒவ்வொரு மண்டலத்தை கடக்கும் போது இரண்டு மண்டலங்களுக்கும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை விமானி மறந்தாலும் அந்த குறிப்பிட்ட எல்லையை கடக்கும் நேரம் தாண்டி விட்டால் கட்டுப்பாடு அறையில் இருந்து விமானத்தை அழைத்து கேட்பார்கள்.

தற்போது ஊடொளியுடன்(LASER) கணினி மயமாக்கப்பட்ட உபகரணங்கள் விமானத்தில் உள்ளதால் குறிப்பிட்ட பாதையில் மிகவும் சரியாக செல்ல முடியும்.

மேலும் வானிலை உடன் நிலவரமும் அதில் இணைத்து விமானி அறிந்து கொள்ள முடியும். படத்தில் பாதைக்கு இடது புறத்தில் இருப்பது சாதாரண மேகங்கள். மழை மேகங்களாக இருந்தால் சிவப்பு நிறமாக காண்பிக்க படும்.

-படித்தது

செந்தில் ஜகநாதன்

எல்லா மனிதர்களுக்கும் அவரவர் துயரமே பெரியது. ஆறுதலுக்காக பிறரிடம் உங்கள் துயரத்தை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுக்கு தங்களின் சொந்த துயரம்தான் நினைவுக்கு வரும்..!!

-செந்தில் ஜகநாதன்

Saturday 13 August 2022

வில்லியம் கூப்பர்

இருண்ட தினத்தை மறுநாள் வரை வாழ்ந்து விட்டால் போதும்,அந்த நாள் தானாகவே கழிந்து போகும்

-வில்லியம் கூப்பர்

சேரவஞ்சி

மனிதனின் ஓட்டத்தைப் பார்த்தால் வாழ ஓடிக்கொண்டிருக்கிறானா
வாழ்விலிருந்து தப்பிக்கவா
என்று தெரியவில்லை

-சேரவஞ்சி

Thursday 11 August 2022

Old is gold-5*மணி


இருளும் ஒளியும் 
-ச.தமிழ்ச்செல்வன்

மேல் தட்டு மக்கள் கல்வி பெறுவதும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கல்வி பெறுவது ஒன்றல்ல. அவர்களின் கல்வி அவர்களுக்கே பயன்படும். பாட்டாளிகள் கற்பது சமூகத்தை மாற்றும். புரட்சி என்பது ஒரு கற்றல் (Art of knowing)

-பாவ்லோ பிரையர்

1990 களில் சோவியத் ரஷ்யா சிதறுண்ட காலம். இடதுசாரிகளை எல்லாரும் தூற்றிக் கொண்டு இருக்கும்போது அவர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் மக்களை நோக்கி பயணம் செய்தனர். மக்களை கல்வி கற்றவர்களாக மாற்றும் நோக்கத்துடன் அறிவொளி இயக்கத்தை கையில் எடுத்தனர். அதில் வெற்றியும் கண்டனர். அவ்வாறு தான் இந் நூலின் ஆசிரியர் தமிழ்ச்செல்வன தான் மேற்கொண்ட அறிவொளி இயக்க செயல்பாடுகளையும் அதில் கிடைத்த அனுபவங்களையும் இந் நூலின் வழியே நமக்கும் சொல்லியுள்ளார். இந்நூலை படிக்க படிக்க 90களின் காலகட்டம் நம் நினைவில் வந்து செல்லும்.

தபால் ஆபிசிலுள்ள இந்தி எழுத்தை அழிக்க தார்ச்சட்டியோடு வந்தார்கள். கீழே நின்று கூட்டம் முழக்கம் செய்து கொண்டிருக்க- தார்சட்டியோடு மேலே ஏறியவர் கீழே பார்த்து கேட்டார். ஏண்ணே இதில் இந்தி எழுத்து எது என்று.. இப்படித்தான் கல்வி கற்காதவரின் அப்போதைய நிலை இருந்தது என்பதை தன்னுடைய ஒற்றை வரியில் கூறியிருப்பார். எழுதப் படிக்க தெரியாதவர்கள் இருந்தபோது அவர்களை கல்வி கற்க வைக்க அறிவொளி இயக்கம் தீராது பாடுபட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொறுப்பாளராக நியமனம் பெற்ற தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊர் ஊராக கரும்பலகைகளை தலையில் சுமந்து கொண்டு, சிலேட்டுகளை தாங்கிக் கொண்டு மக்களை நோக்கி சென்றார்.அவரைப்போல பல தன்னார்வலர்கள் தீராத வேட்கையுடன் கற்பிக்கச் சென்றனர்.

கல்லாதவர் மனதில் நம்பிக்கை விதைப்பது, கற்றவர் மனதில் நம்மை சுற்றி இருப்பவர்கள் எத்தனை பேர் கல்லாதவர்களாக இருக்கிறார்களே எனும் குற்ற உணர்வை ஏற்படுத்துதல் என இரண்டையும் தீர்மானமாக அறிவொளி இயக்கம் செய்தது. நெல்லை மாவட்டத்தில் சுமார் 10 பேருக்கு ஒரு ஆசிரியர் எனும் வீதம் 23 ஆயிரத்து 600 கற்பிப்போர் தேவை. ஊதியம் இல்லாமல் 15 வயதுக்கு மேல் 35 வயதுக்குட்பட்ட பல்வேறு தரப்பு தன்னார்வலர்களும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர் 

"டிராக்டர் ஓட்டும் கைகளுக்கு 
ஒன்னு ரெண்டு கஷ்டமா?
 கோலம் போடும் கைகளுக்கு 
ஆனா போடுவது கஷ்டமா?"..

என்பன போன்ற  பாடல்கள் மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகள் சத்தமாக வாசிக்கவும், 35 வார்த்தைகளை மௌனமாக வாசிக்கவும், 50 வரையிலான எண்களோடு பரிட்சையமும் எளிய கூட்டல் கழித்தலும் முதல் லட்சியமாய் கொண்டு செயல்பட்டனர்.

ஆரம்பத்தில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் தான் முன்வைத்த காலை பின் வைக்காமல் மாவோ நடத்திய (long march) நடைபயணம் போல் மேற்கொண்டு மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி அறிவொளி இயக்கத்தில் இணைய வைத்தனர்.

கியூபா விடுதலை அடைந்த பிறகு அனைத்து கல்வி நிறுவனங்களும் 10 மாதங்கள் மட்டுமே பாடம் நடத்தி, இரண்டு மாதங்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் கற்றவர்களை அனுப்பி கல்லாதவரை கண்டுபிடித்து கற்பிக்கச் செய்வார்களாம். இரண்டு மாத காலம் நாடே பள்ளிக்கூடமாக மாறி முதல் வகுப்பு படித்து அடுத்தடுத்த வகுப்புகளில் அனைவரையும் தேர்ச்சி பெற வைத்தனர். இது பெரிய கல்விப் புரட்சியை அங்கு ஏற்படுத்தியது. அதேபோல் அறிவொளி இயக்கமும் பல்வேறு தரப்பு மக்களை கல்வி கற்றவராக மாற்றியது என்றால் அது மிகை இல்லை.

எண்ணறிவும் எழுத்தறிவும் மட்டும் போதாது.. கற்போராகிய மக்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அவர்களை நம்பிக்கைகளை மேற்கொள்ள வைத்தனர். இதற்கு உறுதுணையாக அந்த மாவட்டத்தின் ஆட்சியரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கதை கூறுதல் மூலம் மக்களை தன் வசப்படுத்த மேலாண்மை பொன்னுச்சாமியின் கதைகள், வேல.ராமமூர்த்தி யின் கிறுக்கு சண்முகம், தனுஷ்கோடி ராமசாமியின் 'தரகன் பாடு,' கந்தர்வனின் சீவன் ஆகிய கதைகளை மக்களை கல்வி கற்பிக்க தூண்டியது என்று கூறுகிறார் ஆசிரியர்.

நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு அறிவொளி இயக்கத்தின் மாணவரான ஒரு பெண்மணி தன்னுடைய சொந்த முயற்சியால் ஒரு கடிதத்தை அவருக்கு எழுதியதை படித்ததும் ஆட்சியருக்கு நா தழுதழுத்த நிகழ்வும், மேலும் மற்றொரு பெண்மணி தானே சொந்த முயற்சியில் பேருந்து ஊர் பெயரை வாசித்து மதுரை வரை சென்று வந்ததாகவும் கூறியது மகழ்ச்சியை தந்தது. அந்த ஆட்சியர் வழியனுப்பு விழாவில் புதிதாய் கல்வி கற்றவர்கள் எழுதிய தபால் அட்டைகளை மாலையாக கோர்த்து அணிவித்து வழி அனுப்பி வைத்ததும் நெகிழ்ச்சியாக இருந்தது.

*மனம் ஒரு திறந்த மேடையாக இருந்தால் யாரும் வந்து சகஜமாய் நெருங்குவார்கள். மூடிக் கிடக்கும் வீடுகளின் முன்னால்தான் கூச்சத்தோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது -ச மாடசாமி

*படிப்பினையே பாலுக்கு மேல் மிதக்கும் ஆடையாக முதன்மை பட்டுத் தெரிகிறது. படிப்பினையின் மறுபக்கம் தீர்வும் தென்படுகிறது

*கற்போம் கையெழுத்து 
ஒழிப்போம் கைநாட்டு

*தோற்றுப் போக நமக்கு அனுமதி இல்லை -ஆத்திரேயா

*சோர்வுக்கும் நம்பிக்கைக்கும் இடையே வலுவான ஒரு போராட்டமே
மனதிற்குள் நடக்கிறது

அறிவுடை இயக்க நிகழ்வுகளில் பேராசிரியர் சா மாடசாமி அவர்களின் பங்கு குறித்து மிகவும் சிலாகித்துக் கூறியுள்ளார்.மேலும் அவருடன் எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி அவர்கள் பங்கு பெற்றதும் அறிய முடிந்தது.முத்து நிலவன் ஒரு கூட்டத்தில் பேசும்போது அறிவொளி இயக்க நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் போது புதுக்கோட்டையில் புதிதாக பெண்கள் சைக்கிள் ஓட்டிய நிகழ்வை மிகவும் சிலாகித்துக் கூறுவார். அதில் சைக்கிள் ஓட்டுவது என்பது பெண்களுக்கு சாகச நிகழ்வு போலும். ஊர்காரர்கள் பெருமிதம் பொங்க பார்த்ததை தன் பதிவில் செய்திருப்பார்

"சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி வாழ்க்கை சக்கரத்தை சுத்தி விடு தங்கச்சி" என அவர் எழுதிய பாடல் அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் ஒலித்தது. இன்று பெண்கள் கார் ஓட்டுவதை சாதாரணமாக கூறும் நாம் அப்போது சைக்கிள் ஓட்டுவது பெரிய அசாதாரண நிகழ்வாக பார்க்கப்பட்டது. இவ்வாறான பல கல்வி சார்ந்த புரட்சிகள் நம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை படிக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. தற்போது நடைபெறும் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய செயல்பாடுகளுக்கு முன்னோடியாக அறிவொளி இயக்கம் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.மலை வாழை அல்லவோ கல்வி என்பதை எளிய மக்களுக்கும் அன்று கொண்டு சேர்த்த அறிவொளி இயக்க அன்பர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்களே.!

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஆண்டன் செகாவ்

நெருக்கடி நிலையை முட்டாள் கூட எளிதில் சமாளித்து விடுவான்.அன்றாட வாழ்வை சமாளிப்பது தான் ஒருவனுக்கு பெரும்பாடாய் இருக்கிறது.

-ஆண்டன் செகாவ்

Wednesday 10 August 2022

உலகின் நடந்து செல்லக்கூடிய நீண்ட சாலை



உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன
தூரம் 22,387 கிமீ மற்றும் பயண நேரம் 4492 மணிநேரம், 

இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்கள்
வழியில், 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு ஆண்டின் அனைத்து பருவங்களையும்  பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்

.திருச்செந்தாழை

பதிலுக்குப் பதில் பேசத் தெரியாதவர்கள் 
துளிக் கண்ணீருடன் 
நின்று விடுகிறார்கள்.

உலகில் எவ்வளவு ஆழ்ந்த பதில் அது.

-பா.திருச்செந்தாழை

Tuesday 9 August 2022

Old is gold-4*மணி



கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன்
-கிரேஸி மோகன்

2004ஆம் ஆண்டு முதல் சரித்திர நாவல்களை படிக்கத் துவங்கி கல்கி முதல் சாண்டியல்யன்  வரை விழுந்து விழுந்து படித்து வந்தேன். குதிரை குலம்பொலி ,நித்ரா தேவி, பருத்த தோள்கள் இன்னும் இன்னும் சரித்திர பெயர்கள் அப்படியே இருந்த காலம்.அதே காலகட்டத்தில் சரித்திரத்தை இன்னொருபுறம் நகைச்சுவையாக படிப்பதில் அலாதி இன்பம் ஏற்பட்டு அப்போது வந்த இந்த புத்தகமும் முக்கியமான ஒன்று. 

கதை தலைப்புக்கான விரிவாக்கம் தந்தையின் பெயர் கேணக்கிறுக்கசிம்மன். (முதல் எழுத்து கே.) தலைநகரம் பித்துப்பிடிச்சான்பாளையம் (முதல் எழுத்து பி.) அரசாங்க கொடிச் சின்னம் ஆராய்ச்சி மணி டிங்டாங் ஒலி என்பதால் டி சேர்த்து கே பி டி சிரிப்பு ராஜ சோழன் என்பதாகும்.
கற்பனை வீதியில் பொடி நடையாக நடந்து போய் சிரிப்பு ராஜ சோழனின் வரலாற்றை அறிந்து கொள்வோம்.
பிறந்தவுடன் பெயர் வைக்கும் நிகழ்வில் சிரித்ததால் அன்று முதல் சிரிப்பு ராஜ சோழன் என்று பெயர் வைத்தனர்

#கதை

கே.சிம்மன்  பலவீனமான ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். தந்தை ஒரு கட்டத்தில் மரணப்படுக்கையில் இருக்கிறார். அப்போது மகனை அழைத்து தன் மனைவியின் முறை மாமனான வக்கிரசேனன் தன்னை விருந்துக்கு அழைத்து மொட்டை அடித்து கரும்புள்ளி குத்தி அனுப்பிய அவமானத்தை துடைக்க நீ வக்கிர சேனன் தலையை துண்டிக்க வேண்டும் என்று கூறி சத்தியம் வாங்குகிறான் .கோழையான மகன் சிரிப்பு ராஜனும் இதற்கு உடன்படாமல் தயங்குகிறான். ஆனாலும் தந்தையின் கடைசி ஆசை நிறைவேற்ற முயல்கிறான்.

 அப்போது சத்தியம் செய்தவுடன் தந்தை இறந்து விடவே முடிசூட்ட நினைக்கும் போது சமுத்திரக்கனி மாதிரி ஒரு ஏழரை மூக்கன் ரெட்டை கண்ணன் வருகிறான். ராஜ்யத்தில் தனக்கு பங்கு இருப்பதாக கூறி இடைஞ்சல் செய்கிறான் .உடனே தேர்தல் வைத்து அந்த தேர்தலில் சிரிப்பு ராஜ சோழன் ஜெயித்து தன்னுடைய தாய் மாமனான வக்கிற சேனலின் மகள் சரசுவின் சுயம்வரத்தில் எவ்வாறு கலந்து கொண்டான்? எவ்வாறு மாமன் வக்கிரசேனை வென்றான் என்பதுதான் இக்கதை.

#கதாபாத்திரங்கள்

கதையின் பெரிய பலம் உரையாடல்கள் தான். ஒவ்வொரு உரையாடல்களும் மிக நயமாகவும் நகைச்சுவையாகும் படைத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மையையும் நகைச்சுவையுடனேயே விளக்குகிறார். அதில் சில

கேணக்கிறுக்க சிம்மனின் ராஜகுரு அவருடைய மாமனார் தான். அவருடைய கதை வித்தியாசமானது. தஞ்சை பெரிய கோயில் கட்டிக் கொண்டிருக்கும்போது மன்னன் ராஜராஜன் இவருடைய சிற்றூரில் (300 பேர் மட்டுமே வாழும் ஊரில்) தன்னுடைய பணியாளர்களுக்கு வீடு கொடுக்குமாறு வேண்டினான். அதனை சிறிதும் பொறுத்துக் கொள்ளாத இவன் தூதுவனை அவமதித்து அனுப்பினான். பதிலுக்கு தூதுவன் நான்கு பேருடன் வந்து இவனுடைய கோட்டையை முற்றுகையிட்டு இவனை உடனடியாக நாடு கடத்தி கால்நடையாய் நடந்து வந்து மருமகன் கே.சிம்மன் ராஜ்ஜியத்தில் ராஜகுருவானான்.
இதேபோல் சிரிப்பு ராஜ சோழனின் சகலை சோழன் கதையும் நகைச்சுவையாக இருக்கும். 

ஒருமுறை எதிரி நாட்டு மன்னன் படை எடுத்து வந்த போது கோட்டையின் மெயின் கதவு திறக்க முடியாததால் இரு பக்க வீரர்களும் சிறக்க மூச்சு பிடிக்க இரண்டு மணி நேரம் தள்ளு தள்ளு என்று தள்ளுவார்கள் இதுவும் ஒரு மூக்குப்பிடி யுத்தம் என்று அழைத்து ஒரு வழியாக கதவை திறந்தவுடன் மன்னர் ஓடி சென்று தன்னுடைய அரண்மனை கதவை சட்டென்று சாற்றிவிட்டதால் யுத்தம் முடிந்ததாக செப்பேடு செப்புகிறது.

#ரசித்தவை

*வழுக்கலூர்வாசிகளை மட்டும் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்களில் பாதிப் பேருக்கு நிச்சயமாக நெற்றி, தாடை, கைகால் போன்ற இடங்களில், அடிக்கடி சறுக்கிச் சறுக்கி விழுந்ததன் விளைவாக நிரந்தரச் சிராய்ப்புகள், வடுக்களோடு இருப்பார்கள்.

*‘எதிரி கோட்டையை முற்றுகையிட்டு முன்னூறு நாள்களாகிறது’ (சகலை சோழனுக்காகக் காத்திருந்து அலுத்துத் திரும்பிய எதிரிகளும் உண்டு)

*இன்று தூங்கி நாளை வா’ என்று கூற, இதுதான் சாக்கென்று சகலை சோழனும் உடனே திரும்பி விடுவான்

*‘முனுசாமி சோழன்’ என்ற பெயர் கேட்பதற்கு அவ்வளவு குளிர்ச்சியாக இல்லாததால், ‘சாதாரண சோழன்’ என்று புதுமையாகப் பெயர் சூட்டினார்கள். அதுவே நாளடைவில் மருவி, சாதா சோழன் என்றானது

*சோழ மன்னர்களின் கஜானாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கேணக்கிறுக்க சிம்மனின் கஜானா, சித்தாளின் சுருக்குப் பைக்குச் சமமாகும்.

*உனது குத்துவாளின் நுனியில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் தடவி, பிறகு அதைப் பயங்கரமாகக் கொதிக்கும் வாணலியில் போட்டு லேசாகச் சுட வைக்க வேண்டும். வாணலியில் குத்துவாளைப் போட்டு அது இளம் சூட்டில் இருக்கும்போது அம்மிக் கல்லில் சாணை பிடித்துக் கூராக்கி விட்டு வக்ரசேனனை வரவழைத்து அவனது தலையை உரலுக்குள் நுழைத்துப் பிடரி பாகத்தில் பதமாகச் சீவினால் வக்ரசேனன் தலையை கோணல் மாணலாக இல்லாமல் கச்சிதமாகக் கொய்ய முடியும்.”

*இருவருக்கும் ஒண்டிக்கொண்டி குருக்ஷேத்திரம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது... அதில் ஐம்பத்தொன்பது நிமிடங்கள் மோதாமல் இருவரும் சுற்றிச் சுற்றி வந்து பாவ்லா காட்டுவதிலேயே போக்கடித்தார்கள்

இன்றைக்கும் மன்னர் ஜோக்ஸ் வார இதழ்களில் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கிறது.
பலம் குறைந்த ராஜாக்கள் குறித்த வரலாறு எழுதும்போது சுவாரஸ்யமாய் இருக்கும்.இம்சை அரசனுக்கு முன்பே இப்புத்தகம் வந்ததாக நினைவு. நகைச்சுவை காட்சிகளை பார்த்து நகைப்பது வேறு..இதுபோல் கற்பனை காட்சிகளை படித்து மனதில் நகைச்சுவை உணர்வுகளை வளர்ப்பது வேறு. நகைச்சுவை உணர்வு மட்டுமே இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன் என்று காந்தி சொன்னது போல் இது போல் நகைச்சுவை புத்தகங்களை ரிலாக்சேசனுக்காக படிக்கலாம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Old is gold-3*மணி



தமிழ்நாட்டின் கதை
-அருணகிரி

மனிதன் அரசியல்தான் இயங்குகிறான்
-அரிஸ்டாட்டில்

தமிழகம் குறித்து பல்வேறு நூல்கள் வெளிவந்தாலும் அனைத்து நூல்களும் படிக்க வேண்டும். ஏனெனில் வரலாற்றை எழுதும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை.. அறியாத பல விஷயங்களை சொல்லக்கூடும். அதேபோலத்தான் இந்த நூல் 2013 ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை படிக்கும்போது பிரம்மிப்பாக இருந்தது. அப்போது போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்ததால் இதிலுள்ள சில தகவல்கள் மிகவும் உபயோகமாக இருந்தது. இதன் ஆசிரியர் ஏற்கனவே பல்வேறு நாடுகளைப் பற்றிய கதைகளும், கட்சிகள் உருவான கதைகளும் எழுதியுள்ளார். அப்போது விகடன் பிரசுரத்தில் வந்த ஒவ்வொரு புத்தகமும் முதலில் வாங்கி விடுவது உண்டு அந்த வகையில் இந்த புத்தகமும்.

தமிழ்நாட்டின் கதை என்னும் நூலில் ஏழு கட்டுரைகளில் தமிழகம் குறித்த விரிவான பார்வையை அறிந்து கொள்ள முடிகிறது.தமிழக அரசியல் களம் என்னும் கட்டுரையில் உலக வரலாற்றோடு இந்திய வரலாறு எவ்வாறெல்லாம் வந்தது என்றும் சுதந்திரத்திற்கு முன் இந்திய அரசின் முக்கிய சட்டங்கள் அனைத்தையும் கூறி தமிழ்நாட்டின் வரலாற்றினை 1967 இல் இருந்து எழுதியுள்ளார்.

சட்டமன்றம் கூடிய இடங்களாக விவரித்துள்ளவை.. 1921 முதல் 37 வரை ஜார்ஜ் கோட்டையிலும்,1937 முதல் 38 வரை சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழக சென்ட் அரங்கிலும்,1938 முதல் 39 வரை ராஜாஜி அரங்கிலும்,1946 முதல் 52 வரை புனித ஜார்ஜ் கோட்டையிலும் 1952 முதல் 56 வரை கலைவாணர் அரங்கத்தின் முன் உள்ள பாலர் அரங்கிலும் நடைபெற்றது. அந்த அரங்கைதான் இடித்து கலைவாணர் அரங்கம் புதிதாக கட்டப்பட்டது.1959 ஏப்ரல் 20 முதல் 30 வரை கோடைகால கூட்டத்தொடர் உதகமண்டலத்தில் உள்ள அரண்மூர் மாளிகையில் நடைபெற்றது. இந்த தகவல்கள் எல்லாம் படிக்கும்போது மிகவும் வியப்பாகவும் புதிய தகவலாகவும் தெரிந்தது.

சென்னை மாகாணத்தில் நிகழ்ந்த அரசியல் மறுமலர்ச்சியும், துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் சபைகளும் தொழிலாளர் போராட்டங்களும் ,திராவிட சங்க விடுதி, நீதி கட்சியின் தோற்றம், நீதிக்கட்சியின் தலைவர்கள் அவர்களின் சாதனைகள் குறித்தும் விவரமாக விவரித்துள்ளார். பெரியாரின் அரசியல் துவக்கமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்
தமிழகத்தில் அமைந்த சட்டமன்ற வரலாறும் அமைச்சரவைகளையும் குறித்து விரிவாக விளக்கி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் குறித்தும் ஒவ்வொரு கட்சியின் வரலாறும் இதில் பதிவு செய்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பற்றி தெரிவித்தது புதிய தகவலாக இருந்தது. 1948 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் நலன்களை பாதுகாப்பது என் நோக்கில் சென்னை ராஜாஜி அரங்கில் கட்சியை துவங்கப்பட்டு ஏணி சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது கேரள மாநிலத்தில் மட்டுமே ஏணி சின்னம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் காயிதே மில்லத் போன்றவர்களால் அருமையான வாதங்களை எடுத்து வைத்திருப்பார்கள்.

 1962,67 ,71 ஆகிய தேர்தலில் கேரள மாநில மஞ்சேரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மில்லத். ஒவ்வொரு முறையும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மட்டுமே அந்த தொகுதிக்கு  சென்றவர்.. பிரச்சாரத்துக்கு செல்லாமல் மக்களிடையே செல்வாக்குடன் வெற்றி பெற்றவர். 1957 இல் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியபோது "கையிலே காசு இல்லாதவர் ,மனதிலே மாசு அற்றவர்" காயிதே மில்லத் என்று அண்ணாவால் போற்றப்பட்டதை படிக்கும் போது நன்றாக இருந்தது

தமிழகத்தில் சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற அனைத்து பொது தேர்தல்களையும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் பற்றியும் இதில் தெரிவித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றையும் இதில் பேசியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதேபோல் 1973 ஆம் ஆண்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ராஜாங்கம் இயற்கை எய்தியதால் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் முதன்முதலாக அதிமுக வேட்பாளராக மாய தேவர் வெற்றி பெற்றார். அதில் காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும் திமுக மூன்றாம் இடத்தையும் இந்திரா காங்கிரஸ் நான்காம் இடத்தையும் பெற்றது.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் மக்களிடம் இல்லை. அப்போது நாள் ஒன்றுக்கு விவசாயக் கூலி ஆறு ஆனா. ஆகவே முதலாவது தேர்தலிலேயே வாக்களிக்க வர மறுத்தவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து நான்கு அனா கொடுத்து மக்களை ஓட்டளிக்க வைத்தனர். அன்னைக்கே ஓட்டு போட காசு தந்திருக்காங்க என நினைக்கும் போது என் ரெம்ப பெருமையா இருக்கு

*1952 பொதுத்தேர்வு முடிவில் சென்னை மாகாணத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சட்டமன்றத்தில் காங்கிரஸ் அல்லாத 164 உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து டி பிரகாசம் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினர். இந்தியாவில் முதன்முதலாக தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணி இதுவாகும்

*1967 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 234 ஆகவே நீடிக்கிறது

*சென்னை மாகாண சட்ட சபையை 1921 ஆம் ஆண்டு கர்னாட் கோமகன் தொடங்கி வைத்தார். வெலிங்டன் பிரபு 1922 ஆம் ஆண்டு வருகை புரிந்து தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த பேரவை தலைவர் இருக்கையை பரிசாக அளித்தார்.

*1952 ஆம் ஆண்டு குடியாத்தத்திலும்
(இதில் காமராஜர் வெற்றி பெற்றார்) 1963 ஆம் ஆண்டு திருவண்ணாமலையிலும்
(இதில் காங்கிரஸ் எதிர்ப்பு அலையால் திமுக வெற்றி பெற்றது) முக்கிய இடைத்தேர்தலாக அரசியல் வரலாற்றில் பார்க்கப்படுகிறது

*1957, 62 ,84 ,89 ,91, 96 தேர்தல்களில் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் இருந்து ஏ எஸ் பொன்னம்மாள் ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தில் இருந்த முதல்வர்கள் ஆளுநர்கள் திரை பிரபலங்கள் தேவை பிரபலங்களின் கட்சிகள் என்று அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தில் நிகழ்ந்த அத்தனையும் ஆவணமாக செய்துள்ளார் தமிழக அரசியலில் பெண்களின் முக்கியத்துவத்தையும் என் அரசியலாளர்களின் பின்னணியும் இதில் சேர்த்துள்ளார் . கடந்த கால தமிழக அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ள புத்தகம் உதவுகிறது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

நைமி

எந்த வாளாலும் காயப்படுத்த 
முடியாத காற்றைப்போல் திகழுங்கள்

-நைமி"

Friday 5 August 2022

மாக்சிம் கார்க்கி

"மற்ற மனிதர்களைப் பொறுத்த வரை, அவர்கள் நீங்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் - இன்னமும் நீங்கள் இல்லாமலே வாழவும் செய்வார்கள்.." 

- மாக்சிம் கார்க்கி

Old is gold-2*மணி#நிலவறைக்குறிப்புகள்

Old is gold-2
*மணி

#நிலவறைக்குறிப்புகள்

நாகரீகமான ஒரு மனிதன் அதீதமான மகிழ்ச்சியோடு எதைப் பற்றி பேசுவான்?

அவனைப் பற்றி மட்டும் தான்

-தஸ்தயெவ்ஸ்கி

அனுபவங்கள் சமுத்திரம் அளவு ஆகும்போது தன்னுணர்வுகளை தானாகவே ஆவியாகச் செய்வது போல தன் அனுபவங்களையும் குறிப்புகள் வழியாக மற்றவர்களுக்கு அனுபவத்தை பகிர்கிறான் நாயகன். அந்த அனுபவங்கள் அத்தனையும் கேட்க கேட்க நமக்கு நடந்தது போல் தெரியும் போது அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி இன்னும் நம்மை பற்றி என்னவெல்லாம் சொல்லப் போகிறான் எனும் ஆவல் பிறக்கும் அல்லவா..அதுதான் இந்த நாவல். 40 வருடங்களாக ஒரு சிறிய அறைக்குள் இருக்கும் மனிதன் கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டு நம்மிடம் பதிலை சொல்லுங்கள் என கேட்பது போல் ஒவ்வொரு வினாவும் இருக்கும்.அந்த கேள்விகளுக்கு சொல்லும் பதில் நம்மை வழிமொழிய வைக்கும்.

எலி வளை எனும் முதல் பாகத்தில் சிறிய அறையில் வசிக்கும் நாயகன் தன்னைப்பற்றிய குறிப்புகளையும், மனிதனாக இருப்பது என்றால் என்ன? என்பன குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இது என்ன புதுசா சொல்லப்ப்போறார்னு படிக்க படிக்க நம்முள் படிந்திருக்கும் கோபம், குரோதம்,பொய்மை, நடிப்பு ,முகமூடி அனைத்தையும் தொட்டு செல்கிறார்.
பெருமைக்காக சொல்லலனு சொல்லிட்டு பெருமையை மட்டுமே பேசுவது போல..நான் உங்களைப் பத்திசொல்லல என்னைப் பற்றித்தான் என்று கூற ஆரம்பித்து முழுக்க முழுக்க நம்மை பற்றியும் மனித சிந்தனையைப் பற்றியுமே விரிவாக அலசி உள்ளார்.

தன்னுணர்வு மிக்க ஒருவன் சராசரி மனிதனின் முன்பு தன்னை ஒரு மனித ஜீவியாக நினைத்துக் கொள்ளாமல் ஒரு எலியை போல உணர்ந்தபடி குழம்பி
திகைத்து விடுவதும் உண்டு. அந்த எலி கூர்மையான அறிவு கொண்டதாக இருக்கலாம் ஆனால் அது ஒரு எலி மட்டுமே. அந்த இன்னொருவன் மட்டுமே மனிதன். அவன் மனிதன் என்பதாலேயே இவன் எலி ஆகிறான். தான் ஒரு எலி போல ஆகிவிட்டேனே எனும் தன்னுணர்வினால் தன்னைச் சுற்றிலும் சந்தேகங்களும் கேள்விகளும் நிறைய அசிங்கங்களை உருவாக்கிக் கொள்வதில் எலி வெற்றி கண்டிருக்கும். சொல்லி தீர்க்க முடியாத அடுக்கடுக்கான பல வினாக்களை தன்னுள் குமுற விட்டபடி மனிதர்கள் மீது வெறுப்புணர்ச்சியும் கோபமும் கொண்டதாய் இருக்கும் என்று மனித மனத்தினை எலியுடன் ஒப்பிட்டு கூறுகிறார்.

இரண்டாவது பாகத்தில் உடலை விற்கும் பெண்ணான லிசாவிடம் தன் மேன்மையையும் தான் கற்றறிந்த விஷயங்களில் தத்துவங்களையும் அவரிடம் கூறி தன்னை ஒரு கதாநாயகன் போல் காட்டிக் கொள்கிறான். அவள் மீது காதல் கொள்வதாகவும் கூறுகிறான். ஒருநாள் தன்னுடைய இல்லத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறான். அப்போது அவன் வேலைக்காரருடன் சண்டையிடும் நிகழ்வையும், அவனின் உண்மையான குரூர முகத்தையும் காண்கிறாள். அவள் மீது அவன் கட்டமைத்த கதாநாயக பிம்பம் உடைந்து போவதையும், வீட்டில் அவன் வறுமையில் உலர்வதையும் கண்டு விட்டாளே என்ற ஆத்திரமும் அவமானமும் அவன் மனதில் மிகுந்த துன்பத்தை தருகின்றது. அவள் மீது ஆத்திரத்தை கொட்டுகிறான்.இருப்பினும் அவள் அவன் மீது அன்பாகவே இருக்கிறாள்.இது இன்னும் அவனுக்கு கோபத்தை தருகிறது.

இந்த துன்பத்தின் அலைக்கழிப்பை தன்னுடைய பிம்பம் உடைந்து போனதே என நினைத்து நினைத்து வருத்தப்பட்டு இறுதியில் என்ன ஆனது? லிசா என்ன முடிவெடுத்தாள்? தான் படித்த விஷயங்களை மட்டுமே மனதில் சித்தரித்து வைத்திருந்த விஷயங்களை மனிதர்கள் எவ்வாறு உடைத்து விட்டு செல்கிறார்கள் என்பதும் அதனை இன்னும் தான் கற்கவில்லையே என்னும் ஏக்கமும் அவன் மனதில் இருக்கத்தான் செய்கிறது

எதார்த்த வாழ்க்கையோடு சிறிதும் பரிச்சயம் இல்லாத ஒருவனின் செயல்பாடும், சக மனிதர்களை மரியாதையாகவோ சமமாகவோ நடத்தாத கர்வம் பிடித்த மனிதன் எப்படி நடந்து கொள்வான் என்பதும் மிக அழகாக எடுத்துள்ளார்

#ரசித்தவை

*.எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டே இருந்துவிட்டு எதையுமே செய்யாமல் இருக்கும் நம்மை ஒத்த மனிதர்களைப் போல எனும் வரியைச் சொல்லலாம்.

*பழிவாங்கும் செயலை யாருக்கு எதிராக மேற்கொள்கிறோமோ அவனுக்கு அதனால் ஒரு சிறு கீரல் கூட விழப்போவதில்லை

*ஒரு வயதில் புகழ் சொற்களை கேட்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கும் ஆனால் அவையெல்லாம் வெறும் பொற்கனவுகள் மட்டுமே

*மனிதன் தன்னைப் பற்றி புளுகாமல் இருக்கவே முடியாது

*கடைசியாக மிச்சமிருப்பது 
இது ஒன்றுதான்.
நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.

*தங்கள் பெண்களை கவுரவமாக திருமணம் செய்து கொடுக்காமல் அவளை விற்பனை செய்வதில் சந்தோஷப்படும் சிலரும் கூட இருக்கிறார்கள்

*வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றை அடைவதை விட வாழ்வதில் மட்டும்தான் நாட்டம்

*உண்மையில் முற்றிலும் சுயேசையான தன்னிச்சையான  ஒன்றை தெரிந்து கொள்ள மட்டுமே மனிதன் விரும்புகிறான்

*மனிதன் அவமானங்களை அவனது நெஞ்சில் கணத்துக்கு கணம் அடுக்கிக் கொண்டு அசைபோட்டபடி தன் சொந்த கற்பனையால் மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறான

*மனிதனால் தன்னை பற்றி புளுகாமல் இருக்கவே முடியாது

*காதல் என்பது மிகவும் புனிதமான ஒரு புதிர். எது நடந்தாலும் மற்றவர்களின் கண் மறைவிலேயே அது நடந்தேற வேண்டும். அதுவே காதலை மேன்மேலும் புனிதமானதாகவும் சிறப்பானதாகவும் ஆக்கவல்லது

இத்தனை வெறுப்புணர்வை தந்தாலும் அவன் மீது ஏதோ ஒன்று அவளை ஈர்க்கத்தான் செய்தது. அதனை அவன் புரிந்து கொள்ளும் போது அவள் மீது பரிவு ஏற்படாமல் தனது ஆற்றாமையின் மீது வெறுப்பு தான் அவனுக்கு உண்டாகிறது. வெறுப்பூட்டும் மனிதனாகவே தன்னை பற்றி எல்லாரும் எண்ணிக் கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் தன் மீது பரிவை காட்டும் போது அவனுக்கு இன்னும் வேதனையை கூட்டுகிறது. இதனை மிக லாவகமாக ஒவ்வொரு நிகழ்வாகவும் அடுக்கடுக்காக காட்சிகளையும் உருவகப்படுத்தி  அந்த கதாபாத்திரத்தின் தன்மையை நம் மீது நாவல் முழுக்கவும் ஏற்றி வைத்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.

நாவலை மூன்றே வரிகளில் அடக்கி விடலாம் ஆனால் அந்த மூன்று வரிகளை மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவமாக மாற்றி இருக்கிறார். மனிதன் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளாத விஷயங்கள் பல உள்ளன .இதில் நாயகன் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் விஷயங்களை நாமும் ஒரு முறை சொல்லிப் பார்க்க தூண்ட வைக்கிறது. உண்மையில் இது மனித இயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம் தான் 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஜே.சி.குமரப்பா

"அடுத்த மனிதன் வீழ்ச்சியடையும்படியாக அமையக் கூடிய தவறை ஒருபோதும் செய்யாதீர்"

                       -ஜே.சி.குமரப்பா

நேசமிகு ராஜகுமாரன்

பிரிவின்
பெருஞ் சுவரில் எதிரொலிக்கின்றன ப்ரியத்தின் சொற்கள் 

-நேசமிகு ராஜகுமாரன்

Thursday 4 August 2022

தோரா

எவ்வளவு மெதுவாக மரங்கள் வளர்கிறதோ, அவ்வளவு உறுதியாக அதன் மையம் இருக்கும். இது மனிதர்களுக்குமான உண்மை என்று நான் நினைக்கிறேன்.

-தோரோ

நரன்

போர் வருமா , போர் வருமாவென பலகாலமாக கேட்டுக்கொண்டிருப்பவனே 
பலகாலமாக நீ நின்றுக்கொண்டிருப்பதே போர்களத்தில் தான் .

-நரன்

Wednesday 3 August 2022

மனுஷ்யபுத்திரன்

கிடந்தால் பின்னிக் 
கிடக்கிறோம்
நின்றால் ஒத்தையாய்
நிற்கிறோம்

எதை எதை
எங்கே வைக்க வேண்டுமென
தெரிந்திருந்தால் 
எத்தனையோ சீரழிவிருக்காது.

-மனுஷ்யபுத்திரன்

Tuesday 2 August 2022

ஓஷோ

மனிதன் பயப்படும் போது பிறரையும் பயப்படுத்த முற்படுகிறான்.பிறரும் தன்போல் பயந்தால் தன் பயம் குறையும் என நினைக்கிறான்

-ஓஷோ

Monday 1 August 2022

ஜெயகாந்தன்

"எனக்கு திட்ட தெரிகிற மாதிரி புகழத் தெரியாது. இதுவே  எனது பலவீனம்".

 -ஜெயகாந்தன்

போகன் சங்கர்

வழி முற்றிலும் தெரியாதபோதும்
வழி முற்றிலும்
தெரிந்துவிட்டபோதும்
வழியின் அழகு
எங்கோ மறைந்து போய்விடுகிறது.

-போகன் சங்கர்

Check Mate

பெர்சிய நாட்டினர் இந்த போட்டியை' ஷா' (Shah)என்று அழைத்தனர். அப்படி என்றால் மன்னர் என்று அர்த்தம். அந்த சொல் நாளடைவில் மருவி 'செஸ்' Chess என உருமாறி இருக்கிறது.பெர்சிய மொழியில் ' Shah Mat' என்றால் மன்னரை காப்பாற்ற முடியவில்லை என்று அர்த்தம். அந்தச் சொற்றொடர் தான் இன்ற உலக மக்களால்
செக்மேட் ('Check Mate ')எனப்படுகிறது.

-படித்தது