Monday 31 May 2021

நா.பார்த்தசாரதி

மனிதர்கள் தனித்தனியே நல்லவர்களாக இருக்கிறார்கள்.தனித்தனியே அவர்களை நல்லவர்களாக வைத்திருக்கவும் முடியும். 'மக்கள்','ஜனங்கள்' என்ற மைதான வார்த்தைக்குள் மந்தையாய் அடைக்கும்போதே தனித்தன்மையை இழக்கிறார்கள்

-நா.பார்த்தசாரதி

Sunday 30 May 2021

அரிஸ்டாடில்

உலகிலேயே மகிழ்ச்சியான செயல்பாடு கற்றுக்கொள்வதுதான்

-அரிஸ்டாடில்

எஸ்.ரா

அதிகாரத்திற்கு எதிராக மனிதனின் போராட்டம் என்பது ஞாபகமறதிக்கு எதிராக நினைவுகளின் போராட்டம்

-எஸ்.ரா

Saturday 29 May 2021

திருக்குறள்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்

அறிவு விரிய விரிய,கேள்விகள் தாம் மிஞ்சும்.விடை வேட்டையில் புதிய கேள்வி பிறக்கும்.ஆகவே அறிவுடையவர்க்கு சிந்தனை ரீதியாக திருப்தி என்பதே கிடையாது.கயவரோ கள்வரோ கேள்வி கேட்பதில்லை.ஆகவே அறிஞர்களை காட்டிலும் திருப்தி கொள்கிறார்கள்

Thursday 27 May 2021

அழகிய பெரியவன்

பொறுக்கும் சூட்டில் இருந்த தேநீர் மனதை இலகுவாக்கியது

-அழகிய பெரியவன்

கண்ணதாசன்

எதையும் அழகாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல தெரிந்துவிட்டால் அது உண்மையோ, பொய்யோ அவனை சுற்றிலும் ஒரு பெரும் கூட்டம் கூடிவிடும்

-கண்ணதாசன்

ப.பி

”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.
.
“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
.
“ஃபார் எக்ஸாம்ப்பிள்?”
.
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”
.
“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”
.
“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”
.
“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”
.
“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”
.
“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”
.
“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”
.
( நிறையப்பேரு_செமி_தானாம்.)

Wednesday 26 May 2021

அழகிய பெரியவன்

நிறைவின் போதும் நிறைவின்மையின் போதும் அப்படியே இருக்கிறது ஆறு. நிறைவின் நீர்ப்புன்னகையை விடவும்,நிறைவின்மையின் மணற்சிரிப்பு இன்னும் அழகு

-அழகிய பெரியவன்

info

பக்தி என்ற சொல் 'பஜ்' என்ற வேரின் அடியாகத் தோன்றியதாகும். பஜ் என்றால் சமஸ்க்ருதத்தில் கூடு என்று பொருள்.

அனைவரும் கூடி வணங்குவது 'பக்தி','பஜனை'
என்பதும் இதைத்தான் குறிக்கும்

#info

Sunday 23 May 2021

எஸ்.ரா

ஊரை நினைத்துக் கொள்வது என்பது வெறும் ஏக்கமில்லை. ஒரு வாழ்க்கை முறையை, தனித்துவத்தை,இயற்கையை
இழந்துவிட்டதன் வெளிப்பாடு

-எஸ்.ரா

மிலன் குந்த்ரே

சிரிப்புதான் மனிதனின் ஒரே எதிர்ப்புணர்ச்சி.அதிகாரத்தை எதிர்கொள்வதற்கு சிரிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை

-மிலன் குந்த்ரே

Saturday 22 May 2021

கார்

உண்மைகளை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டு பின்னர் அவற்றிலிருந்து முடிவுகளைத் தேடுங்கள்

-ஈ.ஹெச்.கார்

உதயகுமாரன்

வந்த காலமும் வருங்காலமும் சந்திக்கும் புள்ளியே நிகழ்காலம்

-சுப.உதயகுமாரன்

சுப.வீ

இலக்கை அடைவது நோக்கமல்ல
தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதுதான் நோக்கம்

-தொடுவானம் குறித்து சுப.வீ

Wednesday 19 May 2021

அழகிய பெரியவன்

வாழ்க்கை ஓடியதைப் போலத்தான் நினைவுகளின் பாய்ச்சலும்.மனிதர்களைப் பிரியாமல் வாழ்ந்து மறையும் நிழல்களைப் போல நிகழ்வுகளின் நிழலாய் நினைவுகள்

-அழகிய பெரியவன்

முத்துகுமார்

மரணம் ஒரு மோசமான சதுரங்கம், எத்தனையோ பேர் சுற்றி நின்ற போதிலும் அது எங்கள் பரிதாபத்துக்குரிய அரசனை கொன்றுவிடுகிறது

-நா.முத்துகுமார்

Tuesday 18 May 2021

முத்துநாகு

வாசி என்றால் குறிஞ்சி நிலமான மலையில் முல்லையும் மருதமும் கலந்த விளைநிலமாக நல்ல விளைச்சல் தரும் இடம் வாசி. இங்கு புலையர்,பளியர்,காடர் போன்ற குலத்தினர் வாழ்கின்ற
இவர்களே ஆதிவாசிகள். இவர்கள் வாழும் மலைகள் வாசிமலை,தவசிமலை என இன்றும் இருக்கிறது.வாழும் இடம் குடி.

-முத்துநாகு

அ.முத்துலிங்கம்

ஞாபகம் என்றால் நினைவில் வைப்பது.அதற்கு எதிர்ப்பதம் மறதி.அப்படி இருக்கும் போது ஞாபகமறதி எப்படி வந்தது. என் தமிழாசிரியர் தலையில் குட்டி மறதி என்று எழுதினாலே போதும் என்றார்.அதே போல் அழகான பெண் என எழுத வேண்டாம்..அழகி என்று எழுதினாலே போதும்.

-அ.முத்துலிங்கம்

ஓஷோ

மெளனமே நாக்குகளின் பரிசாக இருக்கிறது

-ஓஷோ

Monday 17 May 2021

கற்பதுவே பகிர்வதுவே-32*மணி



#RM314-
புத்தகம் 6/100+

#சின்ன விஷயங்களின் மனிதன்
-வண்ணதாசன்

படித்து முடித்து வேலை எல்லாம் கிடைத்த பிறகு ,சமுதாயத்தில் நல்ல பெயர் எடுத்தபின் ,எங்கோ ஒரு கட்டத்தில், சந்திக்கும் நம் பால்ய கால நண்பன்.. நம் கண்ணைப் பொத்திக் கொண்டு வந்து நம் முன் நின்று நம் பிம்பத்தை எல்லாம் உடைத்து மீண்டும் பால்ய காலத்திற்கே கைபிடித்து அழைத்துச் சென்று, பழைய நினைவுகளை கூறும் போது நாமும் சிறுபிள்ளையாக.. ஒவ்வொரு சம்பவங்களும் ஆமாம் ஆமாம்! என்று கூறி விளையாடுவோமே.. அதுபோல இப்புத்தகத்தில் உள்ள பக்கங்கள் ஒவ்வொன்றும் நம் மனதிற்கு மிக நெருக்கமான நம் பால்யத்தில் நம்மோடு கலந்து பழகிய ஒரு நண்பனின் கை குழுக்களைப் போல் ஒவ்வொரு சிறு கட்டுரையும் நம்முள் விரிகிறது.

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா என்று பாடிய கண்ணதாசனைப் போல் ஒரு கட்டுரையில்" இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து, அதன்மேல் தாள் பூ இலையை வைத்து வலது கையை அகல விரித்து அடிப்போம்.'டொப்' என்று சத்தம் வரும். அது ஒரு விளையாட்டு. அது எல்லாவற்றையும் ஒரு விளையாட்டாக ஏற்றுக்கொள்கின்ற மனம் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. என மனித மனம் எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பதை சொல்கிறார்

வண்ணதாசனைப் படிக்கும்போது ரசனையை நமக்குள் ஊறவைத்து விடுவார் .உலகிலேயே அதிக சுலப மற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும் தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. என்று வார்த்தையையே நம் மனதுக்குள் ஊசி நூல் கோர்ப்பது போல் மிகவும் இலகுவாக வார்த்தைகளையும் நினைவுகளையும் நமக்கு கடத்தி விடுவார்.

இதுவரை எந்த படத்திலும் பழனியம்மா என்ற பெயர் தமிழ் படங்கள் வைத்து  பார்த்ததில்லை. அப்படித்தான் மௌனகுரு படத்தில் காவல்துறை ஆய்வாளர் பெயரை வைத்ததை குறிப்பிடுகிறார். உண்மையில் இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.இன்றும் திரைப்படங்களில் சிவா,ஜீவா, இன்னும் சில குறிப்பிட்ட பெண்பால் பெயர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால் நிஜவாழ்க்கையில் சில அதிகாரிகளின் பெயரை பார்க்கும் போது பொன்.இருளாண்டி, வேம்படி முத்து, செல்வச் செழியன்,என கிராமத்துப் பெயர்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். இப்படித்தான் திரைப்படத்திலும் இப்பெயர் வைத்திருப்பதையும் நானும் பார்க்கிறேன்.

மனிதர்களின் வாசம் முக்கியமானது நம் நினைவில் இருக்கும் சில மனிதர்களின் வாசம் எத்தனை நாட்கள் ஆனாலும் நினைவில் இருக்கும். அப்படித்தான் வண்ணதாசனும் ஒரு இடத்தில் சொல்கிறார் மாம்பழ வாசனை அடிக்கிற என் உள்ளங்கையை யாருடைய நாசியில் சற்று பொத்தலாம்.. என்று கூறி மாம்பழத்தின் நினைவுகளை பாடியதோடு நமக்குள் வாசனையாகவும் தந்து மனிதர்களின் வாசம் எவ்வளவு அருமையானது என்று முடித்திருப்பார்.

தந்தையுடன் செல்லும் மகள் ஒரு கடையில் பேரம் பேசி பொருள் வாங்குகிறார்கள். கடைசியில் அப்பா கொடுத்த ரூபாயை வாங்கி கடைக்காரரிடம் கொடுக்கிறாள் மகள். வாங்கியவர் கைகளில் ஒரு விரல் நகத்தில் ரத்தம் கட்டி நீலமாக இருக்கிறது. 'கையில் அடிபட்டு விட்டதா அங்கிள்' என்று கேட்கிறது. 'சரியா போச்சு அதெல்லாம்' விசாரிப்புக்கு பதில் சொல்லும் அவர் முகம் கனிந்து நெகிழ்கிறது. எல்லாம் சரியாகத்தானே போகும் இப்படி அக்கறையாக கேட்க ஒரு எட்டு வயது சிறுமி இன்னும் நம்மோடு இருக்கும் போது என்று முடிக்கும் போது நாம் அந்த கடைக்காரராய் இருந்து நெகிழ்ந்து தான் போகிறோம்.

பூ விற்கிற பெண்ணைப்பார்த்து சிறு நினைவுகளை முன்வைக்கிறார். பூ விற்கிறவர்கள் பூ வாங்குகிறவர்களை மட்டும்தான் விசாரிப்பார்கள் என்று யார் சொன்னார்கள். அவர்கள் அவர்களுடன் வாழ்கிற அனைவரையும் விசாரித்த படியே இருக்கிறார்கள். விசாரித்த படியேதான் இருக்கிறார்கள். விசாரிப்பின் வாடாத பூவுடன் அவர்களின் பூக்கூடை ஈரமாகவே இருக்கிறது.இப்படி ஒரு மனிதர்களை விவரிக்க கல்யாண்ஜியை தவிர யாரால் முடியும்.

தெருவில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் சிறுவன் சைக்கிள் மிதித்துக் கொண்டு தான் வாங்கி வந்த எண்ணெய் பண்டத்தை பிட்டு வாயில் போட்டுக் கொண்டான். நான் அவனிடம் எனக்கும் ஒரு வாய் தா என மனதில் கேட்கிறேன். வாய்விட்டு கேட்டிருந்தால் அவன் தந்திருப்பான். அன்றைக்கு உரிய அப்பத்தை நான் பெறுவதெல்லாம் இதுபோன்ற கைகளில் இருந்து தான் என்று மனதில் தோன்றிய விஷயங்கள் எவ்வளவு அழகானவை என்று கூறுகிறார்.

#ரசித்தது

*மழை பார்த்தல் ஒரு அனுபவம். கன மழையின் ஆழ்ந்த ஆன்மீகம் தனியானது. மழை பார்க்க துவங்கிய மறுகணம் மழை உங்களைத் தொலைத்து விடும் .காணாமல் போக்கிவிடும். நீங்கள் இல்லாமல் இருப்பீர்கள்.

*நமக்கும் விரல்கள் இருக்கின்றன. நாம் அந்த விரல்களால் என்ன செய்கிறோம் .அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று அடுத்த பக்கத்திற்கு சென்று விடுகிறோம். அந்த அப்புறம் வருவதே இல்லை என்பதுதான் துயரமானது

*எல்லாவற்றுக்கும் மனம்தான் அளவு எல்லாவற்றையும் விட மனம் தான் அழகு

*அதிகம் தன்னை முன்வைக்காத, அதிகம் கவனத்தைப் கோரி பெறாத என் உலகத்தில் எளிய மனிதர்கள். அவர்களின் சின்னஞ்சிறு விஷயங்களால் அறையை நிரப்பி இருந்தார்கள். அந்த அறையை விடவும் நான் மேலும் முழுமையாக நிரம்பி இருந்தேன்.

*ஒரு வருடத்தில் 365 தினங்களையும் நாம் 365 பறவைகளின் தினங்களாக அறிவிக்க நேர்ந்து விடக் கூடாது என்பதே என் சிட்டுக்குருவிகள் தின பிரார்த்தனை.

*அருவியை அல்ல .இன்றைக்கு அந்தப் பெண்ணை எனக்கு கும்பிடத் தோன்றுகிறது. என்ன துயரம் எனில் அருவி அங்கேயேதான் இருக்கும். மீண்டும் பார்த்து விடலாம். அந்தப் பெண்ணைத்தான் பார்க்கவே முடியாது.

*மழை பாருங்கள் மழையும் உங்களை பார்க்க விரும்புகிறது

வண்ணதாசன் சந்திக்கிற மனிதர்கள் யாவும், நேர்கிற அனுபவங்கள் யாவும் அன்பை மையமாக கொண்டவையாகவே இருக்கும் அல்லது தான் கண்ட காட்சிகளையும் அன்பாகவே வெளிப்படுத்துவார். அன்றாடம் நாம் கண்ட மனிதர்களை தவறவிட்ட காட்சிகளை மழைபெய்த ஈரநிலம் போல அவர்களின் மாண்பினை மிக அழகாக நமக்கு படம் பிடித்துக் காட்டுவார். சிறிய துளிகள் பெரு வெள்ளமாய் மாறுவதைப் போல சின்ன விஷயங்களின் மனிதர்கள் நம் மனதில் ஆலமரமாய் விருட்சமாய் எண்ணங்களை அன்பினை வளர்க்கிறார்கள் வண்ணதாசன் வழியே .!

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

கி.ரா எனும் கதைசொல்லி*மணி


கி.ரா எனும் கதைசொல்லி
*மணி

எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனுடைய படைப்புகள் உதவுகின்றன.
சரிதான்.இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது கட்டுரைகளே

-கி.ரா

வயசானவங்க இன்னும் ஒரு நிகழ்வை பத்தி சொல்லும்போதெல்லாம், ஒரு அனுபவத்தை அப்படியே சொல்லாமல் அதில் தங்கள் ஆளுமையை கொஞ்சம் கூட்டிச் செல்வார்கள்.உதாரணத்திற்கு அந்தக்காலத்தில நான் ரொம்ப கோபக்காரன்னு தொடங்கி,அந்த உரையாடல் முழுவதுமே தன்முனைப்பை வெளிப்படுத்துவாங்க. இது கேட்பவருக்கு அயர்ச்சியை தரும். உண்மையை உள்ளவாறே ரசனையுடன் சொல்ல வேண்டும்.இது  கேட்பவரை உற்சாகப்படுத்தும்.உண்மையில் 
அனைத்தையும் இழந்த பிறகு நம்மிடம் மிஞ்சி இருப்பதற்கு பெயரே "அனுபவம்".

 "அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளை தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும்- கநாசு"

அதுபோல் தான் கி.ரா வும்,தன் அனுபவத்தை கூறும்போதெல்லாம் நம் அனுபவத்தையும் வாழ்க்கையையும் எண்ணிப் பார்க்கும்படி இருக்கும்.
அவ்வகையில் மனதில் உள்ள கட்டுரைகள் சில..

 #பள்ளிக்கூடத்தில் எனக்குப்பிடிக்காதது பாடம் சொல்லிக்கொடுக்கிறது ஒன்றுதான்.அதுமட்டுமில்லை எனில் சொர்க்கம்.குழந்தைகளுக்கு கற்றுக்கொள்கிற சுபாவம் பிறவியிலேயே இருக்கிறது. அதனால்தான் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளிடம் வாத்தியார் கேள்வி கேட்பது என்ன நியாயம் எனக் கேட்பார். அது கற்றுக்கொள்ளும் சுபாவத்தை மழுங்கடித்துவிடும் என்பார்.

#ஜீவாவைப் பற்றி சிலாகிக்கும்போது..

மே தினத்தைப் பற்றி ஒரு தடவை கோவில்பட்டி வந்து பேசினார். அந்த மாதிரி ஒரு பேச்சை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. பேச்சுக்கு இவ்வளவு மகத்துவம் உண்டா என்று எண்ணியது அப்போது. அவர் பிரசங்கத்தை ஆரம்பிப்பதே ஒரு தனியாக இருக்கும். முதல் ஒரு நிமிஷம் அவர் பேசுவது ஒன்றும் ஒருவருக்கும் கேட்காது.. இதன் விளைவு முதலில் கூட்டத்தில் இருக்கும் மிகச்சிறிய ஒலிச்சலனங்கள் கூட ஒடுங்கிவிடும். இரண்டாவது அங்கங்கே கூட்டத்தில் சிதறிக்கிடக்கும் எல்லாம் ஒரு நிமிடத்தில் மேடையை நோக்கி நெருங்கி வருவார்கள். அப்புறம் இறுதி கட்ட. ஆரம்பிக்கும். அவர் முன் பக்கம் சாய்ந்தால், கூட்டத்தில் இருப்பவர்கள் முன் பக்கம் சாய்வார். பக்கவாட்டில் சாய்ந்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஜீவாவை கண்டேன் என்பதைவிட ஜீவாவை கேட்டேன் என்பதே சரி.என்பார்.

#கதை எழுதுவது வேதனை

கதை எழுத உட்கார்ந்தால் அது ஒரு 'பிரசவ வேதனை'. எழுதும்போது நம்பிக்கை கிடையாது. எழுதி முடித்த பின்னர் தீர்த்த ஏற்படவே செய்யாது.

 கதை எழுத ஆரம்பித்த சில வரிகளை எழுதிவிட்டு, பேனாவைக் கையில் பிடித்து கொண்டே கதையை மேற்கொண்டு மனசுக்குள்ளேயே மனோராஜ்யம் செய்து கொண்டு போவதில் தான் சுகம் கண்டிருக்கிறேன் நான். என்னால் அவைகளை மடக்கிப் பிடித்து எழுத்துக்குக் கொண்டு வருவது என்பது, குழந்தை வண்ணத்துப்பூச்சிக்குப் பின்னாலேயே திரிந்து அது உட்காரும் இடங்களில் எல்லாம் நின்று, நின்று பிடித்துக் கொண்டு வருகிற மாதிரி தான்.

#கதவு கதை உருவானவிதம்

கி. ராவின் கதைகளில் முக்கியமானது கதவு எனும் சிறுகதை.ஒரு கதைக்கான கரு நான்கு இடங்களில் கிடைக்குமாம். "கேள்விப்பட்டது", "பார்த்தது", "அனுபவித்தது", "கற்பனை".

 ஒருநாள் தீர்வைத் தருவதற்கு கி.ரா ஊர் கிராம முன்சீப் கச்சேரிக்குப் போய் இருந்தபோது அவர் அறையில் தற்செயலாக எட்டிப் பார்த்தாராம். அங்கே தரையில் சுவரின் மேல் ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டிருந்தது . இதுபற்றி கேட்டபோது தீர்வை பாக்கிக்காக இந்த கதவை கொண்டு வந்திருப்பதாக சொன்னார்.தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும்,"எட்டு அணா' பாக்கிக்காக கதவு பிடுங்கி வந்ததாக கூறினார்.

 இது என்னை மிகவும் பாதித்தது. அந்த கதவை பார்த்து அதில் தீப்பெட்டி படம் ஒட்டியது தெரிந்தது. அது மிகவும் வேதனையாக இருந்தது.. என்று அந்த கதை உருவான விதம் குறித்து தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

#எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்

கி.ரா ஒவ்வொரு முறை ஒரு கட்டுரை சொல்லும்போதும் இடையில ஒரு நாட்டுப்புறக் கதைகளைச் சொல்லுவார். அது மிகவும் சுவாரசியமாக இருக்கும். அப்படி சொன்ன ஒரு கதைதான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். 

ஒரு கிராமத்திலே படித்தவன் எல்லாம் தெரிந்தவன் என்று பீற்றிக் கொண்டு ஒரு சிலர் இருப்பார்கள். எது கேட்டாலும் தெரியாது என்று மட்டும் சொல்ல மாட்டார்கள்., எல்லாமே தெரியும் என்பார்கள். ஒருநாள் கிராமத்து மக்கள் ஒரு யானையை பார்த்தார்கள். முதன்முதலில் அப்போதுதான்  யானையை பார்க்கிறார்கள். 

அப்போது ஏகாம்பரத்திடம் கேட்கிறார்கள் இது என்ன என்று அவனுக்கு தெரியவில்லை. உடனே அவன் சொன்னான் "நேற்றிரவு இருட்டு இருந்திச்சு இல்ல., அதோட மிச்சம்தான் இப்போது கருப்பா அப்படி போகுது என்றானாம். இப்படித்தான் பல ஏகாம்பரங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களின் வழித்தோன்றல்களாக.

#இந்தியாவிலேயே முதன்முதலாக வட்டார வழக்குச் சொல்லகராதியை 1982இல் கி.ரா. தொகுத்தார். பாலியல் கதைகளை கழனியூரனோடு சேர்ந்து ‘மறைவாய் சொன்ன கதைகள்’ என்ற தலைப்பில் நூலைக் வெளிக்கொண்டு வந்தார்.

#மனதை கவர்ந்த வரிகள்

*ருசி என்பதே,நாக்கைப் பழக்கப்படுத்துகிற ஒரு காரியம்தான்.

*வேட்டிக்கு இடுப்பு பழகனும்
இடுப்புக்கு வேட்டி பழகனும்

*ருசி என்பதே, நாக்கைப் பழக்கப்படுத்துகிற ஒரு
காரியம்தான்

*தமிழன் தலை எப்போது நிமிரும்?

மிக உயரமான கட் அவுட்களை பார்க்க நேரும்போது"!

*காதல் ஒரு தடவை மட்டும் வந்து போவதில்லை; வந்துகொண்டே இருப்பது

*மனுசனுக்கு ஒரு நிம்மதி வேண்டுமென்றால், நம்பிக்கை என்பது தேவைப்படுகிறது

*படிக்க ஆலாப் பறந்த காலம் ஒன்று உண்டு; எப்ப பார்த்தாலும் வெள்ளாடு மேய்கிறது போல
சாப்பாடு சுருங்கினதுபோல படிப்பும் சுருங்கிவிட்டது

*நாட்கள் அதுபாட்டுக்கு வருது போவுது.நாமதான் அதுகிட்ட சூதானமா இருக்க வேண்டியிருக்கு

* பூனைகள் வாழ்ந்து கொண்டிருக்கிற வீட்டில்தான் எலிகள் பேரன் பேத்திகள் எடுக்கின்றனவாம்.கி.ரா வுக்கு  பிடித்த சொலவடை

* பறவைக்கு இரண்டு இருக்கைகள் இருக்கிற மாதிரி ஒரு இயக்கத்திற்கு இரண்டு இருக்கைகள் வேண்டும். ஒன்று அரசியல்; மற்றது கலை இலக்கியம். இதில் எது குறைந்தாலும் அந்த பறவையாய் பறந்து செல்ல இயலாது.

* வளருகிற மிச்ச நகத்தை எப்படி நோகாமல் வெட்டி எடுக்கிறோமோ அதேபோல, ஒரு அரசு ஜனங்களிடமிருந்து வரிகளை தீவிரப்படுத்தாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

*எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக்கொண்டு தொழில் கற்றுக் கொண்டதில்லை. அதேபோல் எந்த ஒருவருக்கும் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதுமில்லை.

*ஒரு மனிதனுக்கு இத்தனை அனுபவம் கிடைத்திருக்குமா என்று ஒவ்வொரு முறை பிரம்மிக்கத் தோன்றும்.கி. ராவின் மிகப்பெரிய பலமே புத்தகம் படிப்பதும், நாட்டுப்புறக் கதைகளை தேடுவதும் தான். ஒரு நாட்டின் கருவூலம் எது என்றால் இதிகாச புராணங்கள் அல்ல. நாட்டுப்புறக் கதைகளே என்று கூறுவார்கள்.

 அவ்வகையில் தமிழ் நாட்டுப்புறக் கதைகளை தொகுத்ததில் கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தமிழுக்கு மிக முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். நாட்டுப்புறக் கதை களஞ்சியம் என்று அன்னம் பதிப்பகம் மற்றும் சாகித்ய அகாடமியின் நூல்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் பொக்கிசம் என்பது நாட்டுப்புறக் கதைகளே.அக்கதைகள் இருக்கும் வரை கி.ரா நினைவு கூறப்படுவார்.

நினைவஞ்சலிகள்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday 16 May 2021

திருவள்ளுவர்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

 நான் தும்மினேன். அவள் `நூறாண்டு` என வாழ்த்தினாள்; பிறகு..உடனே அவள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழ ஆரம்பித்தாள்

-திருவள்ளுவர்

உமர் ஃபாரூக்

கடவுளை நம்பாத மனிதர்கள் உண்டு.ஆனால்,
டெஸ்ட்டுகளை நம்பாத மனிதர்களே இல்லை

-ஹீலர் உமர் ஃபாரூக்

யுகபாரதி

கருகிவிடுமெனும் பரபரப்பில்
கை சுட்டுக்கொண்டது
எத்தனையாவது முறையெனச்
சொல்ல முடியாது
அம்மாவால்.

-யுகபாரதி

Saturday 15 May 2021

ஐன்ஸ்டின்

ரிலேடிவிட்டி தியரியை நீங்கள் கண்டுபிடிக்காமல் இருந்தால்? 

ஐன்ஸ்டின்: மூன்று வாரங்களுக்குள் வேறு யாரவது கண்டுபிடித்திருப்பார்கள், ஏனெனில் பலர் உலகமெங்கும் ஆராய்ச்சி செய்கிறார்கள், யார் முதலாவது வருகிறார்கள் என்பதே கேள்வி... 
கண்டுபிடிப்புகள் என்பது ஒரு பந்தயம்

Friday 14 May 2021

அண்டன் பிரகாஷ்

பாலிமரெஸ் சங்கிலி எதிர்வினை (polimerace chain reaction) என்பதன் சுருக்கமே PCR.குறிப்பிட்ட டி.என் ஏ மரபணுக்கள் இருக்கிறதா என்பதை அறியும் முறை.

சேகரிக்கப்பட்ட டி என்.ஏவை பாலிமரெஸ் என்ற நொதி மூலம் பல வெப்பநிலைகளுக்கு ஆட்படுத்துகையில் அவை சங்கிலியாகப் பெருகுவதை பார்த்து பாக்டீரியா அல்லது வைரஸ் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.இதில் RT என்பது டி.என்.ஏ வின் ஒரு வகை RT-PCR

-அண்டன் பிரகாஷ்

Thursday 13 May 2021

கண்டராதித்தன்

நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளை
செலவழிக்கிறான் ஒருவன்
அதையொரு பன்னீர் கரும்பைப்போல
கடித்து துப்பிச் செல்கிறான் இன்னொருவன்

-கண்டராதித்தன்

Monday 10 May 2021

சுப.உதயகுமாரன்

அறிவற்றவர்களும், படிப்பாளிகளும்தான் தாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வகுப்பு எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.இது தவறான அணுகுமுறை.கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டும்தான் பாடம் நடத்த வேண்டும்.

-சுப.உதயகுமாரன்

Nayattu (மலையாளம்) விமர்சனம்*மணி




நல்ல புத்தகத்துக்கு சிறகுகள் உண்டு நிச்சயம் பறந்துவிடும்னு ஜெயகாந்தன் சொல்வார்.அதேபோல் தான் நல்ல படத்துக்கும்.நேற்றே நெட்ப்ளிக்சில் வந்த போது பாசிட்டிவ் விமர்சனம் வந்துவிட்டது.அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்த்தேன் ஏமாற்றவில்லை.

ஒரு போலிஸ் கதை தான். ஆனால்.ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டோ, போலிஸ் இல்ல பொறுக்கினு பன்ச் பேசும் போலிஸ் இல்லை.சாதாரண மிடில்க்ளாஸ் போலிஸ் 3  பேரின் வாழ்க்கை தான் கதை.ஒரு எளிய சம்பவம்..அதை சுற்றி சுருக்குமடி வலைபோல் திரைக்கதை..இறுதியில் நெகிழும் ஒரு க்ளைமேக்ஸ்..இதைக் கொண்டு சேட்டன்கள் சிக்ஸ் அடித்துள்ளனர்.

#கதை

குஞ்சக்கோபோபன் காவல் துறையில் ஜீப் ஓட்டுநர்.தந்தையும் போலிஸ்..சில ஆண்டுக்கு முன் விபத்தில் இறந்தவர்.தாயாருடன் எளிமையான வாழ்க்கை. புதிதாய் அந்த ஸ்டேசனுக்கு வருகிறார்.

ஜோஜு ஜார்ஜ் அந்த காவல் நிலைய உயரதிகாரிகளில் ஒருவர்.மகளை போட்டிகளில் பங்கேற்க வைத்து மகிழும் பாசக்கார தந்தை.ஒரு நிமிசம் வீட்டில் போன் எடுக்கவில்லை என்றாலும் வீட்டுக்கே போய்விடுவார்.

நிமிஷா சஜெயன் தந்தையை இழந்த பெண் காவலர்.முதல் 30நிமிடங்கள் இவர்கள் வாழ்க்கையை மட்டும் சொல்லி நம்மையும் இவர்களுடன் வாழ வைத்திருக்கிறார். 

தேர்தல் நேரத்தில் காவல் நிலையத்தில் அனுமதிகேட்க வரும் குரூப்புடன் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஹீரோவுக்கு தகராறு வர லாக்கப்பில் வைத்து வெளியேவிடுகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் மீடியா அதை பெரிதுபடுத்துகிறது.உடனே அவரை  விடுதலை செய்கிறது போலிஸ். இதை மறந்து ஒரு திருமண விழாவில் குடித்துவிட்டு அக்கா பையன் வேறு ஜீப் ஓட்ட 4 பேரும் வர வழியில் ஒரு விபத்து.அந்த விபத்தில் இறக்கிறார் காலையில் தகராறு செய்த நபர்..

போலீஸ் துரத்த..மீடியா பெரிதுபடுத்த..தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகளின் அழுத்தம் என அத்தனையும் துரத்த மூவரும் ஓடுகிறார்கள்.நிரூபிக்க எந்த வழியும் இல்லாமல்  இறுதியில் என்ன ஆனது என்பதை நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸில் முடிச்சை அவிழ்த்திருக்கிறார் இயக்குநர் martin prakkat

#டின்ச்

*அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு விடுப்பு கேட்கும்போது தன் இயலாமையை நொந்து கொள்வதும், இந்தபெண் ஓகேவானு கேட்கும் போது ஜீப்புக்குள் வெட்கப்படுவதும், இறுதிக்காட்சியில் கதறுவதும் குஞ்சக்கோபோபன் கச்சிதம்

*நிமிஷா கிரேட் இந்தியன் கிச்சனில் நடித்ததை விட முதிர்ச்சி.ஒரு பெண் இப்படி ஓட வேண்டியதாய் உள்ளதே என்ற அவஸ்தையையும், இறுதிக்காட்சியில் கையெழுத்து போடமுடியாது எனும் போது நிமிர்ந்துநிற்கிறார்.எந்த வித சலனமும் இன்றி துரோகியாக மாட்டேன் என நினைத்து செல்கிறார்.

*ஜோஜூ ஜார்ஜ் நடிப்பு அசுரன் என்றே சொல்லலாம்.போலிசாகவும், தந்தையாகவும், குடித்துவிட்டு பேப்பர் செய்தியை காண்பிக்கும்போதும், இறுதியில் அசால்டாய் லுங்கி மாற்றி சென்று நடக்கும் போதும்.. ஜோசப் படம் போல இதிலும் சிங்கில் பாலில் சிக்ஸ் அடித்துபடத்தை வெற்றி பெறச் செய்துள்ளார்.

*இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. கழுகுப்பாதையில் மூணாறின் அழகியலையும், தப்பித்துச் செல்லும் படபடப்பை நமக்கு தருகிறார் ஒளிப்பதிவாளர்.

ஒரு யதார்த்தசினிமாவை த்ரில்லுடன் சொல்லியிருக்கிறது இப்படம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday 9 May 2021

இன்குலாப்

உதிர்ந்து வந்த சிறகொன்றைக் கேட்டேன் சாவுதான் விடுதலையா? இல்லை...போராட்டம் என்றது சிறகு!

-இன்குலாப்

யாத்திரி

அன்பின் தேடலில் 
விடையுமில்லை 
நிறைவுமில்லை 
தற்காலிக அடைவு மட்டுமே!

-யாத்திரி

Saturday 8 May 2021

ஜெயமோகன்

கதைகள் வாசகனுக்கு எதையும் சொல்வதில்லை. அவன் அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைச் சீண்டுகின்றன. அவனே ஓர் உலகைக் கற்பனைசெய்துகொள்ளச் செய்கின்றன. அவன் தேடும் விடைகள் அவனுடையவை. அவன் கண்டடைவதும் அவனுடைய அனுபவத்தின் சாரத்தையே

-ஜெயமோகன்

Friday 7 May 2021

கற்பதுவே..பகிர்வதுவே-30*மணி



6/100+

#சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
-பழ.கருப்பையா

அரசியலில் பல்வேறு வேறுபாடுகள் கருத்துக்கள் இருந்தாலும் பழ. கருப்பையாவின் தமிழுக்கு என்றும் பலர் அடிமையாக இருப்பார்கள். பேச்சு வழக்கில் அசாதாரணமான உண்மைகளையும் மிக சாதாரணமாக சொல்வதில் வல்லவர். கொண்ட கருத்தை மிக ஆழமாக உள்வாங்கி.. அதனை பிறருக்கும் மிக எளிதில் புரிய வைப்பதில் வல்லவர். தான் கொண்ட நேர்மையான அரசியலில் நிலைத்திருக்க முடியாமலும், நிற்க விரும்பாமலும் பரிசுத்தம் ஆகவே அதில் இருந்து தானாகவே வெளியேறியவர் கருப்பையா என்று நக்கீரன் கோபால் முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

உடையவனும், இல்லாதவனும் ஒரே மாதிரி வெறுங்கையோடு தான் செல்கிறார்கள். வெறுங்கையோடு செல்வதற்கு இவ்வளவு அட்டூழியம் ஏன்? என்று அப்படிப்பட்டவர்களின் மனசாட்சியையும் பிடித்து பலமாக உலுக்குகிறார். இப்புத்தகம் தற்போதுதான் வெளிவந்துள்ளது.. வந்தவுடன் உடனடியாக வாங்கி படித்து விட்டேன். 112 கட்டுரைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த அரசியல் நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாக தன்னுடைய கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.

அண்ணா அவர்கள் கூறியது போல மாநில சுயாட்சி குறித்து தன்னுடைய கருத்துகளையும் தயங்காமல் வெளிப்படுத்தக் கூடியவர். கேரளாவில் ஐயப்பன் ஆண்களுக்கான கடவுள் ஆனது ஏன் என்ற கட்டுரையில் கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு உரிமைகளையும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்ட வரலாற்றினை தெரிந்து கொள்ள முடிந்தது இக்கட்டுரையில்.

ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் ஒருமுறை யாருடைய பேச்சு யாரைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு வள்ளலார் குறித்து பழ கருப்பையா பேசினால் அருமையாக இருக்கும் என்று கூறினார் கழுகார். அதேபோல் கட்டுரையிலும் அவ்வப்போது வள்ளலாரின் கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஒரு இடத்தில் சங்கராச்சாரியாரை நேருக்கு நேர் சந்தித்து உரையாடியபோது "சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! என்று சங்கராச்சாரியார் சொல்ல அப்படியானால் தமிழ்தான் எல்லா மொழிகளுக்கும் தந்தை என பதிலடி கொடுக்கிறார் வள்ளலார்.

எந்த நிலையிலும் மனிதன் சமநிலை இழக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக 'ராஜாஜி ஒரு முறை உடல் நலமில்லை' என்று பதவியை உதறி விட்டு வெளியேறியபோது.. அன்று மாலையே எந்த பதட்டமும் இல்லாமல் மகாபாரதம் படித்துக் கொண்டிருந்த அவரது மனச்சமநிலை பற்றி கூறுகிறார்

தமிழகத்தில் அனைவரும் முதல்வராகலாம் என்ற கருத்தில் அவர் எழுதிய கட்டுரையில்  இன்னாரை முதல்வர் ஆக்காமல் நான் ஓயமாட்டேன் என்று முழங்குவது எப்படி என்றால்.. இத்தகைய ஆவேச உரைகள் இரண்டு குறைகளை உடையவை..

 ஒன்று தான் நினைத்தால் ஒருவரை முதல்வராக முடியும் எனும் அதீத சக்தி தனக்கு இருப்பதாக நம்புவது. இன்னொன்று தான் அந்த பெரிய இடத்துக்கு உரியவரில்லை என்றுதானே வெளிப்படையாக உடன்படுவது..என
 கட்டுரை முழுக்க முதல்வர்  ஆவது குறித்த பல்வேறு நபர்களின் மனதை கூறியிருக்கிறார். இறுதியில் எது தான் தெரியாது? யாருக்குத்தான் தெரியாது? நான் ஏன் முதல்வராக கூடாது என்று கிண்டலாக முடித்திப்பார்.

ஜாதி எனும் அரசியல் தீமை கட்டுரையில் மாரடைப்பு வருகின்ற போது நம்முடைய ஜாதி மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு போ என்று எந்த நோயாளியும் சொல்வதில்லை. ஆனால் மற்ற நேரங்களில் எல்லாம் நாம் ஜாதி குறித்துப் பேசுகிறோம். ஜமீன்தார்களின் கோரப்பிடியில் இருந்து உழவர்களை விடுவித்து ரயத்துவாரி முறை வரிவிதிப்பை மாற்றி, உழவர்களை உயர வழி கண்ட தாமஸ் மன்றோ என்று அண்ணாசாலை நின்று கொண்டிருக்கிறார். .அவர் எந்த ஜாதியையும் பார்க்கவில்லை. ரிப்பன் எங்கள் அப்பன் என்கிறோமே அவர் எந்த ஜாதி பார்த்து  எதுவும் செய்யவில்லை. சாதி என்பது சமூக தீமை என்று சொல்லப்பட்டது இன்று ஜாதி கொடிய அரசியல் தீமை ஆகிவிட்டது.

இன்றைய அரசியல் நிலை குறித்து துக்ளக் ஆண்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதிகம் பேர் அக்காணொளியை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளனர். அதேபோல் இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் தலைப்புக்கு ஏற்ற வகையில் தான் கொண்ட கொள்கையை ஏற்று.. அதற்கு உரிய வகையில் விளக்கமும், அடுக்கடுக்கான முறையில் கட்டுரைக்கு நியாயம் கற்பித்து.. முக்கியமாக ஒவ்வொரு சொற்களுக்கும் தமிழ் சொற்களையே பயன்படுத்தி உள்ளார். வடமொழிச் சொற்கள் அல்லாமல் பேசுவதைப் போலவே எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார் பழ கருப்பையா.

#ரசித்தது

*எளிய மனிதன் கூட தன் விருப்பத்திற்கு ஒரு கடவுளை உருவாக்கி கொள்ள முடியும். வழிபாட்டு சுதந்திரம் தான் இந்த சமயங்களின் சாரம்.

*எலி பூனை பிடித்ததாகவும் பூனை ஓலமிட்டு நியாயம் கேட்க உச்சநீதிமன்றத்தை நாடியது ஆகவும் ஒரு இடத்தில் கூறுகிறார் பூனைகள் எல்லாம் பூனைகளும் இல்லை எலிகள் எல்லாம் எலிகளும் இல்லை

*குனி குதிரை இறை வேண்டும் என்கிறார்கள் முடியாது என்று சொன்னால் கண்டனம் தெரிவிக்கிறார்கள். குதிரை தெரிவிக்க வேண்டிய கண்டனத்தை அதன்மீது ஏறுகிறவன் தெரிவிக்கிறான் என்ன கொடுமையடா.

*தின்ற சோற்றுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா

*பாம்பு தின்கிற  ஊரில் நடுத்துண்டம் நமக்கு

*பலமுறை மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டன.மாநில ஆளுநர்கள் கங்காணிகளாக செயல்பட்டனர்.

*என்னை பொய்மையிலிருந்து வாய்மைக்கு வழிநடத்து இருளிலிருந்து ஒளிக்கும் இறப்பிலிருந்து இறப்பின் மைக்கும் வழிநடத்து

*எந்த கோரிக்கைக்கும் மோனாலிசா வுக்கு நிகரான ஒரு புன்னகையை அரசியல் தலைவர்கள் அளிக்கிறாரகள்

*சுரண்டுவதற்கு அந்த மந்திரி வைத்திருக்கின்ற பெயர் கட்சி நிதி

இதுபோல் எண்ணற்ற கிராமத்து சொலவடை களையும் சொல்லும்போது படிப்பதில் ஆர்வம் ஏற்படுகிறது 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஜெயமோகன்

உள்ளுணர்வு என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது விலங்குமனம். உங்களுக்கு ஒவ்வாத ஒன்றை எங்கோ கண்டுகொண்டிருக்கிறீர்கள்.
உள்ளுணர்வைத் தர்க்கம் மூலம் சமாதானப்படுத்தி அடங்கச்செய்து எதையும் செய்யவேண்டாம்”

-ஜெயமோகன்

Wednesday 5 May 2021

கா.மு ஷெரிப்

நடிகர் ராஜேஷ் பகிர்ந்த ஒரு செய்தி.. திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" பாடல் கவி கா.மு ஷெரிப் சம்பூர்ண ராமாயணத்துக்கு கெளரி மனோகரி ராகத்தில் எழுதிய பாடலை இதில் உபயோகித்தாராம்.டைட்டிலில் பெயர் மிஸ்ஸானதால் இன்று வரை கண்ணதாசன் எழுதியதாகவே இருக்கிறது.

டவுன் பஸ் பாடலோடு இதையும் இனி நினைவு கூர்வோம் கா.மு ஷெரிப் நினைவாக

கற்பதுவே..பகிர்வதுவே-30*மணி


#RM314

5/100+

#தமிழ் இலக்கிய வரலாறு
-மு.வரதராசன்

தமிழ் மொழியின் இலக்கிய வரலாறு மு.வரை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக எழுதி விட முடியாது. சிறுகதை ஆனாலும் சரி, நாவலானாலும் சரி, எந்த ஒரு இடத்திலும் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் மேற்கோள் கூறிவிடும் திறமை அவரிடம் எப்போதும் உண்டு. தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கூறும்போது 12 தலைப்புகளில் முதலாவதாக தமிழ்மொழியின் சிறப்பினையும் இலக்கண வளமையையும், தமிழ் மொழியின் எழுத்து மற்றும் சொற்களின் முக்கியத்துவத்தையும், தனித்தமிழ் இயக்கம் உட்பட திராவிட மொழிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ் குறித்து விரிவாகக் கூறியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தையே பழங்காலத்தில் நீதி இலக்கியம் சங்க இலக்கியம் காப்பியங்கள் எனவும், இடைக்காலத்தில் பக்தி இலக்கியம் காப்பிய இலக்கியம் உரைநூல்கள் புராண இலக்கியம் என்றும், இக்காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு தோன்றிய இலக்கியங்களையும் மிக விரிவாக சொல்லியுள்ளார்.

சங்க இலக்கியத்தை கூறும் முன்பு சங்கம் என்ற பெயர் இக்காலத்தில் 4,5 ஆம் நூற்றாண்டில் சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் தமிழ்நாட்டில் சங்கம் ஏற்படுத்திய கல்வித் தொடர்பு இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், முதல் இரண்டு சங்கங்கள் குறித்த வரலாறு, மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஊக்கத்தினால் சங்கம் சிறப்புற வளர்ந்ததும் கூறி சங்க இலக்கியத்தை சொல்லியுள்ளார்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கல்வி பற்றி கூறிய ஒரு பாடலை சொல்லி 'வேண்டிய உதவிகள் செய்தும் மிகுதியாக பொருள் கொடுத்தும் எவ்வாறேனும் கல்வி கற்பது நல்லது. பணிந்து பின் நிற்பதை பற்றி வெறுப்பு கொள்ளாமல் கற்றோரை அணுகி, வணங்கி கற்றுக்கொள்ளவேண்டும். கீழான குடும்பத்தில் பிறந்த ஒருவன் கல்வியறிவில் சிறந்து விளங்கினால் மேலான குடும்பத்தில் பிறந்தவனும் அவனுக்கு பணிந்து போவான் என்ற பாண்டிய மன்னனின் பாட்டில் கூறியுள்ளதாக சொல்லியுள்ளார்.

நீதி நூல்களில் திருக்குறள் பற்றியும் திருக்குறளின் சிறப்பு பற்றியும் அதில் அறம் குறித்து பாடிய திருக்குறளையும், நாலடியார்  பாடல்களையும் மற்ற நூல்கள் பற்றி கூறும்போது பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள நூல்களையும் சொல்லியுள்ளார்.

இரட்டை காப்பியங்கள் பற்றி சொல்லும்போது சிலப்பதிகாரத்தில் உழவர்களின் தொழிலோடு இயைந்த பாடல்களாகிய விதை விதைக்கும் பாட்டு, களைகட்டல் பாட்டு, அறுவடை பாட்டு ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டு இருப்பதால் இக்காப்பியத்தை மக்கள் காப்பியம் என்று அழைக்கிறார்கள். சேர மன்னன் இமயத்தை வென்று திரும்பும் போது நான்கு வகை நிலங்களில் வாழும் தொழிலாளிகள் பாட்டுக்களை பற்றியும் நான்குவகை குறிப்புகளைத் தந்துள்ளார்.

பக்தி இலக்கியங்களில் சைவர்களும் வைணவர்களும் குறிப்பிட்டதோடு பல்வகை நூல்கள் பகுதியில் கலம்பகம் மற்றும் பரணி பற்றி குறிப்பிட்டுள்ளார். பரணி பற்றி நாம் தெரிந்தவைதான். 11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் குலோத்துங்கன் அனந்தவர்மன் சோடகங்கன் ஆண்டுவந்த கலிங்க நாட்டின் மீது படையெடுத்தான் சோழனின் படைத் தலைவன் கருணாகர தொண்டைமான். சோழ அரசனையும் படைத்தலைவனையும் புகழ்ந்து பாராட்டி இயற்றப்பட்ட நூல் கலிங்கத்துப் பரணி. தனியே ஒரு போர் பற்றி எழுந்த பெரு நூல் இது. ஆயிரம் யானைகளை போர்களத்தில் கொன்று வெற்றியை நிலைநாட்டிய ஒருவன் வீரன் ஒருவனை புகழ்ந்து பாடுவது பரணி. தோற்ற நாட்டுப் பெயரால் நூல் வழங்குவது மரபானது. அதனால் கலிங்கம்.

இரண்டு இரண்டு அடிகளால் ஆன தாழிசை என்னும் செயல் வகையால் இடம்பெற்றது. உதாரணமாக எடும்எடும்  எடுத்ததோர் இகழ்ஒலி கடல் ஒலி இகக்கவே
 விடு விடு விடு பரி கரிக்குழாம்
விடும் விடும் என ஒளிமிகைக்கவே

 என்ற பாடல் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்புத் தமிழ் பாடத்தில் மனப்பாடபாடலாய் இருந்தது. இதுபோல நூற்றுக்கணக்கான செய்யுள்கள் விரைவும் எடுக்கும் உடையனவாய் உணர்ச்சி வேகத்திற்கு ஏற்றவாறு ஒலிக்கும்.

போர்க்களத்தில் வீரர்கள் வழிபடும் தெய்வம் காளி. காளியை சுற்றியுள்ள கூட்டம் பேய்களின் கூட்டம். காளிக்கு உரிய நட்சத்திரம் பரணி. அதனால் நூலுக்கு பரணி என்று பெயர் அமைந்தது என்று கூறுவார்கள்.

கம்ப ராமாயணத்தைப் பற்றி சொல்லும் போது ராவணன் போர்க்களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியை கூறுமிடத்தில் இவ்வாறு 'அடங்க' என்ற ஒரு சொல்லை திரும்பத் திரும்ப கூறி அதன் ஒலியால் இராவணனது வீரம் முதலிய எல்லாம் அடங்கிய காட்சியை நமக்கு பதிய வைக்கிறார்.

"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம் அடங்க வினையும் வீயத் தெம் மடங்க பொரு தடக்கைச் செயல் அடங்க
 மயல் அடங்க ஆற்றல் தேய
 தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க 
நிலைஅடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் 
உயிர்துறந்த முகங்கள் அம்மா"

பொல்லாத சிங்கம் கோபம் கொண்டு எழுவது போன்ற ராவணனுடைய சினம் அடங்கியது; மனம் அடங்கியது; வினையும் அழிந்தது; பகைவர்கள் அழிவதற்கு காரணமாக நீண்ட கைகளில் வீரச்செயல் அடங்கியது அவனுடைய காம மயக்கம் அடங்கியது ;ஆற்றல் தேய்ந்தது;தம் புலன்கள் அடங்கிய முனிவர்களையும் தலைமை அடங்குமாறு தவநிலை அடங்குமாறு அடங்கிய அந்தக் காலத்தில் ராவணன் முகங்கள் பெற்றிருந்த பொலிவை விட, இன்று அவன் உயிர் துறந்து விழுந்து கிடக்கும் போது அந்த முகங்கள் மூன்று மடங்கு பொலிவு பெற்று விட்டன என்கிறார்.

இவ்வாறு வரலாறு பற்றி மட்டும் கூறாமல்.. அந்த தமிழ் பாடல்களில் தன்னை கவர்ந்த பாடல்களை ஆங்காங்கே குறிப்பிடும் போதும், சில முக்கியமான பாடல்களை மிகவும் சிலாகித்து கூறும் போதும் நமக்கும் படிப்பதில் ஆர்வம் வருகிறது. தமிழ் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போது இந்த புத்தகம் வாசிப்பது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday 4 May 2021

கற்பதுவே பகிர்வதுவே-29*மணி




#RM314

3/100+

#மொழிபெயர்ப்பின் சவால்கள்
தமிழில் ஜி.ஜெயராமன், லதாராமகிருஷ்ணன்

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"
என்றார் பாரதியார். தமிழை தவிர மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்கள், கட்டுரைகள் தமிழ் மொழியில் மொழிபயர்ப்பது மிகவும் உன்னதமான ஒரு விஷயம். இந்த மொழிபெயர்ப்பில் ஏற்படும் சவால்களும் அதிலுள்ள இடர்களையும் இந்த புத்தகம் மிகவும் தெளிவாகப் பேசுகிறது. அதோடு மொழிபெயர்ப்பு குறித்து நமக்கு அறியாத பல தகவல்களையும் நுணுக்கங்களையும் மிக அழகாக எடுத்துரைக்கிறது.

மொழிபெயர்ப்பு குறித்து பேசும் போது சிலர் சொல்லுவார்கள் மழையை கையிலேந்தி மழைத்துளிகளை லாவகமாக பெற்றுத் தருவது போல பரந்த அனுபவத்தை அழகியலை நமக்கு தருவதுபோல என்று சொல்வார்கள்.
நல்ல மொழிபெயர்ப்பு மொத்த மழையையும் நமக்குத் தந்துவிடுவார்கள்.

ஒரு மொழிபெயர்ப்பு.. வாசகரை உணர்வுபூர்வமாக தன்பக்கம் இழுக்க வேண்டுமானால் எளிய புழக்கத்தில் உள்ள சொற்களை பயன்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு 99% வியர்வை 1% உத்வேகம் என்பது உண்மையே என்று கட்டுரையாளர் ஜெயராமன் கூறுகிறார். அவ்வளவு மெனக்கெடல் ஒவ்வொரு புத்தகத்தில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் இன்றும் இலக்கியவாதிகளால் இரண்டாம் நிலையிலேயே வைத்திருப்பது, இலக்கிய விவாதங்களில் புறக்கணிப்பதும், தனித்துவம் இல்லாததும் வருத்தத்திற்குரியது.

 ஒரு மொழிபெயர்ப்பை மிகவும் கலை உணர்வோடு செய்கிறோமே தவிர பொருளாதார நன்மைக்காக அல்ல என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்கள். வாசகர்கள் மொழிபெயர்ப்பாளர்களை அதிகம் கொண்டாடுவதில்லை. அவர்களின் பெயர்கள் இருளிலேயே உள்ளன. துடைத் தெரியும் துணியை போலவே பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

தலித் இலக்கியம் குறித்து கூறும்போது இன்னும் அதிகம் விவாதிக்கப்பட வேண்டி உள்ளது.
தலித்திய படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் கூட பாரபட்சமாகவே நடந்து கொள்கிறார்கள். புரிதலற்ற தன்மையில் சிலர் மொழிபெயர்க்கும்போது தலித் இலக்கியத்தின் நோக்கமே மாறிவிடுகிறது. ஆகவே பொருள் உணர்ந்து..பிரச்சனையின் தன்மை அறிந்து அதனை மொழிபெயர்க்க வேண்டியது அவசியமாகிறது.

மொழியாக்கத்தில் ஏற்படும் இடர்கள் குறித்து சில தகவல்களை நமக்கு அளிக்கிறார்கள். இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும்போது ..தமிழில் எப்படி வருகிறது. ஆங்கிலத்திலிருந்து நேரடி மொழிபெயர்ப்பில் சில சொற்கள் எவ்வாறு மாறுகிறது என்றும், நன்கு உணர்ந்து கற்ற பிறகு தம்முடைய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிறார்கள்.

1980 ஆம் ஆண்டு பதிப்பாசிரியர் ஜார்ஜ் ஐ கொண்டு சாகித்ய அகாடமி இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகியுள்ள தலை சிறந்த படைப்புகளை.. தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
 'இந்திய இலக்கியத்தின் உன்னத படைப்புகள்' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல் 1999இல் 'இடைக்கால இந்திய இலக்கியம்' என்ற தலைப்பில் நான்கு நூல்களாகவும் வெளி வந்துள்ளது.

தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள வை குறைவே என்னும் தகவல் புதியதாய் இருக்கிறது. பலரும் சொல்வது போல மூல மொழி குறித்த போதுமான அறிவு இல்லாமல் இணைப்பு மொழியை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்தல் என்றும் நிறைவளிக்காது.

இலக்கிய மொழி ஏனைய மொழிகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமானது .எனவே அதனை மொழிபெயர்ப்பது சவாலானது ஆகும். மூல மொழி பயன்பாட்டில் உள்ள மூலப் பிரதியை அவ்வாறே நகலெடுக்காமல்.. நமது மொழிக்கு தகுந்தவாறு அதேசமயம் அந்த கருத்து குறையாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில சொற்களுக்கு ஏற்ற தமிழ் சொற்கள் இல்லாமல் போகலாம் அதற்கேற்ப இணையான வேறு நல்ல சொற்களையே பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு வாசகன் சிறுகதையில் ஆரம்பித்து நாவலில் பயணம்செய்து கட்டுரையில் முடித்து இறுதியில் மொழிபெயர்ப்பில் தன்னை அர்ப்பணிப்பான் என்பார்கள். அந்த மொழிபெயர்ப்பு குறித்து இத்தனை விபரங்களையும், தகவல்களையும், அதில் உள்ள சவால்களையும், இடர்களையும், மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கக்கடிய பல்வேறு பிரச்சினைகளையும், இப்புத்தகம் நன்கு அலசி உள்ளது.

நல்ல மொழிபெயர்ப்பு அப் புத்தகத்துடன் ஒன்ற வைப்பதில் இருக்கிறது.. மொழிபெயர்ப்பாளரின் திறமையும். அதேசமயம் மொழிபெயர்ப்பாளர்களை கொண்டாட வேண்டியது வாசகனாகிய நம்முடைய கடமையும் கூட .

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday 3 May 2021

ஜெயகாந்தன்

பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆணின் வர்க்கமும்,ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்

-ஜெயகாந்தன்

கற்பதுவே பகிர்வதுவே-28*மணி




#ஆட்டம் 
-சு.வேணுகோபால்

எந்த அலங்கார வார்த்தையும் இல்லாமல் ஒரு குறுநாவலை சுவாரஸ்யம் குறையாமல் தந்திருக்கிறார் சு.வே.சிறுவர்கள் விளையாடும் தொட்டு விளையாட்டில் அவுட் ஆகாமல் களைப்பின்றி ஓடுவோமே அதுபோல. தொட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் அவனும்,அவுட் ஆகக் கூடாது எனும் எச்சரிக்கையுடனும் ஆடுவது போல் இதன் மொழிநடை உள்ளது.

#கதை

தேனி நகரம்தான் கதையின் களம். கபடி வீரரான வடிவேல் ஊரில் ஒரு கில்லி.அவன் ஆட்டத்தில் மயங்கிய கனகத்தை கைப்பிடிக்க முடிவெடுக்கிறான்.வெவ்வேறு ஜாதி என்பதால் ஊரை விட்டு ஓடிப் போய் நகரத்தில் வாழ்கின்றனர். இரு பிள்ளைகள் பிறந்ததும் ஒரு கட்டத்தில் உடன் வேலை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பினால் மனைவி கனகம் காதல் கொண்டு அவனுடனே சென்று விடுகிறாள்.

வேறுவழியின்றி வடிவேல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே..தன்  பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான். அவமானத்துடன் இருக்கும் போது.. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து, பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான்.
மீண்டும் ஜெயித்தானா?90கிட்ஸ் 2k கிட்ஸ் சிலபஸை பாஸ் செய்வது அவ்வளவு எளிதானதா?என தன் சுவாரஸ்ய மொழி நடையின் மூலம் கதையை காட்சிப்படுத்தியுள்ளார்.

கதையின் விறுவிறுப்பும், கிராமத்து நடையும் பக்கத்து வீட்டில் கதை கேட்பது போல் இருந்தது.

மீண்டும் ஆடத் தொடங்கிய வடிவேலுவின் கால் சதை புரண்டு விட்டது போல் வலி.
குதிகளின் நரம்புகள் ஆங்காங்கே பிடித்தன. தன்னுடைய ஆட்டங்களில் தனித்து கிளம்பும் வீச்சு காணாமல் போய்விட்டது. எங்கோ ஒளிந்து கொண்டது. நிகரற்ற அந்த சுழிமுனை ஆட்டம் கழன்றுகொண்டு விட்டதோ என்று பட்டது. விளையாடாமல் இருந்திருந்தால் கூட பழைய வெற்றிகளை எல்லோரும் சொல்வார்கள் அந்த மதிப்பும் அழிந்து விடுமோ என்ற கவலை அவனுக்கு ஏற்பட்டது.மனித மனத்தை யதார்த்தமாய் விளக்குகிறார்.

#ரசித்தது

*அவரவர் அவரவருக்குத் தெரிந்த விதத்தில் ஆடுகின்றனர். தெரியாமல் ஆடி தெரிந்தும் கொள்கின்றனர். ஆடாதவர்களுக்கு வாழ்க்கை இல்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையை ஆட்டம். மானுட ஆட்டம்.

*மனைவியைத் தேடி கண்டு இழுத்து வரலாமா என்று தோன்றியது. வர மறுத்தால் குழந்தைகளின் நிலையை சொல்லி நெஞ்சை கரைத்துவிட எண்ணம் தோன்றியது. இருப்பினும் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற வீம்பும் வைராக்கியமும் தோன்றுவதுண்டு என
ஆணின் மனநிலை அப்படியே விளக்கி இருப்பார்.

*பெருகும் அறிவு விதவிதமாக குழிபறிக்கும் சூட்சமத்தை மௌனமாக சேர்த்துக்கொண்டே இருக்கிறது. எல்லாம் மானுடரும் குழந்தைகளாக இருந்தபோது தான் நேசம் இயல்பாய் துளிர்த்திருக்கும்.

*தெருவில் போகும்போது மனிதர்களுக்குப் பெரும் பிரச்சனைகள் இல்லாதவர்கள் போல் சாதாரணமாகத்தான் நகர்கிறார்கள்

*பார்வையில் சாதாரண மனுஷியாகவும் மனிதனாகவும் தெரிகின்றனர்

*ஓடவேண்டும். தோற்றாலும் ஓடவேண்டும். ஓடுவதில் என்ன வெற்றி தோல்வி. ஓடாமல் நிற்பதுதான் தோல்வி

*வயது ஏற ஏற கிளைகளை விரிக்கின்றன. பூக்களை சொரிக்கின்றன. காய்க்கின்றன. இந்த மரங்கள் எந்த வருடமும் ஓய்வு எடுத்துக் கொள்வதே இல்லை.

*எதில் ஓடினாலும் கவனத்தை தூண்டி விட்டுக் கொள்ள வேண்டும் நிதானமாக ஓட வேண்டும் .

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

.

வேணுகோபால்

ஓடவேண்டும். தோற்றாலும் ஓடவேண்டும். ஓடுவதில் என்ன வெற்றி தோல்வி. ஓடாமல் நிற்பதுதான் தோல்வி

-சு.வேணுகோபால்

வேணுகோபால்

பெருகும் அறிவு விதவிதமாக குழிபறிக்கும் சூட்சமத்தை மௌனமாக சேர்த்துக்கொண்டே இருக்கிறது. எல்லாம் மானுடரும் குழந்தைகளாக இருந்தபோது தான் நேசம் இயல்பாய் துளிர்த்திருக்கும்.

-சு.வேணுகோபால்

காந்தி

உண்மை வைரத்தை போன்றது.அதற்கு வைரத்தை போலவே பல பக்கங்கள் இருக்கலாம்.அதனால் நீங்கள் காணும் ஒற்றை பக்கம் மட்டுமே முழு உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை
     
-காந்தி

Sunday 2 May 2021

சுஜாதா

அவள் அப்பா ஏதோ சொல்ல சிரிக்கிறாள்.சிரிப்பில் சின்ன மரியாதை,மமதை. ஆரோக்கியமான ஈறுகள், பற்கள்.முந்தாநாள் தான் பிறந்தது போல இருக்கிறார் ரத்னா! ஓ மை டியர் ரத்னா!

-சுஜாதா