Friday 29 December 2023

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி-புறப்பொருள் வெண்பா மாலைகல் என்றால் மலை, மண்-சமவெளி,வாள்-ஏர் முனை.மலை மட்டும் இருந்த ஊரில் ஏர்முனையில் நிலத்தை சீர்படுத்தி வயலாக்கினார்கள். உழவர் பெருமையைக் குறிக்கும் வகையில் சொல்லப்பட்டது.

அருகாமை என்றால் அருகில் என்று பொருள் இல்லை.தொலைவு என்று அர்த்தம்.அருகில்- தூரம் குறைந்து உள்ளது.அதாவது பக்கத்தில் என்று பொருள்.அருகு எனில் சுருங்குதல், குறைதல். அருகாமை எனில் நீளுதல்,சுருங்காமை என்று பொருள்.nearby-அருகில், far-அருகாமை#info

Thursday 28 December 2023

சொக்கன்


"தொலைக்காட்சி ஒரு மிகச் சிறந்த கருவி. அதைப் பார்க்கப் பார்க்க உங்கள் மனத்திலிருந்து எல்லா எண்ணங்களும் வடிந்துவிடுகின்றன. நீங்கள் எதிலும் கவனம் செலுத்தவேண்டியதில்லை. நீங்கள் எதற்கும் எதிர்வினையாற்றவேண்டியதில்லை. நீங்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை. முக்கியமாக, உங்கள் மூளை உங்களுக்கு முற்றிலும் தேவைப்படாது."

ரேமண்ட் சான்ட்லர் என்ற நாவலாசிரியருடைய பொன்மொழி இது. அவர் "தொலைக்காட்சி" என்று சொல்லியிருக்கிற இடத்தில் "Social Media Feed" என்று வைத்துக்கொண்டால் இன்றைக்கு அது சாலப் பொருந்தும்.

-சொக்கன்

உலகத்தில்இதுவரை ஒரே ஒருகூரான கத்திதான்உயிரோடு உள்ளது.அதுசாகாமல் இருப்பதற்காகசாணை பிடித்துக்கொண்டேஇருக்கின்றனலட்சோப லட்சம் கைகள்.-கல்யாண்ஜி

Monday 25 December 2023

நெக்லஸ்

நெக்லஸ்
-மாப்பசான்

நேற்று காலை நேர அவசரத்தில் படித்த கதை இன்னும் மனதில் எண்ணற்ற கேள்விகளை

மிகவும் சாதாரணமான கதை 'நெக்லஸ்' ஆனால் சொல்லிய செய்தி ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.

"ஒரு பெண் தன் தோழியிடம் இரவல் நகை ஒன்றை வாங்கி போட்டுக் கொண்டு திருமணத்திற்கு போகிறாள்..அது ஒரு வைர நெக்லஸ். தொலைந்து போய்விடுகிறது. பதறிப்போன அவள் எங்கெங்கோ தேடிப்பார்க்கிறாள். எங்கும் கிடைக்காதுபோகவே அதேப் போலொரு நெக்லஸை வாங்கி கொடுத்துவிடலாமென கடையில் கேட்கிறாள். அதன் விலை அவளது சேமிப்பு, உடைமை, சொத்து அனைத்திற்கும் சரியாக இருக்கிறது. அனைத்தையும் விற்று அந்த நகையை வாங்கித் தோழியிடம் கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டு எங்கோ போய் விடுகிறாள்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இரு தோழிகளும் ஒரு பொது இடத்தில் சந்திக்கிறார்கள். இவள் மிகவும் வயதானவளாக, நோயாளி போல் காணப்படுகிறாள். தோழிக்கு ஆச்சரியம்..."ஏன் இப்படி இருக்கிறாய்?" என அதிர்ந்துபோய் கேட்கிறாள். சிறிது நேரத்தில் உண்மை வெளிப்படுகிறது.

"அடப்பாவி... என்னிடம் நடந்த விஷயத்தை சொல்லியிருக்கக் கூடாது ? அது ஒன்றும் ஒரிஜினல் நகை இல்லை. கவரிங்..." என்று தலையிலடித்துக்கொண்டு அவளை வீட்டிற்குக் கூட்டிப்போய் அவள் வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த நெக்லஸை அவளிடமே திருப்பித் தருகிறாள் தோழி.

கதை முடிந்துவிட்டது!

ஒரு நல்ல கதை முடியும் இடத்தில்தான் உண்மையில் ஆரம்பமாகிறது! நெக்லஸ் அவளிடமே வந்து விட்டது! ஆனால், அவள் இழந்த வாழ்க்கை? இளமை? நிம்மதி? '

அவள் அற உணர்வை எண்ணி வியப்பதா, அவள் ஏமாற்றத்தை எண்ணி பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை.மனிதர்கள் மனிதர்களுக்கு உண்மையாக இருக்க நினைத்ததை எண்ணி பெருமிதமும் பட வைக்கிறது

-மணி

Knowing others is wisdom;Knowing yourself is Enlightmentமற்றவரை அறிதல் அறிவென்றால்.. தன்னையறிதல் ஞானம் எனலாம்-லாவோட்சூ

'பேங்க்' (bank) என்பதை நாம் 'வங்கி' என்கிறோம். இத்தாலிய வார்த்தையான 'பாங்க்கோ' (banco) என்பதிலிருந்து தோன்றியது. யூதர்கள் இங்கிலாந்தின் கடைத்தெருவில் ஒரு நீளமான இருக்கையில் உட்கார்ந்து தங்கள் வணிகத்தை நடத்தினார்கள்.அந்த இருக்கையை (பெஞ்ச்சை) இத்தாலிய மொழியில் 'பாங்க்கோ' என்று அழைத்தார்கள். அதுதான் 'பாங்க்' ஆனது.-ஜி.எஸ்.எஸ்

Sunday 24 December 2023

புதைத்துப் பார்த்தேன் முளைக்கிறது எரித்துப் பார்த்தேன் உயிர்க்கிறது கரைக்கலாம் என்றால் மிதக்கிறது சுமக்கலாம் என்றால் கனக்கிறது. பாவி என்னடீஈஈஈஈஈஈ செய்வேன் உன் ஞாபகங்களை. -ரவி சுப்பிரமணியன்

சொல்லிக் கொடுப்பதில் எந்த சிரம்மில்லை. ஆனால் சொல்லிக் கொடுத்ததை, சொல்லிக் கொடுத்த விதத்தில் புரிந்து கொள்ளத்தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது-பாலகுமாரன்

தூரத்தில் ஒலிக்கிற பழைய பாடலுக்குதூரமே புதுப் பின்னணிஇசை சேர்க்கிறது.-கலாப்ரியா

Thursday 14 December 2023

janakiraman


ஏகம் சத் விப்ரா : பகுதா வதந்தி

"ஏகம் சத்" - உண்மை ஒன்று தான். "விப்ரா" - அதனை அறிந்தோர்கள், "பகுதா வதந்தி" - பலவாறாக கூறுகிறார்கள் என்பது வேத வாக்கியம். அந்த உண்மை என்பதை, பரம்பொருள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்த ஒரு வரி, மிக ஆழமான, தத்துவார்த்த, ஆன்மீக  விளக்கங்களை தரும். இப்போது, எளிய புரிதலில் இந்த மந்திரம் சார்ந்த வாழ்வியல் உண்மையை பார்ப்போம். 

2+5 = 7 என வரும். 15 – 8 என்பதும் 7 என்ற விடையைத் தரும். அதே போல 21/3 என்பது 7 என்ற விடையைத் தருகிறது. கணக்கில் 7 என்ற விடையை பல வழிமுறைகளில் நாம் கண்டடைவது போல,  ஒரு பிரச்சனைக்கு பல வித "சரியான" தீர்வுகள் இருக்கமுடியும். 

அகிரா குரோசாவுடைய ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ரஷோமொன் (1950), ஒரே நிகழ்வை, அதில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொறுவரும் தத்தமது பார்வையில் முரணுடன் சொல்லுவதை மிக அழகாக பதிவு செய்திருக்கும்.

பல நேரங்களில், அலுவலகத்திலோ, குடும்பத்திலோ நான் சொல்வது சரி, நீ சொல்வது தவறு என்ற ஒற்றை மைய சிந்தனையால் தான் குழப்பம், ஈகோ ஏற்படுகிறது. உண்மையில், இருவர் கூறுவதுமே சரியாக இருக்கலாம். ஒரு உண்மை, இன்னொறு உண்மைக்கு எதிரானது இல்லை. இரண்டு கோணங்களில் இருந்து பார்ப்பதால் ஏற்படும் சிந்தனைகள். அவ்வளவு தான். 

"அனைத்தும் உண்மை" என்பதில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. அனைத்தும் உண்மை என்பதால் மட்டுமே அவை அனைத்தும் அறமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர், திருடிவிடுகிறார். நீ திருடினியா எனக் கேட்டால், ஆமாம் திருடினேன் என்று உண்மையைக் கூறுவதால் அவர் உத்தமனாகிவிடமாட்டார். உண்மை என்பது, அறத்தைக் கொண்டு கட்டமைக்கும் போது தான் அதற்கு மதிப்பு கிடைக்கிறது.

(மீள் பதிவு)

Wednesday 13 December 2023

பிச்சைக்காரன்

நம் பார்வைக் கோணம் நம் உணர்வுகளை எப்படி  மாற்றுகிறது என stephen covey தரும் உதாரணம் அவர் வரிகளில் ( அதன்பிறகு என் அனுபவம்)

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். பலர செய்திதாள் படித்தவாறும் வேடிக்கை பாரத்தவாறும் கண்மூடியும் அமைதியாக இருந்தனர் அழகான பயணம்
அப்போது ஓருவர் சில குழந்தைகளுடன் ஏறினார்  அமைதியே போய்விட்டது குழந்தைகள் சேட்டை அழுகை  பிறரது பேப்பரை இழுப்பது என செம டார்ச்சர்.  காட்டுமிராண்டிகள் எரிச்சலுடன்  அவரிடம் சொன்னேன்  குழந்தைகள் இடைஞ்சலை கொஞ்சம் கவனிக்கக்கூடாதா?

அவர் சொன்னார்  தப்புதான் ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை  அவர்களது தாயார் சற்றுமுன் இறந்துவிட்டார் மனம்கலங்கிப்போய் இருக்கிறோம் இந்த,சூழலை கையாள என்னாலும் முடியவில்லை  அவர்களாலும் முடியவில்லை

இதைக்கேடடு ஆடிப்போனேன்  அதுவரை காட்டுமிராண்டிகளாக தெரிந்தவர்கள் தற்போது பரிதாபத்துக்கு உரியவர்களாக மாறினர் அதன்பின் அவர்கள் செய்கை எரிச்சலூட்டவில்லை.

-படித்தது

Saturday 9 December 2023

இவளை பார்த்து ரசிப்பதைக் காட்டிலும் வேறு முக்கியமான வேலை ஒன்றும் இல்லையென எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தேன்.ஒவ்வொரு கோணமும் ஒவ்வொரு விதம். அழகு நமது பார்வையில் இல்லை.நாம் பார்த்து இரசிக்கிற கோணத்தில்தான் உள்ளது..-கோகுல் பிரசாத்Gokul Prasad (ஒரு கொரியர் ஆபிசில் உள்ள பெண்ணை வர்ணித்திருப்பார்)

பிடித்தவர்கள்கடந்து போகையில்மட்டும்..பிடரியில்முளைத்துக் கொள்கின்றனகண்கள்-கண்மணி குணசேகரன்

janakiraman


இந்த ஓவியம், இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டி வரைந்தது. 

ஓவியத்தில், ஒரு பாம்பின் வால் பகுதி மட்டும் சிறிய ஓட்டையின் வழியாக வெளியே தெரிகிறது. இதனைக் கண்ட பூனை, அது எலியின் வால் என்று நினைத்துக் கொண்டு, அந்த எலியை வெளியே வர வழைக்க அதனை இழுத்து, பிராண்டி விளையாடிக் கொண்டிருக்கிறது.

இன்றைய வேகமான மற்றும் யோசிக்க நேரமில்லாத வாழ்க்கையில், உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நாம் காண்கிறோம்.

நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் அபாயங்கள் தெரியாமல், யாருடன் விளையாடுகிறோம் என்று தெரியாமல், நமது அறியாமை, ஈகோ, முன் முடிவுகள் போன்ற குணங்களால் அந்த பூனை, எலியின் வால் என நினைத்து பாம்புடன் விளையாடுவது போல வாழ்வை அணுகுகிறோம்.

நாம் எலி வாலாக நினைக்கும் பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை விட நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு ஆகியவை மிகப் பெரியவை. 

நம்மால் வாழ்வின் முழு படத்தையும் பார்க்க முடியாது.  முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை புரிந்து கொள்வோம்.

Friday 8 December 2023

ஃபேன்சி கடையில் "நல்லா எழுதுமா?" என்று கேட்டு பேனா வாங்குகிறேன். அதே கடையில் மகன் "நல்லா விளையாடுமா?" என்று கேட்டு கிரிக்கெட் பேட் வாங்குகிறான். நம்மைப் பார்த்துத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.-பேயோன்

எந்த மரத்தை வெட்டப்பொகிறோமோ அந்த மரத்தின் நிழலில்தான் அதை வெட்டுவதற்கான கயிறையும் தாம்புக் கயிறையும் கோடரியையும் வைக்கிறோம்-வண்ணதாசன்

சில நேரம் வேடிக்கை மட்டுமே பார்க்க நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். கைகள் கட்டப்பட்ட, மனம் கட்டப்பட்ட, சொற்கள் கட்டப்பட்ட ஒரு வெற்றுயிராய் இருந்துதான் ஆகவேண்டும்.-சேரவஞ்சி

ராமனுஜம்


Productivity , Creativity

நமக்கு இந்த இரண்டில் எது தேவை?

Productivity அதாவது உற்பத்தி என்பது  அளவு அடிப்படையிலானது ( Quantitative). ஒரே விஷயத்தைத் தொடர்ச்சியாக, பொறுமையாகக் கவனச் சிதறலின்றிச் செய்வது Productivity க்கு அவசியம். ஒரு கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் என்றால் நிறையத் தகவல்களைப் பல மணி நேரம் கணினியில் ஏற்ற வேண்டியிருக்கும். ஒரு எழுத்தாளர் என்றால் உங்களுக்குத் தோன்றிய ஐடியாக்களை உட்கார்ந்து வரிசைப் படுத்தி எழுதி மீண்டும் மீண்டும்  பிழைகளைத் திருத்த வேண்டும். பூ கட்டுபவராக இருந்தால் கவனச் சிதறல் இன்றி எத்தனை மாலைகளைத் தொடுக்கிறோம் என்பதுதான் Productivity. இதனை அடைய நமக்குச் சலிப்பூட்டும் , போரடிக்கும் விஷயங்களைக் கவனச் சிதறலின்றிச் செய்ய வேண்டும். மனக் கட்டுபாடு வேண்டும். 

இதனை Hyperfocus என்கிறார் க்றிஸ் பெய்லி ( Chris Bailey). ஹைப்பர் ஃபோகஸ் என்ற தனது நூலில் இதனை விளக்குகிறார்.

அதே நேரம் Creativity என்பது புதிதாகக் கருத்துகளை  உருவாக்குவது. இது தரத்தோடு தொடர்புடையது ( qualitative). இதற்கு நம் மனம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பல விஷயங்களைச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் பல விஷயங்களைத் தொடர்பு படுத்திப் புதுமையான கருத்துகளை உருவாக்க முடியுமாம். இதனை Scatter Focus என்கிறார் க்றிஸ் பெய்லி.

ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருப்பது ( Organized)  Productivity ஐ அதிகரிக்கும். Productive ஆன ஆட்கள் மேஜையும் புத்தக அலமாரியும் கம்ப்யூட்டரும் ஒழுங்காக இருக்கும் என்கின்றன ஆய்வுகள்.

அதே நேரம் Creativity அதிகம் இருப்பவர்கள் ஒழுங்கற்றுக் கன்னாப் பின்னா என மேஜையையும் கணினியையும் வைத்திருப்பார்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

இறுதியாக

நமக்கு இரண்டுமே தேவை. ஒரு விஷயத்தை உருவாக்க Creativity வேண்டும். உருவானதை ஒழுங்காக உற்பத்தை செய்ய Productivity தேவை.

Hyperfocus , Scatter focus இரண்டுமே தேவை என்கிறார் க்றிஸ் பெய்லி.

-படித்தது

Monday 4 December 2023

பூங்காவில் கோடைகாலம் நுழைந்து கொண்டிருக்கிறது. புகைப்படக் கருவியின் விழிகளை சட்டென்று மூடித் திறப்பது போல.இலைகளெனும் சிறிய இதயங்களின் பச்சையம் நீங்கிக் கொண்டிருக்கிறது மகிழ்ச்சியிலிருந்து அசட்டுத்தனம் ஒழுகுவதைப் போல.-திருச்செந்தாழை

தொட்டிக்குள் இருக்கும் ஒரு மீனை எது கடலை நோக்கி உந்தித் தள்ளுகிறதோ அதுவே பயணம்.அது உங்கள் இதயத்தையும் அறிவையும் அகலப்படுத்தும். உங்கள் தலைக்குமேல் இருப்பது முழுமையான வானமல்ல, வானத்தின் ஒரு துண்டுதான் என்பதை உணரவைப்பதே மெய்யான பயணம்-மருதன்

Saturday 2 December 2023

ஜெமோ


எந்தத் தளத்திலும் ஆரம்பம் என்பது மனச்சோர்வூட்டக்கூடியதாக, கடுமையானதாகவே இருக்கும். அந்த சோதனையை உங்களால் தாண்ட முடிகிறதா என்று பாருங்கள். தாண்டினால் உங்களுடைய இடத்தை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

ஒருவன் அன்றாடம் செய்யும் பணி முழுக்க அவனுக்கு மனநிறைவூட்டக்கூடியதாக இருக்கும் என்றால், அதுவே அவனுடைய கல்வியும் சாதனையும் கேளிக்கையும் வழிபாடும் ஆகும் என்றால் அவன் வாழ்க்கைதான் ஆசீர்வதிக்கப்பட்டது.

                                   - ஜெயமோகன்

அறிவையே நாட வேண்டும்.அறிவையே அறிய வேண்டும்.அறிவையே அடைய வேண்டும்-பிளேட்டோ

பாராட்டுதலை குறிக்க hats off என்று கூறுவோம். யாரையாவது அறிமுகப்படுத்தும் போது தன் தொப்பியை கழற்றுவது அக்கால பிரிட்டிஷ் பழக்கம். இது மரியாதையைக் குறிக்கும் பாராட்டுதல்.இன்றளவும் கூட்டத்தில் பேசும்போது சாதனையை அங்கீகரிக்க பயன்படுத்துகிறோம்.

அறியாமை என்பது மிகப்பெரிய சாபம்! முட்டாளாக இருப்பது ஒரு மிகப்பெரிய தண்டனை! இதில் விசித்திரம் என்னவென்றால், இந்தச் சாபத்தையும் தண்டனையையும் நாம் தான் நமக்குக் கொடுத்துக் கொள்கிறோம்-சுகபோதானந்தா

Friday 1 December 2023

ஜெஃப் ப்ரவுன்


நமது இளமையில் எல்லாவற்றிலும் கச்சிதத்தை எதிர்பார்க்கிறோம். அந்த மாயை மீது பித்து கொள்கிறோம். உறுதியைத் தொழுகிறோம். ஆனால், வயதாகும்தோறும் மனிதர்களின் இயல்பான பிழைகளை விரும்பத் தொடங்குவோம். கடும் இன்னல்களிலிருந்து மீண்ட கதைகள், கர்மாவைப் போல நம்மைப் பின்தொடர்ந்த போராட்ட வாழ்வு, சூழலுக்கேற்பத் தன்னை வடிவமைத்த ஆன்மாவின் பலகீனங்கள், வயதாவதன் நொய்மை போன்றவற்றை ஏற்கப் பழகுவோம். நம்முடைய ஆற்றலும் போராட்டக் குணமும் வலுவிழக்கும்போதே நமது உண்மையான இயல்பென்ன என்பதை உணர்கிறோம். அத்தகைய புரிதல் மலர்ந்ததும் இவ்வுலகில் வாழ்வதற்கு எஃகு போன்ற உறுதி தேவையில்லை, பூஞ்சையான மனங்களே போதும் என்கிற தெளிவைப் பெறுகிறோம். முன்னர் குறைகளை அடையாளம்கண்ட இடத்தில், தற்போது வாழ்வை முழுமையாக அனுபவித்து அறிந்ததற்கான தடயங்களைக் காணத் தலைப்படுகிறோம்.

- ஜெஃப் பிரவுன்.

அகம் முகம்


அகம் முகம்

Raajaa Chandrasekar 

கவிஞரும் இயக்குநருமாகிய திரு. ராஜா சந்திரசேகர் அவர்கள் என் வாசிப்பின் முன்னத்தி ஏர். அந்திமழை வார இதழில் தான் கண்ட மனிதர்களை எழுத்தின் வழியே நமக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்வின் உன்னத தருணங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் உன்னத பணியை செய்து இருக்கிறார். அகம் புறம் புத்தகத்தின் தலைப்பே உலகை திறந்து பார்க்கும் சாளரம் போல அழகான் கவித்துவமான தலைப்பு. இதில் சந்திப்புகளை உயிர்ப்புள்ளதாக்கும் எளிய மனிதர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பார். இந்தபக்கத்தை படித்தபின் திருப்புவதற்குசில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு மனிதர்களின் கதையின் முடியிலும் ஒரு உயிரின் வாதையை மெல்லிய எதார்த்தத்தை நமக்கு சொல்லியிருப்பார்.கற்றுக் கொள்ள தயாராய் இருக்கும் போது உன் குரு உன் முன்னால் தோன்றுவார். நாம் எப்போதும் கற்றுக் கொள்ள இருக்க வேண்டும் என்பதற்கால சொல்லப்பட்டதை ஒவ்வொரு சிறு கட்டுரையிலும் தான் கற்றவற்றின் வழியே நமக்கும் வழிகாட்டுகிறார்.

இந்தத் தொகுப்பில் உள்ள மனிதர்கள் யாவும் எளிய மனிதர்கள். அன்றாடம் நாம் சந்திப்பவர்கள்.
ஒவ்வொரு காத்திருப்பின் முடிவிலும் ஏதேனும் ஒரு புதையல் கிடைப்பது போல் ஒவ்வொரு மனிதர்களை சந்தித்த பின் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரிகள் நாம் சிந்திப்பதற்கு தந்திருப்பது எனர்ஜி டானிக். உதாரணத்திற்கு 
"இறந்த காலத்தை
நினைவுகளால் திற.
நிகழ்காலத்தைச்
செயல்களால் திற.
எதிர்காலத்தை
நம்பிக்கையால் திற" எனும் வரி.

அந்த மனநலக் காப்பகத்தின் விளக்குகள் நோய்மையுடன் முணுமுணுக்கின்றன எனும் வரி கவித்துவம். அதே போல் ",சில சொற்கள் தருணங்களை அழகாக்குகின்றன.அதில் மனிதர்கள் அழகாகத் தெரிவார்கள் எனும் வரியைபடித்தவுடன் நம் மனமும் நமக்கே அழகாய்த் தெரிகிறது.

டீஸ்பூன் அளவுக்கு புன்னகை சேருங்கள். நாள் இனிப்பாகும் என்பது பாசிட்டிவ் திங்கிங்கிற்கு எடுத்துக்காட்டு.வாழ்க்கையோடு ஓடுகிறீர்களா? வாழ்க்கை ஓடவைக்கிறது!

"வார்த்தைகள் பூப் போன்றவை. அதைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் தான் மதிப்பைப் பெற முடியும்" என்பார் விக்டர் ஹ்யூகோ. இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதர்களையும் சரியாக வார்த்தைகளில் தொடுத்து மாலையாக்கி..நம் கைகளில் கொடுத்திருக்கிறார் ராஜா சந்திரசேகர் அவர்கள்.வாழ்த்துகள் சார்

தோழமையுடன் மணிகண்டபிரபு