தி இந்து ஞாயிறு மலரில் இவரின் இலக்கிய கட்டுரைகளை வாசித்துள்ளேன். கருத்து செறிவும் ஆய்வும் இவரின் கட்டுரைகளில் மிளிரும்.
இலக்கியம் என்பது கதைகளைச் சொல்வதற்கான ஒரு கலை மட்டுமல்ல; மனித வாழ்க்கையையும் சமூகத்தையும் வரலாற்றையும் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்வதற்கான ஓர் அறிவுசார் செயல்பாடும் ஆகும். ஒரு படைப்பு முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்வது மட்டுமின்றி, அது எவற்றை மறைக்கிறது, யாருடைய குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, எந்தக் கருத்துகளை எதிர்க்கிறது என்பதையும் ஆராய்வதே திறனாய்வின் முக்கியப் பணியாகும்.இத்தகைய வாசிப்பு அணுகுமுறைக்கு வழிகாட்டும் நூலாகச் சுப்பிரமணி இரமேஷ் எழுதிய ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’ அமைகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியங்களிலிருந்து படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஆழமாக வாசித்து, தனது விமர்சனப் பார்வையை ஆசிரியர் இந்நூலில் முன்வைத்துள்ளார்.
பாரதியார் என்றதும் விடுதலை உணர்வு தேசப்பக்தி பாடல்கள் என்பதுதான் நினைவுக்கு வரும். அவர் குறித்து பெண்ணிய எதிர்கதையாடலை முதல் கட்டுரை விளக்குகிறது.அவரின் மனைவி குறித்த செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன.தங்கம்மாவால் எழுதப்பட்ட பாரதி சரித்திரம், யதுகிரி அம்மாள் எழுதிய பாரதியார் நினைவுகள் இருபுத்தகம் தவிர செல்லம்மா குறித்த செய்திகள் இல்லை என்பது ஆச்சர்யமளிக்கிறது.பாரதிக்கு செல்லம்மா பற்றிய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் இப்படைப்பில் முன்னிருத்துகிறார்
கெளதம முனிவரால் சாபமடைந்த அகலிகையின் கதையை நாம் ராமாயணத்தில்.படித்திருந்தாலும் அகலிகையின் மற்றொரு வரலாற்றை எட்டுத்தொகை நூல், பிரபஞ்சன் எழுதிய அகலிகை பற்றிய ஆதாரத்துடன் கூறுகிறார்.நவீனமாக புதுமைப்பித்தன் எழுதிய சாபவிமோசனம் கதையையும், ராமனிடம் அகலிகை கேட்கும் கேள்விகளையும் மேற்கோளாக கூறி, அகலிகையின் வாதத்தை நியாயப்படுத்துகிறார்.
ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வுபோல அதன் கதையோடு மட்டும் நிறுத்திப் பார்க்காமல், அதன் பின்னணியில் இயங்கும் சமூக, பண்பாட்டு, அரசியல் கருத்துகளையும் ஆராய வேண்டியதன் அவசியத்தை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.
பெண்வழிக் கவிதைகள் குறித்த கட்டுரையில் ஆரம்ப கால கட்டங்களில் பெண்ணிய கவிதைகளில் தங்களின் ஆதங்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, கலைத்தன்மை இரண்டாம் பட்சமாக.இருந்த வரலாறு பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சிரத்தையான படைப்புகள் வெளிவர துவங்கின.
தமிழில் பெண்களின் சுய அனுபவம், உடல்,தனிமை குறித்த அவஸ்தை, சமூகம், கிராமிய வாழ்க்கை, அந்தரங்கம்,தாய்மை குறித்த எழுதி பின்னர் விரிவடைந்தன.80 களுக்கு பிறகு ஆண்கள் மட்டும் எழுதி வந்த தலித் இலக்கியத்தில் பெண்ணிய படைப்பாளிகளும் இணைந்தனர். ஆக்கபூர்வ விமர்சனங்களை தாண்டி பெண்ணிய கவிஞர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சந்திராவின் பூனைகள்.இல்லாத வீடு சிறுகதை தொகுப்பை முன்வைத்து பெண் எழுத்து சார்ந்த ஆய்வை சொல்கிறார்
பெண்களுக்கான மொழியை உருவாக்கத் துவங்கினர். வெளிப்படையான பிரச்சார தொனி இன்றி ஆனால் பெண் வாழ்க்கை சார்ந்த விஷயங்களை படைப்புகளில் பேசினர்.
எதிர்கால சமூக வரலாற்றை எழுதும் போது தற்காலத்திய சமூக வரலாறே தரவுகளாக நிற்கும் வகையில் அமைந்த இமையத்தின் ஆறுமுகம், செடல், கோவேறுகழுதைகள் நாவல்களை முன்வைக்கிறார். புதிரை வண்ணான் என்ற சாதியின் உண்மையான பெயர் பாதிராவு வண்ணான்.பாதி ராத்திரியில் மட்டும் நடமாட வேண்டும்.மேலும் ஏகாலிக்கான பெயர் காரணத்தையும் விவரிக்க்கிறார். ஒடுக்கப்பட்ட சாதியினரால் ஒடுக்கப்படும் வண்ணார் சமுதாயத்தின் வலியை பேசுவதோடு..நாவல் வந்த புதிதில் எதிரகொண்ட நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் பேசுகிறது.
தலித்திய கவிதைகள் நாட்டார் தெய்வங்கள்,கதைப்பாடல்கள் ஆகியவைகள் இக்கால கட்டத்தில் மீட்டுருவாக்கம் பெறுகின்றன.அது குறித்த ஆய்வினை சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார்.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளை பற்றி நவீன இலக்கியத்தின் மூலம் வெகுஜன மக்களிடம் கொண்டு சென்றவர் ஜி நாகராஜன். சிறுகதைகளை விட நாவல் மூலம் அறியப்பட்டவர்.
தவறான பழக்கங்கள் மூலம் வாழ்வினை முடித்துக் கொண்டார்.அடுத்ததாக புலம் பெயர் மக்கள்குறித்த வரலாற்றை அடுத்த அத்தியாயத்தில் பேசுகிறது.
80களின் இறுதியிலம் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் சோளகர்கள் கூட்டு அதிரடிப்படையின் வன்முறைகளை எதிர்கொண்டனர்.நீதிபதி சதாசிவம் ஆணையத்தின் அறிக்கைக்கு அ.மார்க்ஸ் ஆற்றிய எதிர்வினையும், சோளகர்களின் வாழ்க்கையை கூறும் ச.பாலமுருகனின் நாவலும் கூறப்பட்டுள்ளது.தேடுதல் வேட்டையில் நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எந்த தீர்வும் வரவில்லை எனும் வேதனையான விசயத்தையும் பதிவு செய்கிறார்.
எண்பதுகளின் பிற்பகுதியில் வந்த எஸ் ராமகிருஷ்ணனின் கதைகள் யதார்த்தமானவை,கிராம வாழ்க்கையை தொலைத்த நகரில் சேர்த்த மனிதர்களின் சோகத்தால் நிரம்பியவை.அடுத்ததாக வந்த இவரது காதல்.கதைகள் நுட்பமானவை. தாவரங்களின் உரையாடல், பெயரில்லாத ஊரின் பகல் வேளை, ரகசிய ஆண்கள் என மேலும் சில கதைகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
ஒரு படைப்பின் வெளிப்படையான கதையைத் தாண்டி அதன் உள்பொருளையும் கருத்துநிலைகளையும் ஆராயும் திறனை வளர்க்கிறது.
இலக்கியப் படைப்புகளை ஒரே கோணத்தில் அணுகாமல், பல்வேறு பார்வைகளில் வாசிக்கத் தூண்டுகிறது.
படைப்புகளை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் கருத்துகள், உத்திகள், சமூகப் பின்னணிகள் ஆகியவற்றையும் விமர்சனபூர்வமாக அணுக வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.ஏற்கெனவே நிலைபெற்றிருக்கும் கருத்துகளை மறுபரிசீலனை செய்வதும், புதிய கேள்விகளை எழுப்புவதும், மாற்றுப் பார்வைகளை உருவாக்குவதும் இலக்கியத் திறனாய்வின் அடிப்படைப் பணிகளாகும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு