Sunday 28 February 2021

கற்பதுவே..பகிர்வதுவே-5*மணி




துவக்க காலத்தில் வெளியூர்களிலிருந்து செய்திகளைத் திரட்டியவர்கள் அவற்றை கடிதங்கள் மூலம் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பி வைத்தனர்.சமஸ்கிருதத்தில் கடிதத்திற்கு 'நிருபம்' எனப் பெயர்.இதனால் செய்தி தருபவர்கள் 'நிருபர்கள்' என அழைக்கப்பட்டனர்

#செய்திகள்..நிஜமும்,நிழலும்
-கோமல் அன்பரசன்

எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கும் போது இரண்டாம் ஆண்டில் இதழியல்(Journalism) பற்றி ஒரு பேப்பர் இருக்கும்.அதை படிக்கும் போதுதான் இதழியல் குறித்து முழுமையாய் தெரியவந்தது.ஏழாம் வகுப்பு படிக்கும் போது..எங்க அப்பா தமிழ் வாசிக்க தலையங்கம் படிக்கச் சொல்வாரு.அப்டீனா னு கேட்டவுடன் ஒரு பத்திரிக்கையின் ஆன்மா போன்றது தலையங்கம் என்பார்.இதழியலில் எடிட்டர் மற்றும் பத்திரிக்கையின் கருத்தாக நடுப்பக்கத்தில் இடது ஓர பெட்டியில் இருப்பதாக அன்றுதான் அறிந்தேன்.

தினத்தந்தி ஆதித்தனாரின் இதழாளர் கையேடுதான் நிருபர்களுக்கான பாலபாடம்.அதற்கு அடுத்து சுஜாதா ஒரு கட்டுரையில் கோமல் அன்பரசனின் "செய்திகள் நிழலும்,நிஜமும்" எனும் புத்தகத்தை மேற்கோள் சொல்லியிருந்தார். பல ஆண்டுகள் தேடுதலின் பயனாக பழைய புத்தகக் கடையில் வாங்கி விட்டேன்.65 தலைப்புகளில் எவ்வாறு எழுத வேண்டுமென மிக சுவாரஸ்யமாய் சொல்லியிருப்பார்.

ஜெர்னலிசம் எனும் சொல் லத்தின் மொழிச்சொல்லான டையர்னலில் இருந்து பிறந்தது.இதன் பொருள் 'அன்று'.அன்றாடம் நடந்தததை எழுதிவைக்கும் ஏடு 'ஆர்னல்'.இதுவே மருவி ஜெர்னலிசமாகிவிட்டது. 

சுவாரஸ்யமானதை செய்தியாக்க வேண்டும்.வடிகட்டி மிக முக்கியமானதை எழுத வேண்டும்.
உலகலாவிய செய்திகளை ராய்ட்டர் நிறுவனமும்,ஏபிடிஎன்,இந்தியாவில் PTI,UNI இரு செய்தி நிறுவனங்களும் செய்திகளை பத்திரிக்கைகளுக்கு தரும். ஐந்து கேள்விகள் செய்திக்கு தேவை என்ன,ஏன்,எப்பொழுது, எங்கே,யார்? இவை ஐந்துமே செய்திகளை உருவாக்கும்.

ஒரு செய்தியை வாக்கியமாய் எழுதும்போது எப்படி எழுத வேண்டும், நடை,வசீகர வார்த்தை குறித்து விளக்கியிருப்பார்.ஒருமுறை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திருப்பூர் கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட சம்பவம்.. சென்னை உஸ்மான் ரோடு ஒரு வழிப்பாதையாகிறது.இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து கட்டுரை எழுதினாராம்..ஆனால் தலைப்பு எப்படி வைத்தாலும் பொருத்தமாயில்லை.. யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் நா.பா உள்ளே வந்த அறிந்து கொண்டு தலைப்பு சொன்னாராம்
"உஸ்மான் சாலை ஒரு வழி'யாகிறது'
சிலேடையில் என்ன ஒரு அருமையான தலைப்பு என சிலாகித்தாராம்.

இவ்வாறு ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரே வரியில் சொல்லும் ஆற்றல் அளப்பறியது.
ரஜினி குறித்த கட்டுரையில் தி.கண்ணன் சார் விகடனில் எழுதிய ரஜினியாய் இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்"எனும் இறுதி பஞ்ச் இன்னும் எவர்கிரீன்.
"கண்ணகி என்ன கரடி பொம்மையா" என ஞாநி எழுதிய ஒரு கட்டுரை அப்போது வைரலானது.

பரபரப்பான செய்திகளை விறுவிறுப்பாக தரவேண்டும். எந்த ஒரு செய்தியையும் புதிய கோணத்தில் தர வேண்டும்.(தினத்தந்தியின் புதிய உக்தியாக பத்தி பிரித்து7 பக்கம் 3 ம் பத்தி பார்க்க அப்போது மிகுந்த சுவார்ஸ்யமாய் இருந்ததாம்). தலைப்பைப்போல முதல் வரியும் மிகவும் முக்கியம்.

ஒரு குறிப்பிட்ட துறையில் முழுஅறிவு அவசியம்.ஆங்கிலமும் தமிழும் இதழியலாளருக்கு முக்கியமானது. எல்லா துறைகளிலும் நட்பு வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
நீதிமன்ற வழக்கு குறித்து எழுதும் போது தனித்த கவனம் வேண்டும்.

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் ஒரு பெட்டி செய்தி இருக்கும்.அதில் இதழியல் குறித்து சுவாரஸ்யமான தகவல் சொல்லப்பட்டிருக்கும். எந்த ஒரு செய்தியை எவ்வாறு சேகரிப்பது,  எழுதுவது, தலைப்பிடுவது குறித்து எளிமையாகவும்,உதாரணத்துடன் சொல்லியிருக்கிறார்.நூலின் இறுதியில் கலைச் சொற்கள் இணைத்திருப்பது சிறப்பு.இளம் பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்ற நூல்.

#ரசித்தது

*வலதுபுறங்களில் வரும் செய்திகளே முதலில் கண்ணில் படும்.இதனால் முக்கிய செய்திகள் வலது புறம் முதலில் நிரப்பப்படுகின்றன (ஆமாம்ல)

*முதல் பக்கம் மட்டும் செய்தி ஆசிரியர் வடிவமைப்பார்.மற்ற பக்கங்கள் துணை ஆசிரியர்களால் நிரப்பப்படும்.

*news-சாலை விபத்தில் 20 பேர் இறந்தால் செய்தி
Views-கடந்த சில மாதங்களில் தொடரும் விபத்து குறித்து எழுதுவது

*திரு,திருமதி,செல்வன்,செல்வி.. பெயர் முடியும்போது அவர்கள் என குறிப்பிட்டு எழுதுவது இல்லை

*கூறப்படுகிறது,தெரிகிறது, நம்பப்படுகிறதுஎன இது போன்ற ஸ்கூப் வார்த்தைகள் போட்டுக் கொள்ளலாம்.

*செய்தி வறட்சி இருக்கும் நாட்களில் கட்டுரை,சிறப்புச் செய்திகள் தயாரித்து வைத்திருக்க வேண்டும்.

*வேகம்+நேரம்+கவனம் அவசியம்

*ஒரு புகைப்படமிட்டு நச் வரிகளை சேர்ப்பதும் ஒரு உக்தி.

*ஒரு வாக்கியத்தில் அதிக பட்சம் ஏழிலிருந்து எட்டு வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

#நான் படித்திருக்கிறேன்.காலை பத்து மணிக்கு எடிட்டர் மற்றும் உதவியாளர்களுடன் கலந்துரையாடல் நடந்து அந்த நாள் செய்திகளை அலசி அதிலிருந்து தலையங்கம் தயாரிப்பார்களாம். உதவியாசிரியர்கள் ஒன்றிணைந்து இறுதி வடிவம் கொடுப்பார்களாம். எடிட்டர் என்பவர் பரந்து பட்ட அறிவும், கூர்ந்த நோக்கும் இருந்தால் மட்டுமே முடியும்.செய்தியே இல்லாமல் இருந்தால் என்ன ஆகும்னு யோசித்துள்ளேன்.ஏதோ ஒரு ஆண்டு அப்படி நிகழ்ந்து ஒரு நாள் இன்று செய்தி ஒன்றும் இல்லை என வந்ததாம்.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது வந்த கார்ட்டூன் வசனம் பிரபலமானது.ஒரு படகில் ஐவர் ஏற உத்தரவிட்டபோது ஆறாவதாய் ஒரு கர்ப்பினி பெண் வந்தாராம்..ஐந்தாம் நபர் எழுந்து வழிவிட்டாராம்.அதற்கு ஒரு பஞ்ச் "இயற்கை மனிதனிடம் தோற்ற இடம் " என்று.

இன்றைய உலகில் நாளிதழ் படிப்போர் குறைந்து விட்டனர்.அதான் போன்லயே வருதே அப்புறம் என்னனு கேட்கலாம். நீங்கள் போனில் படித்தால் ஒரு செய்தியை மட்டும் அறிந்து கொள்வீர்கள்.அதுவே நாளிதழில் படித்தால் பல செய்திகள், சொற்களை வாசிக்கலாம்.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday 27 February 2021

கற்பதுவே..பகிர்வதுவே-4*மணி


நேற்றின் அனுபவங்களை நிராகரித்தவனுக்கு நாளை என்பது கிடையாது   -தொ.ப

நீராட்டும் ஆறாட்டும்
-தொ.பரமசிவன்

வழக்கம் போல் இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் நுழைந்ததும் முதலில் தேடியது தொ.ப வின் புத்தகம் ஏதேனும் வந்துள்ளதா என்றுதான். சில கட்டுரைகள் மீள் பார்வைக்குட்பட்டு தொகுத்து இக்கட்டுரை நூலை காலச்சுவடு கொண்டு வந்துள்ளது.

வழக்கம் போல் எளிமையான ஒருபுள்ளியில் துவங்கி..நேர்த்தியாக கோலமிடுவது போல் நிகழ்காலத்தை கடந்த கால பண்பாட்டுடன் தொடர்புபடுத்தி ஆய்வு நோக்கில் ஒரு கட்டுரையை முடிக்கும் போது இறந்தவர் விளம்பரம் இல்லாத செய்தித்தாள் படிப்பது போல் சுகமளித்தது. தமிழகத்தில் 90% அம்மன் கோவில்கள் இருக்கின்றன எனச் சொல்லும்போது நம் குலதெய்வ அம்மன்கள் கண நேரத்தில் வந்து சென்றன.

மஞ்சள் மகிமை கட்டுரையில் பூசுமஞ்சளில் புகழ்பெற்றது விறலி மஞ்சள்.விறலி என்றால் முகபாவங்கள் காட்டி நடிக்கிற நடனமாடும் பெண்களை குறிப்பது. விறலியர் மட்டும் பூசிய மஞ்சள் காலப்போக்கில் குடும்பப் பெண்களும் பூசினர்.விறலி மலை விராலி மலையானதை கூடுதல் தகவலாய் தந்திருப்பது சிறப்பு. தாலியின் சரித்திரம் குறித்து சங்க காலம் முதல் கூறுகிறார். ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில சாதியார் தாலிக்குப் பதில் காரைக்கயிறு எனும் கறுப்புக் கயிறு கட்டியுள்ளனர் எனும் செய்தி புதிதாய் இருந்தது.

சுமைதாங்கி கற்கள் தோன்றியது வரலாறு, கோலம் இடுவதற்கான உட்பொருள்,பூ மாலையின் பல்வேறு பெயர்கள், நீராடலுக்கும் குளித்தலுக்கும் உண்டான வேறுபாடுகள் குறித்த கட்டுரைகள் படிக்க படிக்க சுவாரஸ்யமானவை.வீடு குறித்த ஆய்வில் தொழில்களத்திலிருந்து 'விடுபட்டு' நிற்கும் இடத்தைத்தான் குறித்தது.இதிலிருந்து விடுதி யும் வந்தது.பின் மேலோர் மண்ணுலகம் விட்டு சேரும் துறக்கத்தை(வீடு) அதாவது சொர்க்கத்தை வீடு என அழைத்தனர்.

இதை விட முக்கியமாய் வீடு கட்டும் போது கயிறு கட்டி அதன் நிழல் வழியே திசை குறித்துக்கொண்டு, அத்திசை தெய்வத்தை வணங்கியே வீடு கட்ட ஆரம்பிக்கனுமாம். ஒவ்வொரு ஆய்வு புத்தகத்திலும் எப்படி ஒவ்வொரு கட்டுரைக்கும் சங்கப் பாடலை மேற்கோள் சொல்கின்றனர் என்பது ஆச்சர்யமான விஷயம்.ஏனெனில் சங்க இலக்கியத்தை முழுமையாய் ஆழ்ந்து வாசித்தால் மட்டும் அதிலிருந்து தேர்ந்தெடுத்து மேற்கோள் சொல்ல முடியும்.அது அசாத்திய சாதனைதான்.

சமீபத்தில் என் மகளுக்கு காலில் வட்டமாக ஸ்கின் அலர்ஜி போல் வந்தது.பல மருத்துவரிடம் காண்பித்தும் சரியாகவில்லை. ஒரு முறை விஷேசத்தில் பார்த்த ஒரு பாட்டி பூவரசங்காயை அரைத்து பூசுனு சொன்னாங்க.உண்மையில் ஆச்சர்யம் தான் பத்து நாளில் சரியாகிடுச்சு.அன்னிக்கு தோல் டாக்டர் எல்லாம் எங்க இருந்தாங்க.இதான் மருந்துனு சொன்னது இன்னும் காதில் ஒலிக்குது."பிணி பற்றிய அறிவும் மருந்து குறித்த தெளிவும் பாட்டிக்கு இருக்கிறது.அதான் பாட்டி வைத்தியம்."
நம் பாரம்பரிய வேர்களை அழித்தால் தான் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதையும் சந்தைப்படுத்த முடியும்" எனும் தொ.ப வரி நிதர்சன உண்மை

#ரசித்தவை

*திருமண வீடுகளில் அரசாணிக்கால் நாட்டுதல் என்பது அன்றைய அரசதிகாரத்தின் அனுமதி பெற்று திருமணம் நடத்தப்பட்டதன் சாட்சியம்.

*மருத்துவரில் மரு எனும் சொல் தமிழில் மணம்.அக்காலத்தில் மருத்துவ குணமுள்ள தாவரங்களை மணங்களினால் அறிவதில் இருந்து வந்திருக்க வேண்டும்.

*மருந்துகளின் மீது எழுதப்படாத அதிகாரமாய் வரி விதித்தனர் (அப்பவே வா)

*மருத்துவ கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.1920ல் நீதிக்கட்சி அமைந்த பிறகுதான் அந்த ஆணை நீக்கப்பட்டது

*சோழ அரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்..அடித்தள மக்களை சார்ந்து நிற்கிற வணிக குழுக்களை புறந்தள்ளியதே.

*பொன் என்று பொருள்படும் பாலி மொழிச்சொல் 'சோனா' இது சோணைமுத்து,சோணாசலம் என பெயர் வைத்து அழைத்தனர். பின் சோனா தங்கமாய் மொழி பெயர்த்து தங்கமுத்து, தங்கமலை என விழித்தனர்.ஒடுக்கப் பட்ட மக்களிடத்தில் இன்னும் சிறு தெய்வ பெயர்களான ஒச்சன், சுடலை, பேச்சி,பிச்சை என இருப்பதை காணலாம்.

இது போன்ற எண்ணற்ற தகவல்கள் புத்தகம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.ஆயிரம் பக்கம் எழுதினால் தான் எழுத்தாளர் என்னும் நிலை இருக்கும் போது ஐந்து பக்கம் எழுதினாலும் வாசகனை சிந்திக்க வைக்க வேண்டும்.என்றும் அறியாத தகவல்களை அறிய வைக்க வேண்டும் எனும் வேட்கை தொ.ப விடம் கடைசி வரை இருந்தது.உலகமயம் குறித்து, டங்கல் திட்டம் குறித்து பேசும் போதெல்லாம் சந்தைய மயமாக்கலில் அழிக்கப்படும் பண்பாட்டினை குறித்து ஒவ்வொரு முறை கவலைப்படுவார்.

ஆயிரம் பக்கங்களை படிப்பதை விட இவரின் நூறு பக்கங்களுக்கு வலிமை அதிகம்.தொ.ப வை படிப்போ.ஞானத் தேடல்களை தொடர்வோம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கோ.வசந்தகுமாரன்

அரசாங்கம் செய்யாததை
நான் செய்திருக்கிறேன்
வரிகளைக் குறைத்திருக்கிறேன்
கவிதைகளில்

-கோ.வசந்தகுமாரன்

.விநாயகமூர்த்தி

இயலாதவன்
குழந்தைகளிருக்கிற வீடுகளில்
இந்த
வெறுங்கைகளை வைத்துக் கொண்டு
நுழையாமலே இருந்திருக்கலாம்

-கு.விநாயகமூர்த்தி

Friday 26 February 2021

விக்ரமாதித்யன்

ஊருக்குள்!

கோவிலில் தெய்வம்
சுடுகாட்டில் பிசாசுகள்
ஊருக்குள்
இரண்டும் கெட்டான்கள்

-விக்ரமாதித்யன்

Wednesday 24 February 2021

வைக்கம் முகம்மது பஷீர்

இந்த வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சுகமாக இருக்கணும்னா சொந்தமான கருத்து எதுவும் நமக்கு இருக்கக்கூடாது

-வைக்கம் முகம்மது பஷீர்

லா.ச.ரா

Life is there,because we meet in it some beautiful people

சில அழகான மக்களைச் சந்திக்கிறோம்,அதற்குத் தான் வாழ்க்கை

-லா.ச.ரா

பாடலேர்

எல்லா மாறுதல்களிலும் ஒரே சமயத்தில் வெறுக்கத்தக்கதும் விரும்பத்தக்கதும் இருக்கும்

-பாடலேர்

Tuesday 23 February 2021

info

தன் மனைவி மணிக்கணக்கில் கையால் துணி தைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வருந்திய சிங்கர் எனும் கணவர் கண்டறிந்ததே சிங்கர் தையல் இயந்திரம். லட்சக் கணக்கான பெண்களுக்கு கடின உழைப்பிலிருந்து விடுதலை தந்தது "சிங்கர் மெஷின்" என்றால் மிகையில்லை

#info

Wednesday 17 February 2021

பழ.நெடுமாறன்

மதிய உணவுக்குப் பிறகு அவரிடம் ஒரே ஒரு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது. பிறருக்கு முன்னால் அவர் அதை செய்யவே மாட்டார். பிறர் முன் புகைப்பது நாகரிகம் அன்று எனக் கருதுவார்.

-காமராஜர் குறித்து பழ.நெடுமாறன் எழுதிய புத்தகத்தில்

தாவோ

அடுத்தவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அறிந்தால் அது அறிவு. நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் அது ஞானம்

-தாவோ

Friday 12 February 2021

.பார்த்தசாரதி

"மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்""

-நா.பார்த்தசாரதி

யுகபாரதி

நேற்றைய இருப்பிலிருந்து
இன்றைச் சூடு செய்யலாம்
நாளை என்பது
நம்பிக்கையின் கங்கு

நாம் கவனிக்கத்தக்கது
சூட்டில் இருந்துதான்
சுரணை உண்டாகிறது

-யுகபாரதி

பாழை

ஏழை-பாழை என்றுசொல்ல கேள்வி பட்டிருக்கிறோம்.இதில் பாழை என்பது பணக்காரராய் இருந்து ஏழையானவர் (வாழ்ந்து கெட்டவர்) என்று பொருள்

-தென்கச்சி சுவாமிநாதன்

Sunday 7 February 2021

படித்தது

சிறுகதை என்பது சிறுசம்பவம், சித்திரம்,நிகழ்ச்சிக் குறிப்பு என எதுவும் இருக்கலாம்.இவைகள் அமரத்துவம் அடைய வேண்டுமானால் சாதாரண நிகழ்வுகளின் இடையில் ஒரு அழியா சம்பவத்தையும், பரந்த காலத்திற்கிடையில் நிரந்தரமான ஒரு சிறுகணத்தை ஒரு யுகம் போல் தோன்றும் படியும் செய்ய வேண்டும்

-படித்தது

Saturday 6 February 2021

info

விளம்பரங்களே இல்லாமல் பத்திரிக்கை நடத்தியவர் காந்தி.தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய இந்தியன் ஒப்பீனியன்,இந்தியாவில் நடத்திய யங் இந்தியா, அரிஜன்,நவஜீவன் ஆகியவற்றில் சிறு விளம்பரம் கூட கிடையாது

#info

டாக்குமெண்டரி

டாக்குமெண்டரி திரைப்படத்தின் தந்தை எனப் போற்றப்படும் ராபர்ட் ஃப்ளஹர்ட்டி 1926ம் ஆண்டு 'மோனா' என்ற படத்தை எடுத்தார்.இயக்குநர் ஜான் கிரியர்சன் இப்படத்தை விமர்சிக்குபோது 'டாக்குமென்ட்ரி'எனும் சொல்லைப் பயன்படுத்தினார். அது முதல் Documentary film' எனும் பதம் புழக்கத்திற்கு வந்தது

இசை

பிஸ்கட்டைப் பிட்டு
தேநீரில் நனைத்து சுவைப்பது போல
இந்த ஞாயிற்று கிழமை

-இசை

கண்ணதாசன்

உடலழகைக் காப்பாற்ற உயிரை விட்டேன்
உரலழகைக் காப்பாற்ற உலக்கை விற்றேன்

படையழகைக் காப்பாற்ற போரை விட்டேன்
பாத்திரத்தைக் காப்பாற்ற பாலை விற்றேன்

கடையழகைக் காப்பாற்ற சரக்கை விற்றேன்
கவியழகைக் காப்பாற்ற கருத்தை விற்றேன்

குடையழகைக் காப்பாற்ற மழையின் போது
குடைக்கே நான் குடையாகிக்
குனிந்து சென்றேன்

-கண்ணதாசன்

கம்பன்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

*யாரோடும் பகை இல்லை என்ற பின் போர் இல்லாது போகும்; ஆனால் புகழ் இல்லாது போகாது

-கம்பன்

Friday 5 February 2021

இந்திரா

"பேசணும்போல இருந்துச்சு" என்ற காரணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, "திடீர்னு போன் பண்ணிருக்க, என்ன விஷயம்?" எனும் கேள்வியை எதிர்கொள்வது பெரும் அவஸ்தை.

-இந்திரா

தயாளன்

கூடவே பிறந்தது காலதாமதம்
வாட்ச் - ல்
பத்து நிமிடம் கூட்டி வைத்தும்
பிரயோசனமில்லை

மணிப் பார்க்கும் போதெல்லாம்
அந்த பத்து நிமிடம்
ஞாபகம் வந்து விடுகிறது

-தயாளன்

info

இந்தியாவில் PTI,UNI ஆகிய இரண்டு செய்தி நிறுவனங்கள் உள்ளன

*1949ல் 7 செய்தித்தாள்கள் இணைந்து துவங்கி.. டெல்லியிலிருந்து செய்திகளை தருகிறது

*1961ல் UNI உருவாகி உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறது.இவைகள் இரண்டும் ஆங்கிலத்தில் செய்திகள் வழங்கும்

#info

Wednesday 3 February 2021

முகுந்த்

கார்ட்டூன் சேனலை
கண் விரித்துப் பார்க்க
பூனைக்குப் பயந்து ஓடிய
எலியைத் தேடுகிறாள்
பிடிபடாமல்
ஓடும்போது கை தட்டிச் சிரிக்கிறாள்

பாவம் பெரியவர்கள்
அழுகிற தொடர்களைப் பார்க்க
ஆவலாய் இருக்கிறார்கள்.

-முகுந்த் நாகராஜன்

info

துவக்க காலத்தில் வெளியூர்களிலிருந்து செய்திகளைத் திரட்டியவர்கள் அவற்றை கடிதங்கள் மூலம் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பி வைத்தனர்.சமஸ்கிருதத்தில் கடிதத்திற்கு 'நிருபம்' எனப் பெயர்.இதனால் செய்தி தருபவர்கள் 'நிருபர்கள்' என அழைக்கப்பட்டனர்

#info

Monday 1 February 2021

முகுந்த்

கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.

-முகுந்த் நாகராஜன்