Saturday 12 November 2016

படிப்பு-விவேகானந்தர்

படிப்பு என்பது என்ன?

சிகாகோவிலிருந்து கல்கத்தா திரும்பிய விவேகானந்தர் உரை

எனது சிகாகோ பேச்சை புகழ்ந்து பேசினீர்கள்..உங்களுக்கு ஒரு கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன்

படிப்பு என்றால் என்ன?

வெள்ளைக்காரன் வாந்தி எடுத்ததை குடித்து விட்டு மீண்டும் வாந்தி எடுப்பதுதான் படிப்பா? குமாஸ்தா வேலைக்கு தயார்படுத்துவதுதான் படிப்பா? உங்களுடைய படிப்பு ஒடுக்கப்பட்ட,அழுத்தப்பட்ட,நசுக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படவில்லை என்றால்,அந்த படிப்பை தூக்கி கடலிலே எறியுங்கள்..அந்த படிப்பின் மீது காறித் துப்புங்கள்

குட்டிக்கதை

*வாலை பிடி...-*தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.


ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!

மனுஷ்யபுத்திரன்

சிரமத்திற்கு வருந்துகிறேன்
.....................................................

சிரமத்திற்கு வருந்துகிறேன்
ஒரே இரவில்
உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்து
பைத்தியமாக்கியதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
பிச்சைகாரர்களாக  வாழ்வது
என்றால் என்னவென்று
120 கோடி பேருக்கு ஒரே நேரத்தில்
உணர்த்தியதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
உங்கள் ஈமச்சடங்களுக்காக
நீங்கள் ரகசியமாய் சேர்த்துவைத்த பணத்திற்கு
ஈமச்சடங்கு செய்தற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
மாடு மேய்ப்பவர்களை
ஒரே இரவில் கடன் அட்டைகளை
பயன்படுத்துபவர்களாக
மாற நிர்பந்தித்தற்காக

சிரமத்திற்கு வருந்திகிறேன்
ஒரு தேசத்தையே சில்லரைக் காசாகவும்
செல்லாக்காகவும்
மாற்றி விளையாட நேர்ந்தற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
நோயுற்ற ஒரு குழந்தையை
செல்லாத நோட்டுக்ளுடன்
மருத்துவமனை வாசலில் சாகவிட்டதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
உங்கள் சொந்த குருதியின் பணத்தை
பிடுங்கிக்கொண்டு
அதை திரும்பத் தருவதற்காக
உங்களை நீண்ட வரிசையில்
முடிவற்று நிற்க வைத்ததற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
வரிசையில் நிற்க முடியாத ஒருத்தி
திரும்பிவந்து மாடியில் இருந்து
குதித்துவிட்டதற்காக

சிரமத்திற்கு வருந்துகிறேன்
உங்கள் நகக்கணுவில்
இன்னும் எத்தனை ஊசிகளை
ஏற்றினால் நீங்கள்
பொறுமையாய் இருப்பீர்கள் என்று
சோதித்துப் பார்க்க நேர்ந்தற்காக

12. 11. 2016
மாலை 6. 44

- மனுஷ்ய புத்திரன்

Thursday 10 November 2016

அறிவுமதி

நட்பு மொழி

--அறிவுமதி

* உனக்கு ஆண் நண்பரே
இல்லையாம்மா
என்றேன்
தாவணி
தடுத்துவிட்டது மகளே
என்றாள்
அம்மா

* இருவரும் என்ன காதலர்களா
என்று கேட்கிற உலகில்தான்
நண்பர்களாக
இருக்கிறோம்

* திருமணத்திற்கு முன்பு சரி
இனி வேண்டாம்
என்று சொல்கிற
ஆணோ பெண்ணோ
கொலை செய்கிறார்கள்
மூன்று
மனசுகளை

* நண்பர்களைக்
குழந்தைகளாகப்
பார்க்கத்
தெரியாதவர்களின்
குழந்தைகள்
பாவப்பட்டவர்கள்

* அய்ந்தாறு ஆண்களோடு
பேசிப் போகிற
பெண்ணைப் பார்க்க
கழுவிய
கண்கள்
வேண்டும்

* காமத்திற்கு
அறை
நட்புக்கு
வானம்

கமல்ஹாசன்

தமிழ் மகளுக்கு
தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜுரம்.
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்
காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்
ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிர மாண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண்
அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கறுப்பாய்ச் சிவப்பாய் திரியுது காண்
சாதியுஞ் சாமியும் சாராயம் போல்
சந்தைக் கடையில் விற்குது காண்
சர்க்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண்
புத்தன் சொன்ன தம்ம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண்

- கமல்ஹாசன்

பழநிபாரதி

பார்த்துக்கொண்டே
இருக்காதே
ஒரு பார்வையில்
என்னைச் சமை

சமைத்துக்கொண்டே
இருக்காதே
ஒரு புன்னகையில்
என்னைப் பரிமாறு

பரிமாறிக்கொண்டே
இருக்காதே
ஒரு முத்தத்தில்
என்னைச் சுவைத்துவிடு

சுவைத்துக்கொண்டே
இருக்காதே
ஒரு இறுக்கத்தில்
என்னைச் செரித்துவிடு

- பழநிபாரதி

அமெரிக்க தேர்தல்

அமெரிக்க தேர்தல்

அமெரிக்காவில் இருக்கிற ஆசிரியர்களெல்லாம் இன்னேரம் பூத் சிலிப் கொடுத்திருப்பாங்க

*எந்த ஸ்கூல் எங்க இருக்குனு தெரியாம பெட்டி படுக்கையோட போயிருப்பாங்க

*தேர்தலன்று அனைத்து சேனல்களும் தேர்தல் கவரேஜ் தான்

*ஏதோ ஒரு பூத்தில் ஒரு வயதானவர் ஓட்டு போட வரும்போது இறந்திருப்பார்

*கட்டிலோடு தூக்கிவரும் முதியவர் அடுத்த நாள் செய்திதாளின் முகப்பில் வந்துவிடுவார்

*எப்படியும் பெட்டி எடுக்க லேட் பன்னுவாங்க

*ட்ரம்ப்,ஹிலாரி ஓட்டுபோட வரும்போது பத்தாயிரம் வாலா வெடிப்பாங்க

*அழியாத மை தயார் நிலையில் இருக்கும்

*கர்ப்பினி ஆசிரியர்களுக்கு தேர்தல்.பணியிலிருந்து விலக்கு

*பண பட்டுவாடாவை தவிர்க்க தீவிர கண்காணிப்பு

*டாஸ்மாக் விடுமுறை.ப்ளாக்கில் சரக்கு விற்றால் கடும் நடவடிக்கை

*தேர்தலை முன்னிட்டு அனைத்து கம்பெனிகளுக்கும் சம்பளத்துடன் விடுமுறை

*வாக்காளர் பட்டியல்ல பெயர் இல்லையென்றால் சரிபார்க்காது பூத் உள்ளே சென்று சண்டை கட்டுவார்கள்

*முடிவு வெளியானதும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம் னு சொல்லிட்டு மறுநாள்
இது ஒரு நம்பகமற்ற தேர்தல் என தோற்றவர்கள் அறிக்கை விடுவார்கள்

-ஒவ்வொரு தேர்தலும் சொல்லும்பாடம் சரியானதை புரிந்து கொள்ளவில்லை  என்பதுவே

தோழமையுடன் மணி

எஸ்.ரா வின் நவம்பர் புரட்சி உரை


https://youtu.be/0bSVAH9maYA

அப்துல்ரகுமான்

மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான் பிறந்ததினம்

நகுலன்

தனியாக இருக்கத் தெரியாத, இயலாத ஒருவனும் ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது.
– நகுலன்

குட்டிக்கதை

குட்டிக் கதைகள்

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.
அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா , இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , " இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.
சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.
மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.
உடனே துறவி , " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.
மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.
"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."
முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது. ஆனால் நீங்களோ மிகவும் பணிவாகப் பேசுறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.

மனுஷ்யபுத்திரன்

பாலியல் தொழிலாளிகள் இந்த இரவில்
ஆடை மாற்றிக்கொள்வதற்குள்
செல்லாததாகிவிட்ட நோட்டுகளை
வாங்க மறுத்து கூச்சலிடுகிறார்கள்
அவர்கள்
கடன் அட்டைகளை ஏற்பதில்லை

வாடகைக் காரோட்டிகள்
நிறகாமல் செல்கிறார்கள்
அவர்கள் செல்லாத நோட்டுள்ள
வாடிக்கையாளர்களின்
முகங்களை பார்க்க விரும்பவில்லை

குடிகாரக்கணவனுக்கு தெரியாமல்
சேர்த்துவைத்த பணத்தை
எடுத்துப்பார்த்து
இந்த இரவில் ஒரு பெண் விசும்புகிறாள்
அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை

உணவகங்களில்
ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டுள்ள
மனிதர்கள் பசியுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள்
கடைகள் வேகமாக அடைக்கப்படுகின்றன

இரண்டு நாள்
தேசத்திற்காக எல்லாவற்றையும்
பொறுத்துக்கொள்ளுங்கள்
என்கிறார் அரசர்

ஒரு எளிய மனிதனின்
இரண்டு நாள்
எவ்வளவு பெரியது
எவ்வளவு பெரியது
ஒரு செல்லாத நோட்டைப்போல
செலவழிக்கவே முடியாத
இரண்டு நாட்கள் அவை

கரையில் துள்ளும்
சிறிய மீன்களைக் கண்டு
கண் சிமிட்டுகின்றன
நீருக்கடியில்
பெரிய முதலைகள்

-மனுஷ்ய புத்திரன்

எஸ்.ரா வரிகள்- பாரத் பாரதி

*எனக்கு(ம்) மிகச்சரியாய் பொருந்தும் எஸ்.ரா.வின் வரிகள்:*
💥எழுத்தாளனாக எனக்கென உருவாக்கிய சிறுவட்டத்திற்குள். கொந்தளிக்கும் உணர்ச்சிநிலைகளுக்குள் வாழுகிற ஒருவனைப் புரிந்து கொண்டு அரவணைத்து அன்பு செலுத்தி இலக்கியத்திலும் வாழ்விலும் நிகரற்ற துணையாக என் மனைவி இருப்பது எனது நல்லூழ்.
💥வீட்டில் சந்தோஷமும் அன்பும் நிரம்பியிருந்தால் போதும் ஒரு மனிதனால் இந்த உலகை எளிதாக எதிர்கொள்ளவும் வெல்லவும் முடியும்.
💥ஆனால் ஆரம்பக் காலங்களில் நிறையக் கஷ்டங்களும் நெருக்கடியும் வறுமையும் இருந்தன. அதை நான் ஏற்றுக் கொண்டதை விடவும் அப்படிதானிருக்கும் வாழ்க்கை எனப் புரிந்து கொண்டு எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து மனஉறுதியோடு தைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டவள் என் மனைவி.
💥என்னைப் பார்க்க வேண்டி வீடு தேடி வரும் வாசகர்கள். பத்திரிக்கை. தொலைக்காட்சி நண்பர்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள். எனப் பலருக்கு சிற்றுண்டியும் உணவும் கொடுத்து உபசரித்து, தேவைப்படும் உதவிகள் செய்து, நட்புறவோடு நடந்து கொள்வது அவளது இயல்பு.
💥எழுத்து மட்டுமே எனது உலகம் என மூழ்கிக்கிடப்பவன் நான். சினிமா, பத்திரிக்கை, புத்தகங்கள். உரைநிகழ்த்துதல், நாடகம், இணையம், எனப் பலதளங்களில் பணியாற்றுகிறவன்.
💥இந்தப் பணிகள் தொடர்பான சந்திப்புகள். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்புச் செய்வது. பதிப்பகங்களுடன் தொடர்பு கொள்வது. புரூப் பார்ப்பது. வங்கி கணக்குவழக்கு, ஆடிட்டர். சினிமா ஒப்பந்தங்கள். படப்பிடிப்பு விபரங்கள். பயணத்திட்டங்கள், இலக்கியச்சந்திப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நினைவூட்டல் என அத்தனையும் செய்வது எனது மனைவி. அதுவே இப்போது அவளது முழுநேரவேலையாகிவிட்டது. அவள் படித்த கட்டிடக்கலை சார்ந்த துறையில் அவளால் இப்போது ஈடுபட இயலவில்லை.
💥இலக்கியம் உலகைப்புரிந்து கொள்ள வைப்பதுடன் உடன்வாழும் மனிதர்களின் முக்கியத்துவத்தையும் அன்பையும் புரிந்து கொள்ளச்செய்கிறது. ஒரு எழுத்தாளனாக எனது கிளைகள் வான் நோக்கி விரிந்திருக்கலாம். ஆனால் என்னைத் தாங்கும் நிலமாக, என் வேர்களாக இருப்பது வீடே!!!
-எஸ்.ராமகிருஷ்ணன்.