Sunday 27 August 2017

மருத்துவர்

உலக மருத்துவர் தினம்

மருத்துவர்கள் !    

கவிஞர் இரா .இரவி !

உயிர் மேய்ப்பர்கள்
உயிர் மீட்பர்கள்
மருத்துவர்கள் !

இரவு பகல் பாராது
இன்முகமாய்  உழைப்பவர்கள்
மருத்துவர்கள் !

கத்தியால் அறுத்தும்
காப்பார்கள்
மருத்துவர்கள் !

ஊசியால் குத்தியும்
காப்பார்கள்
மருத்துவர்கள் !

பசி துக்கம் தூக்கம் மறந்து
பலரின் உயிர் காப்போர்
மருத்துவர்கள் !

செவிலியர் துணையுடன்
பல்லுயிர் காப்போர்
மருத்துவர்கள் !

வாழ்நாளை   நீட்டிக்கும்
வித்தைக் கற்றவர்கள்
மருத்துவர்கள் !

முடிந்தவரை முயன்று
மூச்சை நீட்டிப்பவர்கள்
மருத்துவர்கள் !

அன்பாய் பேசி
வலி நீக்குபவர்கள்
மருத்துவர்கள் !

கடின உழைப்பால்
உச்சம் தொட்டவர்கள்
மருத்துவர்கள் !

பயம் நீக்கி
துணிவைத் தருபவர்கள் 
மருத்துவர்கள் !

போகும் உயிரைப்
போராடி மீட்பவர்கள்
மருத்துவர்கள் !

முயற்சி திருவினையாக்கும்
முற்றிலும் உணர்ந்தவர்கள்
மருத்துவர்கள் !

மதி நுட்பம் மிக்கவர்கள்
மற்றவர்களைக் காப்பவர்கள்
மருத்துவர்கள் !

நலமாக வாழ்
நல்லது உரைப்பவர்கள்
மருத்துவர்கள் !

ஆலோசனை வழங்கி
ஆயுளை வளர்ப்பவர்கள்
மருத்துவர்கள் !

உயிர் காக்கும் பணி
உன்னதப்பணி புரிவோர்
மருத்துவர்கள் !

முன்னாடி வந்திருந்தால்
காப்பாற்றி இருப்போம் என்பவர்கள்
மருத்துவர்கள் !

காப்பாற்றி விட்டு  என்னால் அல்ல
இறைவனால் என்பவர்கள்
மருத்துவர்கள் !

கவிதைகள்

பாட்டி வீட்டிற்கு வந்த கிளி

ஊருக்கு ஒதுக்குப்புறத்திலிருந்த
அந்த வெற்று நிலத்தில்
பெரிய மாமரமொன்று முன்பு இருந்தது.
காக்கைகளும் குருவிகளும் கிளிகளுமாய்
எப்போதும் இரைச்சலாயிருக்கும் 
அந்தப் பிரதேசம்.
போனவருடம்தான் புளுப்ரின்ட் போட்டு
நிலத்தைச் சமன் செய்திருந்தார்கள்.
மூன்றடுக்கு மாடிகளோடு இப்போது
பிரமாண்டமான கட்டடமாய்
மாறிப்போயிருந்தது அந்த மாமரம்.
போனவாரம் மதிய நாளொன்றில்
அந்த வழியாகப் போகும்போது
எதேச்சையாய் நான் பார்த்தேன்
கீச் கீச்சென்று கத்தியபடி
ஒரு சின்னக் கிளியொன்று
குதூகலமாய் அந்த வீட்டையே
சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.
மாலையில் திரும்பவும்
அந்த வீட்டைக் கடக்கையில்
அப்போது அந்தக் கிளியைக் காணோம்.
கோடை விடுமுறைக்காக
வெகுதூரத்திலிருந்து
பாட்டி வீட்டைத் தேடி
வந்திருந்த கிளியோ என்னவோ?

 - எஸ்.நடராஜன்

வீடற்றவனின் வார்த்தைகள்

வீடிருப்பவனுக்கு
வெள்ளம் என்றும்
வேக்காலம் என்றும்
கடுங்குளிர் என்றும் சொல்ல
சொல்லிருக்கிறது
வீடற்றவனுக்கு
வீடு என்ற ஒற்றைச் சொல்லே
எல்லாமாக இருக்கிறது
வியர்வையோ
ஊதக் காத்தோ
மழையோ
வீடற்ற தன்மையிலேயே
எல்லாவற்றையும்
ஒன்றென பாவித்துக் கடந்துவிடும் அவன்
ஒதுங்கிக்கொள்ள
ஒரு வீட்டின் வெளி ஓரம் போதும் என்று
ஓடிக்கொண்டே இருக்கிறான்.

-விகடபாரதி

வெத்திலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,
ஆடு போட்ட புலுக்கையள்ளி காடு வளர்த்தோம்,
காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம
அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,
நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,
விருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,
உறவுகளோடு உட்கார்ந்து
அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா
எங்க தோட்டத்து வெத்திலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம்,சூதில்லாம சுழன்ற
எங்க வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா
நகருக்குள் நடக்கிது.

                                    -கவி வளநாடன்

செ பாலா: *படித்ததில் ரசித்தது..*

அபிசேக தட்டோடு
கோவிலுக்கு
சென்ற மனிதன்
வாசலில் நின்றான்,

தேங்காய் மட்டும்
கருவறைக்குள் சென்றது....
குடுமி இருந்ததால்.....

நா.மு

பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!

# பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!

# காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!

# காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!

# யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!

# இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!

# பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!

# கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!

# குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!

-நா.முத்துக்குமாரின் குழந்தைகள் நிறைந்த வீடு புத்தகத்திலிருந்து..

படித்தது

"புல்லின் மீது நடக்காதீர்கள்.நாலு பேருக்குத் தெரியும்படி வளர்வதற்கு நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை நினைத்து நடக்கவும்"!
-p

வெய்யில்

அடிக்கடி கடல் பார்த்துவந்தேன்
அதன் உப்பு காதலுக்கு நல்ல உவமையாக இருந்தது

இன்று, புதிய ‘இவன்’ சொன்ன யோசனை
ஒரு பெருமூச்சுக்கு ஒப்பான கதகதப்பையும் நிம்மதியையும் தருகிறது

‘அவனோ’ சதா வார்த்தைகளுக்கு சாணை பிடித்தபடியே இருக்கிறான்
உடலுக்குள்ளும் தலைக்குள்ளும் டார்ச் அடித்துச் சோதிக்கிறான்

‘இவனும்’ நானுமாக ஒரு கோடை காலத்தில்
பின் வாசல் கதவை உடைத்து ‘அவனுக்கு’ சவப்பெட்டி செய்தோம்
பின் செழித்துப் பெய்த வெய்யிலில்
‘அவனின்’ இறுதிப் பயணத்திற்கான உப்பை அறுவடை செய்தோம்

‘இவன்’ அடிக்கடி முத்தம் தருகிறவனாகவும்
அடிவயிற்றை வார்த்தைகளால் வருடுகிறவனாகவும் இருந்தான்
‘அவனின்’ வளர்ப்பு நாயின் பின்னங்கால்களாலேயே ‘அவனுக்கு’
குழி பறித்தோம்

ரகசிய இரவுகளில் ‘அவனுக்கான’ வெண்ணிறச் சவத்துணியை நெய்தோம்
புதைக்கும் தருவாயில்தான் கவனித்தோம்
அன்றறுத்த உப்பு ‘அவன்’ உடலுக்குப் போதுமானதாக இல்லை

இருவருமாக சற்று அழுது உப்பைப் பெருக்கினோம்
போதும் போதுமென்றான் ‘இவன்’
என் கண்களோ கட்டுப்பாட்டில் இல்லை
அது ‘இவனுக்குப் ’பிடிக்கவில்லை

‘இவன் பற்கடிப்பின் சத்தம்
கற்கால முரடனொருவன் பாறையில் தன் வேட்டையை கற்களால்
வரைவதென ஒலித்தது

ஒருவழியாக எல்லாம் முடிந்தது
குளிர்காற்றையும் பௌர்ணமியையும் வீட்டின் பின்புற முற்றத்திலிருந்து ரசித்தோம்
(ஆம். கோலமிட்டு அலங்கரிப்பதும் கூட பின்வாசலைத்தான்)

கொல்லையில் புதிய கீரைத்தோட்டத்தை உருவாக்கினோம்
கீரையை அவித்துக் கடையும்போதெல்லாம்
வீட்டுக்குள்ளிருந்து பிணவாடை வருவதாகச் சொன்னார்கள்
கற்பனைவாதிகள் !

‘இவன்’ துரிதமாக பின்வாசலுக்கு இரும்புக் கதவைப் பொருத்தினான்
வீட்டின் மூலையில் கிடந்த டார்ச் லைட்டுக்கு பேட்டரிகளை மாற்றினான்

அடிக்கடி கடல் பார்த்துவருகிறோம்
அதன் உப்பு காதலுக்கு நல்ல உவமையாகத்தான் இருக்கிறது .

-வெய்யில்

டெனின்

கற்பது குறித்த விளக்கம்

தெரியாத அறியாமையில் இருந்து தெரிந்த அறியாமைக்கு போவதுதான் அதன் முதல்படி.பிறகு தெரிந்த அறியாமையில் இருந்து தெரிந்த அறிதலுக்கு செல்ல வேண்டும்.

அதற்கு பின்னர்,தெரிந்த அறிதலில் இருந்து தெரியாத அறிதலுக்கு மறுபடியும் பயணிக்க வேண்டும்.

தெரிந்ததைக்கூட இயல்பாக பிரயத்தனம் இல்லாமல் செய்கிற அளவிற்கு கற்று உயரும்போது தான் கல்வி முற்றுப் பெறுகிறது.

-டெனின்

வெய்யில்

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே*

கரும்புக் காட்டுக்குள்
துள்ளி ஓடுகிற கோவணத்தாண்டி யாரவன்?
பட்டினத்தான்.
அங்கென்ன செய்கிறான்?
கரும்பை முறித்து

உரித்து
சாறொழுகத் தின்கிறான்
ஏ சித்தா…
“காமத்துப்பாலில் ஒரு குவளை காபி கலக்கித் தரவா?”
வெட்கத்தில் தோகையை இழுத்து
முகத்தை மறைக்கிறான்
நாணும் கரும்பு
செவ்வானைத் தைக்கும் வில்லாகிறது.

*பட்டினத்தாரின் பாடல் வரி.

-வெய்யில்

பொம்மை

பொம்மை

அழுக்காயிருக்கிறதென்று
மூக்கு சரியில்லையென்று
நிற்க வைத்தால்
விழுந்து விடுமென்று
இந்த கலர் சரியில்லையென்று
இதை விட
நல்லதாய்ப் பார்க்கலாமென்று
இது உன்னை விட
வயதில் பெரியவர்களுக்கென்று
ஒவ்வொன்றாய்
தவிர்த்த பின்
கடைசியாய்
ஒரு பொம்மையைக்
கை காட்டிச் சொன்னது
குழந்தை
“அப்பா
இந்த பொம்மை
விலை கம்மிதான்..!”

                                            -  க. ஆனந்த்.

கதை

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு
ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.

மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப் பார்த்து, "நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்
சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான்” என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான்.

மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்
கழித்து, அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க
முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள்" என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,
மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று
சொல்லிச் சென்றார்.

இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.

அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக
அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும்படியாக குதிரை ஓடியது.

மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை
அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த
மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து
கொண்டாடி விடுவோம்” என்றான்.

மறுநாள் ஆட்டை வெட்டி விருந்து முடிந்தது.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து
நடந்தாலும் மருத்துவர் கொடுத்த
மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்.

இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது என்பதை உணராமல், பலரும்
உண்மையைப் பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.

வ்

வரம் கேட்கிறேன்

“வரம் கேட்கிறேன்.
வேறென்ன கேட்பேன்
பராசக்தி.

வில்லங்கம் எதுவுமில்லா
காணிநிலம்.
அதில்
தீப்பிடிக்காத
ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை.

அடைப்பில்லா
ட்ரைனேஜ் கனெக்க்ஷன்.

வைரஸ் வராத
கம்ப்யூட்டர்.
விளையாடி மகிழ
வெப்சைட்.

சரியான முகவரியோடு
எலக்க்ஷன் கார்டு.

பக்க விளைவில்லா
பாஸ்ட் புட் அயிட்டங்கள்.
மறக்காமல்
கொஞ்சம் மினரல் வாட்டர்.
வேறென்ன கேட்பேன்
பராசக்தி?

இவை யாவும்
தரும் நாளில்...
அதிர்ச்சியில்
இறக்காமல் இருக்க
கொஞ்சம் ஆயுள்..!”

-  எம்.ஜி. கன்னியப்பன்.

காம்ராஜர்

கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம் கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம். தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா? என்று பார்க்கலாம். அப்போது இவர் சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.

காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம். சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம். அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை. நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே, பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.

சிரித்துக் கொண்டே கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர் சொன்னாராம், நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன், அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கைய்யெழுத்துக்கு பதில் கைநாட்டு [கை ரேகை] இருந்ததோ, அவற்றைத் தான் நான் தேர்வு செய்தேன். எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம். இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

[ ஒரு இலக்கிய சொற்பொழிவில் கேட்டது.]

அப்துல்ரகுமான்,சுஜாதா

எழுத்து என்பது என்ன..
'அங்கீகரிக்கப்பட்ட கிறுக்கல் தானே'

-அப்துல்ரகுமான்

@ சுஜாதாவின் ஹாஸ்பிடல் அனுபவம் :

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்...
முடிந்தால் அட்மிட் ஆவதை தவிர்க்கவும். அப்படி தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் 'வேண்டாம்...!' என்று சொல்லி விடுங்கள் . முடிந்தால் அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.
எல்லா டாக்டர்களும் நல்லவர்கள். திறமைசாலிகள்.

சிக்கல் என்னவென்றால் அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயவங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட், கிட்னியையே கவனிப்பார். ஹார்ட், ஹார்ட்டையே. சுவாச நிபுணர் சுவாசத்தையே..! யாராவது ஒருவர் பொதுவாக பொறுப்பேற்று செய்யாவிடில் அகப்படுவீர்கள்.
ஒவ்வொரு டாக்டரும் சிற்றரசர்கள் போல குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கை அருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் எனில் ஏறிட்டு பார்ப்பார்கள். இல்லையேல் தலைமாட்டில் இருக்கும் சார்ட்(chart) தான்.
"ஹவ் ஆர் யூ ரங்கராஜன் ?" என்று மார்பில் தட்டுவார் சீனியர். குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்.
"ஸ்டாப் லேசிக்ஸ்..இன்க்ரீஸ் ட்ரெண்டால்..!" என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார்.

அடுத்து,அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோமுறையோ. "யார் லேசிக்சை நிறுத்தியது..?"...இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்ட் சிஸ்டர் எனும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி. ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம். சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, நாம் மட்டும் கண்காட்சி பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில் கண்டவர் வந்து கண்ட இடத்தில் குத்தி ரத்தம் எடுத்து, க்ளுக்கோஸ் கொடுத்து , பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து ...ஆஸ்பத்திரியில் நிகழ்வது போன்ற மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது...!

படித்தது

நீயில்லாவிடில் இன்னொருத்தி
அந்த இன்னொருத்தி
உன்னொருத்தி போலிருந்தால் போதும்!
-மகுடேஸ்வரன்

முதுமை

முதுமை
நிமிஷக் கறையான்
அரித்த ஏடு

இறந்தகாலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு

ஞாபகங்களின்
குப்பைக் கூடை

வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்

காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆகிவிட்ட
மாமிச ஓவியம்

-அப்துல்ரகுமான்

ஞானம்

குருவே ஞானம் பெற என்ன செய்யணும்?

தினசரி கொஞ்சம் மந்திரம் சொல்லி கொஞ்சம் திராட்சைப்பழம் சாப்பிடு...

எத்தனை திராட்சைப்பழம் சாப்பிடணும்?

எத்தனை மந்திரம் சொல்லணும்னு கேட்டிருந்தால் உனக்கு ஞான்ம வந்திருக்கும்.. உனக்கு இந்த ஜென்மத்தில் ஞானம் வராது...
---
(ராமகிருஷ்ண பரமஹாம்சர்)

ரசா

போபால் விஷவாயுவை
அவரவரே பாய்ச்சிக் கொண்டு செத்தார்கள்

கும்பகோணம் குழந்தைகள் அவர்களாகவே
கருகிச் செத்தார்கள்

தா.கிருஷ்ணன் தனக்குத்தானே
வெட்டிக் கொண்டு செத்தார்

பேருந்தில் தீவைத்துக் கொண்டு தனக்குத்தானே மூன்று மாணவிகளும் எரிந்து போனார்கள்

தினகரன் அலுவலர்கள் மூன்று பேரும் தனக்குத்தானே எரியூட்டிக் கொண்டு செத்துப் போனார்கள்

இவ்வாறாகப் பல உண்மைகள் உள்ளன
உங்களுக்குத் தெரியுமா?

பாபர் மசூதி அதுவாகவே விருப்பப்பட்டு
இடிந்து விழுந்தது

குஜராத் முஸ்லீம்கள் அவர்களாகவே
கொலையுண்டு மாண்டார்கள்

கிரகாம் ஸ்டெயின் குடும்பத்தோடு
ஜோதியில் அய்க்கியமானார்

வெண்மணியில் விவசாயக் கூலிகள்
தம் விருப்பில் தாமே எரித்துக் கொண்டார்கள்

முசாபர் நகரில் செத்துப் போனவர்கள்
தாங்களாகவே விதி முடித்துக் கொண்டவர்கள்

தூக்கிலிட்டுக் கொள்ளும் விவசாயிகளும்
விஷமருந்தும் விவசாயிகளும்
விருப்பத்தின் பாற்பட்டே அவ்வாறிறக்கிறார்கள்

நீதி பிழைத்துக் கொண்டதாம்
எழுந்து நின்று அஞ்சலி செலுத்துங்கள்

சத்தியமேவ ஜெயதே..
அதி நாயக ஜெயஹே..

ஓ.. படம் போடப் போறானுங்க
தேசிய கீதம் வந்துருச்சு
ஒண்ணுக்கு நெருக்குனாலும் பரவாயில்ல
எழுந்திருச்சு நில்லு வணக்கஞ் சொல்லு

தப்பித்தவறி ஆராய்ச்சி மணியை
அடிச்சுடாதே அபிஸ்டு..

அப்புறம் தேர்க்காலில்
நீதி தேவதை மறுபடியும் நசுக்கப்படும்

என்றாலும் 94 குழந்தைகளும் கருகுகிற நாற்றம்
இன்னமும் கூட மானுட நாசிகளைத் துளைக்கிறது

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு
நீதி தேவதையின் காதில் ரத்தம் வழிகிறது

கையிலேந்திய தராசுத் தட்டில்
94 பிள்ளைகளின் கருகிப்போன
கறித்துண்டுகள் எடை குறைந்து
துடித்தலறுகின்றன

மற்றொரு தட்டிலோ இரண்டுவிதமான
புதிய நோட்டுக்கட்டுக்களில் எதுவென்று
தெரியவில்லை, ஆனால் படபடக்கின்றன.

-ஸ்ரீரசா

ஆதிமூலம்

அங்கீகாரம் கிடைக்கிறதா,இல்லையா என்பததெல்லாம் வேறு.நாமே முதலில் நம் திறமையை எந்த அளவுக்கு உணருகிறோம் என்பதே முக்கியம்
-ஓவியர் ஆதிமூலம்

பாவண்ணன்


இன்னொரு மொழி புழங்கும் ஊரில்
வாழத் தந்த விலை பெரிது
-பாவண்ணன்

ஞாபகத்தின் முடிவற்ற வெளியில்
ஒளிர்ந்திருக்கும் ஒற்றைச் சொல்லை
கண்டுப்பிடிக்க இயலாமல்
களைத்துத் திரும்பியது மனப்பறவை

-பாவண்ணன்

தபால்தலை

மே 6 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியீடு
-ராஜ்ப்ரியன்

அரசர்களின் காலங்களில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தகவல் கொண்டு சேர்க்க வீரர்களை பயன்படுத்தினர். அதன்பின் புறக்களை பயன்படுத்தினர். காலமாற்றத்துக்கு ஏற்ப தகவல் கொண்டு செல்லும் வழிமுறைகள் மாறின. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டுக்கொண்டு இருந்த சமயத்தில் தங்களுக்கான தகவல் பரிமாற்றத்துக்காக தபால் சேவையை தொடங்கினார்கள்.

1764ல் முதன் முதலில் பம்பாய் என்கிற மும்பையில் தான் தபால் சேவையை தொடங்கினார்கள். இந்தியா போஸ்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. 1966க்குள் சென்னை, கல்கத்தா போன்ற மாநிலங்களிலும் தபால் அலுவலகங்களை திறந்தது ஆங்கிலேய அரசு.

வாரன் ஹாஸ்டிங் பிரபு என்கிற இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசின் கவர்னர் தான் மக்களுக்காகவும் இந்த தபால்துறை செயல்படும் என அறிவித்தார். அப்போது, 100 மைல்களுக்கு சுமார் 150 கி.மீ தூரத்துக்கான தபால் கட்டணம் 2 அணா. 10 பைசா அளவுக்கு வசூலிக்கப்பட்டது. அடுத்தடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1854ல் விக்டோரியா மகாராணியின் உருவத்தை தாங்கிய தபால் தலை வெளியிடப்ப்பட்டன. அதில் ஈஸ்ட் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் வெளிவந்தது. இந்த தபால் தலைகள் லண்டனில் அச்சிடப்பட்டு இந்தியாவுக்கு கப்பலில் வந்தன. 1926 ஆம் ஆண்டில் நாசிக் செக்யூரிட்டி பிரஸ் தொடங்கிய பின் அஞ்சல் தலைகள் இந்தியாவில் அச்சிட துவங்கினர்.

உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டது. 1840 மே 1ந்தேதி பென்னி பிளேக் என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. அதில் இளம் இளவசரி விக்டோரியா படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அதாவது மே 6ந்தேதி இந்தியாவில் அதே அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதனையே இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியீடு என்கிறார்கள்.

அஞ்சல் தலை திரட்டுபவர்களை ஃபிலேட்லி என்பார்கள். உலகத்தில் அஞ்சல் தலை சேகரித்து வைத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரு ரூபாய் மதிப்புள்ள அஞ்சல் தலைகளை ஆயிரம், லட்சம் என தந்து வாங்க உலகத்தில் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் உள்ளனர். தவறாக அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகள் கோடிகளில் விலை போகிறது என்கின்றனர்.

அஞ்சல் தலைகளில் நாடுகளின் கொடிகள், பூக்கள், விலங்குகள், தேச விடுதலைக்காக பாடுப்பட்ட தலைவர்கள், சிறந்த சுற்றுலா தலங்கள், வரலாற்று கட்டிடங்கள் என பலவகையான படங்களை கொண்டு ஒவ்வொரு நாடும் அஞ்சல் தலைகளை வெளியிடுகின்றன. தற்போது, மேற்கத்திய நாடுகளில் பணம் செலுத்தி தனிநபர்கள் தங்களது படத்தை, பெயரை போட்டு அஞ்சல் தலைகளை வெளியிடும் வழக்கத்தை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.