Thursday 27 December 2018

மோகமுள் பிறந்த கதை

via Taj Deen
மோகமுள் - நாவல் பிறந்த கதை
-----------------------------------------------------
- தி.ஜானகிராமன்

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.

“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”

“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.

“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”

“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”

“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை - அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ - எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ?”

பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன்.

காவேரி வண்டலில் செழித்தபயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, ‘சுருக்சுருக்’கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்யவகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை - பாட்டி ரொம்பப் பெரியவள்.

“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான்.

பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு திவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.

“மோக முள்”ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்-

வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கை வரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிஹாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்-

தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு முலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதிப்பிள்ளையார், தெற்குவீதிக் காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு - இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்-

நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது -

உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு-

கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு-

கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்-

நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்)க் கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை-

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான்.

சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான்.

இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம் -

தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள்.

தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன.

பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’ செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம் -

என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது -

இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின.

மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது.

காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.

தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.

என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?

*
நன்றி:
ரோஜா முத்தையா நூலகத்தில்
படிக்கக் கிடைத்த,
கல்கி (27.08.1961) வார இதழில் இடம்பெற்றிருந்த
தி.ஜானகிராமன் எழுதிய இக்கட்டுரையை,
ஸ்கேன் செய்து அனுப்பிய
திரு.லலிதா ராம் Lalitharam Ramachandran அவர்களுக்கு
சொல்வன இணைய இதழின் நன்றிகள்.

இசை

இந்த டீ
சூடாறாதிருக்கட்டும்
சுவை குன்றாதிருக்கட்டும்
பருகப்பருக பல்கிப்பெருகட்டும்..

(பைத்தியத்தின் டீ)

-இசை

சுதன்

இந்த ஆண்டில் எழுதிய 'கவிதாஞ்சலி' தொடர்பதிவின்  மொத்தத் தொகுப்பு இது. புதிதாக இணைத்துக்கொண்டவர்கள் படிக்கத் தவறியிருக்கலாம்.  அதற்கு முதல் கவிஞர் குட்டி ரேவதி ஒருமுறை பகிர்ந்துகொண்ட தகவல்:

"திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கிடம் ஒரு நேர்காணலில் அவர் படங்களின் இசை பற்றிக் கேள்வி கேட்கிறார்கள்.

'உங்கள் படத்தில் இசை இவ்வளவு சிறப்பாக இருக்கிறதே?
நீங்களும் சேர்ந்து இசையமைப்பீர்களா?'
'இல்லை. முழுக்க முழுக்க அது, இசை இயக்குநரின் வெளிப்பாடு தான்.'

'அவர்களின் இசைக்குறிப்புகளில் நீங்கள் திருத்தம் சொல்வீர்களா?'
'இல்லை. இசை பற்றிய பாலபாடம் கூட எனக்குக் கிடையாது. இசைக்குறிப்புகள் என்ன அர்த்தத்தில் இருக்கின்றன என்று கூடத் தெரியாது. இசை பற்றிய என் படிப்பறிவு, சுழியம்'

'பின், எப்படி உங்களின் ஒவ்வொரு படத்திலும் இசை பெருஞ்சுழிப்புடன் உள்ளிழுப்பதாய் இருக்கிறது?'
'வேறொன்றுமில்லை. என் இதயத்தை இசைக்குப் பழக்கப்படுத்துவதில் தான், நான் என் முழு வாழ்க்கையையும் செலவழித்திருக்கிறேன். ஓர் இசை ஒலிக்கும்போது, அது சிறந்த இசையா இல்லையா என்று என் இதயத்தை வைத்துத்தான் தேர்ந்தெடுப்பேன். ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும், என் இதயத்தின் தலையசைப்பிற்காக நான் காத்திருப்பேன்!'"

அதேபோல எனக்கு மொழி...

ஒரு பாடல் அதனுள்ளே கவிதைத்தன்மை கொண்டிருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். அப்படியான பாடல்கள் நிச்சயமாக என் தெரிவுகளில்(Playlist) முதலிடத்தைப் பிடித்துவிடும். பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும்போது வார்த்தைத் தேர்வுகளில் நழுவித் தொலைந்துபோவது ஒரு சுகானுபவம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருபாடல் தரக்கூடிய அதியுச்ச சுகம் என்றால் அதுதான் என்பேன். அப்படியான பாடல்களைத் தொகுக்கவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் . கவிதைகளில் இருக்கும் மீமொழி(metalingualism) அழகு. அதாவது, இரண்டாம் அடுக்கு மொழி. ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு கவிதை மொழி மூலம் வெளிப்படுத்துவது. அதில் கற்பனைக்கு நிறையவே வேலை இருக்கும். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" என்பது போல, அந்தப் புதிருக்குள் நுழைந்து யாத்திரை செய்வது ஒருவித போதை.

உதாரணமாக, "உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது." என்கிற வைரமுத்துவின் வரிகளை எடுத்துக்கொள்ளலாம். கற்பனைச் சிறகு விரிந்தால் இதற்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்களுக்கு மேலே எழுதிவிடலாம். சாய்ந்ததில் உன் பூக்கள் உதிர்ந்து இந்தப் பூமியை நிரப்பிவிட்டன என்று சொல்லலாம். அல்லது, அந்த அழகைக் கீழிருந்து கண்ட இந்தப் பூமி சிலிர்த்து மலர்ந்தது எனலாம். இல்லாவிட்டால், பெண்ணழகு கண்டு என் இளமை எனும் பாலைவன பூமி மலர்ந்துவிட்டது என்றுகூடக் கொள்ளலாம். கவிஞர் எழுதிய பொருளையே படிப்பவரும் கொள்ளவேண்டும் எனும் விதிமுறைகள் கவிதைகளுக்குக் கிடையாது. கவிஞர் அப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது.

இதில் வெறுமனே பாடல்களைப் பற்றி எழுதிய பதிவுகளைத் தவிர்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க கவிஞரின் மொழி நயத்தைப் பேசும் பதிவுகள் இவை.

https://www.facebook.com/sudha001/posts/969839946457414 - கவிதாஞ்சலி 1

https://www.facebook.com/sudha001/posts/887290571379019 - கப்பலேறி போயாச்சு

https://www.facebook.com/sudha001/posts/895917977182945 - வெண்ணிலவே வெண்ணிலவே

https://www.facebook.com/sudha001/posts/952929071481835 - நீர் - காதல்

https://www.facebook.com/sudha001/posts/953738394734236 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

https://www.facebook.com/sudha001/posts/970979759676766 - தீண்டாய் மெய் தீண்டாய்

https://www.facebook.com/sudha001/posts/976449482463127 - தொடத் தொட மலர்ந்ததென்ன

https://www.facebook.com/sudha001/posts/992743210833754 - வெள்ளி மலரே

https://www.facebook.com/sudha001/posts/984919831616092 - மலர் சூடும் வயது - மலர்களே

https://www.facebook.com/sudha001/posts/1017515755023166 கண்ணாளனே

https://www.facebook.com/sudha001/posts/1039625346145540 - முத்தாடு

https://www.facebook.com/sudha001/posts/1037260969715311 குல்மொஹர் மலரே

https://www.facebook.com/sudha001/posts/1029536460487762 - குறுக்குச் சிறுத்தவளே

https://www.facebook.com/sudha001/posts/1056271287814279 - குறுக்கு சிறுத்தவளே 2

https://www.facebook.com/sudha001/posts/1068693439905397 - கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

https://www.facebook.com/sudha001/posts/1047481072026634 - காதல் வந்தால் சொல்லி அனுப்பு

https://www.facebook.com/sudha001/posts/1124845377623536?pnref=story
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில்

https://www.facebook.com/sudha001/posts/1140826276025446
விம்ம விம்முவாள்

@manipmp

"வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்"

-பாரதி

"வித்து மெதுவாகத்தான் முளைக்கும். உள்ளுக்குள்ளேயே பக்குவப்பட்ட விதை, முதலில் தன்னை மூடிவைத்திருக்கும் தடையைக் கிழிக்கும். பூமிக்கு வெளியே எட்டிப்பார்க்கும்போதே, பூமிக்குள் வேர்விட்டிருக்கும்.வெளியே வளர்வது போல் பூமிக்குள்ளும் அகழ்ந்து ஆய்ந்து போய்க்கொண்டே இருக்கும்

பேச்சு

வின்ஸ்டன் சர்ச்சில், பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்தவர், சிறந்த பேச்சாளர். அவர் பேச்சுக் கலையின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்.

“Of all the talents bestowed upon men, none is so precious as the gift of oratoy. He who enjoys it wields a power more durable than that of a great king. He is an independent force in this world.”

“மனிதனுக்கு உள்ளத் திறமைகளில் மிகுந்த போற்றுதலுக்குரியது பேச்சாற்றல். அதை சரியாக கைவரப் பெற்றவர்கள் அரசனை விட அதிகாரம் பெற்றவர். அந்தக் கலைக்கற்றவர்கள் இந்த உலகில் ஒரு விடுதலை பெற்ற ஆற்றலாக இயங்கக்கூடியவர்கள்,” என்கிறார்.

கற்றதும் பெற்றதும்-64

கற்றதும் பெற்றதும்-64
*மணி

நதி அமைதியாக உறைந்திருக்கிறது.
மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன
-ஜென்

#ஜென் கதைகள்

ஆரம்ப நிலை வாசகர் முதல் முதிர்ச்சி அடைந்த வாசகர் வரை விரும்பி படிப்பது ஜென்.மனித மனங்களின் யதார்த்தத்தை, வாழ்வின் புரிதலை எளிமையான வரிகளில் சொல்லும்போது உண்மையில் அகக்கண் திறக்கும். சிந்தை தெளிவடையும்.அவ்வகையில் இப்புத்தகத்தில் நான் ரசித்த கதைகளும் வரிகளும்

#ஜென் என்றால் என்ன?

ஒரு மீன் குஞ்சு பெரிய மீனிடம் கேட்டது.கடல் என்பது என்ன? அதற்கு கடல் என்பது உனக்குள்ளும்,சுற்றிலும் இருக்கிறது.உன் உடலின் தோலைப்போல அது உன்னைப் பொதிந்து வைத்திருக்கிறது. மக்களும் அதுபோல் என்கிறார்.கன்பூஷியஸ்.

வேறுபடுத்திப்பார்ப்பது, பொய்த்தோற்றங்களை கைவிடுவது என எல்லா எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்போது..வருவது.தொடர்ந்து படிக்கும்போது உணரலாம் என்கிறார்

#சொர்க்கத்தின் கதவுகள்

ஒருவன் இறந்த அடுத்தகணமே தோன்றக்கூடியது சொர்க்கம் நரகமல்ல.ஒரு கணம் தோன்றி மறையும் எண்ணத்தில்தான் நன்மையும் தீமையும் உறைந்திருக்கின்றன என ஜென் குருவும் படைத்தளபதி கதை கூறுகிறது.

#தெரியாத இடத்தில் தெரிந்தது போல் காட்டுவது நம்மில் பலருக்கு வாய் வந்த கலை.

அதைபடிப்படையாய் வைத்து

"ஒரு ஓவியர் சிவப்பு மூங்கில் வரைந்தாராம்.ஒருவன் வந்து இது கருப்பு வண்ணதில் இருந்தால் நன்றாய் இருக்கும் என்றானாம். அது எங்கிருக்கிறது எனக் கேட்டபோது வாயடைத்தானாம்.

"அடுத்தவர்களின் தவறுகளை நீ சுட்டிக்காட்டும்போது, உண்மையான பிழை உனது தவறான கருத்தில் மறைந்திருக்கக்கூடும்"!

#சிறிய ராணுவம் கொண்ட படை பெரிய நாட்டின் மீது போர் தொடுக்கிறது.வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க மன்னன், நாணயத்தை சுண்டுகிறான்.பூ விழுந்தால் புறக்கணிப்பது, தலை விழுந்தால் முன்னேறுவது. சுண்டியவுடன் தலை விழுந்தது. முன்னேறி போர்புரிந்து நாட்டை கைப்பற்றுகிறார்கள். வீரன் சொல்கிறான் எல்லாம் கடவுள் செயல்.

கடவுளின் விதியை மாற்றமுடியாது என்கிறான். மன்னர் தன்னிடமுள்ள நாணயத்தை காண்பிக்கிறார். இரண்டு பக்கமும் தலைதான் உள்ளது

"தெய்வம் எல்லோரையும் ஒன்றுபோலவே பார்க்கிறது.அது குறிப்பாக எவருக்கும் உதவுவதில்லை.உனக்கு உதவ ஒரு ஆள் உண்டென்றால் அது நீயும் உன் தன்னம்பிக்கையும்தான்.!

#துறவிகுன்றுகளில் வேலை செய்து கொண்டிருக்கும்போது மடாலயத்துக்கு வழி கேட்கிறார். இந்த அரிவாளை பாருங்கள் என்றதும் கோபம் வந்துவிட்டது துறவிக்கு.இப்படியே உரையாடல் வளர்கிறது

"தோற்றத்தால் முக்கியத்துவம் கொடுக்கும்போது நாம் உண்மையைப் பார்க்க தவறுகிறோம்.நாம் தேடுவது பார்வையில் பட்டாலும் அதை பெயர்களுக்கும் பதவிகளுக்கும் அதிக கவனம்.கொடுத்தால், நாம் முற்றிலும் தவறவிட்டு விடுவோம்

#‘நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் புத்தர்.
அவரது சீடர்கள் யோசித்தார்கள்.

‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’

‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.

‘ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்.

‘அப்படீன்னா? 90 வயசு?’

‘அதுவும் இல்லை!’

‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, புத்தர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.

‘ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!’ என்றார் புத்தர்.

‘என்ன சொல்றீங்க குருவே? ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’

‘அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’

‘சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் ஜென் வாழ்க்கை!’

#முதியவர் ஒருவர் குதிரையில் பயணிக்கையில் வழியில் ஒருவன் மயங்கிக்கிடந்தான்.உதவி செய்ய இறங்கியவுடன் அவன் சாதுர்யமாக திடுமென எழுந்து குதுரை சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்றான்.செய்வதறியாது விழித்த பெரியவர், அவனை அணுகி.. "இதை யாரிடமும் சொல்லாதே" சொன்னாயானால் இனி மயங்கிக் கிடப்பவர்க்கு யார உதவ முன் வரமாட்டார்கள் என்றார்.

#மனம் கவர்ந்தவை

*உனக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கொள்.இல்லை வெறுமனே பார்த்தால் போதும் என்றால் முழுமனதுடன் பார்.

*புறப்பொருளை கைப்பற்றும்போது நாம் அகத்தை இழக்கிறோம்

*எந்த ஒரு மாணவனுக்கு எதையும் போதிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு மாணவனுக்கும் தனது சுய சிந்தனையால் எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு அவரால் உதவ முடியும்.

#கதைகளின்.வழியே பழக்கப்பட்ட மனது நம்முடையது.ஒரு கதையின் நுனியை பிடித்து ஏறிச் செல்வது போல் அதை படித்து செல்லும்போது இறுதியில் காணும் நீதி..உண்மையில் பரவசப்படுத்துவது.இது மனதை பண்படுத்தும்.அறியாமையை சற்று சீண்டும்.ஒரே பக்கத்தில் இருப்பது இன்னும் கூடுதல் வசதியாய் எளிமையாய் படித்துவிட உதவும்.
மனிதன் பக்குவபட வேண்டிய அடிப்படை நீதியை உணர்த்தும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு