Saturday 22 June 2019

மணி

[19/06, 5:49 pm] Mani: சிந்திப்பது படைப்பதற்கே.
அதைத்தவிர வேறு படைப்பேதுமில்லை.ஆனால் முதலாவதாக படைத்தல் என்பது சிந்தனையில் சிந்திப்பதை தோற்றுவிப்பதே."

-டெல்யுஸ்
[19/06, 6:09 pm] Mani:

தற்போது ஓரமாய்
நடுரோட்டில்
நசுங்கிய நாய்.

-துரை.நந்தகுமார்
[19/06, 9:41 pm] Mani:

பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல

-தமிழச்சி தங்கப்பாண்டியன்
[20/06, 7:18 am] Mani:


பொருளுக்கு இரையாகுபவன் உண்மைப் பொருளைக் காணமாட்டான். அதுவே எல்லா வகை மயக்கத்திற்கும் அடிப்படைக் காரணம்.இதுதான் முதலாளியம் வளர்த்த பெரும் மயக்கம

-கார்ல் மார்க்ஸ்
[20/06, 7:54 am] Mani:



வேண்டாத எண்ணங்கள் மனதில் அடையாத வரை
எல்லா காலமும் சிறப்பானதே
எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியானவர்களே.!

-ஜப்பானிய கவிதை
[20/06, 7:12 pm] Mani:


அ வுக்கு முந்திய எழுத்துக்கள் இல்லையெனினும், அ எழுதப்பழகிய என் கிறுக்கல்களெல்லாம்,அ வுக்கு முந்திய எழுத்துக்களே

-தபூசங்கர்
[21/06, 6:59 am] Mani:

'கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதை பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன ? திறப்பதே திறக்காத கதவுகளை பார்க்கத்தானா ? பெரிய சவால்தான் இது'.

-சுந்தரராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள்

மணி

சிறகு பறந்து செல்லும் திசையெல்லாம் சுதந்திரம்

-பிரமிள்.

ஒரு மனிதனுக்கு இன்றைய நாளைக்காட்டிலும் மிஞ்சுவது வேறெதுவும் இல்லை
-ஜி.நாகராஜன்

கடன் வாங்கி கழித்தல் கணக்கை பள்ளியிலிருந்து செய்கிறோம்.இதில் பக்கத்து எண்ணிலிருந்து கடன் வாங்க கற்பிக்கப்படுகிறோம்.வாங்கிய கடனுக்கு இந்த எண் அந்த எண்ணுக்கு திருப்பிக் கொடுத்ததா என்றால் இல்லை.

ஆனால் சீனாவில் அந்தக் கணக்குகளுக்கு கடன் வாங்கிக்கழித்தல் எனும் பெயர் இல்லை.இங்கே குறைவாக இருக்கிறது.அங்கு தேவைக்கு மேல் கூடுதலாக இருக்கிறது. எனவே அங்கே இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என சொல்லிக்கொடுக்கிறார்களாம்

-படித்ததில் ரசித்தது
-மணி

உருவத்தில் நின்று உருவமற்றதை காண்பதே இன்பம்.. சொல்லை மந்திரம் என்பார்கள்.சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயல்வதுதான் இலக்கியம்.

-ந.பிச்சமூர்த்தி

1G-ஒருவர் பேசி முடித்தவுடன் பேசுவது-உ.ம் வாக்கி டாக்கி

வேகம்:2.4 முதல் 14.4 kbps 

1980-அமெரிக்காவில் அறிமுகம்

2G-இருவர் பேசுசது-மொபைல்போன்

பின்லாந்தில் 1991 ல் அறிமுகம்

3G-முகம் பார்த்து பேசுவது-வீடியோ கால்

2001-ஜப்பானில் அறிமுகம்

4G-இணைய வேகம் அதிகம்.நொடிக்கு 100 மெகா பைட் வேகம்.

2009-ம் ஆண்டு தென்கொரியாவில் அறிமுகம்

5G-இணைய வேகம் 4ஜியை விட அதிகம்.

2022 ல் இந்தியாவுக்கு முழுவதும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மணி

நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்

நம்முடைய                 

செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
                                                                                     

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.

அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
                  -  ந. சிவநேசன்.




கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது.அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது

-மு.வ

கற்றதும்பெற்றதும்-74



கற்றதும் பெற்றதும்-74

*மணி

"எனக்கென்னவோ ஊர் என்பது மனிதர்கள் மூலமாகவும் மனிதர்கள் என்பவர்கள் தங்களது பேச்சு மூலமாகவுமே பளிச்பளிச்சென்று அடையாளம் காட்டிக்கொள்வது போலவும் தோன்றுகிறது.

-வண்ணதாசன்

(சில வாழைமரங்கள்)

"சமீபத்தில் என் நண்பருடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது

ரசனை குறித்த விவாதமாய் மாறியது.மிஷினையும் மனிதனையும் வேறுபடுத்துவது ரசனைகளே.சின்ன விஷயங்களை ரசிக்காமலும் பிரம்மிக்காமலும் இருக்கும்போது மனம் மிருகமாய் கொஞ்சம் கொஞ்சம் மாறுகிறது.பொறுமையும் அன்பும் மறைந்து எதிர்படும் மனிதர்களை நேசிக்காமல் கடந்துவிடுகிறோம். வண்ணதாசன் காட்டும் ரசனை நயம்.அலாதியானது.அதை நினைத்து பயணம் செய்தாலே மனம் புனிதமடைகிறது.

சகமனிதர்களை கவனித்து அவர்களை உள்வாங்கி கவனிப்பது தவறி வருகிறோம் .இதனால் என்ன இலாபம் என கேட்கும் வியாபார மூளை வந்த பிறகு எதிரில் வருபவன் எப்போதும் ஒரு பிண்டமாகத்தான் தெரிவான். மிஷின் யுகத்தில் நாமும் ஒரு மிஷினாக மாறியதை உணர நீண்ட காலம் ஆகும்.மனிதன் ரசிப்பு தன்மையை உணர வைப்பதில் வண்ணதாசன் எழுத்துக்கு ஆற்றலுண்டு. 

#ஈரம்

கதை முழுவதும் எழுத்துகளில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.பக்கத்து வீட்டில் போர் போடும்போது அந்த வீட்டுத்தலைவன் முதலில் பீய்ச்சி வரும் தண்ணீரை எடுப்பான்.அந்த ஈரம் தான் கதை.

தன் மதனி (அண்ணி)வீட்டுக்கு செல்லும் காட்சி..முதல் பத்தி ஆரம்பிக்கும்..

" போன வருடம் இதே மாதிரி ஒரு சனிக்கிழமை மத்தியானம் நான் போயிருந்தேன். அன்றைக்கும் மதனி பாக்கு கலர் சேலை கட்டியிருந்தாள். அப்போதுதான் கதவை சாத்தி இருப்பார்கள் போல கையிலே வைத்திருந்த உடுமாத்து துணி தோளில் போட்டுக் கொண்டு வந்தார்கள்.இப்பதான் வர்றியா என்று கேட்ட முகத்தில் சிரிப்பு எப்படி. இப்படி சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது மதனிக்கு என்று தெரியவில்லை. தலைக்கு எண்ணெய் தேய்த்த கையை கடைசியில் முகத்தில் பூசிக் கொள்வது போல் லேசான எண்ணெய் பசை இருக்கிற அந்த முகத்தில், இன்ன இடம் என்று சொல்ல முடியாமல், எல்லா இடத்திலும் அந்தச் சிரிப்பு தெரியும்"

இவ்வாறு ஒரு பத்தியை துவங்கினால் யார்தான் அக்கதையில் பங்குகொள்ளாமல் அடுத்த பக்கம் விலகிப்போவார்கள்.அந்த வீட்டிற்கே கைபிடித்து அழைத்துச் செல்கிறது.

#அச்சிட்டு வெளியிடுபவர்

கோமு அக்காவுக்கு சாகிற வயசா னு கேட்டு பஸ் ஸ்டாப்பிலிருந்து நகர்கிற ராமையாவின் பார்வையில் விரியும் கதை.இறந்த அக்காவின் வீட்டின் வெளியிலிருந்து வழக்கம்போல்.சிறுவயதில் அழைத்தது போல் கோமு அக்கானு கூப்பிடுவார்.உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்கும்.நேரில் வாழ்வதை விட சிறந்தது நினைவில் வாழ்வது போல திரும்பிச்செல்வான்.கனத்த இதயத்துடன்..

சின்ன வயசில் நம் தெருவிலும் கோமு அக்கா போல் அழகான யுவதிக்கு எஸ் கார்டா போவோம். நம்மிடம் சிரித்து பேசும்போது நம்மைதான் விரும்புறாங்கனு நெனைப்போம்.அதான் ஆண்களுக்கான first love failure.நம்ம றெக்க படத்தில வரும் இளம் விஜய் சேதுபதி மாதிரி.

#அரசமரம்

இருபிள்ளைகளின் வீட்டில் இரு மாதம் தங்கிவரும் அப்பாவை நாகலிங்கம் எனும் உறவினர் சந்தித்து என் வீட்டிலும் இரு மாதம் தங்கு என கைப்பிடித்து இழுத்துப்போவது கதை.அப்போது அவர் கையைப் பிடித்து இழுப்பார்.

 "சமீபத்தில் யாருமே இப்படி தன் கையை பிடிக்காததும், காய்ப்பும் சொர சொரப்பும் நிறைந்த இன்னொரு ஆணின் கைகள் இவ்வளவு ஆதரவுடன் எளிய பரிவுடன் பட்டும் படாமலும் தனக்கு உதவ முன்வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என்பதை உணர உணர அவருக்கு அழுகிற நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.

வீடு வீடாக மாறி தங்கும் முதிர்ந்த வயதில் ஏற்படும் கூச்ச உணர்வை மிக அழகாய் உணர்த்தியிருப்பார்.

#சில வாழைமரங்கள்

ஊர் ஞாபகம் வந்தால் தன் ஊர்க்காரரை தேடிச்சென்று பேசுவது ஊருக்கே போய்விட்டு வந்த சுகம்.அப்படித்தான் சைலப்பன் வீட்டுக்கு சென்று அலவலாகி வருகிறார் இக்கதையில்.நகரத்து வாழ்வின் அவசரத்தில் சொந்த ஊர் பற்றி பேசுவதே சுகம்தான்.

அப்போது வீட்டிலிருந்த 

தங்கம்மை அத்தையை பார்க்கத்தோன்றியது.குரல் மட்டும் கேட்டது அடுப்படியில்..அது வாழைமரத்தை தொட்ட மாதிரி இருந்ததாக சொல்லியிருப்பார்.

#கற்றதும் பெற்றதும்

கதை இருக்கா..ஜெட் வேகத்தில் ஓடும் உலகில் ஈரச்சாக்கை வெறும் காலில் மிதித்த பாதம் உணரும் குளுமை போல் வண்ணதாசனின் எழுத்துக்கள். இவரின் மொழிநடை அபாரமானது. இயல்பாய் எழும் காலடி ஓசையை போல மென்மையானது.அவசர உலகில் நாம் கவனியாது விட்ட எல்லாவற்றையும் அவர் கவனப்படுத்துகிறார்.வண்ணதாசனின் கதைகளை படிக்க படிக்க நாம் மென்மையாகவே மாறிவிடுகிறோம். மேலும், எதிர்படும் மனிதர்களை நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் தொடங்கிவிடுவோம். ஜிமிக்கி அணிந்த பெண் அதற்கு வெல்ட் வைத்தது போல் தலையாட்டாமல் அமர்ந்திருப்பது ஜிமிக்கிற்கு செய்யும் துரோகம்.அதற்கு அவள் கல் கம்மலோ மொட்டுக்கம்மலோ கூட அணிந்து கொள்ளலாம்.

#ரசித்தவை

*கடுகை இப்படிக்கொட்டி,அகலமாக விரலால் பரப்பி விடும்போது விரல்களின் கீழே கடுகுகள் உருள்வது நன்றாக இருக்கும். 

*இன்னைக்கு என்ன சொல்லப்போகிறாளோ தெரியவில்லை.என்ன சொல்லப்போகிறோம் என்று முன்தீர்மானம் செய்யாமல் அவ்வப்போது தோன்றுகிறதைச் சொல்லும்போதுதான் நன்றாக இருக்கும்.

* அழகு என்றால் என்ன? தன்னைப் போலவே இன்னொன்றை ஞாபகப்படுத்த வேண்டும். அப்படி உண்டாக்குகிற ஞாபகங்களின் அடுக்குகள் முடிவற்றதாகிப் பெருகவேண்டும். பெருக்கத்தின் தளம்பல் அற்ற நிலையில்- கிணற்றில் மிதக்கிற புளிய இலை மாதிரி- தானும் அசையாமல் இருந்து நம்மையும் அசையாமல் இருக்கப் பண்ண வேண்டும்

*சிலரை பார்த்த உடனேயே அவரைப்போல் பேச வேண்டும், நடக்க வேண்டும் எனத் தோன்றுவிடுகிறது.

*இன்னொரு முகத்தை ஞாபகப்படுத்தாத முகம் என்ன முகம்?சிரிப்பு என்ன சிரிப்பு?

*நிஜத்துக்கு பயப்பட்டு என்ன ஆகப் போகுது?

*ஒரு புத்தம் புதிய தீப்பெட்டி

வாங்கி.ஒரே ஒரு குச்சியையாவது உபயோகித்து இருப்பார்களோ என்னவோ. தவறிக் கீழே விழுந்து இருக்கவேண்டும். நறுக்கி வைத்தது மாதிரி, ஒரே சீராகவும் நெருக்கமான அடுக்குக இருந்த தீப்பெட்டியை மூடி, ஒரு தடவைக்கு இரண்டு தடவை குலுக்கிப் பார்த்தார்.கைக்கு அடங்கின அந்தக் கனமும்,குலுக்கின போது ஏற்பட்ட சத்தமும் அவருக்குப் பிடித்து இருந்தன.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

கற்றதும் பெற்றதும்-73



கற்றதும் பெற்றதும்-73

*மணி

உரிமை உள்ள

ஒவ்வொரு வாக்கும்,

அதிகாரமாக மாறுவதே

ஜனநாயகம்.

- அம்பேத்கர்

தனித்தொகுதி வரலாறு

--- த.நீதிராஜன்

   

சமூகநீதி வரலாற்றில் தமிழகமே முன்னோடி. “உள்ளாட்சி நிர்வாகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களையும் நியமிக்க வேண்டும்” என அயோத்திதாசப் பண்டிதரும் இரட்டை மலை சீனிவாசனும் ‘திராவிட மகாஜன சபை’ மாநாட்டில் கோரிக்கை விடுத்தது 1891-ல். ஒருவகையில், அதுவே நவீன இந்திய வரலாற்றில் பதிவான தலித் மக்கள் பிரதிநிதித்துவத்துக்கான முதல் குரல். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவமும் தனித் தொகுதிகளும் எப்படிக் கிடைத்தன எனும் வரலாற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

1919 - இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் இந்தியர்களும் பங்கேற்கலாம் என்ற வாய்ப்பை இந்த ஆண்டு வெளியான அரசியல் சாசனம் மூலம் பிரிட்டிஷ் அரசு தந்தது. சொத்துள்ளவர்களுக்குத்தான் வாக்குரிமை. 1920-ல் சென்னை மாகாணத்தின் முதல் தேர்தல் நடந்தது. சட்டமன்றத்துக்கு 98 பேர் தேர்வாகினர். 29 நியமன உறுப்பினர்களில் தலித் மக்களுக்கும் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில்தான் சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எம்.சி.ராஜா நியமிக்கப்படுகிறார். அவர் அப்போது நீதிக்கட்சியில் இருந்தார். முக்கியமான விஷயம் ஆங்கிலேய ஆளுநரால் நியமிக்கப்படும் முறைதான் இருந்தது அப்போது!

1932 - வட்ட மேஜை மாநாடுகளின் தொடர்ச்சியாக, அம்பேத்கரின் பெரும் போராட்டத்தின் விளைவாக ஆங்கிலேய அரசு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கான ஆணை’யை 1932 ஆகஸ்ட் 16 ல் வெளியிட்டது. 20 வருட காலத்துக்கு என்ற நிபந்தனையுடன் இந்திய அளவில் 71 இடங்கள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டன. இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் தரப்பட்ட இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, தலித்துகள் தங்களின் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒரு வாக்கும் பொதுத்தொகுதி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் போடலாம்.

காந்தி “தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உறுப்பினரை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே கூடித் தேர்ந்தெடுக்கும் முறையானது, சமூக இணக்கத்துக்கு மாறாக, சமூகப் பிளவுக்கே வழிவகுக்கும்” என்றார். காந்தியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அம்பேத்கருடனான பேச்சுவார்த்தை நடந்தது. சமரச ஏற்பாடாக புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், இரட்டை வாக்குரிமை போனது. பதிலுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 148 இடங்களானது.

1935 - பிரிட்டிஷாரின் புதிய அரசியல் சாசனம் வந்தது. அதன்படி முதல் தேர்தல் 1937-ல் நடந்தது. 18% தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இப்போதும் படித்த/சொத்துரிமை உள்ளவர்களுக்கே வாக்குரிமை.

1950 - சொத்து/படிப்பு நிபந்தனை இல்லாமல் வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை தரும் ஜனநாயக நாடாக இந்தியா மலர்ந்தது.

1951-1952 பிரிவினைக்குப் பிந்தைய சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல். மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள்: 489. இதில் தலித்துகள், பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94. இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித்/பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் - அதாவது ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித்/பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறையும் - இருந்தன. இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள்/பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். மாநிலங்களவையில் இப்படியான இடஓதுக்கீடு ஏதும் கிடையாது.

1961 இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தனித் தொகுதிகள் இன்றைக்கு உள்ளதுபோல மாறின. அதாவது, பொது உறுப்பினர் ஒருவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் என்று இரு உறுப்பினர்கள் அல்லாமல், தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட வர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்; அனைத்துத் தரப்பினரும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை அமலுக்கு வந்தது.

2016 - மக்களவையில் உள்ள மொத்த இடங்கள்: 543. இதில் தனித் தொகுதிகளின் எண்ணிக்கை 131.

தமிழ்நாடு தமிழகச் சட்டப்பேரவையில் உள்ள 235 (ஒரு இடம் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினருக்கானது்) இடங்களில் தனித் தொகுதிகளின் எண்ணிக்கை: 46. இதில் தலித்துகளுக்கான இடங்கள்: 44. பழங்குடியினருக்கான இடங்கள்: 2. இதேபோல, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகள் தனித் தொகுதிகள்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

கற்றதும் பெற்றதும்-72



கற்றதும் பெற்றதும்-72

*மணி

விரிக்கிற போது நீர்த்துப்போகாமலும்.

சுருக்குகிறபோது சிதைந்து போகாமலும் பார்த்துக்கொள்கிற ஆற்றல்தான், எழுத்திலும் பேச்சிலும் வேண்டும்

-சுபவீ

#ஒரு நிமிடம் ஒரு செய்தி

-சுப.வீரபாண்டியன்

சுபவீ யின் ஒரு நிமிடம் ஒரு செய்தியை அறிமுகம் செய்தவர் நண்பர் சென்னை தினகரன்.ஒரு அறிஞரிடம் ஒரு நாள் முழுக்க பேசனும் என்றவுடன் ஐந்துநிமிடத்தில் வருகிறேன் என்றாராம்.அதே அறிஞரிடம் சரியாக பத்து நிமிடம் பேச வேண்டும் என்றவுடன் எனக்கு ஒருநாள் அவகாசம் வேண்டும். காரணம் நேரம் குறைவாக உள்ளபோது நாம் சொல்லும் கருத்து செறிவாக இருக்க வேண்டும் என்பதே.

இதுபோல்தான் சுபவீயின் ஒருநிமிட செய்தியும்.நாள்தோறும் நான் ரசித்த தகவல்கள்

#தமிழகத்தில் மதுவிலக்கு 1937ம் ஆண்டு ராஜாஜி 4மாவட்டங்களில் கொண்டு வந்தார்.ஆனால் தமிழகம் முழுவதும் 1947-1949 ஏப்ரல் வரை மதுவிலக்கை அமல்படுத்தியவர் ஓமந்தூரார் ராமசாமி அவர்கள்.

#விட்டுக்கொடுத்தல் பற்றி ஒரு நாட்டுப்புறப்பாடல்.மனைவியும் கணவனும் பற்றி..

" பட்டு கொடுத்தால் இன்பம் வருமா காசு என்னும் துட்டு கொடுத்தால் இன்பம் வருமா

 நகைநட்டு கொடுத்தால் இன்பம் வருமா

 இல்லை இல்லை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் இன்பம் வரும் என்பது அந்த பாட்டு.மற்றவர்க்காக ஆசைகளை விட்டுக்கொடுக்கலாம். கொள்கைகளை விட்டுக்கொடுக்க கூடாது.

# யாரேனும் ஒரு சிறுவன் அழுதால் என்ன இப்படி பொம்பள மாதிரி அழுகிறாய் என கேட்கும் வழக்கம் நம்மிடம் உண்டு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏன் வேறுபாடு. அழுகை பொதுவானது. 

" நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து" தான் வள்ளுவர் சொல்கிறார். உலகத்தின் அழுக்குகளையெல்லாம்

தன் கண்ணீரால் கழுவ நினைத்தவர் வள்ளலார்.

# இந்து மதத்தில் இரண்டு வகையான வழிபாடுகள் இன்று இருக்கின்றன. கிராமத்து மக்களின் வழிபாடு நான்கு வகைகளாக பிரிந்து கிடக்கிறது. அவர்கள் அம்மனை, மாடனை கருப்பை, வீரனை வணங்குகிறார்கள். இசக்கியம்மன் மாரியம்மன் என்றும், சுடலை மாடன் புல மாடன் என்றும், பெரிய கருப்பு சின்னக் கருப்பு என்றும், முனியாண்டியின் மதுரை வீரன் என்றும் வணங்குகிறார்கள். என்ன வேறுபாடு.. சிவனை வழிபடுவது புராணத்தில் வழிபட்ட கற்பனை வழிபாடு. கிராம மக்களின் வழிபாடு இந்த மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை அவர்களின் வானுறை தெய்வங்களாகக் கருதி வழிபடுகிற முன்னோர் வழிபாடு.

# கண்ணன் பிறந்தது அஷ்டமி, ராமன் பிறந்த நாளன்று நவமி. கோகுலாஷ்டமி ராமநவமி கொண்டாடுகிற மக்கள்தான் அஷ்டமியும் நவமியும் நல்ல நாட்கள் இல்லை என்று சொல்கிறார்கள். கடவுள் பிறந்த நாள் நல்ல நாள் இல்லையென்றால் வேறு எது நல்லநாளாக இருக்க முடியும்.

# அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் என்றார் வள்ளுவர். எவனுக்குத் தன் வாழ்வின் அளவை அறிந்து வாழ தெரியவில்லையோ, அவனுடைய வாழ்க்கை இருப்பது போலத் தோன்றி இல்லாமல் மறைந்து போகும் என்று வள்ளுவர் கூறுவது வெறும் செய்தி இல்லை. நம் வாழ்க்கைக்கான எச்சரிக்கை.

* அவ்வையார் பாடல் ஒன்றின் கடைசி வரி பலா,மா,பாதிரி என்பார். எதற்காக என்றால் பலா பூக்காமல் காய்க்கும். மா மரம் பூத்து காய்த்து  கனியும்.பாதிரி பூக்கும் ஆனால் காய்க்காது. கேட்காமல் கொடுப்பவர்கள் சிலர், துயரங்களை சொல்லிக் கேட்டால் கொடுப்பார்கள் சிலர். கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள் பலர். இந்த மூன்று மனிதர்களை மனதில் வைத்து தான் அவர் அப்படி பாடியிருக்கிறார்.

# புரட்சிக்கவிஞர் காலையில் படி கடும்பகல் படி மாலை இரவு பொருள்படும்படி படி என்றார். பாரதியார் ஒரு நாளைக்கு ஒரு வேளை படித்தால் போதும் என்கிறார். காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்றால் எது சரி என்று ஒரு குழப்பம். கவனித்து பார்த்தால் இன்னொரு உண்மை நமக்குப் புலப்படும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக படித்தவர்கள் காலையில் மட்டும் படித்தால் போதுமானது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட நாம் நாள் முழுவதும் படித்தால் தான் முன்னேற முடியும். அதனால் தான் அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார். பாரதிதாசன் நமக்காக பாடியிருக்கிறார்

#ரசித்தது

*இந்தியாவில் அரசியல் ஜனநாயகமாவது ஓரளவுக்கு இருக்கிறது. சமூக ஜனநாயகம் ஒரு துளியும் இல்லை -அம்பேத்கர்

* பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஏன் கிடைக்காது? செவ்வாய்க்கிழமை இரவு தூங்கி வியாழன் காலையில் எழுகின்ற அவர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் புதன் கிடைக்கும்

- கலைஞர்

* மூவேந்தர் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரையில் எல்லாக் கொடிகளும் பறப்பது எந்த நூலால், பூணூல்!

- இன்குலாப்

*தொடர்ந்து வாசிப்போம்

தோழமையிடன் மணிகண்டபிரபு

கற்றதும் பெற்றதும்-71



கற்றதும் பெற்றதும்-71

*மணி

வேலை மகிழ்ச்சி தரும் போது,

வாழ்க்கை சந்தோஷமாகிறது.

வேலை கடமையாகும் போது,

வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது.

- மாக்சிம் கார்க்கி...

கார்க்கி

-தமிழ்மகன்

தாய்தான் அனைவரையும் படைப்பாள். மாக்ஸிம் கார்க்கி தாயைப் படைத்தவர். ஆம். தாய் நாவலைப் படைத்த மாக்ஸிம் கார்க்கி,  எதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரர். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை படைப்பிலக்கியத்தில் கொண்டுவர முடியுமா? முடியும் என நிகழ்த்திக் காட்டியவர் கார்க்கி.

மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கடந்து வராத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. உலக வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான நாவல் அது. உலகின் தலைசிறந்த 100 நாவல்கள் என்றால் அதில் தாய்க்கு நிச்சயம் இடம் உண்டு. எதார்த்தவாத இலக்கியம் என்றால் அந்த 100 நாவல்களில் முதல் இடம் தாய்க்கு உண்டு.

அழகியல் உணர்வும், மேட்டுக்குடி மக்களின் மனப் போராட்டங்களுமே செவ்விலக்கியங்கள் எனப் போற்றப்பட்டு வந்தன. அரசர்கள், படித்தவர்கள் காதலில் மருகும் கதைகள் அன்றைய சிறந்த இலக்கியங்களாக இருந்தன. இன்னொரு பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளின் விதிகளை நொந்தபடி செல்லும் கண்ணீர் காவியங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தொழிலாளர்களின் பிரச்னைகளையும், அதற்கான போராட்ட ஆயத்தங்களையும் சொன்ன முதல் நாவல் இதுதான். ‘இழப்பதற்கு அடிமைத்தனத்தைத் தவிர வேறு ஏதும் அற்றவர்கள் நாம்’ என்கின்றன அதில் வரும் பாத்திரங்கள். ஆலைத் தொழிலாளியின் மகனான பாவெல்,  புரட்சிகரமான போராட்டத்தை வழிநடத்தும் கதைதான் தாய்  நாவலின் மையம்.

இதிலே தாய் எங்கே வந்தாள்? தொழிற்சாலையில் அநீதி நடக்கிறது. தொழிலாளர்கள் மிகக் குறைந்த கூலிக்குக் கசக்கி எறியப்படுகிறார்கள். ஆனால், அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்காத ஒரு தாய் எப்படி அந்தப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செலுத்துகிறாள் என்பதுதான் நாவலின் முழு ஆதாரமாக இருக்கிறது. தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தன் மகன், தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவதையும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்காகப் போராடுவதையும் அறிந்து, அவர்களுக்குத் தேநீர் பரிமாறுவதில் ஆரம்பிக்கிறது அவளுடைய பங்களிப்பு. தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து உபசரிக்கிறாள். ஒரு கட்டத்தில் தொழிலாளத் தோழர்கள் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களின் போராட்டத்தை ஏற்று நடத்தும் வேலைகளை அவரே செய்கிறார். ‘நான் சிறையில் இருந்தாலும் என் கரங்கள் வெளியே இருக்கின்றன’ எனத் தன் தாயைப் பற்றிச் சொல்கிறான் சிறையில் இருக்கும் பாவெல்.

உலகத் தொழிற்சங்கங்களின் பைபிளாக தாய் நாவல் இன்றும் பேசப்படுகிறது.

மனிதன் பிறந்தான், கிழவி இஸெர்கில், ஜிப்ஸி, வழித்துணைவன் போன்ற இவருடைய கதைகள் காலகட்டத்தைப் பிரதிபலித்தவை மட்டுமல்ல; காலம் கடந்தும் நிற்பவை.

ரயில்வே ஊழியர், செருப்பு தைப்பவர், விவசாயி என கார்க்கிக்கு பல முகங்கள் உண்டு. எழுத்தில் அந்த முகங்கள் ரத்தமும் சதையுமாகப் பிரதிபலித்தன.

இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத்தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்க்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.

அன்றைய ரஷ்ய மன்னர் ஜார். மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அதில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்க்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்க்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்க்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

பிறகு ரஷ்யப் புரட்சியை வழி நடத்திய லெனினைச் சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டதுதான் தாய் நாவல். உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.

இன்று உலகின் பல பல்கலைக்கழகங்களால் பரிந்துரைக்கப்படும் தாய் நாவலை எழுதிய கார்க்கி, பள்ளிக்கூடமே சென்றதில்லை.

தொடர்ந்து  வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு