Sunday 30 April 2017

மினிமீன்ஸ் பதிவிருந்து

துறவி ஒருவரிடம் பல இளைஞர்களும், இளம்பெண்களும் குருகுலத்தில் பாடம் கற்றுக் கொண்டிருந்தனர்.

துறவியும் அழகும், இளமையும், அறிவும் எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்த, ஒரு பெண்ணுக்கு மட்டும் அது காதலாய் மலர்ந்துவிட்டது.

அது தவறு என்று தெரிந்தாலும் மனது கேட்கவில்லை.

ஒருநாள் குருவை தனியே சந்தித்த அவள், தன் காதலை சொல்லவும் செய்துவிட்டாள்.

குரு அப்போதும் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

லேசான குழப்பத்துடன் அவள் கேட்டாள்.

"கோபப்படாமல் சிரிக்கிறீர்களே.. நான் உங்களைக் காதலிப்பது தவறில்லையா.?"

குரு சிரித்தார்.

"கவலைப்படாதே.. நீ காதலிப்பதில் தவறேதும் இல்லை. நம் இருவருக்கும் எவ்வளவு காதல் இருக்க வேண்டுமோ.. அந்த மொத்த காதலும் உன்னிடமே இருக்கிறது.!"

அவள் சந்தோசத்துடன் கேட்டாள்.

"அப்படியானால் இது நிறைவேறுமா.? நாம் திருமணம் செய்துகொள்ளலாமா.?இந்த சமூகம் நம்மை தவறாகப் பேசாதா.?"

குரு புன்னகைத்தார்.

"அது நடக்காது. ஒரு பெண்ணாய் உன்னிடம் நம் இருவருக்குமான காதல் இருப்பதைப் போல, ஒரு குருவாய் நம் இருவருக்கும் எவ்வளவு கட்டுப்பாடு இருக்க வேண்டுமோ... அந்த மொத்தக் கட்டுப்பாடும் என்னிடம் இருக்கிறது.!" என்றார்.

இரு பறவைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிப் போடுங்கள். அவற்றால் பறக்க முடியாது. இத்தனைக்கும் இப்போது நான்கு இறக்கைகள்.!

-ஜலாலுதீன் ரூமி.

ராஜேந்திரகுமார் இளைஞனாக இருந்தபோது அப்போது பிரசுரமாயிருந்த என் நான்கைந்து கதைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவற்றைப் படித்தாரா என்று தெரியாது. அவர் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கதைகள் தொலைந்து போய்விட்டன. இது அவருடைய விமரிசனம் என்று கூட நினைத்துக் கொள்ளலாம்.!

-அசோகமித்திரன்

பாரதியைப் பார்த்ததில்லை
அவன் கவிக்குரலைக் கேட்டதில்லை
நான் பார்க்கக் கிடைத்ததெல்லாம்
நலிந்ததொரு புகைப்படம்தான்
வெறும் புகை... படம்தான்
அந்தப் பெரும் நெருப்பெங்கே?
துள்ளும் சுடர் ஒளியெங்கே?
அட.. அட... அத்தனையும்
அவனெழுதிய கவிதையிலே..
அவன்
நின்றதும்
நடந்ததும்
கிடந்ததும் என் நெஞ்சுள்ளே...

-பாலகுமாரன்

#கேள்வி: இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்?

பதில்: பெட்ரோல், கூட்டுக்குடும்பம், கல்யாணம், தாய்ப்பாசம், விமான பயணம், பஸ்பயணம், டெலிபோன், பிலிம் ரோல் சினிமா, சில பெரிய வியாதிகள், கடவுள் பக்தி, கதை, கவிதைகள், ரூபாய் நோட்டுகள் என பெரிய பட்டியலே இருக்கிறது. தற்கொலை மட்டும் பாக்கி இருக்கும்.

#சுஜாதா

மினிமீன்ஸ் பதிவு

கேள்வி: என் நண்பருக்கு நகைச்சுவை உணர்வே இல்லை. ஜோக் அடித்தாலும் உம்மென்றிருப்பார். அவருக்கு கஷ்டமோ கவலையோ கிடையாது. உடல்ரீதியான குறைபாடாக இருக்குமோ?

பதில்: உங்கள் ஜோக்கில் உள்ள குறைபாடாக இருக்கலாம். உங்கள் நண்பரின் உயரதிகாரியை விட்டு அதே ஜோக்கை அடிக்க சொல்லுங்கள். தரையில் விழுந்து கையை காலை உதறி உதறி சிரிப்பார்.

#சுஜாதா

சுஜாதா

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான்.
பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.
கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.
”ஏன் கழுதாய்?”
கழுதை சொன்னது,
" நான் உன்னுடன் இருந்தாலும் பொதி சுமக்கத்தான் போகிறேன்... உன் எதிரிகளுடன் இருந்தாலும் பொதி சுமக்கத்தான் போகிறேன் ... எனக்கு எஜமான் யாராக இருந்தால் என்ன??"
நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!
#சுஜாதா.

பாரத்பாரதி

*யூமா வாசுகி* அவர்களின் குங்குமம் இதழில் வந்த " கைகள்" என்ற கவிதை 👇🏻

💥அம்மாவுக்கு
என் கைகளின் மீது மிகவும் ப்ரியம்
அவள் காய்ச்சலாகக் கிடக்கையில்
" ஒங்கையால ஒரு வாய்
சுடுதண்ணி வச்சுக்கொடுய்யா" என்பாள்.

💥அச்சில் வந்த என் கவிதையை
" ஒங்கையால எழுதினதா இது?
என்று வியந்தாள்

" வாயக்கசக்குது
ஒங்கையால இரண்டு வெத்தில
வாங்கிவா தம்பி" என்பாள்.

💥தெருவில் போகிற ஜோதிடனை
வீட்டிற்குள் அழைத்து
" இவங்கையால தாலி கட்டிக்கிற பாக்யவதி
எப்போ வருவா,
இவங்  கை பார்த்துச் சொல்லுமய்யா' என்பாள்.

படிப்பு முடிந்த கையோடு
சொந்தமென்றிருந்தவர்களிடம் அம்மா சொன்னாள்
" தகப்பனில்லாப் புள்ள ஐயா
கை தூக்கி விடணும்'
அழுகைக்கான ஒத்திகையோடு
வேலை வேண்டிப்போய்
ஆறுதல் சொன்னவனாய் திரும்பியபோது
வெறுங்கையிலிருந்தது
பாதிப்பிராயம்.

💥" ஒங்கையால ரெண்டு காசு சம்பாதிச்சி
கால் வவுத்துக்கஞ்சி  எப்ப ஊத்தப்போறே'
என்று வரும் அம்மாவின் புலம்பல்..,
' இன்னமும்
கையூணிக் கரணம் போடத் தெரியலயே'
என்று வருந்துகிறதே தவிர,
நான் ஒத்துக்கொள்ளத் தயாராயிருந்தும்
கையாலாகாதவன் என்றென்னை
ஒரு போதும் இகழ்ந்த்தில்லை.

நகுலன்

உணவு உண்டா?
உண்பது உண்டு
உணவில்லை
-நகுலன்

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்-மணிகண்டபிரபு

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்
*மணி

பிடித்த பாடல் வரும்போது சத்தம் கூட்டி ரிமோட்டை கையில் வைத்து கத்தி கதிரேசன் மாதிரி போஸ் கொடுக்கும் குழந்தை பருவத்திலிருந்து தொடங்குகிறது எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் மனநிலை

*அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தெரிந்ததை ஐம்பது வருசத்துக்கு முன்னாடியே காட்டிக்கொள்ளும் மன இயல்பு

*இன்னும் கத்திப்பாரா பாலத்தில் டூரிஸ்ட் பஸ்ஸிலிருந்து ஒரு குரல் கேட்கும்
"எல்லாம் ஏரோப்ளைன் பார்க்காதவங்க பாத்துங்குங்க னு" அவரே அப்பதான் பார்ப்பாரு.ஆனாலும் நானெல்லாங்கிற தோற்றத்தை உருவாக்குவாரு

*ட்ராபிக் ஆனால் முதலில் பஸ்சிலிருந்து இறங்கி போய் முன்னாடி நின்னு வேடிக்கை பார்ப்பாரு.தன்னால் ட்ராபிக்கோ/ சண்டையோ க்ளியர் செய்ய முடியுமானு பார்ப்பாரு.முடிந்தால் செய்து முடித்து அலப்பறை செய்வாரு

*பேங்கிலோ,பொது இடத்திலோ கட்டுப்பணத்தை எண்ணும் போது,போகிற வருபவர்களை அநாயசமா பார்ப்பாரு.பணம் எண்றதுல P.hd முடிச்சமாதிரி

*புதிதாய் பணியில் சேர்ந்தவரை ஏளனமாய் என் சர்வீஸ் இருக்குமா உன் வயசு னு கேட்பாரு பாருங்க.அவரை வச்சு பாகுபலி பார்ட் த்ரீயே எடுக்கலாம்

*கன்னியாகுமரி போனவுடன் எல்லாரும் சூரியனை பாருகன்னு ஒருத்தர் சொல்லுவாரு பாருங்க.என்னமோ அவர் காட்டினதால் தான் சூரியனையே நாம பார்த்த மாதிரி

*ஒரு முறை எங்கிட்ட குலேபகாவலி படத்தை காட்டி இந்த படம் வந்தப்ப நீ பொறந்திருக்கவே மாட்டனு லுக் விட்டாரு.நான் உடனே இது ராமண்ணா படம்னு சொன்னதும் அமைதியானாரு

*அப்புறம் அரசியலை பத்தி பேசுவாங்க..தமிழக அரசியல் வரலாறு னு புக்  இருக்கு.அதை படிச்சாலே போதும் இவங்களை ஈஸியா சமாளிக்கலாம்.

*பஸ்ல க்ளீனரா இருப்பாரு பாருங்க..நல்ல பாட்டை ரசிக்க விடாம மாத்திட்டே இருப்பான்

*குழந்தைகளும் விதிவிலக்கல்ல..படம் பார்க்கும்போது அடுத்த சீனை சொல்லி அது திரையில் வந்தால் அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்கும் அதிசயத்தை குழந்தை ரசிக்கும்

*கி.ரா வின் கதை ஒன்னுதான் நினைவுக்கு வருது.கிராமத்துல எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் இருந்தார்.ஊரே அறிவாளியாய் பார்க்கும்.சந்தேகம் கேட்கும்.அப்போ யானை ஒன்னு போகும்.ஊரே இவரை பார்த்து இது என்னனு கேட்கும்.?

நேத்து நைட் இருட்டு வந்துதுல்ல,அதோட மிச்சம் போகுது னு சொல்லுவார்.ஊரே கைதட்டி பார்க்கும்.

*அந்த காலத்தில னு ஆரம்பிக்கிற சிலர் தன் அனுபவத்தை,ஏமாற்றத்தை அப்படியே சொல்லி அதிலிருந்த உண்மையை சொல்லும்போது தான் அது நமக்கு ஆர்வத்தை தூண்டும்

*அத விட்டுட்டு நான்யார் தெரியுமில்ல, அந்த காலத்திலயே நான் பெரிய இவன்னு சொல்லும் ஏகாம்பரங்கள் அதிகமாயிட்டாங்க

*அனுபவத்தை அனுபவிச்சி சொல்லனும். தன்னை ஊரே அதிசயமா ஆச்சர்யமா பார்க்கனும் னு நினைப்பவரை பார்த்து சிரிச்சு கடந்து செல்லுங்க

தோழமையுடன் மணிகண்டபிரபு

மணி

கடினமாய் உழைத்தவர்கள் முன்னேறவில்லை,
கவனமாய் உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்.!!
-உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

ஆத்மாநாம்

இந்த செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்த கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்த சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு
-ஆத்மாநாம்

MAY day wishes

மனுஷ்யபுத்திரன்

*பணிநீக்க உத்தரவு*
- மனுஷ்ய புத்திரன்

💥எப்போதும்போல்
வீட்டிற்குக் கிளம்பும்போது
அவளது பணிநீக்க உத்தரவு
தரப்பட்டது

வருத்தமோ
கோபமோ இல்லாமல்
வழக்கமாகத் தரப்படும்
எதையோ ஒன்றைப்போல

அவள் இனி
அங்கே ஒருபோதும்
வரவேண்டியதில்லை என்பது
அவளுக்குச் சொல்லப்பட்டது

💥தான் இதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை
என்பதை அவள் சொல்லவிரும்பினாள்

உடனடியாக ஒரு நாளின்
அத்தனை பழக்கங்களையும் மாற்றிக்கொள்வது
சிரமம் என்று சொல்ல விரும்பினாள்

இந்த வேலை தனக்குப் பிடித்திருந்தது என்றும்
இங்கே எளிமையான பல உறவுகள் இருக்கின்றன
என்றும் சொல்ல விரும்பினாள்

ஆனால் அவள் எதையுமே
சொல்லவில்லை
அதை விவாதிக்கக் கூடாத
புனித ரகசியமாக மாற்றிவிடவேண்டும்
என்று அவளுக்குத் தோன்றியது

💥ஒரு காதல் கடிதத்தைப்
படிப்பதுபோலவே
அவள் தனது பணிநீக்க உத்தரவைத்
திரும்பத் திரும்பப் படிக்கிறாள்
தெளிவான வாக்கியங்களில்
புலப்படாத ஒன்று  மிச்சமிருப்பதாகவே
அவளுக்குத் தோன்றியது

காமிராவின் லென்சிலிருந்து ஒரு காட்சி
தொலைதூரத்திற்கு விலக்கப்படுவதுபோல
தன்னைச் சுற்றியிருக்கிற
ஒவ்வொன்றும் எவ்வளவு விரைவாக
விலகுகிறது என்பதை
வியப்புடன் பார்க்கிறாள்

💥சக பணியாளர்கள்
அவள் கண்களைச் சந்திப்பதை
தவிர்க்கின்றனர்
அவளை
ஆறுதல்படுத்தும் பொருட்டு
கோபமாக எதையோ முணுமுணுக்கின்றனர்
அது அவர்களுக்குக்கூட
கேட்டதா என்பது சந்தேகம்

பணிநீக்க உத்தரவை
அப்போதுதான் பிடுங்கப்பட்ட
ஒரு தாவரத்தைப் பார்ப்பதுபோல
பார்க்கிறாள்
அது ஈரமாக இருந்தது
வெப்பமாக இருந்தது
வாசனையோடு இருந்தது
அது உறுதியான
மௌனத்தோடு இருந்தது.

ஆனால் அது
உண்மையில்
ஒரு பிடுங்கப்பட்ட தாவரம் அல்ல
அது தன் கைகளில்
கொஞ்சம் கொஞ்சமாக
வளர்வதை அவள் உணர்கிறாள்
வீட்டிற்குப் போய் சேர்வதற்குள்
அது உண்மையில் பெரிய மரமாகிவிடும்
என அவளுக்கு மிகவும் அச்சமாகவே இருந்தது

💥முதல் முதலாக
அந்தியின் மஞ்சள் வெயில்
எவ்வளவு அடர்த்தியானது
என்பதைக் கவனிக்கிறாள்

நாளைக் காலையில்
எவ்வளவு தாமதமாக
எழுந்துகொள்ள முடியுமோ
எழுந்துகொள்ளலாம்

நாளை மதியம்
ஆறிப்போன எதையும் சாப்பிட வேண்டியதில்லை

செய்யவேண்டியவையோ
செய்யத்தவறியவையோ
ஒன்றுமே இல்லை

துணி துவைப்பதற்காக
விடுமுறை நாட்களுக்குக்
காத்திருக்க வேண்டியதில்லை

திடீரெனெ
அவ்வளவு பிரமாண்டமாகிவிட்ட உலகம்
அவ்வளவு நிறைய கிடைத்த நேரம்
அவ்வளவு பொறுப்பற்ற தன்மை
அவளைக் கிளர்ச்சியடைய வைக்கிறது

வீடுகளை நோக்கி ஆவேசமாக நகரும்
இந்த சாயங்கால மனித வெள்ளத்தினூடே
எத்தனை பேர்
ஒரு பணிநீக்க உத்தரவுடன்
வீடு திரும்புவார்கள்
என்று நினைக்கத் தொடங்கினாள்

தன்னைப்போல
யாரவது ஒருவர்
நாளைக் காலை
இதே பாதையில் வரத் தேவையற்றவர்கள்
இருக்கிறார்களா
என ஒவ்வொரு முகமாக உற்றுப் பார்க்கிறாள்

இது ஒரு சிறிய பிரச்சினை
ஒரு காபி குடித்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்று
அவளுக்குத் தோன்றியது

💥ஒரு நல்ல காபி மட்டுமே
கடவுள்கள், மனிதர்கள் உருவாக்கிய
எல்லாப் பிரச்சினைகளையும்
தீர்க்கக்கூடியது
என்று நினைத்தபடியே
மீண்டும் ஒருமுறை
தனது பணிநீக்க உத்தரவைப்
படிக்கத் தொடங்குகிறாள்

பாரத்பாரதி பதிவு

💥''இடைவிடாத தேடுதல் கொண்டவனே/கொண்டவளே நல்ல வாசகர்.

💥எந்தப் படைப்பாளியிடமும் தேங்கிவிடக் கூடாது. மாலை போட்டு சூடம் காட்டக் கூடாது. தலைவராக, ஒரே படைப்பாளியை பாலபிஷேகம் செய்யக் கூடாது.

💥ஓடிக்கொண்டே இருக்கிற நதி போல ஒரு நல்ல வாசகர் இருப்பார். நல்ல வாசகர்களே, நல்ல எழுத்தாளரையும் உருவாக்க முடியும்.

💥வாசகர், 'சக இருதயர்’ என்பது, ஓர் அழகிய உண்மை. எழுதுபவரையும்விட ஒரு நல்ல, ஆரோக்கியமான வாசகரே இலக்கியத்தை வளர்ப்பவர்!''

-பிரபஞ்சன்.

சிவதினகரன் பதிவு

வாசித்ததில் நேசித்தது
நூல் - 4

கவிதை நூல் என்றாலே பின்னங்கால் பிடரியில் அடிக்கும் படி ஓடுவேன்.

ஓடியவனை நிற்க வைத்து மெதுவாய் வருடிக் கொடுத்தது இந்த புத்தகம். அற்புதமான கவிதைகள்.

தஞ்சாவூர் கோபாலி என்ற பெயரில் கட்டுரையும் எழுதுகிறார். எழுத்துக்கள் அனைத்தும் ஒரு சேர மனிதத்தை நேசிக்கின்றன.

"குழந்தைகள் பலூன் வாங்கவில்லை
பலூன் வாங்குபவர்கள் குழந்தைகள் ஆகின்றனர்" எனும் இவர் தஞ்சை பிரகாஷின் நண்பர்.

இவரின் எல்லா கவிதைக்குள்ளும் நாமிருப்போம். வாங்கி படியுங்கள். திரும்ப திரும்ப படிக்கத்தூண்டும் முத்துக்கவிதைகள்.

தஞ்சாவூர் அனன்யா பதிப்பகம்

தேவதச்சன்

என் கையில் இருந்த பர்சை பிரிக்கவில்லை.பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
-தேவதச்சன்

தேவதச்சன்

காற்றில் வினோத நடனம் புரியும்
இலைகளை கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது
-தேவதச்சன்

வாட்ஸ் அப் வறுத்தெடுப்பது-மணி

வாட்ஸ் அப்பில் நடந்து வறுத்து எடுப்பது எப்படி?
*மணிகண்டபிரபு*

இன்றைய இளைஞர்கள் கூடு கட்டி  வாழும் கலைக்கூடம் இணையம்.நேரா நேரத்துக்கு சாப்பிடுறாங்களோ இல்லையோ நேரா நேரத்துக்கு நெட்டை மட்டும் ஆன் பன்னுவாங்க.
முகநூல்,ட்விட்டர் அனைத்தும் கடந்து போகும்.ஆனால் வாட்ஸ் அப்பை படித்தாலோ,பார்த்தாலோ மட்டும்தான் கடந்து போகும்.அப்பிடிப்பட்ட வாட்ஸ் அப்பில் நாள்தோறும் வற்றாத ஜீவநதியாய் பெருகிடும் தகவல்கள் பல.தனிமரம் தோப்பாகாது.ஆனால் குரூப்பில் சேர்த்து குதூகலிக்கும் நட்புகள் அதிகம்..

வாட்ஸ் அப்பில் நடந்து கொள்வது எப்படி?இதுதான்
  புதுசா குரூப்பில் சேரும்போது இப்பிடி சொல்லித்தான் சூடம் காட்டுவாங்க..
அப்புறம் போகப்போக ஏழ்ரை டன் வெயிட்டோட அடி விழும்..

#விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்காது.இதை கார்ல்மார்க்ஸ்,அப்துல்கலாம்,நம்மாழ்வார் பிறந்தநாளுக்கு அவர்கள்.சொன்னதாக பதிவிடுவாங்க..அப்பவே தெரிஞ்சிடும் நாலு பேரும் நல்லா இருந்த வாட்ஸ் அப்பும் டைட்டில் வச்சிக்கலாம்

#தப்பித்தவறி விடுமுறை நாள் வந்துட்டா ஓயாம உடுக்கை அடிச்ச வண்ணம் நோட்டிபிகேசன் ஒலிச்சிக்கிட்டே இருக்கும்.வெளிமாநில டூர் அடிச்சி அத்தனை போட்டோவையும் அப்லோடுவாங்க.. அதுவும் கூலிங்கிளாஸ் போட்டு ஆனந்ததொல்லை பவர் ஸ்டாருக்கே 'டப்' கொடுக்கும் விதமா..

இதுல பத்து பேர் நிற்க தோதான இடம் கிடச்சா எடுடா செல்ப்பி னு எடுத்து அவங்க பாப்பாங்களோ இல்லையோ நமக்கு முதல்ல காட்டிருவாங்க
(இதில செல்ப்பி கிளிக்கில் முதலில் யார் இருக்கிறாரோ அவர் அழகாய் இருந்தால் மட்டும் அப்லோடுவார்.பக்கத்திலிருப்பவர் கண் மூடி இருப்பது,அஞ்சாவது இருப்பவர் வேறிடத்தில் பார்ப்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டார்.

#பட்ட காலிலே படும்,கெட்ட குடியே கெடும்கிற மாதிரி போட்ட நியூசை போட்டு தாளிப்பாங்க.அவரவர் எப்போது நெட் ஆன் செய்கிறாரோ அப்போதுதான் அவருக்கு அது ப்ளாஸ் நியூஷ்.அது எப்போது வந்திருந்தாலும் சரி

#இதை அஞ்சு குரூப்புக்கு அனுப்பினால் ஒரு மேஜிக் தெரியும் னு ஒரு இமேஜ் அனுப்புவாங்க..
உஸ்ஸப்பா.ஜாதுகர் ஆனந்த் மட்டும் உயிரோடு இருந்திருந்தா கையிலிருக்கிற மந்திரக்கோலை தூக்கி வீசிட்டு மட்டக்கோலை எடுத்து மண்டையில் அடிச்சு உங்களை காணாப் பொணம் ஆக்கியிருப்பாரு"!

#கொஞ்சம் குட்டிக்கதைனு சொல்லிட்டு வெண்முரசு லெவல்ல நீளக்கதை ஒன்று வரும்.ஸ்க்ரால் செய்து கட்டை விரலே குட்டி ஆனாலும் அந்தகதை கூட்ஸ்வண்டி மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும்.கதையின் கடைசி வரியில் கண்டிப்பா நீதி இருக்கும்.அதை படிச்சிட்டு திருந்துவாங்க னு நினைப்பில தாதுமணலை அள்ளிப்போடணும்.

#சில பேரு மாசக்கணக்கில நெட் கார்டு போடாம ஒரு நாள் நெட் ஆன் பன்னி..ஒரு மாசம் கழிச்சி படிச்ச அத்தனை பதிப்பையும் இந்தியா ஏழை நாடுன்னு யாரு சொன்னாங்க அறிவு னு அத்தனைசெய்தியையும்
"படியும் படித்துத் தொலையுங்கிற"
வைகைபுயல் ரேஞ்சில பதிவிடுவாங்க

#இன்னிக்கு ராத்திரி பன்னிரண்டு மணியிலிருந்து விடியற்காலையில் சூரிய புயல ஒன்னு வருது.இதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் செல்போன் சேதாரமாகும்.ஒரு சில இடங்களில் ஆன்ட்ராய்டு போனை தாக்கும் என எச்சரிக்கை அடிப்பாங்க.கடலுக்கு செல்லாத மீனவர்கள் மாதிரி  தனியா வச்சிட்டு வந்து படுக்க வச்சிருவாங்க.அவ்வ்வ்

#வேலைக்கு சென்ற இடத்தில் மதிய உணவு இடைவேளையில் நெட் ஆன் பன்னினால் நெஞ்சடைக்கிற மாதிரி 4200 நோட்டிபிகேசன் காண்பிக்கும்.எடுத்துபார்த்தால் மூன்றே பேர் உரையாடியிருப்பாங்க.உங்களையெல்லாம் அந்த ஆபிஸ் ஹெச்.ஆர்  தான் தண்டிப்பாரு

  #ராபின் சர்மா எழுதிய who cry you wil die ஒரு புத்தக விமர்சனம்.எனக்கு தெரிஞ்சு ராபின் சர்மாவை விட நாங்கதான் அதிகம் படிச்சிருப்போம். ஓஷோவோட குட்டிக்கதை செலக்டிவா ஒரு ஐந்து இருக்கு.அப்புறம் சுகி.சிவம் அவர்களின் ஆடியோ.இதையே ரிப்பீட்டு அடிச்சு அடிச்சு ரிவீட் அடிப்பாங்க.குரூப்பிலிருந்து வெளியேறினா.,சிவப்பு சட்டைக்காரன் வெளிய போறான்.ரத்தம் கக்கி சாவான்னு மீண்டும் சேர்த்துவிட்டு ஜல்லியடிப்பாங்க

#எல்.கே.ஜி யில படிச்ச மிஸ்ஸிங் லெட்டர்ஸ்சை கண்டுபிடிக்கிறது,கஷ்டமான ஒரு கேள்விக்கு விடை சொல்லு என்று சொன்னதோடு மட்டுமில்லாம இதை ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டதாக டுமீல் விடுவாங்க.(அது எந்த வருசத்து கொஸ்டின் பேப்பர்னு சொல்லமாட்டாங்க..டேஞ்சரஸ் பெல்லோ)

#புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு,எய்ட்சுக்கு மருந்து ரெடி னு தட்டிவிடுறது.
இதைப்படிச்சா சர்க்கரையே வராது ன்னு ரேசன் கடை ஆபிசர் மாதிரி சொல்வது,
கவர்மென்ட்டிலீருந்து Flash news செய்தி வந்தா அடுத்த கவர்மென்ட் வரும்வரை அதையே அடித்து துவைப்பது

#சுடோக்கு, புதிர் கணக்கு போட்டு கணக்கு படிக்காத ஆர்ட்ஸ் குரூப் பசங்களை கடுப்பேற்றுவது

#நெல்லிக்காயின் நற்குணம்,சீரகத்தின் அருமை,மஞ்சளின் மகிமை என மருத்துவர் சிவராமனாகவே மாறிடுவாங்க.மேலும் வாக்கிங் போகும்போது செய்ய வேண்டியது செய்ய கூடாதது (நாங்க உன்ன செஞ்சிடுவோம்) பதிவை போடுறது

#உங்களுக்குத் தெரியுமா னு ஒரு டைட்டில் (உங்களுக்கே அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தான் தெரியும் அட்மின்)
போட்டு பொது அறிவு தகவல்களை
அள்ளித்தெளித்து அணைக்கட்டுவது

#பிரபலங்களின் பிறந்தநாள் வந்தா போதும் அவங்க பிறந்தநாளை முன்னிட்டு ரிலையன்ஸ்,ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் இலவச நெட் 5MB, 7MB கொடுக்கிறாங்க.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதை பத்து குரூப்புக்கு அனுப்பவும்.நான் அனுப்பி எனக்கு வந்திருச்சி.நீங்களும் ஹாரி அப் னு விரட்டுவாங்க.உங்களையெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

#குரூப்பில் சில இயற்கை நேசர்கள்,இயற்கை சித்தர்கள் இருப்பார்கள்.இவர்கள் வேலையே காலை,மதியம்.,மாலை,இரவில் வணக்கம் சொல்வது.குழந்தை போட்டோ,இயற்கை போட்டோ என சகல ஜீவராசிகளின் பெயரால் வணக்கம் சொல்வது.எவரும் பதில் வணக்கம் சொல்லவில்லையெனில் அந்த புகைப்படத்திலேயே வணக்கத்தின் கீழேயே அவர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்

  #தேசப்பற்று- இவுங்க தேசப்பற்று மட்டும் மற்றவருக்கு இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வீட்டோ பவர் வாங்கி விண்டோ சீட் ஐநாவில் கிடைச்சிருக்கிற ரேஞ்சுக்கு நம் ஜன கண மண தேசிய கீதம் யுனெஸ்கோவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்வார்.போங்க தம்பி போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க

#ஒவ்வொரு சாதிக்கும் சங்கம் இருந்தது அந்தக்காலம்.இப்போது வாட்ஸ் குரூப் இருப்பது இந்தக்காலம்.குறிப்பா அலைஞ்சு திரிஞ்சு வரன் தேடுவது குறைந்துள்ளது

#ஹைதராபாத்தில ஒரு மாணவியின் சான்றிதழ் தொலைந்து,அச்சான்றிதழை மீட்டெடுத்த அந்த மாணவியே நன்றி சொன்னபிறகும் சான்றிதழ் தொலைந்ததாக பதிவிட்டுக்கொண்டிருக்கும் மக்களின் அறியாமை,கடமையை என்ன சொல்வது.

இணையத்தில் ஃபைல்களை அனுப்ப,மேலாளருக்காக வடிவமைத்த படத்தை அனுப்பி ஒப்புதல் வாங்க மிகவும் பயனுள்ளது.புத்தகத்திற்கெனவும்,வாசித்ததை பகிரவும் ஆரம்பிக்கப்பட்டு உபயோகமுள்ள பல குழுக்கள் ஆரோக்யமாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.இரத்தம் கேட்டு வரும் தகவல்கள் பலரின் உயிரை காப்பாற்றியதில் வாட்ஸ் அப்புக்கு மிகப்பெரிய பங்குண்டு.கடலூர்,சென்னை வாசிகள் தண்ணீரில் மிதந்தபோது துயர் துடைக்க நீண்டகரங்கள் கருணைமிக்கது.இருப்பினும் இதுபோன்ற குப்பைகள் நாள்தோறும் பெருகி வருவதும் விசமத்தை வெளிப்படுத்தும்  கருத்து வெளியிடுவதும் நல்லதல்ல.

இணையம் நல்லது.பயனுள்ளவற்றை பகிர்ந்தால்..

-மணிகண்டபிரபு