Tuesday 27 November 2018

கற்றதும் பெற்றதும்-61

கற்றதும் பெற்றதும்-61
*மணி

#’கசடதபற’வில் சொல் முடிந்து, அடுத்த சொல்லும் ‘கசடதபற’வில் வந்தால் கண்ணைமூடிக்கொண்டு சந்திபோடுங்கள். 90% சந்திப்பிழைகள் குறையும்

- நன்னன்

#பெரியார் கணினி
-நன்னன்

நன்னனை தெரியாதார் இன்னும் தமிழை தெரியவில்லை என அர்த்தம்.சென்னைத் தொலைக்காட்சியில்  ‘எண்ணும் எழுத்தும்’ தொடர் 17 ஆண்டுகளாக நடத்தும்போது..தமிழகத்தின் வீடுதோறும் தமிழ் கொண்டு சேர்த்தவர். ‘தமிழறிவோம்’, ‘உங்களுக்காக’ போன்ற நிகழ்ச்சிகளில் தமிழகத்துக்கு மக்களுக்கெல்லாம் தமிழ் பாடம் நடத்தியவர்.

பெரியார் கணினி இந்நூல் பெரியாரின் கருத்துகள் 48 தலைப்புகளில் முதற் பகுப்புகளாகவும், பிறகு 309 துணைப்பகுப்புகளும்,11 கிளைப்பகுப்புகளும் அடங்கியுள்ளன. இம் மூவகைப் பகுப்புகளிலுமாக மொத்தம் 4884 கருத்துக் கனிகள் அடங்கியுள்ளன.

இது மிகப்பெரிய கருத்து கருவூலமாகும்.

பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல.. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.அவற்றையும் பகுத்தறிவு கொண்டு தெளியும்படி வலியுறுத்தியிருக்கிறார்.அறிவும், அனுபவமும்  மனிதர்க்கு இருப்பதால் அதை ஆராய்ந்து தெளிய அறிவுறுத்துகிறார்.

காலமெல்லாம் மடையனாக இருந்து சாவதைவிட அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார்.from bad to the worse என்பது போல் கெட்டதிலிருந்து கழிசடைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

" என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன் நான்

கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து  ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே

#இதில் எளிமையும் இனிமையும் நிறைந்த 5000 பொன்மொழிகளில் இருந்து நான் ரசித்த சில கருத்துகள்

*மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது.என தலைவனை பற்றி கூறுகிறார்

* எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்

* எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது

* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது

* நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது

* வளைய முடியாத (கொள்கையுள்ள) கல்தூணில் (போட்டி என்னும்) பிளவு ஏற்பட்டால் பிறகு அபாயத்தை தான் எதிர் பார்க்க நேரிடும்

* நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்கள் கடவுள்களாக இருக்கின்றனவே தவிர தத்துவப்படி ஆன கடவுள் நமக்கு இல்லை

* கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல். தவற்றை உணரமுடியாத உனக்கு தலைவிதி

* கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது

* மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன

* உலகிலுள்ள மக்களில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் அவர்களெல்லாம் நம்மைப் போல் முட்டாள் தனமாக கடவுளை நம்புவதில்லை

*மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.அவன் கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.

* பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும் கலப்பு உண்மையை விட அதிகமான அதிருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையை மறைக்கப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சு கேட்பவர்களுக்கும் திருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். திருப்தியை உண்டாக்கும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது.

*ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

*முட்டாள்த்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும்.

*ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும்

*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.

*எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.

தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday 26 November 2018

கற்றதும் பெற்றதும்-60

கற்றதும் பெற்றதும்-60

*மணி

இயல்பாக இந்திய மக்களிடத்தில் எவ்வளவு அழுத்த பட்டாலும் அவ்வளவு சீக்கிரம் எதிர்வினையாற்ற தலைப்படாத பண்பு உண்டு. சார்ந்திருக்கும் அமைப்பு அழுத்தும்போது அதற்கு
எதிர்வினையாற்ற மட்டுமல்ல
அது அழுத்துகிறது என்ற உணர்வதையே கூட தவிர்க்க விரும்பும் மனம். இந்த எதிர்ப்புணர்வின் காரணமாக கைவசமிருக்கும் குறைந்தபட்ச பிடிமானத்தையும் நிம்மதியையும் கூட பறித்துவிடுமோ எனும் அச்சம்.
எதிர்ப்பு உருவாக்கும் சின்ன அசெளகரியத்தைக் கூட அது விரும்புவதில்லை.

-சமஸ்

#யாருடைய எலிகள் நாம்?

-சமஸ்

சமஸ் எழுத்துக்கள் யாவும் மேற்காண் வரிகள் போல சொற்களை கத்தி போல் கூர் தீட்டி, இறுதியில் நம் தவறினையும் அமைப்பின் தவறினையும் தெள்ளத் தெளிவாய் சுட்டிக் காட்டுவார்.ஒரு கட்டுரையாளனின் பணி வெறுமனே புள்ளி விபரங்களை அடுக்குவதோ வர்ண ஜாலை வார்த்தைகளை பயன்படுத்தி குற்றம் சாட்டுவதோ அல்ல.மாறாக அக்கட்டுரைக்கு காரணம் சொல்லி அதற்கு தீர்வினை வரலாற்று அடிப்படையில் அலசி ஆராய்ந்து, தன்னுடன் சேர்ந்து மக்களையும் சிந்திக்கச் செய்து அணுகச்  செய்வதாகும்.அதை தான் இப்புத்தகத்தின் கட்டுரை வழியே உணர்த்தியிருப்பார்.

#அரசியல்

ஒரு அரசியல் கட்டுரைகளை எழுத தேர்ந்த அனுபவமும்,ஆய்வு நோக்கிலான நுணுக்கமான பார்வையும் அவசியம்.வாசகர்களில் அரசியல் அறிவு சார்ந்த பலதரப்பட்டவர் இருப்பார்கள்.
அவ்வகையில் ஈழம் குறித்தும்,அன்றைய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை வரலாற்று பின்புலத்துடன் சொல்லப்படும்போது முழுமை பெறுகிறது.பொருத்தமான மேற்கோளை தரும்போது அக்கட்டுரை மேலும் சிறப்பு பெறும். போராட்டம் குறித்து பேசும்போது இரோம் ஷர்மிளா வரையறுப்பவை "தீவிரம்,உறுதி,சுயநலமற்ற நீடிப்புத்தன்மை,தொலைநோக்கு. மேலும் ஒரு விஷயத்தை சேர்த்துக் கொள்ளலாம்:கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம்.!

#ஆய்வு

ஒரு கட்டுரைக்கு முதன்மை தேவை கள ஆய்வு.காண்டாமிருகங்கள் பற்றிய குறிப்பில் இந்தியாவில் காண்டாமிருக எண்ணிக்கை அதிகம்.இதன் கொம்பிற்காக வேட்டையாடுவது அதிகம்.ஓட ஆரம்பித்தால் காடே புழுதி கிளம்பும்.2000 கி எடையில் 50கி.மீ வேகத்தில் ஓடும்.

இதை கொல்ல முதல் தோட்டா காலுக்கு,அடுத்து மார்புக்கு,பின் தலைக்கு என 3விதத்தில் கொல்லப்படுகிறது.பின் கோடரியால் கொம்பை வெட்டி எடுப்பது.என முழுக்க முழுக்க காண்டாமிருகத்தை விவரித்திருப்பார்

#கல்வி

"ஊழலுக்கு அடுத்தப்படியாக சமஸ் அதிகம் கவலைப்படுவது நம்முடைய கல்வி சூழல்பற்றி

கல்வி குறித்த பல்வேறு கட்டுரையில் கல்வியில் இவருக்கு இருக்கும் நாட்டம் புரிகிறது.கல்வியில் தனியார்மய கட்டுரையும்,அக்காலத்திய வகுப்பறை சூழல்களையும் விவரிக்கிறார்.ஜே.கே வின் தி ஸ்கூல் குறித்து எழுதும்போது

" சரியான கல்வியானது தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் போதே அதைவிட மிக முக்கியமான ஒன்றை சாதிக்க வேண்டும். அதாவது வாழ்வின் முழு பரிமாணத்தை உணரும்படி செய்ய வேண்டும் என்பார் ஜேகே. "போர்களற்ற அமைதியான உலகம் வேண்டுமென்றால் அது முதலில் போட்டிகளற்ற உலகமாக இருக்க வேண்டும்". ஒரு விளையாட்டு சுவாரசியமாக நீ விளையாட வேண்டும் என்றால் உன்னை எதிர்த்து ஆட ஆட்டக்காரன் வேண்டும் இதுதான் மாணவரிடம் அப்படி சொல்லி தரும் செய்தி.தி ஸ்கூல் முறையை பின்பற்ற சொல்கிறார்.(தமிழகத்தில் ஜே.கே வின் செயல்வழிக்கல்வி இருந்தது.ஆனால் அனைத்துப்பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

#காலங்காலமாக அதிகாரத்தின் சகல வன்முறைகளையும் சாதாரண மக்கள் மீது பிரயோகப்படுத்திய பழகிய அதிகார வர்க்கத்தை விட்டுவிடுவோம்.தன்னை சுற்றியுள்ளோர் மீது எவ்வளவு அநீதிகள் பிரயோகப்பட்டாலும் கொஞ்சமும்,
சுரணையற்று,தன் வழி,தன் போக்கு என்று கடந்து கொண்டிருக்கும் நம்முடைய சமூகத்தை,உங்களையும் என்னையும் நம் குடும்பங்களையும் நினைத்து பார்க்கச் சொல்லுங்கள். அமைதிக்கு நாம் கொடுக்கும் மதிப்பு என்ன?

#அன்றைய காலத்தில் நடைபெற்ற வாச்சாந்தி.காவிரி,முல்லைப்பெரியாறு,சாதி குறித்த பார்வை, தாக்கரேக்களின் இந்தியா போன்ற சமூக கட்டுரைகளையும் தமக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார். கட்டுரைக்கு தேவையான சுவாரயஸ்யம் சுருங்கச் சொல்லுதலே.இதை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் தாரக மந்திரமாகவே செய்து காட்டியுள்ளார்

#அ.முத்துலிங்கம் பகிர்ந்திருப்பார்.. ஒரு நல்ல பத்திரிக்கையின் இலக்கணம் என்ன என புகழ் பெற்ற பத்திரிக்கையாளரிடம் கேட்டதற்கு அவர் "எழுதுவது சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும், எழுத்தில் உண்மை வெளிப்பட வேண்டும் என்றாராம்.இவரின் கட்டுரையில் இக்கருத்துகள் மிளிரும்.

#ரசித்தவை

*நட்ட பயிர்களே அம்புகளாக சரப்படுக்கையில் படுத்திருப்பதாக குறிப்பிடுவார் லா.ச.ரா.இது தற்போது கலைஞருக்கு பொருந்துவதாக குறிப்பிட்டிருப்பார்.

*உண்மைகளைவிடவும் கனவுகள், கற்பனைகள், புனைவுகளுக்கே மரியாதை கொடுத்து பழகிவிட்டோம்.

*எல்லா தவறுகளையும் மூடி மறைக்க தேசபக்தி என்ற ஒரு சொல் போதுமானது.

*வரலாறு என்பது வேறல்ல;கடந்து கொண்டிருக்கும் இந்த கணமும்தான்

*வரலாறு திரும்பவும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது.முதல் முறை விபத்தாக, மறுமுறை சோகக்கதையாக-கார்ல் மார்க்ஸ்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கற்றதும் பெற்றதும்-59

கற்றதும் பெற்றதும்-59
*மணி

புதுமைப்பித்தன் கதைகள்-1

சின்ன வயசிலிருந்து புதுமைப்பித்தன் கதைகளெனில் இஷ்டம்.ஏனா தமிழ் துணைப்பாடத்தில் இவரின் கதை மட்டும் கொஞ்சப் பக்கம் இருக்கும்.அப்புறம் விபரம் தெரிந்து இவரின் 103 கதைகள் முழுமையாய் 2016 ல் வாசித்தபோது மகாகலைஞன் என உணர்ந்தேன்."கட்டிடங்களை உறங்க வைத்து விட்டு விழித்திகொண்டிருக்கும் வாட்ச்மேன் போல் இவரின் கதைகள் நம்மை உறங்காமல் அசை போட வைக்கும்.

அவ்வமயம் சில கதைகள் உங்கள் பார்வைக்கு

1)சாளரம்

இரவுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது நடக்கும் உரையாடலில் ஒட்டுமொத்த சமூகத்தையும் சாடியிருப்பார். உரையாடலில் பெஸன்ட் அம்மையார் அஞ்சலிக்கூட்டம் நடைபெறுவதை கடக்கும்போது மதத்தை பின்பற்றாத ஸ்திரி என்றும், அண்டை மனிதர் இறப்பு குறித்து பேசும்போது.. தாழ்ந்த ஜாதி பையன் ஒருவன் மேல தூண் கல் விழுந்து "பூட்டான்" னு சொல்வார் ஒருத்தர். குற்றால வெள்ளத்தில் ஆறு பிராமனாள் போய்ட்டாளாம் என மரியாதையா சொல்வார்.

இப்படியே பேச்சு விலைவாசி பக்கம் போய் கலைந்துபோவார்கள்.அன்றைய ஜாதிய சமூகத்தை மனிதன் இறப்பில் கூட ஜாதி பார்ப்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருப்பார்.

2)ஆற்றங்கரை பிள்ளையார்

ஆற்றில் வெள்ளம் வருவதால் பிள்ளையார் அடிக்கடி மூழ்கிடுவார்.வயதானவர் இதற்கு மனம் வருந்தி மேடைகட்டி அரச/வேப்ப மரத்தை நட்டுவைக்கிறார். மழையில் மரம் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்ததால் பிள்ளையாருக்கு நடுக்குவாதம் ஏற்பட்டது.பின் கிளை வெட்டியபிறகு இன்னும் இடைஞ்சலானாது.ஒரு புயலில் மரமிரண்டும் பிள்ளையார் மீது சாய சாமியா?மரமானு? விவாதம் நடக்கும்.
இதுபத்தி சுவையா சொல்லி முடித்திருப்பார்

3)சங்குத்தேவன் தர்மம்

பல முறை இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. முறுக்கு பாட்டி முத்தாட்சி தன் மகள் திருமணத்திற்கு கொல்லனிடம் நகை செய்து வாங்கிகொண்டு திரும்பும்போது பொழுது சாய்ந்துவிடுகிறது.இரவில் பயம்.காட்டு வழியில் சங்குத்தேவன் களவாடி விடுவான் என பயம்.தூரத்தில் தெரியும் கரிய உருவத்தை கூப்பிட்டு வழித்துணைக்கு தன் கஷ்டத்தையும்,மகள் திருமணத்தை சொல்லிச் செல்கிறாள்.ஊர் வந்தவுடன் விடைபெறும் போது வந்தவன் நூறு ரூபாய் தந்து,பேரனுக்கு என் பெயர் வை எனச் சொல்லித்திரும்புகிறான்.

பெயர் கேட்கிறாள் பாட்டி..சங்குத்தேவன் என்கிறான்.

4)பொன்னகரம்

பலராலும் மேற்கொள் சொல்லப்படும் கதை.ஒன்றரை பக்கத்தில் ஒரு புரட்சியை சொல்லியிருப்பார்.
அம்மாளுவின் கண்வன் முருகேசன் ஊதாரி.ஒரு விபத்தில் குதிரை வண்டியுடன் அடிபட்டு வீட்டில் கொண்டுவந்து போட்டனர்.
அம்மாளுவிற்கு கூலிபோட இரு நாளாகும். தண்ணீ எடுக்கச் செல்லும்போது அம்மாளுவின் மேல் கண்ணாய் இருந்த சந்திரனுடன் இருளில் மறைகிறாள்.முக்கால் ரூபாய் சம்பாதுத்துவிட்டாள்.ஆம். புருசனுக்கு பால் கஞ்சி வார்க்கத்தான்.

என்னமோ கற்பு,கற்பு என கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்!

5)திருக்குறள் செய்த திருக்கூத்து

துப்பறியும் ரகசியப் போலீஸ் வித்தல்ராவ்..துப்பறியச் செல்லுமிடத்தில் நோட்டுப்புக்கிலிருந்து கிழித்து எறியப்பட்ட காகிதத்தில் பிரித்துப்படிக்கிறான்.அதில்

துப்பார்க்கு துப்பாய் துப்பாக்கி
துப்பர்க்கு துப்பாய் தூ மழை

இதை ஒரு சதித்திட்டமென நினைத்து புலனாய்வு செய்து எப்படி அவமானப்பட்டார் என்பதுதான் கதை

6)கட்டில் பேசுகிறது

இரண்டரை பக்க கதை.அதை சுவாரஸ்யமுடன் சொல்வது சவால்தான்.அதுதான் புதுமைப்பித்தன்.கவர்மென்ட் ஆஸ்பத்திரி கட்டில் நோயாளியுடன் பேசுவது தான் கதை.இதுவரை இறந்த்வர்கள் லிஸ்ட்டை வாசித்து பீதி கிளப்புகிறது.இறுதியில் டாக்டரின் பூட்ஸ் சத்தம் கேட்பதுடன் முடித்திருப்பார்.டாக்டர் மீது மரண பயம் வருவதை நம்மையும் உணர வைத்திருப்பார்

7)மோட்சம்

ராமு எனும் 8வயசு பையன் பள்ளியில் லேட் ஆக சென்றதால் அடிவாங்குகிறான்.பூகோள பாடம் சொல்லத் தெரியாததால் அடிவாங்குகிறான்.வெளியே உட்கார்ந்து படிக்கும்போது தூக்கத்தில் இவன் வாத்தியாரை அடிப்பது போல் கதை

8)உணர்ச்சியின் அடிமைகள்

தம்பதியாய் இருக்கும்போது..
மகன் பிறந்த போது..
பேரனுடன் விளையாடும்போது.. என மூன்று வயதில் இருவரின் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளை எழுதியிருப்பார்.

9)நிகும்பலை

உண்மையில் இது மனதிற்கு மிக நெருக்கமான கதை.பரிட்சைக்கு படிக்கும் மாணவர்களை பற்றிய கதை.பி.ஏ பரிட்சைக்கு தயாராகும் நால்வரும் படிக்கும்போது ஏற்படும் சுவாரஸ்யம் தான் கதை.பரிட்சை முடிந்து பெல் அடிக்கும்போது போர் முடிந்தது நாளை வா என விடுவிப்பது போல் தேர்வறை இருக்கிறதாக எழுதியீருப்பார்.

10) நியாயம்

தேவ இரக்கம் நாடார்.பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட்.காயம்பட்ட குதிரையை வைத்து வண்டி இழுக்க வைத்த குற்றத்திற்கு சொள்ளமுத்து வை தண்டிப்பார் எவ்வளவு கெஞ்சியும் மன்னிக்க மாட்டார். இரவு கர்த்தரிடம் தாம் செய்ததற்கு பாவமன்னிப்பு கேட்பது போல் முடித்திருப்பார்.

-தொடரும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கற்றதும் பெற்றதும்-58

கற்றதும் பெற்றதும்-58
*மணி

ஒரு தெருவைக் கடப்பது
அத்தனை எளிதல்ல;
ஒரு தெருவைக் கடப்பது
சமயங்களில் ஒரு
வாழ்வைக் கடப்பது போல

-சுந்தர்ஜி

#தெருவென்று எதனைச் சொல்வீர்?

-தஞ்சாவூர்க் கவிராயர்

தஞ்சாவூர் கவிராயர் ஞாயிறு தோறும் தி இந்துவில் எழுதியவர். தஞ்சை மண்ணைப்பற்றி சிலாகித்து எழுதுபவர்.இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் அம்மக்களின் வாழ்வியலை படம்பிடித்து சொல்லியுள்ளார். "எல்லா பேருந்து பயணங்களிலும் ஜன்னல் வழியே தெரியும் ஊரில் ஒரு நிமிடம் வாழ்ந்துவிட்ட போவதாக ஜெயமோகன் எழுதியிருப்பார்.அதுபோல் இக்கட்டுரை வாசிக்கும்போதெல்லாம் நம் ஊர் நினைவுகளும் வந்து செல்லும்

#தெருவென்று எதனைச் சொல்வீர்

நகர்மயமாதலுக்கு முதலில் பலியாவது மரங்களே.ஒவ்வொரு தெருவின் அடையாளத்தையும் இவை மாற்றுகின்றன.வேப்பமரம் இருக்கிற வீடு,முருங்கைமர வீடு என அடைமொழி இட்டு அழைத்த காலம் உண்டு.இன்றைய யதார்த்ததை பதிவு செய்கிறார்.

/தெருக்கள் சுருங்கி அடுக்குமாடி ஆகிவிட்டன.அழைப்பு மணி ஓசை உள்ளிருப்போரைக் கலவரப்படுத்துகிறது யாரென/ திண்ணையில் உட்கார்ந்தபடி தெருவைப் பார்த்தபடி ஒரு வாழ்நாளை கழித்துவிடலாம் என்பார் தி.ஜா.அதன்படி இத்தெரு கட்டுரை படித்தபடி அன்றைய நாட்களை அசைபோடலாம்.

#புகைப்படம்

"கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துப் போவதற்கு கால இயந்திரம் தேவையில்லை.ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படம் போதும் என்பார் எஸ்.ரா.அதுபோல் பால்யகால புகைப்படமும்,

கருப்பு வெள்ளையில் நம் முன்னோர்களை பார்க்கும்போது அழகான நொடிகள் சேமிக்கப்பட்ட உண்டியலை திறந்துபார்ப்பது போல் இக்கட்டுரை இருந்தது.

#மனதில் நிற்கும் ரயில்கள்

"இன்றும் கூட ரயில் நிற்காது ஊர்களில் அம்மக்கள் ரயிலை வியந்துபார்த்து கையசைப்பார்கள்". அப்படி இதில் ரயில் பயண நினைவை பகிர்கிறார்.ரயிலை ரசிப்பவர்கள் என்றும் குழந்தை மனம் கொண்டவர்கள்.ரயிலை மையப்படுத்தி ஜே.கே எழுதிய பகல்நேர பாசஞ்சர் வண்டி மற்றும் வண்ணநிலவனின் கதைகளும் வருகிறது.

#புத்தகங்களை தேடி

புத்தகத்தை தேடிய கட்டுரையில் தான் தேடி அழைந்த புத்தகத்தையும் தனக்கு குருவாய் இருந்த தஞ்சை பிரகாஷ் பற்றியும் கூறுகிறார்.அக்காலத்தில் புத்தகத்தை தேடி அலைவது கடினமானது.அப்போதுதான் நூலகம்.பிரபலமானது.ஒவ்வொருவரும் திருப்பித்தரும் புத்தகத்தை வாங்க போட்டியே இருக்கும்.இன்று புத்தகம் பற்றி பேசினால் எனக்கு குடுனு சொல்வாங்க,இல்ல எனக்கு புக் பி.டி எப் குடு நானா அதுவானு பார்க்கிறேங்கிற ரேஞ்சிலதான் இருக்கும்.இதுவரை மின்னூலை படித்து விட்டு அதுகுறித்து எழுதியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.சேகரித்து வைத்திருப்பதை எப்போது பயன்படுத்தப் போகிறோமோ அப்போதுதான் அது பலம் தரும்

#பேச்சரவம் கேட்டிலையோ

இக்கட்டுரையில் ஒவ்வொரு பறவைக்குமான ஒலிகளை காரணத்துடன் விளக்கியுள்ளார். எழுத்தாளர் கு.ப.ரா. "பரத்வாஜம்' என்ற குருவியின் சமஸ்கிருத பெயரை 'கரிச்சான்' என தமிழில் மாற்றினார்.அவரின் சீடரான நாராயணசாமி அவர் மீதுள்ள மதிப்பால் 'கரிச்சான்குஞ்சு' என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.மனிதர்களின் பொருளற்ற புலம்பலை விட மகத்தானது பறவையின் குரல்கள் என்கிறார்

#காந்தி குறித்த இந்தியாவிலேயே முதன் முதலில் டாக்குமென்ரி படம் எடுத்த தமிழரும் பயணக்கட்டுரையின் முன்னோடியுமான ஏ.கே.செட்டியாரை பற்றி கூறுகிறார்.ஆப்ரிக்காவுக்கே சென்று டால்ஸ்டாய் பண்ணை குறித்து படம் எடுத்துள்ளார்.

#பானுமதி குறித்த நீண்ட கட்டுரையில் ஒரு இடத்தில் மலைக்கள்ளன் படபிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் ரேகையை பார்த்த பானுமதி "பின்னாளில் பெரும் புகழ் வரும் சினிமாவில் அல்ல என்று சொன்னதை எம்.ஜி.ஆர் ஒரு மேடையில் சொன்னாராம்.

பானுமதி சோதிடம் பார்ப்பதில் சிறந்தவர்.

26வயதுள்ள ஒருவனின் ரேகையை பார்த்து ஒன்றும் சொல்லவில்லையாம்.பின் சில நாட்களில் அவன் இறந்ததை அறிந்து " எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதைப் போல் முட்டாள் தனம் என்ன இருக்க முடியும் என தோன்றி, அதற்குப் பிறகு கைரேகை பார்ப்பது நிறுத்தி விட்டதாக சொன்னார்.

இதுபோல் தகவல்களும் செய்திகளும் உள்ளன.ஒவ்வொரு கட்டுரை ஆரம்பத்திலும் ரூமியின் வரிகளுடன் ஆரம்பித்திருப்பது சிறப்பு

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு