Monday 31 October 2022

ப்ராய்டு


ப்ராய்டு

மனிதனுக்கு, நான் தான் பெரியவன் என்னும் எண்ணம் எப்போதும் உண்டு. மனித இனம் ஒரு narcissist! இந்த human narcissism னால் விளைந்தது தான் மதம். மதம் எப்போதும் இந்த human narcissism க்கு தூபம் போட்டுக் கொண்டே இருக்கும்.

நீ தான் பெரியவன், உனக்காக தான் இந்த உலகமே படைக்கப்பட்டது, கடவுள் தன் சாயலில் உன்னை படைத்து இருக்கிறார், அவருக்கு பிடித்தமானவன் நீ தான், நீ வேண்டிகிட்டா பூகம்பம் வரும், அல்லது வந்துகிட்டு இருக்கிற புயல் நின்னுடும் என்றெல்லாம் மதம் human narcissism ஐ வளர்க்கிறது.

ஆனா அறிவியல் என்ன பண்ணுது? தன்னுடைய கண்டுபிடிப்புகளால் மனிதன் முகத்திலேயே அறைகிறது. இப்படி மனிதனின் ego மேல் ஒரே போடாக போட்ட 3 விஷயங்களை Freud, "three blows to human narcissism at the hand of science" என்கிறார்.

1. முதல் அடி, பூமியை சுற்றி தான் சூரியன் சந்திரன் எல்லாம் சுற்றுகிறது. நாம் தான் இந்த அண்டத்தின் மையம் என்ற ego வை பிய்த்து எறிந்தது Copernican Revolution. cosmological blow!

2. இரண்டாவது, கடவுளின் சாயலில் நாம் அப்படியே மனிதனாகவே உருவமெடுத்தோம் என்ற நினைப்பில் வெந்நீரை ஊற்றியது Darwin னின் பரிணாம கொள்கை. Darwinian Revolution. மனிதனும் ஒரு விலங்கே என்றது biological blow!

3. Freudian Revolution, நம்முடைய செயல்கள் எல்லாம், நம்முடைய thinking எல்லாம், நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. conscious mind வேறு unconscious mind வேறு. "The ego is not master in its own house."

உங்கள் ஆழ் மனதில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் id தான் உங்களை ஆட்டுவிக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவரின்றி ஒரு அணுவும் அசையாது என்று உங்கள் conscious mind சொன்னால் அதன் பின்னணியில் எதிர்காலத்தை பற்றிய பயமும், insecurity, unknown கிட்ட இருந்து தன்னை தானே தற்காத்து கொள்ள உங்கள் மூளை செய்யும் defense போன்ற unconscious mind இன் செயல்கள் தான் காரணம் என்கிறார். இது psychological blow!

-படித்தது

சுகந்தி


எனக்கும் உனக்கும்
எப்படித் தவிக்கவென
சொல்லிக் கொடுத்த மீனின் உயிர்
குழம்பாகிப் போனது சட்டியில்

-சுகந்தி சுப்பிரமணியன்

info


விடுதலை போராட்டத்தின் போதே மொழிவழி மாநிலம் அமைக்க வேண்டுமெனப் போராடி பிரிட்டிஷ் ஆட்சியிலேயே 1936ல் முதன் முறையாக ஒடிசா மொழி வழி மாநிலமாய் உருவானது

#info

Sunday 30 October 2022

வாலி


பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்

-வாலி

ராஜாஜி


1952 ல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாகப் பொறுப்பேற்றார். அப்போது அவருக்காக vauxhall எனும் மோட்டார் கார் வாங்கப்பட்டது.ஆர்.டி.ஓ ஆபிசில் புதிய சீரியல் எண் தொடங்க இருந்த தருணம். முதல்வர் என்பதால் 1 எனும் எண் ஒதுக்கினர்.

ராஜாஜி உடனே நான்கு இலக்கம் இருந்தால் நல்லது எனக் கூறி 0001 என எழுதக் கூறினார்.இந்த நான்கு இலக்க எண் நடைமுறைக்கு வந்தது

நாட்டார்


நாட்டார் என்ற சொல் மொழிபெயர்ப்பு சொல்.Folklore என்ற சொல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் தெ.லூர்து நாட்டார் வழக்காற்றியல் என எண்பதுகளில் மொழிபெயர்த்தார். அது மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லாயிற்று

-அ.கா.பெருமாள் நூலிலிருந்து

Saturday 29 October 2022

அரிஸ்டாட்டில்


'சரியான இடத்தில், 
சரியான நபருக்கு எதிராக, சரியான விதத்தில், 
சரியான நேரத்தில், 
சரியான கால அளவில் கோபப்படும் மனிதனை நாங்கள் போற்றுகின்றோம்.

-அரிஸ்டாட்டில்

பாப்லோ நெரூதா


'எனக்குச் சொற்களை மிகவும் பிடிக்கும், 

அறியப்படாத ஏதோவொரு உலகிலிருந்து அவை தோன்றுகின்றன, 

வெள்ளி மீன்களைப் போல துள்ளிக்கொண்டிருக்கக்கூடியதும், 

கூழாங்கற்களைப் போல வடிவேறியதுமான சொற்களைத் தேடி ஓடுகின்றேன்,

ஒரு பழத்தைப் போல அவற்றைத் துடைத்துத் தோல் உரித்துக் கடித்துத் தின்பேன்,

கடினமான சொற்களை உருக்கிக் குடிப்பேன், 

பேராசையுடன் சொற் களைப் பிடித்து என் கவிதையில் சேகரித்து வைப்பேன்,

பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, சொற்களால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

-பாப்லோ நெரூதா

Friday 28 October 2022

தலாய்லாமா


நாம் பேசும் போது, ஏற்கனவே நமக்குத் தெரிந்ததை தான் திரும்ப கூறுகிறோம். நாம் கேட்கும் போது, நாம் அறியாத புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

- தலாய்லாமா.

Thursday 27 October 2022

வில் ஸ்மித்(Pursuit of happiness


எனக்குத் தெரியாதுன்னா தெரியாதுன்னு சொல்லுவேன். ஆனா அதை தெரிஞ்சுக்கனும்னா தலையை அடகு வச்சாவது எப்படியாவது அதைக் கத்துக்குவேன். இதுதான் தகுதி

-வில் ஸ்மித்
(Pursuit of happiness)

கர்ட் லெவின்


இரண்டாம் உலகப் போருக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது.வீரத்தையும் துணிவையும் உயரமும் அகன்ற மார்பும் காட்டும். மனவலிமையை காட்டுமா?ஆகவே ஆட்கள் தேர்வுக்கு உளவியல் ஆய்வுகளை சேர்த்தார்கள்.சிறுகுழுவில் எப்படி இயங்குவானோ அப்படித்தான் பெரிய சமூகத்தில் இயங்குவான் எனும் சித்தாந்தம்.

போர் முடிந்ததும் நிறுவனங்கள் ஆட்கள் தேர்வில் இதை முக்கிய கருவியாக எடுத்துக் கொண்டு மனித வளப் பயிற்சிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டன. குழுவிவாதம்,(Group discussion) குழுத்தேர்வு உட்பட

-கர்ட் லெவின்

வெள்ளூர் ராஜா


கடைசிச் சந்திப்பை
முடித்துத் திரும்புமொருவனின்
வெடித்து அழும் கண்ணீரை
மறைக்கப் பொழிகிறது பேய்மழை

எல்லாருக்கும் பெய்யும் மழைதானென்றாலும்
எல்லாருக்கும் ஒன்றுபோலில்லை!

- வெள்ளூர் ராஜா

Wednesday 26 October 2022

பிச்சைக்காரன்


மிகச்சிறந்த கவிஞர் ஒருவரின் கவிதை நூலுக்கு வெங்கட சாமி நாதனிடம் முன்னுரை கேட்டனர்..
அவர் இப்படி எழுதினார்.

""""இந்த கவிஞர் இதுவரை ஒரு நல்ல கவிதைகூட எழுதவில்லை என கருதுகிறேன்... கொஞ்சம் முயன்றால் என்றாவது ஒரு நாள் இவர் நல்ல கவிதை எழுதக்கூடும் என நம்புகிறேன்.. இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ஜனாதிபதியாகும் த்குதி உண்டு.. எல்லோருமே தான் என்றாவது ஒரு நாள் ஜனாதிபதி ஆகி விடலாம் என நம்புவதுபோன்றது இது.. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்..."""""

இப்படி அவர் எழுதியது அவர்  நேர்மையை காட்டுகிறது... இந்த கருத்தை தன் புத்தகத்தில் அப்படியெ வெளியிட்டது அந்த கவிஞரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது

இரு எதிர் தரப்புகளின் ஆளுமை பண்புகள் ரசிக்கும் படி இருக்கின்றன அல்லவா

அந்தக் கவிஞர் மு மேத்தா. புத்தகம் கண்ணீர் பூக்கள்

ஷூவாங் ட்சு


மனிதர்களுடன் பழகும்போது உன்னிடம் உள்ள சிறப்புகளை நம்பாதே. மறைந்தே இரு

-ஷூவாங் ட்சு

தி.முருகன்


ஒரு கேள்விக்கான விடையைத் தேடும்போது, புதிதாகப் பல கேள்விக்குறிகள் நம் முன்பாக அணிவகுத்து வந்து நிற்கும்.

-தி.முருகன்

Tuesday 25 October 2022

ஆங்கிலப்பழமொழி


எங்கெல்லாம் ஒரு மந்தை இருக்கிறதோ அங்கெல்லாம் ஓர் கருப்பு ஆடு கட்டாயம் இருக்கும்

-ஆங்கிலப்பழமொழி

ஓஷோ


ஒரு உண்மையான குரு உங்களுக்கு விதிமுறைகளை தர மாட்டார்.கண்களைத் தருவார்.பாதையைக் காட்ட மாட்டார்.மாறாக உங்களிடம் ஒரு விளக்கைத் தருவார்.'இந்த விளக்கை எடுத்துக்கொண்டு உன் பாதையில் போ.இது உன் பாதையை உனக்குக் காட்டும்'. என்று சொல்லுவார்

-ஓஷோ

பகத்சிங்


சமரசம் ஒரு தேவையான ஆயுதம்;நம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வலுப்படுத்திக் கொள்ள, அழிக்க நினைக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க, சமரசம் தேவைப்படுகின்றது

-பகத்சிங்

Monday 24 October 2022

டிரியன் லானிஸ்டர்.


மக்கள் உண்மைக்கானப் பெரும்பசி கொண்டவர்களாகத்  தம்மைப் பிரகடனப்படுத்துவார்கள். ஆனால் உண்மை பந்தி விரிக்கப்படும்போது அதன் சுவையைப் பெரிதும் விரும்பமாட்டார்கள். 

- டிரியன் லானிஸ்டர்.

Sunday 23 October 2022

சுந்தர ராமசாமி


“மௌனம் உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக்கொள்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகின்றன. சப்பி உருக்குலைத்து விடுகின்றன. சரியான கேள்விகள் அபத்தமான விடைகளின் குவியல்களில் அகப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய்ப் போய்விட்டன.”

-சுந்தர ராமசாமி

Saturday 22 October 2022

மைசூர் பாக்


மைசூர்  பாக் என்பது  மைசூரில்  உள்ள  ஒரு  கடையின்  பிரத்யேக  தயாரிப்பு  ஆகும்.   அரசருக்காக  செய்யப்பட்ட  அந்த  இனிப்பு  பொதுமக்களுக்கும் கிடைத்தபோது   செம  வரவேற்பு.

காப்புரிமை  பற்றிய  விழிப்புணர்வு  இன்மையால்  அனைவருமே   அதை  செய்ய  ஆரம்பித்து   மைசூர்  பாக் என்றாலே  நம்மை  அலற வைத்து விட்டனர்.    சுத்தியலை  வைத்து  உடைத்துதான்  அதை  சாப்பிட  முடியும்

அப்போது  ஒரு  ட்விஸ்ட்

தரமான  நெய்யில்  மிருதுவான  தன்மையுடன் நாங்கள்  மைசூர்  பாக்  செய்கிறோம் என  சிலர்  களத்தில்  இறங்கி  பெரிய  வெற்றி பெற்றனர்

மைசூர்  பாகின்  நிறமோ   அதன்  பிரத்யேக  அடையாளமான நுண்துளைகளோ  இவற்றில்  இரா.

உண்மையில்  இவற்றை   மைசூர்பா  என    சொல்வதே  தவறு

கன்னட  திரைப்படங்கள்   பிரபலமானது  போல  ஒரிஜினல்  மைசூர்பா  பிரபலமடைய  ஆழ்ந்த  வாழ்த்துகள்

-படித்தது

English is funny



இரா.சிவசித்து எழுதிய English is funny language கதை சுருக்கம்

90களில் கிராமத்து பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் குறித்து தான் கதை முழுவதும்.ஓவிய ஆசிரியரின் ஸ்போக்கன் இங்கிலீசை குருட்டு மனப்பாடம் செய்வதில் கதை துவங்குகிறது.come வா,dont come- வராதே என சினிமா வசனம் போல் ஒப்புவிக்க வேண்டும்.

பூச்சு – பொட்டுக்களை புடிக்க விருட்டென்று நீளும் பல்லி நாக்கைப் போல அசுர வேகத்தில் நீளும் ஓவிய ஆசிரியர் கை அகப்பட்டவன் காதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும். அகப்பட்ட பயல் அந்த வசனத்தை மறுபடி அழ வேண்டும். சொல்லத் தெரியவில்லையென்றால் அன்றைக்கு கூத்து அவனை வைத்துத்தான்.ஏ க்ளாசுக்கு ஒண்டிக் குடித்தனம் போகும் இன்னும் பயம் அதிகமாகும்.ஏன்னா அது இங்கிலீஸ் மீடியம்.

வேப்பமரத்தடியில் எமகா பைக் இல்லையெனில் சந்தோசம் குழந்தைகளுக்கு.இங்கிலீஸ், ஓவிய பீரியடில் இருந்து காப்பாத்துனு வேண்டாத குழந்தைகளே இல்லை.
சில நாளில் பரிட்சை வந்தது. மொழிபெயர்ப்பு படித்தால் ஆச்சர்யம்.
பேப்பரை அனைவர் முன்னிலையில் திருத்தினார் ஆசிரியர்.

"Blood Is thicker then Water” ஐ “தண்ணியை விட ரெத்தம் கட்டியானது”

East or West home is best” என்பதற்கு “கிழக்கு, மேற்கில் வீடு இருந்தால் சிறந்தது என எழுதியிருந்தனர்.

அடியில் இருந்த மொசக்கித்தரை குளிர்ச்சி டவுசரைத் தாண்டி குளிரூட்டியது அனைவருக்கும். ரோல்நெம்பர் 
305’ எவன்டா?”

வேலு வாத்தியார் சத்தம் கேட்டதுமே முருகனுக்கு கால்கள் சூடேறி முதுகு காந்தியது. ஒவ்வொரு அடியும் நெஞ்சுக் கூட்டுக்குள் புடிக்கும்.முப்பது பேர அடிச்சும் வாத்தியார் அயர மாட்டீங்கிறாரே என  அங்கலாய்ப்பு வேற.

இப்படியாக யதார்த்த நடையில் வசவுகளும் வார்த்தைகளுமாய் ராஜபாளையம் வட்டார நடையில் இருந்தது.90 களில் ஆங்கிலம் படித்தவர்க்கு மட்டும் தெரியும் ஆங்கிலம் எவ்வளவு கடினம் என்று.
படிக்கும் போது நாம் எழுதிய நோட் மேக்கிங்கில் rough copy  அடித்துவிட்டது fair copy எழுதியது.
டெவலபிங் ஹின்ட்ஸில் எல்லா கோட்டையும் எடுத்துவிட்டு அப்பிடியே எழுதியது அனைத்தும் மனக்கண் முன் ஓடியது.அது ஒரு கனாக்காலம்தான்

-மணிகண்டபிரபு

குறைவானதையும் அதிகமானதையும் தவிர்த்துவிடு. குறைவானதும் அதிகமானதும் துன்பத்திற்கு அழைத்துச் செல்பவை. மிதமானது மட்டும்தான் அமைதிக்கான வழி. அந்த அமைதி மட்டும்தான் விடுதலையை நோக்கி செல்கிறது. எப்போதும் எதிலும் மிதமானதை தேர்ந்தெடு. - புத்தர்

அதே முகம்தான்.... அம்மா வீட்டுக் கண்ணாடியில் மட்டும்அழகாய்த் தெரியும் பெண்களுக்கு..!!-பாஸ்கர்

சுப்ரமணிய சிவம்


''ஒன்றையும் கேட்காதே; கைம்மாறாக ஒன்றை யும் விரும்பாதே

;. நீ கொடுக்க வேண்டியதைக் கொடு; அது உன்னிடத்தில் திரும்பி வரும். 

ஆனால் இப்பொழுது அதைப்பற்றி நினைக்காதே. 

அஃது ஆயிரம் மடங்கு அதிகரித்துத் திரும்பி வரும்.-ஆனால் கவனம் அதன்மேல் இருக்கக் கூடாது. 

ஆயினும் கொடுக்கும் சக்தி உனக் கிருக்கட்டும். கொடுக்க மாத்திரம் செய். ஜீவிய காலம் முழுமையும் ஈகையே என்று அறிந்து கொள்

. நீ கொடுக்கும்படி இயற்கை உன்னைப் பலவந்தம் செய்யும். ஆகையால் மனப்பூர்வ மாய்க் கொடு."

சுப்பிரமணிய சிவம்

நேசமித்ரன்


உன் சொற்களால் ஆன சுவர்
நடுவே ஒரு மகிழ்ச்சியான
நூலகனைப் போல அமர்ந்திருக்கிறது இந்நாள். 

-நேசமித்ரன்

கிம் சுன் சூ


பார்த்தபடியே இருக்க விரும்புகிறோம்
என்றுமே மறக்கவியலாதபடி"
  
-கிம் சுன் சூ

Friday 21 October 2022

ஓஷோ


ஓஷோவின் குட்டிக்கதைகள் 
 
கணத்துக்கு கணம் ரசித்தல் 
***** 
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை. 
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். 
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார். 
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்:

 ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார். 
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர். 
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.

 அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. 
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்! 
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

 இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ. 
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்! 
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர். 
 
 
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்

பிச்சைக்காரன் பதிவு


நான்  கடவுள்  படத்தில்  ஒரு பிச்சைக்கார  பையன்  ஆங்கில அறிவுடனும் உலக ஞானத்துடனும் ஜாலியாக பேசுபவனாகவும் இருப்பான்.
ஒரு  காட்சியில்
−அம்பானி  மாதிரி  தொழிலதிபர்  ஆகி  நடிகையை  கல்யாணம்  செய்யணும் என்பான்

− அம்பானினா யாரு என்பான் சக பிச்சை

− ப்ச்   செல்ஃபோன்  விக்கிறவய்ங்கடா  என்பான் அலட்சியமாக

இந்த  கேரக்டரின்  முழு வடிவம்  ஏழாம் உலகம்  நாவலில்  இருக்கும்.


அந்த  நாவலில்   தனது  மிகப்பெரிய  சொத்தாக  கருதி  பழைய  ஆங்கில நாளிதழ்களை  ஒரு  மூட்டையில்  கட்டி  சேகரித்து  வைத்திருப்பான்  அவன்.   ஆங்கில  சொற்கள்   வாக்கிய  அமைப்புகள்  என  தெரிந்து  கொண்டு  அசத்துவான்

அந்த  தனது   சொத்தையே   ஒரு  கட்டத்தில்  தியாகம்  செய்ய  முன்வருவான்

தமது  சேகரிப்புகளை  ஒன்று  திரட்டி  சக  பிச்சைக்காரன்  ஒருவனை  பெரிய ஆடம்பர   உணவகத்துக்கு  அனுப்பி  அந்த  அனுபவத்தை  தெரிந்து  கொள்ள விரும்புவார்கள்

அதற்கு  கொஞ்சம்  காசு  பத்தாததால்  தனது  சொத்தை  விற்க  முன்வருவான்.  அவனது  அடையாளமே  அதுதான்  என்பதால்   பிறர்  அதை  மறுத்துவிடுவார்கள்

காசே  இல்லை  என்றாலும்  ஒருவரை  ஒருவர்  போற்றும்  அக்காட்சி  சிறப்பானது

நாளிதழ்கள்   நம்  அன்றாட  வாழ்வில்  வகிக்கும்  இடம்  வியப்புக்கு  உரியது

ஆட்சியையே  கவிழ்க்கும்  ஆற்றல்  படைத்த  நாளிதழை  சர்வசாதாரணமாக  சப்பாத்தி  பூரிக்கான  மாவு உருண்டையை  வைப்பதற்கு  பயன்படுத்துவார்கள்

நுழைத்தேர்வுகளுக்கு  படிப்போருக்கும்   டீக்கடை  பஜ்ஜி  மடிப்பதற்கும்  தோழன்

−  ஆங்கிலம்  கற்கவும், உதவும்   பிளாட்பாரத்தில்  படுக்கவும்  உதவும்

-படித்தது

மைக்ரோஸ்கோபிக்


இந்த படம் என்ன தெரியுமா?

மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக ட்ரென்டாகி வருகிறது. 

அதாவது சிறிய உயிரினங்களை கேமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி.

இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் எறும்பின் முகத்தைதான் புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஐந்து மடங்கு பெரிதாக்கப்பட்ட எறும்பின் முகம். 

இதில் கண்கள், மூக்கு, கூர்மையான பற்களை கொண்ட வாய் என அனைத்தையும் தெளிவாக பார்க்க முடிகிறது.

இவையனைத்தும் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன்களின் உருவங்களை ஒத்து உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

இந்த மனம் மனம்தான் எவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கிறது! தவறுகளிலிருந்து கற்றுகொள்ள மாட்டேன் என்று எவ்வளவு விடாப்பிடியாக அடம் பிடிக்கிறது-ஏஞ்சலினா கிரிம்கே

எல்லா நாட்டு கப்பல்களுமே கிரே கலர்


எல்லா நாட்டு கடற்படை கப்பல்களுமே க்ரே நிறத்தில் இருப்பது ஏன்?

கடல் நீரின் நிறத்தை அனுசரிக்கும் பொருட்டு .

ராணுவ வீரர்களின் உடுப்பு நிறம் கானகத்தில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் அமைக்கப்பட்டது போல .

மற்றொன்று ,தவறுதலாக பயணிகள் கப்பல் ,அல்லது சரக்கு கப்பலை போரில் குண்டுபோட்டு தகர்த்து விடக்கூடாதல்லவா ?

அதனால் தான் .

Thursday 20 October 2022

படித்தது


பெருங்கடலாய்
விரிந்து கிடக்கிறது
வெற்றுத்தாளின் ஆழ்பரப்பு.
மொழியால் கடக்கிறேன் நான்.
பேரமைதியால் கடக்கிறது சிற்றெறும்பு.

-படித்தது

-சுந்தர ராமசாமி


மனித இதயங்களில் தான் எவ்வளவு துக்கம் உறைந்து கிடக்கிறது. அத்துக்கங்களைக் கொட்ட அனுதாபத்தோடு ஆழ்ந்து கேட்கும் முகங்களைத் தேடி அலைகிறார்கள். சுற்றத்திடமும் பந்தங்களிடத்திலும்தான் மனிதன் தன் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வான் என்றும், அவர்களிடம் தான் வெளிப்படையாகப் பேசுவான் என்றும் நம்புகிறோம். அல்ல. மூன்றாம் மனிதனிடமே, முன்பின் தெரியாதவர்களிடமே தன்னைப்பற்றி, தான் விரும்பும் விதத்தில் கூறி, தனது விருப்பங்களுக்கு ஏற்ப தன்னை முன்வைத்து,"எனக்கு இந்த கொடுமை நிகழலாமா?" என்று மனிதனால் கேட்க முடியும்.
                                            
                                            -சுந்தர ராமசாமி

கல்யாண்ஜி


தேர்ந்தெடுத்துக் கொள்ள
முடியாத வாழ்வு
வரித்துக் கொள்ள 
முடியாத மனிதர்கள்
இவற்றுக்கிடையில்
எப்போதாவது ஒரு இறகு வந்து
என் முற்றத்தில் விழுகிறது

-கல்யாண்ஜி

Wednesday 19 October 2022

மெட்ஃபார்மின்


மெட்ஃபார்மின் (Metformin) - 100 ஆண்டு கதை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது கண்டறிந்து நம்மை "நீரிழிவு நோயாளி" என முடிவுகட்டியதும் மருத்துவரால் First line therapy என்று முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்து இந்த மெட்ஃபார்மின் தான். 

1920களிலேயே மெட்ஃபார்மின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்று ஆய்வக சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் 1950கள் வரையிலும் சுமார் 30 ஆண்டுகளாக அதனை மருந்தாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. 

1940களில் மலேரியாவிற்கும் இன்ப்ளூயன்ஸாவிற்கும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியின் இறுதிக்கட்டமான  மனிதப்பரிசோதனையில், மெட்ஃபார்மின் குறிப்பிடத்தக்க அளவில் இரத்த சர்க்கரை அளவை குறைத்திருப்பது கண்டறியப்பட்டது.

அதன்பின் மேலும் 30ஆண்டுகளுக்குப்பின்னர்  1970களில் முதன்முதலில் கனடா நாட்டில் மட்டும் அதன் மருத்துவ கட்டுப்பாட்டு நிறுவனம் மெட்ஃபார்மினை நீரழிவுக்கான மருந்தாக அங்கீகரித்தது. 

ஆனால் உலகப் பொது மருந்து அங்கீகார நிறுவனமான USFDA , மேலும் 25ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டுதான் ஒப்புதல் தந்தது. 
ஆகவே 1995 க்குப்பிறகே உலகின் அனைத்து நாடுகளின் மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் நீரழிவு நோய்க்கெதிரான blockbuster மருந்தாக இன்றளவும் இருந்துவருகிறது, மெட்ஃபார்மின்.

++++

கல்யாண்ஜி

செயலே சிறை
அச்செயலே விடுதலை

-கல்யாண்ஜி

ஒரு நண்பராக இருப்பது எப்படி?



‘உன்னை அழைப்பதற்குச் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். அங்கே நீ விரும்பும் எல்லாமே இருக்கிறது. நீ கேட்கும் எதுவும் கிடைக்கும். உன் நண்பனைத் தவிர! வா சிசரோ’ என்று ஒரு தேவதை வந்து அழைத்தால், கையெடுத்து வணங்கிவிட்டுச் சொல்வேன். மாட்டேன். நீ வேண்டுமானால் அதைச் சொர்க்கம் என்று அழைக்கலாம். என் நண்பன் இல்லாத ஓரிடம் எப்படி எனக்குச் சொர்க்கமாகும்? அங்கே நான் ஏன் வரவேண்டும்?

‘உன்னை அழைப்பதற்கு நரகத்திலிருந்து வருகிறேன். அங்கே உலகின் அத்தனை பயங்கரங்களும் இருக்கின்றன. நீ தப்பவே முடியாது. உன் நண்பன் அட்டிகஸும் அங்கேதான் இருக்கிறான். வா என்னோடு’ என்று ஒரு பூதம் வந்து அழைத்தால், இதோ என்று கையோடு கிளம்பிவிடுவேன். என் அட்டிகஸ் இருக்கும் இடம் எப்படி நரகமாக இருக்க முடியும்? அங்கே எப்படிப் பயங்கரங்கள் இருக்கும்? ஒருவேளை நிஜமாகவே அது ஒரு கொடூரமான இடம் என்றால், என் நண்பனை அங்கே தவிக்க விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி இங்கே சுகமாக வாழ முடியும்?

பாவம், ரோமாபுரியின் தத்துவஞானி கொஞ்சம் உணர்வுவயப்படுகிறவர் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் சொல்வதில் கொஞ்சம்கூட மிகையே கிடையாது. நான், என் வீடு, என் குடும்பம் என்று சுருங்கிக் கிடந்த என்னைப் பிடித்து வெளியில் இழுத்து இதோ பார் என்று பரந்து விரிந்த உலகைக் காட்டியவன் அட்டிகஸ். கண்களோடுதான் பிறந்தேன். ஒளி அவன் கொடுத்தது. இதயத்தோடுதான் பிறந்தேன். துடிப்பு அவன் வழங்கியது. நட்பின் உண்மையான பொருள் என்ன, அது ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை அவனிடமிருந்தே கற்றேன்.

ஒரு நல்ல நண்பனால் உங்கள் இதயத்துக்குள் ஊடுருவிச் சென்று பார்க்க முடியும். உங்களுக்குள் நிறைந்திருக்கும் நல்லதையும் கெட்டதையும் கண்டுபிடித்து இது நல்லது, இது கெட்டது என்று தெளிவாகச் சுட்டிக்காட்ட முடியும். நல்லதை மேலும் மேலும் வளர்க்கவும் கெட்டதைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றவும் அவன் உங்களுக்கு உதவுவான். இவன் என் வாழ்க்கைக்குள் நுழைந்தான். அதன் பின் எல்லாமே மாறிவிட்டது என்று அவனைக் கைகாட்டி நீங்கள் பெருமிதம் கொள்ள முடியும்.

நான் என்னவெல்லாம் கேட்கவேண்டும் என்று விரும்புகிறேனோ அதை மட்டுமல்ல; எதையெல்லாம் கேட்க நான் தயாராக இல்லையோ அதையும் என் நண்பன் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இதைச் சொன்னால் நான் கோபப்படுவேனோ, அப்படிச் சொன்னால் நான் வருந்துவேனோ என்றெல்லாம் தயங்க மாட்டான்.

அட்டிகஸ் நீ என்னை அதிகம் புகழ்ந்ததில்லையே, ஏன்? என்னுடைய மாபெரும் சாதனைகளைக்கூட ஒரு புன்னகையால் கடந்து சென்றுவிடுகிறாயே, ஏன் என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். அவன் என் தோளில் கை போட்டுப் புன்னகைத்தான். ‘நீ மேலே ஏற, ஏற கைதட்டி மகிழ்வதற்கும், இன்னும் இன்னும் மேலே போ என்று ஆர்ப்பரிப்பதற்கும் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தக் கூச்சலில் என் சிசரோவின் இதயத்தை அடைத்துவிடக் கூடாது! தவறாக ஓரடிகூட எடுத்து வைத்துவிடக் கூடாதே என்று பதைபதைப்போடு பார்ப்பதற்கு நான் ஒருவன்தான் இருக்கிறேன்! உன் புகழ், சாதனை, பெருமிதம் எதுவும் உன்னைவிட முக்கியமில்லை எனக்கு’ என்றான் அட்டிகஸ்.

ஒருவருக்கு ஓர் அட்டிகஸ் போதுமா என்று கேட்டால் ஒரு தோட்டத்தில் ஒரு செடி போதுமா என்று கேட்பேன். ஆரம்பத்தில் என் வகுப்பு, என் பள்ளி, என் வீதி, என் மதம் என்றுதான் நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் மட்டும் போதாது என்றே சொல்வேன். உங்கள் நம்பிக்கை, உங்கள் பண்பாடு, உங்கள் மொழி, உங்கள் நிலம், உங்கள் ஆர்வம் அனைத்தையும் கடந்து புதியவர்களைத் தேடிப் பிடியுங்கள்.

சமவயது நண்பர்கள் மட்டும் போதாது. மூத்தவர்களோடும் இளையவர்களோடும் பழகுங்கள். நீங்கள் ஆண் என்றால் பெண் நண்பர்களையும் நீங்கள் பெண் என்றால் ஆண் நண்பர்களையும் தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பார்வை விரிவடைவதை, சிந்தனை வளம் பெறுவதை, உள்ளம் வலுவடைவதை உணர்வீர்கள்.
நீங்கள் கலங்கி நிற்கும்போது உங்கள் நண்பரின் கரம் உங்கள் தோள்மீது படரும். நீங்கள் அஞ்சி நிற்கும்போது உங்கள் நண்பர் உங்கள் கரங்களை உறுதியோடு பற்றிக்கொண்டு உங்களோடு சேர்ந்து நடப்பார். உங்கள் பாதையில் இருள் மூடிக்கிடக்கும்போது அவர் மெழுகுவத்தியோடு தோன்றுவார்.

உங்கள் எதிரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை நீங்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க முடியும். அவசரமே வேண்டாம், பேசிப் பழகி, பொறுமையாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கான அட்டிகஸை நீங்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் ஓர் அட்டிகஸாக மாறவேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களைச் செழுமைப்படுத்தியதுபோல் நீங்கள் இன்னொருவரைச் செழுமைப்படுத்த வேண்டும். ஒரு நல்ல நண்பர் உங்களை நிறைவு செய்ததுபோல் நீங்கள் இன்னொருவரைக் கண்டறிந்து அவர் குறைபாடுகளைப் போக்கி, அவரை நிறைவு செய்ய வேண்டும்.

நிறைவான மனிதன். நிறைவான வாழ்க்கை. நிறைவான உலகம். இந்த மாயத்தை நட்பு தவிர வேறு எதனாலும் நிகழ்த்த முடியாது.

மருதன்
மாய உலகம், மாயாபஜார்

Tuesday 18 October 2022

பெருமாள் முருகன் -


பாழாப்போன 
இந்த சனம்
எவனுக்கு என்ன இருக்குதுன்னு பாக்காது...
என்ன இல்லீன்னுதான்
பாக்கும்.

- பெருமாள் முருகன் -

ஜோர்பா


நீ தேவையில்லாமல் எதை எதையோ யோசித்து உன்னை குழப்பிக்கொள்கிறாய். இறுக்கமடைகிறாய். யோசிக்காமல் சும்மா இரு. யோசிப்பது தான் உன்னோட பிரச்சனை.

- ஜோர்பா

நேசமித்ரன்


மிகவும் துயரமான பாடல் என்று இசைக்கப்பட்டவை எந்த துக்கமும் அளித்ததில்லை. சுகமானவைதான் பின்னர் துக்கமாய் மாறின

-நேசமித்ரன்

Monday 17 October 2022

மகேஷ் சிபி


ஹாலில் அமர்ந்துகொண்டு
உனக்கேதும் 
உதவி வேண்டுமா
என்று கேட்கிறேன்.
சமையலறையிலிருந்து
நீ எதுவும் செய்ய வேண்டாமென்கிறாள்.
 
உதவியை அவள் இப்படியும்
பெற்றுக்கொள்வாள். 

- மகேஷ் சிபி

Sunday 16 October 2022

குந்தாணி


குந்தாணி

உலக்கை கொண்டு உரலை குத்தும் (இடிக்கும்) பொழுது தவச (தானிய) மணிகள் வெளியே சிதறாமல் பாதுகாக்கும் வாயகன்ற - புடைப்பான அமைப்புக்கு குந்தாணி என்று பெயர்!

வண்ணதாசன்


மனிதர்கள் மாறிக்கொண்டே போகிற நெருக்கடியிலும் ஏதோ ஒரு மனிதர் எதிர்பட்டுக் கொண்டிருக்கும் படி வாழ்க்கை இன்னும் இருப்பது அந்தந்த நேரத்தில் பெரிய ஆறுதலாக இருக்கிறது

-வண்ணதாசன்

.சிங்காரம்


" மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை."

-பா.சிங்காரம்

கேத்ரின் ஹெப்பர்ன்


அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றினால், 
வாழ்க்கையின் சுவாரஸ்யமான பகுதிகளை இழப்பீர்கள்.

-கேத்ரின் ஹெப்பர்ன்

Saturday 15 October 2022

கற்றது கைம்மண் அளவு.


கற்றது கைம்மண் அளவு.

ஔவை பிராட்டி, ஏன் கற்றது கைம்மண் அளவுன்னு சொன்னாங்க? கற்றது சிறு துளின்னு சொல்லியிருக்கலாம், கற்றது கடுகளவுன்னு சொல்லியிருக்கலாம். கைம்மண் என்ற சொல்லை நாம் எப்படி புரிந்துகொள்ளலாம்? 

கையளவு மண்ணை எடுத்துக்கொள்ளுங்க. இது தான் நாம் கற்ற அளவு. கையளவு மண், அதே அளவு இருப்பதில்லை. விரலிடுக்குகள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக கீழே கொட்ட ஆரம்பிக்கும். அதே போல, சிறிது நேரத்தில் நமது கை வலிக்க ஆரம்பிக்கும், கை அசையும், அப்பவும் மண் கீழே கொட்டும். 

அதே போல நாம கற்றதை நிறுத்திட்டு, இது போதும்ன்னு திருப்தி அடைஞ்சிட்டா, கைம்மண் போல கொஞ்சகாலத்தில் அது நம்மிடருந்து கரைய ஆரம்பித்து விடும். இல்லை. நான் வலுவானவன், கையை ஸ்டெயிட்டா பிடித்துக்கொண்டு, இருக்கும் மண்ணை கொட்டாம வைத்திருப்பேன்னு சொல்வீங்கன்னா, எவ்வளவு நேரம் அப்படி கையை ஒரே நிலையில் வைத்திருக்கமுடியும்? ஐந்து மணி நேரம்... அல்லது பத்து மணி நேரம்.... அல்லது இரண்டு நாள்? அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல கை வலிக்க ஆரம்பித்துவிடும். 

அதே போலத் தான் நாம மேலே கற்காமல், கற்றுக்கொண்டதோடு போதும் என நிறுத்திவிடும் போது ஒரு கட்டத்தில் நாம கத்துக்கிடட விஷயமே சுமையாகி போய்விடும். அப்பப்ப கைல இருக்கும் மண்ணை கொட்டிட்டு, புது மண்ணை அள்ளிக்க வேண்டியது தான். 

இதைத் தான் learning - delearning - relearning அப்படின்னு சொல்றாங்க.

ஐன்ஸ்டீன்


வாழ்வை நாம் இரண்டு பார்வைகளில் அணுக முடியும். ஒன்று, எதுவுமே அதிசயமில்லை எனக் கருதுவது. மற்றொன்று, ஒவ்வொரு தருணமும் அதிசயமானது எனக் கொண்டாடுவது. 

- ஐன்ஸ்டீன்.

ஜெஃப்ரி கிரீஃப்


நண்பர்கள் நான்கு விதம் 
அவசிய நண்பர்கள், ஆத்மார்த்த நண்பர்கள், நெடுங்கால நண்பர்கள், பேருக்கு நண்பர்கள்.

அவசிய நண்பர்கள் நம் உள் வட்டத்தில் இருக்கும் உன்னத மானவர்கள். கொடி மரம் போல எல்லா தருணங்களிலும் இருப்பார்கள். நமக்கு எது ஏற்பட்டாலும் முதலில் அவர்களுக்கு தான் சொல்லத் தோன்றும். இவர்களின் பெருந்தன்மையே முக்கிய காரணம்.

ஆத்மார்த்த நண்பர்கள் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் நெஞ்சுக்கு உகந்தவர்கள். எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதையும் அவர்களிடம் மனம் விட்டு பேச முடியும்.இவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்போம். நெருங்கிய நண்பரிடம் சொல்ல முடியாததை கூட இவர்களிடம் சொல்லுவோம்.அவர்களுக்கு நம்மைத் தெரியும் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது.அவரிடம் இறக்கி வைத்தால் அத்தனை பாரமும் குறையும்

நெடுங்கால நண்பர்கள் எல்லாருக்கும் உண்டு. சின்ன வயதிலிருந்து பழகுவார்கள். உடன் இருப்பார்கள். ஒரே தெருவில் இருப்பார்கள். சிலர் அவசிய நண்பர்கள் ஆவதும் உண்டு, இது அணுகு முறையை பொறுத்து அமையும்.

பேருக்கு நண்பர்கள் நம்மை பாதித்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம். ரகசியமாய் வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் நமக்குள் இருக்கும். ஒரே மைதானத்தில் விளையாடுவது அவ்வப்போது பார்ப்பது என்று இருக்கும் அந்த உறவு முறையில் எந்தவித பொறுப்பும் இருப்பதில்லை

-ஜெஃப்ரி கிரீஃப்
தமிழில் இறையன்பு

Wednesday 12 October 2022

ஜெயமோகன்


உலக வரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்குத் தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தாம் .

-ஜெயமோகன்

கார்த்திகா


வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக
பரிமாறிக்கொண்டே
மெளனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்

-கார்த்திகா

Tuesday 11 October 2022

காந்தி


ஒரு பொருளை சம்பாதித்த முறையை கொண்டே அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். 

வன்முறையினால் பெற்ற பொருளை அதே வன்முறையினால்தான் காப்பாற்ற முடியும்.

சத்தியத்தின் மூலம் பெற்றதை சத்தியத்தைக் கொண்டே காக்க முடியும். 

சத்தியத்தைக் கைவிட்ட பிறகு அதைத் தக்க வைத்துக்கொள்ள சத்தியாகிரகத்தில் மாயாஜாலம் எதுவும் இல்லை! 

                        - 'தென் ஆப்பிரிக்க சத்தியாக்கிரகம்' நூலில் மோகன்தாஸ் கரம்சந் காந்தி

மகுடேசுவரன்


புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் குறையாதவரை வாழ்க்கை அயர்ச்சியூட்டுவதில்லை. புதிதாக ஒன்றை அறியும் ஆர்வத்தை இழக்கும்போது நாம் ஏதோ ஒரு படிக்கட்டிலிருந்து இறங்குகிறோம்

-மகுடேசுவரன்

Shams Tabrizi


நல்ல மனிதன் யாரையும் குறை கூறுவதில்லை. ஏனென்றால் அவன் மற்றவர்களிடமிருக்கும் தவறுகளைப் பார்ப்பதில்லை

Shams Tabrizi

ஓஷோ


மனதை வசப்படுத்தும் ஒரே தன்மை வலிமைதான். அதனால்தான் மனித மனம் வலிமையை வெளியே தேடிக் கொண்டிருக்கிறது

-ஓஷோ

வண்ணதாசன்


மழைக்குத் தயாராகவே பகலின் அடையாளங்கள் முழுவதுமிருந்தது

-வண்ணதாசன்

Monday 10 October 2022

கண்ணதாசன்


தேவைபட்டாலொழிய கோபம் கொள்ளாதே,எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம்தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் அல்ல

-கண்ணதாசன்

கார்ல் ஸேண்ட் பர்க்


நேரம் என்பதுதான் உங்களுக்கு வழங்கப்பட்ட ஒரே செல்வம்.அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற உரிமை உங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. 

உங்களுடைய அந்த செல்வத்தை மற்றவர்கள் ஏமாற்றி தங்களுடைய சுயநலத்திற்காக உபயோகித்துக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீர்

-கார்ல் ஸேண்ட் பர்க்

Sunday 9 October 2022

பெரியாறு அணை


பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டு இன்றுடன் 127 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1895ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, அன்றைய மெட்ராஸ் கவர்னர் வென்லாக் திறந்து வைத்தார். திருமணமான பெண், பிறந்தகத்துக்கு வரும் குதூகலத்துடன் பெரியாறு மாமதுரைக்கு வந்த நாள்.

பெரியாறு நதியின் நீர் சென்று சேரவேண்டிய கடைசி இடமான மேலூர் புளிப்பட்டிக்கு நதிநீர் சென்று சேர்வதற்கான வாய்க்கால்களின் வேலை 1895க்குள் நிறைவடையவில்லை.  மீதமிருந்த வேலைகள் 1900 வரை நடந்தன.
பிரிட்டீஷ் ஆவணங்களின் மூலம் அணை திறக்கப்பட்ட செய்தி அறிந்துகொள்வதைப் போலவே, அந்தோணி முத்துப்பிள்ளை எழுதிய சந்தமார் சிந்துக் கவிதைகள் நூலும் அணை திறக்கப்பட்ட நாளைப் பற்றிச் சொல்கிறது.

1912ஆம் ஆண்டு, கம்பம் ஆங்கூர் ராவுத்தர் என்ற காண்ட்ராக்டர் இறந்த சேதியைக் கேள்விப்படுகிறார் பிள்ளை. இறப்புச் செய்தி கேட்டு, கையறு நிலையில் பாடப்படும் சரம கவிதை எனும் இலக்கிய வடிவத்தில் இக்கவிதையை வடிக்கிறார்.

“ஆயிரத் தெண்ணூற்றரிய தொண்ணூற் றைந்தாண்டின்
மேயஅக்டோபர் விளங்குபத்தாந் தேதிதனில்
பெரியாற்றினைத் திறக்கப் பிரிட்டீசாரான
அரிய கவர்னர்துரை யங்கு வருகிறதால்
தக்க படி மகிமை தான்செய்ய வேண்டுமென்று
சர்க்காரி லுத்தரவு தந்த படியாலே
மலைவாழ் குமுளியதை வாசமிகு பொன்னகர் போல்
துலங்கும் படியாகச் சோடித் தலங்கரித்துப்” எனச் செல்கிறது பாடல்.
ஆங்கூர் ராவுத்தர் பெரியாறு அணை கட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பையும், அணை திறந்த நாளன்று அவர் செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்து திருவிதாங்கூர் மகாராஜா மகிழ்ந்து 100 ஏக்கர் ஏலத்தோட்டத்தை முழு மான்யத்தில் அன்பளிப்பாக கொடுத்தார் என்றும் பாடுகிறார் பிள்ளை. 

வரலாறும் நாட்டுப்புறப் பாடல்களும் ஒத்துப்போவது அரிய நிகழ்வு.
எத்தனையோ மர்மங்களும் மாயங்களும் அபூர்வங்களும் நிறைந்த பெரியாற்றின் வரலாற்றில் இதுவும் ஓர் அரிய நிகழ்வுதான்.
பெரியாறு அணை நம் வரலாற்றில் வெறும் அணை மட்டுமல்ல.  தென் தமிழகத்தை வாழ வைத்த பண்பாட்டு அடையாளம். 

கீழுள்ள படத்தில் தெரியும் மனிதர்களைப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கை கதைக்குள் பெரியாறு இருக்கிறது. பெரியாறுக்குள் அவர்களும் இருக்கிறார்கள்.
கழுகுமலை குடவரை போல், கீழக்குயில்குடிபோல், நெல்லையப்பர் ஆலயம்போல் மதுரை மீனாட்சிக் கோயில்போல் நம் அடையாளம்.
அடையாளம் காப்போம்.
#நீரதிகாரம்
#ஆனந்தவிகடன்
#பெரியாறுஅணைதிறந்தநாள்

-அ.வெண்ணிலா

மார்கெட்டிங் ஆய்வில்


ஒரு மார்கெட்டிங் ஆய்வில், மனிதனின் சராசரி attention span 1 நிமிடத்திற்கு- 8 நொடிகளே என்று கண்டுபிடித்துள்ளனர், இது 2000களில் 12 நொடியாக இருந்ததாம். (நீங்க 1 நிமிடம் பேசுனா 9 நொடிதான் கவனிப்பாங்க) ஏன்? நடுவில ஃபோன், சத்தம், மனதுக்குள் ஓடும் எண்ணங்கள் எல்லாம் கவனத்தை சிதறடிக்கின்றன

ஹாஷ்டாக்


ஹாஷ்டாக் (#) 

#tag என்பது 2007 இல் கிரிஸ் மெசினா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.சீன மொழியில் # include stdio.h என்று இருந்து # directive இல் இருந்து தான் இந்த idea வந்தது.

கிரிஸ் ஹேஷ்டேகினை கலிஃபோர்னிய காட்டுத்தீயில் மாட்டியவர்கள் டிவீட் செய்ய சொன்னார்.அது பலருக்கு உபயோகமாக இருக்க, பின்னர் அதில் hyperlink சேர்த்தனர்.பிறகு, மொத்தமாக # கொடுத்து தேடும் வசதியும் வந்தது. Groupable and searchable pages/posts classified under a hyperlink எனலாம். Trending என்பது எண்ணிக்கை அடிப்படையில் நடக்கிறது

#info

உலக தபால் தினம்! சாமானியனின் வாகனம்-தபால் #WorldPostDay



இன்றைய தொழில்நுட்பயுகத்தில் ஒருவரை தொடர்பு கொள்ள இ-மெயில்,வாட்ஸ் அப்,ஃபேஸ்புக் என பல சமூக வலைதளங்கள் உதவுகின்றன. இவை ஓர் தகவலை மின்னல் வேகத்தில் பலரிடம் கொண்டு போய் சேர்க்கும் வல்லமை படைத்தது.ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு நிலைமை தலைகீழ்.அனைவரும் அறிந்த ஒரே போக்குவரத்து கடிதவழி போக்குவரத்து.இதில் சிலர் கடிதம் எழுதுவதில் கவிகளாக விளங்கினர்.கிராம மக்களில் பலர் கடிதம் வந்தால் ஏதோ தவறான செய்தி என்று அஞ்சினர்.இந்த கடிதவழி போக்குவரத்துக்கு முக்கியமான நாடு அன்றைய பிரிட்டன் ஆகும்.1653-ல் Longueville மாகாண Minister Fouget என்ற தபால் அதிபரின் யோசனைபடி தபால் பெட்டி உருவாக்கப்பட்டது."சார்லஸ் ரீவிஸ் என்பவர் தபால் பெட்டிக்கான மாதிரி வடிவத்தை அமைத்தார்.சாதாரணமாக தபால்பெட்டிகள் அதிகபட்சம் 5 1/4 அடி உயரத்தையும், குறைந்தபட்சம் 4 அடி உயரத்தையும் கொண்டவையாக வடிவமைக்கபட்டன.

முத்திரை:-

தபால் கவரின் மீது தேதி பொறிக்கப்பட்டு அடிக்கப்படுமப்ஒட்டும் தன்மையுள்ள முத்திரைகளும் ஒரே அளவைக் கொண்ட தபால் கட்டணமும் "ஜேம்ஸ் சாமேர்ஸ்"(James Chalmers) என்பவரால் 1834-ல் முன்வைக்கப்பட்டது.

தபால்தலை:-

ஒரு குறிப்பிட்ட தொலைவு கடித பயணத்துக்கு அனைத்து தபால்நிலையங்களிலும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் எனும் சாமேர்ஸ் கருத்து 1839 நாடாளுமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்பட்டது.முதன்முதலில் 1840-ம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட முன்கட்டணத் தபால் தலை வெளியிடப்பட்டது.முதலாவது தபால் தலை வெளியிட்ட காரணத்தினால் அனைத்து உலக நாடுகளும் பயன்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்,ஆனால் பிரிட்டன் இதற்கு விதிவிலக்கு.இன்று வரை முத்திரையில் நாட்டின் பெயரை குறிப்பிடாமல் அச்சிடும் ஒரே நாடு பிரிட்டன் மட்டுமே.

1874 அக்டோபர் 9 தேதி சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில்"சர்வதேச தபால் ஒன்றியம்" (Universal Postal Union) என்ற அமைப்பினை பல நாடுகள் சேர்ந்து ஏற்படுத்தின. இதை நினைவு கூறும் விதமாக 1969 ஆண்டு கூடிய நாடுகள் அக்டோபர் 9 தேதியினை "உலக தபால் தினம்" என அறிவித்தன.இந்தியாவில் அக்டோபர் 9-15 தேதி வரை தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. 

தபால் குறியீட்டு எண்:

முதன்முதலில் தபால் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்திய நாடு ஜெர்மனியே ஆகும். நம் நாட்டில் தபால் குறியீட்டு எண்ணாக ஆறு இலக்கம் கொண்ட எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.நம் அண்டை நாடான இலங்கையில் ஐந்து இலக்க எண்ணே பயன்படுத்தபடுகின்றன. இந்த எண்களின் மூலம் ஒர் நாட்டில் தபால் நிலையம் எங்கிறுந்தாலும் எளிமையாக கண்டுபிடிக்க மடியும்.

இந்தியாவும்-தபாலூம்:-

இந்தியாவில் தற்போது 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கிராமத்தில் மட்டும் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் கிராமத்து காற்றை சுவாசித்து இயங்குகின்றன. இந்திய தபால் நிலையங்கள் மொத்தம் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றன.

இந்தநாளில் காதோடு கவி பேசும் கடிதாசி சேவையை போற்றுவோம்..!!

-சிங்கராயர்

Saturday 8 October 2022

சேரவஞ்சி


பேச்சு
இருவரில் ஒருவரையாவது காயப்படுத்தக்கூடிய
வல்லமை பெற்றது.
மௌனம்
இருவரில் ஒருவரையாவது
ஆற்றுப்படுத்தக்கூடிய
வல்லமை பெற்றது.

-சேரவஞ்சி

Friday 7 October 2022

ஹிட்ச்காக்


ஹிட்ச்காக்  படம் ஒன்றில்  நாயகியைக்  கொல்ல வில்லன்  கிளம்பிக்  கொண்டு இருப்பான்.  என்ன  ஆகப்போகிறதோ என  பார்வையாளர்களுக்கு  பரிதவிப்பாக  இருக்கும்.  துல்லியமாக  சரியான  நேரத்துக்கு சென்றால் மட்டுமே இவனால காரியத்தை  முடிக்க இயலும்

அவசரத்தில்  கார்  சாவி  கம்பி  இடைவெளிகளில் புகுந்து இரண்டு அடி ஆழமுள்ள  பாதாள சாக்கடையில்  விழுந்துவிடும்

நேரம்  ஓடிக்  கொண்டிருக்கும்  டென்ஷன் அவனுக்கு  விரல்களை  லாகவமாக  நுழைத்து  அதை எடுக்க  முயல்வான். விரலில்  சி்க்காது   சிக்கினாலும்  பாதி  தூரத்தில்  விழுந்துவிடும்  கடைசியில்  எடுத்து விடுவான்

என்ன  வேடிக்கை  என்றால்  படம்  பார்ப்போரில்  சிலர் மட்டுமே  அடப்பாவி  சாவியை  எடுத்து விட்டானே   கொல்லப்போகிறானே  என  பதறுவார்கள்

பெரும்பாலான  பார்வையாளர்கள்   கதைப்போக்கை  சற்றே  மறந்துவிட்டு ,  அப்பாடா  சாவியை  எடுத்துவிட்டான் என  அவனுக்காக  நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.   அதன்பின்  மீண்டும்  திட்ட ஆரம்பிப்பது  வேறு விஷயம்

பாயிண்ட்  ஆப்  ஆங்கிள்  என்பதற்கு  இக்காட்சியை  உதாரணமாகக்காட்டி  ஒரு பயிலரஙகில்  பேசிக்  கேட்டது இது

-பிச்சைக்காரன்

Thursday 6 October 2022

2G,3G ,4G ,5G என்றால் என்ன? இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன?



G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன.

1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது.

அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது. அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :

பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இதுதான். இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம்.

2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின.

இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில்தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன. இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது.

3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. நம் இந்திய நாட்டுக்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகுதான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.

4G சேவை :

3G சேவையைவிட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009-ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது.

அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை.

ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G :

4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை.

இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம்.

மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

-படித்தது

Tuesday 4 October 2022

வின்ஸ்டன் சர்ச்சில்


போரில் உங்களை ஒரு முறை மட்டுமே கொல்ல முடியும். அரசியலில் நீங்கள் பலமுறை கொல்லப்படுவீர்கள்.

-வின்ஸ்டன் சர்ச்சில்

Monday 3 October 2022

மா.கிருஷ்ணன்.


ஒரு நாடு அதன் மக்களால், கட்டிடங்களால், தொழிற்சாலைகளால் மட்டும் ஆவதல்ல. அதன் ஆறுகள், குளங்கள், காடுகள், மலைகள், பாலைவனங்கள் இவற்றாலும் ஆனது. இவை தான் ஒரு நாட்டின் அடையாளம்.”

-மா.கிருஷ்ணன்.

Sunday 2 October 2022

பெருந்தேவி


தன்னை இழத்தலே, கைவிடுதலே ஆழ்தலுக்கு ஒருவரைத் தயார்படுத்துகிறது

-பெருந்தேவி

Saturday 1 October 2022

புத்தர்


இறுதியில் இந்த மூன்று விஷயங்கள்தான் முக்கியமானது.

எந்தளவுக்கு நீ நேசித்தாய்/
நேசிக்கப்பட்டாய்.

எந்தளவுக்கு நீ நேர்மையாக வாழ்ந்தாய்.

உன் வாழ்க்கைக்கு அர்த்தம் தராத, தேவையில்லாத எவ்வளவு விஷயங்களை, பொருட்களை,மனிதர்களை உன்னிடமிருந்து விடைபெற
மனதார அனுமதித்தாய்.

-புத்தர்

ஜெயமோகன்


"மிக எளிமையானவர்களாகத் தோன்றுவார்கள்.எப்போதும் விட்டுக் கொடுக்கவும் சமரசமாகவும் சித்தமாக இருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு நியாயமற்றது என்று படக்கூடிய ஒரு விஷயத்தை ஒருபோதும் செய்யமாட்டார்கள்.சரியான ஒன்றுக்காக இம்மிகூட அசையாத உறுதியுடன் நிற்பார்கள்"


-ஜெயமோகன்

ஜேக்கப் ரீஸ்


ஒன்றில் மேதமை பெறுவதற்குப் பொறுமை தேவை.  “எதுவும் வேலைக்கு ஆகாது என்பதுபோலத் தோன்றும்போது, கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவர் ஒரு பெரிய பாறையை உடைப்பதை நான் சென்று பார்க்கிறேன். அவர் நூறு முறை அதைத் தன் சுத்தியலால் அடித்தும் ஒரு கீறல்கூட அதில் தெரிவதில்லை

ஆனால் நூற்றியோராவது முறை
அவர் அதை அடிக்கும்போது, அந்தப் பாறை இரண்டாகப் பிளக்கிறது. அந்தக் கடைசி அடி அந்தப் பாறையை உடைக்கவில்லை, மாறாக, அதற்கு முந்தைய அனைத்து அடிகளும் சேர்ந்தே அதை உடைத்தன என்பதை நான் அறிவேன்.”

-ஜேக்கப் ரீஸ்

நீர்ச்சத்து குறைந்த மொழி- மேஜர் சுந்தரராஜன்


சிலர் மெனக்கெட்டு மிக எளிய விஷயங்களை, அசாதாரண இலக்கிய நடையில் எழுத முயல்கிறார்கள் அதன் மூலம் தமக்கு இலக்கிய தோரணை கிடைப்பதாக அவர்கள் கருதக் கூடும்...ஆனால் அதன் மூலம் நமக்கு ஒரு 'வெளங்காத மொழி' கிடைக்கிறது .அதனை  dehydrated language என்று சொல்லலாம்....( நீர்ச்சத்து குறைந்த மொழி- மேஜர் சுந்தரராஜன் )