Thursday 30 April 2020

30-4-20

 இன்று புழக்கத்தில் இருக்கும் Assasination,Accomodation, Baseless,Bedroom,Critic,Dishearten,
Exposure,Obscene,Pedant,Sportive,Useless,Leap_frog போன்ற வார்த்தைகள் ஷேக்ஸ்பியர் முதன் முதலில் பயன்படுத்தியவை

#info


 எழுத்து என்னுள் வளர்த்த துறவு-பிறகு
எழுத்தையே துறக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது

-மு.தளையசிங்கம்


இலக்கியம் போலவே சினிமாவும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்.அதைப் புறக்கணித்தால் வாழ்க்கையில் ஒரு ஜன்னலை மூடிவது போல் தான்

-தஞ்சை ப்ரகாஷ்



"பாக்னர் என்று நினைக்கிறேன், ஒருமுறை அவர் சொன்னார், காட்டுத்தனமான இருளுக்கு மத்தியில் நீங்கள் ஒரு தீக்குச்சியை பற்றவைக்கிறீர்கள் என்றால் அது ஒன்றும் நல்வெளிச்சத்தில் பொருட்களை பார்ப்பதற்கில்லை, சுற்றிலும் இன்னும் எவ்வளவு இருள் இருக்கிறது என்பதை காண்பதற்காகவே. நான் நினைக்கிறேன், இலக்கியமும் முக்கியமாக அதைத்தான் செய்கிறதென்று. விஷயங்களுக்கு பதில் கூறுவதோ, அவற்றை தெளிவுபடுத்துவதற்கோ இல்லை. கண்டுபிடிப்பதற்கு- சிலசமயங்களில் குருட்டுவாக்கில்- இருளின் பிரதேசங்களை துலக்கிக்காட்டுவதற்கு."

-சேவியர் மரியாஸ்

RIP-RishiKapoor

1977 தேர்தல் நேரம். இந்திராகாந்திக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயணன் உச்ச பட்ச பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதனை தடுக்க அரசின் டிவி சேனலில் "பாபி" படத்தை ஒளிபரப்பியது.ஆனாலும் பத்து லட்சம் பேர் திரண்டுவிட்டனர். பாபியை பாபுஜி வென்றுவிட்டார் என ஊடகம் கூறியது.

#info
#RishiKapoor

Tuesday 28 April 2020

29-4-20

உளி பழக செதுக்குகிறேன்
சிலை காண அல்ல.
~~~~
ஒரே மூச்சில் போய்
சேர்ந்திருக்கலாம்
பெருமூச்சில்
தூரத்தை 
அதிகமாக்கி விட்டீர்கள்.
~~~
கடந்து வந்த தூரம்
கடக்க வேண்டிய 
தூரத்தைக்
குறைத்துக்கொண்டே 
வருகிறது.
~~~
யாரோ தள்ளி 
யாரோ விழுவதைப்போல
உங்கள் வீழ்ச்சியை
பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.
~~~
நீந்தி தேடுகிறது 
நதி
குளித்துப்போனவளின்
தடத்தை.
~~~~
வேலை முடித்தாயிற்று
யாரும் எழுப்ப மாட்டார்கள்,
என்று படுத்தேன்
அடுத்த வேலை எழுப்பிவிட்டது.

~~~~
கவனம் பெறும் ஒன்றை
நாம் செய்ய வேண்டும்
என்பதை விட
நாம் செய்யும் ஒன்று
கவனம் பெற வேண்டும்
என்பது சக்தி வாய்ந்தது.

~~~~
எழேத்தின் ருசியை
விட்டுவிட்டு
பிழையின் கசப்பை
அருந்துகிறீர்கள்.

~ராஜா சந்திரசேகர்



#தனித்து வரும்போது-கெட்ட
தறுதலை கண் வைத்தால்
இனிக்க நலம் கூறு-பெண்ணே
இல்லாவிடில் தாக்கு..

உமியல்ல பெண்ணின் வலக்கை-தீயோர்
உயிரை இடிக்கும் உலக்கை

-பாரதிதாசன்



#கடும்புதர் விலக்கிச் சென்று
களாப் பழம் சேர்ப்பார் போல

நெடும்புவி மக்கட்கான
நினைப்பினிற் சென்று

பலப்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர் அவற்றையெல்லாம்

கொடும் என அள்ளி உன் தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்

-பாரதிதாசன்

(அதாவது படித்து அறிந்த அனுபவங்களை ஷேர் செய்யுங்கள் னு சொல்றார்)


 No man is a hero to his wife

நீங்க எல்லாருக்கும் ஹீரோவாக தெரியலாம்..ஆனால் உங்கள் மனைவிக்கு அல்ல

யுகபாரதி

"போக்குவரத்து நெரிசலுக்கிடையே 
நீந்தும் வாகனத்தில் 
நானும் ஒருவனாக  அமர்ந்திருந்தேன்.

ஒருவரை ஒருவர் 
அதீத வெறுப்போடும் 
அந்நியத்தோடும் பார்த்துக்கொண்டனர்.

சனப்பெருக்கத்துக்கு 
யார் யாரெல்லாம் காரணமென்று 
வசைப்பாடத் தொடங்கினர்.

அரசு ஏன் இதற்கெல்லாம் 
வழிவகை செய்வதில்லை என்றும் 
யாவும் ஊழல் மலிந்ததன் 
உபாதை என்றும்  பொருமினர்.

வஞ்சிக்கும் அதிகாரிகளை 
வாரித் தூற்றி வயிறெரிய 
சபித்தனர்.

பெரும் இரைச்சலுக்குப்பின் 
மெல்ல நகரத் தொடங்கின வாகனங்களும் 
மக்களிடமிருந்த கோபங்களும்..!"  


- யுகபாரதி.

Saturday 25 April 2020

கற்றதும் பெற்றதும்-91*மணி

கற்றதும் பெற்றதும்-91
*மணி

மு.வ எனும் இலக்கிய முன்னோடி

எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம் என்பார் மு.வ எனும் மு.வரதராசன். அவரின் எழுத்துகளும் என்றும் எளிமையானது.நேர்மறையான எண்ணத்தினை விதைத்தவர்.

#குறட்டை ஒலி

பள்ளிப்பருவத்தில் துணைப்பாட சிறுகதைகளை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.அப்போது படித்த இவரின் சிறுகதையான குறட்டை ஒலியை மறக்க முடியாது. எல்லா கதைகளும் கதைமாந்தர்தான் சொல்லுவார். அவ்வகையில் இதில் மேல்மாடியில் இருக்கும் ஹாவுஸ் ஓனர்தான் கதை சொல்கிறார்.

வாடகைவீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.அது குட்டி ஈன்றவுடன் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயை பிடித்து சென்றுவிடுகின்றனர்.தாயை பிரிந்த குட்டிகளை தேற்றுகின்றனர். இறுதியில் ஒரு குட்டி மட்டும் பசியால் கத்திக்கொண்டே இருக்கிறது.இறுதியில் அந்த தாய் தன் தாய்ப்பாலை பீய்ச்சி ஒரு தொட்டியில் அந்தக்குட்டிக்கு கொடுக்கிறார்.அதை படிக்கும்போது படிக்கிறவர்களின் நெஞ்சமும் கொஞ்சம் கலங்கிவிடும்.இப்போது அந்த மேல்மாடியில் குறட்டை ஒலி சத்தம் கேட்டது என முடித்திருப்பார். இதுதான் அவரின் கதைகளை தேடி வாசிக்க தூண்டுகோலாய் அமைந்தது.

#கல்வி

துவக்கக் கல்வியை வேலத்தில் நிறைவு செய்த வரதராசன், உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் பயின்றார்.முருகைய முதலியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். 1935ல் வித்வான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காகத் திருப்பனந்தாள் மடம் வழங்கிய பரிசுத்தொகை ரூபாய் ஆயிரத்தைப் பெற்றார். தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து பின்  பி.ஓ.எல். பட்டம் பெற்றார்.  இவரது முதல் நூல் 'குழந்தைப் பாட்டுக்கள்' 1939ல் வெளியானது.

1944ல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டமும் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழத்தின் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.

#படைப்புகள்

1946-ஆம் ஆண்டு மு.வரதராசன் எழுதிய முதல் நாவல் "செந்தாமரை". 13 நாவல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். 1958-இல்   வெளிவந்த  "அகல்விளக்கு' 1961-ஆம் ஆண்டு  சாகித்ய அகாதெமி  விருது பெற்றது.  மு.வ. எழுதிய  "தமிழ் இலக்கிய வரலாறு' முக்கியமான படைப்பாகும்.

 தம் கருத்துக்களை "தம்பிக்கு" என கடிதமாய் எழுதினார். அவ்வகையில் அண்ணாவுக்கு முன்னோடியாய் விளங்கினார்.

#கதையின் தலைப்பு

ஒரு கதைக்கு பொருத்தமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். ஆனால் மு.வ அவர்களின் எல்லா கதைகளும் தலைப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். ஒரு பெண்ணை கள்ளாக பார்த்தலும் காவியமாய் பார்த்தலும் நம் கண்கள் தான் எனும் வகையில் கள்ளோ காவியமோ..

சிறுவயதில் செய்த தவறை நினைத்து வருந்துவதை நெஞ்சில் ஒரு முள் புதினத்திலும், ஒரு குடிசையில் எலிகளுக்கு மத்தியில் வாழ்வதை போலத்தான் பிரச்சனைகளுக்கு இடையில் மனிதர்கள் வாழ வேண்டும் என மண் குடிசையிலும்,இலக்கியம் கூறும் களவு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட பாவையிலும்,அணையும் விளக்கு பிரகாசமாய் எரிவதை அகல் விளக்கிலும் சுட்டிக்காட்டியிருப்பார்.

 #திருக்குறள்

கல்லூரியில் திருக்குறள் பாடம் எடுக்க வேண்டி இருந்தால் முன் தயாரிப்பு இல்லாமல் வகுப்பினுள் நுழையமாட்டாராம்.பரிமேழகர் உரைக்குப் பின் மு.வ வின் உரையே சிறப்பானதாக எளிமையானதாக இன்றளவும் கருதப்படுகிறது.

ஒரு முறை தன் நாவல் திருத்தப் பணியில் மா.ர.பொ.குருசாமி உள்ளிட்ட மாணவர்கள் அவர் நாவல் அச்சேற உதவினர்.அப்போது மா.ர போ அவர்கள் முகப்பு அட்டையில் தம் ஆசிரியர் பெயரை மு.வ என சுருக்கி அச்சிற்கு அனுப்பிவிட்டாராம். அச்சில் வந்த நூல்களை கண்ட மு.வ முதலில் அதிர்ச்சியடைந்து பின் ஏற்றுக்கொண்டதாக மா.ர.பொ ஒரு முறை நினைவுகூர்ந்தார்.

#பணிகள்

ஒரு எழுத்தராய்,ஆசிரியராய் பணியை துவக்கிய மு.வ பின் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.1961ல் சென்னை பல்கலையில் தமிழ்த்துறை தலைவரானார்.1971ல் மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தரானார்.1972ல் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி இவரது தமிழ்ப் பணிக்காக டி.லிட். பட்டம் வழங்கிக் கௌரவித்தது. 

#ரசித்தவை

*கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது.அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது

*தெளிவாய் உணர்ந்து,முற்போக்காய் வாழ்ந்தால் சுற்றுப்புறம் வெறுக்கிறது.மந்தையோடு ஒன்றாய் கலந்து கண் மூடித்தனமாய் வாழ்ந்தால் மதிக்கிறது

*பாதை போட்டவர்களை பயணிப்பவர் நினைக்க வைப்பது வரலாறு

*பிறர் சுமையை சுமக்க ஆசைப்படாதீர்கள்,
உங்கள் புகழை மற்றவர் சுமக்கும் அளவுக்கு நீங்கள் வளர முயற்சி செய்யுங்கள்

*எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.

*ஜாதியை ஒழிக்க முடியாது.,
புறக்கணிக்க கற்றுக் கொள்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday 24 April 2020

25-4-20

செய்வதையே திரும்பத் திரும்ப செய்துவிட்டு விளைவுகளை மட்டும் வேறுவேறாகக் கற்பனை செய்யாதீர்கள்

-ஐன்ஸ்டீன்



[25/04, 7:43 am] மணிகண்ட பிரபு: இந்த உலகத்தில் சரஸ்வதி கடாட்சம் பெறாத குழந்தை என்று யாரும் இல்லை

-சுந்தர ராமசாமி



[25/04, 7:46 am] மணிகண்ட பிரபு: ஒரு மரணம் என்பது துக்கம். ஆயிரம் மரணங்கள் என்பது கணக்கு.அவ்வளவே"
[25/04, 7:48 am] மணிகண்ட பிரபு: 


குழந்தைகளுக்கு வாழ்க்கைல நாம நிறைய சொல்லி தர்றோம்..
ஆனா குழந்தைங்க தான் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தர்றாங்க.. 

-ராதாமோகன்
[25/04, 7:53 am] மணிகண்ட பிரபு: 


கனவுகள் கூடிவரும்போது
விழிப்பு அதனை
கலைத்துப் போடுகிறது

-கலீல் ஜிப்ரான்

24-4-20

[24/04, 7:34 am] மணிகண்ட பிரபு: நூறு பூ தாங்க
எனக் கேட்கும்
குழந்தைக்கு 
எண்ணாமல் 
பத்துக் கண்ணிகள்
அதிகமாய் விட்டு
நறுக்கித் தரும்
பெண்ணுக்காகப்
பெய்கிறது மழை

-கலாப்ரியா



[24/04, 7:44 am] மணிகண்ட பிரபு: மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன.சண்டை போட்டுக்கொள்ளும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களாக சண்டை போட்டுக்கொள்கின்றன

-டால்ஸ்டாய்
[24/04, 7:48 am] மணிகண்ட பிரபு: 



தோசை தெய்வம்

தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.

-படித்தது

Thursday 23 April 2020

கற்றதும் பெற்றதும்’ – சுஜாதா

யாரும் நம் தின வாழ்க்கையில் உள்ள 'டாப் 10' பொய்களைச் சேகரித்ததாகத் தெரியவில்லை. இதோ அந்தப் பட்டியல்! எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை விகடன் வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.

1. அனுப்பிச்சாச்சே... இன்னும் வந்து சேரலையா?
2. இந்தப் புடவைல நீ பருமனாவே தெரியலை!
3. இப்படித் தலை வாரினா, உங்களுக்கு நல்லா இருக்கு!
4. நாப்பது வயசுனு சொல்லவே முடியாது!
5. ஒரு தடவை கேட்டுட்டா, அப்படியே பாடிடுவா!
6. ஒரே ஒரு மார்க்ல போச்சு!
7. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
8. உங்க நம்பர் என்கேஜ்டாவே இருந்தது!
9. நான் பொய் சொல்லவே மாட்டேன்.
10. ஏழ்மை நிச்சயம் ஒழிஞ்சுடும்!

இந்த 'டாப் 10' பொய்களில் விட்டுப்போன கீழ்வரும் வார்த்தைகளைச் சேர்த்தால், 'டாப் 10' நிஜங்கள்...

1. எத்தனைனு ஞாபகமில்லை.
2. விலையையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
3. வழுக்கையை மறைக்கிறதால...
4. நாப்பத்தஞ்சு சொல்லலாம்.
5. அபஸ்வரமா!
6. நாலாவது தடவையும்.
7. எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தேன்!
8. உங்க நம்பர் என்ன?
9. மௌன விரதத்தின்போது!
10. எப்பனு சொல்ல மாட்டேன்.

#கற்றதும் பெற்றதும்’ – சுஜாதா

Tuesday 21 April 2020

யுகபாரதி

முப்போகமும்
முங்கித் திளைத்த
மகசூலால்
வைப்பதற்கு இடமற்ற
நிறை வாழ்வு

மினுக்கும், ஷோக்கும்
மேலோங்க
குதிரை வண்டிகளில்
சேக்காளி சகிதம்
கூத்தியாளை வாழவைக்க
கழுத்து நிரம்பிய
காசு பணத்தைக்
காமத்துக் கழித்த
கதைகள் கோடி

காவிரிப் பாசனம்
கரை புரண்டோட
வருஷம் முழுக்க
வற்றாத வாழ்க்கை

வருமானத்தை பத்தாயத்திற்குள்
பதுக்கின ஜமீன் குடில்கள்

இஷ்டத்துக்கு இறைத்த கேணி
ஊற்றுக்கண் அடைபட
பூசிய சாயம் பொய்யென்றாகக்
கதியானதோ கந்தல் துணி
கக்கடைசியில்

சோறுடைத்த சோழநாடு
சோத்துக்கில்லாமல்
பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில்

-யுகபாரதி

பொய்

பொய்

“பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.

வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்.

அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்..!”

- வண்ணதாசன்.

Monday 20 April 2020

Add

விளம்பரங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் Edward luis bernay. உளவியலாளர் ப்ராய்டின் அத்தைமகன்.
'எல்லாவற்றையும் கவர்ச்சியே தீர்மானிக்கிறது'எனும் ப்ராய்டின் தாக்கத்தால் தன் முதல் விளம்பரத்தை கவர்ச்சியுடன் எடுத்திருந்தார்.

அதன்பின் சோப்,உள்ளாடை&சம்பந்தமே இல்லாத கார்,பெயின்ட் என எல்லாமே இதே பாணியில் எடுத்தார்.இது இன்றுவரை தொடவது குறிப்பிடத்தக்கது.

Saturday 18 April 2020

Vikrithi (மலையாளம்)*மணி



எந்த எதிர்பார்ப்போ பெரிய நடிகரோ இல்லை.ஆனால் ஒரு ஃபீல் குட் மூவி. ஒரு உண்மை சம்பவத்தை மிக அழகாக நேர்த்தியாக சொல்லும் படம்.பெரிய திருப்புமுனை எதுவுமின்றி சிறிய விஷயம் எப்படி பெரிய விஷயமாய் உருவெடுக்கிறது என்பதே கதை.

#கதை

வாய்பேச முடியாத தம்பதிகளாக ட்ரைவிங் லைசென்ஸ் புகழ் சூரஜ்ஜும் அவர் மனைவியும். சூரஜ் ஒரு பள்ளியில் லைப்ரரியன்.அவர் மனைவி ஒரு தையல் வேலை செய்யும் தொழிலாளி.ஒரு கால்பந்து வீரரான மகன் மற்றும் தங்கை.அமைதியாய் செல்லும் வாழ்க்கை

அதே ஊரில் துபாயிலிருந்து வரும் செளபின்.மிடில் க்ளாஸ் முஸ்லிம் குடும்பம்.அவன் தங்கையோடு பிடித்த பெண்ணை காதலித்து கைப்பிடிக்க நாள் குறிக்கப்படுகிறது.

ஒருநாள் சூரஜ்ஜின் மகளுக்கு காய்ச்சல். மருத்துவமனை ஐசியூவில் அனுமதிக்கப்படுகிறார்.2 நாள் முழுக்க இரவும் பகலும் கவனித்துக் கொள்கிறார் சூரஜ்.மனைவியை விட்டுவிட்டு வீட்டுக்கு மெட்ரோவில் செல்லும்போது அசதியில் நீட்டி படுத்துவிடுகிறார்.அப்போது அதே ரயிலில் வரும் செளபின் அவரை போட்டோ எடுத்து குடிகாரன் என முகநூலில் பகிர அது சூரஜ்ஜின் வாழ்விலும் குடும்பத்திலும் ஏற்படும் குழப்பம் தான் கதை.இது தவறென தெரியவர செளபீனின் மன உளைச்சல், அவனை கைது செய்ய வரும் காவல்துறை அதிகாரி,இறுதியில் ஒரு நெகிழ்வான நிகழ்வுடன் படம் முடிகிறது.

#சூரஜ்

ஒருகை ஓசை, மொழி  படத்துக்குப் பின் ஒரு வாய் பேச முடியாத கதாநாயகன்.ரொம்ப உணர்வு பூர்வமாக இயல்பாய் அவரின் உடல்மொழி உள்ளது.தான் குடிக்கவில்லை என கதறும்போதும், மகனிடம் அதை உணரவைக்கும் போதும் நம் மனசையும் கரைத்துவிடுகிறார் சூரஜ்.

முகநூலை அன் இன்ஸ்டால் செய்வது,செய்ததவறுக்கு மருகுவது, மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிடுவது,மன்னிப்பு கேட்க மன்றாடுவது, இறுதிகாட்சியில் பீதி என  பக்கத்து வீட்டுக்காரராய் தெரிகிறார் செளபீன்.

#டின்ஜ்

*பொருத்தமான இடங்களில் வரும் மான்ட்கேஜ் சாங் கச்சிதம்

*படம் மெதுவாகத்தான் நகரும் ஆனால் ரசிக்கும் விதத்தில்

* வாய் பேச முடியாதவர் மனைவியும் அவ்வாறு இருப்பது நடைமுறை இயல்பாய் இருக்கிறது.பரிதாபம் வருகிறது.

*தந்தைக்காக கோபப்படுவதும்,
அந்த இயலாமையை தந்தையிடம் காட்டுவதும்,காவல் நிலையத்தில் ஆக்ரோஷமாகவும் மகன் வாழ்ந்திருக்கிறார்.இறுதியில் தன் தந்தை குடிகாரனில்லை எனவும் சமூக வலைதளத்தில் பகிர்கிறார்..தந்தையை விட்டுக்கொடுக்காமல்

*படத்தின் இறுதிக்காட்சி தான் மைல்கல்.பொழுதுபோக்கிற்கு ஒரு போட்டோ எடுத்து லைக்கிற்காக பகிர,
பாதிக்கப்பட்ட சூரஜ் அந்த கோபத்தில் அவரின்  குடும்பத்தை சந்திக்கும் போது அதை தன் நடிப்பால் உணர்வு பூர்வமாய் நம்மையும் உணர வைப்பார்.அட்டகாசம் சாரே.

ஒரு நல்ல எதார்த்த படம். பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday 17 April 2020

MANI


வீட்டிலிருந்து பார்
*மணி

உன்னைச் சுற்றி
பல்பு எரியும்...
வீடு அர்த்தப்படும்...
பகலின் நீளம்
விளங்கும்.

குளிக்காமல் உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் கலங்கும்

நொறுக்கித் தின்றால்
நூறு வயது-நீ
நொறுங்குத் தீனி தின்றே
நூறு கிலோவாவாய்

வீட்டிலிருந்து பார் !

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமாகும்
வருஷங்கள் யுகங்களாகும்

அண்டை வீட்டுக்காரன் கூட
அணுக பயப்படுவான்
எதிர்வீட்டுக்காரன் 
எச்சரிக்கையோடு பார்ப்பான் 

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
நீ தும்மினால்
 உலகமே ஒருமுறை
உன்னை கவனிக்கும்

செல்போன் ஒன்று உன்
கையிலிருக்கும் அல்லது 
சார்ஜில் இருக்கும்

வீட்டிலிருந்து பார்!

அடிக்கடி செய்தி பார்ப்பாய்
இறப்பு எத்தனை
என கணக்கிடுவாய்
இன்று பிழைத்து விட்டோம்
என இறுமாப்பு கொள்வாய்

ஓயாமல் யாரிடமாவது 
போனில் பேசுவாய்
கதறி அழும் தொலைக்காட்சிக்கு
கருணை காட்ட மாட்டாய்

வீட்டிலிருந்து பார்!

சும்மாதான இருக்கீங்க
எனப் பேசியே
வீட்டுவேலை வாங்குவார்கள்
அடிக்கடி கடைக்கு போய்வர
தாங்குவார்கள்

அழுக்குத்துணி குறையும்
அழுக்குப் பாத்திரம் நிறையும்

எப்படா விடியும்
எப்படா முடியும்
எனத் தோன்றும்

வீட்டிலிருந்து பார்!

-மணிகண்ட பிரபு

lock down article-chezhian


சிறப்புக் கட்டுரை: தனித்திரு



செழியன்

‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’ - கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது. சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது - ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்.’

பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.

இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன. கங்கை நதி குடிநீராக மாறுகிறது. சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது. இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது.

தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.



இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது. விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.

இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை. முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது. கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.

மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.

கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள். ‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.

துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது. என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.


ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன. வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.

கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.

1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். 65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள். இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்.

பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும். அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும். பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்? ‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.

‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.

இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம். வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.

கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன. தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.

நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர். இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.

மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும். சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது. கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில்தான் தளர்த்தினார்கள். எனில் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?

ஒரு நாள். பிறகு 21. பிறகு 19. பிறகு? இது தொடரும் நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும். முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.

அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.

அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.

இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள். ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம். மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?

இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும். முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான். அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.

சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது. ‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.

இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.

பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.

இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள். உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?

வெளியேறுவது என்பது கதவின் வழியாக மட்டும் அல்ல ஒரு நூலின் வழியாக, சமூக ஊடகம் வழியாக, திரைப்படத்தின் வழியாகவும் வெளியேற முடியும். எனவே தனித்திரு என்பதை வள்ளலாரின் பொருளில், விழிப்புடன் இருங்கள் என்பதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பொருளில், விலகி இருங்கள் என்பதை ஓஷோவின் அர்த்தத்தில் யோசிக்கும்போது இந்தத் தனிமையின் அர்த்தம் என்ன?

எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும். இதுபோல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும். எனவே இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.

தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை. இதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.

‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார். நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை. சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.

ஸ்பார்டகஸ் நாடகத்தில் ‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’ என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன். ‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தப் பேரிடரை முன்வைத்து தமிழரின் மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.

நன்றி: மின்னம்பலம் 

கட்டுரையாளர் குறிப்பு

செழியன், சர்வதேச விருதுகளும் தேசிய விருதும் பெற்ற திரைப்பட  இயக்குநர்,ஒளிப்பதிவாளர், எழுத்தாளர். உலக சினிமா தொகுதிகள் உள்ளிட்ட திரைப்படம், மேற்கத்திய இசை குறித்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.