Wednesday 28 September 2016

சார் ஒரு கொஸ்டீன்- யுகபாரதி

சார் ஒரு கொஸ்டின்...
‘சோற்றைக் குறைத்தால்
சுகர் வராது
சோம்பலைத் தவிர்த்தால்
சுபிட்சம் வந்துவிடும்
எச்சரிக்கையோடிருந்தால்
எண்பது வரை சுகவாழ்வு
பார்த்து நடந்தால்
விரிவடையும் பாதைகள்
படிப்பைத் தொடர்ந்தால்
பஞ்சத்தை வெல்லலாம்
வளைந்துக் கொடுத்தால்
வாழ்வது சிரமமில்லை
இறங்கிப் போ
எல்லாமே எளிதுதான்...’ என
பிரசங்கம் செய்தவரிடம்
பிரியத்தோடு கேட்டேன்...

‘அசைவத்தை நிறுத்தினால்
ஆக முடியுமா
அய்யராக..?’

-யுகபாரதி

எறும்பு

எறும்பு

“செத்துப்போன
வண்ணத்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்...

பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை
விருந்தைச் சுமக்கும்
கர்வமும் இல்லை
அவைகளுக்குள்..!”

-          வசந்தகுமாரன்
(மனிதன் என்பது புனைப்பெயர்)

கனிமொழி

அப்பா

“சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா.

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது.

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது.

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது.

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது.

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது.

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?”
                               
                                -  கனிமொழி.

நெல்லை ஜெயந்தா

மனிதர்கள்
தம்மைத் தொலைத்துவிட்டு
இறைவனை
தேடுகிற இடம்
"கோயில்"!

*பள்ளிகள்
உயிர்த்தெழும்
பெற்றோர்கள்
அறையப்படுவார்கள்
பிள்ளைகள்
சிலுவை சுமப்பார்கள்

- நெல்லை ஜெயந்தா

ரோஸ்-ஆயிஷா நடராஜன்

ரோஸ் - (ஆயிஷா.ரா.நடராசன்) ஒரு பார்வை:

அப்பா - அம்மா இருவரும் வேலைக்குச் செல்கிற குடும்பத்தின் ஒரே பிள்ளை,சிறுவன் தேவா. இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனது வீட்டுத் தோட்டத்திலுள்ள ரோஜாச்செடியில் பூ பூத்திருக்கிறது. தூங்கி எழுந்ததும் ரோஜாப்பூவைப் பார்க்கும் ஆர்வத்திலிருக்கும் தேவா... அலுவலக அவசரத்தில் பரபரக்கும் அவனது அம்மா- அப்பா. இவர்களிடையேயான எதார்த்த உரையாடலோடு தொடங்குகிறது கதை.
அப்பா-அம்மாவின் அலுவல் அவசரங்களால் ரோஜாப்பூவைப் பார்க்க அனுமதிக்கப்படாத சிறுவன் தேவாவின் எண்ண ஓட்டங்களை ஒரு கோர்வையாக்கி அன்றைய நாள் முழுதும் வகுப்பறை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டியிருக்கும் ஆசிரியருக்கு ஒரு சபாஷ்.

"டேய் எம்.சக்தி" என்று தன் நண்பனை, அவனது இனீஷியலோடு விளிக்கும் தொனியில் நம்மையும் நம் பழைய வகுப்பறை நினைவுகளுக்குள் கைபிடித்து அழைத்துச் சென்றுவிடுகிறார், ஆயிஷா.

தன் வீட்டில் ரோஜா பூத்திருப்பதாக ஆங்கில ஆசிரியரிடம் தேவா கூறியபோது, "பூவைப் பார்ப்பது முக்கியமில்லை. அதற்குரிய spelling தெரிகிறதா என்பதுதான் முக்கியம்" எனும் ஆசிரியரின் பதிலில்,நமது கல்விமுறையின் முரண்கள் நம் கண்முன் வந்து போகின்றன.

இடைவேளையின்போது "வரிசையில போ டா; இல்லாட்டி பி.டி மிஸ் அடிப்பாங்க" எனும் நண்பனிடன் "எனக்கு அர்ஜென்ட்டா பாத்ரூம் வருதுடா, எப்படி வரிசையில போறது?" என்கிற குரலின் வலியை யோசிக்கும்போது, நமது வகுப்பறை கட்டுப்பாடுகளின் கட்டுகளை,சிறிதளவேனும் தளர்க்கவேண்டுமென்று தோன்றுகிறது.

அம்மா, அப்பா தொடங்கி ஆங்கிலம், தமிழ் ஆசிரியர்களைக் கடந்து வாட்ச்மேன் தாத்தா வரை யாரேனும் ஒருவராவது தனது ரோஜாப்பூவைப் பற்றி தன்னைப் பேசவிட மாட்டார்களா என்கிற ஏக்கம் சிறுவன் தேவாவோடு கூட, நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

அத்தனை அலுவல்களும் முடிந்து,இரவு படுக்கைக்காக வீடு திரும்பிய சிறுவன் தேவா, சன்னலின் வழியே வாடிய மலரைப் பார்த்துத், தானும் வாடுகிறான். ஏக்கத்தின் மிகுதியால் பிள்ளைக்குக் காய்ச்சல் ஏற்படுகிறது.

"காசு கொடுத்து வேற ரோஜா வாங்கிக்கலாம்" என்கிற அவனது அம்மாவின் ஆறுதல் மொழிக்குள் அடங்காமல் , மீண்டும் தன் தோட்டத்தில் ஒரு ரோஜா பூக்குமா என்ற சிறுவனின் கேள்வியோடு முடிகிறது இப்புத்தகம்.

இன்றைய கல்வி சூழலில் , காகிதங்களைக் கடந்து பிள்ளைகளை சிறிதளவேனும் அவர்களுக்குப் பிடித்ததைச் செய்ய வாய்ப்பளிக்க வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார், ஆசிரியர் ஆயிஷா நடராசன்.

இல்லையெனில்,உனக்கு என்ன பிடிக்கும் என்ற கேள்விக்கு நாளைய பிள்ளைகளிடம் பதிலே இல்லாமல் போய்விடும்.
எனவே,
#குழந்தைமையை_கொண்டாடுவோம்
ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம். பிள்ளைகளைப் பேச விடுங்கள்.

நூலின் பெயர் #ரோஸ்
ஆசிரியர் - #ஆயிஷா_ரா_நடராசன்
விலை - ரூ 40/-
வெளியீடு- #பாரதி_புத்தகாலயம்
பக்கங்கள்- 64

கவிதை-தீபச்செல்வன்

நறுக்கு

தோல்விகள் நமக்கு ஆசிரியனாக இருக்க வேண்டும் .
வெட்டியானாக இருந்துவிடக்கூடாது

புத்தக அறிமுகம்

*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*

*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*

இன்னும் 6⃣4⃣நாட்களே உள்ளன ...

அறிமுக நூல் : 3⃣7⃣

இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?

*நூலின் பெயர் :* விடுதலைப்பாதையில் பகத்சிங்

தொகுப்பு ஆசிரியர் : சிவவர்மா

இன்று பகத்சிங் பிறந்தநாள் !

பகத்சிங்..

இன்றைய போர்குணமிக்க இளைஞர்களின் ஆதர்சன புருஷன்...

விடுதலை வேள்வியில் தன்னை எரித்துக்கொண்ட மாவீரன்..

இந்த நூல் பகத்சிங் பற்றிய விவரங்களை 4 பகுதிகளில் தருகிறது...

*முதல் பகுதி* பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறை பற்றியது...

*இரண்டாம் பகுதி* பகத்சிங் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் பற்றியது..

இந்த பகுதி இதுவரை நீங்கள் அறியாத பகத்சிங்கை உங்களுக்கு காட்டும் ..

குறிப்பாக காதலை பற்றி தன் சகா சுகதேவ் க்கு எழுதிய கடிதம்..

*இன்குலாப் ஜிந்தாபாத்* என்ற உயிர்மூச்சு முழக்கத்தை கேலிசெய்த மாடர்ன் ரெவ்யூ பத்திரிக்கை ஆசிரியர் ராமானந்த் சாட்டர்ஜிக்கு எழுதிய  பதில் கட்டுரை..

கனவுலகம் என்ற கவிதை நூலுக்கு பகத்சிங் எழுதிய அணிந்துரை
என இரண்டாம் பாகம் முழுவதும் பகத்சிங் படைப்புகள்தான்..

*மூன்றாம் பாகம்* பகத்சிங்கின் சிறை குறிப்புகள்..

அதாவது பகத்சிங் தான்சிறையில் வாசித்த நூல்களில் இருந்து நேசித்த வரிகளை குறிப்பெடுத்த பகுதிகள்.,

*நான்காம் பகுதி* பிற்சேர்க்கை என்ற பகுதியில் அரிய புகைப்படங்கள்.

இவற்றை தொகுத்த சிவவர்மா பகத்சிங்குடன் விசாரணை காலங்களில் நெருக்கமாக இருந்தவர்..

ஒர் அதர்ச்சி சம்பவம் இந்த நூலி்ல் உண்டு..

*பகத்சிங் சிறையில் எழுதிய சோசலிச தத்துவம், சுயசரிதை, இந்திய புரட்சி இயக்க வரலாறு, மரணத்தின் நுழைவாயில் என்ற நான்கு கையெழுத்து பிரதி நூல்கள் சிறையில் இருந்து மறைத்து ஜலந்தரில் உள்ள லஜ்ஜாபதி  என்பவரிடம் கொடுக்கப்பட , அவரிடமிருந்து அது விஜயகுமார் என்பவரிடம் செல்ல பிரிட்டிஷ் ஆட்சி தேடுதல் வேட்டையில் விஜயகுமார் சிக்க, அவர் பயந்து அந்த கையெழுத்துபிரதிகளை தீயிட்டு கொழுத்தி விடுகிறார்..*

அந்த பிரதி மட்டும் இருந்திருந்தால்...

வாசியுங்கள்
இன்னும் பல தகவல்கள் உண்டு.

வெளியீடு  : பாரதி புத்தகாலயம்
விலை        : ரூபாய் 200
பக்கங்கள் : 442

வாசிப்பை சுவாசமாக்குவோம் !

*நம்பிக்கையுடன்*
         ஸ்ரீதர்
��திண்டுக்கல்

பிரம்மராஜன் கவிதை-surya fn

பிரம்மராஜன் கவிதைகள்
-------------------------------------------------
1)பிரம்மராஜன் கவிதைகள் இசை,ஓவியம்,வாசிப்பு ஆகியவை தனிமனிதனில் அல்லது இயற்கையின் மீது பொருத்திப் பார்ப்பதால் உருவாகும் ஒன்றாக இருக்கிறது.

2)பிரம்மராஜன் கவிதைகளில் கவிதை உணர்ச்சியை தான் ஏற்படுத்த வேண்டும் என்ற மரபு தவிர்க்கப்படுகிறது. இங்கு அறிவானது உணர்வாகிறது .மேலும் உணர்ச்சிகளின் Juxtaposition அவரது கவிதைகளில் மிகுந்து காணப்படுகிறது. அதன்காரணமாக ஒன்று இன்னொன்றை அடைந்து அது பலகுரல் தன்மை கொண்டதாகிறது.பிரம்மராஜன் கவிதைகள் ஒரு வாசிப்பில் தீர்ந்துபோவதில்லை. ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு மையம் கிடைக்கிறது

3)நற்றிணை, கிழக்கு ஐரோப்பிய கவிதைகள் ஆகியவற்றுடன் தான் பிரம்மராஜன் கவிதைகளை ஒப்பிட முடியும். நற்றிணையின் பலதளத் தன்மை, இரண்டு குறிப்புகளை சொல்லி மூன்றாவதை உணர்த்ததுதல் ஆகிய உத்திகள் பிரம்மராஜன் கவிதைகளில் சரளமாக தென்படுகிறது. மேலும் கிழக்கு ஐரோப்பிய கவிதைகளின் இறுக்கமான கட்டமைப்பை இவருடைய கவிதைகளிலும் காணலாம்.கவிதையில் இருந்து ஒரு சொல்லை நீக்கினாலும் கவிதையே சீரழிந்து விடும் அளவுக்கான இறுக்கம் பிரம்மராஜன் கவிதைகளின் தனிச்சிறப்பு. இதே தன்மையை கைலாஷ் சிவனின் சூன்யபிளவு என்ற முழுக்க முழுக்க படிமங்களால் ஆன கவிதை தொகுப்பில் காணலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

4)மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில் பிரம்மராஜன் கவிதைகளில் இணைப்புசரடுகள் பெரும்பாலும் இல்லை. அதன் காரணமாக வாக்கியத்தின் இறுதி அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையுடன் இணைந்து மற்றொரு பிரதி உருவாகிறது.

5)பிரம்மராஜனின் கவிதைகளை டாடாயிச தொடர்ச்சி என சொல்லலாம். ஏனெனில் அவருடைய கவிதைகள் Tristan Tzaraவின் How to make Dadist poem என்ற கவிதை உருவாக்கம் பற்றிய கவிதையின் படி செய்தோம் எனில் ஏகப்பட்ட பிரதிகளை தருவிக்கலாம் . மேலும் அவருடைய பெரும்பான்மை பாடுபொருள் கோபம், எதிர்வினை என்பது குறிப்பிடத்தக்கது. இதை மஹாவாக்கியம் , புராதன இதயம் ஆகியவற்றில் காணலாம்.

6)1)படிமக்கவிதை -அறிந்த நிரந்தரம்
2)மிகக்குறைவான அலங்கார தன்மைகளை உடைய கவிதைகள் -வலி உணரும் மனிதர்கள்
3)மொழிரீதியான கவிதைகள் -ஞாபகசிற்பம்
4)Extreme Plain Poetry- புராதன இதயம்
5)மேற்குறிப்பிட்ட மூன்று போக்குகளும் கலந்த தளர்வான நடை கவிதைகள் -மஹாவாக்கியம்
என்று அவருடைய கவிதைகள் பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளது.ஒவ்வொரு தொகுப்பும் முந்தைய தொகுப்பின் தேக்க நிலையை உடைத்துக் கொண்டு வந்துள்ளது.

7)பிரம்மராஜனின் அசாத்யமான கவிதைகள் எனில் புராதன இதயம் தொகுப்பில் இருக்கும் புராதன இதயம், நெய்தல் தேசம், வெற்று நானும் வெற்று நீயும் ஆகும். ஏனெனில் படிமங்களை பயன்படுத்தாமல் மொழியும் தளர்வடையாமல் நீள் கவிதை பல்குரல் தன்மையுடன் பல தளங்களுடன் என்பது கவிதையை பொருத்தவரையில் அசாத்யமான முயற்சி. இது அந்த மூன்று கவிதைகளில் வெற்றிகரமாக செய்துகாட்டப்பட்டுள்ளது .

8)அறிந்த நிரந்தரம், எதிர்கொள்ளல் ,உலோக தாலாட்டு, புராதன இதயம், நெய்தல் தேசம், வெறும் நானும் வெறும் நீயும் , புதிய கில்லட்டீன் ,கடல் பற்றிய கவிதைகள்(17), சித்ரூபினி கவிதைகள்(5),பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம் ,எதிர்கவிதையாளருடன் ஒரு பேட்டி ,நிலவின் இதயத்தாளம் ,கையிலாயத்திற்கடியில் பத்து தலைகள்,அதற்கு பிறகும், யுக அந்தரத்தில் ஒரு ஹரன்,தெரிதல் புரிதல்,மொழி மீறிய காதல்(கள்) , மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள் , முதல் மற்றும் இறுதி வரிகள் ஆகியவை சிறந்த கவிதைகள் என சொல்லலாம்.

9)பிரம்மராஜன் கவிதைகளில் குறைபாடு என்னவெனில் , கவிதைகளில் பெரும் பின்புலம் கட்டமைக்கப்பட்டு கடைசியில் ஒரு பகுதி மட்டும் எஞ்ச மற்றவற்றை நீக்கிவிடுதல் அல்லது அர்த்தம் கலைத்தல் போக்கு. இதனால் கவிஞன் வரிகளை வீணாக்குகிறான் . இந்த பிரச்சினை புராதன இதயம் தொகுப்பில் மிகுந்து காணப்படுகிறது. இந்த அர்த்தம் கலைத்தல் என்பதை உத்தி என்று சொன்னாலும் அதை கவிதையின் பிரச்சினை என்றே கருதுகிறேன். மேலும் அவருடைய கவிதைகளில் உணர்ச்சி-அறிவு சமநிலை தவறி போகிறது என்று நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் .கவிதையின் அறிவுத்தன்மைக்கு அவர் சகாயம் தான் செய்கிறார். ஆனால் அது மிகுந்து விட்டதோ என்று தோன்றுகிறது.

10)பிரம்மராஜன் கவிதைகள் இந்த உணர்வு-அறிவு சமநிலையோடு, அர்த்தம் கலைத்து வரிகளை வீணாக்கும் போக்கு இல்லாமல் வெளிவரும் எனில் அது மேலும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
மற்றபடி புரியவில்லை என நாகரிகமாக சொல்லி தன் மீதுள்ள தவறை ஆசிரியன் மீது சுமத்துவது என்பது ஆபத்தான போக்கு. வாசகனை தயார் செய்யும் பிரதிகள் இருக்கத்தான் செய்கிறது. எப்படி உலிசஸ் நாவலோ அது போலத்தான் பிரம்மராஜன் கவிதைகளும். இதுவே கணக்கு புரியவில்லை எனில் ஆசிரியரிடம் கேட்டு தெளிந்து கொள்கிறோமோ அது போலத்தான் கவிதையும். கவிதை புரியவில்லை என்பது முழுக்க முழுக்க வாசகனின் பிரச்சினை. அவன் தான் முழு முயற்சி எடுக்க வேண்டும் .
மேலும் கவிதை என்பது உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்பது பிரம்மராஜன் கவிதைகள் உணர்த்துவது.

(ஜென்மயில் தொகுப்பை தவிர்த்து இது எழுதப்பட்டிருக்கிறது.)

பெரியதும் சிறியதும்

நினைத்தது நடக்கும்வரை
அறிவே பெரிதாகத் தெரியும் !
நினைத்தது நடக்காதவரை
நம்பிக்கையே பெரிதாகத்
தெரியும்!
எதிர்பாராதது நடந்துவிட்டால்
தெய்வம் பெரிதாகத்
தெரியும் !
எதிர்பார்த்தது இடறப்பட்டால்
ஞானம் பெரிதாகத் தெரியும் !
திறமை எப்போது செயல்இழந்து போகிறதோ ஊழ்வினை பெரிதாகத் தெரியும் !
பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்குத் தெரியும் !

Tuesday 27 September 2016

கல்யாண்ஜி

நசிங்கிப் போனவை

“சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது.
அனைத்துத் திசைகளில்
பழங்கள்.

தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்.

பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை.”
                                           -   கல்யாண்ஜி.

சிகரெட்டை விடுவதற்கு-சுஜாதா

சிகரெட்டை விடுவதற்கு…     – சுஜாதா

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சிகரெட் பழக்கம் என்பது பைனரி. சாதி இரண்டொழிய வேறில்லை... சிகரெட் பிடிப்பவர். பிடிக்காதவர். குறைவாகப் பிடிப்பவர், எப்போதாவது பிடிப்பவர். இதெல்லாம் ஏமாற்று. கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிடவேண்டும். இருபதிலிருந்து பத்து, பத்திலிருந்து எட்டு என்று குறைப்பதெல்லாம் த.தானே ஏமாற்றிக் கொள்வது. தப்பாட்டம்.

முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும். இந்த இம்சை தேவைதானா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர் குடிக்கவேண்டும்.
                  
சிகரெட்டுக்குப் பதில் பாக்கு, பான்பாரக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. யாரையாவது அடிக்க வேண்டும்போல் இருக்கும். அதற்கு வசதியில்லையென்றால் ஒரு மேளம் வாங்கிக் கொள்ளுங்கள். கூடவே உதைப்பதற்கு ஒரு கால் பந்தும் சுழற்ற ஒரு சாவிச் சங்கிலியும் வைத்துக்கொள்ளலாம் (கண்கள் ஜாக்கிரதை). ஒரு வாரம் ஆனதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத்துவங்கலாம். தமிழ்ப் படங்கள்போல் வெற்றிகரமான பத்தாவது நாள், பதினைந்தாவது நாள். சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம். இப்படி! ஆனால் இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும், மிதப்புக்காக பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக்கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

உமாமகேஸ்வரி

அவனில்லாத வீட்டில்
ஒரு நிசப்தக் குன்று வளர்கிறது
இப்போதெல்லாம் இல்லை
அலறும் தொலைக்காட்சி
இறைபட்ட புத்தகங்கள்
கொதிக்கும் செல்போன்
கலைந்து கிடக்கும் உடைகள்
பள்ளிப் பேருந்திற்கான பரபரப்பு
ஞாயிறுகளில் சிறுவர் குரல்கள்
இரையும் வாசல்
சுவரில் பந்துத் தடங்கள்
சனி இரவில் அவனோடு
ஹோட்டலுக்கான நடை.
என் சமையல் பற்றி அவன் கிண்டல்கள்.
அவனுக்கான சிறு முத்தங்கள்
இல்லை இவையேதும்.
எல்லாவற்றையும் அவன்
பிரயாணப் பைக்குள்
எடுத்துப் போயிருக்கிறான்.
இங்கிருக்கிறார்கள்
அவன் எங்கேயிருக்கிறான் என்று
கேட்பவர்கள் மட்டும்.
-உமா மகேஸ்வரி (காலச்சுவடு - செப்டம்பர்)

சுந்தர ராமசாமி

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்
என்ன பயன்?

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர
நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை

-சுந்தர ராமசாமி

ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் ஒரு கல்லூரியில் பணியாற்றியபோது சக பேராசிரியர் கோபமாக அவரை பார்க்க வந்தார்..
- தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க சொன்னால் , சென்ற ஆண்டு கேள்விகளை இந்த ஆண்டும் செலக்ட் செய்திருக்கிறீர்களே..உங்களுக்கு அறிவியல் குறித்து சரியாக தெரியவில்லை என நினைக்கிறேன்
ஐன்ஸ்ட்டீன் சொன்னார்
- ஆமா. சென்ற ஆண்டுக்கான கேள்விகளை மாற்றவில்லை.. ஆனால் சென்ற ஆண்டுக்க்கான பதில்கள் இந்த ஆண்டு மாறிவிட்டன... அதே பதில் வருகிறதா.. வேறு பதில் வருகிறதா என பார்ப்பதுதான் உண்மையான தேர்வு... உங்களுக்குத்தான் அறிவியல் குறித்து சரியாக தெரியவில்லை... நேற்றைய உண்மை , இன்று செல்லுபடியாகாது.. உண்மை என்பது சார்பியல் தன்மை கொண்டது..

மனுஷ்யபுத்திரன்

அதற்குள்
.....
அதற்குள்
அடுத்த தீபாவளி வந்துவிட்டது
சென்ற தீபாவளியின்
கரிந்த மத்தாப்புகளையே
இன்னும் நான் செடி மறைவிலிருந்து
எடுத்துப்போடவில்லை
அதற்குள்
அடுத்த காதல் வந்துவிட்டது
சென்ற காதலின்
ஈமச்சடங்குகளையே
இன்னும் நான்
செய்து முடிக்கவில்லை
- மனுஷ்ய புத்திரன்
27.9.2016

ஓஷோ

ஓஷோ

பாதையோ மிக நீண்டது
பாதையற்ற பாதை அது
தனி வழி பயணம் அது
வரைபடங்கள் இல்லை
வழிகாட்டியும் இல்லை
ஆனால்,,,, வேறு வழியும் கிடையாது அதிலிருந்து தப்பி செல்லவும் முடியாது
அதை தவிர்க்கவும் வழியில்லை
அடைய வேண்டிய குறிகோள் சாத்திய மற்றதாய் தோன்றுகிறது
ஆனால் போக.வேண்டுமென்ற ஆவல் தன்னியில்பானது
அந்த ஆசை ஆன்மாவின் அடியாழ ஆசை
உண்மையில் ஆசையும் நீயே தேவையும் நீயே பிரக்ஞையும் அப்படியே
இந்த அறைகூவல் இருப்பதால் இந்த சாகசங்கள் இருப்பதால் அது இப்படி இருக்கிறது
அதனால்
காலத்தை வீணடிக்காதே
,,,,,தொடங்கு
கணக்கு போட்டு பார்க்காதே,,,, தொடங்கு
தயக்கம் காட்டாதே,,,,,தொடங்கு

மூவாயிரம் மைல் பயணமும் ஓரே ஓரு காலடி வைப்பில் தான் ஆரம்பமாகிறது
,,,,,,நீ,,, எப்போது விழிப்புணர்வுக்குமுதல் காலடி வைக்கப்போகிறாய் என்பது தான் கேள்வி

கண்ணதாசன்

காலக்கணிதம்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரப் பதுதான் நாட்டின் சட்டம்!

-கண்ணதாசன்

மெளனம்

மெளனம் கம்பீரமானது
மெளனம் ஆழமானது
மெளனம் எதிரியை மிரட்டும்
மெளனம் கலைத்தால்
நமது சொற்கள்
மெளனத்தை விட
வலிமையானதாக இருக்க வேண்டும்

-படித்ததில் பிடித்தது

பேயோன்

ஒரு வாழ்நாள் காலம்

காலையில் வெளியே போக செருப்பை மாட்டிக்கொண்டேன். கொஞ்சம் கனைத்தேன். மாட்டிக்கொண்டேன். கூடத்தில் சுவர்ச் சாமி படத்திற்குப் பூமாலை மாட்டிக்கொண்டிருந்த மனைவி திரும்பிப் பார்த்தார்.

"வெளியவா போறீங்க?" என்றார், 'என்னை மீறிப் போய்விடுவாயா?' என்ற தொனியில்.

"இல்லையே, செருப்பு சரியா இருக்கான்னு மாட்டிப் பாத்தேன்" என்றேன்.

"யாருகிட்ட கத வுடுறீங்க? இந்த செருப்பு நாலு மாசத்துக்கு முன்னாடி வாங்குனீங்க. அன்னிக்கு லாரி ஸ்ட்ரைக்கு, நல்லா ஞாபகம் இருக்கு."
‍‍
"நான் இது புதுசுன்னு சொல்லலியே." வியர்த்தம்தான். இருந்தாலும் நான் போராளி.
‍‍
"பின்ன அப்ப கவனிச்சு வாங்காம இப்ப என்ன ஆராஞ்சுக்கிட்ருக்கீங்க?"

"பெட்டர் லேட் தேன் நெவர்-ன்னுவாங்களே…"

"அந்தக் கதையெல்லாம் எங்கிட்ட வேணா….ம், வர்ற வழியில அரைக் கிலோ துவரம்பருப்பு, காக்கிலோ வெங்காயம், பையனுக்கு ஒரு மீடியம் டூத் பிரஷ்ஷு…. அப்புறம் சன்ஃப்ளவர் ஆயில் ஒரு கிலோ, எல்லாம் வாங்கிட்டு வாங்க."

"நான் பஸ் ஸ்டாண்டு பக்கமா போறேன். நீ போய் வாங்கிக்கயேன்."

"நான் டிரஸ் மாத்திட்டு மூஞ்சு கழுவிட்டுக் கெளம்பணும். அதெல்லாம் ஆவற வேலையில்ல. எனக்கு வீட்ல வேல இருக்கு. போய்ட்டு சீக்கிரமா வந்துருங்க."

வாழ்வியல் மீது வெறுப்பு மண்டிட, நடைப்பிணமாய்ப் போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு எங்கள் தெரு மளிகைக்கடைக்கு நடந்தேன். இதே போன்ற ஒரு சூழ்நிலையில் "ரிலாக்சு ரிவிட் ஆயிருச்சு" என்று லபக்குதாஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு கணவன் சாலையில் வெறுங்கையை வீசி நடக்கக் கூடாது இந்த மனைவிகளுக்கு.

கடையில் கூட்டம். மூன்று படி ஏற வேண்டும். இரண்டு படிகள் அவுஸ்புல். குடும்பஸ்திரீகள், குடும்பஸ்தர்கள், மாமாக்கள், சிறுவர்கள், சிறுமிகள், பட்டியல் வைத்திருப்பவர்கள், இரண்டு ரூபாய்க்கு வெற்றிலை வாங்க நீண்ட நேரம் நின்றிருந்த வாய் ஓயாத கட்டைக் குரல் ஆசாமி என்று எல்லோருடைய முறையும் முடிந்த பின்பு என்னுடைய பொருட்களை வாங்கிக்கொண்டு "சில்றையா குடுங்க சார்"-க்கு மௌனமாக ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு ஒருவழியாக வேலை முடிந்து கிளம்பினேன்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். வீட்டிலிருந்து கிளம்பி 35 நிமிடங்கள் ஆகியிருந்தன. ஆனால் மத்தியானம் ஆகிவிட்ட மாதிரி இருந்தது. இரு கைகளிலும் வெங்காயச் சருகை அடுக்குகளாகப் பிளந்த மாதிரி பாலித்தீன் பைகள் (கிழிந்து எல்லாம் கொட்டிவிடுமோ!!! "அட அவங்கிட்ட ரெண்டு ரெண்டு பையா வாங்கத் தெரியாதா உங்களுக்கு?") சுமந்து தோள்கள் வலிக்க நினைத்துப் பார்த்தேன்… மூன்று வருசங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனுக்கு அப்பனாகி அவனே ஓர் அப்பன் போல் வளர்ந்து அரசு வேலை, தனியார் வேலை, முழுநேர எழுத்து, பதினெட்டு ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை, குடும்பப் பொறுப்புகள், உறவு அரசியல், பஞ்சாயத்துகள், வக்காலத்துகள், பயணங்கள், கவலைகள், வீண் செலவுகள், விவாகரத்து நம்பிக்கைகள், சாவுகள், நட்புகள், தேர்தல்கள் என்று பல வாழ்நாள் காலங்களை ஓட்டித் தள்ளிவிட்ட எவனாவது வெளியே கிளம்பும்போது கனைத்துவைப்பானா?