Friday 30 September 2022

பொன்னியின் செல்வன் விமர்சனம்*மணி




நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்ன தியேட்டர் முதல் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வரை கூட்டம். டைட்டில் கார்ட் போடும்போது சாமி சப்பரம் வரும் போது போட்டோ எடுப்பது போல் அத்தனை பேருல் போட்டோ எடுத்தனர்.படித்தவர், படிக்காதவர் என அத்தனை பேரும் ஆர்வமுடன் வந்திருந்தனர்.நாவலை படமாக்குவதில் என்னென்ன சிக்கல் எப்படி பல்லாண்டுகளாக விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பொன்னியின் செல்வனை திரையில் காட்டுவர்..கற்பனை நிஜப்படுத்த முடியுமா என்பதை எல்லாம் பூர்த்தி செய்தனரா என்பதை படமாய் பார்த்ததை பகிர்வோம்

#கதை

ஆதித்த கரிகாலன்(விக்ரம்)பல்வேறு போர்களில் வெற்றிக் கொண்டு வருகிறார்.தன் தாய் நாடான சோழ நாட்டில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை தன் தந்தை பிரகாஷ் ராஜ்க்கும், தங்கை த்ரிஷாவுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பவும் உளவு பார்க்கவும் கார்த்தியை அனுப்புகிறார்.கடம்பூர் மாளிகையில் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் தலைமையில் நடக்கும் சோழ நாட்டின் அதிகாரப்ப்போட்டியில் பங்காளி மதுராந்தகன் ரகுமானை மன்னராக்க முடிவெடுக்கின்றனர். இதை அறிந்து கொண்டு கார்த்தி தஞ்சாவூர் நோக்கி செல்கையில் நந்தினி ஐஷ்வர்யாவை சந்தித்து ஒரு டீல் பேசுகிறார் கார்த்தி.

கோட்டைக்குள் நுழைந்து மன்னரிடமும் த்ரிஷாவிடமும் செய்தி கூறுகிறார்.த்ரிஷா தன் தம்பி அருண்மொழி வர்மனை இலங்கையிலிருந்து அழைத்து வரும் டாஸ்க் தருகிறார். இலங்கையிலிருந்து ஜெயம் ரவியை அழைத்து வந்தாரா?பல போர்களில் வெல்லும் விக்ரம் தன் தம்பி அருண்மொழியை காக்க என்ன செய்தார்? ஏன் தஞ்சைக்கு செல்லவில்லை?சோழர்களை அழிக்கத் துடிக்கும் பாண்டியர்களின் திட்டம் வென்றதா?சோழ சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும்
ஐஸ்வர்யாவின் திட்டம் என்ன? என வலைப்பின்னலில் சிக்கிய கதைக்கு சீராக சிக்கெடுத்துள்ளனரா என்பதே கதை

#ப்ளஸ்

*கதாபாத்திரத் தேர்வு அற்புதம்

*எந்த இடத்திலும் கதைக்கு தேவையான திரைக்கதை அமைத்து சென்றிருப்பது மணிரத்னத்தின் பலம் 

*படத்தில்  ஐஸ்வர்யா நந்தினியாகவே வலம் வருகிறார்.

*கார்த்தி,ஜெயராம்,ஜெயம்ரவி, த் ரிஷா, கிஷோர் ஆகியோர் பெர்பெக்ட் மேட்ச்

*படத்தின் பலம் ரவிவர்மனின் ஒளிப்பதிவு.பொன்னி நதி, வங்ககடல்,கோட்டைகளை தத்ரூபமாக காட்டியுள்ளார். ரஹ்மான் இசை இன்னொரு பலம்

*தோட்டாதரணி கலை இயக்கமும், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் தொய்வின்றி போகிறது.

*ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பெரிய நடிகர் இருப்பது நல்ல திருப்தி

*"பேரழிகளை விட ஆசைகாட்டுவது மணிமுடி" "அழகில் மயங்கி விட்டீரா..கொஞ்சம்..என இழுக்கும் வசனங்களில் ஆசான் தெரிகிறார்

#மைனஸ்

*குந்தவையும் வந்தியத்தேவனும் சந்தித்துக் கொள்ளும் காட்சி புத்தகத்தில் ஈடு இணையற்ற காதல் காட்சி.இதில் தூரமாய் பார்க்கும் போது சாதாரணமாக பார்த்துட்டு திடீர்னு பிரம்மிப்பா பார்ப்பது போல இருந்தது. கதையில் இருவரும் ஓரிரு முறை பார்க்க மிஸ்ஸாகி பின்னர்தான் பார்ப்பார்கள் அந்த எதிர்பார்ப்பு.. இதில் அது மிஸ்ஸிங்

*த் ரிஷாவோடு வரும் வானதி கேரக்டர் இதில் ரொம்ப சிம்பிளா இருக்கும். பூங்குழலி போல வானதி கேரக்டருக்கும் மெனக்கெட்டிருக்கலாம்

*பாகுபலியில் போர்க்களத்தில் வரும் அந்த கல்லாலான குண்டு போடும் காட்சி இதிலும் வருவதால் அதை கம்பேர் பன்ன தோனுது.இன்னும் சில காட்சிகளும்

*சோழர்கள் பயன்படுத்திய போர் நுணுக்க முறையை அதிகம் காட்டியிருக்கலாமோனு தோனுது.

குறைகள் குறைவுதான். படத்தின் ஓட்டத்தில் தெரியவில்லை.நந்தினி அம்மாதான் ஊமைத்தாய்னு நமக்குத் தெரிந்தாலும் படிக்காதவர்க்கு அடுத்த பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும்.ஃபீல் குட் மூவி.
புத்தகத்தில் ஃப்ளாஷ்பேக் அதிகம். இதில் குறைவு.ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரே காட்சியில் வந்தாலும் அழுத்தமாய் தாங்கள் யார் என்பதை நடிப்பில் உணர்த்தியுள்ளனர். படமாய் திரையில் தொய்வின்றி செல்கிறது. கட்டாயம் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday 29 September 2022

சாரு மஜூம்தார்


இந்தியாவில் பொதுவாக நினைவு நாணயங்களே வெளியிடப்படுகிறது. ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் நினைவு பணத்தாளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. 

அது 1969ஆம் ஆண்டு. காந்தியடிகளின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டதுதான் அது. 

1969 முதல் 1970 வரை வெளிவந்த இந்த பணத்தாள்களில் அப்போது கவர்னராக இருந்த ஜா அல்லது அதார்கர் ஆகிய கையொப்பங்கள் இருந்தது. 

ரூ 2, ரூ 5 , ரூ 10 மற்றும் ரூ 100 பணத்தாள்களில் புத்தகம் படிக்கும் நிலையில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்ட, அந்த வரிசை வெளியீட்டில் என்னிடம்  ரூ 5 , இல்லை. 

+++

பணம்


இந்தியாவில் பொதுவாக நினைவு நாணயங்களே வெளியிடப்படுகிறது. ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் நினைவு பணத்தாளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. 

அது 1969ஆம் ஆண்டு. காந்தியடிகளின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டதுதான் அது. 

1969 முதல் 1970 வரை வெளிவந்த இந்த பணத்தாள்களில் அப்போது கவர்னராக இருந்த ஜா அல்லது அதார்கர் ஆகிய கையொப்பங்கள் இருந்தது. 

ரூ 2, ரூ 5 , ரூ 10 மற்றும் ரூ 100 பணத்தாள்களில் புத்தகம் படிக்கும் நிலையில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்ட, அந்த வரிசை வெளியீட்டில் என்னிடம்  ரூ 5 , இல்லை. 

+++

Dylan Thomas


இந்த வாழ்க்கை எப்பொழுதுமே உங்களுக்கு இரண்டாம் வாய்ப்பை வழங்குகிறது.

நாளை என்பது அதன் பெயர்.

- இந்த வாழ்க்கை எப்பொழுதுமே உங்களுக்கு இரண்டாம் வாய்ப்பை வழங்குகிறது.

நாளை என்பது அதன் பெயர்.

- Dylan Thomas

புத்தர்


அறியாமைக்கு ஆரம்பம் இல்லை,ஞானத்திற்கு முடிவு இல்லை.இரண்டும் ஒரு வட்டத்தையே உருவாக்குகின்றன

-புத்தர்

ஓஷோ

நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதில்லை. நீங்கள் அந்தக் கோபமாகவே மாறிவிடுகிறீர்கள் என்பதுதான் உண்மை.கோபத்தின் பிடியில் நீங்கள் இருக்கும்போது செய்யும் செய்கைக்கு நீங்கள் பின்னால் வருத்தப்படலாம்

-ஓஷோ

Wednesday 28 September 2022

கறுப்பு நிறம் அதிகளவு வெப்பத்தை உறிஞ்சும். இதில் கறுப்பு என்பது நிறமெனில், கறுப்பின் எந்த கூறு வெப்ப உறிஞ்சுதலுக்கு காரணமாகிறது?





ஒரு நிறத்தில் இருக்கும் பொருளானது, தன் மீது படும் ஒளியில் தன்னிறத்தை மட்டும் பிரதிபலித்துவிட்டு, மற்ற நிறங்களை உறிஞ்சிக் கொள்ளும். இதனால் தான், ஒரு பொருளின் நிறத்தை நம்மால் காண முடிகின்றது.


அதே வேளையில், வெள்ளை தன் மீது படுகின்ற அனைத்து ஒளியையும் பிரதிபலித்துவிடும், மாறாக கறுப்பு தன் மீது படும் ஒளியில் இருக்கும் அனைத்து ஒளிக்கற்றைகளை உறிஞ்சிக் கொள்ளும். சூரிய ஒளியில் இருக்கும் ஒளிக்கற்றைகளில் அகச்சிவப்பு கதிர்களும் இருக்கும், அவற்றின் அதிர்வெண் 430THz - 300GHz வரை இருக்கும். அவை தான் வெப்பத்தை அந்த பொருளின் மீது கடத்துகிறது.

கறுப்பு உறிஞ்சிய அனைத்து ஒளிக்கற்றைகளுக்கும் தனித்தனி அதிர்வெண் இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில், கறுப்பு நிறப் பொருளில் இருக்கும் அணுக்களின் அதிர்வெண்ணும், ஒளிக்கற்றைகளின் அதிர்வெண்ணும் ஒத்திருக்கும் வேளையில் பொருளின் ஒவ்வொரு அணுக்களினுள் இருக்கும் எதிர் மின்னணுக்களை அதிர வைக்கிறது. எதிர் மின்னணுக்கள் அதிர்ந்து அருகிலுள்ள அணுக்களை மோதுவதும் வெப்பம் உருவாக ஒரு காரணமாகிறது. இந்த வெப்பமும், சூரிய ஒளியில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களால் உறிஞ்சப்படும் வெப்பமும் தான், கறுப்பு அதிக வெப்பத்தை உறிஞ்சுவதற்கான காரணமாக அறியப்படுகிறது.
எனவே, கறுப்பு தன் மீது படும் ஒளியனைத்தையும் உறிஞ்சி, எதையும் பிரதிபலிக்காமல் இருப்பதே அதிக வெப்ப உறிஞ்சுதலுக்கு காரணமாகிறது.

-படித்தது

புத்தர்


எவையெல்லாம் உன்னுடையது இல்லையோ,அவற்றையெல்லாம் உன்னிடமிருந்து விடுதலை செய். நீ கொடுக்கின்ற விடுதலை தான் வரப்போகிற காலத்தில் உனது மகிழ்ச்சிக்கான பாதை.

- புத்தர்

Monday 26 September 2022

இந்திரன்


ஈகோ என்பது என்ன? நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு அடையாளம்.நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் கதைகள். எல்லாவற்றையும் பற்றியும் தீர்ப்பளிக்கும் ஒரு அதிகாரம். ஈகோவாய்ப் பிரதானப்படுத்தி செயல்படுகிற போது" நமக்கு என்ன கிடைக்கும்" என்று நினைக்கிறோம் தவிர "என்ன கொடுக்கப் போகிறோம்"என்று நாம் நினைப்பதில்லை.

 ஈகோவை கடந்த நிலையில் மனநிம்மதி காண மூன்று வழிகள் உள்ளன. 1 எல்லாவற்றையுமே நம்மை பார்த்து சொல்லப்பட்டவை என்று நினைத்து காயம் படாமல் இருக்க வேண்டும்.2 மன்னிக்கும் கலையை கற்றுக் கொள்ளுங்கள் 3 நம்மைச் சுற்றி உள்ளவர்களை அவர்களது குறைகளோடு ஏற்றுக் கொள்ளுங்கள். மன அமைதியோடுவாழுங்கள்.


-இந்திரன்

Sunday 25 September 2022

பெர்னாட்ஷா


ஒழுக்கம் என்பது கெட்ட செய்கையிலிருந்து விலகி இருப்பது அல்ல, கெட்ட செய்கையைச் செய்யாமல் இருப்பதுதான்

-பெர்னாட்ஷா

படித்தது


உங்கள் எதிரி புதர்களுக்குள் ஒளிந்திருக்கவில்லை. உங்களைத் தாக்குவதற்காக மலைப் பகுதிகளில் பதுங்கி இருக்கவில்லை.அது, பயம் என்ற பெயரில் உங்கள் மனதுக்குள் உட்கார்ந்திருக்கிறது

-படித்தது

தாமஸ் சோவல்


உனக்கு ஒன்றும் தெரியாது என்பதைத் தெரிந்து கொள்ள உனக்கு நிறைய தெரிந்திருக்க வேண்டும்.

-தாமஸ் சோவல்

Friday 23 September 2022

தீர்ப்புகளைத் திருத்த முடியுமா?


தீர்ப்புகளைத் திருத்த முடியுமா?

விலையுயர்ந்த மூன்று பீங்கான் ஜாடிகள் மன்னரிடம் இருந்தன. அரண்மனை பணியாளர் ஒருவர் அதை சுத்தம் செய்யும் போது உடைத்து விடுகிறார். கோபம் கொண்ட மன்னன் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறார்.. 

உனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் போது மீதமுள்ள இரண்டு ஜாடிகளை இப்போது பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அதனையும் உடைத்து விடுகிறார். ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார் மன்னர். உடைந்து போகிற ஜாடிக்காக மனித உயிரை எடுக்கச் சொன்ன உங்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

இவ்வாறு உடைப்பதன் மூலம் குறைந்தபட்சம் இரு உயிர்களை காப்பாற்ற முடியுமே அதனால்
இப்படி செய்தேன் என்கிறார். தனது தவறை உணர்ந்து தீர்ப்பை திருத்தி அவரை விடுவித்தார். மன்னர் காலத்திலிருந்து பல தீர்ப்புகள் திருத்தப்பட்டு இருக்கின்றன. திருத்துவதற்கான அவசியத்தை உணர்த்துகிறது விதத்தில் உணர்த்த வேண்டும்

-கழுகார்

ஸ்டீவன்


வருங்காலத்தை மாற்றவே முடியாது எனச்சிலர் நினைக்கிறார்கள்.உண்மை என்னவென்றால், வருங்காலம் என்பதே நாம் உருவாக்குவதுதான்

-ஸ்டீவன்

Thursday 22 September 2022

கலீல் ஜிப்ரான்


நினைக்காததை சொல்வதற்கும்
சொல்லாததை நினைப்பதற்கும்
இடையில் வீணாகிறது அநேக காதல்கள்

-கலீல் ஜிப்ரான்

அசோகமித்திரன்


அற்புதமானது என்பது
காலப்போக்கில் புதுமை
இழந்துவிடுகிறது.

சர்வ சாதாரணமானது
பிறக்கும் போது
மறையத் தொடங்கிவிடுகிறது.

ஆனால் சராசரியானது வெவ்வேறு
சிறு மாற்றங்களுடன் 
நீடித்து நிலைத்துவிடுகிறது.

-அசோகமித்திரன்

Wednesday 21 September 2022

பாஸ்கல்

உனக்கு இருக்கிற மூளை மட்டும் எனக்கிருந்தால், நான் உன்னைவிட பெரிய ஆளாகி இருப்பேன்!

நீ பெரிய ஆளானால்,என் மூளை தானாகவே உனக்கு வந்து சேரும்!

-பாஸ்கல்

Tuesday 20 September 2022

முத்துலிங்கம்


மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக ஒரு மருந்துக்கடைக்கு சென்றேன். 235டாலருக்கு மருந்து வாங்கியிருந்தேன்.பில் போடும் மூதாட்டி நூறு டாலர்களுக்கு மேல் வாங்கினால் 20%கழிவு என்றார்.எனக்கு புரியவில்லை. அவரே பில்லை இரண்டாக பிரித்து 20டாலர் கழிவு கொடுத்தார்.

வீடைபெறும்போது கேட்டேன். நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்?கம்பெனிக்காகவா, வாடிக்கையாளருக்காகவா என்றேன்

அவர் சொன்னார் 'கடவுளுக்காக'

-அ.முத்துலிங்கம்

ஓஷோ


பாக்கெட் கடிகாரம் ஒன்றை திருடி விட்டதாக ஒருவன் குற்றம் சுமத்தப்பட்டான். கடிகாரத்தை திருட்டுக் கொடுத்தவர் கொஞ்சம் பார்வை குறைபாடு உள்ளவர். மேலும் கண்ணாடி அணிந்தால் மட்டுமே அவரால் பார்க்க முடியும். இந்த ஆளை உங்களால் அடையாளம் காண முடிகிறதா இந்த ஆள் தான் உங்களது கடிகாரத்தை எடுத்துக் கொண்டாரா என்று நீதிபதி கேட்டபோது,அந்த மனிதர் இது கொஞ்சம் கடினமானது.

 ஏனெனில் நான் கண் கண்ணாடி இல்லாமல் சரியாக பார்க்க முடியாது. மங்களாகத்தான் தெரியும். ஆகவே திருடியவர் இந்த ஆள் தானா இல்லையா என்று சரியாக கூற முடியாது என்றார். மேலும் இதனை கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாததால் அந்த மேஜிஸ்ட்ரேட் திருடியவரை விடுதலை செய்யும்படி ஆயிற்று. 

நீதிபதி திருடிய வருடம் நீ போகலாம் என்றார். அவன் ஆச்சரியமாய் விழித்தான். இப்போது நீ போகலாம் என்று இரண்டாவது முறை கூறினார். உடனே அவன் அப்படியானால் நான் இந்த கடிகாரத்தை வைத்துக் கொள்ளலாமா? என்று கூறினான்.
நீங்கள் அவர்கள் கூறுவதை கேட்டுக் கொண்டே இருந்தால் முடிவில் அவர்களது வேதாந்த தத்துவங்கள் எல்லாம் பயனற்றவை என்பதை நீங்கள் கண்டு கொள்கிறீர்கள். முடிவில் உண்மையை காட்டிக் கொடுக்கின்ற ஏதோ ஒரு கேள்வியை கேட்டு விடுவார்கள்

-ஓஷோ

Monday 19 September 2022

ரகுநாத்


அழைப்பினை
ஏற்கையில்
பிடித்த பாடல்
உயிரிழக்கிறது

வேண்டாதவரின்
அழைப்புகள்தான்
கணநேரமாயினும்
நீட்டிக்கச் செய்கின்றன
இசைக்குறிப்பினை.

-ரகுநாத்

மகுடேசுவரன்


நடந்த தடங்களில்
பின்னோக்கி நடப்பதற்கும்,
பாதையோரத்தை 
அன்போடு பார்ப்பதற்கும்,
தொடங்கிய இடத்திற்கு
நன்றி சொல்வதற்கும்,
குரைக்க எழுந்த நாயை
அமர்த்துவதற்கும்,
எதிர்பட்டவர்களின்
இன்முகம் காண்பதற்கும்,
ஒரு காலம்
வாய்க்கும்.

அதை முதுமை
என்கிறோம்..!

-மகுடேசுவரன்

தருமராஜ்


மனிதனின் ஆகப்பெரிய வேட்கை மெளனத்தை ஞாபகம் வைத்திருப்பது’ 

-டி. தருமராஜ்

செந்நாய்


நான்தான் செந்நாய் எழுதுகிறேன். நலமா? மிகுந்த அச்சத்தில் உங்கள் உதவி வேண்டி இதை எழுதுகிறேன்.

மனிதனின் உண்மைத் தோழனான நாய் இனத்திலேயே முன் தோன்றி, லட்சக்கணக்கான வருடங்களாக வனத்தில் வசிப்பவர்கள் நாங்கள். எங்கள் நிறம், இளம் சிவப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையின் காவல் தெய்வங்களாக, தமிழின் மூத்த குடிகளான மலைவாழ் குரும்பர்கள் எங்களைத்தான் கருதுகின்றார்.

தமிழில் செந்நாய்கள் என்றும் மலையாளத்தில் வட்டை கரவு என்றும் கன்னடத்தில் கென் - நாய் என்றும் தெலுங்கில் ரேச்சு குட்கா என்றும் எங்களைஅழைப்பார்கள். குவான் அல்பினஸ் (Cuon alpinus) என்ற உயிரியல் பெயர்கொண்ட எங்களுக்கு, பல சிறப்புகள் உள்ளன. வன நாய்களான ஓநாய்களிடமிருந்து நாங்கள் பலவிதங்களில் வேறுபடுகிறோம்.

குடும்பங்களாகவும் கூட்டங்களாகவும் நாங்கள் வாழ்கிறோம். நாய் வகையில், குகை அமைத்து வாழ்வது நாங்கள் தான். மண்ணில், பாறை இடுக்கில் எங்கள் குகைகள் அழகான பொந்துகளைப் போன்று இருக்கும். தோல் (Dhole) என்று ஆங்கிலேய வன நிபுணர்களால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஒரு காலத்தில், லட்சக்கணக்கில் வாழ்ந்த வேட்டையாடிகள் நாங்கள். புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் வேட்டையாடும் விலங்குகளையே நாங்கள் பகிர்வதுண்டு.

ஆங்கிலேயர் வருகையில்தான் எங்கள் பேரழிவு தொடங்கியது. வேட்டையாடும் விளையாட்டில், அவர்களது பிரதான இலக்காகிப் போனோம் நண்பா. ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜங்கிள் புக் தொடங்கி, பல நூல்களில் காடுகளின் ஒழுங்கற்ற மோசமான உயிர்களாக நாங்கள் சித்திரிக்கப்பட்டோம். மனிதர்கள் பார்க்கும் வீட்டு விலங்குகள் பக்கமே நாங்கள் வருவது கிடையாது. எங்களை வீடுகளில் வளர்ப்புப் பிராணியாக்குவதும் சாத்தியம் இல்லை.

வெறும் 25 ரூபாய் இருந்தால் போதும், எங்களது பதப்படுத்திய மேல் தோலை நீங்கள் வாங்கிவிடலாம். சீனர்கள் ஐரோப்பியர்களுக்கு குளிர் மேலங்கி, ஆங்கிலேய கனவான்களுக்கு, தாங்கள் சிறந்த வேட்டைக்காரர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள, எனப் பல காரணங்களுக்காக எங்கள் இனத்தை மனிதர்கள் அழித்தார்கள். சிறுத்தையும் புலிகளுமே அழிக்கப்பட்டபோது, நாங்கள் எம்மாத்திரம்?

உடுமலை முதல் ஊட்டி மலை வரையிலான அந்த 1000 மைல் மலைவனப் பகுதியில் சில நூறுகளாய் நாங்கள் சுருங்கிவிட்டோம் நண்பர்களே! எங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட நிலையிலும் அழிவு தொடர்கிறது. சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு கவுன்சில் (IUCN), முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் அபாய விலங்குகளின் பட்டியலில் எங்களைச் சேர்த்துள்ளது.

இனி, நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். எங்களது வாழிடங்களான மலையகப் புதர்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும். செந்நாய்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அவற்றின் வாழிடங்களை அழிப்பதும் தோல், மாமிசம் ஆகியவற்றை விற்பதும் குற்றம் என்பதை வேகமாக நண்பர்களிடையே பரப்புங்கள். எங்களது தோலால் ஆன கைப்பைகள், குல்லாக்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்.

உங்களை நம்பி இந்தப் பணியை ஒப்படைக்கிறோம். பேரழிவின் விளிம்பிலிருந்து எங்களைக் காப்பாற்று நண்பர்களே!

இப்படிக்கு,

(செந்நாய் மேற்குத் தொடர்ச்சிமலை)

நன்றி!

அழிய விடல் ஆகாது பாப்பா! - செந்நாய்
ஆயிஷா இரா.நடராசன்

Sunday 18 September 2022

சேரவஞ்சி


தருணங்களைக் கடந்துவிட்டால் உணர்ச்சிகளென்பது காலாவதியாகிவிட்ட உண்மை அல்லது உயிர்ப்புள்ள பொய்.

-சேரவஞ்சி

கல்யாண்ஜி


நான் இன்று மரங்களை அல்ல, நிழல்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

பார்ப்பதற்கு, நிழல்கள் தன்னிடம் ஏராளம் வைத்திருக்கின்றன.

-கல்யாண்ஜி

Wednesday 14 September 2022

திருமூலர்


யாவர்க்குமாம் இறைவதற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு
ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது
ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு
இன்னுரை தானே.

இறைவனை ஒரு பச்சிலை கொண்டு பூஜை செய்யுங்கள்... பசுவிற்கு ஒரு வாயளவு புல், உணவு கொடுங்கள்... சாப்பிடும் போது, ஒரே ஒரு கைப்பிடி
எடுத்து வறியவர்க்கு சாப்பிடக் கொடுங்கள்... பிறரிடம் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்... இது எல்லோரும் செய்யக்கூடிய மிக எளிய வழிபாடு

-திருமூலர்

Monday 12 September 2022

லஷ்மி சரவணகுமார்


எல்லோரையும் நேசிக்கும்படியான  பெரியதொரு  இதயத்தை வேண்டிப் பெற்றுவிட வேண்டுமென்பதுதான் எனது ஒரே பிரார்த்தனை.

-லஷ்மி சரவணகுமார்

பாரதியார்


பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும்.
இல்லாவிட்டால்,முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சும்மா இருந்து விடும்,பெண்களைப் போல

-பாரதியார்

Sunday 11 September 2022

கருப்பு கண்ணாடி முதன்முதலில் உபயோகப்படுத்துயது சீனர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில்! சீன நீதிபதிகள் தாங்கள் சொல்லும் தீர்ப்பின் போது உணர்ச்சிகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கண்ணாடி போட்டு மறைத்துக் கொண்டு தீர்ப்பு சொன்னார்கள்!#info

கதை.கேளுங்கள் கொடுக்கப்படும்

*கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கபடும்*

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. 

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. 

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. 

குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. 

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. 

ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. 

ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. 

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது.

 ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. 

அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. 

அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.

தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. 

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது

 ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். 

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. 

வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. 

அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். 

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். 

அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. 

அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். 

அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். 

அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. 

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. 

நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. 

ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். 

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. 

ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. 

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். 
ராஜாவிடம் சொல்லிவிடுவேன்.

நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். 

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். 

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. 

உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். 

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்களின் இஷ்டம். 

எதுவும் கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது.

கேட்போம் !!பெறுவோம்!!

சிவபாலன்


Caste is the state of mind -அம்பேத்கர்

சாதி ஒரு மனநோய் என்று சொல்லவில்லை.மனநிலை என்கிறார்.நோய் என்றால் விடுபட நினைப்பார்கள். மன நிலை என்பது விரும்பி ஏற்றுக் கொள்வது.

இன்னும் நுணுக்கமாக trait என்று சொல்லாமல் state என்கிறார்.trait என்பது மரபாக வருவது அது இல்லாமல் state என்பது கற்றுக்கொள்வது.தனக்கு தேவையானதை சாதகமானதை மட்டும் உள்வாங்கி வெளிப்படுத்துவது state.பிறக்கும்போது ஏதுமற்றவனாக பிறந்து வளரும்போது இந்த மனநிலையை சமூகம் புகுத்தி விடுகிறது.

சாதியை ஒழிக்கும் புயல் வங்கக்கடலில் தொடங்காது. நம் மனதிலிருந்தே துவங்க வேண்டும் என்கிறார்

-சிவபாலன்

திருவெங்கட்


குளிரூட்டப்பட்ட அறையில்
மேலதிகாரிகள் நடத்தி முடித்த
கலந்தாய்வுக் கூட்டத்தில் திறக்கப்படாத 
தண்ணீர்ப் புட்டியில்
சிறைபட்டுக் கிடக்கின்றன
தீர்க்கப்படாத தாகங்கள்

-திருவெங்கட்

Friday 9 September 2022

செந்தில் ஜெகநாதன்

" மனிதர்களை அவர்களுடைய துயர காலத்தில் கூடுதலாக நேசியுங்கள்" 

-செந்தில் ஜெகநாதன்

விர்ஜினியா உல்ஃப்


பிறரின் கண்கள்
நம் சிறைகள்; 
அவர்களின் எண்ணங்கள்
நம் கூண்டுகள்.

— விர்ஜினியா உல்ஃப்

புத்தர்


மக்களின் வாழ்வில் துன்பமிருக்கிறது
அந்த துன்பத்திற்கான காரணமும் இருக்கிறது
அதில் இருந்து மீள வழியும் இருக்கிறது
மக்கள் துன்பத்தில் இருந்து மீள வேண்டும்

-புத்தர்

இரா.எட்வின்


ஒதுங்க
திக்கற்றவனை
நனைத்து ரட்சிக்கிறது மழை

-இரா.எட்வின்

Thursday 8 September 2022

மாசேதுங்


ஒருநாள் வயலில் நெற்கதிர்களைக் காயவைத்துக் கொண்டிருந்த சமயம்... திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது ஷன்செங்... அவர் மகனிடம், உடனடியாக கதிர்களை அப்புறப்படுத்து. இல்லையென்றால் மழை நாசம் செய்துவிடும்’’ என்றார். அவனும், விரைவாக கதிர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான். திடீரென்று, அவனைக் காணவில்லை. தந்தை, வயல் முழுவதும் தேடினார். எங்குத் தேடியும் அவன் கிடைக்காததால்... ஷன்செங், மற்ற வேலையாட்களைவைத்து நெற்கதிர்களைப் பாதுகாப்பாக வீடு கொண்டுபோய்ச் சேர்த்தார்.

மழை நின்றது... மகன் வந்தான். எங்கு சென்றாய்? உன்னிடம் நான் என்ன சொன்னேன்’’ என்று தந்தை கோபத்துடன் கேட்டார். அப்பா... நம்மிடம் வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள், இந்த வேலையைச் செய்வார்கள். ஆனால், பக்கத்து நிலத்தில் இருப்பவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு உதவவே அங்குச் சென்றேன். விளைபொருள்கள் நாசமாகிவிட்டால் அவர்களால் ஈடு செய்ய முடியாது. குத்தகை பணம்கூட கொடுக்க முடியாது’’ என்று நிதானமாகப் பதில் சொன்னான், அவன். உனக்கு உன்வீடு முக்கியமா... இல்லை, அவர்களுடைய வீடு முக்கியமா? என்று மீண்டும் கோபத்துடன் கேட்டார் ஷன்செங். ‘‘அவர்கள் வீடுதான் முக்கியம்’’ என சட்டென சொன்னான் அந்த சிறுவன்  அவனே மாவோ என்ற மா சே துங் ..

நினைவுதினம் #செப்டம்பர்9
#தனக்கென வாழ்வது இறகைவிட #எளிதானது மக்களுக்காக வாழ்வது மலையைவிட #கடினமானது....

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.

நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு சில குறள்களில் ஒன்று.

அநேகமாக இதை முன்வைக்காத பட்டிமன்றக் கோமாளி விவாதங்கள் எதுவுமே இருக்காது.

இதன் பொருள் நமக்கு நன்கு தெரியும் என்று நினைக்கிறோம். உண்மையில் இதன் பொருள் தான் என்ன?

பொதுவாகச் சொல்லப்படும் கருத்து என்னவெனில், தான் பெற்ற மகனைச் சான்றோன் - கல்வியில் சிறந்தவன் - என மற்றவர்கள் கூறுவதைக் கேட்கும் தாய், அவனைப் பெற்றெடுத்த தருணத்தை விட அதிகமாக மகிழ்ச்சி அடைகிறாள் என்பதே ஆகும்.

திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களில் மிகப் பலர் இவ்வாறே எழுதியுள்ளனர்.

குறிப்பாக, பரிமேலழகர், கா.சு. பிள்ளை, திருக்குறளார் முனுசாமி, ந.சி. கந்தையா ஆகியோர் சான்றோன் என்ற சொல்லுக்கு இவ்வாறே பொருளுரைத்துள்ளனர்.

மணக்குடவர் பிரச்சினையே வேண்டாம் என்று சான்றோன் என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தி உள்ளார். நாமக்கல் கவிஞர் சான்றோன் என்பதை உயர்ந்த குணமுடைய நல்லவன் என்கிறார்.  சாமி. சிதம்பரனார் அதற்கு அறிஞன் என்று பொருளுரைக்கிறார். இலக்குவனாரோ பெரியோன் என்று சொல்கிறார், அதன் பொருள் என்னவென்று விளக்கவில்லை.

இந்தக் குறளுக்கு உரை எழுதிய வ.சுப. மாணிக்கம் மட்டும் "தன் மகன் வீரன் எனப் புகழக் கேட்ட தாய் பெற்ற காலத்திலும் பெரு மகிழ்ச்சி அடைவாள்" என்று அதற்கு உரை அளித்துள்ளார்.

இத்தனை நீண்ட முன்னுரை எதற்கு என்றால் உறுதியாக அது தேவையாகிறது.

ஆய்வாளர் கோ. கேசவன் இதற்குப் பெரும்பாலான உரையாசிரிகர்களின் உரைக்கு மாறாக, அதே சமயம் உறுதியாக ஏற்கத்தக்க உரை அளிக்கிறார்.

அதாவது வ.சுப. மாணிக்கம் அவர்கள் உரைத்தது போல, சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொள்கிறார்.

அதற்கு அவர் முன் வைக்கும் வாதங்கள் முற்றிலும் மறுக்க இயலாதவை ஆக உள்ளன. அவர் தமிழிலக்கியச் சான்றுகளை முன் வைத்து அதன் அடிப்படையில் விளக்குகிறார்.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே..."

(புறம் 312)

என்ற பாடலைச் சுட்டிக் காட்டும் கோ. கேசவன் அவர்கள், 

வீரவுணர்வு நிரம்பிய காலத்து நற்பண்பு என்பது வீரப்பண்பு தான். சான்றோன் எனில் வீரன் என்பதே அக்காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று கூறுவதுடன்  சான்றோர் எனில் வீரர்கள் எனும் பொருளில் பயின்றிருக்கும் என்பதற்குச் சான்றுகளை முன்வைக்கிறார். மேலும் சான்றோன் எனும் சொல்லுக்கு வீரன் எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சான்றுகளை உ.வே.சா அவர்களை முன்வைத்துக் கூறுகிறார்.

அதை விடச் சிறப்பு என்னவெனில் சான்றோன் என்றால் நற்பண்பாளன் என்ற பொருள் வழங்கலாயிற்று என்று குறிப்பிடும் அவர் அச்சொல்லுக்குக் கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்ற பொருளை அளிக்கவே இல்லை!!

முன்னர் குறிப்பிட்ட சங்க இலக்கியப் பாடலைச் சுட்டும் அவர், அதில் கூறப்பட்டிருக்கும் அனைத்துக் கடமைகளும் போரோடு தொடர்புடையவையாக உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

காண்க கோ. கேசவன் நூல் தொகுப்பு 3 மார்க்சியம் பக்கம் 47-49.
ஆகவே மேற்குறிப்பிட்ட குறளில் இடம் பெற்றுள்ள சான்றோன் எனும் சொல் வீரம் செறிந்தவன் என்ற பொருளுடையதாகவே இருக்க வேண்டுமே தவிர, கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்ற பொருளுடையதாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது.

வீரம் குறித்த புறநானூற்றுப் பாடல்கள், போர்க்களத்தில் மாண்ட மகனின் மார்பில் மரண காயம் உள்ளதா எனத் தேடிய தாய் போன்றவற்றை மனதில் கொண்டால் இச்சித்திரம் தெளிவாகிறது.

ஆய்வாளர் கோ. கேசவன் புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

-சுந்தர சோழன்

info

1965-ல் செப்டம்பர் 8-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உலகம் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அவற்றை சரிசெய்வதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

அதில், செப்டம்பர் 8-ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவுத் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானமும் ஒன்று. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோ செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து 1966-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவுத் தினமாக கொண்டாடப்படுகிறது.

#info

Wednesday 7 September 2022

காந்தி


நீ சரியான செயலைச் செய்யும் போது கோபப்பட எந்த அவசியமும் இல்லை. நீ தவறான செயலைச் செய்யும் போது கோபப்பட எந்த உரிமையும் இல்லை

-காந்தி

ந.முத்துசாமி

இதை, இப்படி எழுதியிருக்கலாம்; அதை அப்படிச் சொல்லியிருக்கலாம் என்று படைப்பாளிக்கு யோசனை சொல்கிற துணிச்சலை, ஒரு படைப்பு, எத்தருணத்திலும் வாசகனுக்குத் தரக்கூடாது.

-ந.முத்துசாமி

பழமலய்


ஒரு படைப்பைப் படைப்பு என்று நம்புகிறபடி படைப்பவனும் படிப்பவர்களும்- உருவாக்குவது என்பது எளிய செயல் அல்ல. இதற்குப் படைப்பாற்றல் மட்டும் அல்லாமல் நல்ல பயிற்சியும் வேண்டியிருக்கிறது.

-பழமலய்

ரூமி


நம் செயல்பாடுகளின் பதிவுகளோ சேகரிப்போ இல்லையென்றாகிவிட்டால்
செய்வது என்பது
பொய்யாகிவிடும் சொல்வது
என்பது வெறும்
புனைந்துரையாகிவிடும்

-ரூமி

Tuesday 6 September 2022

Old is gold-7* மணி




க.நா.சு கட்டுரைகள்
பாகம்-2

இலக்கிய விமர்சகராக அறியப்படுபவர் க.நா சுப்பிரமணியம் அவரின் விமர்சன கட்டுரைகளோடு எழுத்து ஆளுமைகளை பற்றிய குறிப்பு மிக அருமையாக இருக்கிறது. பெரிய தொகுப்பை காவியா சண்முகசுந்தரம் அவர்கள் கொண்டு வந்தது படிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது. இதுபோல் எத்தனை இலக்கிய விமர்சகர்கள் நேர்மையாக தனது விமர்சனத்தையும் அவர்களின் எழுத்து நடைகளை பற்றியும் அவர்களுடன் பழகிய போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் சுவைப்பட கூறியுள்ளனர் என்பது தெரியாது.

மெத்த வலது மேற்கே என்பார் பாரதியார். தமிழில் நல்ல இலக்கிய விமர்சனம் இல்லை என்று சொல்லும் படியாகவும், அது அவசியம் என்று கூட பலர் எண்ணவில்லை. மேலை நாடுகளில் இலக்கியத்தை வளர்க்கும் போதும் இலக்கிய விமர்சனமும் வளர்கிறது. நூல்களைப் பற்றிய ஏராளமாக விமர்சனங்கள் அங்கு உள்ளன. ஒரு விதத்தில் விமர்சனம் காடாக மண்டிவிடும் என்பது உண்மைதான்.. என்றாலும் சரியான விமர்சனம் சரியான சமயத்தில் இல்லாவிட்டால் இலக்கிய வளர்ச்சியும் தேக்கமுறும் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார்

வ. ராமசாமி  எனும் வ.ரா அவர்கள்தான் சுப்ரமணியம் எனும் பெயரை கந்தாடை நா. சுப்ரமணியன் என மாற்றியதில் இவருக்கு பங்கு உண்டு என்று தெரிவிக்கிறார்.
இதில் நான் படித்து ரசித்த நறுக்குகளை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எழுத்தாளராக அறியப்பட்ட கல்கியின் இன்னொரு முகம் சுதந்திரப் போராட்டத்திற்கு தன் எழுத்தின் வழியாக தேசபக்தியை மக்களுக்கு எடுத்துரைத்தது தான். அந்த வகையில் "வெறும் வியாபாரியாக இருந்த என்னை தேச உணர்ச்சியையும் தேசியத்தையும் நன்கு அறியச் செய்தவர் கல்கி தான்" என்று எஸ் எஸ் வாசன் ஒருமுறை கல்கி பற்றிக் கூறினார்  என்பதை தெரிவிக்கிறார்.

மௌனியை பற்றி சொல்லும் போது அவருடைய கதைகளை 200 பக்கங்களில் அடக்கி விடலாம். அதீதமான உருவ அமைதி, ஆங்கிலத்தில் கிடைத்த காதரின் மான்ஸ்பீல்டு போன்ற கதாசிரியர்களை படித்து ஏற்பட்ட உருவப்பிரக்ஞை. இரண்டாவது ரொமான்டிக் தத்துவம் .மெளனியின் கதைகளில் அடிநாதமாக இருக்கும். மூன்றாவதாக தனிமனித மனோ தத்துவத்தேடல் என்று கூறியிருப்பார்.

 இந்தியாவில் இலக்கிய அமைப்புகள் யார் அமைத்தாலும் அதில் ஒருவராக தகழி சிவசங்கர பிள்ளை. செம்மீன் நாவலில் வரும் உரையாடல் அவரே ஏற்படுத்திய வட்டார வழக்கு என்று சிலர் கூறுவார்கள்.. அதற்கு அவர் அப்படி உருவாக்கினால் நான் இன்னும் மேதையாக தெரிவேன் என்று கூறி இருப்பார்.

ஆனந்த விகடனை விட்டு கல்கி விலகிய பிறகு பலரும் கல்கியில் எஸ்விவி எழுதுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் எழுத மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் நான் ஒரே பத்திரிக்கை எழுத்தாளனாக இருக்க விரும்புகிறேன் என்று தான். ஆங்கிலத்தில் ஹிண்டு தமிழில் ஆனந்த விகடன் என்று எழுதுவேன் என்றார் எஸ்விவி

சேக்ஸ்பியர் குறித்தும் அவரின் படைப்புகளை குறித்தும் மிக விரிவாக ஆராய்ந்து விமர்சனக் கட்டுரைகளை எழுதி உள்ளார். மேலும் கம்பனுக்கும் சேக்ஸ்பியருக்கும் உண்டான படைப்புகளின் ஒற்றுமை குறித்தும் இலக்கிய நுட்பங்களை குறித்தும் இதில் விரிவாக கூறியுள்ளார்.

தமிழில் முதல் மூன்று நாவல்களையும் நல்ல தரத்தில் எழுதி உள்ளவர்கள் மிக மிகக் குறைவு. ஷண்முகசுந்தரம், கந்தசாமி, நகுலன் அந்த வரிசைகளில் வண்ண நிலவனும் ஒருவர். பலரின் முதல் நாவல் நன்றாக இருக்கும். இரண்டாவது தரம் குறைந்துவிடும். மூன்றாவது அடியோடு குட்டிச்சுவராக இருக்கும். இதை பல நாவலாசிரியரின் எழுத்தில் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறி வண்ண நிலவனை புகழ்ந்திருப்பார் அவருடைய சிறுகதை தொகுப்புகளையும் சிலாகித்திருப்பார்.

உலகின் தலைசிறந்த 52 எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமும் ,அவர்களின் படைப்புகளையும் மிக சுருக்கமாக விவரித்து இருப்பார். சின்ன விஷயங்களை பெரிது பண்ணியும் பெரிய விஷயங்களை சின்னது பண்ணியும் சொல்லுகிற காரியம் பலருக்கு சுலபமாக கை வந்துவிடும். ஆனால் சாதாரண விஷயங்களை சாதாரணமாக சொல்வது என்பது பாண்டித்தியம் அதிகம் தேவை. இப்படி சாதாரண விஷயங்களை சொல்லுகிறார்கள் ஒருவர் என்று கி.வா.ஜ வை  பாராட்டி இருப்பார்.

புதுமைப்பித்தனின் காஞ்சனை, சாபவிமோசனம், தி.ஜா வின் கொட்டுமேளம், அழகிரிசாமி யின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார்,
கு.ப ராவின் கனகாம்பரம்,நூர் உன்னிஸா,லாசரான் ஜனனி, போன்ற கதைகளும் சுகுமாரன், பாரதிதாசன் ஆகியொரின் கவிதைகளையும் திறனாய்வு செய்து சொல்லியிருப்பார்.தமிழ் இலக்கிய விமர்சன காலகட்டங்களும் அதன் வளர்ச்சியையும் எடுத்து உரைத்திருப்பார்.இலக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் நல்ல இலக்கியத்திலிருந்து போலியைத் தரம் பிரித்து காண முயன்று வெற்றி பெற வேண்டும். தரமானதை தரமில்லாததிலிருந்து பிரித்துக் காண வேண்டிய அவசியத்தையும் உண்டாக்க விமர்சனம் தேவைப்படுகிறது என்கிறார்.

இலக்கிய விமர்சனத்தில் அறியாத தகவல்களையும் இலக்கியவாதிகளின் மற்றொரு பக்கத்தையும் சுவைபட தொகுத்துள்ளார்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

பாதசாரி

வெளியிலிருந்து திறக்கும் 
கதவு என்றும் கூண்டுக்கானது..

உள்ளிருந்து திறக்கும் கதவு
பறத்தலுக்கானது.

-பாதசாரி

மனுஷ்யபுத்திரன்

சொல்லவேண்டிய தருணத்தில்
சொல்லியிருக்கவேண்டிய
வார்த்தைகளின் துயரம்
வளர்ந்துகொண்டே இருக்கிறது. 

 -மனுஷ்யபுத்திரன்

Monday 5 September 2022

ஹெர்சாக்

நடந்து பயணிப்பவர்களுக்கே இந்த உலகம் தன்னை திறந்து காண்பிக்கும் 

-ஹெர்சாக்

ஓஷோ

ஆங்கிலத்தில் ஒழுங்கை discipline என்று சொல்லுகிறோம்.அதன் பொருள் கற்றுக்கொள்ளுதல்.
அந்த வார்த்தையில் இருந்து
disciple என்ற வார்த்தை வந்தது. அது ஆங்கிலத்தில் சீடனைக் குறிக்கும் சொல்.சீடன் என்பவன் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பவன்

-ஓஷோ

ஹேமாராஜ்

பிரிதலுக்கு ஆயிரம் காரணங்களை திரட்டி 
விட முடியும். 
பிரியாதிருத்தலுக்கு "வேண்டும்" என்பதை தவிர வேறு காரணமில்லை.

~ ஹேமாராஜ் ~

வசித்த வீடுபயணிக்கிறதுமாறும் வீடு நோக்கி-துரை நந்தகுமார்

Sunday 4 September 2022

Old is gold-6*மணி



கன்னி
-பிரான்சிஸ் கிருபா

தமிழில் கொண்டு கூட்டி பொருள் கோள் போல் சுவாரஸ்யத்துக்காக முன்னும் பின்னும் கலைத்துப் போட்ட காட்சிகளால் நாவல் துவங்குகிறது.
திரைக்கதையின் பலம் மூலம் சினிமா வெற்றியடைவது போல சாதாரண ஒரு கதையை தன்னுடைய அற்புத சொல் வளத்தால் சிருஷ்டித்து நம்மை நாவலின் இறுதிவரி வரை விடாமல் உடன் பயணிக்க வைத்தது இந்நாவலின் சிறப்பு.கற்பனையை எழுத்து வடிவில் கொண்டு வந்து படிக்கிறவரின் கற்பனையும் தன்னோடு இணைத்துக் கொண்டு செல்லும் நடையே முக்கிய படைப்பாக உருவெடுக்கிறது.

ஆணின் அக உலகில் நுழைந்து பார்த்தால் நிச்சயம் தான் பிரம்மித்த பெண்களின் உருவம் நிச்சயம் இருக்கும்.அவளை ஆராதிக்கும் போது தான் உணர்ந்த அத்தனை உணர்ச்சிகளையும் அலைக்கழிப்புகளையும் மொழி நடையில் கொட்டினால் எப்படியிருக்கும்.வார்த்தைகளின் உச்சம் மெளனம் எனில் அதன் முந்தைய நிலையில் வார்த்தைகள் பேரருவியாய் மனதிலிருந்து விழும். அந்த அருவியின் திளைப்பில் நீராடும் போது நாமும் அந்த பிரம்மிப்பு உணர்வை உணர்வோம்.

கதை

மூன்று பாகங்களாக விரியும் கதையில் முதல் பாகத்தில்
கடலோர கிராமத்தில் வசிக்கும் சந்தன பாண்டி எனும் பாண்டி கதையின் நாயகன்.முதல் பாகத்தில் பித்து நிலையில் இருக்கும் நாயகனின் மனவெழுச்சியும் ஊராரின் நம்பிக்கைகளும் நுட்பமாய் ஒவ்வொரு இடமும் விவரிக்கிறது.அவன் பித்து நிலைக்கு என்ன காரணம் எனவும் கையில் விலங்கு செய்ய வரும் ஆசாரியின் உரையாடல் மூலமும் முதல் பாகம் செல்கிறது.

இரண்டாம் பாகத்தில் தன் அக்கா போல இருக்கும் அமலா அக்காவின் பாசமும் நட்பும் உள்ள பகுதி சொல்லப்படுகிறது.நித்யா மேனன் தனுஷ் போல பாசமாக பழகினாலும் காதல் இவர்களுக்குள் இல்லை என்பது பெருத்த நிம்மதி.தன் அக்கா மீது அவன் வைத்திருக்கும் அதீத பாசம் வெளிப்படுகிறது. கல்லூரியில் தேவதேவனின் கவிதைகளை ஆய்வு செய்யு மாணவனாக கதை பரிணமிக்கிறது.
தமிழ் படித்துவிட்டு மும்பையிலும் சிறிது காலம் பணி செய்கிறான். வாழ்க்கையின் அலைக்கழிப்பில் மனதிலும் அதே அலைக்கழிப்பு என சுழல்கிறது பாண்டியின் வாழ்வு.

ஊருக்குப் போகும் தனுஷ் நோ சொன்ன பிரியா பவானி சங்கரை காதலித்தால் எப்படி இருக்கும் என்பது போல் சாரா எனும் பெண்ணை பார்த்து கடிதத்தில் காதலை தெரிவிக்கறான்.முதலில் அவமானப்படுத்தி அனுப்பும் சாரா பின்னர் தேர் விழாவில் தன் ஆசையை கூறுகிறாள் அதன் பின் என்ன ஆனது காதல் ரசம் சொட்ட சொட்ட இறுதிப்பகுதியில்  இருபது பக்கங்களில் விரிகிறது.

நாவலின் பெரிய பலம் அதன் கவித்துவமான இயல்பான மொழி நடை.430 பக்கங்கள் நான் ஸ்டாப்பாக சென்று கொண்டே இருக்கும். வர்ணிப்பின் திளைப்பில் நல்ல வாசிப்பனுபவத்தையும் சொற்களால் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்த இன்பத்தை தருகிறது.ஒரு ஆணின் வாழ்வில் பெண் ஏற்படுத்திய மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

மனிதன் ஆதியிலிருந்து வந்தவன்.
அறிவு அதன் பின் தான் வந்தது. மனதில் அறிவை விட உணர்ச்சிகள் தான் ஆதிக்கம் செய்கிறது.ஆனாலும் அறிவை தான் நம்பனும் எனும் வரி நெஞ்சுக்கு நெருக்கமாய் இருந்தது.

நீந்தி நீந்தியே உயிரை மாய்த்துக்கொள்ளும் வரத்தை விழுங்கிய மீன்களென இரண்டு உயிர்கள் கடலின் அடியாழத்தை துளைத்து சிலும்பிய வண்ணம் தொலைந்து போயின என முடிவடைந்திருக்கும்

உன்னை உன்னிடம் கேட்பேன் 
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல 
எல்லா முறையிலும் 
உன்னை உன்னிடம் கேட்பேன்
மண்டியிடுவேன் மன்றாடுவேன் 
துளி நீரும் பருகாமல் 
மறுகியுலர்வேன்
மரிக்கும் கணத்திலும் 
உன்னை உன்னிடம் கேட்பேன்
கடவுளிடம் கூட அல்ல 

-மணிகண்டபிரபு

சென்னை தினம்*மணி



உன் வாழ்வின் சிறந்த நாள்களை நினைவுகூர்வாயானால் நிச்சயம் அது நீ பயணம் செய்த நாள்களாகத்தான் இருக்கும்."
-பராரிகள்

90களில் மெட்ராஸில் உறவினர்கள் இருப்பதை பெருமையாய் நினைத்துக் கொண்ட காலம்.
மெட்ராஸெல்லாம் நாங்க போனதேயில்ல செந்திலுனு ஆட்டோகிராப் மல்லிகா மாதிரி வெள்ளந்தியாய் பேசியது நினைவிருக்கிறது.அப்போது
டூர் பஸ்ஸில் சென்னை சுற்றுலா செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தனர்.4 நாள் டூர் சென்னைக்கு மட்டும் 350ரூபாய் கட்டணம்.மற்ற ஊர்களுக்கு டூர் செல்வதை காட்டிலும் சென்னை என்றால் விரைவில் சீட் ஃபுல்லாகிடும்.அங்க எல்லா நடிகர்களும் தெருவில் சாதாரணமாய் நடந்து கொண்ருப்பார்கள் என நம்பிக் கொண்டிருந்த காலம்.டூர் போவதற்கு ஒரு மாசம் முன்பிருந்தே நாங்க மெட்ராஸ் போறோம்,மெட்ராஸ் போறோம்னு சொல்லிக்கிட்டு இருப்பேன்

#டூரிஸ்ட் பஸ்களின் பொற்காலம்

வீடியோ கோச் பஸ்ஸில் படம் பார்த்த முதல் தலைமுறை உருவானது அப்போதுதான்.முதல் படமாய் சாமி படம் பார்ப்பது தான் ஐதீகம்.அப்படித்தான் சரஸ்வதி சபதம் படம்,திருவிளையாடல் என சாமி படமாய் போடுவாங்க.சின்னத்தம்பி, பாண்டி நாட்டு தங்கம், செந்தூரப்பூவே என மாஸ் ஹிட்டடித்த படங்கள் அன்றைய டூர் முழுவதும் பார்த்த படங்கள்

அதிகாலை மேல்மருத்துவத்தூரில் குளித்துவிட்டு சென்னைக்கு நுழைந்தோம்.இன்று வரை பயணிகள் பலரின் செட்யூல் இப்படித்தான் துவங்குகிறது. மீனம்பாக்கத்தில் நுழையும் போது அனைவரும் ஜன்னல் சீட்டுக்கு வந்துவிட்டோம்.ஆகாயத்தில் டாடா காட்டிய விமானம் அருகாமையில். இதான் ஏரோப்ளான் எல்லாரும் பார்த்துக்கோங்கனு ஒரு பெருசு அறிமுகப்படுத்தும்.

திரைப்படங்கள் மெட்ராஸ் குறித்து ஏற்படுத்திய பிம்பமும், அதிகம் பார்க்காமல் தனக்குத் தானே உருவகப்படுத்திக் கொண்ட எண்ணமும் சென்னையின் ஒவ்வொன்றையும் பிரம்மிப்பாகவே தெரிந்தன

#மெரினா முதல் மகாபலிபுரம் வரை

மெரினாவை முதன் முதலில் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு. உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை எத்தனை படங்களில் பார்த்தது.இன்று நனவானதில் அப்படி ஒரு சந்தோசம்.எம்.ஜி.ஆர் சமாதியில் எல்லாரும் காது வைத்து எம் ஜி ஆரின் கடிகார சத்தம் கேட்பதில் ஒரு அலாதி இன்பம். ஒருத்தர் கேட்டுச்சுனு சொன்னா எல்லாரும் ஆமா ஆமானு சொன்னாங்க.மழை வந்தால் அணையாதீபம் எப்படி அணையாம இருக்கும்னு பேசிக்கிட்டோம்.

அப்போது அண்ணா சமாதி பராமரிப்பின்றி இருந்தது.அப்படியே பீச்சில் விளையாடிவிட்டு வள்ளுவர் கோட்டத்துக்கு போனோம்.அப்பதான் பிஸ்லரி வாட்டர் அறிமுகமான சமயம். தண்ணி இல்லாத கேன் ஒரு ரூபாய்க்கு விற்பாங்க.எல்லாரும் ஐந்தாறு வாங்கிக் கொண்டோம்

கோல்டன் பீச்சுக்கு போன போது எதாவது படத்தின் சூட்டிங் நடக்குமென்று ஆசையாய் போனதில் ஏமாற்றம்.பல படங்களில பார்த்த ரயிலில் ஏறி போனது அலாதி இன்பம்.அப்பிடியே அடையாறு ஆலமரத்துக்கு சென்று ஆயிரமாண்டு பழைமையான மரத்தை பயபக்தியுடன் வணங்கியது நினைவில் இருக்கிறது.

அஷ்ட லட்சுமி கோவில், மகாபலிபுரம், வட பழனி,தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், அன்னை இல்லத்தை வெளியிலிருந்து பார்த்தது என அத்தனை நினைவுகளும் பசுமையாய் இருக்கின்றன.மே மாத பாடலை ஊர் முழுக்க பாடிக்காட்டினேன்.

இப்போது பல முறை சென்னை சென்றாலும் அன்று முதல் முறை சென்னையைப் பார்த்ததில் அப்படி ஒரு அலாதி இன்பம்.ஊரும் வளராமல் நாமும் வளராமல் மகிழ்ச்சி மட்டும் ஆலமரமாய் மனதில் நின்ற தருணம்.

உன் வாழ்வின் சிறந்த நாள்களை நினைவு கூர்வாயானால் 
நிச்சயம் 
அது நீ பயணம் செய்த நாள்களாகத்தான் இருக்கும்.

-மணிகண்டபிரபு

தாவரங்கள் ஒளிச்சேர்கையின் போது மட்டுமே ஆக்சிஜனை வெளியிடுகிறது.

ஏன் மரங்கள் பகலில் பிராண வாயுவையும், இரவில் கரியமில வாயுவையும் வெளியிடுகின்றன?


சூரிய ஒளியில் மட்டுமே ஒளிச்சேர்க்கை நடைபெறுவதால் பகலில் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகிறது.

இரவில் சுவாசித்தலின்போது மனிதர்களைப் போலவே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகிறது.

இரவிலும் சூரியனிருந்து ஒளிசேர்க்கை நடைபெற்றால் ஆக்சிஜன் வெளியிடுவது சாத்தியமே !.

Saturday 3 September 2022

மனுஷ்யபுத்திரன்

'முன்பெல்லாம் 
எல்லாவற்றையும் சொல்வாய்
இப்போது ஏன்
எதுவுமே சொல்வதில்லை?'

'சொல்லக்கூடாதென்று ஏதுமில்லை
சொல்லத் தெரியாமலும்  இல்லை
சொல்லத் தோன்றவில்லை'

ஒருவரை இழப்பதைக்காட்டிலும் அவலமானது
ஒருவரிடம் நம் இடத்தை இழப்பது

-மனுஷ்யபுத்திரன்

ஈரோடு கதிர்

யாரைத் தவிர்க்க நினைக்கிறீர்களோ,
அவர்களையே அதிகம் கவனிப்பீர்கள்..!!!

-ஈரோடு கதிர்

Friday 2 September 2022

புகைப்படம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுத்தராது.எப்படி பார்ப்பது என்பதை கற்றுத்தருகிறது-பெரொனிஸ் அபேட்

டால்ஸ்டாய்

டால்ஸ்டாயின் ஒரு நீதிக் கதை
.........................

ஒரு பெரிய மீன் சின்ன மீனை விழுங்கப் பார்த்தது. அப்போது சின்ன மீன் கேட்டது, நீ இவ்வளவு பெரிய மீனாக இருக்கிறாய் நான் ஒரு குட்டியோன்டு மீன். என்னைப் போய் நீ விழுங்கலாமா இது அறமாகுமா?
அதற்கு பெரிய மீன் சிரித்துக்கொண்டே சொன்னது, ஆமாம் நியாயமில்லைதான். முடிந்தால் நீ என்னை விழுங்கிக்கொள். இல்லை என்றால் உன்னை நான் விழுங்குவது நிச்சயம்.

ஆப்பிளை நறுக்கிய சிறிது நேரத்திற்கு பிறகு பழுப்பு நிறமாக மாறுவது ஏன்?



ஆப்பிள்ளை துண்டாக வெட்டும்போது ஆப்பிளில் உள்ள திசுக்கள் வெட்டப்படும்.காற்றிலுள்ள ஆக்சிஜன் வெட்டப்பட்ட திசுக்களில் தங்கிவிடும்.வெட்டப்பட்ட ஆப்பிளில் குளோரோபிளாஸ்ட்(chloroplast) என்கிற ஒரு திரவம் உள்ளது.குளோரோபிளாஸ்ட் என்றால் என்ன ? இலைகள் பச்சையாக உள்ளது அதற்கு காரணம் குளோரோபிளாஸ்ட் என்கிற ஒரு திரவம் தான் காரணம்.குளோரோபிளாஸ்ட்தில் பாலிபினால் ஒக்ஸிடைஸ் என்சைம் (polyphenol oxidise enzyme) என்கிற ஒரு மூலப்பொருள் உள்ளது. அது ஆக்சிஜன் உதையுடன் ஆப்பிளில் உள்ள

பினொலிக் கம்போங்ஸ்(phenolic compounds- ஆப்பிள் நிறத்திற்கு காரணமானவை) உடன் எதிர்வினையாத்தி(reaction) குயினோன் (quinone) என்கிற புதிய பொருளை உண்டாகும்.

பின்னர், குயினோன் ஆப்பிளில் உள்ள ப்ரோடீன், அமினோ அமிலம் உடன் எதிர்வினையாற்றி பழுப்பு நிறத்தை உண்டாகிறது.

-படித்தது

பிரான்சிஸ் கிருபா

பிறர் கண்களைச் சந்திக்காமல் கண்களைத் திருப்பிக் கொள்வதொன்றே தப்பிக்கும் கடைசி வழி

-பிரான்சிஸ் கிருபா

-க.நா.சு

இலக்கியத்தில் தரத்தை எட்டுவதற்கு ஏதொ ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. அதே போல் சந்தர்ப்பங்களில் மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது

-க.நா.சு

Thursday 1 September 2022

படித்தது

MILITARY REMINISCENCES - EXTRACTED FROM A JOURNAL OF NEARLY FORTY YEARS' ACTIVE SERVICE EAST INDIES. BY COLONEL JAMES WELSH,
OF THE MADRAS ESTABLISHMENT -  என்கிற புத்தகம். அதிலிருந்து சிறிய பகுதி: 1830 வெளி வந்த புத்தகம். 

தொடர்ந்து மூன்று நான்கு மாத முற்றுகைக்கு  பிறகு 24-5-1801 அன்று பஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்தது. இது கட்டப்பொம்மனின் மரனத்திற்க்கு பிறகு. 
 எப்படி கோட்டை வீழ்ந்தது, என தெளிவாக விவரித்திருக்கிறார். ஒரு சினிமா படத்துக்கு தேவையான அனைத்து விபரமும் இருக்கிறது.  

    பாளையக்காரர்களின் வீரத்தையும் தீரத்தையும் மிக உயர்த்தி எழுதியிருக்கிறார் இந்த ஆங்கிலேய போர்வீரன். இப்படிச்  சொலிக் கொண்டே வரும் அந்த   பிரித்தானிய போர்வீரன், அவனது புத்தகத்தில்,  இறுதியாக ஒரு சம்பவத்தைச் சொல்லி இந்தப் பகுதியை முடிவு செய்ய விரும்புகிறேன் என்கிறான்.

  “ இறுதிகட்ட போரில், ஒரு முதிய பாளையக்காரர் படுகாயம் அடைந்தார், அந்த நேரத்தில், அவர் எங்களிடம் “உங்கள் படைத் தலைவர் மெகோலேயிடம் கொண்டு செல்லுங்கள்” என்றார். 

 நாங்களும் அவரை படைத் தலைவருக்கு முன் ஒரு நாற்காலியில் அமர்த்தினோம், உடல் முழுவதும் படுகாயம் அடைந்திருந்த அந்த மூத்த மனிதர் கூறினார் “ நான் இங்கு வந்தது, ஒரு பாளைக்காரன் எப்படி மரணிப்பான் என்பதை ஆங்கிலேயர்களுக்கு காட்டத்தான்” என தன் இரு கைகளாலும் தன் மீசையை முறுக்கினார், அப்படியே உயிர் பிரிந்து தரையில்  விழுந்தார்.

-படித்தது

அன்ரிசர்வ் கோச் பயணம்*மணி

அன்ரிசர்வ் கோச் பயணம்
*மணி

திடீர் பயணமாக தொலை தூரம் செல்லும் போது அன்ரிசர்வ் கோச் தான் ஆபத்பாந்தவனாக இருக்கும். இரவு நேரப் பயணம் எனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழுத்தத்துடன் வண்டிக்கு காத்திருக்க வேண்டும். அறிவிப்பு செய்தவுடன் வாடிவாசலில் மாடு பிடிக்க காத்திருக்கும் வீரன் போல இடம் பிடிக்க ஒரு எல்லையற்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும்.எப்படியும் பெட்டி செய்யும் போதே இடம்பிடித்தவர் போல ஒரு கும்பலே கூட்டமாய் வரும்.அப்பிடியே பின்னால திரும்பிப் பார்த்தால் ஒரு ஊரே அந்த ஒத்தப் பெட்டிக்குத் தான் காத்திருக்கும்.

ஒரு வழியா வண்டி வரும் திசைநோக்கி அத்தனை பேரின் பார்வை செல்லும் போதே சுதாரிச்சு எழுந்து ரெடியா இருக்கனும். மாற்றித்திறனாளி, பெண்கள் பெட்டிகள்கடக்கும் போது ஆப்சண்ட் போட்டு..நம்ம பெட்டியை பார்த்தவுடன் பிரசண்ட் போட்டு இணைந்த கைகளில் வரும் அருண்பாண்டியன் போல ஓடனும். அப்பதான் ஆத்தாஹே, ஜாத்தாஹேனு இடையில் கொஞ்சம் இந்தி வாலாக்கள் வருவாங்க. அவிங்களை கொஞ்சம் லெப்டில் டீல் பன்னிட்டு ஒரு நதி போல ஓடிக் கொண்டிருக்கனும்.

ஒத்த பெட்டி முழுக்க காலியா இருக்கும்.அப்பிடியே ஆனந்தம் பொங்கும் போது அது போஸ்ட் ஆபிஸ் பெட்டியாம்.அதில் ஏறக்கூடாதாம். அடபோங்கப்பானு அடுத்த பெட்டிக்கு உள்ளே போனால்.. உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்குனு உட்கார்ந்திருப்பவர் நினைப்பார்.கூகுளை விட கண்ணு வேகமா தேடும்..எங்காவது இடம் கிடைக்குமானு..ஒன்னுமேயில்லாத போது வல்லவனுக்கு நடைபாதையே உட்காரவழினு உட்கார்ந்திடனும். அப்பதான் அடுத்த ஸ்டேசன்ல சீட்ல இடம்கிடைக்க சீனியாரிட்டி வரும்

#தூக்கமே வா வா

ஒரு வழியா சீட்டு கிடைச்சதும் அமைதிப்படை அமாவாசை மாதிரி உட்கார்ந்திடனும்.அப்பிடியே ஏறெடுத்துப் பார்த்தா எல்லாரும் ஏ.வி.எம் சரவணன் மாதிரி அட்டென்சல தூங்க ஆரம்பிச்சிருப்பாங்க. வண்டியோட சத்தத்துக்கு ஏற்ப 'ஆமா ராசா, அப்பிடித்தான்' எனும் தாள இசையை ஒத்து அவங்க தலையாட்டல் இருக்கும்.தோள் சாய தோழன் கிடைப்பது..தூங்க முடியாதவனுக்கு தான்.இதில் கெஸ்ட் ரோல் மாதிரி அப்பப்ப தூங்கி விழுபவர் ஒன்று. இன்னொன்று நாம என்னமோ அவங்க லவ்வர் மாதிரி உரிமையாய் தோளில் கிடப்போர் மற்றொன்று.

சிலர் கீழேயே பார்த்துக்கொண்டு பிரேக் டான்ஸ் ஆடுவது போல தூங்குவாங்க.கடவாய்க்கு முட்டுக் கொடுத்து தூங்கி சிலர் டொடக்குனு விழுந்து விழுந்து தூங்குவாங்க. சிலர் தலை நிற்காம பத்தாம் வாய்ப்பாடு சொல்லும் பாவ்லாவிலேயே தூங்குவாங்க.
சிலர் கார்ல கியர்போடுவது போல முன்னும் பின்னும் சைடும் என ஐந்துகியர் பொசிசனில் தூங்கி விழுவோர் தனிரகம்.தெம்மாங்கு பாட்டில ஒரே ஸ்டெப் போடுவது போல, சிலர் ஒரே அளவில் தூங்கி விழுந்து எழுந்துருப்பாங்க.

கம்மல் அணியாத காதுகள் கூட உண்டு.ஆனால் ஹெட்செட் அணியாத காதுகள் இருக்காது. அப்பிடியே போன் பார்த்துட்டே சிலர் வருவாங்க.ஏப்பா உன் போன்ல எல்லாம் சார்ஜே குறையாதா.

இதில காலை நீட்டுவது ஆயக்கலைகளில் அடிசனல் கலை. பாம்பு புத்துக்குள் கையை விடுவது போல லாவகமாய் எதிர்ல இருப்பவர்கள் கால் படாமா காலை நீட்டி கபடி விளையாடனும். நல்லபடியா காலை நீட்டி விடுவது ஆப்போனண்ட் டீமில் போனஸ் லைனை தொட்டதுக்கு சமம்.

#வருகவே எழுகவே

நிற்க கூட இடமில்லாத போது எல்லாரையும் தாண்டி கொண்டு கே.ஜி.எப் ராக்கி பாய் போல ஒருவன் அந்தக் கடைசியில் இருந்து தாண்டி தாண்டி ஒருத்தன் வருவான்.பாத் ரூம் போக powerful people came from பக்கத்து பெட்டி பாஸ்.அடுத்த ஸ்டேசன் வந்தவுடன் ஜோதியில் ஐக்கியமாக இன்னொரு கும்பல் வரும்.நாலுசீட்டில உட்கார்ந்திருக்கு please move னு சொல்லி..ஷேர் ஆட்டோவில் சீட் கேட்டது போல் அடுத்து வந்து உட்காருவாங்க.

திடீர்னு  கண்ணு முன்னால யாரோ ஒருவரின் கால் தொங்கும்.நிமிர்ந்து பார்த்தா புன்னகை மன்னன் கமல் மாதிரி கீழே குதிக்க கவுண்டிங் கொடுத்திட்டு இருப்பான்.ஒரு முடிவுக்கு வாப்பானு சொன்னதும் தான் மூவ்மெண்ட் கொடுப்பான்.

ஒரு வழியா ஊர் வந்தவுடன் கீழே விட்ட செருப்பை தேடுவது கொடுமை. ஒவ்வொரு காலிலும் ஆசிர்வாதம் வாங்கனும்.வாக்கம் க்ளீனர் போட்டுத் துடைக்கும் போது காலிரண்டையும் தூக்கி கொள்வது போல் சிலரின் செய்கை இருக்கும்.

பயணக்களைப்பு இருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்களின் ஒவ்வொரு முகமும் ஒரு கதை சொல்லும்.பிஸ்கட்டை ஒழிச்சு திங்கறவங்க,குடும்ப விசயத்தை கத்திப்பேசுவதும், கடன் கொடுத்தவரை ஒத்தைக்கு ஒத்தை வா னு கூப்பிடுவதும் நாம காது கொடுத்து கேட்கனும்.கை ஒடிந்தவர், வீல் எனக் கத்தும் குழந்தை, இயலாதவர் என சமபேதம் காட்டுவதில் அன்ரிசர்வ் கோச்சின் பணி அளப்பரியது.

பயணம் ஒரு வித்தியாசமான உணர்வு, எப்பொழுதும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்...

தோழமையுடன் மணிகண்டபிரபு