Friday 27 November 2020

ஜல்லிக்கட்டு (மலையாளம்)*மணி



லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், 2019ல் வந்த மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. தற்போது, சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது.
இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்திய படங்கள் தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு ஆஸ்கருக்கு செல்கிறது.
ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

அப்போது பார்க்கத் தவறிய படத்தை நேற்று பார்த்தேன்.ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் படம்.தலைப்பை பார்த்து ஏதோ மாடு பிடி கதை என்பதை ஊகிக்க வேண்டாம்.

#கதை

இடுக்கி மாவட்டத்தில் கறிக்கடை நடத்தி வருபவர் வர்க்கி.படத்தின் டைட்டிலின் போதே விடியலில் ஒவ்வொருவரும் கண் விழித்தவுடன் அடுத்து செல்லும் இடம் கறிக்கடைக்குதான்.எருமைக்கறி பிரியர்களான அவர்கள் தினசரி சாபிடுவது தான் வழக்கம்.அய்யே ச்சீ னு முகம் சுளிக்க வேண்டாம். அவர்கள் வழக்கம் அது.

ஒரு நாள் அதிகாலை எப்போதும் போல் எருமை வெட்ட போகும் போது
உதவியாளர் கயிற்றை விட திடீரென ஊருக்குள் மூர்க்கத்துடன் ஓடுகிறது.
தகவலறிந்தவுடன் ஒவ்வொரு வீட்டின் ஆண்மகனும் பிடிக்க கிளம்புகின்றனர்.ஊருக்குள் துவம்சம் செய்தவுடன் காட்டுக்குள் போகிறது.ஒவ்வொருவரும் எப்படியாவது அதை பிடித்து கொன்றுவிட துடிக்கும் அன்னவெறி கண்ணையானாக துரத்துகிறார்கள்.

காட்டில் ஒரு கிணற்றில் விழுகிறது.
கயிறு கட்டி தூக்கும் போது ஒருவர் உயிரிழக்கிறார்.மீண்டும் எருமை தப்பித்து ஓடுகிறது. இறுதியில் பிடிபட்டதா இல்லையா என்பதே கதை

#கதை

*எது கிராபிக்ஸ் எருமை, எது உண்மை எருமையென கண்டுபிடிக்க முடியாதது நல்ல டெக்னிக்

*கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு ஓடி ஓடி உழைத்திருக்கிறது. பதுங்கி இருந்து எருமையைப் பார்ப்பது, இரவின் விளக்கொளியில் ஓடி வருவது,குதிரை வேகத்தில் கேமரா பயணிக்கிறது.

*இந்த ஒன்லைனின் இடையில் ஒரு பெண்ணிற்காக ஆண்டணி குட்டச்சன் மீது சந்தன மரம் வெட்டுவதாய் சிறைக்கு அனுப்புவதும், திரும்பி வந்து பழிவாங்குவது வருகிறது.

*பாடல் இல்லாதது,ஹீரோ, ஹீரோயின் இல்லாதது மிகப்பெரிய ப்ளஸ்.ஊர் மக்கள்தான் ஹீரோ.

*மணிஓசை கேட்கும் சோன்பப்படி விற்கும் போது, ஒளிந்திருக்கும் போது கொடுத்த கடனுக்கு வட்டி கேட்பது ரசனை

*ஆனால் ஓரிருவாய் ஓடும்போது இறுதியில் அத்தனை மனிதர்கள் வருவார்களா? கிணற்றிலிருந்து வந்த எருமை எப்படி தப்பித்தது?
எருமைக்கு அத்தனை பலம் இருக்குமா என நம்மை யோசிக்க வைக்கிறது?

*எருமைத் துரத்தும் ஒவ்வொரிவரின் மனநிலையையும் படத்தின் இறுதியில் மூதாதையராக காட்சிப்படுத்தியது அழகியல்

இதிலென்ன இருக்கிறது..
இதெல்லாம் எப்படி விருதுக்கு போகும் என நினைக்கும் முன்
அந்த ஊரின் கலாச்சாரம் என நினைத்தால் படம் பார்க்கலாம்

-மணிகண்டபிரபு

Thursday 26 November 2020

அந்தகாரம் விமர்சனம்*மணி



திகில், பேய் படம்னாலே சிரிப்பு படமாக்கிட்டாங்க.ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல திகில் படம். பேய் இல்ல அமானுஷ்ய படம்.ஆனால் பேய் படம் மாதிரியே கொண்டு போய் லெப்ட் இன்டிகேட்டர் போட்டு அமானுஷ்ய படமாய் மாறி இருக்கு. மூன்று மணி நேரத்தில் மூன்று கதை. கிரிக்கெட் கோச், ஆவிகளுடன் பேசும் மாற்றுத்திறனாளி,மனநல மருத்த்துவர் என மூன்று கதைகளும் சம்பவங்களுமே கதை.மூணு புள்ளி மூணு வரிசை போல் இல்லாமல் 16 புள்ளி 16 வரிசை கோலம் போட்டதுதான் சபாஷ் சொல்ல வைக்கிறது திரைக்கதை.

க்ளைமேக்ஸை 3முறை பார்த்தேன், ஆறு பார்த்தேன்னு சொல்லியிருப்பாங்க.ஆனா இந்த படத்தில ஓபனிங் சீனை இருமுறை பார்த்தால் தான் புரியும்.படத்தின் முடிச்சு இங்குதான் இருக்கிறது. முதல் அரை மணி நேரம் இந்திக்காரங்க பேசும் போது திருதிருனு முழிப்பது போல் இருக்கும்.அப்புறம் லைட்டா புரிய ஆரம்பிக்கும்.தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் அட்லிக்கு வாழ்த்துகள்.நல்ல படம் கொடுத்ததற்கு.

#கதை

கிரிக்கெட் கோட்ச் வினோத்தின் மொபைல் தொலைந்து விட்டதால் லேன்ட்லைன் போன் வாங்குகிறார். பழைய மாடல் போன் வந்த நாள் முதல் அறையில் ஏதோ வித்தியாசமாய் நடக்கிறது.முகம் தெரியாத அழைப்பு வந்து.. உன் ஆன்மாவை வெளியேற்றுவதாய் சொல்கிறது. காதலியிடம் இதை சொல்ல நம்ப மறுக்கிறார்.

பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான செல்வம் நூலகத்தில் பணிபுரிகிறார். இரவில் ஆவிகளுடன் பேசி கேசட்டில் பதிவு செய்து வைக்கிறார்.சிறுநீரக குறைபாட்டால் டயாலிஸ் செய்யும் அவருக்கு மாற்று சிறுநீரகம் கிடைக்க 80,000 தேவை.எனவே ஆறாவது மாடியில் சீல் வைத்த அறையில் பேய் ஓட்ட ஒப்புக்கொள்கிறார்.

படத்துவக்கத்தில் மனநல மருத்துவர் இந்திரனின் குடும்பத்தையும் கொன்றுவிட்டு அவரையும் சுட்டுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொள்கிறார் அவருடைய நோயாளி. 8 மாத கோமாவுக்கு பிறகு திரும்பும் மருத்துவரை மருத்துவ கவுன்சில் நிராகரிக்கிறது.மீண்டும் பழைய நிலைக்குத்திரும்ப தன் பழைய நோயாளிகளை சந்திக்கிறார். ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்.

இந்த மூன்று கதைகளும் இணையும் போது க்ளைமேக்ஸ்.மிகவும் சிக்கலாம கதைக்கு நேர்த்தியான திரைக்கதை.ஐந்தாறு கேரக்டர்களை வைத்துக்கொண்டு மூன்று மணி நேரம் கதை சொல்லுவது அசாத்திய திறமை.

#டின்ஜ்

*கிரிக்கெட் கோச் கேரக்டரில் செம பிட் அர்ஜுன்தாஸ்.you play the end என தனக்கு கற்றுக்கொடுத்த குருவின் வார்த்தையை கடைசி வரை தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் நச்.

*பார்வையில்லாதவராக வாழ்ந்திருக்கிறார் வினோத் கிஷன்.6 வது மாடி வரை செல்லும்போது, தனிமை வீட்டில் இருக்கும்போதும், நூலகத்தில் புத்தகத்தை தேடிக் கொண்டு வரும்போதும் ஜொலிக்கிறார்.

"தோல்விங்கிறது சாதாரண விஷயம்.
ஆனால் அதை நாம தைரியமாய் பார்க்கனும்"

"நாம பண்ணின தப்பிலிருந்து எவ்வளவு வேணா ஓடலாம். ஆனால் தப்பிக்க முடியாது.

"நான் கோபப்படுறேனு நினைக்கிற.. என்னோட பயந்தான் கோபமா மாறுது"

"இந்த உலகத்தில் பார்க்க எந்த தகுதியான விஷயமும் இல்லை"

"வழி தவறிப் போவதை விட வழி தெரியாம போவது எவ்வளவோ மேல்"என ஆங்காங்கே பளிச் வசனங்கள் பிரகாசிக்கின்றன.

*படத்தின் மற்றொரு பலம் இசையும் ஒளிப்பதிவும்.டெம்போ குறையாமல் இறுதி வரை இழுத்துக்கொண்டு போகிறது.

*டாக்டரான குமார் நடராஜன் பக்கா ஃபிட்.ஞாபகம் ஒரு அரக்கன்.அதை தட்டுற விதத்தில் தட்டணும்.அதைவிட முக்கியம் அதை தட்ட வேண்டியவன் தான் தட்டணும் வசனம் க்ளாஸ்.

*எல்லாம் தெரிந்த டாக்டரை ஒருத்தன் கொல்ல வர்றான். அதற்கான காரணத்தை சொல்லியிருக்கலாம். 

*பாட்டிலில் அடைத்த பேய் மீண்டும் வரவில்லை.போங்கடானு போயிருச்சா.

பொறுத்தார் நல்ல படம் பார்ப்பார் என்பது போல் 2-51 நிமிடம் பொறுத்தால் நல்ல படம் பார்க்கலாம்.
இயக்குநர் விக்னராஜனுக்கு பாராட்டுக்கள்.படம் முடியும் போது டைட்டிலில் தீபம் அணைவது நல்லாயிருந்துச்சு

-மணிகண்டபிரபு

Wednesday 25 November 2020

அண்டன் பிரகாஷ்

மூளையில் சுரக்கும் மெலட்டோனின் எனும் ஹார்மோன் தான் நம்மை தூங்குவதற்கு உந்துகிறது.
கண்களால் கிரகிக்கும் ஒளியை லக்ஸ் எனும் யூனிட்டால் அளக்கிறார்கள்.
மெழுகுதிரி 3லக்ஸ், இரவு பல்பு 100லக்ஸ்.இது அதிகமாகும் போது மெலட்டோனின் சுரப்பு குறையும்.

9000.லக்ஸ் உள்ள வெளிச்சத்தைக் கண்கள் பார்த்தால் அந்த இரவில் சுரக்காமலே போகும். கண்கள் வழியே திரையிலிருந்து வரும் நீல வெளிச்சத்தால் இயலாது.

நீண்டநேரம் டி.வி,செல்போன் பார்த்தால் மெலட்டோனின் சுரக்காமல் தூக்க சுழற்சி பாதிக்கும்

-அண்டன் பிரகாஷ்

Tuesday 24 November 2020

எஸ். இராமகிருஷ்ணன்

வாசிப்பு மனநிலை!

- எஸ். இராமகிருஷ்ணன்

ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது புத்தகம் படிக்க வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக் கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்குப் படிக்க வேண் டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

எனது நண்பர் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தானே 100 புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் இலவசமாக புத்தகம் கொடுத்து படிக்க வைக்க முயன்றார்.

அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்குப் போய் அவர் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார். கதவை திறந்த ஆள், ‘யார் என்ன..’ என எதையுமே கவனிக்காமல் ‘வேண்டாம் போ’ எனச் சொல்லி கதவை மூடிவிட் டார். அடுத்த வீட்டில், ‘இதை வெச்சிட்டு என்ன செய்றது? யாரும் படிக்க மாட்டாங்க; வேற ஏதாவது கிஃப்ட் இருந்தா குடுங்க…’ என ஒரு பெண் கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வீட்டில், ‘புக்ஸ் எல்லாம் வேஸ்ட் சார். நாங்க நியூஸ் பேப்பர் கூட வாங்குறதில்லை…’ எனச் சொல்லி துரத்தியிருக்கிறார்கள். இப்படியாக 5 மணி நேரம் பல்வேறு குடியிருப்புகளில் ஏறி, இறங்கியும் அவரால் 10 புத்தகங்களைக் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும்போது அதன் காவலாளி அவரை அழைத்து, தனது பேத்தி படிக்க ஒரு புத்தகம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருக்கிறார். அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் புத்தகத்தைக் கேட்டு வாங்கவே இல்லை.

நண்பர் விரக்தியோடு சொன்னார்: ‘‘அப்பா அம்மா புக்ஸ் படிச்சாதான் பிள்ளைகள் படிப்பாங்கன்னு நினைச் சேன். பெரியவங்களைப் படிக்க வைக் கிறது ரொம்ப கஷ்டம். எதையும் படிச்சிரக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க. அப்படியே பிள்ளை களையும் வளர்க்குறாங்க, இப்படி இருந்தா இந்த நாடு உருப்படவே உருப்படாது!”

இதுதான் நிதர்சனம். புத்தகம் படிக்க வைக்க நாடு தழுவிய ஓர் இயக்கம் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

மழலையர் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். நிறையப் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் கூட எந்த எழுத்தாளரையும் பற்றி அறிந்திருக்கவில்லை. எதைப் படிப்பது? எப்படி புத்தகங்களை தேர்வு செய்வது என்பதைப் பற்றியதாக அன்றைய கலந்துரையாடல் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் ‘மார்டிமர் ஜே அட்லர்’ எழுதிய ’ஹவ் டு ரீட் எ புக்’ (How to Read a Book) என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துப் பேசினேன். 1940-ம் ஆண்டு வெளியான புத்தகம் அது.

‘புத்தகம் படிப்பது எப்படி?’ என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டது அந்தப் புத்தகம். நாம் ஏன் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் எவை? அதை எப்படி அகற்ற முடியும் என்பதற்கான கையேடு போல இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மேலோட்டமாக வாசிப்பது, ஆழ்ந்து வாசிப்பது என இரண்டுவிதமான வாசிப்பு முறைகள் உள்ளன. பொதுவாக செய்தி களை, தகவல்களை மேலோட்டமாக வாசிக்கிறோம். தீவிரமான கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், அறிவியல் சிந்தனைகளை ஆழ்ந்து வாசிக்கிறோம்.

பொழுது போவதற்காக வாசிப் பது ஒருவிதம். அறிவையும், அனுப வத்தையும், ஆளுமையையும் வளர்த் துக்கொள்ள வாசிப்பது இன்னொரு விதம். வாசிப்பின் குறிக்கோள்தான் எதை வாசிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

எந்த ஒன்றையும் கற்றுக்கொள் வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, ஆசான் வழியாக கற்றுக்கொள்வது. மற்றது, நாமாக கற்றுக் கொள்வது. இந்த இரண் டும் சிலவேளைகளில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நாமாக ஒன்றைக் கற்றுக்கொள்வதுதான் வாசிப்பின் முதல் செயல். புத்தகம் ஓர் அரூப ஆசிரியன். அதில், குரல் மட்டுமே ஒலிக்கும்; ஆளைக் காண முடியாது.

ஆரம்ப நிலை வாசிப்பு, தேர்ந்த வாசிப்பு, பகுத்தாயும் வாசிப்பு, முழுமையான ஆழ்ந்த வாசிப்பு என வாசிப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

அறிவியல் புத்தகங்களை எப்படி படிப்பது? தத்துவப் புத்தகங்களைப் பயில்வது எப்படி? புனைக் கதைகள், நாவல்கள் மட்டும் ஏன் விரும்பிப் படிக்கப்படுகின்றன? கவிதைகள் ஏன் எளிதில் புரிவதில்லை? வரலாற்று நூல்களை வாசிக்க ஏன் சிரமமாக உள்ளது… என்பதை குறித்து, தனித் தனி கட்டுரைகளாக விரிவாக எழுதி யிருக்கிறார் மார்டிமர்.

எந்தப் புத்தகம் குறித்தும் முன்முடிவு கள் தேவையற்றவை. புத்தகத்தைத் தேர்வு செய்வதற்கு அது குறித்த அறிமுகமும் பரிந்துரைகளும் மிகவும் அவசியம். ஆரம்ப நிலை வாசகர்கள் 50 பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் ஒன்றை தேர்வு செய்து படிக்கப் பழகி னால், அதை முழுதும் படித்து முடித்து விடுவார்கள். அதை விடுத்து 1,000 பக்க புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்க முடியாததோடு புத்தகம் படிப்பதன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஜப்பானியர்கள் எதையும் படக் கதை வடிவில் படிக்கிறார்கள். இதனால் படிப்பது எளிமையாவதோடு வேகமாக வும் படிக்க முடிகிறது. கோட்பாடுகள் சார்ந்தப் புத்தகங்களைப் படிக்கும் முன்பு கோட்பாடுகள் யாரால், எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நூலை வாசிக்கும் முன்பாக வரைபடங் களைத் துணைக்குக் கொள்ள வேண்டும். அறிவியல் சிந்தனை களைப் புரிந்துகொள்ள ஆதார விஷயங்கள் தெரிந்திருக்க வேண் டும். கவிதையை ரசிக்க கற்பனை வேண்டும்... என படிப்பதற்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மார்டிமர் வலியுறுத்துகிறார்

ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் நினைவில் நிற்கும்? படித்த விஷயங் களை எப்படி குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பதற்கும் உதவிக் குறிப்புகள் கொடுக்கிறார் இவர்.

மகாபாரதம், ராமாயணம், ஒடிஸி போன்ற இதிகாசங்களை வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம். ஒரு நாவல் அல்லது கவிதைப் புத்தகம் வாசிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக் கூடியது.

இதிகாசங்களை வாசிப்பது எளிதான தில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டது. ஆகவே பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். இதி காசத்தின் கட்டமைப்பு மிக முக்கிய மானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும்போது விரிந்த அனு பவம் தரக் கூடியது. ஆகவே, அந்தக் கட்டமைப்பின் ஆதாரப் புள்ளியை அறிந்துகொள்வது அவசியமானது.

இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோற்றம் கொண் டது. அதற்கு நிறைய உள்அடுக்குகளும், குறியீட்டு தளங்களும், உபகதைகளும், தத்துவ விசாரங்களும் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டு படிக்கும்போது தான் முழுமையான வாசிப்பு சாத்தியப்படும்

வாரம் ஒரு புத்தகம். மாதம் நான்கு புத்தகம்… என்ற இலக்கோடு தொடங் குங்கள். நிச்சயம் அது வளர்ச்சியடையும் என்கிறார் மார்டிமர். எனது சிபாரிசும் அதுவே!

- எஸ். இராமகிருஷ்ணன்,
எழுத்தாளர்

நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்

நானும் கவிஞரும் பேசாத காலகட்டம்.மேகலா நிறுவனத்தில் இருப்போரிடம் பேசும்போது அங்கே கவிஞர் பேசுவது கேட்டது.அப்போது யார் கவிஞரா?என்றேன்.அவர் யார் கலைஞரா? என்றார். பிறகு அவர்..

நான் உங்களைத் தாக்கி எழுதுவதை எல்லாம் படிக்கிறீரா என்றார்.அதற்கு நான்,விடாமல் படிக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி எழுதுங்கள்.ஆனால் என்றைக்காவது ஒருநாள் ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து எழுதினால் தாக்குகிற நேரத்தில் பகை உணர்ச்சி உள்ளத்தில் நிச்சயம் இருக்காது என்றேன்.

நானும் பகையுணர்ச்சியோடு எழுதவில்லை என்றார் கண்ணதாசன்.

-நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்

காந்தி

காந்தியின் பிரார்த்தனை பாடலான 'வைஷ்ணவ ஜனதோ' எனும் பாடல் இந்துக்களுக்கு மட்டும் உகந்ததாக இருந்ததால்

'ஈஸ்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்'

என சேர்த்தார்."ஈஸ்வரன் அல்லா எல்லாம் உமதுபெயரே. எல்லார்க்கும் எல்லாம் கொடுப்பாய் கடவுளே"!

Monday 23 November 2020

ஓஷோ

முயற்சி எப்போதும் உங்களிடமிருந்து வரும்.அந்த முயற்சியைத் தடுக்கும் சோம்பேறித்தனம் உங்கள் மனதிலிருந்தே வரும்

-ஓஷோ

Saturday 21 November 2020

திருக்குறளில்

திருக்குறளில் வரும் 'ஆல்' என்பது அசைச்சொல்.அதற்கு அர்த்தமில்லை.அதேபோல் கொல்,மன்,அரோ,ஏ இந்த எழுத்துக்களெல்லாம் அசைச் சொல்லாக இசையை நிரப்ப வருகின்றன.

*கற்றதன லாய பயன்என் கொல்-இதில் கொல் என்பது அசைச்சொல்.அதற்கு அர்த்தம் பண்ணக்கூடாது

என்றும் காந்தி

நடை என்பது உடற்பயிற்சிகளின் இளவரசன்.

ஒரு முறை மகன் மணிலால் பத்து வயதாய் இருக்கும்போது தன் கண்ணாடியாய் மறந்து வந்துவிட்டார்.5கி.மீ வந்தபிறகு தான் தெரிந்தது.உடனே மகனைத் திருப்பி அனுப்பி எடுத்துவரச் சொன்னாராம்.

-என்றும் காந்தி நூலில்

Friday 20 November 2020

எண்ணெய்

எண்ணெய்

எண்ணை என்று எழுதாமல் எண்ணெய் என்று எழுத வேண்டும்.'எள்ளிலிருந்து பிழியப்படும் நெய்' என்பது பொருள்.எண்ணெய் என்பதே எல்லா விதைப் பிழிவுகளுக்கும் பொதுப்பெயராயிற்று.

-மகுடேசுவரன்

Thursday 19 November 2020

லஷ்மி சரவணகுமார்

ஒருவனோடு நண்பனாகும் போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிறோம்

-லஷ்மி சரவணகுமார்

ஓஷோ

ஓர் உணர்வின் அடிமட்டத்தைத் தொட்டுவிட்டால் அதன்பின் அதனைத் தாண்டி சென்றுவிடுவீர்கள்

-ஓஷோ

டாக்டர்

ஒரு பைத்தியகார மருத்துவமனையில் புதிதாய் ஒரு மருத்துவர் பதிவியேற்றார்.
விடுதி முழுக்க பைத்தியங்கள் மிகவும் கொண்டாடினர். இத்தனை மகிழ்ச்சியாய் இருந்ததே இல்லை.ஏன் என டாக்டர் வினவினார்..

"நீங்கள் எங்களைப் போலவே இருக்கிறீர்கள்.முன்பிருந்தவர் அப்படியில்லை'என்றனர்.

பலரும் உன்னை பாராட்டும் போது இதை நினைவில் வைத்துக்கொள்.உன்னிடம் ஏதோ ஒரு வகையில் தாழ்வானது இருக்க வேண்டும்.

Tuesday 17 November 2020

நக்கீரன்

நூறடி ஆழத்துக்குக் கீழேயுள்ள நிலத்தடி நீரை ஆங்கிலத்தில் அக்விஃபர்(Aquifer)என்பர்.
தமிழில் நீரகம் என்பர்.'நீரகம் பொருந்திய ஊரகத்தே இரு' என்கிறது கொன்றை வேந்தன்.

-நக்கீரன்

Monday 16 November 2020

மகுடேசுவரன்

தண்மை என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். குளிர்ந்த நீரைத் தண்ணீர் என்கிறோம்.குளிர்ந்த நிழல் தண்ணிழல்.

வத்தி என்பது தீப்பற்றும் முனையுடைய திரிப்பொருள். தீப்பந்தத்தை தீவத்தி என்பதே சரியானது.மெழுகுவத்தி, ஊதுவத்தியே சரியான சொல்

-மகுடேசுவரன்

Saturday 14 November 2020

சூரரைப் போற்று விமர்சனம்*மணி



இன்னும் கூட வானத்தில் திடீர்னு ஏரோப்ளைன் சத்தம் கேட்டால் எங்க இருக்குதுனு கண்கள் தேடும்.ஏன்னா அது எப்பவும் நமக்கு எட்டாக்கனிதான்னு நம்ம ஆழ்மனசில இருக்கும். கோயம்புத்தூர்ல, மதுரைல ஏரோப்ளைனை பக்கத்தில பார்த்தேன்னு சொல்லும் 80கிட்ஸ்,90 கிட்ஸ் இருக்கிறாங்க.

ஐபிஎல் டீமில் சி.எஸ்.கே வின் பன்னும் காத்திட்டு இருந்து..அது முடியாமப்போக டெல்லிதான் ஜெயிக்கும்னு உறுதியாய் சொல்லி ஒரு வேளை அதுஜெயித்திருந்தால் வரும் திருப்திபோல சூர்யா அந்த மக்களின் கனவை நனவாக்குவது கதை.ஏர்டெக்கன் நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி அவர் எழுதிய Simple fly புத்தகத்தை தழுவியும் எடுக்கப்பட்டுள்ளது

#கதை

மதுரை சோழவந்தானில் பூ ராமு வாத்தியாரின் மகன் நெடுமாறன் ராஜாங்கம்.ஊரில் ரயில் நிற்க அப்பா மனு கொடுத்துக்கொண்டிருக்க சூர்யாவோ தர்ணாவை கையிலெடுக்க இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.அப்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் இடம் கிடைக்கச் செல்கிறார்.அப்போது குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத சிக்கலால் எளியோரும் வானில் பறக்க சபதம் ஏற்கிறார்.இதை எப்படி சாத்தியப்படுத்தி சாதித்தார் என்பதே கதை. 

ஆறு படத்தில் பார்த்த அதே சூர்யா போல கச்சிதநடிப்பு. முதல் 20 நிமிசம் ஓப்பனிங் சாங்,இழுத்து இழுத்துப் பேசும் ஹீரோயின் என வழக்கம்போலவோ என நினைத்தால் அதற்கு பிறகு அனைத்தையும் மறக்கடிக்கச் செய்கின்றனர். பக்கபலமாய் ஹீரோவுக்கு துணையிருக்கும் அபர்ணா, சென்சிடிவ் அம்மாவாக ஊர்வசி, கருணாஸ்,போஸ் வெங்கட் என ஒவ்வொருவரும் நிறைவு. வில்லனை டம்மி செய்யாமல் கடைசிக்கு முந்தின ஃப்ரேம் வரை முதலாளித்துவத்தின் முகமாக  வில்லன்.மோகன்பாபு கேரக்டர் ஓரிரு இடத்தில் மட்டும் வந்து அட்டென்டன்ஸ் போடுகிறார்.

முதல் காட்சிக்கான விளக்கம் ஃப்ளாஷ்பேக் முடியும் போது சொன்னதும்,தான் ஏன் ஏழைகளை பறக்க வைக்க வேண்டுமென பின்னணி காரணமும் நச். சிட்டுக்குருவி மூலம் சிறிய ரக விமானம் செய்யத்தூண்டும் ஐடியா,
ஒவ்வொரு முறையும் மனைவியை பெருமிதமாய் பார்க்க வைக்கும்போதும் நெகிழ வைத்திருக்கிறார் இயக்குநர் சுதாகொங்கரா.

நிகேத் பொம்மியின் கேமரா நிழல் எது நிஜம் எது என வேறுபடுத்த முடியாமல் உழைத்திருக்கிறது.பாடல்களில் ஜி.வி யின் உழைப்பு தெரிகிறது.

"பார்க்க நல்லவனா இருக்கான். அவனே நாசமா போயிருவான். நாம வேடிக்கை மட்டும் பாத்தா போதும்"

*"You are a socialite..i am a socialist

*வானம் ஒன்னும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லடா போன்ற விஜயகுமாரின் வசனங்கள் பூஸ்ட் பேக்.

#டின்ஜ்

*படத்தின் நீளத்தை ட்ரிம் செய்திருக்கலாம்.
*குடியரசுத்தலைவரை ஈசியா பார்க்கச் செல்லுதல்
*ஊரே சொத்தை வித்து பணம் அனுப்புவது
*ஆல் இந்தியா ரேடியோ எல்லாரும் கேட்கும் சினிமாத்தனம் என கேள்விகள் இருந்தாலும் எளியவன் ஒரு ரூபாயில் வானத்தில் பறக்க வைக்கலாம்..அதில் உள்ள கார்ப்ரேட்டின் கோர முகத்தை உரித்துக் காட்டியதில் சூரரையும் சூர்யாவையும் போற்றவே செய்யலாம்

-மணிகண்டபிரபு

மூக்குத்தி அம்மன் விமர்சனம்*மணி



அம்மன் பட சீசன்னா ஆடிவெள்ளியில் தான் ஆரம்பித்து.. அப்போது சக்கைப் போடுபோட்டது. அதே வரிசையில் அதிக படம் வந்து அந்த உக்கிரம் அடங்கிய பின் தெலுங்கு ரீமேக் அம்மன் வந்து ரீ என்ட்ரி கொடுத்தார் அம்மன். கிராபிக்சில் வந்த பின் தான் அம்மன் பட மார்க்கெட் எகிறியது. பேருக்கு பின்னால் குமார் சேர்க்கும் 80 கிட்ஸ் ட்ரென்ட் போல.. எந்தப் படம் பேர் வைத்தாலும் பேருக்கு பின்னும் அம்மன் சேர்த்து விட்டனர்.ஒரு கட்டத்தில் படம் ஓடாமல் சீசன் முடிந்த பிறகு அம்மனே அப்புறம் வர்றேன்னு போய்ட்டாங்க.
திரும்பவும் எப்பெல்லாம் அம்மனை மறக்கிறோமோ அம்மனே அவதாரம் எடுப்பது போல் வந்தவர்தான் மூக்குத்தி அம்மன்.

வழக்கமா குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சனையெனில் ஓடி வரும் அம்மன் இம்முறை சமூக பிரச்சனைக்கு வந்திருப்பதை வரவேற்கலாம்.சாமியை நம்பு சாமியாரை நம்பாதே னு சொல்லியிருக்காங்க.

#கதை

நாகர்கோவிலில் வசிக்கும் மிடில் க்ளாஸ் குடும்பம் ஆர்.ஜே.பாலாஜி.
சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிபோன அப்பா,தாத்தா மெளலி, அம்மா ஊர்வசி,மூன்று தங்கைகள். டெம்ரவரி நியூஸ் ரிப்போர்டராக பணிபுரிந்து வருகிறார்.தாய் ஊர்வசி திருப்பதி செல்லும் ஆசைநிராசை ஆகிக்கொண்டே இருக்க..ஒரு கட்டத்தில் குலதெய்வமான மூக்குத்தி அம்மனை வழிபட குடும்பமாய் செல்கின்றனர்.அன்றிரவு அவனுக்கு காட்சித்தருகிறார் மூக்குத்தி அம்மன். சிறு தெய்வ வழிபாட்டை புறக்கணிக்கும் மிடில்க்ளாஸ்களை கண்டு காண்டாகும் அம்மன்.. தன் கோயிலும் பிரபலமடைய பாலாஜி உதவியை நாடுகிறார். சில வழிகள் மூலம் கோயில் பிரபலமடையும் போது கார்ப்ரேட் சாமியார் அங்கு வந்து மலைகளை அழித்து 13,000 ஏக்கர் அதாவது 45கி.மீ நிலத்தை தனக்காக்கிக் கொள்கிறார்.

சாமியே ஸ்டன் ஆகிவிடுகிறது இதைப் பார்த்து.. சாமியா? சாமியாரா? பாட்ஷாவா? ஆண்டனியா?எனும் கேள்விக்கு கப்புனு குத்துது மூக்குல மூக்குத்தி அம்மன் க்ளைமேக்ஸில்..
போலிச்சாமியார்களை கண்டு கடவுளே இப்பிடி காண்டாகி வந்தால் தான் உண்டு என நினைக்கத் தோன்றுகிறது.

#டின்ச்

*படத்தின் கதையை டைட்டிலிலேயே ஆரம்பித்திருப்பது நன்று. இப்படிப்பட்ட கதையை தைரியமாய் எடுத்ததற்கே பாரட்டலாம் ஏங்கல்ஸ் ராமசாமியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி,என்.ஜே சரவணன்

*கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அறை எண் 305ல் கடவுள் போல் கடவுள் வந்து நீதாண்டா எல்லாம்னு சொல்லிட்டு போய்டுவாங்க ஆனால் நயன்தாரா போலிச்சாமியாரை நம்பாதேனு சோசியல் மெசேஜ் சொல்லிட்டு போயிருக்காங்க.

*சிறு தெய்வங்களை நம்பாமல் பெரு தெய்வங்களை மட்டும் பூஜிக்கும் அம்மாவாக ஊர்வசி கச்சிதம். வெங்கடாசலபதி நீ என்னை காப்பத்தலைனா அடுத்து பாபாவை கும்பிடுவதை தவிர வேற வழியில்லனு சொல்லும் மிடில் க்ளாஸ் அம்மாவாய் நிறைவு.

*போலிச்சாமியார் அஜய் கோஷ் கண்களால் மிரட்டுகிறார்.தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நாகர்கோவிலை நகர் வலம் வர வைத்திருக்கிறது.இடையில் வரும் பாட்டுகள் கொஞ்சம் கொட்டாவி வரவைக்கிறது.

*ட்விட்டர் வசனங்கள் ஆங்காங்கே தெரிவது போல் இருப்பது எனக்கு மட்டுந்தானா."சமையல் பிடிக்கலைனா உடனே சொல்லுவோம், பிடிச்சதுன்னா சொல்லமாட்டோம் மாதிரி.

*குடும்பத்தை விட்டு சென்று சாமியாரிடம் சேரும் நடப்பு சம்பவங்களையும் நாடி பிடித்து சேர்த்திருப்பது நன்று.

*முதல் பாதியில் இயல்பான கலகலப்பில் அஞ்சாவதுகியர் போட்டுச் செல்லும் இடைவேளைக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இறுதியில் வேகமெடுக்கிறது.

*இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவாய் இருக்கிறது.கமேண்டிங் ஆர்டரில் இருக்கும் அம்மன் களத்தில் இறங்கியிருந்தால் அதகளம் செய்திருக்கலாம்.

*பட டைட்டில் ஆரம்பிக்கும் போதே வெள்ளி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர், வன அழிப்பு, யானை வழித்தடப்பாதை ஆக்கிரமிப்பு என எளிதில் யூகிக்கமுடிகிறது.அதனை தைரியமாய் சொன்ன இயக்குநருக்கு பாராட்டுகள்.

#ஃபேமிலி எண்டர்டெய்னர்.. தாராளமாய் பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா சூப்பரா வந்திருக்கும்.கார்ப்ரெட் சாமியார் பக்தர்களுக்கு பிடிக்காது

-மணிகண்டபிரபு

Friday 6 November 2020

ஆன்டன் செக்காவ்

ஒரு துப்பாக்கி சுவரின் மீது மாட்டப்பட்டிருப்பதாகக் கதை துவக்கத்தில் நீ வர்ணிப்பாயானால் கதையின் முடிவில் அது கட்டாயம் வெடித்தாக வேண்டும்.அது வெடிக்கவில்லையெனில் நீ கதையின் முற்பகுதியில் குறிப்பிட்டிருக்கவே கூடாது

-ஆன்டன் செக்காவ்

கந்தர்வன்

எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார்.

எம்.பி சட்டையில் பல பை வைத்தார்.

மந்திரி,பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார்

-கந்தர்வன்

Tuesday 3 November 2020

தாகூர்

தாகூர் ஒரு சிலேட்டுப் பலகையில்தான் முதன்முறையாகத் தன்னுடைய கவிதைகளை எழுதத் தொடங்கினாராம். காரணம், ‘எழுதியது பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடலாம்’ என்கிற சுதந்தரம் அவருக்குப் பிடித்திருந்தது, அதுவே அவருக்கு எழுதும் துணிச்சலைத் தந்திருக்கிறது.

‘அச்சப்படாதே’ என்று அந்தச் சிலேட்டு தன்னிடம் சொல்வதாக உணர்கிறார்* தாகூர், ‘உனக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எழுது, சரிப்பட்டுவராவிட்டால் பிரச்னையில்லை, ஒரே தேய்ப்பு, அனைத்தையும் சட்டென்று அழித்துவிடலாம்.’

-என்.சொக்கன்